உலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு

ஞாயிறு, திங்கள் (22, 23) இரண்டு நாட்களிலும் உலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு விருட்சம் புத்தகங்களை 40% தள்ளுபடியில் ராகவன் காலனி அரசாங்க கிளை நூலகத்தில், ஜாபர்கான்பேட்டையில் புத்தகங்களை விற்க உள்ளேன். புத்தகங்களை வாங்க வரவும்.

கு அழகிரிசாமியும் நானும் என்ற தலைப்பல் கல்யாணராமன் பேசிய பேச்சின் முதல் பகுதி

கிட்டத்தட்ட முக்கயமான சில கதைகளைக் குறித்த கல்யாணராமன் ஆற்றய உரை மூன்று பகுதிகளாக வந்துள்ளன. முதல் பகுதியை இன்று அளிக்கிறேன். உங்கள் கருத்துக்களைப் பதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 26


அழகியசிங்கர்  

தெரிதல் புரிதல்

பிரம்மராஜன்








நான் எழுதிக்கொண்டிருப்பதை
எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுதிக்கொண்டிருக்கிறேன்
என்பதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
எழுதிக்கொண்டிருப்பதாக எழுதுவதை
எழுதுகிறேன்.
எழுதுவதை எழுதுகிறேன் என்று
எழுதிக்கொண்டிருப்பதை எழுதுகிறேன்.
எழுதுவதால் எழுதுகிறேன்.
தெரிகிறேன் என்பதால் பார்க்கிறாய்
பார்ப்பவன் பார்க்கப்படுகிறான்
தெரிகிறதா
கேட்கப்படுபவன் கேள்வியாக
தெரிபவன் தெரிதலாக
புரிபவன் புரிதலாக
பூப்பவன் புதிராக
அடுக்கடுக்காய் அதிர்ச்சியாக
சிந்திப்பவன் சிக்கலாக
சிற்பி உளியாக
ஓவியன் காணுதலாக
சிக்கல் சிரமமாக
சிரமம் சிந்தனையாக
சுடர் சாம்பலாக
சாம்பல் உன் எலும்பாக
பாஸ்பரஸ் பகற்கனவாக
பகற்கனவு பதியன் பூவாக
பூத்தது புதிராக புரியாதாய்
புதிய புத்தம் கவிதையாய்
அடுக்கடுக்காய் அணூ அணுவாய்
அலையில் அலையில்
தழுவித் தழுவி
கழுவிக் கரைந்த உடலாக
கரைமீது கால்.

நன்றி : ஞாபகச்சிற்பம் – கவிதைகள் – பிரம்மராஜன் – பக் : 64 – முதல் பதிப்பு : ஜøன் 1988 – விலை ரூ.12 – தன்யா – பிரம்மா பதிப்பகம், பர்ன் வூயு, குன்னூர் தெரு, ஊட்டி 643 001 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 25

அழகியசிங்கர்  


                    பெண்பாற் கூற்று

சுகிர்தராணி




வெகுதூரம் ஓடிய
விலங்கொன்றின் உலர்நாவென
தரையோடு வற்றிவிட்டது உறைகிணறு
ஒற்றை உடலோடு உறங்குமிந்த இரவு
உவப்பாக இல்லை
என் பாதிப் புன்னகைக்குப் பின்னே
சொல்லப்படாத கதையொன்று இருக்கிறது
அவனை மிகவும் விரும்புகிறேன்
சீராக நறுக்கப்படாத அவன் மீசையையும்
என் கவிதைகளைச் சிலாகிக்கிறீர்கள்
குழந்தைகள்மீது பெருவிருப்பம் எனக்கு
ஆயினும் கருத்தரிக்க இயலாது
கூந்தலை வெட்டிக் கொள்கிறேன்
உதட்டில் ஊறும் முத்தங்களை
அவ்வப்பொழுது உமிழ்ந்து விடுகிறேன்
வேறென்ன செய்ய
இறந்து போன அப்பாவைப்
பார்க்க வேண்டும் போலிருக்கிறது
சிறுமிகளுக்கு
மாலை நேர வகுப்பெடுக்கிறேன்
கள்ளக்காதல் என்னும் சொல்லின்
பின்னுள்ள வலி புரிகிறது
இந்தக் கவிதையில்
மர்மங்கள் எவையுமில்லை
அகழ்ந்தெடுத்தல் புராதனச் சோதனை
எவையும் வேண்டாம்
வேண்டுமானால்
என்னை ஒழுக்கங்கெட்டவள்
என்று சொல்லிக் கொள்ளுங்கள்

நன்றி : இப்படிக்கு ஏவாள் – கவிதைகள் – சுகிர்தராணி – விலை ரூ.75 – பக் : 72 – முதல் பதிப்பு : மே 2016 –  காலச்சுவடு பதிப்பகம், 669 கே பி சாலை, நாகர்கோவில் – போன் : 04652 – 278525




மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 24

அழகியசிங்கர்

 தூர்

 நா முத்துக்குமார்




வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொரு முறை
விசேஷமாய் நடக்கும்.

ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்.

கொட்டாங்குச்சி, கோலி,
கரண்டி,
கட்டையோடு உள்விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்,
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே.

சேறுடா…சேறுடாவெபன
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

பகை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்.

இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்.
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க

நன்றி :  பட்டம்பூச்சி விற்பவன் – கவிதைகள் – நா முத்துக்குமார் – முதல் பதிப்பு : டிசம்பர் 1997 – விற்பனை உரிமை : ப திருநாவுக்கரசு, 31/48  இராணி அண்ணா நகர், கலைஞர் நகர், சென்னை 600 078 – விலை ரூ.20.



மனதுக்குப் பிடித்த கவிதைகள் 23

அழகியசிங்கர்  

நிலவும் நிலவுகளும்

தேவதச்சன்




எங்கள் ஊர் சிற்றூரும் அல்ல
பேரூரும் அல்ல
எங்களூரில் நான்கு கிணறுகள்
மூன்று ஊருணிகள்
ஒவ்வொரு இரவும்
எங்களூரில்
ஏழு நிலவுகள் வந்து
அழகு கொள்ளை கொள்ளும்
தண்ணீரில் கல் எறிந்து
ஒரே நிலவை
ஆயிரம் நிலவாய்
ஆக்குவோம் நாங்கள் சிறார்கள்.
வெறுமனே
பொறுமை காத்து
ஆயிரம் நிலவுகள்
ஒரே நிலவாய் கலப்பதை
பார்ப்பார்கள் பெரியவர்கள்
இப்போது ஊருணியை
பஸ் நிலையங்கள்
ஆக்கிவிட்டார்கள்.  மேலும்
கிணற்றை மூடி
குப்பைத்தொட்டியாக மாற்றி
விட்டார்கள்.
இப்போது
தனியான ஒரு நிலவு
எங்கள் ஊர்
மேலாகப் போய்க்கொண்டிருக்கிறது

நன்றி : எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது – கவிதைகள் – தேவதச்சன் – பக்கம் : 64 – விலை : ரூ. 40 – உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை  600 018 – தொ பேசி : 91-44-24993448

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 22

அழகியசிங்கர்

  நான்

நகுலன்




வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
üüயார்?ýý
என்று கேட்டேன்.
üüநான்தான்
சுசீலா
கதவைத் திறýý
என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?

நன்றி : நகுலன் கவிதைகள் – தொகுப்பும் பதிப்பும் : முனைவர் சு. சண்முகசுந்தரம் – காவ்யா பதிப்பகம், கோடம்பாக்கம், சென்னை – பதிப்பாண்டு : 2001 – விலை : ரூ.100 

பத்து கேள்விகள் பத்து பதில்கள் – 7

பத்து கேள்விகள் பத்து பதில்கள் – 7
அழகியசிங்கர்
      நண்பர்களே,
வணக்கம்.
பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற பகுதியில் ஞாநியைப் பேட்டி கண்டுள்ளேன்.  இது என்னுடைய ஏழாவது பேட்டி.  மிகச் சிறிய சோனி டிஜிட்டல் காமெரா மூலம் இதை செய்துகொண்டு வருகிறேன். இன்னும் தொடர்ச்சியாக இதைத் தொடர விரும்புகிறேன்.  இதை நீங்கள் பார்த்து உங்கள் கருத்துகளையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.எழுத்தாளர்கள் மட்டுமின்றி மிகச் சாதாரண மனிதர்களையும் பேட்டி எடுக்க உள்ளேன்.  இதில் நான் இன்னும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்பதை நீங்கள் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
எனக்கு ஞாநியை பரீக்க்ஷா மூலம் தெரியும்.  இதற்கு முன்னால் அவர் கிருத்துவக் கல்லூரியில் படித்தவர்.  அவரை ஞாநியாகத் தெரியாத தருணத்தில் கல்லூரியில் சில நண்பர்களிடம், இனி கசடதபற வராது என்று சொல்லிக்கொண்டிருந்ததை நான் கேட்டிருக்கிறேன்.  பின் பரீக்ஷா ஏற்பாடு செய்த நாடகத்தில் நானும் நடித்திருக்கிறேன். அப்போது ஒரு வியாபார ரீதியில் சரியாக இயங்கத் தெரியாத ஒரு நாடகக் குழுவில் போய்ச் சேர்ந்து, அவர்கள் என்னை துரத்தி விட்டார்கள். அந்தத் தருணத்தில் ஞாநியின் நாடகத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.  எப்படி நடிக்க வேண்டுமென்று ஞாநி எப்போதும் சொன்னது கிடையாது.  ஒரு அப்பாவி இளைஞனாக அறந்தை நாராயணனின் மூர் மார்க்கெட் என்ற நாடகத்தில், மேடையில் பாதி தூரம் நடக்கும் நடிகனாக நான் நடித்தேன்.  அதன்பின் நான் நடிக்கவில்லை.  என் இயல்புக்கு அது சரியாகப் படவில்லை.
இதோ நீங்கள் ஞாநியின் பேட்டியைக் கேளுங்கள்.

