கசடதபற ஜøன் 1971 – 9வது இதழ்

அழைப்பு 




நீலமணி

நிரோத் உபயோகியுங்கள்
நிரோத் உபயோகியுங்கள்
என்று விளம்பரங்கள்
வலியுறுத்துகின்றன
வாயேன்

இயற்கை

நா ஜெயராமன்

நோட்டீசு ஒட்டக்கூடாதென்று எழுதியிருந்த
காம்பௌண்டு சுவரில்,
வேப்பமரக் கிளை நிழல்
நோட்டீசாக் படிந்திருந்தது

1971ஆம் ஆண்டு வந்த ஒரு ரேடியோ விளம்பரத்தைக் கேட்டு நீலமணி எழுதிய கவிதை அழைப்பு கவிதை.  இன்று அதன் அர்த்தம் மாறிப் போய்விட்டது.   காலம் மாற மாற சில கவிதைகள் தன் தன்மையை இழந்து விடுகின்றன.  நீலமணி கவிதை அதற்கு ஒரு உதாரணம் என்று தோன்றுகிறது.
அதே சமயத்தில் நா ஜெயராமனின் இயற்கை என்ற கவிதை இன்னும் வாசிப்பு அனுபவத்தை பலப்படுத்துகிறது.  2015லும் இக் கவிதை பொருந்தி போய்விடுகிறது.  கவிதை என்பது காலத்தைக் கடந்து நிற்க வேண்டும்.
ஜøன் 1971 மாத கசடதபற அட்டைப் படத்தை வரைந்தவர் கவிஞர் வைதீஸ்வரன்.

புத்தக விமர்சனம் 7

 
அழகியசிங்கர்





நான் சில தினங்களுக்கு முன் தாம்பரம் சென்றேன்.  வெயில் சற்று குறைவாக இருக்கும்போது போனேன்.  மின்சார வண்டியில தாம்பரம் சென்றேன்.  பஸ்ஸில் சென்றால் அதிக நேரம் எடுக்கும். மின்சார வண்டியில் போவதுதான் சரி.  எப்போதும் நான் எங்காவது போனால் புத்தகம் ஒன்றை எடுத்துக்கொண்டு போவேன்.  படிக்க முடிந்தால் படிப்பேன்.  ஒரு ஜோல்னாப் பையில் நான் இப்படி புத்தகம் போட்டு எடுத்துக்கொண்டு போவது என் நண்பர் ஒருவருக்குப் பிடிக்காது.
நான் இந்த முறை எடுத்துக்கொண்டு போன புததகம் ‘இந்தியா 1948’ என்ற புத்தகம்.  அசோகமித்திரன் எழுதிய நாவல் இது. கிட்டத்தட்ட 144 பக்கங்கள் கொண்ட நாவல்.  நான் மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏறியவுடன், உட்கார இடம் பார்த்துக்கொண்டு பின் நிதானமாக இந்தப் புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டேன்.  என் கவனம் எல்லாம் புத்தகத்தில் இருந்தாலும், ஒவ்வொரு ஸ்டேஷனிலும் வண்டி நிற்கும்போது, வண்டியில் ஏறுபவர்களைப் பார்ப்பேன்.  எந்த ஸ்டேஷனலில் வண்டி நிற்கிறது என்பதையும் கவனிப்பேன்.
தாம்பரம் வந்தடைந்தபோது புத்தகத்தில் 35 பக்கங்கள் படித்து விட்டேன்.  எனக்கு இது ஆச்சரியம்.  இது மாதிரி இரண்டு முறை நான் தாம்பரம் வரை போய் வந்த நாட்களில் இப் புத்தகம் முழுவதும் படித்து முடித்து விட்டேன்.
அசோகமித்திரனிடம் எனக்குப் பிடித்த விஷயம்.  அவர் ஆயிரக்கணக்கான பக்கங்களில் நாவல் எழுத மாட்டார்.  அவர் எழுத்தில் சொற் சிக்னம் மிக முக்கிய விஷயம்.  ஒரு பெரிய விஷயத்தை இரண்டு மூன்று வரிகளில் சொல்லி முடித்து விடுவார்.  இந்த நாவலையும் அப்படித்தான் எழுதியிருக்கிறார்.    
1948-ல் ஒரு ஆண் ஏற்கனவே மணமானவனாக இருந்தாலும், இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் குற்றம் இல்லை.  ஆனால் 1955ல் ஹிந்து திருமணச் சட்டப்படி அது குற்றம்.   சட்ட விரோதம்.  
1948 ஆம் ஆண்டாக இருந்தால் என்ன, 2015 ஆம் ஆண்டாக  இருந்தால் என்ன?  ஆண் பெண் உறவுகளில் ஏற்படும் சலசலப்பு எப்போதும் ஒன்றாக இருக்கும்.
இரண்டு பெண்களுடன் தொடரும் வாழ்க்கையைப் பற்றி இந்த நாவல் விளக்கமாகச் சொல்லிக் கொண்டு போகிறது.  இரண்டு பெண்களுடன் தொடர்பு கொண்ட ஒரு நபர், எப்படி சிக்கல் இல்லாமல் வாழ்க்கையைத் தொடர வேண்டுமென்று நினைக்கிறார் என்பதுதான் கதை.
அலுவல் பொருட்டு அமெரிக்கா செல்லும் ஒருவர், அங்கு கார் சம்பந்தமாக பயிற்சி எடுத்துக் கொள்கிறார்.  அவர் கம்பெனி பொருட்டு அங்கு இரண்டு வருடங்கள் தங்க நேர்கிறது.  அங்கு லட்சுமி என்ற விதவைப் பெண்ணைச் சந்தித்து திருமணம் செய்து கொள்கிறார்.26 வயது நிரம்பிய அவரைப் பார்த்து, லட்சுமிதான் சுயவரம் போல் அவரைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறாள்.  சிறிய வயதில் விதவை ஆன லட்சுமி, தன் அம்மாவிடம் இவரை திருமணம் செய்து கொள்ளப் போவதைத் தெரிவிக்கிறாள்.  இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதோடல்லாமல், ஒரு குழந்தை வேறு இருக்கிறது என்பதை அறிந்தும் லட்சுமி இவர் மீது உள்ள ஈடுபாட்டால் திருமணம் செய்து கொள்கிறாள்.
கொஞ்சம் வசதிபடைத்த லட்சுமி எல்லோரும் சேர்ந்து வாழலாம் என்கிறாள்.  இதை அவர் மனைவியிடமும், அம்மாவிடமும் எப்படி சொல்வது இதுதான் கதை.  அவர்தான் அதைச் சொல்ல வேண்டும், லட்சுமியோ அவள் அம்மாவோ இதைச் சொல்லப் போவதிலலை.
அவர் மனைவி பார்வதியிடமும், அம்மாவிடமும் சொல்வதற்குள் அவர் படுகிற பாட்டை நாவல்  முழுவதும் விவரிக்கிறார்.  ஒரு ஆண் தன் அந்தரகத்தை வெளிப்படையாகச் சொல்ல பெரிதும் விரும்புவதில்லை. 
 அவன் அப்படிச் சொல்வதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியே சிந்திக்கிறான்.  
அவர் அமெரிக்காவில் இருந்தபோது, அவர் மனைவி பார்வதிக்கு கடிதம் எழுதியதில்லை.  அம்மாவுக்குத்தான் எழுதுவார்.  அப்படி எழுதுவதும் போகப்போக குறைந்தும் விடுகிறது. லட்சுமிவை அமெரிக்காவில் திருமணம் செய்துகொண்ட பிறகு இந்த நிலையை எடுத்திருப்பார் என்று தோன்றுகிறது.  
42 அத்தியாயங்கள் இந்த நாவல் எழுதப் பட்டாலும் சுருக்கம் சுருக்கமாக நாவலில் அத்தியாயங்கள் எழுதப் பட்டிருக்கிறது.  இப் புத்தகத்தில் 4வது அத்தியாயம் அரைப் பக்கம்தான்.
அமெரிக்காவிலிருந்து வந்த அவரை அவர் வீட்டிற்கு காரில் அனுப்ப, லட்சுமியின் அம்மா  எடுத்துக்கொள்ளும் அக்கறையை இந்த அத்தியாயம் காட்டுகிறது.
நாவலைப் படிக்க படிக்க ஒவ்வொரு முறையும் இவர் எப்போது தான் செய்துவிட்ட ஒரு தவறை அவர் முதல் மனைவிடமும், அம்மாவிடமும் சொல்லப் போகிறார் என்ற ஆர்வம் எழுந்துகொண்டே இருக்கிறது. அப்படிச் சொல்வதால் ஏற்படும் கலவரத்தை எண்ணியும்  படிப்பவரை யோசிக்க வைக்கிறது.   
லட்சுமி அமெரிக்காவிலிருந்து பாம்பாய் வரப் போவதை அவரிடம் தெரிவிக்கிறாள்.  அவள் வருவதற்குள் வீட்டில் உள்ளவர்களுக்கு தன்னுடைய இரண்டாவது திருமணத்தைச்  சொல்லிவிட வேண்டுமென்று துடிப்பாக இருக்கிறார்.  அதற்கான சரியான சந்தர்ப்பம் அவருக்குக் கிடைக்க வில்லை.  அவர்  எப்போது சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்தை லட்சுமி, அவள் அம்மாவும் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.
அவர் இருப்பது கூட்டுக் குடும்பம்.  கூடவே தம்பியும் அவருடன் இருக்கிறான்.  அவனுக்கு திருமணம் ஆகிறது.  சென்னையில் இருந்து வந்தப் பெண்ணும் அவர்களுடன் இருக்கிறார்கள்.  தன்னுடைய தவறை சொல்வதன் மூலம் ஒருவித கலக்கம் அவருள் ஏற்படாமல் இல்லை.
ஒருமுறை அவர் குடும்பத்தின் உறுப்பினர்களுடன் லட்சுமி அம்மா வீட்டிற்கு அவர் அழைத்துச் செல்கிறார். உரிமையுடன் அவர் அங்கு நடமாடுவதைக் குறித்து அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.  ஆனால் அப்போதுகூட அவர் லட்சுமிவை திருமணம் செய்து கொண்டு விட்டதாக சொல்வதில்லை.
அவர் மனைவி பார்வதியிடம் மட்டும் எப்படியாவது சொல்ல வேண்டுமென்று முடிவெடுக்கிறார்.  அந்த முடிவுடன் அவர் மாமாவைக் கண்டுபிடிககிறார். அவர் மாமாதான் சின்ன வயதில் தன் பெண்ணை யாருடைய சம்மதமும் கேட்காமல் அவருக்குத் திருமணம் செய்து  வைத்தது. பின் அவர் சந்நியாசம் வாங்கிக்கொண்டு போய் விடுகிறார்.  அவர் அம்மாவிற்கு இப்படி சொல்லாமல் திரும்ணம் செய்து விட்டாரே என்ற  வருத்தம் இருந்தாலும், சகோதரனை மீறி எதுவும் செய்ய முடியவில்லை. அப்பாவை இழந்த குடும்பத்திற்கு மாமாதான் வழிகாட்டியாக இருந்திருக்கிறார்,   மாமாவின் விருப்பத்திறகு மீறி எதுவும் செய்ய முடியவில்லை. 
ரிஷிகேஷில் பார்வதி அப்பாவை அதாவது அவருடைய மாமாவாகிய மாமனாரைச் சந்திக்கிறார்.  அவரிடம் அவர் லட்சுமியைப் பற்றி சொல்கிறார்.   பார்வதி தலை குனிந்தபடி கேட்டுக் கொண்டிருக்கிறாள்.  இந்த நாவலில் இப்படித்தான் மனைவியிடம் தன் இரண்டாவது மனைவியைப் பற்றி வெளிப்படுத்துகிறார்.  அதைக் கேட்டு பார்வதி அதிர்ச்சி அடைந்த மாதிரி தெரியப் படுத்தவில்லை.
லட்சுமி இந்தியா வந்தபிறகு, அவருடைய இரண்டாவது குழந்தை இறந்த துக்கத்தை விஜாரிக்க அவள் அம்மாவுடன் வருகிறாள்.  அவர் அம்மாவைப் பார்த்து லட்சுமி நமஸ்கரித்துச் சொல்கிறாள் :  “இனிமேல் உங்கள் சுகதுக்கங்கள், என் சுகதுக்கங்கள்,” என்று.
அவர் அம்மா அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுகிறாள்.  நாவல் இத்துடன் முடிந்து விடுகிறது.
ரொம்பவும் நுணுக்கமாக இந்த நாவலை அசோகமித்திரன் எழுதிக்கொண்டு போகிறார்.  பெரிய களேபரம், கலாட்டா எதுவும் இந்த நாவலில் ஏற்படவில்லை.  
இந்த நாவலின் கதாநாயகன் பெயர் என்ன, அவன் எப்படி இருப்பான் என்ற விபரம் எல்லாம் தெரியவில்லை.  அவன் எல்லோரிடமும்ட மிக சொற்பமாகத்தான் பேசுவதாக காணப்படுகிறான்.  படிக்க சுவாரசியமாக இந்த நாவலை சிறப்பாகவே அசோகமித்திரன் எழுதி உள்ளார்
இந்தியா 1948 – அசோகமித்திரன் – நாவல் – 144 பக்கங்கள் – விலை  ரூ.120 – வெளியீடு : நற்றிணை பதிப்பகம், 6/84 மல்லன் பொன்னப்பன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005 -தொலைபேசி : 044 28482818 – மொபைல் : 94861 77208
 
  

கசடதபற மே 1971 – 8வது இதழ்

நானுமென்னெழுத்தும்

                                                                                       நகுலன்


    


நின் கைவசம்
என் கைப்பிரதி

“இதனையெழுது”என்றாய்
எழுதினேன்.

“இதனையழி” என்றாய்
“அழித்தேன்”
“இதனையிவ் வண்ணமெழுது” என்றாய்
சொன்னவண்ணமே செய்தேன்.

இதுவென்னூல்
இதுவென் பெயர்
இது வென்னெழுத்து
விமர்சனமும் விரைவில் வந்தது
“ஆ என்ன வெழுத்து,” என்றாரொருவர்
“ஆ இதுவன்றோ வெழுத்து” என்றாரொருவர்.

என்எனழுத்தில் நானில்லை
என்றாலுமென் பெயருண்டு
எழுதியெழுதி அழித்தேன்
அழித்து அழித்து ஆளானேன்.
விமர்சகரும் சொல்லி விட்டார்
இல்லா ததையெல்லாம்
உண்டென்று
சொல்லி விட்டார்.

மாமுனி பரமஹம்ஸன்
அவன் மாபெரும் சீடன்
சொன்னான்
“மாயை யென்பது
மன்பதையனுபவம்”
மாயையென்னெழுத்து
மாமாயை
என் வாழ்வு
என்றாலுமென்ன
இது வென்னூல்
இது வென்பெயர்
இது வென்னெழுத்து.

கவிதையை பொதுவாக எளிதாக எழுதுவதாக தோன்றினாலும, நகுலன்   எழுத்து எளிதாக புரிந்து விடாது.  இக் கவிதையில் நகுலன் என்ன சொல்ல வருகிறார். அவருடைய கவிதையை எழுதிவிட்டு யாரிடமோ கொடுக்கிறார்.  பின் அவர் சொல்வதுபோல், வேறு மாதிரியாக கவிதையை மாற்றி மாற்றி எழுதுகிறார்.  அவர் எழுத்தில் அவர் இல்லை என்கிறார்.  ஆனால் அவர் எழுதியதாக கவிதை அடையாளப் படுத்தப் படுகிறது.  அப்படி வெளிப்படுகிற கவிதையை விமர்சகர் இல்லாததையெல்லாம் சொல்லி புகழ்கிறார்.

இறுதியில் அவர் எழுத்தை மாயை என்கிறார். இந்த மாயையில் அவர் வாழ்வு, அவர் எழுத்து எல்லாம் ஒன்று என்கிறார்.

கசடதபற மே 1971 – 8வது இதழ்



விதி

     கலாப்ரியா




அந்திக் கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை,
தன் குஞ்சுக் காய்,
தன் கூட்டுக்காய்,
அலைமோதிக் கரைகிறது.
எனக்கதன்
கூடும் தெரியும்,
குஞ்சும் தெரியும்,
இருந்தும் எனக்கதன்
பாஷை புரியவில்லை.

புத்தக விமர்சனம் 6

  அழகியசிங்கர்

எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது என்பது தேவதச்சனின் கவிதைத் தொகுதியின் பெயர்.  எப்படி இந்தப் பெயரை தலைப்பாக தேவதச்சன் வைத்தார் என்று யோசித்தேன்.  ஏன்எனில் சினிமா தயாரிப்பாளர்கள் பார்த்தால் இந்தப் பெயரை ஒரு படத்தின் தலைப்பாக வைத்துக்கொள்ள விரும்பலாம்.  
இன்று பரவலாக தேவதச்சன் பெயர் பலரால் உச்சரிக்கப் படுகின்றது. எழுபதுகளின் ஆரம்பத்தில் கசடதபற இதழ்களில் அவர் எழுத ஆரம்பித்தபோது, அவருடன் இன்னும் பலரும் கவிதைகள் எழுத ஆரம்பித்தார்கள்.  அவர்களில் பலர் இன்று எங்கே இருக்கிறார்கள் என்பதுகூட தெரியவில்லை.  பெரும்பாலோர் கவிதை எழுதுவதை விட்டிருப்பார்கள்.  
அதிகமாக விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் தேவதச்சனும் கவிதைகள் மட்டும் எழுதிக் கொண்டிருக்கிறார்.  1982ல் முதன் முதலாக அவருடைய கவிதைத் தொகுதி அவரவர் கைமணல் ஆனந்த் கவிதைகளுடன் சேர்ந்து வெளிவந்தது.  1982க்குப் பிறகு 2000ல்தான் அவருடைய மற்றொரு கவிதைத் தொகுதி வெளிவருகிறது.  தன்னுடைய கவிதைகள் புத்தகமாக வர வேண்டுமென்று ரொம்ப ஆர்வமாக இருக்க மாட்டார்.  
அவரைப் பார்க்க வருகிற நண்பர்களிடம் மட்டும் கவிதைகள் பற்றி, இன்னுப் பல விஷயங்களைப் பற்றி  பேசிக் கொண்டிருப்பார். அவருடன் பேசுவது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.  பேச வேண்டுமென்று நண்பர்கள் சிலர் எப்போதும் இருந்து கொண்டிருப்பார்கள்.
48 கவிதைகள் கொண்ட இத் தொகுதியில் தேவதச்சன் எப்போதெல்லாம் கவிதை எழுதினார் என்பதைக் குறிப்பிடவில்லை.  
எப்போதும் ஒரு கவிதைத் தொகுதியைப் படிக்கும்போது, யாராவது கேட்டால் உடனே கொடுத்துவிடத் தோன்றும்.  அப்படி கொடுத்துவிட்டப் பின் அந்தத் தொகுதி வேண்டும் என்று கேட்கக் கூடத் தோன்றாது.   நம்மை விட்டுப் போனால் போகட்டும் என்று கூடத் தோன்றும். கவிதைத் தொகுதி விற்கவும்விற்காது.  அதுபோல் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எளிதாக மாறிவிடக் கூடியதும் கவிதை. நூல்தான்.  ஆனால் தேவதச்சனின் இந்தத் தொகுதியை அப்படி கொடுத்துவிட மனம் வராது.  
அதேபோல் இன்னொரு விதி.  எந்தக் கவிதைத் தொகுதியும் அதிக எண்ணிக்கை விற்காது.  ஆனால் ஒரு பெண்மணி அவர் கவிûத்தொகுதிக்கு ராயல்டி கிடைத்தது என்று சொன்னார்.  என்னால் நம்ப முடியாமல் இருந்தது. 
கவிதை புரிய வேண்டுமா வேண்டாமா?  கவிதை புரியவும் வேண்டும் அதேசமயத்தில் ரொம்பவும் புரிந்து விடக். கூடியதாக இருக்கக் கூடாது.  நான் முன்பெல்லாம் தேவதச்சன் கவிதைகளைப் படிக்கும்போது, அவர் கவிதை மூலம் புதிர் போடும் தன்மையைக் கொண்டு வருகிறாரா என்று நினைப்பேன்.  அவர் எளிமையாக கவிதைகளை எழுதுகிறார்.  வித்தியாசமாக சொல்ல வருகிறார் என்றே தோன்றுகிறது.
இத் தொகுதியில் 18 ஆம் பக்கம் நிர்வாணம் என்ற கவிதை.
யாருமில்லை என்பதால்
வீட்டில் சில நேரம் 
நிர்வாணமாக இருந்தாள்
யாருமில்லை என்பதால்
நிர்வாணமாக இல்லை.
ஒருவிதத்தில் இக் கவிதையைப் படிக்கும்போது புதிர் தன்மை உடையதாக இருந்தாலும், நிர்வாணம் என்பது என்ன என்று கேள்வி கேட்டே இக் கவிதை முடிந்து விடுகிறது.  தேவதச்சன் இப்படித்தான் ஒவ்வொருவரையும் வித்தியாசமாக யோசிக்க வைக்கிறார்.
இவர் கவிதைகளின் இன்னொரு விசேஷம் எப்போதும் இவர் கவிதைகளை எடுத்து வாசிக்கும்போது, இன்னொரு முறை வாசிக்க வேண்டுமென்ற எண்ணத்தை ஏற்படுத்துவது.  ஒவ்வொரு முறையும் படிப்பவர்களுக்கு ஒவ்வொரு விதமாய் தோன்றும்.     
கொஞ்சம் யோசித்துப் பார்க்கும்போது, வரிகளை வைத்து கவிதை எழுதுவதன் மூலம் ஒரு விளையாட்டை விளையாடுகிறார் தேவதச்சன் என்று தோன்றுகிறது.
பக்கம் 34ல் உள்ள ன்மீ என்ற கவிதையை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒருபோதும்
மீன்கள் திரும்புவதில்லை
திரும்பக் கூடுவதுமில்லை
கடல்கள் திரும்பிக் கொண்டிருக்கின்றன
மீன் திரும்பினால்
ன்மீ ஆகிவிடுமே
யாராவது
ன்மீயைப் பார்த்திருக்கிறீர்களா
வலைவீசிப் பிடித்திருக்கிறீர்களா
மேலும் 
ன்மீயை எப்படித்தான்
சமைப்பது
ஆனால், திரும்பி
திரும்பிக் கொண்டிருக்கும்
ன்மீயை எப்போதும் விரும்பி
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இப்படித்தான் தேவதச்சன் ஒவ்வொரு கவிதையையும் ஒவ்வொரு விதமான விளையாட்டாக விளையாடத் தொடங்குகிறார். அவர் கவிதைகள் படிப்வர்களை பரவசமூட்ட தவறுவதில்லை.  அவருக்கு கவிதை மூலம் சொல்வதில் எந்தக் குழப்பமும் இல்லை.  படிப்பவர்களுக்குத்தான் குழப்பம் இருக்கும்.
தேவதச்சனின் எந்தத் தொகுதியையும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டுமென்று தோன்றுகிறது.
எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது – கவிதைகள் – தேவதச்சன் –  பக்கம் : 62 – விலை ரூ.40 – உயிர்மைப் பதிப்பகம் – 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018
 

இன்றைக்கு ஸ்டெல்லா புரூஸ் பிறந்தநாள்….


அழகியசிங்கர்





பொதுவாக நான் யார் பிறந்தநாளையும் ஞாபகம் வைத்துக்கொள்ள மாட்டேன்.  ஆனால் சமீபத்தில்தான் இந்த பிறந்தநாள் ஞாபகம் என்னிடம் ஒட்டிக் கொண்டுள்ளது.  குறிப்பாக ராம் மோஹன் பிறந்த நாளை நான் மறப்பதில்லை.  ராம் மோஹன் என்பவர் வேறு யாருமில்லை ஸ்டெல்லா புரூஸ்.  அவருடைய பிறந்த நாள் இன்று.  அவர் உயிரோடு இருந்திருந்தால், இன்று 75 வயதாவது அவருக்கு ஆகியிருக்கும்.  உண்மையில் எனக்கு அவருடைய பிறந்த தேதி மாதம் மட்டும் ஞாபகம் இருக்கிறது.  அவர் எந்த வருடம் பிறந்தார் என்பது ஞாபகத்தில் இல்லை.  அவர் சொன்னதும் இல்லை. தானாகவே உயிரை மாய்த்துக் கொண்ட எழுத்தாளர்களில் இவர் ஒருவர், ஆத்மாநாம் இன்னொருவர்.  ஸ்டெல்லா புரூஸ் அதுமாதிரி செய்தது சரியான செயலாக நான் கருதவில்லை.  
அவர் ஏன் ராம் மோஹன் என்று எழுதாமல் ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயரில் எழுதினார் என்பதற்கு ஒரு கதை உண்டு.  அவர் நேசித்த பெண்ணிற்கு வேறு சிலரால்  அந்நியாயம் நடந்ததால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டு விட்டாள்.  அவள் நினைவாக அந்தப் பெயர் அவர் வைத்துக் கொண்டார்.
ஸ்டெல்லா புரூஸ் காளி-தாஸ் என்ற பெயரில் எளிமையான கவிதைகள் பல எழுதி உள்ளார்.  அவர் கவிதைகள் ழ என்ற பத்திரிகையிலும், விருட்சத்திலும் பிரசுரமாயிருக்கின்றன.  
மையம் வெளியீடாக வெளிவந்த நானும்  நானும் என்ற கவிதைத் தொகுப்பு 1996ஆம் ஆண்டு வந்துள்ளது.  அதைத் திரும்பவும் விருட்சம் வெளியீடாக கொண்டு வந்துள்ளேன்.  அந்தப் புத்தகத்தின் விலை ரூ.50 தான்.   அந்தப் புத்தகம் விரும்புவோர்.  அழகியசிங்கர், விருட்சம் வெளியீடு, 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 33ல் என்னிடம் தொடர்பு கொள்ளலாம்.  தொலைபேசி எண்.9444113205
நானும் நானும் என்ற தொகுப்பிலிருந்து, ஸ்டெல்லா புரூஸ் நினைவாக ஒரு கவிதையை இங்கே வெளிப்படுத்த விரும்புகிறேன்.
ஆட்டம்
கற்றுக் கொள்ள முடியாது இனி
காலம் கழியும்
ஆட வேண்டும் எனக்கு உடனே
நிமிஷங்களுக்கு மேடையில இல்லை
வாழ்க்கை பூரா
நிறுத்தாமல்
களைத்து விடாமல்
நினைத்துப் பார்க்கத் தெரியாமல்
ஆட்டமே மிஞ்ச
ஆட்டமாக நிறைய
ஆடி விட வேண்டும் – ஒரே ஆட்டம்
முடிவு இல்லாத ஆட்டமாகத் துவங்குகிறேன்
இப்போது ஆடிக் கொண்டிருப்பது
ஆட்டம் மட்டும்தான்

புத்தக விமர்சனம் 5


 அழகியசிங்கர்

                                                                             

கொஞ்ச நாட்களாய் நான் படிக்கும் புத்தகத்தைப் பற்றி எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதலாம் என்று நினைக்கிறேன்.  நான் தினமும் புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.  ஆனால் வேகமாக என்னால் ஒரு புத்தகத்தைப் படிக்க முடிவதில்லை.  மேலும் ஒரே புத்தகத்தை மட்டும் நான் எடுத்துப் படிப்பதில்லை.  ஒவ்வொரு புத்தகத்திலும் ஒரு சில பக்கங்களை நான் படித்துக் கொண்டு வருகிறேன்.
சமீபத்தில் நான் படித்து முடித்த புத்தகம் மலர்வதி எழுதிய தூப்புக்காரி என்ற நாவல்.   இந்த நாவலும் யுவபுரஸ்கார் விருது பெற்ற நாவல்.  
தலித் எழுத்தை ஒரு தலித்து எழுதுவதுதான் சிறப்பாக அமையும்.அந்த வகையில் தூப்புக்காரி என்ற நாவல் ஒரு தலித்தால் எழுதப்பட்ட நாவல்.
இப்போது ஒரு கேள்வி எழுகிறது.  ஒரு தலித் நாவலை தலித் மட்டும்தான் எழுத முடியுமா?.  ஜெயகாந்தன் எப்படி ஒரு பிராமண நாவலை பிரமணர்களை விட நன்றாக எழுத முடிந்ததோ, அதேபோல் ஒரு தலித் நாவலை பிரமணரோ அல்லது மேல் வகுப்பினரோ எழுதமுடியுமா?  எது எழுதினாலும் அது கலைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.  அந்த விதத்தில் யோசித்துப் பார்க்கும்போது, ஒரு பிரமணர் அல்லது மேல் ஜாதிக்காரர் ஒரு தலித் நாவலை எழுதலாம். ஆனால் கலைத் தன்மை கொண்டதாக அதைக் கொண்டு வர வேண்டும்.
பிப்பரவரி 2015 உயிர்மை இதழில் இமையம் 2000க்கு சற்று முந்தைய காலத்திலிருந்து, பிராமணர்கள் தமிழ் மொழியிலிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டதாக எழுதி உள்ளார்.   இப்போது பிராமண வாழ்க்கையை பிராமணர்கள் எழுதுவதில்லை என்றும் குறிப்பிடுகிறார். அவர் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
இன்று தமிழகத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.  அதெல்லாம் நாவலில் வெளிப்பட வேண்டுமா? இமையம் கூறுவது போல் நிகழ்ந்த சரித்திர சான்றுகள் கதைகளாக மாறப்படுவதில்லை.  அதற்கான சாத்தியமும் குறைவு.  ஒரு நாவல் இதுமாதிரி சரித்திர சான்றுகளைக் கொள்ளமல் தன் மனம்போல் வெளிவருவதுதான் உண்மையான படைப்பாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  மேலும் சரித்திர சம்பவத்தை கலைத் தன்மையாக மாற்றுவது கடினம்.  
மலர்வதி எழுதிய தூப்புக்காரியின் கதை மிகச் சாதாரண மனிதரைப் பற்றிய கதைதான்.  அந் நாவலின் வெற்றி அந்த வாழ்க்கையில் தென்படுகிற அவலங்களை அப்படியே விவரிப்பதில்தான் அமைகிறது.  அந்த நாவலில் மலர்வதி கையாளும் மொழி.  அப்படி ஒரு மொழியைக் கொண்டு வருவது கடினமாகத்தான் இருக்கும்.  இப்போதெல்லாம் பிரமண எழுத்தாளர்கள் பிராமண மெழியைப் பயன்படுத்துவதில்லை.  பிராமண மொழி பலரால் பேசப்பட்டு கிண்டலுக்கு உரிய மொழியாக மாறிவிட்டதால், அவர்கள் பயன் படுத்தும் பேச்சு மொழி அவர்களுக்கே அந்நியமாக மாறிவிட்டது.  அவர்கள் பொது மொழியில்தான் எழுதுகிறார்கள்.  சில வட்டார எழுத்தாளர்கள் வட்டார மொழியில் கதைகள் எழுதுகிறார்கள்.  ஆனால் படிப்பவர்களை வட்டார மொழியில் எழுதுபவர்கள் எந்த அளவிற்கு ஈர்ப்பார்கள் என்பது தெரியவில்லை.  
அப்படி எழுதப்படுகிற கதைகளைப் படிப்பதற்கு சற்று சிரமமாக இருக்கும்.  ஆனால் மலர்வதி எழுதிய இந்த நாவலில் எனக்கு இந்தப் பிரச்சினை ஏற்படவில்லை.  
ஆனால் இந் நாவல் வழக்கமான நாவல்தான்.  ஒரு பெண் காதல் என்ற பெயரில் ஏமாற்றப்படுகிறாள்.  அதனால் அவள் வாழ்வில் ஏற்படுகிற ஏடாகூடமான நிகழ்ச்சிகள்.  அதை அவள் துணிச்சலாக எதிர் கொள்கிறாள்.  தன் அம்மாதான் தூப்புக்காரியாக வாழ்ந்து வந்தாள்,  தானும் அவ்வாறு இருக்கக் கூடாது என்று நினைக்கிறாள் பூவரசி.   பூவரசியால் அவள் அம்மா தற்கொலை செய்து கொண்டு விடுகிறாள்.   விதி பூவரசியையும் தூப்புக்காரியாக மாற்றி விடுகிறது.  தன் விதியை நொந்துகொண்டே அவள் வாழ்க்கையை எதிர்கொள்கிறாள்.  காதலில் தோல்விகண்ட பூவரசியை மாரி என்பவன் அவள் மீது உள்ள அன்பால் ஏற்றுக்கொள்கிறான்.  அவனோடு அவள் சேர்ந்துதான் வாழ்கிறாள்.  அவள் காதலன் மனோ மூலம் அவளுக்கு உண்டான குழந்தையை மாரி ஏற்றுக்கொள்கிறான்.  ஆனால் விதி அவனையும் விட்டுவிட வில்லை.  எதிர்பாராதவிதமாய் விபத்தில் மாரி இறந்து விடுகிறாள்.  
பூவரசி அந்தக் குழந்தையை வைத்துக்கொண்டு போராடுகிறாள்.  அவள் அம்மா கனகம் எப்படி பூவரிசியை வைத்துக் கொண்டு போராடுகிறாளோ அதேபோல் பூவரசியும் போராடுகிறாள்.கதையில் தென்படுகிற முக்கிய குறை கதை ஆசிரியரின் தலையீடு.  அங்கங்கே நடக்கிற நிகழ்ச்சிக்கு சமாதானம் கூறுவதுபோல் ஆசிரியரின் தலையீடு அதிகமாகவே தெரிகிறது.  கதையின் ஆரம்பம்தான் கதையின் முடிவாக மாறி விடுகிறது.  கதையின் ஆரம்பிக்கும்போது, கனகம் அவள் பெண் பூவரசி இருக்கிறார்கள்.  அதேபோல் பூவரசியும் அவள் பெண்ணும் இருக்கிறார்கள் நாவல் முடிவில்.  
தூப்புக்காரி – நாவல் – மலர்விழி – பக்கம் : 136 – வெளியீடு : அனலகம், தண்ணீர் பந்தல், கருங்கல் 629 157 குமரி மாவட்டம் – விலை ரூ.75/-

   

என் தாய்மொழி தமிழ்.

ஜெ.பாஸ்கரன்


‘ அம்மா ‘ என்றுதான் என் அன்னை எனக்கு அறிமுகமானாள்
!
நினைவு தெரிந்த நாள் முதல், நான் பேசியும், பழகியும் வருவது
தமிழில்தான்.
பள்ளியில் கற்றதும் தமிழ்வழிக் கல்விதான் ! (தமிழ்
மீடியம்)
முறையாகப் பள்ளியில் சமஸ்கிரதமும், ஹிந்தியும் நான் கற்றுக்
கொள்ளத் தடை செய்யப்பட்டவன்.
செய்யும் தொழில் கருதியும், பிற
மாநில,நாடுகளுடன் என்னைத் தொடர்பு கொள்ளவும் நான் கற்ற பிற மொழி, கிழக்கிந்தியக்
கம்பெனியின் ஆங்கிலம்.
தமிழ்ப் பாடல்கள், தமிழ்க் கதைகள், தமிழ் வழக்குகள்
எனக்கு, சிறு வயதிலிருந்தே அறிமுகம் செய்யப் பட்டவை – செய்தது, என் முன்னோர்கள் –
அவர்கள் தாய்மொழியும் தமிழ்தான் !
ஆழ்வார்கள் பிரபந்தங்களையும்,
நாயன்மார்கள் தேவார, திருவாசகங்களையும் பாடியது என் தாய்மொழி தமிழிலேயேதான் –
அதனால் ஓரளவுக்கு எளிதில் அவை எனக்குப் புரிந்தன !
ஆத்திச்சூடியும்,
நாலடியாரும், கம்பராமாயணமும், திருக்குறளும், சிலப்பதிகாரமும், சீவகசிந்தாமணியும்,
இன்ன பிறவும் அவ்வாறே எனக்குப் பயிற்றுவிக்கப் பட்டன ! இலக்கியத்துக்கும்,
வரலாற்றுக்கும் அதிக வேற்றுமை தெரியாமல் அவை என்னுள் தாய்மொழியிலேயே செலுத்தப்
பட்டன !
என் சிந்தனைகளும், செயல்களும் தமிழிலேயே என்னுள் உதிக்கின்றன
!
ஆங்கிலத்தில் உரையாடும்போது கூட, மனதில் தமிழில் தோன்றுகின்ற சொற்களின்
ஆங்கில மொழிமாற்றுச் சொற்களைத் தேடிப்பிடித்து, சொல்லாட வேண்டியுள்ளது !
அது
போலத்தான், மாற்றுக் கருத்துக்களும் எனக்குத் தமிழிலேயே புரிகின்றன – இருக்கிறது
என்பவரும், இல்லவே இல்லை என்பவரும், இரண்டுக்கும் இடையிலே ‘ எனக்குத் தெரியாது ‘
என்பவரும், தமிழிலேயே எனக்குப் புரிகின்றனர் !
நான் தமிழ் நாட்டின்
ஓட்டுரிமை பெற்ற ஓர் இந்தியத் தமிழ் பிரஜை !
நான் கற்றது தமிழ் மருத்துவம்
அல்ல – ஆங்கில வழி மருத்துவம்.
தம் வலிகளையும், வேதனைகளையும் தமிழில்
விவரிக்கும் என் சக மனிதர்களுக்கு, நோய்க்கான காரணிகளைச் சிந்தித்து, சிகிச்சை
அளிக்கும்போது, தமிழிலேயே அவர்களுடன் உரையாடுகிறேன்.
தமிழ்ப் படங்களையே
பெரும்பாலும் விரும்பிப் பார்க்கிறேன் – தமிழ் புரியுமென்பதால் !
தமிழ்ப்
பாடல்கள் என்னை ஆட்கொள்ளும் அளவுக்குப் பிற மொழிப் பாடல்கள் ஆட்கொள்வதில்லை –
கருத்துக்கள் மனதில் நிற்காததால் !
இசைக்கு மொழியில்லையெனினும், மனம்
இலயிக்க, மொழி வழி விளக்கம் அவசியமாகிறது !
‘ குட்மார்னிங் ‘ – என் காலை
வணக்கங்களையே எதிர்கொள்கின்றது !
‘ நன்றி ‘யும், ‘ வாழ்த்துக்களும் ‘ பல
முறை நான் விரும்பிக் கூறும் தமிழ்ச் சொற்கள் !
என் வாழ்வின் புரிதல்
தமிழிலேயேதான் நிகழ்கின்றது !
அண்மையில், மருத்துவம் சார்ந்த இரு
புத்தகங்கள் எழுதி வெளியிட்டபோது, பலர் என்னைக் கேட்ட கேள்வி எனக்கு
வியப்பளிக்கவில்லை – மாறாக, என் தாய் மொழி பற்றி நான் கொண்டுள்ள என் கருத்துக்களைக்
கூற ஒரு வாய்ப்பளித்தது !
“ தமிழ் அறியும் என் தமிழ் மக்களுக்கு, சில
பொதுவான நோய்களைப் பற்றிய தெளிவான கருத்துக்கள் வேண்டும் – மருத்துவர் சொல்வது
அவர்களுக்குப் புரிய வேண்டும் – நோய் பற்றிய தவறான தகவல்களை அவர்கள் புறம்
தள்ளவேண்டும். மேலும், ஆங்கிலத்தில் ஏராளமான் மருத்துவப் புத்தகங்கள் கிடைக்கின்றன
– மற்றுமொன்று அவசியமில்லை “ என்பதே என் பதிலாக இருந்தது !
என் பிறப்பிலும்,
இரத்தத்திலும் ஒன்றரக் கலந்திருக்கின்ற என் தமிழ் மொழி மீது எனக்குள்ள காதல்,
வெறும் வார்த்தைகளால் வடிக்க இயலாது.
திருநெல்வேலித் தமிழில் என்
தமிழகத்தின் கிராமங்களைக் கண்டிருக்கிறேன் – அவர்கள் குறும்பு என்னை வாய் விட்டு
சிரிக்க வைக்கிறது.
கோயம்புத்தூர்த் தமிழின் மரியாதை கலந்த கோபமும்,
கேலியும் என்னைக் கிறங்க வைக்கின்றன.
மதுரையின் சங்கம் வளர்த்த தமிழ் –
‘வாடி’ ‘போடி’ என்று கேலியாகவும், ‘நொண்ணைகளா’ என்று உரிமையோடும் உறவாடுவது
எனக்குப் பிடிக்கும்.
தஞ்சைத் தமிழ் – ஆன்மீக, வாழ்வியல், இலக்கியப்
பரிமாணங்களைக் கொண்ட தமிழ் – காவிரிக் கரையின் சிலம்புத் தமிழ், என்றும் என்னை
நெகிழவைக்கும் கன்னித் தமிழ் !
‘ இன்னாம்மே, எப்டி கீரே ? சொம்மா குந்திகினே
இருந்தா, எப்போ வாத்யார் படத்துக்கு போவர்து ? கலீஜ் பண்ணாமெ கெளம்பு, படம்
கண்டுக்கினு, அப்பால பிரியாணி துண்லாம் ‘ – புரிதலுக்கும், சொல்லாடலுக்கும் மிகவும்
கடினமான சென்னைத் தமிழ் – அதன் சரளத்தில் என்னை நான் பலமுறை
இழந்திருக்கிறேன்.
தெலுங்கையும், மலயாளத்தையும், வடமொழியையும் தாய்
மொழியாகக் கொண்டு, வீட்டில் தன் தாய்மொழியையும், மேடையில் என் தமிழைத் தன்
தாய்மொழியெனவும் வீரமுழக்கம் செய்து உரிமை கொண்டாடுவோரின் தமிழ்ப் பற்று எனக்குப்
பிடிக்கும் – ஆனால் அது என் தாய்மொழிப் பற்றுக்குச் சமமாகாது!
தமிழைத்
தாங்குகிறேன் என்று சொல்லி, புதிய சொல்லாடல் என்கிற பெயரில், தமிழின் அழகை,
இனிமையைக் குறைக்கும் வகையில் என் தாயைச் சிதைப்பதில் எனக்கு உடன்பாடு
கிடையாது.
தமிழ்க் கவிதைகளில் பிறமொழிக் கலப்புகளை, ‘புதுமை’ என்ற பெயரில்
தமிழ்த் தாயை மானபங்கப் படுத்துவதை ஏற்றுக் கொள்ள
மாட்டேன்.
பிறமொழிகளிலிருந்து நல்ல பல கருத்துக்களை மொழி மாற்றம் செய்வதை
வரவேற்கிறேன் – ஆனால் ஆங்கிலத்தில் சிந்தித்து, அதை என் தமிழில் மொழிமாற்றம்
செய்யும் போது, புதிய புரியாத சொற்களை நவீனம் என்ற பெயரில் திணிப்பதை புறம் தள்ளவே
விரும்புகிறேன்.
தமிழில் உரையாடி, தமிழர்களுடன் உறவாடி, எல்லோருக்கும்
நல்லவனாய், நன்மைகள் பல செய்பவனாய், விருந்தோம்பலில் சிறந்தவனாய், வாரிக்
கொடுப்பதில் பாரியாய், மனதுக்கும், மகிழ்வுக்கும் நேர்மையான தமிழனாய் இருக்கவே
விரும்புகிறேன்!
எல்லாம் சரி – நான் யார் ?

கசடதபற மே 1971 – 8வது இதழ்

அநாசாரம்

                                                                    நீலமணி

வண்டோடு சம்போகம்
செய்துவிட்டுக்
குளிக்காமல
கடவுள் தோளேறும்
மாலைப் பூ

எழுத்து காலத்திற்குப் பிறகு, கசடதபற ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறது.  எழுத்தில் வெளிவந்த கவிதைகள் கசடதபற இதழ்களில் வெளிவர வாய்ப்பு உள்ளது.  ஆனால் கசடதபற இதழ்களில் வெளிவந்த கவிதைகள் எழுத்துவில் பிரசுரம் ஆக வாய்ப்பில்லை.

உதாரணமாக நீலமணி என்ற கவிஞர் கசடதபற இதழ்களில் முக்கியமான கவிஞராகத் தென்படுகிறார்.  பாலுணர்வை வெளிப்படையாக கவிதைகள் மூலம் முதன் முதலாக கசடதபற இதழ்கள் வெளிக்கொண்டு வர இவர் ஒரு காரணம்.

ஏற்கனவே அழைப்பு என்ற கவிதை எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்த ஒன்று.

