என் தாய்மொழி தமிழ்.

ஜெ.பாஸ்கரன்


‘ அம்மா ‘ என்றுதான் என் அன்னை எனக்கு அறிமுகமானாள்
!
நினைவு தெரிந்த நாள் முதல், நான் பேசியும், பழகியும் வருவது
தமிழில்தான்.
பள்ளியில் கற்றதும் தமிழ்வழிக் கல்விதான் ! (தமிழ்
மீடியம்)
முறையாகப் பள்ளியில் சமஸ்கிரதமும், ஹிந்தியும் நான் கற்றுக்
கொள்ளத் தடை செய்யப்பட்டவன்.
செய்யும் தொழில் கருதியும், பிற
மாநில,நாடுகளுடன் என்னைத் தொடர்பு கொள்ளவும் நான் கற்ற பிற மொழி, கிழக்கிந்தியக்
கம்பெனியின் ஆங்கிலம்.
தமிழ்ப் பாடல்கள், தமிழ்க் கதைகள், தமிழ் வழக்குகள்
எனக்கு, சிறு வயதிலிருந்தே அறிமுகம் செய்யப் பட்டவை – செய்தது, என் முன்னோர்கள் –
அவர்கள் தாய்மொழியும் தமிழ்தான் !
ஆழ்வார்கள் பிரபந்தங்களையும்,
நாயன்மார்கள் தேவார, திருவாசகங்களையும் பாடியது என் தாய்மொழி தமிழிலேயேதான் –
அதனால் ஓரளவுக்கு எளிதில் அவை எனக்குப் புரிந்தன !
ஆத்திச்சூடியும்,
நாலடியாரும், கம்பராமாயணமும், திருக்குறளும், சிலப்பதிகாரமும், சீவகசிந்தாமணியும்,
இன்ன பிறவும் அவ்வாறே எனக்குப் பயிற்றுவிக்கப் பட்டன ! இலக்கியத்துக்கும்,
வரலாற்றுக்கும் அதிக வேற்றுமை தெரியாமல் அவை என்னுள் தாய்மொழியிலேயே செலுத்தப்
பட்டன !
என் சிந்தனைகளும், செயல்களும் தமிழிலேயே என்னுள் உதிக்கின்றன
!
ஆங்கிலத்தில் உரையாடும்போது கூட, மனதில் தமிழில் தோன்றுகின்ற சொற்களின்
ஆங்கில மொழிமாற்றுச் சொற்களைத் தேடிப்பிடித்து, சொல்லாட வேண்டியுள்ளது !
அது
போலத்தான், மாற்றுக் கருத்துக்களும் எனக்குத் தமிழிலேயே புரிகின்றன – இருக்கிறது
என்பவரும், இல்லவே இல்லை என்பவரும், இரண்டுக்கும் இடையிலே ‘ எனக்குத் தெரியாது ‘
என்பவரும், தமிழிலேயே எனக்குப் புரிகின்றனர் !
நான் தமிழ் நாட்டின்
ஓட்டுரிமை பெற்ற ஓர் இந்தியத் தமிழ் பிரஜை !
நான் கற்றது தமிழ் மருத்துவம்
அல்ல – ஆங்கில வழி மருத்துவம்.
தம் வலிகளையும், வேதனைகளையும் தமிழில்
விவரிக்கும் என் சக மனிதர்களுக்கு, நோய்க்கான காரணிகளைச் சிந்தித்து, சிகிச்சை
அளிக்கும்போது, தமிழிலேயே அவர்களுடன் உரையாடுகிறேன்.
தமிழ்ப் படங்களையே
பெரும்பாலும் விரும்பிப் பார்க்கிறேன் – தமிழ் புரியுமென்பதால் !
தமிழ்ப்
பாடல்கள் என்னை ஆட்கொள்ளும் அளவுக்குப் பிற மொழிப் பாடல்கள் ஆட்கொள்வதில்லை –
கருத்துக்கள் மனதில் நிற்காததால் !
இசைக்கு மொழியில்லையெனினும், மனம்
இலயிக்க, மொழி வழி விளக்கம் அவசியமாகிறது !
‘ குட்மார்னிங் ‘ – என் காலை
வணக்கங்களையே எதிர்கொள்கின்றது !
‘ நன்றி ‘யும், ‘ வாழ்த்துக்களும் ‘ பல
முறை நான் விரும்பிக் கூறும் தமிழ்ச் சொற்கள் !
என் வாழ்வின் புரிதல்
தமிழிலேயேதான் நிகழ்கின்றது !
அண்மையில், மருத்துவம் சார்ந்த இரு
புத்தகங்கள் எழுதி வெளியிட்டபோது, பலர் என்னைக் கேட்ட கேள்வி எனக்கு
வியப்பளிக்கவில்லை – மாறாக, என் தாய் மொழி பற்றி நான் கொண்டுள்ள என் கருத்துக்களைக்
கூற ஒரு வாய்ப்பளித்தது !
“ தமிழ் அறியும் என் தமிழ் மக்களுக்கு, சில
பொதுவான நோய்களைப் பற்றிய தெளிவான கருத்துக்கள் வேண்டும் – மருத்துவர் சொல்வது
அவர்களுக்குப் புரிய வேண்டும் – நோய் பற்றிய தவறான தகவல்களை அவர்கள் புறம்
தள்ளவேண்டும். மேலும், ஆங்கிலத்தில் ஏராளமான் மருத்துவப் புத்தகங்கள் கிடைக்கின்றன
– மற்றுமொன்று அவசியமில்லை “ என்பதே என் பதிலாக இருந்தது !
என் பிறப்பிலும்,
இரத்தத்திலும் ஒன்றரக் கலந்திருக்கின்ற என் தமிழ் மொழி மீது எனக்குள்ள காதல்,
வெறும் வார்த்தைகளால் வடிக்க இயலாது.
திருநெல்வேலித் தமிழில் என்
தமிழகத்தின் கிராமங்களைக் கண்டிருக்கிறேன் – அவர்கள் குறும்பு என்னை வாய் விட்டு
சிரிக்க வைக்கிறது.
கோயம்புத்தூர்த் தமிழின் மரியாதை கலந்த கோபமும்,
கேலியும் என்னைக் கிறங்க வைக்கின்றன.
மதுரையின் சங்கம் வளர்த்த தமிழ் –
‘வாடி’ ‘போடி’ என்று கேலியாகவும், ‘நொண்ணைகளா’ என்று உரிமையோடும் உறவாடுவது
எனக்குப் பிடிக்கும்.
தஞ்சைத் தமிழ் – ஆன்மீக, வாழ்வியல், இலக்கியப்
பரிமாணங்களைக் கொண்ட தமிழ் – காவிரிக் கரையின் சிலம்புத் தமிழ், என்றும் என்னை
நெகிழவைக்கும் கன்னித் தமிழ் !
‘ இன்னாம்மே, எப்டி கீரே ? சொம்மா குந்திகினே
இருந்தா, எப்போ வாத்யார் படத்துக்கு போவர்து ? கலீஜ் பண்ணாமெ கெளம்பு, படம்
கண்டுக்கினு, அப்பால பிரியாணி துண்லாம் ‘ – புரிதலுக்கும், சொல்லாடலுக்கும் மிகவும்
கடினமான சென்னைத் தமிழ் – அதன் சரளத்தில் என்னை நான் பலமுறை
இழந்திருக்கிறேன்.
தெலுங்கையும், மலயாளத்தையும், வடமொழியையும் தாய்
மொழியாகக் கொண்டு, வீட்டில் தன் தாய்மொழியையும், மேடையில் என் தமிழைத் தன்
தாய்மொழியெனவும் வீரமுழக்கம் செய்து உரிமை கொண்டாடுவோரின் தமிழ்ப் பற்று எனக்குப்
பிடிக்கும் – ஆனால் அது என் தாய்மொழிப் பற்றுக்குச் சமமாகாது!
தமிழைத்
தாங்குகிறேன் என்று சொல்லி, புதிய சொல்லாடல் என்கிற பெயரில், தமிழின் அழகை,
இனிமையைக் குறைக்கும் வகையில் என் தாயைச் சிதைப்பதில் எனக்கு உடன்பாடு
கிடையாது.
தமிழ்க் கவிதைகளில் பிறமொழிக் கலப்புகளை, ‘புதுமை’ என்ற பெயரில்
தமிழ்த் தாயை மானபங்கப் படுத்துவதை ஏற்றுக் கொள்ள
மாட்டேன்.
பிறமொழிகளிலிருந்து நல்ல பல கருத்துக்களை மொழி மாற்றம் செய்வதை
வரவேற்கிறேன் – ஆனால் ஆங்கிலத்தில் சிந்தித்து, அதை என் தமிழில் மொழிமாற்றம்
செய்யும் போது, புதிய புரியாத சொற்களை நவீனம் என்ற பெயரில் திணிப்பதை புறம் தள்ளவே
விரும்புகிறேன்.
தமிழில் உரையாடி, தமிழர்களுடன் உறவாடி, எல்லோருக்கும்
நல்லவனாய், நன்மைகள் பல செய்பவனாய், விருந்தோம்பலில் சிறந்தவனாய், வாரிக்
கொடுப்பதில் பாரியாய், மனதுக்கும், மகிழ்வுக்கும் நேர்மையான தமிழனாய் இருக்கவே
விரும்புகிறேன்!
எல்லாம் சரி – நான் யார் ?

2 Replies to “என் தாய்மொழி தமிழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *