நீங்களும் படிக்கலாம் 22

அழகியசிங்கர் 
22) வேடிக்கைக் கவிதைகள்..
போன ஆண்டு பேயோன் என்ற எழுத்தாளரைப் பற்றி ஒரு இலக்கியவாதி சிலாகித்துப் பேசியதை அறிந்து யார் இந்தப் பேயோன் என்று யோசிக்கத் தொடங்கினேன்.  எனக்கு அதுவரை தெரியாத பெயராக இருந்தது.  செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி 2015 ஆம் ஆண்டு பேயோன் என்பவரின் இரண்டு புத்தகங்களை வாங்கினேன்.  காதல் இரவு என்ற அவருடைய கவிதைத் தொகுதியும், பேயோன் 1000 என்ற சமகால ட்விட்டர் நுண்பதிவு புத்தகமும்.  வேற புத்தகங்கள் அவருடையது எதாவது உள்ளதா என்பது தெரியவில்லை.  இப்புத்தகங்களில் ஒன்று 2011 ஆம் ஆண்டிலும் இன்னொன்று 2009ஆம் ஆண்டிலும் ஆழி வெளியீடாக வந்துள்ளன. 
கவிதைத் தொகுதிக்கு ஏன் காதல் இரவு என்ற பெயரை சூட்டினார் என்று யோசித்துக் கொண்டு அந்தப் புத்தகத்தைப் புரட்டினேன்.  சமீப காலத்தில் நான் படிக்க விரும்புகிற கவிதைத் தொகுதிகளை அவ்வளவு சுலபமாக நெருங்க முடிவதில்லை.  ஆனால் பேயோன் கவிதைத் தொகுதி வித்தியாசமான தொகுதியாக இருந்தது.  அவர் கவிதைகளில் தென்படும் அங்கத உணர்வு ரொம்பவும் இயல்பாக செயல்படுகிறது.  கவிதையில் ஒருவிதத் தீவிரத்தன்மையுடன் அலட்சிய மன்பான்மையும் செயல்படுகிறது.
புதிய கவித்துவங்கள் என்ற பெயரில் அவர் எழுதிய கட்டுரைகளில் தெளிவாகவே கவிதையைப் பற்றிய சில விஷயங்களை முன் வைக்கிறார்.  üகவிதையைப் படித்தவுடன் புரிந்துவிட அது நீதிக் கதை அல்ல, ஒன்றுமே புரியாமல் அடித்துவிட அது மழலை மொழியும் அல்ல.ý என்று குறிப்பிடுகிறார்.
இன்னொரு இடத்தில் ஒரு கவிதை எப்படி கவித்துவமாகிறது? என்ற கேள்வியை எழுப்பி, அது கையாளும் பொருண்மையினால்தான் என்கிறார். திரும்பவும் இவர் எப்படி கவிதை எழுதியிருக்கிறார் என்று பார்க்கும்போது, காதல் என்ற வார்த்தையை கிண்டல் செய்கிறாரோ என்று தோன்றுகிறது.  
முதல் பக்கத்திலேயே இப்படி எழுதுகிறார்.
üதெருவில் உன் பெயர் கொண்ட 
கடைகள் இருந்தால்
உடனே போய் எதாவது
வாங்கிவிடுவேன் 
காதல் கவிதைகளை நக்கல் செய்கிறாரோ என்ற சந்தேகம்தான் நம் மனதில் ஏற்படுகிறது.  
இன்றைய காலத்தில் சிலசமயம் கவிதைத் தொகுதியையோ, சிறுகதைத் தொகுதியையோ, நாவலையோ படிப்பது என்பது யாரோ ஒருவர் தண்டனை கொடுப்பதுபோல் தோன்றுகிறது.  ஆனால் பேயோன் கவிதைகள் அப்படிப்பட்ட உணர்வை ஏற்படுத்தவில்லை.  
இத் தொகுப்பில் கவிதைகளைப் பற்றியே கவிதை எழுதியிருக்கிறார்.  அதாவது மெட்டா கவிதை என்று அப்படி எழுதுவதைக் குறிப்பிடலாம். உதாரணமாக : மரத்தில் சிக்கிய கவிதை என்று ஒன்றை எழுதியிருக்கிறார்.  இது சற்று நீளமான கவிதை.  உரைநடை வடிவத்தில் எழுதப்பட்ட சோதனை கவிதை இது.  இதைப் படிக்கும்போதும் படிக்க சுவாரசியமாக இருக்கிறது.
எழுதிய கவிதை ஒன்று மரத்தில் சிக்கிக் கொண்டது.  அதை திரும்பவும் மீட்க வழி தெரியவில்லை.  கடைசியில் இப்படி எழுதுகிறார்.
üஇரண்டாவது, மூன்றாவது, நான்காவது முறையாக அந்தக் கவிதையை மீண்டும் எழுதிப் பார்த்துவிட்டேன்.  அதற்குப் பிறகு பலவற்றை எழுதிக் கிழித்தாயிற்று.  கழுவேறிய மரியாதை அந்த ஒரு கவிதைக்குத்தான்,ý என்று முடிக்கிறார்.
தேவையானவை என்ற கவிதையைப் படிக்கும்போது அது வெறும் காய்கறிகளின் லிஸ்ட்.
பெங்களூர் தக்காளி  – 2
குடை மிளகாய்      – 1
       ………..என்று லிஸ்ட்டை எழுதி முடித்துவிடுகிறார். வேற ஒன்றும் இதன் மூலம் சொல்ல முயற்சிக்கவில்லை.
அதேபோல் இருபத்திநாலு காதல் கவிதைகள் என்ற நீண்ட கவிதை.
இதேபோல் நக்கலடிக்கும் கவிதையை நான் இதுவரை படித்ததில்லை.
அந்தக் கவிதையின் கடைசிப் பாராவை உங்களுக்கு படிக்க அளிக்கிறேன். 
என்னங்க 
என்னங்க
என அழைத்துக்கொண்டே 
யிருக்கிறாய் விஷயத்தைச்
சொல்லாமல்..
இத் தொகுப்பைப் பார்க்கும்போது கவிதையை எள்ளி நகையாடுவதுபோல் தோற்றம் அளிக்கிறது.  சிலசமயம் சில கவிதைகள் படிப்பவரை சிந்திக்கவும் வைக்கிறது. பொதுவாக பேயோன் எழுதுகிற கவிதைகளைப்போல் பலரும் எழுதியிருக்கிறார்கள்.  ஆனால் அவர்கள் பெரும்பாலும் ஒன்றிரண்டு கவிதைகள்தான் ஒரு தொகுதியில் எழுதி இருப்பார்கள்.  இதில் விதிவிலக்கு என்னவென்றால் பேயோன் தொகுதி முழுவதும் இந்த விளையாட்டை விளையாடியிருக்கிறார்.  எப்போதும் இந்தக் தொகுதியை பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு கவிதைகளை வாசித்துக்கொண்டே இருக்கலாம்.  
காதல் இரவு – கவிதைகள் – பேயோன் – விலை ரூ50 ஆழி பப்ளிஷர்ஸ் 1 ஏ திலகர் தெரு, பாலாஜி நகர், அய்யப்பன்தாங்கல், சென்னை 600 077 தொலைபேசி எண் : 9940147473
 

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்…………….

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்…………….
அழகியசிங்கர்
தளம 14வது இதழில் இருந்து பொன் குமாரின்  பூனையைப் பற்றி எழுதிய கவிதையை அளித்துள்ளேன்.  தளம் பத்திரிகை பாரவி என்ற தனிப்பட்ட மனிதரின் முயற்சியால் தொடர்ந்து நடந்து வருகிறது.  அவருக்கு என் வாழ்த்துகள்.  எந்தச் சிறுபத்திரிகை என்றாலும் தனிப்பட்ட படைப்பாளியின் முயற்சியின் பேரிலேயே நடப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.  கூட்டாக நடத்த வேண்டுமென்று நினைத்தால் சிறுபத்திரிகை நின்றுவிடும்.  அதற்கு உதாரணமாக கசடதபற, பிரஞ்ஞை போன்ற பத்திரிகைகளைக் குறிப்பிடலாம். சிறப்பாக தனிப்பட்ட மனிதரின் முயற்சியால் நடந்த பத்திரிகை சி சு செல்லப்பாவின் எழுத்து. 120 இதழ்கள் வரை வந்துள்ளன.  தளம் இப்படி பாரவி என்ற தனிப்பட்வரின் முயற்சியில் 14 இதழ்கள் வரை கொண்டு வர முடிந்துள்ளது.  இதே அவர் கூட்டாக சிலரை சேர்த்தால் இது சாத்தியம் இல்லாமல் போயிருக்கும்.  ஏன் நானே என் தனிப்பட்ட முயற்சியால் விருட்சம் பத்திரிகையின் 99வது இதழ்கள் வரை கொண்டு வந்துள்ளேன். 100வது வரும் இந்தத் தருணத்தில் என்னால் தளம் மாதிரி ஒரு இதழை அத்தனைப் பக்கங்களுடன் கொண்டு வர சாத்தியமே இல்லை.  
காலைச் சுற்றிய பூனை
பொன் குமார்
ஒரு குழந்தை வளர்ப்பதற்கு
ஒப்பானது
ஒரு பூனை வளர்ப்பது
வீட்டுக்குள்
எங்குச் சென்றாலும்
காலைச் சுற்றிச் சுற்றியே
வரும்.
தூங்கும்போது
வயிற்றினடியில்
வந்து படுத்துக் கொள்ளும்
உட்கார்ந்திருந்தாலோ
மடியில்
அடைக்கலமாகி விடும்
எப்பகுதியில் இருந்தாலும்
மியாவ் என்றால் போதும்
ஒரு நொடிக்குள் முன்னிற்கும்
பூனை இருப்பதால்
எட்டிப் பார்ப்பதே இல்லை
எலிகள்
பழகி விட்டதால்
பாலினைத் தீண்டாத பண்பு
பாரட்டத் தக்கது.
அணுக்கும் பூனைக்கும்
அடையாளம் மீசை.
ஆண் என்பதால்
அடர்த்தியாகவே இருந்தது
ஆசையாகவும் இருந்தது
குடும்ப அட்டையில் 
இடம் பெறும் அளவிற்கு
ஒன்றியது
ஒரு வாரமாக காணவில்லை
ஒரு பெண் பூனை
உலவியதாக தகவல்

நானும் பார்க்கிறேன் சினிமாக்களை……

அழகியசிங்கர்
டாம் டைக்வேர் எடுத்த ரன் லோலா ரன் என்ற படம் சற்று வித்தியாசமானது.  இது ஒரு சுவாரசியமான படமும் கூட.  படம் முழுவதும் லோலா என்பவள் ஓடிக்கொண்டே இருக்கிறாள்.  லோலாவின் ஓட்டத்தை ஒட்டி இந்தப் படத்தை எடுத்துள்ளார்.  ஓட்டத்துடன் காலத்தையும் கட்டிப் போடுகிறார்.
லோலாவின் காதலன் மானி அவளுக்குப் போன் செய்கிறான்.  அவளை  போனில் திட்டுகிறான்.  குறிப்பிட்ட நேரத்திற்கு லோலா அவனைச் சந்திக்காமல் சென்றதால், மானி சோதனை அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க கடத்தல் தொழிலில் கிடைத்த வைரங்களை ஓரிடத்தில் ஒப்படைத்து பணத்துடன் வருகிறான்.  அவன் எதிர்பார்த்த இடத்தில் லோலா சரியான நேரத்தில் வராததால் பை நிறைய பணத்துடன் ரயிலில் பயணம் செய்ய நேரிடுகிறது.  சோதனை அதிகாரிகளைப் பார்த்தபோது, எடுத்துக்கொண்டு வந்த பணப்பை ரயிலில் ஒரு மூலையில் வைத்துவிட்டு இறங்கி ஓட வேண்டியிருந்தது.  அவனுடன் அந்தச் சமயத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு தாடிக்காரர் பணப்பையை எடுத்துக் கொண்டு விடுகிறார்.  
அந்தப் பணப் பையில் இருந்த பணத்தை திருப்பி கடத்தல்காரர்களிடம்  கொடுக்காமல் இருந்தால், அவன் உயிருக்கே ஆபத்து.  லோலா அவனை சந்திக்க முடியாமல் போனதற்கு அவள் ஓட்டி வந்த பைக்கை யாரோ எடுத்துக் கொண்டு ஓடிவிட்டதாக சொல்கிறாள்.  இன்னும் 20 நிமிடத்தில் 12 மணி அடிப்பதற்குள் ஒரு லட்சம் பணம் கொண்டு வரும்படி அவளிடம் இரைஞ்சுகிறான்.  லோலா தன் காதலனை காப்பாற்ற தன் அப்பாவிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு வரலாம் என்று நினைக்கிறாள்.  காதலனோ 20 நிமிடத்தில் அவன் இருக்குமிடத்திற்கு பணத்துடன் வரச் சொல்கிறான்.  அப்படி வராவிட்டால் எதிரிலுள்ள கடைக்குச் சென்று கொள்ளை அடிக்கப் போவதாக  அழுதுகொண்டே சொல்கிறான்.  லோலா தான் எப்படியும் வந்து விடுவதாக சொல்கிறாள்.  
லோலா காதலனை சந்திக்கவும், பணத்தை அப்பாவிடம் பெறவும் ஓடுகிறாள்.  ஓடிக்கொண்டே இருக்கிறாள்.  அவள் அப்பா அலுவலகத்தில் தன் காதலியுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.  அவளை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளபோவதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்.  இந்தத் தருணத்தில் லோலா உள்ளே நுழைகிறாள்.  இந்தப் படத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் முக்கியமானதாகப் படுகிறது.  லோலா வேகமாக ஓடிக்கொண்டு வரும்போது, ஒரு சைக்கிள் விற்பனை செய்ய விரும்புவனைப் பார்க்கிறாள்.  அவன் சைக்கிள் வேண்டுமா என்று கேட்கிறான். அது திருட்டு சைக்கிள் வேண்டாம் என்று குறிப்பிடுகிறாள் லோலா.  அவள் காதலனின் பணத்தை எடுத்துக்கொண்டு போகிறவனை வழியில் பார்க்கிறாள்.  அவன் அவளைக் கடந்து செல்கிறான்.  பின் அவள் அப்பாவின் அலுவலகத்தில் அவள் நுழையும்போது, அவள் எதிரில் வரும் ஒருவளுடன் கிட்டத்தட்ட மோதுவது போல் ஓடுகிறாள்.  இந்த இடத்தில் அப்படி மேதினால் என்ன நிலைக்குத் தள்ளப் படுவோம் என்று கற்பனையில் அவள் நிலையை படத்தில் காட்டுகிறார்கள்.
பின் அப்பா அறைக்குள் நுழைந்தபோது, அவர் காதலி, இவள்தான் உங்கள் மகளா என்று கூறியபடி வெளியே போய் விடுகிறாள்.  லோலா அப்பாவிடம் பணம் கேட்கிறாள்.  அவர் தரமறுக்கிறார்.  அவளை திட்டி வெளியே அழைத்துப் போய் விட்டுவிட்டு இனிமேல் வீட்டிற்கே வரப் போவதில்லை என்கிறார்.  
செய்வதறியாது திகைக்கிறாள் லோலா. அலுவலக வாசலில் ஒரு வயதானவள் எதிர் படுகிறாள்.  அவளிடம் நேரம் கேட்கிறாள்.  12 மணி அடிக்க மூன்று நிமிடங்கள்தான் இருக்கிறது.  லோலா அங்கிருந்து வேகமாக மானியைப் பார்க்க அவசரம் அவசரமாக ஓடுகிறாள்.  12 அடித்தவுடன், மானி எதிர் உள்ள கடைக்குச் சென்று கொள்ளை அடிக்க துப்பாக்கியை எடுத்து சத்தம் போடுகிறான்.  லோலாவும் அவனுடன் சேர்ந்து சத்தம் போடுகிறாள்.  வெளியே வரும்போது போலீசு அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது.  மானி கொள்ளை அடித்தப் பணத்தை தூக்கி எறிகிறான்.  போலீசு சுட லோலா அடிப்பட்டு கீழே விழுகிறாள்.  மானியுடன் இருந்த காதலை எண்ணிப் பார்க்கிறாள்.  ஒரு நிமிடம் மனதிற்குள் நினைத்துப் பார்க்கிறாள்.  üநான் சாகக் கூடாது,ý என்று.  
ஒரு நிமிடம் முன்னதாக வந்திருந்தால் என்ன நடக்கும் என்று யோசனை போகிறது.  திரும்பவும் லோலாஓடி வருகிறாள்.  அதே நிகழ்ச்சிகளை சந்திக்கிறாள்.  பணத்தைத் திருடிய தாடிக்காரன் கடந்து போகிறான். சைக்கிள் காரன் கடந்து போகிறான்.  ஆம்புலன்ஸ் வண்டி கடந்து போகிறது.  கன்னியாஸ்திரிகள் கடந்து போகிறார்கள்.  அப்பா அலுவலகத்தில் நுழைகிறாள்.  அவள் அப்பா அவளைப் பற்றியும் அவள் அம்மாவைப் பற்றியும் மட்டமாகப் பேசிக் கொண்டிருக்கிறார் அவருடைய காதலியுடன்.  உள்ளே நுழைந்த லோலா அப்பாவிடம் பணம் கேட்கிறாள்.  அவர் பணம் தர மறுக்கிறார்.  அந்த அறையில் உள்ள எல்லாவற்றையும் போட்டு உடைக்கிறாள்.  பின் வெளியே வந்து வாசலில் காவல் காரனிடம் உள்ள துப்பாக்கியை எடுத்து அப்பாவை மிரட்டி ஒருலட்சம் பணத்தைத் தயார் செய்து லோலா அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடுகிறாள்.
காதலனை சரியாக 12 மணிக்கு சந்திக்கிறாள்.  அவன் பெயரைக் கூப்பிட்டு
கத்துகிறாள்.  அவனைப் பார்ப்பதற்குள் மனதில் அவளை அவன் பார்க்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறாள்.    அவன் அவளைப் பார்த்து அவளை நோக்கி திரும்பி வருகிறான்.  வேகமாக வரும் ஆம்புலன்ஸ் வண்டி அவன் மீதுமோதி அவனை கீழே சாய்த்து விடுகிறது.  ஆனால் அவன் சாக விரும்பவில்லை.  திரும்பவும் நிகழ்ச்சிகள் பின்னோக்கிப் போகின்றன.  
லோலா திரும்பவும் வீட்டிலிருந்து கிளம்பி ஓடி வருகிறாள்.  இப்போது சம்பவங்கள் ஒவ்வொன்றும் வேறு விதமாக மாறி விடுகின்றன.  சைக்கிள்காரன் தாடிக்காரனை ஒரு சின்ன  தெரு ஓர ரெஸ்டரான்டில் சந்தித்து அவன் சைக்கிளை விற்கிறான்.  சைக்கிளில் தாடிக்காரன் வருகிறான்.  அப்பாவை சந்திக்கசச் செல்லும் லோலா அவரைச் சந்திக்க முடியவில்லை. அதன் முன் அப்பாவுடன் இருக்கும் அவருடைய மேலதிகாரியான மேயரைச் சந்திக்கிறாள்.  லோலாவின் அப்பா மேயருடன் அவர் காரில் போகும்போது எதிரில் ஒரு காரில் மோதி விடுகிறார்கள்.  அவர்கள் இருவரும் காரிலேயே இறந்து விடுகிறார்கள்.   
  செய்வதறியாத லோலா வேகமாக ஓடி வரும்போது, ஒரு டிராக்டர் மீது மோதிக் கொள்ள இருக்கிறாள்.  டிராக்டர் ஓட்டி வண்டியை அவள் மீது மோதாமல் அவளைத் திட்டுகிறான்.  அந்த வண்டி இருக்குமிடத்திலிருந்து எதிரில் காசினோ இருக்கிறது.  அங்கு  செல்கிறாள்.  அவள் கையில் உள்ள பணத்தை வைத்து சூதாட்டம் ஆடி ஒரு லட்சம் சம்பாதிக்கிறாள்.  அதை ஒரு பையில் போட்டு அந்த இடத்தை விட்டு ஓடி வருகிறாள்.  திரும்பவும் அவள்ஓடி வரும்போது சிவப்பு நிற ஆம்புலன்ஸ் வருகிறது ஒரு பெரிய கண்ணாடி பலர் தூக்கிப் பிடித்தபடி நடு ரோடில் நடந்து வருகிறார்கள்.  ஆம்புலன்ஸ் அவர்கள் மீது மோதாமல் நிற்கிறது.  ஓடி வந்து கொண்டிருந்த லோலாவும் அந்த ஆம்புலன்ஸில் ஏறிக் கொள்கிறாள்.  ஆம்புலன்ஸில் ஒரு இதய நோயாளி.  சாகும் நிலையில் இருக்கும் அவனை, லோலா அவன் கையைப் பிடித்தபடி நான் இருக்கிறேன் என்கிறாள்.  அவனுடைய இதயத் துடிப்பு சீராகி அவன் சரியாகிவிடுகிறான்.  லோலா அவள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி அவள் காதலனை சத்தம்போட்டு கூப்பிடுகிறாள்.
அவள் காதலன் மானி டெலிபோன் பூத்திலிருந்து வெளியே வரும்போது பணத்தைத் திருடிய தாடிக்காரனை சைக்கிளில் செல்வதைப் பார்க்கிறான்.  அவனை துப்பாக்கியால் மிரட்டி அந்தப் பணப்பையைப் பறித்துக் கொள்கிறான்.  பின் வேகமான பணத்தை கொடுத்துவிட்டு லோலாவைப் பார்க்க வருகிறான்.  லோலாவும் அவனும் சந்தித்துக் கொள்கிறார்கள்.  üஎல்லாம் முடிந்து விட்டது,ý என்கிறான் காதலன்.  பின் அவள் கையில் வைத்திருக்கும் பை என்ன என்கிறான் மானி.  அவள் சிரிக்கிறாள்.  படம் இத்துடன் முடிந்து விடுகிறது. 
ஒரே சம்பவம் மூன்று முறை வெவ்வேறு விதமாக காட்டியிருக்கிறார்கள்.  ஒருமுறை லோலா சுட்டுக் கொள்ளப் படுகிறாள்.  ஒருமுறை மானி விபத்தில் சிக்கி இறந்து விடுகிறான்.  மூன்றாவது முறை அவள் அப்பா விபத்தில் சிக்கி இறந்து விடுகிறார். 
காலத்தையும் விதவிதமான சம்பவங்களையும் வைத்து இந்தப் படம் ரொம்ப பிரமாதமாக எடுக்கப் பட்டிருக்கிறது.  திறமையான தொழில் நுட்பங்களையும், கிராபிக்ஸ்ஸ÷ம் பயன் படுத்தப் பட்டிருக்கின்றன.  வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு மாதிரி மாறிவிடக் கூடியது என்பதை டாம் டைக்வர் என்ற ஜெர்மானிய டைரக்டர் 1998லேயே இப்படத்தை எடுத்துள்ளார்.  இன்றும் இப் படத்தைப் பார்க்க பிரமிப்பாக உள்ளது.   

தோன்றும் கவிதை வரிகள்

அழகியசிங்கர்
காலையில் வாக் போகும்போது எனக்கு கவிதை வரிகள் தோன்றினால் வீட்டில் உள்ள கர்னாடக வங்கி டைரியில் எழுதி வைப்பேன்.  தேதி எழுதுவேன்.  நேரம் எழுதுவேன்.  ஆனால் யாரிடமும் இதுமாதிரி எழுதுவதை காட்ட மாட்டேன்.  கிட்டத்தட்ட 30 க்கு மேல் கவிதைகள் எழுதியிருப்பேன். நானே படித்து ரசிக்கக் கூடிய கவிதைகள் இவை.  அவற்றில் ஒன்று ஜெயமோகன் என்ற தலைப்பில் ஒரு கவிதை.  இதோ உங்களுக்குப் படிக்க அளிக்கிறேன்.
ஜெயமோகன்
ஆயிரக்கணக்கான பக்கங்களில்
மஹாபாரதம் எழுதிக்கொண்டே போகிறார்
படிக்க படிக்க வளர்ந்துகொண்டே போகிறது
எது மாதிரியான எழுத்தளார் இவர்
எப்படியெல்லாமோ யோஜனை செய்கிறார்
என்பது ஆச்சரியம்தான்
எழுத்து அவரை எழுதிக்கொண்டே போகிறதா
ஆனால் 
என்ன செய்வது
அவர் எழுதும் வேகத்திற்கு
என்னால் படிக்க முடியவில்லையே…….

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்

அழகியசிங்கர்

உமாபதியின் வெளியில இருந்து வந்தவன் என்ற கவிதைத் தொகுதி விருட்சம் வெளியீடின் நான்காவது தொகுதி.  வெளிவந்த ஆண்டு நவம்பர் 1991. கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஓடி விட்டன.  அவரும் என்னைப் போல் வங்கியில் பணிபுரிந்தவர்.  இப்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை.  அவருக்கு வயது எழுபதாவது இருக்கும்.
இந்தத் தொகுதிக்கு சுந்தர ராமசாமி முன்னுரை எழுதியிருக்கிறார். அவருடைய கவிதைகள் குழப்பமில்லாமல் ஆழ்ந்து யோசனை செய்ய வைக்கும். இந்தத் தொகுதி வரும்போது ஒரு முறை என்னைப் பார்க்க வீட்டிற்கு வந்திருக்கிறார்.  அன்று ஒரு பண்டிகை தினம்.   நான் வீட்டில் அவருக்கு விருந்தளித்தேன்.  இப்போது அவர் முகமே எனக்கு மறந்து விட்டது.  
ஓசைகள் என்ற இக் கவிதைக்கு ஓவியர் பாஸ்கரன் ஒரு பூனை படம் வரைந்திருக்கிறார்.  பூனை படங்களை வரைவதில் பாஸ்கரன் திறமையானவர் என்று கேள்விப்ப்ட்டிருக்கிறேன்.
இத் தொகுப்பை திரும்பவும் கொண்டு வர உத்தேசித்துளளேன்.

உமாபதி

ஓசைகள்
ஓசைகளின் உபத்திரவம் 
தாங்க முடியாமல் போச்சு
இன்ன இடமென்றில்லாமல்
வீட்டில்
வெளியில்
விவஸ்தை கெட்டுப் போச்சு
எப்போது என்று ஞாபகமில்லை
மனிதர்கள் பேச்சை மறுத்து
ஒதுங்கிய நாளாய் இருக்கலாம்
கதிகளின் ஓசைக்குக் காதை
அடைத்த அன்றாய் இருக்கலாம்
காற்று பேசத் துவங்கியது
தன் இச்சைப்படி
மெலிதாய் உரத்தும்
விஷயங்களுக்குத் தக்கபடி
எல்லாம் கை மீறினதாய் உணர்ந்து
வழியில்லாமல்
குருடாக்கிக் கொண்டேன்
விளைந்தது ஆபத்து
முதல் நாள்
எதரில் கண்ட சில விரல்களில்
இன்னும் சில முகங்களில்
என் செவிகள்
பின்னர் ஒரு பூனையின் முகத்தில்
புல்லின் நீர் கோந்த முகத்திலும் கூட
நாளாக நாளாக என் உடம்பே
எனக்கொரு செவியாச்சு
உலகெங்கும் என் செவிகள்
வெளியெங்கும் என் செவிகள்
எல்லாம் ஆரவாரம்.

ராம் காலனி என்ற மர்மக் குறுநாவல்

அழகியசிங்கர்

அப்போது நாங்கள் போஸ்டல்காலனி முதல் தெருவில் குடியிருந்தோம்.  இன்னும் கூட ஞாபகம் இருக்கிறது.  தீபாவளி அன்றுதான் நடந்தது.  எங்கள் வீடு இருந்த தெரு முனையில் உள்ள ஒரு வீட்டில் ஒரு ரிட்டையர்டு ஸ்கூல் டீச்சர் தனியாக இருந்தாள்.  வயதான பெண்மணி. அந்தப் பெண்மணிக்கு சொந்தமான தனி வீடு. அந்தப் பெண்மணி கொலை செய்யப்பட்டிருந்தாள். பயங்கரமான அதிர்ச்சி அது.  இவ்வளவு அருகில் ஒரு கொலை நடந்திருக்கிறது என்பதை என்னால் நம்ப கூட முடியவில்லை.  
கொலை செய்தவன் அந்தப் பெண்மணியின் நகைக்காக கொலை செய்து விட்டான்.  தனிமையில் இருக்கும் அந்தப் பெண்மணி நகைக்காக கொலை செய்ய வருபவனிடம், கேட்டவுடன் நகைகளைக் கழட்டிக் கொடுத்திருக்கலாம்.  அந்தப் பெண்மணி எரிர்ப்பு தெரிவித்ததால் இது மாதிரி நிகழ்ந்து விட்டது. போலீசுகாரர்கள் திறமையானவர்கள்.  ஒருவாரத்தில் அந்தக் கொலையாளியைப் பிடித்து விட்டார்கள்.
நம் அருகில் இது மாதிரி நிகழ்ச்சி நடக்கும்போது நம்மை அறியாமலேயே ஒரு அதிர்வு ஏனோ ஏற்படுகிறது.  மனம் நிம்மதி இல்லாமல் தவிக்கிறது.  நாங்கள் அன்று அப்படித்தான் தவித்தோம். 
இந்தக் கொடூர நிகழ்ச்சியை அடிப்படயாகக் கொண்டுதான் நான் ராம் காலனி என்ற மர்மக் குறுநாவல் ஒன்றை எழுத முயற்சி செய்து வெற்றிகரமாக எழுதினேன்.  
என்னதான் எழுதினாலும் நிஜம் பயங்கரமானதுதான்.  

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்


அழகியசிங்கர்


பூனைகள் பற்றி நான் கவிதைகளைத் தொகுக்க ஆரம்பித்தேன்.  பின் ஏனோ அந்த முயற்சியைத் தொடரவில்லை.  என்னிடம் உள்ள நல்ல பழக்கம். நான் எதாவது தொடர்ந்தால் கொஞ்ச நாள் தொடர்வேன் பின் நிறுத்தி விடுவேன்.  இப்படி பாதியில் பாதியில் நின்று போன ப்ராஜக்ட் அதிகம்.  இந்த ப்ளாகும், முகநூலும் வந்த பிறகு  இப்படி தொடராமல் போன எத்தனையோ பாதியில் நின்று போயிருக்கின்றன.  என்றாவது ஞாபகம் வந்தால் தொடர்வேன்.  பூனைகள் குறித்த கவிதைகள் பலர் எழுதி உள்ளார்கள். என்னைப் பொறுத்தவரை கவிதை எழுதத் தொரியாத ஒருவர் கவிதை எழுத விரும்பினால் பூனையை கண் முன் நிறுத்தி எழுதத் தொடங்கினால் கவிதை தானாகவே எழுத வந்து விடும்.  ஏன்எனில் பூனை ஒரு ஆன்மிக விலங்கு. அதைத் தூக்கி மேலே வீசி எறிந்தால் தன் மீது அடிபடாமல் தப்பித்து விடும்.  
வீடை ஒழிக்கும்போது ஒரு பெஞ்ச் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது வெளியே வைத்திருந்தேன்.  நேற்று வண்டியை உள்ளே தள்ளிவிட்டு வந்தேன்.  பெஞ்சில் ஒரு பூனை சொகுசாகப் படுத்துக் கிடந்தது.  எனக்கு கெட்ட கோபம்.  என்னிடம் அனுமதி கேட்காமலேயே படுத்திருந்ததால்தான் கோபம்.  பின் அதைத் துரத்தினேன். 
பெருந்தேவியின் அழுக்கு சாக்ஸ் புத்தகத்தை தபாலில் அனுப்பினேன். அப்போது கையில் வைத்திருந்த ஒரு புத்தகத்தைத் திருப்பிப் பார்த்தேன்.  57 ஆம் பக்கத்தில் பெருந்தேவியின் புத்த நாடகம் என்ற கவிதை.
கீழே நான் துரத்திய பூனை இங்கே எப்படி வந்தது என்று தோன்றியது. எனக்கு நன்றாக இனிமேல் பொழுது போய்விடும்.  இதோ இப்போது ஒரு பூனையை உங்கள் கண் முன்.
புத்த நாடகம்
பெருந்தேவி
விட்டத்திலிருந்து குதித்த கிழட்டுப்பூனைக்குப்
படாத இடத்தில் பட்டுவிட்டது
திருமணக்கோலத்தைச் சுட்டாத ஒரு பூமால
அழுகுகிறது கடைத்தெருவில் ப்ளாஸ்டிக் உறையில்
        கதவுகள் மூடப்பட்ட அறைக்குள் பூனை நொண்டுகிறது
வேறெங்கோ விபத்துக்குள்ளான வாகனத்தில்
புன்னகைபூத்து இறந்து கிடக்கின்றனர் கள்ளக்காதலர்கள்
தட்டுமுட்டுச் சாமான்களும் திகைப்புமாக 
மோதி நகர்கிறது பூனை
நெடுநாளைய இருமலொன்று அடுத்த தெருவில்
அந்தரத்தை அடைகிறது எப்போதும்போல்
இருள் காவியத் துணையாகிறது பூனைக்கு
இன்னொரு பூனைக்கும் இன்னொரு இரவுக்குமாகத்
தயாராகிறது வேசன் என அடுத்தநாள்

சில துளிகள்…….

அழகியசிங்கர் 


படுக்கையிலேயே படுத்துக்கொண்டிருந்த அப்பா திடீரென்று எழுந்து உட்கார்ந்து கைகளை அசைத்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்.  
*********
நான் எடுத்துப் படிக்க நினைத்த புத்தகங்களின் ஒன்றின் பெயர் கானகன்.  என் கம்பூயூட்டர் டேபிள் பக்கத்தில் வீற்றிருக்கிறது.
**********
கடந்த நாலைந்து நாட்களாக நான் சளி, இருமலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன்.  சாப்பாடு பிடிக்கவில்லை.  சோர்வு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.  இன்று கொஞ்சம் பரவாயில்லை.  சாப்பிட முடிந்தது.
*********
அழகியசிங்கர் என்ற பெயரில் எழுதுவதை விட்டுவிட்டு மாயோன் என்ற பெயரில் எழுதலாமா?  
*********
இன்று 100வது இதழ் விருட்சத்தை ஆரம்பிக்க முடியவில்லை. தில்லியிலிருந்து உறவினர்கள் வந்து விட்டார்கள்.  அவர்களை அலட்சியப் படுத்துகிறேன் என்று நினைத்து விடக் கூடாது என்று அவர்களுடனே இருந்தேன்.
*********
காலையில் தெருவில் ஒரு சிறுவன் கணீரென்ற குரலில் இடியாப்பம் இடியாப்பம் என்று கத்திக்கொண்டு போவான்.  அவனுடைய சுறுசுறுப்பும் வேகமும் ஆச்சரியமாக இருக்கும்.  யாரும் அவனிடம் இடியாப்பம் வாங்கவும் மாட்டார்கள். கவலைப்படாமல் அவன் நாள் தவறாமல் கூவிக்கொண்டு போவான். அவன்தான் எனக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறான்.  நான் வெளியிடும் புத்தகங்களையும் யாரும் வாங்காவிட்டால் அவனைப் போல கூவத் தயார்.  
********
தில்லியிலிருந்து வந்திருந்த உறவினரைக் கேட்டேன் : புத்தகம் படிப்பதுண்டா? இல்லை என்றார்.  சினிமா பார்ப்பதுண்டா? இல்லை என்றார்.  டிவி பார்ப்பதுண்டா? இல்லை என்றார். நான் இன்னும் பேசுவதற்கு வார்த்தைக் கிடைக்காமல் தவித்தேன்.
*********
காலையில் நான் சாப்பிட்டப் பிறகு நாற்காலியில் அமர்ந்தால் போதும்,  தூக்கம் வந்து விடுகிறது.  என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. தினமும் சாப்பிடும் மாத்திரைகளா காரணம்.
*********
எபபடி கெஞ்சுவது என்று யாராவது சொன்னால் போதும், நான்  கெஞ்சத்  தயார்.  என் வீட்டு வாசலில் மழை நீர் கால்வாய் மூடி உடைந்து விட்டது.  உதவி பொறியாளரைப் பார்த்து 3 மாதங்களாய் மன்றாடிக் கொண்டிருக்கிறேன்.  ஒரு பிரயோஜனமும் இல்லை.  மேயர் சைதை துரைசாமியைப் பார்க்கப் போகலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  கூச்சமாக இருக்கிறது.  அல்லது அந்த உதவிப் பொறியாளர் காலைப் பிடித்து நமஸ்காரம் செய்யலாமா?  அல்லது இந்த வேலை முடியறவரை இந்த இடத்தை விட்டுப் போகமாட்டான் என்று அவர் அலுவலகத்தில் உட்கார்ந்து விடட்டுமா?  அந்தப் பணியை முடிக்க காசு கொடுக்கவும் தயார்.  ஆனால் அரசாங்கத்திலிருந்துதான் ஆட்கள் வரவேண்டும்.
******
இதை முடிக்கும்போது ஒரு கவிதை :
உட்கார கிடைத்த இடத்தைப் 
பிடித்துக் கொண்டேன்
சுற்றிலும் கூச்சல்…….

எதாவது ஒரு பக்கத்தை எடுத்துப் படிப்பேன்

அழகியசிங்கர்
என் கல்லூரி நாட்களிலிருந்து நான் கன்னிமேரா லைப்ரரியின் உறுப்பினன்.  எதாவது புத்தகங்கள் எடுத்துக்கொண்டு வருவேன்.படிக்கிறேனோ இல்லையோ புத்தகங்களை அங்கிருந்து எடுத்துக்கொண்டு வருவது வழக்கம்.  முழுக்க என்னால் புத்தகத்தைப் படிக்க முடியாவிட்டாலும், நான் எடுத்துக்கொண்டு வரும் புத்தகத்திலிருந்து எதாவது ஒரு பக்கத்தை எடுத்துப் படிப்பேன்.  எந்தப் பக்கம் என்பது தெரியாது.  சிலசமயம் அந்தப் புத்தகத்தை யார் கொண்டு வந்துள்ளார்கள் என்று பார்த்து வாங்கி வைத்து விடுவேன்.
ஒருமுறை ரமண விருந்து பாகம் 3 கிடைத்தது.  படிக்க படிக்க சுவாரசியமாக இருந்தது.  உடனே வாங்கி வைத்துக் கொண்டேன். இப்போதெல்லாம் என் மனம் சஞ்சலம் (அவ்வளவு லேசில் அடைவதில்லை) அடைந்தாலோ போரடித்தாலோ என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தாலோ ரமண விருந்தை எடுத்து எதாவது ஒரு பகுதியை எடுத்துப் படிப்பேன்.  
அது எனக்கு எதாவது உணர்த்தும்.  நானே கற்றுக்கொள்ளும் பாடமாகக் கூட இருக்கும்.  அதிலிருந்து சாப்பாட்டு யோகம் என்ற பகுதியை உங்களுக்குப் படிக்க அளிக்கிறேன்.
ரமணாச்ரமத்திற்கு ஒருநாள் ஒரு அடியார் வந்தார்.  எங்கிருந்தோ வந்தவர் அவர்.  தரிசன ஹாலில் பகவானுக்கு எதிரில் அமர்ந்தார்.  இவர் பல இடங்களுக்கும், பல மடங்களுக்கும், பல ஆசிரமங்களுக்கும் போய் அங்கங்கே உள்ள குருமார்களைச் சந்தித்தாராம்.  இதைப் பற்றி அளக்க ஆரம்பித்தார்.
எந்தெந்த குருவிடம் அவர் என்னென்ன யோகப் பயிற்சியைப் பெற்றார் என்பதை வெகு உற்சாகமாகப் பகவானிடம் கூறினார்.
ஆனால் இந்த ரமணர் எந்த யோகத்தையும் உபதேசிக்கக் காணோமே என்று அலுத்துக் கொண்டார்.  சலித்துக் கொண்டார்.
தரிசன ஹாலில் பகவானது அடியார்கள் இவரது அதிகப்பிரசங்கித்தனத்தைக் கேட்டு புன்முறுவலித்தபடி அமர்ந்திருந்தனர். 
பகவானும் இந்த யோக நிபுணரின் அளப்பைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
மணி பகல் 11.30.   சாப்பாட்டு மணி அடித்தது.  பகவான்தான் ஆசிரம சட்டத்தை அனுசரிப்பவர் ஆயிற்றே?  அவர் என்ன செய்தார்?
பகவான் உடனே எழுந்தார்.  யோகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த அந்த அடியாரைப் பார்த்து பகவான் கூறினார் : “அதெல்லாம் சரி, இப்போது இந்த குருவிடம் ‘எப்படி சாப்பிடுவது?’ என்ற யோகத்தைக் கற்றுக் கொள்ளும்.  வாரும்.”
இவ்வாறு கூறிய பகவான் அந்த யோக நிபுணரை உணவுக்கூடத்திற்கு அழைத்துச் சென்றார்.  
பகவானது இந்த ஹாஸ்யத்தை ரசித்தவாறு அடியவர்களும் எழுந்தார்கள் சாப்பாடு யோகத்திற்கு.
இந்தப் புத்தகத்தை எழுதியவர் சிவ. தீனநாதன்.  விலை ரூ.50. உண்மையில் விருந்து இந்தப் புத்தகம்.

இரண்டு கவிதைகள்


அழகியசிங்கர்


ஒன்று

நான் பஸ்ஸில்
வந்து கொண்டிருந்தேன்
இருக்கை எதுவும்                                                             தட்டுப்படவில்லை
பஸ்
ஊர்ந்து ஊர்ந்து
சென்று கொண்டிருந்தது
பல ஊர்களைத் தாண்டியது
பல மனிதர்களைச் சுமந்த சென்றது
வயல்களைத் தாண்டியது
உயரமான மரங்களைத் தாண்டியது
கூட்ட நெரிசலில்
ஒழுங்கற்ற சப்தம் பஸ்ஸில்
சுழன்றபடி சென்றது
ஊர்ந்து ஊரந்து
பஸ் நகர்கிறது
நான்
பஸ்ஸில்
பயணித்துக்கொண்டிருக்கிறேன்

இரண்டு

இந்த இடத்திற்கு
நான் வருவதற்குமுன்
இந்த இடம்தானா
என்று எனக்குத் தோன்றியது…
                                                                        (2011)