மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 24

அழகியசிங்கர்

 தூர்

 நா முத்துக்குமார்
வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொரு முறை
விசேஷமாய் நடக்கும்.

ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்.

கொட்டாங்குச்சி, கோலி,
கரண்டி,
கட்டையோடு உள்விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்,
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே.

சேறுடா…சேறுடாவெபன
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

பகை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்.

இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்.
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க

நன்றி :  பட்டம்பூச்சி விற்பவன் – கவிதைகள் – நா முத்துக்குமார் – முதல் பதிப்பு : டிசம்பர் 1997 – விற்பனை உரிமை : ப திருநாவுக்கரசு, 31/48  இராணி அண்ணா நகர், கலைஞர் நகர், சென்னை 600 078 – விலை ரூ.20.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *