சில துளிகள்…….

அழகியசிங்கர் 


படுக்கையிலேயே படுத்துக்கொண்டிருந்த அப்பா திடீரென்று எழுந்து உட்கார்ந்து கைகளை அசைத்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்.  
*********
நான் எடுத்துப் படிக்க நினைத்த புத்தகங்களின் ஒன்றின் பெயர் கானகன்.  என் கம்பூயூட்டர் டேபிள் பக்கத்தில் வீற்றிருக்கிறது.
**********
கடந்த நாலைந்து நாட்களாக நான் சளி, இருமலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன்.  சாப்பாடு பிடிக்கவில்லை.  சோர்வு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.  இன்று கொஞ்சம் பரவாயில்லை.  சாப்பிட முடிந்தது.
*********
அழகியசிங்கர் என்ற பெயரில் எழுதுவதை விட்டுவிட்டு மாயோன் என்ற பெயரில் எழுதலாமா?  
*********
இன்று 100வது இதழ் விருட்சத்தை ஆரம்பிக்க முடியவில்லை. தில்லியிலிருந்து உறவினர்கள் வந்து விட்டார்கள்.  அவர்களை அலட்சியப் படுத்துகிறேன் என்று நினைத்து விடக் கூடாது என்று அவர்களுடனே இருந்தேன்.
*********
காலையில் தெருவில் ஒரு சிறுவன் கணீரென்ற குரலில் இடியாப்பம் இடியாப்பம் என்று கத்திக்கொண்டு போவான்.  அவனுடைய சுறுசுறுப்பும் வேகமும் ஆச்சரியமாக இருக்கும்.  யாரும் அவனிடம் இடியாப்பம் வாங்கவும் மாட்டார்கள். கவலைப்படாமல் அவன் நாள் தவறாமல் கூவிக்கொண்டு போவான். அவன்தான் எனக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறான்.  நான் வெளியிடும் புத்தகங்களையும் யாரும் வாங்காவிட்டால் அவனைப் போல கூவத் தயார்.  
********
தில்லியிலிருந்து வந்திருந்த உறவினரைக் கேட்டேன் : புத்தகம் படிப்பதுண்டா? இல்லை என்றார்.  சினிமா பார்ப்பதுண்டா? இல்லை என்றார்.  டிவி பார்ப்பதுண்டா? இல்லை என்றார். நான் இன்னும் பேசுவதற்கு வார்த்தைக் கிடைக்காமல் தவித்தேன்.
*********
காலையில் நான் சாப்பிட்டப் பிறகு நாற்காலியில் அமர்ந்தால் போதும்,  தூக்கம் வந்து விடுகிறது.  என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. தினமும் சாப்பிடும் மாத்திரைகளா காரணம்.
*********
எபபடி கெஞ்சுவது என்று யாராவது சொன்னால் போதும், நான்  கெஞ்சத்  தயார்.  என் வீட்டு வாசலில் மழை நீர் கால்வாய் மூடி உடைந்து விட்டது.  உதவி பொறியாளரைப் பார்த்து 3 மாதங்களாய் மன்றாடிக் கொண்டிருக்கிறேன்.  ஒரு பிரயோஜனமும் இல்லை.  மேயர் சைதை துரைசாமியைப் பார்க்கப் போகலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  கூச்சமாக இருக்கிறது.  அல்லது அந்த உதவிப் பொறியாளர் காலைப் பிடித்து நமஸ்காரம் செய்யலாமா?  அல்லது இந்த வேலை முடியறவரை இந்த இடத்தை விட்டுப் போகமாட்டான் என்று அவர் அலுவலகத்தில் உட்கார்ந்து விடட்டுமா?  அந்தப் பணியை முடிக்க காசு கொடுக்கவும் தயார்.  ஆனால் அரசாங்கத்திலிருந்துதான் ஆட்கள் வரவேண்டும்.
******
இதை முடிக்கும்போது ஒரு கவிதை :
உட்கார கிடைத்த இடத்தைப் 
பிடித்துக் கொண்டேன்
சுற்றிலும் கூச்சல்…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *