பாரதியார் நினைவு நாள் : செப்டம்பர் 11


தொலைந்துபோன பாரதியார்



அழகியசிங்கர்





நண்பரொருவர் பேச்சைக் கேட்டு
எழுதிப்பார்த்தேன் பாரதியாரை
துடிக்கும் மீசையுடன்
என் முன்னால் நின்றார் பாரதியார்
எங்கே ஒளிந்திருக்கிறீர்
என் வரிகளில் என்று அவரைக் கேட்டேன்
சிரித்தபடி மறைந்து விட்டார்

போனில் படித்தபோது
நண்பர் தலை ஆட்டி
‘நன்று நன்று’ என்றார்
கொண்டு வருவார்
துடிப்புடன்
பாரதியார் பற்றி எழுதிய
பலர் கவிதைகளையெல்லாம்
சேர்த்தென்றால்
கேட்டவுடன்
திட்டத்திலிருந்து விலகி விட்டார்

அப்போது எழுதிய
அந்தக் கவிதையை
எங்கே வைத்தேன்
ஃபைல்களைப் புரட்டிப்
பார்த்தாலும் கிட்டவில்லை
பாரதி என் பாரதி

நீண்ட நோட்டில்
எழுதிப் பார்க்கும்
கவிதைகள் பலவற்றை
சேர்த்து வைக்கும் பழக்கமெனக்குண்டு
இருந்தாலும்
பாரதியாரைப் பற்றி
நானெழுதிய கவிதையைக்
காணவில்லை ஏனோ..
எங்கே ஒளிந்துகொண்டார்?
தெரியவில்லை
வாவென்றால் வருவாரா?
தெரியவில்லை

அவர் வரிகளிலிருந்து
கயிறு பிடித்து
இறங்கியிருக்கிறோம்.
வழிதெரியாமல்
திகைத்த
எங்களுக்கு
வரங்கொடுத்து
வரி தந்த மேதையவர்

அவரை வைத்துப் படம் எடுக்கிறார் பலர்
பாட்டுப்பாட பிய்த்துக் கொண்டனர்
அவர் பாடல்களை

நானோ கவிதை எழுத முயற்சிக்கிறேன்

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 16

அழகியசிங்கர் 

  வேஷம்

க. நா. சு



நான் அறிவாளி என்று வேஷம் போட்டபோது எல்லோரும்
என்னை அறிவாளி என்றார்கள்
நான், சோம்பேறியாக வேஷம் போட்டபோது எல்லோரும்
என்னை சோம்பேறி என்றார்கள்.
நான் எழுதத் தெரியாதவன் மாதிரி வேஷம் போட்டபோது
எல்லோரும், பாவம் அவனுக்கு எழுதவராது என்றார்கள்.
நான் பொய்யன் போல வேஷம் போட்டபோது
அவர்கள் எல்லோரும் என்னைப் பொய்யன் என்றார்கள்
நான் பணக்காரன் போல நடந்துகொண்டபோது
அவர்கள் என்னைப் பணக்காரன் என்றார்கள்.
நான் எதையும் லக்ஷியம் பண்ணாதவன் மாதிரி வேஷம்                         போட்டபோது
நான் எதையும் லக்ஷியம் பண்ணாதவன் என்றார்கள்.
நானும் அறியாமலே, மனவலி தாங்காது நான் முனகியபோது
நான் துயருற்றவன் போல வேஷம் போடுகிறேன் என்றார்கள்

நன்றி : க நா சு கவிதைகள் – கவிதைகள் –  பக்கம் : 176 – விலை ரூ.65 – சந்தியா பதிப்பகம், புதிய எண் : 77, 53வது தெரு,9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83    

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 15



அழகியசிங்கர் 

எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு….

விக்ரமாதித்யன்




எப்பொழுதும்போல
இருக்கிறேன்

எப்பொழுதும்போல
என்றால்?

எப்பொழுதும்
போலத்தான்

அதாவது
பசித்தால் சாப்பிடுகிறேன்

தூக்கம் வந்தால்
தூங்குகிறேன்

காசு கிடைக்கையில்
குடிக்கிறேன்

வெளியில் சொல்லமுடியாதபடி
வாழ்கிறேன்

ஏதாவது படிக்கத் தோன்றினால்
படிக்கிறேன்

எழுதத் தோன்றினால்
எழுதுகிறேன்

நண்பர்களைப் பார்க்க விரும்பினால்
தேடிப்போய்ப் பார்க்கிறேன்
அமைதியாக இருக்கலாமேயெனப் பட்டால்
அமைதியாக இருக்கிறேன்

ஊர்சுற்றும் எண்ணம் வந்தாக்கால்
ஊர் சுற்றுகிறேன்

கோயில்களுக்குப் போய்வரநினைத்தால்
கோயில் கோயிலாகப் போய் வருகிறேன்

இப்படி இப்படித்தான்
எப்பொழுதும் போலவே

வேறென்னவாவது செய்யத்தான்
வழிவகை வாய்க்கால் உண்டா சொல்லுங்கள்

பத்து கேள்விகள் பத்து பதில்கள் – 5

            
அழகியசிங்கர்
இதுவரை நான்கு படைப்பாளிகளைப் பேட்டிக் கண்டு பத்து கேள்விகள் பத்து பதில்களை வீடியோவில் பிடித்து யூ ட்யூப்பில் இணைத்துள்ளேன்.  அசோகமித்திரன் தான் இதை ஆரம்பித்து வைத்தார்.  அவரைத் தொடர்ந்து எஸ் வைதீஸ்வரன், சாரு நிவேதிதா, ஞானக்கூத்தன் என்று எடுத்திருந்தேன்.  சமீபத்தில் சென்னை வந்திருந்த எழுத்தாளர் விட்டல்ராவை இது மாதிரி பேட்டிக் கண்டு எடுத்துள்ளேன்.  பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 14

அழகியசிங்கர்

தலைப்பில்லாத கல்யாண்ஜி கவிதை

கல்யாண்ஜி




உங்களைப் பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.
தபால் பெட்டியில் கடிதம் இடுபவராக
ஆதார் அட்டை வரிகையில் நிற்பவராக
மீன் வியாபாரியிடம் சிரித்துப் பேசுபவராக,
மழையில் வாகனம் ஓட்டிச் செல்பவராக,
கண்மருத்துவ மனையில் சோதிக்கப் படுபவராக,
மரணவீட்டில் நாற்காலியில் குனிந்திருப்பவராக,
புதிய சுவரொட்டியை ஆர்வமாக வாசிப்பவராக,
கீழே விழுந்த கைக்குட்டையை எடுத்துக் கொடுப்பவராக,
தலைக் கவசம் அணியாமல் காவலரிடம் கெஞ்சுபவராக,
பலூன் விற்பவரிடம் நீல பலூன் வாங்குபவராக…
இவ்வளவு இடங்களில் பார்த்திருக்கிற என்னை
எங்குமே பார்க்காதது போல் உங்களால்
போக முடிவது எப்படி

நன்றி : மூன்றாவது முள் – கவிதைகள் – கல்யாண்ஜி – பக்கம் : 64 – விலை ரூ.55 – சந்தியா பதிப்பகம், புதிய எண் : 77, 53வது தெரு,9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83    – PHONE : 044 – 24896979

நவீன விருட்சம் 100வது இதழும் நானும்…

.

அழகியசிங்கர்

நவீன விருட்சம் 100வது இதழைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.  இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் இதழ் வெளிவந்துவிடும்.  மொத்தம் 250 பக்கங்களுக்கு மேல்.  இதுதான் முதல் முறை நான் அதிகப் பக்கங்களுடன் நவீன விருட்சம் இதழைத் தயாரிப்பது.  ஏகப்பட்ட கவிதைகள், ஏகப்பட்ட கதைகள், கட்டுரைகள் என்று இதழ் ரொம்பி வழிகிறது.  இந்த முறை எனக்கு உதவி செய்ய நண்பர்கள் வட்டமும் சேர்ந்துள்ளது.  

 100வது இதழுக்காக மயிலாடுதுறையைச் சேர்ந்த பிரபு அனுப்பிய கவிதையை உங்களுக்குப் படிக்க அளிக்கிறேன்.

புத்தகம்

————–
பலர் உள்ள
ஒரு வீட்டில்
பிரியும் தாள் திரளாய்
சஞ்சிகையாய்
காலிகோ பைண்டாய்
பேப்பர் பேக்காய்
பேதமாகி
பிரிந்து
ஒற்றைச்சொல்
அடையாளப்படுத்தலாய்
ஆனது
புத்தகம்
மொழி படியா
மழலைக்கு
பிம்பப் பெருவெளியாய்
சிறார்க்கு
சாதனையாய்
வெல்லும் சவாலாய்
மங்கையர்க்கு
குறிப்புகளின்
சமையலாய்
முதியோர்க்கு
கதியாய்
தன்னிருப்பை
தானுணர்ந்தது
புத்தகம்
ரசங்கள்
ஒன்பதும்
வாசகர்
உணர்ந்தும்
வாசித்து
தவழும் குழவி
ஸ்பரிசித்து
கிழிக்கும்
போது
மிகவும் மகிழ்ந்தது
புத்தகம்

மயிலாடுதுறை பிரபு

பார்வையாளராக இருத்தல்

ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ்


 பார்வையாளராக இருத்தல்


                                                                                                            தமிழில்  : அழகியசிங்கர்

கேள்விகேட்பவர் :  நான் முழுக்க ஆசைகளுடன் இருப்பவன்.  எப்படி நான் விரும்புவதைப் பெற முடியும்?

மஹாராஜ் : நீங்கள் விரும்புவதைப்பெற தகுதியுடையவரா?  ஏதோ வகையில் நீங்கள் விரும்புவதைப்பெற நீங்கள் உழைக்க வேண்டும்.  உங்களுடைய சக்தியைச் செலவிடவேண்டும்.  பின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

கே.கே : எங்கிருந்து அந்தச் சக்தியைப் பெறுவது?

மஹா : நம்முடைய ஆசையே நம் சக்தி.

கே.கே :  அப்படியென்றால் ஏன் எல்லா ஆசைகளும் நிறைவேறுவதில்லை.

மஹா : அது நிறைவேறும்படியாக கடைசிவரை வரும்படி வலிமை மிக்கதாக இருக்காது..

கே.கே :  ஆமாம்.  அதுதான் என்னுடைய பிரச்சினை.  சிலவற்றை விரும்புகிறேன்.  அதை நிறைவேற்றப் போகும்போது சோம்பேறியாக இருக்கிறேன்.

மஹா : உங்களுடைய ஆசை தெளிவாகவும் வலிமையாகவும் இல்லாவிட்டால், அது எந்த உருவத்திற்கும் வராது.  கூடவே, உன் ஆசை உன்னுடையதாக இருக்கும் பட்சத்தில் அதாவது உன் சந்தோஷத்திற்காகவென்றால் அது குறுகியது.  உன்னை மீறி வெளிப்படாது.

கே.கே :  இன்னும் மிகச் சாதாரண மனிதர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை அடைந்து விடுகிறார்கள்.

மஹா : ரொம்ப காலத்திற்குப் பெரிதாக என்ன நினைத்தாலும், அவர்களுடைய சாதனைகள் குறுகியவை.

கே.கே :  சுயநலமில்லாத ஆசைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மஹா : நீங்கள் ஒரு பொதுவான தன்மைக்காக ஆசைப்பட்டால், இந்த உலகம் முழுவதும் உங்களுடன் சேர்ந்து ஆசைப்படும்.  மக்களுடைய ஆசையை உங்கள் ஆசையாக எடுத்துக்கொள்ளுங்கள்.  அதற்காக முயற்சி செய்யுங்கள்.  அது நிச்சயம் தோல்வி அடையாது.

கே.கே : மக்களுக்காக என்பது கடவுளுடைய செயல்.  என்னுடையது அல்ல.  நான் என்னைப்பற்றிதான் நினைத்துக்கொள்கிறேன்.  என்னுடைய தேவையான ஆசைகள் நிறைவேற நான் பார்ப்பதில் தவறில்லை அல்லவா?  என்னுடைய ஆசைகள் நியாயமானவை.  அவை சரியான ஆசைகள்.  ஆனால் அவை ஏன் உண்மை ஆவதில்லை.

மஹா : சூழ்நிலைகளைப் பொறுத்தே ஆசைகள் நியாயமானதா இல்லையா என்பது தெரியும்.  அது எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும்.  அது ஒவ்வொருத்தரைப் பொறுத்த விஷயம் எது நல்லது கெட்டது என்பதை அறிய.

கே.கே : என்ன மாதிரியான அளவுகோல் உள்ளது நல்லது கெட்டது என்ற வித்தியாசத்தை அறிய.   எப்படி நான் அறிந்துகொள்வது எது மாதிரியான ஆசை நல்லது அல்லது கெட்டது என்பது.

மஹா : உங்களைப் பொறுத்தவரை துக்கத்தைத் தருகிற ஆசைகள் எல்லாம் தவறானவை.   அதேபோல் சந்தோஷத்தைத் தருகிற ஆசைகள் எல்லாம் சரியானவை.  ஆனால் நீங்கள் மற்றவர்களை மறக்கக் கூடாது.  அவர்களுடைய துக்கமும், சந்தோஷத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கே.கே :  முடிவுகள் எதிர்காலத்தில் உள்ளன.  எப்படி எனக்குத் தெரியும் அவர்கள் எப்படி இருப்பார்களென்று.

மஹா : உங்கள் மனதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஞாபகப் படுத்திக்கொள்ளுங்கள்.  நீங்கள் மற்றவர்களைவிட வித்தியாசனமானவர் இல்லை.  அவர்களுடைய பெரும்பாலான அனுபவங்கள் உங்களுக்கும் பொருந்தும்.  எப்போது தெளிவாகவும் ஆழமாகவும் யோசனை செய்யுங்கள்.  தீவிரமாக உங்களுடைய முழுமையான ஆசைகளை நோக்கிச் செல்லுங்கள்.  அவற்றின் மாற்றங்களையும் புரிந்துகொள்ளுங்கள்.  அவை சிந்தனாபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் உங்களை உருமாற்றுகிறது.  உங்களுடைய செய்பாடுகளையும் அவை மாற்றுகிறது.  ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் உங்களுக்குத் தெரியாததை நீங்கள் ஒதுக்கித் தள்ள முடியாது.  உங்களைத் தாண்டி போகவேண்டுமென்றால், உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

கே.கே : இது என்ன அர்த்தத்தைத் தருகிறது?  நான் என்னை அறிந்துகொள்வதன் மூலம் நான் என்ன தெரிந்துகொண்டு விட முடியும்?

மஹா : நீங்கள் எதுவுமில்லை என்பதை

கே.கே : நான் எதுவுமில்லையா?

மஹா : நீங்கள் என்னவாக உள்ளீர்களோ அவ்வாறு ஏற்கனவே உள்ளீர்கள்.  நீங்கள் எதுவுமில்லை என்பதை அறியும்போது, நீங்கள் அதிலிருந்து விடுதலை அடைந்து விடுகிறீர்கள்.  உங்களுடைய உண்மையான தன்மையுடன் இருந்து விடுகிறீர்கள்.  இவையெல்லாம் தானகவே எந்த முயற்சியில்லாமல் நடக்கும்.

கே.கே :  நான் என்ன ஆராய்வது?

மஹா : நீங்கள் ஆராயவேண்டியது ஒன்றுமில்லை என்பதைத்தான்.  நீங்கள் நீங்களாக உள்ளீர்கள்.  அவ்வளவுதான்.

கே.கே : ஆனால் இறுதியாக நான் என்னவாக உள்ளேன்?

மஹா : நீங்கள் எதாக இல்லை என்பதை கடைசிவரை உதறுவதுதான்.

கே.கே :  எனக்குப் புரியவில்லை

மஹா : நீங்கள் இதுவாகவோ அதுவாகவோ இருப்பதாக   தீர்மானிக்கப்பட்ட கருத்தாக உங்களிடம் உள்ளது.   அதுதான் உங்களைக் கட்டுப்படுத்துகிறது.

கே.கே : நான் எப்படி இந்தக் கருத்திலிருந்து விடுபடுவது?

மஹா : நீங்கள் என்னை நம்புவதாக இருந்தால், நான் சொல்வதைக் கேளுங்கள்.   தெளிவான விழிப்புணர்வு நிலையில் நீங்கள் உள்ளீர்கள். முடிவில்லாதத் தெய்வீகத்தன்மையை அது வெளிப்படுத்தும்.  இதை உணருங்கள்.  அதன்படி வாழுங்கள்.  என்னை நீங்கள் நம்பவில்லை என்றால், உங்களுக்குள் பயணம் செய்யுங்கள்.  ‘நான் யார்?’ என்பதை விஜாரித்துக்கொண்டிருங்கள்.  அல்லது உங்கள் மனதிற்குள், ‘நான்தான்’ என்பதில் குவியுங்கள்.  எளிமையான தெளிவான ஒன்றாக அது இருக்கும்.

கே.கே : உங்கள் மீதான எந்தவிதமான நம்பிக்கையைப் பொறுத்தது அது.

மஹா : உங்கள் உள்ளூணர்வின் மூலம் மற்றவர்களின் மனங்களைப் புரிந்து கொள்வது பொறுத்து.  என்னை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், உங்களையே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

கே.கே :  என்னால் எதையும் செய்ய முடியவில்லை

மஹா : ஒழுக்கமுள்ள பயனுள்ள வாழ்வின் மூலம் உங்களைப் புனிதப்படுத்திக் கொள்ளுங்கள்.  உங்களுடைய எண்ணங்களை, உணர்வுகளை, வார்த்தைகளை, செயல்பாடுகளை கவனியுங்கள்.  இது உங்களைத் தெளிவுபடுத்தும்.

கே.கே :  நான் எல்லாவற்றையும் துறந்துவிட வேண்டுமா?  வீடு இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டுமா?

மஹா : நீங்கள் எதையும் துறக்க வேண்டாம்.  நீங்கள் வீட்டைவிட்டு வருவதன் மூலம் உங்கள் வீட்டிலுள்ளவர்களுக்குத் தொந்தரவு தருகிறீர்கள்.  நம்முடைய பந்தங்கள் நம் மனதில் உள்ளன.  அவை நம்மை விட்டுப் போகாது.  நாம் நம்மை அறியும்வரை.  முதலில் உங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.  எல்லாம் தானாகவே வரும்.

கே.கே :  நீங்கள் என்னிடம் முன்பே கூறியுள்ளீர்கள்.  üநான்தான் ஒப்புயர்வற்ற உண்மைý என்று.  இது சுய கருத்தில்லையா?

மஹா : நிச்சயமாக நீங்கள்தான் ஒப்புயர்வற்ற உண்மை.  ஆனால் எதிலிருந்து.  ஒவ்வொரு மணல்துகளும் கடவுள்தான்.  இதை அறிவது முக்கியம்.  ஆனால் அது ஒரு ஆரம்பம்தான்.

கே.கே : நல்லது.  நீங்கள் சொல்கிறீர்கள்.  நான்தான் ஒப்புயர்வற்ற உண்மை என்பதை.  நான் நம்புகிறேன்.  அடுத்தது நான் என்ன செய்ய வேண்டும்.

மஹா : நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.  நீங்கள் எதில் இல்லை என்பதை ஆராய்ந்து கண்டுபிடியுங்களென்று.  உடல், உணர்வுகள், எண்ணங்கள், கருத்துக்கள், காலம், வெளி, இருத்தல், இல்லாமல் இருத்தல், இது அல்லது அது – எதுவும் தீர்மானமாக இல்லாமலும், தெளிவில்லாமலும் உங்களை நோக்கிக் குறிக்கப்படுகிறது.  வெறுமனே சொற்களால் ஆன பிரகடனம் எந்தப் பலனையும் அளிக்காது.  நீங்கள் எதாவது ஒரு சூத்திரத்தை முடிவில்லாம் சொல்லிக்கொண்டிருக்கலாம்.  அதனால் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை.  நீங்கள் உங்களைத் தொடர்ந்து  கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும் – குறிப்பாக உங்கள் மனதை  
– ஒவ்வொரு கணமும் எதையும் விட்டுவிடாமல்.   ‘தான்’ என்பதிலிருந்தும், ‘தான் இல்லை’ என்பதிலிருந்தும் அறிய பார்வையாளனாக இருப்பது முக்கியம்.

கே.கே :  பார்வையாளனாக இருப்பது என்னுடைய உண்மைத் தன்மை இல்லை.

மஹா : பார்வையாளனாக இருப்பதற்கு எதாவது பார்ப்பதற்கு இருக்க வேண்டும்.  நாம் இன்னும் இரட்டைத்தன்மையுடன் இருக்கிறோம்.

கே.கே :  பார்வையாளன் பார்ப்பது என்னவாக உள்ளது?

மஹா : வார்த்தைகளைக் கோர்ப்பது உங்களை எங்கும் இட்டுச்செல்லாது.  உங்களுக்குள் செல்லுங்கள்.  பிறகு கண்டுபிடியுங்கள் நீங்கள் என்னவாக இல்லை என்பதை.  மற்றதெல்லாம் ஒன்றுமில்லை.  

(PUBLISHED IN NAVINA VIRUTCHAM 68-69TH ISSUE)

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 13


அழகியசிங்கர்

        அரும்புகள்

ராமலக்ஷ்மி




என்றைக்கு
எப்போது வருமென
எப்படியோ தெரிந்து
வைத்திருக்கின்றன
அத்தனைக் குஞசு மீன்களும்

அன்னையருக்குத் தெரியாமல்
நடுநிசியில் நழுவிக்
குளம் நடுவே குழுமிக் காத்திருக்க

தொட்டுப் பிடித்து விளையாட
மெல்ல மிதந்து
உள்ளே வருகிறது
பிள்ளைப் பிறை நிலா.

நன்றி : இலைகள் பழுக்காத உலகம் – ராமலக்ஷ்மி – கவிதைகள் – விலை : ரூ.80 – முதல் பதிப்பு : ஜனவரி 2014 – வெளியீடு : அகநாழிகை பதிப்பகம், எண் 33, மண்டபம் தெரு, மதுராந்தகம் 603 306 – தொலைபேசி : 999 454 1010 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 12

அழகியசிங்கர் 

முதல் முத்தம்

சுஜாதா செல்வராஜ்




அது அத்தனை நேர்த்தியாக இருக்கவில்லை
முன்னறிவிப்பின்றி நிகழ்ந்து முடிந்த முயற்சி

மீனை கவ்விக்கொண்டு பறக்கும்
பறவையின் துரிதக்கணம் அது

கன்னத்தின்
இதழ் சித்திரம் மட்டுமே
அது முத்தம் நிகழ்ந்த இடமென்று
அறிவித்துக்கொண்டிருந்தது

நினைவைக் கலைத்துக் கலைத்து அடுக்கிப்பார்க்கிறேன்
ஒரு முழு முத்தக்காட்சியை
கண்டுணரவே முடியவில்லை

ஆனால்
அதிர்வு அடங்கா நரம்புகளும்
கொதித்து ஓடும் குருதியும்
சொல்லும்
இது போன்றதொரு முத்தம்
இனி சாத்தியமே இல்லை என்று

நன்றி : காலங்களைக் கடந்து வருபவன் – சுஜாதா செல்வராஜ் – கவிதைகள் – விலை : ரூ.90 – முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2014 – வெளியீடு : புது எழுத்து,  2/205 அண்ணா நகர். காவேரிப்பட்டினம் 635 112 தொலை பேசி : 9042158667



மனதுக்குப் பிடித்த கவிதைகள் 11

அழகியசிங்கர் 

கிணற்றிரவு

    ஜி எஸ் தயாளன்




நடுகச்சாமத்தில்
அம்மாவை இறுக அணைத்தபடி
சஹானா அயர்ந்து உறங்குகிறாள்

சன்னலைத் திறந்ததும்
அறையின் இறுக்கம் தளர்கிறது
இனி அவள் தனித்தே தூங்குவாள் போலிருக்கிறது

அறைக்கு வெளியே
மரக்கிளைகளில் எந்த அசைவுமில்லை
வானம் இயல்பாய் இருந்தது
தூரத்துச் சுவரில்
வாகன ஒளி தோன்றுவதும்
மறைவதுமாக இருக்கிறது
எங்கும் நிலவின் மௌனம்

சலனமற்ற ஒரு கிணறு
வேறு வழியின்றி
விண்ணையே பார்த்துக்கொண்டிருக்கிறது

நன்றி : வேளிமலைப் பாணன் – கவிதைகள் – ஜி எஸ் தயாளன் – விலை ரூ.90 – பக் : 95 – முதல் பதிப்பு : டிசம்பர் 2014 காலச்சுவடு பதிப்பகம், 669 கே பி சாலை, நாகர்கோவில் – போன் : 04652 – 278525