எதாவது ஒரு பக்கத்தை எடுத்துப் படிப்பேன்

அழகியசிங்கர்
என் கல்லூரி நாட்களிலிருந்து நான் கன்னிமேரா லைப்ரரியின் உறுப்பினன்.  எதாவது புத்தகங்கள் எடுத்துக்கொண்டு வருவேன்.படிக்கிறேனோ இல்லையோ புத்தகங்களை அங்கிருந்து எடுத்துக்கொண்டு வருவது வழக்கம்.  முழுக்க என்னால் புத்தகத்தைப் படிக்க முடியாவிட்டாலும், நான் எடுத்துக்கொண்டு வரும் புத்தகத்திலிருந்து எதாவது ஒரு பக்கத்தை எடுத்துப் படிப்பேன்.  எந்தப் பக்கம் என்பது தெரியாது.  சிலசமயம் அந்தப் புத்தகத்தை யார் கொண்டு வந்துள்ளார்கள் என்று பார்த்து வாங்கி வைத்து விடுவேன்.
ஒருமுறை ரமண விருந்து பாகம் 3 கிடைத்தது.  படிக்க படிக்க சுவாரசியமாக இருந்தது.  உடனே வாங்கி வைத்துக் கொண்டேன். இப்போதெல்லாம் என் மனம் சஞ்சலம் (அவ்வளவு லேசில் அடைவதில்லை) அடைந்தாலோ போரடித்தாலோ என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தாலோ ரமண விருந்தை எடுத்து எதாவது ஒரு பகுதியை எடுத்துப் படிப்பேன்.  
அது எனக்கு எதாவது உணர்த்தும்.  நானே கற்றுக்கொள்ளும் பாடமாகக் கூட இருக்கும்.  அதிலிருந்து சாப்பாட்டு யோகம் என்ற பகுதியை உங்களுக்குப் படிக்க அளிக்கிறேன்.
ரமணாச்ரமத்திற்கு ஒருநாள் ஒரு அடியார் வந்தார்.  எங்கிருந்தோ வந்தவர் அவர்.  தரிசன ஹாலில் பகவானுக்கு எதிரில் அமர்ந்தார்.  இவர் பல இடங்களுக்கும், பல மடங்களுக்கும், பல ஆசிரமங்களுக்கும் போய் அங்கங்கே உள்ள குருமார்களைச் சந்தித்தாராம்.  இதைப் பற்றி அளக்க ஆரம்பித்தார்.
எந்தெந்த குருவிடம் அவர் என்னென்ன யோகப் பயிற்சியைப் பெற்றார் என்பதை வெகு உற்சாகமாகப் பகவானிடம் கூறினார்.
ஆனால் இந்த ரமணர் எந்த யோகத்தையும் உபதேசிக்கக் காணோமே என்று அலுத்துக் கொண்டார்.  சலித்துக் கொண்டார்.
தரிசன ஹாலில் பகவானது அடியார்கள் இவரது அதிகப்பிரசங்கித்தனத்தைக் கேட்டு புன்முறுவலித்தபடி அமர்ந்திருந்தனர். 
பகவானும் இந்த யோக நிபுணரின் அளப்பைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
மணி பகல் 11.30.   சாப்பாட்டு மணி அடித்தது.  பகவான்தான் ஆசிரம சட்டத்தை அனுசரிப்பவர் ஆயிற்றே?  அவர் என்ன செய்தார்?
பகவான் உடனே எழுந்தார்.  யோகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த அந்த அடியாரைப் பார்த்து பகவான் கூறினார் : “அதெல்லாம் சரி, இப்போது இந்த குருவிடம் ‘எப்படி சாப்பிடுவது?’ என்ற யோகத்தைக் கற்றுக் கொள்ளும்.  வாரும்.”
இவ்வாறு கூறிய பகவான் அந்த யோக நிபுணரை உணவுக்கூடத்திற்கு அழைத்துச் சென்றார்.  
பகவானது இந்த ஹாஸ்யத்தை ரசித்தவாறு அடியவர்களும் எழுந்தார்கள் சாப்பாடு யோகத்திற்கு.
இந்தப் புத்தகத்தை எழுதியவர் சிவ. தீனநாதன்.  விலை ரூ.50. உண்மையில் விருந்து இந்தப் புத்தகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *