Category: Uncategorized
கிராமீயப் பாடல்கள்
தொகுப்பாசிரியர் : வானமாமலை
திருவல்லிக்கேணி செல்லும்போதெல்லாம் கோஷ் ஆஸ்பத்ரிக்கு எதிரில் உள்ள பிளாட்பார நடைபாதைக் கடைகளில் வாரிக் குவித்திருக்கும் புத்தகக் குவியல்களைப் பார்வையிடாமல் இருக்க மாட்டேன். சில ஆண்டுகளுக்கு முன்னால் அந்தக் கடைகளில் ஒன்றில் ஒரு அபூர்வமான புத்தகம் கிடைத்தது. கிட்டத்தட்ட மோசமான நிலையில்தான் இந்தப் புத்தகம் கிடைத்தது. புத்தகம் உள்ளே கரையான் அடையாளம் பொட்டு பொட்டாக இருந்தது. 1964 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம் இது. கிராமீயப் பாடல்கள் என்ற தலைப்பில் இப்புத்தகம் உள்ளது. இப் புத்தகத்தைத் தொகுத்தவர் நா. வானமாமலை. எஸ் எஸ் போத்தையா, எஸ் எம் கார்க்கி, பி எம் ராஜவேலு, குமாரி பி சொர்ணம், கவிஞர் எஸ் எஸ் சடையப்பன், கு சின்னப்ப பாரதி, வாழப்பாடி சந்திரன் என்று பலர் தொகுத்த கிராமீய்பாடல்களை மொத்தமாக தொகுத்திருக்கிறார் நா வானமாமலை.
இதுமாதிரி புத்தகம் திரும்பவும் வந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. எந்தப் பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது என்பதும் தெரியவில்லை. இதில் உள்ள எல்லா கிராமீயப் பாடல்களையும் தினமும் ஒன்றாக அடித்து முகநூலில் பதிவு செய்யலாமென்று நினைக்கிறேன். முதல் பாடலை ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இதோ இரண்டாவது பாடலை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். பிள்ளையார் பூசை
உழவர்கள், ஏர்கட்டி உழுமுன் சாணத்தைப் பிடித்து வைத்து அதன் உச்சியில் அருகம் புல்லைச் செருகி வைத்து அதனைப் பிள்ளையாராக வழிபடுவார்கள். அவருக்குப் பூவும், சந்தனமும் சாத்துவார்கள். ஒரு வாழையிலையில் தேங்காயும், விதை நெல்லும் பழமும் படைப்பார்கள். விநாயகர் பூமியின் சாரமாதலால், இப்பொழுது படைத்ததைப் போன்று பதின்மடங்கு நிலததில் விளைய அருள் சுரக்குமாறு அவரிடம் வேண்டுவார்கள். இது கூட்டு வணக்கம். விநாயகர் விவசாயி கையில் பொருளிருந்தால் பூசை பெறுவார். இல்லையேல் அவர்களைப் போல் பட்டினி கிடப்பார். இவர் சிவனையும், விஷ்ணுவையும், போலப் பணக்காரத் தெய்வமல்ல. இப்பாட்டில் பிள்ளையார் முக்கண்ணனார் மகன் என அழைக்கப்படுகிறார்.
காளையே ஏறு….
முந்தி முந்தி வினாயகனே
முக்கண்ணனார் தன் மகனே
கந்தருக்கு முன் பிறந்த
காளைக் கணபதியே – (காளையே)
வேலருக்கு முன் பிறந்த
விக்கினரே முன் நடவாய்,
ஊருக்கு மேற்காண்டே
ஒசந்த தொரு வெப்பாலை.
வெப்பாலை மரத்தடியில்
சப்பாணி பிள்ளையாராம்.
சப்பாணி பிளளையார்க்கு,
என்ன என்ன ஒப்பதமாம்
நீரு முத்தும் தேங்காயாம்,
நிமித்தியமாம் பிள்ளையார்க்கு,
கொத்தோடு தேங்காயாம்
குலைநிறைய வாழைப்பழம்
இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
சப்பாணி பிள்ளையார்க்கு – (காளையே)
வண்டு மொகராத – ஒரு
வண்ண லட்சம் பூ வெடுத்து
தும்மி மொகராத
தொட்டு லட்சம் பூ வெடுத்து
எறும்பு மொகராத
எண்ணி லட்சம் பூவெடுத்து
பாம்பு மொகராத
பத்து லட்சம் பூவெடுத்து
வாரி வந்த பூவையெல்லாம்
வலப்புறமாய்க் கொட்டி வச்சேன்
கொண்டு வந்த பூவையெல்லாம்
கோபுரமா கொட்டி வச்சேன்
குளத்திலே ஸ்நானம் பண்ணி
கோலு போல நாமமிட்டு
ஆத்துல ஸ்நானம் பண்ணி
அருகு போல நாமமிட்டு
பொழுதேறிப் போகுதிண்ணு
வெள்ளி யொறைச்சி நாமமிட்டு
இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
சப்பாணிப பிள்ளையார்க்கு
வட்டார வழக்கு:
மேற்காண்டே – மேற்கில்
வெப்பாலை – வேம்பு
நிமித்தியம் – நைவேத்தியம்
மொகராத – முகராத
ஒரைச்சி – உரைத்து
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன் இடம் : சேலம் மாவட்டம்
பூவும் பழமும் பொங்கலும் படைப்பது தமிழர் பூசனை முறை. தீ வளர்த்து ஓமம் வளர்த்து அவற்றில் நிவேதனம் படைப்பது வேதமுறை. ஆகமங்களும் வேத முறைகளும் கலந்து விட்டன. ஆனால் தமிழ் உழவர் பெருமக்கள் பண்டைப் பூசனை முறையை மறக்கவில்லை.
ரூ. 5000 பரிசு வேண்டாமா?
கசடதபற ஜøலை 1971 – 12வது இதழ்
நான் குளம்
ஆ சந்திரபோஸ்
நான் நிரம்பி விடுவேன்
நேற்றுவரை….
குடிக்க நீர் கொடுத்தேன்,
குளித்துத் துவைத்தனர்.
குதித்து விளையாடிக்கூட
என் மீது படகு விட்டனர்.
வயிறு புடைக்கத் தின்று
ஏப்பம் விட
கொக்குகளுக்கு மீன் கொடுத்தேனே…..
மீனுக்கு என் ‘பாசம்’
இரையாக வில்லையா?
ஏன்?
இன்று கூட என்மேல்
படிந்து கிடக்கும் அழுக்கை
உரமாக்குகிறீர்களே…
நான் என்ன கெட்டுவிட்டேன்…?
நாளை பெய்யும் மழையில்
நான் நிரம்பி விடுவேன்.
புத்தக விமர்சனம் 12
லய ஞான குபேர பூபதி யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தியைப் பற்றிய ஓர் ஆவணப்படம்…..
அம்ஷன்குமாரின் ஒரு ஆவணப்படம் யாழ்ப்பாணம் தெட்சணமூர்த்தியைப் பற்றியது.
கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்குமேல் இந்த ஆவணப்படத்தைத தயாரித்துள்ளார்.
1933ஆம் ஆண்டு பிறந்த தவில் வித்வான் தெட்சணாமூர்த்தி 42வது வயதில் அதாவது
1975ஆம் ஆண்டு இறந்துவிட்டார். தவிலில் அவருடைய சாதனையை விளக்குவதே இந்த
ஆவணப்படம். தவிலில் சாதனைப் படைத்த தெட்சணாமூர்த்தியை எட்டாவது உலக
அதிசயம் என்று குறிப்பிடுகிறார்கள் இசை மேதைகள்.
எனக்கு இசையைப் பற்றி
ரொம்பவும் தெரியாது. நான் ஒரு பாமர ரசிகன். இசையை வெறுப்பவன் கிடையாது.
ஆனால் இசைத் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப் படத்தை இரண்டு மணி
நேரம் விடாமல் பார்த்தேன். கொஞ்சங்கூட அசையாமல் வைத்தக் கண் ணை எடுக்காமல்
இந்த ஆவணப்படத்தை ரசித்தேன்.
பொதுவாக பெரும்பாலான ஆவணப்படங்களை முழுவதும் பார்த்து ரசிக்க முடியாது. பாதியிலேயே பார்க்க வேண்டாமென்று தோன்றும்.
இந்த ஆவணப்படத்திற்கான வெளியீட்டுக் கூட்டம் சமீபத்தில் டாக் சென்டரில்
நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்குச் சென்று யாழ்ப்பாணம்
தெட்சணாமூர்ததியின் ஆவணப்படமும், அவர் இசை எலலாவற்றையும் தொகுத்த இசைத்
தொகுப்பையும். தெட்டசாணாமுர்த்தி : எட்டாவது உலக அதிசயம் என்ற அவரைப்
பற்றிய புத்தகத்தையும் வாங்கிக கொண்டேன்.
இதற்குமுன் அம்ஷண்குமாரின் 3
ஆவணப்படங்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு படம் பாரதியாரைப் பற்றியது.
இரண்டாவது படம் அசோகமித்திரனைக் குறித்து. மூன்றாவது படம். மணக்கால்
ரங்கராஜன் என்ற இசை மேதையைப் பற்றி. சர் சி வி ராமனைப் பற்றிய
ஆவணப்படத்தையும் எடுத்துள்ளார்.
அம்ஷன் குமாரின் ஆவணப்படங்கள்
ஒவ்வொன்றும் வித்தியாசமானது. அவரது ஆவணப்படத்தின் பொதுவான அம்சம் என்ன?
எல்லாவற்றையும் ஒரு கதை போல் சொல்கிறார். ஒரு முறை பார்த்தாலும் இன்னொரு
முறை பார்க்க வேண்டுமென்று தூண்டும்படி எடுத்திருக்கிறார். ஒரு சினிமாப்
படத்தைப் பார்க்கிற ஜோடனை அவர் ஆவணப்படத்தைப் பார்க்கும்போது தெரிகிறது.
அம்ஷன்குமாரின் ஆவணப்படங்களை நான் சேகரிக்கத் தொடங்கியபோது, இன்னும் பல
ஆவணப்படங்களைத் தேடத் தொடஙகினேன். புதுமைப்பித்தன் பற்றிய ஆவணப்படம்,
சமீபத்தில் ஞானக்கூத்தன் ஆவணப்படத்தையெல்லாம் சேகரித்து வைத்திருக்கிறேன்.
நான் ஒரு ஆவணப்படம் சேகரிப்பாளனாக மாறி விட்டேன். அதற்கு அடிப்படையான
காரணம் அம்ஷன் குமாரின் ஆவணப்படங்கள்தான்.
தவில் வித்வான்
தெட்சணாமூர்த்தியின் இந்த ஆவணப் படத்தைத் தயாரிக்க எந்தவிதமான தரவுகளும்
இல்லை. வெறும் தெட்சணாமூர்த்தியின் மூன்று புகைப் படங்களும், அவரைப்
பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள்தான் இருந்தன.
தெட்சணாமூர்த்தி வாசித்த
தவில் கச்சேரிகளை பல இடங்களிலிருந்து சேர்த்து தொகுக்க முடிந்தது. தனி
ஆவர்த்தனமாக அவர் வாசித்ததும், மற்றவர்களுடன் சேர்ந்ததையும் ஓரளவு தொகுக்க
முடிந்தது. இதுமாதிரி குறைவான தரவுகளை வைத்துக்கொண்டு நிறைவான ஒரு
ஆவணப்படத்தை அம்ஷன்குமார் இயற்றி உள்ளார்.
தெட்சணாமூர்த்தியுடன் பழகிய
நண்பர்களும், அவருடன் கச்சேரி நடத்திய நண்பர்களையும், பின் அவர்
குடும்பத்தைச் சேர்ந்த அவருடைய பெண்கள், பையன்கள், தெட்சணாமூர்த்தியின்
சகோதரிகளை வைத்து ஒரு அருமையான படத்தை கதை மாதிரி விவரித்துச்
சொல்லியிருக்கிறார். மற்றவர்களின் கூற்றுகளை வைத்து தெட்சாணமூர்த்தியின்
உருவத்தை உருவாக்குகிறார்.
பொதுவாக ஒரு ஆவணப்படத்தின் நோக்கம் என்ன?
திறமையான மனிதர்களைக் கண்டு பிடித்து அவர்களின் திறமைகளை
வெளிப்படுத்துவதுதான். இப்படி ஆவணப் படுத்துவது எதிர்காலத்தில்
உள்ளவர்களுக்கு அவர்களைப் பற்றி ஓரளவாவது தெரிந்து கொள்ள உதவியாக
இருக்கும். அம்ஷன்குமார் போல் பலர் இப்போது இதை செய்துகொண்டு
வருகிறார்கள். யாழ்பாணம் தெட்சணாமூர்த்தியை சரியான நேரத்தில்
கண்டுபிடித்து ஆவணப்படுத்தியிருக்கிறார். இன்னும் போகப் போக இதுமாதிரி
தகவல்கள்கூட கிடைக்காமல் போகக் கூடிய வாய்ப்பு உள்ளது.
நம்மிடையே
உயிரோடு இருக்கும் எழுத்தாளர்களும், மறைந்து போன எழுத்தாளர்களும் உள்ளனர்.
அவர்களைப் பற்றியெல்லாம் ஆவணப்படங்கள் எடுக்க வேண்டும்.
தெட்சணாமூர்த்தி எப்படி நடப்பார் எப்படி தவில் வாசிப்பார் எப்படி உடை
உடுத்திக்கொள்வார் என்பதெல்லாம் அவருடைய புதல்வர் மூலம் படம்
பிடித்துள்ளார் அம்ஷன்குமார். மிகச் சிறிய வயதிலேயே மரணம் அடைந்து
விட்டார் தெட்சணாமூர்த்தி. உலக அளவில் சிறந்த தவில் வித்வானின்
தெட்சணாமூரத்தியின் மரணம் கூட மர்மம் நிறைந்தது. அவர் கச்சேரிகளுக்குச்
செல்வதெல்லாம் விட்டுவிட்டு கடைசி இரண்டு ஆண்டுகள் யாரையும் பார்க்காமல்
இருட்டில் தனியாக ஒரு இடத்தில் இருந்து வந்திருக்கிறார். கடைசிக்காலத்தில்
பார்க்க வந்த ஒரு சில நண்பர்களையும் அவர் அதிகமாகப் பேசாமல்
அனுப்பியிருக்கிறார்.
இபபடி திறமை உள்ள தவில் வித்வானுக்கு தெய்வக்
கடாட்சம் நிச்சயமாக இருக்க வேண்டும். இதைக் கூட அவருடன் நெருங்கிய
பழகியவர்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக இனுவேல் கே ஆர்
புண்ணியமூர்த்தி மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆக இந்த ஆவணப்படத்தைப்
பார்க்கும்போது இவ்வளவு சுவாரசியமான ஒரு நிஜக் கதையைப் பார்க்கிற திருப்தி
ஏற்படுகிறது.
ஆயிரம் கூட்டம் நடத்திய அபூர்வ சிந்தாமணி
அழகியசிங்கர்
ஒரு சினிமாத் தலைப்பை இப்படி மாற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது. கூட்டம் நடத்துவது எப்படி என்பது தெரியாமல்தான் நான் இதுவரை கூட்டம் நடத்தி இருக்கிறேன். எத்தனைக் கூட்டங்கள் என்று நினைக்கிறீர்கள்? கிட்டத்தட்ட 100 கூட்டங்களுக்கு மேல் இருக்கும். பல நோட்டுப் புத்தகங்களில் யார் யார் வருகைப் புரிந்துள்ளார்கள் என்றெல்லாம் குறித்து வைத்திருக்கிறேன். நவீன விருட்சம் என்ற பத்திரிகையை 28 ஆண்டுகளாக நடத்திக்கொண்டு வரும்போது கூட்டத்தையும் நடத்திக்கொண்டு வந்தேன். பத்திரிகைக்கு ஆகும் செலவை விட கூட்டத்திற்கு ஆகும் செலவு மிக மிக குறைவாகவே ஆகும்.
கூட்டம் நடத்த என்னைப் புகுத்தியவர் என் நண்பர் ஒருவர். அவர் தயாரித்த ஒரு பொருளுக்கு விளம்பரம் தரும் நோக்கத்தில் என்னை இலக்கியக் கூட்டம் நடத்தத் தூண்டியவர். இரண்டு மூன்று கூட்டங்களுக்குப் பிறகு அவர் ஆதரவு எனக்குப் போய்விட்டது. பின் நான் மட்டும் கூட்டம் நடத்தினேன். என் கூட்டம் தபால் கார்டு கூட்டம். தபால் கார்டில் எல்லோருக்கும் தகவல் அனுப்புவேன். அதைப் பார்த்து பலர் கூட்டத்திற்கு வருவார்கள். ஆனால் கூட்டத்தில் பேசுவதற்கு அவ்வளவு சாமர்த்தியம் எனக்குப் போதாது.மேலும் கூட்டத்தில் பேசுகிற பேச்சை என்னால் மனப்பாடமாக சொல்லவும் வராது. இதை எதிலாவது எழுதி வைத்துக் கொள்ளவும் தெரியாது. இதனால் கூட்டத்தில் பேசுவதை எல்லாம் காசெட்டில் பதிவு செய்து வைப்பேன்.
முன்பு நான் கூட்டம் நடத்தினால் எவ்வளவு செலவு ஆகுமென்று நினைக்கிறீர்கள்? வெறும் ரூ.100 தான். தபால் கார்டு 100 வாங்குவேன். அதற்கு செலவு ரூ25. திருவல்லிககேணியில் கூட்டம் நடத்தும் ஹால் வாடகை ரூ50. டீ செலவு ரூ25. பேச வருபவர்களுக்கு நான் பயணப்படியாக சிறிய தொகையைக் கூட கொடுத்ததில்லை. பேச வருபவர்களும் அதையெல்லாம் எதிர்பார்க்க மாட்டார்கள். உண்மையில் எழுதுபவர்கள் எல்லோரும் கூடும் இடம்தான் அது.
கூட்டத்திற்கு எத்தனைப் பேர்கள் வருவார்கள் என்று நினைக்கிறீர்கள்? 20 பேர்களுக்கு மேல் வந்தால் பெரிய விஷயம். ஒரு முறை ஒரு கவிஞரைப் பேசக் கூப்பிட்டேன். அவர் வந்திருந்தார். நானும் உரிய நேரத்திற்கு வந்தேன். ஆனால் கூட்டம் கேட்க யாரும் வரவில்லை. கவிஞருக்கு வருத்தமாகப் போய்விட்டது. “யாரும் வர மாட்டார்களோ?” என்று முணுமுணுக்க ஆரம்பித்து விட்டார்.
நான் அவரை சமாதானப்படுத்தி அந்தத் தெரு கோடியில் உள்ள ஓட்டலில் காப்பி வாங்கிக் கொடுத்தேன். அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக சிலர் வந்தார்கள்.
இதுவும் இன்னொரு கவிஞரைப் பற்றிய கதை. அவரால் குடிக்காமல் இருக்க முடியாது. என் கூட்டத்தில் வந்திருந்து பேசுவதாக இருந்தால் நீங்கள் குடிக்கக் கூடாது என்று எச்சரித்தேன். சரி என்று தலை ஆட்டிவிட்டு, குடித்து விட்டுப் பேச ஆரம்பித்து விட்டார். பேசுவதோடல்லாமல், பெரிய ரகளையே செய்ய ஆரம்பித்து விட்டார். அவரை விட வயதில் பெரியவரான காசியபனை (அசடு என்ற நாவல் எழுதியவர்) கூப்பிட்டு, “யே காசியபா… இங்கே வந்து என் பக்கத்தில் உட்கார்,” என்று பேச ஆரம்பித்து விட்டார். காசியபனோ பவ்யமாக அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டார். எனக்கோ திகைப்பு. கூட்டம் நல்லபடியாக முடியவேண்டும் என்ற கவலை.
நான் பல இரங்கல் கூட்டங்களையும் நடத்தி இருக்கிறேன். எனக்கு இரங்கல் கூட்டம் நடத்துவதில் அவ்வளவாக விருப்பம் இருக்காது. ஆனால் இரங்கல் கூட்டம் அவசியம் என்று தோன்றும். ஷண்முக சுப்பையா என்ற கவிஞருக்கு இரங்கல் கூட்டம் நடத்தியிருக்கிறேன். யாருக்காவது தெரியுமா அவரை. கரிச்சான் குஞ்சு என்ற எழுத்தாளருக்குக் கூட்டம் நடத்தியிருக்கிறேன். அதன் பின் சி சு செல்லப்பாவிற்கு ஒரு கூட்டம் நடத்தியிருக்கிறேன். இதெல்லாம் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. இதுமாதிரியான கூட்டம் நடத்தும்போது மனதுக்கு ஒப்புதலாகவே இருக்காது. ஆனால் இதையெல்லாம் செய்யமால் விடக்கூடாது என்று தோன்றும்.
நானும் பல இரங்கல் கூட்டங்களுக்குப் போயிருக்கிறேன். பிரமிள் மௌனி என்ற எழுத்தாளருக்கு நடத்திய இரங்கல் கூட்டத்திற்குப் போயிருக்கிறேன். சிலசமயம் இதுமாதிரியான இரங்கல கூட்டங்கள் மறைந்த எழுத்தாளரகளுககு அபவாதம் தருவதாக அமைந்து விடும்.
ஞானக்கூத்தன் நடத்திய ஆத்மாநாமிற்கு நடந்த கூட்டத்திற்குப் போயிருக்கிறேன். சி சு செல்லப்பா க நா சுவிற்கு ஒரு இரங்கல் கூட்டம் நடத்தினார். என் நண்பர் வெளி ரங்கராஜன் கோபி கிருஷ்ணன், பிரமிளுக்கெல்லாம் இரங்கல் கூட்டம் நடத்தியிருக்கிறார்.
இரங்கல் கூட்டம் நடத்துவது மனதிற்கு சங்கடமாக இருந்தாலும் அதை நடத்தாமல் இருக்கக் கூடாது. இன்றைய சூழ்நிலையில் ஒரு சில நண்பர்கள்தான் இதுமாதிரியான கூட்டத்திற்கெல்லாம் வருவார்கள்.
வருபவர்கள் மனந்திறந்து பேசுவார்கள். ஒரு முறை நடத்தும் இந்தக் கூட்டத்தை நாம் பதிவு செய்வது அவசியம். ஏன்எனில் அதன்பின் அவர்களை எல்லாம் மறந்துவிடுவோம். திரும்பவும் ஞாபகப்படுத்தி கூட்டம் எதுவும் நடத்த மாட்டோம்.
முதலில் தயக்கமாக இருந்தாலும் வெங்கட் சாமிநாதனுக்கும் அதுமாதிரியான கூட்டம் 23.10.2015 அன்று நடத்தி விட்டேன். அக்கூட்டத்தை ஆடியோ வீடியோவில் பதிவும் செய்து வைத்திருக்கிறேன்.
கூட்டம் நடத்துபவருக்கு சில அறிவுரைகள்:
1. அதிகம் செலவில்லாமல் கூட்டம் நடத்துங்கள்
2. கூட்டங்களுக்கு ஆட்கள் அதிகமாக வருமென்று எதிரபார்க்காதீர்கள்.
3. ஒரு கூட்டத்தை ஒருவர் மட்டும் நடத்தாமல் இரண்டு அல்லது மூனறு பேர்கள் இணைந்து நடத்துங்கள்
4. புத்தக வெளியீட்டுக் கூட்டம் நடத்தும்போது பெரிதாக புத்தகங்கள் விற்குமென்று எதிர்பார்க்காதீர்கள்.
5. கூட்டத்திற்குப் பேசும்படி உங்களுக்குத் தெரிந்த இலக்கியக் கர்த்தாக்களை ரொம்பவும் வற்புறுத்தாதீர்கள்.
6. பெரும்பாலும் உள்ளூரில் இருப்பவர்களையே பேசக் கூப்பிடுங்கள்.
7. நாம் நடத்துவது இலக்கியக் கூட்டம். அதனால் தனியாக மேடை அமைத்து பேசுபவர்களைப் பிரித்து விடாதீர்கள்.
8. கூட்டத்திற்கு வருபவர்கள் குறைந்த பட்சம் 20 பேர்களுக்கு மேல் இருந்தால் நல்லது. அப்படி இல்லாவிட்டால் பேசுபவர். கூட்டம் நடத்துபவர் என்று இருந்தால் போதும்.
9. கூட்டத்தைப் பதிவு செய்யுங்கள். ஆடியோ அல்லது வீடியோவில். வீடியோவிற்காக தனியாக ஏற்பாடு செய்யாதீர்கள். உங்களிம் டிஜிட்டல் காமெரா இருந்தால் அதுவே போதும்.
10. முகநூல, யூ ட்யூப்பில் பேசுவதை ஒலி-ஒளி பரப்புஙகள்
11. நீங்கள் என்னை மாதிரி ஓய்வு பெற்றவராக இருந்தால், வேறு யாராவது நடத்தும் கூட்டத்திற்குப் போய் வாருங்கள்.
நவீனவிருட்சம்
கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக நவீன விருட்சம் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதிகப் பக்கங்கள் இல்லை எளிமையான பத்திரிகையாகத்தான் விருட்சம் வெளிவந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் வரும். உங்களுடைய வாழ்த்துகள் தேவை.
வழக்கம் போல் நவீன விருட்சம் தனி இதழ் ரூ15. ஆண்டுச் சந்தா ரூ.60. பத்திரிகை யாருக்காவது வேண்டுமென்றால் அனுப்பி வைக்கப்படும. பத்திரிகையைப் படிககப் பிடித்திருந்தால், ரூ.60 கொடுத்து சந்தா செலுத்துங்கள். இல்லாவிட்டால் ஒரு இதழ் அனுப்பியதற்காக ரு15 அனுப்பவும். இதழ் திருப்தி அளிக்காவிட்டால், பத்திரிகையை ஒரு கவரில் போட்டு பத்திரிகை அலுவலகத்திற்கே அனுப்பி விடலாம்.
விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 18
தலைப்பு ஊடகக் கலாச்சாரம்
பேசுவோர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம்
இடம் : அலமேலு கல்யாண மண்டபம
அகஸ்தியர் கோயில் பின்புறம்
19 ராதாகிருஷ்ணன் தெரு
தி நகர், சென்னை 600 017
தேதி 31.10.2015 (சனிக்கிழமை)
நேரம் மாலை 6 மணிக்கு
பேசுவோர் குறிப்பு : பல ஆண்டுகளாக அச்சு ஊடகத்துறையில் தொடர்ந்து பணியாற்றி வருபவர். தீவிர வாசிப்பு, ஆக்கப்பூர்வமான உரையாடல் என இயங்கி வருபவர். சிறுபத்திரிகை சூழலோடு நெருக்கமான உறவுக் கொண்டிருப்பவர். கவிஞர், கட்டுரையாளர்.
அனைவரும் வருக,
அன்புடன்
அழகியசிங்கர் – ஆடிட்டர் கோவிந்தராஜன்
ஒரு நினைவு – ஒரு திரைப்படம்
எனது இளம் பிராயத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி மனதில் ஓர் ஆழமான ஞாபகமாக
பதிவாகி உள்ளது. அவ்வனுபவத்தின் கூறுகளாக ஒரு திரைப்படமும் நானும் எனது
தந்தையும் உள்ளோம். அது நிகழ்ந்த போது, எனக்கு ஐந்து வயது. பள்ளி
விடுமுறையாயிருந்த ஒரு சனிக்கிழமையில், எனது தந்தை என்னை சைக்கிளில்
முன்னால் அமர வைத்து அழைத்துச் சென்றார். அன்றைய பகலின் வெளிச்சம் கூட
தெளிவாக இன்னும் நினைவில் இருக்கிறது. வாகனம் ஒரு திரையரங்குக்கு சென்றது.
அது நாள் வரை, மாலை நேரத்தில் திரைப்படம் பார்க்க பெற்றோருடன் அல்லது
உறவினர்களுடன் அரங்குக்கு சென்றிருந்த எனக்கு தந்தையும் நானும் மட்டும்
படம் பார்க்கச் சென்றது நூதனமாக இருந்தது. பெரிய தாழ்வாரங்கள்,சிறு திறப்பு
கொண்ட டிக்கெட் கொடுக்குமிடம், பெரும் உயரம் வரை பொருத்தப்பட்டிருக்கும்
சிமெண்ட் ஜாலிகள், சுருண்டிருக்கும் சோள உருண்டைகள், டிக்கெட் கிழித்து
உள்ளே அனுப்பும் பணியாளர்கள் மற்றும் நீண்ட வரிசையில் நிற்கும் சைக்கிள்கள்
ஆகிய திரையரங்கின் காட்சிகள் மீது திரைப்படம் போலவே ஈர்ப்பு இருந்தது.
அங்கே நிறைய பேர் இருந்தனர். இருக்கையில் அமர்ந்ததும் எனது தந்தை என்னிடம்
நாம் பார்க்கப் போவது உமர் முக்தார் என்ற ஆங்கில மொழித் திரைப்படம் என்று
சொன்னார். உமர் முக்தார் உமர் முக்தார் என திரும்பத் திரும்ப மனதிற்குள்
சொல்லிக் கொண்டேன். அந்தப் பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஒரு பாலைமண் பிரதேசத்தில் விரியும் நிலக்காட்சியுடன் ஆரம்பிக்கும் அப்படம்
என்னை உள்ளிழுத்துக் கொண்டது. கண்ணைக் கூசச் செய்யும் மணல் பரப்பு,
இறுக்கமான உடல் கொண்ட மனிதர்கள், நான் பார்த்திராத வித்தியாசமான நிறத்தில்
கண்கள் கொண்ட பெண்கள், ஜீப் போன்ற வாகனங்கள் எழுப்பும் என்ஜின் சத்தம்,
சீருடை அணிந்த ராணுவ வீரர்கள், ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நிரல்
நிரையாக நிறுத்தப்பட்டு அவர்களைக் கடுமையாகத் திட்டி சிலருக்கு அருகில்
வரும் போது சுட்டுக் கொல்லும் அதிகாரி, ஒரு பாலத்தில் ராணுவத்துக்கும் உமர்
முக்தார் குழுவுக்கும் நடக்கும் சண்டை ஆகிய காட்சிகள் இன்று வரை
துல்லியமாக ஞாபகத்தில் உள்ளன. முப்பது ஆண்டுகள் ஆகி விட்டது அப்படம்
பார்த்து. இடைவேளையின் போது படம் எப்படியிருக்கிறது என அப்பா கேட்டார்.
நான் அப்போது மானசீகமாக அப்பாலைவனத்தில் இருந்தேன். ரொம்ப பிடிச்சிருக்கு
என்று சொன்னேன்.
குடும்பத்துடன் தியேட்டருக்குச் செல்லும் போது,
அங்கே எழும் சிகரெட்டின் நெடி எனக்கு புதுமையாக இருக்கும். அம்மா என்னுடைய
மூக்கைப் பொத்துவார்கள்.
‘அம்மா அவங்கள்ளாம் ஏன் சிகரெட் பிடிக்கிறாங்க?’
‘அது ரொம்ப தப்பு. அவங்களுக்கெல்லாம் பழக்கமாயிடுச்சு.’
‘தப்புன்னா ஏன் செய்யறாங்க?’
‘தம்பி! தியேட்டருக்கு வந்தா அதெல்லாம் கவனிக்கக்கூடாது.’
‘அம்மா!ஏன் இங்கே ரொம்ப குப்பையா இருக்கு?’
‘நிறைய பேர் வர்ராங்கள்ள.அதனால அப்படியிருக்கு. நீ குப்பையை குப்பைத்தொட்டியிலத்தான் போடனும்.சரியா?’
‘அம்மா!இந்த பிஸ்கட் கவர குப்பைத்தொட்டியில போடட்டுமா?’
‘சரி! போய் போட்டுட்டு வா.’
ஒரு சிமெண்ட் தொட்டியில் கொட்டப்பட்டிருந்த மணலில் வெற்றிலை எச்சில்
துப்பியிருப்பதைக் கண்டு பீதியுறுவேன். கவரை போட்டுவிட்டு ஓடி வந்து
விடுவேன். சினிமா முடிந்ததும் பார்வையாளர்கள் வேகவேகமாக வெளியே செல்வதைக்
காண அச்சமாக இருக்கும். சைக்கிள் ஸ்டாண்டில் கேரியர்கள் தூக்கப்பட்டு
ஸ்டாண்ட் வேகமாக வைக்கப்படுவதன் சத்தத்திற்கு பீதியடைவது இன்னும் நினைவில்
இருக்கிறது. பலரின் செருப்புகள் தேய்ந்து உருவாகும் ஒலியால் தொந்தரவடைவேன்.
உமர் முக்தார் படம் மீண்டும் துவங்கியது.
உமர் முக்தார் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு தூக்கு மேடைக்கு
கொண்டுவரப்படுவார்.அப்போது அங்கே கூடியிருக்கும் மக்கள் துயரத்துடன்
குரலெழுப்பி அவரை நோக்கி நெருங்கி வருவர். உமர் தூக்கிலிடப்படுவார்.
அக்கூட்டத்தில் ஒரு சிறுவன் இருப்பான். அவன் தரையில் விழுந்த உமர்
முக்தாரின் கண்ணாடியை எடுத்து கையில் வைத்துக் கொள்வான். படம் முடியும்.
படம் பார்த்த அனைவரும் வெளியே வந்தோம். யாரும் ஒரு வார்த்தை கூட
பேசவில்லை. அனைவரும் அமைதியாக மெதுவாக வெளியேறினர். சைக்கிள் ஸ்டாண்டில்
கூட இரைச்சல் இல்லை.சிறு சலனம் கூட இல்லாத பேரமைதி நிலவியது.
அப்பா என்னை சைக்கிளில் அமரச் செய்து ஓட்டிக் கொண்டு சென்றார். நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அப்பாவிடம் கேட்டேன்:
அந்தப் பையன் ஏன் உமர் முக்தார் கண்ணாடியை எடுத்து வச்சுகிட்டான்?
அப்பா மௌனமாக யோசித்தார். சைக்கிள் பெடலாவதன் ஒலி மட்டும் கேட்டது.
‘அவருடைய ஞாபகத்துக்காக இருக்கும்பா:’ அப்பா சொன்னார்.
‘உமர் முக்தாரின் மூக்குக் கண்ணாடி என்னிடமும் இருக்கிறது’
பின்குறிப்பு
உமர் முக்தார் லிபியாவில் முசோலினியின் ஃபாசிசப் படையின் ஆக்கிரமிப்புக்கு
எதிராகப் போராடிய போராளி.மக்கள் ஆதரவுடன் அவர் உருவாக்கிய குழுக்கள்
இத்தாலி இராணுவத்துக்கு எதிராகப் போராடின.போராளிகளின் கெரில்லா
தாக்குதல்கள் இத்தாலிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தின.உமர் முக்தாரைப்
பிடிக்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக உமர் கைது
செய்யப்பட்டார்.விசாரணைக்குப் பின் பொதுமக்கள் முன்பாக தூக்கிலிடப்பட்டார்.
முஸ்தஃபா அக்கார்ட் என்ற இயக்குனர் Lion of the desert என்ற பெயரில் உமர்
முக்தாரின் வாழ்வை 1981ம் ஆண்டு திரைப்படமாக எடுத்தார்.1986ம் ஆண்டு
தமிழ்நாட்டில் உமர் முக்தார் என்ற பெயரில் வெளியாகி பரவலான வரவேற்பை
பெற்றது.ஆன்ட்டனி குவின் என்ற நடிகர் உமர் முக்தாராக நடித்தார்.
கட்டுரையில்,படத்தின் கிளைமாக்ஸுக்குப் பின் பார்வையாளர்களிடம் ஏற்பட்ட
அமைதிக்கு ஒரு போராளி மகத்துவமான விதத்தில் மரணத்தை எதிர்கொண்டது காரணமா
அல்லது முஸ்தஃபா அக்கார்டின் திரைக்கதை காரணமா அல்லது ஆன்ட்டனி குவினின்
தத்ரூபமான நடிப்பு காரணமா அல்லது மேற்சொன்ன அனைத்துமே காரணமா என்று
இப்போதும் யோசித்துப் பார்க்கிறேன்.