தேர்தலும் நானும்……..

(நன்றி : தினமணி)நான் சாதாரணத்திலும் சாதாரண வாக்காளன். ஓட்டுப் போட உரிமை எனக்கு வந்தபிறகு, ஓட்டுப் போடும் தருணத்தை வேண்டுமென்றே தவற விட்டிருக்கிறேன். ஏனோ இந்த அரசியல் கட்சிகளின் மீது அளவுகடந்த அலட்சியம். இந்தியா மாதிரியான ஒரு பெரிய தேசத்தை ஆள்வது சாதாரணமான விஷயமல்ல. எல்லோரையும் திருப்தி செய்யும்படியான ஒரு ஆட்சியை யாராலும் கொடுக்க முடியாது. பாரதிய ஜனதாவும், காங்கிரசும் குட்டி குட்டி மாநிலக் கட்சிகளின் தயவால் 5 ஆண்டுகள் ஒரு திருப்புமுனையும் இல்லாமல் ஆட்சியை முடித்துக்கொண்டது பெரிய சாதனையாகவே எனக்குத் தோன்றுகிறது. முதலில் இதைச் சாதித்தவர் முன்னாள் பிரதம மந்திரி நரசிம்மராவ்தான்.

இப்போதோ எந்த அளவிற்கு உடைய முடியுமோ அந்த அளவிற்கு தேசிய கட்சிகளான காங்கிரசும், பாரதிய ஜனதாவும் உடைந்து போயிருக்கின்றன. தேர்தல் நடப்பதற்கு முன்பே இந்தத் துண்டு துண்டான நிலையை உணர முடிகிறது. தேர்தலுக்குப் பிறகு என்ன நிலை என்பது தெரியவில்லை.
தேர்தல் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. ஏராளமான பணம் செலவாகும். தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினர், ராணுவத்தினர், அரசாங்கத்தில் உத்தியோகம் பார்ப்பவர்கள் என்று பலர் பலவிதமாக முடுக்கப்பட்டு சிரமத்திற்கு உட்படுவார்கள்.
எப்படியாக இருந்தாலும் எதாவது ஒரு கட்சி ஆட்சி செய்ய வரவேண்டும். இப்போது நடக்கப்போகும் தேர்தலில் அப்படி நடக்க வாய்ப்புள்ளதா என்பது சந்தேகமாக உள்ளது.

ஒவ்வொரு முறையும் வாக்குப் போடும்போது அதிருப்தி நிலை அதிகரித்துக்கொண்டே போகும். ஒரு சமயத்தில் நான் பலருக்கும் ஓட்டுப் போடுவேன். அல்லது எனக்குத் தெரியாத தனியாக நிற்கும் தனிநபருக்கு ஓட்டுப் போடுவேன். ஒரு முறை திமுகாவிற்கும், இன்னொரு முறை அதிமுகாவிற்கும் ஓட்டுப் போடுவேன். நான் யாருக்கு ஓட்டுப் போட்டாலும், போடாவிட்டாலும் ஆட்சியை ஏற்படுத்தும் சக்தி என் ஓட்டிற்கு இல்லை. பல லட்சக்கணக்கான மனிதர்களில் நானும் ஒருவன் அவ்வளவுதான்.
தேர்தலை ஒடடி நடக்கும் வன்முறை எல்லோரையும் போல என்னையும் கவலைப்படுத்தும். ஒவ்வொரு முறை தேர்தலின் போதும் என் வீட்டுச் சுவரில் பல கட்சிகளின் விளம்பரம் அலங்கரிக்கும். உற்சாகமுள்ள கட்சிக்காரர்கள் சுவர்களை நாசம் செய்துவிடுவார்கள். தேர்தல் முடிந்தபின்னும் சுவரொட்டிகளைத் தாங்கி நிற்கும் சுவர்கள் இருந்துகொண்டே இருக்கும்.

தேர்தலைச் சந்திப்பவர்கள் ஏகப்பட்ட பணத்தைத் தண்ணீராக செலவு செய்துகொண்டே இருப்பார்கள். கருப்புப் பணத்தையெல்லாம் தாராளமாகச் செலவிடுவார்கள். ஒரு வங்கியிலோ, அரசாங்கத்திலோ ஒருவர் பணியில் சேர்வதற்கு, குறைந்தபட்சம் கல்வித் தகுதி, தேர்வு எழுதி அதில் வெற்றி பெறும் தகுதி என்றெல்லாம் தேவை. ஆனால் ஒரு அரசியல் பிரமுகருக்கு எதுமாதிரியான தகுதி வேண்டும்?

தீவிரவாதக் கவிதை

ஒற்றைத் தோட்டாவை மட்டும் மிச்சம் வைத்துகண்ணுக்குப் பட்டதையெல்லாம் இலக்காக்கிக் குறிவைக்கிறேன்கருந்துளை நீண்ட எனது துப்பாக்கி முனையில்.பொருட்களையெல்லாம் குறி வைக்கிறேன்-உயிர்களைக் குறிவைக்கிறேன்-தாவரங்களைக் குறிவைக்கிறேன்-விலங்குகளைக் குறிவைக்கிறேன்-பறவைகளைக் குறிவைக்கிறேன்-மனிதர்களைக் குறிவைக்கிறேன்-உறவுகளைக் குறிவைக்கிறேன்-நண்பர்களைக் குறிவைக்கிறேன்-எதிரிகளைக் குறிவைக்கிறேன்-துரோகிகளைக் குறிவைக்கிறேன்-உங்கள் ஒவ்வொருவரையும்தனித்தனியே குறிவைக்கிறேன்-காலூன்றி பூமிக்குக் குறிவைக்கிறேன்-நிமிர்ந்து நின்று வானத்தைக் குறிவைக்கிறேன்-பரிதியையும் நிலவையும் குறிவைக்கிறேன்-கோள்களைக் குறிவைக்கிறேன்-விண்மீன்களைக் குறிவைக்கிறேன்-என் சுட்டுவரல் நுனியில்இந்தப் பேரண்டத்தையேஇலக்காக்கிக் குறிவைக்கிறேன்-இவை யாதொன்றையும்சுட்டுவிடாமல் விட்டுவிடுகிறேன்.அவை இருந்துவிட்டுப் போகட்டும்…இலக்காகஎனக்கு அவற்றின் பெயர்கள் மட்டும் போதுமானதால்பெயர்களையெல்லாம் எடுத்துக் கொள்கிறேன்-பெயர்களின் ஒலிக்குறிப்புகளை எடுத்துக்கொள்கிறேன்-பெயர்களின் பிம்பத்தை எடுத்துக்கொள்கிறேன்-பிம்பங்களின் பிரதிகளை எடுத்துக் கொள்கிறேன்-பிரதிகளின் உருவங்களை எடுத்துக் கொள்கிறேன்-உருவத்தை, வடிவத்தை, வண்ணங்களையெல்லாம்ஒலிச் சரங்களால் சொற்களாக மீட்டெடுத்துஇலக்காக்கிச் சுட்டுத் தள்ளுகிறேன்.சிதறிய ஒலித்துணுக்குகளைச் சுடுகிறேன்.சுட்டுக் கொண்டேயிருக்கிறேன்.தூரச் சொற்களைத் தொலைநோக்கியில் கண்டு சுடுகிறேன்.தப்பிய சொற்களைத் தேடிப்பிடித்துச் சுடுகிறேன்.இடமும் வலமும் மேலும் கீழும் முன்னும் பின்னும் சுடுகிறேன்.சுற்றிச் சுழன்று எனது காட்சிகளை சுட்டுத் தள்ளுகிறேன்.என் கனவை சுட்டுக் கொல்கிறேன். சுட்டுத் தள்ள ஏதுமில்லாதபோதுமீதமுள்ள தோட்டாகொண்டுஎனது பெயரையே இலக்காக்கி சுட்டுக் கொல்கிறேன்.

கவிதைகள் (குறும்பா என்றும் சொல்லலாம்)

1. வயோதிகம் கடிகாரமாய்
துடித்துக் கொண்டிருக்கிறது
இன்னொரு நாளைப்
பார்த்துவிடும் உயிர்ப்புடன்

2.வெகுநாள் மீனவன்
தொடர்ந்த வேட்டையில்
மங்கிய தன் கண்களால்
ஆமையைக் கும்பிட்டான்
நின்று கொன்றால்
எதுவும் தெய்வந்தான்

3.உனக்கான என் அன்பு
உணரப்படாமலே
புறக்கணிக்கப் பட்டுள்ளது
பிரித்ததும் கசக்கப்பட்ட
உறையின் உட்புறத்து
இளஞ்சிவப்பு காகிதம் போல

4.உலர்த்தப்பட்ட ஆடையின்
நாலைந்து கண்கள்
உள்ளங்கைக் குளத்தில்
பிணைந்திருந்த ரேகைகள்

கவிதை௧ள் 3

01
கொஞ்சமும்…

கொஞ்சமும்
எதிர்பார்த்திருக்கவில்லை
தேநீர்க் குவளையை
வைக்கும் ஸ்டாண்டாக
ஒரு கவிதை புத்தகத்தை
வைத்திருப்பார்
அந்த புத்தகக் கடைக்காரர்
என்று.

02
சாயல்…

இரு தலாங்களுக்கிடைப்பட்ட
படிக்கட்டுகளில் வைத்து
காதலைச் சொன்ன கணம்
விழிகள் உருட்டி
மருண்ட உன் முகத்தின்
சாயலேதுமின்றி
இருந்தது
பிரிவதற்காய் நாம்
தேர்ந்து கொண்ட ஒரு
பிற்பகல் வேளையில்
மூடிய லிப்டின் கதவுகள்

உள் வாங்கிப்போன
உன் முகம்.

0

03
உதவும் பொருட்டு…

லிப்டில்
ஏறிய ஒருவனுக்கு
உதவும் பொருட்டு
விரைவாய் மூடும்
பொத்தானை அழுத்தினேன்.
அதுவரை பேசிக்கொண்டிருந்த
அவன் அலைபேசியின்
தொடர்பு விட்டுப் போனது.

கவிதை வாசிக்க வாருங்கள்…….

பல ஞாயிற்றுக்கிழமைகள் யோசனை செய்துகொண்டே இருந்தேன். காலையில் 7.30 மணிக்கு சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் ஏறினால், இரவு 7.30 மணி ஆகிவிடும். ஓவ்வொரு ஸ்டேஷனிலும் கூட்டம் அலைமோதும். ஆனால் என்னை கவர்ந்த ஒரு விஷயம் பென்சுகள். மரத்தடி பக்கத்தில் பளபளவென்று கருப்பு நிறத்தில் இருக்கும் சலவைக்கல் பெஞ்சுகள். இதுதான் எல்லோரையும் சந்திக்கும் இடமாகத் தோன்றியது. என் அலுவலக நண்பர் ஒருவரை பல மாதங்கள் பார்க்கவில்லை. அவரை மாம்பலம் ரயில் நிலையத்தில் சந்தித்தேன். பெஞ்சில் அமர்ந்துகொண்டு வெகுநேரம் பேசினோம்.

திடீரென்று எனக்கு ஐடியா தோன்றியது. ஏன் கவிதை வாசிக்கக் கூடாது? என்று. முதலில் கவிதை எழுதுபவர்களில் பலர் இதுமாதிரி இடத்திற்கு வந்து கவிதை வாசிக்க வர மாட்டார்கள். ஆனால் நிச்சயமாக சிலர் வருவார்கள். எல்லோரையும் கூப்பிடலாம் என்றெல்லாம் யோசனை செய்து கொண்டிருந்தேன். தாம்பரம் முதல் பீச் வரை உள்ள எந்த ஸ்டேஷனிலும் அமர்ந்துகொண்டு கவிதை வாசிக்கலாம் என்றெல்லாம் தோன்றியது. முதலில் ஒரு ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுத்து கவிதை வாசிக்கலாம் என்று தோன்றியது. கவிதை வாசிக்கலாம். ஆனால் போலீஸ் அனுமதி வாங்க வேண்டும் என்று ஒருவர் சந்தேகம் கிளப்பினார். அந்த ஞாயிற்றுக்கிழமை அது குறித்து யோசனை செய்து விட்டுவிட்டேன். வெறுமனே பெஞ்சில் சிலர் அமர்ந்து கவிதை வாசிக்க என்ன அனுமதி தேவை என்பது எனக்குப் புரியவில்லை. மேலும் இது தேர்தல் நடக்கப் போகிற குழப்பமான சூழ்நிலை. மேலும் பேப்பரில் விளம்பரப் படுத்தப் போவதில்லை. போனில் தொடர்புகொண்டு எல்லோரையும் கூப்பிட்டு உட்கார்ந்து கவிதை வாசிக்கப் போகிறோம்.

எதற்கும் இதற்கு அனுமதி கேட்கலாம் என்று ஒரு ஸ்டேஷனை அணுகி அங்குள்ள ஸ்டேஷன் மாஸ்டரை விஜாரித்தேன். ‘கொஞ்சம் பேர் கவிதை வாசிக்கப் போகிறோம்…அனுமதி கேட்கவேண்டுமா? கொடுப்பார்களா?’ என்று கேட்டேன். ‘ஸ்டேஷன் மாஸ்டர் அனுமதி கொடுத்தால் போதும்,’ என்றார்.
நேற்று (அதாவது 5.04.2009) ஞாயிற்றுக்கிழமை கவிஞர்கள் கூடி கவிதைகள் வாசிக்கலாம் என்ற தீர்மானத்தின் அடிப்படையில் பலரை அழைத்தேன். போன் செய்த நண்பர்களிடமும் நீங்களம் கூப்பிடுங்கள் என்றேன். 7 பேர்கள் வந்தோம். முதலில் திரிசூலம் என்ற ரயில்வே நிலையத்தைத் தேர்ந்தெடுத்தோம். ஒரு பக்கம் முழுவதும் மலை. இன்னொரு பக்கம் ஏர் போர்ட். மரங்கள் சூழ்ந்த பெஞ்சுகள் எங்களை வரவேற்றன.

முதலில் இது எந்த நோக்கமே இல்லாத கூட்டம். எல்லோரும் கவிதை வாசிப்பதுதான் முக்கிய நோக்கம். அதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. ஆனால் கவிதையைக் குறித்தும் பேசத்துவங்கினோம். முதலில் கவிதை ஏன் புரியவில்லை என்பது குறித்து பேச்சு திரும்பி விட்டது. அது குறித்தே ரொம்ப நேரம் பேசத் துவங்கினோம். கவிதை என்றாலே ஒருசிலரை மட்டும் ஏன் குறிப்பிடுகிறார்கள். பலர் புறக்கணிக்கப்பட வேண்டிய காரணம் என்ன என்பதைப் பற்றி பேசினோம். கூட்டம் ஆரம்பத்தில் சமீபத்தில் மறைந்த கவிஞர் அப்பாஸ் அவர்களுக்கும், எஸ் சுகந்தி சுப்பிரமணியத்திற்கும் அஞ்சலி செலுத்தினோம். சுகந்தியின் பெருன்பான்மையான கவிதைகளை ஆளுக்கு ஒன்றாக வாசித்தோம்.

மலையைப்பற்றியும், மின்சார வண்டியைப்பற்றியும் கவிதைகள் வாசித்தோம். உண்மையில் இப்படி கவிதை வாசித்துக் கேட்பது சிறப்பாகவே இருந்தது. எனக்கு இது வாரம் ஒருமுறை வாசிக்க வேண்டும் என்பது அவா. ஆனால் சில நண்பர்கள் மாதம் ஒரு முறை போதும் என்று கூறினார்கள். இறுதியில் மாதம் இருமுறை என்று ஒப்புக்கொண்டார்கள்.

எனக்குத் தெரிந்து இன்னும் பல நண்பர்கள் கவிதை வாசிக்க வரவில்லை. மேலும் பல இடங்களில் இது மாதிரியான ஒரு முயற்சியை பல நண்பர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்க் கவிதைக்கு அவ்வளவு மரியாதை குறைவு. கவிதைப் புத்தகங்கள் விற்பதே இல்லை. நூலகங்களும் கவிதைத் தொகுதிகளை ஆதரிப்பது இல்லை. கவிதை எழுதத் தெரிந்த முதல்வராக இருந்தாலும், கவிதை எழுதத் தெரியாத முதல்வராக இருந்தாலும் நிலைமை இப்படித்தான்.

இக் கூட்டத்தில் படித்த கவிதைகளை Panasonic Mini Cassette Recorder மூலம் பதிவு செய்தேன். ஆனால் 60 நிமிடம் ஆனபிறது காசெட்டின் ஒரு பகுதி முடிந்துவிட்டது. அடுத்தப் பகுதியைப் போட மறந்துவிட்டேன். அதேபோல் காமிரா எடுத்துக்கொண்டு போய் படம் எடுக்க மறந்துவிட்டேன். எடுத்திருந்தால் அதே இங்கே வெளியிட்டிருப்பேன்.

இங்கே ஒரு சம்பவத்தைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. சமீபத்தில் எஸ் சண்முகம் என்ற என் இலக்கிய நண்பரின் புத்தக விமர்சன கூட்டம் நடந்தது. பல்கலைக் கழகத்தில். பலர் வந்திருந்தார்கள். தமிழவன் வந்திருந்தார். லண்டனிலிருந்து நாகார்ஜூனன் வந்திருந்தார். திலீப் குமார், அம்ஷன் குமார், இந்திரன், எஸ் ராமகிருஷ்ணன் என்றெல்லாம் வந்திருந்தார்கள். பிரமாதமாக எல்லோரும் பேசினார்கள். சண்முகம் அக் கூட்டத்தைப் பதிவு செய்யவில்லை. போட்டோ எடுத்துக்கொள்ளவில்லை. எனக்கு இது சற்று வருத்தம். இது மாதிரி ஒரு சந்திப்பு இன்னும் அப்படி நிகழுமா என்று தெரியவில்லை. சண்முகத்திடம் என் ஆதங்கத்தை தெரிவித்துக் கொண்டேன்.

நானும் பல கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். பல கூட்டங்களை பதிவும் செய்தும் இருக்கிறேன். பதிவு செய்யாமல் விட்டிருக்கிறேன். திரும்பவும் பதிவு செய்ததைக் கேட்கும்போது சந்தோஷமான அனுபவமாக இருக்கும்.

நேற்று நாங்கள் பேசிய பேச்சுகளையும், கவிதைகளையும் திரும்பவும் காசெட்டில் போட்டுக் கேட்டுக்கொண்டே இருந்தேன். எங்கள் பேச்சின் நடுவில் மின்சார வண்டிகளின் சப்தம் என்றெல்லாம் இருந்தது. எல்லோருக்கும் ஒரு கவிதையை எப்படி அழுத்தம் திருத்தமாக வாசிக்க வேண்டுமென்கிற பயிற்சியும் இதனால் ஏற்படும் போல் தோன்றியது.

நாங்கள் யார் யார் வந்திருந்தோம் என்பதை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். நான் (அழகியசிங்கர்), க்ருஷாங்கினி, லதா ராமகிருஷ்ணன், ரா ஸ்ரீனிவாஸன், லாவண்யா, படுதலம் சுகுமாரன், மணி, மூர்த்தி என்று எட்டுப்பேர்கள் கலந்துகொண்டோ ம். நான் ஸ்ரீனிவாஸன் கவிதை ஒன்றை எடுத்துப் படித்தேன். படித்தப் பிறகு அக்கவிதையைக் குறித்து என் சிந்தனை சுழன்றவண்ணம் இருந்தது. பொட்டு என்ற அக் கவிதையை உங்களுக்கும் வாசிக்க அளிக்கிறேன்.
ரா ஸ்ரீனிவாஸன்

பொட்டு

எண்ணையிட்டுச் சீவிய கூந்தலில்
மணக்கத் தயங்காது மல்லிகை
முகத்தில் மிகையாய் பூச்சு
உதட்டுச் சாயம் எடுப்பாய்த் தெரியும்
செவிகளில் தொங்கும் கம்மல்கள் போலி
கழுத்தில் முத்துக் கோர்த்த கருமணி மாலையோடு
சாளரம் வைத்த ரவிக்கையும் வாவென்று அழைக்கும்
வழவழ வெனக்காணும் சேலைகள்தான் அணிவாள்
வயது என்ன முப்பதுக்குள் இருக்கும்
தோள்பையில் என்னென்ன இருக்கும்
மாநிறத்திற்கோர் மாற்றுக் குறைவாய் அவள் நிறம்
நெற்றியிலெழுதி ஒட்டப்படவில்லை
என்றாலும் அவளைக் கண்டால்
ஐயமறத் தெரிய வரும்
காலையில் அலுவல் நேரம்
துவங்கும்போது அவளும் துவங்குவாள் உலாவ
நெடுஞ்சாலையின் நடைபாதையில்
ஆபரணப் போலிகள் விற்கும்
முஸ்தபாவிற்கு அவள் கைராசி
ஒவ்வொரு காலையும் கல்லாப் பெட்டியைத்
தொட்டுவிட்டுச் செல்லக் கேட்டுக்கொள்வார்
தேநீர் அருந்திய பின்பு
நின்றிருப்பாள் – பேருந்து நிறுத்தம்
அல்லாது போனால் சுரங்கப்பாதை நுழைவாயிலருகே
பாய்ந்து ஒளிவாள் போலீஸ்காரரைக் கண்டால் மட்டும்
குற்ற மன்றங்களில் கட்டிய அபராதத்திற்குக்
கணக்கில்லை அவள் வசம்
சுழலும் விழிகளால் வலைகள் வீசுவாள்
தனக்கு ஐம்பது தங்கும் விடுதிக்கம்பது
அவகாசம் இரு மணி நேரம்
என்பதவள் நிர்ணயம் குறைந்தபட்சம்
பேரம்படியா வாடிக்கையாளரை
வேசி மகனென்று ஏசவும் செய்வாள்
நொடிக்கோர் முறை எச்சில் உமிழும்
கொடியதோர் பழக்கம் அவளுக்கு
இரவில் இருப்பிடம் திரும்பும்போது
பரிசுச்சீட்டுகள் அலுக்காமல் பெறுகிறாள்
ஏதோவொன்று அவளிடம் குறைந்திருக்கக் கண்டு
சீட்டு விற்பவன் வியப்புடன் கேட்டான்
நெற்றிக்குப் பொட்டு இட்டுக்கொள்வதில்லையா?
வெற்றிடமாய் காணப்பட்ட நெற்றியை விரல்களால் தொட்டபடி
அவள் சொன்னாள் பெருமிதம் பொங்க
மரித்துவிட்ட கணவன் நினைவாய்
பொட்டு மட்டும் இட்டுக்கொள்வதில்லை………..

கவிதை வாசிப்பு முடிந்து வீட்டிற்கு வரும்போது கிட்டத்தட்ட மணி பத்தாகிவிட்டது. இன்று காலை எழுந்தபோது கவிஞர் நேசனிடமிருந்து ஒரு செய்தி. கவிஞர் சி மணி இறந்து விட்டதாக. என்ன கவிஞர்களுக்கெல்லாம் போதாத காலமா என்று தோன்றியது. சி மணியை நான் பார்த்ததில்லை. அவர் நடத்திய நடை பத்திரிகையை அறிவேன். மரபு மீது சி மணிக்கு அலாதியான ப்ரியம். அவர் கவிதைகள் படிக்கும் போது சிலசமயம் ஞானக்கூத்தன் கவிதைகள் ஞாபகம் வரும். வே மாலி என்ற பெயரிலும் அவர் கவிதைகள் எழுதியிருக்கிறார். எனக்குத் தெரிந்து வெகுகாலம் அவர் கவிதைகள் எழுதாமல் இருந்து விட்டார். அவருக்கும் உரிய கவுரவம் கிடைக்கவில்லையோ என்று தோன்றும். அவரை இழந்து நிற்கும் அவர் குடும்பத்தார்க்கு விருட்சம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கோவில் யானை

கோவிலில்
எப்போதும் பார்க்க முடிகிறது
அந்த யானையை

காசு தந்தால் பாகனுக்கு
தின்பண்டங்கள் அதற்கு
எதுவாயினும் பதிலுக்கு ஆசீர்வதிக்க
தவறியதில்லை

கழுத்து மணியை ஆட்டி
தனக்கான இசையை பிறக்கச்செய்கிறது
பிறருக்கு கேட்காத எதோவொரு தாளத்திற்கு
பெருத்த உடலை அசைத்துக் கொள்கிறது

தொலைதொடர்புகளற்ற அதன் உலகில்
காட்டுலா குறித்த ஏக்கங்களோ
பிச்சையெடுக்கும் தன்னிலை குறித்த
கவலைகளோ
இல்லாதிருக்கலாம்
முதன்முதலாய் இன்னொரு யானையை
முகாமில் சந்திக்கும் வேளை
என்ன சொல்ல எத்தனிக்கும்
கோவில் யானை?

நிழற்படங்கள்

சிறுகதை
`நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். மிகவும் சோகத்துக்குள்ளான அந்த நண்பரது கண்கள் எனது கண்களை நேரே பார்த்தன. பின்னர் தாழ்ந்துகொண்டன. அறையிலிருந்த என் கணவர் ‘என்னடா இது?’ என்பது போல முறைப்புமில்லாமல் அதிகளவான திகைப்புமில்லாமல் கேள்வியோடு என்னைப் பார்த்தார். ‘பொண்ணு வீட்டுக்கும் இந்த போட்டோவைத்தான் கொடுத்தீங்களா?’ என்ற எனது கேள்வி, இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டியின் சத்தத்தோடு யன்னல்களேதுமற்ற அந்த அறையின் எல்லாப்பக்கங்களிலும் பதில்களற்று உலாவருமென எனக்கு எப்படித்தெரியும்? நான் விளையாட்டாகத்தான் அதைக் கேட்டேன்.
சில நிகழ்வுகளையொட்டிக் கேள்விகள் தானாக உதித்துவிடுகின்றன. எல்லாக் கேள்விகளுக்கும் எல்லோரிடமும் பதில்கள் இருப்பதில்லை. சொல்ல வேண்டிய பதில்களைக் காலம் கொண்டிருக்கும். அதன் வாய்க்குள் புகுந்து விடைகளை அள்ளிவர எல்லோராலும் இயல்வதில்லை. அவ்வாறு இயலாமல் போனவர்கள் மௌனம் காக்கிறார்கள். இல்லாவிடில் சிரிக்கிறார்கள் அல்லது அழுகிறார்கள். வேறு ஏதேனும் சொல்லிச் சமாளிப்பவர்களும் இருக்கிறார்களெனினும் அந்தக் கேள்விக்கு அந்த மழுப்பல் உண்மையான பதிலென ஆகிவிடுவதில்லை.
அவ்வளவு நேரமும் சிரிப்பும் கேலியும் கிண்டலும் மிதந்து வழிந்தபடியும், பிறக்கப்போகும் எமது குழந்தைக்கான ஆடைகள், பொருட்கள் நிரம்பியுமிருந்த அறைக்குள் சில கணங்கள் மௌனம் வந்தமர்ந்தது. ‘ஏதாவது சாப்பிடுறீங்களா?’ எனக் கேட்டபடி கணவர்தான் அம் மௌனத்தைக் கலைத்துவிட்டார். கணவரது நண்பர் தனது நாட்குறிப்பும் ஆடைகளுமிருந்த பெட்டியில் மீண்டும் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அவர் எனக்கும் கணவருக்கும் காட்டிய பாஸ்போர்ட் புகைப்பட அளவான அவரது பதினைந்து வருடங்களுக்கு முன்னரான ஓர் நாளின் ஓர் கணத்தினை உள்ளடக்கிய இளமைக்காலப் புகைப்படம் அமைதியாகக் கட்டிலில் கிடந்தது.
கணவர் தான் அமர்ந்திருந்த கட்டிலிலிருந்து எழுந்தார். குளிரூட்டி திறந்து தோடம்பழங்களை எடுத்துக்கொண்டு வெளியே சென்று தோலுரிக்கத் தொடங்கினார். நண்பர் தனது நாட்குறிப்பினை எடுத்து அதன் முதல் பக்கத்தின் இடதுபுறத்திலிருந்த பொலிதீன் உறைக்குள் அப் புகைப்படத்தை வைத்துப் பத்திரப்படுத்தினார். அவர் அதில் எனது கணவரின் இப்போதைய வயதுகளில் மிகவும் இளமையாக இருந்தார். ஒரு காலத்தில் அவருக்கு முன்நெற்றியில் அடர்ந்த முடி இருந்திருக்கிறது. அவர் இன்றுதான் எமது நாட்டிலிருந்து வந்திருந்தார். மதியம் சாப்பிட்டுவிட்டு, வந்த களைப்புப் போகக் கொஞ்சம் தூங்கியெழுந்திருந்தார். அந்தப் புகைப்படம் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார். அதனை பாஸ்போர்ட் எடுக்கவென பதினைந்து வருடங்களுக்கு முன்னர் எடுத்தாராம். பின்னர் அதனையே வாகன அனுமதிப்பத்திரம் எடுக்கவும் விசாக்கள் எடுக்கவும் இன்ன பிற தேவைகளுக்கும் இன்றுவரை பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும் சொல்லிச் சிரித்தார். அப்பொழுதுதான் நான் இந்தக் கேள்வியைக் கேட்டுச் சிரித்தேன்.
இவர் வருவதைப் பற்றி கணவர் முன்னரே சொல்லியிருந்தார். எனக்கும் அவருக்கும் திருமணமாகி இன்னும் முழுதாக ஒருவருடம் கூட ஆகவில்லை. ஒரு பெரிய வீட்டுக்குள் நாமிருவரும் மட்டுமென்பதால் தினம் எம்மிருவருக்கும் பேசப் பல விடயங்கள் இருந்தன. நேற்றைய இரவு இவர் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உண்மையில் இருவரோ பலரோ சேர்ந்திருக்கும் இடத்தில் அங்கு இல்லாத ஒருவரது பெயரை அல்லது நிகழ்வின் முனையொன்றை சபையில் இழுத்துவிட்டால் போதும். அவரது பிறப்பு முதல் இன்று வரை தானறிந்ததெல்லாம் அவரை அறிந்தவர்கள் ஒவ்வொருவர் வாயிலிருந்தும் வெளிப்படும். அவரது இதுவரையான நடவடிக்கை, நடத்தைகள் அலசப்பட்டு அங்கிருக்கும் நீதிபதிகளால் அவர் குறித்து தீர்ப்பெழுதப்படும். அதுதான் நேற்றைய இரவு எனக்கும் கணவருக்குமிடையில் நடந்தது.
வரப்போகும் நண்பர் குறித்து சும்மாதான் இவரிடம் கேட்டுவைத்தேன். அவருக்குப் பெண் பார்க்கப் புகைப்படம் கொடுக்கும் தேவையற்று அவராகவே அனாதை விடுதியொன்றிலிருந்து தனது மணப்பெண்ணைத் தேர்ந்தெடுத்தது எனக்கு நேற்றே தெரியும். ஆனாலும் இக் கேள்வி வெளிக்கிளம்பிய சமயத்தில் அது என் நினைவில் இருக்கவில்லை. எல்லோருடைய எல்லா நிகழ்வுகளையும் கொண்ட நினைவுகளைக் காவித்திரியும்படியான மனம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நிச்சயமாக எனக்கு அது இல்லை.
நான் மிகவும் மறதியானவளென அம்மா கூடச் சொல்வாள். எனது தந்தைவழி, தாய்வழி தூரத்து உறவுகளை நெடுநாட்களின் பின்னர் சந்திக்கையில் நான் பல தடவைகள் அவர்களின் பெயர்களையும் அவர்களோடு எனக்கிருக்கும் உறவுமுறைகளையும் மறந்துவிடுவேன். பிறகு வந்து அம்மாவிடம் கேட்கும்பொழுதில் அம்மா இதனைச் சொல்வாள். அப்படியே என்னிடம் தனதும் அப்பாவினதும், அவர்கள் இருபுறத்தினதும் முந்தைய உறவுமுறைகள் குறித்தும் மிகவும் பொறுமையாக விலாவாரியாக சொல்லத் தொடங்குவாள். அம்மாக்கள் எப்பொழுதுமே பழைய ஞாபகங்களின் ஊற்றுக்கள். அவ்வூற்றுக்களைக் கிளறி பழங்கதைகள் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.
நேற்றிரவு கணவர் இந் நண்பரது காதல் குறித்துச் சொன்னபோதும் அப்படித்தான் கேட்டுக்கொண்டிருந்தேன். மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாமா மகள் மேல் அறிந்தவயது முதல் காதல். இரு வீட்டினரும் ஒன்றும் சொல்லவில்லையாம். இவரும் இவரால் இயன்றவிதமெல்லாம் அந்த வீட்டுக்கு உதவியிருக்கிறார். அந்தப் பெண் நல்ல அழகியாம். அழகான பெண்களெல்லாம் ஊரின் நிலாக்களென நினைக்கிறேன். எந்தத் தெருவில், எந்தப் பெண் அழகாக இருக்கிறாளென ஊரின் இளைஞர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். பெண்களிடமும் ஆண்கள் குறித்து இது மாதிரியான பட்டியல்கள் இருக்கின்றன.
சொல்லவந்த விடயத்தை விட்டு வேறெங்கோ போய்க்கொண்டிருக்கிறேன். ஏனோ எனக்கு எல்லாவற்றையும் கோர்வையாகச் சொல்லத் தெரியவில்லை. அடிக்கடி இதுபோல ஏதேனும் சொல்ல வந்து வேறொன்றைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பேன். சிறுவயது முதலே இப்படித்தான். பாலர் வகுப்பில் எனது பென்சில் திருடிக்கொண்டு போனவனை எனக்குத் தெரியும். ஆனாலும் வீட்டுக்கு வந்து அப்பாவிடம் சொல்லி அவர் அங்க அடையாளங்கள் கேட்டபோது வெள்ளைச் சட்டை, நீலக் களிசானென பள்ளிச் சீருடை குறித்துச் சொன்னேன். கோபத்துடன் கேட்டுக்கொண்டிருந்த அப்பா சட்டெனச் சிரித்துவிட்டார். வார்த்தைகள் எப்பொழுதும் இப்படித்தான். மனித உணர்வுகளை உடனுக்குடன் மாற்றும் வித்தைகளை அவை அறிந்திருக்கின்றன. அவற்றின் சாவிகளைக் கொண்டிருக்கின்றன.
அந்தப் பெண் மிகவும் அழகானவளென்பதோடு இவரை உயிருக்குயிராகக் காதலித்தாளாம். ஒரு சமயத்தில் இவருக்கு வியாபாரம் நொடித்து வெளிநாடு வர நேர்ந்ததும் இரு வீட்டாரும் சேர்ந்து இருவருக்கும் நிச்சயம் செய்துவிட்டு இவரை வெளிநாடு அனுப்பிவைத்திருக்கிறார்கள். அப் பெண்ணை எங்கோ கண்ட, இவரை விடவும் சொத்துக்கள் நிறைந்தவனாக இருக்கக் கூடுமானவொரு செல்வந்த இளைஞன், அவளை மணமுடிக்கவென ஆசைப்பட்டு இவரது மாமாவிடம் கேட்டபோது மறுப்பேதும் சொல்லாமல் இவரது மாமா முந்தைய நிச்சயத்தை முறித்து அவளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்து விட்டாராம். பணத்துக்கு எல்லாச் சக்தியுமுண்டென பலரும் சொல்வது உண்மையாக இருக்கக் கூடும். அல்லது அதனை எல்லோரும் போல நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைதான் பணத்துக்கு அந்தச் சக்தியைத் திணிக்கிறது. பணமும், அது சார்ந்த நம்பிக்கையும் தான் பலரது வாழ்க்கையை வழிநடத்துகிறது, சீரழிக்கிறது.
அவளுக்குத் திருமணமானதை அறிந்து இவர் மிகவும் உடைந்துபோனார். நீண்ட காலக் காதலைத் தன் நெஞ்சிலே கொண்டிருந்த அந்தப் பெண்ணும் மிகவும் மனவேதனைப் பட்டிருக்கக் கூடும். அழுதிருக்கக் கூடும். திருமணத்திற்குச் சம்மதிக்க மாட்டேனென அடம்பிடித்திருக்கக் கூடும். பெண்ணை ஒரு விடயத்திற்கென வலியுறுத்துவது ஆணுக்கு மிக இலகுவான விடயமோ எனத் தோன்றுகிறது. அவளது பிடிவாதங்களை, உறுதியான முடிவுகளை உடைப்பதற்கென்றே ஆண்கள் பல ஆயுதங்களைத் தங்களிடம் கொண்டிருக்கிறார்கள்.
இப்படித்தான் எனது பக்கத்துவீட்டுப் பெண்ணுக்கு அவளது காதலனை மறந்துவிடும்படி சொல்லி அவளது பெற்றோர் முதலில் நன்றாகத் திட்டிப் பார்த்தார்கள். அடித்துப் பார்த்தார்கள். அவள் அசைந்து கொடுக்கவில்லை. அவளது அம்மாவும் அப்பாவும் விஷக் குப்பியைக் கையில் வைத்தபடி அவனை மறக்காவிட்டால் தாங்கள் செத்துப் போவதாகச் சொல்லி அழுதார்கள். அதுவரை அழுது பார்த்திராத அவளது அப்பாவின் கண்ணீர் அவளை அசைத்தது. ஆண்களின் கண்ணீருக்கு இளகிவிடும் தன்மை பெண்களிடம் இருக்கிறது போலும். அடிக்கு மிரளாதவள் அன்புக்கு அடங்கிப் போனாள். பிறகு இரவு தோறும் காதல் நினைவுகள் வாட்ட, தலையணையால் கண்ணீர் துடைத்தபடிக் கிடந்தவள் அடுத்தநாள் காலையில் அதே விஷத்தைக் குடித்துச் செத்துப்போயிருந்தாள். இப்படித் தாங்களே மகளைச் சாகடித்ததற்கு அவனுடனே சேர்த்து வைத்திருக்கலாமேயென அப்பாவும் அம்மாவும் பிணத்தினைப் பார்த்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். பல சாவுகள் தாங்கள் அமைதியாக இருந்து பார்த்திருப்பவர்களுக்கு பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றன.
பக்கத்துவீட்டுப் பெண்ணெதற்கு? எனக்கே ஒரு காதலிருந்தது. ராகுலன் என்றொருவன். நேரில் பார்த்துக் கொண்டதில்லை. இணையத்தில் அறிமுகம். சில நாட்கள் தொடர்ந்து பேசியதில் காதல் வந்தது. பெண்கள் தங்கள் பார்வையாலே ஆண்களைக் கவர்ந்து விடுவதைப்போல ஆண்களால் முடிவதில்லை. ஆண்களின் பார்வைக்குப் பெண்களிடம் அதிகளவான ஈர்ப்பில்லை. ஒரு பெண் நடந்துபோனால் திரும்பிப் பார்க்கும் பல ஆண்களுள் தனக்கான ஆணை மட்டும் கண்டுபிடிப்பது மிகவும் கடினமென அவள் உணர்ந்திருக்கிறாள்.ஆண்கள் பெண்களைக் கவரவேண்டுமென்றால் பேசவேண்டும். மிக அழகான வார்த்தைகள் கூட வேண்டாம். அவனது அன்பு சொரியும் இலட்சியங்களை அவளறிய வைத்தால் போதும்.
ராகுலன் அப்படித்தான் பேசிக்கொண்டிருந்தான். அவனது இலட்சியமே ஒரு விதவைப் பெண்ணுக்கு வாழ்வு கொடுப்பதுதானென முதலில் சொல்ல ஆரம்பித்தபோது மிகவும் மகிழ்ச்சியாகிப் போய்விட்டது எனக்கு. புகைக்கும் பழக்கமோ, மதுப்பழக்கமோ தனக்கு கிஞ்சித்தேனும் இல்லை என்றான். பிற பெண்களிடம் வீணாகப் பேசுவது கூட இல்லையென்றான். எனது புகைப்படம் கேட்டான். அனுப்பி வைத்தேன். அதைப்பார்த்த கணத்திலிருந்து என்னைக் காதலிப்பதாக அழகிய வார்த்தைகளில் சொன்னான். இலட்சியம் என்னவாயிற்று என நான் கேட்கவில்லை. அவனனுப்பியிருந்த புகைப்படத்தில் நெற்றியில் திருநீரெல்லாம் இட்டு ஒரு அப்பாவித்தனமான களையை முகத்தில் காட்டியபடி புன்னகைத்துக் கொண்டிருந்தான். அவனைச் சாந்தசொரூபியெனக் கண்ட நான் காதலில் விழுந்தேன். தொடர்ந்தும் புகைப்படங்கள் பரிமாறிக் கொண்டோம். காதலை தினம் தினம் உரையாடல்களிலும் மின்னஞ்சல்களிலும் சொல்லிக்கொண்டோம்.
பின்பொருநாள் தற்செயலாக கல்யாணம் செய்து குடும்பமாக வாழ்வதை வெறுத்த முற்போக்குவாதித் தோழியிடம் அவளது காதலைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்த போது அவள் அவளது காதலனென்று சொல்லி ராகுலனின் புகைப்படங்கள் சில அனுப்பியிருந்தாள். அதில் ராகுலன் அரை நிர்வாணமாக, கையில் மதுப்புட்டியுடன், இரு பக்கமும் இரு பெண்களை அணைத்தபடி லேசாக ஆடிக்கொண்டிருந்தான். இது போலப் பல புகைப்படங்களைக் காட்டினாள். கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழும் முற்போக்கு இலட்சியம் அவனிடமும் இருப்பதாகச் சொன்னதால்தான் தான் அவனைக் காதலிப்பதாகத் தோழி சொன்னாள். அவனுக்கு அவளிடம் வேறு பெயர். வேறு முகமூடி.
நல்லவேளை எனது பெற்றோருக்கு என்னைத் திட்டவோ, அடிக்கவோ, மிரட்டவோ வைக்காமல் நானாகவே அவனை விட்டும் நீங்கிக் கொண்டேன். ஒரு நம்பிக்கைத் துரோகியுடனான, ஒரு பெண்பித்தனுடனான காதலை அன்றொழித்தது தான். அதற்குப் பிறகு எப்பொழுதாவது அவனைப்பற்றி ஏதாவது செய்தி வந்துகொண்டிருக்கிறது. தன்னை இரண்டு கிலோ தங்கத்துக்கும் ஒரு வாகனத்துக்கும் விற்று ஒரு பணக்காரப்பெண்ணை அவன் திருமணம் செய்துகொண்டதாக சமீபத்தில் செய்தி வந்திருக்கிறது. அந்த மணப்பெண் மேல் மிகுந்த அனுதாபம் எனக்குள் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அவனோடு இன்னும் எத்தனை பொய்களை அவள் எதிர்கொள்ள வேண்டுமோ?
உண்மைக்காதல்கள் மட்டும் தான் எப்பொழுதும் துயரங்களைக் கொண்டிருக்கும். கசப்பு மருந்தின் வெளிப்புற இனிப்புப் பூச்சைப் போல துயரங்களுக்கு மேல்தான் உண்மைக்காதல் தடவப்பட்டிருக்கும். சிறிதாவது அதன் மேற்பகுதி உராய்ந்துவிடும் போது துயரச் சுவையை வெளிக்காட்டும். எனக்கும் இதே கதைதான். நான் ராகுலனை உண்மையாகவே நேசித்திருந்ததை அவனை விட்டகன்று விட்ட பின்னர்தான் உணர்ந்தேன். என் முதல் காதல் தந்த துயரை, வாட்டத்தை அப்பொழுதுதான் உணர்ந்தேன். நீண்ட நாள் உண்ணப்பிடிக்காமல், இணையம் வரப்பிடிக்காமல் பசியிலிருந்திருக்கிறேன். தாகித்திருந்திருக்கிறேன். அழுதுகொண்டே இருந்திருக்கிறேன். ஆனால் நான் பிரிந்த வருத்தம் அந்த நயவஞ்சகனுக்கு, ஏமாற்றுக்காரனுக்குக் கொஞ்சமேனும் இருந்திருக்காது. அவனுக்கென்ன ? கடலில் ஒரே ஒரு அப்பாவி மீனா இருக்கிறது? தொடர்ந்தும் வலைவீசுவான். சிக்குவதையெல்லாம் சீரழித்துக் கொல்வான்.
இந்த நண்பர் பிறகு பல வருடங்களை மிகவும் கவலையோடு வெளிநாட்டிலேயே கழித்தார். முதலில் இழந்த காதலியை நினைத்து நினைத்தே தான் திருமணம் செய்ய மறுத்தவர் பிறகு நாட்டுக்குப் போய் வீட்டாரின் வேண்டுகோளுக்காகச் சம்மதித்து, தானே ஒரு அநாதை விடுதியிலிருந்து விபத்தில் சிக்கி முகத்தில் பல தழும்புகளைக் கொண்டிருந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளை நல்ல வசதியாக, மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார். இரண்டு குழந்தைகள் கூட உண்டு. இவர் மணமுடிக்க இருந்த மாமா பெண்ணின் வாழ்க்கை சில வருடங்களில் துன்பத்துக்குள் ஆழ்ந்தது. அவளது கணவன் ஒரு விபத்தில் சிக்கி இடுப்பெலும்பு உடைந்து வீட்டில் இருக்கிறான். முன்பு போலவே அவள் தையல்வேலை செய்துதான் குடும்பம் நடக்கிறதாம்.
இவர் பல வருடங்களுக்கு முன் எப்பொழுதோ காதலித்ததை இன்னுமா நினைவில் வைத்திருக்கிறாரென எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கணவர் தோலுரித்து, தோடம்பழச் சுளைகளைத் தனித்தனியாக்கி ஒரு தட்டில் வைத்தெடுத்து வந்து அவரிடம் நீட்டினார். ‘அவள் ரொம்பக் கஷ்டப்படுறா’ எனச் சொன்னபடி குனிந்திருந்த தலையை நிமிர்த்திய நண்பரின் கண்கள் கலங்கியிருந்தன. அந்தக் கண்கள் என்றும் அழியாதவொரு காதலைச் சொல்லின.

கவிதையும் பார்வையும்

கவிதைகள் ஒரே பார்வையைக்கொண்டு வெளி வருகின்றன. அப்படி வெளி வருகின்ற கவிதைகளைப் படிக்கும்போது, ஒரே மாதிரியான கவிதைகளை வாசிக்கிறோம் என்ற உணர்வு எழுந்தாலும், ஒவ்வொரு கவிதையும் வெவ்வேறு உணர்வு உலகத்தை நமக்குச் சித்தரித்துக் காட்டுகிறது. உதாரணமாக சமீபத்தில் மரணத்தைப் பற்றி அதிகமான கவிதைகளை இரு கவிஞர்கள் ஒரே சமயத்தில் எழுதி உள்ளார்கள். இது ஒருவரைப் பார்த்து இன்னொருவர் எழுதியிருக்கலாம் அல்லது கவிதைகளைப் பரிமாறிக்கொள்ளாமலே எழுதியிருக்கலாம். இப்படி வாசிக்கிற கவிதைகளில், கவிதையின் பொருள் ஒன்றாக இருந்தாலும், ஒவ்வொருவரும் மரணத்தை எப்படி எழுதியுள்ளார்கள் என்பதை கவனிக்க வேண்டும். இப்படிப் பார்க்கும்போது மரணத்தைப் பற்றி இவர்கள் இருவர்தான் எழுதி உள்ளார்கள் என்பது அர்த்தமில்லை. இதற்குமுன் மரணத்தைப் பற்றி பலர் எழுதி உள்ளார்கள்.
காலச்சுவடு இதழில் வெளிவந்த ‘சிபிச்செல்வன்‘ கவிதையான ‘சாவிற்காகக் காத்திருக்கும் துயரம் மிகுந்த கணங்கள்’ என்ற கவிதையை எடுத்துக் கொள்வோம். இக் கவிதை மரணத்தைப் பற்றி எழுதப்பட்ட கவிதைகளின் தொடர்ச்சி.
பெருந்துயரிலலைகிறேன் சுடு பாலைவெளிகளில்
இருளடர்ந்த இரவுகளில் வேதனையின் உச்சத்தில்
அலறியழுகிறேன். இரக்கமற்ற இரவுகள்
மெல்ல மெல்ல நெரித்து விளையாடுகின்றன
எல்லையற்ற
பெருவெளியில் சாகிறார்கள்
வாழ்வதற்காக ஆசைப்படுகிறவர்கள்
இதேபோல் ‘பூமா ஈஸ்வரமூர்த்தி’ மரணத்தைப் பற்றி எழுதிய நீண்ட கவிதையைப் பார்ப்போம். ‘சிற்றெறும்பு’ என்ற கவிதை,
சின்ன
சட்டகத்துள்
பாதுகாக்கப்பட்ட
சின்ன கடவுள்
சின்ன மேஜையில்
சின்னக் கிண்ணத்தில்
கல்கண்டு கலந்த பால்
அலையில்லாத
பாற்கடலில்
செத்து மிதந்தன
சிற்றெறும்புகள் மேலே
குறிப்பிடப்பட்ட இரு கவிதைகளையும் கூர்ந்து பார்த்தால், முதல் கவிதையில் தென்பட்ட கவியின் பார்வை எந்த அளவிற்கு மரணத்தைச் சொல்வதில் இரண்டாவது கவிதையிலிருந்து விலகி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளமுடியும். முதல் கவிதையில் வெளிப்பட்ட நெருக்கம், இரண்டாவது கவிதையில் இல்லை. அடிப்படையில் மரணத்தைப் பற்றி கூறினாலும், முதல் கவிதை ஒரு கருத்தை கூறுகிறது. இரண்டாவது கவிதை ஒரு அனுபவத்தை வெளிப்படுத்துகிறது. இக் கவிதைகள் இரண்டும் இருவிதப் பார்வைகளை மரணத்திலிருந்து விலகியே வெளிப்படுத்துகின்றன. பொதுவான அம்சமாக இரு கவிதைகளிலும் மரணத்தைப் பற்றிய பதைப்பு வெளிப்படவில்லை.
ஆனால் முதல் கவிதையில் படிப்பவரின் பிடிப்பு வெளிப்படுவதுபோல், இரண்டாவது கவிதையில் இல்லை. ஞானக்கூத்தன் இதை ஒரே துறையில் எழுதப்படுகிற கவிதைகள் என்று குறிப்பிடுகிறார். இங்கு நாம் ஆராய்வது கவிதை ஒரே துறையில் எழுதப்பட்டாலும், ஒவ்வொரு கவிதையும் எந்தப் பார்வையை முன்னிறுத்துகிறது என்பதுதான்.
உதாரணமாக, 1. அழகியசிங்கர் எழுதிய ‘அவர்’ என்ற கவிதையும்
2. எஸ் வைதீஸ்வரன் எழுதிய, ‘பிரிவுபசாரம்’ என்ற கவிதையும்
3. ஞானக்கூத்தன் எழுதிய, ‘நாயர் ஓய்வுப் பெற்றார்’ என்ற கவிதையும் பார்ப்போம்.
இம் மூன்று கவிதைகளும் நீóóண்ட காலம் பணி புரிந்தவரின் ஓய்வுப் பெறும் அனுபவத்தை மையமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. அதாவது ஓய்வு பெறுதல் என்ற அடிப்படையான துறையைக் கொண்டு, ஆனால் மூன்று விதமான பார்வைகளை நம் முன் இக் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. முதலில், ‘அவர்’ என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம்.
‘எழுந்தவுடன் தெரிந்தது
அவர் பணியிலிருந்து
ஓய்வு பெறும் நாளென்று
இக் கவிதையில் கவியின் குரல் பணியிலிருந்து ஓய்வு பெறும் ஒருவரைப் பற்றி பணிபுரியும் ஒருவர் கூறும் கூற்றாக ஒலிப்பது தெளிவாகத் தெரிகிறது. ஓய்வு பெறும் தறுவாயில் புன்னகை பூத்தவாறு இருப்பதாக கவியின் கூற்றாக வெளிப்படுகிறது.
‘அவர் எப்போதும்
அந்த இடத்தில்
சில சந்தர்ப்பங்களில்
அவர் இல்லாமலிருந்தாலும்
அவர் அமரும் விதத்தில்
என்று விவரிக்கும்போது, ஓய்வு பெறப் போகிற ஒருவரைப் பற்றி, பணியில் இருக்கும் ஒருவர் ஒருவித இரக்க உணர்ச்சியோடு, ஓய்வு பெறுபவர் பற்றிய தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
‘ஏதோ ஒரு தருணத்தில்
எங்கோ ஒரு புள்ளியில்
அலுவலக விதியை
சந்திக்கும் சந்தர்ப்பத்தில்
சிறு சிறு உரசல்கள்
என்று குறிப்பிடும்போது, அலுவலகத்தில் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் இருவரிடையே அலுவலகச் சம்பந்தமாக சில சமயம் தகராறு ஏற்பட்டிருந்தாலும், அதெல்லாம் அலுவலகத்தில் ஏற்படுகிற சாதாரண நிகழ்ச்சியாக விவரிக்கப்படுகிறது. காலையில் எழுந்ததிலிருந்து ஒருவர் ஓய்வுப் பெறும் ஒருவரைப் பற்றி தீவிரமாக தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒற்றைக் குரலைக் கொண்ட கவிதையாக வெளிப்படுகிறது..
இரண்டாவதாக ‘பிரிவுபசாரம்’ கவிதையை எடுத்துக்கொள்வோம்.
உபயோகம் தீர்ந்த
கரும்பலகை எழுத்துக்கள்
ஒரு கைத்துடைப்பின் வீச்சில்
காற்றை
நரைத்த தூசுகளாக்கும்
என்று குறிப்பிடும்போது இக் கவிதையில் பார்வை ஓய்வு பெறும் ஒருவர் மீது கவனத்தைத் திருப்புகிறது. இக் கவிதையில் கவியின் கூற்றாக ஓய்வுப் பெறும் ஒருவரின் வழியாக வெளிப்படுகிறது. அதாவது ‘அவர்’ கவிதையில் ஓய்வு பெறுபவர் பற்றி இன்னொருவர் வைக்கும் பார்வையை கவியின் குரல் தெளிவாக முன் வைக்கிறது. ஆனால் ‘பிரிவுபசாரம்’ என்ற கவிதையில் கவியின் கூற்றாக முன் வைக்கப்படுவது ஓய்வு பெறப்போகிற ஒருவர் பற்றி அவரே தெரியப் படுத்துகிற கூற்றாக ஒலிக்கிறது. இதனால்,
‘அவசரமாய் உடனே
அங்கே உயர்ந்த
பல்வேறு நீளக்கைகள்
ஒரு கூட்டப் பாம்புகளாய்
தெரிகிறது. ஓய்வு பெறுவதில் ஓய்வுப் பெறப்போகும் நபருக்கு விருப்பம் இல்லை என்றும், ஆனால் மற்றவர் கூட்டப் பாம்புகளாய் மாறி துரத்தி விடுவதாக கவிக் கூற்றாக வெளிப்படுகிறது.
மூன்றாவது கவிதையான ‘நாயர் ஓய்வுப் பெற்றார்’ என்ற கவிதையைப் பார்ப்போம். இக் கவிதையிலும் ஓய்வுப் பெறும் ஒருவரைப் பற்றி இன்னொருவர் கூறும் கூற்றாக இக் கவிதையின் பார்வை வெளிப்படுகிறது. ஓய்வுப் பெறப் போகிற நபர் ஒரு மலையாளி.
‘அதற்கு முன்னே ஒருநாள் அவரை
தற்செயலாகத் தெருவில் கண்டேன்
‘வாருங்கள் நாயர் கடையில் தேநீர்
குடிக்கலாம்’ என்றேன்.
அவரென்னைப் பார்த்தார்
இப்படிச் சொல்லும்போது வேண்டுமென்றே குஞ்சு குட்டன் நாயரின் வெங்காய வேர் மீசையில் கோபம் ஏற்படுவதைக் காண முடிகிறது.
குஞ்சு குட்டன் நாயர்
ஓய்வுபெற்ற நாளன்று சம்பிரதாயமாக
எல்லோரும் அவரது சேவையைக்
குறிப்பிட்டுப் பேசினார்கள்.
ரோஜா மாலையை நெருடிக் கொண்டு
நாயர் என்னவோ நன்றி சொன்னார்
என்று இக் கவிதை முடிகிறது. இம் மூன்று கவிதைகளையும் உற்றுப் பார்க்கும்போது, ஓய்வு பெறுகிற ஒரே விஷயத்தை இம் மூன்று கவிதைகள் வெளிப்படுத்தினாலும், மூன்று வெவ்வேறு பார்வைகளை இம் மூன்று கவிதைகளும் வெளிப்படுத்துகின்றன.
‘அவர்’ என்கிற கவிதை ஓய்வு பெறப் போகிற நபரைப் பற்றி அக்கறையை கவிக்குரல் மூலம் வெளிப்படுகிறது. ‘பிரிவுபசாரம்’ என்ற கவிதை ஓய்வுப் பெறுவதற்கு கவிக்குரலோனுக்கு விருப்பமில்லை என்றும், ஆனால் மற்றவர்கள் இரக்கமற்று நீளக் கைகள் கூட்டப் பாம்புகளாய் துரத்துவதுபோல் வெளிப்படுகிறது. மூன்றாவது கவிதையான, ‘நாயர் ஓய்வுப் பெற்றார்,’ என்ற கவிதையில், ஓய்வுப் பெறப்போகும் குஞ்சு குட்டன் நாயருக்கும், கவிக் குரலோனுக்கும் கொஞ்ச நாட்கள்தான் பழக்கம். அதனால்தான் நாயர் ஓய்வுப் பெறும் தறுவாயை
ரோஜா மாலையை நெருடிக் கொண்டு
நாயர் என்னவோ நன்றி சொன்னார்
என்று முடிக்கிறார்.இன்னும் சுருக்கமாகப் பார்க்கும்போது முதல் கவிதை: ஓய்வுப் பெறும் நபர் மீது இரக்கப்படும் சுபாவமாக கவியின் குரல் வெளிப்படுகிறது. இரண்டாவது கவிதை : ஓய்வு பெறுவதை விரும்பவில்லை. ஆனால் வலுக்கட்டாயமாக எல்லோரும் துரத்துவதாக ஒருவித அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. மூன்றாவது கவிதை : ஓய்வுப் பெறப் போவதால் ஏற்படப்போகும் உணர்ச்சிப் போராட்டம் சிறிதும் இல்லை. அதனால் ஓய்வுப் பெறப்போகும் ஒரே சம்பவத்தைக் கொண்ட மூன்று வெவ்வேறான பார்வைகளைக் கொண்ட கவிதைகளாக இதைக் குறிப்பிடலாம்.
( 27.12.2003 அன்று எழுதப்பட்டது)

ஒரு கவிதை


நான்

கூச்சலிட்டுக் கொண்டாடுகிறேன்
என்னுடையதல்ல
இந்த வெற்றி

தேம்பியழுகிறேன்
எனக்கு சம்பந்தமில்லாதது
இந்தத் தோல்வி

ஆடிக்களைத்த
மைதானத்தை நடந்தளந்ததைத் தவிர
சொல்வதற்கு எதுவும் இல்லை

வெற்றியுமில்லை
தோல்வியுமில்லை

சாகசக்காரியின் வெளி

அதீத மனங்களில் மிதந்து வழியும்
ஆசைகளை அவளறிவாள்
தன் வஞ்சக விழிகளில் சிரித்து
மென்மை வழியும் குரலினை
சாம்பல் காலங்களின் முனையினில் மாட்டி
தூண்டிலென எறிவாள்
கபடங்களறியாக் கண்களைக் கொண்ட
பிஞ்சுமனங்களை அவளிடம்
கொடுத்துப் பார்த்திருங்கள்
அல்லது
உலகம் மிகவும் நல்லதெனச்
சொல்லிக் கொண்டிருக்குமொரு மனிதனை
அவளிடம் விடுங்கள்
அம் மனிதன் தானாகவே
முன்பு நல்லதெனச் சொன்ன நாவை
கருஞ்சுவரில் தேய்த்துக்கொள்ளும்படியான
நஞ்சை மிடறாக்கி
அருந்த வைத்திருப்பாள் அவள்
கைவசமிருக்கும்
எல்லா நெஞ்சங்களையும்
கெட்டதாக்கி அழுகவைத்துப்
பின்னொருநாள் புது இதயங்களுக்கு
மீண்டும் தூண்டிலிடவென விட்டுச் செல்வாள்
அழுதழுது நீங்கள்
அவளைத் தேடிச் சென்றால்
உங்களைத் திரும்பச் சொல்லி
மென்மையானதென நீங்கள் சொல்லும்
அவளது பாதங்களால் எட்டியுதைப்பாள்
கொடுந்தீய வார்த்தைகளையெல்லாம்
எச்சிலோடு காறி உங்கள்
வாடிய முகங்களில் துப்பிடுவாள்
பிஞ்சு மனங்களை, நல்ல மனிதனை
வக்கிரங்களறியவென
அவளிடம் கொடுத்த நீங்கள்
இதையெல்லாம்
சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்
ஏனெனில் அவள்
சாகசக்கார வெளியில்
வன்முறைகளை விதைப்பவள்