போட்டோ

நா கிருஷ்ணமூர்த்தி



இருபது வருடங்களுக்கு முன்பு
முதல் வகுப்பு படிக்கும்போது எடுத்த
புகை படிந்துவிட்ட
=குரூப்+ போட்டோவில்
அறுபது முகங்களுக்கு நடுவில்
ஒட்டி நிற்கும் மகனை
இமைகள் விரிய
இதழ்கள் விரிய
சட்டென அடையாளம் கண்டுவிடுகிறாள்
அம்மா….

நகுலன் கவிதைகளை வாசிக்கலாமா?

அழகியசிங்கர்








எந்தச் சிறு பத்திரிகை ஆகட்டும் நகுலன் கவிதை இல்லாமல் இருக்காது. நகுலன் ஏற்கனவே கவிதைகளை எழுதி வைத்திருப்பார். சிறுபததிரிகைக்காரர்கள் எல்லோரும் அவர்களுடைய சிறுபத்திரிகைகளை நகுலனுக்கு அனுப்பாமல் இருக்கமாட்டார்.  பின் அவர் எழுதிய கவிதைகளை பத்திரிகைக்கு அனுப்புவார்.  கூடவே தபால் தலைகளையும் சேர்த்து அனுப்புவார்.  ஒரு வார்த்தை எழுதுவார்.  கவிதைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தயவுவெய்து திருப்பி அனுப்பி விடுங்கள் என்று.  யாரும் அவர் கவிதைகளை திருப்பி அனுப்ப மாட்டார்கள்.  விருட்சம் இதழிற்கு ஒரு முறை அவர் எழுதிய கவிதையைப் பிரசுரம் செய்தேன்.  உடனே ஒரு படிம கவிதை எழுதுபவர் என்னிடம் சண்டைக்கே வந்து விட்டார்.  பின் அவர் எழுதிய அதிரடி கவிதையில் என்னையும் நகுலனையும் திட்டி ஒரு கவிதை எழுதி விட்டார்.  
மீட்சி 27 ல் வந்த ஐந்து கவிதைகள் என்ற நகுலன் கவிதைகளை நாங்கள் நடேசன் பூங்காவில் வாசித்தோம்.  அவற்றைக் கேட்கும்போது ஒரே சிரிப்பு. இதோ இங்கேயும் அவற்றை உங்களுக்கு படிக்க அளிக்கிறேன்.  நீங்களும் சிரிப்பீர்கள்.
ஐந்து கவிதைகள் 

‘நகுலன்’
வால்ட் விட்மன் :

அவன் “ஆத்ம ஸ்துதி”
என்ற கவிதைத் தொடரின்
கடைசி வரி
எங்கேயோ
நான் உனக்காகக்
காத்துக்  கொண்டிருக்கிறேன்                     ******

வந்தவன் கேட்டான்
“என்னைத் தெரியுமா?”
“தெரியவில்லையே”
என்றேன்.
“உன்னைத் தெரியுமா?”
என்று கேட்டான்
“தெரியவில்லையே”
என்றேன்.
“பின் என்னதான் தெரியும்?”
என்றான்
உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்
என்றேன். *********

அவன்
செத்துச் சில்லிட்டு
நாட்கள்
கடந்து விட்டாலும்
ஒருவரும்
ஒருவரிடமிருந்தும்
ஒன்றும்
தெரிந்து கொள்வதில்லை
என்ற நிலையில்

அவன் சாவு
இன்றும் இவனை
என்னவோ செய்கிறது.
*********

இந்த
ஊரில்
எல்லாமே
தலைகீழாகத்
தொங்குகிறது
மனித உடல்களில்
வீடுகள்
முளைத்திருக்கின்றன
இவர்களில் பலர்
எப்பொழுதுமே
சிடுசிடுத்த
முகங்களுடனேயே
காணப்படுகிறார்கள்
எங்கேயோ
யாரோ போவது
மாதிரி தோன்றுகிறது
உற்றுப் பார்த்தால்
யாருமில்லை ******

சென்ற இடத்தில்
தெரியாமல்
“ராயல்டி”
என்று
கேட்டு விட்டேன்
அவருக்குப்
பிரமாதமாகக்
கோபம் வந்துவிட்டது
“போட்டது
கை நஷ்டம்
ராயல்டி வேறு”
என்று
உரக்கக் கத்தினார்
நான் பேசாமல்
திரும்பி விட்டேன்

அறையில்
சுசீலா
உட்கார்ந்திருந்தாள்
நடந்ததைச்
சொன்னேன்
“உனக்கு உன் வழியில்
எழுதத்தான் தெரியும்”
“பின்ý”
“வாசகர்கள்
எதை வாசிக்கிறார்களோ
அதை
அவர் விற்கிறார்
அவர்கள் வாசிப்பது போல்
இவர் விற்பது போல்
நீ எழுத வேண்டும்”

நான் பேசவில்லை
மீண்டும்
சொன்னாள்
உனக்குச் சாகத்தான்
தெரியும்
நீ என்ன சொல்வாய்
என்று எனக்குத் தெரியும்
நீ எப்பொழுதும்
இப்படிச்
செத்துக் கொண்டிருக்க வேண்டும்
என்பதுதான்
என் விருப்பமும்
என்றாள்

பிறகு
அவள்
ஜோல்னாப் பையைத்
திறந்து
இந்தா
வாங்கிக் கொள்
உனக்கு
என்றுதான்
கொண்டு வந்திருக்கிறேன்
என்று
ஒரு குப்பி கான்யாக்கும்
ஒரு பாக்கெட்
‘ஸலம் ஸீகரெட்டும்
கொடுத்துவிட்டு
அடுத்த சனிக்கிழமை
மறுபடியும் வருகிறேன்
என்று
சொல்லிச்சென்றாள்

எனக்குள்
அவர் கோபம் அவருக்கு
சுசீலா
இருக்கின்ற வரையில்
எதுவும் சரியாகிவிடும்
என்று
என்னை நானே
சமாளித்துக் கொண்டேன்.

நானும் நடேசன் பூங்காவும்

அழகியசிங்கர்


நான் கல்லூரி படிக்கும் காலத்தில் நடேசன் பூங்காவில் தினமும் வந்து ஓடுவேன்.  எத்தனை முறை ஓடுவேன் என்பது ஞாபகத்தில் இல்லை. தி நகரில் உள்ள இந்த நடேசன் பூங்காவை என்னால் மறக்கவே முடியாது.  
இந்த நடேசன் பூங்காவில் நான் பல நண்பர்களுடன் வந்து  சும்மா பேசிக்கொண்டிருப்பேன்.  அப்போதே பலர் கூட்டம் நடத்திக் கொண்டிருப்பார்கள். ஒரு கட்டத்தில் நான் பூங்கா போவதையே நிறுத்தி விட்டேன்.  நடேசன் பூங்கா ஒரு அற்புதமான பூங்கா.  எனக்கு பனகல் பூங்காவை விட நடேசன் பூங்காதான் ரொம்பப் பிடிக்கும்.
அதன் பின் பல ஆண்டுகளுக்குப் பின் என் வலது கையை தூக்க முடியவில்லை.  தோள் பட்டையில் வலி. வலி என்றால் அப்படியொரு வலி.  ஆர்த்தோ மருத்துவரைப் போய்ப் பார்த்தேன்.  அதனால் எந்தப் பிரயோஜனமும் எனக்கு ஏற்படவில்லை.  அந்த சமயத்தில் Laughter Club  என்பதைப் பற்றி கேள்விப்பட்டேன்.  அதன் தலைமை இடம் திருவல்லிக்கேணி.  அங்கிருந்த சிலர் நடேசன் பூங்காவிலும் அதைத் தொடங்கி வைத்தார்கள்.
ஆரம்பத்தில் நானும் கலந்துகொண்டேன்.  தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து விடுவேன். Laughter Club ல் பலவிதமான உடலுக்கான பயிற்சிகள் கொடுப்பார்கள்.  எல்லோரும் சுற்றி நிற்பார்கள்.  ஒரே மாதிரி கைத் தட்டுவார்கள்.  ஒவ்வொரு பயிற்சிக்கும் சிரிப்பார்கள். பின் ஒருவரைப் பற்றி தினமும் விஜாரிப்பார்கள்.
ஒரு மாதம் கூட ஆகியிருக்காது   தாங்க முடியாத என் வலது தோள் பகுதி வலி முற்றிலும் குணமாகி விட்டது.  என்னால் இதை நம்ப முடியவில்லை. ஆனால் எப்போதும் நடேசன் பூங்காவை என்னால் மறக்கவே முடியாது. மேலும் பல மாதங்களாக சுற்றி சுற்றி நடந்தும் இருந்திருக்கிறேன்.  Laughter Club   மாதிரி கூட்டம் நடத்தினால் என்ன என்று நினைத்துக்கொள்வேன்.  அது சாத்தியமே இல்லை என்றும் தோன்றும். ஏன் எனில் எழுதுபவர்கள், படிப்பவர்களை ஒன்று சேர்ப்பது ரொம்ப கஷ்டம்.  Laughter Club மிகக் கொஞ்சம் பேர்கள்தான் கலந்து கொள்வார்கள்.  ஆனால் அவர்களுடைய உறுதி எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அதுமாதிரியான முயற்சியை கதை கவிதை வாசிக்க ஏற்பாடு செய்யலாம்.  அது முடியாத காரியம் என்று நன்றாகவே தெரியும்.  இப்படித்தான் இதை ஆரம்பிக்க வேண்டும், இப்படித்தான் முடிக்க வேண்டும் என்று கொள்கை எதுவும் எழுதுபவர்களிடமும் படிப்பவர்களிடம் செல்லுபடி ஆகாது.
பூங்கா மாதிரி ஒரு இடத்தில் கூட்டம் நடத்தினால் படிப்பவர்கள் எழுதுபவர்கள் எல்லாம் ஒரே அணியில் சேர்ந்து கருத்துகளைச் சொல்வார்கள்.  ஆனால் Laughter Club   மாதிரி இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும், இப்படித்தான் முடிக்க வேண்டும் என்கிற மாதிரி ஒரு கதை ஒரு கவிதை கூட்டத்தில் வராது.
தஞ்சாவூரில் பிரகாஷ் கதை சொல்கிற கூட்டத்தை பல ஆண்டுகளாக நடத்தியதாக நான் அறிந்திருக்கிறேன்.  தஞ்சாவூர் கவிராயர் கூட இதைப் பற்றி சொல்லியிருக்கிறார்.  ஆனால் அதை எப்படி நடத்தினார் என்பது தெரியாது.  ஒரு பத்திரிகையிலிருந்து புத்தகத்திலிருந்து கதையைப் படித்தார்களா அல்லது மனசிலிருந்து என்னன்ன கதைகள் தோன்றுகிறதோ அதைச் சொன்னார்களா என்பது தெரியாது.  உலகம் முழுவதும் கதை சொல்லும் கூட்டம் இருக்கிறதாக நண்பர்கள்  சொல்லியிருக்கிறார்கள். அதேபோல் இங்கும ஆரம்பிக்க வேண்டும்.  குறிப்பாக கல்லூரிகளிலும், பள்ளிக்கூடங்களிலும்  தமிழில்தான் கதைகள் கவிதைகள் வாசிக்க வேண்டும்.  இதில் உறுதியாக இருக்க வேண்டும்.
          இந்தக் கதை அல்லது கவிதைப் படிப்பதற்கே ஒரு டிமான்ட் வேண்டும். அந்த டிமான்ட் கிடையாது.  மேலும் வருபவர்கள் எதைஎதையோ படிப்பார்கள்.. கேட்பவர்கள் தலை எழுத்தா இதையெல்லாம் கேட்பதற்கு என்பார்கள்.  
ஆனால் ஒன்றும் செய்ய முடியாது.  படிப்பதை கேட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும்.  எதாவது நல்லது யாராவது படிப்பார்கள்.  இதனால் யாருக்காவது பயன் இருக்கும்.  ஒரு கதையை எழுதுபவர் சத்தமாக கதையைப் படிக்கும்போது என்னன்ன தவறுகளை செய்திருக்கிறோம் என்று  நினைக்கத் தோன்றும்.  ஆனால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால்தான் இந்தக் கூட்டமே தொடர்ந்து நடைபெறும்.
ஒருமுறை வைதீஸ்வரன் பிறந்த நாளை இந்த நடேசன் பூங்காவில் பல எழுத்தாள நண்பர்களைக் கூப்பிட்டு நடத்தினேன்.  அந்தக் கூட்டம் கூட நன்றாகவே இருந்தது.  இன்னொரு முறை திரிசூலம் என்ற ரயில்வே ஸ்டேஷனலில் சில நண்பர்களைக் கூப்பிட்டு கவிதை வாசிக்க வைத்தேன்.  அந்தக் கூட்டமும் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்காமல் இல்லை. 
ஆனால் எனக்கு ஒரு பிரச்சினை.  நானே இதெல்லாம் எதற்கு என்று ஒன்றும் ஏற்பாடு செய்யாமல் நிறுத்தி விடுவேன்.  நான் கல்லூரியில் படிக்கும்போது கடற்கரையில் முல்லைச்சரம் என்ற பெயரில் கவிஞர் பொன்னடியான் என்பவர் மாதம் ஒரு முறை கூடி பல கவிஞர்கள் கவிதை வாசிக்கக் கேட்டிருக்கிறேன்.  அதெல்லாம் மரபு கவிதைகளாக இருக்கும்.  கம்யூனிசத் தலைவர் ஜீவா அவர்களின் புதல்வர் கவிதைகள் எழுதி அங்கு வருவார்.  நானும் அவருடன் அதில் கலந்து கொண்டிருக்கிறேன்.  அந்தக் கூட்டம் கூட நாளடைவில் குறைந்து கொண்டே போயிற்று.  என்றாவது டிவிக்காரர்கள் கவிதை வாசிப்பவர்களைப் படம் பிடிக்க வந்தால், அன்று மட்டும் ஏகப்பட்ட கூட்டம் வரும்.  முண்டி அடித்துக்கொண்டு கவிதைகள் வாசிப்பார்கள்.
நேற்று நான் நடேசன் பூங்காவிற்கு நாலு மணிக்கே வந்து விட்டேன்.  முதலில் ஒன்றை கவனித்தேன்.  பூங்காவின் உற்சாகமான தோற்றம்.  அங்கு யாரும் வந்து கவிதையோ கதையோ வாசிக்காவிட்டாலும் பூங்காவின் அமைப்பே புத்துணர்ச்சியைத் தருவதுபோல் இருக்கிறது.  அது போதும்.
நான் என்னுடைய புத்தகமான வினோதமான பறவையிலிருந்து ஒரு கவிதையை வாசித்தேன்.  அதை இங்கே தருகிறேன்.
    
வினோதமான பறவை

ஒன்று
வினோதமான பறவை
சப்தம் இட்டபடி
இங்கும் அங்கும்
சென்று கொண்டிருந்தது
மண்ணில் எதைத்
தேடிக்கொண்டிருக்கிறது
கோட்டான் பூனை
மதிற்சுவரில் சோம்பலாய்
சயனித்துக்கொண்டிருக்கிறது

கீழே
குடியிருப்பவர்
துருப்பிடித்த சைக்கிளை
எங்கே எடுத்துச் செல்கிறார்

வெயில் கொளுத்துகிறது
மரங்கள் அசையவில்லை
கதவைச் சாற்றிவிட்டு
வெளியில் அமர்ந்திருந்தேன்

ஆமாம்..
என் நேரமும்
உங்கள் நேரமும் ஒன்றல்ல….

                                                                                         27.05.2011

நடேசன் பூங்காவில் நடந்த இலக்கியக் கூட்டம்

 
அழகியசிங்கர்


சரியாக 4 மணிக்கே பூங்காவிற்கு சென்று விட்டேன்.  அங்கிருந்த காவல் காரரைக் கேட்டேன்.  üபூங்கா எத்தனை மணியிலிருந்து எத்தனை மணி வரை திறந்திருக்கும்,ý என்று.  அவர் சொன்னார்.  காலை 4 மணியிலிருந்து இரவு 9 மணிவரை திறந்திருக்கும் என்று.  கேட்க எனக்கு ஆச்சரியம்.
கேட் வாசலில் நின்றுகொண்டு üஒரு கதை ஒரு கவிதை வாசித்தல்ý கூட்டத்திற்கு யார் வருகிறார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.  எனக்கு ஒரு சந்தேகம். வருபவர்களுக்கு எப்படி நான்தான் கூட்டத்தை நடத்துகிறேன் என்பது தெரியும் என்ற சந்தேகம் தான் அது. 
அதனால் மேடை மாதிரி உள்ள ஒரு இடத்தல் போய் அமர்ந்து கொண்டேன்.  மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக இதுமாதிரியான கூட்டத்திற்கு வருபவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.  எல்லோரையும் உட்கார வைத்துவிட்டு நான் நின்றுகொண்டு முதல் கதையைப் படிக்க ஆரம்பித்தேன்.  வ வே சு ஐயரின் குளந்தங்கரை அரசமரம் என்ற கதை.  இக் கதைதான் தமிழில் எழுதப்பட்ட முதல் கதை என்று கூறினார்கள்.  நான் சத்தகமாக வாசித்தேன்.  அதை அப்படியே சோனி ரெக்கார்டரில் பதிவு செய்தேன்.  கிட்டத்தட்ட நான் அந்தக் கதையைப் படித்து முடித்த உடன் 24 நிமிடங்கள் ஆயிற்று.  எனக்கு ஒரே சந்தோஷம். நான் நினைத்துப் பார்க்கவில்லை.  சத்தமாக வாசித்தால் இத்தனை நேரம் ஆகும் என்று.  கேட்டவர்கள் கைத் தட்டி வரவேற்றார்கள். 
இக் கூட்டத்தில் ஒரு முக்கியமான ஒன்றை கவனிக்க வேண்டும்.  பேசுபவரும், கேட்பவரும் ஒன்று.  எல்லோரும் நெருக்கமாக இருந்ததால் பாகுபாடு தெரியவில்லை.  தொடர்ந்து சத்தமாக வாசிக்கும்போது, பூங்காவில் நடப்பவர்கள் எல்லாம் நான் படிப்பதை வேடிக்கைப் பார்த்தபடி சென்றார்கள்.  இதுமாதிரி பொது இடத்தில் நாம் ஒன்றை நடத்தும்போது நம்மிடம் எதிர்படும் கூச்சம் விலகிப் போகவேண்டும். நான் மெய்மறந்து படிக்கும்போது என்னைச் சுற்றி உள்ளவர்களை கவனிக்கவில்லை.  அற்புதமான அனுபவம்.  அதன்பின் றாலி எழுதிய உமைச்சியின் காதல் கதையைப் படித்தோம். எங்கள் குழுவிலிருந்து பானுமதி என்பவர் அவருடைய கதையைப் படித்தார்.  பின் என் கவிதையான வினோதமான பறவை என்ற கதையைப் படித்தேன்.
எனக்குள் ஒரு சவால்.  மீட்சி 27 இதழைக் கொடுத்து கடைசிப் பக்கத்தில் வெளியாகி உள்ள பிரம்மராஜனின் கவிதையைப் படிக்கச் சொன்னேன்.  படிப்பவர் தடுமாறி விட்டார்.  யாரும் தடுமாறுவார்கள்.
அந்தக் கவிதையை இங்கு கொடுக்கிறேன்.
கண்களை அகலத்திறந்து கனவு காண்

கண்களை அகலத்திறந்து கனவு காண்
பது யெப்படி யென்று சொல் வாய்
திறந்த தூக்கக் கலக்கத்தைத் தெளிவி
காலை உணவுக் கனவு
தேநீர் நேர மாலை மட்கிய மஞ்சள்
அலையும் அலையைச் சார்ந்த கலையும்
களைத்து மேஜை மீது வீசு
சோதனையிலேயே
மண்டையைப் பிளந்து கொண்டு சாகும் ஏவுகணைகள்
பிரபஞ்ச நடனம்
பிறவிப் பிணி
ஒரு வினாடியின் இருநூறு பங்கில் ஒன்றில்
ஒரு வினாடியின் அறுநூறு பங்கில் ஒன்றில்
ஒரு வினாடியின் நான்காயிரம் பங்கில் ஒன்றில்
கண்ணின் கருமணியின் சமதள ஓட்டம்
சங்கமிக்க வேண்டும்
கனவுப் பதிவு
உள்வெளி ஒளியின்
ஊடுருவல் பொருத்தது
கம்ப்யூட்டரை நம்புவது 17999 தடவைக்கு
மேலும் தவறு
ஒரு புல் இதழ் மீது துளிப் பனியை
ஏதோ ஒரு சமரசமற்ற கோணத்தில் காணாதுபோய்
மீண்டும் ஒன்றிலிருந்து üஞாபகத்தைý அழுத்தி
வரவழைத்து
த்சோ கனவு காணுதலின் இழை அறுபடும்
நானும் பூவை முகரும் ஒரு ரோபோட்டும்
ஸிந்தடிக் புல்வெளியில் சதுரங்கம்
ஆட ஏற்பாடு மரக்குதிரை மனிதன்
மரத்துடல் அரசன் அவனை அதிலும்ட அறிந்த அரசி
அதி வயலட் கதிர் வீச்சால்
இன்றைய விளையாட்டு ஒத்தி வைப்பு நான் திகைக்க
ரோபோட் நகைக்கிறது
மீண்டும் நாளை கண்களைத் திறந்து கனவு காண்
பது எப்படி என்று
கவிதையை எங்கே நிறுத்திப் படிக்க வேண்டுமென்று தெரியவில்லை.  ஏன்என்றால் ஒரு முறை படித்தால் சரியாக வராது.   சரி படித்து விடலாம்.  ஆனால் கவிதை என்ன சொல்ல வருகிறது.
நிறைவான கூட்டம் முடிந்து இதோ ஆஸ்திரிலியா இந்தியா கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறேன்.  தி நகரிலிருந்து நான் வரும்போது எங்கும் கூட்டம் இல்லை.  எல்லாம் கிரிக்கெட் மோகம்.

ஒரு கதை ஒரு கவிதை வாசித்தல் கூட்டம்……..

அழகியசிங்கர்

தமிழில் படிப்பது என்பது மிகவும் குறைந்து போய்க் கொண்டிருக்கிறது.  பத்திரிகைகளில் முன்புபோல் கதைகள் பிரசுரமாவதில்லை என்று சொல்பவர்கள், பிரசுரமாகிக் கொண்டிருக்கும் கதைகளை எத்தனைப் பேர்கள் படிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.  அதே போல் கதைகள் எழுதப்பட்டு பிரசுரம் ஆவதின் வழி தெரியாமல் இருப்பவர்கள் அதிகம் பேர்கள் உள்ளனர்.
கதை படிப்பதில், கவிதை வாசிப்பதில் ஆர்வம் உள்ள எழுத்தாளர்கள் நண்பர்கள் பலர் உண்டு.  அவர்கள் ஒன்று சேர்ந்து எதாவது செய்ய முடியுமா?  அதேபோல் கதையை கவிதையை நேசிக்கும் வாசகர்களும் உண்டு.  எல்லோரும் ஒன்று சேர்ந்தால் என்ன? கதையைப் படிப்பது கவிதையைச் சொல்வது என்ற பழக்கத்தை நாம் நமக்குள் உருவாக்கிக் கொள்ள என்ன வழி?
அப்படி யோசித்துப் பார்த்தேன்.  பெரிய அளவில் கூட்டம் இல்லாமல், நம் இருக்கும் இடத்தில் பக்கத்தில் உள்ள பொது இடத்தில் வாரம் ஒரு முறை, அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, அல்லது மாதம் ஒரு முறை கூடி ஆளுக்கு ஒரு கதை அல்லது ஒரு கவிதை வாசித்தால் என்ன?  
நாம் எழுதுகிற கதைத்தான் கவிதையைத்தான் வாசிக்க வேண்டுமென்பதில்லை.  நமக்குப் பிடித்த கதை அல்லது கவிதையை வாசிக்கலாம். 
இதுமாதிரியான கூட்டத்திற்கு எத்தனைப் பேர்கள் வரவேண்டும்?  எத்தனைப் பேர்கள் வேண்டுமானாலும் வரலாம்.  ஆனால் குறைந்தபட்சம் இரண்டு பேர்களாவது இருக்க வேண்டும்.  
நான் முதல் கூட்டத்தை வரும் ஞாயிறு (27.03.2016) நடேசன் பூங்காவில் மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் நடத்த உத்தேசம். பல நண்பர்கள் வர சம்மதம் தெரிவித்து உள்ளார்கள்.  முடிந்தால் நீங்களும் வாருங்களேன்.  

புத்தக விமர்சனம் 19

‘உலோக ருசி’ –  பெருந்தேவி

அழகியசிங்கர்


சமீபத்தில் நான் படித்தப் புத்தகம் ‘உலோக ருசி’ என்ற பெருந்தேவியின் கவிதைப் புத்தகம்.  பொதுவாக நான் கவிதைத் தொகுதியைப் படிக்கும்போது ஒரே அமர்வில் எல்லாவற்றையும் படித்து விடுவேன்.  ஆனால் சில புத்தகங்களை மட்டும் யோசித்து யோசித்து திரும்பவும் எடுத்து வைத்துக்கொண்டு படிப்பேன்.  
உண்மையைச் சொல்லப் போனால் ஒரு நாவல் படிப்பது, ஒரு சிறுகதையைப் படிப்பது, ஒரு கட்டுரையைப் படிப்பது போல் சுலபமானதல்ல கவிதையைப் படிப்பது.  நாவலாகட்டும், சிறுகதை ஆகட்டும், கட்டுரை ஆகட்டும் நம்முடன் உடனடியாக அதன் அடுத்த அடுத்த நிகழ்ச்சிகள் உரையாடிக் கொண்டிருக்கும்.  ஆனால் 1000 பக்கங்கள் உள்ள மெகா நாவலைப் படிக்க ஞாபக சக்தி அவசியம் தேவை.  
கவிதையைப் படிப்பதில் வேறு பிரச்சினை வருகிறது.  அதாவது ஒவ்வொரு கவிதையைப் படிக்கும்போது ஒரே மாதிரியான தோற்றத்தைத் தருகிறது போல எண்ணம் ஏற்படும்.  திரும்ப திரும்ப ஒரே விஷயம் போர் என்று கூட தோன்றும். மேலும் நாம் விரும்பும் விஷயத்தை கவிதை எப்போதும் சொல்வதில்லை.  நாவலாகட்டும், சிறுகதை ஆகட்டும், கட்டுரை ஆகட்டும் ஒரு ஓட்டம் இருக்கும்.  கவிதையில் அதுமாதரியான ஓட்டத்தைப் பார்க்க முடியாது.  ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கும்.   இந்த விதி எல்லாக் கவிதைப் புத்தகத்திற்கும் பொருந்தாது.  உதாரணமாக நகுலன், ஆத்மாநாம் கவிதைத் தொகுதியைப் படிக்கும்போது கவிதை நிறுத்தி நிறுத்தி படிக்க நம்மைத் தூண்டும்.  அதே க நா சு, ஞானக் கூத்தன் கவிதைகளில் அப்படியெல்லாம் தோன்றாது.  கவிதை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாறிக் கொண்டே இருக்கும்.  அதாவது திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தையே படித்கிறோமா என்று தோன்றாது.
பெருந்தேவியின் கவிதைகளைப் படிக்கும்போது ஒரு கவிதையைப் படிக்கும்போது இன்னும் ஒரு கவிதையைப் படிக்க மனம் நகர்வதில்லை.   2010ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இக் கவிதைகள் அந்தத் தருணத்தில் அவர் மனதில் ஏற்பட்ட ஆவேசமா அல்லது உற்சாகக் கொண்டாட்டத்தில் எழுதப்பட்ட கவிதைகளா என்று தெரியவில்லை. வாழ்க்கையின் யதார்த்தம், ஒன்று படாத ஆண் பெண் உறவு, இன்றைய வாழ்வியல் முறையில் அதிகம் பங்கு பெறும் கணினி உறவுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு  கவிதைகள் எழுதி உள்ளார்.  திரும்ப திரும்ப பெண்ணிற்கு திருப்தியைத் தராத ஆணின் உருவம் வந்து கொண்டிருக்கிறது.
முத்தம் கொடுங்கள் முத்தங்களாகக்  கொடுங்கள் என்ற கவிதையில் ஆத்மாநாம் கவிதையுடன் பெருந்தேவியும் கவிதை எழுதி உள்ளார்.  இதைத் தனித்தனியாகப் படிக்கும்போது, இரண்டு வேறு கவிதைகளாக இவை படிக்கக் கிடைக்கின்றன. ஆத்மாநாம் கவிதைக்கு பதில் சொல்வதுபோல் பெருந்தேவி கவிதை உள்ளது.  
அதே சமயத்தில் நாலு வரிகளிலும் கவிதை எழுதி உள்ளார்.  உதாரணமாக ஞாபகம் சிலபல என்ற கவிதை.  
வாயில் மேலண்ணத்தில்
ஒட்டிக்கிடக்கும்
சாரமற்ற சுயிங்கம்
எங்கோ விழுந்துவிட்டிருக்கிறது நாக்கு.
இங்கே சாரமற்ற சுயிங்கம் என்கிறார்.  சாரமற்ற விஷயங்கள் சுயிங்கம் மாதிரி நம்மிடம் ஒட்டிக்கொண்டிருப்பதாக சொல்ல வருகிறார்.நாக்கிலிருந்து விழுந்து விட்டதாக சொல்ல வருகிறார். இவர் கவிதைகளில் பல சோதனை முயற்சிகளைக் கொண்டு வருகிறார்.  கவிதையில் தென்படும் வரிகளில் இன்னொரு அர்த்தத்தைப் புதைக்கிறார்.  
இதில் இருத்தல் நிமித்தம் என்ற கவிதை உள்ளது.  அதை இதுவரை பலமுறை படித்து விட்டேன்.  கவிதை மூலம் என்ன அர்த்தப் படுத்துகிறார் என்று யோசிக்கிறேன்.   அந்தக் கவிதையிலிருந்து சில வரிகளை இங்கே கொடுக்க விரும்புகிறேன்.  
உணவுக்குப் பின் உண்ண
நறுக்க மறந்துவிட்டேன் ஆப்பிளை
அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்
இதோ
சிறுகத்திதான் என்றாலும் கூர்மை
அறுக்கிறேன்
என் ஒரு முலை துடிக்க இன்னொன்று
அதற்குச் சாட்சியாகிறது  
ஏன் என்று கத்துகிறான்
கிறுக்கா என்று கத்துகிறான்
முலைகளுக்குக்  கேட்கிறது ஆனால்
அவைகளுக்குக் கேள்விகள் பிடிக்காது
குளியலறையில் முனையற்ற
முலையைக் கழுவுகிறேன்
பாத்திரங்களைக் கழுவிப்போட வேண்டும்
இப்படிப் போகிறது இந்தக் கவிதை.  ஒவ்வொரு கவிதைப் புத்தகத்திற்கும் வாசகப் பிரதி என்ற ஒன்று உண்டு.  இதில் வாசகப் பிரதி இதை எப்படி உள் வாங்கிக் கொள்ளும்.ஏற்கனவே சிலபதிகாரத்தில் கண்ணகியைப் பற்றி கூறும்போது அவள் ஒரு முலையை அறுத்து மதுரை மாநகரத்தையை எரித்துவிட்டாள் என்று வரும்.  முலையை சிம்பாளிக்காக ஏன் கொண்டு வருகிறார்கள் என்பது புரியவில்லை. அல்லது மித்தா.  என்ன மித் என்று அடியேனுக்குத் தெரியவில்லை. யாராவது விளக்கினால் புரிந்து கொள்வேன்.
கேசவா என்ற கவிதையில் அடிக்கடி கேசவா என்று உச்சரித்தால் விபத்தைத் தவிர்க்கலாம் என்கிறார் அத்தை.  தெரியாமல் தூக்கத்தில் கனவில் யாரோ ஒருவன் என்னுடன் இயக்கத்தில் இருக்கும்போது கேசவா என்று சொல்லி விடுகிறேன்  என்று கவிதை வரிகள் வருகின்றன.அப்போது கோபித்துக்கொண்டு போனவன் திரும்பி வரவில்லை என்று முடிக்கிறார். விசித்திரமான சிந்தனையாக இருக்கிறது.   
சில கவிதைகளை சற்று நீளமாக எழுதி உள்ளார்.  üநேற்று வெப்காமின் நீலச்சுடர் முதுன்னிலையில் என்ற கவிதை.  முகப் புத்தகம், மைஸ்பெஸ், ஆர்குட் தொடர்பு உள்ளவன்.  நண்பர்கள் முன் தற்கொலை செய்து கொள்கிறான்.  அதை வேடிக்கையான நிகழ்ச்சியாக முகப் புத்தகம் பதிவு செய்கிறது.  கொடூரமான நிகழ்ச்சி கூட முகநூலில் வேடிக்கையாகப் போகக் கூடிய அபாயம் உள்ளது.
68வது பிரிவு என்ற கவிதை கந்தசாமிக்கும் லதாவுக்கும் ஏற்படுகிற 68வது பிரிவு.  இவர்கள் இருவருக்கும்ல் ஏற்படுகிற முரண்பாடுகள் சாதாரண தொனியில் இருந்தாலும் தீவிரமாகப் போய்க் கொண்டிருக்கிறது.  90ல் உண்மையாக நிகழப் போகும் மரணம் முன்னதாகவே முந்திக் கொண்டு போகப் போகிறது என்ற கவலையைத் தூண்டுகிறது கவிதை. 
சில யோசனைகள் என்ற நீண்ட கவிதை ஒரு பெண்ணிய கவிதை.  எப்படி ஒரு ஆணை கவர்வதற்கு ஆணை ஏமாற்ற வேண்டும் என்று அறிவுரை கூறுகிறது.  
இத் தொகுதியில் எனக்குப் பிடித்த கவிதையில் இதுவும் ஒன்று.  படிப்பவர்கள் இதையும் ரசிக்க வேண்டும்.
    புஷ்பா சேலையணிந்த முதல் நாள்

புஷ்பாவின் அண்ணன்
குளியலறைக்குப் போய்
நேரங்கழித்து வந்தான்
புஷ்பாவின் அக்கா
அத்தானை 
அன்று அழைத்துவந்ததுதான்
புஷ்பாவின் அப்பா
அவள் மேல் கண்ணடிபடுமென்றார்
புஷ்பாவின் காதலன்
அவன் எங்கே சேலையைப் பார்த்தான்
புஷ்பாவின் சிநேகிதி
அவள் மட்டும் தொட்டுப் பார்த்தாள்

புஷ்பா
புஷ்பாவின் அம்மாவாக இருந்தபோது
சேலையணிந்த முதல் நாள்
இப்படித்தான் 
சிடுசிடுத்தாள்
தடுக்கி விழாமலே
தடுக்கி விழுந்ததாக நினைத்துக்கொண்டாள்
கற்பனையில்கூட அன்று 
அவள் சேலை விலகவில்லை
ஜமாலன் இத் தொகுப்பிற்கு பின்னுரை எழுதி உள்ளார்.  ஆனால் பெருந்தேவி கவிதைத் தொகுதியை இனி கொண்டு வரும்போது முன்னுரையோ பின்னுரையோ தேவையில்லை என்று படுகிறது.  புதிதாக எழுதுபவர்களுக்குத்தான் அதெல்லாம் தேவைபடும் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.
எல்லோரும் வாசிக்க வேண்டிய தொகுப்பு,
உலோகருசி – கவிதைகள் – ஆசிரியர் : பெருந்தேவி – முதல் பதிப்பு : டிசம்பர் 2010 – வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம், 669 கே பி சாலை, நாகர்கோவில் 629 001 – பக்கம் : 102 – விலை ரூ.75
  

மறந்து போன பக்கங்கள்….

அழகியசிங்கர்

கோடை வயல் என்ற தொகுப்பிலுள்ள தி சோ வேணுகோபாலனின் 7வது கவிதை கவலை.  இயல்பாய் இருக்க முடியாத வாழ்க்கையைக் குறித்த கவலைதான் இக் கவிதை.  ஒரு முறைக்கு இருமுறையாக படித்துப் பாருங்கள் இந்தக் கவிதையை.  
   கவலை
விண்ணை அண்ணாந்து பார்க்கின்றோமி:
ஆனால்?
விதிதேய்து விட்டெறிந்த
கிழிந்த பழஞ்செருப்பில்,
காலுதறி விட்ட
புழுதித் தடத்தில்
நெஞ்சைப் புரட்டுகிறோம்
அல்லது
அறிவால், இதயத்தால்
உருவமைக்க முடியாத ஊர்ப்புறத்தை நாடி
அடியளந்து அடியெல்லாம்
அஞ்சும் அடிச்சுவடாய்
அடைத்த கதவுக்குள்
அகப்பட்ட பழங்காற்றாய்
புழுங்கும் புதிராய்,
கற்பித்த கற்பனையும்
கண்ணாடிச் சில்லுகளாய்க் கண்டு
குமைகின்றோம்
இன்றிங்கிருக்கும் இயல்பை, சத்தியத்தை
இன்பத்தை, துன்பத்தை, வினாடித்துடிப்புகளை
தொட்டும் பார்த்தறியோம்
ஆனால்?
விண்ணை அண்ணாந்து பார்க்கின்றோம்
பார்த்து 
விடுவானேன் பெருமூச்சு?

கழுதைகளின் உலகம்…….

சா இளையராஜா 

 

பூமி
முழுவதும்
பல பூக்கள்
பூத்துக்
குலுங்கினாலும்
அவற்றில்
ஒரு பூக்கூட
அழகான
கழுதைகளாகிய
எங்கள் நிறத்தில்
இல்லை………….

பின் குறிப்பு :

கழுதைகளின் உலகம் என்ற தலைப்பில்  சா இளையராஜா என்பவரின் கவிதையை விருட்சம் 99வது இதழில் வெளியிட்டுள்ளேன்.  ஞானக்கூத்தன் இவருடைய கவிதைகளைக் கொடுத்து உதவி உள்ளார்.  கழுதைகளை அடிப்படையாகக் கொண்டு பல கவிதைகள் எழுதி உள்ளார் இளையராஜா.  நான் யோசிப்பதுண்டு ஒரு புத்தகத்தில் கழுதையைப் பற்றியே எல்லாக் கவிதைகளும் படிப்பது எப்படி இருக்கும் என்று.  ஒன்றிரண்டு கவிதைகள் என்றால் சரி?  ஆனால் எல்லாமே அப்படியே இருந்தால்……

அசோகமித்திரன் கதை….

அழகியசிங்கர்
99வது இதழில் வெளிவந்த அசோகமித்திரன் கதை இது.ஏற்கனவே ரேடியோவில் இக் கதை ஒலிபரப்பாகி உள்ளது.  தினமும் ஒரு கதை ஒரு கவிதை வாசிக்கலாம் என்று நினைக்கிறேன். அப்படி வாசித்தால் 30 நாட்களில் 30 கதைகள் வாசிக்கலாம்.  அதேபோல் 30 கவிதைகள் வாசிக்கலாம.  ஓராண்டில் 365 கதைகளையும், கவிதைகளையும் வாசிக்கலாம்.  அசோகமித்திரன் கதையைப் படித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்.
பிரிவுபசாரம்
                                                                                                      அசோகமித்திரன்


“துரை கூப்பிட்றாரு,” என்று பங்கா ஆட்டும் ஹமால் காந்திமதி சொன்னான். சங்கரலிங்கம் அவன் மேஜையிலிருந்து எழுந்து ஜில்லா கலெக்டர் மால்கம் ஸ்காட் அறைக்குச் சென்றான்.
“சங்கர்லிங்கம், எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. தி டைம் ஹாஸ் கம் டு பார்ட்,” என்றான்.
“என்ன மாஸ்டர்?”
“என்னை மாஸ்டர்னு கூப்பிடாதேன்னு எவ்வளவு தரம் சொல்லிவிட்டேன்? இனிமேல் நான் சொல்லத் தேவை இருக்காது.”
“ஏன்?”
“என்னை ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜுக்கு மாற்றி விட்டார்கள்.”
“ரொம்ப சந்தோஷம், மா…சார்.”
“உனக்கு இதில் சந்தோஷத்திற்கு என்ன இருக்கிறது?”
“உங்களுக்கு நல்ல வீடு கிடைக்கும். நிறைய உங்கள் நாட்டு நண்பர்கள் கிடைப்பார்கள். நல்ல உதவியாளர்கள் கிடைப்பார்கள்.”
“அப்பாடா, என்னை இன்றைக்கே அனுப்பிவிடுவாய் போலிருக்கிறதே?”
“அப்படி இல்லை, சார்.. இது என்னதான் ஜில்லா தலைநகரம் என்றாலும் பட்டிக்காடுதானே?”
“நான் வந்த போது அப்படித்தான் நினைத்தேன். இங்கிலாந்திலிருந்து என் கப்பல் மூன்று வாரங்கள் தாமதமாக வந்தது. என்னை இப்படி டின்னவேலிக்கு அனுப்பியதை நான் முதலில்  தண்டிக்கப்படுவதாக நினைத்தேன். இல்லை. எங்கும் கிடைக்க முடியாதஅறிவாளி எனக்கு உதவியாளனாகக் கிடைத்தான். நான்உன்னை எப்படியெல்லாம் விரட்டினேன்…”
“அதெல்லாம் இப்போது எதற்கு,சார்?”
இதெல்லாம் எனக்கு முதலில் தெரியவில்லை. எதைப்பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் எரிச்சல் வந்தது. உண்மையில் நாங்கள் காட்டுமிராண்டிகளாக அலைந்து திரிந்த காலத்திலேயே இந்த நாடும் ஊரும் சட்ட திட்டங்கள் கொண்ட முறையான சமூகமாக இருந்தது. இதெல்லாம் எங்கள் பாட புத்தகங்களிலேயே இருந்தது நான் மனதில் ஏற்றுக் கொள்ளவே இல்லை. சங்கரலிங்கம், நான் உனக்கு எவ்வளவோ கடமைப் பட்டிருக்கிறேன்.
“நான்தான் கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு சாதாரண ஹமாலாக இருந்த என்னை குமஸ்தா ஆக்கினிர்கள்.”
“சங்கரலிங்கம், நீ எப்படியும் முன்னுக்கு வந்து விடுவாய். சர்க்கார் வேலை இல்லாது போனால்கூட நீ எப்போதும் ஓர் அறிவாளியாக, ஒரு தலைவனாக இருப்பாய். எனக்கு அதில் சந்தேகம் இல்லை. நான் வெறும் பரிட்சை எழுதி இங்கு வந்து உட்கார்ந்திருக்கிறேன்.”
“எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.”
“ஏதாவது சொல்லவேண்டும் என்றால் இப்போதே சொல்லிவிடு. நாளைக்கே எனக்குப் பதில் வேறு ஒருவன் வரப் போகிறான். அவனுக்கு இருபத்துமூன்று வயதுதானாம்.”
“அவரும் ஐ.சி.எஸ்.தானே?”
“சங்கரலிங்கம், பிரிட்டிஷ்காரன் இந்தப் பரிட்சையில் தேற நிறையச் சலுகைகள் உண்டு. ஓர் இந்தியன் அவ்வளவு எளிதில் தேற முடியாது.”
“ஏன், சார்?”
“பிரிட்டிஷ்காரனுக்குத் தேர்வு நடப்பது அவன் சொந்த நாடு.. இந்தியனுக்கு இங்கிலாந்து வேறிடம். அதைத் தவிர மதிப்பெண் தருவதிலும் வேறுபாடு இருக்கிறது. வெள்ளைக்காரன் ஐம்பது சத வீதம் பெற்றால் போதும். இந்தியன் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும்.”
“அப்போது சுபாஷ் போஸ், ஆர்.சி.தத், அரவிந்த கோஷ் போன்றவர்கள் இவ்வளவு கடுமையான விதிகளையும் தாண்டியா தேர்வு பெற்றார்கள்?”
“எனக்கே இதெல்லாம் தெரியாது. நான் ஒரு முறை கல்கத்தா சென்றிருந்தேன். அப்போது நீ சொன்ன ரொமேஷ் தத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவர் சொன்னார். எனக்கு ஐ.சி.எஸ். என்று சொல்லிக் கொள்ளவே வெட்கமாயிருந்தது.”
“சார், நீங்கள் இப்படி கூறுகிறீர்கள். ஆனால் இது அவர்களுடைய உரிமை என்றபடி இருந்த பலரை நான்  பார்த்திருக்கிறேன். உங்களுக்கு முன்பு இருந்த சலெக்டர்தான் நாங்கள் எல்லோரும் குதிரை பின்னால் ஓடி வர வேண்டும் என்று உத்தரவு போட்டார்.”
“என்ன அநியாயம்! நானும் அப்படித்தான் ஆரம்ப நாட்களில் இருந்தேன். என்னைப் போன்று இரு மடங்கு வயதானவர்களை ஓடி வர வைத்திருக்கிறேன். சங்கரலிங்கம். உன்னைக் கூட நான் அப்படி ஓட வைத்திருக்கிறேன்..”
“மாடமுக்கு விவரம் தெரியுமா?
“எது?”
“உங்களை மெட்ராஸ§க்கு மாற்றியிருப்பது.”
“நான் இன்னும் அவளிடம் சொல்லவில்லை. இந்த ஊரை விட்டுப் போக என்னை விட அவள்தான் வருத்தப்படுவாள்.”
“இல்லை, சார். அவளுக்குப் புது இடம் போவது மகிழ்ச்சியாக இருக்கும்.”
“தெரியாது. உண்மையில் இந்த ஊரில் என்னை விட அவளுக்குத்தான் நிறைய நண்பர்கள்.  நான் முதலில் ஒரு வருடத்திற்காகத்தான் டின்னவேலிக்கு வந்தேன். ஆனால் இரண்டு ஆண்டுகள் இருந்து விட்டேன். முதல் வருடம் நான் யாரிடமும் பேசாமல், யாரிடமும் எந்த உறவும் வைத்துக் கொள்ளாமல் இருந்து விட்டேன். ஆனால் உலகம் என்பது இங்கிலாந்து மட்டும் அல்ல என்று தெரிவதற்கு அந்த ஓராண்டு தேவைப்பட்டது.”
“நீங்கள் தேவை இல்லாமல் நிந்தித்துக் கொள்கிறீர்கள்.”
“இதெல்லாம் நான் சொல்ல இன்று விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது. வருகிறவன் சரியான வெள்ளைக்காரன். எங்கள் ஊரில் ஸ்காட்லண்டுக்காரர்கள் என்றால் கொஞ்சம் இளப்பம்.”
“பாஸ்வெல்லே சொல்லியிருக்கிறார்.”
’அப்படியா? எங்கே?”
“ஜான்ஸன் வாழ்க்கை வரலாற்றில்.”
ஸ்காட் சங்கரலிங்கம் கையைப் பிடித்துக் கொண்டான். “நீ படித்திருக்கிறாயா? சங்கர்லிங்கம், நீயும் என்னோடு மெட்ராஸ் வந்து விடு.”
சங்கரலிங்கம் பதில் பேசாமல் இருந்தான்.
“இல்லை, சங்கரலிங்கம். எங்கள் கவர்னர் முன் நாங்கள் அடிமைகள் போலத்தான் இருக்க வேண்டும். உண்மையில் இதை ஒரு வெள்ளைக்காரன் எதிர்க்கவில்லை. ஆனால் நிறைய இந்தியர்கள் எதிர்த்திருக்கிறார்கள். நீயும் வேண்டாம், உன் வேலையும் வேண்டாம் என்று உதறி எறிந்திருக்கிறார்கள். எனக்குப் பாண்டிச்சேரி சென்று அரவிந்த கோஷைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. ஆனால் முடியாது.”
“சார், உங்களைத் தனியே விட்டுச் செல்கிறேன். நீங்கள் இவ்வாறெல்லாம் ஒரு குமஸ்தாவிடம் பேசக் கூடாது.”
“நான் உன்னை என் நண்பனாக, ஒரு வழிகாட்டியாக நினைத்துப் பேசுகிறேன். இன்று விட்டால் அப்புறம் சந்தர்ப்பமே கிடைக்காது.”
”நீங்கள் சென்னை சென்றால் அரவிந்தரை விட ரமணரைப் பார்ப்பது நல்லது. அரவிந்த கோஷ் ஐ.சி.எஸ். ஞாபகத்தில் உங்களோடு பழைய ஐ.சி.எஸ்.காரர்கள் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கும் அபாயம் இருக்கிறது. ரமணர் பழைய ஞாபகமே இல்லாமல் உங்களோடு பேசக் கூடும். இல்லை, உங்களுடன் அவர் பேசாமலேயே  போனாலும் போய் விடலாம். மலையைச் சுற்றிக் கொண்டிருப்பார்.”
“எங்கே அது?”
“திருவண்ணாமலை. ஒன்றுமே வேண்டாம். நீங்கள் உங்கள் பொறுப்புகளைப் பார்த்துக் கொள்ளுங்கள்.”  
”சங்கரலிங்கம், நான் உன் வீட்டுக்கு வர ஆசைப்படுகிறேன். அழைத்துப்போக முடியுமா?”
“சார், கலெக்டர் குமஸ்தா வீட்டுக்கெல்லாம் போகக் கூடாது. மேலும் என் வீடு இருபது மைல் தள்ளி இருக்கிறது.”
“ஊர் பெயர் என்ன?”
     சங்கரலிங்கம் சொன்னான்.
     ஸ்காட் முகம் கறுத்தது “அங்குதான் நானும் என் மனைவியும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டோம்.”
”நீங்கள் எங்கள் கிராமத்துப் பெண்ணிடம் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது. மாட்டுக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் தெரியாதா? என்ன செய்வது? கிராமத்தார்கள் கொதித்துப் போய் விட்டர்கள்.”
“தவறுதான். பெரிய தவறுதான்.”
”அன்று அவர்கள் உங்களையும் மாடமையும் உயிரோடு கொளுத்த இருந்தார்கள்.”
“அந்த நாளை நினைத்து நான் பல இரவுகள் தூங்காமல் இருந்திருக்கிறேன். நீ அன்று அவர்களுடன் பேசி சமாதானப்படுத்தாமல் இருந்தால் நாங்கள் இன்று உயிரோடு இருந்திருக்க மாட்டோம்.”
“நானும் பயந்து விட்டேன்.  விஷயம் இவ்வளவு தீவிரமாகப் போய் விடும் என்று நான் நினைக்கவில்லை.”
“அந்த நாளில்தான் சுயகௌரவம் என்பது வெள்ளைக்காரனின் ஏகபோகம் அல்ல என்று நான் தெரிந்து கொண்டேன்.”
”சார், இப்போது நான் உங்களிடம் ஒரு விஷயம் சொல்லவேண்டும்.”
“என்ன?”
“நானும் பயந்து விட்டேன். இருநூறு பேர் கூடி விட்டார்கள். கொளுத்த வருவார்கள் என்று தெரியாது. நானும் அந்த நாளை நினைத்துப் பல இரவுகள் தூங்காமல் விழித்திருந்து அவதிப் பட்டிருக்கிறேன்.”
“வட இந்தியாவில் வெள்ளைக்காரர்களைத் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். குண்டு எறிந்திருக்கிறார்கள். ஆனால் உயிரோடு கொளுத்தியதில்லை.”
“இங்கேயும் ஒரு துரையை ஒருவர் சுட்டுக் கொன்றிருக்கிறார்.”
“இங்கேதான்–மணியாச்சியில்.”
”உங்கள் விஷயத்தில் இவ்வளவு தீவிரமாக இருப்பார்கள் என்று நான் நினக்கவில்லை. நான் தவித்துப் போய்விட்டேன். தெய்வத்தை வேண்டினேன்”
“நீ எதற்கு அவ்வளவு தவிக்க வேண்டும்?”
     “ அன்று அந்தக் கிராமத்தாரைக் கூட்டியது யார் தெரியுமா?”
“தெரியாது,”
சங்கரலிங்கம் ஒரு கணம் ஸ்காட் முகத்தையே உற்றுப் பார்த்தான். பிறகு சொன்னான்..”நானும் விஷயம் இவ்வளவு மோசமாகப் போகும் என்று நினைக்கவில்லை. குளத்தில் துணி தோய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம்  ஆறுதல் கூறினேன். அவள் சமாதானமாகி விட்டாள். நீங்கள் உங்களை தொடர்ந்து வரச் சொல்லிவிட்டுக் குதிரையில் போய் விட்டீர்கள்.”
இருவரும் மௌனமாக இருந்தார்கள்.
சங்காலிங்கம் சொன்னான். “ நான் உங்களைப் பின்தொடரவில்லை.”
ஸ்காட் கண்களை விரித்துப் பார்த்தான்.
“கிராமம் சென்று விஷயத்தைச் சொன்னது நான்தான்.”     
  

ஒரு உரையாடல் தொடருகிறது……

.நவீன விருட்சம் 99வது இதழில் வெளிவந்தது…..
அழகியசிங்கர்
நவீன விருட்சம் ஒவ்வொரு இதழிலும் உரையாடல் பாணியில் புத்தகங்கள் பற்றி, இலக்கியக் கூட்டங்கள் பற்றி, எழுத்தாளர்களைப் பற்றி செய்திகளை அலசுவேன்.  நவீன விருட்சத்தில் இரண்டு பக்கங்கள் வரும்வரை இதை எழுதி முடிப்பேன்.  
இதுமாதிரி எழுத என்னைத் தூண்டியவர் ஒரு விதத்தில் க நா சுதான்.  அவருடைய புத்தகமான ‘படித்து விட்டீர்களா?’ என்ற புத்தகத்தைப் படித்துதான் உரையாடல் பாணியில் எழுத வேண்டுமென்று தோன்றியது.
என்னுடன் உரையாடலைத் தொடங்க ஜெகனும், மோஹனியும் சம்மதம் தெரிவித்தார்கள்.  அவர்களுக்கு என் நன்றி.
        அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன், மோஹினி ஒரே குரலில் வணக்கம்.
அழகியசிங்கர் :  என்ன உங்கள் இருவரையும் ஆறாம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை பார்க்க முடியவில்லை.
ஜெகன் : உண்மையில் உங்களைத்தான் பார்க்க முடியவில்லை.
மோஹினி : நான் போன் செய்தால், நீங்கள் போனையே எடுக்கவில்லை. 
 மேலும் நான் சினிமாவில் இருக்கிறேன் என்று தகவல் வேறு    கொடுத்துக்கொண்டே இருந்தீர்கள்.
அழகியசிங்கர் : ஆமாம் 13ம் சென்னை சர்வதேச சினிமா விழாவில் கலந்து கொண்டிருந்தேன். 
ஜெகன் :  எல்லாப் படங்களையும் பார்க்க முடிந்ததா?
அழகியசிங்கர் : பார்க்க முடியவில்லை.  100 படங்களுக்கு மேல் காட்டினார்கள்.  நான் 12 படங்களுக்கு மேல் பார்க்கவில்லை.
மோஹினி : முடியாது.  வயது ஒரு காரணம்.
ஜெகன் :  மேலும் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தால் என்னமோ மாதிரி இருக்கும்.
அழகியசிங்கர் :  ஆமாம்.  என்னால் இரண்டு  படங்களை சேர்ந்தாற்போல் பார்க்கமுடியவில்லை.   ஒரு படம் பார்த்துவிட்டு எழுந்தால்  தலை ஒரு சுற்று சுற்றும்.
மோஹினி : தியேட்டரிலேயே நாம் தொடர்ந்து ஒரு படத்தைப் பார்க்க முடியவில்லை.
அழகியசிங்கர் :  ஐநாக்ஸ் என்ற தியேட்டரில் உட்கார்ந்து ஒரு படத்தைப் பார்ப்பதுபோல் ஒரு தண்டனை யாருக்கும் கிடைக்க வேண்டாம.
ஜெகன் : நீங்கள் பார்த்ததில் எந்தப் படம் சிறப்பானது.
அழகியசிங்கர் :  ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்திலும் சிறப்பாக இருநதது.  ஏன் நம் ஊரிலே இதுமாதிரி படங்களை எடுக்க முடியவில்லை என்று தோன்றியது.
மோஹினி : சினிமா என்பதே ஒரு வியாபாரம்.  கோடிக்கணக்கில் முதல் போடவேண்டும்.  பலருடைய முயற்சி வேண்டும்.  
ஜெகன் :  தமிழிலேயே ஒரு ஆண்டிற்கு 300 படங்களுக்கு மேல் கொண்டு வருவதாக கேள்விப்பட்டேன்.
மோஹினி :  பல படங்கள் தயாரிக்கப்பட்டு தியேட்டர் கிடைக்காமல் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.
அழகியசிங்கர் :  எத்தனையோ படங்களை நாம் பார்க்கவே முடிவதில்லை.  இந்த உலகப் பட விழாவில் நான் தெரிந்து கொண்டது இதுதான்.  இதில் பார்க்காமல் போய்விட்ட படங்களைப் பற்றி நம்மால் என்ன செய்ய முடியும் என்பதுதான்.
மோஹினி :  இது புத்தகங்களுக்கும் பொருந்தும்.
ஜெகன் :  உண்மைதான் எத்தனைப் புத்தகங்களைத்தான் நாம் படிக்க முடியும்.
அழகியசிங்கர் : இந்தத் தருணத்தில் க.நா.சு போன்ற விமர்சகர் முக்கியமான பணியைச் செய்ததாக நினைக்கிறேன்.  அவர் என்னன்ன புத்தகங்களைப் படிக்கலாம் என்று சொல்லி சென்றதாக நினைக்கிறேன்.
ஜெகன் :  புத்தகம் என்றவுடன் வெள்ளத்தால் உங்கள் புத்தகம் போனதைப் பற்றி எழுதியிருந்தீர்கள்..
அழகியசிங்கர் : ஆமாம். ஒரு 20000 செலவு செய்து 4 புத்தகங்கள் அச்சடித்தேன்.  வெள்ள நீரால் நனைந்து விட்டன.  அதைவிட முக்கியம் நான் அவ்வப்போது புத்தகம் வாங்கும் பைத்தியம்.  அவையெல்லாம் நனைந்து என்னைப் பார்த்து எள்ளி நகையாடின.  என் கார் மாத்திரம் தப்பித்து விட்டது.   ஆனால் இரண்டு டூ வீலர்கள் நாசம்.  படிக்கட்டு வழயாக ஆறாவது படிக்கட்டு வரை தண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. எனக்கு ரொம்ப வருத்தம் விக்கிரமன் என்ற எழுத்தாளருக்கு ஏற்பட்ட மரணம்.  மேற்கு மாம்பலத்தில் ஜெயசங்கர் தெருவில் வசித்து வருபவர்.  டிசம்பர் ஒன்றாம் தேதி எதிர்பாராதவிதமாய் மரணம் அடைந்து விட்டார்.  அவர் பூத உடலை உடனடியாக தகனம் செய்ய முடியாமல் பீரிஸர் இல்லாமல், இறந்த உடலுடன் அவர் குடும்பத்தினர் பட்ட அவதியை யாரும் படக் கூடாது.
ஜெகன் :  இதன் மூலம் என்ன தெரிகிறது
அழகியசிங்கர் : வாழ்க்கை நிச்சயமில்லாதது என்பதைத்தான் இது காட்டுகிறது.  நாம் எவ்வளவு பொருள் சேர்த்தால் என்ன?  நம் கண் முன்னே எல்லாம் போனால் நாம் என்ன செய்ய முடியும்?  
மோஹினி :  வழக்கம் போல இந்த முறை பல எழுத்தாளர்கள் இறந்து விட்டார்கள் அவர்கள் லிஸ்டைப் படிக்கிறேன். 1. விக்கிரமன 
2. சார்வாகன் 3. மா வெ சிவக்குமார் 3. பேராசிரியர் கே ஏ குணசேகரன்    4. காந்திய எழுத்தாளர் லா சு ரங்கராஜன் 5. பதிப்புச் செம்மல் வானதி திருநாவுக்கரசு
(மறைந்த எழுத்தாளர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துகிறார்கள்.)