விமோசனம் என்ற கதை

அழகியசிங்கர்

சமீபத்தில் அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் என்ற நாவலை எடுத்து வைத்துக்கொண்டேன்.   அந்த நாவல் எனக்கு முழுவதும் மறந்து விட்டது.  கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்னால் படித்தது.  அதேபோல் 18வது அட்சக் கோடு, தண்ணீர், ஆகாயத் தாமரை போன்ற நாவல்களும்.  மானசரோவர் என்ற நாவலை  இரண்டு முறை படித்திருக்கிறேன்.  2011ல் அதைப் படித்து அதைப் பற்றி எழுதியிருக்கிறேன்.  
நேற்று திரும்பவும் எடுத்து கரைந்த நிழல்கள் நாவலைப் படிக்கத் தொடங்கினேன்.  படித்த ஞாபகமே வரவில்லை.  அதேபோல் ஏகப்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் எல்லாம் படித்திருக்கிறேன்.  திரும்பவும் படிக்கும்போது புதியதாக படிப்பது போல் உள்ளது.  இது ஏன்? எந்தப் புத்தகம் படித்தாலும் நான் விமர்சனம் மாதிரி எனக்குத் தோன்றுவதை எழுதி வைத்து விடுகிறேன்.  கிட்டத்தட்ட 17 புத்தகங்களுக்கு நான் எழுதி விட்டேன்.  என் நோக்கம் நாம் படிக்கும் புத்தகங்களைப் பற்றி நான் எழுதியதை வாசிப்பவர்களும் படிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கம்தான்.  
அசோகமித்திரனின் சமீபத்தில் வெளிவந்த நடைவெளி பயணம், இந்தியா 1948 என்ற புத்தகங்களுக்கு விமர்சனம் எழுதி உள்ளேன்.  தொடர்ந்து பல புத்தகங்களைப் படித்துக் கொண்டு போவதால்,  திரும்பவும் விமர்சனம் எழுதிய புத்தகங்களைப் படிக்க முடியுமா என்பது தெரியவில்லை.    அதனால் எழுதி வைத்துவிடுகிறேன்.  ஒரு சந்தர்ப்பத்தில் அந்தப் புத்தகங்களை பார்க்காமல் போய்விட்டாலும், நான் எழுதியதைத் திரும்பவும் படிக்க நேர்ந்தால் அந்தப் புத்தகம் பற்றிய ஞாபகம் வரும் என்று தோன்றுகிறது. 
நேற்று படிக்க எடுத்த கரைந்த நிழல்கள் புத்தகத்தைத் திரும்பவும் படிக்கும்போது நான் சோகத்தில் ஆழ்ந்து விட்டேன்.  கொஞ்சங்கூட ஞாபகத்திற்கு வரவில்லை.  சினிமாவில் பணிபுரியும் ஊழியர்களைப் பற்றிய நாவல் என்றுதான் தெரிந்ததே தவிர, முழு நாவல் எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லை. 
அதேபோல் அசோகமித்திரன் எழுதிய சிறுகதையான விமோசனம்.
கொஞ்சங்கூட ஞாபகத்திற்கு வரவில்லை.  ஆனால் படித்து முடித்தபின் தோன்றியது, இந்தக் கதையை ஏற்கனவே படித்திருக்கிறோம் என்று.  1961 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்தக் கதையைத் திரும்பவும் எடுத்துப் படிப்பதை என் பாக்கியமாகக் கருதுகிறேன்.    
அசோகமித்திரன் நடுத்தர வாழ்க்கைச் சூழ்நிலையைப் பிரதிபலிக்கும்படி பல கதைகள் எழுதியிருக்கிறார்.  அந்த வாழ்க்கை சூழ்நிலையில் காணப்படும் அவலம் அவர் கதைகளில் தட்டுப்படும்.  ஆண் பெண் இருபாலருக்கும் உண்டாகும் முரண்பாடை தத்ரூபமாக விளக்கியிருப்பார். 
இந்தக் கதையில் முக்கிய கதாபாத்திரமாக இயங்குவது சரஸ்வதி என்ற பாத்திரம்தான்,  ஆரம்பத்திலிருந்து சரஸ்வதி வருகிறாள்.  அவள் மீது நமக்கு ஒருவித பச்சாதாபம் ஏற்படுகிறது.  முழுவதும் படித்தப்பின் இந்தக் கதையில் நான் ஒன்று கவனித்தேன்.  சரஸ்வதியின் கணவன் பெயரை எந்த இடத்திலும் ஆசிரியர் குறிப்பிடப்படவில்லை என்பதுதான் அது. 
சரஸ்வதியின் கணவனைப் பற்றி ஒரு இடத்தில் விவரிக்கும்போது முழு விவரத்தையும் இப்படி கொண்டு வந்து விடுகிறார்.  
‘வெற்றிலை பாக்கு புகையிலை, மாதம் நூற்றுமுப்பது ரூபாய் சம்பளம், பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை இருமல், ஜ÷ரம், ஒரு தமக்கை, இரண்டு தங்கைகள், முன்கோபம், சில சமயங்களில் கை ஓங்கியும் அறைந்து விடுவது, தமிழ்ப் பத்திரிகைகளி; வெளியாகும் தொடர் கதைகளை விடாமல் படிப்பது, இருபத்திரண்டு ரூபாய்க் குடக்கூலி, வீட்டுக்காரரிடம் ஒரு நாள் உறவு, ஒரு நாள் சண்டை, வாரத்திற்கொரு சினிமா என்பதுதான் அவன் வாழ்க்கையாக இருந்தது.’
கணவனிடம் பயப்படுகிறாள் சரஸ்வதி.  எதுவாகயிருந்தாலும் முணுக்கென்று கோபப்படுபனாக இருக்கிறான்.  பூஜைக்காக ஒரு இடத்திற்கு மனைவியை அழைத்துக்கொண்டு போகிறான்.  அங்கு ஒரு பெரியவரைப் பார்க்கிறாள்.  அவரிடம் எல்லோரும் பக்தியுடன் இருக்கிறார்கள். சரஸ்வதியும் அவரைப் பார்த்து நெகிழ்ச்சி அடைகிறாள். அங்கிருந்து திரும்பும்போது குழந்தை பை எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு பஸ்ûஸப் பிடிக்க தடுமாறுகிறாள் சரஸ்வதி.  எல்லார் முன்னிலும் கணவன் அவளை அவமானப்படுத்துகிறான்.பெரிய கட்டை விரலில் காயம் படுகிறது. அதைக்கூட பொருட்படுத்தவில்லை அவள்.  இந்தக் கதையில் இது ஒரு காட்சி.  ஒவ்வொரு துளியிலும் சரஸ்வதி கணவனுக்காக அளவு கடந்து பயப்படுகிறாள்.  வறுமை வேறு.  சாப்பிடுவதற்கு எதுவும் இருப்பதில்லை.  அதைக் கேட்பதற்குக் கூட பயப்படுகிறாள்.  
பால் புகட்டும் புட்டியை பூஜைக்காக சென்ற இடத்தில் மறந்து வைத்துவிட்டது ஞாபகத்திற்கு வருகிறது.  குழந்தைக்கு எப்படி பால் கொடுப்பது.  களேபரத்துடன் தம்ளரில் குழந்தைக்கு பால் கொடுக்க முயற்சி செய்கிறாள்.  குழந்தை வீறிட்டு அழுகிறது.  இந்த இடத்தில் அவள் கணவன் தூக்கத்திலிருந்து எழுந்து விடுகிறான்.  அவளை நோக்கி அவன் கத்துகிறான்.
“மூதேவிக்குக் குழந்தைப் பால் கொடுக்கறதற்குத் துப்புக் கிடையாது.  ஒரு நிமிஷம் அழாமல் வைத்துக்கொள்ளத் தெரியாது..ஏய், அதை நிறுத்து,”என்கிறான்.
ஆனால் குழந்தை வீறிட்டு அழுகிறது.  அவன் படுக்கையிலிருந்து எழுந்து சரஸ்வதியை நையப் புடைக்கிறான்.  வெளியே போ என்று துரத்துகிறான்.  
இந்த இடத்தில்தான் கதையில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது.  திடீரென்று சரஸ்வதி எழுந்து நின்று,”உம்” என்கிறாள் கணவனைப் பார்த்து.  அவன் திடுக்கிட்டுப் பயந்து பின் வாங்குகிறான். சரஸ்வதி கண்களை அகல விர்த்து, “உம், ஜாக்கிரதை,” என்கிறாள்.  குழந்தை அழுகையை நிறுத்துகிறது.  ஆனால் அவள் கணவன் அவளிடம் பேசுவதில்லை.  ஒருநாள் இரண்டு நாள் என்று அவன் அவளுடன் பேசவே இல்லை.  
பொறுக்க முடியாமல் அவன் இருக்கும்போது, வீட்டில் சமையல் செய்ய எந்தப் பொருளும் இல்லை என்கிறாள்.  அவன் எல்லாவற்றுக்கும் உம் கொட்டிவிட்டு பேசாமல் இருக்கிறான்.
சரஸ்வதி அவன் கால்களைப் பிடித்துக்கொண்டு ஓவென்று கதறி அழ ஆரம்பிக்கிறாள்.  
“நான் என்ன பாபம் செய்தேன்? ஏன் இப்படி இருக்கிறீர்கள்? ஏன் என்னோடு ஒன்றும் பேசாமலிருக்கிறீர்கள்? எனக்கு உங்களை விட்டால் வேறு யார் கதி?ýý என்றெல்லாம் கெஞ்சி அழுகிறாள்.  
ஒரு கட்டத்தில் சரஸ்வதி இப்படி கூறுகிறாள் : üüஎன்னை அடியுங்கள்.  நன்றாக எலும்பொடிய அடியுங்கள்.  நான் நீங்கள் அடிப்பதை எதிர்த்துத் திமிறினதற்குத்தானே இப்படி இருக்கிறீர்கள்? இதோ அடியுங்கள்.  நன்றாக அடியுங்கள்.ýý 
இந்த இடத்தில் சரஸ்வதி தன் துயரத்தைப் போக்க அவள் கணவனுடன் பார்த்து வந்த பெரியவரைப் பார்க்க பூஜை செய்த இடத்திற்குப் போகிறாள்.  அங்கே அந்த மகானைப் பார்க்கிறாள்.  தன் துயரத்தையெலலாம் கொட்ட நினைக்கிறாள்.  ஆனால் அவளால் முடியவில்லை.  அவரைப் பார்க்கும்போது கண்ணீர் பெருகுகிறது.  சொல்ல நினைக்கிறாள்.  முடியவில்லை.  மகான் அனுதாபத்துடன் அவளைப் பார்த்தாலும், அந்த இடத்தை விட்டு ஜபம் செய்யப் போய்விடுகிறார். சரஸ்வதியால் ஒன்று சொல்ல முடியாமல் போய்விடுகிறது.  இது மாதிரி நிலை பலருக்கும் பல சந்தர்ப்பங்களில் ஏற்படாமல் இருப்பதில்லை.  
இனிமேல் மகானைப் பார்த்து தன் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள முடியாது என்று அந்த இடத்தை விட்டு வீட்டிற்குப் போகிறாள். அவள் கணவன் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.  ஏன் என்றுமே வந்திருக்க வில்லை என்று முடிக்கிறார் அசோகமித்தரன். 
கதையின் கடைசி வரியில் எல்லாத் துயரத்தையும் கொண்டு வந்து விடுகிறார்.  பெண்கள் தினத்தன்று இந்தக் கதையைப் படித்தேன்.  பெண்கள் துயரத்தை அசோகமித்திரனைத் தவிர வேற யாராôவது எழுதியிருக்க முடியுமா என்பது தெரியவில்லை.    இந்தக் கதையில் இந்தத் துயரத்தை வெளிப்படுத்தும் விதம் சிறப்பாக இருக்கிறது.  இந்தக் கதை 1961 ல் எழுதப்பட்டுள்ளது.  இப்போது உள்ள பெண்கள் கணவனைத் தேர்ந்தெடுப்பதற்கே கவனமாக இருப்பார்கள்.  பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.  மனைவிகளைப் பிரிந்த கணவர்கள்தான் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
                         எல்லோரும் படிக்க வேண்டிய கதை இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *