மனதுக்குப் பிடித்த கவிதைகள் -47
கடைசி பக்கத்தை நிரப்ப
தமிழ்மணவாளன்
கவிதைகளாலான புத்தகத்தின்
காலியாயிருக்குமிக்
கடைசி பக்கத்திற்காக
கவிதை கேட்கிறார்கள்
யாரிடம் கேட்டால்
மழை பெய்யும் மேகம்
யாரின் வேண்டுகோளுக்கு
தலையசைக்கும் மரங்கள்
காற்றடித்து.
வேண்டும் எனில் இயலுமோ
கவிதை.
ஆயினும்
ஒன்று செய்யலாம்
அடுத்து இயல்பாய்
பெய்யும் மழையை
வீசும் காற்றை
இந்தப் பக்கத்திலிருந்து தொடங்குமாறு.
நன்றி : அலமாரியில் ஓர் இராஜகிரீடம் – கவிதைகள் – தமிழ்மணவாளன் – கோமளவல்லி பதிப்பகம், 18 பத்மாவதி நகர், மாதவரம் பால் பண்ணை, சென்னை 600 051 – பக்கங்கள் : 96 – விலை : 30.00 – வெளிவந்த ஆண்டு : 2000
மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 46
கிளிக்கதை
ப கல்பனா
கிளிக்கதை கேட்டான் குழந்தை
சொன்னேன்
எங்கள் வீட்டில் முன்பொரு கிளி இருந்தது
தளிர் போல் மென்மையாய்ü
சிறகு விரித்தால்
பச்சை விசிறி போலிருக்கும்
சில நேரங்களில் பேசும்
வீடு திரும்பும்போது
தோள்களில் அமர்ந்து காதைக் கவ்வும்
தாத்தாவின் மடியிலமர்ந்து
செய்தித்தாள் ஓரத்தைக் கொத்திக் கிழிக்கும்
இடது ஆள்காட்டி விரலில் சுமந்து
வலக்கையில்
வாழைப்பழத்துடன் திரிவான் கடைக்குட்டி
எல்லோரையும் மகிழ்வித்தது
எல்லாம் கிடைத்தது அதற்கு
தங்களுடனேயே இருக்கட்டுமென்று
சிறகு கத்திரித்து
அழகு பார்ப்பர் மாதமொரு முறை
தத்தித் தத்திப் பறந்து
மரக்கிளையில் அமர்ந்த அன்று மட்டும்
அதிகமாய்க் கத்தரித்து ரசித்தனர்
தடுக்கித்தடுக்கி விழுவதை
“அச்சச்சோ….கடைசியில் என்னவாயிற்று?”
பதறினாள் குழந்தை
“எல்லாக் கிளிகளையும் போலவே
அதையும் ஒரு துரதிர்ஷ்ட நாளில்
பூனை பிடித்துக்கொண்டு போனது
பிறகென்ன நடந்ததென்று யாருக்கும் தெரியாது”
நன்றி : பார்வையிலிருந்து சொல்லுக்கு – கவிதைகள் – ப கல்பனா – காலக்குறி பதிப்பகம், 18, 2வது தெரு, அழகிரிநகர், வடபழனி, சென்னை 600 026 – பக் : 80 – விலை : ரூ.25 – வெளியான ஆண்டு : டிசம்பர் 1998
மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 45
உனக்காக என் அன்பே
ழாக் ப்ரெவெர்
தமிழில்: வெ ஸ்ரீராம்
பறவைகள் சந்தைக்குப் போனேன்
பறவைகள் வாங்கினேன்
உனக்காக
என் அன்பே
மலர்கள் சந்தைக்குப் போனேன்
மலர்கள் வாங்கினேன்
உனக்காக
என் அன்பே
இரும்புச் சாமான்கள் சந்தைக்குப் போனேன்
சங்கிலிகள் வாங்கினேன்
கனமான சங்கிலிகள்
உனக்காக
என் அன்பே
பிறகு அடிமைகள் சந்தைக்குப் போனேன்
உன்னைத் தேடினேன்
ஆனால் உன்னைக் காணவில்லை
என் அன்பே.
நன்றி : சொற்கள் – ழாக் ப்ரெவெர் – தமிழில் வெ ஸ்ரீராம் – வெளியீடு : க்ரியா – அலியான்ஸ் ஃபிரான்சேஸ், – முதல் பதிப்பு : 2000 – விற்பனைக்கு இந்தப் புத்தகம் இல்லை.
மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 44
மறு பரிசீலனை
தபசி
கொஞ்சமாகக் குடித்தால்
போதை ஏறமாட்டேன் என்கிறது.
அதிகமகாக் குடித்தால்
மறுநாள் காலை
தலையை வலிக்கிறது.
நண்பர்களோடு குடித்தால்
காசு செலவாகிறது
தனியாகக் குடித்தால்
பழக்கமாகிவிடும் என்கிறார்கள்
காதலிக்கத் தொடங்கும்போது..
கல்யாணம் கூடி வரும்போது..
பிறந்தநாள் இரவன்று..
டிரான்ஸ்ஃபர் ஆகும்போது…
எத்தனை வாய்ப்புகள்
குடிப்பதற்கு.
கள்ளும் சாராயமும்ü
செரிமானத்தைக் குறைக்குமாம்.
பீர் குடித்தால்
தொப்பை விழுமாம்.
ஜின்னுடன்
இளநீர் கலக்க வேண்டும்
என்கிறார்கள்
பிராந்தி, விஸ்கிக்கு
கோலா, பெப்ஸிக்குப் பதில்
தண்ணீர்தான் உசிதமாம்.
குடிக்கும்போது
நொறுக்குத் தீனி வேண்டாம்
என்கிறார்கள்
முறுக்கு, காராபூந்தி, பகோடா இத்யாதி..
வெங்காயம், தக்காளி, வெள்ளரிü
குடலுக்கு நல்லதாம்
எச்சரிக்கை உணர்வு
எல்லாவற்றிலும் அவசியம்தான்
எங்கு குடிக்க வேண்டும்
எப்படிக் குடிக்க வேண்டும்
யாருடன் குடிக்க வேண்டும்
என்றெல்லாம்
தீவிரமாக ஆராயும்
மனதிடம்
ஏன் குடிக்க வேண்டும்
என்று கேட்டால்
ஏதோ
மழுப்பலான விடை சொல்லித்
தப்பிக்கப் பார்க்கிறது
நன்றி : இன்னும் இந்த வாழ்வு – தபசி – கவிதைகள் – யாழ் வெளியீடு, திருக்கோவிலூர் 605 757 – பக்கங்கள் : 76 – விலை : ரூ40 – வெளியான ஆண்டு : ஆகஸ்டு 2000
மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 43
அழகியசிங்கர்
தீர்வு
சி மணி
என்ன செய்வ திந்தக் கையை
என்றேன். என்ன செய்வ தென்றால்
என்றான் சாமி. கைக்கு வேலை
என்றி ருந்தால் பிரச்னை இல்லை.
மற்ற நேரம், நடக்கும் போதும்
நிற்கும் போதும் இந்தக் கைகள்
வெறுந்தோள் முனைத்தொங் கல்.தாங் காத
உறுத்தல் வடிவத் தொல்லை
என்றேன். கையைக் காலாக் கென்றான்
நன்றி : இதுவரை – சி. மணி – கவிதைகள் – வெளியீடு : க்ரியா –
முதல் பதிப்பு : அக்டோபர் 1996 – விலை : ரூ.100
மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 42
அழகியசிங்கர்
என்ன தவம் செய்தேன்!
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)
கிண்ணங்கள், கரண்டிகள், தட்டுகள், எண்ணெய்புட்டிகள்….
இன்னும் பல துலக்கியவறே
அண்ணாந்தேன் தற்செயலாய்.
அற்புதத்திலும் அற்புதமாய்
ஊருக்கே ஒளியூட்டிக்கொண்டிருக்கும் நிலவு.
சின்னஞ்சிறு செவ்வகத்திறப்புக்கு வெளியேயிருந்து
என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தது!
எத்தனையோ காலமாய்
நான் ஏறெடுத்துப் பார்க்கவும் மறந்துபோயிருந்தது
புன்னகையில் கன்னங்குழிய
மின்னும் கண்களில் கனிந்துவழியும் அன்போடு
என்னையே பார்த்துக்கொண்டிருக்கும் இந்நேரம்
இன்னும் எத்தனையெத்தனை பேருக்குத்
தண்ணொளியால்
அருள்பாலித்துக்கொண்டிருக்கிறதோ….!
வெண்ணிலவே வெண்ணிலவே
உன் மௌனப் பண் கேட்டு என்னிரு விழிகளில்
தளும்பும் கண்ணீர்
சொல்லிடங்கா சுகம், சோகம் எல்லாவற்றிற்கும்.
நன்றி : இப்போது – கவிதைகள் – ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) – அனாமிகா ஆல்பாபெட்ஸ் – பக்கம் : 110 – விலை : ரூ.90 – வேறு விபரம் இல்லை.
மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 41
அழகியசிங்கர்
உனக்காக இவ்வுலகம்
மா தக்ஷிணாமூர்த்தி
பெண் வேண்டும்.
