தோன்றும் கவிதை வரிகள்

அழகியசிங்கர்
காலையில் வாக் போகும்போது எனக்கு கவிதை வரிகள் தோன்றினால் வீட்டில் உள்ள கர்னாடக வங்கி டைரியில் எழுதி வைப்பேன்.  தேதி எழுதுவேன்.  நேரம் எழுதுவேன்.  ஆனால் யாரிடமும் இதுமாதிரி எழுதுவதை காட்ட மாட்டேன்.  கிட்டத்தட்ட 30 க்கு மேல் கவிதைகள் எழுதியிருப்பேன். நானே படித்து ரசிக்கக் கூடிய கவிதைகள் இவை.  அவற்றில் ஒன்று ஜெயமோகன் என்ற தலைப்பில் ஒரு கவிதை.  இதோ உங்களுக்குப் படிக்க அளிக்கிறேன்.
ஜெயமோகன்
ஆயிரக்கணக்கான பக்கங்களில்
மஹாபாரதம் எழுதிக்கொண்டே போகிறார்
படிக்க படிக்க வளர்ந்துகொண்டே போகிறது
எது மாதிரியான எழுத்தளார் இவர்
எப்படியெல்லாமோ யோஜனை செய்கிறார்
என்பது ஆச்சரியம்தான்
எழுத்து அவரை எழுதிக்கொண்டே போகிறதா
ஆனால் 
என்ன செய்வது
அவர் எழுதும் வேகத்திற்கு
என்னால் படிக்க முடியவில்லையே…….

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்

அழகியசிங்கர்

உமாபதியின் வெளியில இருந்து வந்தவன் என்ற கவிதைத் தொகுதி விருட்சம் வெளியீடின் நான்காவது தொகுதி.  வெளிவந்த ஆண்டு நவம்பர் 1991. கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஓடி விட்டன.  அவரும் என்னைப் போல் வங்கியில் பணிபுரிந்தவர்.  இப்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை.  அவருக்கு வயது எழுபதாவது இருக்கும்.
இந்தத் தொகுதிக்கு சுந்தர ராமசாமி முன்னுரை எழுதியிருக்கிறார். அவருடைய கவிதைகள் குழப்பமில்லாமல் ஆழ்ந்து யோசனை செய்ய வைக்கும். இந்தத் தொகுதி வரும்போது ஒரு முறை என்னைப் பார்க்க வீட்டிற்கு வந்திருக்கிறார்.  அன்று ஒரு பண்டிகை தினம்.   நான் வீட்டில் அவருக்கு விருந்தளித்தேன்.  இப்போது அவர் முகமே எனக்கு மறந்து விட்டது.  
ஓசைகள் என்ற இக் கவிதைக்கு ஓவியர் பாஸ்கரன் ஒரு பூனை படம் வரைந்திருக்கிறார்.  பூனை படங்களை வரைவதில் பாஸ்கரன் திறமையானவர் என்று கேள்விப்ப்ட்டிருக்கிறேன்.
இத் தொகுப்பை திரும்பவும் கொண்டு வர உத்தேசித்துளளேன்.

உமாபதி

ஓசைகள்
ஓசைகளின் உபத்திரவம் 
தாங்க முடியாமல் போச்சு
இன்ன இடமென்றில்லாமல்
வீட்டில்
வெளியில்
விவஸ்தை கெட்டுப் போச்சு
எப்போது என்று ஞாபகமில்லை
மனிதர்கள் பேச்சை மறுத்து
ஒதுங்கிய நாளாய் இருக்கலாம்
கதிகளின் ஓசைக்குக் காதை
அடைத்த அன்றாய் இருக்கலாம்
காற்று பேசத் துவங்கியது
தன் இச்சைப்படி
மெலிதாய் உரத்தும்
விஷயங்களுக்குத் தக்கபடி
எல்லாம் கை மீறினதாய் உணர்ந்து
வழியில்லாமல்
குருடாக்கிக் கொண்டேன்
விளைந்தது ஆபத்து
முதல் நாள்
எதரில் கண்ட சில விரல்களில்
இன்னும் சில முகங்களில்
என் செவிகள்
பின்னர் ஒரு பூனையின் முகத்தில்
புல்லின் நீர் கோந்த முகத்திலும் கூட
நாளாக நாளாக என் உடம்பே
எனக்கொரு செவியாச்சு
உலகெங்கும் என் செவிகள்
வெளியெங்கும் என் செவிகள்
எல்லாம் ஆரவாரம்.

ராம் காலனி என்ற மர்மக் குறுநாவல்

அழகியசிங்கர்

அப்போது நாங்கள் போஸ்டல்காலனி முதல் தெருவில் குடியிருந்தோம்.  இன்னும் கூட ஞாபகம் இருக்கிறது.  தீபாவளி அன்றுதான் நடந்தது.  எங்கள் வீடு இருந்த தெரு முனையில் உள்ள ஒரு வீட்டில் ஒரு ரிட்டையர்டு ஸ்கூல் டீச்சர் தனியாக இருந்தாள்.  வயதான பெண்மணி. அந்தப் பெண்மணிக்கு சொந்தமான தனி வீடு. அந்தப் பெண்மணி கொலை செய்யப்பட்டிருந்தாள். பயங்கரமான அதிர்ச்சி அது.  இவ்வளவு அருகில் ஒரு கொலை நடந்திருக்கிறது என்பதை என்னால் நம்ப கூட முடியவில்லை.  
கொலை செய்தவன் அந்தப் பெண்மணியின் நகைக்காக கொலை செய்து விட்டான்.  தனிமையில் இருக்கும் அந்தப் பெண்மணி நகைக்காக கொலை செய்ய வருபவனிடம், கேட்டவுடன் நகைகளைக் கழட்டிக் கொடுத்திருக்கலாம்.  அந்தப் பெண்மணி எரிர்ப்பு தெரிவித்ததால் இது மாதிரி நிகழ்ந்து விட்டது. போலீசுகாரர்கள் திறமையானவர்கள்.  ஒருவாரத்தில் அந்தக் கொலையாளியைப் பிடித்து விட்டார்கள்.
நம் அருகில் இது மாதிரி நிகழ்ச்சி நடக்கும்போது நம்மை அறியாமலேயே ஒரு அதிர்வு ஏனோ ஏற்படுகிறது.  மனம் நிம்மதி இல்லாமல் தவிக்கிறது.  நாங்கள் அன்று அப்படித்தான் தவித்தோம். 
இந்தக் கொடூர நிகழ்ச்சியை அடிப்படயாகக் கொண்டுதான் நான் ராம் காலனி என்ற மர்மக் குறுநாவல் ஒன்றை எழுத முயற்சி செய்து வெற்றிகரமாக எழுதினேன்.  
என்னதான் எழுதினாலும் நிஜம் பயங்கரமானதுதான்.  

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்


அழகியசிங்கர்


பூனைகள் பற்றி நான் கவிதைகளைத் தொகுக்க ஆரம்பித்தேன்.  பின் ஏனோ அந்த முயற்சியைத் தொடரவில்லை.  என்னிடம் உள்ள நல்ல பழக்கம். நான் எதாவது தொடர்ந்தால் கொஞ்ச நாள் தொடர்வேன் பின் நிறுத்தி விடுவேன்.  இப்படி பாதியில் பாதியில் நின்று போன ப்ராஜக்ட் அதிகம்.  இந்த ப்ளாகும், முகநூலும் வந்த பிறகு  இப்படி தொடராமல் போன எத்தனையோ பாதியில் நின்று போயிருக்கின்றன.  என்றாவது ஞாபகம் வந்தால் தொடர்வேன்.  பூனைகள் குறித்த கவிதைகள் பலர் எழுதி உள்ளார்கள். என்னைப் பொறுத்தவரை கவிதை எழுதத் தொரியாத ஒருவர் கவிதை எழுத விரும்பினால் பூனையை கண் முன் நிறுத்தி எழுதத் தொடங்கினால் கவிதை தானாகவே எழுத வந்து விடும்.  ஏன்எனில் பூனை ஒரு ஆன்மிக விலங்கு. அதைத் தூக்கி மேலே வீசி எறிந்தால் தன் மீது அடிபடாமல் தப்பித்து விடும்.  
வீடை ஒழிக்கும்போது ஒரு பெஞ்ச் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது வெளியே வைத்திருந்தேன்.  நேற்று வண்டியை உள்ளே தள்ளிவிட்டு வந்தேன்.  பெஞ்சில் ஒரு பூனை சொகுசாகப் படுத்துக் கிடந்தது.  எனக்கு கெட்ட கோபம்.  என்னிடம் அனுமதி கேட்காமலேயே படுத்திருந்ததால்தான் கோபம்.  பின் அதைத் துரத்தினேன். 
பெருந்தேவியின் அழுக்கு சாக்ஸ் புத்தகத்தை தபாலில் அனுப்பினேன். அப்போது கையில் வைத்திருந்த ஒரு புத்தகத்தைத் திருப்பிப் பார்த்தேன்.  57 ஆம் பக்கத்தில் பெருந்தேவியின் புத்த நாடகம் என்ற கவிதை.
கீழே நான் துரத்திய பூனை இங்கே எப்படி வந்தது என்று தோன்றியது. எனக்கு நன்றாக இனிமேல் பொழுது போய்விடும்.  இதோ இப்போது ஒரு பூனையை உங்கள் கண் முன்.
புத்த நாடகம்
பெருந்தேவி
விட்டத்திலிருந்து குதித்த கிழட்டுப்பூனைக்குப்
படாத இடத்தில் பட்டுவிட்டது
திருமணக்கோலத்தைச் சுட்டாத ஒரு பூமால
அழுகுகிறது கடைத்தெருவில் ப்ளாஸ்டிக் உறையில்
        கதவுகள் மூடப்பட்ட அறைக்குள் பூனை நொண்டுகிறது
வேறெங்கோ விபத்துக்குள்ளான வாகனத்தில்
புன்னகைபூத்து இறந்து கிடக்கின்றனர் கள்ளக்காதலர்கள்
தட்டுமுட்டுச் சாமான்களும் திகைப்புமாக 
மோதி நகர்கிறது பூனை
நெடுநாளைய இருமலொன்று அடுத்த தெருவில்
அந்தரத்தை அடைகிறது எப்போதும்போல்
இருள் காவியத் துணையாகிறது பூனைக்கு
இன்னொரு பூனைக்கும் இன்னொரு இரவுக்குமாகத்
தயாராகிறது வேசன் என அடுத்தநாள்

சில துளிகள்…….

அழகியசிங்கர் 


படுக்கையிலேயே படுத்துக்கொண்டிருந்த அப்பா திடீரென்று எழுந்து உட்கார்ந்து கைகளை அசைத்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்.  
*********
நான் எடுத்துப் படிக்க நினைத்த புத்தகங்களின் ஒன்றின் பெயர் கானகன்.  என் கம்பூயூட்டர் டேபிள் பக்கத்தில் வீற்றிருக்கிறது.
**********
கடந்த நாலைந்து நாட்களாக நான் சளி, இருமலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன்.  சாப்பாடு பிடிக்கவில்லை.  சோர்வு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.  இன்று கொஞ்சம் பரவாயில்லை.  சாப்பிட முடிந்தது.
*********
அழகியசிங்கர் என்ற பெயரில் எழுதுவதை விட்டுவிட்டு மாயோன் என்ற பெயரில் எழுதலாமா?  
*********
இன்று 100வது இதழ் விருட்சத்தை ஆரம்பிக்க முடியவில்லை. தில்லியிலிருந்து உறவினர்கள் வந்து விட்டார்கள்.  அவர்களை அலட்சியப் படுத்துகிறேன் என்று நினைத்து விடக் கூடாது என்று அவர்களுடனே இருந்தேன்.
*********
காலையில் தெருவில் ஒரு சிறுவன் கணீரென்ற குரலில் இடியாப்பம் இடியாப்பம் என்று கத்திக்கொண்டு போவான்.  அவனுடைய சுறுசுறுப்பும் வேகமும் ஆச்சரியமாக இருக்கும்.  யாரும் அவனிடம் இடியாப்பம் வாங்கவும் மாட்டார்கள். கவலைப்படாமல் அவன் நாள் தவறாமல் கூவிக்கொண்டு போவான். அவன்தான் எனக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறான்.  நான் வெளியிடும் புத்தகங்களையும் யாரும் வாங்காவிட்டால் அவனைப் போல கூவத் தயார்.  
********
தில்லியிலிருந்து வந்திருந்த உறவினரைக் கேட்டேன் : புத்தகம் படிப்பதுண்டா? இல்லை என்றார்.  சினிமா பார்ப்பதுண்டா? இல்லை என்றார்.  டிவி பார்ப்பதுண்டா? இல்லை என்றார். நான் இன்னும் பேசுவதற்கு வார்த்தைக் கிடைக்காமல் தவித்தேன்.
*********
காலையில் நான் சாப்பிட்டப் பிறகு நாற்காலியில் அமர்ந்தால் போதும்,  தூக்கம் வந்து விடுகிறது.  என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. தினமும் சாப்பிடும் மாத்திரைகளா காரணம்.
*********
எபபடி கெஞ்சுவது என்று யாராவது சொன்னால் போதும், நான்  கெஞ்சத்  தயார்.  என் வீட்டு வாசலில் மழை நீர் கால்வாய் மூடி உடைந்து விட்டது.  உதவி பொறியாளரைப் பார்த்து 3 மாதங்களாய் மன்றாடிக் கொண்டிருக்கிறேன்.  ஒரு பிரயோஜனமும் இல்லை.  மேயர் சைதை துரைசாமியைப் பார்க்கப் போகலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  கூச்சமாக இருக்கிறது.  அல்லது அந்த உதவிப் பொறியாளர் காலைப் பிடித்து நமஸ்காரம் செய்யலாமா?  அல்லது இந்த வேலை முடியறவரை இந்த இடத்தை விட்டுப் போகமாட்டான் என்று அவர் அலுவலகத்தில் உட்கார்ந்து விடட்டுமா?  அந்தப் பணியை முடிக்க காசு கொடுக்கவும் தயார்.  ஆனால் அரசாங்கத்திலிருந்துதான் ஆட்கள் வரவேண்டும்.
******
இதை முடிக்கும்போது ஒரு கவிதை :
உட்கார கிடைத்த இடத்தைப் 
பிடித்துக் கொண்டேன்
சுற்றிலும் கூச்சல்…….

எதாவது ஒரு பக்கத்தை எடுத்துப் படிப்பேன்

அழகியசிங்கர்
என் கல்லூரி நாட்களிலிருந்து நான் கன்னிமேரா லைப்ரரியின் உறுப்பினன்.  எதாவது புத்தகங்கள் எடுத்துக்கொண்டு வருவேன்.படிக்கிறேனோ இல்லையோ புத்தகங்களை அங்கிருந்து எடுத்துக்கொண்டு வருவது வழக்கம்.  முழுக்க என்னால் புத்தகத்தைப் படிக்க முடியாவிட்டாலும், நான் எடுத்துக்கொண்டு வரும் புத்தகத்திலிருந்து எதாவது ஒரு பக்கத்தை எடுத்துப் படிப்பேன்.  எந்தப் பக்கம் என்பது தெரியாது.  சிலசமயம் அந்தப் புத்தகத்தை யார் கொண்டு வந்துள்ளார்கள் என்று பார்த்து வாங்கி வைத்து விடுவேன்.
ஒருமுறை ரமண விருந்து பாகம் 3 கிடைத்தது.  படிக்க படிக்க சுவாரசியமாக இருந்தது.  உடனே வாங்கி வைத்துக் கொண்டேன். இப்போதெல்லாம் என் மனம் சஞ்சலம் (அவ்வளவு லேசில் அடைவதில்லை) அடைந்தாலோ போரடித்தாலோ என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தாலோ ரமண விருந்தை எடுத்து எதாவது ஒரு பகுதியை எடுத்துப் படிப்பேன்.  
அது எனக்கு எதாவது உணர்த்தும்.  நானே கற்றுக்கொள்ளும் பாடமாகக் கூட இருக்கும்.  அதிலிருந்து சாப்பாட்டு யோகம் என்ற பகுதியை உங்களுக்குப் படிக்க அளிக்கிறேன்.
ரமணாச்ரமத்திற்கு ஒருநாள் ஒரு அடியார் வந்தார்.  எங்கிருந்தோ வந்தவர் அவர்.  தரிசன ஹாலில் பகவானுக்கு எதிரில் அமர்ந்தார்.  இவர் பல இடங்களுக்கும், பல மடங்களுக்கும், பல ஆசிரமங்களுக்கும் போய் அங்கங்கே உள்ள குருமார்களைச் சந்தித்தாராம்.  இதைப் பற்றி அளக்க ஆரம்பித்தார்.
எந்தெந்த குருவிடம் அவர் என்னென்ன யோகப் பயிற்சியைப் பெற்றார் என்பதை வெகு உற்சாகமாகப் பகவானிடம் கூறினார்.
ஆனால் இந்த ரமணர் எந்த யோகத்தையும் உபதேசிக்கக் காணோமே என்று அலுத்துக் கொண்டார்.  சலித்துக் கொண்டார்.
தரிசன ஹாலில் பகவானது அடியார்கள் இவரது அதிகப்பிரசங்கித்தனத்தைக் கேட்டு புன்முறுவலித்தபடி அமர்ந்திருந்தனர். 
பகவானும் இந்த யோக நிபுணரின் அளப்பைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
மணி பகல் 11.30.   சாப்பாட்டு மணி அடித்தது.  பகவான்தான் ஆசிரம சட்டத்தை அனுசரிப்பவர் ஆயிற்றே?  அவர் என்ன செய்தார்?
பகவான் உடனே எழுந்தார்.  யோகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த அந்த அடியாரைப் பார்த்து பகவான் கூறினார் : “அதெல்லாம் சரி, இப்போது இந்த குருவிடம் ‘எப்படி சாப்பிடுவது?’ என்ற யோகத்தைக் கற்றுக் கொள்ளும்.  வாரும்.”
இவ்வாறு கூறிய பகவான் அந்த யோக நிபுணரை உணவுக்கூடத்திற்கு அழைத்துச் சென்றார்.  
பகவானது இந்த ஹாஸ்யத்தை ரசித்தவாறு அடியவர்களும் எழுந்தார்கள் சாப்பாடு யோகத்திற்கு.
இந்தப் புத்தகத்தை எழுதியவர் சிவ. தீனநாதன்.  விலை ரூ.50. உண்மையில் விருந்து இந்தப் புத்தகம்.

இரண்டு கவிதைகள்


அழகியசிங்கர்


ஒன்று

நான் பஸ்ஸில்
வந்து கொண்டிருந்தேன்
இருக்கை எதுவும்                                                             தட்டுப்படவில்லை
பஸ்
ஊர்ந்து ஊர்ந்து
சென்று கொண்டிருந்தது
பல ஊர்களைத் தாண்டியது
பல மனிதர்களைச் சுமந்த சென்றது
வயல்களைத் தாண்டியது
உயரமான மரங்களைத் தாண்டியது
கூட்ட நெரிசலில்
ஒழுங்கற்ற சப்தம் பஸ்ஸில்
சுழன்றபடி சென்றது
ஊர்ந்து ஊரந்து
பஸ் நகர்கிறது
நான்
பஸ்ஸில்
பயணித்துக்கொண்டிருக்கிறேன்

இரண்டு

இந்த இடத்திற்கு
நான் வருவதற்குமுன்
இந்த இடம்தானா
என்று எனக்குத் தோன்றியது…
                                                                        (2011)

ஏழு வரிக் கதை

ஆயிரங்கால் மரவட்டை
நகுலன்



மணி4.30 ஆகிவிட்டது.  வெளியில் போக ஒரு பரபரப்பு.  வேறு காரணமும் உண்டு.  
சென்ற வழியில் நண்பனைச் சந்தித்தேன்; அவனும் என்னைப் போல ஒரு புஸ்தகப் பிரியன்.  அப்பொழுதுதான் üüகரிச்சான் குஞ்சுýý வின் üüபசித்த மானிடம்ýý படித்து முடித்திருந்தேன்.  அதை யாரிடமாவது சொல்லி என் அகமகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று ஒரு துடிப்பு.  நானும் அவனும் கரிச்சான்குஞ்சுவின் படைப்புகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.  அவனும், üகரிச்சான் குஞ்சுýவின் சிறுகதைகளைப் படித்திருக்கிறான்.
அப்பொழுது நீ வந்து சேர்ந்தாய்; பேச்சு பரிசு கொடுக்கும் ஸ்தாபனங்களைப் பற்றித் திரும்பியது.  எந்த எந்த ஸ்தாபனத்தில் எப்படி எப்படி இந்தப் பரிசு விஷயம் நிச்சயிக்கப்படுகிறது என்பதில் பேச்சுத் திரும்பியது. 
ஆலோசனைக்குழு, காரியக் கமிட்டி, இவற்றில் எதில் எதில் யார் யார் இருக்கிறார்கள், இவரில் யார் யாரைவிட முக்கியம், பரிசு பெற என்ன என்ன தகுதிகள், எதை எதை எப்படி எப்படிச் செய்யவேண்டும் என்றெல்லாம் பேச்சுத் திசை மாறிப் போனதும், என் நண்பன் என்னைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.  நான், “பேசிக் கொண்டிருங்கள்.  எனக்கு நூல் நிலையத்திற்கு 7 மணிக்கு முன் போக வேண்டும்,” என்று அங்கிருந்து மெல்ல நழுவி விட்டேன்.  என் நண்பன் அடுத்த நாள் நான் அவனைக் கண்டால் அவன் என்னைத் திட்டுவான் என்பது எனக்குத் தெரியும்.
மரவட்டை, தான் எப்படி நகர்கிறது என்று, தன் இயல்பாக-இயங்கும் தன்மையைச் சற்று மறந்து, யோசனையில் ஆழ்ந்தபோது, அதற்கு ஆயிரங்கால்கள் இருந்தும், அசைய முடியாமல் முடமாகிவிட்டது என்றுதான் சொல்கிறார்கள்.  
(நன்றி : கவனம் ஜøன் 1981)

குமரகுருபரன் என்ற கவிஞர்

அழகியசிங்கர்


குமரகுருபரன் என்ற கவிஞர் எதிர்பாராதவிதமாய் மரணம் அடைந்தது அதிர்ச்சியான தகவலாக இருக்கிறது.  உண்மையில் எனக்கு அவர் யார் என்று தெரியாது.  சமீபத்தில் எழுதுபவர்களில் பல படைப்பாளிகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் பலருடைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு வருகிறேன்.  குறிப்பாக கவிதைத் தொகுதிகளை வாங்க வேண்டுமென்று நினைத்துக் கொள்வேன்.  யார் இந்த குமரகுருபரன் அவர் எப்படிப்பட்ட கவிதைகளை எழுதுவார் என்றெல்லாம் தெரியாது.   அவருக்கு இயல் விருது கிடைத்த செய்தியை அறிந்தபோது அவரைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள வேண்டுமென்று நினைத்தேன்.  யூ ட்யூப்பில் அவருடைய புத்தக வெளியீட்டு விழா நடந்த விபரம் அறிந்து பார்த்திருக்கிறேன். பாண்டிச்சேரியில் நடந்த விமர்சனக் கூட்டத்தில் இந்திரன் பேசியதையும் பார்த்தேன். இப்போது இதெல்லாம் சாத்தியமாகி இருக்கிறது.  முன்பு அதெல்லாம் கூட சாத்தியம் இல்லை.  இப்படித்தான் சில நிகழ்ச்சிகள் நடந்து நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. நான் படித்த காஸ்டினேடா புத்தகங்களில் üமரணம்தான் உன் எதிரிý  என்ற வாக்கியம் இன்னும் கூட என்னால் மறக்க முடியாதது.  இதை விவரிக்கிறபோது சூழ்நிலை எப்படியெல்லாம் சுழன்று போய்க் கொண்டிருக்கிறது என்று அப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும்.  மரணம் எப்படி ஒருவரை சூழ்ந்துகொண்டு நெருக்கம் கொடுக்கிறது என்பதை விவரித்தபடி சென்று கொண்டிருக்கும். மரணத்தின் முன் நாமெல்லாம் பகடைக் காய்கள்தான். ஒன்றும் செய்ய முடியாது.
‘மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்க முடியாது’ என்பது அவருடைய கவிதைத் தொகுதியின் தலைப்பு.  புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்று தூண்டுகிற தலைப்பு. 
இத் தருணத்தில் சங்கர ராம சுபபிரமணியன் 1998ல் விருட்சத்தில் எழுதிய கவிதைகளை இங்கு அளிக்கிறேன்.
மரணம் பற்றிய இரண்டு குறிப்புகள்
1. ஏதோ ஒரு
சமனற்ற நிலையில்
காகத்தின் இறக்கை
பட்டும்
என் மரணம் 
நிகழக்கூடும்.
2. சாவை
கை விரித்து, நாதுருத்தி
சிறுமி நிகழ்த்தி
காட்டியது இன்னும்
பயமுறுத்துகிறது.

ஓர் உரையாடல்

 அழகியசிங்கர்

 

பால்கனியிலிருந்து வேடிக்கைப் பார்ததுக் கொண்டிருந்தார் அழகியசிங்கர். தெருவில் தூரத்தில் ஜெகனும், மோகினியும் வந்து கொண்டிருந்தார்கள்.  அவர்களைப் பார்த்து கையை ஆட்டினார்.  அவர்களும்.
வீட்டிற்குள் வந்தவுடன் முதல் கேள்வி ஜெகனிடமிருந்து.  ýýஏன் நீங்கள் இப்போதெல்லாம் வெளியே வருவதில்லை.
 அழ கியசிங்கர் :     அப்பாதான…
மோஹினி :  இப்போது எப்படி இருக்கிறார்?
அழகியசிங்கர் :  அப்படியேதான் இருக்கிறார்.  என்ன சில நாட்கள் இரவில் சத்தம் போட்டு கூப்பிடுவார்.  சில நாட்கள் அவர் இருப்பதே தெரியாது.
ஜெகன் : கஷ்டம்தான்.
மோஹினி :  உங்களுக்கு வெளியே போக வேண்டிய அவசியம் இல்லை அல்லவா?
அழகியசிங்கர் : ஆமாம்.  நான் வெளியூர் சென்று ஒரு வருடம கூட ஆகிவிடும் போல் தோன்றுகிறது.  எந்தக் கூட்டத்திற்கும் சென்றாலும் என்னால் 3 மணி நேரம 4 மணிநேரம் என்று இருக்க முடியாது.
ஜெகன் :  எதிர்பாராதவிதமாக நடந்த புததகக் காட்சியைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அழகியசிங்கர் : புததகக் காட்சியின்போது உண்டான உஷ்ணத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.  எனக்கு உதவி செய்த நண்பருக்கும் என் வயதுதான்.  அவரை நினைத்து எனக்கு ஆச்சரியம். 
மோஹினி :  உங்கள் வயதில் புத்தகக் காட்சி நடத்துபவர்க்கு என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள்?
ஜெகன் :  புத்தகமும் விற்க முடியவில்லை என்றால் இன்னும் ஏமாற்றமாக இருக்கும்.
அழகியசிங்கர் :  அடிப்படை வசதி கொஞ்சம் குறைவுதான்.  முதியவர்கள் ஸ்டாலைப் பார்க்க புத்தகக் காட்சிக்குள்ளேயே ஒரு மூவிங் வண்டி வைத்திருக்க வேண்டும்.  
மோஹினி : சனி ஞாயிறுகளில் காலையிலிருந்து ஒருவர்ஸ்டாலைப் பார்த்துக் கொள்வது என்பது கஷ்டம்தான்.
அழகியசிங்கர் :  எனக்கு உதவி செய்த நண்பர் அதைத் தண்டனையாக நினைக்கவில்லை.  அதை விரும்பி ஏற்றுக்கொண்டார்.  அவருக்கு என் நன்றி எப்போதும் உண்டு.
ஜெகன் : அவர் பெயரை சொல்ல மாட்டீரா?
அழகியசிங்கர் :  அவர் பெயரை அடிக்கடி சொல்வதுண்டு.   சொல்கிறேன்.  கிருபானந்தன்தான் அவர் பெயர்.
மோஹினி : புத்தகக் காட்சி என்பதே ஒரு வியாபாரம்.  கோடிக்கணக்கில் புத்தகங்கள் விற்கும் வியாபாரம்.  
ஜெகன் :  இந்த முறை குஷ்பு வைரமுத்து போன்றவர்கள் எல்லாம் வந்து அசத்தி விட்டார்கள் போலிருக்கிறது. 
மோஹினி :  அப்படியெல்லாம் அழைத்து வந்து புத்தகம் விற்க டிரிக் செய்கிறார்கள்.  
அழகியசிங்கர் :  புத்தகம் என்பது அறிவு சம்பந்தமான விஷயம்.  அதை எடுத்துப் படிக்க வேண்டும்.  சோப்பு வியாபாரத்திற்கு விளம்பரம் செய்வது போல் செய்யக் கூடாது.
மோஹினி :  வேற வழி இல்லை என்றுதான் தோன்றுகிறது.  புத்தகத்தை எப்படித்தான் விற்பது?
ஜெகன் :  உண்மைதான்.  நீங்கள் என்னன்ன புத்தகங்கள் வாங்கினீர்கள்?
அழகியசிங்கர் : விலை மலிவாகக் கிடைத்த ஆங்கிலப் புத்தகங்கள். 
ஜெகன் :     கவிதைப் புத்தகம் விற்றிருக்காதே?
அழகியசிங்கர் :   நான் கொண்டு வந்த நான்கு புத்தகங்களில் அழுக்கு சாக்ஸ் என்ற கவிதைப் புத்தகம்தான் அதிகம் விற்றது.
ஜெகன் :   எத்தனைப் பிரதிகள்?
அழகியசிங்கர் :  தயவுசெய்து கேட்காதீர்கள்.  எத்தனைப் பிரதிகள் என்பதை சொல்ல விரும்பவில்லை. 
மோஹினி :  நீங்கள் சொல்லாமல் இருந்தால், எத்தனைப் பிரதிகள் என்று எல்லோருக்கும் கேட்கத் தோன்றும்.
அழகியசிங்கர் :        சொல்ல விரும்பவில்லை.  இந்தப் புத்தகக் காட்சியினால் முதல் முறையாக விருட்சம் புத்தகங்கள் அதிகமாக விற்றது.  இனிமேலும் அது தொடர வேண்டும்.  
                      இந்தப் புத்தகக் காட்சியின்போது நடந்த ஒரு சோக நிகழ்ச்சியையும் பகிர்நது கொள்ள விரும்புகிறேன்.  என் எழுத்தாள நண்பர் ஐராவதம் மனைவியும் இந்த மாதம் மூன்றாம் தேதி இறந்து விட்டார்.  ஐராவதம் இறந்து 2 ஆண்டுகள் ஓடி விட்டன. 
மோஹினி, ஜெகன் : அவருடைய ஆத்மா சாந்தியடைய ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்.