ஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..

சிறுகதை

ஷார்ஜாவின் அதிகாலை 04:30 மணி; முதலில் டைம்பீஸில் அலாரம் அடித்தது. சுரேந்திரன் எழும்பவில்லை. ஏற்கெனவே முழிப்பு வந்து இன்னும் ஏன் அலாரம் அடிக்கவில்லை என்ற கேள்வியுடன் புரண்டு கொண்டிருந்த பியூலாராணி தான் அலாரத்தை நிறுத்தினாள். மீண்டும் 4:40க்கு கைத்தொலை பேசியில் அலாரம் அடித்தது. அப்போதும் அவன் விழிக்க வில்லை.
இம்முறையும் பியூலா தான் எழுந்து அலாரத்தை அணைத்தாள். சரியாக அணைத்திருக் கிறோமா என்று விளக்கைப் போட்டு சரிபார்த்துக் கொண்டாள். ஏனென்றால் கைத்தொலைபேசியில் அலாரம் சரியாக அணைக்கப்படாவிட்டால் ஒவ்வொரு பத்து நிமிஷத்திற்கொரு முறை அலறித் தொலைக்கும். அசந்து தூங்குபவனைப் பார்க்க கொஞ்சம் பொறாமையாக இருந்தது. தூக்கம் எத்தனை பெரிய வரம்! அவளுக்குத் தான் எவ்வளவு முயன்றும் அந்த வரம் வசப்படுவதே இல்லை. அவள் ஆழ்ந்து தூங்கி அனேக நாட்களாகி விட்டது.
மசூதியிலிருந்து அதிகாலைத் தொழுகைக்கான ‘பாங்கு’ ஒலிக்கத் தொடங்கிய போது இலேசாய் புரண்டு படுத்தான். இனிமேல் இவனை உறங்க விட்டால் காலதாமதமாகி கம்பெனி வண்டி இவனை விட்டு விட்டுப் போய் விடும் என்பதால் தூங்குபவனைத் தட்டி எழுப்பினாள். “ப்ளீஸ் பியூலா; இன்னொரு அஞ்சு நிமிஷம் மட்டும் தூங்க விடு…..” என்று கெஞ்சினான் கண்களைத் திறக்காமலேயே. “இப்பவே ரொம்ப நேர மாயிருச்சு; உங்க டிரைவர் உங்கள விட்டுட்டுத்தான் போகப் போறான்…..” என்றபடி அவசரப் படுத்தினாள்.
ஷார்ஜாவிலிருந்து துபாயில் இவன் வேலைக்குப் போக வேண்டிய இடம் 20கி.மீ. தூரத்துக்குள் தான் இருக்கும். அங்கங்கே அகாலமாய் குறுக்கிடும் ரவுண்டபட்களைத் தவிர்த்து விட்டால் நேரான, அகல மான, நேர்த்தியான சாலைகள் தான்; எத்தனை மெதுவாய் ஓட்டினாலும் 15 – 20 நிமிட பயண தூரம் தான். ஆனாலும் காலை 7 மணி டூட்டிக்கு இவனுக்கு 5:30 மணிக் கெல்லாம் வண்டி வந்து விடும். அதில் கொஞ்சம் தாமதமானாலும் ஷார்ஜா – துபாய் சாலையில் வாகன நெரிசல் தொடங்கி, உரிய நேரத்திற்கு வேலைக்குப் போக முடியாது.
அடிக்கடி அவன் பியூலாவிடம் சொல்வதுண்டு. “உங்கப்பா நம்ம கல்யாணத்திற்கு மாப்பிள்ளை ஊர்வலம் வைக்காத குறைக்கு இந்த ஊர்ல அப்பப்ப என்னை ஊர்வலம் மாதிரித்தான் கூட்டிட்டுப் போறானுங்க….”
துபாயில் வேலை பார்க்கும் நிறையப் பேர், அங்கு ஏறிக் கொண்டிருக்கும் வீட்டு வாடகையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஷார்ஜாவிற்கு தங்கள் ஜாகையை மாற்றிக் கொண்டு விட்டதாலும், இங்கு கார் வாங்குவது மிகவும் கட்டுபடி ஆகக்கூடிய செலவு – ஒரு வருஷ வீட்டு வாடகைக்கு ஆகுற காசில் புத்தம் புதிய கார் வாங்கி விடலாம்; அதுவும் வங்கிக் கடனில் மிகச் சுலபமாக வாங்கி, கம்பெனிகள் தருகிற டிரான்ஸ் போர்ட் அலவன்ஸிலேயே மாதத் தவணையும் பெட்ரோல் செலவும் போக கொஞ்சம் மிச்சமும் ஆகும் – என்பதாலும் ஷார்ஜா- துபாய் சாலையில் டிராபிக் ஜாம் எப்போதும் தலையைத் தின்னும் பிரச்னை தான்.
எல்லோரும் ஷார்ஜாவில் வந்து குவிவதால் இங்கும் வீட்டு வாடகை ராக்கெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கிறது. அதனால் இப்போதெல்லாம் ஷார்ஜாவிற்குப் பக்கத்திலுள்ள அஜ்மானுக்குக் குடியேறத் தொடங்கி இருக்கிறார்கள். அஜ்மான் – சென்னைக்குப் பக்கத்திலிருக்கும் பாண்டிச்சேரி மாதிரி; சாராயம் சல்லிசாய்க் கிடைக்கும் இடம். ஷார்ஜாவில் தடை செய்யப் பட்டிருக்கும் மது அஜ்மானில் ஆறாய் ஓடு மென்பது ஒரு விசேஷம். அஜ்மானுக்கப்புறம் போனால் கடலில் தான் விழவேண்டி இருக்கும்.
ஆரம்பத்தில் பியூலாவும் சுரேந்திரனும் கூட துபாயில் தான் தங்கி இருந்தார்கள். மூன்று படுக்கை அறைகள் கொண்ட ஒரு அபார்ட்மெண்ட்டில் ஷேரிங் முறையில், ஒரு படுக்கை அறையை இவர்கள் பகிர்ந்து கொள்ள, இன்னொரு படுக்கை அறையில் ஒரு மலையாளத் தம்பதி அவர்களின் இரண்டு வயதுப் பெண் குழந்தையுடனும், மூன்றாவது படுக்கை அறையில் இரண்டு பிலிப்பினோ ஆண்களும் தங்கி இருந்தார்கள். இங்கெல்லாம் ஷேரிங் குடியிருப்புகள் சகஜம் தானென்றாலும் நிறைய சகிப்புத் தன்மையும் மற்றவர்களைப் பற்றி அலட்டிக் கொள்ளாத மனநிலையும் வேண்டும்.
ஒவ்வொரு படுக்கை அறைக்கும் தனித்தனி கழிவறைகள் இருந்ததால் அதன் சுத்தம் அத்தனை கவலைப் படும்படி இல்லை. ஆனால் எல்லோருக்கும் பொதுவான வரவேற்பறை மற்றும் சமையலறைப் பராமரிப்புத் தான் பியூலாவால் கொஞ்சமும் சகித்துக் கொள்ள முடியாததாய் இருந்தது. அதுவும் சமையலறைக்குள் போனாலே அவளுக்கு குமட்டிக் கொண்டு வரும். “தனி வீடு பார்த்துப் போயிடலாங்க…..” என்ற அவளின் நச்சரிப்புக்கு ஆற்றமாட்டாமல், அவள் சமையலறைப் பக்கமே அதிகம் போகாதபடிக்கு சுரேந்திரன் ஹோட்டலிலிருந்து உணவை வரவழைத்து கொடுத்து விடுவான்.
ஒரு இரண்டு மாதங்கள் ஓடி இருக்கும். பிலிப்பினோ ஆண்கள் தங்களுடன் வசிக்க ஒரு பெண்ணைக் கொண்டு வந்தார்கள். “இந்த கண்றாவிகளை எல்லாம் பார்த்துக்கிட்டு என்னால இருக்க முடியாது. ஒண்ணு தனி வீடு பாருங்க; இல்லையின்னா என்னை ஊருக்கு அனுப்பி வச்சுருங்க…..” பியூலா சுரேந்திரனுடன் சண்டைக்குப் போனாள். “பியூலா ஒரு விஷயம் நீ புரிஞ்சுக்கணும்; துபாயில தனி வீடு பார்த்தா என்னோட மொத்த சம்பளமும் வீட்டு வாடகைக்கே சரியாப் போயிரும்; அதால தான் இந்த ஏற்பாடு. அப்புறம் அவங்க வாழ்க்கையில எது சரி? எது தப்புன்னு நாம யாரு தீர்மானிக்குறது! நம்ம புராணங்கள்லேயே அஞ்சு பேரோட மனைவியா வாழ்ந்த பாஞ்சாலிய, நம்ம நாட்டுல இப்பவும் தெய்வமா வணங்குறதில்லையா?
“அதோட அவங்களோட வாழ்க்கை, ஒழுக்கம் பற்றி எல்லாம் நாம ஏன் அலட்டிக் கணும்…..அவங்களுக்கு இது சாதாரணமா இருக்கலாம். அவங்களும் நம்மைப் போலவே பொழைக்க வந்துருக்கிறாங்க. அவங்க வருமானத்துக்கு தனியறைங்கிறது கட்டுபடியாகாத கனவா இருக்கலாம்… அவங்களுக்குள்ள செக்ஸ¤வல் ரிலேஷன் இருந்தாகனுமின்னு கட்டாயம் கூட இல்ல! அப்படியே இருந்தாலும் அதனால நமக்கென்ன போச்சு….” என்று ஏதேதோ சமாதானம் சொல்லி பியூலாவை அந்த அறையிலேயே தொடர்ந்து தங்க சம்மதிக்க வைத்தான்.
அந்த மூன்று பேருக்குமான உறவுகள் பற்றிய நிறைய கற்பனைகளுடனும் கதையாடல்களுடனும் நாட்கள் கொஞ்சம் சுவாரஸ்யமாகவே நகர்ந்தது. சில நாட்களில் பிலிப்பினோக்கள் மூன்று பேருமே ஒரே அறையில் உறங்கினார்கள். சில நாட்களில் ஒரு ஆண் வரவேற்பறையிலும் மற்ற இருவரும் படுக்கை அறையிலுமாகப் படுத்துக் கொண்டார்கள். வரவேற்பறையில் படுக்கிற ஆண் அவ்வப்போது மாறினான் என்பது இதில் விஷேசம்.
அவர்களுக்குள்ளான உறவுகள் சீர்கெடுவதை வரவேற்பரை வாக்குவாதங்களிலிருந்து – அவர்களின் பேச்சு மொழி புரியாவிட்டாலும் – கொஞ்சம் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது. ஆண்கள் இருவரும் கடுமையாய் சண்டைபோட அந்தப் பெண் எந்தச் சலனமுமில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். ஒரு வெள்ளிக்கிழமை விடுமுறை தினத்தின் அதிகாலை அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பவர்களை போலீஸ் வந்து எழுப்பி அந்த பிலிப்பினோக்களில் ஒரு ஆண் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததைச் சொன்னபோது சிலீரென்றிரிந்தது.
மிச்சமிருக்கிற இரண்டு பேரையும் போலீஸ் கைது பண்ணிக் கொண்டு போக, கடைசி வரை அந்த மரணம் இவர்களுக்கு புதிராகவே இருந்து விட்டது. அவர்களுக்குள் இருந்த எந்த சிக்கல் ஒருத்தனை தற்கொலை வரைக் கொண்டு போனது என்கிற உண்மை இவர்களுக்குத் தெரியவே இல்லை. அந்தப் பெண்ணை இருவருமே காதலித்ததாகவும் அவளை யார் மனைவியாக்கிக் கொள்வது என்கிற தீராத பிரச்னையில் தான் அந்த தற்கொலையோ கொலையோ நடந்திருக்கு மென்பது மாதிரி நிறைய யூகங்களே அந்த பிராந்தியம் முழுவதும் உலவிற்று. அதற்கப்புறம் பியூலாவும் சுரேந்திரனும் ஷார்ஜாவில் தனிவீடு பார்த்து குடிபோய் விட்டார்கள்.
பியூலாராணியின் தொடர்ந்த உலுப்பலில் எழும்பி உட்கார்ந்து கஷ்டப்பட்டு இமைகளைப் பிரித்தான் சுரேந்திரன். ஒவ்வொரு நாள் காலையிலும் இப்படி அதிகாலை எழும்பி வேலைக்காக ஓட வேண்டி இருப்பதை நினைக்கும் போதும் அவனுக்கு இந்தியாவிற்கே திரும்பிப் போய் விட வேண்டு மென்று வெறி கிளம்பும். கொஞ்ச நேரம் தான். அப்புறம் எதிர்காலத் தேவைகளும் கடன் அட்டைகளும் கழுத்தில் கத்தி வைக்க நிதர்சனத்திற்குத் திரும்பி மறு பேச்சின்றி பாத்ரூமிற்கு எழுந்து போவது அவனுக்கு வாடிக்கை.
“இராத்திரி நேரத்தோட தூங்காம லேப் டாப்ல பாட்டும் விளையாட்டுமாய் பொழுதைப் போக்கி லேட்டாப் படுக்கப் போக வேண்டியது; அப்புறம் காலையில கண் விழிக்க கஷ்டப்பட்டு வாழ்க்கையை வெறுத்து வேதாந்தம் பேச வேண்டியது; தேவையா இது?” பியூலாவின் விமர்சனத்தை சட்டை செய்யாமல் குளியலறைக்கு எழுந்து போனான் அவன்.
“என்ன பியூலா இது? நேத்து நீ குளிச்சுட்டுத் தண்ணி புடுச்சு வைக்கலியா! நான் இப்ப எப்படிக் குளிக்கிறது?” குளியலறையிலிருந்து அவன் குரல் கொடுத்த பின்பு தான் அவளுக்கு நேற்று சாயங்காலம் குளித்து முடித்து விட்டு தண்ணீர் பிடித்து வைக்கத் தவறியது ஞாபகத்திற்கு வந்தது. இந்த ஊரில் கோடை காலத்தில் பெரிய பிரச்னை எப்போதுமே தண்ணீர் பிடித்ததும் உடனே குளித்துவிட முடியாது. பைப்பிலிருந்து வெளியாகும் நீர் சருமம் கருகும் கொதிநிலையில் இருக்கும். தண்ணீர் பிடித்து ஆறேழு மணி நேரமாவது ஆற வைத்த பின்புதான் குளிக்க முடியும். எதைத் தொட்டாலும் சுடும். ஏ.சி. இல்லாமல் ஒரு நிமிஷம் கூட வீட்டிலிருக்க முடியாது. இரவு பதினோரு மணிக்கு வெளியில் போனாலும் வெக்கை முகத்தில் அறையும். வேர்த்து ஒழுகும்.
அவசர அவசரமாய் ஃபிரிட்ஜிலிருந்து ஐஸ் கட்டிகளை அள்ளிக் கொண்டு போய் பக்கெட் தண்ணீரில் போட்டு அவை கரைந்ததும் அவனைக் குளிக்கச் சொன்னாள். ஷார்ஜாவிலும் துபாயிலும் பேச்சிலர்களாக அறைக்கு எட்டுப்பேர், பத்துப் பேர் என்று அடைந்து கிடப்பவர்களும், லேபர் கேம்ப்புகளில் தங்கியிருப்பவர்களும் எப்படிக் குளிப்பார்கள்? இப்படி பக்கெட்டுகளில் தண்ணீர் பிடித்து ஆறவைத்து குளிக்க வசதிப்படுமா அவர்களுக்கு? இந்த கொதி தண்ணீரீல் குளித்து விட்டுத் தானே வேலைகளுக்கு ஓடவேண்டும் என்று நினைத்தபோது நெஞ்சின் ஓரத்தில் அவர்களுக்காக ஒரு சிறு பரிதாபம் சுரந்தது.
பகலில் பொதுவாய் தெருவில் அதிகம் நடமாட்டமிருக்காது. ஆனால் இராத்திரியில் பனிரெண்டு ஒரு மணிக்குக் கூட ஆட்கள் சர்வசாதாரணமாக அலைந்து கொண்டிருப்பதை பியூலா அவளுக்குத் தூக்கம் வராத இரவுகளில் ஜன்னலின் வழியே பார்த்து வியந்திருக்கிறாள். இது தூங்காதவர்களின் நகரம் என்று நினைத்துக் கொள்வாள். அரபு நாடுகள் அனைத்தும் ஆண்களின் தேசமாயிருந்தது. எங்கு பார்த்தாலும் ஆண்கள்: ஆண் கள்; ஆண்கள் தான் நீக்கிமற நிறைந்திருக்கிறார்கள். அபூர்வமாய்த்தான் பெண்கள் தென்படுவார்கள். அதுவும் வியாழக்கிழமை சாயங்காலங்களிலும், விடுமுறை தினங்களிலும் கடைவீதிகளுக்குப் போனால் விலக இடமிருக்காது. புற்றிலிருந்து புறப்பட்டு வருகிற மழை ஈசல்கள் மாதிரி ஒவ்வொரு சந்திலிருந்தும் ஆண்கள் வந்துகொண்டே இருப்பார்கள். ஷார்ஜாவின் ரோலா ஸ்கொயர் முழுவதும் ஆண்களின் தலையாக நிரம்பி இந்த தேசமே மிகப்பெரிய சேவல் பண்ணையாய் தோற்றங் கொள்ளும் அவளுக்கு.
அரபு நாடுகளில் திருட்டுப் பயமென்பதே துளியும் இருக்காது என்று சொல்லக் கேட்டிருக்கிறாள். அதை உறுதிப் படுத்துவது போல் இங்குள்ள வீடுகளின் கண்ணாடி ஜன்னல்களுக்கு இரும்பு கிராதிகள் வைக்கப்படாததைப் பார்த்து இங்கு வந்த புதிதில் பியூலா பெரிதும் ஆச்சர்யப்பட்டிருக்கிறாள். ஆனால் அப்படியெல்லாம் ஒரேயடியாக சந்தோஷப்படவும் முடியாது என்று சமகால நிகழ்வுகள் சொல்கின்றன். வீடுகளில் நடக்கும் சின்னச் சின்ன திருட்டுக்கள் பற்றி இப்போதெல்லாம் அடிக்கடி கேள்விப் படுகிறாள் அவள். துபாயில் சமீபத்தில் பூட்டியிருந்த ஒரு நகைக் கடையை காரால் மோதி உடைத்து உள்ளே புகுந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரங்களை கொள்ளைக்காரர்கள் அள்ளிப் போனதை தினசரிகளில் வாசித்து திகிலடைந்திருக்கிறாள்.
திருட்டு மட்டுமல்லாது பிச்சை எடுப்பதும் இங்கு சகஜமாகியிருக்கிறது. அவள் ஷார்ஜாவிற்கு வந்த புதிதில் பிச்சை எடுப்பவர்கள் யாரையும் பார்த்ததே இல்லை. ஆனால் இப்போதெல்லாம் கடை வீதிகளிலும் ஸப்-வேக்களிலும் குழந்தைகளும் முழுக்க கறுப்பு அங்கி அணிந்த பெண்களும் கையை நீட்டி பிச்சை கேட்பதை நிறையவே பார்க்கிறாள்.
ஒரு வழியாய் சுரேந்திரன் புறப்படத் தயாரானபோது அவனுடைய கைத்தொலைபேசிக்கு கம்பெனி டிரைவரிடமிருந்து மிஸ்ஸ¤டு கால் வந்துவிட்டது. போனில் பேசியபடி வேகமாய்ப் புறப்பட்டுப் போனான். அவ்வளவு தான். இப்போது கிளம்பிப் போகிறவன், இனி இரவு எட்டு எட்டரைக்கு மேல் தான் வீடு திரும்புவான். அதுவரைக்கும் அவளும் அவளின் தனிமையும் மட்டுமே! இந்த அறையே அவளுக்குச் சிறையாகத் தோன்றும். இரவே மூன்று வேளைக்குமான உணவையும் தயாரித்து முடித்து விடுவதால் பகலில் சமையல் வேலை கூட இருக்காது. துபாயில் இருக்கும் வரை இந்தப் பிரச்னை இல்லை. உடன் தங்கியிருந்த மலையாளப் பெண்ணிடம் அரட்டை அடிப்பதிலும் அவளின் குழந்தையுடன் விளையாடுவதிலும் நேரம் போவதே தெரியாது.
ஷார்ஜாவிற்கு வந்தபின்பு தான் தொலைக்காட்சி ஒன்றே ஒரே பொழுது போக்காய் மனசுக்குக் கொஞ்சமும் பிடிக்காத மலட்டு நிகழ்ச்சிகளையும், கட்சிச் சாயம் பூசிய செய்திகளையும், மில்லிமீட்டர் மில்லிமீட்டராய் நகரும் சீரியல்களையும் பார்த்துப் பார்த்து ஒரு கட்டத்தில் அதற்கே அடிமையாகிப் போனதை உணர்ந்தாள். ஒரு பதினைந்து இருபது நாட்களைப் போல் தமிழ்ச் சேனல் எதுவும் இவர்கள் வீட்டுத் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகாதபோது பொழுதைக் கழிக்க திணறிப் போனாள்.
தமிழின் முக்கியத் தொலைக்காட்சி சேனல்கள் எல்லாம் தங்களின் ஒளிபரப்பு அலைவரிசைகளிலும் திசைகளிலும் சிற்சில மாற்றங்கள் செய்தபோது இவர்களின் அடுக்குமாடிக் குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த டிஷ் ஆண்ட்டனாக்கள் அதற்குத் தகுந்தாற் போல் டியூன் பண்ணப் படாததால் இவர்கள் வீட்டுத் தொலைக்காட்சியில் தமிழ்ச் சேனல்கள் எதுவுமே ஒளிபரப்பாகவில்லை. அந்த நாட்களில் சுரேந்திரனுடன் தினசரி சண்டைதான். அவனும் குடியிருப்பு அலுவலகத்தில் எவ்வளவோ முறையிட்டும் புகார் பண்ணியும் – கொஞ்சம் செலவு பிடிக்குமென்பதாலும், குடியிருப்பில் தமிழ்க் குடும்பங்கள் அதிகம் வசிக்காததாலும் – அவர்கள் எந்த முயற்சியும் செய்யாமல் சால்ஜாப்புகள் மட்டும் சொல்லி தட்டிக் கழித்ததில் நிறைய நாட்கள் ஓடிவிட்டன.
பியூலாவிற்கு பைத்தியம் பிடித்தது போலாகி விட்டது. புருஷனுடன் பேசுவதை சுத்தமாய் நிறுத்தி விட்டாள். அவன் மாற்று ஏற்பாடாக தமிழ்ப் பத்திரிக்கைகள் சிலதும் வாங்கிப் போட்டான். அவையும் அவளின் மீந்த பொழுதுகளைக் கடத்த போதுமானதாக இல்லை. அப்புறம் தான் பொழுதைப் போக்குவதற்கு பியூலா நல்ல வழிமுறை ஒன்றைக் கண்டுபிடித்தாள். அவன் புறப்பட்டுப் போனதும் ஜன்னலுக்குப் பக்கத்தில் ஒரு சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து வீதியில் நடப்பதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.அற்புதமாய் பொழுது போனது. ஒவ்வொரு நிமிஷமும் வீதி புத்தம் புதிதாய் பல சுவாரஸ்யங்களை நிகழ்த்தியபடி நீண்டு கிடக்கிறது என்பது அவளுக்குப் புரிந்தது.
அவள் தங்கி இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு மிகவும் பரபரப்பான நாற்சந்திப்பின் ஒரு மூலையில் அமைந்திருக்கிறது. அடுக்குமாடிக் குடியிருப்புக்கு எதிர்த்தாற் போல் ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டல். டை யும் கோட்டும் அணிந்த பெரிய பெரிய கனவான்கள் – பெரும்பாலும் அமெரிக்கா, ஆஸ்திரிலியா, ஐரோப்பா நாடுகளிலிருந்து – வந்து கொண்டும் போய்க் கொண்டும் எப்போதும் பரபரப்பாய் இருக்கும். ஹோட்டலுக்கருகில் இந்தியாவின் கிளை நிறுவனம் ஒன்றின் பிர மாண்டமான புத்தம் புதிய நகைக்கடை அமைக்கப்பட்டு அந்த இடத்திற்கே அழகும் பொலிவுமாய் ஒளியூட்டிக் கொண்டிருக்கிறது.
அபார்ட்மெண்ட்டை ஒட்டிய விசாலமான பிளாட்பாரத்தில் லேபர்கள் குவிந்து கிடப்பார்கள். அவர்களின் காலை நேரமென்பது அதிகாலை மூன்றரை நான்கு மணிக்கெல்லாம் தொடங்கி விடும். அதுவும் அவர்களில் ‘கல்லிவெல்லி’ ஆட்கள் என்றொரு பிரிவினர் இருக்கிறார்கள். இந்த தேசத்தில் வேலை செய்ய முறையான விசா இல்லாதவர்கள், விசா காலம் முடிந்து போனவர்கள், ஏஜெண்ட் களால் வேலை என்று விசிட் விசாவில் அழைத்து வரப்பட்டு அப்புறம் ஏமாற்றப்பட்டவர்கள், முறையான கம்பெனி விசாவில் வேலைக்கு வந்தும் ஒழுங்காய் சம்பளம் தரப்படாததாலோ, அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டோ அல்லது வேறு பிரச்னைகளாலோ அங்கிருந்து வெளியேறி காணாமல் போயி அப்புறம் ‘இந்த’ கூட்டத்தில் கலந்தவர்கள் எல்லோரையும் ‘கல்லிவெல்லி’ ஆட்கள் என்றுதான் அழைப்பார்கள்.
தினசரி போலீசுக்குப் பயந்தபடி, நிரந்தர வேலை ஏதுமின்றி கிடைக்கிற வேலைகளைச் செய்து வயிற்றைக் கழுவி, ஒன்றிரண்டு மிச்சம் பண்ணி ஊருக்கும் அனுப்பிவைத்து…என்று அவர்களின் தினப்பாடு மிகமிகத் திண்டாட்டமானது. காலை நேரத்தில் பியூலாராணி தங்கியிருக்கும் வீட்டின் முதல்மாடி ஜன்னலிலிருந்து பார்த்தால் அப்படிப் பட்ட ஆட்கள் நிறைய அலைந்து கொண்டிருப்பது தெரியும். சாப்பாட்டுப் பொட்டலத்தைக் கையிலும், கண்களில் ஏக்கத்தையும் சுமந்தபடி தரகர்களுக்குப் பின்னாலும், வந்து நிற்கும் வாகனங்களுக்குப் பின்னாலும் ஓடிஓடிப் போய் வேலை கேட்டுக் கொண்டிருப்பார்கள். காலை பதினோறு பனிரெண்டு மணி வரை அலைந்தும் வேலை கிடைக்காத வேதனையோடு சிலர் திரும்பிப் போவதையும் அவள் பார்த்திருக்கிறாள்.
விசாலமான பிளாட்பாரத்தை ஒட்டி வரிசையாய் சிறுசிறு கடைகளும், சூப்பர் மார்க்கெட்டும், கம்யூட்டர் உதிரி பாகங்கள் விற்கிற கடையும், மருத்துவ கிளினிக்குகளும் அமைந்திருக்கின்றன. அதுவும் எதை எடுத்தாலும் ஒரு திர்ஹாம் அல்லது இரண்டு திர்ஹாம் மட்டுமே விலையுள்ள பொருட்கள் விற்கும் கடையில் எப்போதும் கூட்டம் அப்பிக் கொண்டிருக்கும்.
சூப்பர் மார்க்கெட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் பெரிய பெரிய குப்பைத் தொட்டிகளிலிருந்து சிலர் பேப்பர், அட்டைகள், குளிர்பான போத்தல்கள், பால்கவர், பிளாஸ்டிக் பொருட்கள் என்று மற்றவர்கள் பயன்படுத்தித் தூக்கி எறிந்தவைகளை பொறுக்கி சேகரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சர்யப் பட்டிருக்கிறாள். அதைவிட ஓடி ஓடி சம்பாதிக்கும் இவர்கள் காலையில் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை கண்ணுற நேர்ந்தபோது அப்படியே உறைந்து போனாள். எல்லோரும் ஆளுக்கொரு புரோட்டாவை வாங்கி அதை டீயில் முக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். புரோட்டாவை டீயில் முக்கிக் கூடவா சாப்பிட முடியும்? அதிர்ச்சியிலிருந்து மீள அனேக நாட்களானது அவளுக்கு. ஏழ்மையும் வறுமையும் எல்லா தேசங்களுக்கும் பொது போலிருக்கிறது.
அடுக்குமாடிக் குடியிருப்பின் இன்னொரு பக்கம் ஒரு மேம்பாலமும் அதை அடுத்து ஒரு அழகான மசூதியும் இருக்கின்றன. மசூதியில் வெள்ளிக் கிழமை நண்பகல் தொழுகை பார்க்க கோலாகோலமாய் இருக்கும். யாரும் முறைப்படுத்தாமலேயே ஒவ்வொருவரும் வரிசை வரிசையாய் தாங்கள் கையோடு கொண்டு வந்திருக்கும் பாயை விரித்து அமர்ந்து, தொழுகை தொடங்கியதும் எல்லோரும் ஒரே சமயத்தில் எழுவதும் குனிவதும் மடங்கி அமர்வதும் நெற்றிப் பொட்டு தரையில் பட விழுந்து வணங்கி எழுவதுமாய்……பார்க்கவே பரவசமாய் இருக்கும். மசூதி நிறைந்து அதன் சுற்றுவெளிகளும் நிரம்பி அதுவும் போதாமல் சாலைகளை ஒட்டிய பிளாட்பார்ம்களையும் ஆக்ரமித்து, அந்த நேரம், இடம் எல்லாம் ஆசீர்வதிக்கப் பட்டதாய்த் தோன்றும்.
கண்களைக் கொஞ்சம் எட்ட ஓட்டினால் அங்கங்கே நிறைய கட்டிடங்கள் கட்டும் பணி நடந்து கொண்டிருப்பது தெரியும். பார்த்திருக்க வளர்ந்து ஆளாகி விடும் பெண் பிள்ளைகள் மாதிரி எத்தனை வேகமாய் கட்டிடங்கள் வளர்கின்றன? தீப்பெட்டிகளை அடுக்கி வைப்பது போல் படபடவென்று மாடிகளை அடுக்கிக் கொண்டே போவதைப் பார்க்க பார்க்க இவளுக்கு ஆச்சர்யமாய் இருக்கும். ஊரிலெல்லாம் தளம் கான்கிரீட் போடுவதென்றால் சாரம் கட்டி, அதில் ஆட்கள் வரிசையாய் நின்றபடி, சட்டி சட்டியாய் கான்கிரீட் கலவையை மேலே அனுப்பி காலையிலிருந்து இரவு வரை போடுவதைப் பார்த்திருக்கிறாள்.
ஆனால் இங்கேயானால் இராட்சஷ மிஷின்களைக் கொண்டு வந்து – அதன் உயரமான ஒருமுனை யானையின் தும்பிக்கை மாதிரியே இருக்கிறது; நீரள்ளி ஆசீர் வதிக்கும் கோயில் யானை மாதிரி கண்மூடி கண் திறப்பதற்குள் அது, ட்ரக்குகளில் வரும் கான்கிரீட் கலவையை உறிஞ்சி மேல் தளத்தில் துப்பி விட – சில மணி நேரங்களிலேயே தளவேலை முடிந்து அடுத்த வேலைக்கு நகர்ந்து விடுகிறார்கள். கட்டிடம் கட்டும் பணியில் தான் எத்தனை விதமான இயந்திரங்கள் அலைந்து கொண்டிருக்கின்றன நாள்தோறும்.
சாலையில் ஓடும் வாகனங்களைக் கவனிப்பது அவளின் அடுத்த சுவாரஸ்யம்! எத்தனை எத்தனை விதவிதமான அழகழகான வாகனங்கள்! ஒருநாள் வெள்ளை வெளேரென்று பனிக்கரடி மாதிரி பளபளவென்று நீ…ள…மா…ன…காரொன்றைப் பார்த்தாள். அரபு ஷேக்குகள் பெரும்பாலும் அவர்களைப் போலவே ஓங்கு தாங்கென்றிருக்கும் பெரிய அளவிலான வாகனங்களிலேயே பயணிக்கிறார்கள். காரணம் பெரும்பாலும் அரபு ஷேக்குகளின் குடும்பம் பெரிதாக இருக்கும். பூங்காக்களிலும் ஷாப்பிங் செண்டர்களிலும் ஒவ்வொரு அரபி ஆணுக்குப் பின்னாலும் சம வயதுள்ள மூன்று நான்கு பெண்களும் துறுதுறுவென்ற குழந்தைகளும் போவதை அவளே பார்த்திருக்கிறாள்.அரபிக்களின் உடை பார்க்க அழகாய் இருக்கும்.
ஆண்கள் கழுத்து முதல் பாதம் வரைக்குமான தொளதொளவென்ற பளீரென்ற வெள்ளையில் அங்கி அணிந்து, தலையில் சிவப்புப் பூக்கள் போட்ட துண்டை விரித்து அதன் மேல் கறுப்பு வண்ணத்தில் இரண்டடுக்கு பிரிமனை மாதிரியான வட்ட வடிவ பின்னலும் அதிலிருந்து தொங்கும் அழகான குஞ்சங்களுமாய் காட்சி அளிப்பார்கள். அரபிக்களின் அந்த உடை சுரேந்திரனுக்கும் ரொம்பப் பிடிக்கும். துபாய் பெஸ்டிவல் சமயத்தில் நடந்த பொருட்காட்சியில் அரபி உடை அணிந்து போட்டோ எல்லாம் எடுத்து வைத்திருக்கிறான். பெண்களும் கறுப்பு அங்கியும் தலையில் கண்கள் மட்டும் வெளித் தெரியும் படியான கறுப்பு பர்தாவும் அணிந்திருப்பார்கள்.
அவ்வப்போது ஆம்புலன்சுகள் அலறலோடு ஓடும் போது அவளுக்கு பதட்டமாய் இருக்கும். இந்த ஊரில் விபத்துக்களும் நோயாளிகளும் அதிகம் என்றும் மருத்துவம் ரொம்பக் காஸ்ட்லி என்றும் அப்படியும் அத்தனை சிறப்பான சிகிச்சை கிடைக்காது என்றும் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறாள். சுரேந்திரன் அடிக்கடி சொல்வதுண்டு – அவன் வேலை பார்க்கும் இடத்தில் யாருக்காவது சிறு நோயென்றாலும் உடனே ஊருக்குத்தான் கிளம்பி விடுவார்கள் என்றும் ஆஸ்பத்திரிக்கு அதுவும் அரசு மருத்துவமனைகளுக்குப் போகச் சொன்னாலே அலறி விடுகிறார்கள் என்றும்.
அடுத்து அவள் சாலையில் அதிகம் சந்திப்பது தீயனைப்பு வண்டிகளை. இந்த ஊரில் அடிக்கடி எங்காவது எப்படி என்று தெரியாமலே தீப்பற்றிக் கொள்கிறது. பியூலாவே பலதடவைகள் அவள் வீட்டு ஜன்னலிலிருந்து அடுக்குமாடிக் கட்டிடங்களில் கரும்புகை சூழ மஞ்சளும் சிவப்பும் கலந்த ஜுவாலையுடன் தீ கொழுந்து விட்டெரிவதைப் பார்த்து பதறி, கொஞ்ச நேரத்திலேயே ஆம்புலன்ஸ¤ம் தீ அணைப்பு வண்டியும் விரைவதைப் பார்த்து ஆறுதலடைந்திருக்கிறாள்.
பத்து நாட்களுக்கு முன்னால் தான், அவள் தங்கியிருக்கும் கட்டிடத்திலிருந்து பதினைந்து கட்டிடங்கள் தள்ளி இருக்கும் ஒரு கட்டிடத்தில் ஒரு மோசமான தீ விபத்து நடந்து, அந்த குடியிருப்பின் மொட்டை மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட வீடு நடுஇரவில் தீப்பற்றிக் கொண்டதில் ஒரு புருஷனும் மனைவியும் அவர்களின் இரண்டு சிறுவயதுக் குழந்தைகளும் கருகிப் போயினர்.
இவளும் போய் அந்தக் கோரக் காட்சியைப் பார்த்து வந்தாள். அன்றைக்கு முழுவதும் பொட்டுத் தூக்கமில்லை. எத்தனை கனவுகளோடு பிழைக்க வந்திருப்பார்கள்? இப்படி கரிக்கட்டை யாய் திரும்பிப் போனால் அதைப் பார்த்து அவர்களின் குடும்பம் என்ன பாடுபடும்? நினைக்க நினைக்க வாழ்வின் நிச்சயமின்மை முகத்திலறைய “நாம இப்பவே இந்திவாவுக்குத் திரும்பப் போயிடலாங்க…..” என்று பியூலா புலம்பத் தொடங்கி விட்டாள்.அவளை சமாதானப் படுத்தி இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்குள் சுரேந்திரனுக்கு போதும் போது மென்றாகிவிட்டது.
மேம்பாலத்திற்கு அடியில் அதன் நிழலில் சிலர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார்கள் எப்போதும். அவர்களில் ஒருத்தனை அவள் அடிக்கடி அங்கு பார்ப்பாள்.அவனுக்கு முப்பது முப்பத்திரெண்டு வயதிருக்கும்.மிக நேர்த்தியாக உடை அணிந்திருப்பான். மற்றவர்கள் மாதிரி அவன் நிழலுக்கு ஒதுங்கிப் போபவனாகத் தெரிவதில்லை.
நண்பகல் தொழுகை முடிந்த நேரத்திலிருந்து சாயங்காலம் நான்கு அல்லது ஐந்து மணி வரை அங்கேயே தான் உட்கார்ந்திருப்பான். எதுவும் செய்யாமல் ஒரே இடத்தில் தொடர்ந்து மணிக்கணக்கில் எப்படி அவனால் உட்கார்ந்திருக்க முடிகிறது என்று அவளுக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஒரு வேளை அவளைப் போலவே அவனும் பொழுது போகாமல் தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறானோ என்று நினைத்துக் கொள்வாள்..
அவனைப் பற்றிய நிறைய கேள்விகளுக்கு அவளுக்கு விடை தெரியவில்லை. அவன் யார்? எங்கு வேலை பார்க்கிறான்? வேலைவெட்டி எதுவுமில்லையா அவனுக்கு? வேலைக்காக அழைத்து வரப்பட்டு ஏமாற்றப்பட்டு விட்டவனா? சொந்த நாட்டிற்கும் திரும்பிப் போக முடியாமல் இங்கும் போக்கிடமில்லாமல் அலைகிறவனா?கிடைத்த வேலையைச் செய்கிற கல்லிவெல்லி ஆசாமியா? இங்கெல்லாம் கோடைக் காலங்களில் சில அலுவலகங்களும் வணிக நிறுவனங்களும் நண் பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை இயங்குவதில்லை. அந்த மாதிரி ஓரிடத்தில் வேலை செய்பவனாக இருக்குமோ? ஆனால் இவனை அந்த நேரம் கடந்தும் சில தினங்களில் பார்த்திருக்கிறாளே! மேலும் அப்படிப்பட்டவகள் தாங்கள் தங்கி இருக்கும் அறைகளுக்குப் போய்த் தானே ஓய்வெடுப்பார்கள்! இவனுக்கு அப்படி ஒரு அறையே இல்லாமல் ஒருவேளை காரில் வசிப்பவனோ?
யு.ஏ.இ.யில் சில பேச்சிலர்கள் தங்களின் காரையே வசிப்பிடமாகக் கொண்டு அதிலேயே தங்கி, உண்டு, உறங்கி வாழ்கிறார்கள் என்று பத்திரிக்கைகளில் படித்து அதிர்ந்து போயிருக்கிறாள். டார்மென்ட்றி மாதிரி வசதியுள்ள இடங்களில் குளித்து, மற்ற கடன்களை முடித்துக் கொண்டு பகல் நேரங்களிலெல்லாம் காரிலேயே சுற்றிக் கொண்டிருந்து விட்டு இரவு ஏதாவது இலவச பார்க்கிங்கில் காரை நிறுத்தி காருக்குள்ளேயே உறங்கி விடுவார்களாம்.
இந்தியாவில் இதேபோல வெகு நேரம் காருக்குள் இருந்த சிலர் ஏ.சி.யிலிருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடால் செயலிழந்து மூச்சுத் திணறி இறந்து போன செய்தியை அறிந்ததும் இங்கு காரில் வாழ்பவர்கள் முக்கியமாக அந்த மேம்பால இளைஞன் தான் ஞாபகத் திற்கு வந்தான். கோடைகாலத்தில் இங்கு இரவிலும் வெக்கை இருக்கும். ஏ.சி. இல்லாமல் தூங்கவே முடியாது. அவர்கள் கார்பன் மோனாக்சைடிலிருந்து எப்படி சமாளிக்கிறார்கள்? கடவுளே! சில பேருக்கு ஏன் இத்தனை மோசமான வாழ்வனுபவம்!
`தினசரி பார்க்கிற மேம்பால நிழல் இளைஞனைக் கடந்த சில தினங்களாக அந்த இடத்தில் பார்க்க முடியவில்லை. எங்கு போனான் என்றும் தெரியவில்லை. பொதுவாய் கல்லிவெல்லி ஆட்கள் ஊருக்குப் போவதென்று முடிவெடுத்தால் விமானப் பயணத்திற்கான பணம் சேர்ந்ததும் போலிசில் சரணடைந்து விடுவார்களாம். போலீஸ் அவர்களை ஓரிரு மாதங்கள் சிறையில் வைத்திருந்து விட்டு அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்து விடுமாம்.
இவனும் அப்படி கிளம்பிப் போயிருப்பானோ? தினசரி அவனைப் பார்த்துப் பார்த்து கண்கள் பழகி விட்டதால் அவன் மேல் ஒரு இனம் புரியாத பாசம் ஏற்பட்டு விட்டது. அவன் இல்லாமல் அந்த இடம் வெறுமையாய் வெறிச் சோடிக் கிடப்பது போலிருந்தது. அவன் எங்கு போனான் என்பதற்கான விடை சில தினங்களுக்கு முந்தைய செய்தித்தாளில் அவளுக்குக் கிடைத்தது.
ஆங்கிலச் செய்தித் தாளெல்லாம் அவள் வாசிப்பதில்லை. சாயங்காலம் சப்பாத்திக்கு மாவு உருட்டிப் போடுவதற்காக பழைய பேப்பரை எடுத்து விரித்தபோது அதிலிருந்த ஒரு செய்தி வசீகரிக்க அதை வாசித்தவள் அப்படியே அதிர்ந்து போய் விட்டாள். செய்தி இது தான்:
துபாயிலிருக்கிற ஒரு இடுகாட்டில் பிணங்களை அடக்கம் செய்வதற்கு முன்னால் ‘அதுகளை’ப் போட்டுக் கழுவுவதற்காக ஒரு அறை இருக்கிறதாம். அன்றைக்கு இராத்திரி அந்தப் பக்கமாய் ரோந்து சுற்றிய போலீஸ்காரனுக்கு அந்த பிணவறையில் ஏதோ நடமாட்டமிருப்பதாய் சந்தேகம் வர, உள்ளே போய் கையிலிருந்த சிகரெட் லைட்டரை எரியவிட்டுப் பார்த்திருக்கிறான். பிணங்களைப் போட்டுக் கழுவும் பிளாட்பாரத்தின் மேல் நிர்வாணமாக ஓர் ஆணும் பெண்ணும் ஆலிங்கனம் செய்து கொண்டிருந்தார்களாம். அவர்களிருவரும் கைது செய்யப் பட்டிருந்தார்கள்.அவர்களை அங்கு அனுமதித்த பிணவறைக் காவலாளி தப்பித்து ஓடிவிட்டானாம். கைதானவர்களின் போட்டோக்களும் போட்டிருந்தார்கள்.
அந்த ஆணும் பெண்ணும் தங்கள் அந்தரங்கம் கேவலப் படுத்தப்பட்ட அதிர்ச்சியில் குமுறி அழுதபடி யிருந்தார்கள். அதிலிருந்த ஆணின் முகம் பியூலாவிற்கு பரிச்சயமானதாயிருக்க கொஞ்சம் உற்றுக் கவனித்தவள் உறைந்து போனாள். அது மேம்பாலத்து நிழலில் ஓய்வெடுக்கும் இளைஞன்.