பெண்ணுக்குப் பண்ணிசைக்கப்
பொன் வேண்டும்.
பொன்னுக்கு மண் வேண்டும்.
மண்ணுக்கு விதை வேண்டும்.
விதை வளர நீர் வேண்டும்.
செழுமை மிக்க முலை வேண்டும்.
தேர் போன்ற அல்குல் வேண்டும்
தேரைச் செலுத்திடக் குதிரை வேண்டும்.
தேரில் புகுந்திட நான்முகன் வேண்டும்.
பாற்கடல் வேண்டும்.
தாமரை வேண்டும்.
சூர்ப்பணகை வேண்டும்.
மாற்றான் மனைவி வேண்டும்.
ஆற்றாத துயர்க்கடல் நீந்திப் பின்
மீளாத துயில் வேண்டும்.
பெண்ணே, எனக்காக நீ.
பின் உனக்காக இவ்வுலகம்.
நன்றி : திவ்யதர்சனம் – மா தக்ஷிணாமூர்த்தி – கவிதைகள் – விற்பனை : ஜெயகுமாரி ஸ்டோர்ஸ், கோர்ட் ரோடு, நாகர்கோவில் 629 001 – விலை : ரூ.7 – முதல் பதிப்பு : பிப்ரவரி 1976
மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 40
அழகியசிங்கர்
உறவு
பசப்பல் கே ராஜகோபால்
நட்டநடுக் கனவினிலே
நான் விழித்து நோக்கினால்
தொட்டுவிட்ட கையெங்கோ,
தொடுவித்த உளமெங்கோ?
பட்டப் பகலென்றால்
பற்றிய கை விடுவேனோ?
முட்ட முழு மோனத்தில்
மூழ்காமல் நிற்பேனோ?
தொட்டெழுப்பித் துடிக்க விட்டுத்
தூரநின்று சிரித்திருந்தால்
தொடுவித்த உறவதுதான்
தொடராமற் போய்விடுமோ?
எத்தனை நாளானாலும்,
எத்துயரம் பட்டாலும்,
இப்படியே காத்திருப்பேன்
ஆற்றலென்று உனக்கிருந்தால்,
ஆலவிதை பழுக்காதோ?
பார்வையென்று உனக்கிருந்தால்
பழுத்த விதை தெரியாதோ?
நன்றி : பசப்பல் கவிதைகள் – கே ராஜகோபால் – எழுத்து பிரசுரம் – முதல் பதிப்பு : 1974 – பதிப்பாளர் : எழுத்து பிரசுரம், 19-எ பிள்ளையார் கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5 – விலை : ரூ.3.50
மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 39
வாழ்த்துப்பா
ப்ரியம்
ஆடம்பரமில்லை. தோற்றத்தில் ஆணவமில்லை. உலகில்
சைக்கிளைப் போல் ஓர் எளிதான வாகனம் எதுவுமில்லை.
மிதித்தால் உடல் நலத்திற்கும் கேடில்லை. விழுந்தால் பெரிய
விபத்தேற்படுவதில்லை. சுகாதாரத்திற்கு தீங்கில்லை.
சுற்றுப்புறச் சுழலுக்கும் கேடில்லை. சைக்கிள் பழகாதவர்
இன்று எவருமில்லை. சைக்கிள்களால் புவிக்கு எந்நாளும்
தொந்தரவில்லை. வீட்டின் குஞ்ஞுட்டிகள் மிதித்துப் பழகும்போது
பார்த்து இரசிக்காத கண்களும் கண்களில்லை.
நகரசாலைகளில் சைக்கிள் செல்ல தனிவழியுண்டு. மேற்கில்
சிலவிடம் சைக்கிளைத் தவிர, மற்ற வாகனங்கள் செல்ல
தடையுண்டு. சைக்கிள் ஒரு தத்துவமாம். பூக்கள்போல
அதுவும் ஒன்றாம். எளிமையான வாழ்விற்கு எடுத்துக்காட்டாம்.
சைக்கிள்களால் வாழ்பவர் புவியில் பலகோடி. சைக்கிளைப்போல்
வாழ்பவர் புவியில் சில கோடி.
சைக்கிளை நீயும் வாழ்த்துப்பா
நன்றி : அலைகளின் மீதொரு நிழல் – கவிதைகள் – ப்ரியம் -எழில் வெளியீடு, 21 மாதவரம் நெடுஞ்சாலை வடக்கு, பெரம்பூர்,
சென்னை 11 – முதல் பதிப்பு : டிசம்பர் 2001 – விலை : ரூ.35