சி சு செல்லப்பாவும் சுதந்திரதாகம் நாவலும்…

சி சு செல்லப்பாவும் சுதந்திரதாகம் நாவலும்…
அழகியசிங்கர்
சுதந்திரதாகம் என்ற மூன்று பாகங்கள் கொண்ட நாவலை கொண்டு வருவதற்காக பங்களூரிலிருந்து சி சு செல்லப்பா சென்னைக்கு மனைவியை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.  அவர் முன்பு இருந்த பிள்ளையார் கோயில் தெருவிலேயே அவர் குடி வந்து விட்டார்.  அவருடைய உறவினர் சங்கர சுப்பிரமணியன் அவர் வீட்டின் பக்கத்தில் குடியிருந்தார்.  சி சு செல்லப்பாவின் மனைவியின் மூத்த சகோதரியும் – சங்கர சுப்பிரமணியனின் தாயாரும் அங்கு இருந்தார்கள்.
சி சு செல்லப்பா தன் புத்தகம் கொண்டு வரும் ஆவலை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு இலக்கியச் சிந்தனை ஆண்டு விழாக் கூட்டத்தில் ஒவ்வொரு பதிப்பாளரையும் அணுகி தன்னுடைய மூன்று பாகங்கள் கொண்ட சுதந்திரதாகம் என்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகத்தைக் கொண்டு வர முடியுமா என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
அந்த ஆண்டு 1995ஆம் ஆண்டாக இருக்குமென்று நினைக்கிறேன்.  எந்தப் பதிப்பாளரும் சுதந்திர தாகம் புத்தகத்தைக் கொண்டு வரத் தயாராயில்லை.  காரணம் சி சு செல்லப்பாவின் எழுத்து. அவருக்கு விளக்கு பரிசு கொடுக்க முயற்சி செய்தபோது, அதன் மூலம் கிடைக்கும் தொகையை üஎன் சிறுகதைப் பாணிý என்ற கட்டுரைத் தொகுதியைக் கொண்டு வர சி சு செல்லப்பா ஒப்புக்கொண்டார்.  ஆனால் அதைப் பணமாகப் பெற அவர் விரும்பவில்லை. மயிலாப்பூரில் ஒரு கூட்டம் ஏற்பாடாகியது.  அதில் பல படைப்பாளிகள் கலந்து கொண்டார்கள்.  அக் கூட்டம் சிறுபத்திரிகைகள் கலந்து கொள்ளும் கூட்டமாக அமைந்தது. 
சி சு செல்லப்பா சுதந்திர தாகம் புத்தகத்தை தானே கொண்டு வரத் திட்டம் போட்டார்.  அவர் துணிச்சலை நினைத்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  ஒவ்வொரு பாகமும் (மொத்தம் மூன்று பாகங்கள்) ஆயிரம் பிரதிகள் கொண்டு வர கிட்டத்தட்ட ரூ50000 வரையாவது செலவாகும்.  அதாவது ஒருலட்சமாகவாவது செலவாகும்.  அன்றைய தினம் அது பெரிய தொகை. 
முதலில் சி சு செல்லப்பா வெளி ரங்கராஜன் முயற்சியில் பார்க்கர் என்ற அமைப்பின் மூலம் சு தாவின் மூன்று பாகங்களையும் டிடிபி செய்து வைத்துக்கொண்டார். மணி ஆப்செட் காரரை நான் சி சு செல்லப்பாவிற்கு அறிமுகம் செய்தேன்.  சி சு செயின் வயது காரணமாக நேரிடையாக அவரைப் பார்த்து அச்சடித்துத் தரும்படி கேட்டுக் கொண்டேன்.  
பின் நண்பர்கள், உறவினர்கள் என்று பலர் இந்த மூன்று பாகங்கள் வர உதவி செய்தார்கள். குறிப்பாக லலிதா ஜ÷øவல்லரி சுகுமாரனை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்.   சில மாதங்களில்  மூன்று பாகங்கள் சுதந்திர தாகம் அச்சடித்து வந்ததைப் பார்த்து சி சு செவிற்கு  ஒரே சந்தோஷம்.   அவர் வீடு முழுவதும் கட்டுக்கட்டாக சுதந்திரதாகம் நிரம்பி வழிந்தது.  தானே ப்ரவுன் அட்டை வாங்கி வந்து ஒட்டி புத்தகங்களை எல்லா இடத்திற்கும் அனுப்பினார்.
அன்று இந்திய டுடே (தமிழில்) மூலம் சுதந்திர தாகம் புத்தகத்திற்கு பெரிய விளம்பரம் கிடைத்தது.  அதோடு மட்டுமல்லாமல் பல பத்திரிகைகள் பக்கப்பலமாக அந்தப் புத்தகத்திற்கு ஆதரவு தந்தன. அதன் மூலம் சி சு செல்லப்பா ஒரு 200 பிரதிகளாவது விற்றிருக்கக் கூடும்.  ஆனால் பெரும்பாலான புத்தகங்களை அவர் நினைத்தபடி  விற்க முடியவில்லை.
அப் புத்தகத்தை நூல் நிலையத்தில் வாங்குவதற்கு அதற்கான படிவத்தை நிரப்பிக் கொடுத்தும், அதிகப் பக்கங்கள் உள்ள புத்தகம் என்பதால் நூல்நிலைய ஆதரவு கிட்டவில்லை.  இந் நிலையிலும் சி சு செல்லப்பாவின் புத்தகம் கொண்டு வரும் ஆர்வம் சிறிதும் தணியவில்லை.  80 வயதுக்கும் மேற்பட்ட இளைஞராக அவர் செயல்பட்டார்.  இரண்டு மூன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நோய் குணமாகி வீடு வந்து சேர்ந்தார்.  ஒரு முறை மருத்துவமனையில் அவரைப் பார்க்கும்போது, üமாமிக்கு டாடா சொல்லிட்டேன்..ஆனால் திரும்பி வந்து விட்டேன்,ý என்று சிரித்தபடி என்னிடம் கூறியிருக்கிறார்.
அவருடைய அடுத்தப் புத்தகமாக ராமையாவின் சிறுகதைப் பாணி என்ற புத்தகத்தைக் கொண்டு வந்தார்.  கிட்டத்தட்ட 300 பக்கம் வரை உள்ள புத்தகம் அது.   ராமையாவின் பக்தர் சி சு செல்லப்பா.  300 க்கும் மேற்பட்ட கதைகள் எழுதிய ராமையாவின் கதைகள் எந்த ஆண்டு எந்தப் பத்திரிகையில் வெளிவந்தன என்ற குறிப்புடன் அப் புத்தகம் வெளிவந்தது.  அப் புத்தகம் முழுவதும் ராமையாவின் ஒவ்வொரு கதையாக எடுத்து விமர்சனம் எழுதி இருந்தார்.  “ராமையாவின் கதைகளே புத்தகமாக இல்லாதபோது, ஏன் இப்படி ஒரு விமர்சனப் புத்தகத்தை அச்சடித்தீர்கள்?” என்று கேட்டேன்.  ஆனால் யார் சொல்வதையும் சி சு செல்லப்பா கேட்க மாட்டார்.  இன்னும் கூட ராமையாவின் முழுக் கதைத் தொகுதி வெளிவரவில்லை. சி சு செல்லப்பாவின் அந்தப் புத்தகம் வேறு 500 பிரதிகள் வீட்டின் இடத்தைப் பிடித்துக் கொண்டன.  
வயது மூப்பின் காரணமாக சுதந்திர தாகம் புத்தகத்திற்கு நூலக ஆதரவு கிடைக்காமலே மரணம் அடைந்து விட்டார்.  பின் அந்தப் புத்தகக் கட்டுகள் எல்லாம் விற்கப் பட முடியாமல், சி சு செல்லப்பாவின் உறவினரான சங்கர சுப்பிரமணியன் வீட்டில் ஒரு அறையில் இருந்தன.  பல புத்தகங்கள் கரையானால் பாதிக்கப்பட்டு வீணாய்ப் போயின.
“பாருங்கள்…சுதந்திர தாகம் புத்தகங்கள் எல்லாம் திருவல்லிக்கேணி பிளாட்பாரத்திற்கு வரப் போகின்றன,” என்று ஒரு கோட்பாடு ரீதியில் விமர்சனம் செய்யும் விமர்சகர் சொன்னது என் காதில் இன்னும் ஒலிக்கிறது.  மூன்று பாகங்கள் கொண்ட சு தா புத்தகத்தின் விலை ரூ.500 தான்.  கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகம்.  1997ஆம் ஆண்டில் அது பெரிய தொகை.  யாரும் அவ்வளவு எளிதில் பணம் கொடுத்து வாங்கி விட மாட்டார்கள்.
மேலும் சி சு செல்லப்பாவின் தமிழ் நடை.  அதைப் படித்துப் பழக வேண்டும்.  அவ்வளவு இணக்கமான நடை அல்ல அது.  உதாரணமாக சு தா வின் முதல் பாகத்தில் பக்கம் 300ல் உள்ள ஒரு பாராவில் சி சு செல்லப்பா இப்படி எழுதியிருப்பார் :
“தாங்கள் மதிப்பு வைத்துள்ள தங்கள் ஊர் பிரமுகரை இப்படி அல்ப போலீஸ் நடத்தினால் அங்கேயுள்ள ஜனங்கள் மனம் எப்படி கொதித்திருக்கும் கற்பனை செய்து பார்,”
இப்படி புத்தகம் முழுவதும் அவர் நடையைப் படிக்க பழகியிருக்க வேண்டும்.  ஆனால் நிதானமாக வாசித்தால் அவர் நடையை ரசிக்க முடியும். 
சி சு செல்லப்பாவிடம் எனக்குப் பிடித்தது.  அவருடைய எளிய வாழ்க்கை.  கடைசி வரை தன்னுடைய பிடிவாதத்தை அவர் விட்டுக் கொடுத்ததில்லை.  அவர் எழுத்து மீது அவருக்கு அபார நம்பிக்கை உண்டு.  
அவர் இறந்தபிறகு சுதந்திர தாகம் புத்தகத்திற்கு நூல்நிலைய ஆதரவு கிடைத்தது.  அவருக்கு அந்தப் புத்தகத்திற்காக சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்தது.  அவர் உயிரோடு இருந்தால் அந்தப் பரிசை வாங்கியிருக்க மாட்டார்.  மேலும் சுதந்திர தாகம் புத்தகத்தை நான்  புத்தகக் காட்சியில் ரூ150 விதம் ஒரு செட் புத்தகத்தை எளிதாக பல பிரதிகளை விற்றுக் கொடுத்தேன்.  எல்லாப் புத்தகங்களும் விற்றுத் தீர்ந்து விட்டன.  
இப்போது சுதந்திர தாகம் மூன்று பாகங்களையும் புத்தகமாக மறுபடியும் கொண்டு வருவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகத்தான் தோன்றுகிறது.  சி சு செல்லப்பாவின் பல புத்தகங்களைக் கொண்டு வந்த காலச்சுவடு பதிப்பகம் ஏன் சுதந்திர தாகத்தை விட்டு வைத்தார்கள் என்பது தெரியவில்லை.  ஆனால் முதன் முறையாக டிஸ்கவரி புக் பேலஸ் சுதந்திர தாகத்தைக் கொண்டு வர உள்ளது.  வேடியப்பனின் துணிச்சலுக்கு என் வாழ்த்துகள்.  ஆயிரம்பக்கங்களுக்கு மேல் உள்ள இப் புத்தகத்தின் சலுகை விலை ரூ.1000.  சி சு செல்லப்பாவின் புதல்வர் மணியைச் சந்தித்து உரிமைப் பெற்றுதான் இப் புத்தகத்தை வேடியப்பன் கொண்டு வருகிறார்.  அவர் உற்சாகத்திற்கு யாரும் தடை செய்ய முடியாது.  இத் தருணத்தில் 
    சி சு செல்லப்பா உயிரோடு இருந்தால் அவருடைய ஆசிர்வாதம் வேடியப்பனுக்கு நிச்சயம் கிடைத்திருக்கும். நானும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 

எதையாவது சொல்லட்டுமா ……102

        
அழகியசிங்கர்






நேற்று நான் மயிலாடுதுறையில் இருந்தேன்.  நான் தங்கியிருக்கும் லால் பகதூர் வீதிக்குச் செல்லும் வழியில் ஏகப்பட்ட நாய்கள்.  ஒவ்வொன்றும் கத்திக்கொண்டிருந்தது.  எனக்கு நாய் என்றால் பிடிக்காது.  கடித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் கூட உண்டு.  என்னை பைக்கில் அழைத்துக்கொண்டு வந்தவர், மயிலாடுதுறையில் இருக்கும் என் நண்பர் பிரபு.  அவரிடம் கேட்டேன்:
“இந்த நாய்களை ஒன்றும் செய்ய முடியாதா?”  ‘முடியாது,’ என்பதுபோல் தலை ஆட்டினார்.  இரவு நேரத்தில் தனியாக அந்தத் தெருவில் நடந்து வர முடியுமா என்பது சந்தேகம்.
சில மாதங்களுக்கு முன்பு என் உறவினர் ஒருவருக்கு அந்தப் பகுதியில்தான் ஒரு நாய் கடித்துவிட்டது.  பிரபுடன் வண்டியில் போனதால்தான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது.   அந்த உறவினர் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மயிலாடுதுறைக்கே வரவில்லை என்று பிரபுவிடம் சொல்லி ஜோக் அடித்தேன்.  
“மேனகா காந்தியால் பிராணிகள் வதை செய்யக்கூடாது என்று சட்டம் போட்டதால், நாய்களை யாரும் பிடித்துக்கொண்டு போக மாட்டார்,”
 என்றார்  பிரபு பெருமிதத்தோடு.
“ஆனால் ஒன்று செய்யலாம்.  எல்லா நாய்களுக்கும் கருத்தடை செய்து விடலாம்,” என்றேன் நான். பின் நாய்களைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டோம்.  பின் அசிக்காடு என்ற ஊரில் உள்ள வீரன் கோயிலுக்கு நாங்கள் இருவரும் ஒன்றாகச் சென்றோம்.  வழியில் மயூர விலாஸ் என்ற ஓட்டலுக்குச் சென்று இட்லி வடையுடன் தோசையும் சாப்பிட்டோம்.  ஆனால் தோசையைப் பாதிக்கு மேல் சாப்பிட முடியவில்லை.  வேண்டாமென்று ஒதுக்கி விட்டோம்.  அசிக்காடு என்ற ஊரல் ஒரே ஒரு குருக்கள்தான் அவர் பல கோயிலுக்கும் குருக்களாக இருக்கிறார்.  கோயிலில் சாமி மாத்திரம்.  அவர்தான் பூஜை செய்து கொண்டிருக்கிறார்.  எங்களுடன் வீரன் கோயிலுக்கு வந்து அங்கு அர்ச்சனை செய்தார்.  வீரன் என்பது கோயில் பக்கத்திலுள்ள பனை மரங்கள்தான் என்று பனை மரம் இருக்கும் திசையைக் காட்டினேன் பிரபுவிடன்.
பிரபு என்னை மயிலாடுதுறையில் விட்டுவிட்டு சிதம்பரம் சென்று விட்டார்.  எப்படி? பைக்கில். அவருக்கு சின்ன வயது என்றாலும் துணிச்சல் அதிகம்.  நேற்று ஒரே வெயில்.  மயிலாடுதுறையில் உள்ள எங்கள் வங்கியில் பணிபுரியும் என் நண்பர் ஒருவரைப் பார்க்கப் போயிருந்தேன்.   அவரைப் பார்க்கும்போது என்னால் நம்ப முடியவில்லை.  வயதானவராகக் காட்சி அளித்தார்.  அதற்கான காரணம் என்ன என்று புரியும்.  ஒருவர் வங்கியில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து பின் பதவி உயர்வு பெற்றால், அவருக்கு பதவி உயர்வு பலனாக சர்கரை, இரத்த அழுத்தம் எல்லாம் வந்துவிடும்.  நண்பர் இரவு 8.30க்குத்தான் வீட்டிற்கு அலுவலகத்திலிருந்து போவதாக வருத்தத்துடன் சொன்னார்.  “வவுச்சர்களை பாஸ் செய்யும்போது, ஜாக்கிரதை,” என்றேன்.  “கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்,” என்றார்.  
மாலை 4 மணிக்கு பிரபு வந்திருந்தார்.  அவர் முகத்தில் களைப்பு தெரிந்தது. ஆனால் உற்சாகமான மனிதர்.  ஒரு கவிதை ஒரு கதை கூட்டத்தை மயிலாடுதுறையில் நடத்த நினைத்தேன்.  ஆனால் பிரபுவிற்கு மூட் இல்லை.  அதனால் அந்த முயற்சியைத் தொடர வில்லை.  அதனால் நான் ஒரு கவிதை ஒரு கதை ஒரே ஆள் கூட்டமாக மாற்றலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
இரவு 8 மணி சுமாருக்கு ஆரியாஸில் நானும் பிரபுவும் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.  அப்போது வெள்ளம் வந்தபோது திருப்பனந்தாள் காசி மடம் ஒரு கிராமத்தை தத்து எடுத்து உதவி செய்ததை பிரபு விவரித்துக் கொண்டிருந்தார்.  யாருக்காவது உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணம் பிரபுக்கு எப்போதும் உண்டு.  சிதம்பரம் சென்றது கூட யாருக்கோ படிப்புக்காக உதவி செய்யத்தான்.  நான் அவர் பெயரை இங்கு பயன்படுத்துவதைக் கூட அவர் விரும்ப மாட்டார்.  ஆனால் அவரைப் பற்றி தெரிய வேண்டு மென்பதற்காககத்தான் அவர் அனுமதி இல்லாமல் பெயரைப் பயன்படுத்துகிறேன்.
நானும் அவரும் பேசிக்கொண்டிருக்கும்போது சில நிகழ்ச்சிகள் நடக்கும்.  சிலசமயம்.  ஒருமுறை மயிலாடுதுறையில் இருந்தபோது எனக்கு சுரம்.  ஒரு மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போனார்.  அங்கே ஒரே கூட்டம்.  நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்து கொண்டிருந்தோம்.  அந்த சமயத்தில் எங்கள் முன்னால்  டாக்டரைப் பார்க்க வந்திருந்த ஒரு நடுத்தர வயதுக்காரர் இதயம் துடிக்க கீழே விழுந்து மரணம் அடைந்து விட்டார்.  எனக்கும் பிரபுவுக்கும் பெரிய திகைப்பு.  நான் அந்த இடத்தை விட்டு ஓடி வந்து விட்டேன்.
அந்த நிகழ்ச்சியைத்  தாங்க முடியாமல் ஆஸ்பத்ரி வாசலில் பிரபு வாந்தி எடுத்தார்.  
தன்னலமற்ற சேவை செய்வதில் காசிமடத்தின் பங்கைப் பற்றி பிரபு பேசிக்கொண்டு வந்தார்.  “உழவன் எக்ஸ்பிரஸ் பிடிக்க வேண்டும்,” என்றேன் பிரபுவிடம்.  திரும்பவும் நாங்கள் வீட்டிற்கு வந்து, நான் சென்னைக்குச் செல்ல ஆயுத்தம் செய்து கொண்டேன்.  என்னை டூவீலரில் ரயில்வே ஸ்டேஷனலில் கொண்டு விட தயாராக இருந்தார்.
அப்போதுதான் பிரபுவிற்கு காசி மடத்திலிருந்து செய்தி வந்தது.  திருப்பணந்தாள் காசிமட இணை அதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் சித்தி அடைந்து விட்டார் என்ற செய்தி.  நாங்கள் ஆர்யாஸில் சாப்பிட்டுக்கொண்டிருந்த சமயத்தில் சுவாமிகளுக்கு எதிர்பாராத விதமாய் மாரடைப்பு வந்து சித்தி அடைந்து விட்டார்.  பிரபுவும் அவரும் சில தினங்கள் கழித்து பங்களூர் செல்வதாக இருந்தார்கள். உண்மையில் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் பற்றிதான் பிரபு என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்.  இதுமாதிரியான நிகழ்வு ஒரு தொடர்ச்சியா?
நான் உழவன் எக்ஸ்பிரஸ் பிடித்து செல்லும் இத் தருணத்தில் இந்தச் செய்தி வந்தது.  பிரபு பரபரப்பாகி விட்டார்.  பலருக்கு போன் செய்தார்.  உடனேயே என்னை ஸ்டேஷனலில் கொண்டு விட்டு திருப்பனந்தாள் செல்ல தீவிரமாக இருந்தார்.  அப்போது மணி இரவு பத்து மணி இருக்கும்.  “வேண்டாம். பிரபு.  காலையில் போய்ப் பாருங்கள்,” என்றேன்.  பிரபு பதட்டத்தில் இருந்ததால் அதையெல்லாம் கேட்கவில்லை.  திருப்பனந்தாள் கிட்டத்தட்ட மாயவரத்திலிருந்து 40 கிலோமீட்டர் தூரம் இருக்கும்.  தெருவில் டூ வீலரில் போய்க் கொண்டிருக்கும்போது சிலர் தெருவில் பேசிக்கொண்டிருந்தார்கள்.  அவர்களைப் பார்த்து பிரபு வண்டியை நிறுத்திவிட்டு சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் சித்தி அடைந்த விஷயத்தைச் சொல்லிக் கொண்டு வந்தார்.  
உழவன் எக்ஸ்பிரஸில் தனியாக என்னை விடும்போது நானும் அமைதி இல்லாமல் இருந்தேன்.  மாரடைப்பு வந்தால் யாராலும் உடனடியாக காப்பாற்ற முடியாதா என்ற கேள்விக்கு முன்னால்,
நகுலனின் ஒரு கவிதை ஞாபகத்திற்கு வருகிறது.
இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்.