(தயாராகிக் கொண்டிருக்கிற நவீன விருட்சம் 84வது இதழில் வெளியாகும் சிறுகதை)

இரு கவிதைகள்

அவசரக் கூட்டம்

உறுப்பினர் வருகை
சந்தேகமே
நாளை நடத்தலாம்
அவசரக் கூட்டம்
நாளை என்ன
நடந்திடுமோ
மறுநாள் ஒருநாள்
கணக்கில் வை
பிறிதொரு நாளும்
காரியம் ரத்து
நானும் நீயும்
கூடிடலாம்
இருவர் சூழலும்
இணைய மறுப்பின்
ஏண்டா இப்படி அபசகுனம்?
தீர்மானங்கள் நிறைவேறும்
கவலை வேண்டாம் மாவீரா
கூட்டம் நடந்ததாய்க் கணக்கில் வை.
அன்னம், கிளி, மயில், மேகம்…….ஆனந்த்
நாய்க்குட்டியைத்
தூதுவிட்டுநித்யாவைக் கவர்ந்தவன் யார்
நம்ம சிவலிங்கம்

ஜோடிக் கிளியைப் பரிசளித்து
ராமகிருஷ்ணன் கவர்ந்துவிட்டது யாரை
நம்ம மீனாட்சியை
புத்திசாலிப் பசங்க

இந்த மதன்தான் தப்பு செய்து விட்டான்
கீர்த்தியைக் கவர்ந்திழுக்க
ஆனந்த்தைத் தூதுவிட்டான்
அபாயத்தில் குரைக்கவும் தெரியாத
நெல்மணிகளைக் கொத்தவும் பயனிலாத
அசட்டு ஆனந்தைக் கண்டவுடன்

செருப்பைக் காடடினாள் கீர்த்தி
செருப்பு விடு தூது பற்றி
ஆனந்த் படித்த இலக்கியம்
வாழ்வோடியைந்து போனதே மதன்.

என் இனிய இளம்கவி நண்பரே

அன்றைக்குநீங்களும் நானும் சேர்ந்துகுடித்தோம் வழக்கம்போலஎப்பொழுதுமேநம் சந்திப்புஇப்படித்தான் தொடங்கும்(அனேகமாகஇன்றைய தினம்குடிக்காத இளம்கவிஞர்களே இல்லைதான்)
நிறைபோதையில்கட்டற்ற சுதந்திரவெளியில்மிதந்து கொண்டிருந்தோம்
இதுதான்பிரச்னையேஇல்லையா
உங்களுக்குஏன்தான்அந்த யோசனை தோன்றியதோஅந்தத் தோழரின் வீட்டுக்குகூட்டிக்கொண்டு போனதில்அரசியல் இல்லையென்று நம்பமுடியவில்லை
ஒரு காலத்தில்நீங்கள் எல்லோரும்ஒன்றாக இருந்தவர்கள்தாம்
உங்களை வைத்துத்தான்அவரைத் தெரியும்ஏற்கனவேதோழரும் குடித்திருந்தார்
மேலும்நாம் குடித்தோம்ஏதோ ஒரு புள்ளியில்பேச்சுத் தொடங்கியது
பிறகுஅது சர்ச்சையாக மாறியது
உங்களைவிடவும் அமைப்பு சார்ந்தஅந்த இளம்கவிஞருக்குத் தரப்படும்முக்கியத்துவத்தைகேள்வி கேட்டிருக்கக் கூடாது நான்
இது இயல்புதானே அவர்களுக்கு(கள்ளின் இன்னொருபெயர்உண்மைவிளம்பி தெரியுமாகுடித்திருக்கையில்ஒளிவு மறைவு கிடையாது)
தோழருக்குநியாயம் பேசமுடியவில்லை
தவிரவும் அவர்நிதானத்தில் இல்லை
உங்களிடம் காட்டமுடியாத கோபத்தைஎன்னிடம் பிரயோகித்தார்புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டைஎன்மேல் விட்டெறிந்தார்
வேட்டிதீப்பிடித்ததுகையை முறுக்கியிருக்கிறார்இப்படியெல்லாம் நடத்தஎப்படி மனம் வந்ததோ
எவ்வளவுஇனிய மனிதர்
குடிதான்இதுபோல மாற்றியிருக்க வேண்டும்
நீங்கள் எழுந்துவந்துவேட்டியை மாற்றியிருக்கிறீர்கள்
தோழரிடம் காட்டமுடியாத எரிச்சலைஎன்னிடம் காட்டினீர்கள்
சொத்துசொத்து என்றுசாத்தினீர்கள்நீங்கள் வந்த வேகத்தில்காலை மிதித்திருக்கிறீர்கள் போல
வலது பாதத்தில்பெருவிரலிலிருந்து மூன்று விரல்பூமியில் ஊன்ற முடியவில்லை
இடது கையை தோழர் முறுக்கியதில்நடு/மோதிர/சுண்டுவிரல் மூன்றும்மடக்க முடியவில்லைசுளுக்கெடுப்பவர் தடவிவிட்டும்சரியாகவில்லை இன்னும்
உங்கள் மன்னிப்புக் கடிதத்துக்குஎன்ன பதில் எழுத
உள்ளபடியே எவ்வளவுநல்லபிள்ளை நீங்கள்
என்ன அருமையானகவிஞன்
குடிக்கிற ஒவ்வொரு சமயத்தில்ஏன் இந்த மூர்க்கம்தோழரைப் பார்க்கப் போயிருக்கதேவையே இல்லை
அவருக்கும் உங்களுக்கும் வழக்கென்றால்நீங்கள்தாம் தீர்த்துக்கொள்ள வேண்டும்
என்னைக் கருவியாக்கயாருக்கும் உரிமையில்லை
உங்கள் இருவரின் வன்முறையும்ஒருவகை மனநோய்தான்
புரிந்து கொள்ளலாம்பொறுத்துக்கொள்ள முடியாது
தயவுசெய்துசரிப்படுத்திக் கொள்ளுங்கள்
குடியை கேவலப்படுத்தாதீர்கள்
உங்களையாவது கவிஞனென்றுஉலகம் மன்னிக்கும்
தோழர் ஒருநாள்மாட்டிக்கொள்ளத்தான் போகிறார்
உங்கள் பிரச்னையேனும்பழுதில்லைதோழர் பாடுதான்திண்டாட்டம்
தேவி பகவதிஉங்கள் இருவர் பைத்தியத்தையும்தீர்த்துவைக்கட்டும்
மண்டைக்காட்டு பகவதிமனசுவைத்துத் தெளிவிக்கட்டும்
எனக்குஎங்கள் சோட்டாணிக்கரை பகவதி இருக்கிறாள்

சிறு கவிதைகள்

01

அழைத்துப் போய்வந்தஆசிரியரின் அத்தனைகெடுபிடிகளுக்குப் பின்னும்இன்னமும் நினைவில்
அந்த ஸ்கூல் பயணம்இன்பச் சுற்றுலா என்றே.
o
02
இலவசமாய்அரிசி டிவி
இயற்கை
உபாதைக்குகட்டண
கழிப்பிடங்கள்.
o
03
எதிர்வரும் பேருந்தில்
அடிபடும் அபாயம்.இடப்புறம் நகர்ந்து
நடந்தேன்.இளவயது மாதொருத்தியை இடித்தபடி.

o

04யாருமற்ற பூங்காவில்ஊஞ்சல்ஆடிக்கொண்டிருக்கிறான்என் மகன்.எவரையோ சேருமென்றுகவிதைகள்எழுதிக்கொண்டிருக்கிறேன்நான்.
o
05
ஏதோவொன்றின் தொடர்பாகவே
எதுவொன்றின்நினைவும்.

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்

11

விளையாடும் பூனைக்குட்டி

க நா சு
மல்லாந்து படுத்துக் கால்நீட்டிக்
குறுக்
கிக்கயிற்றின் நுனியைப் பல்லால்கடித் திழுத்துத்
தாவி எழுந்து வெள்ளைப்
பந்தாக
உருண்டோடிக் கூர்நகம் காட்டி
மெலிந்து சிவந்த நாக்கால்
அழுக்குத் திரட்டித் தின்னும்
பூனைக்குட்டி –
என்னோடு விளையாடத் தயாராக
வந்து நின்று, என் கால்களில் உடம்பைச்
சூடாகத் தேய்த்துக் கொண்டு நிமிர்ந்து
அறிவு ததும்பும் கண்களுடன் என்னைப்
பார்க்கிறது. அப்போது நான்
சிலப்
பதிகாரம் படிந்திருந்து விட்டேன்
பின்னர்
நான் அதை விளையாட
‘மியாவ் மியாவ் ஓடி வா’
என்று கூப்பிடும் போது நின்று
ஒய்யாரமாக ஒரு பார்வையை என்
மேல் வீசிவிட்டு மீன் நாற்றம்
அடிக்கும் கொட்டாவி விட்டுக்கொண்டே
அடுப்படியிலே போய்ச் சுருண்டு படுத்துக்கொள்கிறது
பூனைக்குட்டி

(எழுத்து / ஏப்ரல் 1959)

இப்படி ஒரு பயணம் சி.மணி – (1936-1979)

சி.மணி மறைந்து விட்டார் நேற்று, என்று நண்பரும் விருட்சம் என்னும் சிறுபத்திரிகாசிரியருமான அழகியசிங்கர் தொலைபேசியில் சொன்னார். கொஞ்ச காலமாக அவர் உடல் நிலை சரியில்லாது இருக்கிறார் என்று க்ரியா ராம க்ரிஷ்ணனும் எனக்குச் சில மாதங்கள் முன் தொலைபேசியில் சொல்லியிருந்தார்.

ஐந்தாறு வருடங்களுக்கு முன் சேலத்தில் காலச்சுவடு நடத்திய சி.சு.செல்லப்பா – கு.ப.ராஜகோபாலன் பற்றிய கருத்தரங்கின்போது தானே நடக்க சக்தியில்லாத ஒரு தளர்ந்த முதியவரை கைத்தாங்கலாக ஹாலுக்குள் அழைத்து வந்து ஓர் இருக்கையில் அமர்த்தினர். பக்கத்தில் இருந்தவரிடம் (அனேகமாக சச்சிதானந்தமாக இருக்கவேண்டும்), “யார் அவர்?” என்று விசாரித்தேன். “யோவ், சி.மணிய்யா அது!” என்று என் அறியாமையை இடித்துப் பேசும் குரலில் அதிர்ந்து போனேன். உடனே அவரிடம் விரைந்து சென்று, என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன்.

அவரது தளர்ந்த நிலை, என் அறியாமை, அதிர்ச்சி, என்னை அவருக்கு நான் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டி வந்த நிலை எல்லாம் எல்லாம் ஒரு விதத்தில் சொல்லப் போனால், தமிழ் உலகம் தன்னை அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டிய இன்றைய நிலையின் அன்றைய முன் அறிவிப்பு போன்ற உருவகக் காட்சியோ என்று தோன்றுகிறது. உருவகத்தின் ஒரே ஒரு விவரம் தான் மாறுகிறது. நான் என்னை அறிமுகப் படுத்திக்கொள்ள விரைந்தேன். இன்று தமிழ் நாடு அப்படியெல்லாம் செய்யவேண்டிய அவசியம் கொண்டதல்ல.

சி. மணிதான் தன்னை இன்றைய தமிழ்க் கவிதையின் ஒரு புது அத்தியாயத் தொடக்கத்தில் பங்கு கொண்ட கவிஞர் என்று தன்னை தமிழுக்கு நினைவுபடுத்தவேண்டும். தமிழ் இலக்கிய உலகம் கேட்குமோ கேட்காதோ எனக்கு நிச்சயமாகச் சொல்லத் தெரியவில்லை.

நான் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம், அவர் யார் என்று எனக்குச் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் என் நினைவில் சுமார் முப்பது முப்பதைந்து வருடங்களுக்கு இடையில் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாத காரணம் தான்.

எழுபதுகளின் ஆரம்ப வருடங்களில் ஒரு நாள் நான் சென்னையில் விடுமுறையில் வந்திருந்தபோது ந.முத்துசாமிதான் கடற்கரைக்கு என்னை அழைத்துச் சென்று அங்கு சி.மணி, வி.து.ஸ்ரீனிவாசன், இன்னும் ஒரு சேலத்துக்காரர், பெயர் மறந்து விட்டது, எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்கள் எல்லோரும் சென்னையில் கல்லூரித் தோழர்கள் என்றே நினைக்கிறேன். அப்படித்தான் ஒரு சின்ன நண்பர்கள் கூட்டம் எழுத்துக்கு ஒருமுகமாக அறிமுகமானது. அவர்கள் எல்லோரிலும் சி.மணி தான் ஒரு ராஜ தோரணையும், நெடிய உருவமும் கொண்டு தனித்துத் தெரிந்தார். அன்று astral bodies பற்றி முதன் முறையாக அவர் பேசக் கேட்டேன். இலக்கியம் பற்றியோ, கவிதை பற்றியோ பேசவில்லை. வி.,து. ஸ்ரீனிவாசனும் நிறையப் படித்தவராகத் தோன்றியது. ஸ்ரீனிவாசன் தத்துவ உலகில் சஞ்சாரம் செய்தார்.
சி.மணியைப் பார்த்த போது அவரை நான் எழுத்து பத்திfரிகையில் அவர் எழுதியிருந்த நீண்ட நரகம் கவிதையில்

கால் பட்டமணலிலும்
கண்பட்ட மனதிலும்

பல சுவடு பதித்து,

பதித்த நிலை தெரியாது

குதித்தோடும் ஒரு கும்பல்;

அதைத்தொடரும் மற்றொன்று

இன்னல் தனித்தே வராதா?

என்று எழுதக்கூடும் ஒருவரைப் பார்த்தேனே ஒழிய

கலைந்த மழையுள, மறைந்த பூவுள

தாங்கிய செங்கை தலைக்கண் மேலுள

ஒலித்த வளையுள, ஓய்ந்த விரலுள

சரிந்த தலைப்பால் தெரிந்த மலருள,

என்று எழுதியிருந்த, அதை சாத்தியமாக்கும் ஆழ்ந்த, பரந்த தமிழ்ப் பாண்டித்யமும் அதை நினைத்த கணத்தில் எடுத்தாளும் திறனும் கொண்ட ஒரு தமிழ் பண்டிதத் தோற்றத்தை நான் காணவில்லை.

மிகுந்த தோழமையோடும் பழகினார். ஒரு சில மணிநேரங்கள்தான். பின் அவரை நேரில் பார்க்கவில்லை. நடை பத்திரிகையில் எங்கள் நெருக்கம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் அவர்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்த கலிங்கத்துப் பரணியில் ஒரு பகுதிப் பாடல்களை (கடைதிறப்பு – மிக சுவாஸ்ய்மான பகுதி) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்ததைப் பார்த்தேன். கைப் பிரதியில் தான். எனக்குத் தெரிந்து அவை எங்கும் பிரசுரமாகவில்லை.

சி.மணி ஆங்கில இலக்கியத்தில்தான் பட்டம் பெற்றவர் என்று நினைக்கிறேன். ஒரு வேளை தமிழிலும் பட்டம் பெற்றிருக்கலாம். ஆனால் அவர் எழுத்து பத்திரிகையில் அதன் தொடக்க வருடத்திலிருந்தே எழுதிய கவிதைகள், மரபும், மரபு மீறலும், அம்மீறலில் தனக்கென ஒரு தனித் தடமும், கொண்டவராக, அதிலும் இவை கவிதை, தமிழ், யாப்பு என்ற வட்டத்துக்குள் சிறைப்பட்டு விடாது, ஒரு பரந்த உலகையும், பல துறைகளையும் ஒன்றிணைத்த , எள்ளலும், சமூக விமர்சனமும், ஒரு இளைஞனின் தான் அன்னியப்பட்டுவிட்ட நிலையில் தந்திருப்பது ஒரு புதிய வருகையை, தமிழுக்கு வந்துள்ள வளத்தைக் கொண்டாடுவதுதான்.

பல விஷயங்களில் பழமைப் பிடிப்பும் பிடிவாதமும் கொண்ட செல்லப்ப அந்த நாடகளில் சி.மணியின் புதிய பார்வையையும் குரலையும் இனங்கண்டு கொண்டாடி ஆர்ப்பரித்தது அப்போது மட்டுமல்ல, இப்போதும் நினத்துப் பார்க்கும் போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. சி.மணியின் பார்வையும் எழுத்தும் கஷ்டப்பட்டு யோசித்து வலிந்து பெற்ற ஒன்றல்ல. அது தாமாக சட்டென வெளிப்படுவது. சென்னை பஸ் நிறுத்தத்தில் பஸ் வந்ததும், கூடியிருக்கும் கூட்டம் பஸ்ஸில் இடம் பிடிக்க முண்டியடிக்கும் காட்சியைக் கண்டு இதை எதற்கு ஒப்பிடலாம், பழம் இலக்கியத்தில் தான் பண்டிதன் என்று காட்டிக்கொள்ள எந்த வரியை எடுத்தாளலாம் என்று யோசிக்கும் காரியமில்லை. “யோவ் பொம்பிளைங்கள ஏறவிடுய்யா முதல்லே” என்று ஆரம்பித்துத் தொடரும் கூச்சலையும் முண்டியடித்து ஏறும் காட்சியையும் பார்த்த உடனேயே சி.மணி உதட்டில் நகையேற,

சேவலே முன்னென்போரும், இல்லை

பெடையே முன்னென்போரும், இல்லை,

வரிசையே நன்றென்போரும், ஏறுவோரும்

தேர்ந்ததே தேரினல்லால், யாவரே

தெரியக்கண்டார்.

என்று மனதுக்குள் வரிகள் ஓடிக்கொண்டிருக்கும்.

நரகம், வரும் போகும் போன்ற நீண்ட கவிதைகளில் வரும் இன்றைய நடப்புலக நகரக் காட்சிகள், பழந்தமிழ் இலக்கியத்தில் பரிச்சமுள்ளவர்களுக்கு உடனே நினைவுக்கு வருவது மதுரைக் காஞ்சியில் வரும் நகரக் காட்சிகள். அதிலும் ஆடவர்கள் கவனத்தைக் கவர கணிகையர் தம்மை வண்ணக் கோலங்களில் அலங்கரித்து வரும் இரவு நகரக் காட்சியும் அடக்கம். ரோமானினர்களும், கிரேக்கர்களும் தம் நாட்டு உடைகளில் உலாவருகிறார்கள். நகரம் என்றால் எல்லாம் தான் அதில் அடக்கம்.

பழந்தமிழ் பா வரிகளை அப்படியே கையாண்டுள்ளதை நான் பாரதிதாசனில் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு தமிழாசிரியர் தானே. ஆனால் அவர் அந்த வரிகள் வசதியாகச் சேர்ந்தவை. அதற்கு மேல் அதற்கு மாறிய, வேறுபட்ட பயனோ, அர்த்தமோ இருந்ததில்லை. ஆனால் சி.மணி அந்த வரிகளை அப்படியே கையாள்வதில்லை. பழம் இலக்கிய வரிகள என்ற அடையாளத்தைத் தக்க வைத்துக்கொண்டு அதை மாற்றி, இன்றைய சமூகத்தின் நடப்புகளைக் கிண்டலோடு விமரிசிக்கும் பொருளில் கையாள்கிறார். அது வெறும் கிண்டல் இல்லை. சமூக விமர்சன்மும் பொதிந்தது. ஒரு ஜென் ஞானியின் பார்வையும், திருமூலரின் எளிமைத் தோற்றம் கொண்ட ஆழமும், முரணே போன்ற உண்மையும், கொண்ட தத்துவ விசாரமும் அடங்கியிருக்கும். முதல் கவிதையே

முற்றிய வித்து

பழமையின் திரட்டு; புதுமையின் பிறப்பிடம்(1959).

தோற்ற முரண் கொண்ட உண்மை.

இந்த விசாரம் கடைசி வரை தொடர்கிறது.

சிந்திப்பதற்கு மிகச் சிறந்த முறை எது

என்றால்சிந்திகாமல் இருந்து விடுவது தான். (1994)

இரண்டு மே ஏதோ ஒரு epigram மாதிரித் தோன்றினாலும் முன்னது இரண்டு வரிகளிலேயே கவிதையாகியுள்ளது. பின்னது ஒரு கவிதையின் தொடக்க வரியாகக் கொள்ளாமல், இரண்டு வரிகளினுடனேயே நின்று விட்டால் epigram- ஆக நின்று விடுகிறது.

எழுத்துக்கு இப்படி ஒரு கவிதைக் குரல் கிடைத்ததில் செல்லப்பாவுக்கு சந்தோஷமே. அதைக் கொண்டாடவும் செய்தார். சி.மணிக்கு தன் கவித்வ வெளிப்பாட்டிற்கு ஒரு மேடை கிடைத்தது பற்றி சந்தோஷமே. ஆனால் எழுத்து பத்திரிகையின் புதுக்கவிதையின் பிரயாணம் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. மரபை வரித்துக்கொண்டோரிடமிருந்து எதிர்ப்பு. தாம் புரட்சிக்காரர்களாக்கும் என்று கோஷமிடுவோரிடமிருந்தும் எதிர்ப்பு. அத்தோடு இவ்விரு சாராரையும் சேராத, செல்லப்பா போல புதுமை இலக்கியக்காரர்களிடமிருந்தும் எதிர்ப்பு. எல்லா எதிர்ப்பும் கிண்டலோடுதான். அதெல்லாம் பழைய கதை. இப்போது ஜஸ்டீஸ் பார்ட்டிக்காரர்களும், செஞ்சட்டை வீரர்களும், திராவிட கழகங்களும் அவர்களுக்கு அன்று வெறும் காந்தியாக இருந்தவரை, அண்ணல் காந்தியாக்கி அவர் சிலைக்கு மாலை அணிவிப்பது போல, இப்போது எல்லோரும் புதுக்கவிதைக் காரர்கள் தாம். ஆனால், சி.மணி எழுதிக்கொண்டிருந்த காலத்தில் அவருக்குக் கிடைத்த எதிர் வினை தான் தமிழ் இலக்கிய உலகத்தின் குணங்களில் குறிப்பிடத்தக்க விசேஷமான ஒன்று.

க.நா.சு. செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில் வந்த எதையும் அங்கீகரிக்கத் தயாராயில்லை. “ட்.எஸ். இலியட் செய்ததைத் திரும்பச் செயவதில் என்ன இருக்கு?” என்றார். காரணம் எழுத்து பத்திரிகையின் மீதும் செல்லப்பா மீதும் இருந்த பகைமை உணர்ச்சி. எழுத்து கடை மூடிய பிறகு வெகு காலம் கழிந்த பின்னர் அவர் எழுத்துவையும் செல்லப்பாவையும் பாராட்டி எழுதியவர்தான். க.நா.சுவுக்கு என ஒரு தனி சிஷ்ய கோடிகள் இருந்தார்கள். அவர்களும் அவர் வழியொட்டி சி.மணியைக் கண்டு கொள்ளவில்லை. ஷண்முக சுப்பையாவைக் கொண்டாடியவர்கள் சி.மணியைக் கண்டு கொள்ளாத வேடிக்கை எங்கு நடக்கும்? தமிழ் நாட்டில். மெத்தப் படித்தவர்களுக்கு டி.எஸ் இலியட்டின் Waste land-ஐ பிரதி செய்ததாகச் சொல்வது தம்மை உயர்த்திக்கொண்டதாகவும் இருக்கும், தாம் காணச் சகிக்காத சி.மணியை மட்டம் தட்டியதாகவும் இருக்கும் என்ற எண்ணம். அவர்கள் மெத்தப் படித்தவர்கள் மட்டுமே. அவர்களுக்கு வெறும் உத்தியையும் ஒரு உத்தி தந்த சிருஷ்டியையும் குழ்ப்பிக்கொள்பவர்கள். தம்மில் குழ்ப்பம் இல்லாவிட்டாலும் குழ்ப்பம் இருப்பதாகச் சொல்லி மகிழ்ந்தவர்கள்.

இந்திய மொழிகள் பலவற்றில் waste land-ன் பாதிப்பைக் காணலாம் என்று பார்தீய சாஹிக்தயவின் ஆசிரியர் என்னிடம் சொன்னார். எனக்குத் தெரிந்து மலையாளத்தில் அய்யப் பணிக்கர் இருக்கவே இருக்கிறார். இதில்லாம் தெரியாதென்று இல்லை. வேண்டுமென்றே புரளி செய்பவர்களை என்ன செய்யமுடியும்?. சி.மணியின் நரகம் சொல்வதை டி.எஸ் இலியட்டும் சொல்லவில்லை. அய்யப்ப பணிக்கரும் சொல்லவில்லை.

எழுத்து பத்திரிகை தன் கவிதையை நிராகரித்தது என்ற காரணத்தால், சி.மணி மட்டுமல்ல, தர்மூ சிவராமூ, சுந்தர ராமசாமி என்று சகட்டு மேனிக்கு எல்லோரையுமே நிராகரித்தவர்களும் உண்டு. சி.மணி நடை பத்திரிகையில் வே.மாலி என்று இன்னொரு புனை பெயரில் எழுதிய கவிதைகளைக் கண்டு ஆர்ப்பரிப்பதில் க.நா.சு.வுக்கு தயக்கமிருக்கவில்லை. வே.மாலி என்று எழுதுவது சுந்தர ராமசாமி என்று அவர் நினைத்தார். நான் அவரிடம் இது அவர் நிராகரிக்கும் சி.மணி என்று சொல்லவில்லை. அவருக்கு விஷயம் தெரியாது என்றில்லை. செல்லப்பாவை வெளிப்படையாக அங்கீகரிகக் கூடாது என்ற ஒரு தீர்மானம். அதில் இரையானது சி.மணி.

1964-65-ல் தில்லியில் என்னுடனான நேர்பேச்சில் அவர் சொன்னது, “எழுத்து மூலம் செல்லப்பா வெளிக்கொணர்ந்த இரண்டு முக்கிய பெயர்கள்: ஒன்று தருமூ சிவராமூ, இரண்டு வெ. சாமிநாதன்:”

மற்றொரு சமயம், “செல்லப்பா எதைப் பற்றி எழுதினாலும், அதை நான் கட்டாயம் பார்த்தாகணும். நான் அவரிடமிருந்து அதில் புதிதாகத் தெரிந்து கொள்ள ஏதும் இருக்கும்” ஆனால் இதையெல்லாம் அவர் எழுதியதில்லை. க.நா.சு போலத்தான் அன்று சி.மணியெல்லாம் ஒரு கவிஞரா என்று எழுதியவர்களும். எழுபதுகளில் பிரக்ஞை, தாமரை போன்ற இதழ்களில் ஒரு campaign- என்றே அதைச் சொல்ல வேண்டும். அப்படி ஒரு காட்டமான தொடர்ந்த எதிர்ப்புப் பிரசாரம் நடந்தது.

·ப்ராய்டிய மனப் பிறழ்ச்சி, அந்நியமாதல், எக்ஸிஸ்டன்ஸியலிஸம்,, இதெல்லாம் முதலாளித்வ சமூகத்தின் சீ£ர் கேடுகள்” என்று சோவியத் துண்டுப் பிரசுர பொது உடமைத் தத்துவ நோக்கில் நா.வானமாமலை எழுதலானார். இது முன் தீர்மானிக்கப்பட்ட கட்சிப் பார்வை. நா.வானமாமலை ரொமப விஸ்வாசமான கட்சிக் காரர். மற்றக் கட்சிக்காரர்கள் போல இலக்கியம் இன்னும் மற்ற சமாச்சாரங்கள் பற்றி ஏதும் தானே அறிந்து கொள்ளாதவர். மேலும் சி.மணியின் கவிதைகளில் பாலியல் ரொமபவும் பச்சையாகப் பேசப்படுகிறது என்று வேறு குற்றம் சாட்டியிருந்தார். வேறு எதற்கும் யாருக்கும் பதில் சொல்லாத சி.மணி பழம் இலக்கியங்களில் பேசப்பட்டிருக்கிறதே ஐயா, நான் அவ்வளவு தூரம் போகவில்லையே என்று பதில் சொல்லியிருந்தார். நா. வானமாமலை, இலக்கியத்தில் கொள்ளப்பட வேண்டுவதும், கொள்ள வேண்டாததும் எல்லாம் தான் இருக்கும். கூளப்ப நாயக்கன் காதலும் இருக்கிறது. விறலி விடு தூதும் இருக்கிறது. அதையெல்லாம் ஒதுக்க வேண்டும்”. என்றார்., ஆண்டாளும் கம்பனும், குறுந்தொகை இன்னும் மற்ற அகப் பாடல்களும் இருக்கின்றனவே, அவற்றையும் ஒதுக்கிவிடலாமா? என்று சி.மணி கேட்டிருக்கலாம். அவர் கேட்கவில்லை என்று தான் நினைக்கிறேன். அவருக்கு இந்த வாதங்கள் புரிவதில் நம்பிக்கை இல்லை. நீ எழுதுவதெல்லாம் கவிதையா என்று கேட்டவர்களுக்கே பதில் எழுதவில்லை. க.நாசு.வுக்கு அவர் பதில் சொன்னதில்லை.

அவரது இயல்பு அது. ஆனால், எழுத்திலும் நடையிலும் மற்ற இலக்கியச் சிறுபத்திரிகைகளிலும் தன் காலத்தில் எழுதிய மற்ற புதுக்கவிஞர்கள் ஆரவார வரவேற்பு பெற்ற இடங்களில் கூட சி.மணிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. Personal rivalry என்ற தளத்தில் மற்ற கவிஞர்களிடமிருந்தும், கண்டு கொள்ளாமல் ஒதுக்குவது என்ற வகையில் இலக்கிய கர்த்தாக்களிடமிருந்து வரும் எதிர்ப்பு இலக்கிய தளத்தில் புரிந்து கொள்ளத்தக்கதாக இல்லை. இது அந்த ஆரம்ப கால நோய்க்கூறுகளில் ஒன்று என்று தோன்றுகிறது. அந்தக் காலத்தில் மிகவும் பேசப்பட்ட, அவர்கள் தமக்குள் தாம் தான் பெரியவன் என்ற மிதப்பில் மிதந்தவர்கள் ஒருவரை ஒருவர் நிராகரித்துக் கொண்டார்கள். அது போல் தானே சி.மணிக்கும் நேர்ந்தது என்று கேட்டால், இவர்கள் அனைவரும் ஒன்று போல சி.மணியை நிராகரித்தார்கள் என்பதுதான் வேடிக்கை. பின்னர் அந்த ஆரம்பக் கால காட்டம் எல்லாம் மறைந்த பிறகு அன்று எதிர்த்தவர்களே சி.மணியைப் பாராட்டவும் செய்தார்கள். தம் மனதுக்குள் தம் அந்நாளைய எதிர்ப்பை எண்ணி வருந்திய்மிருப்பார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில், எனக்குத் தெரிந்து வேறு சில எதிர்ப்புக்களுக்கு அவர்கள் வருந்தியது எனக்குத் தெரியும்.

தமிழ் இலக்கியம் அறிந்த எந்த யாப்பின் வகைப்பட்டதும் அல்ல இது என்ற பண்டித கண்டனத்திற்கு மாத்திரம் அவர் விரிவாக ‘செல்வம்’ என்ற பெயரில் பதில் தந்தார். அது அவசியமா என்ன? அதை அவர்கள் எதிர்கொள்ளவும் இல்லை. அதன் காரண்மாக இதென்ன யாப்பு வகை? என்ற கேள்வியையும அவர்கள் அன்று நிறுத்தவும் இல்லை. காலவோட்டத்தில் அந்த்க் கேள்வி தானாகவே மறைந்தும் விட்டது. ·ப்ராய்டிஸ் மனப் பிறழ்ச்சி, முதலாளித்வத்தின் சீரழிவு போன்ற கண்டனக் குரல்களும் மறைந்து விட்டன.
ஆனால் நம் இருப்பின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தால் தான் தமிழ் உலகம் நாமும் இருக்கிறோம் என்று ஒப்புக்கொள்ளும். நாம் அமைதியாக இருந்துவிட்டால், நாம் ஒரு காலத்தில் இருந்த தடையமும் மறைந்து விடும். சத்தமிட்டுக் கேட்கும் குரல்களின் குணம் என்ன தரம் என்ன என்ற கேள்விகளை தமிழ் உலகம் கேட்பதில்லை. சத்தமே தரம், ச்த்தமே குணம் அதற்கு. இப்படித் தான் சார்வாகன் என்ற கவிஞரும் மறக்கப்பட்டு விட்டார். எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். நான் இருக்கிறேன் என்ற சத்தம் அவர்களுக்குக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.
தமிழ் இலக்கிய உலகம் சி.மணியை அங்கீகரிக்கவில்லை. அவரைக் கண்டுகொண்டது அமெரிக்கா வாழ் தமிழ்ர்கள் அளித்த விளக்கு விருது. தமிழ் நாடு எல்லை தாண்டி கேரளம் தந்த குமரன் ஆசான் பரிசு. இது ஏன் இப்படி நிகழ்கிறது என்று நாம் சற்று யோசித்தால் .
எழுத்து நின்றபிறகு, சி.மணி அதிகம் எழுதியவரில்லை. கணையாழி பத்திரிகையில் அவ்வப்போது சிறு கவிதைகள் எழுதி வந்திருக்கிறார். ஆனால் அறுபதுகளின் மணி அல்ல அவர். எழுபதுக்களுக்குப் பின் அதுவும் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கிவிட்டது.

ஆனால், ஆரம்பத்திலிருந்து அவருக்கு இருந்த கார்லோஸ் காஸ்டனாடா, குர்ஜீ·ப், ஜென், ஈடுபாடுகளில் அவர் மன்ம் முழுதுமாகத் தோய்ந்து விட்டது என்று தான் சொல்லவேண்டும். சில வருஷங்களுக்கு முன் வெளிவந்த தாவோ தே ஜிங் மொழிபெயர்ப்பு புத்தகம் அவரிடமிருந்து நமக்குக் கிடைத்துள்ள மிக முக்கியமான கொடை. மொழிபெயர்ப்புத் தான். சீன மொழியிலிருந்து ஒரு சீனரே ஆங்கிலத்தில் தந்துள்ள பிரதியிலிருந்து பெற்ற தமிழ் மொழி பெயர்ப்பு இது. சி.மணிக்கு இமாதிரியான விசாரணகளில் உள்ள ஈடுபாடு, கவித்வ மனம், மொழி வல்லமை எல்லாம் இம்மொழிபெயர்ப்பில் சாட்சியம் பெறுகின்றன.

வாசலைத் தாண்டிப் போகாமலே

உலகம் அனைத்தையும்

ஒரு மனிதன் தெரிந்து கொள்ள முடியும்

ஜன்னல் வழியே எட்டிப் பார்க்காமலே

வானத்துத் தாவோவை ‘

பார்க்க முடியும்

அதிகம் பயணிக்கும் ஒருவன்

மிகவும் குறைவாகவே தெரிந்து கொள்கிறான்.

ஆரம்பத்தில், 1959 வெளிவந்த அவர் முதல் எழுத்திலிருந்தே இத்தகைய விசாரணைகளோடு தான் அவர் பயணம் தொடங்கியதை திரும்ப நினைவுக்குக் கொள்ளலாம். பயணத்தின் முடிவிலும் அதே முரண்பட்ட உண்மைகளை அடந்திருப்பது பயணத்தின் தொடக்கமா, முடிவா, பயணம் தானா என்று சிலருக்குக் கேள்விகள் எழும். இன்னொரு கவிதை சி.

மணியினது
ஒரு உண்மை தேடி நச்சரித்தான்:

ஓ குருவேஇறப்புக்குப் பிறகு என்ன?
குரு சொன்னார், பார்வையில் குறும்புடன், ஓ அதுவா,பிறப்புக்குப் பிறகு என்ன?
70-க்களிலிருந்து அவர் அறுபதுக்களில் தெரியவந்த சி.மணியாக இல்லையே என்று எனக்கு வருத்தம் ஒரு பக்கம். அவரது கவித்திறனின் முழு வியாபகத்தை அவரது நீண்ட கவிதைகளில் தான் காண்கிறோம். புதுக்கவிதை தோற்றத்திற்குப் பிறகு நீண்ட கவிதைகளை யாரும் எழுதுவதில்லை. வெற்றிகரமாக அதைச் சாதித்தவர் சி.மணி தான். அவரது கவித்வ வாழ்வு கடைசி வரை ஏதோ வகையில் தொடர்ந்தது தான். தாவோ தேஜிங் சாட்சியப்படுத்துவது போல். ஆனால் அறுபதுகளில் அவரது கவித்வம் கண்ட வீச்சு காணப்படவில்லை. இதற்கு காரணம் சி.மணியின் ஆளுமை இயல்பா அல்லது தமிழ் இலக்கிய உலகின் குணவிசேஷங்களா? எனக்கு என்னவோ வருத்தமாகத்தான் இருக்கிறது. ஒரு கவிஞனை மூச்சடைக்கச் செய்துவிட்டோமோ என்று. இயல்பான பயணம் அல்ல இது. தடைக்கற்களை பாதை எங்கும் கொட்டி விட்ட பயணம்.
இலக்கிய பயணத்தில் மாத்திரம் இல்லை. தொடக்கத்தில் நெருங்கியிருந்த நண்பர்கள் கூட கால கதியில் ஒவ்வொருவராக விலகி தூரச் சென்று விட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். இனி சி.மணியால் என்ன பயன் என்றோ என்னவோ? சி.மணியின் முதல் கவிதைத் தொகுப்பை (அவரது மூன்று நீண்ட கவிதைகளையும் கொண்ட – வரும் போகும்) எழுபதுகளில் வெளியிட்ட க்ரியா ராமகிருஷ்ணன் தான் சி.மணியின் முமுக் கவிதைத் தொகுப்பையும் (இது வரை) பின் தாவோ ஜிங் மொழிபெயர்ப்பையும் வெளியிட்டு இன்னும் பல தளங்களில் அவரது ஒத்துழைப்பை வேண்டிக்கொண்டவர். அவருக்கு ஆரம்பத்திலிருந்து நட்பும் ஆதரவும் தந்தவர் எனக்குத் தெரிந்து ராமகிருஷ்ணன் மாத்திரம் தான். தனித்து விடப்பட்டிருந்த சி.மணிக்கு இந்த நட்பு இதம் தந்திருக்கும்.
17.4.09

கவிதை புரிய வேண்டுமா வேண்டாமா

இரண்டு வாரங்களுக்கு முன் திரிசூலம் ரயில்வே நிலையத்தில் அமர்ந்திருந்தபோது எங்களுடைய முதல் கேள்வி கவிதை புரிய வேண்டுமா வேண்டாமா என்பதுதான். எங்களிடையே பலத்த சர்ச்சையை இந்தக் கேள்வி ஏற்படுத்தியது. என்னைப் பொறுத்தவரை கவிதை புரிய வேண்டும் என்ற கட்சியைச் சேர்ந்தவன். ஆனால் கவிதை மனதிலிருந்து எழுதுவதால் புரியாமல் போக வாய்ப்புண்டு. கவிதையை எழுதுகிற மனமும், கவிதையை வாசிக்கிற மனமும் வேறு வேறு தளங்களில் இயங்குபவை. அதனால் கவிதை புரியவில்லை என்று ஒரு வாசிப்பவன் சொல்லி கவிதையைத் தூக்கிப் போட்டுவிட முடியும். என் நண்பர்கள் சிலர் கவிதை புரியவில்லை என்றே சொல்லாதே என்று அறிவுரை கூறுவார்கள். ஏனெனில் கவிதை புரியவில்லை என்று சொன்னால் எழுதுபவர்களுக்குப் பெரிய கித்தாப்பு ஏற்பட்டுவிடும். ஆனால் கவிதை எளிதாகப் புரியவேண்டும் என்று பாரதியார் கூறியபடி எளிதாக பல கவிதைகளைப் படைத்திருக்கிறார்.

சிலசமயம் கவிதை புரியும் ஆனால் கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியாது. அதனால் கவிதையைப் பொருத்தவரை இரண்டுவிதமான அபிப்பிராயங்கள் தோன்றாமல் இருப்பதில்லை. ஒன்று கவிஞரின் அபிப்பிராயம். இரண்டாவது வாசகனின் அபிப்பிராயம். எனக்குத் தெரிந்து நகுலன் ஆனந்த் கவிதை ஒன்றைப் படித்துவிட்டு, என்ன எழுதியிருக்கிறார், புரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஷாஅ என்பவரின் ஒரு கவிதையைப் பார்ப்போம்.

எனது

வீணையின் நரம்புகளுக்கு

பாடத்

தெரியாது

நடனம்தான்

தெரியும்.

அவை

ஆடினால்

பார்க்கமுடியாது

கேட்கத்தான்

முடியும்

மேலே குறிப்பிடப்பட்ட கவிதை படிப்பதற்கு எளிதாக தோன்றினாலும், என்ன சொல்ல வருகிறார் என்பதை வாசகர்கள் மூளையைக் கசக்கிக்கொண்டுதான் இருக்க வேண்டும். கவிதை மூலம் எளிமையாகச் சொல்லுதல் வேறு. அப்படி எளிதாக சொல்வதன் மூலம் புரிந்துகொண்டு விட முடியும் என்று சொல்ல முடியாது. ஜே கிருஷ்ணமூர்த்தி சொல்லுவது எளிதாகப் புரிவதுபோல் இருக்கும். ஆனால் ஆழமாக யோசித்தால் ஒன்றும் புரிபடாது. நம் வாழ்க்கைக்கு ஜே கே தத்துவம் உதவாது. என் நண்பர் ஒருவர் ஜே கே பேசுவதைக் கேட்டு எக்ஸ்பிரஸ் காஃபி குடிப்பதுபோல் இருக்கிறது என்பார். இன்னும் பல நண்பர்கள் ஜேகே படித்துவிட்டு இயல்பு நிலையிலிருந்து மாறி விட்டதாக தோன்றும். நான் ஜே கேயைத் தீவிரமாகப் படித்தபிறகு, எனக்கு கோபமே இல்லாமல் போய்விட்டது. யாராவது திட்டினால்கூட கேட்டுக்கெண்டிருப்பேன் சும்மா. நாராணோ ஜெயராமன் என்ற ஒரு கவிஞர். ‘வேலி மீறிய கிளைகள்’ என்ற தொகுதி க்ரியா பதிப்பகம் மூலம் வெளி வந்திருக்கிறது. இத் தொகுப்பு வந்தவுடன் அவர் எழுதுவதையே நிறுத்திவிட்டார். காரணம் ஜே கே. ஜே கே மாதிரி ஒருவரைப் பார்த்தபிறகு எழுதுவதில் ஒரு அர்த்தமுமில்லை என்பார் அவர். எனக்கு ஜே கே மீது கோபம் வரும்.

அதேபோல் கவிதை எழுதுவதிலும், கவிதையை வாசிப்பதிலும் நம்மைப் பெரிதும் தொடர்பு படுத்திக்கொள்ள முடியும். நாம் கவிதை எழுதுகிறோம். கவிதை வாசிக்கிறோம். எதை வாசிக்கிறோமோ அதை வேறு மாதிரி எழுத முயற்சிக்கிறோம். நாம் வாசிக்கும்போதே நம்முடைய உலகத்தை கவிதை பிடித்து விடுகிறது. அதேபோல் கவிதை எழுதுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் கவிதை எழுதுபவனை கவிதை காட்டிக் கொடுத்துவிடுகிறது. இது கவிதை எழுதுபவனுக்கே தெரியாது.

‘கொல்லும் முகம்’ என்ற சம்பத்தின் கவிதையைப் பார்ப்போம்.

சுழலும் விழிகளில் நீர் ஏனோ?

கழநிகளில் பாய்ந்ததுதான் போதாதோ

மறையும் மாலையில் ஒளிர்ந்திடும் –

உன் முகம்தான் என் வாழ்வின் விதிப்பயனோ?

தெரிந்ததில்லை பயணம் தொடர்ந்தக்கால்

தெரிந்ததில்லை – பருவமதில் – மாற்றத்தில் –

தெரிந்ததுதான் யாருக்கு எப்போது?

இயம்புமோ உன் முகம்தான் அதைப்பற்றி?

என் உறக்க, விழிப்பில், ஊர்ந்தவளே

என் சிந்தையில் படர்ந்த கொடிப் பூவே

என் மூளையில் பூத்த வெண் மலரே

உன் முகம்தான் என்னைக் கொன்றதடி.

மூளையில் வெண் மலர் பூத்தால் எப்படி இருக்கும்? எதிர்பாராதவிதமாக சம்பத் மூளை வெடித்து இறந்துவிட்டார். இந்தக் கவிதை மூலம் அவர் இது மாதிரி ஒரு முடிவு அவருக்கு ஏற்படுமென்று தெரியாமல் தெரிவித்து விட்டதாக எனக்குத் தோன்றும்.

அதேபோல் ஆத்மாநாம் கவிதை ஒன்றை பார்க்கலாம்.

நான் ஒரு ஞானியுமில்லை

நான் ஒரு சித்தனுமில்லை

பித்தம் பிடித்தும் பிடிக்காத மேதை நான்

படித்தும் படிக்காத புலவன் நான்

வைத்தியம் தெரிந்தும் செய்து கொள்ளா நோயாளி நான்

உண்மையைத் தொட்ட ஒரு பேதை நான்

உத்தமனில்லை ஆனால் பொய் சொல்லத் தெரியாது

சத்தியவான் இல்லை ஆனால் உண்மையே பேசுபவன்

இவற்றையும் மீறி இருக்கிற கொஞ்சம் மட்டுமே நான்

இந்தக் கவிதை தெளிவாகவே ஆத்மாநாமின் மனநிலையைக் காட்டுகிறது. நான் என்ன சொல்ல வருகிறேனென்றால் இக் கவிதை எழுதுபவனுக்கு மட்டுமல்ல வாசிப்பவனையும் வசப்படுத்துகிறது. வாசிப்பவன் இந்தக் கவிதையைப் படித்து மயங்கிவிட்டால் தொலைந்தான். அவனையும் இந்தக் கவிதைப் பிடித்துக் கொண்டு விடும். கவிஞனின் பிரக்ஞையை வாசகனைத் தெட்டுவிடும்.

இது கவிஞனின் பிரச்சினையாக மட்டுமல்லாமல், வாசிப்பவனின் பிரச்சினையாகக் கூட மாறிவிடத் தொடங்கும். இதைப் பற்றி இன்னும் யோசித்து எதாவது எழுத முடியுமாவென்று பார்க்கிறேன். இதை வாசிப்பவர்களும் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்கலாம். (இன்னும் வரும்)

நான்கு கவிதைகள்

கவிதை ஒன்று

ஓடிக்கொண்டிருந்தது நதி. கரையில் அமர்ந்திருந்தேன். வெயில் தாழ குளித்துக் கரைமீண்டாய் நீ நதியின் சுழல், ஆழம், குளிர்மை z
எனப் பேசிக்கொண்டே போனாய். ஓடிக்கொண்டிருந்தது நதி.
கேட்டுக்கொண்டிருந்தேன்
ஒரு முடவனைப் போல.
ஏதோ ஒரு தருணத்தில்
உன் தலை சிலுப்பில்
பூ தூறலாய் விழுந்தது
நதி என் மேலும்.
நீந்த முடியாத நதி.

கவிதை இரண்டு

அம்மா
காத்திருப்பாள்
அப்பாவிற்காக.
மிடறு தண்ணீரும்
கவளம் சோறும்
இறங்காது.
தகிக்கும் வெயிலில்.
வெறிச்சோடிய தெருவும்.
ஆண்டணா கம்பிகளும் –
ஒதிய மரமும்
மெளனமாய்
அம்மாவைப் பார்த்துக் கிடக்கும்
அம்மா காத்திருப்பாள்
அரவமற்ற வெளியில்
ஏதோ ஒரு தேவகணத்தில்
மலரும்
கருஞ்சிறகுகள்
அம்மாவின் மனங்குளிர.

கவிதை மூன்று

விரிந்த வானம்.
யாரோ இறைத்துபோன
தானிய மணிகள்போல
இறைந்து கிடக்கும் நட்சத்திரம் –
முற்றம் வழி
கூடம் நிறைக்கும் நிலவு
என்பதாய் இருந்தது
அப்பாவின் இரவுகள்

எனக்குக் கிடைத்தது
துண்டு வானம் –
முட்டம் இல்லாத நாளில்
இரண்டொரு நட்சத்திரம்
சாளரம் வழியே
கொஞ்சம் நிலவு.

உன் வீடுதான் காரணமென்றாலும்
நீயும் சொல்லக்கூடும்
என் வீடு
உன் வானத்தை மறைப்பதை.

கவிதை நான்கு

மிகவும் அழகானது
நீ உடைத்தப் பூஞ்ஜாடி
ஒரு பிரயாணத்தின் நினைவாக
அது இருந்தது
என் மேஜையில்.
உன் முகம் வீங்க
அறைய வேண்டும் போலிருக்கிறது
இருந்தாலும்-
அது உடைந்துதான் போய்விட்டது.

வேர்கள்

மெரிக்க கவிஞர் ஜெர்ட்ருட் ஸ்டைன் ஒரு கவிதையில் A Rose is a rose is a rose is a rose என்று ஒரு வரி எழுதியிருந்தார்.அது மிகவும் புகழ் பெற்ற வரி கிவிட்டது. பல சமயங்களில் அந்த தொடர் ஆறு அல்லது ஏழு முறைகள் Rose என்கிற சொல்லுடன் உபயோகிக்கப்படுவதுமுண்டு. ஆனால் ஸ்டைன் நான்கு முறைகள்தான் Rose என்கிற சொல்லை எழுதியிருந்தார். எத்தனை முறை வந்தாலும் அர்த்தம் ஒன்றுதான். ரோஜா ரோஜாதான். ரோஜாவை ரோஜாவால்தான் முழுதாக அர்த்தப் படுத்திக் கொள்ளமுடியும். ரோஜா என்கிற சொல்லை மட்டுமல்ல எந்த சொல்லை எடுத்துக் கொண்டாலும் அதைப் பிறிதொரு சொல்லால் பெயர்த்துவிட முடியாது. அகராதியில் நாம் ஒரு சொல்லுக்கு காண்கிற அர்த்தங்கள் யாவும் அதை நெருக்கமாக அணுகத்தான் பயன்படுகின்றன. அகராதி இல்லாவிடில் அதன் அர்த்தத்தை பிரபஞ்சம் முழுவதும் தேட வேண்டி வரும். எந்த ஒரு சொல்லின் பொருளும் அதிலேயே உள்ளது.

இதே போன்று நுண்மான் நுழைபுலத்துடன் இன்னொரு வரியையும் ஸ்டைன் எழுதியுள்ளார்.அது `There is no there there`. வசீகரமும் திறமையும் வாய்ந்த ஸ்டைன் தன் வாழ்நாளை பாரிஸிலேயே கழித்தார். அவர் பிகாஸோ, மாடீஸ், ஹெமிங்வே போன்ற பல பிரபலங்களின் சிநேகிதி. முப்பது வருடங்கள் கழித்து பாரிஸிலிருந்து அவர் தான் சிறு வயதில் வாழ்ந்த கலிபோர்னியாவிலுள்ள ஓக்லாண்டிற்கு சென்றார்.அந்த இடைப்பட்ட காலத்தில் அங்கு எல்லாமே மாறிவிட்டிருந்தது. தான் படித்த பள்ளி, பார்த்த பார்க், சென்ற கோயில் மற்றும் விளையாட்டு மைதானம் போன்ற அனைத்தும் மாறிவிட்டிருந்ததைப் பற்றித்தான் அவர் `அங்கிருந்த அங்கு அங்கில்லை` என்று எழுதினார். அவ்வாறு அவர் நடந்து கொண்டது உள்ளூர்வாசிகளுக்கு மன வருத்தம்தான். என்ன செய்வது? பாரிஸ்வாசியான ஸ்டைன் வாழ்வில் ஓக்லாண்ட் அத்தியாயம் அத்தோடு முடிவுற்றது.

ஆனால் சென்னைக்கு குடியேறுகிற பலர் தங்கள் சொந்த ஊரையே நினைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். தங்களுடைய பொற்காலம் அங்குதான் இருந்ததாக நினைக்கிறார்கள். அதிகப்படியாக அவர்களில் பலர் பதினெட்டு வருடங்கள் வரைதான் சொந்த ஊரில் வாழ்ந்திருப்பார்கள். ஆனால் வயது எழுபது ஆனாலும் அதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். பல அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், எழுத்தாளர்கள்,அலுவலர்கள் இதில் அடக்கம். இவ்வளவிற்கும் இவர்களுக்கு சென்னை வந்த பிறகுதான் புகழ், பணம், சொத்து, பதவி ஆகியனவெல்லாம் கிடைத்திருக்கும். இருந்தும் இவர்கள் சென்னையை விரும்பாததுபோல் காட்டிக்கொள்வார்கள். தங்களுடைய வேர்கள் அங்குதான் இருப்பதாக சொல்லிக்கொண்டிருப்பார்கள். சென்னையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இல்லாத ஒரு கவர்ச்சி அம்சத்தையும் இதன் மூலம் இவர்கள் தங்கள் மேல் தோற்றுவித்து விடுவார்கள்.

ஆப்ரிக்க-அமெரிக்க எழுத்தாளர் அலெக்ஸ் ஹேலி இத்தகைய கவர்ச்சியை மிகுந்த சாமர்த்தியத்துடன் பயன்படுத்தி Roots என்கிற சுயசரிதையை எழுதினார். தன்னுடைய முன்னோர்களை காம்பியாவிலுள்ள ஒரு இனத்துடன் முடிச்சு போட்டார். பதினெட்டாம் நூற்றாண்டில் அங்கிருந்து அடிமையாக வந்த குந்தா கிந்தே என்பவரின் வாரிசு என்று தன்னை அறிவித்தார். புத்தகம் பல லட்சம் பிரதிகள் விற்று புலிட்சர் பரிசையும் வென்றது. அந்த அமளி எல்லாம் முடிந்த பிறகு வேர்கள் புத்தகத்தில் காணப்பட்டவை வேறு பல புத்தகங்களில் ஏற்கனவே வேர் கொண்டிருப்பதை விமர்சகர்கள் அடையாளம் காட்டினர். திருட்டு குற்றத்தை ஹேலியே ஒப்புக் கொண்டார். ஒரு எழுத்தாளருக்கு பெரும் நஷ்ட ஈடும் கொடுத்தார். இது ஒரு அதீத உதாரணம். வேர்களைத் தேடிச் செல்பவர்கள் எல்லாம் பொய்யர்கள் இல்லை.

கடந்தகால வாழ்வின் ஒரு கால கட்டம் ஜீவனுடையதாக இருக்கும் பட்சத்தில் அதன் பாதிப்புகளை பாராட்டுவதுதான் நியாயமானது. ஆனால் வேர்கள் என்ற ஒன்றை வலுக்கட்டாயமாகத் தேடிச் செல்ல வேண்டுமா என்பது தான் கேள்வி. எனது நண்பரான ஒரு வங்காளப் பெண்மனி பலகாலம் சென்னையிலேயே வாழ்ந்துவிட்டு பின் வரும் காலத்தை கொல்கத்தாவில் கழிக்க முடிவு செய்து சென்னையிலிருந்த சொந்த வீட்டையும் விற்றுவிட்டு தன் கணவருடன் கிளம்பினார்.என்ன இருந்தாலும் தன்னுடைய இடம் அதுதான் என்று அவர் நினைத்தார். ஒரு வருடம் கழித்து ஒரு நாள் அவரிடமிருந்து போன் வந்தது. கொல்கத்தாவிலிருந்து பேசுகிறார் என்று நினைத்தேன். தானும் தன் கணவரும் சென்னைக்கே திரும்பிவிட்டதாக அவர் கூறினார். கொல்கத்தாவுடன் அவரால் தன்னை இணத்துக் கொள்ள இயலவில்லை. சென்னையில் கிடைத்த நண்பர் குழாத்தை அவரால் அங்கே ஏற்படுத்திக் கொள்ள இயலவில்லை.பூர்விகம்தான் நமது வேர் என்றில்லாது ஆக்கபூர்வமாக எது நம்மை செயலுக்குட்படுத்துகிறதோ அதை நாடிச் செல்வதுதான் பொருள் பொதிந்த செயலாகும். ஐரீஷ் கவிஞர் டபிள்யு.பி.யேட்ஸ் தன் முன் வந்து நின்ற ஜே.எம்.சிங் என்னும் நாடக சிரியரிடம் `ஏரன் தீவுகளுக்குச் செல்.அங்குள்ள மனிதர்களின் வாழ்வைப் பகிர்ந்துகொள். எவரும் வெளிப்படுத்தாத அந்த வாழ்க்கையை நீ வெளிப்படுத்து.` என்றார். சிங் அதை வேத வாக்கியமாக பாவித்து ஏரன் தீவுகளுக்கு உடனே சென்று அந்த வாழ்க்கையை தனது நாடகங்களில் உலகே வியக்கும் வண்ணம்வெளிப்படுத்தினார்.
மகாகவி பாரதி எட்டையபுரத்தில் பிறந்து வளர்ந்து பின்னர் காசி, சென்னை, புதுவை என்று புலம் பெயர்ந்து கொண்டே இருந்தார். தனது படைப்புகளில் எட்டயபுரத்து வாழ்க்கையை஢ல் தேவைக்கு மேல் லயித்ததில்லை. அகில இந்தியாவையும் தனது பரப்பாக பாவித்தவர் அவர். தேசியக் கவி மட்டுமல்ல, தேசிய எழுத்தாளரும் பாரதிதான். பதின்மூன்று வயதிலேயே கடலூரை விட்டு சென்னைக்கு குடிபெயர்ந்த ஜெயகாந்தன் மிகுதியாக எழுதியதெல்லாம் சென்னை வாழ்க்கையைப் பற்றித்தான். யாரும் அதுவரை பார்த்திராத சென்னையையும் அவர் தன் எழுத்துகளில் வெளிக்கொணர்ந்தார்.
செகந்திராபாத்தில் பிறந்து வளர்ந்து எப்போதோ சென்னைவாசியாகிவிட்ட அசோகமித்திரன் இப்பொழுதும் கூட தன் இளமைக் கால அனுபவங்கள் பற்றி எழுதுகிறார். ஆனால் அதற்கு இணையாக அவர் சென்னை வாழ்க்கைபற்றியும் எழுதுபவர். தனது அமெரிக்க அனுபவங்களை வைத்தும் அவர் குறிப்பிடத்தக்க கதைகளை எழுதியுள்ளார்.பதினெட்டாம் அட்சக்கோடு நாவல் எழுதி முடிக்கும்வரை ஒரு இருபத்தைந்து வருட காலம் அவர் செகந்திராபாத்-ஹைதராபாத் எல்லைக்குள் கால் வைக்கவில்லை என்பது இப்போது எல்லோருக்கும் தெரிந்த ருசிகரமான தகவல். ஞாபகத்திலுள்ள இரட்டை நகரத்தை நிகழ்காலத்தில் சென்று பார்ப்பது தனது படைப்புக்கு எவ்விதத்திலும் உதவாது என்று அவர் முடிவு செய்தார். அவர் அறிவார் `அங்கிருந்த அங்கு அங்கில்லை` என்பதை.
நான் 2002ல் எடுத்த `அசோகமித்திரன்` டாகுமெண்டரியின் போது அதற்கு தொடர்பான இன்னொரு சுவையான சம்பவம் நிகழ்ந்தது.அவரை நான் செகந்திராபாத்தில் அவர் வாழ்ந்த லான்சர் பாரக்ஸ் என்கிற ரயில்வே குடியிருப்புக்கு அழைத்துச் சென்றேன். பல வருடங்களுக்குப் பின் அவர் அங்கு செல்கிறார். அப்பொழுது அந்த வீட்டில் யாரோ ஒரு உயர் அதிகாரி தங்கியிருந்தார். அந்த வீட்டிற்குள் அசோகமித்திரனுடன் சென்று அவரது நினைவுகளைப் பற்றிய வெளிப்பாடுகளை படமெடுப்பதாக ஏற்பாடு. நாங்கள் சென்ற சமயம் அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது. பக்கத்து வீட்டுக்காரர் அதன் சாவியைக் கொண்டு வந்து திறந்து விடுவதாகக் கூறினார். ஆனால் அசோகமித்திரன் ஏனோ அதை விரும்பவில்லை. அவர் மன நிலை மாறிவிட்டிருந்தது. அவர் இல்லாமல் அந்த வீட்டினுள் சென்று அதைப் படம் பிடிக்க எனக்கும் விருப்பமில்லை. அந்த வீட்டின் கேட் முன்னால் நின்று கொண்டே தனது கடந்த கால நினைவுகளை அவர் அசோகத்துடன் பகிர்ந்து கொண்டார். தன் சிறுபிராயத்து தடயங்கள் அழிந்ததற்காக அவர் வருந்தவில்லை.அன்று தான் விளையாடியதற்கு கிடைத்த மைதானம் போல் இன்று உள்ள சிறுவர்களுக்கு விளையாட மைதான வசதி இல்லையே என்பது பற்றித்தான் அவர் நெகிழ்ச்சியுடன் பேசினார். எவ்வித முன்கூட்டிய திட்டமிடலும் இன்றி உருவான அக்கணங்கள் டாகுமெண்டரியில் பதிவாயின. டாகுமெண்டரியைப் பார்த்தவர்களுக்கும் அப்பகுதி மிகவும் பிடித்திருந்தது.
நான் சென்னைக்கு வந்து இருபத்தாறு வருடங்களாகிவிட்டன. பிறந்தது, ஆறாவதிலிருந்து கல்லூரி வரை படித்தது எல்லாம் திருச்சியில்தான். அன்றிலிருந்து இதுநாள் வரை இலக்கியம், நாடகம், சினிமா ஆகியவற்றில் தொடர்ந்து ஆர்வம் உள்ள சில நண்பர்களைக்காணத்தான் நான் திருச்சி செல்கிறேன். மற்றபடி பழைய ஞாபகங்களைக் கிளறவோ, பழைய இடங்களை மீண்டும் மீண்டும் பார்த்து பெருமூச்செறியவோ அங்கு செல்வதில்லை. எல்லா ஊர்களையும் போல அங்கும் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சில பகுதிகளுக்கு செல்லும்பொழுது நான் அங்கே அதுவரை சென்றதே இல்லை என்று கூட அவை எண்ண வைக்கின்றன. பாரபட்சமற்ற ஒரு பார்வையில் சென்னைதான் தமிழ் நாட்டின் சிறந்த இடமாக எனக்குப் படுகிறது. வந்தாரை மட்டுமல்ல நிந்தனை செய்வோரையும்கூட வாழ்விக்கும்நகரமும் சென்னைதான்.

மூன்று கவிதைகள்

கவிதை ஒன்று

வெகு நாட்களுக்குப் பிறகு

எனக்கொரு கடிதம் வந்தது

சுட்டெரிக்கும் வெறுமையின் மத்தியில்

எனக்கென தோன்றிவிட்ட மாயையை

அக்கடிதம் ஏற்படுத்தியிருந்தது

நிரம்பி வழியும் தனிமையின் நிழலை

அழித்துவிடுவதற்கேனும் கடிதம் வந்திருக்கலாம்

இன்னும் கிழித்துப் படிக்கவில்லை

இழந்து போனவர்களில் யாரோ ஒருவர்

இதை அனுப்பியிருக்கக் கூடும்

எதன் அடையாளமாகவேனும்

தெரிந்து கொள்ளும் ஆவலில்

கடிதத்தைக் கிழித்தேன்

அதனுள்

ஏதோவொரு பறவையின்

முறிந்த சிறகு கிடந்தது

கவிதை இரண்டு

இரவுகளின் நடனத்தைக்

கண்டவர்

அவ்வளவு எளிதில் உர்ரான்குவதில்லை

கழிதலறியும் உத்திகளை

எவ்வழியிலேனும் கையாளத்

தயாராக இருக்கிறார்

சுயசெய்கைகளுக்கு உட்பட்ட

காமவெளிப்பாடுகள் துருத்தி நிற்கும்

கழியாத இரவொவ்வொன்றும்

அவரை வீழ்த்த எப்பொழுதும்

காத்துக்கிடக்கின்றன

நடனத்தின் அசைவுக்குள்

விழும் எம்முறையும் வெறுக்கிறார்

நெடியுடன் பிறக்கும் விட்டிலை

கவிதை மூன்று

உதிர்தலில் வாடாத மரங்களின்

பெருமூச்சைக் கடந்து செல்லும்

நதியின் சலனமாக கடவுள் உறங்குகிறார்

ஒரு பூனையின் சாதுர்யமாக

கடவுளின் இல்லத்திற்குள் நுழைந்து

அவரது பஞ்சனைக்கு அருகில் அமர்கிறேன்

அவரின் பாதங்களில்

பிரார்த்தனைச் சீட்டுக்கள் விழுகின்றன

ஒவ்வொரு சீட்டினுள்ளும்

கடவுளின் உஷ்ணத்தில் பிறந்து

சூடு தாளாமல் இறந்து போன

யாரோ ஒருவர் இருக்கிறார்

வெகு சிலர் எனது இருப்பை

கடவுளுக்குத் தெரியப்படுத்த முயலுகிறார்கள்

அவர் இன்னும் உறங்கிக்

என் கோணிப்பை நிறைத்திருக்கும்

விஷத்திலிருந்து இரு சொட்டுக்களை

அவரது வாயில் ஊற்றுகிறேன்

அவை வழுக்கிச் சென்று

மரண முடிச்சைத் தேடுகின்றன

கடவுள் திமிருகிறார்

கண்கள் பிதுங்குகின்றன

சிறிது நேரம் மனிதர்கள் பிறப்பது நிற்கிறது

மூச்சு அடங்குகிறது

கடவுள் இறந்து போகிறார்

கடவுளின் இல்லம் விட்டு நகர்கையில்

எனது வாயிலிருந்து இருபற்கள்

நீட்டி முளைத்து நிற்கின்றன

ஒரு பிசாசின் உருவமாக