சில குறிப்புகள்

      அழகியசிங்கர்

                          என் நண்பர் ஒருவர், ‘யாருக்கு உங்கள் ஓட்டு?’ என்று கேட்டார். அப்போதுதான் ஞாபகம் வந்தது.  ஓட்டுப் போய் போட வேண்டும் என்பது.  நான் யாருக்கு ஓட்டுப் போடுவேன் என்பதையே நிச்சயமாக சொல்ல முடியவில்லை.  அந்த அளவிற்கு இந்த அரசியல் போரடித்து விட்டது.  இவ்வளவு பெரிய நாட்டை ஏதோ ஒரு கட்சி ஆளப் போகிறது.  அது எளிதான விஷயம் அல்ல.  ஒவ்வொரு ஐந்தாண்டுகளும் மக்களும் மாற்றி மாற்றித்தான் ஆட்சியைக் கொண்டு வருகிறார்கள்.  ஆனால் இந்த நாட்டின் பிரச்சினை அவ்வளவு எளிதில் தீர்ந்து விடாது. 


    ஜோ டி குரூஸ் என்ற எழுத்தாளர் மோடிக்குத்தான் என் ஆதரவு என்று கூறியது.  பெரிய பிரச்சினையாகி அவருடைய நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளிவர வேண்டியது நின்று விட்டது. தனிப்பட்ட முறையில் ஒருவர் ஒருவரின் கருத்தை வெளியிடுவது கூட தவறாகப் படுகிறது.  உண்மையில் ஜோ டி குரூஸ் என்ற எழுத்தாளர் சொல்வதால்தான் அப்படி ஆகிவிட்டது.  அதையே வேறு எதாவது எழுத்தாளர் சொன்னால் அது ஒரு விஷயமாகவே மாறிவிடாது. 

    நல்லகாலம் சாகித்திய அக்காதெமி பரிசு வாங்கும் சமயத்தில்
ஜோ டி குரூஸ் இந்தக் கருத்தை சொல்லாமல் விட்டுவிட்டார்.  அப்போது சொல்லியிருந்தால் அவருக்கு அந்தப் பரிசும் கிடைக்காமல் கூட போயிருக்கும். 

    எனக்கு இப்போதுதான் ஞாபகம் வருகிறது.  இந்திராகாந்தியின் எமெர்ஜென்சிக்கு ஆதரவு கொடுத்து நாவலாசிரியர் நா பார்த்தசாரதி பேசியது.  அந்த சமயத்தில் அவர் தப்பிப்பதற்கான வழியாக அது இருந்திருக்கும். 

    சமீபத்தில் ஒரு நடுத்தரப் பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டினேன்.  பாதி பத்திரிகை முழுவதும் மோடியை எதிர்த்து பலவிதமான கட்டுரைகள். 

    நடிகர் ரஜினிகாந்தை மோடி போய் சந்திக்கிறார்.  ஆனால் வெளிப்படையாக அவர் யாரை ஆதரிக்கிறார் என்பதை சொல்லக் கூட முடியாத நிலையில் அவதிப்படுகிறார்.   அவருடைய கோச்சடையான் படம் கூடிய சீக்கிரத்தில் வெளிவர உள்ளது. 

    ஜோ டி குரூஸ் ஏன் அவர் உணர்வுகளை மனதிற்குள்ளேயே வைத்துக்கொள்ள தெரியவில்லை. 
   

புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு)


                   பேப்பர்

    இது என் பேப்பர்
    ரெயிலில் செல்கையில்
    அடுத்தவர் தோள்மேல்
    அரை மேய்ந்ததில்லை
    விரைந்து விழுங்கும்
    இரவல் ஷீட் அல்ல
    கைக்குள் வைத்து
    மடித்துப் படிப்பேன்
    மேஜைமேல் போட்டு
    விரித்துப் படிப்பேன்
    பகலிலும் படிப்பேன்
    இரவிலும் படிப்பேன்
    படிக்காமல் கூட
    தூக்கி எறிவேன்
    இது என் பேப்பர்

                                                                            நீலமணி

காக்கை கூட்டம்

    ப்ரியாராஜ்                                                     

    வெளிநாட்டுப் பறவைக் கூட்டம் காண
    வேடந்தாங்கல் போவானேன்?
    எச்சம் தின்னும் கருநிற காக்கை
    கூட்டம் பார்க்க மெரினா
    கடற்கரை போகலாம்? எதையும்
    தின்னும் இந்த நூற்றாண்டின் மனிதனைவிட
    நாம் எறிந்த மிச்கம் தின்னும் காக்கை மேல்
   
    போன திங்கள் அப்பா திதியின் போது
    ஆசாரமாய்ச் சமைத்த சாத உருண்டையைக் கூவி
    அழைத்துச் சாப்பிட ஒற்றைக் காக்கை கூட வரவில்லை
    இங்கு எத்தைனைப் பேர்கள் நீத்தார் திதியைச் செய்தபின்
    இறுக்கம் போக்க கடற்கரை நோக்கி வந்தாரோ?
    இன்றுவரை இறந்த அத்தனைப் பேரும் காக்கையாய்
    சுற்றி சுற்றி வருகிறார்களா? எறிந்த மிச்சம்
    தின்னும் அத்தனை காக்காய்க் கூட்டம் பார்த்தப்பின்பு
    கொதிக்கும் மனம் கொஞ்சம் அமைதியாயிற்று…

   

புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு)

            அக்ரகாரத்துக் கதவுகள்


            எங்களூர் அக்ரகாரத்தில்
            அதிசியங்கள் ஆயிரம் உண்டு
            செம்மண் பட்டையிட்டு
            செங்காவிச் செறிவீச்சில்
            கொலுவிருக்கும் வீடுகளின்
            ஜன்னல்களுக்கோ
            கதவுகளே இல்லை –
            ஆனாலும்
            டெர்ரிகாட் பளபளப்பில்
            குதிகால் நடையுயர்த்தி
            நட்ட நடுத் தெருவில்
            நீள நடந்தால்
            கறுப்பு சிவப்பு
            பழுப்பு மாநிறப்
            பரபரப்பு முகங்கள்
            கதவுகளாய் முளைக்கும்.

                        நா. விச்வநாதன்

ஐராவதம்

ஐராவதம் பக்கங்கள்

    பிப்ரவரி 4 ஆம்தேதி ஐராவதம் எதிர்பாராதவிதமாய் மரணம் அடைந்துவிட்டார்.  ஆனால் அவர் என்னிடம் அவர் படித்தப் புத்தகங்கள் பற்றி குறிப்புகள், விமர்சனங்கள் எழுதிக் கொடுத்துள்ளார்.  அவற்றை முடிந்தவரை கொண்டு வருவதுதான் என் நோக்கம்.

    திசை காட்டி என்கிற எஸ் வைதீஸ்வரன் புத்தகம் பற்றி 22.06.2013 அன்று ஐராவதம் எழுதியதை இங்கே அப்படியே பிரசுரம் செய்கிறேன்.

(திசை காட்டி – கட்டுரைகள் – எஸ் வைதீஸ்வரன் – நிவேதிதா புத்தகப் பூங்கா – விலை ரூ.75)

    பிரெஞ்சுக்கவிஞர் ‘சார்லஸ் போதலர்’ முழு நேரக் கவிஞராக தன்னைக் காட்டிக் கொண்டவர்.  ஒரேயொரு உரைநடை நூல் எழுதினார். ஜெர்மன் கவிஞர் ‘ரெயின் மேரி ரில்கே’ இவரும் ஒரே ஒரு உரைநடை நூல் எழுதினார்.  அந்த வகையில் எஸ் வைதீஸ்வரனின் ‘திசை காட்டியை’க் குறிப்பிடலாம் என்றால் ஒரு விஷயம் உதைக்கிறது.  இவர் இதற்கு முன்னமே ‘கால் முளைத்த மனம்’ என்ற தலைப்பில் விருட்சம் வெளியீடாக ஒரு சிறுகதைத் தொகுப்பு கொண்டு வந்துள்ளார்.  அந்த நூல் முதல் பதிப்பு விற்று இரண்டாம் பதிப்பாக கிழக்குப் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.


    திசை காட்டிக்கு முன்னுரை எழுதியுள்ள இந்திராபார்த்தசாரதி, ‘இத் தொகுப்பில் கட்டுரை இருக்கிறது.  கவிதை இருக்கிறது.  கதை இருக்கிறது.  தன்வயப்பார்வையாக விமர்சனம் இருக்கிறது,’ என்று அடுக்கிக்கொண்டு போகிறார்.  ஆனால் நூலின் பதிப்பாளர்களோ இந்த நூலை கட்டுரைகள் என்ற வகையில்தான் சேர்த்துள்ளார்கள்.  இந்திரா பார்த்தசாரதி என்ற யானைக்கும் அடி சறுக்கியிருக்கிறது.  ஆலிவர் கோல்ட்ஸ்மித், சார்லஸ் லாம்ப் பதினெட்டு பத்தொன்பது நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காட்டும் இவர் ஜி கே செஸ்டர்டனையும் (இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்) அந்த வரிசையில் சேர்த்துள்ளார்.

    ‘ஒரு கொத்துப்புல்’ (பக்.43), ‘மரத்தில் வாழ்ந்தவன்’ (பக் 50) இரண்டும் சிறுகதைகள்.  கால் முளைத்த மனம் மூன்றாம் பதிப்பில் ஆசிரியர் இவற்றை தைரியமாக சேர்க்கலாம்.

    ஸஹாரா பாலைவனம் பற்றி ஐந்து பக்கக் கட்டுரை எழுதியிருக்கிறார் ஆசிரியர்.  சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி நிறையவே சிந்திக்கிறவர் இவர்.  முன்னரே தீபம் பத்திரிகையில் (மலைகள் என்ற தலைப்பில் என்று நினைக்கிறேன்) பல்லாவரம் திரிசூலம் மலைகள் பெயர்க்கப்பட்டடு கல்லுடைப்பதைப் பற்றி அருமையான கதை ஒன்றை எழுதியிருக்கிறார்.  இது கால் முளைத்த மனம் தொகுப்பில் வெளியாகி உள்ளது.  நான் இந்தக் கதையை என் நண்பரும் தெலுங்கு எழுத்தாளருமான சிரஞ்சீவி என்பவரிடம் கொடுத்து தெலுங்கில் மொழி பெயர்க்கச் செய்தேன்.  அவர் அந்த கதையை தெலுங்கில் மொழி பெயர்த்து தெலுங்கு பத்திரிகை ஒன்றில் பிரசுரம் செய்தார். 

    ஞானத் தேநீர் என்ற கவிதை (பக்கம் 76-78) என்னை வெகுவாகக் கவர்ந்தது.
        அவளுள் ஊறும்
        பிரியமோ
        மலர்ந்து பரவும்
        மனோரஞ்சிதம்.

        காமம் காலத்தின்
        மாயப்பூச்சழிந்து
        கருணை பரவுகிறது
        காதலாக…


    இந்த வரிகள் நினைவில் நிற்கக் கூடிய வரிகள்.  ஹைக்கூ பற்றிய குறிப்புகள், ELIE WIESEL,  Katznelson,   Arnost lustig   போன்ற யூத எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகள் இணையத் தளத்திலிருந்து டௌன்லோட் செய்யப்பட்டவைதானே என்று சிலர் கிண்டல் அடிக்கக் கூடும்.  ஆனால் தமிழ் வாசகனுக்கு தேவையான விஷயங்களே.

    மரணம் ஒரு கற்பிதம் என்ற கட்டுரையில் கடைசியில் ஒரு கவிதை.:

        மரத்தை விட்டுப்பிரிந்தது
        மலர்கள்
        மண்ணில் மெத்தென்று விழுகின்றன
        சாவிலிருந்து துக்கத்தை
        சத்தமில்லாமல் பிரித்தவாறு.


    விட்டுப் பிரிந்து என்ற வார்த்தைகளை நான் ஆட்சேபிக்கிறேன்.  மலர்கள் தன்னிட்சையாக தீர்மானம் போட்டா கீழே விழுகின்றன?  காற்று சலசலக்கிறது. மலர்காம்பு நெகிழ்ந்து மரத்திலிருந்து கீழே விழுகிறது.  அது எப்படி மலருக்கு சாவாகும்?  யார் கால்பட்டும் கசங்காமல் மண்ணில் கிடந்தால் சாலை பூப்பறிக்க வரும் சிறுமி அதைத் தன் பூக்குடலையில் சேர்த்து சாமிக்கு மாலையாக சூட்டலாம்.  மங்கையின் தலையில் பூச்சூடலாம்.

    வ.ரா நினைவுகள் கட்டுரையிலும் எனக்கு இரு ஆட்சேபங்கள்.  வ.ரா வைத்தீஸ்வரன் முதுகைத் தட்டிக் கொடுக்கிறார்.  அது அவ்வப்போது எனக்குள் ஒரு அற்ப சந்தோஷத்தை ஏற்படுத்துவதுண்டு.  ஏன் இந்த சந்தோஷம் ஆசிரியருக்கு அற்பமாகத் தோன்றுகிறது?  அதைவிட இன்னும் இரண்டு வரிகள்.  ஆனால் பெரியவர்கள் என்னதான் தட்டிக் கொடுத்தாலும் வாழ்க்கையில் நாம் செய்யும் காரியங்கள் நம் கைகளைத்தான் நம்பி இருக்கின்றன.  இந்த வரிகள் என்னை உசுப்பிவிட்டன.  இரண்டு சம்பவங்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.

    வருஷம் 1965.  நான் பட்டப்படிப்பு முடித்து சென்னையில் வேலையாயிருந்தேன்.  இலக்கிய ஆர்வம் உண்டு எனக்கு.  தேவன், த.நா.குமாரஸ்வாமி படித்துக் கொண்டிருந்தவன்.  கல்லூரி நாட்களில் ஆல்டாஸ் ஹக்ஸ்லி, சாமர்செட் மாம், பெர்னார்ட் ஷா என்று படிக்கத் துவங்கி க.நா,சு, செல்லப்பா வரை வந்துவிட்டேன்.  செல்லப்பாவின் எழுத்து பத்திரிகைப் பற்றி கேள்விப்பட்டு அதற்கு வருடச் சந்தாவாக ஆறு ரூபாயை எடுத்துக்கொண்டு தியாகராய நகரிலிருந்து திருவல்லிக்கேணிக்கு பதின் மூன்றாம் நம்பர் பஸ்ஸில் ஏறி பிள்ளையார் கோயில் தெரு முதல்மாடிக்கு வந்துவிட்டேன்.  என்னுடன் நண்பன் ஒருவனும் வந்தான்.  இவன் பாலிடெக்னிக் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தவன்.  கல்கி, லட்சுமி படித்துக்கொண்டிருந்தவன் லா.ச.ரா, தி ஜானகிராமன் படிக்கிற அளவிற்கு முன்னேறியிருந்தான்.  இவன் எழுத்து பத்திரிகைக்கு நான் சந்தா தரப்போகிறேன் என்று தெரிந்ததும் எழுத்து பத்திரிகையில் புகுத்திவிடலாம் என்ற அசட்டு தைரியத்தில் ஒரு ஆறுவரிக் கவிதை (கருத்து சிதறல்) தயார் பண்ணி சட்டைப் பையில் தயாராக வைத்திருந்தான்.  நான் படைப்பு எதுவும் படைக்கவில்லை.  எழுத்துக்கு  சந்தா செலுத்துவதே என் நோக்கம்.

    அது ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை பத்துமணி இருக்கும். சிசு செல்லப்பா காலையில் விளக்கெண்ணை சாப்பிட்டிருந்தார்.  எங்களை தரையில்தான் உட்கார வைத்தார்.  தானும் தரையில் எதிரே அமர்ந்தார். காலையில் விளக்கெண்ணை சாப்பிடுகிறவர்கள் பகல் ஒரு மணி வரை ஆகாரம் எதுவும் உட்கொள்ள மாட்டார்கள்.  நாலைந்து முறை பாத்ரூம் போய் வருவார்கள்.   வயிறு காலியானதும், பருப்புத் துவையல், மிளகுரசம், இட்டு சாதம் சாப்பிடுவார்கள்.  செல்லப்பா என்னிடம் சந்தாவைப் பெற்றுக்கொண்டு உற்சாகமாகவே பேசினார்.  ஒரு தருணத்தில் என் நண்பன் அவன் கவிதையை நீட்டினான்.  அவர் அதைப் படித்துப் பார்க்க முற்படவில்லை.  பக்கத்தில் காகிதங்களோடு வைத்தார். 

    திடீரென்று எழுந்து தலைக்குப் பின்னாலிருந்த அலமாரியிலிருந்து பிரெஞ்சு நாவலாசிரியர் மார்வெல் ப்ரூஸ்ட் நாவலிலிருந்து ஓரிரண்டு பத்திகள் படித்தார்.  பிறகு அமெரிக்க நூலகத்திலிருந்து வாங்கி வந்திருந்த ஹென்றி ஜேம்ஸ் விமர்சனக் கட்டுரையை உரக்கப் படித்தார்.  இதுபோல் எல்லாம் தமிழில் எழுத வேண்டுமென்று அறிவுரை வழங்கினார்.  நாங்கள் விடைபெற்று போகும்போது கவனமாக என் நண்பன் கொடுத்த கவிதை காகிதத்தை அவன் கையில் திணித்தார்.  என் நண்பனுக்கு அவமானம்தான்.  வெளியே வந்த நான் சமாதானமாக ஒரு வார்த்தை சொன்னேன்.  ‘நண்பனே நீயும் உன் சந்தாவாக ஒரு ஆறு ரூபாயைக் கொடுத்து இந்தக் கவிதையைக் கொடுத்திருந்தால் அது அச்சேறியிருக்கும்.’
    காலச்சக்கரம் சுழல்கிறது.  வருடம் 1975.  என் தம்பியும், அவன் நண்பர்களுமாக பிரஞ்ஞை என்ற பத்திரிகையை ஆரம்பிக்கிறார்கள்.  கசடதபற, நடை, இதன் முன்னோடிகள்.  என் தம்பி கல்கத்தாவிலிருந்தான்.  பிரக்ஞை நண்பர்கள் என்னை விட ஐந்து ஆறு வயது இளையவர்கள்.  சுயலாபமோ, சுய நோக்கமோ அற்றவர்கள்.  ஆனால் இவர்களைப் பற்றி என் சக எழுத்தாளர் ஒருவர்அப்பொழுது சொன்ன வார்த்தைகள் இப்பொழுதும் என் நெஞ்சை உறுத்துகின்றன.  அவர் திமுக அனுதாபி.  பிரமாணத் துவேஷி. பிரக்ஞை நண்பர்கள் பெரும்பாலும் பிராமண இளைஞர்கள்.  அவர் சொன்னார் : ‘இவன் எல்லாம் படித்து பாஸ் பண்ணிவிட்டு நல்ல உத்தியோகங்களில் இருக்கிறார்கள்.  குடி, குட்டி, குதிரைப் பந்தயம், சீட்டாட்டம் போன்ற வழிகளில் பணம் செலவழிக்க பயப்படுகிறவர்கள்.  இலக்கியம் பண்ணுகிறார்களாம்.  இலக்கியம்,’ அந்த வார்த்தையின் அர்த்தம், ஆழம், விஷம், வீர்யம் இப்பொழுதும் எனக்கு உறுத்துகிறது.

    நான் பிரக்ஞை ஆபீஸ் போனேன்.  என் நண்பன் உடன் வந்தான்.  இப்பொழுது என் இலக்கிய அந்தஸ்து உயர்ந்திருந்தது.  நான் கசடதபறவில் பங்கு பெற்றவன்.  தீபம், கணையாழி பத்திரிகைகளில் என் கதைகள் பிரசுரமாகி இருந்தன.  பிரக்ஞை ஆபீஸ் போனபோது நான் சந்தா எடுத்துப் போகவில்லை.  ஆனால் என் நண்பனோ ஏழெட்டு கவிதைகள் (நாலுவரி, ஆறு வரி, எட்டுவரி, பத்து வரிகள்) எழுதி தன் சட்டைப் பையில் வைத்திருந்தான்.  பிரக்ஞை நண்பர்கள் என்னை உபகுருவாக ஏற்றுக்கொண்டார்கள்.  நானும் அவர்களுக்கு அருளாசி வழங்கினேன். 

    என் நண்பன் கவிதைகளை நீட்டினான்.  பிரக்ஞைக்கு ஆசிரியர் என்று ஒரு பெயர் போடப்பட்டிருந்தாலும் அது நாலைந்து பேரின் கூட்டு முயற்சி என்பதால் நண்பனின் கவிதைகளை பிரசுரிப்பீர்களா இல்லையா என்று நாங்கள் கேட்கவில்லை.  அடுத்தடுத்த பிரக்ஞை இதழ்களில் என் நண்பன் கொடுத்த கவிதைகள் அத்தனையும் பிரசுரமாகின.  அவன் உடனே நாற்பத்தெட்டு கவிதைகளோ அறுபத்து நாலு கவிதைகளோ எழுதி அதை அறுபது பக்க நூலாக அச்சிட்டு தமிழ் வாசகர்களை குளிர்விக்கவில்லை.  பிரக்ஞையில் தன் கவிதைகள் வெளிவந்த மகிழ்ச்சியோடு அவன் கவிதைத் தயாரிப்பு முடிவுற்றது.

    இப்பவும் ஜெயமோகன், இரா முருகனை  ரசிக்கிற வாசகனாக அவன் தன்னை உருமாற்றிக் கொண்டுள்ளான். 

    எஸ் வைதீஸ்வரனின் வ ரா கட்டுரையில் எழுதிய கடைசி வரிகளை நினைவுப் படுத்துகிறேன்.  வாழ்க்கையில் நாம் செய்யும் காரியங்கள் நம் கைகளைத்தான் நம்பி இருக்கின்றன.  எழுத்து செல்லப்பா தன் கவிதையை நிராகரித்ததால் என் நண்பன் பத்து ஆண்டுகள் கவிதை முயற்சியில் ஈடுபடவில்லை.  பிரக்ஞை அவனுடைய ஏழெட்டுக் கவிதைகளை பிரசுரித்து மகிழ்ந்தும் அவனால் தொடர்ந்து கவிதை முயற்சியில் ஈடுபட முடியவில்லை. 
                                                                                                                                        (22.06.2013)
   
   

காலத்தின் கட்டணம்

அசோகமித்திரன்
 
ஐராவதம் என்ற ஆர். சுவாமிநாதன் அவர் ‘கோணல்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய
முன்னுரையிலிருந்து எனக்கு அறிமுகமானார். அவரை ஒரு பையன் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் முன்னுரையில் நல்ல
மனமுதிர்ச்சியை உணர முடிந்தது. அப்போது அவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு சென்னை
தியாகராயநகர் நடேசன் தெருவில் வசித்துவந்தார். ரிசர்வ் வங்கியில் வேலை கிடைத்தது. ஒரு
கட்டத்தில் அவருக்கு வங்கித் தொகுப்பு குடியிருப்பில் வீடு கிடைத்தது. அது வரையில் நாங்கள் வாரம் இருமுறை மூன்று முறை சந்திப்போம். அவர் என்னை விட குறைந்தது பதினைந்து ஆண்டுகள் சின்னவர். ஆனால் அவர் எனக்கு எது எது படிக்க வேண்டும், எந்தத்
திரைப்படம் பார்க்கவேண்டும் என்று யோசனை கூறுவார். அவர்
தேர்ந்தெடுத்துக் கூறிய எதுவும் தவறான தேர்வாக இருக்காது. க.நா.சு டில்லி விட்டு மீண்டும் சென்னை வந்த போது
முதலில் அவரை ஐராவதம் வீட்டில்தான் தங்க வைத்தது.  சில நாட்கள் இன்னொரு நண்பர் வீட்டில். மயிலை டி.எஸ்.வி கோவில்
தெருவில் இரு அறைகள் கிடைத்தவுடன் அங்கு சுமார் பத்து ஆண்டுகள் இருந்தார். அதோடு அவர் வாழ்க்கை முடிந்தது.
ஐராவதத்தின் 
படைப்புகளில் உள்ள கூர்மையும் தெளிவும் அவர் பிறரிடம் பழகும் முறையிலும்
இருந்தது. என்ன கருத்து
வேறுபாடு இருந்தாலும் நட்பில் எந்த பாதிப்பும் இருக்காது. உலகம்
கொண்டாடத் துவங்கப் பத்து ஆண்டுகள் முன்னரே அவர் லத்தீன் அமெரிக்கப் படைப்புகள்
பற்றி அறிந்திருந்தார். திடீரென்று ஒரு நாள், “ஆனந்த் கொட்டகையில் ஓடும் படத்தைப் பார்” என்றார்.
அப்படம் பற்றி உலக மதிப்பு வர ஆறு மாதங்கள் ஆயின. அது ‘பிளோ அப்” என்ற படம்.
எனக்கு ஆச்சரியமாக இருந்த்து. எவ்வளவு
துல்லியமான ரசனை! அவர் சிறுகதைகளுடன் கவிதைகளும் எழுதினார்.
எனக்குக் கவிதையில் அதிக ஈடுபாடு இல்லாதபோதிலும் ஐராவதம் கவிதை
எழுதத் தேர்ந்தெடுத்த  விஷயங்கள் பற்றி வியந்திருக்கிறேன். உஷா ஐயர் 1970 அளவில் ஒரு
நவீன பாணியில் பாடத்தொடங்கினார். இன்று அவர் உலகப் புகழ் பெற்ற
பாடகர். ஆனால் 1970லேயே ஐராவதம் உஷா ஐயர் பற்றிக் கவிதை எழுதினார்! கலைப் போக்குகளை முன்னோக்கிப்
பார்க்கும் ஆற்றல்
அவருக்கு இருந்தது. அவருக்குக் கலைஞன் என்பவன் ஏதோ தனிப்பிறவி என்று ஆராதனை செய்யும் போக்கு
நகைப்பை எழுப்பும். அவருடைய  நகைப்பு என்பது ஒரு
புன்சிரிப்புத்தான். அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு அப்புன்சிரிப்பின் எண்ணற்ற சாயல்கள் கொண்ட்து
என்று தெரியும்.
அவருடைய மறைவு அகாலமானது என்றாலும் அநாயாசமானது. பேசிக் கொண்டிருக்கும்போதே போய்
விட்டார். புதன் 5-2-2014.

 சென்னை, 10 – 2 – 2014                                       
அசோகமித்திரன்

பால்ய வனம்

  

 

மிருணா      

பால்கனியில் இன்று பார்த்த நீல வானம்/
நினைவு படுத்துகிறது பால்யத்தை./
தும்பைப் பூக்களில் தேன் அருந்தும்/
மூடிய இமைகளுள்ள அந்த பருவத்திற்கு/
வாய்த் தண்ணீருள் மூழ்கிய/
கனகாம்பர விதைகள் வெடிக்கும்/
துடி துடிக்கும் இதயம்./
தட்டான்கள் ரீங்கரிக்க/
வண்ணத்துப்பூச்சி பிடிக்க/
ஓடும் பசிய வெளியில்/
பதிந்திடும் பாதச் சுவடுகள்/
நூறு வண்ணத்துப் பூச்சிகள்./
பின் அயர்ந்து தூங்குகையில்/
வயலெட், மஞ்சள் டிசம்பர் பூக்களைப் பற்றிய/
சிறிய அவாக்களும்/
வெள்ளை ரோஜா மரம் வளர்க்கும்/

பெரும் வனக் கனாக்களும்./
முட்களை மறைத்தபடி/
நுண்ணிய வலைத்துகளாய் விரியும்/
முற்றிய வெயில் மஞ்சள் கண்ணியில்/
சிக்காமல் ஒரு சிறுமி/
பால்யத்தின்/
சிறு வெண்சிமிழ் பூக்களை நுகர்ந்த படி/
அதன் எலுமிச்சை வாசனை பரவ/

பச்சை வண்ண சீப்புக் காயை/
தலையில் தேய்த்தபடி/
ஓடிக் கொண்டே இருக்கிறாள்/
எதன் பின்னும் அல்லாமல்./

                      

ஓசிப்மெண்டல்ஷ்டாமின் கவிதை


  கவிதை எண் 17

 குளம் எங்கே அசுத்தமாகவும் கலங்கலாகவும் இருக்கிறதோ
 அங்கே நான் வளர்ந்தேன் ஒரு சலசலக்கும் நாணலாக
 மேலும் ஒரு தளர்ந்த, மென்மையான பேராசையுடன்
 சுவாசிக்கிறேன் எனக்கு மறுக்கப்பட்டிருக்கிற ஒரு வாழ்வினை

 மண்ணினுள் ஒரு குளிர்ந்த வளைக்குள் நான் கீழே அமிழ்ந்து
 போவதை
 எவரும் பார்ப்பதில்லை
 இலையுதிர் காலத்தின் சிறிய இடைவெளியில்
 ஒரு சரசரப்பு என்னை வரவேற்கும் பொழுதில்

 நான் எனது குரூர வலியில் கொண்டாடுகிறேன்
 மேலும் என் வாழ்வில், அது கனவு போலிருக்கிறது
 ரகசியமாக நான் எல்லா மனிதர் மீதும் பொறாமைப்படுகிறேன்
 மேலும் ரகசியமாக அவர்கள் அனைவரையும் நேசிக்கிறேன்

     தமிழில் : பிரம்மராஜன்

சில குறிப்புகள்


    அழகியசிங்கர்

    நேற்று காலையில் வழக்கம்போல் (சமீப காலமாய்) நடை பயிற்சி செய்துவிட்டு ராஜாமணி வீட்டிற்குச் சென்றேன்.  என்னைப் பார்த்தவுடன் ராஜாமணி, üதி.க.சி இறந்துவிட்டார்,ý என்ற செய்தியைச் சொன்னார். 


    எனக்கு தி.க.சியைப் பற்றிய எண்ணம் ஓடிற்று.  காலையில் இந்தச் செய்தியைச் சொன்ன ராஜாமணியிடம் கோபம்.  பின் நான் வீட்டிற்கு வந்து, தினமணியைப் பார்த்தபோது அதில் செய்தி வந்திருந்தது.

    எனக்கு தி.க.சியை 20 ஆண்டுகளுக்கு மேல் தெரியும்.  நவீன விருட்சம் ஆரம்ப காலத்திலிருந்து அவர் என் நண்பர்.  வல்லிக்கண்ணனும், தி.க.சியும் நவீன விருட்சத்திற்குக் கடிதம் எழுதாமல் இருக்க மாட்டார்கள்.  நான் முதல் தடவை திகசியை அசோக மித்திரன் வீட்டில்தான் சந்தித்தேன். 

    எந்தப் பத்திரிகையும், புத்தகத்தையும் விடாமல் படிப்பார்.  படித்தவுடன் ஒரு கார்டில் அழகான கையெழுத்தில் தன் அபிப்பிராயத்தை எழுதாமல் இருக்க மாட்டார். வல்லிக்கண்ணனும் அப்படித்தான்.

    இருவர் கையெழுத்தும் அழகாக இருக்கும்.  சிறுபத்திரிகையின் நண்பர்கள் இருவரும்.  பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்.  எனக்கு அவர்களிடமிருந்து கடிதங்கள் வந்தபிறகுதான் நிம்மதியாக இருக்கும். ஏனென்றால் நான் அனுப்பிய பத்திரிகை போய் சேர்ந்ததற்கான அறிகுறி அவர்களிடமிருந்து வரும் கடிதங்கள்தான்.

    வெங்கட் சாமிநாதன் வல்லிக்கண்ணனை டெச்பேட்ச் க்ளார்க் என்று கிண்டல் செய்திருக்கிறார்.  ஆனால் எனக்கு அப்படித் தோன்றாது.  இன்று ஒருவரைப் பாராட்டுவது என்பது எளிதில் நடக்கக் கூடிய விஷயமாகத் தோன்றுவதில்லை.  அதை முழு மூச்சுடன் செய்பவர்கள் தி.க.சியும் வலலிக்கண்ணனும்தான்.

    சென்னையில் நான் குடியிருந்த தெருவில் தி.க.சியும் அவர் புதல்வர் வண்ணதாசன் வீட்டில் தங்கியிருந்தார்.  நான் அவரைப் பார்க்கச் செல்வேன்.  வண்ணதாசனிடம் பேசுவதை விட தி.க.சியிடம் பேசிவிட்டுச் சென்று விடுவேன்.  வண்ணதாசன் நண்பர்களான வண்ணநிலவன். விக்கிரமாதித்யன் என்னிடம் நன்றாகப் பேசுவார்கள்.  வண்ணதாசன் அப்படி அல்ல. 

    வண்ணதாசன் வீட்டிற்குச் சென்று திகசியிடம் மட்டும்தான் பேசுவேன்.  என் 94வது இதழ் விருட்சத்திற்குக்கூட அவர் கடிதம் எழுதியிருந்தார். 

    05.08.2013 அன்று நவீன விருட்சம் 93வது இதழைப் படித்துவிட்டு எழுதிய கடிதம்.

    அன்பு நண்பர் அழகியசிங்கர் அவர்களுக்கு,

    வணக்கம்.  நவீன விருட்சம் 93வது இதழ் பார்த்தேன்.  மிக்க நன்றி.  1988 ஜøலையில் தோன்றிய நவீன விருட்சம்.  25ஆம் ஆண்டு நிறைவைத் தாண்டி, 26ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இது எனக்குபெரும் மகிழ்வும், மனநிறைவும் தந்துள்ளது.  தங்கள் நவீன இலக்கியத் தொண்டு போற்றத்தக்கது; அது மேன் மேலும் தொடர்வதாக.  என் நெஞ்சம் நிறை நல்வாழ்த்துக்கள்.  தமிழில் தற்காலத் தோரணை – பாரதியின் கவிதை எனும் சி கனகசபாபதியின் கட்டுரையை (மே 1965இல் எழுத்து இதழில் வெளிவந்தது).  இப்போது மீண்டும் படித்தேன்.  இன்று புதுப்பார்வையில் இலக்கிய ரசனையை வளர்க்கும் பணியில் நாம் அனைவரும் ஈடுபடுவோமாக.

    என்றும் அன்புடன்,
    தி.க.சி.

    அவர் இனி இல்லை என்பதை நினைக்க வருத்தமாக உள்ளது. அவரை இழந்து நிற்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
   

மாதங்கள் கடந்து போதல்


ந.பெரியசாமி

மேசையின்மேல் இரண்டு
கண்ணாடி கோப்பைகள்
ஒன்றில் பொவண்டாவையும்
மற்றதில் பியரும் நிரப்பினீர்கள்
புன்னகைத்து அருந்தத் துவங்கினீர்கள்
எப்படியோ இம்மாதத்தை கடந்தாயிற்று
நிம்மதி பெருமூச்சொன்றை விட்டீர்கள்
அசட்டையான சிரிப்பை உதிர்த்து
எனக்கு இன்னும் கடக்கவில்லை
தேதி ஐந்தாகிவிட்டதே
மறுபடியும் நகைத்து
அதுகூடவா தெரியாது
எனக்கு முடிவடையவில்லை
சம்பளத் தேதியை சொல்கிறீர்களா
இல்லை எனக்கும் ஒன்றாம் தேதிதான்
புரியவில்லையே வேறென்ன
குழப்பத்தோடு கடைசி துளியை வழியவிட்டீர்கள்
இம்முறை கொஞ்சம் சப்தமாக சிரித்து
உங்களால் புரிந்துகொள்ள இயலாதுதான்
மாதங்களை கடப்பது
உங்களுக்கு தேதிகள் தீர்மானிக்கும்
எங்களுக்கோ எங்களின்
உதிரப்போக்கு.