நிரோத் உபயோகியுங்கள்
நிரோத் உபயோகியுங்கள்
என்று விளம்பரங்கள்
வலியுறுத்துகின்றன
வாயேன்.

அதேபோல் கசடதபற இதழ்களில் பெண் கவிஞர்கள் யாருமில்லை.  ஆனால் பெண்களைப் பற்றிய கவிதைகள் நிறையா உண்டு.

அப்துல்கலாம் பற்றிய எளிய குறிப்புகள்….

அழகியசிங்கர் 


எதிர்பாராதவிதமாய் நேற்று இரவு 7 மணி சுமாருக்கு டிவியை ஆன் செய்தேன்.  பிரதம மந்திரி கலாமை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஏன் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று யோசித்தப் போதுதான் தெரிந்தது.  அப்துல்கலாம் மாணவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது மரணம் அடைந்து விட்டார் என்ற துக்கச் செய்தியை அறிய நேர்ந்தது.  சமீபத்தில் ஒரு கூட்டத்தில் அப்துல்கலாம் பேசுவதைக் கேட்டேன்.  அவர் ரொம்பவும் வயதாகிப் போய், பேசும்போதே தடுமாறுவதுபோல் தோன்றியது.  
நான் 2004ல் பந்தநல்லூர் என்ற ஊரில் உள்ள வங்கிக் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.  அப்போது ஒரு துயரமான சம்பவம் நடந்தது.  கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளிக் கூடம் எரிந்து, தப்பிக்க முடியாமல் பல சிறார்கள் எரிந்த சாம்பலாகி விட்டார்கள். பெரிய துயரமான சம்பவம்.  என் அலுவலகத்தில் உள்ள ஒரு பெண்மணி, இந்தச் செய்தியைக் கேட்டவுடன், அழ ஆரம்பித்துவிட்டார்.  
இது மாதிரியான துயரத்தை எப்படி கவிதையாக வரிகளில் கொண்டு வருவது என்று யோஜனை செய்து கொண்டிருந்தேன்.  வெறும் வார்த்தைகளால் வடித்து விடலாம்.  ஆனால் அதை கவிதை வரிகளில் வடிப்பது என்பது சாத்தியமில்லை என்றே தோன்றியது.  ஏதோ எழுதலாம்.  ஆனால் அதைக் கவிதையாக ஏற்க முடியாது.
அந்தத் தருணத்தில்தான் குடியரசு தலைவராக இருந்த அப்துல்கலாம் தினமணியில் கும்பகோணத்தில் தீயில் கருகிய குழந்தைகளைக் குறித்து ஒரு கவிதை எழுதியிருந்தார்.  அதைப் படித்துவிட்டு அசந்து விட்டேன்.  சாதாரணமாக பொது துக்கத்தை கவிதையாகக் கொண்டு வருவது அவ்வளவு சுலபமல்ல.  அக் கவிதையை எடுத்து என் இதழில் மறுபடியும் பிரசுரம் செய்தேன்.
அக் கவிதை இதுதான்:
 அன்றுஏன் கதிரவன் கடும் கரும் மேகங்களை ஊடுருவவில்லை
 அன்று ஏன் குடந்தைத் தென்றல் கனலாக மாறியது
 அன்று ஏன் தாயுள்ளங்கள் பதறித் துடித்தன
 இளஞ்சிறார்கள் அக்னித் தேவனின் சினத்தில் தத்தளித்தனர்
 அன்று ஏன் அச்சிறார்களை இறைவன் அக்னிக் குஞ்சுகளாகப்
                                                                                                பரிணமித்தான்?
 
 இறைவா இதுவோ கொடுமையிலும் கொடுமை
 வளர்ந்து கல்விகற்று பணிசெய்யும் பருவத்தில்
 பழுத்த வயதில் மறைந்த தாய்தந்தையரை பூமிக்குக் கொடுப்பர்
 இன்றோ காண்பது கொடுமையிலும் கொடுமை
 பாலர்களை ஒவ்வொன்றாய் தந்தையர் பூமியில் புதைக்கும் காட்சி
  
 தாய்கண்ட கனவு, தந்தைகண்ட கனவு, சிறார்கள் கண்ட கனவு
 எல்லாமே அக்னியின் வேகத்தில் கரிக்குஞ்சாய் பரிணமித்தன
 இறைவா குழந்தைகள் உன் படைப்பு – அவர்கள்
 உன்னிடமே அடைக்கலத்தில் அடைந்தார்கள்
 உன் அருளால் அக் குழந்தைகள் எங்கிருப்பினும் நன்றிருக்க
 கையேந்தி பிரார்த்திக்கிறோம் கையேந்தி பிரார்த்திக்கிறோம்
 இறைவா உன் அருளால் – தம் குழந்தைகளை இழந்து
 தவிக்கின்ற பெற்றோருக்கு மன அமைதி பாக்கியத்தை
 மறுபடியும் வாழவிலருள் – அவர்கள் எப்பொழுதும் 
 உனை நம்பி அமைதி வாழ்வு வாழ பிரார்த்திக்கிறேன்.
                                                                                                                   (22.07.20094)
அந்த இதழ் நவீன விருட்சத்தை அவருக்கு அனுப்பினேன். அவரிடமி0ருந்து பதில் வந்தது.  
அவரிடமிருந்து 26.10.2004 ந்தேதி ஒரு பதில் கடிதம் வந்தது. அதை இன்னும் பாதுகாத்து வருகிறேன். அதில் இவ்வாறு எழுதி இருந்தார்.
திரு அழகியசிங்கர் அவர்களுக்கு,
வணக்கம்.
தங்களது கடிதமும், üüநவீன விருட்சம்ýý கவிதை இதழும் (செப்டம்பர் 2004) கிடைத்தது.  நன்றி.  üபரிவுý கவிதை நன்றாக உள்ளது. 
உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
                                                                               அன்புடன்,
                                                                                                              (ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்)
அவர் ரசித்த கவிதையை காளி-தாஸ் எழுதியது.
அக் கவிதை வருமாறு:
பரிவு
எங்கள் வீட்டு 
செடிகளுக்கு  கொட்ட நீர்
கிடையாது
கடும் தண்ணீர் தட்டுப்பாடு
                குளிக்கும் நீர் ஓடி
செடிகளுக்கு பாய வழி செய்தோம்
நாங்கள் இப்போது
சோப் உபயோகிப்பதில்வைல குளிக்கையில்
சமீபத்தில் மக்கள் மனதில் நிரந்தரமாகக் கூடிக் கொண்ட துக்கமாக கலாமின் மரணம் இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.