ஒரு நினைவு – ஒரு திரைப்படம்

பிரபு மயிலாடுதுறை

எனது இளம் பிராயத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி மனதில் ஓர் ஆழமான ஞாபகமாக
பதிவாகி உள்ளது. அவ்வனுபவத்தின் கூறுகளாக ஒரு திரைப்படமும் நானும் எனது
தந்தையும் உள்ளோம். அது நிகழ்ந்த போது, எனக்கு ஐந்து வயது. பள்ளி
விடுமுறையாயிருந்த ஒரு சனிக்கிழமையில், எனது தந்தை என்னை சைக்கிளில்
முன்னால் அமர வைத்து அழைத்துச் சென்றார். அன்றைய பகலின் வெளிச்சம் கூட
தெளிவாக இன்னும் நினைவில் இருக்கிறது. வாகனம் ஒரு திரையரங்குக்கு சென்றது.
அது நாள் வரை, மாலை நேரத்தில் திரைப்படம் பார்க்க பெற்றோருடன் அல்லது
உறவினர்களுடன் அரங்குக்கு சென்றிருந்த எனக்கு தந்தையும் நானும் மட்டும்
படம் பார்க்கச் சென்றது நூதனமாக இருந்தது. பெரிய தாழ்வாரங்கள்,சிறு திறப்பு
கொண்ட டிக்கெட் கொடுக்குமிடம், பெரும் உயரம் வரை பொருத்தப்பட்டிருக்கும்
சிமெண்ட் ஜாலிகள், சுருண்டிருக்கும் சோள உருண்டைகள், டிக்கெட் கிழித்து
உள்ளே அனுப்பும் பணியாளர்கள் மற்றும் நீண்ட வரிசையில் நிற்கும் சைக்கிள்கள்
ஆகிய திரையரங்கின் காட்சிகள் மீது திரைப்படம் போலவே ஈர்ப்பு இருந்தது.
அங்கே நிறைய பேர் இருந்தனர். இருக்கையில் அமர்ந்ததும் எனது தந்தை என்னிடம்
நாம் பார்க்கப் போவது உமர் முக்தார் என்ற ஆங்கில மொழித் திரைப்படம் என்று
சொன்னார். உமர் முக்தார் உமர் முக்தார் என திரும்பத் திரும்ப மனதிற்குள்
சொல்லிக் கொண்டேன். அந்தப் பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஒரு பாலைமண் பிரதேசத்தில் விரியும் நிலக்காட்சியுடன் ஆரம்பிக்கும் அப்படம்
என்னை உள்ளிழுத்துக் கொண்டது. கண்ணைக் கூசச் செய்யும் மணல் பரப்பு,
இறுக்கமான உடல் கொண்ட மனிதர்கள், நான் பார்த்திராத வித்தியாசமான நிறத்தில்
கண்கள் கொண்ட பெண்கள், ஜீப் போன்ற வாகனங்கள் எழுப்பும் என்ஜின் சத்தம்,
சீருடை அணிந்த ராணுவ வீரர்கள், ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நிரல்
நிரையாக நிறுத்தப்பட்டு அவர்களைக் கடுமையாகத் திட்டி சிலருக்கு அருகில்
வரும் போது சுட்டுக் கொல்லும் அதிகாரி, ஒரு பாலத்தில் ராணுவத்துக்கும் உமர்
முக்தார் குழுவுக்கும் நடக்கும் சண்டை ஆகிய காட்சிகள் இன்று வரை
துல்லியமாக ஞாபகத்தில் உள்ளன. முப்பது ஆண்டுகள் ஆகி விட்டது அப்படம்
பார்த்து. இடைவேளையின் போது படம் எப்படியிருக்கிறது என அப்பா கேட்டார்.
நான் அப்போது மானசீகமாக அப்பாலைவனத்தில் இருந்தேன். ரொம்ப பிடிச்சிருக்கு
என்று சொன்னேன்.

குடும்பத்துடன் தியேட்டருக்குச் செல்லும் போது,
அங்கே எழும் சிகரெட்டின் நெடி எனக்கு புதுமையாக இருக்கும். அம்மா என்னுடைய
மூக்கைப் பொத்துவார்கள்.

‘அம்மா அவங்கள்ளாம் ஏன் சிகரெட் பிடிக்கிறாங்க?’

‘அது ரொம்ப தப்பு. அவங்களுக்கெல்லாம் பழக்கமாயிடுச்சு.’

‘தப்புன்னா ஏன் செய்யறாங்க?’

‘தம்பி! தியேட்டருக்கு வந்தா அதெல்லாம் கவனிக்கக்கூடாது.’

‘அம்மா!ஏன் இங்கே ரொம்ப குப்பையா இருக்கு?’

‘நிறைய பேர் வர்ராங்கள்ள.அதனால அப்படியிருக்கு. நீ குப்பையை குப்பைத்தொட்டியிலத்தான் போடனும்.சரியா?’

‘அம்மா!இந்த பிஸ்கட் கவர குப்பைத்தொட்டியில போடட்டுமா?’

‘சரி! போய் போட்டுட்டு வா.’

ஒரு சிமெண்ட் தொட்டியில் கொட்டப்பட்டிருந்த மணலில் வெற்றிலை எச்சில்
துப்பியிருப்பதைக் கண்டு பீதியுறுவேன். கவரை போட்டுவிட்டு ஓடி வந்து
விடுவேன். சினிமா முடிந்ததும் பார்வையாளர்கள் வேகவேகமாக வெளியே செல்வதைக்
காண அச்சமாக இருக்கும். சைக்கிள் ஸ்டாண்டில் கேரியர்கள் தூக்கப்பட்டு
ஸ்டாண்ட் வேகமாக வைக்கப்படுவதன் சத்தத்திற்கு பீதியடைவது இன்னும் நினைவில்
இருக்கிறது. பலரின் செருப்புகள் தேய்ந்து உருவாகும் ஒலியால் தொந்தரவடைவேன்.

உமர் முக்தார் படம் மீண்டும் துவங்கியது.

உமர் முக்தார் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு தூக்கு மேடைக்கு
கொண்டுவரப்படுவார்.அப்போது அங்கே கூடியிருக்கும் மக்கள் துயரத்துடன்
குரலெழுப்பி அவரை நோக்கி நெருங்கி வருவர். உமர் தூக்கிலிடப்படுவார்.
அக்கூட்டத்தில் ஒரு சிறுவன் இருப்பான். அவன் தரையில் விழுந்த உமர்
முக்தாரின் கண்ணாடியை எடுத்து கையில் வைத்துக் கொள்வான். படம் முடியும்.

படம் பார்த்த அனைவரும் வெளியே வந்தோம். யாரும் ஒரு வார்த்தை கூட
பேசவில்லை. அனைவரும் அமைதியாக மெதுவாக வெளியேறினர். சைக்கிள் ஸ்டாண்டில்
கூட இரைச்சல் இல்லை.சிறு சலனம் கூட இல்லாத பேரமைதி நிலவியது.

அப்பா என்னை சைக்கிளில் அமரச் செய்து ஓட்டிக் கொண்டு சென்றார். நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அப்பாவிடம் கேட்டேன்:
அந்தப் பையன் ஏன் உமர் முக்தார் கண்ணாடியை எடுத்து வச்சுகிட்டான்?
அப்பா மௌனமாக யோசித்தார். சைக்கிள் பெடலாவதன் ஒலி மட்டும் கேட்டது.

‘அவருடைய ஞாபகத்துக்காக இருக்கும்பா:’ அப்பா சொன்னார்.

‘உமர் முக்தாரின் மூக்குக் கண்ணாடி என்னிடமும் இருக்கிறது’

பின்குறிப்பு

உமர் முக்தார் லிபியாவில் முசோலினியின் ஃபாசிசப் படையின் ஆக்கிரமிப்புக்கு
எதிராகப் போராடிய போராளி.மக்கள் ஆதரவுடன் அவர் உருவாக்கிய குழுக்கள்
இத்தாலி இராணுவத்துக்கு எதிராகப் போராடின.போராளிகளின் கெரில்லா
தாக்குதல்கள் இத்தாலிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தின.உமர் முக்தாரைப்
பிடிக்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக உமர் கைது
செய்யப்பட்டார்.விசாரணைக்குப் பின் பொதுமக்கள் முன்பாக தூக்கிலிடப்பட்டார்.

முஸ்தஃபா அக்கார்ட் என்ற இயக்குனர் Lion of the desert என்ற பெயரில் உமர்
முக்தாரின் வாழ்வை 1981ம் ஆண்டு திரைப்படமாக எடுத்தார்.1986ம் ஆண்டு
தமிழ்நாட்டில் உமர் முக்தார் என்ற பெயரில் வெளியாகி பரவலான வரவேற்பை
பெற்றது.ஆன்ட்டனி குவின் என்ற நடிகர் உமர் முக்தாராக நடித்தார்.

கட்டுரையில்,படத்தின் கிளைமாக்ஸுக்குப் பின் பார்வையாளர்களிடம் ஏற்பட்ட
அமைதிக்கு ஒரு போராளி மகத்துவமான விதத்தில் மரணத்தை எதிர்கொண்டது காரணமா
அல்லது முஸ்தஃபா அக்கார்டின் திரைக்கதை காரணமா அல்லது ஆன்ட்டனி குவினின்
தத்ரூபமான நடிப்பு காரணமா அல்லது மேற்சொன்ன அனைத்துமே காரணமா என்று
இப்போதும் யோசித்துப் பார்க்கிறேன்.

Chandramouli Azhagiyasingar's photo.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *