இம்மாலை ததும்பி வழிந்திருந்தது பொழுது –

யாருமற்ற ஆல மரத்தடியில்இலைகளும் பறவையொலிகளும் உதிரஅறிவு உலகில் வாழ்ந்த நாட்கள்…மேய்ச்சல் போகும் மந்தை மாடுகளின்மணியொலிச் சத்தமும்அவ்வப்போது வியந்துநின்று அகலும்செருப்போசைகளும்ஆலம்பழத்தின் ஊடே ஆசுவாசித்திருந்த பறவையும்வழி தவறிநம்மிடையே வந்த சிறு வெள்ளாடும்காற்றில் படபடத்தபுத்தகப் பக்கங்களும்வியந்து ரசித்தவண்ணச் சிறு பூக்களும்நினைவுகளில்நுண்ணெழிற் சித்திரங்கள் ஆக…பார்க்கவோ பேசவோஎண்ணவோ எழுதவோகூடாத இந்நாளில்கடந்த பாதைகளின்புத்தகங்களும் பேச்சுக்களும் வழித்தடங்களும் மரங்களும்ஒலிகளும் இலைகளும்மாடுகளும் மந்தைகளும்பேரோசையோடுகடந்து விரையஉறைகிறது இம்மாலை பிரிவின் துரு பூசிய அந்த ஆலம் விழுதுகளில்.

எதையாவது சொல்லட்டுமா / 27

ஒரு வழியாக நவீன விருட்சம் 87/88வது இதழை அனுப்பி வைத்தேன். கடந்த 15 நாட்களாக அவஸ்தை. ஆனாலும் முழுத் திருப்தியாக இதைச் செய்தேன் என்று சொல்ல முடியாது. இன்னும் சிலபேருக்கு அனுப்புவது நின்று போயிருக்கும். எப்போதோ சந்தா கட்டியவர்க்கு அனுப்பியிருப்பேன். சமீபத்தில் சந்தாவைப் புதுப்பித்தவர்களுக்கு அனுப்பியிருக்க மாட்டேன். இனிமேல்தான் எல்லாவற்றையும் கண்டுபிடிக்க வேண்டும். அது போகட்டும். நவீன விருட்சம் ஆரம்பிக்கும்போது கவிதை இதழாகவே ஆரம்பம் ஆனது. 16பக்கங்கள்தான் முதல் இதழ். எல்லாப் பக்கங்களும் கவிதைகள். கவிதையைக் குறித்து சில சந்தேகங்களை போன எ.சொ.21ல் எழுப்பியிருந்தேன். பலருக்கு நான் அதிருப்தியுடன் எழுதியிருப்பதாகத் தோன்றியது. உண்மை அப்படி அல்ல. கவிதை ஒரு அற்புதமான விஷயம். மிக எளிதில் கவிதை படிப்பவர் மனதைப் பிடித்துவிடும். ஆனால் கவிதையை ரசிக்க தனிப்பட்ட மனோ நிலை தேவை. எதைக் கவிதை என்று தேர்ந்தெடுப்பது என்பதில் சிக்கல் இல்லாமல் இல்லை. கவிதை என்று எதாவது எழுதிவிட வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு கவிதை எளிதில் வசமாகாது. கவிதை பலரை ஏமாற்றி விடும். 70களில் வானம்பாடி என்ற கூட்டம் கவிதைகளைக் குறித்து உரக்கச் சிந்தித்து எழுதினார்கள். ஆனால் அவர்களுடைய கவிதைகள் பலவும் வெறும் சத்தம்தான். அவர்கள் எழுதும் பாணியிலே அவர்களுக்குத் திருப்தி இல்லை. அப்படியே ஓய்ந்து போய்விட்டார்கள். இனிமேல் அந்த முயற்சி தொடர்ந்தால் கேலிக்கு இடமாகிவிடும். அதேபோல் இடதுசாரிகள். அவர்களுடைய கவிதைகள் எல்லாம் நாட்டில் உள்ள எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதுபோல் இருக்கும். உண்மையில் அவர்கள் என்றுமே பிரச்சினையைத் தீர்க்க விட மாட்டார்கள். ஏனென்றால் பிரச்சினை தீர்ந்துவிட்டால் அவர்கள் கட்சி இருக்க முடியாது. இடது சாரிகளுக்குக் கூட்டம் அதிகம். மாதம் ஒருமுறை சந்திப்பார்கள். அவர்களுடைய பத்திரிகைகள், புத்தகங்களை வாங்குவார்கள். தப்பான கருத்துகளை பேசிக்கொண்டிருப்பார்கள். இதை எதையும் எதிர்பார்க்காத கூட்டம் ஒன்று உள்ளது. அவர்களுடைய கவிதைப் புத்தகங்கள் அவ்வளவு எளிதாக அச்சுக்கு வராது. வந்தாலும் யார் கவனத்திற்கும் போகாது. ஆனால் அவர்கள்தான் உண்மையான கவிதைகளை மெளனமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்று கவிதை பலரால் எழுதப்படுகிறது. கவிதை எழுதுபவர்கள் முதல்வராகவோ பிரதமராகவோ கூட இருக்கலாம். கும்பகோணத்தில் ஒரு பள்ளி தீ பற்றி எரிந்த சம்பவத்தின்போது அதை எப்படி கவிதையாகக் கொண்டு வருவது என்ற யோசனை பலமாக எனக்கு இருந்தது. அந்தத் தருணத்தில் நாட்டின் குடியரசு தலைவராக இருந்த அப்துல் கலாம் ஒரு கவிதை எழுதியிருந்தார். அற்புதமாக அந்தக் கவிதை இருந்தது. தினமணியில் வெளிவந்த அந்தக் கவிதையை திரும்பவும் நவீன விருட்சத்தில் நான் வெளியிட்டிருந்தேன். துயரத்தை அந்த அளவிற்கு யாராலும் வரிகள் மூலம் வெளியிட்டிருக்க முடியாது. ஆனால் அதன் பின் அவர் எழுதிய எந்தக் கவிதையும் என் மனதை கவரவில்லை. அதேபோல் ஆன்மிக குருமார்கள் கவிதைகள் எழுதி உள்ளார்கள். ஜே கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தை வேண்டுமானால் ரசிக்கலாம். ஆனால் அவருடைய கவிதை முயற்சியை ரசிக்க முடியாது. ஆனால் நாரானோ ஜெயராமன் என்ற கவிஞர். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தில் ஈடுபாடு கொண்டு எழுதுவதையே நிறுத்திவிட்டார். அதேபோல் ஜக்கி வாசுதேவ் காட்டுப்பூ என்ற அவருடைய பத்திரிகையில் எழுதும் கவிதைகளை நம்மால் பெரிதும் ரசிக்க முடியாது. கவிதைகளை புரியாதபடி எழுதுவார்கள். நம்மால் கிட்ட நெருங்க முடியாது. தேவை இல்லை என்றும் தோன்றும். பெரும்பாலான மொழிபெயர்ப்பு கவிதைகளை ரசிக்க முடியாது. சிலர் ரொம்பவும் புரியும்படியும் கவிதை எழுதிவிடுவார்கள். சிலசமயம் ரசிக்க முடியும் சிலசமயம் முடியாது. இதன் மூலம் கவிதை என்றால் என்ன என்பதை நிச்சயம் சொல்ல முடியாது. பெரும்பாலான கவிதைத் தொகுதிகளை ரசிக்க முடியாது. எழுதுபவர்கள் அவர்கள் அறியாமலே திரும்ப திரும்ப சலிக்கும்படி எழுதியதையே எழுதிக் கொண்டிருப்பார்கள். சில தினங்களுக்கு முன் என் அலுவலகத்தில் இரவு எட்டுமணிக்கு லோன் கட்டாத மகளிர் குழுவுடன் கடுமையாக அதிகாரி போனில் பேசினார். வந்தது வம்பு. அந்த மகளிர் குழுவைச் சேர்ந்த ஆண்கள் கடுமையாக போனில் வங்கியில் உள்ள அனைவரையும் திட்ட ஆரம்பித்தார்கள். வழக்கமாக நான், வங்கி மேலாளர், இன்னொரு அதிகாரி மூவரும் சீர்காழியிலிருந்து மயிலாடுதுறைக்குக் கிளம்பினோம். பஸ்ஸில் ஏறி அமர்ந்தவுடன், வங்கி மேலாளரும், இன்னொரு அதிகாரியும் தூங்கி விடுவார்கள். போனின் எதிரொலியால் வங்கி மேலாளர் வழக்கம்போல் தூங்காமல் விழித்துக்கொண்டே வந்தார். அடுத்தநாள் காலையில் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, டிரைவர் சீட் பின்பக்கத்தில் ஒரு திருக்குறள் தென்பட்டது. மேலாளர் என்னிடம் அதைச் சுட்டிக் காட்டினார். கவிதைக்கும் அவருக்கும் ரொம்ப தூரம். ஆனால் அந்தக் குறள் படிக்க நன்றாகவே இருந்தது. ஏன் இதைச் சொல்ல வருகிறேனென்றால் எளிதாக மனதைப் பிடித்துக்கொள்ளும்படி கவிதை இருக்கிறது என்பதற்காக. இந்த இடத்தில் நகுலனின் ஒரு கவிதை ஞாபகத்திற்கு வருகிறது.
இருப்பதற்காகத்தான் வருகிறோம்இல்லாமல் போகிறோம்.

ADVERTISEMENT FOR SELVARAJ JAGADHEESAN POETRY BOOK

ருசியுடன் கனிந்திருக்கும் கவிதைகள் – கல்யாண்ஜி (அறிமுக உரையின் ஒரு பகுதி) செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள், பக்கத்திலிருக்கிற ஒருவரிடம், உடனுக்குடன் பேசுகிற அன்றாடத்தின் தொனியுடன் அமைந்து விடுகின்றன. நாம் அன்றாடங்களின் தொனியை வாழ்விலிருந்து உதறிவிட முடியாது.
ஆனால் கவிதையில், அந்த உதறுதலுக்கான, ஈரம் காய்தலுக்கான, வெயிலுக்கும் வெதுவெதுப்புக்குமான அவசியம் இருக்கிறது. கிளையிலைத் தடுப்புக்களைத் தாண்டித் துளைத்து மீறும் வெளிச்ச ரகசியம், எங்கிருந்தோ கேட்கும் பரிச்சயமற்ற குரலில் முடிச்சவிழும் சொல்லின் புதிர், நாம் தாண்டிப் போகிற பேருந்து நிறுத்தத்தில் தலை கவிழ்ந்து உட்கார்ந்து அழும் நடுத்தர வயதுப் பெண், உடன் வாழ்ந்து மறைந்த ஒருவனின் உடலை ஆவேசமான தழலுடன் உள்ளிழுக்கும் மின் தகன மேடையின் கடைசி இரும்புத் தடதடப்பு என்று இப்படி சொல்லிக் கொண்டே போக முடிகிறதான அவசியங்களின் வெளிப்படையான மற்றும் மறைத்து வைக்கப்படும் அடுக்குகள் தேவைப் படுகின்றன.
நாம் புழங்குகிற மொழியை அனுபவங்களின் தலைகீழ் விதையாக அவை ஊன்றுகின்றன. நாமறியாச் சொல்லின் இலைகளுடன் அவை முளைத்து, நாமறியாப் பொருளின் வாசனையுடன் அவை பூத்து, நாமறியா எழுத்தின் ருசியுடன் அவை கனிகின்றன.
செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகளையும்,கவிதை சார் கட்டுரைகளையும் பின் தொடர்ந்து வருகிறார் என்பதை, அவர் விட்டுச் செல்லும் சுவடுகள் தடயப்படுத்துகின்றன.
– கல்யாண்ஜி
ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் – செல்வராஜ் ஜெகதீசன்(கவிதைகள்)பக்.64 விலை ரூ.50
வெளியீடு:
அகநாழிகை பதிப்பகம்33 மண்டபம் தெருமதுராந்தகம் – 603306.
பேச : 999 454 1010
கிடைக்கும் புத்தக கடைகள்:
1) நியூ புக்லேண்ட்ஸ், தி.நகர், சென்னை. 2) டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர்,சென்னை. 3) மதுரை : பாரதி புக் ஹவுஸ் (பெரியார் பேருந்து நிலைய உட்புறம்) posted by செல்வராஜ் ஜெகதீசன்

குடையும் நானும்




அலுவலக பயணமாக நான் சென்ற அந்த ஊர் எனக்குப் புதிது. வேலைகளில் ஒடுங்கிப் போன என் கண்களுக்கு அந்த ஊரில் எதுவுமே தெரியவில்லை.
ஊருக்கு திரும்பும் நேரம் பெய்த மழையில் குடையினை விரித்தேன். சிதறிய மணலில் நீரின் சிருங்கார ஆட்டம் என் கால்களை கிளுகிளுக்க வைத்தது. சுற்றிலும் பன்னீரைச் சொரிந்தது போல் குடையருவியின் குதூகலம். கார் மேக குடையில் கண்ணாடி மாளிகைக்குள் கனிந்த மழை ரசத்தில் களித்த நான் ரயில் நிலையத்தை நெருங்கிய போது கையில் குடை இல்லை. மழை விட்ட போது தேநீருக்காக ஒதுங்கிய கடையில் குடையையும் விட்டிருக்கிறேன்.
அவசர அவசரமாக குடைக்காக அந்த வழியில் திரும்பிய என் நடையின் வேகத்தை கண்கள் கால்களில் கயிறுகளைக் கட்டி இழுத்தன.
நான் வந்த பாதையில் உண்மையில் களைந்தது விரிந்த குடைக்கு அப்பால் மிதந்த மஞ்சள் மலர் கூட்டங்கள். சில்லென்ற மழையில் சிலிர்த்துப் பறந்த சிட்டுக் குருவிகள்.. பதமான மழையில் மிதமாகப் பறந்த பட்டாம் பூச்சிகள். முரட்டு மீசையுடன் மயிர்கள் நிறைந்த உடம்போடு அரக்கன் போல் காட்சி அளித்த தொலைவில் இருக்கும் அந்த அசுர மலையும்தான். களைந்த குடைக்குள் விரிந்த உலகத்தில் விளைந்தன கோடானு கோடி குதூகலங்கள்.

d/bகாற்றில் தத்தி பறக்கும்வெள்ளை காகிதம்சேர்வது எவ்விடம்…வானில் இருந்துயார் வரையும்கோடுகள்இம்மழை…கோலிப் பளிங்கின்கண்ணாடி உலகுள்வடிவங்கள் எப்படி…d – ஐ b – போலவும்b – ஐ d – போலவும்எழுதினால் என்ன..வேகமாக ஓடாமல்எதற்காக சாலைகளில்மெதுவான இந்த நடை…கடலின் அலைகள்எதையோ சொல்ல வந்துஏதும் சொல்லாததேன்… வண்ணங்களால்வசீகரிக்கப்பட்டுபந்தை சுழற்றும்சிறுமிவண்ணங்களைஎண்ண எண்ண வளர்கின்றன நிறங்கள்.

பங்குனிப் பெருவிழா

ராட்சஸ ராட்டினம்
ஐஸ்கிரீம்,வளையல்
கடைகள் எல்லாம் உண்டு
திருவிழா நடைபெறுகின்ற
பதினைந்து நாட்களுக்கு
நடக்கும் அன்னதானத்துக்கு
கூடும் கூட்டத்தால்
கோயிலே அல்லோலஹல்லோலப்படும்
ராஜகோபாலசுவாமிக்கு
ஏற்றவளாகத்தான் வாய்த்திருக்கிறாள்
செங்கமலத்தாயார்
பங்குனிப் பெருவிழாவில்
கண்ணனுக்கு வெண்ணெய்யை
தின்னக் கொடுக்காமல்
முகத்தில் அடித்து சந்தோஷப்படும்
கோபிகைகள் கூட்டம்
விழா முடிந்து
பெருமானும், பிராட்டியும்
ஊஞ்சல் ஆடுவதைப்பார்த்து
ஆதிசேஷன் பொறாமைபடக்கூடும்
ஏகாந்தமாய் இருக்கும்
பெருமாளின் மனசு
அன்னையாய் அணைவரிக்கும்
தாயாரின் மனசு
நெறைஞ்சி போய் கிடக்கும்
மக்களின் மனசு.

அப்பாவி

காய்கறிகாரனிடம் பேரம் பேசுவதில்லை
எதிர் வீட்டுக்காரனிடம் முறைத்துக் கொள்வதில்லை
உறவுகளிடம் உரசிக் கொள்வதில்லை
மளிகைக் கடை அண்ணாச்சியிடம் கடன் வைப்பதில்லை
நடத்துனரிடம் மீதிச்
சில்லரைக்காக சண்டையிடுதில்லை
மாமனாரிடம் பணம் கேட்டு நச்சரிப்பதில்லை
யாராவது கிண்டல் செய்தாலும்
பதிலுக்கு அவர்களை நையாண்டி செய்வதில்லை
இப்படி இருப்பதினாலேயே
ஊரில் அவனுக்கு பெயர்
அப்பாவியென்று.

கவிதையின் ஜனனம்

படிப்பவர்கள் இல்லையென்றே
எழுதுபவர்களின் கைகள்
எழுத மறுத்தும்
கவிதைகள் அவர்களை
வட்டமிட்டுக் கொண்டே
இருக்கின்றன.
காதில் வந்து வண்டு போல்
சதா ரீங்கரித்து
கொண்டே இருக்கின்றன
கவிதைகள்.
மூக்குகளை மூர்ச்சையாக்குகிற
அளவிற்கு ஊடுருவிப்
பாய்கின்றன
கவிதைகளின் வாசம்.

துலக்கம்

காரின்சடசடத்த மழைச் சத்தம்பச்சையின்சலசலக்கும் பயிரொலிமஞ்சளின்சரசரத்த ஒளி வார்த்தைநீலத்தின்பரபரக்கும் சிறகோசைவெண்மையின்சப்தமற்ற சப்தம்…இனி தோன்றுவதைநீங்கள் எழுத………………………..இப்படி மட்டும்சொல்கிறது கவிதை.நிறங்களுக்குசப்தங்கள் போல்பிரதிக்குவடிவங்கள்…வாசிப்பிற்கேவிரிந்த சிறகுகள்.

எதையாவது சொல்லட்டுமா / 26

ப்போதெல்லாம் யோசிக்கும்போது இந்தக் கவிதைகளை ஏன் எழுதுகிறோம் என்று தோன்றுகிறது. கவிதைகளை வாசிப்பவர்கள் மிக மிகக் குறைவானவர்கள். யாருக்ககாக நாம் கவிதை எழுத வேண்டும் என்ற ஒரு கேள்வியைக்கூட நான் கேட்டுக்கொள்கிறேன். கொஞ்சம் யோசிக்கும்போது எனக்காகத்தான் நான் கவிதையை எழுதுகிறேன் என்றாலும், நானே எழுதி நானே வாசிக்கத்தான் கவிதை எழுதுகிறேனா என்ற கேள்வியும் உடன் எழுகிறது. நகுலன் அவர் கவிதைத் தொகுதியைப் புத்தகமாகப் போடுபவர்களைப் பார்த்து 50 பிரதிகளுக்குமேல் போடாதீர்கள் என்பார். தலையை எண்ணி கவிதைப் புத்தகத்தைக் கொடுத்து விடலாம் என்றும் சொல்வார்.
ஆரம்பத்தில் எனக்கு வள்ளலார் கவிதைகள் மீது ரொம்ப ஆசை. என்னடா வரிகளை இப்படி கொட்டு கொட்டென்று கொட்டுகிறாரே என்று தோன்றும். பின் என் மனநிலை மாறிவிட்டது. இன்று ஆயிரக்கணக்கான பேர்கள் கவிதைகளை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் கவிதையைப் புரிந்துகொண்டு அதில் ஆழ்ந்து சிந்தித்து எழுதுபவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் அலுவலகம் செல்லும்போது மின்சார வண்டியில் எதாவது கவிதையை வாசித்துக் கொண்டே போவேன். இப்படி கவிதை வாசிப்பு கவிதை எழுதுபவனாகக் கூட மாற்றி விட்டது. நானும் 200 கவிதைகளுக்குமேல் எழுதிவிட்டேன்.
மின்சாரவண்டியில் மாம்பலத்தில் ஏறியவுடன், நான் வாசித்த கவிதை என் மனதில் இருந்தால், அது குறித்து யோசித்துக்கொண்டே போவேன். இப்படிப் பல கவிதைகளை நான் ரசித்திருக்கிறேன். ஆனால் கவிதை ரசனை என்பது என் மனதில் திட்டமிட்டுத்தான் நடக்கும். இதற்கும் என் அலுவலகப் பணிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இப்படி நான் செயல்படுவதை கவிதை ரசனை இல்லாதவர்களுக்குக் கிண்டலாகப் படும். ”என்ன கவிஞரே, கவிதை யோசிக்கிறீங்களா?” என்று கிண்டலடிப்பார் அலுவலகத்தில் உள்ள ஒரு அதிகாரி. சுட்டுப்போட்டாலும் அவருக்குக் கவிதையே வராது. யோசிப்பது என்பது 24 மணிநேரமும் கவிதையைப் பற்றியே யோசிப்பது என்பதும் கிடையாது. பிறகு இயற்கை வளமான பகுதிகளைச் சுற்றிப் பார்த்தால் போதும், இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள், உங்களை மாதிரி கவிஞர்களுக்கு கவிதை எழுத மூட் வந்து விடுமே என்பார்கள். என்ன இப்படியெல்லாம் அபத்தமாகப் பேசுகிறார்களே என்று தோன்றும். ‘கண்ணதாசன் எப்படி பாட்டு எழுதியிருக்கிறார், ஏன் சார், உங்களுக்கு அப்படியெல்லாம் எழுத வரவில்லை,’என்பார் ஒருவர். அவர்களுக்கு எப்படி விளக்குவது என்பது நமக்குப் புரியாது. கவிதை ரசனை இல்லாதவர்கள்தான் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். அவர்களில் பலர் தமக்கும் கவிதையைப் பற்றி தெரியும் என்பதுபோல் பேசுவார்கள்.
ரொம்ப அறிவாளியான என் நண்பர் ஒருவர், தினமலர் இதழில் வெளிவரும் துணுக்குக் கவிதைகளைக் கொண்டாடு கொண்டாடு என்று கொண்டாடுவார். அவருக்கு விருட்சம் இதழில் வரும் கவிதையைப் பற்றி புரியாது. இப்படியெல்லாம் உள்ள அவதியான சூழ்நிலையில்தான் கவிதை எழுத முயற்சிக்கிறோம். கவிதையைப் பற்றி சிந்திக்கும் என் நண்பர்கள் பலர், தங்களை கவிஞர் என்று சொல்லிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். பட்டி மன்றத்தில் வாசிப்பதுபோல், கவிதையை இரைந்து சத்தம் போட்டு வாசிக்கக் கூட விருப்பப் பட மாட்டார்கள்.
இரண்டு வாரங்களுக்குமுன் ஒரு ஞாயிற்றுக்கிழமை சமயவேல் என்ற கவி நண்பர், ஜெயமோகன் எழுதியதைப் பற்றி குறிப்பிட்டார். சமயவேல், ஆனந்த், காளி-தாஸ், கனகதாரா போன்றவர்கள் போலி ஜென் கவிஞர்களாம். (இன்னும் ஜெயமோகன் எழுதியதை நான் படிக்கவில்லை) எனக்கு கேட்க வேடிக்கையாக இருந்தது. பிரமிள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். விருட்சம் இதழில் அவர் பெயரைக் குறிப்பிடும்போது, பக்கத்தில் ஞானக்கூத்தன், பசுவய்யா பெயர்கள் எல்லாம் வரக்கூடாதாம். இது ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது.
சமீபத்தில் அலுவல் விதிப்படி எங்கள் அலுவலகத்திலிருந்து ஒரு பெண்மணி வேறு ஒரு கிளைக்கு மாற்றப்பட்டு விட்டார். இப்படி ஒரு பிரிவு ஏற்படும்போது, கூட்டம் நடக்கும். கூட்டத்தில் பலர் பேசுவார்கள். நான் அந்தச் சந்தர்ப்பத்தில் எதாவது கவிதை வாசிப்பேன். நான் அப்படி ஏற்கனவே எழுதிய கவிதை ஒன்றை வாசிக்கப் போகிறேன் என்று சொன்னவுடன், அலுவலகத்தில் உள்ள நண்பர் ஒருவர், ‘நான் இப்போதே எழுந்து வெளியே போய்விடுகிறேன்,’ என்று மிரட்டினார். கடைசியில் நான் பேசும்போது, வெளிக் கதவைச் சாத்தி விடுகிறேன்…யாரும் வெளியே போகக்கூடாது…என்று மிரட்டி என் கவிதையை வாசித்தேன்.
வாசித்து முடித்தவுடன், கவிதையை கேட்பதற்கும், ரசிப்பதற்கும் ஆட்கள் இல்லாமல் போய்விட்டார்களே என்று வருத்தமாக இருந்தது.