ஏழாம் அறிவு

 
     
சாவதற்கு
பயமில்லாவிட்டாலும்
வருத்தமாக
இருக்கிறது.
புலன்கள் ஐந்தைக் கொடுத்து

ஒரு புல்லரிக்கும் உலகத்தை

நிரந்தரம் போல் காட்சியாக்கிப்
பின்
கண்களை மூடி விடக்
காத்திருக்கும்
கடவுளிடம் கோபம்
தடுத்தாலும் வருகிறது..
ஒரு வேளை ஆறுக்கும்
மேல் ஏழாவதாக
அறிவொன்றைக்
கொடுக்கமாட்டானா?
இறந்தவுடன் எனக்கே
சொந்தமான
எழிலுலகம் இன்னொன்றைக்
கண்டடைந்து
செத்தாலும் சாகாமல்
அங்கே
சலிக்கும் வரை
வாழ்ந்திருக்க!!!

எதையாவது சொல்லட்டுமா….74

 கடந்த சில தினங்களாக அலுவலகம் போகாமல் வீட்டில் இருக்கிறேன்.  பையன் திருமணத்தை ஒட்டி.  வீட்டில் நானும், அப்பாவும்தான்.  காலையில் நடக்கப் போவேன்.  சரவணபவன் ஓட்டல் எதிரில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியைச் சுற்றி சுற்றி வருவேன்.  நான்கு தடவைகள்  சுற்றினால் அரைமணிநேரம் ஓடிவிடும்.  பின் சரவணபவன் ஓட்டலில் 2 இட்லி ஒரு மினி காப்பி அல்லது பொங்கல் அல்லது வடை மினி காப்பி நிச்சயம் சாப்பிட்டு வீட்டிற்கு வந்து மெதுவாகக் குளித்து மெதுவாக மதியம் சாப்பிடுவேன்.  ஒருமுறை காலை 11 மணிக்கு வெயிலில் வெளியே சுற்றினேன்.  கடுமையை உணர்ந்தேன்.

 1984ஆம் ஆண்டு வாக்கில் நான் சம்பத்தைச் சந்தித்திருக்கிறேன். 2 முறைகள் சந்தித்திருப்பேன்.  ஒருமுறை ஞாநி நடத்திய கூட்டம் ஒன்றில்.  பாதல்சர்க்கார் பற்றிய கூட்டம் அது என்று நினைக்கிறேன்.  அப்போது சம்பத் என்பவர் சத்தமாக விவாதம் செய்ததாக நினைப்பு.  எதைப் பற்றி பேசினார்கள், என்ன பேசினார்கள் என்பதைப் பற்றி ஞாபகம் இல்லை.  அடுத்த முறை சம்பத்தை ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தின்போது, கூட்டம் முடிந்து நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, பேசிக்கொண்டு வந்தேன்.  ஆனந்தவிகடன் நடத்த உள்ள நாவல் போட்டியில் நாவல் எழுதப் போவதாக சம்பத் குறிப்பிட்டார்.  பின் சம்பத்தைப் பார்க்கவில்லை.  சம்பத்தைப் பற்றி அவர் நண்பர்கள் பேச பேச ஆச்சரியமாக இருக்கும். 

 ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் சம்பத்தைப் பற்றி கதை சொல்லியிருக்கிறார்கள்.  நானும் சம்பத் எழுதியவற்றை தேடிக் கண்டுபிடித்துப் படித்திருக்கிறேன்.  ழ வில் அவர் கவிதை ஒன்று ஏழு வைடூரியங்களைச் சேர்த்து கோர்த்ததுபோல் மூளையில் இருக்குமென்று எழுதியிருப்பார்.  தொடர்ந்து அவர் குறுநாவல்களில் மண்டைக்குள் முணுக்கென்று வலிப்பதுபோல் எழுதியிருப்பார்.  பிறகு மரணத்தைப் பற்றியே எழுதியிருப்பார்.  அவர் எழுத்தில் பிரிவு பெரும் துயரமாக இருக்கும்.  ஒரு கதை தி ஜானகிராமனின் அம்மா வந்தாள் கதையை ஞாபகப்படுத்தும். 

 சம்பத் எப்படி எழுதினாரோ அப்படியே வாழ்ந்தார்.  அவருடைய முதல் நாவல் இடைவெளி வரும்போது அவர் இல்லை.  திரும்பவும் அந்த நாவல் முழுவதும் மரணத்தைப் பற்றி அவர் தேடியிருக்கிறார்.  மரணத்தைப் பற்றி எழுதி எழுதி மரணத்தையே தழுவிவிட்டார்.  சம்பத் மரணம் நடந்தபோது, ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சி பரபரப்பாகப் பேசப்பட்டது.  அதனால் சம்பத் மரணத்தைப் பற்றி பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.  ஆனால் அசோகமித்திரன் சம்பத் மரணத்தைப் பற்றி குமுதத்திலோ கணையாழியிலோ குறிப்பிட்டிருக்கிறார்.

கணையாழியில் எழுதும்போது, சுஜாதாவைப்போல் திறமையானவர் சம்பத் என்று குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்கள்.  ஆனால் சுஜாதாபோல் திறமையானவர் இல்லை சம்பத்.  பிஎ இக்னாமிக்ஸ் படித்துவிட்டு, கிடைத்த நல்ல வேலையை உதறித் தள்ளியவர்.  அவர்குடும்பத்தாருக்கு அவரைப் பிடிக்காமல் போனதற்கு குடும்பத்தாரைப் பற்றியே அவர் எழுத ஆரம்பித்துவிட்டார்.  சம்பத் அவர் குடும்பத்தாருக்கு வேண்டாதவராகிவிட்டார்.  அவர் எழுத்தையும் அவரையும் அவர் குடும்பத்தார் மதிக்கவில்லை.  இன்னும்கூட அவர் கதைகளைப் புத்தகமாகக் கொண்டுவர அவர் குடும்பத்தினர் விரும்பவில்லை.  சம்பத் பற்றி பேசக்கூட அவர் தயாராக இல்லை.

 ஐராவதம் பணிபுரிந்த ரிசர்வ் வங்கிக்குச் சென்று மணிக்கணக்கில் சம்பத் பேசிக்கொண்டிருப்பார்.  ஐராவதத்தைச் சுற்றி இருந்தவர்களுக்கு தர்ம சங்கடம் ஆகவிடும். 

 இந்திராபார்த்தசாரதியுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் போது, அவர் சொன்ன ஒரு விஷயம் என் ஞாபகத்திற்கு வருகிறது.  சம்பத் ஒரு நாவலை எழுதிக்கொண்டு, படிக்கும்படி இ.பாவைத் தொந்தரவு செய்தாராம்.  இ.பாவும் படித்துவிட்டு, எழுதியது சரியில்லை என்று சொல்லிவிட்டாராம்.  சொல்லிமுடித்து சிறிது நேரத்திற்குள் ஏதோ பேப்பர் பொசுங்கும் வாசனை வர ஆரம்பித்ததாம்.  இ.பா சமையல் அறைக்குப் போய்ப் பார்த்தபோது, சம்பத் அவர் எழுதிய நாவலை அடுப்பில் பொசுக்கிக் கொண்டிருந்தாராம்.

கொடை

கடல் பார்க்கவும்
அலைகளில் கால் நனைக்கவும்
ஆசைப்படாதவர் உண்டா
அருவியின் முகத்துவாரம்
இன்னும் அருமையாக இருக்கும்
அல்லவா
கங்கை,காவிரி,வைகை
சமுத்ரநாயகனுக்கு
எத்தனை நாயகிகள்
தேங்கிய தண்ணீரை
பார்க்கப் பிடிப்பதில்லை
குளத்தில் நீந்தும் மீனுக்கு
மார்க்கெட்டில் மவுசு அதிகம்
ஏரியில் பறவைகள் கூட்டம்,
மக்களின் தாகத்தை தீர்க்கவும்
பறவைகளுக்கு அடைக்கலம் கொடுக்கவும்
நிறைஞ்ச மனசு வேணும்
தோணி உண்டு ஓடையில் பயணிக்க
நீங்கள் துடுப்பை வலிக்க வலிக்க
உங்கள் ஜாதகத்தையே சொல்லும்
ஓடை
வானத்தின் கொடை தான்
மக்களின் தாகத்தை
தணித்துக் கொண்டிருக்கிறது.

கூர்

பாதசாரிகள் கவனத்துடனேயே
சாலையை கடக்கிறார்கள்
எந்த வாகனத்தில் சென்றாலும்
கோயிலைக் கண்டால்
கன்னத்தில் போட்டுக் கொள்ள
மறப்பதில்லை வெகுஜனங்கள்
சீரூடை அணிந்த
மாணவர்களின் மிதிவண்டி
வேகமெடுக்கிறது
பள்ளியை நோக்கி
மின்வெட்டு,பெட்ரோல் தட்டுப்பாடு
சகலத்தையும்
எப்படி பொறுத்துக் கொள்கிறார்கள்
சாமானியர்கள்
வீட்டின் பெரும்பகுதியை
ஆடம்பரப் பொருட்கள் தான்
அடைத்துக் கொண்டுள்ளது
வெள்ளைக்காரன் விட்டுச் சென்ற
ஆங்கிலம் தான்
இன்னும் நம்மை
ஆண்டு கொண்டிருக்கிறது
இதிகாச நாயகர்களை
கார்ட்டூன் பாத்திரமாக்கி
கேலி செய்கிறார்கள்
விட்டேத்தியாய்
இருக்கும் வரை தான்
வீட்டில் இருக்கலாம் போல.

ப.மதியழகன்

துருக்கிப் படை வீரர்களுக்கான மயானம்

1.
நானொரு கப்பற்படை மாலுமி
எனது விழிகளைச் சாப்பிட்டன மீன்கள்
பார்ப்பதும் அழுவதும் என்னைப் பற்றியதாகவே உள்ளன
எனது வாழ்க்கையில் நான் உயர்ந்திருந்தேன்
என்னை நீங்கள் நம்பாவிடில்
எனது ஆடைகளைப் பாருங்கள்
உயிரற்ற ஏனையவர்களுக்கும் எனக்கும்
எந்த வித்தியாசமுமில்லையென்பதால்
நான் படைவீரனொருவனும் தானெனச் சிலர் கூறினர்.
முன்னொரு காலத்தில் நாம் வீடுகளில் வசித்தோம்
தற்போது நாம் சுவர்களைத் தாண்டி வந்து
கதவுகளுக்கு வெளியே உள்ளோம்
அத்தோடு இன்னுமொருவர் கூறினார்
அவர்களை நம்பாதீர்
அவர்கள் பொய்யர்கள்
நாம் உயிர் வாழவில்லை
2.
எனதறைக்குள் எளிதாக நுழைவதற்காக
அவர்கள் இறந்த உறவுகளின் வடிவத்தில் வருகிறார்கள்
அவர் ஒரு தடவை கதைக்கையில்
அவர் மாமா ஒருவரா அல்லது சகோதரனொருவனா என நான் பார்க்கிறேன்
அவரொரு காவற்துறை அதிகாரியென நான் காண்கிறேன்
ஐந்து வயதேயானவோர் மகள் இருந்தாள் எனக்கு.
இறந்து விட்ட அவளும் நானும் இப்பொழுது ஒன்றாக இருக்கிறோம்
வார்சா நகரின் பின்னால் தனது
கரங்களை விட்டு வந்திருக்கும் அவளால்
அசைய இயலாதாகையால் வெறுப்படைந்திருக்கிறாள்
ஒரு குரல் சொல்கிறது
மண்ணைக் கிளறியெடுக்க எந்த உருளைக் கிழங்குகளும் இல்லை
உடைப்பதற்கு எந்தக் கற்களும் இல்லை
சந்தைக்குக் கொண்டு செல்ல எந்தச் சுமையும் இல்லை
நானிங்கு அமைதியாக உள்ளேன்
ஒருவன் தனது மனைவி குறித்து கவலையுற்றிருக்கிறான்
வீட்டின் தகவல்களை அவன் என்னிடம் கேட்கிறான்
நான் மரணித்தபோது
அவர்கள் எனது மிகச் சிறந்த மேலங்கியைக் கைப்பற்றிக் கொண்டனர்
எனக்குக் குளிராக இருக்கிறது
குளிர்காலம் முன்னால் வருகிறது
பின்னர் அவர்கள் ஒன்றாகக் கதைத்தனர்
3.
“நாம் ஒரு குவளையிலிருந்து நீரருந்துகிறோம்
மாலைவேளைகளில் ஒன்றாக உணவு உண்கிறோம்
எமது அன்பிற்குரியவர் மீது யாருடைய நேசமோ இருக்கிறது
யாருக்கோ எமது தாய்மாரினால் சீராட்டி வளர்க்கப்படத் தேவையாக இருக்கிறது”
எமது படகுத் துறைகளுக்கு அவர்கள் கண்டபடி வந்து செல்கின்றனர்
ட்ராம் வண்டிகளில் எமக்கிடையே அவர்கள் நுழைகின்றனர்
அவர்கள் நம்மை விட்டு ஒருபோதும் செல்வதில்லையெனத் தெரிகிறது
மீண்டுமொரு நீண்ட காலம் வாழும் தேவை அவர்களுக்கிருக்கிறது
– ஒக்தே ரிஃபாத் (துருக்கிக் கவிதை)
தமிழில்எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

A. Thiagarajan

மராத்திய மொழியில் ஹைக்கூ (2)

திருமதி சிரிஷ் பை அவர்களை அவரது சிவாஜி பார்க் இல்லத்தில் ஹைஜின் பூஜா மலுஷ்டே அவர்களுடன் ஒரு மாலைப் பொழுதில் சந்தித்தேன். 

பூஜாமலுஷ்டே விற்கு நன்றி – இந்த சந்திப்பிற்கும் , உரையாடலில் பல
இடங்களில் பை அவர்களுக்காக  இக்விவலேன்ட் ஆங்கில வார்த்தைகளை உடனுக்கு உடன்
எனக்குச் சொல்லியும் உதவியதற்கு. 
ஹைக்கூ என்பது கவிதை அல்ல ; அது ஒரு கவித்துவமான ஆச்சர்யப் படல் என்று ஆரம்பித்தார் சிரிஷ் பை. 
மூன்றுவரிப் பாடல்கள் எல்லாம் ஹைக்கூ ஆகி விட முடியாது. 
ஹைக்கூ ஒரு சிந்தனைத் துளியோ அல்லது ஒரு உணர்வு மட்டுமோ அல்ல.
ஆரம்பத்தில் இயற்கை பற்றி மட்டுமே எழுதி வந்தார். அவர் எழுத ஆரம்பித்த
காலத்தில் ஹைக்கூ மராத்திய மொழியில் அறிமுகப்படாது இருந்தது. ஹைக்கூ வை
காய்கூஸ் ( மராத்திய மொழியில் எதற்காக என்று பொருள் வரும் ஏளனத்தில் )
என்றும்,  இ ஸ் ஸா  என்ற மாபெரும் ஜப்பானிய ஹைஜீன் அவர்களை குஸ்ஸா ( கோபம்
என்ற பொருளில்) என்றும் கேலி செய்து சந்தோஷப் பட்ட பெரிய மராத்திய கவிகளும்
எழுத்தாளர்களும் சிரிஷ் பை அவர்களையும் என்ன எழுதுகிறாய் என்று ஏளனமாகக்
கேட்டதுண்டு என்று நினைவு கூர்ந்தார் சிரிஷ் பை.
சிரிஷ் பை ஒரு பெரிய பெயர் பெற்ற குடும்பத்தில் பிறந்தவர். பத்திரிகை
ஆசிரியாராக வெகு காலம் பணி ஆற்றியவர். இவரது தந்தை ஒரு பெரிய
பொதுநலவாதியாகவும், பத்திரிகையாளராகவும், பேச்சாளராகவும்,  கவியாகவும்,  
மிகவும்  மதிக்கப்பட்ட பிரபலமாகவும் இருந்தார். ஜனாதிபதி பரிசு பெற்ற நீண்ட
நாள் ஓடி பெயர் பெற்ற  ஷ்யாம்சி ஆச்சி என்ற படம் சிரிஷ் பையின் தந்தையார் தயாரித்ததே.
தந்தையின் வழி எழுத்துலகில் வந்த சிரிஷ் பை தனக்கு ஹைக்கூ மூலம் பெயரும் புகழும் வந்த போது
தந்தை இல்லாததை வருத்தத்துடன் நினைவு கூர்ந்தார்.
மற்ற கவிதைகள் எழுதுவதை தற்போது முற்றிலும் நிறுத்தி விட்டதாகவும் ஹைக்கூ மட்டுமே எழுதுவதாகவும் சொன்னார். 
ஜன்னலின் கதவில் அமர்ந்து கா கா என்று கரையும் அந்த சொற்களிலும் சோகம் இருப்பதை ஹைக்கூ காட்ட முடியும்.
ஒருவர் பூக்களை அவ்வளவு வேகமாகப் பறிக்கிறார் – அந்த வேகத்தில் (
வையலன்சில்) , பூக்களுடன் சில மொட்டுகளும் பறிக்கப் பட்டன. தற்போது
நடக்கும் சிறு பெண்களின் கற்பழிப்பு தான் நினைவிற்கு வருகிறது. இதுவே
ஹைக்கூ அல்லாமல் ஒரு கவிதையானால், இந்த விஷயத்தை வெகு ஓபனாகவே
சொல்லியிருக்க முடியும் – என்கிறார் சிரிஷ் பை.
விஜய் டெண்டுல்கர் என்ற ஒரு பெரும் எழுத்தாளர் ஜப்பானிய ஹைக்கூ
மொழிபெயர்ப்பு புத்தகம் ஒன்றை தனக்கு அன்பளித்ததே தனது ஹைக்கூ பயணத்தின்
ஆரம்பமாக ஆனது. ” அதை படித்து படித்து அதில் ஒரு பேரானந்தம் கண்டாதாகக்
கூறுகிறார் பை. தானும் எழுத ஆசைப் பட்டு எழுத ஆரம்பித்தார். ஆரம்பத்தில்
தான் எழுதியது எதுவும் ஹைகூவாகவே இல்லை என்று தனக்கே தெரிந்தது.
கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பிறகு ஒரு நாள் தனியாக தோட்டத்தில் ஹைக்கூ எழுத
வரவில்லையே என்று வருத்தத்தில் இருந்த போது, திடீரென அவரது முதல் ஹைக்கூ
பிறந்தது என்கிறார் பை. மேலே சொன்ன காக்கை பற்றியதுவே அது. 
அதன் பின்னர் ஹைக்கூ தானாகவே சரளமாகவே வந்தது என்கிறார். சுபாவமாகவே எந்த ஒரு அதீத உழைப்பு, முயற்சி இன்றி வந்தது ஹைகூக்கள். 
ஹைக்கூ என்பது கஷ்டப்பட்டு “கம்போஸ்” செய்யப் படுவது இல்லை.
சொல்லாட்சி மிகவும் முக்கியமானது. எந்த சொற்களை எவ்வாறு எங்கு பிரயோகம்
செய்கிறோம் என்பது ஒரு ஹைகூவை ஆக்கவோ அழிக்கவோ கூடும். எவ்வாறு முடிப்பது
என்பதும் ஹைகூவில் க்ரிடிகள் ஆனா விஷயம்.
ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்கள், பல விருதுகள், மராத்திய
மாநிலத்தின் எல்லா இடங்களில் இருந்தும் ஹைக்கூ சொல்லவும், அது பற்றி
பேசவும் முடிவில்லா அழைப்புகள். 
83 வயதை எட்டிய சிரிஷ் பை வெளியில் அதிகம் செல்வதில்லை; ஹைக்கூ மட்டுமே எழுதிகிறார்.
ஹைக்கூ எழுத விரும்பும் ஆர்வலர்கட்கு அவர் சொல்வது-
ஜப்பானிய ஹைக்கூ நிறைய படியுங்கள்- ஸ்டடி செய்யுங்கள்.
மீண்டும் மீண்டும் படியுங்கள்

சாதாரண கவிதைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று உணருங்கள்.
இது இல்லாமல் ஹைக்கூ என்பது என்ன என்று தெரிந்து கொள்ளாமலே போய்விடுவீர்கள்.வார்த்தைப் பிரயோகங்களை கவனியுங்கள். எழுத ஆரம்பியுங்கள்.அனாவசியமாக கூடுதலாக ஒரு வார்த்தை இல்லாமல் எழுதுங்கள். மீண்டும் எழுதுங்கள். எழுதிக்கொண்டே இருங்கள்.
இதோ சிரிஷ் பை எழுதிய  சில ஹைக்கூ – 
மாலை சூரியன் மஞ்சளில் தொலைந்த மஞ்சள் பட்டாம் பூச்சி, நான் குனிந்த பார்த்த பொது, நிழலில் தென்பட்டது. 
வேகமாகச் செல்லும் கார் ஒன்றின் கண்ணாடியில் ( விண்ட்ஸ் க்ரீனில் )
ஒரு சிறிய பட்டாம்பூச்சி  மெதுவாக உள்வந்து அமைதியாக உட்கார்ந்தது. 
 
யாருமில்லா இருள்
மழைத்துளிகள் நில்லாது
இலைகளில் தட்டிக்கொண்டிருக்கின்றன
 
ஓ! எவ்வளவு பனிமூட்டம் 
அவ்வளவு ஆழம் 
பள்ளத்தாக்கு அளவு 
 
காற்று கூட்டிச் செல்கிறது
காய்ந்த இலைகளையும் தூசியையும்  
உடன் ஒரு பட்டாம் பூச்சியையும்
 
லேசான தூறல்
கழுவப்படாமலே
இலை மேல் தூசி
 
தலை மேலே பட்டாம்பூச்சியின் சப்தம் அறியாமலே
இந்த ஆண் பூனை
சூரிய ஒளியில் சோம்பேறித்தனமாக படுத்துக் கொண்டிருக்கிறது.
 
( this is a tomcat ie a male domestic cat. Tomcat as a verb means pursue women promiscuously for sexual gratification.)
 
அடுத்து பூஜா மலுஷ்டே ….

இலைகளற்று பூக்களற்று….

கிணற்றடியில்
சலவைக்கல்லில் குமித்துக் கிடக்கும்
ஈரத் துணியில்

மடிப்புக் கலையாமல் காத்திருக்கிறது
எனது தனிமை

உலர்த்தும் கணந்தோறும் நெடுகப் படர்கிறது
வான் நோக்கி மௌனக் கொடி
இலைகளற்று, பூக்களற்று

நட்சத்திரங்களைத்
தொட்டுவிடும் வேட்கையோடு

     இளங்கோ

இருப்பு

 
ஓவியக் கண்காட்சிக் கூடத்தின் 
ஒரு சுவரில்
பிள்ளையார் விதம் விதமான
கோணங்களில் அருள் பாலித்தார்.
தன்னலமற்று உலகை இரட்சிப்பதாகப்
பசுவைக் கொண்டாடும் படங்களால்
நிரம்பியிருந்தன இன்னொரு சுவர்.
போட்டிகள் நிறைந்த உலகின்
ஆக்ரோஷங்களை வெளிப்படுத்தின
சேவல் சண்டைக் காட்சிகள்.
கொல்கத்தா வீதிக் காட்சிகளால்
சோகம் அப்பி நின்றிருந்தது
சன்னல்கள் அற்ற இடதுசுவர்
உயிரைக் குழைத்திழைத்த 
ஓவியங்களைப் பிரியும் துயர்
இலாபக் கணக்குகளால்
ஆற்றப் பட்டன
கையில் சுமந்திருந்த மோதகத்தைச்
சத்தமின்றி பிள்ளையாரின் 
காலடித்தட்டில் வைத்து விட்டு
எதிர்சுவற்றுச் சந்தைக் காட்சியில் 
சாலையில் உருண்டு கிடந்த 
தக்காளியைச் சுவைக்கச் சென்றிருந்த 
மூஞ்சுறு
சேவல்களுக்கு அஞ்சி 
உத்திரத்தின் வழியே
திரும்பிக் கொண்டிருக்கையில்
வானத்துச் சூரியன் 
மேற்கே சரிந்துவிட..,
விற்காத படங்களுடன்
வெளியேறினர் ஓவியர்.
இருண்ட காலிக் கூடத்தின் 
சுவர்களெங்கும் ஓடிஓடித்
தேடிக் கொண்டேயிருந்தது 
பிள்ளையாரை மூஞ்சுறு.
***
ராமலக்ஷ்மி

பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்

வானக் கரிய வாவியில் மின்னி நீந்திடும்
சிலவேளை
வீழ்வதாய்ப் போக்குக் காட்டும்
ஊணுண்ணிப் பட்சியென மீன்கொத்தி நிலா
மேற்கிலிருந்து கிழக்காய் நகர்ந்து நகர்ந்து கொத்திட
காலையில் செவ்வாகாயம் வெறிச்சோடிக் கிடக்கும்

இடித்திடித்துக் கொட்டிய
நேற்றின் இரவை நனைத்த மழை
உனதும் எனதுமான ஏகாந்தப் பொழுதொன்றை
நினைவுறுத்திக் கொண்டேயிருந்ததில்
அச்சமுற்றிருந்தேன் நான்

மின்சாரம் தடைப்பட்டெங்கும்
அந்தகாரம் மேவிய பொழுதில் கண்மூடி
விழித் திரைக்குள் உனையிறக்கியிருந்தேன்
உதறப்பட்ட காலத்தின் துளிகளோடு
உன் மீதான எனது சினங்களும்
ஆற்றாமைகளும் வெறுப்பும்
விலகியோடிப் போயிருக்கவேண்டும்
நினைத்துக் கொண்டேயிருந்தேன் உன்னையே

