Category: கவிதை
செப்டம்பர் மாதம் ஐந்தாம்தேதி என் மாமியார் சுப்புலட்சுமி அம்மாள் இறந்துவிட்டார். அவருக்கு வயது 89. உலகில் எல்லா மூலைகளிலும் இப்படி எத்தனையோ சுப்புலட்சுமிகள் இறந்து போய்க்கொண்டே இருப்பார்கள். ஆனால் முதியவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பது முக்கியமான விஷயமாக எனக்குப் படுகிறது. ஒருமுறை ஜீ எஸ்டி ரோடில் உள்ள சாலை ஓரத்தில் ஒரு முதியவர் யார் கவனிப்பின்றி கிடக்க, போலீஸôர் அவரை விஜாரித்தபோது யார் அவரை அப்படி தள்ளிவிட்டுப் போனார்கள் என்பதை அவர் சொல்ல மறுத்துவிட்டார்.
என் வீட்டில் கீழே இருந்த ஒருவர், அவர் அம்மாவைப் பார்த்துக்கொள்ள முடியாது என்ற நிலைக்கு வந்து அவரும் அவர் மனைவியும் சேர்ந்து தாம்பரத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட்டுவிட்டார்கள். அங்குபோய் சேர்ந்த சில வாரங்களுக்குள் அவர் தாயார் இறந்து விட்டார். அம்மாவைப் பார்த்துக்கொள்ள முடியாத கொடுமையாக இது என் மனதில் பட்டது. அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தால், இன்னும் கொஞ்சநாட்கள் அவர் உயிரோடு இருந்திருக்கலாம். ஏன் நமக்கு இந்தப் பொறுமை ஏற்படுவதில்லை? நம்மை வளர்த்த அம்மாவைக்கூட நம்மால் ஏன் பார்த்துக்கொள்ள முடியவில்லை?
எங்கள் வீடு இருக்கும் தெரு முனையில் ஒரு முதிய ஆசிரியை தனியாக வசித்து வந்தார். அவர் ஏன் தனியாக இருந்தார் அவ்வளவு பெரிய வீட்டில் என்ற கேள்விக்கு எனக்குப் பதில் தெரியவில்லை. ஆனால் ஒரு தீபாவளியின்போது அவர் வீட்டிற்கு திருட வந்தவன். அசிரியையின் நகைகளைப் பறிக்க முயற்சித்தான். அவன் எடுத்துக்கொண்டு போகட்டும் என்று விட்டுவிடாமல் போராடியதால், இரக்கமே இல்லாமல் அந்த முதியப் பெண்மணியைக் கொன்றுவிட்டு நகைகளைத் திருடிக்கொண்டு சென்றுவிட்டான். அந்த தீபாவளியை என்னால் மறக்கவே முடியாது.
நினைவுத் தப்பிப்போய் மரணப்படுக்கையில் பிரமிள் இருந்தார். அவரும் ஒரு தனிமைவாசி. அவரை வேலூர் அருகிலுள்ள கரடிக்குடி என்ற கிராமத்திலுள்ள சிறிய அரசாங்க மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி நேரிட்டது. அந்த மருத்துவமனையைப் பார்த்துக்கொள்பவர் பிரமிளின் விசிறி. பிரமிள் நினைவுத் தப்பிப்பேய் கிடக்கிறார். அப்படியே சில தினங்களில் மரணம் அடைந்து விடுகிறார். அவரைப் பார்த்த செவிலிப்பெண்களுக்கு அந்த மருத்துவமனையில் அவருடைய மரணம்தான் முதல் மரணம். நினைவுத் தப்பிப்போன பிரமிளுடன் அவர்கள் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. புதிதாக அப்போதுதான் மருத்துவமனையில் சேர்ந்திருந்த செவிலிப் பெண்கள் பிரமிளின் மரணத்தை முதன்முறையாக சந்திக்கிறார்கள். அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் வாய்விட்டு அழுததை இன்னும்கூட என்னால் மறக்க முடியாது.
2050-ல் உலகில் 60 வயது கடந்த முதியவர்கள் அதிக அளவில் இருப்பார்கள் என்று ஐ.நா அறிக்கையில் ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் 60 வயதில் எத்தனைபேர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். பலர் வியாதிகளுடன் போராடிக் கொண்டிருப்பார்கள். உலகில் சர்க்கரை நோயுடனும், ரத்த அழுத்த நோயுடனும் மாத்திரைகளை விழுங்கிக்கொண்டு பலர் இருப்பார்கள். இறக்கவும் முடியாமல், இருக்கவும் முடியாமல்.
எனக்கு நகுலன் கவிதைதான் ஞாபகம் வருகிறது. =இருப்பதற்காக வருகிறோம..இல்லாமல் போய் விடுகிறோம்.+ படிப்பவர்கள் மனதை கிலிகொள்ள வைக்கும் கவிதை.
சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் தேவதச்சன் என்ற கவிஞரின் கவிதையை என்னிடம் படிக்கக் கொடுத்தார். அந்தக் கவிதையின் முதல் வரி, =உயிர் பிரிவதற்கு ஒரு நிமிடம்தான் இருக்கிறது+ என்று இருக்கும். இந்தக் கவிதையைப் படிக்கும்போது என்ன இப்படி எழுதியிருக்கிறாரே என்று தோன்றியது. ஏன்எனில் படிப்பவரை தேவையில்லாமல் சலனப்படுத்தும் கவிதை இது. இப்படி சலனப்படுத்துவது அவசியமா என்ற கேள்வி என் மனதில் எழும். நம் வாழ்க்கையில் எத்தனையோ அதிர்ச்சிகளை தினம் தினம் செய்தித்தாள்கள் மூலம் அறியாமல் இல்லை. ஆனால் அந்த அதிர்ச்சியை உணர்ந்த நாம் அந்த நிமிடமே மறந்தும்விடுவோம். திருவல்லிக்கேணியில் ஒரு கட்டடம் இடிந்து தரை மட்டமானது என்பது முதல் நாள் அதிர்ச்சி தகவல். அடுத்தநாள் அது சாதாரண நிகழ்வாக மாறி அந்த இடத்தைப் போய்ப் பார்க்கிறோம். அதிர்ச்சி நிகழ்வு வேடிக்கைப் பார்க்கும் நிகழ்வாக மாறி விடுகிறது. ஆனால் தேவதச்சனின் கவிதையைத் திரும்பவும் படித்தால் அந்த அதிர்வை சலனத்தை எப்போதும் அது உண்டாக்கும். படிப்பவருக்கு இது தேவையா என்றும் நினைக்கலாம.
நான் சீர்காழியில் இருக்கும்போது, =என்ன மூதியோர் இல்லம் நடத்துகிறாயா?+ என்று என் மனைவியைக் கிண்டல் செய்வது வழக்கம். 89 வயதான என் மாமியார், 90 வயதான என் அப்பா, 75 வயது நிரம்பிய என் வீட்டில் பணிபுரிபவர் என்று வயதானவர்களின் ஆதிக்கம் என் வீட்டில் இருந்தது. மனைவியால் தனியாக சமாளிக்க முடியாது என்பதால் நான் இங்கு வர நேர்ந்ததா என்றெல்லாம் யோசிப்பேன். என் மாமியார் 20 ஆண்டுகளுக்கு மேலாக எங்களுடன் வாழ்ந்தவர். குடும்பத்துடன் நாங்கள் வெளியூருக்குப் பயணம் செய்தால் எங்களுடன் தெம்பாக வருபவர். மே மாதத்தில் என் புதல்வனின் திருமணத்தில் உற்சாகமாகக் கலந்துகொண்டவர்.
கார்லஸ் காஸ்டினேடா ஒரு புத்தகத்தில், மரணம்தான் ஒரு மனிதனின் எதிரி என்று எழுதியிருக்கிறார். வேறு யாரும் எதிரி இல்லையாம். அவருடைய புத்தகங்கள் எல்லாம் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் விற்றன. இன்னும் விற்றுக் கொண்டிருக்கின்றன. அப்படியெல்லாம் எழுதி புகழ்பெற்ற காஸ்டினேடா இறந்த விஷயம் ஒரு மாதம் கழித்துத்தான் டைம் பத்திரிகையில் வெளிவந்தது. அவர் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் இடையே அவர் சம்பாதித்த சொத்தின்மீது கோர்ட்டில் உரிமைக் கொண்டாடி சண்டை.
AT THE HOUR OF DEATH என்ற புத்தகம் படித்தேன். அந்தப் புத்தகத்தில் மரணம் அடையும் தறுவாயில் அவர்கள் கண் முன்னால் அவருக்கு முன்னால் இறந்தவர்கள் கண்ணில் படுவார்களாம். சிலருக்கு யேசு தென் படுவார் அல்லது முருகன் தென் படுவார். என் பாட்டி இறந்துபோகும் தருணத்தில் எப்போதோ இறந்துபோன அவருடைய கணவர் வந்ததாக சொல்லியிருக்கிறார். அதைக் கூறியபோது அவர் முகம் மிகவும் பிரகாசமாக இருந்தது. நல்ல நினைவு இருக்கும்போது, =போனால் தேவலை..+ என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இதுமாதிரி ஏற்படுவதற்குக் காரணம். உடம்பில் சோடியம் பொட்டாசியம் குறைந்து போவதால் உண்டாகிறது என்று மருத்துவ உண்மை குறிப்பிடுகிறது. என் மாமியார் மரணம் அடையும் தருணத்தில்தான் இதை உணர்ந்தேன். நடக்க முடியாத வலியுடன் என் மாமியார் சில தினங்கள் நாற்காலியைத் தள்ளி தள்ளி நடந்து தன் தேவைகளை ஜாக்கிரதையாகப் பூர்த்தி செய்துகொண்டார். ஆனால் ஒரு தருணத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் மிகக் குறைந்த உயரத்தில் இருந்த திவானிலிருந்து கீழே விழுந்துவிட்டார். அடிப்பட்டு ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. அவருக்கு வலியும் தெரியவில்லை. கத்தவும் இல்லை.
மகேஷ்பட் என்கிற ஹிந்திப் படத் தயாரிப்பாளர்- டைரக்டர், யூ ஜி கிருஷ்ணமூர்த்தியிடம் அளவுகடந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர். யூ.ஜியைச் சுற்றி சுற்றி வருபவர். A TASTE OF LIFE என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அப்புத்தகம் யூ ஜி கிருஷ்ணமூர்த்தியின் கடைசி தினங்களை விவரிக்கிறது. ஓரிடத்தில் யூ ஜி கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். ‘நான் இறந்தபிறகு என் உடலை என்ன செய்யப்போகிறீர்கள். அதைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிடுங்கள்’ என்று.
டிசம்பர் 1ஆம் தேதி எனக்கு 60 வயது ஆரம்பமாகிறது.
(அம்ருதா நவம்பர் 2012 இதழில் வெளிவந்த கட்டுரை)
|
|||
|
வட்டம்
சிதறிய |
வீழ்தலின் நிழல்
9.
நன்றாக கவனித்துக்கொண்டார்கள். யாரும் இப்படி கவனித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். நான் யார்? அவர்கள் யார்? இந்தக் காலத்தில் உறவுமுறைகள் எல்லாம் கேலிக்குரிய ஒன்றாக மாறிவிட்டது.
வனஜாவைப் பற்றி எப்படிச் சொன்னாலும், அவள் என்னிடம் அன்பாக இருந்தாள். ஒவ்வொரு முறையும் வாய்நிறைய ”அண்ணா, அண்ணா” என்று கூப்பிடுவாள். என் பெரியப்பா பையன் மூர்த்தி அவ்வளவாகப் பேச மாட்டான். ஏன் பேசத் தெரியாது.
அடுத்த வாசிப்பில் இன்னும் சிலபேர்கள் விலகிவிட்டார்கள். ஆனால் இன்னும் சிலபேர்கள் சேர்ந்தார்கள். அசோகமித்திரன் தொடர்ந்து இருந்து கொண்டு வந்தார். அவர் பெயரைக் கண்டால் அப்புத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பித்து விடுவேன். அசோகமித்திரன் எதை எழுதினாலும் அவர் ரசித்து எழுதுவதாக தோன்றும். வாசகர்களும் அந்த ரசிப்புத் தன்மையை நிச்சயமாக உணர்வார்கள்.
அசோகமித்திரன் கணையாழியில் எழுதிக்கொண்டிருந்தார். அதனால் அவர் என்ன எழுதுகிறார் என்பதைப் படிக்க கணையாழியை வாங்குவேன். இந்த கணையாழி மூலமாக அவர் சொல்கிற பலவற்றை நான் புரிந்துகொண்டேன். எத்தனையோ நல்ல சினிமாக்களை அவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார். எத்தனையோ நல்ல புத்தகங்களை, பத்திரிகைகளை அவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர் சொல்கிற உத்தியும் ஒரு சிறுகதையை எழுதுவதுபோல் இருக்கும். அவர் மூலம்தான் ஐ பி ஸிங்கரை நான் தெரிந்துகொண்டேன். அவருடைய புத்தகங்களை அமெரிக்கன் லைப்பரரியில் தேடிக் கண்டுபிடித்து படிக்க ஆரம்பித்தேன். நான் அழகியசிங்கராக மாறுவதற்கு அது ஒரு காரணம்.
நானும் அந்தச்சமயத்தில் கொஞ்சம் கொஞ்சம் எழுத முயற்சி செய்துகொண்டிருந்தேன். நான் எழுதி அனுப்பிய சிறுகதைகளை பிரபல பத்திரிகைகள் பிரசுரம் செய்யவில்லை. எல்லாம் திரும்பி திரும்பி வந்துவிடும். ஒருமுறை ஆனந்தவிகடனுக்கு எழுதிய கதை ஒரு வருடம் கழித்து திரும்பி வந்துவிட்டது. வெறுத்துவிட்டேன்.
இன்னும் பல எழுத்தாளர்களை நான் கணையாழி மூலமாகவும், அசோகமித்திரன் மூலமாகவும் தெரிந்து கொண்டேன். ஒரு முறை =கவனம்= என்ற பத்திரிகையைப் பற்றி ஒரு குறிப்பு கணையாழில் வந்தது. அந்தப் பத்திரிகையை வாங்குவதற்காக மாம்பலத்திலிருந்து திருவல்லிக்கேணிக்கு பஸ்ஸில் வந்து கவனம் பத்திரிகை நடத்தும் இடத்திற்கு வந்தேன். அது ராஜகோபாலன் என்பவரின் வீடு என்பதைத் தெரிந்துகொண்டேன். இப்படி ஒரு பத்திரிகை நடத்த தனி அலுவலகம் என்பது தேவையில்லை என்பதையும் தெரிந்து கொண்டேன்.
கவனம் பத்திரிகை மூலம், ஞானக்கூத்தன், ராஜகோபாலன், ஆனந்த், ரா ஸ்ரீனிவாஸன், காளி-தாஸ், வைத்தியநாதன் முதலிய நண்பர்களைச் சந்தித்தேன். ஒரு சந்தர்ப்பத்தில் ஆத்மாநாமும் என் கண்ணில் பட்டார். சம்பத்தையும் அறிவேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பீச்சில் ஏதோ ஒரு சிலைக்குப் பக்கத்தில் நாங்கள் சந்தித்துக்கொள்வோம். ஏதோ ஒரு சிலை என்று ஏன் சொல்கிறேன் என்றால் பாரதியார் சிலைக்குப் பக்கத்தில் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.
ஆனால் அசோகமித்திரனை என்னால் மறக்க முடியாது. அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஒரு முறை பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை தி நகரில் நிகழ்ந்தது. அந்தச் சந்திப்பு அவர் ஞாபகத்தில் இருக்க வாய்ப்பில்லை.
