99வது இதழில் வெளிவந்த ஞானக்கூத்தன் கவிதை

அழகியசிங்கர்
நவீன விருட்சம் இதழ் வந்தவுடன் அதை எப்படி தீர்த்துக் கட்டுவது என்று உடனே பரபரப்பாக செயல்பட்டேன்.  முதலில் நான் நடை பயிற்சி செய்யும் இடத்திற்கு சில இதழ் பிரதிகளை எடுத்துக் கொண்டு போனேன். அங்கு எனக்கு அறிமுகமானவர்களைப் பார்த்து ஒவ்வொன்றாய் கொடுத்தேன்.  அதில் ஒருவர் சீனாவிலிருந்து பொருள்களை வாங்கி விற்பவர். நவீன விருட்சத்தை நீட்டியவுடன், 
“சார்…எனக்கு வேண்டாம்…நான் தமிழ் பத்திரிகை புத்தகம் படிப்பதில்லை,” என்றார்.  
எனக்கு அதிர்ச்சி.  முதன் முதலாக ஒருவரிடம் கொடுக்கச் சென்றபோது, அவர் இப்படி சொலகிறாரே என்று தோன்றியது. நான் கேட்டேன். 
“தமிழ்ல பேப்பர் புத்தகம் படிப்பதில்லையா?”. 
“இப்போ இல்லை…முன்பு படித்ததுதான், எனக்கு நேரமில்லை,”
“என்ன நேரம்…நீங்க மனசு வைச்சா நேரம் இருக்கும் சார்,” என்றேன். 
“என்னால முடியாது, சார்.”என்றார்.
“இதன் விலை ரூ 15 அதற்கா யோஜனை செய்யிறீங்க…அதைத் தர வேண்டாம்…ஆனா பத்திரிகை வாங்கிப் படிங்க…எனக்கு அது முக்கியம்..”
“இல்ல சார்…அதுக்காக இல்லை..என் கவனமெல்லாம் பிஸினஸில் இருக்கு…படிக்கவே முடியாது,” என்றார்.
அவரிடமிருந்து நகர்ந்து விட்டேன்.  என்னிடமிருந்து பத்திரிகையை வாங்கிக் கொண்டவர்கள் எல்லாம் ஒரு மூச்சு விடுவதில்லை.  படித்தேன்..புரட்டிப் பார்த்தேன் என்று கூட சொல்வதில்லை.  உண்மையில் நான் பொறுமைசாலி.  இதுமாதிரி நிகழ்ச்சியை நான் 28 ஆண்டுகளாக சந்தித்து வருகிறேன்.  இதோ இது 99வது இதழ்…அடுத்தது 100வது இதழ்.
என் வீட்டில் பக்கத்தில் குடியிருக்கும் ராமன் என்பவரிடம் கொண்டு போய் கொடுக்க வேண்டும்.  ஆனால் ராமனைப் பார்த்தாலும் இதழைக் கொண்டுபோய் கொடுக்க கொஞ்சம் அலுப்பு. ஏன்எனில் பத்திரிகையைக் கொடுத்தாலும், பத்திரிகை நன்றாக இருக்கிறது, அல்லது நன்றாக இல்லை என்று எந்த விமர்சனமும் இருக்காது.  அவரைப் பார்க்கும்போது என்னிடம் விருட்சம் மாதிரி இதழை வாங்கியதற்கான அறிகுறியே தெரியாது. அப்படித்தான் சில தினங்களுக்கு முன் ஒரு போன் வந்தது.  போன் ஜே கிருஷ்ணமூர்த்தி நூல் நிலையத்திலிருந்து வந்தது.  நான் ரொம்பவும் மதிக்கக் கூடிய இடம்.  அங்கு பல பத்திரிகைகள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
முன்பு நூலகராக இருந்தவர் என் நண்பர்.  இப்போது யார் என்று தெரியவில்லை.  போனில், “ஏன் இந்தப் பத்திரிகையை அனுப்புகிறீர்கள்?” என்று கேட்டார்.  
“ஏன்?”  என்று கேட்டேன். 
“அனுப்பாதீர்கள்…நாங்கள் பேப்பர் கடையில்தான் போடுவோம்…வேண்டாம்..” “எனக்கு ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பிடிக்கும்.  அவருடைய பேச்சைதான் நாங்கள் மொழி பெயர்த்து எங்கள் பத்திரிகையில் கொண்டு வர முயற்சி செய்வோம்.  லைப்ரரிக்குத்தானே அனுப்புகிறேன்,” என்றேன்.
“இங்கு இதுமாதிரியான பத்திரிகையெல்லாம் யாரும் படிப்பதில்லை,”என்றார்.
உண்மையில் ஜே கிருஷ்ணமூர்த்திக்கு தமிழ் தெரிந்தால், விருட்சம் அவர் விரும்புகிற பத்திரிகையாக தோன்றியிருக்கும்.
அவரிடம் சொன்னேன் : “இனிமேல் அனுப்ப மாட்டேன்.”.
அவர் போனை வைத்துவிட்டார்.  எனக்கு ஒன்று தோன்றியது.  அவரிடம், அனுப்பிய 99வது இதழை திருப்பி அனுப்பி விடுங்கள் என்று சொல்லலாமா என்று.  எனக்கு அப்படியெல்லாம் டக்கென்று பேச வரவில்லை.  
இந்தத் தருணத்தில்தான் தினமணி ஆசிரியர் நவீன விருட்சம் இதழைப் புகழ்ந்து எழுதியதைப் படித்து மகிழ்ந்தேன்.  
இதோ இப்போது 99வது இதழின் பிரதி கைவசம் இல்லை.  அதில் வெளியிட்ட ஞானக்கூத்தன் கவிதையை இங்கு தருகிறேன்.
ஞானக்கூத்தன் கவிதை
பசு மாட்டின் 
தலை
கால்
மடி
வால்
ஆசனம்
முதலான இடங்களைத்
தேவதைகள் தங்கள்
இருப்பிடங்களாகக் கொண்டுள்ளார்களாம்
இன்று நானொரு
யானையைப் பார்த்தேன்
தென்கலை நாமம் திகழ
பெரிய புல்லுக்கட்டு
தென்னை மட்டை
தேங்காய்களை நிதானமாகத்
தின்று கொண்டிருந்தது
யானையைக் கேட்டேன்
பசுவைப் போல் உன் உடம்பில்
தேவதைகள் இடம் பிடித்திருக்கிறார்களா என்று
எனக்கே போதாத என் உடம்பின் 
எல்லா இடங்களிலும்
நானே வாழ்கிறேன்
என்றது யானை.

புத்தக விமர்சனம் 18

அழகியசிங்கர்

சமீபத்தில் சாருநிவேதிதாவின் புத்தக வெளியீட்டுக் கூடட்டத்திற்கு நான், அசோகமித்திரன், வைதீஸ்வரன் மூவரும் சென்றோம்.  7 புத்தகங்களின் வெளியீட்டுக் கூட்டம்.  ராஜா அண்ணாமலை மன்றம் என்ற இடத்தில்.  அவ்வளவு பெரிய இடத்தில் கூட்டம் எவ்வளவு வரும் என்ற சந்தேகம் கூட்டம் நடக்கப் போகும்வரை என்னால் கற்பனை செய்ய முடியாமல் இருந்தது.  ஆனால் 500 அல்லது 600 பேர்கள் கூடி இருந்தார்கள்.  கூட்டத்தில் பெரும்பாலோர் இளைஞர்களாக இருந்தார்கள்.  சாருநிவேதிதாவின் சாதனையாகத்தான் இதை நினைக்கிறேன்.  அவருடைய வாசகர்கள் எல்லா இடங்களிலும் சுழன்று சுழன்று கூட்டத்தினரை வரவேற்றனர்.  
அந்த விழாவில் வெளிவந்த புத்தகங்களில் மூன்று புத்தகங்கள் எனக்குப் படிக்கக் கிடைத்தன.  1. கடைசிப் பக்கங்கள் 2. எங்கே உன் கடவுள் 3. பழுப்பு நிறப் பக்கங்கள்.  இதை என் பாக்கியமாகக் கருதுகிறேன்.  முதலில் நான் கடைசிப் பக்கங்கள் என்ற புத்தகத்தை எடுத்துப் படித்தேன்.  120 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை 2 நாட்களில் முடித்து விட்டேன்.  உண்மையில் இன்னும் சீக்கிரம் கூட முடித்திருக்க முடியும்.  ஆனால் விட்டுவிட்டுத்தான் புத்தகத்தைப் படித்தேன்.  என் கவனம் எல்லாம் இதைப் படித்து முடிப்பதிலேயே இருந்தது.  
இத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் üநியூஸ் சைரன்ý என்ற பத்திரிகையில் வாரா வாரம் எழுதப்பட்ட கட்டுரைகள் என்று சாருநிவேதிதா குறிப்பிட்டுள்ளார்.  மொத்தம் 26 தலைப்புகளில் சாருவின் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.  ஒவ்வொரு கட்டுரையையும மணி மணியாய் எழுதியிருக்கிறார்.  திரும்ப திரும்ப  படிக்கத் தூண்டுகிற மாதிரியான எழுத்து.  
ஒவ்வொரு கட்டுரையும் 2 1/2 அல்லது 3 பங்கங்களில் முடிந்து விடுகிறது.  பல விஷயங்களைக் குறித்து மனம் திறந்து அலசல்.  நமக்கு தெரிந்து கொள்ள வேண்டிய எத்தனையோ விஷயங்களை இக் கட்டுரைகள் மூலம் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.  உதாரணமாக முதல் கட்டுரையில் சச்சின் பற்றி கூறி அவருடைய கடினமான உழைப்பைப் பற்றி குறிப்பிடுகிறார்.  உண்மையில் சாருவும் கடுமையான உழைப்பாளியாக இருக்கிறார்.  
மருத்துவக் குறிப்புகள், அவர் பயணம் செய்த இடங்கள், அவர் படித்த புத்தகங்கள், சினிமாவைப் பற்றிய அவருடைய பார்வைகள், செக்ஸ் சம்பந்தமாக அவர் சொல்கிற விஷயங்கள் என்று பலவற்றை இந்தப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
மருத்துவக் குறிப்பைப் படிக்கும்போது எங்கே சாரு ஒரு மருத்துவராகவே மாறி விட்டாரோ என்று தோன்றுகிறது.  
நூறு வயதிலும் இளமையாக இருக்கிற ரகசியம் என்று தேரையர் கூறுவதை இப்படி குறிப்பிடுகிறார் :
இஞ்சியைத் தோல் சீவி மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.  இரண்டு துண்டு இஞ்சிக்கு ஒரு தம்ளர் தண்ணீர்.  பத்து நிமிடம் கழிந்தும் தம்ளரின் அடியில் சுண்ணாம்பு போன்று படிந்திருக்கும்.  அதை விட்டுவிட்டு சாறை மட்டும் குடியுங்கள்.  மதியம் ஒரு ஸ்பூன் சுக்குப் பொடியை நீரில் காய்ச்சிக் குடியுங்கள். இரவில் கடுக்காய். கடுக்காயின் உள்ளே இருக்கும் விதை நஞ்சு.  எனவே கடுக்காயின் தோலை மட்டும் கழுவி எடுத்துப் பொடியாக்கி ஒரு தம்ளர் நீரில் கலந்து அருந்துங்கள் அல்லது நாட்டு மருந்துக் கடையிலேயே கடுக்காய் பொடி கிடைக்கும்.  இப்படி தினமும் சாப்பிடச் சொல்கிறார்.  இப்படி சாப்பிட்டதால் ஏற்பட்ட பலன்களைப் பற்றியும் சொல்கிறார்.  ஹிமாச்சலப் பிரதேசத்தின் லடாக் பிராந்தியத்தில் உள்ள லே என்ற ஊர் வரை மோட்டார் பைக்கில் பயணம் செய்ததைப் பற்றி குறிப்பிடுகிறார்.  
இவருடன் பத்துப் பேர்கள் 30 வயதுக்குட்பட்டவர்கள் செல்கிறார்கள்.  சாருக்கு மட்டும்தான் 60 வயது.  சார்ச்சு என்ற ஒரு மோசமான இடத்திற்குச் செல்கிறார்கள்.  பிராண வாயு குறைவான அந்த இடத்தில் எல்லோரும் பாதிக்கப்படுகிறார்கள்.  ஆனால் சாரு மாத்திரம் பிரச்சினையே இல்லாமல் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.  இதற்குக் காரணம் தேரையர்.  பையில் இஞ்சியையும், கத்தியையும் வைத்திருந்து தோலை சீவி சீவி மென்று கொண்டிருந்தாராம்.  இதைப் படிக்கும்போது எனக்கு சற்று நம்ப முடியாமல் இருந்தாலும், நாமும் முயற்சி செய்து பார்க்கலாமே என்று தோன்றியது.  இதோடு மட்டுமல்லாமல், எப்போது நேரம் கிடைத்தாலும் ஒரு மணி நேரத்திற்கு எட்டு போட்டு நடக்கச் சொல்கிறார்.  அப்போது வயிறு காலியாக இருக்க வேண்டும் என்கிறார்.  இதனால் ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை எல்லாம் சீராக இருக்கும் என்கிறார். இப்படி பல உபயோகமான டிப்ஸ் கொடுக்கும் சாருநிவேதிதா மருத்துவராகவே மாறி விட்டதாக தோன்றுகிறது.  அவர் சொல்வதை சோதித்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால் அவர் தனக்கு சோதித்துப் பார்த்ததைத்தான் இங்கே குறிப்பிடுகிறார். ஏன் இதைக் குறிப்பிடுகிறேன்.  பக்கம் 46ல் இப்படிக் குறிப்பிடுகிறார் : முதலில் உடûப் பேண வேண்டும்.  பிறகே இலக்கியம், சினிமா எல்லாம் என்று.
எழுத்தாளர்களுக்கு உரிய கவனம் கிடைப்பதில்லை என்பதில் சாருவை விட வேற யாரும் இந்த அளவிற்குக் கோபப்பட்டு நான் பார்த்ததில்லை.  தமிழ் நண்டுகள் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில் ஜெயிப்பூர் விழாவில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் எழுத்தாளர்கள் மட்டும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்கிறார்.  2014ஆம் ஆண்டில் 6 மலையாள எழுத்தாளர்கள் கலந்து கொண்ட விபரத்தைக் கூறி, தமிழில் சல்மாவைத் தவிர யாரும் போகவில்லை என்கிறார்.  இதற்குக் காரணமும் சொல்கிறார்.  நம் எழுத்தாளர்களை யாரும்வட இந்தியாவுக்கு அறிமுகப்படுத்துவதில்லை. யாராவது அறிமுகப் படுத்த முயன்றாலும் இன்னொரு தமிழரே, üüஅவன் எழுத்தாளனே அல்ல.  அவனுக்குத் தமிழில் மரியாதையே இல்லை,ýý என்று போட்டுக் கொடுத்து விடுகிறார்கள் என்கிறார் சாரு.  இதற்கு உதாரணமாக புட்டியில் பல மாநில நண்டுகள் பற்றிய கதையைக் குறிப்பிடுகிறார்.  அதில் இரண்டே இரண்டு தமிழ் நண்டுகள் மட்டும் வெளியே போகாமல் புட்டியில் அப்படியே இருக்கிறதாம். ஒன்று மேலே ஏறினால், இன்னான்று கீழே தள்ளி விடுமாம்.  அதே போல் இன்னொன்று ஏறினால் இது கீழே தள்ளி விடுமாம். தமிழில் இப்படி ஒரு எழுத்தாளரை இன்னொரு எழுத்தாளர் மட்டம் தட்டிப் பேசுவது உண்மை என்றாலும், இதைச் சரிபடுத்த எதாவது வழி உண்டா என்பது தெரியவில்லை.  
நான் இதுவரை படித்த எந்தப் புத்தகத்திலும் எழுத்தாளர் ஒரு சுயபிரகடனமாகச் சொல்வதை நான் படித்ததில்லை.  சாரு அவர் புத்தகத்தில் பல இடங்களில் தன்னைப் பற்றி வெளிப்படுத்துகிறார்.  
பக்கம் 77ல் இப்படி குறிப்பிடுகிறார் :
1. என்னிடம் தொலைக்காட்சிப் பெட்டி கிடையாது. தொலைக் காட்சி பார்த்து பத்து ஆண்டுகள் ஆகிறது.
2. தினசரிகள் படிப்பதில்லை.  ஒரு நண்பர் எல்லா செய்திகளையும் படித்து என்னிடம் தொலைபேசியில் சொல்லி விடுவார். (எனக்கு அதுமாதிரி நண்பரே கிடையாது).
3. தொலைபேசியில் அதிகம் பேசுவதில்லை.  முக்கியமான நண்பராக இருந்தால் அரை நிமிடம் பேசுவேன்.
4. குடும்ப விசேஷம், பிறந்த நாள், நண்பர்களின் அழைப்பு, பார்ட்டி, பப் எதுவும் கிடையாது.  போன ஆண்டு நான் கலந்து கொண்டது ஒரே ஒரு திருமண வைபவம்தான்.  இப்படி நேரத்தைக் கடுமையாக இழுத்துப் பிடிப்பதால் உங்களின் மூன்று நாட்கள் என்னுடைய ஒரு நாள் என்கிறார் சாரு.
இதையெல்ல்லாம் சொல்பவர் இன்னொன்றும் சொல்கிறார்.  வாசிப்பு என்பது கடல் நீரை கையில் அள்ளுவதுபோல்தான்.  என்றாலும் என் வாசிப்பு பற்றி எனக்குள் சிறிதாக ஒரு கர்வம் உண்டு என்கிறார்.
அடுத்ததாக சினிமாவைப் பற்றி அதிகமாக இப்புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.  பாலுவும் மெளினகாவும் என்ற கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.  இப் புத்தகத்தைப் படிக்கும்போது ஒவ்வொரு தலைப்பைப் படித்தே நாம் பலவற்றை எழுதலாம். 
இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது சாருவின் உணர்ச்சி வேகத்தைப் படித்து ஆச்சரியமாக இருக்கிறது.  தலைமுறைகள் என்ற படத்தைப் பார்த்துவிட்டு பாலுவைப் பார்க்க சாரு அவர் வீட்டிற்குச் செல்கிறார்.  ரூபாய் 1000 கொடுத்து ஒரு அழகான மலர்க்கூடையை வாங்கிக்கொண்டு போகிறார்.  “எதற்கு இந்த பார்மால்டி,” என்கிறார் பாலு.  “உங்கள் மீது உள்ள அன்பை வேறு எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை,” என்று சொல்லிக்கொண்டே கண்கள் கலங்க மௌனமாய் அமர்ந்திருக்கிறார் சாரு.
சாரு சொல்லும் ஒரு கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  ‘பெண்களின் மீதான பாலியல் அத்து மீறல்களைக் குறைப்பதற்கு ஒரு வழி பாலியல் தொழிலை சட்ட ரீதியாக அங்கீகரிப்பது’ என்கிறார் சாரு.  இந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ள வில்லை.  ஏன்எனில் அப்படி அங்கீகரித்தால் டாஸ்மாக் கடையில் எல்லோரும் போய் நிற்பதுபோல் செக்ஸ் ஒர்க்கர் வீட்டின் முன் வயது வித்தியாமில்லாமல் எல்லோரும் போய் நிற்பார்கள்.
எல்லோரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
கடைசிப் பக்கங்கள் – சாரு நிவேதிதா – கட்டுரைகள் – மொத்தப் பக்கங்கள் : 120 – வெளிவந்த ஆண்டு : டிசம்பர் 2015 – வெளியீடு : Kizhakku Pathippgam, 177/103, First Floor Ambal’s Building/ Lloyds Road, Royapettah, Chennai 600 014        Phone : 
044-42009603
  

என்றோ நடந்த சுந்தரராமசாமியின் விருட்சம் கூட்டம்

அழகியசிங்கர்  
08.12.2002 அன்று விருட்சம் சார்பில் சுந்தர ராமசாமியின் கூட்டம் நடந்தது.   அக் கூட்டத்தில்   ஆடியோவில் பேசியதை  இங்கு எல்லோரும் கேட்பதற்கு யு ட்யூப்பில் பதிவு செய்துள்ளேன்.

கசடதபற இதழ்

மூன்று கவிதைகள்


நகுலன்







1.


நாலும் நடந்தபின்
நானாவிதமாக என் மனம்
போன பின்
நானொரு மரமானேன்

2.
நின்றநிலை தவறாமல்
சென்றவிடம் சிதறாமல்

ஈன்ற தாயினும்
இறந்து மறைந்த
தந்தையினும்
சாலச் சிறந்தது
ஒன்றுன்றுன்றுன்று
இன்று வரை

காலஞ் செல்லச் செல்லச் செல்லக்
கோலங்கள் கலையும்
கைவல்ய ஞானம் கிட்டும்
இன்று வரை

3.
நானொரு பேயானேன்
ஆனபின்
ஏனோ நான்
சூடாகப் பிணந்தின்னச்
சுடுகாட்டைச் சுற்றுகின்றேன்
ஒரு குரல் கூறும்
“ஆசை, மச்சான்
ஆசை”

ஏதோ தாள் கண்ணில் பட்டது.  பார்த்தால் கசடதபற என்ற இதழின் ஒரு பக்கம்.  பெரிய அளவில் வந்த கசடதபற மாறினபிறகு சின்ன அளவில் கசடதபற சில மாதங்கள் வெளிவந்தன. அதன் ஒரு பக்கம் மட்டும் கண்ணில் பட்டது.  அட்டைப் படம் நன்றாக இருந்தது.  உள்ளே வித்தியாசமான நகுலன் கவிதை.  இரண்டையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

விமோசனம் என்ற கதை

அழகியசிங்கர்

சமீபத்தில் அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் என்ற நாவலை எடுத்து வைத்துக்கொண்டேன்.   அந்த நாவல் எனக்கு முழுவதும் மறந்து விட்டது.  கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்னால் படித்தது.  அதேபோல் 18வது அட்சக் கோடு, தண்ணீர், ஆகாயத் தாமரை போன்ற நாவல்களும்.  மானசரோவர் என்ற நாவலை  இரண்டு முறை படித்திருக்கிறேன்.  2011ல் அதைப் படித்து அதைப் பற்றி எழுதியிருக்கிறேன்.  
நேற்று திரும்பவும் எடுத்து கரைந்த நிழல்கள் நாவலைப் படிக்கத் தொடங்கினேன்.  படித்த ஞாபகமே வரவில்லை.  அதேபோல் ஏகப்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் எல்லாம் படித்திருக்கிறேன்.  திரும்பவும் படிக்கும்போது புதியதாக படிப்பது போல் உள்ளது.  இது ஏன்? எந்தப் புத்தகம் படித்தாலும் நான் விமர்சனம் மாதிரி எனக்குத் தோன்றுவதை எழுதி வைத்து விடுகிறேன்.  கிட்டத்தட்ட 17 புத்தகங்களுக்கு நான் எழுதி விட்டேன்.  என் நோக்கம் நாம் படிக்கும் புத்தகங்களைப் பற்றி நான் எழுதியதை வாசிப்பவர்களும் படிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கம்தான்.  
அசோகமித்திரனின் சமீபத்தில் வெளிவந்த நடைவெளி பயணம், இந்தியா 1948 என்ற புத்தகங்களுக்கு விமர்சனம் எழுதி உள்ளேன்.  தொடர்ந்து பல புத்தகங்களைப் படித்துக் கொண்டு போவதால்,  திரும்பவும் விமர்சனம் எழுதிய புத்தகங்களைப் படிக்க முடியுமா என்பது தெரியவில்லை.    அதனால் எழுதி வைத்துவிடுகிறேன்.  ஒரு சந்தர்ப்பத்தில் அந்தப் புத்தகங்களை பார்க்காமல் போய்விட்டாலும், நான் எழுதியதைத் திரும்பவும் படிக்க நேர்ந்தால் அந்தப் புத்தகம் பற்றிய ஞாபகம் வரும் என்று தோன்றுகிறது. 
நேற்று படிக்க எடுத்த கரைந்த நிழல்கள் புத்தகத்தைத் திரும்பவும் படிக்கும்போது நான் சோகத்தில் ஆழ்ந்து விட்டேன்.  கொஞ்சங்கூட ஞாபகத்திற்கு வரவில்லை.  சினிமாவில் பணிபுரியும் ஊழியர்களைப் பற்றிய நாவல் என்றுதான் தெரிந்ததே தவிர, முழு நாவல் எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லை. 
அதேபோல் அசோகமித்திரன் எழுதிய சிறுகதையான விமோசனம்.
கொஞ்சங்கூட ஞாபகத்திற்கு வரவில்லை.  ஆனால் படித்து முடித்தபின் தோன்றியது, இந்தக் கதையை ஏற்கனவே படித்திருக்கிறோம் என்று.  1961 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்தக் கதையைத் திரும்பவும் எடுத்துப் படிப்பதை என் பாக்கியமாகக் கருதுகிறேன்.    
அசோகமித்திரன் நடுத்தர வாழ்க்கைச் சூழ்நிலையைப் பிரதிபலிக்கும்படி பல கதைகள் எழுதியிருக்கிறார்.  அந்த வாழ்க்கை சூழ்நிலையில் காணப்படும் அவலம் அவர் கதைகளில் தட்டுப்படும்.  ஆண் பெண் இருபாலருக்கும் உண்டாகும் முரண்பாடை தத்ரூபமாக விளக்கியிருப்பார். 
இந்தக் கதையில் முக்கிய கதாபாத்திரமாக இயங்குவது சரஸ்வதி என்ற பாத்திரம்தான்,  ஆரம்பத்திலிருந்து சரஸ்வதி வருகிறாள்.  அவள் மீது நமக்கு ஒருவித பச்சாதாபம் ஏற்படுகிறது.  முழுவதும் படித்தப்பின் இந்தக் கதையில் நான் ஒன்று கவனித்தேன்.  சரஸ்வதியின் கணவன் பெயரை எந்த இடத்திலும் ஆசிரியர் குறிப்பிடப்படவில்லை என்பதுதான் அது. 
சரஸ்வதியின் கணவனைப் பற்றி ஒரு இடத்தில் விவரிக்கும்போது முழு விவரத்தையும் இப்படி கொண்டு வந்து விடுகிறார்.  
‘வெற்றிலை பாக்கு புகையிலை, மாதம் நூற்றுமுப்பது ரூபாய் சம்பளம், பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை இருமல், ஜ÷ரம், ஒரு தமக்கை, இரண்டு தங்கைகள், முன்கோபம், சில சமயங்களில் கை ஓங்கியும் அறைந்து விடுவது, தமிழ்ப் பத்திரிகைகளி; வெளியாகும் தொடர் கதைகளை விடாமல் படிப்பது, இருபத்திரண்டு ரூபாய்க் குடக்கூலி, வீட்டுக்காரரிடம் ஒரு நாள் உறவு, ஒரு நாள் சண்டை, வாரத்திற்கொரு சினிமா என்பதுதான் அவன் வாழ்க்கையாக இருந்தது.’
கணவனிடம் பயப்படுகிறாள் சரஸ்வதி.  எதுவாகயிருந்தாலும் முணுக்கென்று கோபப்படுபனாக இருக்கிறான்.  பூஜைக்காக ஒரு இடத்திற்கு மனைவியை அழைத்துக்கொண்டு போகிறான்.  அங்கு ஒரு பெரியவரைப் பார்க்கிறாள்.  அவரிடம் எல்லோரும் பக்தியுடன் இருக்கிறார்கள். சரஸ்வதியும் அவரைப் பார்த்து நெகிழ்ச்சி அடைகிறாள். அங்கிருந்து திரும்பும்போது குழந்தை பை எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு பஸ்ûஸப் பிடிக்க தடுமாறுகிறாள் சரஸ்வதி.  எல்லார் முன்னிலும் கணவன் அவளை அவமானப்படுத்துகிறான்.பெரிய கட்டை விரலில் காயம் படுகிறது. அதைக்கூட பொருட்படுத்தவில்லை அவள்.  இந்தக் கதையில் இது ஒரு காட்சி.  ஒவ்வொரு துளியிலும் சரஸ்வதி கணவனுக்காக அளவு கடந்து பயப்படுகிறாள்.  வறுமை வேறு.  சாப்பிடுவதற்கு எதுவும் இருப்பதில்லை.  அதைக் கேட்பதற்குக் கூட பயப்படுகிறாள்.  
பால் புகட்டும் புட்டியை பூஜைக்காக சென்ற இடத்தில் மறந்து வைத்துவிட்டது ஞாபகத்திற்கு வருகிறது.  குழந்தைக்கு எப்படி பால் கொடுப்பது.  களேபரத்துடன் தம்ளரில் குழந்தைக்கு பால் கொடுக்க முயற்சி செய்கிறாள்.  குழந்தை வீறிட்டு அழுகிறது.  இந்த இடத்தில் அவள் கணவன் தூக்கத்திலிருந்து எழுந்து விடுகிறான்.  அவளை நோக்கி அவன் கத்துகிறான்.
“மூதேவிக்குக் குழந்தைப் பால் கொடுக்கறதற்குத் துப்புக் கிடையாது.  ஒரு நிமிஷம் அழாமல் வைத்துக்கொள்ளத் தெரியாது..ஏய், அதை நிறுத்து,”என்கிறான்.
ஆனால் குழந்தை வீறிட்டு அழுகிறது.  அவன் படுக்கையிலிருந்து எழுந்து சரஸ்வதியை நையப் புடைக்கிறான்.  வெளியே போ என்று துரத்துகிறான்.  
இந்த இடத்தில்தான் கதையில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது.  திடீரென்று சரஸ்வதி எழுந்து நின்று,”உம்” என்கிறாள் கணவனைப் பார்த்து.  அவன் திடுக்கிட்டுப் பயந்து பின் வாங்குகிறான். சரஸ்வதி கண்களை அகல விர்த்து, “உம், ஜாக்கிரதை,” என்கிறாள்.  குழந்தை அழுகையை நிறுத்துகிறது.  ஆனால் அவள் கணவன் அவளிடம் பேசுவதில்லை.  ஒருநாள் இரண்டு நாள் என்று அவன் அவளுடன் பேசவே இல்லை.  
பொறுக்க முடியாமல் அவன் இருக்கும்போது, வீட்டில் சமையல் செய்ய எந்தப் பொருளும் இல்லை என்கிறாள்.  அவன் எல்லாவற்றுக்கும் உம் கொட்டிவிட்டு பேசாமல் இருக்கிறான்.
சரஸ்வதி அவன் கால்களைப் பிடித்துக்கொண்டு ஓவென்று கதறி அழ ஆரம்பிக்கிறாள்.  
“நான் என்ன பாபம் செய்தேன்? ஏன் இப்படி இருக்கிறீர்கள்? ஏன் என்னோடு ஒன்றும் பேசாமலிருக்கிறீர்கள்? எனக்கு உங்களை விட்டால் வேறு யார் கதி?ýý என்றெல்லாம் கெஞ்சி அழுகிறாள்.  
ஒரு கட்டத்தில் சரஸ்வதி இப்படி கூறுகிறாள் : üüஎன்னை அடியுங்கள்.  நன்றாக எலும்பொடிய அடியுங்கள்.  நான் நீங்கள் அடிப்பதை எதிர்த்துத் திமிறினதற்குத்தானே இப்படி இருக்கிறீர்கள்? இதோ அடியுங்கள்.  நன்றாக அடியுங்கள்.ýý 
இந்த இடத்தில் சரஸ்வதி தன் துயரத்தைப் போக்க அவள் கணவனுடன் பார்த்து வந்த பெரியவரைப் பார்க்க பூஜை செய்த இடத்திற்குப் போகிறாள்.  அங்கே அந்த மகானைப் பார்க்கிறாள்.  தன் துயரத்தையெலலாம் கொட்ட நினைக்கிறாள்.  ஆனால் அவளால் முடியவில்லை.  அவரைப் பார்க்கும்போது கண்ணீர் பெருகுகிறது.  சொல்ல நினைக்கிறாள்.  முடியவில்லை.  மகான் அனுதாபத்துடன் அவளைப் பார்த்தாலும், அந்த இடத்தை விட்டு ஜபம் செய்யப் போய்விடுகிறார். சரஸ்வதியால் ஒன்று சொல்ல முடியாமல் போய்விடுகிறது.  இது மாதிரி நிலை பலருக்கும் பல சந்தர்ப்பங்களில் ஏற்படாமல் இருப்பதில்லை.  
இனிமேல் மகானைப் பார்த்து தன் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள முடியாது என்று அந்த இடத்தை விட்டு வீட்டிற்குப் போகிறாள். அவள் கணவன் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.  ஏன் என்றுமே வந்திருக்க வில்லை என்று முடிக்கிறார் அசோகமித்தரன். 
கதையின் கடைசி வரியில் எல்லாத் துயரத்தையும் கொண்டு வந்து விடுகிறார்.  பெண்கள் தினத்தன்று இந்தக் கதையைப் படித்தேன்.  பெண்கள் துயரத்தை அசோகமித்திரனைத் தவிர வேற யாராôவது எழுதியிருக்க முடியுமா என்பது தெரியவில்லை.    இந்தக் கதையில் இந்தத் துயரத்தை வெளிப்படுத்தும் விதம் சிறப்பாக இருக்கிறது.  இந்தக் கதை 1961 ல் எழுதப்பட்டுள்ளது.  இப்போது உள்ள பெண்கள் கணவனைத் தேர்ந்தெடுப்பதற்கே கவனமாக இருப்பார்கள்.  பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.  மனைவிகளைப் பிரிந்த கணவர்கள்தான் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
                         எல்லோரும் படிக்க வேண்டிய கதை இது.

பிரேதத்துடன் ஒரு பயணம்

ராஜகோபாலன் 


குறிப்பு :
பிரேதத்துடன் ஒரு பயணம் என்ற கதை நவீன விருட்சம் 99வது இதழில் வெளிவந்துள்ளது.  இதை எழுதியவர் ராஜகோபாலன்.  என் நீண்ட கால நண்பர். கல்லூரியில் படிக்கும் காலத்தில் ‘காரைத் தொழுவீர் களித்து’ என்ற ஈற்றடியில் 10 வெண்பாக்கள் எழுதி என்னை ஆச்சரியப்படுத்துவார்.  நாங்கள் இருவரும் சேர்ந்து ‘பாரத வேலை இல்லாதவர் சங்கம்’ என்ற ஒன்றை 1978ஆம் ஆண்டில் ஆரம்பித்தோம்.  அதில் ராஜகோபாலன் தலைவர்.  நான் செயலாளர்.  அந்தச் சங்கத்தில் நாங்கள் இருவரும்தான் இருந்தோம். உறுப்பினர் யாரும் சேரவில்லை. கொஞ்ச நாட்களில் எனக்கும் வங்கியில் வேலை கிடைத்துவிட்டது.  தலைவர் ராஜகோபாலன் தடுமாறிக்கொண்டிருந்தார். அப்போது எந்த வேலையில் வேலை இல்லாதவர் சங்கம் ஆரம்பித்தோமோ தலைவருக்கு மட்டும்  வேலை கிடைக்கவில்லை என்று கிண்டல் செய்வேன். இன்னும் சில ஆண்டுகளில் அவருக்கும் நான் பார்த்த வங்கியில் வேலை கிடைத்துவிட்டது.  அவருக்கு ஒரு கண் தெரியாது.
          புத்தகம் எல்லாம் படிக்க மாட்டார்.  எனக்கு ஒரு கதை எழுதி அனுப்பினார். அந்தக் கதையைப் பிரசுரம் செய்துள்ளேன்.  குவிகம் என்ற இலக்கிய அமைப்பு நடத்திய சிறுகதை வாசிப்புக் கூட்டத்தில் இந்தக் கதையைப் படித்தார்.  நாம் எழுதிய முதல் கதையை எல்லோர் முன் படிக்கப் போகிறோம் என்று அவர் முகத்தில் ஏற்பட்ட சந்தோஷத்தை என்னால் மறக்க முடியாது. முன்னதாகவே வேலையை அவர் விட்டதால் அவருக்கு பென்சன் தொகை குறைவாக வருகிறது.  ஆனால் அவரால் தினமும் குடிக்காமல் இருக்க முடியாது. அவரைப் பார்க்கும்போது அதை நிறுத்தும்படி கேட்டுக்கொள்வேன்.  ஆனால் அவரோ யார் பேச்சையும் கேட்க மாட்டார்.  முகநூல் நண்பர்கள் இக் கதையைப் படித்து விட்டு இதற்கு பத்துக்கு எத்தனை மார்க் போடுவது என்பதைத் தெரிவிக்கவும்.
நான் பதவி மூப்பு அடையும் தறுவாயில் எடுத்தப் புகைப் படத்தில் வலது ஓரத்தில் நின்று கொண்டிருப்பவர்தான் ராஜகோபாலன்.
சிறுகதை
 பிரேதத்துடன் ஒரு பயணம்
                            
     அன்று வியாழக்கிழமை. மதியம் ஒரு மணி வாக்கில் வங்கியில் தனியாக அமர்ந்து வேலை செய்துகொண்டிருந்தேன். என் நண்பர் ஒருவர் வந்தார். அவருக்குப் பலவகைகளில் நான் உதவியிருக்கிறேன். அவர் தயக்கத்துடன், “என்னோடு கொஞ்சம் வர முடியுமா சார்?” என்றார் .
“என்ன விஷயம்?” என்று  கேட்டேன்.
அவர் ” தன் தம்பியைக் காணவில்லை”  என்றார்.
“நான் காலையில் தானே பார்த்தேன் ?”
“அவன் இல்லை சார், இவன் வேறு ஒரு தம்பி” என்றார்
“எப்போதிலிருந்து காணவில்லை?”
“செவ்வாய்க்கிழமை காலையில் போனான். அன்று திரும்பி வரவில்லை. அவன் சைக்கில்ல சென்று கடை கடையா சரக்கு சப்ளை செய்வான். அன்று பட் ரோடு போயிட்டு கே கே நகர் போகப் போவதாக அவன் மனைவியிடம் சொல்லியிருக்கான். செவ்வாய் இரவும் வரவில்லை, புதன் இரவும் வரவில்லை.  கம்பனியில் வேலை இருக்குமோ என்று அங்கும் விசாரித்தோம். அங்கேயும் வரவில்லை. இப்போது ஒரு சேதி வந்தது. ஈக்காடுதாங்கல் ஆற்றில் ஒரு பிணம் மிதப்பதாகவும், போலீசார் அதைக் கரை ஏற்றுவதாகவும்  சொன்னார்கள். ஒருவேளை இவன்தானா என்று பார்த்துவரப் போகணும். நீகள் கூட வந்தீங்கன்னா போலீசைப் பார்த்துப் பேச வசதியாயிருக்கும் ” என்றார்.
வங்கி மாடியில் குடியிருந்த மேலாளர் அவர்களைச் சந்தித்து விபரம் கூறி, மதியம் லீவு சொல்லிவிட்டு புறப்பட்டோம். நண்பர் சைக்கிளில் செல்லாம் என்றார், நான் வேண்டாம்,. ஆட்டோவில் போகலாம் என்று கூறினேன்.
இருவரும் ஆட்டோவில் ஈக்காடுதாங்கலுக்கு விரைந்தோம். அங்கு இருநூறு, முன்னூறு பேர் கும்பலாக நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். கூட்டத்தை விலக்கி வாராவதி அருகே சென்றோம். போலீஸ்காரர்கள் பிணத்தைக் கரை ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அவசரமாக நாங்கள் அருகில் செல்வதற்குள்  பிணத்தை போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுவிட்டனர்.  அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது கே கே நகர் ஸ்டேஷனுக்குப் போவதாகச் சொன்னார்கள்.
நாங்களும் கே கே நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தோம். அங்கும் பல விதமான கேச்களுக்கு ஒரே கும்பல். இன்ஸ்பெக்டரைப் பார்க்கமுடியவில்லை. 4 மணிக்குத்தான் பார்க்கமுடிந்தது.
“என்ன விஷயம்?”
“இறந்தவர் என் தம்பி?” 
“எப்படிச் சொல்கிறீர்கள்?”
“அவன் போட்டிருந்த சட்டை மற்றும் உள்ளாடைகளை வைத்து.”
“சரி, சரி. பாடி போஸ்ட்மார்டத்திற்கு நிபி போய்விட்டது. அங்கு போய் பாருங்கள்.”
உடனே நிபிக்கு அதே ஆட்டோவில் விரைந்தோம். பாடி போஸ்ட்மார்டம் பண்ணித் தையல் போட்டுக்கொண்டிருந்தார்கள். விவரம் சொன்னதும் “பாடியை எங்கே கொண்டு போறீங்க?” என்று கேட்டார்கள்.
“எங்க ஊர் திருச்சி அருகே.. அங்கேதான் கொண்டுபோறோம். 
“அப்ப ஏழு எட்டு மணிநேரம் ஆகுமே? அவ்வளவு நேரம் பாடி தாங்காது. ஏற்கனவே இரண்டு மூணு நாள் ஊறி உப்பிப் போயிருக்கே. அதோட லோக்கல்னா நாலைஞ்சு தையல் போட்டுக் கொடுத்திடுவோம். அவ்வளவு தூரம் போகணும்னா நல்லா பேக் பண்ணி நிறையத் தையல் போடணும். செலவாகுமே?”
“பரவாயில்லை. நீங்க கேக்கறதைக் கொடுத்திடறோம். எங்க அம்மா அங்கே இருக்காங்க. அவங்க பார்க்கணும்.”
“சரி, ஒரு ஐநூறு ரூபாய் கொடுங்க”
உடனே பணம் கொடுக்கப்பட்டது
இந்த சம்பாஷனையின் போது ஒரு தினப்பத்திகை நிருபர் என்னிடம் வந்து, இறந்தது யார், பெயர் என்ன வயசு என்ன, என்ன தொழில், திருமணமானவரா,எத்தனைக் குழந்தைகள், என்று எவ்வாறு இறந்தார் போன்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். எனக்கு எரிச்சல் தாங்கவில்லை. செவ்வாய்கிழமை மதியம் நடந்த விபத்தைப் பற்றி வியாழன் அன்று மாலை விவரம் சேகரிக்கிறார். இது வெள்ளியோ  சனியோ பத்திரிக்கைச் செய்தியாக வரும்.
போஸ்ட்மார்ட்டம் முடிய மாலை 7 மணி ஆகிவிட்டது. பிணக்கிடங்கு ஊழியர் “நன்றாகத் தைத்திருக்கிறேன். நீங்கள் கவலைப்படாமல் எடுத்துச் செல்லலாம். யூடிகொலன்  பாட்டில் நாலைந்து வாங்கிக்கொள்ளுங்கள். பிணப் பெட்டியில் கற்பூரம் மற்றும் மிளகு நிறைய போட்டு எடுத்துச் செல்லுங்கள். ரொம்ப குலுக்கல்  இல்லாமல்  வேகமாகச் செல்லாமல், நிதானமாக எடுத்துச் செல்லுங்கள். நாற்றம் தாங்க முடியாது. அவ்வப்போது   யுடிகொலன்  தெளித்து வாருங்கள்” என்று நிறைய அறிவுரை கூறி பிணத்தை ஒப்படைத்தார்.
இதற்குள் வேனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரூ. 1500 வாடகை. சுமார் 300 கிலோமீட்டர் செல்ல வேண்டுமே. என் நண்பரின் உறவினர்கள் ஆறு பேர், நான், என் நண்பர். ஒரு சவப்பெட்டியில் கிடத்தி, ஆஸ்பத்திரி  ஊழியர்  சொன்னபடி ஏற்பாடு செய்து, தேவையானவற்றை வாங்கிக்கொண்டு புறப்பட்டோம். 
வண்டி செங்கல்பட்டைத் தாண்டுவதற்குள் வேனில் இருந்தவர்கள் வேனை நிறுத்தச் சொன்னார்கள். என்ன விவரம் என்று கேட்டதற்கு, ஒன்றுமில்லை என்றார்கள் நானும் கொஞ்சம் இறங்கி நின்றேன். வேனில் காலை நீட்ட வசதியில்லை. இருபுற இருக்கைகளுக்கு இடையில் சவப்பெட்டி. இந்தப்பக்கம் நாலு பேர். அந்தப் பக்கம் நாலு பேர். முன்னால் இருவர். கீழே இறங்கிய 3 பேர் குபுக் குபுக்கென்று வாந்தி எடுத்தார்கள். பின்னர் மேலும் 4 பேர் வாந்தி எடுத்தார்கள். நான் மட்டும் ஏனோ வாந்தி எடுக்கவில்லை . மதியம் ஒரு மணிக்கு சாப்பிடச் செல்லவேண்டிய நான், நண்பரின் வருகையால் சாப்பிடவில்லை. ஒரு வேளை அதுதான் காரணமோ என்னவோ?
திண்டிவனம் செல்லும்போது மணி 9.30 ஆகிவிட்டது. பிறகு எங்கும் ஓட்டல்கள்  திறந்திருக்காது என்பதால் அனைவரும் பசி எடுத்து..  சாப்பிடலாம் என்றார்கள். யாரவது ஒருவராவது சவப்பெட்டி அருகில் இருக்கவேண்டும். நான் நானாகவே “நான் இங்கு இருக்கிறேன். இது நகரமாகையால் , ஒரு வேளை வாடை தாங்காமல் யாரவது போலீசில் சொல்லி அவர்கள் வந்து விசாரித்தால்.. நான் இருந்தால்தான் நல்லது.” என்றேன். அவர்கள் அனைவரும் படிக்காத வியாபாரிகள். அதனால் இதற்குச் சம்மதித்தார்கள். என் நண்பர் மட்டும், “டிரைவரும் கூட இருக்கட்டும்  உங்களுக்கு உணவு வாங்கி வருகிறோம்” என்றார். நான் மட்டும் தனியாக  சவபெட்டியுடனும் டிரைவர் முன் சீட்டிலும் அமர்ந்திருந்தோம்.
சாப்பிடப் போனவர்கள் திரும்பும்போது அரை பாட்டில் பிராந்தியும் கொண்டு வந்தார்கள் அனைவரும் குடித்திருந்தனர். என்னை மது அருந்துமாறு வற்புறுத்தி சாப்பிட வைத்தார்கள். நான் மது அருந்தினேன். உணவு உண்ணவில்லை.
ஒருவழியாக இரவு 3 மணிக்கு அவரது  ஊரை அடைந்து அவரது வீட்டில் சவப் பெட்டியை இறக்கி, உள்ளே வைத்தார்கள். தொலைபேசியில் முன்னமே விவரம் அறிவிக்கப் பட்டிருந்ததால்  தயார் நிலையில் இருந்தார்கள். உள்ளே ஒரே ஒப்பாரி சத்தம். இதற்கிடையில் ஒரு பெண்மணி வண்டியில் வந்தவர்கள் எல்லோரும்  வீட்டின் வெளியில் நின்றிருந்த இடத்திற்கே வந்து காப்பி கொடுத்தாள்.என் நண்பர். என் டம்ளரை வாங்கி, அந்தப் பெண்மணியிடம்,   “அவரு பிராமணன். இன்னும் கொஞ்சம் பால் ஊற்றிக் கொண்டுவா, என்றார். என் மணம் நெகிழ்ந்தது. தன் தம்பி இறந்திருக்கும் தருணத்திலும், இவர் நமக்கு மரியாதை செய்கிறாரே என்று வருந்தியது. இரவெல்லாம் என்ன நடந்தது என்று பேசிக் கொண்டிருந்தோம். உறவினர், கிராம மக்கள் அனைவரும் வந்து விவரம் கேட்டபடி இருந்தனர்.
மறுநாள் காலை 6 மணிக்கு, வெட்டியான் வீட்டிற்கே ஆளனுப்பி வரவழித்து, பேரம் பேசி, பணம் கொடுத்து அடக்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 7 மணி வாக்கில் மெயின் ரோடில் இருந்த டீக்கடை போன்ற ஒரு ஹோட்டலில் காலை உணவு அருந்தினோம். 10 மணிக்கு வெட்டியானிடமிருந்து செய்தி வர, சவ ஊர்வலம் புறப்பட்டு மயானத்தை அடைந்தது. லேசாகத் தூறல் ஆரம்பித்திருந்தது. வெட்டியான் அது போதும் என்று நினைத்தான். ஆனால், ஊர்ப்பெரியவர் “இன்னும் 2 அடி தோண்டவேண்டும். இது காட்டுப் பகுதி.ஓநாய்களும், நரிகளும் நடமாடும் இடம் இன்னும் ஆழம் தோண்டவேண்டும்.” என்றார். வெட்டியான் மேலும் ஆயிரம் ரூபாய் கேட்டான்.  வாக்குவாதம் தொடங்கி, கைகலப்பு ஆகும் அளவிற்கு இருந்தது. மழை கனமாகக் கொட்டத் தொடங்கியது. சச்சரவு முடிவடையும் என்று தோன்றவில்லை.
நான் நபரிடம், “ஏற்கனவே 4 நாள் ஊறிவிட்ட பாடி. வெட்டியான் பிடிவாதமாக இருக்கிறான். கொடுத்துவிடுங்கள்” என்றேன்.  
அவர் ரகசியமாக, “பணம் இல்லை. ஏற்கனவே கடன் வாங்கிவந்த பணமெல்லாம் செலவாகிவிட்டது” என்றார்.
மழையில் பிணமும், கூட வந்த 50 பேரும் நனைந்துகொண்டு இருந்தோம். எனவே நான், “அவன் தோன்டவில்லை என்றால், நான் தோண்டுகிறேன் ” என்று குழியில் இறங்கி, மண்வெட்டி கடப்பாரை எடுத்துத் தோண்ட ஆரம்பித்தேன். கிராம மக்கள் பதறிவிட்டனர். எல்லோரும், “நீங்க மேல வாங்க சார்”  என்றார்கள்.
“இது ஒண்ணும் சரிப்பட்டு வராது” என்று சொல்லித் தொடர்ந்தேன். அப்போது அங்கு வேடிக்கைப் பார்க்க வந்திருந்த கிராம் இளைஞன்,  “நான் தோண்டுகிறேன், நீங்க ஏறுங்க சார். அவன் என்னை என்ன  பண்ணிடுவான், பார்துடறேன்.” என்று புதை குழியில்  குதித்தான். அவனிடம் பொறுப்பை ஓப்படைத்தபின் மேலே ஏறி வர ஒருவர் கை கொடுக்க, ஏறும்போது சறுக்கி விழ இருந்த என்னை மற்றொருவரும் கை கொடுத்துத் தூக்கிவிட்டார்கள். ஒரு வழியாக அடக்கம் செய்து முடித்தோம்.
பின்னர் மதிய சாப்பாடு மெயின் ரோடு விடுதியில் சாப்பிட்டபின், காத்திருந்த வேனில் ஏறி, சென்னை வந்தடைந்தோம்  மறுநாள் என் நண்பர் நடந்ததை என் அலுவகத்தில் எல்லோரிடமும் விவரிக்க, ஆண், பெண்  சக ஊழியர்கள் என்னை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். நான்தான் அன்றைய ஹீரோ. எனக்கென்னமோ,  63 வயதில் அதை நினைக்கும்பொழுது, என் வாழ்வில் நடந்தவைகளை நினைத்துப் பார்க்கும்பொழுது, என்னை ஒரு ஹீரோவாக நினைத்துப் பார்க்க முடியவில்லை. 

புரியவில்லை

ஸிந்துஜா
அந்தப் பெண் வந்து கொண்டிருந்தாள். வெகு தூரத்தில் அவள் தலை தெரிந்தது. அது ஒரு மத்தியான வேளை வெய்யில் வழக்கம் போல அவ்வளவு அதிகமாக இல்லை. சோம்பேறித்தனத்துக்கு  வரவேற்பு கொடுத்துக் கொண்டிருந்த சூழல். சாப்பாட்டை  முடித்து விட்டு  திண்ணையில் சண்முகம் சாய்ந்து கொண்டிருந்தான். வேலைக்குப் போய் இரண்டு  மாதங்களாகி  விட்டது. அது என்னவோ வேலைக்குப் போவது என்றாலே அவனுக்கு வேப்பங்காயாக இருந்தது. அவன் நண்பர்கள் எல்லாரும் பெரிய வேலையோ , சின்ன வேலையோ  போய் வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவனைப் பார்க்கும் போதெல்லாம் நீ கொடுத்து வச்சவன்டா என்று சொல்லிக்  கொண்டிருந்தார்கள். அவன்கள் சொல்லுவது கேலியாகவா அல்லது பொறாமையினாலா என்று  தெரியவில்லை.

தெருவில் இரண்டு நாய்கள் ஒன்றை ஒன்று விரட்டிக் கொண்டு ஓடின. ஒன்று ஆண்  நாயாகவும், இன்னொன்று பெண் நாயாகவும்  இருந்தன. இந்தத் தெரு நாய்கள்தான் அவை என்று சண்முகம் சலிப்புடன் நினைத்துக் கொண்டான். ஒவ்வொரு வீட்டிலும் எதையாவது போட்டு அவற்றின் பசியை ஆற்றி விடுகிறார்கள். அவை செய்யும் ஒரே வேலை இந்த விரட்டல்தான். அவைகளுக்கான புதியவரைப் பார்த்துக் குரைப்பது. இரவு காவல் காப்பது, நன்றியுடன் வாலை ஆட்டுவது போன்ற பணிகளைச் செய்ய மறந்து விட்டன போல அவை நடந்து கொண்டன. கொடுத்து வைத்த ஜன்மங்கள் என்று சண்முகம் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

சண்முகம் தலையைச் சாய்த்து மறுபடியும் தெருக் கோடியைப் பார்த்தான். இப்போதும் அந்தப் பெண்ணின் தலை தெரிந்தது. முன்பு பார்த்த இடத்திலிருந்து சற்று முன்னேறியிருப்பாள்  போல. வழியில் யாரையாவது பார்த்து நின்று பேசிவிட்டு மறுபடியும் நடக்க ஆரம்பித்திருப்பாள். 
நாயர்  கடைக்குப் பக்கத்திலிருந்த அய்யர் வீட்டில் அவள் வேலை பார்க்கிறாள் என்று அவன் தெரிந்து வைத்திருந்தான். இன்னும்  அவள் அரை மணி கழித்து இந்த வழியாக அசைந்து அசைந்து அவன் மனதை வெட்டியபடி நடந்து போவாள். கடந்த இரண்டு வாரமாக அவளை அவன் தினமும் இந்த நேரத்தில் பார்க்கிறான்.

“படுக்கை போட்டாச்சா?” என்று கேள்வி வந்த திசையைப் பார்த்தான் சண்முகம். பக்கத்து வீட்டு  கோவாலு மாமா. போன மாதம்தான் ஸ்கூல் வாத்தியார் வேலையிலிருந்து ரிடையர்  ஆனார்   தினமும் அவனைப் பார்த்து இந்த மாதிரி  குசலம் விசாரிப்பார். அதுவும் இந்த ஒருவாரம், பத்து  நாளாக இந்தப் பொழுதுக்கு அவனைப் பார்த்துக் கேக்க, பேச வந்து விடுகிறார்.  என்ன செய்வது? வேறு வேலை இல்லை. ரிடையர் ஆனதுக்கு அப்புறம். டியூசன் எடுக்கிறேன் என்று அவர் கிளம்பிய போது  இவ்வளவு வருஷம் பாத்த வேலை  எல்லாம் போதும் என்று அவருடைய ஒரே  மகள் செண்பகம் தடுத்து விட்டாள். அவர்கள் குடும்பத்துக்கு வேணும் என்கிற அளவு பணம் இருந்தது.  கோவாலு மாமாவின் மனைவி ரெண்டு வருஷத்துக்கு முன்பு மாரடைப்பு என்று போய் விட்டாள்.  செண்பகத்துக்கும் ஊரோடு பார்த்துக் கலியாணம் பண்ணி வைத்தார். ஆனால்  அவள் முக்கால்வாசி நாள் அப்பாவுடன்தான் இருக்கிறாள். ‘ உள்ளூர் என்று  செண்பகம் அப்பனுக்கு உதவியாக  கூட வந்து இருக்கிறாள் ‘ என்று சண்முகம் நினைத்துக் கொண்டிருந்தான். அப்படியில்லை என்று கொஞ்ச நாளைக்கு முன்தான் தெரிந்தது . மாசா மாசம் பென்சன், உள்ளூரில் உள்ள நான்கு வீடுகளில் இருந்து வாடகைப் பணம், வயலில் இருந்து அரிசி பருப்பு என்று வருஷாந்திர சாமான்கள் வருகை என்று வசதிக்கு என்னவோ ஒரு குறைச்சலும் இல்லாமல் இருந்தார். 
கோவாலு மாமா அவனை நெருங்கி வந்தார். அவன் சாய்வு நிலையில் இருந்து விலகி, தானும் உட்கார்ந்து கொண்டு அவருக்கும்  உட்கார இடம் கொடுத்தான்.

“வெயிலே வரமாட்டேங்குது இல்லே” என்றார்.

சண்முகம் தலையை அசைத்தான்.
“வீட்ல யாரும் இல்லையா?” என்று கேட்டார்.

அவன் வீட்டில் அவனைத் தவிர அவன் அம்மா மட்டும்தான் இருக்கிறாள், அவளும் வேலைக்கு மில்லுக்குப் போயிருக்கிறாள் என்று அவருக்குத் தெரியும்  என்று சண்முகத்துக்கு தெரியும்.. பொழுதைக் கழிக்க பேச்சுக்கு அலைகிறார்.

.”இல்ல, அம்மா மில்லுக்கு போயிருக்கு”  என்றான்.

அப்போது தபால்காரன் முத்து  அங்கு வந்தான். சண்முகம் வீட்டு வாசலில் நின்றுகொண்டு கையிலிருந்த தபால் கட்டைப் பிரித்து காகிதங்களைப் பார்த்தான். ஒரு கவரை உருவி , சண்முகத்துக்கு  அருகில் வந்து அதைக் கொடுத்தான். கோவாலுவைப் பார்த்து “சாப்பாடு ஆயிடுச்சா நயினா?” என்று கேட்டுவிட்டு, பதிலை எதிர்பாராமல் நடந்தான். பதில் சொல்ல வாயைத் திறந்த கோவாலு, எதோ கொட்டாவி வந்ததைப் போல் வாய்க்கு அருகில் வலது கையைக் கொண்டு சென்று வாயை மூடிக் கொண்டார். சண்முகம் கவரைத் திறந்து பார்த்தான்.

“என்ன வேலைக்கு யாராச்சும் கூப்பிட்டிருக்கானா?” என்று கேட்டார்.

முத்துவைப் போல்  இருக்கலாமா என்று சண்முகம் ஒரு கணம் யோசித்தான். ஆனால் இவன் தினமும் இவர் மூஞ்சியில் முழிக்க வேண்டும், முத்துவின் அதிர்ஷ்டம் தனக்கு இல்லை என்று நினைத்துக் கொண்டே “இல்லே. எதோ வெட்டி கடுதாசி. கோவில் கும்பாபிசேகத்துக்கு நிதி குடுன்னு கேட்டு” என்றான் சண்முகம்.

“இப்ப இது ஒரு பிசினசா  போச்சு.” என்றார் கோவாலு.

வேலை, பிசினஸ் என்றெல்லாம் அவர் பேசுவதைத் தவிர்க்க விரும்பினவனாக சண்முகம் “நேத்திக்கு டாக்டரை பாக்கப் போனிங்களே, என்ன சொன்னாரு?” என்று கேட்டான்.

“சாப்பிடாதேன்றான், குடிக்காதேன்றான், ரொம்ப தூங்காதேன்றான்…. சாவுடான்னு சொல்லாம சொல்றான்” என்று கோவாலு மாமா சிரித்தார்.

  அவருக்கு ரத்த அழுத்தமும், சக்கரையும் அதிகம் என்றுதான் டாக்டரிடம் போகிறார். ஆனால், குடிக்காதே என்று டாக்டர் சொன்னால் அவருக்கு அது பிடிக்கவில்லை. தினமும் அவருக்கு  ரெண்டு மூணு பெக் போடணும். மனுஷன் ஜாலியான ஆள்தான். நிறைய பணம் இருக்கிறது, கொடுத்து வைத்தவர்.  ஜாலிக்கென்ன குறைச்சல்? சண்முகத்துக்கு அவர் மீது பொறாமையாக இருந்தது.

அப்போது, செண்பகம் அவரைத் தேடிக்கொண்டு வந்தாள்.
“என்னப்பா, சாப்பிட்டு விட்டு மருந்து எடுத்துக்காம வந்திட்டீங்க?” என்று அவரைப் பார்த்துக் கேட்டாள். அவள் கையில் நாலைந்து மாத்திரைகள் இருந்தன.

“இந்தக் களுதையை சாப்பிட வேணாம்னுதான் வந்தேன்” என்று கோவாலு சிரித்தார்.

“அப்புறம் படுக்கேல விழுந்தா உங்களுக்குதானே கஷ்டம். நான் 
போயி, வெந்நீர் வச்சு கொண்டாறேன்” என்று சண்முகத்தைப் பார்த்தபடியே அவன்  வீட்டுக்குள் நுழைந்து உள்ளே போனாள்.

“இவளும் இல்லாட்ட நான் சீரழிஞ்சிருவேன்” என்று கோவாலு மாமா நெகிழ்ந்தார். மனைவி போனதுக்குப் பிறகு, அடிக்கடி இம்மாதிரி அவர் பேசுவதை சண்முகம் கவனித்திருக்கிறான். பாவம் மனுஷன் என்று அவனுக்குத் தோன்றிற்று.

அப்போது ” சண்முகம் , இங்க லைட்டரை காணமே ! ” என்று உள்ளிருந்து செண்பகத்தின்  குரல் வந்தது.

அவன் எழுந்து உள்ளே போனான். காஸ் அடுப்புக்கு அருகில் அவள் நின்றிருந்தாள். அவள் அருகே சென்றதும், பின்னால் கட்டியிருந்த கைகளை முன்னே கொண்டு வந்தாள். வலது கையில் சிகப்பு நிற லைட்டர் இருந்தது. 
லைட்டரை மேடை மீது வைத்து விட்டு, இரு கைகளையும் , மாலையாக அவன் கழுத்தில் போட்டு இறுக்கினாள். உதடுகளால் அவன் உதடுகளைப் பிரித்து, நாக்கால் துழாவினாள். பிறகு அவன் உதடுகளைக் கடித்தாள். உடம்பில் ரத்தம் விர்ரென்று ஓடுவது அவனுக்குக் கேட்டது. அவனது  கை அனிச்சையாக, அவள் இடுப்பை இறுகச்  சுற்றிக் கொண்டது. அவள் உடம்பின் மென்மை…..

எல்லாம் க்ஷண நேரம்தான். அவளே அவனைத் தள்ளி விட்டு அடுப்பைப் பற்ற வைத்தாள். அவன் நகர்ந்து வெளியே சென்றான்

அவனைப் பார்த்ததும் கோவாலு, “சிகரெட் எடுத்திட்டு வர மறந்திட்டேன். போய்க்  கொண்டாந்திர்றேன்,” என்று எழுந்து அவர் வீட்டை நோக்கி நடந்தார்.
சண்முகம் பழைய இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். கலியாணத்துக்குப் பிறகு  செண்பகம் இம்மாதிரி நடந்து கொள்வது இரண்டாவது தடவை நாலைந்து மாதத்துக்கு  முன்புதான் செண்பகத்தின் இல்லற வாழ்க்கை அவ்வளவு சுமுகமாக இல்லை என்று அவனுக்குத் தெரிய வந்தது. அன்று  அவன்  ரேஸ்கோர்ஸ்லிருந்து மல்லேஸ்வரம் வருவதற்காக பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தான்.  திடீரென்று அவன் பெயர் சொல்லி யாரோ கூப்பிடுவது போலிருந்தது. திரும்பினால் செண்பகம். தீபாவளிக்குத் துணி வாங்க வந்திருந்தாளாம். கை நிறைய பைகள். அவன் இரண்டு பைகளை வாங்கிக் கொண்டான். சிவாஜி நகரில் இருந்து வந்த பஸ், கூட்டத்தை அள்ளிக்கொண்டு வந்தது. ஏறி உள்ளே போய் நிற்கத்தான் இடம் இருந்தது. செண்பகம் அவனுக்குப் பின்னால் நின்றாள். மல்லேஸ்வரத்தில் இறங்கும் வரை, அப்படியே அவள் உடல் அவனை ஒட்டிக் கொண்டு நின்றது . பஸ்  ப்ரேக் போடும்  போதும், மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும் போதும் அவளது திண்மையான உடம்பின் உரசல் ….

பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து போகும் போது, விலகி நடந்தாள். பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தாள். நாகரிகம் கருதி சண்முகம் அவளிடம், “மாப்பிள்ளை எப்படி இருக்காரு?” என்று கேட்டான். 
“மாப்பிள்ளையா? குட்டிச் சுவரு. அவனுக்கென்ன, கால நேரம் தெரியாம, தண்ணி அடிக்கறதும், சீட்டு விளையாடறதுமா சொத்தை கரைச்சிகிட்டு கெடக்கான்” என்று ஒருமையில் திட்டினாள். “அவன் மூஞ்சில முழிக்க மாட்டேன்னு சொல்லிட்டுதானே இங்க வந்திருக்கேன்” என்றாள்.

  அவளுக்குத் திருமணம் ஆவதற்கு முன்னால், அவன் அவளைப் பற்றி எண்ணி ஏங்கியது உண்டு. அவனோடு அவளும் வம்படித்துத் திரிவாள். சின்ன வயதிலிருந்தே இரு குடும்பமும் அடுத்தடுத்து வசித்து வந்த நெருக்கம் அவர்கள் பழகுவதை யாரும் வித்தியாசமாக எடுத்துக் கொள்வதை தவிர்த்து விட்டது. அப்போதெல்லாம் கோவாலு மாமா அவனை  கேலியாக “மாப்பிள்ளே!” என்று அழைத்துக் கொண்டாடுவார். ஆனால் திருமணம் என்று வந்தபோது  கோவாலு சண்முகத்தின் குடும்ப நிலைமையால் கவரப்படாதவராக, பணக்காரப் புள்ளி என்று அவர் கருதிய இடத்தில் மகளுக்கு திருமணம் செய்து கொடுத்தார். பணக்கார மாப்பிள்ளை இப்போது அவரது சொத்தையும் அழிக்கக் கிளம்பி விடுவானோ என்று அவர் கவலை பட்டுக் கொண்டிருக்கலாம்.

செண்பகம் ஒரு பாத்திரத்தில் வெந்நீரை எடுத்துக்கொண்டு அவன் உட்கார்ந்திருந்த இடத்துக்கு வந்தாள்.

    “எங்க பெருசைக் காணோம்?” என்று கேட்டாள்.

அவன் அவர் சிகரெட் எடுக்கப் போயிருப்பதைச் சொன்னான்.

“இன்னிக்கு சாயந்திரம் வரியா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள். அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. என்ன தைரியம்!

“எங்கே?”

“எங்க அப்பா ஆறு  மணிக்கு மண்டியா போறாரு. ராத்திரி பன்னெண்டு மணி, ஒரு மணி ஆயிடும் திரும்பி வரதுக்கு. குத்தகப் பணத்தை வாங்கிட்டு வரதுக்கு போறாரு. யாரும் வீட்டுல இருக்க மாட்டாங்க” என்றாள்.” “என்னப்பா, சிகரெட்டை விடுன்னு டாக்டர் சொல்லிகிட்டே இருக்காரு. நீங்க அவர் சொல்றதை கேக்கவே மாட்டிங்களா?”

சண்முகம் திரும்பிப் பார்த்தபோது, கோவாலு அவனை நெருங்கிக் கொண்டிருந்தார்.

“சரி, இந்த மருந்தை குடிச்சுப் போடுங்க” என்று அவர் கையில் மாத்திரையையும், வெந்நீரையும் கொடுத்துவிட்டு அவள் சண்முகம் பக்கம் திரும்பினாள். “வரட்டா?” என்று அவனிடம் சொல்லியபடி, அவனை விழுங்கி விடுவதுபோல் பார்த்துவிட்டு வீட்டைப் பார்க்க நடந்தாள்.

“இவளை சீரழிச்சிட்டான் அந்த தாயோளி” என்றார் கோவாலு. “நானுந்தான் தேவடியாப் பய, ஒரு இழவும் தெரியாம, புரியாம பச்சப் புள்ளையப் போய் அங்க தள்ளி வுட்டுட்டேன்” என்று தன்னையே நொந்து கொண்டார்.
சண்முகம் பேசாமல் இருந்தான்.

  “இந்தப் பக்கம் தலை காட்டக் கூடாதுன்னு அந்த கபோதிப் பயல் கிட்ட சொல்லியிருக்கேன். சீட்டு ஆடியே சொத்தையெல்லாம் அழிச்சிட்டான். போதாதுக்கு குடி வேறே, கூத்தியாவேற” என்று உறுமினார்.

சண்முகம் திடுக்கிட்டு அவரை ஏறிட்டுப் பார்த்தான்.

“பொம்பளை விசயம் வந்ததுக்கு அப்புறம்தான், இனிமே விடக் கூடாதுன்னு, செம்பகத்த இங்க கூட்டி கிட்டு வந்துட்டேன்.” என்றார் கோவாலு.

சண்முகத்துக்கு அதிர்ச்சியில் வாய் பேச வரவில்லை.

சில நிமிஷங்கள் மௌனத்தில் திணறின.

“என்ன மாப்பிள்ளே, பேசாமே இருக்கே?” என்று கேட்டார் கோவாலு .

சண்முகம் மறுபடியும் திடுக்கிட்டு அவரை ஏறிட்டுப் பார்த்தான்.

“நானும் கொஞ்ச நாளா யோசிச்சுகிட்டேதான் இருந்தேன். இந்த ரெண்டு வாரமா எப்படியோ சொல்லிரணும்னு பாத்துகிட்டு இருக்கேன். செம்பகம் இங்கியே , உங்க வீட்டையே, உன்னையே  சுத்திகிட்டு வாறதை நான் பாக்கறேன். இனிமே அந்த அயோக்கிய பயலோட இருக்க விட மாட்டேன். வெட்டி விடறதுக்கு  சொல்லி அனுப்பிச்சிட்டேன். உனக்கும் செம்பகம் மேல சின்ன வயசிலேந்தே இஷ்டம்னு எனக்கு தெரியும். நான்தான் முட்டாத்தனமா எல்லாத்தையும் கெடுத்துப் போட்டேன். இப்ப நீ அவளை கட்டிக்கிறயா மாப்பிள்ளே? எனக்கு பிறவு எல்லாம் அவளுக்குத்தான். அதுவும்  உனக்குத்தான். ஒரு கடை கண்ணியை வெச்சிடலாம்.  நீ பாத்துக்கோ, சரிதானா? உங்கம்மாகிட்ட சொல்லி, நான் சரி பண்ணிகிடறேன். நீ சரின்னு சொல்லணும் . சரியா?” என்று  பாடம் பண்ணி ஒப்புவிப்பதுபோல கடகட வென்று பேசித் தள்ளி விட்டார்.

சண்முகம் திகைப்புடன் உட்கார்ந்திருந்தான். அவனிடமிருந்து ஒரு சொல் எழும்பவில்லை.

கோவாலு அவனருகில் வந்து தலையைத் தடவிக் கொடுத்தார். அவன் வலது கையைப் பிடித்துக் கொண்டார்.

“நான் பாட்டுக்கு சொல்லிட்டே போயிட்டேனோ? சரி,சரி, நீ கொஞ்சம் யோசிக்கணும்ல. நான் அப்புறமா வரேன். இன்னிக்கு ஊருக்கு போகணும். ஆனா உங்க அம்மாவே பாத்துப் பேசிட்டு போலாம்னு பாக்கறேன்” என்று எழுந்து கொண்டார். அவனைப் பார்த்து ஒரு புன்முறுவலைச்  சிந்திவிட்டு, அவர் வீட்டை நோக்கி நடந்தார்.

சண்முகத்துக்கு ஒன்றும்  புரியவில்லை. அரைமணி, முக்கால் மணி நேரத்துக்குள் அவன் வாழ்க்கையையே திருப்பிப் போட்டு விடக் கூடிய மாதிரி என்ன இங்கே நடந்து கொண்டிருக்கிறது? சற்றுமுன் கேட்டதெல்லாம் உண்மைதானா? ஏதோ சன்னதம் வந்தது போல கோவாலு மாமா சொன்னதெல்லாம் வெறும் பிதற்றலா அல்லது நடக்கப் போவதுதானா?

அவனுக்கு மண்டை கிறுகிறுத்தது.

ஒன்றும் பிடிபடாமல், புரியாமல்  தெருவைப் பார்த்தான். அந்தப் பெண்  அவன் வீட்டுக்கு இரண்டு வீடு முன்பு நடந்து வந்து கொண்டிருந்தாள்.                                                                                                                                            **********
பின் குறிப்பு :

ஸிந்துஜா என்ற எழுத்தாளர் அன்றைய சிறுபத்திரிகைகளில் அதிகமாக கதைகள் எழுதியவர்.  பின் அவர் எழுதாமலே இருந்துவிட்டார்.  அவருடைய சிறுகதைகளும் தொகுத்துப் புத்தகமாக வரவில்லை.  2009ல் ஸிந்துஜாவின் கதைகளைத் தொகுத்து ஸிந்துஜா சிறுகதைகள் என்ற புத்தகம் நன்னூல் அகம் வெளியீடாக வந்துள்ளது.  
ஸிந்துஜா தற்போது முன்பு எப்போதும் உள்ளதை விட அதிகமாக கதைகள் எழுதி வருகிறார்.  அவருடைய ‘புரியவில்லை’ என்ற கதை நவீன விருட்சம் 99வது இதழில் வெளிவந்துள்ளது.  அதை இங்கே அளிக்கிறேன்.  மிக எளிமையாகவும் திறமையாகவும் எழுதப்பட்ட கதை.  படித்து உங்கள் கருத்துகளை கொடுக்கவும்.

இந்திய அரசியல் சாஸனம்

அசோகமித்திரன்




இக்கட்டுரையின் நோக்கம் இந்திய அரசியல் சாஸனத்தை விவாதிப்பது அல்ல. மொழிபெயர்ப்பில் எப்படி நீண்ட கால விபரீதங்கள் நிகழ்ந்து விடுகின்றன என்பதைக் குறிப்பிடும் சிறு கட்டுரை. அறுபத்தைந்து ஆண்டுகளாக நாம் ‘செகுலர்’ என்ற சொல்லுக்கு மதச்சார்பின்மை என்ற எதிர்மறைச் சொல்லைப் பயன்படுத்தி வருகிறோம். சமீப காலத்தில் இது சரியில்லையோ என்று தோன்றும் வகையில் சில நிகழ்ச்சிகள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவில் மதம் என்பது நிதரிசனம். அதாவது அது உண்டா இல்லையா என்று கேட்கவே இடமில்லை. மிக எளியலிருந்து மகா செல்வந்தர்கள் வரை ஏதோ ஒரு மதத்தின் சார்பு இருக்கிறது. திருப்பதியில் ஒரு மணி நேரச் சிறப்பு தரிசனம் ஒரு சீட்டுக்கு இலட்சம் எளியவர்கள் 30 அல்லது 35 மணி நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்கிறார்கள். டிசம்பர் மாதம் கிருத்தவர்கள் மாதம். ரம்ஜான், கிருஸ்துமஸ் போன்றவை பண்டிகைகள். மொஹர்ரம், ஈஸ்டெர் தவமிருக்கும் நாட்கள். இந்துக்கள் பண்டிகைகள் இரு கை விரல்களில் எண்ணமுடியாது. இப்படி இருக்கும்போது மதச்சார்பின்மை என்ற சொல் எதைக் குறிக்கிறது? மத சம்பந்தமில்லாத உலகாயத விஷயங்கள் என்று அகராதிகள் விவரிக்கின்றன. ஆனால் நடைமுறையில் மதசார்பின்மையை நாம் ‘செகுலர் என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். நானறிந்து 1950களில் எந்த ஜெர்மானியனுக்கும் (பெண்கள் உட்பட)மதம், கடவுள் இவற்றுக்கு எந்த சம்பந்தமும் தேவையும் இல்லை என்றுதான் கூறினார்கள். இரண்டாம் உலகப் போரின் அழிவுகளையும் அவமதிப்பையும் முழுக்கப் பெற்ற அவர்களுக்குக் கடவுள், மதம் ஆகியவை வெறும் சொற்களாகப் போய்விட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டு இலக்கிய படைப்புகளில் ‘மை காட்!’ ’ஓ காட்’ ’காட் பெ தான்க்ட்’ ’காட் பி வித் யூ என்றெல்லாம் சர்வ சகஜமாக வருபவை.. கடந்த அறுபது எழுபது ஆண்டுகளில் இவற்றைக் காண்பது அபூர்வம். 
ஹைதராபாத் நகரில் வருடம் ஒரு முறையாவது ஒரு மதக் கலவரம் வரும். இங்கே சென்னையிலேயே திடீரென்று விநாயக சதுர்த்தி ஒரு பதட்டமான காலமாயிற்று. ஆனால் இங்கொன்று அங்கொன்று நடப்பதாலேயே திடீரென்று இந்தியர்களின் சகிப்புத்தன்மை மறைந்து விட்டது என்று நினைக்கக்கூடாது. நமக்கே ஓரொரு தருணங்களில் தெருவில் வேறு யாருமே இல்லை என்றறியும்போது உள்ளூர ஒரு பயம் தோன்றுகிறது. இன்றும் சென்னையில் பல பறக்கும் இரயில் நிலையங்களில் இப்படித் தோன்றுவதுண்டு. 
ஆனால் இவற்றைக் கொண்டு இந்த நாடு என்றென்றும் இப்படித்தான் என்று எண்ணுவது மிகை. என்னுடைய ஒரு சாமியார் நண்பர் கூறினார்: எவ்வளவு நிதான சுபாவம் கொண்ட மனிதனும் (அல்லது பெண்ணும்) வாழ்க்கையில் ஒரு முறையாவது தற்கொலை பற்றி நினைக்காமல் இருந்ததில்லை. உடனே அவர்கள் தங்களை மாய்த்துக் கொள்வார்கள் என்றாகாது. சாதாரணப் பேச்சிலேயே யாரோ ஒருவரைக் குறிப்பிட்டு ‘இவன் செத்தால்தான் விடிவு வரும்’ என்று சொல்வதைக் கேட்கிறோம். 
வரலாற்றில் இப்படிச் சொல்லி விபரீதம் நிகழ்ந்திருக்கிறது. இந்தத் தலைமுறையினர் இதை அதிகம் தெரிந்திருக்க வழியில்லை. ஆனால் 1964அளவில் இந்தியாவே ஒரு திரைபடத்துக்கு ஆட்பட்டிருந்தது. பெயர் ‘பெக்கட்.’ ஒர் அரசனும் ஒரு சாமானியனும் நண்பர்கள். ஒரு நெருக்கடியான தருணத்தில் அவனை விமரிப்பவர்களைப் பழி வாங்க அரசன் தன் நண்பனை நாட்டு மத குருவாக நியமித்து விடுகிறான். நண்பன் உண்மையாகவே மதகுருவாக உணருகிறான்.இதனால் அரசன் “ஐயோ, அந்தப் புது சாமியாரை யாராவது ஒழித்து விடக்கூடாதா?” என்கிறான்.நான்கு பேர் உடனே அந்த மாதாகோயிலுக்குப் போய் அந்த மத குருவைக் கொன்று விடுகிறார்கள். அதற்காக அந்த அரசன் வாழ்நாளெல்லாம் வருந்துகிறான், தன்னைச் சாட்டையால் அடித்துக் கொண்டு வருத்திக் கொள்கிறான். இது வரலாற்றில் உள்ளது. இந்த நிகழ்ச்சியை இருவர் இலக்கியப் படைப்புகளாக இருபதாம் நூற்றாண்டில் பதிவு செய்திருக்கிறார்கள். இருவரும் நாடகமாக எழுதியிருக்கிறார்கள்.ஜான் அன்வி என்ற ஃபிரென்ச்காரர் ‘பெக்கெட்’ என்று எழுதியிருக்கிறார். இதன் ஆங்கில வடிவத் திரைப்படத்தில் பீடர் ஓ’டூல் மற்றும் ரிசர்ட் பர்டன் நடித்திருக்கிறார்கள். டீ.எஸ். எலியட் எழுதிய நாடகம் ‘மர்டர் இன் தெ காதிட்ரல்’ அரசனின் பெயர் இரண்டாம் ஹென்ரி. மதகுருவாக்கப்பட்டவ நண்பன் பெயர் தாமஸ் பெக்கட். இது 12ஆம் நூற்றாண்டில் நடந்த கதை.                    
பின் குறிப்பு :

நவீன விருட்சம் 99வது இதழில் வெளிவந்த கட்டுரை.  இதழ் பிரதிகள் சிலவே உள்ளன. 

மறக்க முடியாத மார்ச்சு ஒன்றாம் தேதி…

அழகியசிங்கர்
                                                                                                                     
இன்றைய தேதியைப் பற்றி எழுத எனக்கு சங்கடமாக இருக்கிறது.  கிட்டத்தட்ட எட்டாண்டாண்டுகளுக்கு முன்னால், அதாவது மார்ச்சு மாதம் முதல் தேதி 2008ஆம் ஆண்டு ஸ்டெல்லா புரூஸ் தூக்குப் போட்டுக்கொண்டு மரணம் அடைந்த நாள் இன்று.  அன்று சனிக்கிழமை.  நான் ஹஸ்தினாபுரம் என்ற ஊரிலுள்ள வங்கிக் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.  காலை நேரத்தில்தான் அந்த சோகமான செய்தியை என் நண்பர்களான, ஆர் ராஜகோபாலன், எஸ் வைத்தியநாதன்.
சுஜாதா இறந்து போன சில நாட்களில் இந்தச் சோகம் நடந்தது.  ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது எனக்கு புரியாத புதிர்?  பார்க்க முரட்டுத்தனமாக காட்சி  அளிப்பார் ஸ்டெல்லாபுரூஸ்.  கருப்பு கண்ணாடி ஒன்றை அணிந்துகொண்டு உயரமாக இருப்பார்.  அவர் சிலசமயம் பேசுவது கூட  அலட்சியமாக இருக்கும். யார் மீதாவது கோபப்பட்டால் பார்க்கக் கூட மாட்டார்.  இது ஒரு முகம்.  
அவருடைய இன்னொரு முகம். வன்முறையைக் கண்டால் பயந்து ஓடுவார்.  யாராவது நம்முடன் பேச மாட்டார்களா என்று ஏங்குபவர். எதற்கும் பயப்படுவார்.  ஆடம்பரமாக எந்தப் பொருளையும் வாங்கி சேர்க்க மாட்டார்.  அவர் விரும்புவது புத்தகங்கள், இசை, நண்பர்களுடன் உரையாடுவது. அவர்கள் வீட்டிற்குப் போனால, அவரும் அவர் மனைவியும் உபசரிப்பது பிரமாதமாக இருக்கும்.  ஏதோ அந்நிய வீட்டிற்குப் போவதுபோல் உணர்வு ஏற்படாது.  புத்தகங்கள் பற்றி, எழுதுவது பற்றி பேசிக்கொண்டிருப்பார்.  எல்லா எழுத்தாளர்களைப் பற்றியும் அவர் மரியாதை வைத்திருந்தார்.   
அவர் மனைவி நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போது ஸ்டெல்லா புரூஸ் தவித்துப் போய்விட்டார்.  மருத்துவமனை வீடு என்று அவரால் அலைய முடியவில்லை.  அவருக்கு அது பழக்கமுமில்லை.  வீட்டில் எல்லா வேலைகளையும் அவர் மனைவிதான் செய்வார்.  எங்கும் இவரை அலைய விட மாட்டார்.  மனைவியை இழந்து விடுவோம் என்ற பயம் அவரைச் சூழ்ந்து கொண்டது.  டாக்டர் செல்வராஜ் என்ற என் நண்பரை போய்ப் பார்த்து வாய்விட்டு அழ ஆரம்பித்தார்.  
எனக்கு இதெல்லாம் ஆச்சரியம்.  நான் பார்த்த ஸ்டெல்லா புரூஸ் எதற்கும் கலங்க மாட்டார்.  யாராவது பிரச்சினைகளுடன் அவரைச் சந்தித்தால் அதைத் தீர்த்து வைப்பார்.  எப்போதும் உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருப்பார்.  
ஹேமா அவர் எதிர்பார்த்தபடி ஒரு ஜ÷லை மாதம் இறந்து விட்டார். ஸ்டெல்லா புரூஸôல் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் எல்லோரிடமும் கொடுக்க ஆரம்பித்தார்.   இதன் உச்சக்கட்டம் ஹேமாவின் நகைகள் எல்லாவற்றையும் திருப்பதியில் உள்ள கோயிலில் போடச் சொலலி ஒரு நண்பரிடம் கொடுத்தது. இதைப் போல ஒரு பைத்தியக்காரத்தனம் எதாவது உண்டா என்று எனக்கு அப்போது தோன்றியது.  ஸ்டெல்லா புரூஸ÷டம் ஒரு குணம் உண்டு.  அவர் யார் பேச்சையும் கேட்கமாடடார்.  ஹேமா இறந்து போய் ஆறு மாதங்கள் ஆனாலும், ஸ்டெல்ô புரூஸ் துக்கத்தின் உச்சத்தில் இருந்தார்.  அப்போதுதான் அவருக்கு நண்பர்களின் ஆதரவு தேவைப்பட்டது.  ஆனால் யார் அவருடன் இருந்து அவர் துக்கத்தைப் போக்குவது.  எப்போதோ அவருடைய உறவினர் வட்டமும் அவரைக் கை விட்டுவிட்டது.  வாழ்க்கையில் எந்தப் பிடிமானமும் இல்லாமல் இருந்தார். 
நாம் பலருடன் பழகினாலும் அறுபது வயதைத் தாண்டி விட்டால் நமக்கு நண்பர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள்.  நம்முடன் பேசவும் மாட்டார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது என்பது இயலாத காரியம்.   
 67 வயதான ஸ்டெல்லா புரூஸ் இதை ஏன் புரிந்து கொள்ளவில்லை.  ஒரு முறை டிரைவ் இன்னில் பிரமிளைப் பார்த்தேன்.  அப்போது அவர் ஒன்று சொன்னார்.  அமெரிக்காவில் நம்மைப் பார்த்து யாராவது பேச வேண்டுமென்றால் அதற்கு பணம் தர வேண்டுமாம்.  பணம் கொடுத்தால் ஒரு சில மணி நேரங்கள் நம்மிடம் நட்புடன் பேசுவார்களாம். அவரும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என்று யாரும் இல்லாமல் தணித்துதான் இருந்தார்.  
ஸ்டெல்லா புரூஸ் தனியாக  இருப்பது ஆபத்து என்று எச்சரித்தார் ஒரு மனோதத்துவ மருத்துவர்.  அவருடைய சொந்தக்காரர் வீட்டில் போய் இருக்கச் சொல்லுங்கள்.  அல்லது சொந்தக்காரர் யாராவது இருந்தால் அவருடன் இருக்கச் சொல்லுங்கள்,ý என்றார் அவர்.   எல்லாம் அவர்தான் முயற்சி செய்யவேண்டும்.  அவர் விஷயத்தில் யாரும் வந்திருந்து தலையிட முடியாது.  
அவர் உயிரோடு இருந்தபோது நான் சில எழுத்தாள நண்பர்களை அழைத்துக் கொண்டு போயிருக்கிறேன்.  அவர்கள் எல்லாம் அவர் துக்கத்தைக் கேட்டு தாங்க முடியாமல் ஓடியே போய்விட்டார்கள்.  தேவராஜ் என்ற நண்பர்தான் ஒருசில நாட்கள் அவருடன் அங்கு தங்கியிருக்கிறார்.  அவரும் அங்கு தங்கி அவதிப்ட்டு அங்கு போவதையே நிறுத்திக் கொண்டு விட்டார்.
அவர் தங்கியிருந்த இடம் அவர் மனைவியின் ஹேமாவின் சகோதரனின் வீடு.  சகோதரன் அந்த இடத்தை விட்டு அவரைக் காலிப் பண்ணச் சொல்லி நச்சரித்தார்.  உண்மையிலேயே அவர் ஹேமா இல்லை என்றான பிறகு அந்த இடத்தை விட்டுப் போயிருக்க வேண்டும்.  ஸ்டெல்லா புரூஸ் அதைச் செய்யாமல் ஹேமா நினைவாக அங்கயே உருகிக் கொண்டிருந்தார்.  ஒருவர் இல்லாவிட்டால் ஒருவர் தனியாக இருப்பது எப்படி என்பது கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது எனக்கு.
ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்த கடிதத்தை இங்கு தர விரும்புகிறேன்.
“கடந்த 67 வருட எனது வாழ்க்கை பற்றி வருத்தங்கள் இல்லை.  எளிய, உண்மையான, அடக்கமான மனிதனாக ஆடம்பர சிந்தனை துளியும் இல்லாமல்  வாழ்ந்திருக்கிறேன்.  கண்ணை இமை காப்பதுபோல என்னைப் பார்த்து அலாதியான காதலுடன் நேசித்து பத்திரப்படுத்தி, அபூர்வ, ஆனந்த மனைவியாக என் மனைவி வாழ்ந்தார்.
எத்தனை பிறவியானாலும் இதை மறக்க மாட்டேன்.  நானும், அவளும், வாழ்ந்த வாழ்க்கை அற்புதமான, ஆன்மீகமான இலக்கிய தன்மையான காவியம்.  ஹேமாவின் துணை இல்லாத வாழ்க்கை சூனியமாக இருக்கிறது.  என்னால் அதைத் தாங்க முடியவில்லை.  தனிமை சிறை கடும் தன்மையாக என்னை நெரிக்கிறது.  எனவே நான் ஹேமாவிடம் செல்கிறேன்.  மரணத்தின் கதவுகளை திறந்து, வாழ்க்கை தண்டனை ஆகிவிடும்போது மரண விடுதலை பெறுகிறேன்..”
இந்த இடத்தில் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.  ஸ்டெல்லா புரூஸ் இறந்து போய் ஹேமா உயிரோடு இருந்தால், ஸ்டெல்லா புருஸ் செய்துகொண்ட மாதிரி அவர் மனைவி தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்.  ஸ்டெல்லா புரூஸ்தான் இப்படி செய்து கொண்டு விட்டார். 
மனைவியை இழந்துவிட்ட அவதியை வெ. சாமிநாதசர்மா என்ற அறிஞரும் üஅவள் பிரிவுý என்ற தலைப்பில் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளார்.  அவருடைய பதிப்பாளருக்கு அவர் எழுதிய கடிதத் தொகுதியே அந்தப் புத்தகம்.
6.3.1956ல் வெ சாமிநாதசர்மா இப்படி எழுதி உள்ளார் :
“எனது வாழ்க்கைக்கு வெளிச்சம் அளித்து வந்த ஒளி விளக்கு அணைந்து விட்டது.  இவ்வளவு சீக்கிரத்தில் அணைந்து விடுமென்று நான் எதிர்பார்க்கவில்லை.  நினைக்கவுமில்லை.  சிறிது காலமாக – ஏன்? இரண்டு வருஷங்களுக்கு மேலாக அது மங்கலாக எரிந்து கொண்டிருந்ததென்னவோ வாஸ்தவம்.  அப்படி எரிந்து கொண்டிருந்தாலும் எரிந்து கொண்டிருக்கிறதேயென்பதில் எனக்கு ஒருவித திருப்தி இருந்து வந்தது.  அந்த மங்கலான வெளிச்சத்தைத் துணையாகக் கொண்டு இன்னும் சிறிது காலம்ட தட்டுத்தடுமாறியாவது வாழ்க்கைப் பாதையில் செல்வோம் என்ற நம்பிக்கையும் தைரியம் இருந்தன.  இப்பொழுதோ? ஒரே இருட்டு.  அந்த இருட்டினால் திகைப்பு, புலம்புவதைத் தவிர வேறொன்றும் எனக்கு இப்பொழுது தெரியவில்லை.” என்கிறார்.
இப்படி பத்து கடிதங்களுக்கு மேல் பிரசுராலரயத்தினருக்கு எழுதி உள்ளார். 
  வெ சர்மா இப்படியெல்லாம் எழுதினாலும், மனைவியின் மறைவுக்காக தற்கொலை செய்து கொள்ளவில்லை.
விருட்சம் வெளியீடாக ஸ்டெல்லா புரூஸின் 3 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன்.  25 வருடக் கதை என்ற அவருடைய சிறுகதைத் தொகுதி, இரண்டாவது புத்தகம், என் நண்பர் ஆத்மாநாம் என்ற அவருடைய கட்டுரைத் தொகுதி, மூன்றாவது புத்தகம் நானும் நானும் என்ற அவருடைய கவிதைத் தொகுதி.  கவிதைத் தொகுதியை காளி-தாஸ் என்ற பெயரில் எழுதி உள்ளார்.   அவர் ஞாபகர்த்தமாக இந்த மூன்று புத்தகங்களையும் பாதி விலையில் கொடுப்பதாக உள்ளேன்.
அதாவது 25 வருடக் கதை என்ற சிறுகதைத் தொகுதி விலை ரூ50 அதை ரூ25க்குத் தர உள்ளேன்.  அதேபோல் என் நண்பர் ஆத்மாநாம் என்ற கட்டுரைத் தொகுதி ரூ. 100 விலை.  இதை ரூ.50க்குத் தர உள்ளேன். 134 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது.  நானும் நானும் என்ற கவிதைத் தொகுதி விலை ரூ.50.  அதை ரூ.25க்குத் தர விரும்புகிறேன்.  
காளி-தாஸ் என்கிற ஸ்டெல்லா புரூஸ் என்கிற ராம்மோஹனின் ஒரு கவிதையுடன் அவரை நினைவுப்படுத்தும் இக் கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்.
மனிதப் போக்குவரத்து

நான்
போய்க் கொண்டிருக்கிறேன்
அவர்
கொஞ்சம் தள்ளி
போய் கொண்டிருக்கிறார்
இன்னொருவர்
இன்னும் கொஞ்சம் தள்ளி
ஒருவர் 
போய் சேர்ந்து விட்டார்
சற்று பின்னால் ஒருவர்
வருகிறார்
மற்றொருவர்
இப்போதுதான் புறப்படுகிறார்
யாரும்
யாரோடும் போகவில்லை
ஆனால்…

ஏன் கடுமையாக இருந்தது இன்றைய பொழுது?

அழகியசிங்கர்


இன்றைய பொழுது எனக்கு இவ்வளவு கடுமையாக இருக்குமென்று நினைக்கவில்லை.  காலையில் 2 மணிக்கு எழுந்து என் உறவினர் ஒருவரை டில்லி ராஜாதானி வண்டியில் சென்டரல் ரயில்வே ஸ்டேஷனலில் ஆறு மணிக்குள் கொண்டு விட முனைப்புடன் இருந்தேன்.  அதனால் தூக்கம் கெட்டு விட்டது.

பின் சென்டரல் ஸ்டேஷனலிருந்து திரும்பி வந்தவுடன் தம்பியைப் பார்க்கச் சென்று விட்டேன்.  திரும்பவும் வீட்டுக்கு வரும்போது மணி மதியம் இரண்டாகி விட்டது.  அசதி.  தூங்கி விட்டேன்.  எழுந்தபோது மணி 4 ஆகிவிட்டது.  சென்டரல் ரயில்வே நிலையத்தில் நான் இருந்தபோது தினமணி பேப்பர் வாங்கினேன்.  கதிரில் என் நண்பர் நா கிருஷ்ணமூர்த்தியின் சித்ரா செம பிஸி என்ற கதையைப் படித்தேன்.  சா கந்தசாமியின் கலையில் ஒளிரும் காலம் என்ற கட்டுரையைப் படித்தேன்.
தினமணி பேப்பரின் நடுப்பக்கத்தை நான் எப்போதும் பார்க்காமல் இருக்க மாட்டேன்.  தமிழ் மணி என்ற பெயரில் வரும் எல்லாம் உபயோகமாக இருக்கும்.  குறிப்பாக நான் விரும்பிப் படிக்கும் பகுதி கலா ரசிகன் பகுதி.
போனவாரம் அவர் எழுதிய குறிப்புகளைப் படித்தபோது ய மணிகண்டன் எழுதிய ந. பிச்சமூர்த்தி கட்டுரைகள் புத்தகம் பற்றி எழுதியிருந்தார். நான் உடனே அந்தப் புத்தகத்தை வாங்கிவிட்டேன்.

இன்றைய தினமணி இதழில் கலா ரசிகன் நேர் பக்கம் என்ற என் புத்தகம் பற்றியும் என்னைப் பற்றியும் எழுதி இருந்தார்.  அசந்து விட்டேன்.  என்னால் நம்ப கூட முடியவில்லை.  நான் கலா ரசிகனைப் பார்த்திருக்கிறேன்.  அவர் கூட்டத்தில் பேசியதைக் கேட்டிருக்கிறேன்.  ஆனால் அவருக்கு என்னைத் தெரியாது.  கூட்டத்தில் அவர் நெருங்க முடியாத தூரத்தில் இருப்பார்.

நேற்று நான் சாருநிவேதிதாவின் புத்தக வெளியீட்டுக் கூட்டத்திற்கு அசோகமித்திரன், வைதீஸ்வரன் சகிதமாக சென்றிருந்தேன்.  சாருநிவேதிதா அக் கூட்டத்தில் ஒன்று சொன்னார்.  எழுத்தாளர்களை நாம் யாரும் கொண்டாடுவதில்லை என்று.  அவர் சொன்னது உண்மையான வார்த்தை. சாரு இன்னொன்று சொன்னார்.  எழுத்தைத் தவிர நான் வேறு எதுவும் யோசிப்பதில்லை என்று.

உண்மையில் நான் பழகிய பல நண்பர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அசோகமித்திரனை எடுத்துக் கொண்டால், புத்தகம் படிப்பது, கதை எழுதுவது, கட்டுரை எழுதுவது என்று பல ஆண்டுகளாக செய்து கொண்டு வருகிறார்.  ஞானக்கூத்தன் கவிதை எழுதுவது, புத்தகங்கள் படிப்பது, கவிதைகளைப் பற்றி சிந்திப்பது என்றுதான் இருப்பார்.  இப்படி எனக்குத் தெரிந்து பலர் அப்படித்தான் இருக்கிறார்கள்.  எனக்குத் தெரிந்து சாரு நிவேதிதா இந்த விஷயத்தில் இன்னும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

சினிமாக்காரர்களிடம் உள்ள ஒற்றுமை எழுத்தாளர்களிடம் இல்லை என்று தோன்றும்.  உண்மையில் சினிமாக்காரர்களை விட வலிமையானவர்கள் எழுத்தாளர்கள்தான்.  அவர்களிடம் ஒற்றுமை கிடையாது.  ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள மாட்டார்கள்.  பேச மாட்டார்கள்.   பேசவே மாட்டார்கள் என்கிற போது பாராட்டு மட்டும் செய்து கொண்டு விடுவார்களா.  நிச்சயமாக இருக்காது. பின் எழுதவதால் ஒரு பயனும் கிடையாது.  பத்திரிகையில் பிரசுரம் ஆகும் அல்லது ஆகாமல் போய்விடும்.  பணம் பெரிதாக கிடைக்காது.
புத்தகமாக வந்தாலும் விற்காது.   புதியதாக எழுதுபவர்களுக்கு பெரிய போராட்டமாக எழுத்து இருக்கும்.  இந்தத் தருணத்தில்தான் நான் தினமணியில் எழுதும் கலா ரசிகனை பாராட்டுகிறேன்.

விசாரணை என்ற சினிமா படக் கூட்டத்திற்கு பேச வந்த கௌதம சித்தார்தன் என்ற என் எழுத்தாள நண்பர், அங்கு திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து மிரண்டு விட்டார்.  இலக்கியக் கூட்டத்தில் 20 பேர்கள்தான் வருவார்கள் என்று புலம்பவும் செய்தார்.  இலக்கியக் கூட்டங்களுக்கு கூட்டம் வருவதில்லை என்று கௌதம சித்தார்தன் கலங்கத் தேவையில்லை.  அங்கு வருபவர்கள் வேறு.  இலக்கியக் கூட்டத்தில் பேசுபவர் கௌதம சித்தார்தனாக இருந்தால், அவர் முன்னால் இருப்பவர்கள் எல்லோரும் கௌதம சித்தார்தான்களாக இருப்பார்கள்.  வராதவர்கள் கௌதம சித்தார்தன் என்ன பேசுவார் என்பதை தெரிந்து வைத்திருப்பார்கள். பொருட்படுத்த மாட்டார்கள்.       

மாலை 4 மணிக்கு மனைவியுடன் மடிப்பாக்கத்திற்குச் சென்று விட்டேன். பள்ளிக்கூட ஆண்டு விழாவில் என் பேத்தி நடனமாடுவதைப் பார்க்கச் சென்றோம். ஒரே தாங்க முடியாத கூட்டம். அந்த நிகழ்ச்சியை முழுவதுமாக பார்க்க முடியவில்லை.  ஏமாற்றத்துடன் வீடு திரும்பி விட்டோம்.  இரவு எட்டு மணிமேல் ஆகிசிட்டது. ஆனால் இன்றைய பொழுது ஏன் அவ்வளவு கடுமையாக இருக்கிறது.

கலா ரசிகன் என் புத்தகம் பற்றியும் என்னைப் பற்றியும் எழுதியதை உங்கள் பார்வைக்கு அளிக்க விரும்புகிறேன்.  
அவரை நான் சந்தித்ததில்லை. ஆனால், அவருடைய எழுத்துகளைப் படித்திருக்கிறேன். நான் அவரிடம் பேசியதில்லை. ஆனால், அவரது இலக்கியப் பங்களிப்புகள் பற்றி என்னுடைய நண்பர்களிடம் பலமுறை சிலாகித்துப் பேசியிருக்கிறேன். தமிழில் வெளிவரும் இலக்கியச் சிற்றேடுகளில் தரமானதும், தனித்துவம் வாய்ந்ததுமான இதழ் அழகியசிங்கரின் “நவீன விருட்சம்’. அதில் நான் எழுதியதில்லை. ஆனால், அதில் வெளிவரும் கட்டுரைகளை ஆர்வத்துடன் படித்திருக்கிறேன்.
1988-ஆம் ஆண்டிலிருந்து “நவீன விருட்சம்’ இலக்கியச் சிற்றேட்டில் அழகியசிங்கர் எழுதிய சில கட்டுரைகளைத் தொகுத்து “நேர் பக்கம்’ என்கிற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார், ஒரு தேசிய வங்கியில் 36 ஆண்டுகளாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கும் அழகியசிங்கர். ஏற்கெனவே இவரது “அழகியசிங்கர் கவிதைகள்’, “வினோதமான பறவை’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. சில கதைகள், 406 சதுர அடிகள், ராம் காலனி, ரோஜா நிறச் சட்டை என்று இவருடைய சிறுகதை,
குறுநாவல் தொகுதிகளும் வெளிவந்திருக்கின்றன.
“நேர் பக்கம்’ தொகுப்பின் சிறப்பம்சம், பல்வேறு இலக்கிய ஆளுமைகள் குறித்த அழகியசிங்கரின் தனிப்பட்ட அனுபவங்களும் பதிவுகளும். எந்தவொரு மனிதரைக் குறித்தும் ஒவ்வொருவரின் பார்வையும் வெவ்வேறாகத்தான் இருக்கும். ஒவ்வொருவருக்கும், அந்த ஆளுமையைக் குறித்துச் சொல்ல, பதிவு செய்ய புதிதாக ஏதாவது செய்தி இருக்கும். அதனால், நான் மிகவும் ஆர்வத்துடன் இந்தப் புத்தகத்தைப் படித்ததில் வியப்பில்லை.
சி.சு.செல்லப்பா, க.நா.சு., நகுலன், அசோகமித்திரன், நீல பத்மநாபன், வைத்தீஸ்வரன், பிரமிள், வெங்கட் சாமிநாதன், ஸ்டெல்லா புரூஸ் இவர்களுடைய எழுத்தைத்தான் எனக்குத் தெரியுமே தவிர, அவர்களைத் தெரியாது. அவர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பும் எனக்கு அமையவில்லை. அவர்களுடனான அழகியசிங்கரின் அனுபவங்களும், பதிவுகளும் எனக்குப் புதிய பல செய்திகளை, அவர்கள் குறித்த முன்பு அறியாத பார்வையை அறிமுகப்படுத்தின.
தொடர்ந்து “நவீன விருட்சம்’ இதழையும், இப்போது “நேர் பக்கம்’ புத்தகத்தையும் படிப்பதனால், அழகியசிங்கர் குறித்த எனது கருத்தையும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். இவர் வங்கி வேலையில் தொடராமல், பத்திரிகை உலகில் நுழைந்திருந்தால் எட்டியிருக்கக்கூடிய உயரம் மிகமிக அதிகமாக இருக்கும். ஆழமான கருத்துகளும், இயல்பான எளிய நடையும் கவிஞர் அழகியசிங்கரை இனம் பிரித்துக் காட்டுகின்றன.
“நேர் பக்கம்’ புத்தகத்தை இன்னொரு முறை படிப்பதற்காகத் தனியாக எடுத்து வைத்திருக்கிறேன்.
இன்றைய தினமணி நடுப்பக்கத்தில் கலாரசிகன் என்ற புனைபெயரில் ஆசிரியர் கே வைத்தியநாதன் வாராவாரம் எழுதும் பத்தியில் வந்திருப்பது தான் மேலே நீங்கள் வாசித்தது… அதன் இணைப்பைக் கீழே தந்துள்ளேன்…அதை க்ளிக் செய்தால் முழு பத்தியையும் வாசிக்க முடியும்.