அப் பாடலைப் பாடியபடி
அச் செல்லப் பெயரால் எனை விளித்தபடி
பிரகாசத்தையள்ளி வீசுமுன் குரலையும் கேட்டேன்
அங்குமிங்குமசையும் ஊஞ்சல்
அந்தரத்தில் சரணடையும் ஆவல்
அக் கணத்து மனநிலையை என்சொல்வேன்

அகழ்வுகளுக்குள் தேடினால் அர்த்தமற்ற நம்
சச்சரவுகளின் நூலாம்படை திரண்டுகிடக்கும்
எமக்கெதிரான
எல்லாப் புழுதிகளுமெழும்பிக் கட்டிய மதிலதன்
அத்திவாரத்தில் இருவரில்
எவரது அன்பைப் போட்டு மூடினோம்

இனித் தவறியும் ஒருவரையொருவர்
நினைத்தலோ பார்த்தலோ கதைத்தலோ
ஆகாதெனும் விதியை நிறுவிச் சலனங்களை
விழுங்கிச் செறிக்க முடியாது
விழி பிதுங்கி நிற்கும் நம் துயர் பொழுதுகள்
யுகங்களாகத் தொடர
வேண்டியிருந்தோமா

பிரிவின் அன்றை
இருவரும் எப்படியோ வாழ்ந்து கடந்தோம்
சர்வமும் நிகழ்ந்து முடிந்தது பூமியில் அன்றும்
பின்வாசல் சமதரைப் புல்வெளி
நிலவின் பால் குடித்தரும்பிய
பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயிலில்
இரவின் சாயல் துளியேதுமில்ல
எம்.ரிஷான் ஷெரீப்

நாம் பறவை மரம்

கிளைஅதிர
எழும்பிப்பறக்கின்றது பறவை

கிளையிலிருந்து
உதிர்கின்றது ஒரு இலை,
அதன்சிறகிலிருந்து
உதிர்கின்றது ஒரு இறகு

இலை
நமது
இருப்பிற்கான ரசீது
இறகு
நாம்
பறப்பதற்கான பயணச்சீட்டு

ரவிஉதயன்

சுத்தம் சோறு போடும்

மதி

வீட்டைச் சுத்தம் பண்ணி நாளாச்சு

குப்பைக்குள் கொஞ்சூண்டு
வீடு மீதமிருந்தது !
ஒரு வெள்ளிக்கிழமை
ரெண்டாம் சாமத்தில்
சடாரெனச் சுதாரித்துக் கொண்டு
மூக்கின் மேல் துணியைக் கட்டினோம்.
வீடு அதிர
விளக்குமாறு அதிர
ஆவேசமாய் என்றாவது
வீட்டைச் சுத்தம் செய்து
பழக்கம் உண்டா உங்களுக்கு ?
காலியான அரிசி மூடைச் சாக்கொன்றில்
வேண்டாத சாமானனைத்தும்
விறுவிறுவென அள்ளிப்போட்டபடி
………………
உப்பு புளி மிளகு
நவதானியச் சத்து மாவு
மூன்று மாதமாய்ப் பிரிக்காத
ஒரு கிலோ பருப்பு பாக்கெட்
கண்ணாடி பாட்டில்கள்
காலி பாட்டில்கள்
கத்தை கத்தையாய்
காகிதங்கள்
சாவி தொலைத்த பூட்டுகள்
பூட்டு தெரியாத சாவிகள்
கொஞ்சம் துணிமணி
கிழிந்த செருப்புகள்
நாலே நாலு பேர் இருந்த வீட்டில்
பதினைந்து டூத் பிரஷ்கள் !
……………
ஏழெட்டு சாக்குகளில் குப்பைச் சாமான்.
வாசலில் வைத்து விட்டு வந்து
பெருக்கி கழுவி வியர்த்து குளித்து
முடிந்ததும் பார்த்தால்
வீட்டின் விசாலம்
முதல் முறை உறைத்தது.
சுத்தம் சோறு போடும்.
…………………………………………..
காலையில் சோம்பல் முறித்துக்
கதவைத் திறந்து மாடத்தில் நிற்கிறேன்.
குப்பை அள்ளும் வண்டிக்காரி
என் வீட்டின் பிரிக்காத
பருப்பு பாக்கெட்டை
பத்திரப்படுத்திக் கொண்டிருந்தாள்.
சுத்தம் சோறு போடும்.