அடுத்தமுறை அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் என்னுடைய குறுநாவல் ஒன்று கணையாழியில் பிரசுரம் ஆக இருந்தது. அந்த குறுநாவலில் வங்கியில் பணிபுரிபவர் ஒருவர் கதாபாத்திரமாக வந்திருப்பார். நானும் வங்கியில் பணிபுரிவதால் யாராவது படித்து பிரச்சினை ஆகிவிடுமோ என்று நினைத்துப் பயந்து அசோகமித்திரன் வசிக்கும் தி நகர் வீட்டிற்கு சென்றேன். நான் அவரைப் பார்த்த சமயம் அவருக்கு உடம்பு சரியில்லை. படுத்துக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் நான் அவரிடம் =வங்கியில் பணிபுரிபவர்+ என்பதை நீக்கி விடலாமா என்று கேட்டேன். அவர் அதெல்லாம் மாற்ற வேண்டாம். ஒரு பிரச்சினையும் வராது என்று கூறிவிட்டார்.
மேலும் அவர் என் குடும்பத்தைப் பற்றியும், என்னைப் பற்றியும் விஜாரித்தார். அசோகமித்திரன் அவரைப் பார்த்துப் பேச வருபவர்களிடம் அக்கறை உள்ளவர். கல்லூரிப் படிக்கும் மாணவர்கள் யாராவது கதை எழுதுபவர்களாக இருந்தால் படிப்பை முடித்துவிட்டு எழுதுங்கள் என்று கூறக்கூடியவர்.. அதேபோல் வேலை தேடிக்கொண்டிருப்பவர் கதை எதாவது எழுதினால் முதலில் வேலையைத் தேடுங்கள் எழுதுவது அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லக் கூடியவர். அதே சமயத்தில் போரடிக்கும்படி அவரிடம் பேசிக்கொண்டிருந்தால், பேச வந்தவரின் மனம் கோணாதபடி அனுப்பி விடுவார்.
அசோகமித்திரன் ஒரு எளிமையான மனிதர். அவர் எழுத்தில் காணப்படும் எளிமை அவர் பேச்சிலும் காணப்படும். நகுலன் எழுத்தில் தூக்குதலாக தெரியும் தன் உணர்வுத் தன்மை அசோகமித்திரனிடம் இருக்காது. அதேபோல் மிகை உணர்ச்சித் தன்மையும் அவர் எழுத்தில் காணப்படாது. ஒரு தினசரி பத்திரிகையை எடுத்துப் படிப்பதுபோல அவர் எழுத்து சரளமாகப் போய்க் கொண்டிருக்கும். ஆனால் அந்த எழுத்தில் ஒரு ஆழம் இருக்கும்.
முதலில் நவீன விருட்சத்திற்கு எதாவது எழுதித் தருவாரா என்ற சந்தேகம் இருந்தது. அவரிடம் தயங்கி தயங்கி கேட்டுக்கொண்டபோது அவர் தொடர்ந்து எழுதிக் கொடுக்க ஆரம்பித்தார்.. கேட்ட ஒரு வாரத்தில் எல்லாம் எழுதி அனுப்பி விடுவார். ஆனால் என் பத்திரிகையைக் கொண்டுவர நான் இன்னும் பல நாட்கள் எடுத்துக்கொள்வேன். இரண்டு பக்கங்களுக்கு மேல் அவர் எழுதித் தரமாட்டார். சரியாக அளவு எடுத்து அனுப்புவதுபோல் அவர் கட்டுரை அமைந்திருக்கும்.
(நவீன விருட்சம் சார்பாக 22.09.2012 அன்று நடந்த அசோகமித்திரன் 82 என்ற கூட்டத்தில் பேசிய கட்டுரை. கூட்டம் 200க்கும் மேல் கூடியுள்ள கூட்டம். சிறப்பாக நடந்தது. )
முடிவேயற்று
மிகவும் நீண்ட
அந்தப் பேரூந்துப்
பயணத்தில் வாந்தியெடுத்த,
காய்ச்சலுக்கு
தெருவோரக் கடையொன்றில்
தேயிலைச் சாயம்
குடித்த,
அப்பாவைத் தேடி
அம்மாவுடன்
*பூஸாவுக்குச்
சென்ற…
கல்லெறிந்து
மாங்காய்ப் பிஞ்சுகளை
பையன்கள்
பறித்துப் போகையில்
அவர்களுக்கொரு
பாடம் புகட்டிட
அப்பா
இல்லாததால்
உதடுகளைக்
கடித்து
பெருமூச்சைச்
சிறைப்படுத்திக் கொண்ட…
ஒருபோதும் தான்
காண அழாத அம்மா
மறைவாக அழுவதைக்
கண்டு
உறங்காமல்
உறங்குவது போல்
தலையணை நனைய அழுத…
ஆற்றில் சுழிகள்
உடையும் விதத்தை
இரவுப் பூக்கள்
மலரும் விதத்தை
நட்சத்திரங்கள்
உதிர்ந்து வீழும் விதத்தை
தன்னந்தனியாகப்
பார்த்திருந்த…
எவ்வளவு
துரத்தியும் போகாத
அந்தக் கருத்த,
ஒல்லியான, விடலைச் சிறுவன்
இருக்கிறான்
இன்னும்
நள்ளிரவில்
விழித்து அவன்
அவ்வப்போது
தனியாக அழுகிறான்
ஈரமாகிறது எனது தலையணை
*பூஸா – இலங்கையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களின் சிறைச்சாலை அமைந்திருக்கும் இடம்
இஸுரு
சாமர சோமவீர
அறிவிப்பு
நவீன விருட்சம் 91வது இதழ் ஒரு வழியாக ஓராண்டிற்குப் பிறகு அச்சில் வெளிவந்துவிட்டது. இதழில் பங்குகொண்ட படைப்பாளிகளின் அட்டவணை இதோ-
1. முகப்போவியம் எஸ் வைதீஸ்வரன்
2. பூனைக்குட்டியும் நிலாவும் – கவிதை – குமரி எஸ் நீலகண்டன்
3. தாகம் – கவிதை – சின்னப்பயல்
4. சிறகுகள் ஸ்தம்பித்ததன் பின்னான சிறுவெளி – கவிதை – ப தியாகு
5. கடந்தது – கவிதை – எஸ் வைத்தியநாதன்
6. கார்க்கால ஞாபகங்கள் – கவிதை – சமீலா யூசுப் அலி
7. புதிய அத்தியாயம் – கவிதை – ராமலஷ்மி
8. சில நேரங்களில் – கவிதை – மிருணா
9. பூனை – கவிதை – அழகியசிங்கர்
10. ஒரு – கவிதை – அழகியசிங்கர்
11. தேடிப்பற – கவிதை – ஷைலஜா
12. குட்டி குட்டி அழகு – ப ஜெயபால்
13. எது கவிதை…. – கட்டுரை – அழகியசிங்கர்
14. கறுப்பு – வெள்ளை – கவிதை – நீலமணி
15. பானகம் – சிறுகதை – ஷைலஜா
16. இருபது ரூபாய் – சிறுகதை – அழகியசிங்கர்
17. எப்போதும் உனக்குத் தேவை அமைதியான மனம் – நிஸகர்தத்தா மஹாராஜா
18. எனக்குப்பிடித்த முன்னுரை
19. என் எம் பதி என்கிற நண்பர்…. அழகியசிங்கர்
20. ஐராவதம் புத்தக விமர்சனம்
உரையாடல்
91வது இதழில் கலந்துகொண்ட படைப்பாளிகளுக்கு என் நன்றி. இதழ் அனுப்ப முகவரிகளை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். சீர்காழியிலிருந்து சென்னை மாறி வரும்போது பலருடைய முகவரிகளைத் தொலைத்துவிட்டேன்.