நீங்களும் படிக்கலாம்……

அழகியசிங்கர்

சமீபத்தில் நான் எழுதிய புத்தகம்தான் நீங்களும் படிக்கலாம் என்ற புத்தகம்.  கடந்த ஓராண்டாக 3000 பக்கங்களுக்கு மேல் 20 புத்தகங்கள் படித்துள்ளேன்.  அவற்றை குறித்து நான் எழுதிய கட்டுரைகளே நீங்களும் படிக்கலாம் என்ற புத்தகம்.  90 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை ரு.60 தான்.  புத்தகம் வேண்டுபவர்கள் 9444113205 என்ற தொலை பேசியில் தொடர்பு கொள்ளவும்.
புத்தகத்தில் நான் எழுதிய என்னுரையை இங்கே தருகிறேன்.
போன ஆண்டு ஒரு எழுத்தாளரின் புத்தக வெளியீட்டுக் கூட்டத்திற்குப் போயிருந்தேன். படிக்க அவருடைய நாவலை வாங்கினேன்.  அதைப் படிக்க ஆரம்பித்தபோது, அது குறித்து எதாவது எழுத வேண்டுமென்று தோன்றியது. ஒரு வாசகனாக.   அந்தப் புத்தகம் பற்றி எழுத ஆரம்பித்ததுதான் இநதப் புத்தகத்திற்கு ஆரம்பம்.  எல்லோரும் புத்தகங்கள் வாசிக்க வேண்டுமென்ற நல்ல எண்ணத்தில் எழுதப் பட்ட கட்டுரைகள்தான் இவை.  
நான் தொடர்ச்சியாக புத்தகங்களைப் படித்து வருகிறேன். பெரும்பாலான நேரம் படிப்பதில் போய்விடுகிறது. போன ஆண்டில் கிட்டத்தட்ட 3000 பக்கங்களுக்கு மேல் நான் படித்த 20 புத்தகங்களின் விபரங்கள்தான் üநீங்களும் படிக்கலாம்ý என்ற இந்த சிறிய நூல். ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதிய பிறகே இன்னொரு புத்தகம் படித்து முடிக்கிறேன்.  இதுதான் இந்தப் புத்கம் வருவதற்கான பின்னணி.  எல்லாப் புத்தகங்கள் பற்றிய அபிப்பிராயங்களை நான் நவீன விருட்சம் பிளாகிலும், முகநூலிலும் பதிவு செய்வது வழக்கம்.  அப்படிப் பதிவு செய்ததைத்தான் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன்.
புத்தகம் குறித்து எழுதுவதில் என் முன்னோடி க.நா.சு தான்.  அவருக்கு இப் புத்தகத்தை சமர்ப்பணம் செய்துள்ளேன். üமுழு நேர வாசகன் என்பது மிகவும் உயர்ந்த விஷயம்ý என்று இந்திய இலக்கியம் என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார் க.நா.சு. வாழ்நாள் முழுவதும் படிப்பதிலேயே தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர்.  
மரணம் அடையும் தறுவாயில் கூட தமிழில் எழுதிக்கொண்டிருந்த பல எழுத்தாளர்களை அறிமுகம் செய்திருக்கிறார். தமிழுக்கு அவர் செய்த தொண்டை யாரும் மறந்து விட முடியாது. 
                                                                                                                                      அழகியசிங்கர்
 25.03.2016

ஒரு நிமிடம் கவிதையைப் படியுங்கள்

அழகியசிங்கர்

நவீன விருட்சம் 98வது இதழில் வெளிவந்த கவிதை ஜான்னவியின் கவிதை.  இவர் சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு இதழில் கவிதை எழுதியிருக்கிறார்.  கணையாழியில் கவிதைகள், கதைகள் எழுதி உள்ளார். அவருடைய கவிதை விருட்சத்தில் வெளிவந்தது.  அதை இங்கே கொடுத்திருக்கிறேன்.
 ஜான்னவி



திசைகள்




நாம் அறிமுகமானோம்
சிநேகம் கொண்டோம்
சிநேகம் வளர்ந்து
ஆழ்ந்த நட்பானது


உன் மொழியை நானும்
என் மொழியை நீயும்
கற்றோம்
கொஞ்சம்
வேலையின் அழுத்தலில்
மூச்சுத் திணறியபோதும்
இனிமையாய் மாறியது
காலம்


நாம் பேசிக்கொள்ள
இன்னும் நிறைய இருந்தது
உன் மொழியிலும்
என் மொழியிலும்
மொழியற்ற மௌனத்திலும்.


காதல் வந்து
தட்டிக் கொண்டிருந்தது கதவை
நமக்கு நேரமிலாத் தருணத்தில்


உன் நாட்டில் உன்னைத்
திரும்ப அழைத்து விட்டார்கள்
என்னைச் சிறை வைக்க
என் வேலை


நாம் கற்ற நாகரீகம்
எங்கு போனது?
கதவைத் தட்டிய காதலை
வரவேற்கவில்லை நாம்.


கண்டும் காணாதது போல்
பாசாங்கு செய்து
மிகுந்த எச்சரிக்கையோடு
கடந்து சென்று விட்டோம் அதை


பிறகு பிரிந்து போனோம் நாம்
விடை பெறாமலே

இலவசமாய் க நா சு கவிதைகள்

அழகியசிங்கர்
க நா சு நூற்றாண்டை முன்னிட்டு 2011ஆம் ஆண்டு சில க நா சு கவிதைகள் என்ற புத்தகத்தைக் கொண்டு வந்தேன்.  ஏற்கனவே மையம் வெளியீடாக வெளிவந்த புத்தகம்.  14 கவிதைகள் கொண்ட சிறிய தொகுதி இது.  500 பிரதிகள் இதை அச்சடித்து நான் எல்லோருக்கும் இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.  நான் அப்போது மயிலாடுதுறையில் இருந்தேன்.  அங்கு நான் சாப்பிடப் போகும் ஓட்டலுக்குச் சென்று, இப் புத்தகத்தின் சில பிரதிகளை கொண்டு வைத்தேன்.  ஓட்டல் கல்லாவில் இருப்பவர், “இதெல்லாம் விற்க முடியாது,” என்று புத்தகம் பார்த்தவுடன் சொல்ல ஆரம்பித்தார்.  நான் சொன்னேன் :  “இதெல்லாம் விற்க வேண்டாம்.  இலவசமாகக் கொடுங்கள்.   
கநாசு புதுக்கவிதையின் முன்னோடி….அவர் பெயரை கேள்விப்பட்டிருக்கிறீரா,”என்று கேட்டேன்.  முழித்தார் மனிதர்.  
அதன் பின் வெற்றிலைப் பாக்குக் கடையில் கொண்டு போய் கொடுத்தேன். இலவலசமாகக் கொடுங்கள் என்று சொன்னாலும் எல்லோருக்கும் அலட்சியம்.
நான் மயிலாடுதுறையிலிருந்து சீர்காழீ பஸ்ஸில் ஏறி அலவலகம் செல்வேன்.  பஸ்ஸில் எல்லோரையும் ஒரு பார்வை பார்ப்பேன்.  யாராவது பத்திரிகை எதாவது படித்துக் கொண்டிருந்தால் போதும்.  உடனே போய் சில க நா சு கவிதைகள் புத்தகத்தை நீட்டுவேன்.  சிலர் வாங்கிக் கொள்வார்கள்.  சிலர் முறைத்துப் பார்ப்பார்கள். சிலருக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டு விளக்குவேன்.  க நா சு எப்படி கவிதை எழுதியிருக்கிறார் என்று.  நாம் ரசிக்கிற ஒரு விஷயத்தை மற்றவர்களால் ரசிக்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்குண்டு.  இந்தத் தொகுதியில் நான் ரசித்த கவிதை இதுதான்.
இதன் முதல் பதிப்பைக் கொண்டுவந்த மையம் ராஜகோபாலன் போற்றுதலுக்கு உரியவர்.  இந்தப் புத்தக வெளியீட்டு விழா கூட்டத்தில் இந்தப் புத்தகம் வந்ததை அறிந்து க நா சு வெளிப்படுத்திய மகிழ்ச்சி இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.  கோபிகிருஷ்ணனின் ஒவ்வாத உணர்வுகள் என்ற மகத்தான சிறுகதைத் தொகுதியும் அன்றுதான் மையம் வெளியீடாக வந்தது. இன்னொரு பதிப்பாக இந்தப் புத்தகம் திரும்பவும் கொண்டு வந்து இலவசமாகக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.  ஆனால் இந்த முறை 100 பிரதிகள்தான் அச்சடிக்கப் போகிறேன். 
விலை

 ஓ ! ஓ ! ஓ !  ஓ !
  இவனுக்குத்  தேச பக்தி
  நிறைய வுண்டு. தேசத்தை
  விற்கும் போது
  நல்ல விலை போகும் படிப்
  பார்த்துக் கொள்வான்
  இவனுக்கு தேச பக்தி
  நி-றை-ய வுண்டு
  ஓ !  ஓ !  ஓ ! ஓ !

   

விருட்சம் கவிதைகள் என்ற மூன்றாவது தொகுதி

அழகியசிங்கர்






விருட்சம் 96வது இதழில் வெளிவந்த ஞானக்கூத்தன் கவிதை இது. விருட்சம் கவிதைகள் என்ற மூன்றாவது தொகுதியைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.  100 கவிஞர்களின் 100 கவிதைகள் கொண்ட தொகுதி இது.  ஏற்கனவே விருட்சம் கவிதைகள் தொகுதி 1 தொகுதி 2 கொண்டு வந்துள்ளேன்.
புதிதாக கவிதை எழுத விரும்புவர்களுக்கு இத் தொகுதிகள் உபயோகமாக இருக்கும்.  ஒவ்வொருவர் எழுதிய கவிதையைப் படிக்க பரவசமாக இருக்கும்.

 
காதலும் களவும் 




                  ஞானக்கூத்தன்


மனதில் கொஞ்சம் காதல் இருக்கணும்
இல்லை யென்றால் வாழ்க்கை வெறுத்துடும்


என்மேல் உனக்குக்
காதல் இல்லையென்றால்
காதலே இல்லையா என்ன


பக்கத்துப் பட்டியில்
நிலக்கரித் திருடன்
ஒருவன் இருந்தான்
இளைய வயதுதான்.


தண்ணீர் நிரப்பிக்கொள்ள
நிற்கும் ட்ரெயினில்
கட்டி கட்டியாய்
நிலக்கரி திருடுவான்


மூட்டைக் கட்டி
எங்கோ விற்பான்
காசு பண்ணுவான்
காதலியைப் பார்ப்பான்


நல்லவர் கெட்டவர்
எல்லோருக்கும்
காதல் உண்டு
எனக்கும் உனக்கும்
தெரிந்த அதே காதல்

யாருக்கு உங்கள் ஓட்டு….

அழகியசிங்கர்


அடுத்த மாதம் ஓட்டுப் போட நானும் தயாராகிவிட்டேன்.  ஆனால் யாருக்கு ஓட்டுப் போடுவது?  போனமுறை என் பெயர் இல்லை.  நான் வீடு மாறி வந்ததைக் குறிப்பிடவில்லை என்பதால் என் பெயரை சேர்க்கவில்லை.  நானும் ஒரு நண்பரும் நடைபயிற்சி செய்து கொண்டிருக்கும்போது அந்த நண்பர் சொன்ன ஒரு விஷயம் எனக்கு திகைப்பாக இருந்தது.  üயார் எம்எல்ஏ பதவிக்கு எந்தக் கட்சி சார்பில் நின்றாலும் 2 கோடியாவது வேண்டும்,ý என்றார்.  நான் திகைப்புடன், ‘இரண்டு கோடியா?’ என்று கேட்டேன்.  
‘ஆமாம்,’ என்றார் அவர்.
‘அப்படின்னா நாம்மெல்லாம் யார்? சாதாரணத்திலும் சாதாரணமானவர்களா? ‘என்று கேட்டேன்.
அவர் சிரித்துக் கொண்டார்.
ஒன்றுமில்லாத கட்சியில் நின்றாலே அவ்வளவு செலவாகும் என்பது திகைப்பாகவே இருந்தது.  இன்னொன்று ம் தோன்றியது நான்  வாக்களிக்கும் எந்த ஓட்டும் எதற்கும் பிரயோஜனமில்லை என்பதுதான் அது.  
நான் ஓட்டுப் போடுவதால் எந்தக் கட்சியும் ஆட்சிப் புரிய போய்விடும் என்று சொல்ல முடியாது.  அல்லது ஆட்சியில் இல்லாமல் இருந்து விடும் என்று சொல்ல முடியாது.  யார் ஆட்சிக்கு வரப் போகிறார்கள் என்பதை என்னால் தீர்மானிக்க முடியாது.  நான் போடுகிற ஓட்டு என்பது எதற்கும் பிரயோஜனப்படாத ஒன்றுதான்.  ஆனால் என்னைப் போல் எல்லோரும் நினைத்தால் பெரிய ஆபத்தில் போய் விடும்.
நானும் ஓட்டுப் போடத்தான் போகிறேன்.  ஆனால் என்னால்தான் ஒரு ஆட்சி அமையப் போகிறதோ என்றோ அமையாமல் போகப் போகிறது என்றோ நினைக்கப் போவதில்லை.
இப்போது உள்ள கட்சிகளை எடுத்துக்கொண்டால் எதற்கு நான் ஓட்டுப் போடப்போகிறேன்.  அது பெரிய குழப்பம் எனககு?  ஏன் பெரிய கேள்விக்குறி?  கடந்த பல ஆண்டுகளாக ஓட்டுப் போடுவதால் ஏற்படும் வன்முறை பெரிய அளவில் குறைந்து விட்டது.  நான் கல்லூரி படிக்கும் தருணங்களில் தேர்தல் என்றாலே வன்முறை அதிகமாக இருக்கும்.  இன்று பெரும் அளவில் அது இல்லை.  அதற்குக் காரணம்.  தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை.  பெரிய அளவில் பாதுகாப்புக்கு படைகளை அனுப்பி வன்முறையைக் குறைத்து விட்டார்கள்.  இந்த முறையும் அப்படித்தான் இருக்கும்.  உண்மையில் தேர்தலே சூடு பிடிக்கவில்லை.
எந்தந்தக் கட்சிகளில் யார் யார் நிற்கப் போகிறார்கள் என்பதே தெரியவில்லை.  தெரிந்தாலும் எல்லாம் ஒன்றுதான்.  எந்தக் கட்சியின் மீதும் இந்த முறை எனக்குப் பெரிய ஈடுபாடு இல்லை.  ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சியின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.  இப்படி ஒரு தன்மை இந்த முறைதான் ஏற்பட்டுள்ளது.  யாருக்கு ஓட்டுப் போடுவது என்ற குழப்பம் இல்லை.  யாருக்கு வேண்டுமானாலும் போடலாம்.  நான் ஓட்டுப் போட்டு வெற்றி பெற்ற கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் அவர்கள் அடைந்த வெற்றிக்காக சந்தோஷப்படப் போவதில்லை.  தோல்வி அடைந்தாலும் துக்கப் படப் போவதில்லை.  
என் நண்பர் இன்னொன்றும் சொன்னார்.  உண்மையில் தேர்தல் அதிகாரிகள் வியாபாரிகளின் பணத்தைத்தான் சோதனை செய்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  உண்மையில் அரசியல்வாதிகளிடமிருந்து பணத்தை இன்னும் எடுக்கவில்லை என்று. 
‘பணம் இருந்தால்தான் ஒரு கட்சி ஜெயிக்குமா?’ என்று அப்பாவியாக அவரிடம் கேடடேன்.  உடனே அவர், ‘ஆமாம்.  யாருக்குப் பணம் கொடுக்க வேண்டுமோ அங்கே கொடுப்பார்கள்.  உங்களுக்கும் எனக்கும் இல்லை,’ என்றார்.
இதுவரை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் மீது எந்தத் திருப்தியும் ஏற்படவில்லை.  விமர்சனம் செய்வதும் போர்.  இந்த முறை இப்படி நினைத்திருக்கிறேன்.  கண்ணை மூடிக்கொண்டு கையால் ஓட்டுச் சீட்டை தொடப் போகிறேன்.   யார் பெயர் வருகிறதோ அவர்களுக்குத்தான் ஓட்டு.  

எஸ்ரா கட்டுரையை முன் வைத்து..

அழகியசிங்கர்
சீர்காழி வங்கிக் கிளையிலிருந்து என்னை திருவல்லிக்கேணி கிளைக்கு மாற்றி விட்டார்கள்.  நான் நினைத்தேன் விருட்சம் அச்சடிக்கும் இடத்திலேயே எனக்கு  வங்கிக் கிளை என்று.  அங்கு பணிபுரிந்த பலரிடம் விருட்சம் எடுத்து நீட்டுவேன்.  யாரும் ஒரு முணு முணுப்பு கூட காட்ட மாட்டார்கள்.  என் பின்னால் சிரிப்பார்கள்.  அவர்கள் எல்லோரும் அலுவலகம் வருவார்கள், வேகம் வேகமாக வங்கிப் பணிகளைப் பார்ப்பார்கள்.  பின் ஏதோ ரன்னிங் ரேஸில் ஓடுவதுபோல் ஓடி விடுவார்கள்.  நிற்கக் கூட மாட்டார்கள்.  பெரும்பாலும் பெண் ஊழியர்கள் அப்படி இருந்தார்கள்.  இவர்களிடம் பேசுவதை விட என் முன்னால் உள்ள கணினிகளிடம் பேசலாம் என்று தோன்றும்.  அதற்குப் பிறகு அங்கிருக்க எனக்கும் அலுப்பாக இருந்தது.  
அப்படி இருந்த என்னை திடீரென்று வளசரவாக்கம் கிளைக்கு மாற்றி விட்டார்கள்.  அலுவலகக் கெடுபிடியால் ஆர்டர் வந்த நாளிலேயே என்னை மாற்றியும் விட்டார்கள்.  தூரம் பொருத்தவரை திருவல்லிக்கேணியும் வளசரவாக்கமும் ஒன்றுதான். ஆனால் வளசரவாக்கத்தில் உள்ள சிலர் புத்தகம் வாசிப்பவர்களாக இருந்தார்கள்.  எழுத்தாளர்கள் பற்றி எழுத்து பற்றி கொஞ்சமாவது பேசினார்கள்.  நான் கொடுத்த விருட்சம் பத்திரிகையைப் படிக்கிறேன் என்று வாங்கி வைத்துக் கொண்டார்கள்.  அப்போதுதான் ஒரு பெண் ஊழியர் பேசியதைக் கேட்டேன்.  எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்தப் பெண் ஊழியர் எஸ்ரா பைத்தியம்.  எஸ்ரா என்ன எழுதினாலும் படித்துக்கொண்டு இருப்பார்.  அவர் குடும்பத்தில் உள்ள அவருடைய மகனிடம், கணவரிடம் எஸ்ரா கதைகளைப் படித்து சிலாகித்துக் கொண்டு இருப்பார்.  அந்தப் பெண்மணி ஒரு முறை, ‘நான் யார் எழுதுவதையும் படிக்க மாட்டேன்.  எஸ் ரா எழுதற எழுத்தைத்தான் படிப்பபேன்,’ என்று சொன்னபோது, எனக்கு எஸ் ரா மீதே பொறாமை ஏற்பட்டு விட்டது.
நான் அந்தப் பெண்மணியிடம் சொன்னேன் : ‘எஸ் ரா என் நண்பர், ரொம்ப வருடங்களாக அவருடன் பழகியிருக்கிறேன்..’
உண்மையில் என்னுடைய நட்பு அந்தப் பெண்ணிடம் எஸ்.ரா என் நண்பர் என்று சொன்ன பிறகுதான் ஏற்பட்டது.  
ஒருமுறை அந்தப் பெண்ணிடம், எஸ் ரா வை நம்ம வங்கிக் கிளைக்குக் கூப்பிடுகிறேன்.  நிச்சயம் வருவார். கதைகளைப் படிக்கக் கேட்கலாம், என்றேன். 
நான் அப்படியெல்லாம் சொன்னாலும் அது மாதிரி கூட்டத்தை அங்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை.  அங்கு பணிபுரிவது ஒரு புடுங்கலாக இருந்தது.   தொந்தரவு என்றால் அவ்வளவு தொந்தரவு அங்கு.  
நான் யோசிப்பேன்.  ஏன் இதுமாதரிரியான வங்கிக் கிளைகள் எல்லாம் ரொம்பவும் இயந்திரத்தனமாக எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது என்று,  மாதம் ஒரு முறையாவது அங்குள்ள பெரிய அதிகாரிகள் வங்கிக் கிளையில் உள்ள இடத்தைப் பயன்படுத்தி, கவிதை வாசிப்பது, கதை வாசிப்பது அல்லது யாரையாவது கூப்பிட்டுப் பேசச் சொல்வது போன்ற நிகழ்ச்சியை நடத்தலாமே என்று.  ஆனால் நான் சொன்னால் அந்தச் சபையில் ஏறாது என்பதோடல்லாம் கிண்டலடிக்கப் படுவேன்.
சமீபத்தில் எஸ்ரா சாகித்திய அக்காதெமியின் நிறுவன தினத்தில் பேசியதைக் கேட்டேன்.  அக்காதெமியின் செயல்பாடுகளைப் பற்றி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார்.  அக்காதெமியைப் பற்றி அத்தனை விபரங்களையும் சேகரித்து இன்னும் என்ன செய்யலாம் என்பதைக் கூட சொல்லி விட்டார்.  அந்தக் கூட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார்.  ரொம்பவும் திறமை இருந்தால்தான் ஒருவரால் இப்படி பேச முடியும்.  எஸ்ராவால் அது முடிந்திருக்கிறது.  
இப்படி திறமை உள்ள ஒருவர், பல வாசகர்களைக் கொண்ட ஒருவர், விருட்சம் இதழ் பற்றியும், நேர் பக்கம் என்ற என் புத்தகம்பற்றி 3 பக்கங்களுக்கு மேல் எழுதி உள்ளார் என்பதை நினைத்தால்  மகிழ்ச்சியாக இருக்கிறது.  அதை இங்கே அப்படியே எடுத்து தர உள்ளேன்.  அதற்கு முன் சில தகவல்களையும் தர விரும்புகிறேன்.  நவீன விருட்சம் 27 ஆண்டுகளாக காலாண்டுக்கு ஒரு முறை வரும் பத்திரிகை.  அதனுடைய 99வது இதர்தான் வெளிவந்துள்ளது. 
100வது இதழ் இனிமேல்தான் வர உள்ளது.  இரண்டாவது வெள்ளம் காரணமாக நேர் பக்கம் என்ற புத்தகம் சற்று வீணாகி விட்டது.  ஆனால் புத்தகம் பிரித்து படிக்க முடியும்.  அதனால் 142 பக்கங்கள் கொண்ட அப்புத்தகத்தை ரூ.60க்குத் தர உள்ளேன்.
From s.raa’s website 
அழகியசிங்கரின் கட்டுரைகள்
இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு விருட்சம் அழகியசிங்கரைத் தெரியும். இலக்கியத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் அபூர்வமான மனிதர்.

கவிதைகள், சிறுகதைகள். கட்டுரைகள் எழுதி வருவதுடன் நவீன விருட்சம் என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் அதன் 100 வது இதழ் சமீபமாக வெளிவந்துள்ளது. நவீன விருட்சம் இதழில் எனது சிறுகதைகள் வெளியாகியிருக்கிறது.
விருட்சம் இதழ் நடத்துகிற சிரமம் பற்றிப் பேசும்போது கூட பரிகாசமாகவே தனது கஷ்டங்களைச் சொல்லக்கூடியவர் அழகியசிங்கர். அவரது இயற்பெயர் சந்திரமௌலி. வங்கியில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பழைய விருட்சம் இதழ்களைப் பைண்டிங் செய்து புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைத்திருந்தார். அவற்றை ஒருசேர வாங்கி எனது புத்தகச் சேமிப்பில் வைத்திருக்கிறேன். அபூர்வமான கட்டுரைகளும் கதைகளும் கொண்ட தொகுப்பு.
அழகியசிங்கர் இலக்கியக்கூட்டங்களை நடத்துவதில் குறையாத ஆர்வம் கொண்டவர். நான்கைந்து பேர் மட்டுமே வந்தாலும் கூட சலித்துப் போய்விடமாட்டார். முழுஈடுபாட்டுடன் கூட்டத்தை நடத்துவார். ரயில்நிலையத்தில், பூங்காவில், கல்யாணமண்டபத்தில் என அவர் கூட்டம் நடத்த தேர்வு செய்யும் இடங்களும் வித்தியாசமானவை. வாசகர்கள் அதிகம் வருவதில்லை என்ற தனது ஏமாற்றத்தை அவர் ஒரு போதும் வருத்தமாக உணர்வதேயில்லை. அவருக்கென்றே அபூர்வமான சிரிப்பு இருக்கிறது. அது தான் மௌலியின் அடையாளம்.
இணையத்தில் நவீன விருட்சம் வெளியிடத்துவங்கிய பிறகு பல புதிய கவிஞர்கள் எழுத்தாளர்கள் எழுதத்துவங்கினார்கள். புதிய படைப்புகளுக்கு முன்னுரிமை தந்து தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவருக்குத் தெரியாத தமிழ் எழுத்தாளர்களே இல்லை. மூத்த எழுத்தாளர்கள் பலருடனும் குடும்ப நண்பராகப் பழகி வருபவர்.
எது அவரை இப்படி இலக்கியத்திற்காக ஒடிக்கொண்டேயிருக்க வைக்கிறது என யோசிக்கும் போது வியப்பாகயிருக்கிறது . பெயரோ, புகழோ, பணமோ எதுவும் கிடையாது.
அவர் சந்தித்த எழுத்தாளர்களும் படித்த புத்தகங்களும் மட்டுமே இந்த உந்துதலுக்கான காரணம். வாசிப்பின் வழியே அவர் இலக்கியத்தின் மீது தீராத ஈடுபாடும் விடாப்பிடியான நம்பிக்கையும் பற்றும் கொண்டிருக்கிறார். இவரைப் போன்றவர்களைத் தான் உண்மையான இலக்கிய வாசகர் என்பேன். இப்படி ஒருவரை இன்றைய தலைமுறையில் காண்பது அரிது.
அழகியசிங்கரைப் பொறுத்தவரை இலக்கியத்தை நேசிப்பது என்பது வெறுமனே புத்தகம் வாசிப்பது. விரும்பியதை எழுதுவது மட்டுமில்லை. நல்ல இலக்கியத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது, முக்கியப் படைப்பாளிகளுக்காகக் கூட்டம் நடத்துவது, சிற்றிதழ் வெளியிடுவது,, தேடித்தேடி இலக்கியக்கூட்டங்களில் கலந்து கொள்வது என இடைவிடாமல் செயல்படுவதாகும். அந்த ஆர்வம் இன்றும் குறையாமல் தொடர்கிறது.
கவிஞர் நகுலன் அழகியசிங்கர் மீது மிகுந்த அன்பு கொண்டவர். சென்னை வரும் நாட்களில் அவருக்குத் துணையாக அழகியசிங்கர் எப்போதுமிருப்பார். நகுலனின் கவிதைகள் விருட்சத்தில் தொடர்ந்து வெளியாகியுள்ளன. அசோகமித்ரனும் ஞானக்கூத்தனும் ஆனந்தும் விருட்சத்தில் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்கள்.
விருட்சம் வெளியிட்டுள்ள சம்பத் கதைகள். க.நா.சு கவிதைகள். ஞானக்கூத்தன் கட்டுரைகள், யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி அறிமுகநூல் போன்றவை மிக முக்கியமான புத்தகங்கள். குறைந்த விலையில் விற்கபட்ட போதும் அதற்குப் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. இன்றும் அவரிடம் பிரதிகள் உள்ளன.
அசோகமித்ரனின் எழுத்தில் காணப்படும் மெல்லிய நகைச்சுவை உணர்வு அழகியசிங்கரிடமும் உண்டு. அவரது கட்டுரைகளை நான் விரும்பிப் படிக்கக்கூடியவன். எளிய அன்றாட விஷயங்களில் இருந்து முக்கியமான தத்துவக் கட்டுரைகள் வரை எதைப்பற்றி எழுதினாலும் சுவாரஸ்யமாக எழுதக்கூடியவர். தன்னைக் கேலி செய்து கொள்ளும் குணம் கொண்ட எழுத்து எப்போதுமே அசலானது. அதற்குத் தைரியமும் வெளிப்படையான மனதும் வேண்டும்.
சாகித்திய அகாதமி கூட்டத்தில் அழகியசிங்கரை சந்தித்த போது அவரது நேர்பக்கம் என்ற கட்டுரைதொகுப்பினைத் தந்தார். அச்சிடப்பட்டு வைத்திருந்த புத்தகங்கள் சென்னை வெள்ளத்தில் நனைந்து போய்விட்டன எனச் சொல்லி ஈரக்கறை படிந்த புத்தகம் ஒன்றை என்னிடம் கொடுத்தார்
இந்த தொகுப்பில் 22 கட்டுரைகள் இருக்கின்றன. பாரதியார், சி.சு.செல்லப்பா, க.நா.சு,. ந.பிச்சமூர்த்தி, ஜானகிராமன், வெங்கட் சுவாமிநாதன். ஆத்மநாம், ஸ்டெல்லாபுரூஸ், ஐராவதம், நீல.பத்மநாபன். எனத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகள் பலரையும் பற்றிய கட்டுரைகள். இவர்களை ஏன் தமிழ் சமூகம் பெரிதாகக் கொண்டாடவில்லை என்ற ஆதங்கம் எல்லாக் கட்டுரைகளிலும் அடிநாதமாக ஒலிக்கிறது.
ஒரு நுண்மையான இலக்கியவாசகராக தான் வாசித்த பிச்சமூர்த்தி, ஜானகிராமன், ஆத்மநாம். ஞானக்கூத்தன் போன்றோரின் படைப்புகளை நுட்பமாக அணுகி அவர்கள் எழுத்தின் தனித்துவத்தை அடையாளம் காட்டுகிறார்
ஜானகிராமன் சிறுகதையை பற்றி மதிப்பீடு செய்யும் போது ஆண் பெண் உறவின் அதீதப்போக்கை முரண்பாட்டை குபாரா சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்திக்காட்டியவர், எளிமையான நடையில் பூடகமாக எழுதுவது அவரது கலை. அதே பாணியை ஜானகிராமன் ஸ்வகரித்துக் கொண்டார். கு.பா.ரா இல்லாத குறையை போக்கியவர் ஜானகிராமன் ( பக் 41)
தமிழில் அங்கத உணர்வுடன் கவிதை எழுதுபவரில் முக்கியப்பங்கை வகிப்பவர் ஞானக்கூத்தன்., இவர் கவிதை என்று எதை எழுதினாலும் அங்கத உணர்வு தானகவே மேலோங்கி தென்படும். அதே போல உரைநடையில் அங்கத உணர்வுடன் எழுதுபவர் அசோகமித்ரன் ( பக் 48))
ஜராவதத்தைப் பார்க்கும் போது சம்பத் ஞாபகம் வரும். இரண்டு பேர்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியிருப்பார்கள். இருவரும் நல்ல நண்பர்கள். பணம் பத்தும் செய்யும் என்ற கதையை இருவரும் சேர்ந்தே எழுதியிருக்கிறார்கள். சம்பத் ஐராவதத்தை விட சற்று தீவிரமானவர், ஒருமுறை பரீக்ஷா நாடகவிழாவில் சம்பத் சத்தம் போட்டு கத்தியதை நான் இன்னமும் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன் (பக் 98)
செல்லப்பா கட்டுரையில் அவரைச் சந்திக்கச் சென்ற அனுபவத்தைக் கூறுவதுடன் செல்லப்பாவின் இலக்கிய விமர்சனமுறை. அவருக்கு விருது கிடைத்த போது ஏற்றுக்கொள்ள மறுத்த கோபம். எழுத்துப் பத்திரிக்கை எப்படி உருவாக்கபட்டது என்பது போன்ற அரிய விஷயங்களை அழகாக எடுத்துச் சொல்கிறார்.
க.நா.சு நூற்றாண்டு விழாவின் போது அவரது கவிதைகளை அச்சிட்டு இலவசமாக விநியோகம் செய்தவர் அழகியசிங்கர். அந்த அளவு க.நா.சு மீது அன்பும் மரியாதையும் கொண்டவர். அவரைப்பற்றிய கட்டுரையில் வாடகை கொடுக்கமுடியாத நெருக்கடியில் தான் குடியிருந்த வீட்டை க.நா.சு சொல்லிக் கொள்ளாமல் காலி செய்து போய்விட்டதைப் பற்றி ஒரு குறிப்பு வருகிறது. தமிழ் இலக்கியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துச் செய்து கொண்ட ஆளுமைகளின் வாழ்க்கை இப்படிதானிருந்திருக்கிறது. இன்றும் அதில் பெரிய மாற்றம் உருவாகிவிடவில்லை
இக்கட்டுரையில் ஞானக்கூத்தன் ஏன் எழுத்து பத்திரிக்கையில் எழுதவில்லை என்ற முக்கியமான கேள்வியை கேட்கிறார் அழகியசிங்கர். செல்லப்பா புதுக்கவிதையை மிகவும் ஆதரித்தவர். ஆனால் அவர் ஞானக்கூத்தன் கவிதைகளை ஏன் எழுத்தில் வெளியிடவில்லை என்பது புதிரே. ம.பொசியுடன் ஞானக்கூத்தன் கொண்டிருந்த நட்பு தான் காரணமா எனத்தெரியவில்லை.
நான் செல்லப்பாவை பலமுறை சந்தித்திருக்கிறேன். விளக்கு விருது அவருக்கு அளிக்கபட்ட போது வெளிரங்கராஜனுடன் சென்று அவரைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருக்கிறேன். செல்லப்பா அவரது கையெழுத்துப் பிரதிகளில் பல அச்சாகாமல் இருப்பதாகக் காட்டினார். இன்று வரை அவை வெளியானதாகத் தெரியவில்லை.
தனது புத்தகங்களை வெளியிடுவதை விடவும் பி.எஸ்.ராமையா புத்தகத்தை வெளியிட வேண்டும் என அந்தச் சந்திப்பில் செல்லப்பா பிடிவாதமாக இருந்தது இப்போது நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது.
நகுலனை பற்றிய கட்டுரையில் நகுலனின் எழுத்து என்பது ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு எழுதுகிற எழுத்து எனக் குறிப்பிடுவது அவரைப்பற்றிய சரியான மதிப்பீடு.
நகுலனின் மிக முக்கியமான கடிதம் ஒன்று இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளது. இது போலவே பிச்சமூர்த்தியின் ராகுகேது கதையை விமர்சிக்கும் போது அது எப்படி ஒரு மேஜிகல் ரியலிசப்பாணிக் கதை என எடுத்துக் காட்டுவது பாராட்டிற்குரியது.
இந்தத்தொகுப்பின் சிறந்த கட்டுரைகளில் ஒன்று பிரமிள் பற்றியது , இதில் பிரமிளின் ஆளுமையை. அவரது கவிதைகளின் இயல்பை., பிரமிளின் கடைசிநாட்களை சிறப்பாக பதிவு செய்துள்ளார். ஒரு வாசகரின் விமர்சனத்திற்கு பிரமிள் எழுதியுள்ள கோபமான பதில் இக்கட்டுரையில் வெளியாகியுள்ளது.
தமிழ் அறிவு ஜீவித்தளத்தில் இயங்குபவன் என்ற முறையில் என் கவனம் முழுவதும் என் சிருஷ்டி சக்திகளை அதன் புதுமை மாறாமல் காப்பாற்றுவதிலேயே தான் இருக்கிறது. இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டில் சீரழிந்த சில அடிப்படைகளுக்கு இணங்கிப்போகும் தன்மையைச் சிருஷ்டித்துறை பெற்றுள்ளது. இந்தியமரபு ஜாதியத்தைப் பலப்படுத்தும் மதத்தை தனக்குள் பெற்றுள்ளது. அறிவுஜீவியான நான் எல்லாச் சமுதாய இலக்கியப் பிரச்சனைகளிலும் மதச்சார்ப்பற் அணுகுமுறையையே கைக்கொள்கிறேன் (பக் 65)
இதைப் பிரமிளின் பிரகடனம் என்றே சொல்லவேண்டும்.
ஸ்டெல்லாபுருஸ் பற்றித் தனிநூல் ஒன்றை அழகியசிங்கர் வெளியிட்டிருக்கிறார். அதில் ஸ்டெல்லாபுரூஸின் ஆளுமையை விவரிப்பதுடன் அவர்கள் இருவருக்குமான நட்பையும் இலக்கியப் பகிர்தலையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். இந்தத் தொகுப்பிலும் ஸ்டெல்லாபுரூஸ் பற்றிய ஒரு கட்டுரையிருக்கிறது. மிகவும் நெகிழ்ச்சியுடன் எழுதப்பட்ட நினைவுப்பதிவது
அழகியசிங்கரின் கட்டுரைகள் எளிய மொழியில் நேரடியாக நம் முன் அமர்ந்து சொல்வது போல எழுதப்பட்டிருக்கின்றன. அலங்காரங்களோ, மிகை விவரிப்புகளோ கிடையாது. அதே நேரம் தனது நுண்மையான அவதானிப்புகளை, மதிப்பீடுகளை வெளிப்படையாக முன்வைத்திருக்கிறார். சுயவிமர்சனமும் இதில் அடங்கும்.
இந்தக் கட்டுரைகளின் வழிய தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளைப் பற்றி அறிந்து கொள்வதுடன், நவீன தமிழ் இலக்கியம் வளர்ந்த விதம், அதன் முக்கியப் போக்குகள், இலக்கிய நிகழ்வுகள். சிறுபத்திரிக்கைகளின் பங்களிப்பு, எழுத்தாளர்களின் இயல்புகள் போன்றவற்றையும் ஒருங்கே அறிந்து கொள்ள முடிவது சிறப்பு.
விருட்சம் வெளியிட்ட எல்லாப் புத்தகங்களையும் போலவே இதன் விலையும் மிகவும் குறைவு ரூ.120.
பின்குறிப்பு
சம்பத் சிறுகதைகளைத் தொகுத்து விருட்சம் தனிநூலாக வெளியிட்டுள்ளது. அது மிக முக்கியமான தொகுப்பு. கவிதைக்காக என்ற ஞானக்கூத்தனின் கட்டுரைகள் தொகுப்பும் மிகமிக முக்கியமானது.
புத்தகத்தை வாங்க :
விருட்சம் வெளியீடு
சீத்தாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ்
7 ராகவன் காலனி. மேற்குமாம்பலம். சென்னை-33
தொலைபேசி எண்- 044 24710610
செல் -9444113205
navina.virut

யார் அந்த இரண்டு பேர்களில்…

சிறுகதை
அழகியசிங்கர்
(நவீன விருட்சம் 98வது இதழில் வெளிவந்த என்னுடைய கதை.  அசோகமித்திரன் இக் கதையைப் படித்துவிட்டு பாராட்டி உள்ளார். நீங்களும் படித்துப் பார்த்து உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.)
  
மேற்கு மாம்பலம் பரோடா தெருவில்தான் வைஷ்ணவியின் வீடு.  ஐடி கம்பெனி ஒன்றில் ஓராண்டாக பணிபுரிகிறாள். வாசுதேவன் தம்பதியருக்கு ஒரே பெண். பார்க்க லட்சணமாக இருக்கிற பெண். நெடு நெடுவென்று நல்ல உயரம்.  அவள் அம்மாவிற்கு பெண்ணைப் பற்றியே கவலை.  எப்படித்தான் அவளுக்கு திருமணம் செய்து வைப்பது என்று. வளர்ந்துவரும் பெண்ணைப் பார்த்து பெற்றவர்களுக்கு உண்டாகும் கவலைதான் இது.  
வாசுதேவன் போரூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் கணக்குப் பார்க்கும் பிரிவில் பல ஆண்டுகளாக பணி புரிகிறான்.  அவனுடைய சம்பளத்தில் பெரிய முன்னேற்றம் இல்லை.  தினமும் காலையில் வாசுதேவன் அவன் மனைவி லட்சுமி தரும் டிபனை ஒரு டப்பாவில் கட்டிக்கொண்டு எடுத்துக்கொண்டு போவான்.  அங்கு கான்டினில் ஆபிஸ் நிர்வாகம் தரும் டீயைக் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து விடுவான். பெரிய ஆடம்பரம் கிடையாது.  தி நகரிலிருந்து வரும் பஸ்ûஸப் பிடித்து அபீஸ் போய்விடுவான்.  பின் அதே பஸ்ûஸப்பிடித்து வீடு வந்து விடுவான்.
ஆனால் வைஷ்ணவி அப்படி அல்ல.  அவளும் அப்பா மாதிரி அதிகம் வாழ்க்கையிலிருந்து எதிர்பார்க்காத அமைதியான பெண்.  படிப்பில் கெட்டிக்காரி.  அவள் தகுதியை மீறி பிஇ படித்து ஒரு ஐடி கம்பெனியின் புண்ணியத்தால் பணியில் அமர்ந்திருக்கிறாள்.  அவளுக்கு அப்பாவை விடஅதிக சம்பளம்.  தன் செலவுக்குப் போக மீதிப் பணத்தை அம்மாவிடம் பயப்பக்தியுடன் கொடுத்து விடுவாள்.  அம்மா மீது அவளுக்கு வாஞ்சை அதிகம்.  எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அம்மா இருப்பது அவளுக்கு ஆச்சரியம்.  வைஷ்ணவி கொடுக்கிற பணத்தை அப்படியே கொண்டுபோய் வங்கியில் போட்டுவிடுவாள் அவள் அம்மா. 
கல்யாணம் செய்து கொடுத்துவிடலாம் என்று நினைத்தாலும், பணத்துக்கு எங்கே போவது?  
வைஷ்ணவிக்கு இது ஒரு பிரச்சினையாக இருந்தாலும், யாராவது ஒரு பையன் தன் வலையில் மாட்டிக்கொள்வான் என்று நினைத்தாள்.
தான் பார்த்துக்கொண்டிருக்கிற வேலை, தன் அழகு யாரையாவது ஒரு பையனை தன் முன்னால் மண்டிப் போட வைத்துவிடும் என்று நினைத்தாள்.
சாய்சங்கரா மேட்டிரிமோனியலில் தன்னைப் பற்றி விளம்பரம் தர சம்மதித்தாள்.  தன்னைப் பற்றி குறிப்பிடும்போது, எளிதாக யார் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்களோ அவர்களுக்கு தான் மாலை இட விரும்புவதாக குறிப்பிட்டாள். ஆனால் அதன் மூலம் பெரிதாக எதுவும் வரவில்ûலை என்பது வைஷ்ணவிக்கு ஏமாற்றமாக இருந்தது.  அப்படியென்றால் இந்தக் காலத்து இளைஞர்கள் எப்படிப்பட்ட பெண்ணை தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள் என்ற கேள்வி அவளை குடைந்து கொண்டே இருந்தது.  
இந்தச் சமயத்தில்தான் அவள் இரண்டு இளைஞர்களை சந்தித்தாள்.  ஒருவன் குரு.  இன்னொருவன் மூர்த்தி.  இந்த இருவர்களும் அவளுடன் பழக விரும்பியவர்கள்.  இந்த இரண்டு பேர்களுடன் பழகிக் கொண்டிருக்கும்போதே யாராவது ஒருவருடன் தன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ள வேண்டும் என்று வைஷ்ணவி நினைத்தாள்.  
ஒருநாள் அம்மாவிடம் சொன்னாள். இப்படி இரண்டு பேர்கள் என்னிடம் அன்பை காட்டுகிறார்கள் என்று.
இரண்டு பேர்களிடமும் ஏமாந்து போய்விடாதே என்று அம்மா எச்சரித்தாள்.
சரி எப்படி இரண்டு பேர்களைத் தேர்ந்தெடுப்பது?  குருவும் சரி, மூர்த்தியும் சரி.  ஒரே தராசில் நிறுத்திப் பார்த்தாலும் ஒரே மாதிரியாகத்தான் தெரிந்தார்கள்.  
அவர்கள் இருவரிடமும் பொதுவாக சில குணங்கள் இருந்தன.
இருவரும் புகைக்க மாட்டார்கள்.
இருவரும் மது அருந்த மாட்டார்கள்.
இருவரும் சாதாரண குடும்பத்தில் இருந்துதான் வந்திருக்கிறார்கள்.
இருவருக்கும் குடும்பத்தின் அருமை தெரியும்.
நிறையா சம்பாதிக்க வேண்டும் என்பதில் இருவருக்கும் ஒரே கற்பனைதான்.
இருவரும் ஒரே உயரம். ஒரே பருமன்.  ஒரே நிறம்.
வைஷ்ணவிக்குத்தான் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் அதிகமாகிக் கொண்டு  வந்தது.  நாளுக்குநாள் இது ஒரு பிரச்சினையாக மாறிக்கொண்டே வந்தது.
‘அம்மா, இரண்டு பேர்களையும் எனக்குப் பிடித்திருக்கிறது.  யாரைக் கல்யாணம் செய்து கொள்வது?’
‘வைஷ், அவர்களுக்கு உன் மீது ஈடுபாடு உண்டா
‘என்னைப் பார்க்காமல், பேசாமல்  அவர்களால் இருக்க முடியாது.’ 
‘பெரிய ஆபத்தாச்சே.. யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறே?’
‘அதுதான் தெரியலை…இருவரும் சாதாரண மெடில்க்ளாஸ் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள்.  இருவருக்கும் குடும்பத்தில் பொறுப்புகள் அதிகம் உண்டு.’
‘ஒரு கோணத்தில் குருதான் எனக்கு ஏற்றவன் என்று தோன்றினாலும், மூர்த்தி மீதும் எனக்கு ஆசை இல்லாமலில்லை.  சிலசமயம் இரணடு பேர்களுடன் குடும்பம் நடத்தினால் என்ன  என்று தோன்றுகிறது.’
‘போடீ பைத்தியக்காரி.  ஒரு பெண் இப்படி நினைக்கிறது அசிங்கம்.
வைஷ்ணவியும் அவள் அம்மாவும் பேசிக்கொள்வது  வாசுதேவனுக்குத் தெரியாது.  அவன் உண்டு அவன் வேலை உண்டென்று காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தான்.  
‘அப்பா இல்லாத சமயத்தில் இருவரையும் நம் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வா,’ என்றாள் அம்மா.
‘நீ தேர்ந்தெடுப்பாயா?  அது சரியான தீர்வாகத்தான் இருக்கும்.  நீ யாரைச் சொல்றியோ அவனையே கல்யாணம் பண்ணிக்கிறேன்…’ என்றாள் வைஷ்ணவி மகிழ்ச்சியுடன்.
சிலதினங்கள் கழிந்தன.  வைஷ்ணவி எப்படி அவர்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்து வருவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.  நடுவில் அவளுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.  இருவரையும் ஒன்றாக அழைத்து வருவதா?  தனித்தனியாக அழைத்து வருவதா?
அம்மா தெளிவாக சொன்னாள்:  வெளிப்படையாக நாம் அவர்களிடம் பேசுவோம்.  ஒன்றாகவே அழைத்துக் கொண்டு வா.. என்றாள் அம்மா.
ஒரு சனிக்கிழமை அப்பா இல்லாத சமயத்தில் அவர்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்தாள் வைஷ்ணவி.  
üஎதற்கு?ý என்று அவர்கள் கேட்டார்கள்.
üசும்மாதான்,ý என்றாள் வைஷ்ணவி சிரித்துக்கொண்டே. வைஷ்ணவி அப்படிச் சொல்லி சிரிப்பதே அழகாக இருந்தது.
இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.  ஆனால் வைஷ்ணவி கூப்பிடுகிறாள் என்றால் எதாவது விசேஷம் இருக்குமென்று நினைத்தார்கள்.  வைஷ்ணவி என்ற பெண்மீது உள்ள காதலால் அவர்கள் இருவரும் அவள் எங்கு கூப்பிட்டாலும் வரத் தயாராக இருந்தார்கள்.   இருவரும் அவளை திருமணம் செய்து கொள்ளவும் விரும்புகிறார்கள்.
அவர்கள் இருவரும் சிறப்பாக டிரஸ் செய்துகொண்டு வைஷ்ணவி வீட்டிற்கு வந்தார்கள்.  வைஷ்ணவி அவர்கள் இருவரையும் அம்மாவிற்கு அறிமுகப்படுத்தினாள்.  அவள் அம்மா தாங்க முடியாத சிரிப்புடன் அவர்கள் இருவரையும் வரவேற்றாள்.
அவள் அம்மா செய்து போட்ட டிபனை தின்றுகொண்டு அவர்கள் இருவரும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள்.
வைஷ்ணவி அவர்கள இருவரையும் பாரத்து வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தாள்.
“நாங்கள் முடியாத குடும்பம்.  நான் கல்யாணம் செய்து கொள்வதற்குக்கூட என் அப்பாவால் பெரிதாக செலவு செய்ய முடியாது..”
“எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது,” என்றார்கள் இருவரும்.
இருவருமே கல்யாணத்திற்கு ஆகும் செலவு வீண்.  நாம் வெறுமனே ரிஜிஸ்டர் ஆபிஸில் திருமணம் செய்து கொண்டு விடலாம்.  அல்லது எதாவது கோயிலில் எளிமையாக திருமணம் செய்து கொள்ளலாம் என்றார்கள்.
அவர்கள் இருவரும் அவர்களுடன் அரட்டை அடித்துவிட்டு ரொம்ப நேரம் கழித்துதான் வீட்டிற்குக் கிளம்பினார்கள்.  உண்மையில் அவர்களால் வைஷ்ணவியை விட்டுவிட்டுப் போகமுடியவில்லை.  வைஷ்ணவி யாருக்குக் கிடைப்பாள் என்பதில் ஒருவித பதட்டம் அவர்கள் இருவரிடமும் ஒட்டிக் கொண்டிருந்தது.  வைஷ்ணவியை விட்டுப் பிரிவது என்பது முடியாத காரியமாக இருந்தது. அவள் அம்மாவால் கூட யாருக்கு வைஷ்ணவி என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை.  வைஷ்ணவியிடமே அந்தப் பொறுப்பை விட்டுவிட்டாள்.
ஒருவாரம் கழித்து அவர்கள் இருவரையும் சந்திக்கும்போது, அவள் சொன்னாள் : üüஉங்கள் இருவரையுமே என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது.  யாராவது ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்ள முடியும்,ýý என்றாள். 
“அது ஏன் நானாக இருக்கக் கூடாது?” என்று குரு கேட்டான்.
“நானாகக் கூட இருககலாம் அல்லவா?” என்றான் மூர்த்தி.
“எனக்குக் குழப்பமாக இருக்கிறது,” என்று கூறிவிட்டு வைஷ்ணவி அந்த இடத்தை விட்டுப் போய்விட்டாள்.
குருவிற்கும், மூர்த்திக்கும் வைஷ்ணவியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற துடிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது தவிர குறையவில்லை.
üüஎன் அப்பா அம்மாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வரட்டுமா?ýý என்று குரு கேட்டான்.
மூர்த்தியும் அதேபோல் நச்சரித்தான்.
வைஷ்ணவி, “நான் இன்னும் தீர்மானம் செய்யவில்லை.  எதற்காக அழைத்து வரவேண்டும், பார்க்கலாம்,” என்றாள்.
மேலும் இன்னொன்றும் சொன்னாள் :  “என் அப்பா பாவம்.  அவரால் கல்யாணத்திற்காக எந்தப் பணமும் செலவழிக்க முடியாது?”
உடனே மூர்த்தி சொன்னான் : “நாங்கள் செலவு செய்து திருமணம் செய்கிறோம்.  நீ கட்டினப் புடவையோடு வந்தால் போதும்.”
அதைக் கேட்டு குருவைப் பார்த்து சிரித்தாள் வைஷ்ணவி.  அவனும் மூர்த்தி சொன்னதையே திரும்பச் சொன்னான்.
“அப்படி என்றால் ஒன்று செய்யுங்கள்..நான் மண மேடையில் நடுவில் நிற்கிறேன்.  மூர்த்தி இந்தப் பக்கமும், குரு அந்தப் பக்கமும் நின்றுகொண்டு ஒவ்வொருவராக எனக்குத் தாலி கட்டுங்கள்..” என்றாள் சிரித்தபடியே.   அவர்கள் இருவருக்கும் முகம் தொங்கிவிட்டது.  இந்த வைஷ்ணவி புரியாத புதிராக இருக்கிறாளே என்று கனத்த இதயத்துடன் யோசிக்கத் தொடங்கினார்கள்.
அவரகள் இருவரையும் பார்த்து, ஒரு நாள் வைஷ்ணவி இப்படிச் சொன்னாள் :  “வர ஞாயிற்றுக்கிழமை நான் முடிவு செய்து விடுகிறேன்… மாம்பலம் ரயில் நிலையத்தில் நாம் சந்திப்போம்,”என்றாள்.
அதைக் கேட்டவுடன், இருவருக்கும் படபடப்பாகி விட்டது.  வைஷ்ணவி வைக்கப் போகும் பரிட்சையில் யார் ஜெயிக்கப் போகிறோம் என்ற படபடப்புத்தான் அது.
வைஷ்ணவி அப்படிச் சொன்னாளே தவிர, யாரைத் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க வைப்பது என்பதில் பெரிய குழப்பம் இருந்து கொண்டுதான் இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை அவர்கள் இருவரும் வந்து விட்டார்கள்.  இருவர் முகங்களிலும் காரணம் புரியாத ஒரு படபடப்பு.  வைஷ்ணவி என்கிற மகாராணியை யார் கைப்பிடிக்க போவது என்ற படபடப்புதான்.  
வேகமாக மின்சார வண்டிகள் இரண்டு பக்கங்களிலும் போய் வந்தவண்ணம் இருந்தன.  ஒரே கூட்ட நெரிசல்.  அந்தக் கூட்டத்தில் மிதந்தபடி வைஷ்ணவி படி இறங்கி வந்து கொண்டிருந்தாள்.  
உடனே இருவரும் அவளைச் சூழ்ந்து கொண்டார்கள்.  வைஷ்ணவிக்கு ஒரே குழப்பமாக இருந்தது.  அவர்கள் அவளைப் பார்த்து, “நீ யாரை விரும்புகிறாய்?” என்று கேட்டார்கள்.  வைஷ்ணவி உடனே குருவைப் பார்த்து, “எனக்கு உன்னைத்தான் பிடிக்கிறது,”என்று கூறிவிட்டாள். ஏன் அப்படிச் சொன்னாள் என்பது அவளுக்கே தெரியவில்லை.  குருவிற்கு தாங்கமுடியாத சந்தோஷம்.
மூர்த்தி திகைத்து விட்டான்.  அவன் மூர்ச்சை ஆகும் நிலைக்கு வந்துவிட்டான்.  üüநான் இனிமேல் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம்,ýý என்று உளர ஆரம்பித்தான்.  உடனே ஓடிப்போய் பிளாட்பாரத்திலிருந்து கீழே இறங்கி, தண்டவாளத்தில் தலையை வைத்துக்கொண்டு, “நான் செத்துப் போகிறேன்,”என்றான். 
வைஷ்ணவிக்கு மூச்சே நின்றுவிடும் போல் ஆகிவிட்டது.   உடனே ஓடிப்போய் அவள் கத்தினாள் :  “ஏன் இது மாதிரி செய்கிறாய்?  உனக்குப் பைத்தியமா?” என்று.
மூர்த்தி எழுந்திருக்கத் தயாராய் இல்லை.  “எழுந்திருக்கிறாயா அல்லது உதை கொடுக்கட்டுமா?” என்றான் குரு.
தூரத்தில் மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது.  வைஷ்ணவியின் பதட்டம் அதிகமாகிவிட்டது. அதற்குள் பிளாட்பார்தில் உள்ள பயணிகள் பலர் சேர்ந்து சத்தம்போட, மூர்த்தி தண்டவாளத்திலிருந்து எழுந்து பிளாட்பாரத்திற்கு ஏறி வந்தான். படபடப்பாக இருந்தான். 
குரு வேகமாக மூர்த்தியிடம் வந்து, ஓங்கி ஒரு அடி விட்டான்.  “நாயே…தற்கொலை செய்துகொள்ள இதுவா இடம்,” என்று.
வைஷ்ணவி மூர்த்தியை ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை.  
அவளை கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு குரு அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டான்.
  

போட்டோ

நா கிருஷ்ணமூர்த்தி



இருபது வருடங்களுக்கு முன்பு
முதல் வகுப்பு படிக்கும்போது எடுத்த
புகை படிந்துவிட்ட
=குரூப்+ போட்டோவில்
அறுபது முகங்களுக்கு நடுவில்
ஒட்டி நிற்கும் மகனை
இமைகள் விரிய
இதழ்கள் விரிய
சட்டென அடையாளம் கண்டுவிடுகிறாள்
அம்மா….

நகுலன் கவிதைகளை வாசிக்கலாமா?

அழகியசிங்கர்








எந்தச் சிறு பத்திரிகை ஆகட்டும் நகுலன் கவிதை இல்லாமல் இருக்காது. நகுலன் ஏற்கனவே கவிதைகளை எழுதி வைத்திருப்பார். சிறுபததிரிகைக்காரர்கள் எல்லோரும் அவர்களுடைய சிறுபத்திரிகைகளை நகுலனுக்கு அனுப்பாமல் இருக்கமாட்டார்.  பின் அவர் எழுதிய கவிதைகளை பத்திரிகைக்கு அனுப்புவார்.  கூடவே தபால் தலைகளையும் சேர்த்து அனுப்புவார்.  ஒரு வார்த்தை எழுதுவார்.  கவிதைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தயவுவெய்து திருப்பி அனுப்பி விடுங்கள் என்று.  யாரும் அவர் கவிதைகளை திருப்பி அனுப்ப மாட்டார்கள்.  விருட்சம் இதழிற்கு ஒரு முறை அவர் எழுதிய கவிதையைப் பிரசுரம் செய்தேன்.  உடனே ஒரு படிம கவிதை எழுதுபவர் என்னிடம் சண்டைக்கே வந்து விட்டார்.  பின் அவர் எழுதிய அதிரடி கவிதையில் என்னையும் நகுலனையும் திட்டி ஒரு கவிதை எழுதி விட்டார்.  
மீட்சி 27 ல் வந்த ஐந்து கவிதைகள் என்ற நகுலன் கவிதைகளை நாங்கள் நடேசன் பூங்காவில் வாசித்தோம்.  அவற்றைக் கேட்கும்போது ஒரே சிரிப்பு. இதோ இங்கேயும் அவற்றை உங்களுக்கு படிக்க அளிக்கிறேன்.  நீங்களும் சிரிப்பீர்கள்.
ஐந்து கவிதைகள் 

‘நகுலன்’
வால்ட் விட்மன் :

அவன் “ஆத்ம ஸ்துதி”
என்ற கவிதைத் தொடரின்
கடைசி வரி
எங்கேயோ
நான் உனக்காகக்
காத்துக்  கொண்டிருக்கிறேன்                     ******

வந்தவன் கேட்டான்
“என்னைத் தெரியுமா?”
“தெரியவில்லையே”
என்றேன்.
“உன்னைத் தெரியுமா?”
என்று கேட்டான்
“தெரியவில்லையே”
என்றேன்.
“பின் என்னதான் தெரியும்?”
என்றான்
உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்
என்றேன். *********

அவன்
செத்துச் சில்லிட்டு
நாட்கள்
கடந்து விட்டாலும்
ஒருவரும்
ஒருவரிடமிருந்தும்
ஒன்றும்
தெரிந்து கொள்வதில்லை
என்ற நிலையில்

அவன் சாவு
இன்றும் இவனை
என்னவோ செய்கிறது.
*********

இந்த
ஊரில்
எல்லாமே
தலைகீழாகத்
தொங்குகிறது
மனித உடல்களில்
வீடுகள்
முளைத்திருக்கின்றன
இவர்களில் பலர்
எப்பொழுதுமே
சிடுசிடுத்த
முகங்களுடனேயே
காணப்படுகிறார்கள்
எங்கேயோ
யாரோ போவது
மாதிரி தோன்றுகிறது
உற்றுப் பார்த்தால்
யாருமில்லை ******

சென்ற இடத்தில்
தெரியாமல்
“ராயல்டி”
என்று
கேட்டு விட்டேன்
அவருக்குப்
பிரமாதமாகக்
கோபம் வந்துவிட்டது
“போட்டது
கை நஷ்டம்
ராயல்டி வேறு”
என்று
உரக்கக் கத்தினார்
நான் பேசாமல்
திரும்பி விட்டேன்

அறையில்
சுசீலா
உட்கார்ந்திருந்தாள்
நடந்ததைச்
சொன்னேன்
“உனக்கு உன் வழியில்
எழுதத்தான் தெரியும்”
“பின்ý”
“வாசகர்கள்
எதை வாசிக்கிறார்களோ
அதை
அவர் விற்கிறார்
அவர்கள் வாசிப்பது போல்
இவர் விற்பது போல்
நீ எழுத வேண்டும்”

நான் பேசவில்லை
மீண்டும்
சொன்னாள்
உனக்குச் சாகத்தான்
தெரியும்
நீ என்ன சொல்வாய்
என்று எனக்குத் தெரியும்
நீ எப்பொழுதும்
இப்படிச்
செத்துக் கொண்டிருக்க வேண்டும்
என்பதுதான்
என் விருப்பமும்
என்றாள்

பிறகு
அவள்
ஜோல்னாப் பையைத்
திறந்து
இந்தா
வாங்கிக் கொள்
உனக்கு
என்றுதான்
கொண்டு வந்திருக்கிறேன்
என்று
ஒரு குப்பி கான்யாக்கும்
ஒரு பாக்கெட்
‘ஸலம் ஸீகரெட்டும்
கொடுத்துவிட்டு
அடுத்த சனிக்கிழமை
மறுபடியும் வருகிறேன்
என்று
சொல்லிச்சென்றாள்

எனக்குள்
அவர் கோபம் அவருக்கு
சுசீலா
இருக்கின்ற வரையில்
எதுவும் சரியாகிவிடும்
என்று
என்னை நானே
சமாளித்துக் கொண்டேன்.

நானும் நடேசன் பூங்காவும்

அழகியசிங்கர்


நான் கல்லூரி படிக்கும் காலத்தில் நடேசன் பூங்காவில் தினமும் வந்து ஓடுவேன்.  எத்தனை முறை ஓடுவேன் என்பது ஞாபகத்தில் இல்லை. தி நகரில் உள்ள இந்த நடேசன் பூங்காவை என்னால் மறக்கவே முடியாது.  
இந்த நடேசன் பூங்காவில் நான் பல நண்பர்களுடன் வந்து  சும்மா பேசிக்கொண்டிருப்பேன்.  அப்போதே பலர் கூட்டம் நடத்திக் கொண்டிருப்பார்கள். ஒரு கட்டத்தில் நான் பூங்கா போவதையே நிறுத்தி விட்டேன்.  நடேசன் பூங்கா ஒரு அற்புதமான பூங்கா.  எனக்கு பனகல் பூங்காவை விட நடேசன் பூங்காதான் ரொம்பப் பிடிக்கும்.
அதன் பின் பல ஆண்டுகளுக்குப் பின் என் வலது கையை தூக்க முடியவில்லை.  தோள் பட்டையில் வலி. வலி என்றால் அப்படியொரு வலி.  ஆர்த்தோ மருத்துவரைப் போய்ப் பார்த்தேன்.  அதனால் எந்தப் பிரயோஜனமும் எனக்கு ஏற்படவில்லை.  அந்த சமயத்தில் Laughter Club  என்பதைப் பற்றி கேள்விப்பட்டேன்.  அதன் தலைமை இடம் திருவல்லிக்கேணி.  அங்கிருந்த சிலர் நடேசன் பூங்காவிலும் அதைத் தொடங்கி வைத்தார்கள்.
ஆரம்பத்தில் நானும் கலந்துகொண்டேன்.  தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து விடுவேன். Laughter Club ல் பலவிதமான உடலுக்கான பயிற்சிகள் கொடுப்பார்கள்.  எல்லோரும் சுற்றி நிற்பார்கள்.  ஒரே மாதிரி கைத் தட்டுவார்கள்.  ஒவ்வொரு பயிற்சிக்கும் சிரிப்பார்கள். பின் ஒருவரைப் பற்றி தினமும் விஜாரிப்பார்கள்.
ஒரு மாதம் கூட ஆகியிருக்காது   தாங்க முடியாத என் வலது தோள் பகுதி வலி முற்றிலும் குணமாகி விட்டது.  என்னால் இதை நம்ப முடியவில்லை. ஆனால் எப்போதும் நடேசன் பூங்காவை என்னால் மறக்கவே முடியாது. மேலும் பல மாதங்களாக சுற்றி சுற்றி நடந்தும் இருந்திருக்கிறேன்.  Laughter Club   மாதிரி கூட்டம் நடத்தினால் என்ன என்று நினைத்துக்கொள்வேன்.  அது சாத்தியமே இல்லை என்றும் தோன்றும். ஏன் எனில் எழுதுபவர்கள், படிப்பவர்களை ஒன்று சேர்ப்பது ரொம்ப கஷ்டம்.  Laughter Club மிகக் கொஞ்சம் பேர்கள்தான் கலந்து கொள்வார்கள்.  ஆனால் அவர்களுடைய உறுதி எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அதுமாதிரியான முயற்சியை கதை கவிதை வாசிக்க ஏற்பாடு செய்யலாம்.  அது முடியாத காரியம் என்று நன்றாகவே தெரியும்.  இப்படித்தான் இதை ஆரம்பிக்க வேண்டும், இப்படித்தான் முடிக்க வேண்டும் என்று கொள்கை எதுவும் எழுதுபவர்களிடமும் படிப்பவர்களிடம் செல்லுபடி ஆகாது.
பூங்கா மாதிரி ஒரு இடத்தில் கூட்டம் நடத்தினால் படிப்பவர்கள் எழுதுபவர்கள் எல்லாம் ஒரே அணியில் சேர்ந்து கருத்துகளைச் சொல்வார்கள்.  ஆனால் Laughter Club   மாதிரி இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும், இப்படித்தான் முடிக்க வேண்டும் என்கிற மாதிரி ஒரு கதை ஒரு கவிதை கூட்டத்தில் வராது.
தஞ்சாவூரில் பிரகாஷ் கதை சொல்கிற கூட்டத்தை பல ஆண்டுகளாக நடத்தியதாக நான் அறிந்திருக்கிறேன்.  தஞ்சாவூர் கவிராயர் கூட இதைப் பற்றி சொல்லியிருக்கிறார்.  ஆனால் அதை எப்படி நடத்தினார் என்பது தெரியாது.  ஒரு பத்திரிகையிலிருந்து புத்தகத்திலிருந்து கதையைப் படித்தார்களா அல்லது மனசிலிருந்து என்னன்ன கதைகள் தோன்றுகிறதோ அதைச் சொன்னார்களா என்பது தெரியாது.  உலகம் முழுவதும் கதை சொல்லும் கூட்டம் இருக்கிறதாக நண்பர்கள்  சொல்லியிருக்கிறார்கள். அதேபோல் இங்கும ஆரம்பிக்க வேண்டும்.  குறிப்பாக கல்லூரிகளிலும், பள்ளிக்கூடங்களிலும்  தமிழில்தான் கதைகள் கவிதைகள் வாசிக்க வேண்டும்.  இதில் உறுதியாக இருக்க வேண்டும்.
          இந்தக் கதை அல்லது கவிதைப் படிப்பதற்கே ஒரு டிமான்ட் வேண்டும். அந்த டிமான்ட் கிடையாது.  மேலும் வருபவர்கள் எதைஎதையோ படிப்பார்கள்.. கேட்பவர்கள் தலை எழுத்தா இதையெல்லாம் கேட்பதற்கு என்பார்கள்.  
ஆனால் ஒன்றும் செய்ய முடியாது.  படிப்பதை கேட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும்.  எதாவது நல்லது யாராவது படிப்பார்கள்.  இதனால் யாருக்காவது பயன் இருக்கும்.  ஒரு கதையை எழுதுபவர் சத்தமாக கதையைப் படிக்கும்போது என்னன்ன தவறுகளை செய்திருக்கிறோம் என்று  நினைக்கத் தோன்றும்.  ஆனால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால்தான் இந்தக் கூட்டமே தொடர்ந்து நடைபெறும்.
ஒருமுறை வைதீஸ்வரன் பிறந்த நாளை இந்த நடேசன் பூங்காவில் பல எழுத்தாள நண்பர்களைக் கூப்பிட்டு நடத்தினேன்.  அந்தக் கூட்டம் கூட நன்றாகவே இருந்தது.  இன்னொரு முறை திரிசூலம் என்ற ரயில்வே ஸ்டேஷனலில் சில நண்பர்களைக் கூப்பிட்டு கவிதை வாசிக்க வைத்தேன்.  அந்தக் கூட்டமும் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்காமல் இல்லை. 
ஆனால் எனக்கு ஒரு பிரச்சினை.  நானே இதெல்லாம் எதற்கு என்று ஒன்றும் ஏற்பாடு செய்யாமல் நிறுத்தி விடுவேன்.  நான் கல்லூரியில் படிக்கும்போது கடற்கரையில் முல்லைச்சரம் என்ற பெயரில் கவிஞர் பொன்னடியான் என்பவர் மாதம் ஒரு முறை கூடி பல கவிஞர்கள் கவிதை வாசிக்கக் கேட்டிருக்கிறேன்.  அதெல்லாம் மரபு கவிதைகளாக இருக்கும்.  கம்யூனிசத் தலைவர் ஜீவா அவர்களின் புதல்வர் கவிதைகள் எழுதி அங்கு வருவார்.  நானும் அவருடன் அதில் கலந்து கொண்டிருக்கிறேன்.  அந்தக் கூட்டம் கூட நாளடைவில் குறைந்து கொண்டே போயிற்று.  என்றாவது டிவிக்காரர்கள் கவிதை வாசிப்பவர்களைப் படம் பிடிக்க வந்தால், அன்று மட்டும் ஏகப்பட்ட கூட்டம் வரும்.  முண்டி அடித்துக்கொண்டு கவிதைகள் வாசிப்பார்கள்.
நேற்று நான் நடேசன் பூங்காவிற்கு நாலு மணிக்கே வந்து விட்டேன்.  முதலில் ஒன்றை கவனித்தேன்.  பூங்காவின் உற்சாகமான தோற்றம்.  அங்கு யாரும் வந்து கவிதையோ கதையோ வாசிக்காவிட்டாலும் பூங்காவின் அமைப்பே புத்துணர்ச்சியைத் தருவதுபோல் இருக்கிறது.  அது போதும்.
நான் என்னுடைய புத்தகமான வினோதமான பறவையிலிருந்து ஒரு கவிதையை வாசித்தேன்.  அதை இங்கே தருகிறேன்.
    
வினோதமான பறவை

ஒன்று
வினோதமான பறவை
சப்தம் இட்டபடி
இங்கும் அங்கும்
சென்று கொண்டிருந்தது
மண்ணில் எதைத்
தேடிக்கொண்டிருக்கிறது
கோட்டான் பூனை
மதிற்சுவரில் சோம்பலாய்
சயனித்துக்கொண்டிருக்கிறது

கீழே
குடியிருப்பவர்
துருப்பிடித்த சைக்கிளை
எங்கே எடுத்துச் செல்கிறார்

வெயில் கொளுத்துகிறது
மரங்கள் அசையவில்லை
கதவைச் சாற்றிவிட்டு
வெளியில் அமர்ந்திருந்தேன்

ஆமாம்..
என் நேரமும்
உங்கள் நேரமும் ஒன்றல்ல….

                                                                                         27.05.2011