சி சு செல்லப்பாவும் சுதந்திரதாகம் நாவலும்…
எதையாவது சொல்லட்டுமா ……102
மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 21
அழகியசிங்கர்
தூரத்து மலைகள்
ஆனந்த்
தூரத்து மலைகள்
அருகில் நெருங்கும்போது
பக்கத்து மரங்கள்
விலகி வழிவிடுகின்றன
பெருமிதம் கொள்கின்றன
மலைகள்
ஒருநாள்
வானம் வந்து
சூழ்ந்தணைத்துக்கொண்டபோது
மரங்களும் மலைகளும்
வெட்கிப்போய்
ஓரம் புகுந்தன
வானம் அவற்றைக் கூப்பிட்டு
சேர்த்தணைத்துக்கொண்டது
வானத்தின் அணைப்பில்
சற்றும் வலிக்காமல்
மலைகளும் மரங்களும்
மிதந்து கொண்டிருக்கின்றன
நன்றி : அளவில்லாத மலர் – கவிதைகள் – ஆனந்த் – விலை ரூ.65 – பக் : 86 – முதல் பதிப்பு : டிசம்பர் 2007 காலச்சுவடு பதிப்பகம், 669 கே பி சாலை, நாகர்கோவில் – போன் : 04652 – 278525
மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 20
ஆயா
எம் டி முத்துக்குமாரசாமி
ஆயாவின் பெயரை யாரும் கேட்டதில்லை
குடும்பம் உண்டா
விலாசம் என்ன
வயது என்ன
சொந்த ஊர் எது
தினசரி எங்கிருந்து வருகிறாள்
எங்கே போகிறாள்
நோயுண்டா நொடியுண்டா
எப்படி சளைக்காமல் வேலை செய்கிறாள்
யாரும் கேட்பதில்லை
சம்பளப்பணம் பேசியதோடு சரி
இந்த ஆயா இல்லாவிட்டால்
இன்னொரு ஆயா
பேச்சில்லாமல் வேலையைப் பார்த்தோமா
போனோமா
என்றிருக்க வேண்டும்
அவ்வளவுதான்
என்றாலும்
ஆயாவின் அரதவணைப்பை
ஒளியை அறிவது போல
நன்கு அறியும்
உங்கள் குழந்தைகள்
நன்றி : நீர் அளைதல் – கவிதைகள் – எம் டி முத்துக்குமாரசாமி – பக்கம் : 112 – விலை : ரூ.90 – முதற் பதிப்பு அக்டோபர் 2012 – வெளியீடு : நற்றிணை பதிப்பகம், ப எண் : 123 எ புதிய எண் 243 எ திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5
தொலைபேசி : 9486177208 – 044 43587070
மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 19
பற்று
ந ஜயபாஸ்கரன்
குலுக்க நீட்டிய கையைப்
பின்னால்
இழுத்துக் கொள்ள
மறந்து
போயிற்று.
சிறிது கண்ணீர்
(கண்ணீர் என்பதே
அசங்கிய வார்த்தை)
நிறைய சொல்
செலவான பின்
தெரிந்தது
நீட்டிய கையைப்
பற்றிக் கொள்ள
எதிரே கை ஒன்றும்
இல்லை
என்று.
நீட்டிய கையை
நட்டு விட்டுப்
பயணப் பட்டேன்
எதிர்த் திசையில்
ஈரம் அற்ற
இன்னொரு கையை
எடுத்துக்
கொண்டு
நன்றி : அர்த்தநாரி அவன் அவள் – கவிதைகள் – ந ஜயபாஸ்கரன் – பக்கங்கள் : 143 – விலை ரூ.100 – முதல் பதிப்பு : டிசம்பர் 2011 உயிர் எழுத்து பதிப்பகம், 9 முதல் தளம், தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி – 1 – தொலைபேசி : 0431 – 6523099 –
பத்து கேள்விகள் பத்து பதிலகள்- கௌரி கிருபானந்தன்
பத்து கேள்விகள் பத்து பதில்கள் – 6
15.09.2016
அழகியசிங்கர்
மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 18
எங்கள் ஜாதி
கிருஷாங்கினி
மாத முதலில் அல்லது கடைசியில்
இடைவிடாத லாரிகளின் ஓட்டம்,
காலியாக அல்லது தானிய மூட்டையுடன்.
அரசின் தானியக் கிடங்கு,
அதன் அருகில் எங்கள் வீடு
விடியற் கருக்கலில் ஆளரவமற்ற போதில்
காக்கைகளும் குருவிகளும் தெருவில்
தானியம் கொத்திப் பசியாறுகின்றன.
நன்றி : கவிதைகள் கையெழுத்தில் – கவிதைகள் – கிருஷாங்கினி – விலை : ரூ.150 – பதிப்பாண்டு 2007 – பக்கம் : 143 – அளவு கால் கிரவுன் – வெளியீடு : சதுரம் பதிப்பகம், 34 சிட்லப்பாக்கம் 2வது பிரதான சாலை, தாம்பரம் சானடோரியம், சென்னை 600 047 – தொலைபேசி : 044 – 22231879
மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 17
முனியமரம்
பாலா
அந்த புளியமரத்தைக் கடந்துதான்
எல்லோரும் செல்லவேண்டும் ஊருக்குள்
உருண்டு திரண்டு நிற்கும் அந்தப் புளியமரம்
ஒட்டுமொத்த ஊருக்கான
பயத்தையும் உள்வைத்திருந்தது
ஒத்தையாய் ஒருவரும் கடப்பதில்லை
முனி இருப்பதாய் சொல்லும்
அந்தப் புளியமரத்தை
வாந்தி பேதி முதல்
நல்லது கெட்டது வரை
முனியோட வேலைதான் என நம்பிய ஊர்
இரவு எட்டுமணிக்கும்
சாமியாடியின் பேச்சுக்கும்
அடங்கிபோகும்
முனி விரட்டுதலும்
மூலிகை வைத்தயமும்
மூன்று தலைமுறையாய் வளர்க்கிறது
சாமியாடியின் சந்ததியை
வாக்கு கேட்டு வருவோரின்
வசதியை பொருத்து வசூலிக்கப்படும்
வகை வகையாய் சுருட்டு, சாராயம், கோழி என
எல்லாவகை வஸ்த்துக்களும்
ஒரு நாள்
அடித்த அசுரக் காற்றில்
அடியோடு சாய்ந்த முனியமரம்
பெருந்திரள் கூட்ட பூசையோடு
அகற்றப்பட்டது
பிழைப்புப்போன விசனத்தில்
ஒடுங்கிப்போன சாமியாடிக்கு
பாடம் போட்டாள் சாமியாடி சம்சாரம்
“அட கூறுகெட்ட மனுசா
ஒத்தையா குத்தவைச்சு ஒக்காராம
ஊருக்குள்ள போயி சொல்லு!
புளியமரத்துல இருந்த முனி
நேத்து வைச்ச புங்க செடியில்
குடியேறிச்சுனு”
அடுத்த பூசை ஆரம்பமானது…….
நன்றி : முனியமரம் – கவிதைகள் – பாலா – விலை : ரூ.80 – பதிப்பாண்டு 2015 – பக்கம் : 80 – புதிய தரிசனம் பதிப்பகம்,
10/11 அப்துல்ரசாக் 2வது தெரு, சைதாப்பேட்டை, சென்னை 600 015
தொலை பேசி எண் : 044 – 42147828