பந்து.

“பாட்டீ! யாரோ ’பத்தி ராஜம்மா’ளாம் , அவங்களப்பத்தி சுவாரஸ்யமா இண்டர்நெட்ல ஒரு தமிழ் க்ரூப்ல விவரம் போட்டுருக்காங்க….உனக்குத்தான் இந்தமாதிரி செய்தின்னா ஆர்வம் ஜாஸ்தியே படிக்கறேன் கேக்கறியா?” என்று கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருந்த தன் பேத்தி மீனா கூவவும் புளியில் கோதினை நீக்கியபடி கூடத்தில் உட்கார்ந்திருந்த விசாலம் தனது அறுபதுவயதினை மீறி சிறுபெண்ணைப்போல உற்சாகமாய் அறைக்குள் ஓடி,” சொல்லு சொல்லு” என்றாள்.

மீனா திருச்சியில் ஒருபெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். சமீபமாய் கணிணியில் தமிழில் தட்டச்சக் கற்றுக்கொண்டுவிட்டாளாம். தமிழ் இணையதளங்களை எல்லாம் தினமும் எட்டிப்பார்த்துவிடுவாள். இணைய மகாசமுத்திரத்தில் வலைப்பூக்களில் மடலாடற்குழுமங்களில் தமிழ் மொழி ஆற்றும் பெரும் பணியினைக்கண்டு மகிழ்ந்துபோவாள்.
.அதனைப் பெருமை தாங்காமல் முதலில் பாட்டியிடம் தான் அதை சொல்லிக்கொண்டாள். அப்பாவும் அம்மாவும் ,”போதுமே, தமிழாடி உனக்கு பின்னாடி சோறுபோடும்? ஃப்ரெஞ்ச்படி, ஜெர்மன் படி, உன் பாட்டி அந்தகாலத்தில் கிராமத்தில் தமிழில் கவிதை கிறுக்கி பரணில் போட்டுவைச்சிருந்தா…. அந்த பாதிப்பு உனக்கும் வந்து தமிழ்மோகம் பிடிச்சி அலையறே லூசு” என்றதால் பிறகு அவர்களிடம் மீனா சொல்லவேண்டியதை மட்டும் சொல்லுவாள்.பாட்டிதான் மீனாவுக்கு உற்ற தோழி.

“ம்ம் படிக்கிறேன்…யாரோ மோகனரங்கனாம் கவிஞர், நல்ல சிந்தனையாளர் என்று தெரிகிறது அவர் தன் வலைப்பூவில் இப்படி எழுதி இருக்கார் பாட்டி படிக்கறேன் கேளு பாட்டி” என்று கணிணி திரையைப்பார்த்து மீனா உரக்கப் படிக்க ஆரம்பித்தாள்.

’பத்தி யதிராஜம்மாள் !

இவர் கவர்னர் அன்று. அல்லது முதல் முதலில் பாராசூட்டிலிருந்து
கீழே குதித்த பெண்மணியுமன்று. இல்லையென்றால் ஆரம்ப கால தமிழ்
எழுத்துக்களில் நேரடியாக தன் பெயரில் போடாமல் எழுதிப் பின்னர்
பிரசித்தமான எழுத்தாளருமன்று. பின்னர் இவர் யார்?

சில வருஷங்களுக்கு முன் நீங்கள் ஸ்ரீபெரும்பூதூர் போயிருந்தால்
நிச்சயம் தெருவில் இவரை அடையாளம் கண்டிருக்க முடியாது. கையில்
தடியூன்றி உடல் செங்குத்துக் கோணத்தில் குனிந்து, குரல்
ஆற்றின் அலைவரிசையை அடைந்தது போல் வருகின்ற வயதான
மூதாட்டியை எப்படி பார்ப்போம்?

ஐயோ பாவம்! பாட்டி ஓரமாகப் போங்கோ!

ஆம் பெண்சமூகத்தையே வெகுகாலம் ஓரமாகப் போங்கோன்னுதான் சொல்லி
ஏதோ ஆங்கிலம் வந்த முகூர்த்தம் அஷ்ட லக்ஷ்மிகளும் திக்விஜயம்
வருகிறார்கள். வயதான மூதாட்டி ஓரமாகத்தானே போகவேண்டும்.
சரிதான். ஏதாவது வண்டி கிண்டி வந்து மோதிடுத்துன்னா! வண்டி
ஓரமா போனா என்னன்னு யோசிக்க இன்னும் பலகாலம் ஆகும்.
அதுவரையில், பெருசோ, பாட்டியோ ஓரமாகப் போகட்டும். இல்லை
சமுதாயத்தில் சில விஷயங்களை நினைத்தால் தூக்கமே வரமாட்டேன்
என்கிறது. சமுதாயம் கிடக்கட்டும். நாமே மடத்தனத்தில் ஊறி
ஒருகாலத்தில் கொள்கலனாய் இருந்த தவறுகளை நினைத்தால் ‘என்ன
பேச்சு வேண்டி கிடக்கிறது நம்ம பவுசுக்கு? என்றுதான் வெட்கம்
பிடுங்கித் தின்கிறது.

நல்ல வேளை சித்தர் ஒருவர் பாடிவைத்தார். ‘வெட்கம் கெட்டு விதி
கெட்டு வெளிப்பட்ட மூளிக்கு முக்காடு ஏதுக்கடி குதம்பாய்
முக்காடு ஏதுக்கடி’

அவர் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்கிறீர்களா? அதெல்லாம்
பெரியவா சொல்றதுக்கு பலவகையில் அர்த்தம் கொள்ளலாம். ஒரே
அர்த்தம்னு சோனிப்பிச்சான் மாதிரி வாக்கு சொல்வாளான்ன? சித்தர்
இல்லையா? சித்தம் போக்கு என்பதுபோல் நம் சித்தத்துக்கு
ஏற்றாற் போல் பொருள் கொள்ள முடியாமல் போனால் அப்புறம் அவர்கள்
என்ன சித்தர்கள்?

சரி நமது மூதாட்டி விஷயத்துக்கு வருவோம். ஓங்கோலோ நெல்லூரோ
அங்கிருந்து எந்தக் காலத்திலிருந்தோ வந்து ஸ்ரீபெரும்பூதூரே
கதியெனத் தங்கிப் பல தலைமுறைகளைக் கண்ட கண்கள் இப்ப இப்பதான்
டெலஸ்கோப் வைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அப்பொழுது போயிருக்கும் பொழுது தம்பியின் நண்பருக்குச் சொந்தம்
என்ற வகையில் விவரங்கள் கிடைத்தன. எனக்கு ஒரு கிளரும்
எண்ணம்.
அவர் இவ்வளவு நாள் என்ன கண்டிருப்பார்? போய்ப்
பார்த்தால் பழங்கதைகள் வண்டி வண்டியாய்ச் சொல்லுவார் என்று
தயாராகத்தான்
போயிருந்தேன். ஆனால் முற்றிலும் என்னை அசத்திவிட்டார் மூதாட்டி.

அங்கு இருக்கும் ஸ்ரீராமானுஜரின் வழிவந்தவர்களான ஆசூரி ஸ்வாமி
திருமாளிகையில் பெரிய ஆசூரி ஸ்வாமியிடம் அந்தக் காலத்தில்
பல ஸ்ரீவைஷ்ணவ ரஹஸ்ய கிரந்தங்களைக் காலக்ஷேப முறையில் பாடம்
கேட்டு அப்படியே மூலபாடம் வ்யாக்யானம், அதற்கு பத
அர்த்தங்கள் நுட்பப் பொருட்கள் என்று நினைவில் வைத்தே சொல்லிக்
கொண்டிருந்தார் மூதாட்டி. அந்த ஸ்வாமி என்ன அர்த்தம் சொல்வார்
இந்த ஸ்வாமி என்ன அர்த்தம் சொல்வார் என்று authorwise
catalogueம் போகிறவாக்கில் சொல்லிக்கொண்டு போகிறார்.
இத்தனைக்கும் தமிழ் எழுத படிக்கத் தெரியாது. தெலுங்குதான்.
தெலுங்கு லிபியில் போட்ட மணிப்ரவாள வ்யாக்யானங்களே மூதாடிக்கு
ஜீவாது.

அவருடைய அறை எது தெரியுமோ? வாசலில் நின்று பெல்லை
அழுத்தினால் அதோ அந்தக் கடைசியில் நேர் ரேழி ஓடி
கொல்லையில் முடிகிறதே அந்தக் கதவிற்கு முன்னால் போவோர்
வருவோருக்கு வழிவிட்டு ஓரமாகக் கிடக்கை. வீட்டில் என்ன வண்டி
வந்து போய்க் கொண்டிருக்கப் போகிறது? ஓரமாகத்தான் மூத்த
தலைமுறைகளின் வாசம். நடுவில் அமர்ந்து நாம் என்ன கிழித்துக்
கொண்டிருக்கிறோம் என்று எனக்குப் புரிந்தபாடில்லை.

முதலில்தான் தயக்கம். பிறகு பேசத் தொடங்கியதும், அகண்ட
காவிரியாய் அரட்டை போய்க்கொண்டிருக்கிறது. வடமொழிப் பதங்கள், வ்யாகரண கோட்பாடுகள்,

அவற்றைப் பயன்கொண்டு நிர்வாஹங்கள் எல்லாம் படிக்காத
அந்தக் காலத்துப் பெண்மணி தள்ளாத வயதில் தடுமாட்டம் இல்லாத
நினைவோடு கூறுவது எப்படி முடிந்தது?

முதலில் மாதர்கல்வி என்பது என்ன ? இது என்ன? என்றோ
ஆயிர வருஷங்களுக்கு முன்னால் ஒருவர் அகழ்ந்த ஊருண்கேணி.
காலத்தின் ஒற்றை வழிப்பாதைகளில் வந்து வந்து மொள்ள கொடுத்துக்
கொண்டே இருக்கும் வற்றாத ஏரி. ஸ்ரீராமானுஜரின் இந்தப்
பிரபாவங்களுக்கு ஏதுகல்வெட்டு? கல்வெட்டா? உயிர்க்கட்டாக காலம் தோறும்
தொடர்கிறதே.

இந்த மாதிரி செட்டி குலத்துத் திருவிளக்குகளான பாகவத
அம்மாக்கள்தான். முன்னரே சொன்னேனே தெலுங்கு எழுத்தில் வந்த
சுமார் ஐயாயிரத்துப் பக்க அட்லாஸ் சைஸ் நூற்தொகுதியில் 15
புத்தகங்கள் அடுக்கடுக்காக உரைகள் அரும்பதங்கள் அடக்கம் அதில்
ப்ரூப் திருத்தம் 7 பாகவத மூதாட்டிகள். திருத்தத்தை மீறி
எஞ்சிய தவறுகளும் மொத்தம் 7தான்.
பல சமயம் சந்நிதிக்குக் கூடப் போகாமல் வந்திருக்கிறேன். ஆனால்
போனவுடன் இந்த பாகவத ஆன்மாவைச் சந்திக்காமல் வந்ததில்லை.
இன்றுபோனால் சந்நிதிக்கு மட்டும்தான் போகமுடியும். ஏனென்றால்
அங்குதானே ஆசார்யன் திருவடியில் அந்த மூதாட்டியும் இருப்பார்,
ஓரமாக அன்று; ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி உரிமையோடு நடு
ஓலக்கத்தில், உதிக்கும் உத்தமர்தம் சிந்தையுள் ஒண்கழலோன்
யதிராஜன் உவப்புக்கு இலக்காகி.’’

மீனா நிறுத்தியதும் விசாலம் வியப்புடன்,” அடேயப்பா ! அருமையான தகவல் ஆச்சே இது! நிச்சயம் அந்த அம்மாளை ஸ்ரீ பெரும்புதூருக்குப் போய்ப்பார்க்கவேண்டும் மீனா” என்றாள்
.
“எங்கபாட்டி அதுநடக்கப்போகிறது? உன்னைத்தான் இன்னிக்கு ராத்திரி அப்பா பெங்களூர்க்கு சித்தப்பாஆத்துக்கு அனுப்பப்போறாளாமே? நானும் இன்னிக்கு ஸ்கூல் எக்ஸ்கர்ஷன் டில்லி போறேன் வரதுக்கு ஒரு வாரம் ஆகும் பாட்டி. ஆறுமாசமா நீ இங்க இருக்கறதுல எனக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா பாட்டி? செத்துப்போன தாத்தா பத்தி, கிராமம் ஊர் திருவிழா இலக்கியம் நம்ம கலாசாரம் பத்தில்லாம் நீ சொல்றப்போ நிஜம்மா எனக்குப்பெருமையா இருக்கும்! இந்த அம்மாவும் அப்பாவும் ஒண்ணும் சொல்லமாட்டா. அப்பாக்கு ஆபீஸ், அம்மாக்கு டிவி சீரியல்தான் முக்கியம். ” மீனா சிணுங்கினாள். வேறு சமயமாயிருந்தால் விசாலம் உடனே போய் பேத்தியை சமாதானம் செய்திருப்பாள் இப்போது அவளது சிந்தனையெல்லாம் தன்னை இன்று ஊருக்கு அனுப்ப இருப்பதாக மகனும் மருமகளும் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே என்பதுதான். எதைத்தான் முன்கூட்டியே சொல்லி இருக்கிறார்கள்? தூரத்துப்பச்சையாய் தெரிவதெல்லாம் அருகில் வந்தவுடன் தூர்வாறாதக் கேணியாக நாறுவதை உணரமுடிகிறதே! இதை முன்னே உணர்ந்துதான் தன் கணவர் சாகும்வரைக்கும் கூழோ கஞ்சியோ குடித்துக்கொண்டு கிராமத்திலேயே இருக்கலாம் என்றார் போலும்!

விசாலம் பெருமூச்சுவிட்டுக்கொண்டாள்

எல்லாம் ஆறுமாதமாய்ப் பழகி விட்டது.

அரவிந்தஅன்னைக்குக் காலையில் வைத்த காகிதப்பூவை கைப்பைக்குள் போட்டுக்கொண்டாள் விசாலம். நல்லபடியாய் தான் பெங்களூர் போய்ச் சேர்ந்துவிடுவோம் என்ற நம்பிக்கைப்பூ மனசில் பூக்க மகனை நிமிர்ந்துபார்த்தாள்.

பெங்களூரில் தமிழ் புத்தகம் அதிகம் கிடைக்குமோ கிடைக்காதோ? புத்தக வாசிப்பின் நாட்டம் காரணமாய் நாலைந்து நாவலும் கவிதைப் புத்தகமும் வாங்கிதரமுடியுமா என்று பத்ரியிடம் கேட்க வாயெடுப்பதற்குள் அவன் மனைவியைப்பார்த்தபடி,” லதா, பதினோருமணிக்கு அம்மாக்கு பஸ் ,ஆனா ஒன்பதுமணிக்கே அம்மாவை பஸ் ஏத்திவிட்டுட்டு நாம அப்படியே
மனோ வீட்டு பெர்த்டே பார்ட்டிக்குப்போய்ட்லாம் என்ன?” என்றான்.

லதா ,” ஆமா பார்ட்டிமுடியறநேரம் போகணும், வேற வழி? உங்க தம்பிதான் கரெக்ட்டா ஆறுமாசம் முடியற நாளில் தான் அம்மாவை தன்கிட்ட அனுப்பணும்னு கண்டிஷனா சொல்லிட்டாரே. ஒருநாள் ரெண்டுநாள் முன்னே போனால் என்னவோ? வனஜா கெட்டிக்காரி. நான் தான் அசடு. “ என்று அடிக்குரலில் முனகினாள்.

“ வனஜா மட்டுமா? மாதவனும் கெட்டிக்காரன். அம்மா இங்க இருக்கிறாளேன்னு ஒரு பைசா அனுப்பினானா பாரேன்.அப்பா உயிரோ்டு இருந்தவரை அவர்கிட்ட அவனுக்கு ஒரு பயம் இருந்தது மாசாமாசம் கிராமத்துக்கு பணம் அனுப்பிண்டு இருந்தான் அப்பா போயி அம்மாவை நாம பேசிக்கொண்டபடி ஆளுக்கு ஆறுமாசம் வைச்சிக்கணும்னு அம்மாவை முதல்ல மூத்தபையன்னு என்கிட்ட தள்ளிட்டான். ஆறுமாசத்துல ஒருநாள் திருச்சிவந்து எட்டிப்பாக்கல; ஒரு சல்லிப் பைசா அனுப்பல….நானும் இப்போ அம்மா கைல பஸ் டிக்கட் தவிர அம்பதுரூபாய்தான் கொடுத்திருக்கேன் ஜாஸ்தி கொடுத்தால் தம்பி சுருட்டிப்பானோ இல்லையோ வனஜா காய்கறிக்கு காஸ்மெடிக்குக்குன்னு உடனே பிடுங்கிடுவா இந்த அம்மாவும் அசடு கொடுத்துடுவா…..”

பத்ரியின் பேச்சைக்கேட்டு விசாலம் அதிர்ந்துபோக வில்லை ஆறுமாதமாய் இதுவும் பழக்கமாகிவிட்டதால் அதிகம் உறைக்கவில்லை. விருந்தும் மருந்துமல்ல தாயும் தந்தையும்கூட மூன்றுநாளைக்குதான் என்கிற காலகட்டம் உருவாகிவிட்டது எல்லாவீடுகளிலும் மனிதர்கள் இருக்கிறார்கள் தனிதனி தீவுகளாய் என்று எங்கோ படித்த கவிதை விசாலத்திற்கு நினவிற்கு வந்தது.

ஜங்ஷனில் வெளியூர்ப்பேருந்து நிலையத்தில் விசாலத்தை விட்டுவிட்டு,” பஸ் இங்கதான் வரும். கேட்டுண்டு ஏறு. டிக்கட்டைக்காமிச்சி எந்தபஸ்ல ஏறணும்னு யாரையாவது கேட்டா கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவா. ஜாக்கிரதையா போய்ட்டுவாம்மா….வனஜா கொஞ்சம் ரஃபா ஓபன்னா பேசுவா லதாமாதிரி இல்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ “ என்றான்.

’உன் பொண்டாட்டி மொழுக்குப்பூனைப்பா. பேசாமயே காரியத்தை சாதிச்சிப்பா ’என்று சொல்லவந்ததை சொல்லமுடியாமல்
’சரி ’என்றாள் விசாலம்.

”லேட் ஆறது பார்ட்டிக்கு நான் கிள்ம்பறேன் பஸ் பத்துக்கு வரும், 11மணிக்கு கிளம்பிடும். ரொம்ப விடியலில் இருட்டுலயும் பனிலயும் போகவேண்டாம்னுதான் லேட்பஸ்ல அனுப்பறேன்… கடசி ஸ்டாப் கலாசிபாளையம்ல இறங்கு, நடுல இறங்கிடாதே மாதவன் வருவான் அழைச்சிண்டுபோக, சரி வரட்டுமா?”

”சரிப்பா பைக்ல பார்த்துப்போ. வேளைக்கு சாப்டு..”

விசாலம் கண்ணில் துளிர்த்த நீரை புடவைதலைப்பில் துடைத்தபடி அங்கிருந்த சிமெண்ட் பெஞ்ச் ஒன்றில் அமர்ந்துகொண்டாள். . பேருந்து நிலையத்திற்கே உரிய இரைச்சலும் ஜனநடமாட்டமும் அதிகமாயிருக்க ,அந்த இரவு நேரத்திலும் மல்லிகைப்பந்துடன் ஒரு வயதானவள் ,” ரெண்டுமுழம் பத்தே ருபா வாங்கிக்கம்மா” என்று கெஞ்சினாள். பஸ்டிக்கட் தவிர விசாலத்தின் கைப்பையில் ஐம்பதுரூபாய்தான் இருந்தது .பத்துரூபாய்க்கு மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டுபோய் பெரிய மருமகளை திருப்தி செய்யமுடியாதுஎன்றாலும் தன்னைவிட வயதில் மூத்தவளாய்த் தெரியும் கிழவிக்கு உதவலாம் என்று தோன்ற பூவும் பணமும் கைமாறின. மீதம் நாற்பதுரூபாயை கைப்பையில்போட்டபோதுதான் தண்ணீர்பாட்டிலை எடுதுவர மறந்தது நினைவிற்குவந்தது மீனா மதியமே டில்லி எஸ்கர்ஷனுக்குப்போய்விட்டாள் அவள்மட்டும் இருந்திருந்தால் இப்போது பஸ்ஸில் ஏறுகிற வரைக்கும் கூடவே துணையாக இருந்திருப்பாள். வறடடுஇருமல் மட்டும் இல்லாவிட்டால் தண்ணீர் இரவு நேரப்பயணத்திற்குத்தேவை இல்லை. பெஞ்சில் விசாலம் அருகே ஒரு இளம்பெண் கைகுழந்தையுடன் வந்து உட்கார்ந்துகொண்டாள். “பெங்களூரு பஸ்ஸு எப்போவரும்?” என்றுகேட்டாள் அழுகிற குழந்தையை மடிமீதுகிடத்தி அதன் மார்பில் கைவிரல்களால்தட்டியபடியே.

விசாலம் ,” 11மணிபஸ்சா ?” என்று கேட்டுவிட்டு,”தெரிலைம்மா இன்னும் வரக்காணோம் மணி பத்தேகாலாகுதே?” என்றாள்.

“ஆமாங்கம்மா… ஆம்னிபஸ்ஸுன்னா கரெக்டா வரும் கரெக்டா கெளம்பும் இது ஏதொ லொடக்காணி பஸ்ஸு. எப்போவேணா வரும் எப்போவேணா கெளம்பும். இதுக்கு டிக்கட் சல்லிசுன்னு எம் புருஷன் இதுலதான் என்னை அனுப்பும். என்னா செய்யறது பேய்க்கு வாக்கப்பட்டா முருங்கமரத்துலதான ஏறீயாவணும்?” என்று சலித்துக்கொண்டாள்.

“கொஞ்சம் தண்ணீ பாட்டில் வாங்கிவரேன்.. பஸ்ஸுவந்துடாதே அதுக்குள்ள?”

“வந்தாத்தான் உடனே கெளம்பிடுமா அதெல்லாம் கவலையே இல்ல. நீங்கபோய்வாங்க…இந்த பிளாட்பாரத்துலதான் வருமா இல்ல அதுக்கும் அலையணுமான்னு அப்புறமேட்டுத்தான் தெரியும்..நீங்கபோய்வாங்க நான் இங்கிட்டுதான் உக்காந்துருப்பேன்,இந்த சனியன் நொய்நொய்ன்னு அளுவுறான் அப்படியே அவங்க அப்பனாட்டம் அழிச்சாட்டியம்” என்று குழந்தையின் மார்பில் பட் பட் என்று வேகமாய்த்தட்ட ஆரம்பித்தாள்.

விசாலம் தண்ணீர்பாட்டிலுடன் திரும்பிவந்து உட்கார்ந்தபோது இன்னொரு வயதான தம்பதியர் அங்கே அமர்ந்திருந்தனர். விசாலம் கைப்பையுடன் நிற்கவும் குழந்தையை வைத்திருந்தபெண்,” யெம்மா…நீங்கதானே முதல்ல இங்கபெஞ்சுல ஒக்காந்திருந்தவங்க எதுக்கு இப்போ நிக்கறீங்க? வந்து குந்துங்க ஓரமா” என்று உரக்க கூவினாள்.

“11மணி பெங்களூரு பஸ்சா? நாங்களும் அதுக்குத்தான் வந்துருக்கோம்…. ரெண்டுபேருக்கும் கண்ணு சரியா தெரியறதில்ல….பஸ்ஸுவந்தா சொல்லும்மா பொண்ணு….குழந்தைகுட்டி இல்லாத பாவிங்க நாங்க உன்னை மகளா நினச்சி இந்த உதவியக்கேட்டுக்கறோம்…” என்றார் முதியவர் நடுங்கும் குரலில்.

”இங்கயே கண்ணு தெரில்லங்கறீங்க பெங்களூரு போயி என்ன செய்வீங்க தாத்தா?” குழந்தைக்காரி குறும்பாய் கேட்டாள்.

“அங்க ஒரு பழைய நண்பன் இருக்கான்மா..அவனுக்கு ஒரே ஒரு பொண்ணு உன்னைமாதிரிதான் சிறுவயசு. அவகிட்டதான் அவன் இருக்கிறான் எங்களையும் அங்க வந்து கடைசிகாலத்துக்கு வந்து இருக்கசொல்லி அவன் பொண்ணு சொல்றா, அதான் போறோம்”

“இந்தகாலத்துல பொண்ணைப் பெத்தவங்கதான் அதிர்ஷ்டக்காரங்க…. எனக்குப்பாருங்க அந்த அதிர்ஷ்டமும் இல்ல… மொடாக்குடிப் புருஷனைக்கட்டிக்கிட்டு அவன் வாரிசா ஆம்பிளைதான் பொறந்திருக்கு…..இந்த ஆறுமாசக் குழந்தைக்கு அரைபவுனுல செயின் செய்து தரணுமாம் என் அப்பன், போயிக் கொண்டாடின்னு புருஷன் கழுத்தைப் பிடிச்சி தள்ளிட்டான் , என் அப்பன் அங்க கட்டிட காரைவேலை செய்யுது, ஆத்தா காய்கறி வியாபாரம் செய்யுது. அதும் இப்போ வெங்காயமும் வெள்ளைப்பூண்டும் விக்குற வெலையில் ஆத்தா காய்கறி வியாபாரத்தையே நிப்பாட்டிடிச்சாம். சோத்துக்கெ திண்டாட்டம் சொக்கத்தங்கத்துக்கு எஙக் போவுறது? என்னவோ போங்க…”

’இஞ்சிமொறப்பா… இஞ்சிமொறப்பா’

விற்றுக்கொண்டுபோன சிறுவனை அழைத்த அந்தப்பெண்,” நாலு வில்லை கொடு பஸ்ஸுலபோனா பாளாப்போன வாந்தி வந்து தொலைக்கும் ” என்று முணுமுணுத்தபடி பர்சைத்திறந்தாள்..ஐம்பதுரூபாயை வெளியே எடுத்தாள்

“ஐயே சில்லறை கெடையாதுக்கா …போணி நீதான் “ என்றான் இஞ்சிமுறப்பாவை மரத்தட்டில் வைத்துக்கொண்டிந்ருத அந்த சிறுவன்.

“அடி செருப்பால..போணியாமுல்ல? ராவுல என்னடா போணி?”

“யெக்கா…..என் வியாபாரம ராவுலதான் பகல்ல இஸ்கூல்போவுறேன் இல்ல?”

“பாவம் படிக்கிற பையன்போல்ருக்கு ஏழ்மையில இப்படி வேலை செய்து பொழக்கிறானே !பையா..இந்தாப்பா எவ்ளோ தரணும்?” விசாலம் தனது சிறு பர்சைத்திறந்தபடி கேட்டாள்.

“நாலுரூவா பாட்டிம்மா”

“ஐயோ என்னம்மா நீங்க தரீங்க?” அலறினாள் அந்தப்பெண்.

விசாலம் சில்லறையைக்கொடுத்துவிட்டு,”அதனால் என்னம்மா? கைகுழந்தைக்காரி நீ நல்லபடியா ஊர்போய்ச்சேரவேணாமா? ஆயிரம் ரூபாயா தந்தேன் வெறும் நாலுரூபாதானே பரவால்ல” என்றாள் புன்னகையுடன்.

அப்போது பாம்பாம் என்று ஹார்ன் அடித்துக்கொண்டு ஒரு மஞ்சள் நிற பஸ் வந்து நிற்கவும், அந்தப்பெண் கைகுழந்தையை வாரி தோளில்போட்டுக்கொண்டாள்.”இருங்க நான் போயி இது நம்ம பஸ்சான்னு விசாரிக்றேன்… ” என்று எழுந்திருந்தாள்.

விசாலம் அவள் எழுந்ததும் அங்கே போய் உட்கார்ந்துகொண்டவள்,”குழந்தையை என்கிட்ட கொடேம்மா, பாவம் கைவலிக்கப்போறது?” என்றாள் பரிவுடன்.

அதற்குள் அவள் சிட்டாய்ப்பறந்து பஸ்சை நெருங்கி விஜாரித்துவந்தவள்,” 11மணி பெங்களூர் பஸ்சுதானாம் எப்போவேணா எடுப்பாங்க. வாங்க ஏறுங்க சீட் நம்பர் இருக்குது ஆனா பாருங்க பாசஞ்சர் ரயிலுமாதிரி எல்லா ஊர்லயும் நிப்பாட்டி ஆளுங்களை புளிமூட்டையா ஏத்திக்கிட்டுத்தான் போய்ச்சேருவான்…புறப்படறநேரமும் போய்சேருகிறநேரமும் நிச்சயமே இல்ல ஆனா போய்டுவான் அது நிச்சயம்” என்று சொல்லி சிரித்தாள்.

அவள் சொல்லியதுபோலவே பதினொன்றரைக்கு கிளம்பிய பஸ் வழி நெடுகவும் நிறுத்தி ஆட்களை ஏற்றிக்கொண்டு சேலத்தில் அரைமணிக்குமேல் நடு இரவு நிறுத்திவிட்டது. பிறகு கிருஷ்ணகிரியில் காப்பிக்கு என்று நிறுத்தி அங்கு அரைமணிநேரம் செல்ல விடியற்காலை ஐந்தரைக்கு அங்கிருந்து புறப்பட்டு வழியில் பல இடங்களில் நிறுத்தி ஜனங்களை ஏற்றிக்கொண்டு ஹொசூர் வந்தபோது மணி ஏழரை ஆகிவிட்டிருந்தது. அதற்குள்ளேயே பஸ்ஸில் பலரது செல்போன்கள் இயங்கிக்கொண்டே இருந்தன. விசாலத்திற்கு இரவு பூராவும் வந்த வறட்டு இருமலில் தூக்கம் கெட்டுப்போய் விடிகிறபொழுதில் கண் செருக ஆரம்பித்தது.

அப்போதுதான்,”அம்மா…இறங்குங்க பஸ் பெங்களூர் போவாதாம்..” என்ற குரல்கேட்கவும் சட்டென விழித்தாள்.

அந்தக்கைகுழந்தைக்காரிதான் எதிரில் நின்றுகொண்டிருந்தாள்.

“எ என்னாச்சு?” விசாலம் பதட்டமாய் கேட்டாள்.

“பந்த்தாம்! ஸ்ட்ரைக் மாதிரி. திடீர்னு காலைல பெங்களூர்ல ஆரம்பிச்சிருக்காங்களாம் , பஸ் பெங்களூர் போவாதாம் . கர்னாடகா பஸ்ஸு வேணா ஒண்ணு ரெண்டு போகுமாம் கார் வண்டியெல்லாம் கல்லெடுத்து அடிக்கிறாங்களாம் அங்கிட்டு” என்றாள் கலவரமான குரலில்.

“எதனால இப்படி?” விசாலம் கவலையுடன் கேட்டபடி இருக்கையினின்றும் எழுந்தாள். ஞாபகமாய் காலடியில் வைத்திருந்த தன் கைப்பையை எடுத்துக்கொண்டாள்.

:”என்ன இளவோ எல்லாம் அரசியல்வாதிங்க செய்யுற வேலைம்மா…பந்து மாதிரி அடிப்பாங்க .. கெடந்து திண்டாடுறது நம்ம மாதிரி பொது ஜனங்கதானே?”

“என் பேத்தி டெல்லிக்குப்போறா அங்க எதுவும் இருக்காதே?”

“இப்போதிக்கு பெங்களூர்லதான் டில்லில ஒண்ணுமில்ல. அதும் திடுதிப்புனு காலைல ஆரம்பிச்சி அறிவிப்பு கொடுத்துருக்காங்களாம்… எறங்கி நாம வேற பஸ்சு பிடிச்சி ஊர் போவணும்”

பஸ் கண்டக்டரை பிரயாணிகள் சிலர் சண்டைபிடிக்க ஆரம்பித்தனர்.”அதெப்படிப்பா பெங்களூர் வரை முழு டிக்கட்டுக்கு காசு வாங்கி இருக்குறே? இப்போ ஹொசூர்ல இறக்கிவிட்டா நாங்க திரும்ப டிக்கட் எடுக்கணுமா? அது வேற முப்பது நாப்பது ரூபா ஆகுமே?”

“அதுக்கு நாங்க என்ன செய்யுறது வேணா எங்கபஸ்சு ஏதாச்சும் தெகிரியமா எல்லை தாண்டி ஊருக்குள்ள போகுதுன்னா அதுல ஏறிப்போங்க..இல்லாட்டி கர்னாடகா ஸ்டேட்பஸ்சுலபோங்க ஒரு அபாயமும் இல்ல அதுக்கு” அலுப்புடன் சீறிவிழுந்தார் கண்டக்டர்.

“இப்போ என்னம்மா செய்யுறது? நீங்க யார்வீட்டுக்குப்போறீங்க?”

குழந்தைக்காரி இப்படிக்கேட்கவும் விசாலம்,”மகன் வீட்டுக்கு” என்றாள்.

“போன் போட்டு வெவரம் சொல்லுங்க கார் வச்சிட்டு வந்து கூட்டிப்போவாரா உங்க மகனு?”

“தெரியலையே..மகன் போன் நம்பர் ஏதும் கொடுக்கல…”

“நான் பஸ்சு எதுலயாவது தொத்திக்கிட்டுப்போறேன் பையன் ரொம்பக்கூவுறான் ராவெல்லாம் எடுத்துவிட்டு இப்ப என்கிட்டயும் பாலு இல்ல. பால்பவுடர்வேற தீர்ந்திடிச்சி….சீக்கிரமா ஊருபோயிட்டா தேவல ஆத்தா கையில் இவனக்கிடத்திட்டு அக்கடான்னு பாயில படுக்கணும்போல இருக்குதும்மா வரேன்.பாத்துப்போங்கம்மா…”

அழும் குழந்தையை தோளில்போட்டுக்கொண்டு அந்தப்பெண் ஓடுகிற பஸ்ஸை நோக்கி வேகமாய் நடகக் ஆரம்பித்தாள்.

விசாலம் பர்சினுள் முன்பு எப்போதோ மீனா எழுதிக்கொடுத்த சீட்டை எடுத்து அவளுடைய செல்போன் நம்பருக்கு போன் செய்ய அருகில் தெரிந்த ஒரு பெட்டிக்கடைக்குச்சென்றாள். மீனாவிடம் விவரம் சொன்னாள்.

“ஐயோ பாட்டி ’ பந்த்’தா? இந்த நேரத்துல உங்களைத்தனியா அனுப்பிச்சிருக்காளா உங்க புத்திர சிகாமணிகள் ரெண்டுபேரும்? ச்சே இதயமே இல்ல அவாளுக்கு…சரி பாட்டி சித்தப்பா நம்பர் சொல்றேன் குறிச்சிக்கோ ….. நீ உடனே சித்தப்பாக்கு பேசு நானும் டில்லிலேர்ந்து பேசி நிலமையைத் தெரிவிக்கிறேன் என்ன? கவலைப்படாதே ஜனம் சூழ்ந்திருக்கிற இடத்துல சேர்ந்து உக்காந்துக்கோ…” மீனா வருத்தப்ப்ட்டாள்.

விசாலம் மாதவனுக்கு போன் செய்தபோது அவன் எரிச்சலாய்,” அம்மா ..அந்த மடையனுக்கு உன்னை ரயிலில் வசதியா அனுப்ப துப்பு இல்லை.. இப்போ பாரு நானும் ஆத்தைவிட்டு வெளில் வர முடியாது.டிவில ஒரே கலவரமா இருக்குன்னு காட்றா ..பஸ் பைக் கார் எல்லாத்தியும் எரிக்கிறாளாம் என் காரையும் எரிச்சிட்டா நான் என்ன பண்றது? பேசாம திரும்பி திருச்சி பஸ் ஏறிப்போய்டு. அடுத்தவாரம்புறப்பட்டு வா.அதுக்குள்ள இங்க எல்லாம் அடங்கிடும்” என்று போனை வைத்தான்.

விசாலம் எதிர்முனை துண்டிக்கப்பட்டதை அறியாமல்,” மாதவா மாதவா…’என்று புலம்பிக்கொண்டிருந்தாள்.

பின்எப்போதும்

எண்ணத்திற்கும்
செயலுக்கும்
இடைப்பட்ட தருணத்தில்
வாழ்ந்து கொண்டிருந்தேன்
கண்ணீர் நதியில்
அலுப்பு தீர
குளித்துக் கொண்டிருந்தேன்
மயானத்தில்
சடலம் எரிவதை
பார்த்துக் கொண்டிருந்தேன்
மொட்டுக்கள்
இதழ் விரிப்பதை
ரசித்துக் கொண்டிருந்தேன்
வானம்பாடி
கானம் பாடுவதை
கேட்டுக் கொண்டிருந்தேன்
அதிசயமாக
பெய்த மழையில்
தொப்பலாக
நனைந்து கொண்டிருந்தேன்
கூண்டில் அடைத்து
பறவையின் சுதந்திரத்தை
பறித்தவர் மீது
கோபம் கொண்டிருந்தேன்
அலையோசையில்
மெய்மறந்து
தன்னிலையை
இழந்து கொண்டிருந்தேன்
வெளி மட்டுமே
நிலையானது என
எண்ணிக்கொண்டே
வானத்தில் சிறகின்றி
பறந்து கொண்டிருந்தேன்.

1. சிறகுகள் ஸ்தம்பித்ததன் பின்னான சிறு வெளி

ஒரு தவம் போல் நிகழ்த்தப்பெறும்

பறத்தல் ஸ்தம்பிக்க

திடும்மென பற்றி இறுக்குகிறது

வல்லூறு அதன்

கூர் நகங்களின் பிடி.

படபடத்தினி அடங்கிவிடும்

சாம்பல் நிறப்புறாவின்

சிறகுகளுக்கான

சிறு வெளியை

அந்நொடி,

திரும்பப்பெற்றுக்கொள்கிறது

அண்டப்பெருவெளி.

ரசிகன்

நீண்ட நாள் கழித்து இந்தஅறைக்குள் நுழைகிறேன். மொட்டைமாடியில் காற்றோட்டமான ஜன்னல்கள் கொண்ட மேற்கூரை மேய்ந்த சின்ன அறைதான்.ஆனாலும் என்னுடைய சாம்ராஜ்யம் இங்கேதான் நடந்திருக்கிறது. சுற்றிலும் புத்தக அலமாரிகள் நடுவில் ஒரு மரமேஜை அருகில் நாற்காலி . சின்னதாய் டேபிள்ஃபான் ஒன்று . நண்பர்கள் வந்தால் அவர்களை உட்கார வைக்க நீளமாய் ஒரு மரபெஞ்ச். குடிநீருக்காய் ஒரு பானை அவ்வளவுதான் சாம்ராஜ்ய சொத்துக்கள்!

பதினைந்து வருஷம் முன்பு இந்த அறையைக்கட்டி முடிக்கவே பத்தாயிரம் ரூபாய்க்குமேல் செலவானது. சுமதிகூட,”என்னங்க இவ்ளோ பணம் ஒரு சின்ன ரூமுக்கா செலவழிக்கணும் அதுல ரம்யாக்கு தங்கத்துல நகையாவது வாங்கலாம் அவளுக்கும் வயசு ஏழு ஆகபோகுதில்ல?” என்றாள் கவலையுடன்.

“கீழ்வீட்ல எனக்குன்னு தனி ருமே இல்லை ஒரே சத்தம் வேற. இங்கே தனியா ஏகாந்தமா உக்காந்திட்டு கற்பனை செய்து கதைகதையா எழுதி லட்சலட்சமா சம்பாதிச்சிடுவேன் கவலைப்படாதே”என்று சமாதானம் சொன்னேன்.

கலைஞனுக்கு லட்சங்களில் லட்சியம வந்துவிட்டால் கலைமகளுக்குப்பிடிக்காதுபோலும்…. பணத்திற்காகவே எழுத ஆரம்பித்தேன். நாலைந்துவருஷங்களிலேயே என் புகழ் மங்க ஆரம்பித்து எழுதியபடைப்புகளை தொடர்ந்து பத்திரிகைகள் நிராகரித்தன. அந்தவிரக்தியில் நான் பேனா பிடிப்பதையே நிறுத்தியும் ஏழெட்டுவருஷங்கள் ஆகிவிட்டன.

இன்று மனைவியும் மகளும் சொந்தக்காரர் வீட்டுத்திருமணத்திற்குப்போய்
விட்டார்கள்..ஆபிசிலிருந்து சீக்கிரமாகவே வீடுவந்தவன் அப்படியே கூடத்து சோபாவில் எதையோ பறிகொடுத்தவன் போலப்படுத்திருக்கிறேன். பஸ்ஸில் வரும்போது பத்திரிகை ஒன்றில் படித்த கதையை அசைபோடுகிறேன். எழுதியவர் பெயர் ஒன்றும் பிரபலமாய்த்தெரியவில்லை ஆனால் எழுதிய கருத்தும் கதையின் ஓட்டமும் மனசை அள்ளிச்சென்றன.

இப்படித்தான் நானும் பல கதைகள் எழுதி இருக்கிறேன். ஒரு நிகழ்ச்சி ஓர் அனுபவம் ஓர் உணர்ச்சி படித்த ஓர் செய்தி என்று எதுவேண்டுமானாலும் ஒரு சிறுகதையை உருவாக்கிவிடும்.. அப்படிப்பட்ட கதைகள் எழுதி பரிசுகள் வாங்கி பிரபல எழுத்தாளர் எழிலூர்எதிராஜன் என்று நான் பேரும் புகழுமாய் வாழ்ந்த காலம் கனவுபோல இருக்கிறது. இந்த ஏழெட்டுவருஷங்களில் நான் எழுதுவதையும் எழுத்தாளர்களை சந்திப்பதையும் அடியோடு நிறுத்தியேவிட்டேன். காரணம் விரக்திதான்.

அப்படியே பழைய நினைவுகளை அசைபோட்டு சிந்தித்து உட்கார்ந்திருந்தவனை டீபாய் மீதிருந்த டெலிபோனின் ட்ரிங் ட்ரிங் என்ற சத்தம் சுதாரிக்கவைத்தது.

ரிசீவரை எடுக்கிறேன்.

“ஹலோ எழுத்தாளர் எழிலூர்எதிராஜன் இருக்காரா?”

எதிர்முனை என்னை இப்படிக்கேட்கவும் வியப்பில் கண் விரிக்கிறேன் …எல்லோரும்மறந்துவிட்டிருப்பார்கள் என்று நினைக்கும் நேரத்தில் இப்படி ஒரு குரல் உற்சாகமாய் கேட்கவும்.”ஆமாம்நீங்கயாரு?’ என்கிறேன்

”சார் நான் ரசிகன்…….”

”ஓ என் ரசிகரா? வேடிக்கைதான் நான் கதை எழுதுவதையே நிறுத்தியே பல வருஷமாச்சே?””

”அதைத்தான் கேட்க வருகிறேன் …..எதனால் எழுதுவதே இல்லை? அற்புதமான வளமான எழுத்து உங்களுடையது”

”அப்படியா?”

”ஆமாம் ……உங்களுடைய சிறுகதைகளில் ஆன்மாவைக்கண்டவன் நான்.”

”மகிழ்ச்சி ரசிகன்”

“ஆமாம் ! நீங்கள் ஒரு சிறந்த படைப்பாளி சார்….உங்களைமாதிரி படைப்பாளிகளால்தான் மனதில்பட்டதை அழகான காட்சியை
உயர்ந்த அல்லது இழிந்த பண்புகளை விருப்பு வெறுப்பு இல்லாமல் உள்ளது உள்ளபடி திறந்த மனத்தோடு எத்ற்காகவும் கவலைப்படாமல் உன்னத படைப்பினை உருவாக்கமுடியும்.உள்ளத்தின் உள்ளொளி எழுத்தில் பிரகாசித்துவிடும். படைப்பாளி பயனை எதிர்பார்ப்பதில்லை ஆனால் அவன் படைப்பு சமுதாயத்திற்கு எவ்வளவோ பயன்படுகிறது. சமுதாயத்தின் பண்பாட்டை வளர்ப்பதுதான் கலை. அதன் இலக்கு மனிதனை உயர்த்துவது. அவன் சிந்தனையை விரிவடையச்செய்வது அவன் வாக்கில் ஒளிதுலங்கச்செய்வது அவன் செயலை மேம்படசெய்வது.இந்த அற்புதமான பணியை உங்கள் எழுத்து ஒருகாலத்தில் செய்துகொண்டிருந்தது. அதை முடக்கிவிட்டீர்களா சார், என்னைப்போன்ற ரசிகர்களுக்காக தாங்கள் மீண்டும் எழுதவேண்டும்.இது என் கோரிக்கை அல்ல , கட்டளை!” என்று சொல்லிவிட்டு எதி்ர்முனை ரிசீவரை வைத்துவிட்டது.

சட்டென மனதில் யாரோ விளக்கு ஏற்றியமதிரி அகமும் புறமும் பிரகாசமாகிறது.

இருண்டகிடந்த என் மனத்தின் அறையை யாரோ திறந்துவிட்டமாதிரி இருக்கிறது அதனால்தான் இந்த மாடி அறைக்கதவைத்திறந்து உள்ளே நுழைகிறேன். ஜன்னல்களைத்திறந்துவைக்கிறேன். மாலைநேரத்துக்காற்று ரம்மியமாய் வீசுகிறது.

புத்தக வாசனையை இழக்காத அந்த அறைச்சுவர்களில் படங்களாய் வீற்றிருந்த அரவிந்தரும் அன்னையும் என்னைப்பார்த்துப்புன்னகைக்கிறார்கள். இந்தப்புன்னகையைக்காணவாவது நான் இந்த அறைக்குள் வந்திருக்கலாமோ? எழுதுவதும் ஒரு தவம் தானே ? தவம் செய்ய மறந்தேனோ?’புத்தகத்தில் இல்லாதவற்றைக் கற்றுக்கொடுப்பவர் நல்ல வாத்தியார்; ஆசிரியர் சொல்லிக்கொடுக்காதவற்றையும் கற்றுத்தெரிந்துகொள்ளுபவன் நல்ல மாணவன்’ என்று ஆங்கிலத்தில் ஒரு வசனம் இருக்கிறது. அதுபோல அன்றாட வாழ்விலே ஈடுபட்டுத் தத்தளித்து நீந்திக்கரையேற முயற்சி செய்து கொண்டிருக்கும் நாம், நம் அவசரத்தில் காணாது விட்டுவிட்ட அல்லது கண்டும் இனம் தெரியாது விட்டுவிட்ட அனுபவங்களை நம் கண்ணுக்கு முன் கொண்டுவந்து நிறுத்தி அவற்றுள் புதைந்துகிடக்கும் உண்மைகளை வெளிக்கொண்ர்ந்து நம் கவனத்தைல் நிலைநாட்டுவதுதானே எழுத்துக்கலைஞனின் பணி என்று தோன்றுகிறது. என் பணியை செய்யத்தவறிவிட்ட உணர்வில் உள்ளம் குறுகுறுக்கிறது.மேல்நாட்டு அறிஞர் ஒருவர் கூறியதுபோல”நிலையில்லாது கரைந்து மறைந்துகொண்டிருக்கும் கணங்களில் அமரத்துவத்தைக்காட்டுவது தான் கலை” என்ற விமர்சனம் சிறுகதைக்கு மிகவும் பொருந்துவதாகப்படுகிறது.

மேஜையின் அருகே சென்று நாற்காலியில் அமர்ந்து பேனாவை எடுத்து எழுத ஆரம்பிக்கிறேன் .கற்பனை விண்ணாய் விரிகிறது. சொற்கள் இடித்துக்கொண்டு வாக்கியங்கள் மின்னலாய் தெறிக்க காவிய மழை ஒன்று பெய்துவிடுகிறது.

சமைக்கும்போதே வரும் வாசனைகளால் பதார்த்தங்களின் சுவையை அறியமுடிவதுபோல எழுதும்போதே வந்து விழுந்த வார்த்தைக்கலவைகளில் ஆத்மத்ருப்தியான படைப்பு உருவாகி விட்டதை உணர்கிறேன். விரக்தியும் வெறுப்புமாய்சிலவருடங்கள் ஒளிந்திருந்த எதிராஜன் மறைந்து புத்துணர்ச்சியுடன் மீண்டுவந்தவனாய் உற்சாகமாய் கீழே வருகிறேன் .

கல்யாணத்திற்குப்போயிருந்த மனைவியும் மகளும் வருகிறார்கள்.என்னைக் கண்டதும் மனைவி,”எப்போ வந்தீங்க?” என்கிறாள் வியப்புடன்.

“மதியம் சாப்பிட்டதும் வீடு வந்திட்டேன் அப்போ என்னவோ மனசு உற்சாகமாய் இல்லை ரொம்ப டல்லாயிருந்தது ஆனா இப்போ ஒகே”

உஸ்ஸ்ஸ் என்று பெருமூச்சுவீட்டபடியே,” அப்படியா? ஆமா…. காலைல எழுந்ததுமே கவனிச்சேன் நம்ம வீட்டு லாண்ட்லைன் போன் ’டெட்’டா இருந்திச்சி… கம்ப்ளெயிண்டும் போற வழில கொடுத்தேனே யாரும் வந்து ரிப்பேர் செய்தாங்களா?” என்று கேட்டபடியே ரிசீவரை காதில் வைத்தவள்,” ஹ்ம்ம் இன்னமும்டயல்டோன் கேக்கலயே, டெட் ஆகத்தான் இருக்குது” என்கிறாள் சலிப்பான குரலில்

”என்ன! போன் ’டெட்’டா இருக்கிறதா?’்” என்று நான் திகைத்து நிற்கிறேன். மனசுக்குள் ரசிகன் நகைக்கிறான்.

எதையாவது சொல்லட்டுமா……..45

போன வாரம் ஞாயிற்றுக்கிழமை நவீன விருட்சத்தின் 90வது இதழை எடுத்துக்கொண்டு வந்தேன். எப்படியோ வந்து விட்டது. இந்த இதழைக் கொண்டுவர ஏன் இவ்வளவு தாமதம் என்ற கேள்வியை நானே கேட்டுக்கொண்டேன். முன்பு இருந்த ஆர்வம் குறைந்துவிட்டதா என்றால் இல்லை என்று சொல்ல வேண்டும். நேரம் கிடைக்கவில்லை. முனைப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். எழுதுபவர்கள் படிப்பவர்கள் என்ற இரு பிரிவுகளை எடுத்துக்கொண்டால், இரண்டுமே குறைவு என்று ஆரம்பம் முதல்
சொல்லிக்கொண்டிருப்பவன் நான்.

அச்சடித்த இதழைப் பிரித்துப் பார்க்கவே எனக்கு சற்று அச்சமாக இருந்தது. நான் எதிர்பார்த்தபடியே இதழில் அச்சுப் பிழைகள் தாராளமாக இருந்தன. இந்த முறையும் புத்தக விமர்சனம் செய்த எழுத்தாளரின் பெயரைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன்.

மின்சாரம் இல்லை என்பதால் இதழை ரொம்பவும் தாமதப் படுத்தி விட்டார்கள். நான் இதோ 12ஆம் தேதி Florida என்ற அமெரிக்காவில் உள்ள ஊருக்குப் போக உள்ளேன். என் புதல்வன் அங்கிருக்கிறார். 1 மாதம் அங்கிருப்பேன். அதற்குள் இதழை எல்லோருக்கும் வினியோகிக்க வேண்டும்.

இந்த இதழ் அட்டைப் படத்தில் பூனையைக் கொண்டு வந்ததால், என் வீட்டில் பூனைக் குட்டிகளின் தொல்லை அதிகமாகி விட்டது. கீழ்க்கண்ட படைப்பாளிகளின் படைப்புகள் 90வது இதழில் இடம் பெற்றுள்ளன.

1. இலக்கியத் தரம் உயர – க.நா.சு
2. உப்பு – லாவண்யா
3. புத்தக விமர்சனம் – ஐராவதம்
4. அழகிய வீரர்கள் – கவிதை – ராமலட்சுமி
5. பழம் புத்தகக் கடை – விட்டல் ராவ்
6. அவலம் – சிறுகதை – உஷா தீபன்
7. குவளைகளில் கொதிக்கும் – கவிதை – மிருணா
8. மிகை – சிறுகதை – எஸ். ஷங்கரநாராயணன்
9. ஜோல்னா பைகள் – கவிதை – அழகியசிங்கர்
10. வெளியே ஒருவன் – சிறுகதை – நா.ஜெயராமன்
11. இரண்டு கவிதைகள் – செல்வராஜ் ஜெகதீசன்
12. இரண்டு கவிதைகள் – ராஜேஷ் நடராஜன்
13. பால்ய பொழுதுகள் – கவிதை – ப மதியழகன்
14. இரண்டு கடிதங்கள் – சிறுகதை – அழகியசிங்கர்
15. அகாலம் – சிறுகதை – பஞ்சாட்சரம் செல்வராஜன்
16. அவனின் தேடல் – கவிதை – குமரி எஸ் நீலகண்டன்
17. முகங்கள் – கவிதை – ஐராவதம்
18. சாய்பாபா – கட்டுரை – அம்ஷன்குமார்
19. அனுமானங்கள் – கவிதை – அனுஜன்யா
20. நிசி – கவிதை – ப மதியழகன்
21. உரையாடல் – அழகியசிங்கர்

பத்திரிகை அனுப்புவதில் விட்டுப் போயிருந்தால், New Booklandsல் வாங்கிக்கொள்ளலாம். அல்லது ஆகஸ்ட் மாதம் வரை பொறுத்துக்கொள்ளவும். கூடிய விரைவில் அடுத்த இதழ் கொண்டுவர முயற்சி செய்கிறேன்.

தற்கொலைக் குறிப்பு

படிக்கட்டின் விளிம்பில்
நின்றவாறு
இடதா,வலதா என
யோசித்தான்
தொப்பலாக
மழையில் நனைந்த பிறகு
குடை பையிலிருப்பது
ஞாபகம் வந்தது அவனுக்கு
கோயிலுக்குள் சென்ற பிறகும்
அவன் மனம்
கழட்டிப் போட்ட
காலணிகளையே
வட்டமிட்டுக் கொண்டிருக்கும்
தினமும்
ஏதாவது ஒரு வரிசையில்
நிற்க நேர்வது
எரிச்சலைத் தந்தது அவனுக்கு
தனது அலைவரிசையை
ஒத்தவர்களை
சந்திக்க நேரும்
தருணங்களிலெல்லாம்
டைரிக் குறிப்பில்
சிவப்பு மையால்
அடிக்கோடிடுவான்
வாழ்க்கை மீது
நம்பிக்கை இழக்கும்
தருணங்களிலெல்லாம்
பர்ஸை திறந்து
அதிலுள்ள புகைப்படத்தை
கண் இமைக்காமல்
பார்த்துக் கொண்டிருப்பான்
சில நாட்களாக
தற்கொலைக் குறிப்பை
சட்டைப் பையில்
வைத்துக் கொண்டே
நடமாடி வந்தான்
வலி இல்லாமல் சாக
வழி சொல்லும் புத்தகம்
எங்கேயாவது கிடைக்குமா
எனத் தேடிக்கொண்டிருந்தான்.

சாபங்களைச் சுமப்பவன்

நேர் பார்வைக்குக் குறுக்கீடென

ஒரு வலிய திரை

ஏமாற்றுபவனுக்கு இலகுவாயிற்று

பசப்பு வரிகளைக் கொண்ட

பாடல்களை இசைத்தபோதும்

வெறித்த பார்வையோடு தான்

துயருறுவதாகச் சொன்ன போதும்

பொய்யெனத் தோன்றவில்லை

ஏமாறியவளுக்கு

இருள் வனத்திலொரு ஒளியென

அவனைக் கண்டாள்

புகைப்படச் சட்டங்களுக்குள்ளிருந்து நீண்டன

வாழ்வு கொடுப்பதாகச் சொன்ன

அவனது கைகள்

ஒலிக் கோப்புகளிலிருந்து வழிந்தன

தூரத்திலிருந்து அவனளித்த உத்தரவாதங்கள்

அவளது கைகளைப் பிணைத்திருந்தது

அவனிட்ட மாயச் சங்கிலி

விலங்கிடப்பட்ட பறவையென

காலடியில் வீழ்ந்துகிடந்தாள்

சிறகுகளை ஒவ்வொன்றாகப் பிய்த்தெறிந்தன

கூரிய நகங்களைக் கொண்ட

அவனது விரல்கள்

பின்னர் உச்சியில் ஏற்றிவிட்டு

விரைத்த ஒரு பொம்மையென விழச் செய்தான்

நேர்கோடென நட்சத்திரமொன்று வீழ்ந்த இரவில்

இருவரையும் நனைத்தது மழை

அவளது குருதியும் வேதனையின் ஓலமும்

தடயமழிந்து போயிற்று

என்றென்றைக்குமவளது

சாபங்களைச் சுமப்பவனானான் அவன்

எதையாவது சொல்லட்டுமா……..44

உங்களுக்கு கல்யாண சுந்தரம் தெரியுமா? எப்படி தெரியும்? நான் சொன்னால்தான் தெரியும். இது கணனி யுகம். எல்லாத் துறைகளிலும் பெரிய மாற்றம் நடந்தவண்ணம் உள்ளது. வங்கியிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. எங்கள் வங்கியின் கணனியின் Intranet மூலம் ஒருநாள் வங்கியின் சர்குலர்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். பெரிய அதிர்ச்சி எனக்கு. கல்யாணசுந்தரம் இறந்துவிட்ட செய்தி தெரிந்தது. நான் பார்த்த சமயம் ஏப்ரல் மாதம். கல்யாணசுந்தரம் மரணம் அடைந்த மாதம் மார்ச்சு மாதம்.

இந்தக் கல்யாணசுந்தரம் எனக்கு தூரத்து உறவு. அவர் இறந்த விஷயத்தை என் பெரியப்பா குடும்பத்தைச் சார்ந்த யாரும் தெரிவிக்கவில்லை. கல்யாணசுந்தரத்தை மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து பீச் வரை வரும் மின்சார வண்டியில் தினமும் சந்திப்பேன். அப்படி இல்லாவிட்டாலும் ஹார்பர் கிளையில் கீழே வரும்போதெல்லாம் சந்திப்பேன். அப்போது நான் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அதிகமாகப் பேச மாட்டோ ம். எதாவது ஒரு வார்த்தை இரண்டு வார்த்தை பேசுவோம். அவ்வளவுதான். கிளார்க்காக இருக்கும்வரை அவருக்குப் பிரச்சினை எதுவுமில்லை. ரொம்ப ஆண்டுகளாக அவர் எந்தப் பதவி உயர்வும் பெறாமல் கிளார்க்காகத்தான் இருந்தார். பின் ஒரு தவறான முடிவு எடுத்தார். அதிகாரியாகப் போக வேண்டுமென்று. அந்த முடிவுதான் அவருக்கு வினையாகப் போயிற்று.

சென்னையைத் தாண்டி காஞ்சிபுரம் வட்டாரத்தில் பதவி உயர்வு கொடுத்து அவரைத் தூக்கிப் போட்டார்கள். அங்கிருந்து அவர் சென்னைக்கே வந்து விட்டார். ஆனால் அதிகாரியாக அவரால் உழைக்க முடியவில்லை. வயது அதிகரித்து விட்டதால், உடல்நிலை பாதிப்பும் வந்துவிட்டது. உஸ்மான் சாலையில் உள்ள ஒரு கிளையில் அவர் நின்றுகொண்டே இருப்பார். உட்கார முடியாது. நான் அவரைப் பார்த்துக் கேட்கும்போது, உடல் உபாதைகள் பற்றி சொல்லிக் கொண்டே இருப்பார்.

சென்னையில் அவர் அதிகாரியாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவரை திருச்சி வட்டாரத்திற்கு அனுப்பி விட்டார்கள். அங்குதான் அவருக்குப் பிரச்சினை இன்னும் அதிகம் கூடிவிட்டது. அவரால் அலுவலகத்தில் பணி புரிவது அசாத்தியமாகி விட்டது. உடல்நிலை அவரை விட்டு வைக்கவில்லை. திரும்பவும் அவர் உடல்நிலை பொருட்டு சென்னைக்கு வரவேண்டுமென்று சொன்னாலும் முரட்டுத்தனமான தலைமை அலுவலகம் செவி சாய்க்கவில்லை. அதிகாரியாக இருந்ததால், அலுவலகத்திற்குக் காலையில் சென்றால், இரவுதான் திரும்பி வரவேண்டும். கடுமையான வேலை. அவருக்கு குழந்தை எதுவுமில்லை. அதனால் அவர் வேலையை விட்டுவிடலாமென்ற முடிவுக்கு வந்திருந்தார்.

தன் உடல்நிலையைக் குறித்து மருத்துவச் சான்றிதழ்களுடன், அவர் மனைவியை அழைத்துக்கொண்டு
தலைமை அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளைப் போய்ப் பார்த்தார். தானாகவே விடுதலை செய்யும் திட்டத்தில் (VRS) இவரை விடுவிக்கவில்லை. வேலை வேண்டாமென்று எடுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. உடல்நிலை சரியில்லாத கல்யாணசுந்தரத்தை திருச்சியில் உள்ள வட்டாரத்தைச் சார்ந்தவர்கள் கடுமையாக வேலை வாங்கினார்கள். முன்பு அரசாங்கத்தில் பணிபுரிபவர்களைப் பற்றி ஒரு ஜோக் சொல்வார்கள். அவர்களுடைய குழந்தைகளுக்கு அப்பாவின் முகமே தெரியாது என்று. அதாவது அவர் காலையில் பிள்ளைகள் தூங்கி எழுவதற்கு முன்பே அலுவலகம் போய்விடுவார்கள். பின் அவர்கள் வரும்போது, பிள்ளைகள் தூங்கி விடுவார்கள் என்று. அதேபோல் இன்றைய வங்கியும் மோசமாகி விட்டது. அதுவும் அலுவலராக யாரும் போய் மாட்டிக் கொள்ளக்கூடாது.

காது பிரச்சினை காரணமாக திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனை ஒன்றில் உடல் பரிசோதனை எடுத்துக்கொண்டார்.அதுவும் மருத்துவமனைக்குச் சென்றால் உடனே அலுவலகத்திலிருந்து போன் வரும் எப்போது வரப்போகிறீர்கள் என்று. அரைகுறையாக அவசரம் அவசரமாக அலுவலக ஓடி வரும். திரும்பவும் கடுமையான வேலை. காது பிரச்சினை போய் மூக்கில் அவருக்குப் பிரச்சினை. ஒரு சின்ன அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

ஒரு நாள் அலுவலகத்தில் இருக்கும்போதே அவர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். அவர் நிலை மோசமாகிவிட்டது. எல்லாவிதமான பிரச்சினைகளும் சேர்ந்து விட்டன. சென்னையில் அப்போல்லா மருத்துவமனையிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. மரணம் அவரைத் தழுவி விட்டது. என் பெரியப்பா ஸ்ரீபையனிடம் கேட்டேன். ஏன் கல்யாணசுந்தரம் மரணமடைந்த விஷயத்தைக் கேட்டேன். ”எல்லாம் குழப்பமாக இருக்கிறதுப்பா..உனக்குத் தெரியும் என்று நினைத்தேன்” என்று அவன் சொல்வதைக் கேட்டு எனக்கு ஒன்றும் புரியவில்லை. கல்யாணசுந்தரம் என்னை விட வயதில் சிறியவர். கல்யாணசுந்தரம் மனைவியிடம் போன் பண்ணி விஜாரித்தேன். அவர் திருச்சியில் வீடை காலி செய்யாமல் இருக்கிறார். கல்யாண சுந்தரத்திற்கு வரவேண்டியதைப் பெறுவதற்கு. அதுவும் தாமதமாகிக் கொண்டே போகிறது. இதோ நானும் கல்யாணசுந்தரம் மாதிரி சீர்காழியில் அலுவலராக மாட்டிக்கொண்டு விழிக்கிறேன். அப்பாவிற்கு 90 வயது நான் இங்கே வந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் மாற்றல் கிடைக்கவில்லை. டம்மியாய் ஒரு யூனியன். கையில் சாட்டையுடன் ஒரு பூதம் மாதிரி தலைமை அலுவலகம் வீற்றிருக்கிறது. பணிபுரிபவர்கள் மீது எந்த அக்கறையும் இல்லாமல்.

பசுவும் நிலாவும்

பௌர்ணமி இரவின்

பரந்த வெளியில்

கொட்டகைத் தொட்டியில்

கொட்டிய கழனியை

சப்பி சப்பி

குடித்தது பசு.

நிலா மிதந்த

கழனியை மென்று

மென்று சுவைத்தது.

மிகுந்த சுவையாய்

இருந்ததாய் சிலாகித்தது.

மெல்ல மெல்ல

வாய்க்கு பிடிபடாமல்

தொட்டியில் எஞ்சிய

கழனியிலேயே கொஞ்சி

விளையாடியது நிலா.

கன்று வாய் வைத்ததும்

காணாமல் நிலா போக

பசு கன்றைப்

பார்த்தது சந்தேகமாக

சுயநலம்

அதிகமாய் பேசுகிறேனோ
அடிக்கடி
சந்தேகம் வருகிறது

பேசாமல் இருப்பதே உசிதம்
சமயத்தில்
தோன்றதான் செய்கிறது

கேட்பவர் முகங்களில்
தெரிகிற சோர்வைக் கண்டு கொள்ளாமல்
தொடர விழைகிற மனதின் மேல்
கோபம் கூட வருகிறது

பேசுவதை நிறுத்தி விடலாமெனப்
பொறுப்புணர்வுடன்
தீர்மானிக்கப் போகையில்..
யாருக்காகப் பேசுகிறேன் எனும்
கேள்வி எழ,

புரிய வந்தது
இதுகாலமும் பேசிய யாவும்
எனக்காகவே என்று.

ஒத்தி வைக்கப்பட்டது
காலவரையரையின்றி தீர்மானம்.
*** ***