நகுலனைப் பற்றி சில நினைவுக் குறிப்புகள்

முதன்முதலாக நகுலனைப் பற்றி எப்போது நான் தெரிந்துகொண்டேன். ஒருமுறை வைத்தியநாதனுடன் (தீவிர வாசகர், ழ, விருட்சம் இதழ்களில் கவிதைகள் அதிகம் எழுதியவர்)நான், ஆத்மாநாம், மூவரும் ஆனந்த் வீட்டிற்குச் சென்றோம். எனக்கு வைத்தியநாதனைத் தெரியும். அவருடைய கவிதைகள் சில ழ வில் அப்போது வெளிவந்து கொண்டிருந்தன. நான் அப்போது வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். கதை, கவிதைகள் எழுதத் தெரிந்தவன். ஆனால் தமிழில் தீவரத்தன்மை கொண்ட படைப்புகளை ஆர்வமாய் தேடிப் போய் வாசிப்பவன். என்னை தீவிர எழுத்துக்கு அறிமுகப்படுத்தும் நோக்கமாகத்தான் வைத்தியநாதன் என்னை ஆனந்த் வீட்டிற்கு அழைத்து வந்தார். கூடவே எங்களுடன் வந்துகொண்டிருந்த ஆத்மாநாமிடம் என்னை அறிமுகப் படுத்தினார்.
ஆனந்த் வீட்டிற்கு வந்தவுடன், வைத்தியநாதன் சொல்லியபடி, ஆனந்த் நாலைந்து ‘ழ’ வெளியீடு புத்தகங்களைக் கொடுத்தார். நான் மகிழ்ச்சியுடன் அவற்றை விலைக் கொடுத்து வாங்கினேன். ழ புத்தகங்கள் எல்லாம் விலை குறைவாக இருந்ததோடல்லாமல் நல்ல தரத்துடன் தயாரிக்கப்பட்டிருந்தன. உயர்ந்த தாளில் அச்சிடப்பட்டிருந்தன. அதில் ஒரு புத்தகம், ‘கோட் ஸ்டான்ட் கவிதைகள்’. அதை எழுதியவர் நகுலன். அப் புத்தகம் தயாரிப்பு முறையும், அதை அச்சிடப் பயன்படுத்திய தாளையும் கண்டு நான் வியந்து போனேன். ‘காகிதத்தில் கோடு’ என்ற ஆத்மாநாம் புத்தகத்தில் அவருடைய கையெழுத்தையும் வாங்கி வைத்துக்கொண்டேன்.
நகுலன் இந்தப் புத்தகம் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமாகிறார். அவருடைய கவிதைகள் படிப்பதற்கு எளிமையாக இருப்பதோடல்லாமல் ஆழமான உணர்வு அலைகளை எழுப்பாமல் இருக்காது.
இருப்பதற்கென்றுதான் வருகிறோம்
இல்லாமல் போகிறோம்
என்ற வரிகளெல்லாம், மனதில் வேறு வேறு எண்ண அலைகளை எழுப்பாமல் இருப்பதில்லை.
நான் நகுலன் பெயர்கொண்ட புத்தகங்களையெல்லாம் வாங்கத் தொடங்கினேன். ‘க்ரியா’ என்ற புத்தக வெளியீடு அறிமுகமானபோது, நகுலனின் ‘நினைவுப் பாதை’ என்ற நாவலை வாங்கினேன்.
பொதுவாக நகுலனின் எழுத்துகள் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு எழுதிகிற எழுத்துகள். என்னால் முழுதாகவும் அவற்றைப் படிக்க முடிந்ததுமில்லை. ஏனெனில் மனதை அதிகமாக ஆட்டிப் படைக்கும் தன்மை கொண்டவை அவருடைய படைப்புகள்.
அவருடைய படைப்புகள் மூலமாக அவரை நான் அறிந்துகொண்டாலும், விருட்சம் பத்திரிகை ஆரம்பித்தபோதுதான் நேரிடையாக எனக்கு அவருடைய தொடர்பு ஏற்பட்டது. அவர் படைப்புகளை அனுப்பும்போது, மறக்காமல் ஸ்டாம்பு, கவரெல்லாம் வைத்து அனுப்புவார். ஒரு குறிப்பும் எழுதி அனுப்புவார். ‘படைப்புகள் உங்களுக்குத் திருப்தியாக இல்லையென்றால் திருப்பி அனுப்பி விடுங்கள்,’ என்று. நான் அவர் எழுதிய படைப்புகளை திருப்பியே அனுப்ப மாட்டேன்.
ஒவ்வொரு விருட்சம் இதழையும் அவருக்கு அனுப்புவதில் அதிக ஆர்வம் காட்டுவேன். உடனுக்குடன் அவர் இதழ் குறித்து கருத்துக்களை ஒரு கார்டில் எழுதி அனுப்பி விடுவார். கார்டில் அவர் எழுத்தைப் படிப்பது என்பது பெரிய விஷயமாக இருக்கும். சிலசமயம் அவருடைய கையெழுத்து புரியும்படி நிதானமாக இருக்கும். சிலசமயம் புரியாமல் கிறுக்கப்பட்டிருக்கும். ஒரு சமயம் கார்டில் எனக்கு ஒரு கவிதை எழுதி அனுப்பினார் :
நில் போ வா
வா போ நில்
போ வா நில்
நில் போ வா?

என்பதுதான் அக் கவிதை. விருட்சம் இதழில் இந்த குறள் வழி கவிதையைப் பிரசுரம் செய்தேன். இது தரமான கவிதையா, பிரசுரம் செய்யப்பட வேண்டிய கவிதையா என்று கேட்டால், நான் பதில் சொல்ல மாட்டேன். நகுலன் எழுதியிருக்கிறார். அவர் எழுத்துக்களைப் பிரசுரம் செய்ய வேண்டியது, நான் மதிக்கும் எழுத்தாளருக்கு நான் கொடுக்கும் மரியாதை. இன்னும் சில படைப்பளாகளிடமும் நான் இதுமாதிரி நடந்து கொள்வேன்.
இக் கவிதை பிரசுரம் ஆனவுடன், இரு இடங்களிலிருந்து எதிர்ப்பு வந்தன. ஒன்று காஞ்சிபுரம் இலக்கிய நண்பர் வே நாராயணன் (காஞ்சிபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கியக் கூட்டங்களை நடத்தியவர். அபாரமான ஞாபகச் சக்தி கொண்டவர். கூட்டம் முழுவதும் யார் பேசினாலும் அதை மனதில் வாங்கிக் கொண்டு திருப்பிச் சொல்லும் தன்மை கொண்டவர்). எப்படி இக் கவிதையை விருட்சத்தில் புரசுரம் செய்தீர்கள்? அக் கவிதைக்கு என்ன அர்த்தம் என்பதை உங்களால் சொல்ல முடியுமா? என்று கேட்டு எழுதியிருந்தார்.
நான் அக் கடிதத்தை நகுலனுக்கு அனுப்பியிருந்தேன். அவர் இரண்டு பக்கங்களுக்கு விளக்கம் கொடுத்து பதில் அனுப்பினார். அதையும் விருட்சத்தில் பிரசுரம் செய்தேன்.
எதிர்த்தவர்களில் இன்னொருவர் பிரமிள். நகுலனின் இந்தக் கவிதையை ஏன் பிரசுரம் செய்தீர்கள்? இது கவிதையா என்ற கேட்டார். ‘விருட்சம்’ இதழில் அரைப்பக்கம்தான் இக் கவிதை வந்திருக்கிறது. வந்தால் என்ன?’ என்றேன். ‘ஒரு சிறு பத்திரிகையின் அரைப் பக்கத்தில் பிரசுரம் விஷயம்கூட முக்கியம் உமக்கு இதெல்லாம் தெரியாதா?’ என்றார் பிரமிள்.
பிரமிள் இதைச் சாதாரணமாகப் பேசிவிட்டு விட்டுவிடுவார் என்று நினைத்தேன். ஆனால் அபத்தக் கவிதைகள் என்ற பெயரில் அவர் ஏராளமான கவிதைகள் எழுதியிருந்தார்.
அதில், ‘எந்துண்டி வஸ்தி?’ என்ற கவிதையில்,
‘நில் போ வா’
என்பதை எழுதிக் கீழே
கையெழுத்து வைத்து
அனுப்பினார் சகா
தேவனின் சகோ
தர நாமி
இதைக் கவிதை என்று
போட்டுவிட்டது தன் இலையிலே ‘மரம்’
‘இதையே எழுதியது யாரோ
ஏழுமலை ஆறுமுகம் என்றால்
‘மர’ இலையில் வருமா இது?” என்றேன்.
பதில் இல்லை இன்னும்.
இப்படி ஒரு கவிதை பிரமிள் எழுதியிருக்கிறார் என்பது அது புத்தகமாக வரும்போதுதான் தெரியும்.
நகுலன் ஒவ்வொரு முறையும் சென்னை அசோக்நகரில் உள்ள அவருடைய இளைய சகோதரர் வீட்டிற்கு வருவார். அப்படி வரும்போது மேற்கு மாம்பலத்தில் உள்ள என் வீட்டிற்குத் தகவல் தராமல் இருக்க மாட்டார். அவர் சென்னையில் இருக்கும்போதெல்லாம் அவரை அடிக்கடி சந்திப்பது என் வழக்கம். ஏன் தினமும்?
சிலசமயம் அவர் ஊரிலிருந்து வந்தபிறகு, அவர் சகோதரருடன் என் வீட்டிற்கு வருவார். அவரால் தனியாக வர முடியாது. கூடவே அவருடைய சகோதரரை அழைத்துக்கொண்டு வருவார்.
யாராவது அவருக்குத் துணை வேண்டும். அவர் வரும் சமயத்தில் நான் தட்டுப்படவில்லையென்றால், என் தந்தையாருடன் பேசிக்கொண்டு இருப்பார். ஹோமியோபதி மருந்துகளைப் பற்றி என் தந்தை சொல்வதை புதிதாகக் கேட்பதுபோல ஒருவித மரியாதையுடன் நகுலன் கேட்பார். அவர் சகோதரர் என் வீட்டில் விட்டுவிட்டுப் போய்விடுவார்.
நான் நகுலனைப் பார்த்துவிட்டால் நேரம் தெரியாமல் பேசிக்கொண்டிருப்பேன். என்னைப் பார்த்து, “நீங்கள் இவ்வளவு தூரம் எல்லாருக்கும் உதவியாக இருக்கிறீர்கள். ஆனால் உங்களைப் பற்றி யாரும் எதுவும் சொல்லாமல் இருப்பது சரியில்லை,” என்பார்.
‘யாருடனும் இல்லை’ என்ற என் கவிதைத் தொகுதியைப் பற்றி அவர் எழுதிய கட்டுரையை என்னால் மறக்க முடியாது. பொதுவாக நகுலன் வரும்போது, நான் புதிதாக எழுதிய கவிதைகளைக் காட்டுவேன். அவர் சிரத்தையுடன் படித்துவிட்டு, அதில் உள்ள பிரச்சினைகளைக் குறிப்பிடுவார். சில கவிதைகளைப் படித்துவிட்டு, வரிகளை மாற்றினால் நன்றாக இருக்குமென்று குறிப்பிடுவார். சில கவிதைகள் நன்றாக வந்திருப்பதாகவும் குறிப்பிடுவார். வேறு விஷயங்களையும் நாங்கள் பேசுவோம்.
ஒருமுறை நான் அலுவலகத்திற்குச் செல்வதற்காக மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஐராவதத்தைப் பார்த்தேன். நகுலன் வந்திருப்பதைக் குறிப்பிட்டேன். பின் இருவரும் அலுவலகம் போகாமல் நகுலனைப் பார்க்கச் சென்று விட்டோம்.
நகுலனுடன் பேசும்போது ஒருவருடன் ஒருவர் பேசுவதுபோல்தான் இருக்கும். ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவர். அவருக்கு ஆல்பர்ட் மூலம் பரிசு கிடைத்தது. அக் கூட்டத்திற்கு வந்த நகுலன், ரொம்ப கூச்சத்தோடு மேடையில் அமர்ந்திருந்தார். கூட்டத்துடன் நின்று பரிசு வாங்க எழுந்துகூட வர வெட்கப்பட்டார். ஆனால் மேடையில் தோன்றுவதையே பிரதானமாக விளம்பரப் பிரியராக ஒரு வங்கியின் தலைவர் இருந்தார். அவர்தான் அக்கூட்டத்தை நடத்த நன்கொடை கொடுத்திருக்கிறார். அவர் நகுலன் பக்கத்தில் அமர்ந்தும் அவருக்கு நகுலன் யார் என்பது தெரியாது. ஒருவரை ஒருவர் பார்த்தும் பேசாமல் பக்கத்தில் அமர்ந்திருந்தார்கள்.
நகுலனை அவர் சகோதரர் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போவேன். நடந்துதான் போவோம். அவர் சகோதரர் வீட்டிற்குப் போவதற்குள், பல முறை ‘இந்த வழியாகத்தானே உங்கள் வீட்டிலிருந்து வந்தோம்,’ என்று கேட்காமல் இருக்க மாட்டார். ‘ஆமாம்,’ என்று பலமுறை நான் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அவர் தனியாக எங்கும் போகமாட்டார்.
ஒரு சமயம் நகுலனின் திருவனந்தபுர நண்பர் காசியபன் மையிலாப்பூரில் இருந்தார். ‘அவரைப் போய்ப் பார்க்கலாமா?’ என்று கேட்டேன். காசியபனும் அவர் வந்ததை அறிந்து பார்க்க ஆசைப் பட்டார்.
“என் வண்டி பின்னால் அமர்ந்து கொள்ளுங்கள்,” என்றேன்.
நகுலன் மறுத்து விட்டார். “பஸ்ஸில் போகலாம் வாருங்கள்,” என்றேன். அதற்கும் மறுத்துவிட்டார்.
“ஆட்டோவில் போகலாம்,” என்றேன்.
“அவ்வளவு பைசா செலவு செய்ய முடியாது. வேண்டுமானால் காசியபன் என்னை வந்து சந்திக்கட்டும்,” என்று கூறி விட்டார்.
கடைசிவரை அவர் காசியபனை பார்க்கவே இல்லை.
மிகக் குறைந்த பக்கங்களுடன் அவருடைய புத்தகமொன்றை கொண்டுவர நினைத்தேன். ‘இரு நீண்ட கவிதைகள்’ என்ற புத்தகம் அப்படித்தான் உருவானது. நான் வங்கியில் இருந்தபடி பத்திரிகை நடத்துவதால், புத்தகம் போட எனக்குப் பணத் தட்டுப்பாடு இருக்கும். அதனால் நானும், நகுலனும் சேர்ந்து அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்தோம். பாதி நானும், பாதி நகுலனும் செலவு செய்தோம். பொருத்தமே இல்லாமல் புத்தகத்தில் நகுலன் வரைந்த ஓவியமும் இருக்கும். புத்தகம் வந்தபிறகு வழக்கம்போல் கவிதைப் புத்தகம் விற்கவில்லை. பொதுவாக நம் தமிழ் தீவிர சூழ்நிலையில் கவிதைப் புத்தகத்திற்குக் கொடுக்கும் அலட்சியம்போல் வேறு எந்தப் பிரிவு நூலிற்கும் இருக்காது. ஆனால் நகுலன் தான் போட்ட பணத்தை உடனடியாகக் கேட்க ஆரம்பித்து விட்டார். ஏனெனில் அவர் இதற்கு முன்னால் பலரிடம் புத்தகம் போட பணம் கொடுத்து ஏமாந்திருக்கிறார். நான் அவர் பணத்தை ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலிருந்து கொடுத்து சரி செய்தேன்..
இன்னும் கூட விற்காத புத்தகப் பிரதிகள் என்னிடம் இருக்கிறது. விலை ரூ.12/-தான். நகுலனை திருவனந்தபுரத்தில் ஒருமுறையாவது போய்ப் பார்க்க வேண்டுமென்று நினைப்பேன். ‘நான் உங்கள் ஊருக்கு வந்து உங்களைப் பார்க்க வேண்டும்,’ என்று ஒருமுறை குறிப்பிட்டேன். உடனே, நகுலன்,”நீங்கள் என் வீட்டிற்கு வந்து தங்க முடியாது,” என்று குறிப்பிட்டார்.
அவருக்கு ஏனோ புரியவில்லை. நான் அவரைப் பார்க்க வந்தாலும், அவர் வீட்டில் வந்து தங்க மாட்டேன் என்பது. ஏனோ திருவனந்தபுரம் போய் அவரைப் பார்க்கவே இல்லை. வழக்கமாக அவருக்குப் பத்திரிகை/புத்தகம் அனுப்பிக் கொண்டிருப்பேன். ஒருமுறை அவர் எனக்குக் கடிதமொன்று எழுதியிருந்தார்.
16.12.1996-ல் அவர் எழுதிய கடிதத்தை இங்கு குறிப்பிட்டு முடிக்கிறேன்.
நண்பருக்கு,
வணக்கம். எனக்கு இம்மாதம் 12.12.96தான் பென்ஷன் கிடைத்தது. எனவே மையம் சந்தாவை இன்றுதான் அனுப்ப முடிந்தது. நான் உடல் மனம் சோர்வுற்று மிகத் தளர்ந்த நிலையில் இருக்கிறேன். இனி எனக்கு மையமோ வேறு பத்திரிகைகளோ புஸ்தகங்களோ அனுப்ப வேண்டாம். உங்கள் யாருடனும் இல்லை என்ற புத்தகத்தை அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு காலமான என் சகோதரியிடம் கொடுத்துவிட்டேன். அதுவும் என் கையில் இல்லை. இனியும் எழுதவேண்டாம் என்ற நிலையில் யாராவது வந்து எழுதுங்கள் என்று துன்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். எனக்கு 75-ஆவது தொடங்கிவிட்டது. வெகு விரைவில் காலமாகிவிட்டால் என்ற நிலை. உடல்-மன உளைச்சல்கள் அவ்வாறு.
உங்களுக்கு நாய்களற்ற வீதிகள் என்ற கவிதைத் தொகுதி கிடைத்ததா?
உங்கள் தகப்பனாருக்கு என் நமஸ்காரத்தைச் சொல்லவும். என்னவோ இருந்து கொண்டிருக்கிறேன்.
அன்புடன்
“நகுலன்”

மேலே குறிப்பிட்ட கடிதத்தை நகுலன் அனுப்பிய பிறகு, நான் புத்தகங்களையோ பத்திரிகைகளையோ அனுப்புவதை நிறுத்தி விட்டேன். பிறர் மூலமாகத்தான் எனக்கு நகுலனைப் பற்றி தெரியும். நீல பத்மநாபனுடன் பேசும்போது, நகுலனைப் பற்றி விஜாரிக்காமல் இருக்க மாட்டேன். கடிதத்தில் குறிப்பிட்டபடி அவர் மரணத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தாரென்று நினைக்கிறேன்.

உயிரோவியம்..

ஓவியம் வரைந்துகொண்டிருந்த
அந்தக் கிழவனின்
கைகளில் சிறிதேனும்
நடுக்கத்திற்கான அறிகுறி
தென்படவில்லை.

புகை கக்கி இரைச்சலுடன்
செல்கின்ற வாகனத்தினாலும்
தோள்மீது எச்சமிட்டு பறக்கின்ற
காக்கையினாலும் கலைத்துவிட
முடியவில்லை
ஓவியத்துள் கரைந்துவிட்ட
கிழமனதை.

பசித்தழும் குழந்தையின்
கண்ணீர்த்துளியில்
தெரிந்தது ஓவியத்தின்
நேர்த்தியும் கிழவனின்
ரசனையும்…

ஓவியத்தின் மீது
ஒற்றை ரூபாய் எறிகையில்
கரம் நடுங்கியதைக் கண்டு
அழுகை நிறுத்தி
ஏளனப் புன்னகை சிந்தியது
அக்குழந்தை.

வைரமோதிரம்

தாம்பரத்திலிருந்து வரும் போக்குவரத்து வண்டியில்தான் அந்தப் பெண் குரோம்பேட்டையில் ஏறிக்கொண்டாள். முகமெல்லாம் மிணுமிணுக்க புத்தாடை அணிந்திருந்தாள். கண்களில் ஏகப்பட்ட மகிழ்ச்சி. அவள் உடை உடுத்தியிருக்கும் விதத்தை பஸ்ஸில் இருந்த சிலரும் ரசித்துக்கொண்டி ருந்தார்கள். இடது கை மோதிர விரலில் வைர மோதிரமொன்றை அணிந்திருந்தாள். தாங்க முடியாத ஜ்வலிப்புடன் அது காட்சி அளித்துக்கொண்டிருந்தது.
வைரமோதிரத்தின் ஜ்வலிப்பு அவள் நிறத்தை இன்னும் மெருகூட்டிக் கொண்டிருந்தது. அவளுக்குப் போனவாரம்தான், திருமணம் நிச்சயம் ஆனது. அந்தச் சந்தோஷத்தை அவளுடைய வகுப்புத் தோழி ஒருவளுடன் பகிர்ந்துகொள்ளத்தான் குரோம்பேட்டையிலிருந்து தி.நகர் வரைச் செல்லும் வண்டியில் புறப்பட்டுச் சென்றுகொண்டிருக்கிறாள். தி நகரில் இருக்கும் அவளுடைய நெருங்கிய தோழி என்ன காரணத்தாலோ அவள் திருமணம் நிச்சயம் செய்த நாளன்று வர முடியவில்லை.
பையில் கல்யாண நிச்சயம் ஆன புகைப்பட ஆல்பமும், ஒரு சீடியும் வைத்திருக்கிறாள். புறப்படும்போது அம்மாவிடம் அடுத்தநாள் வருவதாகச் சொல்லியிருந்தாள்.
பல மாதங்கள் முயற்சி செய்து இந்த வரன் கிடைத்ததால், அவள் அம்மாவிற்கும் மகிழ்ச்சி. அவளைப் போகும்படி சொன்னாள்.
பஸ்ஸில் பெரிய கூட்டம் இல்லாவிட்டாலும், கூட்டமே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.
அவள் இருந்த இருக்கையில் அவள் மட்டும்தான் அமர்ந்திருந்தாள். பஸ் நேராகப் பல்லாவரத்திற்குப் போய் நின்றது.
வயதான மூதாட்டி ஒருவள் ஏறி இவள் பக்கத்தில் அமர்ந்தாள்.
மூதாட்டியைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. 75 வயதுக்கு மேலிருக்கும். இந்த வண்டியில் கிளம்பி எங்கே சென்று கொண்டிருக்கிறாளோ?
“உன் பேரென்னம்மா?” என்றாள் மூதாட்டி, அவளைப் பார்த்து.
“சுமதி.”
“புதுப்பெண் மாதிரி இருக்கியே?”
“ஆமாம்.”
“அப்படியா..நல்ல விஷயம். வாழ்த்துகள். எப்பக் கல்யாணம்?”
“செப்டம்பர் மாதம்.”
“மாப்பிள்ளை என்ன செய்யறார்?”
“சாஃப்ட்வேர் கம்பெனியில இருக்காரு?”
“நல்ல சம்பளமா?”
“உம்….உம்…”
“நீ என்னப் படிச்சிருக்கே?”
“பிசினஸ் மேனேஜ்மென்ட்.”
“வேலைக்கு எதுவும் போகலையா?”
“வேண்டாம்னு சொல்லிட்டார்.”
“ஏன்? இரண்டு பேர் சம்பாதிச்சா நல்லதுதானே?”
“நான் ஒருத்தன் சம்பாதிக்கிறது போதும்னு
“நான் ஒருத்தன் சம்பாதிக்கிறது போதும்னு சொல்லிட்டார். காலையில போனா ராத்திரிதான் அவர் வருவார். அப்ப வீட்டில மனைவின்னு யாராவது இருக்கணும்.”
“டெய்லி நீ அவரோடு பேசறியா?”
“தினம் இரண்டு மணி நேரம் பேசறோம்.”
“யார் செலவு?”
“அவர் செலவுதான்.”
“பரவாயில்லை. அந்தக் காலத்துல நாங்களெல்லாம் ஒருத்தரை ஒருத்தர் கூடப் பாத்துக்க முடியாது.”
“கையில என்ன? வைர மோதிரமா?”
“ஆமாம். அவர் வீட்டில போட்டது. போன புதன்கிழமைதான் எங்க பெட்ரோத்தல் நடந்தது. அன்னிக்குப் போட்டது?”
“பணக்காரர்களா?”
“மிடில் க்ளாஸ்.”
வண்டி மெதுவாக இன்னும் சில இடங்களில் நின்று நின்று போய்க்கொண்டிருந்தது. சுமதி தன் கற்பனையில் மூழ்கத் துவங்கிவிட்டாள். மூதாட்டியுடன் பேசுவதைக் குறைத்துக்கொண்டு, ஷ்யாமுடன் இன்று என்ன பேசலாமென்ற யோசனைக்குச் சென்று விட்டாள். வயது அதிகம் காரணமாக மூதாட்டியும் சற்றுக் கண் அயர ஆரம்பித்தாள்.
கற்பனை வேகத்தில் சுமதி தன் நினைவே இல்லாமல்தான் இருந்துகொண்டிருந்தாள். ஷ்யாம் தன்னைப் பெண் பார்க்க வந்ததும், பிறகு இருவரும் தனி அறையில் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்ததும் ஒரு கனவுபோல் அவளுக்குத் தோன்றியது. ஷ்யாம் வீட்டில் விருப்பம் தெரிவித்துப் போன் செய்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அவளுக்கு மட்டுமல்ல. அம்மாவிற்கும். ஷ்யாமைப் போனில் கூப்பிட்டு “தாங்ஸ்+ சொன்னாள்.
யாரோ அவசரம் அவசரமாக பஸ்ஸிலிருந்து இறங்குவது போலத் தோன்றியது. அப்போது லேசாகத் தன்னை இடித்துக்கொண்டு யாரோ சென்றதுபோல் தோன்றியது.
“ஷ்யாம் உண்மையிலேயே ஒரு லட்சணமான பையன்.”
மூதாட்டி திடீரென்று விழித்துக்கொண்டாள். சுமதியைப் பார்த்து, “ஒரு கெட்ட சொப்பனம்,” என்று கூறியவள், “ஹோ,” என்று அலற ஆரம்பித்தாள்.
சுமதி பதட்டத்துடன்,”என்ன?” என்று கேட்டாள்.
“உன் வைர மோதிரம்,” என்றாள் மூதாட்டி சத்தத்துடன்.
சுமதி தன் விரலைப் பார்த்து, மூர்ச்சை ஆகி விழுந்து விட்டாள். அவள் விரல் அறுந்து சீட்டுக்குக் கீழே கிடந்தது. அதிலிருந்த வைர மோதிரத்தைக் காணவில்லை. துண்டுப்பட்ட விரலிலிருந்து ரத்தப் பெருக்கு ஓடிக்கொண்டிருந்தது.
(‘ராம் காலனி’ என்ற சிறுகதைத் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்ட கதை. விருட்சம் வெளியீடாக வந்துள்ள அப்புத்தகத்தின் விலை ரூ.60)

உள்ளே


வராதே!”, அந்தக் குரல் கம்பீரமாக ஒலித்தது.”என்னது?!?”, சட்டென்று ஒலித்த அந்தக் குரலால், சற்று உறுதி குலைந்த குரலில் கணிதன் கேட்டான்.”உள்ளே வராதே என்றேன்.”.’தமிழா?’ கணிதன் மனதுக்குள் மீண்டும் குழப்பம்.”இங்கு மொழி ஒரு தடையல்ல”.’அட! நான் மனதிற்குள்தானே நினைத்தேன். டெலிபதியா? அது சரிதான். இவருக்கு இந்த வித்தை கூட தெரியாவிட்டால் எப்படி! கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கண்டபடி நினைக்க கூடாது!’ கணிதனின் மனதுக்குள் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.”இது டெலிபதியல்ல! உன் மனதிற்குள் உள்ளவை அனைத்தும் எனக்குத் தெரியும். ஆனால் நான் நினைப்பது, நான் நினைத்தால் மட்டுமே உனக்கு கேட்கும். கேட்கிறது என்பது கூட உனது மாயைதான். அவற்றை நீ உணர்கிறாய். அவ்வளவுதான்!”கணிதன் மனதைக் கட்டுப்படுத்த கொஞ்சம் கஷ்டப்பட்டான்.’மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். கண்டபடி ஓடாதே.சரி! நீங்கள் யார்? அப்பாடா! சரியான கேள்வியை கேட்டு விட்டேன்.'”உன் மனம் கட்டுப்படவில்லை. ரொம்பக் கஷ்டப் படுகிறாய். நான் யாரென்று கேட்டாய். நீ எதைத் தேடி வந்தாயோ அதுதான் நான்.”கணிதனின் உடலில் உடனே அட்ரினலின் வேகம் அதிகரித்தது. வியர்வை பொங்கியது. ஆனந்தத்தில் உடல் நடுங்கியது.’நிஜம்தானே? ஆனால் எதுவும் கண்ணுக்கு தெரியவில்லையே? ஒரு வேளை…’ கணிதனின் நினைவோட்டத்தை, அந்தக் குரல் தடுத்து நிறுத்தியது.”வீணாக ஏன் மனதை அலட்டிக் கொள்கிறாய்? நான் உருவமில்லாதவன். அருவமானவன்.”‘அருவமானவன்! அப்படியென்றால் ஆணா?'”எனக்கு பால் கிடையாது. ஆனால் உனது மொழிக்கு ஏதாவதொரு பால் தேவைப்படுவதால், அப்படி மொழிபெயர்க்கப்பட்டு நீ புரிந்து கொண்டாய். உனது ஆணாதிக்கச் சிந்தனை அதை ஆண் பாலாக மாற்றி விட்டது.”‘சரி! சரி! நான் உள்ளே வரக்கூடாது என்றீர்களே? நான் என்ன அவ்வளவு பாவம் செய்தவனா? பிறந்ததிலிருந்து உங்களை சந்திப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வளர்ந்தவன். பல கஷ்டங்களை கடந்து இன்று உங்கள் முன் நிற்கிறேன். பல கோடி ஒளி வருஷங்கள் பிரயாணித்து இங்கு வந்திருக்கிறேன். என்னை இப்படி வாசலிலேயே தடுத்து நிறுத்துவது முறையா?'”நீ இப்பொழுது இந்த வாசலைத் தாண்டி வரக்கூடாது. வர முடியாது!”‘அதுதான் ஏன்?'”ஏனென்றால் உன்னிடம் சில பொருட்கள் இருக்கின்றன. ஒரு வாகனம் இருக்கிறது. அவற்றோடு நீ உள்ளே நுழைய முடியாது.”‘வாகனம்தான் பிரச்சனையா? இதை விட்டுவிடலாம்.’கணிதன் தன் வாகனத்திலிருந்து வெளியே குதித்தான்.’இப்பொழுதாவது உள்ளே போக முடியுமா?'”இப்பொழுதும் நீ உள்ளே வர முடியாது. உன்னிடம் மேலும் சில பொருட்கள் இருக்கின்றன.”கணிதன் தனது சுவாசக் குழாய், சிலிண்டர் முதலியவைகளை கழற்றி எறிந்தான்.’உடைகள்?'”அவையும் பொருள்தானே”மறு எண்ணம் எண்ணாமல் கவச உடைகளையும், தலைக் கவசத்தையும் கழற்றினான். பின் தனது உள்ளாடைகளையும் களைந்தெறிந்தான்.கவச உடைகளை கழற்றிய பின்னும் அவனுக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை. தடையில்லாமல் சுவாசித்தான். ஒரு நல்ல வாசம் வேறு வீசிக் கொண்டிருந்தது.’இப்பொழுது என்னிடம் ஒன்றுமில்லை. உள்ளே வரலாமா?'”இன்னமும் ஒன்று உன்னிடம் இருக்கிறது. அதோடு இங்கு யாரும் உள்ளே வர முடியாது.”‘ஆனால், என்னிடம் எதுவுமேயில்லை'”நன்றாக எண்ணிப்பார்! எல்லாவற்றையும் விட்டு விட்டாயா? உனது என்று சொல்லிக் கொள்வதற்கு ஒன்றுமேயில்லையா?”‘என்ன இருக்கிறது? உங்களுக்கேத் தெரிய. ஓ! புரிந்து விட்டது! புரிந்து விட்டது கடவுளே! புரிந்து விட்டது!!’கணிதனின் உடலில் திடீரென்று ஏற்பட்ட அந்த ஒரு நொடி அதீதீதீதீத பரவசத்தால், மார்பில் அதிகமாய் ரத்தம் பாய, எதோ ஒன்று வெடிக்க, சில நலிந்து போன நரம்புகள் அறுந்து தெறிக்க, உயிர் பிரிந்தது.கணிதனின் உடல் அவன் தூக்கியெறிந்த பொருட்களுக்கிடையில், முடிவில்லாத அந்த பள்ளத்தில் விழுந்து கொண்டிருந்தது.ஒரு நிமிடம் கழித்து, தவளையை கார்ட்டூனாய் வரைந்தது போன்ற ஒரு உருவம் அந்த வாசலிலிருந்து எட்டிப் பார்த்தது.’இவன் இங்கே கடவுளைத் தேடித்தான் வந்தான். நல்லவன்தான். ஆனாலும், இவனை நமது கிரகத்துக்குள் வர அனுமத்திருந்தால், இவனால் நமது கிரகத்துக்கு பல தீமைகள் விளைந்திருக்கும். நம்மிடம் டெலிபதி, மொழிக்கடத்தல் என்று பல விஞ்ஞான வசதிகளிருந்தாலும், இந்த ஜந்துக்களின் பலத்தை எதிர்த்து நிற்பது மிகக் கடினம். இந்த வெளியுலக ஜந்துக்களுக்கு நம்மைப் பற்றி தெரியாமலிருக்கும் வரைதான் நமக்கு பாதுகாப்பு.’, என்று அந்த தவளைக் கார்ட்டூன் தனது மொழியில் நினைத்துக் கொண்டது யாருக்கும் கேட்கவில்லை.

என் நண்பர் ஆத்மாநாம்


கடைசிப் பகுதி
எனக்கும் அவருக்கும் இடையே இருந்த பன்னிரெண்டு வருட உறவு வினோத தருணங்களாலும் அவ்வப்போது விபரீத தருணங்களாலும் அடுக்கப்பட்டடிருந்தது. அவையெல்லாம் எனக்கு உரமாகி விட்டிருந்தன. ஆத்மாநாமை அவை உலுக்கிப் போட்டிருந்தன. அவருக்கு ஒரு பெண்ணிடம் அறிமுகமான குறுகிய காலத்திலேயே மெல்லிய நட்பை அரும்ப வைத்திருந்தது. நட்பு உறவாகவும் மலர வித்திட்டுக்கொண்டிருந்தது. ஆனால் திருமணம் என்ற அவசர குறிக்கீடு ஆத்மாநாமையும் மீறி அப்பெண்ணை நோக்கி எய்யப்பட்டதில் அத்தனையும் கலைந்து போனது. அழகிய மலர்வனம்போல் உருவாகிக் கொண்டிருந்த சதுக்கம் ஒரே நாளில் காலிமனையாகி விட்டது. நிஜமாக வாழ்க்கையில் அந்தக் கணம் தன்னந்தனியாக நின்றார் – ஆத்மாநாம். ஒரு நிமிஷம் அவளை அவரால் பார்க்க முடியவில்லை. ஒரு விநாடி அவளின் குரலை தொலைபேசியிலும் கேட்க முடியவில்லை. அவள் அவளுடையகுடும்பத்தாரால் முழுவதுமாக மறைக்கப்பட்டு விட்டாள்..அந்த அத்தியாயம் மர்ம புதிராக முற்றுப் பெறாமலே முற்றுப் பெற்றுவிட்டது.
மனச்சிதைவின் முதல் தாக்குதலுக்கு நான்கு மாதங்களுக்கு முன் ஆத்மாநாமும் நானும் மெரீனா கடற்கரையை நோக்கி நடந்துகொண்டிருந்தோம். பக்கிங்காம் கால்வாயின் பாலத்தைத் தாண்டி வலதுபுற நடைபாதையில் சென்று கொண்டிருந்தோம். தூரத்தில் கடற்கரைச் சாலையில் இருந்து திரும்பி அவள் அவளுடைய பெற்றோர்களுடனும் தங்கைகளோடும் வந்தாள். நாங்கள் அவர்களைப் பார்த்துவிட்டோம். அவர்களும் எங்களைப் பார்த்து விட்டார்கள். ஆத்மாநாமின் உடல் உயர்ந்து விறைத்தது. சட்டென என் கையைப் பிடித்துக்கொண்டார். அவர்களுடைய தோற்றத்திலும் நிசப்தம். இறுக்கம். நாங்கள் அவர்களையும் அவர்கள் எங்களையும் எதிர்கொண்டு கடந்தோம். ஆத்மாநாம் மௌனமாகவே நடந்து கொண்டிருந்தார். கடற்கரைச் சாலையின் புல்வெளியில் நாங்கள் அமர்ந்தோம். சில நிமிடங்கள் கழித்து ஆத்மாநாம் சொன்னார்: “நீங்க வேனா பாருங்க..அவ வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்படப் போறா..” ஆனால் எதிர் வந்த வாழ்க்கையில் கஷ்டப்பட்டு குலைந்து போனது யார்?
ஆத்மாநாம் இறந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் நான் மயிலாப்பூர் சென்றிருந்தேன்..அது டிசம்பர் மாத அவரின் அன்புக்கு உரியவளின் வீணைக் கச்சேரி. பகல் இரண்டு மணிக்கு ஒரு சபாவில் நடக்கப் போவதற்கான அறிவிப்பு அந்த சுவரொட்டி…ஆத்மாநாமுடன் நட்பு மலர்ந்து கொண்டிருந்த நாட்களிலேயே அவள் தீவிர வீணைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவள்..மானிட புலன்களுக்கு அப்பாற்பட்ட சக்தியின் கணிதங்கள்தான் வாழ்க்கையை சுவாரஸ்யப் படுத்தவும் செய்கின்றன. சில நேரங்களில் அதிர்ந்து ஸ்தம்பிக்கவும் வைத்து விடுகின்றன..ஆத்மாநாமின் மனம் ஸ்தம்பிப்பதற்கும் மேலான குழைவிற்கு உள்ளானதுதான் துர்பாக்கியம். இன்னொரு சிறு சம்பவம் கூட இருக்கிறது. உதாரணமாகச் சொல்ல… ஒருநாள் காலை ஆறரை மணி இருக்கும். அதிகாலை ஐந்தரை மணிக்கு என்னுடைய அன்றாட வழக்கப்படி மெரீனா கடற்கரைக்குப் போய் ராணி மேரி கல்லூரிக்கு எதிரான புல்வெளியில் உட்கார்ந்துவிட்டு அறைக்குத் திரும்பலாம் என்ற எண்ணத்தில் நான் நடைபாதையில் வேகமாக நடந்துகொண்டிருந்தேன். ஒரு சதவிகிதஎதிர்பார்ப்பு கூட இல்லாமல் அதே நடைபாதையின் தூரத்தில் ஆத்மாநாம் வந்துகொண்டிருந்தார். அவருடன் அவரின் அண்ணாவும் மற்றொருவரும் வேறு வந்தார்கள். சின்ன கேள்விக்குறியுடனேயேஎன் நடை தொடர்ந்தது. ஆத்மாநாமின் முகத்தோற்றத்தில் வித்தியாசம் ஏதோ இருந்தது. இரண்டொரு விநாடிகளில் தெரிந்து விட்டது. அவருடைய மீசை மழிக்கப்பட்டிருந்தது. ஆத்மாநாமின் அண்ணா கையில் சில பொருட்கள் இருந்தன. ஒரு புள்ளியில் நாங்கள் சந்தித்தோம். வறண்ட வெற்று வார்த்தைகளில் ஆத்மாநாம் சொன்னார்: “என்னோட பாதர் இறந்திட்டார்.. ஸாரி – உங்களுக்குசொல்லலை..அவரோட அஸ்தியை கரைக்கிறதுக்காக போறோம்..நெக்ஸ்ட் வீக் உங்களை வந்து பார்க்கிறேன்..”
நான் எதுவும் சொல்லாமல் நகர்ந்து வழிவிட்டு நின்றுகொண்டேன். அவர்கள் தொடர்ந்து நடந்தார்கள். பார்த்தபடியே நின்றேன். தென்திசை பார்த்தபடி ஆத்மாநாம் தளர்ந்த நடையில் சென்று கொண்டிருந்தார். அந்தத் தளர்ச்சி கடைசிவரை அவரிடமிருந்து நீங்கவில்லை. வேலை பணியென்று பார்த்து எங்கேயும் அவரால் உட்கார முடியவில்லை. உள்ளூர மணவாழ்க்கைக்கு ஆசைப்பட்டார். அது அமைவதற்கும் வழி இல்லாமல் இருந்தது.
ஒரு சமயம் ‘ஹிண்டு’ ஆங்கில நாளிதழில் மணமகள் தேவை விளம்பரம் பகுதியில் விளம்பரம் கொடுக்க ஆசைப்பட்டார். இரண்டு மூன்று நாட்கள் யோசனை செய்து பார்த்து விளம்பரத்திற்கான வாசகங்களை எழுதிக்கொண்டு வந்தார். நானும் அவரும் ஹிண்டு ஆபிஸ் போனோம். அதற்கான பிரிவில் போய் ஆத்மாநாம் விளம்பரத்திற்காக எழுதியிருந்த வாசகங்களைக் கொடுத்தார்.
திரும்பத் திரும்ப வரிகளைப் படித்துப் பார்த்த நாளிதழின் அலுவலர் ஆத்மாநாம் எழுதியிருந்த குறிப்பிட்ட இரண்டு சொற்களை எடுத்துவிட்டு வேறு விதத்தில் எழுதித் தரச் சொன்னார். ஆத்மாநாம் காரணத்தைக் கேட்டார். அந்த இரண்டு வார்த்தைகள் தவறாக வாசிப்போரை நடத்தி விடலாம். அது தங்களுக்கு ஏற்புடையது அல்ல என்றார் அந்த அலுவலர். ஆத்மாநாம் அந்த வாதத்தை ஏற்கவில்லை. தன்னுடைய அணுகலின் அர்த்தத்தை விளக்கமாகச் சொன்னார். அந்த அலுவலர் உள்ளேபோய் ஆத்மாநாமின் வாசகங்களை வேறு யாரிடமோ காட்டிப் பேசிவிட்டு வந்து குறிப்பிட்ட அந்த வார்த்தைகளுடன் விளம்பரத்தைத் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதென்று சொல்லிவிட்டார். ஆத்மாநாம் அவருடைய வாசகங்களை மாற்றிக்கொள்ள முன்வரவில்லை – எழுந்து வந்து விட்டோம். கோபத்தில் ஆத்மாநாம் முகம் சிவந்து போனார். நீண்ட நேரத்திற்கு என் அறையில் மௌனமாக சிகரெட்புகைத்துக்கொண்டிருந்தார்.
இந்த விஷயத்தை நான் என்னுடைய இன்னொரு நண்பரான அம்பலவாணனிடம் வருத்தத்துடன் சொல்லிக்கொண்டிருந்தேன். அவருக்கும் ஆத்மாநாமிடம் பரிச்சயம் உண்டு. அம்பலவாணன் ஃபுட் கார்ப்பரேஷனில் பணியில் இருந்தார். யூனியன் போன்ற அமைப்புகளில் தீவிர பங்குள்ளவர். எல்லா நாளிதழ்களிலும் அவருக்குத் தொடர்பு இருந்தது. ஹிண்டு ‘ராம்’ போன்றவர்களிடமும் அம்பலவாணனுக்கு அறிமுகம் உண்டு. பத்திரிகை அலுவலகத்திற்கு ஆத்மாநாமை அம்பலவாணன் அழைத்துப் போனார். அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஹிண்டுவில் ஆத்மாநாமின் மணமகள் தேவை விளம்பரம் வெளி வந்தது. ஆனால் அவர்கள் ஆட்சேபணை தெரிவித்த வார்த்தைகளுக்கு மாற்று வார்த்தைகளுடன் – ஆத்மாநாமின் சம்மதத்தோடு..
விளம்பரத்திற்கு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கே பதில்கள் வந்தன. வந்தவைகளும் ஆத்மாநாமிற்கு திருப்தியாக இல்லை. பதில் கொடுத்த இரண்டொருவரை ஆத்மாநாம் சந்திக்கவும் செய்தார். ஆனால் விளைவுகள் எதுவும் இல்லை. இத்தனைக்கும் இந்த விஷயங்களை ஆத்மாநாம் அவரின் குடும்பத்தாருக்குத் தெரியாமல் வேறு செய்தார். இதெல்லாம் 1981-ல் நடந்தது..எல்லாமே இப்படியா இப்படியாக நீர்குமிழியாய் ஒன்றுமில்லாமலே போயிற்று. அதனால் ஆத்மாநாம் என்ற மென்மையான நண்பன் திரும்ப திரும்ப மனச்சிகைவின் தாக்குதல்களுக்கும் தீவிர சிகிச்சைகளுக்கும் ஆளாக நேர்ந்தது சமாதானப்படுத்திக் கொள்ளவே முடியாத கொடிய அவலம்தான். மனநல மருத்துவம் ஆத்மாநாம் காலடியில் தோற்று மண்டியிட்டு விட்டது. ஆத்மாநாமை அது மீட்கவில்லை.
ஆத்மாநாமை அது மீட்கவில்லை..ஆத்மாநாமும் உள்ளூர தோற்றுப்போனார். போராடும் வலிமை இல்லை. வலிமை அற்ற நாட்களில் ஆத்மாநாம் அவருடைய அப்பாவின் மரணத்தைச் சந்திக்க வேண்டி வந்தது. அவரின் மூத்த சகோரர் வேலையின் காரணமாக பெங்களூர் சென்றார். பாதுகாப்பின்மை ஆத்மாநாமின் மனதை நெரித்தது. பாதை தெரியவில்லை. முழுவதுமாக அந்தகாரம் சூழ ஆத்மாநாம் வாழ்க்கையிடம் விடை பெற்றார்.
1983 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் சந்தித்தபோது என்னிடம் சொன்னார் : “நாம ரெண்டு பேரும் ஒருநாள் சிங்கபெருமாள் கோயில் போயிட்டு வரலாம்..” நான் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன். கோயில்களுக்குப் போகிற ஈடுபாடுகள் குறிப்பிடும்படியாக அவரிடம் நான் அறிந்தவரை இருந்ததில்லை. “என்ன திடீர்னு?” என்றேன். “யாரோ என்னை அந்தக் கோயிலுக்குப் போகச் சொல்லி இருக்காங்களாம்..எங்க அம்மா சொன்னாங்க..எனக்கும் கடவுளோட அவதாரங்கள்ள நரசிம்மர் அவதாரம்தான் பிடிக்கும்..அதனாலேயும் போயிட்டு வரலாம்னு நெனைச்சேன்..” “ஓயெஸ், போலாம் ஒருநாள்..” என்றேன். ஆனால் போகவில்லை. தேதி, நாள், விருதுநகர் பயணம் என மாற்றி மாற்றி எதுவோ குறுக்கிட்டு எதுவோ கூடி வரவில்லை. சிங்கபெருமாள் கோயிலுக்கு ஆத்மாநாமை அழைத்துச் செல்ல முடியாமலேயே ஆகிவிட்டது.
சென்ற வருஷம் மே மாதம் ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தியன்று நான் என் மனைவி என் மைத்துனர் குடும்பம் எல்லோருமாக ஸ்ரீ பெரும்புதூர் கோயிலுக்குப் போயிருந்தோம். விசேஷ பூஜைகள் நடந்தன. தீபாராதனைக்காக உடையவர் ராமானுஜர் சந்நதியில் காத்திருந்தோம். தீபாராதனை முடிந்து விநியோகம். வெண்பொங்கலையும் தயிர் சாதத்தையும் பெற்றுக்கொண்டபோது இருபத்தி மூன்று வருஷத்திற்கு முன்பு நரசிம்மர் அவதாரம் பிடிக்கும் என்று ஆத்மாநாம் சொன்ன வார்த்தைகள் என் ஞாபகத்தில் நிழலாடின. அன்று நடுநிசியில் தூக்கம் வராமல் படுக்கையில் விழித்திருந்தபோது சிங்கத்தின் கர்ஜனை என் செவி அருகில் முழங்கியது.
பின் குறிப்பு : 1984 ஆம் வருடம் ஆத்மாநாம் வாழ்க்கை முற்றுப்பெறாமல் இன்றும் தொடர்ந்திருந்தால் நவீன தமிழ் கவிஞர்களான பிரமிள், கலாப்ரியா, ஞானக்கூத்தன் போன்றோரின் வரிசைக் குறிப்பில் ஆத்மாநாமும் முக்கிய இடத்தை பெற்றிருப்பார். அதற்கான அடிநாதங்களையும் வீச்சையும் அவருடைய கவிதைகள் உள்ளடக்கியிருந்ததின் அடையாளங்கள் சாதாரணமானவை இல்லை. நட்பான புளியமரம் பற்றி அவர் எழுதியதை ஒரு சிறு உதாரணமாக சுட்டிக் காட்டலாம். ஆத்மாநாமின் கவிதை பரவெளி வெறும் வார்த்தை இலக்கியப் புலமையில் இயக்கப்பட்ட மொழிவாரியம் இல்லை. அதனால்தான் 1979-ன் இறுதியில் மனச்சிதைவுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொதிநிலையிலும் அவரின் கவிதா பரவெளி ஊசிமுனையும் சேதப்படாமல் சமுத்திரமாய்நிறைவு தவறாமல் அப்படியே விரிந்து கிடந்தது. மருத்துவமனைச்சிகிச்சையினூடேயும் ஆத்மாநாமின் பேனா கவிதைகளை எழுதிற்று. இதில் மனதை கனக்க வைக்கும் துக்கம் அந்த மகா கவிஞனின் கை அவனுடைய வாழ்க்கையை எழுதிக்கொள்ள முடியாமல் அவனின் மரணத்தை எழுதிக்கொண்டதுதான்…
(ஆத்மாநாம் பற்றி ஸ்டெல்லா புரூஸ் எழுதிய இக் கட்டுரை முடிவுற்றது. ஆத்மாநாம் பற்றி இன்னும் சில விபரங்கள் வரும் நாட்களில் தொடரும்)

என் நண்பர் ஆத்மாநாம்


பகுதி 2 தற்குமுன் 1983 அக்டோபர் மாதத்தில் தூக்க மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு ஒரு தற்கொலைக்கு முயன்றார். அதில் காப்பாற்றப்பட்டு விட்ட அவர் பத்துநாட்களுக்குப் பின் தியாகராய நகரில் இருந்த என் சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்தார். இடையில் ஒரு வருஷம் நான் என் சகோதரியின் வீட்டில் தங்கியிருந்தேன். காலை டிபன் சாப்பிட நான்தான் ஆத்மாநாமை வரச் சொல்லியிருந்தேன். அப்போது ஊரில் இருந்து என் அம்மாவும் வந்திருந்தார். “ஆத்மாநாமை சாப்பிட வரச்சொல்லு,” என்று என் அம்மாவும் என்னிடம் கூறி இருந்தார். பொதுவாக நெருங்கிய நண்பர்களின் வீடுகளில் சாப்பிடுவதற்கு ஆத்மாநாம் ஆசைப்படுவார் – அன்று காலை என் சகோதரியின் வீட்டில் காலை டிபன் – ரவா தோசை. தோசையை என் அம்மாதான் வார்த்தார். பொன் நிறத்தில் முறுகலாக பரிமாறப்பட்ட ரவாதோசைகளைப் பார்த்து குழந்தையின் குதூகலத்தோடு வியந்து வியந்து பாராட்டி சாப்பிட்டார் ஆத்மாநாம். சாப்பிட்டப்பின் நானும் அவரும் மாமரத்தின் கீழ் உட்கார்ந்து கொண்டோம். அப்போதுதான் ஆத்மாநாம் பத்து நாட்களுக்குமுன் தான் தற்கொலை முயற்சி செய்துகொண்டதைப் பற்றி தணிந்த குரலில் கூறினார். நான் அதிர்ந்து போனேன். எதனால் தான் தற்கொலை முயற்சியை மேற்கொள்ள நேர்ந்தது என்பதற்கான காரணங்களையும், சூழ்நிலைகளையும் விபரமாக எழுதியிருப்பதாகக்கூறி ஆத்மாநாம் மடிக்கப்பட்ட ஒரு கடிதத்தை என்னிடம் தந்தார். “தனியாக அப்புறம் படியுங்கள்,” என்றார் – அன்று நான் அவரிடம் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கொண்டிருந்தேன். தற்கொலை முயற்சி மட்டும் மீண்டும் ஒருமுறை எந்தச் சூழ்நிலையிலும் அவர் மேற்கொண்டு விடலாகாதுயென்று அவரிடம் உருக்கத்துடன் சொன்னேன். தற்கொலை, வன்முறை, விபத்து போன்றவற்றால் மரணத்திற்குள்ளாகிற ஆன்மா சில கொடிய தளங்களில் அல்லல்பட்டு அலைந்தாக நேரிடும். அவை தாங்க முடியாத குரூரமானவை. எந்த முயற்சியும் இல்லாமல் பிரபஞ்சவெளியின் பற்பல புலப்படாதஉள்தளங்களை காணுகிற பார்வைக் குவிப்பின் புள்ளி 1982 ஆம் வருடத்தில் இருந்து என்னுள் திறந்து காலமற்ற அநேக காட்சிகளை எனக்குக் காட்டிக்கொண்டிருந்தது. நான் சொன்னவற்றையெல்லாம் ஆத்மாநாம் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆயினும் அவருடைய வாழ்க்கை தற்கொலையில்தான். ஆத்மாநாம் இறந்து சில மாதங்களுக்குப் பின் கவிஞர் பிரம்மராஜன் ஆத்மாநாமை நினைவு கூர்ந்தும், ஓர் அஞ்சலியாகவும் சிறிய நூல் ஒன்றை வெளியிட்டார். ஆத்மாநாம் பற்றி குறிப்பும் ஒன்றும் அதில் எழுதியிருந்தார். ஆத்மாநாம் வாழ்க்கை மீது எந்தப் புகாரும் இன்றி தற்கொலை செய்துகொண்டார் என பிரம்மராஜன் கருத்துச் சொல்லி இருந்தார் – அது பிழையான கருத்து. ஆத்மாநாமின் தற்கொலைதான் வாழ்க்கையைப் பற்றிய அவரின் கடுமையான புகார். கடைசிப் புகார்..புகார்களுக்கு உரிய கடின வாழ்க்கையை தொடர முடியாமல் போனதில்தான் தற்கொலை என்ற முடிவை அவர் மேற்கொள்ள வேண்டியதாகி விட்டது. அதுதான் அவலம். அப்படியொரு அவலத்திற்கு உட்படுத்திக் கொள்வதற்கான கொடிய வீழ்ச்சிகளையோ, தாங்கிக்கொள்ள முடியாத பேரிழப்புகளையோ ஆத்மாநாம் சந்தித்ததில்லை. சிறு சிறு சரிவுகள் ஏற்பட்டன. சின்னச் சின்ன ஏமாற்றங்கள் வந்தன. அதையே ஆத்மாநாமால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அத்தனை மிருதுத் தன்மை கொண்டது அவரின் மனம். சுக்கல் சுக்கலாக உடைந்து போனது அதனால்தான். 1979 ஆம் வருடம் இறுதி மாதங்களில் மனச்சிதைவின் முதல் தாக்குதல் அவரில் ஏற்பட்டது. அவருக்கு ஏற்பட்ட மனச்சிதைவின் அடிப்படைக் காரணங்களாக மனோதத்துவ டாக்டர்கள் தெரிவித்தவை வெறும் தர்க்க ரீதியானவை. ஆத்மாநாமின் குடும்பத்தினர் தெரிவித்த அபிப்பிராயங்கள் மேலோட்டமான ஊகங்கள்தான். ஆத்மாநாமின் மனமையத்தை அவர்கள் கண்டுணர்ந்ததே இல்லை. ஆத்மாநாமின் ஆளுமையின் முக்கியமான தளங்களை அவர்கள் சிறு இழைகூட அறிந்திருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லலாம். ஆத்மாநாமின் மரணத்திற்குப் பிறகு தமிழ் பத்திரிகைகள் சிலவற்றில் சில இலக்கிய நண்பர்கள் அவரைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்தவற்றைச் சொல்லி கட்டுரைகள் எழுதியிருந்தார்கள். அவற்றையெல்லாம் வாசித்த ஆத்மாநாமின் சகோதரர், “அவன் (ஆத்மாநாம்) இப்படியெல்லாம் இருந்திருப்பான் என்று எங்களுக்குத் தெரியவே தெரியாது,” என்று சொல்லி இருந்தார். சத்தியமான வார்த்தை இது. மிக அந்தரங்கத்தில் ஆத்மாநாம் யார் என்ற உண்மை அவர்களுக்குத் தெரியாது. எதனால் அவருக்கு அத்தனை கடுமையான மனச்சிதைவு ஏற்பட்டது; எந்தக் காரணத்தால் தற்கொலை செய்துகொண்டார் என்ற இரண்டு கேள்விகளுக்கான பதில்கள் – இன்றுவரை நான் மட்டுமே அறிந்தவை. இதில் எனக்கு இரண்டாவது அபிப்பிராயம் கிடையாது. என்னிடம் மட்டுமே ஆத்மாநாம் அவரின் மிக மிக அந்தரங்க வாழ்வின் சில சம்பவங்களை வெளியிட்டுப் பகிர்ந்துகொண்டார். அவருடைய அன்றாட வாழ்க்கை அந்த விகிதங்களில்தான் கழிந்தது. ஆத்மாநாம் எங்கே வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் பார்க்கவும் பேசவும் போவார். காலையில் இருந்தே சென்றுகொண்டு சந்தித்துக்கொண்டு இருப்பார். ஆனால் ஒரு தினத்தில் அவர் கடைசியாக வந்து சந்திக்கும் நபர் – நான்தான். அப்புறம் நானும் அவரும் சேர்ந்து எங்கேயாவது கிளம்பிப் போனாலும் போவோம். போகாவிட்டாலும் இல்லை. என்னைச் சந்தித்தபின் யாரையும் பார்ப்பதற்குச் செல்வதில்லை. நானும் அவருமாக பேசிக்கொண்டிருப்போம். எங்கள் பேச்சில் பெரிய இலக்கிய விசாரம் ஏதும் இருக்காது.ஒருநாள் அவரின் அன்புக்குரியவள் முதல் முறையாக பிரியத்துடன் அவருடைய கையில் கிள்ளி வைத்துவிட்டாள். அவள் கிள்ளிய அரைமணி நேரத்தில் ஆத்மாநாம் என் அறையை நோக்கிப் புறப்பட்டு விட்டார். எதற்காக அவள் கிள்ளி வைத்தாள் என்பதை என்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளத்தான் அந்த அவசர வருகை …! – எங்களுடைய நட்பின் மையம் இதுதான். சில நேரங்களில் நான் படுத்துத் தூங்கிக்கொண்டிருப்பேன். அவர் சிகரெட் புகைத்தபடி மௌனமாக கால்களை நீட்டியவாறு உட்கார்ந்திருப்பார். என் தூக்கம் அவரை தனிமைப் படுத்தாது. சில நேரங்களில் அன்புடன் கோபித்துக் கொள்வார். “ராட்சஸ், வெளியே உலகம் ஜெட் மாதிரி இயங்கி போயிண்டு இருக்கு.. நீங்க இப்படி தூங்கிண்டு இருக்கீங்களே..” என்பார். ஒருநாள் இரவு பத்து மணியாகி விட்டது. மழை லேசாக தூறிக் கொண்டிருந்தது. அது 1979ஆம் வருஷத்தின் June மாத இறுதி. நான் விளக்குகளை அணைத்துவிட்டுப் படுத்துவிட்டேன். தூக்கம் புலன்களில் கவிந்து கொண்டிருந்தது. ஆத்மாநாம் வந்து கதவைத் தட்டினார். சில வினாடிகளுக்குப் பிறகு நான் எழுந்து விளக்கைப் போட்டு அறைக் கதவைத் திறந்தேன். “வாங்க, பைலட் தியேட்டர்ல நல்ல இங்கிலிஷ் படம் ஒண்ணு காட்டறான்.. நாலைஞ்சு நாள்ள முடியப் போகுது..கௌம்புங்க போலாம்..” -ஆத்மாநாம் அவசரமாக சொன்னார். “மணி இவ்வளவு ஆயிடுச்சே..” என்றேன். “மழை வேற தூறிண்டு இருக்கு..” நான் சிறிது தயக்கத்துடன் சொன்னேன். “மெயின் பிக்ச்சர் ஆரம்பிச்சிருக்காது..மழை பெரிசா ஒண்ணும் இல்லை. பைலட் தியேட்டர் இதோதானே இருக்கு..அஞ்சு நிமிஷத்ல போயிடலாம்..” ஐந்தாவது நிமிடம் அறைக் கதவை பூட்டி நாங்கள் கிளம்பி விட்டோம். மழை நொசநொசவென்று தூறிக்கொண்டிருந்தது. நான் பின்னால் உட்கார்ந்துகொள்ள ஆத்மாநாம் மோட்டார் சைக்கிளை கிளப்பினார். தெருக்கள் மழையால் ஒரு மாதிரி சொத சொதவென்று இருந்தன. ஆத்மாநாம் கொஞ்சம் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தினார். ராயப்பேட்டை மணிக்கூண்டுக்கு இடதுபுறம் மோட்டார் சைக்கிள் வேகமாக திரும்பியது. எதிரில் லாரி ஒன்று மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. ஆத்மாநாம் சட்டென மோட்டார் சைக்கிளை இடது பக்க சாலை ஓரமாக திருப்பினார். மோட்டார் சைக்கிள் மழை நீரின் சொதசொதப்பில் பளீரென சுழன்று ஓரத்தில் சேதப்பட்டு உருண்டு கிடந்த கனமான சிமிண்ட் குப்பைத்தொட்டியில் மோதி சாய்ந்தது. ஆத்மாநாம் சட்டென தாவி விலகி கீழே விழாமல் நின்றுகொண்டார். கிட்டத்தட்ட குப்பைத்தொட்டிக்குள்ளேயே நான் புகுந்து விழுந்து விட்டிருந்தேன். என் இடது தோளின் மேல் மோட்டார் சைக்கிளின் ஹேண்டில்பார் பலமாக தாக்கி என் தோள் மேலேயே விழுந்து விட்டிருந்தது. குப்பைத் தொட்டியின் துருத்தியபடி இருந்த நீண்ட இரும்புக் கம்பி என் இடது கையின் மேல் பகுதியை கீறி சதையை பிய்த்து ரத்தக் காயமாக்கி விட்டது. Oh, God, Oh, God, என்று ஆத்மாநாம் செய்வதறியாமல் கத்தினார். நான் கைகளை ஊன்றி எழுந்துகொள்ள முயன்றேன். முடியவில்லை. இடதுகை என் கட்டுப்பாட்டில் இல்லை..வெறும் தொங்கலாக ஊசலாடியது. “இடது கையை ஊண முடியலை..” என்றேன். நான் எழுந்துகொள்ள ஆத்மாநாம் உதவ வேண்டியிருந்தது. “என் சட்டையின் இடதுகையின் மேல் பகுதி ரத்தமாக இருந்தது. “இடது கைக்கு ஏதோ ஆயிடுச்சி,” என்றேன். “வாங்க – ராயப்பேட்டா ஆஸ்பிட்டல் பக்கத்லதான் – அங்கே போயிருவோம்,” என்றார் ஆத்மாநாம். அவர் மோட்டார் சைக்கிளை தள்ளியபடியே வர நான் அவருடன் மெல்ல நடந்தேன். மழைத்தூறல் நிற்காமல் இருந்தது. ராயப்பேட்டை மருத்துவமனைக்குள் நுழைந்தபோது தூரத்தில் பைலட் தியேட்டரின் விளக்குத் தெரிந்தது. ஜனசந்தடி இல்லாத மருத்துவ மனைக்குள் இருந்து 45 நிமிடங்களுக்குப் பிறகு நானும் ஆத்மாநாமும் வெளியில் வந்தோம். தேவையான சிகிச்சைகள் எனக்குத் தரப்பட்டிருந்தன. என் இடது பக்க தோள்பட்டை எலும்பு அதன் இடத்தில் இருந்து பெயர்ந்து கீழ்நோக்கி இறங்கிப் போயிருந்தது. அதன் மத்திய பகுதியில் மெல்லிய கீறலும் ஏற்பட்டிருந்தது. அதற்கான கட்டுகளை மிக நேர்த்தியாக போட்டிருந்தார்கள். இருபது நாட்களுக்குப் பிறகுதான் கட்டுகளை அவிழ்க்க வேண்டும். அதுவரை இடது கையை உபயோகிக்க முடியாது. கையை அசைக்கக்கூட முடியாதபடி கட்டு இருந்தது. மருத்துவமனையில் என்னைச் சோதித்த டாக்டர் ஒரு பெண். என் பெயரையும் வயதையும் கேட்டார். சொன்னேன். குறித்துக் கொண்ட டாக்டர் என்னுடைய மாத வருமானம் என்னவென்று கேட்டார். இந்தக் கேள்வி நான் எதிரேபாராதது. எனக்கு ஏது வருமானம்? பணம் சம்பாரிப்பதற்காக எந்த வேலையிலும் ஈடுபட்டிராத நான் என் மாத வருமானமாக என்ன சொல்ல முடியும்? அதனால் சில வினாடிகள் பதில் சொல்லாமல் வெறுமே முழித்தேன். பின் என் மாத வருமானம் 750 ரூபாய் என்று சொல்லி வைத்தேன். அதையும் குறித்துக்கொண்ட டாக்டர் எக்ஸ்ரே மற்றும் சிகிச்சைகளுக்காக 25 ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும் என்றார். இப்போது ஆத்மாநாம் குறுக்கிட்டார். “அரசாங்க மருத்துவ மனையில் எல்லாம் ப்ரீதானே?” என்று டாக்டரைப் பார்த்துக் கேட்டார். “மாத வருமானம் 750 ரூபாய் என்று இவர் சொன்னார். அதனால் சிறிது பீஸ் சார்ஜ் பண்ணி இருக்கிறோம்..ஆஸ்பிட்டலின் நடைமுறைதான் இது..” என்றார் டாக்டர். டாக்டரின் வார்த்தை ஆத்மாநாமுக்கு ஏற்புடையதாக இல்லை. “இவருக்கு வருமானமே கிடையாது. சும்மா 750யென்று சொன்னார்,” என்றார். “நானா இவரை 750யென்று சொல்லச் சொன்னேன்?” – டாக்டர் “வருமானம் 250யென்று சொல்லியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” ஆத்மாநாம் கேட்டார். “இந்தக் கேள்விக்கு என்னால் பதில் தர முடியாது. கட்டணத்தை நீங்கள் செலுத்தினால் சிகிச்சைகள் தருவார்கள்..” டாக்டர் இப்படிச் சொன்னபிறகும் ஆத்மாநாம் இரண்டொரு கேள்விகளை அவருக்கு உரித்தான மென்மையான தொனியில் கேட்டார். அவரின் கேள்விகளுக்கு டாக்டர் பதில் சொல்லவில்லை.டாக்டரின் மௌனம் ஆத்மாநாமின் முகத்தைச் சுருங்க வைத்தது. கட்டணத்தை அவரே கட்டினார். சிகிச்சைகள் முடிந்து இருவரும் வெளியில் வந்தோம். ஆத்மாநாமின் மனம் சமாதானமடையமலேயே இருந்தது. நான் மட்டும் ஒரு ஆட்டோவில் ஏறிக்கொள்ள ஆத்மாநாம் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தார். மழை தூறிக்கொண்டிருந்தது. சில நிமிடங்களில் என் அறையை அடைந்தோம். அறைக் கதவை ஆத்மாநாம் திறந்தார். ஆயாசத்துடன் கட்டிலில் அமர்ந்தேன். இடது தோள் பகுதி பூராவும் வலி கடுமையாக இருந்தது. ஆத்மாநாம் திரும்பத் திரும்ப மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்தார். குற்ற உணர்ச்சியில் புலம்பியவாறே இருந்தார். இரவு எத்தனை மணி ஆனாலும் வீட்டுக்கு வந்து விடுவதாக 12 1/2 மணியளவில் அம்பத்தூருக்குக் கிளம்பி விட்டார்…மறுநாள் காலை 10 மணிக்கு மறுபடியும் என்னைப் பார்க்க கிளம்பி வந்துவிட்டார். புதிய உடைகளில் வந்திருந்தாலும் அவரின் முகத்தில் வருத்தமும் பதட்டமும் அப்படியே இருந்தன. நடந்த விபத்தைப் பற்றி வீட்டில் சொன்னதும் ஆத்மாநாமின் அம்மா அவரை மிகவும் கோவித்துக்கொண்டிருக்கிறார். படுத்து தூங்கிட்டு இருந்த மனுசனை அழைச்சிட்டுப் போய் இருக்கிறார். ஆஞ்சநேயரை துதி செய்கிற ஸ்லோகங்கள் அடங்கிய சின்ன புத்தகம் ஒன்றை என்னிடம் கொடுத்து அதை வாசிக்கும்படி ஆத்மாநாமின் அம்மா எனக்கு யோசனை கூறி அனுப்பி இருந்தார். நான் இந்த விபத்தின் வலியால் பல நாட்கள் கஷ்டப்பட்டது உண்மை. அதுவும் தனிமையான லாட்ஜ் வாழ்க்கையில் அந்த சிரமங்கள் பகிர்ந்து கொள்ள முடியாதவை. இத்தனைக்கும் அப்போது பெரம்பூரில் என் சகோதரி இருந்தாள். அவருடைய வீட்டில் போய் இரண்டு நாட்கள் மட்டுமே என்னால் தங்கியிருக்க முடிந்தது. அந்த நிலையிலும் மெரீனா கடற்கரையின் அலைகளின் ஓரத்தில் போய் சில நிமிடங்களாவது நிற்காமல் இருப்பது பெரும் தனிமை உணர்வைத் தந்ததால் திருவல்லிக்கேணி அறைக்குத் திரும்பிவிட்டேன். இந்த விபத்து வேறு எந்த விதத்திலும் என் மனதில் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கவில்லை. ஆனால் ஆத்மாநாமின் விஷயம் அது இல்லை. அநியாயமாக என்னை காயப்படுத்தி விட்டதாக அவருடைய மனம் அவரை குற்றம் சாட்டிக்கொண்டே இருந்தது. அதற்காக அவர் அவரையே கடிந்து கொண்டார். கோபித்துக்கொண்டார். இது அவரின் மிருதுவான மனநிலையிலன் மாற்றிக்கொள்ள முடியாமலே இருந்த இயல்பு. எல்லா விஷயத்திலும் அவருடைய மனநிலையின் இய்ககம் இந்த மிருதுத்தன்மையையே மையமாகக் கொண்டிருந்ததால் சிறிய ஏமாற்றமே பெரும் இழப்புக்குள்ளாகிவிட்ட அளவற்ற துயரங்களை அவரிடம் ஏற்படுத்தியது. சின்னச் சின்ன சரிவுகளே கொடிய அதலபாதாளத்தில் விழுந்துவிட்ட நடுக்கத்தை உண்டு பண்ணியது. 1979 ஆம் வருஷத்தின் இறுதி மாதங்களில் ஆத்மாநாம் கடும் மனச்சிதைவுக்கு ஆளாகி சிகிச்சைக்காக மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியதாயிற்று. சமாதானப் படுத்திக்கொள்ளவே முடியாத துர்பாக்கியமான சம்பவங்கள் அவை. முதலில் வேறொரு மனநல மருத்துவ நிபுணரிடம் ஆத்மாநாமை அவரின் குடும்பத்தினர் அழைத்துப் போனார்கள். ஆத்மாநாமுக்கு அந்த நிபுணரிடம் செல்ல விருப்பம் இல்லை. டாக்டர் சாரதா மேனனிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளவே விரும்பினார். அந்த வருடங்களில் சாரதா மேனன் இந்தியாவின் குறிப்பிட்டுச் சொல்கிற மனநல மருத்துவ நிபுணர்களில் முக்கியமானவர். அந்தச் செய்தி ஆத்மாநாமின் அறிவில் ஆழமாய்ப் பதிந்திருந்தது. அவரின் விருப்பப்படி சாரதா மேனனிடமே ஆத்மாநாமின் குடும்பத்தினர் அவருக்கான சிகிச்சையை மேற்கொண்டார்கள். அவரைப்போல் கடுமையான மனச்சிதைவுக்கு உள்ளான வேறொரு எந்த மனிதனாவது தனக்கு சிகிச்சை தருவதற்கான மனநல மருத்துவ நிபுணரை குறிப்பிட்டு தேர்ந்தெடுத்திருப்பாரா? சந்தேகம்தான்.ஆத்மாநாமுக்கு மனச்சிதைவின் முதல் தாக்குதல் நேரிட்டபோது நான் விருதுநகரில் இருந்தேன். வேறொரு விதத்தில் எனக்கு அது ஒரு விபரீதம் குறுக்கிட்டிருந்த நேரம். விருதுநகரில் என் சித்தியின் 23 வயது மகன் மிக மோசமான மனச்சிதைவுக்கு உள்ளாகி யாராலும் எதிர் நோக்க முடியாத வன்முறைகளில் உக்ரம் பெற்றிருந்தாôன். விருதுநகரில் என் பெற்றோர்களையும் தங்கைகளையும் தவிர நட்பும் உறவும் நான் கொண்டிருந்தது அந்த சித்தியின் மகனிடம் மட்டும்தான். வேறு எந்த உறவினர்களிடமோ; என் சமூகத்தினருடனோ எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. அந்த மனிதர்களிடம் இருந்து என்னுடைய 24 வயதிலேயே அந்நியப்பட்டு நான் விலகி வந்து விட்டேன். இன்றைய வருடத்தை கணக்கிட்டால் எனக்குள் இந்த விலகல் ஏற்பட்டு நாற்பது வருடங்களாகி விட்டன. என் குடும்பத்தினரை தவிர்த்து எனக்கு அந்த ஊரில் இருந்த ஒற்றை மனிதன் என் சித்தியின் சுசீந்திரன் என்ற மனிதன்தான். பூட்டப்பட்டிருந்த பெரிய கனத்த காட்ரேஜ் பீரோவை சாவியைக் காணாமல் கடப்பாரையை எடுத்து வந்து உடைத்து ஆவேசத்துடன் திறக்கும் பயங்கர வன்முறைக்குக் கொதித்துப் போகிற அளவுக்கு மனச்சிதைவு அவனைத் தாக்கியது. அப்போது அவன் என்ஜீனியரிங் படிப்பில் கடைசி வருடம் படித்துக்கொண்டிருந்தான். அடிப்படையில் ஆத்மாநாம் போலவே அவனும் மென்மையானவன். நேர்மையானவன். மிகவும் சாந்தமானவன். பெரிய வித்தியாசம் என் சித்தி மகனின் உடல் எடை. கரிய நிறத்தில் 120 கிலோ இருப்பான். ஏற்பட்டிருந்த மனச்சிதைவில் மதம் பிடித்த ஒரு யானையைப்போலவே நிலை கொள்ளாத கொந்தளிப்பில் அவனின் உடம்பும் மனதும் திமிறி ஆடின. அவனில் நான் பார்த்த அந்தச் சிதறல் என்னைக் கதி கலங்க வைத்துவிட்டது. அவனின் உக்ரத்தை எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. யாராலுமே அந்தத் தருணத்தை கையாளும் வழி தெரியவில்லை. அவனைக் கட்டுப்படுத்துதல், சிகிச்சைகள் தருதல், சிகிச்சையின் எதிர்விளைவுகளில் அவனை கண்காணித்தல்…போன்ற எல்லாமே யுத்தகளத்தில் என்னை நிறுத்தினாற்போல இருந்தது. கிட்டத்தட்ட நாற்பது நாள் யுத்தத்தில் துவண்டு நிலை குலைந்து போயிருந்தது என் மனம்.அந்த அடங்க மாட்டாத களைப்புடன் சென்னை திரும்பினேன். சென்னையில் ஆத்மாநாம் மனச்சிதைவுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி காத்திருந்தது. என் மனம் ஒரு மாதிரியாக பீதியடைந்து விட்டது. ஆத்மாநாமுக்கு நேர்ந்த மனச்சிதைவு மனோதத்துவ ரீதியில் எனக்கு இரக்கம் இல்லாத சவாலாக இருந்தது. விபத்து நடந்த ஸ்தலத்தைப் பார்த்தாலே அதிரும் என் மனத்தன்மை ஆத்மாநாமைப் போய் பார்க்கப் பயந்தது. தயங்கியது. ஆயினும் நான் போய்த்தான் ஆக வேண்டும். பார்த்துத்தான் ஆக வேண்டும். நான் தனியாகத்தான் கிளம்பினேன். புரசைவாக்கத்தில் இறங்கி அந்த தனியார் மருத்துவமனையை கேட்டு விசாரித்தபடி மிகமிக மெதுவாக நடந்தேன். மருத்துவமனையின் முதல் மாடியில் ஆத்மாநாம் இருந்தார். குறுகலான படிக்கட்டுகளில் ஏறி முதல் மாடியை அடைந்தேன் – நேராக நீண்ட வராந்தா இருந்தது. அதில் வரிசையாக அறைகள். கடைசி அறையின் வெளியில் வராந்தா கம்பி வலைகளால் மறைக்கப்பட்டிருந்தது. அதேபோல் முதல் அறை ஆரம்பிக்கும் இடத்திலும் கம்பி வலையின் அகலமான மறைப்பு இருந்தது. அதன் மையத்தில் சிறிய கதவு சாத்தப்பட்டு பூட்டு தொங்கியது. அதன் அருகில் ஒரு காவலாளி அமர்ந்திருந்தார்.இரண்டாவது அறையின் முன் வராந்தாவில் ஆத்மாநாம் ஒரு ஈஸிசேரில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தார். வராந்தாவின் எதிர்புறம்பார்க்கும்படியாக வானவெளி தெரிந்தது. ஆனால் ஏறி குதித்து விடாதபடி அங்கும் கம்பி வலைகள் பொருத்தப்பட்டிருந்தன. நான் தூரத்தில் நின்றவாறு சில வினாடிகள் ஆத்மாநாமைப் பார்த்தபடி இருந்தேன். என் மனம் உள்ளுக்குள் கேவி தத்தளித்தது. காவலாளியிடம் ஆத்மாநாமின் பெயரைச் சொன்னேன். உடனே அவர் எழுந்து நின்று பூட்டைத் திறக்க தயாரானார். அந்தச் சின்ன சப்தத்தில் திரும்பிய ஆத்மாநாம் ஈஸிசேரில் இருந்து பளீரென எழுந்து நின்றார். அவர் நின்ற இடத்தில் இருந்து வலைக்கதவு பன்னிரெண்டு அடி தூரத்தில் இருந்ததாகச் சொல்லலாம். ஆத்மாநாம் கதவை நோக்கி பாய்ந்தோடி வந்தார். ஒருக்களித்து நின்று அவரின் வலது காலை நான்கு அடி உயரத்ததுக்கும் மேலாகி உயர்த்தி வலைக்கதவை உத்வேகத்துடன் எட்டி உதைத்தார். அவர் உதைத்த வேகத்தில் அகலமான அந்தப் பெரிய வலைப் பகுதியே ஆடி அதிர்ந்தது. ஆத்மாநாம் காவலாளியிடம் கத்தினார். “சீக்கிரமா கதவைத் திறய்யா..நான் அன்னிக்கே உன்கிட்டே சொல்லியிருக்கேனே…விருதுநகர்ல இருந்து என் ப்ரண்ட் வருவார். கதவைத் திறந்து வைன்னு…இவர்தான் அது. திற கதவை…”என்னைப் பார்த்துவிட்ட பரவசத்தில் கைகளாலும் கம்பிவலையை பிடித்துக் குலுக்கினார். அவருடைய உணர்வு மேலீடுகளைப் பார்த்து காவலாளி கதவைத் திறக்க யோசித்தார். “திறய்யா..சீக்கிரம் திற..” ஆத்மாநாம் காவலாளியை அவசரப் படுத்தினார்.. அமைதியான நிதானமான சிறிது சங்கோஜமான ஆத்மாநாமின் சிதைந்துப் போயிருந்த தோற்றத்தை ஏற்கனவே விருதுநகரில் கதிகலங்கி விட்டிருந்த என் மனம் தாங்கிக்கொள்ளும் சக்தியை இழந்திருந்ததால் கட்டுப்படுத்த முடியாத அழுகை வெடித்துவிட்டது. கம்பி வலைக்கு அப்பால் இருந்து அதே பரவசத்துடன் சப்தமான குரலில் எனக்கு ஆறுதல் சொன்னார். “அழாதீங்க..எனக்கு ஒண்ணும் ஆகலை. சீக்கிரமா சரியாயிடும்.” அந்த முதல் சந்திப்புக்குப் பிறது மீண்டும் ஒரே ஒரு முறை மட்டுமே நான் அவரைப் பார்க்க மருத்துவமனைக்குப் போனேன். ஒரே நேரத்தில் எனக்கு மிகவும் வேண்டிய இரண்டு மேன்மையானவர்களுக்கு ஏற்பட்ட மனச்சிதைவு என் உடம்பையும் மனதையும் சக்கையாக்கி விட்டது. ஒரு நிமிட தூக்கத்திற்குக்கூட என் உடம்பு உட்படவில்லை. உச்சந்தலையில் ஒரு கொதிப்பு. வலி. எனக்கும் மனச்சிதைவு ஏற்பட்டு விடுமோ என்ற பீதி நினைப்பில் ஒரு ஜவ்வுபோல ஒட்டிக்கொண்டது. சிறு சிறு உடல்நலக்குறைவு வரும்போது சிகிச்சைப் பெற்றுக்கொள்கிற டாக்டரிடம் தாமதிக்காமல் போனேன். விஷயத்தைச் சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட டாக்டர் சொன்னார்: “உங்கள் நண்பரை ஆஸ்பிட்டலில் போய்ப் பார்க்கவே பார்க்காதீர்கள்.. உங்களுடைய மனம் தாங்கவில்லை அதை. மனநோயளிகளை சந்திப்பதும் பராமரிப்பதும் எல்லோருக்கும் சாத்தியமாகிற விஷயம் கிடையாது. உங்கள் நண்பரை டாக்டர்கள் கவனித்துக்கொள்வார்கள். குடும்பத்தினர் பராமரித்துக்கொள்வார்கள். அதற்கும் மேல் உங்கள் நண்பரை கடவுள் பாதுகாக்க நாம் பிரார்த்தனை செய்வோம். நீங்கள் போகாதீர்கள். அது தப்போ குற்றமோ இல்லை. நான் உங்களுக்கு ஒரு வாரத்திற்கான தூக்க மாத்திரைகளும் சில எலிவேட்டர் மாத்திரைகளும் எழுதித் தருகிறேன். வாங்கிச் சாப்பிடுங்கள்… அதற்கும் மேல் ஏதாவது பிரச்னை இருந்தால் நான் பார்த்துக்கொள்கிறேன். பயப்படாதீர்கள். உங்களுக்கு எதுவும் ஆகாது. கடந்த எட்டு வருஷமாக உங்களை நான் பார்த்து வருகிறேன்..எனக்கு உங்களைத் தெரியும்..” என் மனம் டாக்டரின் பேச்சில் சற்று அமைதியாயிற்று. அவர் எழுதித் தந்த மாத்திரைகளை வாங்கிக்கொண்டு ஒரு பாதுகாப்பு உணர்வுக்காக பெரம்பூரில் இருந்த என் சகோதரியின் வீட்டுக்குப் போய்விட்டேன். ஒரு வாரம் நான் அங்கேயே இருந்தேன். எனக்கு எதுவும் நேரவில்லை. தூக்க மாத்திரையின் விளைவாக ஒவ்வொரு நாளும் பன்னிரெண்டு மணி நேரம் தூங்கிக்கொண்டிருந்தேன். என் சகோதரியின் கணவரின் துணையும் பரிவும் மனப் பதட்டத்தையும் தனித்து சமனப்படுத்தி விட்டது. தூக்கத்திற்காக நான் மாத்திரைகள் சாப்பிட்டது அதுதான் முதல் தடவையும் கடைசித் தடவையும். சற்று கலைந்து போயிருந்த என் வலிமை மீண்டும் அதன் தன்மைக்கு நிமிர்ந்து கொண்டது. நான் திருவல்லிக்கேணி திரும்பி விட்டேன். ஆனால் நான் தொடர்ந்து மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்த ஆத்மாநாமைப் போய் பார்க்கவில்லை. சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பியதும் நண்பர்களுடன் சென்று பார்த்தேன். ஆத்மாநாம் எப்போதும்போல அவருடைய மென்மையான சிரிப்புடன் தெரிந்தார். ஆனால் 1979-ல் இறுதியில் அவரின் தோன்றிய மனச்சிதைவின் முதல் தாக்குதல் மீண்டும் மீண்டும் ஆத்மாநாம் வாழ்க்கையில் கொடிய நிழலாய் நச்சு அரவமாய் படமெடுத்தபடி தொடர்ந்துகொண்டே இருந்தது. அந்த விஷத் தீண்டலில் இருந்துமனநல மருத்துவத்தால் அவரை மீட்டெடுக்க முடியவில்லை. ஆத்மாநாம் வாழ்க்கை கிணற்று நீரில் மூழ்கியதில் முடிவு பெற்றது.என் சித்தியின் மகனின் வாழ்க்கை இதற்கு நேர் எதிராக முடிந்தது. உடம்பில் மண் எண்ணையை ஊற்றி நெருப்பிட்டுக்கொண்ட அதி உக்ர வெம்மையின் கருகி அவனின் உயிர் பிரிந்தது. இவர்கள் இருவரும் இறந்து இருபது வருடங்களுக்கு மேலாகி விட்டன. வாழ்க்கையில் மறக்கவே முடியாத சில ஜீவன்களில் இவர்களும் என் ஞாபகப் படிவுகளில் பெயர்த்துப் போடவே முடியாதவாறு உறைந்து கிடக்கிறார்கள். மேலும் மேலும் கூட இழப்புகள் வந்தன. அதேபோல் புதிய புதிய உறவுகளும் கைகோர்த்தன. வாழ்க்கை மட்டும் யாருக்காகவும் எதற்காகவும் தேக்கமுறாமல் ஆரம்பமும் முடிவும் இல்லாத பிரவாகமாய் புரண்டோடிக் கொண்டிருக்கிறது. என்னுடைய மிக நீண்ட அறை வாழ்க்கையின் போதும் நண்பர்கள் வந்து வந்து பேசிக்கொண்டிருப்பார்கள். இப்போது என் வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். என் எல்லா நண்பர்களும் என் மனைவிக்கும் நண்பர்கள். பேச்சுக்கள் இடைவெளி இல்லாமல் தொடர்கின்றன. பேச்சில் இலக்கிய ரசனையின் பகிர்தலும் உண்டு. ஆழ்ந்த ஆன்மீகத் தேடல்களின் தத்துவ விசாரங்களும் உண்டு. என் வீட்டுப் புத்தக வரிசையில் ஆதிசங்கரரும் உண்டு. ஸ்ரீ அரவிந்தரும் உண்டு. சியாமளா தண்டகமும் உண்டு. திருமுருகாற்றுப்படையும், வால்மீகியும் உண்டு. காளிதாசனும் உண்டு. ரமணரும் இருக்கிறார். உடையவர் ராமானுஜரும் இருக்கிறார். 18 ஆயிரம் சுலோகங்கள் கொண்ட பாகவதத்தை கடந்த மாதங்களில் இரண்டு முறை வாசித்தாயிற்று. ஜராசந்தனின் பிறப்பில் அடங்கியிருக்கும் ரகசியப் பிண்டம் மறைவாய் உணர்த்தும் சூட்சுமம் சிலிர்க்க வைக்கிறது -இவை அத்தனையையும் அள்ளிச் சுமந்தபடி வாழ்க்கை எந்தக் கனமும் இன்றி சுயேச்சையாகவே நகர்ந்துகொண்டிருக்கிறது. இலக்கியத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அப்பாற்பட்டு வீட்டில் ஒலிநாடாக்களின் இசைகளும் கேட்கப்படுகின்றன. கர்நாடக இசையும் ஹிந்துஸ்தானி இசையும் தணிந்த ஸ்தாயியில் கசிந்துகொண்டிருக்கின்றன. கேட்கின்ற சில சில இசைகள் ஆத்மாநாமை ஞாபகப்படுத்தும். எனக்கும் அவருக்கும் இடையில் இருந்த உறவில் இசை ரசனை மிக அழுத்தமான தளமாக இருந்ததை மறக்கவே முடியாது. நானும் நானும் ஆத்மாநாமும் இலக்கிய கூட்டங்களுக்குச் சென்றது மிகமிகக் குறைச்சல். இசை நிகழ்ச்சிக்களுக்குப் போனதுதான் அதிகம். நிஜத்தில் அவை எண்ண முடியாதவை. எம்.டி ராமநாதன், பாலமுரளி கிருஷ்ணா, மஹாராஜபுரம் சந்தானம், பட்டம்மாள், எம் எஸ் சாருமதி ராமச்சந்திரன், சேலம் ஜெயலஷ்மி, மணி கிருஷ்ணசாமி, எம்.எல்வி – போன்ற அந்தக் காலகட்ட மேதைகள் அனைவரின் சங்கீதங்களையும் கேட்பதற்கு நானும் ஆத்மாநாமும் சலிக்காமல் போயிருக்கிறோம். அந்த மாதிரி போகின்றபோது சில நேரங்களில் சம்பந்தப்பட்ட சங்கீத வித்வான்களை சந்தித்து ஒருசில நிமிடங்கள் அவர் பேசிக்கொண்டிருப்பார். இப்படி ஒருசில நிமிட சந்திப்புகளிலேயே எம்.டி ராமநாதனுடன் ஆத்மாநாமுக்கு நட்பு ஏற்பட்டிருந்தது. அவ்வப்போது ராமநாதனின் வீட்டுக்குப் போய் அவருடன் பேசிக்கொண்டிருப்பார். இரண்டு முறை ஆத்மாநாமுடன் எம்.டி ராமநாதனின் வீட்டுக்குப் போயிருக்கிறேன். ஆத்மாநாமைப் பார்த்ததும், “வாடா மது,” யென்று ராமநாதன் அவருக்கே உரித்தான தொனியில் அழைப்பார். அவருடைய அழைப்பில் ஆத்மாநாமிடம் அவர் கொண்டிருந்த வாஞ்சையின் அந்நியோன்யத்தை உணர முடியும். 1976-ஆம் வருடம் பிப்ரவரி மாதம். ஹிந்துஸ்தானி சங்கீத வித்வான் பர்வீன் சுல்தானாவின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. சென்னை சங்கீத ரசிகர்களின் மத்தியில் அப்போது பர்வீன் சுல்தானா மிகவும் பிரபலமாக இருந்தார். எனக்கும் பர்வீன் சுல்தானாவின் இசைமேல் பெரும் மோகமே இருந்தது. ஒருவித போதையை தந்திருக்கிறது. அவரின் ஆலாபனைகள். இரவில் அறை விளக்கை அணைத்துவிட்டு ப்ளேயரில் பர்வீன் சுல்தானாவின் இசைத்தட்டை ஒலிக்கவிட்டு இருளில் கிடந்த கணங்கள் ஒலியின் அரூப யாத்திரைப் பிரவாகமாய் என்னை ஏந்திச் சென்றிருக்கிறது. 1976 ஆம் வருட பிப்ரவரி மாத பர்வீன் சுல்தானாவின் இசை நிகழ்ச்சிக்கு ஆத்மாநாமும் நானும் செல்வதற்குத் தீர்மானித்திருந்தோம். நிகழ்ச்சி மாலை ஆறு மணிக்கு ஆரம்பம். அம்பத்தூரில் இருந்து என் அறைக்கு ஆத்மாநாம் நான்கு மணிக்கு வந்து விட்டார். உத்தேசித்திருந்தபடி ஐந்து மணிக்கு கிளம்பத் தயாரானோம் . அப்போது ஒரு வாரத்திற்கு முன்பு நான் வாங்கியிருந்த பர்வீன் சுல்தானாவின் பெரிய எல் பி இசைத்தட்டு ஒரு அழகுப்பொருள் போல என்னுடைய மர ஷெல்பில் முதன்மைப் படுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் பர்வீன் சுல்தானா இளமையின் வசீகரங்களோடு அழகிய நட்சத்திரமாக காட்சி அளித்துக்கொண்டிருந்தார். நிகழ்ச்சிக்குக் கிளம்பிய நிமிடம் ஆத்மாநாம் சட்டென அந்தப் புதிய இசைத்தட்டையும் எடுத்து அவருடைய பெரிய ஜோல்னா பையில் வைத்துக்கொண்டார். “இது எதுக்கு?” – நான் ஆச்சர்யத்துடன் கேட்டேன். “இருக்கட்டும்..முடிஞ்சா இதுல பர்வீன் சுல்தானாவோட ஆட்டோக்ராஃப் வாங்குவோம்,” என்றார் ஆத்மாநாம். எனக்கு இந்த மாதிரி விஷயங்களில் ஆர்வம் கிடையாது. அதனால், “ஆட்டோகிராஃப்பெல்லாம் வேண்டாம் மது. கூட்டத்ல எதுக்குப்போய் அவளைப் பாத்துக்கிட்டு..சங்கீதத்தை கேட்டுவிட்டு வந்திட்டே இருப்போம்..” “ச்சூ…சோம்பேறி…பேசாம நீங்க வாங்க..நான் அவகிட்ட ஆட்டோகிராஃப் வாங்கறேன்..” ஆத்மாநாமின் முடிவை என்னால் மாற்றமுடியவில்லை. இம்மாதிரியான செயல்கள் அவருக்கு வாடிக்கைதான். நிகழ்ச்சிக்கு இருவரும் கிளம்பிச் சென்றோம்..எப்போதும்போல பர்வீன் சுல்தானாவின் நாதவெள்ளம் அதற்கே உரித்தான தாளகதிகளில் சுழித்துக்கொண்டிருந்தது. இருபது நிமிட இடைவேளை அறிவிக்கப்பட்டது. ஆத்மாநாம் அவருடைய ஜோல்னா பையுடன் எழுந்து கொண்டார். “வாங்க அவளைப் பாத்திட்டு வந்திரலாம்,” என்றார். எனக்கு வழி கிடையாது. எழுந்து அவருடன் போனேன். உள் அரங்கத்திற்குள் செல்கிற வழியை நோக்கி ஆத்மாநாம் நடந்தார். மேடைக்குச் செல்கிற வழியின் கதவின் அருகில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். ஆத்மாநாம் இசைத்தட்டை அவரிடம் எடுத்துக்காட்டி விஷயத்தை சொன்னார். அந்த மனிதர் உள்ளே போய் இரண்டொரு நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்தார். எங்களை உள்ளே போகச் சொன்னார். உள்ளே சிறிது தூரம் நடந்து மற்றொரு பெரிய அறைக்குள் நுழைந்தோம். பர்வீன் சுல்தானா நின்றவாறு யாருடனோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். எனக்கு அது மகத்தான தரிசனம்! ஒருநாள் கூட நான் கற்பனை செய்து பார்த்ததில்லை. இத்தனை அருகில் அந்த மனுஷியைப் பார்ப்பேனென்று. சங்கீத உபாசனை அந்த மனுஷியின் தோற்றத்தில் பிரகாசமான ஒளியைப் பாய்த்திருந்தது. மனுஷியின் பார்வை எங்களை வரவேற்றது. ஆத்மாநாம் அவளுக்கு நமஸ்தே சொன்னார். நான் சொல்லவில்லை. மெய்மறந்த தரிசனத்தின் ஒடுங்கிப்போன மௌனத்தில் நான். ஆத்மாநாம் ஜோல்னா பையில் இருந்து இசைத்தட்டை எடுத்தார். பர்வீன் சுல்தானாவிடம் ஆங்கிலத்தில் சொன்னார் : “இந்த இசைத்தட்டு இவருடையது. இதில் நீங்கள் உங்களுடைய கையெழுத்திட்டுத் தரவேண்டும்…” உடனே பர்வீன் சுல்தானா புன்னகையுடன் எதிர்பாராத கேள்வியை ஆத்மாநாமிடம் கேட்டார்: “இசைத்தட்டு இவருடையது என்கிறீர்கள்..ஆனால் ஆட்டோக்ராஃப் நீங்கள் கேட்கிறீர்களே…” கேள்வியைக் கேட்டபிறகு பர்வீன் சுல்தானாவின் கண்கள் என்னை நோக்கின. ஆத்மாநாம் ஒரு மாதிரியாக திணறிப் போனார். அந்தக் கேள்வி ஏதோ ஒரு தடங்கல் போலாகி விட்டது அவருக்கு. பர்வீன் சுல்தானா – அந்தச் சில விநாடிகள்தான் -கம்பீரமாகக் காத்திருந்தார் – பதிலுக்காக. வழி தவறிவிட்ட தொனியில் ஆத்மாநாம் பதில் சொன்னார் : “உங்களுடைய கையெழுத்தும் அவருக்கும்தான் தேவை. அவர் சார்பாக நான் கேட்கிறேன். அவ்வளவுதான்..” “அப்படியானால் சரி. கொடுங்கள்..”பர்வீன் சுல்தானா இசைத் தட்டை வாங்கிக்கொண்டார். அவரின் அருகில் நின்றவர் உடனே பேனா கொடுத்தார். இசைத் தட்டின் பின்புறத்தில் “வித் லவ்” என எழுதி கையெழுத்திட்டார் பர்வீன். மீண்டும் வாய்க்கவே முடியாத அற்புத கணம் அது. மொத்த சூழலுமே மேற்கு அடிவான சூரியனாக தகதகத்தது. என்னுடைய மொத்த உணர்வுகளும் அந்த மனுஷிக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தது. மனுஷி கையெழுத்திட்டு மட்டும் தரவில்லை. ‘P’ என்ற எழுத்தின் மத்திய வெளியில் இரண்டு கண் மூக்கு வாய் வரைந்தார். வாயின் அமைப்பில் அந்த முகம் -அழுவது போலிருந்தது! Sஎன்ற எழுத்தில் இருக்கும் வெளியில் அதேபோல கண்கள் வாய் மூக்கு வரைந்தார். வாயின் அமைப்பு அந்த முகம் மலரச் சிரிப்பது போலிருந்தது. மறுபடியும் புன்னகைத்த மனுஷியிடம் இருந்து எதிர்பாராத கேள்வி என்னை நோக்கி, “இசைத்தட்டு உங்களுடையதுதானே?” “ஆம்,” என்றேன். “அப்படியானால் இதை உங்களிடமே தருகிறேன்..” சங்கீத உபாஸகியிடம் இருந்து இதற்கு மேலான ஒரு பரிசு ஏதாவது இருக்கிறதாயென்ன? என் இரண்டு கைகளாலும் இசைத்தட்டைப் பெற்றுக்கொண்ட போது ஆத்மாநாமின் முகம் வாடிச் சுருங்கிப் போய்விட்டது. அன்றைய மீதி நிகழ்ச்சியில் அவரின் மனம் லயிக்கவில்லை. சுருங்கிப்போன அவரின் முகம் சுருங்கியது சுருங்கியதுதான். “என்ன அவளுக்கு மேனர்ஸ தெரியலை..ரெக்கார்டை என்கிட்டதானே வாங்கினா..திருப்பி என்கிட்டதானே தரணும்!” திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டேஇருந்தார். பர்வீன் சுல்தானாவின் கையெழுத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார். P என்ற எழுத்திலும் S என்ற எழுத்திலும் வரையப்பட்ட முகங்களை கவனித்தார். பின் சொன்னார் : “P லெட்டர்ல சிரிக்கிற முகம் உங்களுடையதுபோல! S லெட்டர்ல இருக்கிற முகம் என்னோடது போல! ” நான் சட்டென ஆத்மாநாமின் கையைத் தொட்டேன்..”இதுக்குத்தான் ஆட்டோக்ராஃப்பெல்லாம் வேண்டாம்னு சொன்னேன்..” என்றேன். “இட்ஸ் ஆல்ரைட் ராம்மோஹன்..லைஃப்ல என்னோட பொசிஸன் இதான். உங்களோட பொசிஸன் இதான்..இன் ஏ வே எனக்கு உங்கமேல பொறாமையாத்தான் இருக்கு..அனா என்ன பண்ண முடியும்..ஐம் ஹெல்ப்லெஸ்…” அந்தச் சம்பவத்தின் தாக்கத்திலிருந்து சில நாட்களுக்கு ஆத்மாநாம் மீளாமலேயே இருந்தார். ஆத்மாநாமின் மாற்றமுடியாத ஆளுமை இது. பர்வீன் சுல்தானா கையெழுத்துப் போட்டுத் தந்த இசைத் தட்டு இன்றும் வீட்டு கண்ணாடி அலமாரியில் பார்வையில் படும்படி பாதுகாக்கப்பட்டு வருகிறது. என்னைப்பொறுத்தவரை அந்த இசைத் தட்டு நண்பன் ஆத்மாநாமின் சோகம் தோய்ந்த ஞாபகச் சின்னம் மாத்திரம் இல்லை..அது வேறொரு இம்சையான தருணத்தின் பிரத்யேக வரைபடமும்தான். இன்னும் ஒலி நாடாக்களின் சுழற்சியில் பர்வீன் சுல்தானாவின் ஆலாபனைகள் வீட்டில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன நானும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நண்பன் ஆத்மாநாம் இல்லை.(ஆத்மாநாம் பற்றி ஸ்டெல்லா புரூஸ் எழுதிய கட்டுரையின் இரண்டாவது பகுதி)

என் நண்பர் ஆத்மாநாம்

பகுதி 1ஆத்மாநாம் என்ற மதுசூதன் வாழ்க்கையில் முதல் முறையாக நான் சந்தித்தது திருவல்லிக்கேணியின் ஒரு தெரு முனையில். 1972 – ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை. மாலை நாலரை மணி இருக்கும். நானும் நண்பர் ஷர்மாவும் ஹோட்டல் ஒன்றில் டிபன் சாப்பிட்டுவிட்டு என் அறையை நோக்கி மெதுவாக நடந்துகொண்டிருந்தோம். கடை ஒன்றில் நின்று ஷர்மா சிகரெட் வாங்கிப் பற்ற வைத்துக்கொண்டிருந்தபோது, “ஹலோ ஷர்மா,” என்ற குரல் கேட்க திரும்பிப் பார்த்தோம், 20 வயது மதிக்கத்தக்க அழகிய இளைஞனாக ஆத்மாநாம் நின்று கொண்டிருந்தார். நானும், ஆத்மாநாமும் அதற்குமுன் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டதில்லை. எங்களுடைய முதல் சந்திப்பு அது. ஷர்மா எங்கள் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தார். அந்த நேரத்தில் நான் மூன்று சிறுகதைகள் மட்டுமே எழுதியிருந்தேன். ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த ஞானரதம் இதழில் பிரசுரமாயிருந்த என் ஒரு சிறுகதையை வாசித்திருப்பதாக ஆத்மாநாம் சொன்னார். நண்பர் மகா கணபதியைப் பார்ப்பதற்காக சென்றுகொண்டிருப்பதாகவும், இன்னொருமுறை திருவல்லிக்கேணி வரும்பொழுது என் அறையில் வந்து என்னைச் சந்திப்பதாகவும் சொல்லி ஆத்மாநாம் விடைபெற்றுக் கொண்டார். திருவல்லிக்கேணி பைக்கிராஃப்ட் சாலையில் எங்களின் இந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது. 1984 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் நானும் ஆத்மாநாமும் மௌன்ட் ரோட் அரசாங்க நூல் நிலையக் கட்டடித்தின் மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலக்கிய கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். நண்பர் ராஜகோபாலனும் எங்களுடன் வந்திருந்தார். கடுமையான அடிதடியாக மாறக்கூடிய அபாயத்தை நோக்கி அந்த இலக்கிய கூட்டம் சரிந்துகொண்டிருந்ததால், அங்கிருந்து நாங்கள் மூன்று பேரும் கூட்டத்தின் மத்தியிலேயே வேகமாக வெளியேறிவிட்டோம். டீ ஷாப் ஒன்றில் டீ சாப்பிட்டவாறு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பின் மெதுவாக நடந்தோம். ஆத்மாநாம் அம்பத்ததூர் செல்ல வேண்டும். நான் தியாகராயநகர். அதனால் நாங்கள் சர்ச்பார்க் கான்வென்ட் அருகில் ஆளுக்கொரு பஸ் ஸ்டாப்நோக்கிப் பிரிந்தோம். சில தினங்களில் ஆத்மாநாம் பெங்களூர் செல்லப் போவதாகவும் எப்போது மெட்ராஸ் திரும்புவேன் என்பதைச் சொல்ல முடியாதுயென்றும் கூறி விடை பெற்றார். எங்களுடைய கடைசிச் சந்திப்பு அதுவே. 1984 ஜøலை ஆறாம் தேதி பெங்களூரில் ஆத்மாநாம் காலமான செய்தி சிறு அஞ்சல் அட்டைச் செய்தியாக விருதுநகரில் இருந்த எனக்கு அறிவிக்கப்பட்டது. பன்னிரெண்டு வருஷங்களில் நானும் ஆத்மாநாமும் நாட்குறிப்பின்படி 1200 நாட்கள் சந்தித்திருக்கிறோம். நானும் அவரும் நண்பர்களாக இருந்தோம் என்று சொல்லிக்கொள்வது வெறும் மேலோட்டமான கூற்று என்பது என் அபிப்பிராயம். நட்பு என்ற தளத்திற்கு மேலான ஆழ்ந்த வெளியில் எங்களுடைய சந்திப்பு நிகழ்ந்துகொண்டிருந்தது. அறிமுகமான சில நாட்களிலேயே அதற்கான வெளி இயல்பாக உருவாகிக்கொண்டது. என்னை நான் தங்கியிருக்கும் லாட்ஜின் அறையில் வந்து சந்தித்துப் பேசுவதில் நாள் கிழமை நேரம் காலம் என்ற எந்தத் தடங்கல்களும் ஆத்மாநாமுக்கு இல்லாமல் இருந்தது மிகவும் குறிப்பிடும்படியானது. என்னைப் பார்ப்பதற்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் கிளம்பிச் செல்லலாம். இடையே உணவுவேளை வந்தால் என்னுடனேயே சாப்பிடலாம். ஆத்மாநாம் என்னைப் பார்க்க இரவு பதினொரு மணிக்குக்கூட மோட்டார் சைக்களில் வருவார். இரண்டுபேரும் கிளம்பி மௌண்ட்ரோட் புஹாரி ரூஃப் போவோம். டீ குடித்தவாறு அதிகம் பேச்சு இல்லாமலேயே கூட உட்கார்ந்திருப்போம். ஆத்மாநாம் ஜ்யூக் பாக்ஸில் காசு போட்டு பிடித்தமான பாட்டு எதையாவது அமைதியாக கேட்டுக்கொண்டிருப்பார். சில விஷயங்களில் நானும் ஆத்மாநாமும் நேர் எதிரான குணம் கொண்டவர்கள். நான் எதையும் திட்டமிட்டு செய்வேன். ஒரு புத்தகம் வாங்குவதென்றால்கூட நான் எந்தக் கடையில் போய் வாங்கலாம்; எந்தத் தேதியில் எந்த நேரத்தில் போய் வாங்க வேண்டும் என்பதையெல்லாம் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாகவே தீர்மானம் பண்ணி விடுவேன். ஆத்மாநாம் திடீரென்று “வாங்க போகலாம்,” என்று கிளம்புவார். மௌண்ட் ரோட், பாண்டிபஜார், பாரீஸ் கார்னர்; சில நேரங்களில் புரசைவாக்கம்கூட போவார். என்ன வாங்கலாம் என்ற தீர்மானம் – வீதிகளில் நடந்து கொண்டிருக்கும்போது தோன்றும். இசைத் தட்டுகள் விற்பனை செய்கிற கடைகளுக்குள் நுழைவார். பத்துப் பதினைந்து இசைத்தட்டுக்களை போட்டுக் காட்டச் சொல்லி கேட்பார். ராக், ஜாஸ், பாப் – என்று எந்தவித இசைத்தட்டாக இருந்தாலும் வாங்குவதற்காக தேர்வு செய்வார். சிலவேளைகளில் எனக்கும் ஒரு இசைத் தட்டு பரிசாக வாங்கித் தருவார். அவர் தேர்வு செய்யும் இசைத்தட்டு கேள்வியே பட்டடிராததாகக்கூட இருக்கும். பத்துப் பன்னிரெண்டு இசைத் தட்டுக்களை போட்டுக் காட்டச் சொல்லிவிட்டு எதையும் வாங்காமல் அவர் வெளியேறி விடுவதும் உண்டு. அந்த மாதிரி ஆத்மாநாம் வெளியேறும்போது ஏமாற்றத்துக்குள்ளாகும் கடை விற்பனையாளரின் முகம் போனபோக்கை அவர் வெளியேறிச் செல்கையில் குழந்தையின் குதூகலத்துடன் சொல்லிச் சிரிப்பார். பிடிக்காத பட்சத்தில் வாங்க வேண்டும் என்பது கட்டாயமில்லையென்று வாதிடுவார். நான் எதிர்வாதம் செய்வதில்லை – ஆயினும் நான் அந்த மாதிரி ஒரு நாளும் நடந்துகொள்வதில்லை. நானும் ஆத்மாநாமும் அடிக்கடி போகிற ஒரு இடம் – கன்னிமாரா ஹோட்டலில் இருக்கும் புத்தகக் கடை ஒன்றுக்கு. ரொம்பச் சின்ன கடை அது. தேர்ந்தெடுத்த புத்தகங்களை மட்டும்மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். அந்தக் கடையின் அமைப்பே ரம்மியமாக இருக்கும். அங்கேதான் நான் ஒருநாள் “ஜோன் பேஸ்” என்ற அமெரிக்க நாட்டுப்புறப் பாடகியின் சுயசரிதைப் புத்தகத்தை வாங்கினேன். ரொம்ப ரொம்பச் சின்னப் புத்தகம்தான் அது. ஆனால் அருமையான புத்தகம். இன்றும் என்னால் மறக்க முடியாத புத்தகம் அது. என்னிடமிருந்து அதை வாங்கிப்போய் படித்த ஆத்மாநாம் அவருக்காக மற்றொரு பிரதியை உடனே வாங்கி விட்டார்….ஒன்றே ஒன்று – அந்தப் புத்தகக் கடையில் மட்டும் ஆத்மாநாம் எதுவும் வாங்காமல் வெளிவருவதில்லை. எப்போதும் அந்தக் கடையில் புத்தகம் வாங்கியதும் கன்னிமாராவின் ரெஸ்டாரண்ட்டில் நானும் அவரும் காஃபி சாப்பிடுவோம். அந்த ரெஸ்டாரண்டின் காஃபியும் மறக்க முடியாதது. ஒருநாள் இரவு ஒன்பது மணியாக இருந்தது. இரவு உணவு ஆத்மாநாம் என்னுடன்தான் சாப்பிட்டிருந்தார். அதனால் அவசரமாகக் கிளம்பி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. சாவகாசமாக நாற்காலியில் சாய்ந்தவாறு என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். சட்டென ஞாபகம் வந்தவராக, “ராம்மோஹன் – கிளம்புங்க; எனக்கு ஒரு ஷர்ட் துணி வாங்கி வேண்டியிருக்கு; மௌண்ட் ரோடுல எங்கேயாவது வாங்கலாம்..”என்றார். இருவரும் மோட்டார் சைக்கிளில் கிளம்பிப் போனோம். மணி அப்போது ஒன்பது இருபது ஆகியிருந்தது. ஒரு கடைக்குள் நுழைந்தோம். சில நிமிடங்களில் கடையை மூடுவதற்கான அடையாளங்கள் தெரிந்தன. சிப்பந்திகள் சற்று சோர்வுடன் பார்த்தார்கள். மூடப்போகிற நேரத்தில் வருகிறார்களே என்ற ஆயாசம் அவர்களுடைய முகங்களில் இருந்தது. ஆத்மாநாம் துணிகளை எடுத்துக் காட்டச் சொல்லி பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு சிப்பந்தி மட்டும் உற்சாகம் இல்லாமல் துணிகளை எடுத்து காட்டிக்கொண்டிருக்க மற்றவர்கள் அவரவர் இடங்களில் வெறுமே நின்றார்கள். எல்லோருடைய கவனமும் ஆத்மாநாம் மேலேயே இருந்தது. பொதுவாகவே எந்தப் பொருளை வாங்கப் போனாலும் பார்த்தோம் வாங்கினோம் என்ற சமாச்சாரமெல்லாம் கிடையாது ஆத்மாநாமிடம். எடுத்து எடுத்து காட்டச் சொல்லிக்கொண்டே இருப்பார். அவசரமே இருக்காது. அன்றும் அதே மாதிரிதான். நிதானமாக ஒவ்வொரு துணியாக பார்த்துக்கொண்டேயிருந்தார். மேலும் மேலும் துணிகளை எடுத்துக்காட்டும் படியும் சொல்லிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு துணியைத் தேர்வு செய்தார். கடைப் பணியாளர் அந்தத் துணியில் ஆத்மாநாமுக்குத் தேவையான அளவை கேட்டு கிழித்தார். அவரிடம் ஆத்மாநாம் தான் எவ்வளவு பணம் தர வேண்டும்? என்று கேட்க பணியாளும் கணக்கிட்டுச் சொன்னார். ஆத்மாநாம் உடனே மணிபர்ûஸ எடுத்தார். அந்தத் துணிக்கான பில் தொகை அவரிடம் இல்லை. பணம் மிகவும் குறைவாக இருந்தது. ஷர்ட் பாக்கெட்; பேண்ட் பாக்கெட்; ப்ரீஃப் கேஸ் – எல்லாவற்றிலும் தேடினார். பணம் இல்லை. என்னிடம் இல்லை. கடைச் சிப்பந்தி பொறுமை இழந்து ஆத்மாநாமையே பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் ஆத்மாநாம் சிறிதுகூட பதட்டமடைந்துவிடவில்லை. “நோ ப்ராப்ளம்; செக் புக் இருக்கிறது. செக் குடுத்திடலாம்…” என்றார். துணியை ‘பேக்’ பண்ணி கையில் வைத்திருந்த பணியாள் விருட்டென்று சொன்னார்,”செக்கெல்லாம் வாங்க மாட்டோம் சார்..” “ஏன் வாங்க மாட்டிங்க…ஏமாத்தற ஆள் இல்லை நாங்க…என்ன பண்றது ..கேஷ் எல்லாம் செலவாயிடிச்சி – கவனிக்காம வந்திட்டேன்… செக் தர்றேன்..வாங்கிக்கோங்க..” “ஸாரி, சார்..செக் வாங்க மாட்டோம்..” “உங்க முதலாளிகிட்ட என்னை கூட்டிட்டுப் போங்க, அவர்கிட்ட நான் பேசறேன்..” கல்லாவில் நின்றபடி கடை முதலாளி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்! பணியாள் முன்னே செல்ல நானும் ஆத்மாநாமும் அவரிடம் சென்றோம். கடை முதலாளியிடமும் ஆத்மாநாம் பணியாளரிடம் சொன்னதையே சொன்னார். தானே ஏற்றுமதி ஆடைகள் தயாரிக்கும் தொழிலில்தான் இருப்பதாக சொல்லி, தன்னுடைய ‘விசிட்டிங் கார்டை’ எடுத்துக்காட்டினார். கடை முதலாளி அதை வாங்கிப் பார்த்தார்…”ஓ கே சார் – போனா போகட்டும்…இந்தத் தடவை உங்ககிட்ட செக் வாங்கிக்கிறேன்..ஆனா – உங்க கிட்ட இல்லை; யார் கிட்டேயிருந்தும் செக் வாங்கற வழக்கம் கிடையாது எங்களுக்கு.. இன்னொரு தடவை இந்த மாதிரி செய்யாதீங்க..” என்றார் கடை முதலாளி. ஆத்மாநாம் கடை முதலாளிக்கு நன்றி சொன்னார். செக் என்ன பெயரில் தரட்டும் என்று கேட்டு எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்தார். கடை முதலாளியும் நன்றி சொல்லி செக்கை வாங்கிக்கொண்டு துணிப் பார்சலை ஆத்மாநாமிடம் கொடுத்தார். ஆத்மாநாமும் நன்றி சொல்லி வாங்கி கடை முதலாளியிடம் கை குலுக்கினார். நாங்கள் வெளியில் வந்தோம். ஆத்மாநாம் சில நிமிடங்களுக்கு இந்தச் சம்பவத்தை நினைத்து நினைத்து குதூகலமாய் சிரித்தார். செக் தருவதாக சொன்னதும் கடைப் பணியாளர்கள் எல்லோருமே எப்படி ஆற்றாமையோடு விழித்தார்கள் என்பதைக் கூறி சிரிப்பு. இந்தச் சம்பவத்தை நான் சொல்லிக் கேட்பவர்களுக்கு ஆத்மானாமின் குதூகலமும் சிரிப்பும் கொஞ்சம் விகற்பமாகவோ சிறுபிள்ளைத் தனமாகவோ தெரியலாம். ஆனால் அப்படி இல்லை உண்மையைச் சொன்னால் இதே மாதிரியான சம்பவங்களை நிறையவே சொல்லமுடியும். ஆனால் இந்த மாதிரியான சிரிப்பும் குதூகலமும் சிறுபிள்ளைத்தனமானவை கிடையாது. ஆத்மாநாமுக்கே உரித்தான கள்ளம் கபடம் இல்லாத குழந்தைத்தனமான சுபாவம் இது. அடிப்படையில் ஆத்மாநாம் கண்ணியமும் மேன்மையும் கொண்ட மனிதர். கண்டிப்பான சில நாகரீகங்களை பின்பற்றுகிறவர். மிக மென்மையான் சிறிது சங்கோஜமான நண்பர் அவர். எப்போதாவது இரவு நேரங்களில் என் அறையிலேயே தங்கிக் கொள்ளும்போது நான் தரும் புதிய வேட்டியையோ லுங்கியையோ கட்டிக்கொண்டு பனியன் அணிந்த தோற்றத்தோடு தூங்குவதற்குக்கூட அவரால் முடியாது. வெட்கப்படுவார். பேண்ட் ஷர்ட்டோடேயே தூங்குவார். காலையில்வெளி வராந்தாவில் இருக்கும் பாத்ரூமில் குளிக்கப் போகும்போதுகூட துண்டு கட்டிக்கொண்டு போகலாம். மாட்டார். பேண்ட் ஷர்ட்டோடேயே தூங்குவார். காலையில் வெளி வராந்தாவில் இருக்கும். பாத்ரூமில் குளிக்கப் போகும்போதும் கூட துண்டு கட்டிக்கொண்டு போகலாம். மாட்டார். பேண்ட் ஷர்ட்டுடன்தான் செல்வார் – இதே ஆத்மாநாம் பேண்ட்டையும் ஷர்ட்டையும் கழற்றி படிகளில் வைத்துவிட்டு உள்ளாடையுடன் ஒருநாள் கிணற்று நீரில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார். ஆத்மாநாம் 1984 ஜøலை 6ஆம் தேதி தற்கொலை செய்து உயிர் இழந்தார். (ஸடெல்லா புரூஸின் கட்டுரைகள் என்ற தொகுப்பு நூல் விருட்சம் வெளியீடாக வர உள்ளது. அதில் ஆத்மாநாம் பற்றி அவர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இங்கு பிரசுரம் ஆகிறது. அடுத்த பகுதி நாளை பிரசுரம் ஆகிறது)

தனலட்சுமி டாக்கீஸ்


டுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு குளக்கரை படிக்கட்டில் தன்னுடைய வேட்டியை துவைத்துக்கொண்டிருந்தார் கட்டையன். மொறத்தூர் கிராமத்திலிருக்கும் தனலட்சுமி டாக்கீஸில் டிக்கெட் கொடுப்பவர்தான் கட்டையன். அவரது சொந்தப்பெயரான நாராயணன் அவருக்கே மறந்துபோகும் அளவிற்கு கட்டையனென்றே அழைத்தனர் ஊர்மக்கள். கொஞ்சம் குள்ளம் என்பதால் வந்த காரணப்பெயர்தான் கட்டையன். உருவு கண்டு எள்ளாத ஊர் ஏது?

துவைத்தெடுத்த வேட்டியை கடைசி சொட்டு தண்ணீர் வடியும்வரை பிழிந்துவிட்டு தோளில் தொங்கபோட்டுக்கொண்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
வீடு செல்லும் வழியில்தான் “தனலட்சுமி டாக்கீஸ்” இருக்கிறது. அதைக்கடப்பதற்கு முன் ஒருநிமிடம் நின்றார் கட்டையன். அவரது வாய் எதையோ முணுமுணுத்தது. கன்னத்தில் போட்டுக்கொண்டு வீடு நோக்கி நடந்தார். கட்டயனுக்கு கோவில் அந்த திரையரங்கம்தான். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு திரையரங்கம் கட்டப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை
நுழைவுச்சீட்டு கொடுக்கும் பணியில் இருக்கிறார்.

தினமும் மாலை ஐந்து மணிக்கும், இரவு எட்டு மணிக்கும் என மொத்தம் இருகாட்சிகள் மட்டுமே கொண்ட கிராமத்து திரையரங்கம் என்பதால் மாலை நான்கு மணிக்குமேல் சுற்றியுள்ள கிராமத்து மக்கள் தனலட்சுமி டாக்கீஸை நோக்கி படையெடுப்பார்கள்.

நான்கரை மணிக்கெல்லாம் ஒலிப்பெருக்கியில் பாடல்கள் தொடங்கிவிடும்.
அந்த பாட்டுச்சத்தத்தை வைத்துதான் மணி என்னவென்று சொல்வார்கள் கடிகாரமில்லாத வீட்டு மக்கள்.

கட்டையனுக்கு திரையரங்கம் மீதுள்ள காதலால் அவருக்கு பிறந்த பெண்ணுக்கு தனலட்சுமி என்று பெயரிட்டார்.
கட்டையனுக்கும் அவர் மனைவிக்கும் அடிக்கடி வாய்ச்சண்டை நடக்கும்”எனக்கு சக்களத்தி இல்லைன்னு தியேட்டர கட்டிக்கிட்டீகளோ? நிதமும் அங்கேயே குடியிருக்கீக..பொட்டப்புள்ளைய பெத்துவச்சுக்கிட்டு நான் படுறபாடு எனக்கும் அந்த திருச்செந்தூரு முருகனுக்கும் மட்டும்தான் தெரியும்”

“ஆமா நீயும் நானும் இளவட்டம் பாரு! கொஞ்சி குலாவ…இங்க கிடந்தா திண்ணையில கெடப்பேன்…அங்க கிடந்தா பெஞ்சுல கிடப்பேன்…அவ்வளவுதான்டி வித்தியாசம்…போயி கஞ்சு காச்சற வழிய பாரு”

எப்பொழுதும் தியேட்டரை விட்டுக்கொடுத்ததில்லை கட்டையன். படம்பார்க்க வருபவர்களுக்கு முறுக்கும்.அதிரசமும் செய்து தன் மகள் தனலட்சுமியிடம் கொடுத்தனுப்புவாள் கட்டையனின் மனைவி.

ஒரு நார்க்கூடையில் முறுக்கையும் அதிரசத்தையும் எடுத்துச்சென்று விற்று வருவாள் சிறுமி தனலட்சுமி. வறுமையென்றாலும் எப்பொழுதும் அதை வெளிக்காட்டியதில்லை கட்டையன். செய்கின்ற வேலையை நன்றாக செய்ய வேண்டும் என்பது மட்டுமே அவர் குறிக்கோள். படம் பார்க்க வருகின்றவர்கள்
அனைவருக்குமே கட்டையனின் சிரித்த முகம் பிடிக்கும்.

“என்ன மாமோய் நீங்களே ஹீரோ கணக்காதான இருக்கிய படத்துல நடிச்சா நாங்க பார்ப்போம்ல” டிக்கெட் வாங்க வரும் குமரிகளின் கிண்டலுக்கெல்லாம் அசந்துவிடமாட்டார் கட்டையன்.

“வாடி என் மச்சினிச்சி….நீயும் என் கூட நடிச்சா நான் நடிக்க மாட்டேன்னா சொல்லுவேன்…வர்றியா ரெண்டுபேரும் டூயட்டு பாட அமெரிக்கா போவலாம்” என்று மடக்கிப்பேசுவதில் வல்லவர்.

இன்பங்கள் மட்டுமே இருந்துவிடில் அது வாழ்க்கை அல்ல என்பதுபோல திரையரங்கின் சொந்தக்காரர் சில வருடங்கள் கழித்து திடீரென்று பட்டணத்திலிருந்து ஊர் வந்தார்.

தியேட்டரில் வேலைபார்க்கும் அனைவரையும் அழைத்து அந்த இடிபோன்ற செய்தியை சொன்னார்.

“எல்லாரும் நல்லாத்தான் வேல செஞ்சிய…ஆனா என்னத்த பண்றது முந்தி மாதிரி தியேட்டரால வருமானம் இல்ல… நானும் புள்ளக்குட்டிக்காரன் எத்தனை நாளைக்குத்தான் இதைக் கட்டிக்கிட்டு அழுவறது..அதான் தியேட்டர ஒரு கம்பெனிக்காரனுக்கு வித்துப்புட்டேன்…இதுல உங்க எல்லாத்துக்கும் சேர வேண்டிய சம்பளப் பணம் இருக்கு பிரிச்சு எடுத்துக்கிட்டு வேற வேலை இருந்தா பார்த்து பொழச்சுக்குங்க அப்பு,நான் வாரேன்”

அவருடைய கார் கிளம்பிச்செல்லும் வரை ஒருவரும் அசைவில்லை. கட்டையன் வேப்பமரத்தில் சாய்ந்து உட்கார்ந்துவிட்டார். கண்ணிலிருந்து நிற்காமல் நீர் கசிந்துகொண்டிருந்தது.

மறுநாள் தனலட்சுமி டாக்கீஸ் மூடப்பட்டது. வீட்டிலேயே முடங்கிகிடந்தார் கட்டையன். முன்பு போல் யாரிடமும் பேசுவதில்லை. அடிக்கடி மூடப்பட்ட திரையரங்கின் இரும்புக் கதவின் கம்பிகளை பிடித்துக்கொண்டு கன்னம் பதித்து தியேட்டரை பார்த்தபடியே மெளனமாய் கண்ணீர் வடிப்பார்.

தன் மகளுக்கு திருமணம் செய்துவைத்தால் அந்த மகிழ்ச்சியில் மீண்டும் கட்டையன் சகஜநிலைக்கு வந்துவிடுவார் என்றெண்ணி அவசரமாக ஒரு மாப்பிள்ளை பார்த்து தனலட்சுமிக்கு திருமண ஏற்பாட்டை செய்தாள் கட்டையனின் மனைவி.

திருமண நாளும் வந்தது.

பட்டணத்திலிருந்து இரண்டு லாரி நிறைய கூலிஆட்கள் திரையரங்கம் முன்பு வந்து இறங்கினார்கள். மாலைச்சூரியனின் மஞ்சள் வெய்யிலில் அவர்களது கையிலிருந்த கடப்பாரைகளின் கூர்மை மினுங்கியது.

நெஞ்சு முழுக்க சோகமிருந்தும் பிள்ளையின் திருமணத்தை கண்டவுடன் சோகம் மறந்து சிரித்தபடியே திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தார் கட்டையன்.

அன்று மாலை தனலட்சுமியின் திருமண ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்திற்கு எதிரே பெயர்த்தெடுத்த செங்கலும் மண்ணும் சுமந்தபடி வந்துகொண்டிருந்தன இரு லாரிகள்.

பின் கதைக்குறிப்பு:

ஏழை வர்க்கத்தின் மிக முக்கிய பொழுதுபோக்கு கிராமத்து கொட்டகைகளில் திரையிடப்படும் திரைப்படங்கள்தான். அவர்களுக்கு திரைப்படம் என்பது திருவிழாபோல..கேபிள் டிவிகளின் படையெடுப்பில் பல திரையரங்கங்கள் நஷ்டத்தில் மூடப்பட்டன. இந்த நொடி எங்கோ ஒரு திரையரங்கின் செங்கல் பெயர்க்கப்படலாம்.
நஷ்டத்தில் மூடப்பட்ட எங்கள் கிராமத்தின் “தனலட்சுமி டாக்கீஸ்”க்கும் இந்த நிமிடத்தில் எங்கோ மரணத்தை எதிர்கொள்ளும் திரையரங்கங்களுக்கும் இந்தக் கதை சமர்ப்பணம்.

(நவீன விருட்சத்திற்குப் படைப்புகளை navina.virutcham@gmail.com என்ற இணையத் தளத்திற்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். தேர்ந்தெடுக்கும் படைப்புகள் முதலில் நவீன விருட்சம் blog லும் பின் நவீன விருட்சம் இதழிலும் பிரசுரம் ஆகும்)

சந்தி

ஞ்சலி அண்மையில் இயற்கை எய்திய ஓவியர் ஆதிமூலம், சுஜாதா, ஸ்டெல்லா புரூஸ் ஆகியோருக்கு என் அஞ்சலி. வாழ்க்கையில் இழப்புக்கள் தவிர்க்க இயலாதவை, சில இழப்புக்கள், சிந்தையில் ஆழமாக, வடுவாக, காலம் மட்டுமே ஆற்றக்கூடிய இரணங்களாகக் கூடிக் களித்த நினைவுகளே ஆறுதல் தரக்கூடியதாக அமைந்து விடுகின்றன. பல இரங்கல் பேச்சுகள், இறந்தோர் மாட்சியைவிட பேசுபவரின் பெருமையை இறந்தவர் எப்படிப் பாராட்டினார் என்று பீற்றிக்கொள்வதாக, கேட்பவர், படிப்பவர் கூசும்படியாக இருக்கின்றன. ஆதலால் இங்கு இயற்கை எய்திய அருமை நண்பர்களைப் பற்றி இவர்கள் சிறந்த கனவான்களாக இருந்தார்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றையும் கூற உத்தேசமில்லை. நீங்களும் அவர்களைப் போலவே என் உணர்வுகளைப் புரிந்துகொள்வீர்கள். ************************* தாய் நாடு, திரு நாடு, எந்தையும் தாயும் குலவி மகிழ்ந்த நாடு, இந் நாடு. விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்குமேல் ஓடிவிட்டன. குடிமக்கள் இன்னும் வறுமையிலிருந்து, நோயிலிருந்து, அறியாமையிலிருந்து, அச்சத்திலிருந்து முழுமையாக விடுதலை பெறவில்லை. நெஞ்சை நிமிர்த்தி பெருமையுறவும் ஏற்றங்களும் கண்டோம், முதல் பெருமை முற்றிலும் கர்வம் கொள்ள இன்று உலகிலேயே பெரிய மக்களாட்சி கொண்ட நாடு இந்தியா என்பதுதானே. சந்தித்த பெரிய சோதனை, 32 ஆண்டுகளுக்கு முன், June 25, 1975 இந்திரா காந்தி அம்மையார் பிரகடனம் செய்த “உள்நாட்டு நெருக்கடி நிலைமை.” நள்ளிரவில் எதிர் அணியில் முன்னணியில் இருந்த தலைவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், அடல் பிகாரி வாஜ்பாய், அத்வானி முதலியோர் சிறையில் அடைக்கப்பட்டனர், மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு, செய்தி இதழ்கள் வாய் பூட்டு இடப்பட்டு, அரசிற்கு எதிரான செய்திகள் வெளியிடக் கூடாதென்ற தடுப்பு அறிக்கை கொடுக்கப்பட்டு, குடிமக்களுக்கு நீதி முற்றிலும் மறுக்கப்பட்டது. கவிந்தது காரிருள். இவ்வாண்டு பிப்ரவரி 25-ல் காலமான நீதிபதி ராஜ் ஹன்ஸ் கன்னா (அகவை 95), மக்களின் மரியாதைக்கும், போற்றதலுக்கும் உரியவர், பொறுமை, பணிவு, கூர்ந்த மதிநுட்பம், எல்லாவற்றிற்கும் மேலாக வீரமும் கொண்டவர். 1912-ம் ஆண்டு பிறந்த அவர் 1971-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகளில் ஒருவராக பதவியேற்றார். உள்நாட்டு நெருக்கடி நிலைமை என்ற அரசின் கொடூர நடவடிக்கைக்கு எதிராக பல ‘ஆள்கொணர்வு’ வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும்போது, ‘ஏடி. எம் ஜபல்பூர் எதிர் சிவகாந்த சுக்லா’ என்ற பேர் பெற்ற வழக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஐவர் கேட்டு தீர்ப்பளித்தனர் – அந்த வழக்கின் தீர்ப்பு, அரசின் நிலையை ஆராய்ச்சிக்கும், கண்டனத்திற்கும் உட்படுத்தக் கூடிய ஒன்று. நான்கு நீதிபதிகள் அரசின் நிலையை – உள்நாட்டு நெருக்கடி நிலைமையை ஆதாரித்து எழுதினார்கள். நீதிபதி ஹன்ஸ் ராஜ் கன்னாவின் தீர்ப்பு, நியாயத்தையும், நீதியையும் வலியுறுத்தி, அரசின் நிலையைக் கேள்விக்குரியதாக்கிய எதிரான ஒன்று. அவ்வாறு அரசின் நிலையை எதிர்த்துக் கொடுத்தத் தீர்ப்பிற்காக, அவர் கொடுத்த விலை, அவருக்கு முறைப்படி கிடைக்க வேண்டிய தலைமை நீதிபதி என்ற பதவி உயர்வைப் பறித்தது. அப்பதவி, அவருக்கு இளையவரான மற்றொரு நீதிபதிக்கு அளிக்கப்பட்டது. நீதியரசர் ஹன்ஸ் ராஜ் கன்னா தன் பதவியைத் துறந்தார். அன்னாரின் வீரமும், தியாகமும் இந்திய நீதித்துறையின் மானத்தையும் கண்ணியத்தையும், நேர்மையையும் காப்பாற்றியது. நீதியரசர் ஹன்ஸ்ராஜ் கன்னாவின் உருவப்படம் சுப்ரீம் கோர்ட் இரண்டாம் வளாகத்தை அலங்கரிக்கின்றது. இன்று.(நன்றி : திரு அனில் திவான் கட்டுரை வீர நீதியின் ஒரு முகம் – ஹிந்து நாளிதழ் 07.05.2008). ******************************* புகழுக்கு மூன்று வழிகள், ஒன்று, புதிதாகச் செய்வது, இரண்டு, பெரியதாய் செய்வதாம், மூன்றாவது சிறப்பாகச் செய்வது. எழுத்திலும் இதேதான். வழிகள் நேராக இருந்தால் குறுக்கு வழிகள் இருக்காதா என்ன? அதில் ஒன்று, மாற்றி சொல்வது. உங்கள் வீட்டு பெண்மணிகளைக் கேட்டுப் பாருங்கள்: தமிழ் திரைப்பட இசையில் இது ரீமிக்ஸ் காலம். பார்த்தார் ஒரு சுஜாதா சிஷ்யக்குஞ்சு, சிறுகதைகளில் புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்றை ரீ மிக்ஸ் செய்து உலவவிட்டுவிட்டார். இலக்கியத்தில் வேண்டாமே இந்த ரீ மிக்ஸ். ******************************* சென்ற இதழ் ‘சந்தி’யில், தன் ‘இனிய’ வாசகர்களுக்காக, கொம்பன், ரெசினாகுன்றுக்குக்கூட போவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கூறியிருந்தான். கடவுளால் தலையில் தைலம் தடவப்பட்டவர், காப்பாற்றப்பட்டார். குறைந்தபட்ச தகுதியே அவருக்கு இல்லையாம். போகட்டும். கொம்பனிடம், ஆசிரியர் அழகியசிங்கர், பேசும்போதெல்லாம்,’உங்கள் வாசகர் வட்டம் விரிந்துகொண்டே வருகின்றது. சந்தியை நிறுத்தி விடாதீர்கள்,’ என்று கூறி வருகின்றார். அப்படித்தானே!! “ஆம்” என்கிற கடலோசை.(நவீன விருட்சம் 79/80 வது இதழில் வெளிவந்த கட்டுரை)

புட்டா சுந்தரசாமியின் சென்னை விஜயம்

பெங்களூரிலிருந்து வந்திறங்கினார்
புட்டா சுந்தரசாமி
எங்களூருக்கு.
ஹஸ்தினாபுரம் கிளையை
ஒரு கலக்கு கலக்க ஏபிஎம் ஆக.
பாதி கன்னடம், பாதி தமிழ்
எல்லோரும் அரைகுறை ஆங்கிலத்தில்
அவருடன் உரையாடுவோம்

ஏறக்குறைய என் வயது
அவரைப் போல தோற்றத்தில்
முன் வழுக்கையோடு
உயரம் சற்று கூடுதலாக
இன்னொருவர் இருக்கிறார் எங்கள்
அலுவலகத்தில்

வியாதிகளிலே எங்கள் இருவருக்கும்
பொதுத் தன்மை உண்டு

குடும்பத்தினரை விட்டு விட்டு
தனிமை வாசம்
அதுவே தனி விசாரம்
தற்போது இருக்குமிடம்
பெரும் குழப்பம்
மாதம் ஒன்று ஆகப் போகிறது
தங்கும் இடம் தேடி தேடி
தளர்ந்து போகிறார் புட்டா சுந்தரசாமி

தினம் தினம்
எங்களில் ஒருவரோடு
வீடு தேடும் படலம்
பார்க்கும் வீடெல்லாம்
ஏனோ கோணலாய்த் தெரிகிறது
வசதியாய் பங்களுரில் இருந்தவருக்கு
வாழுமிடமெல்லாம் நரகமாய்த் தெரிகிறது

நீண்ட கூடம்போன்ற
அறை இருந்தால் வாடகை
மலைக்க வைக்கிறது
கொஞ்சம் மிச்சம் பிடித்து
வீட்டிற்கும் பணம் அனுப்ப வேண்டுமென்று
நினைக்கிறார் பாவம் புட்டா சுந்தரசாமி

அலுவலகத்திற்கு எதிரே ஒரு இடம்
இருந்தது. போய்ப் பார்த்தார்
இடமும் பிடித்திருந்ததுஆனால்
இன்னொருவருடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமாம்
பாத்ரூமையும், லெட்ரீனையும்
கேட்டவுடன் மூக்கைப் பொத்தியபடியே வந்துவிட்டார்
புட்டா சுந்தரசாமி
நாற்றம் அவரைச் சூழ்ந்து கொண்டதோ

இன்னும் சில இடங்கள்
வாகாய் இல்லை
சுகாதார கெடுதலை தரும்
இடமெல்லாம் கண்ணில் பட்டு
வேண்டாம் வேண்டாம் என்று மறுக்க வைக்கிறது

ஒரு இடத்தில்
கொசுக்கள் தொல்லை அதிகம்
எதாவது சமயத்தில்
மழைப் பெய்தால்
பாம்புகள் நெளியுமாம்
போதுமடா புட்டா சுந்தரசாமி

தன் துயரங்களை
வெளிவாசலில் நின்றபடி
புகை ஊதியபடி
எல்லோரிடம் ஆங்கிலமும் தமிழும்
கலந்துரையாடியபடியே
அழுக்கு ரூம் ஒன்றில்
தற்காலிகமாகக் காலத்தைக் கழிக்கிறார்
புட்டா சுந்தரசாமி

கட்டாயம் சனிக்கிழமைகளில்
பங்களூருக்கு ஓடி விடுகிறார்
குடும்பத்தைப் பார்க்க..

எங்களூருக்கு வந்த பங்களூர்
ஏபிஎம் புட்டா சுந்தரசாமி படும்பாட்டைப் பார்த்தீரா?