மறந்து போன பக்கங்கள்….

அழகியசிங்கர்

கோடை வயல் என்ற தொகுப்பிலுள்ள தி சோ வேணுகோபாலனின் 7வது கவிதை கவலை.  இயல்பாய் இருக்க முடியாத வாழ்க்கையைக் குறித்த கவலைதான் இக் கவிதை.  ஒரு முறைக்கு இருமுறையாக படித்துப் பாருங்கள் இந்தக் கவிதையை.  
   கவலை
விண்ணை அண்ணாந்து பார்க்கின்றோமி:
ஆனால்?
விதிதேய்து விட்டெறிந்த
கிழிந்த பழஞ்செருப்பில்,
காலுதறி விட்ட
புழுதித் தடத்தில்
நெஞ்சைப் புரட்டுகிறோம்
அல்லது
அறிவால், இதயத்தால்
உருவமைக்க முடியாத ஊர்ப்புறத்தை நாடி
அடியளந்து அடியெல்லாம்
அஞ்சும் அடிச்சுவடாய்
அடைத்த கதவுக்குள்
அகப்பட்ட பழங்காற்றாய்
புழுங்கும் புதிராய்,
கற்பித்த கற்பனையும்
கண்ணாடிச் சில்லுகளாய்க் கண்டு
குமைகின்றோம்
இன்றிங்கிருக்கும் இயல்பை, சத்தியத்தை
இன்பத்தை, துன்பத்தை, வினாடித்துடிப்புகளை
தொட்டும் பார்த்தறியோம்
ஆனால்?
விண்ணை அண்ணாந்து பார்க்கின்றோம்
பார்த்து 
விடுவானேன் பெருமூச்சு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *