நீரலை அடியில்
நீந்தும் மீன்கள்
எப்போது வலையில்
வேடன் குறி
தப்பியது கிளி
அசைவின்றி மரம்
ஓயாத அலைகள்
நீல வானம்
படகின் பயணம்
நிழல்
வளரும் தேயும்
தண்ணீரில் முகம் தெரியும்
மின்விசிறி சுழல்கிறது
விளக்கு எரிகிறது
படுக்கையில் யாருமில்லை
சாலையில் ரோஜா
சருகாகும் வரை
பிணத்தின் வாடை
நடைபாதையில் பணமுடிப்பு
கையேந்தும்
குருட்டுப் பிச்சைக்காரன்
கும்மிருட்டு
நகரும் நட்சத்திரம்
மின்மினிப்பூச்சி
காட்டுப் பாதை
மேடு பள்ளம்
விநோத ஒலி.
Category: கவிதை
இருபது ரூபாய்..
”என்ன தக்காளி சாதம் வாங்கியாச்சா?” என்று கேட்டார்.
பொட்டலத்தைக் கொடுத்தபடி, ”20 ரூபாய் ஆயிற்று,” என்றேன்.
பாபு பேசாமல் வாங்கிக்கொண்டு சென்றார்.
பாபு கண்டுகொள்ளவில்லை. எனக்குப் பதட்டம் ஆகிவிட்டது. எப்படி இவரிடமிருந்து ரூ20 வாங்கப் போகிறேன் என்ற கவலை வந்து விட்டது. கடைஊழியர் நாதமுனி என் பரபரப்பை உணர்ந்து,
”கவலைப் படாதீர்கள்..நீங்கள் பாபுவிடமிருந்து 20 ரூபாய் வாங்க முடியாது,”என்றான் சிரித்துக்கொண்டே. பாபுவிடமிருந்து எப்படி 20 ரூபாய் வாங்குவது என்ற என் கவலையை மீனுவிடம் தெரிவித்தேன்.
அலுவலகப் பரபரப்பில் பாபுவிடம் பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.வங்கி அலுவல் முடிந்து அலுவலர்களைத் தவிர எல்லோரும் போய்விட்டார்கள். எப்படியும் பாபுவிடமிருந்து வாங்கி விட வேண்டுமென்று முடிவு செய்து, பாபு இருக்குமிடம் சென்றேன்.
பானகம்.
வாசலுக்குக்கோலம் போட வந்த ஜனகா அந்தக்காலைப்பொழுதில் தெருவில் கோலிக்குண்டு விளையாடிக்கொண்டிருந்த தன் மகன்களைக் கண்டு திகைத்தாள். ஆறுவயதிலும், நான்கு வயதிலுமாக இரண்டுஆண்குழந்தைகளும் ஒன்றரை வயதில்ஒருபெண் குழந்தையும் இருக்கிறது இருபத்தி ஒன்பதுவயது ஜனகாவிற்கு. வேறெந்த செல்வம் இருக்கிறதோ இல்லையோ ஏழைகளுக்கு புத்திர செல்வத்திற்கு மட்டும் தடையில்லை’ என்று அவளே அடிக்கடி அலுத்துக்கொள்வாள்.
“ஆம்பிளை சிங்கமா ரெண்டுபேரும் அழகுக்கிளியா ஒர் பொண்ணும் நமக்கு இருக்குன்னு பெருமைப்படறதவிட்டு அலுத்துக்கிறயே ஜனகா…” என்பான் அவள் கணவன் பத்ரி பெருமையாக. வறட்டுப்பெருமை பேசுவதும் சீட்டு ஆடுவதும் வெட்டியாக வீட்டில் அமர்ந்து மனைவியின் சமையல் வேலைவருமானத்தில் வாழ்வதும் பத்ரிக்கு திகட்டாத விஷயங்கள்.
’நீ போய்ட்டுவா ..நான் குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறேன்’ என்று வீட்டில் உட்கார்ந்துகொண்டு சகாககள் நாலைந்து பேரோடு சீட்டுவிளையாடுவான். கல்யாணம் ஆனபுதிதில் சாயிராம் காட்ரிங் சர்வீசில் சமையல்பணி செய்துகொண்டிருந்தான். பெரிய பிள்ளை ஜனகாவின் வயிற்றில் இருக்கும்போதே அங்கே மேலிடத்தில் சண்டை போட்டு வேலையை அடியோடுவிட்டு விட்டான் ..வேறேங்கும் வேலை தேடிப்போகவுமில்லை. உடனே ஜனகா வாயும் வயிறுமாய் சமையல்வேலை தேடிப்போனபோது பெசண்ட் நகரில் வக்கீல் திருமலைவீட்டில் ஆள் தேடுவதாய் காதில்விழவும் போய்க்கெஞ்சி மன்றாடியதில், வக்கீல்மாமி மனம் கனிந்து வேலை போட்டுக்கொடுத்தாள்..ஜனகாவின் நாலாயிரம் ரூபாய் சம்பளத்தில்தான் குடும்பமே ஓடுகிறது. இதில் சீட்டாட்டத்தில் விட்டதைப் பிடிக்கிறேன் என்று இருநூறும் ஐநூறுமாய் பத்ரி சுருட்டிக்கொண்டுவிடுவான்.
“டேய் பசங்களா என்னடா இந்த நேரத்துல கோலிவிளையாட்டு? பல் தேய்ச்சீங்களா இல்லையா?”ஜனகா கோலப்பொடியில்குனிந்து தரையில் நாலு இழு இழுத்தபடி கேட்டாள்.
“அம்மா! நான் தெருக்கோடி பைப்புல எழுந்ததும் போய் பல்தேச்சிக் குளிச்சும் ஆச்சு. ராத்திரியெல்லாம் நம்ம வீட்டு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வழியா ஒரேடியா வெய்யில் அனலா தாக்கிடுத்து. திரும்ப ஆத்துல வந்து பார்த்தா நீ பின் கட்டுல பாத்ரூம்ல குளிச்சிண்டு இருந்தே அதான் தம்பியும் நானும் விளையாட இங்க வந்துட்டோம். தங்கப்பாப்பா தூங்கறா..” என்றான் பெரியவன் பிரஹலாதன்.
ஜனகா கோலமாவுக்கிண்ணத்துடன் வீட்டிற்குள் நுழைந்தவள் மணி ஏழாகியும் வேஷ்டி நழுவினது தெரியாமல் பாயில் தூங்கிக் கொண்டிருந்த பத்ரியை எழுப்பினாள்.
”எழுந்திருங்க நான் வக்கீல் மாமியாத்துக்கு சீக்கிரமா கிளம்பணும். நரசிம்மஜயந்தியாம் ராத்ரி ஆயிடும் இன்னிக்கு திரும்பி வர்ரதுக்கு. ஐம்பதுபேருக்கு சமையல் செய்யணும். அந்திப்பொழுதுலதான் நரசிம்ம அவதாரம் நடந்ததாலே சாயந்திரமா நரசிம்மருக்கு பூஜை இருக்கு நிறையவேலைஇருக்குன்னு வக்கீல்மாமிசொல்லி இருக்கா. லேட் ஆச்சுன்னா மாமி என்னை உண்டுஇல்லைன்னு பண்ணிடுவா”
…”யாரு அந்த பெண் சிங்கம் தானே? ’பெசண்ட்நகர்பேய்’ன்னு எங்க வட்டாரத்துல அந்த மாமிக்கு பேரு வச்சிருக்கோம்..சீமாச்சு ஒருதடவை அவாத்துக்கு ஏதோ ஃபங்ஷனுக்கு காட்ரிங் பண்ணப்போனப்போ ஏற்பட்ட அனுபவத்துல வச்சபேருதான்..ஹ்ம்ம்.. நீ என்னமாத்தான் ஆறுவருஷமா அவகிட்ட வேலைபாக்றியோ ஜனகா? ஆஆஆவ்வ்வ்…” என நீளமாய்க் கொட்டாவிவிட்டபடி எழுந்த பத்ரி,” இன்னிக்கு சீட்டுவிளையாட்ற ப்ரண்ட் ரங்கமணி லஞ்ச் ட்ரீட் தரேன்னு சொல்லி இருக்கான்.. நங்கநல்லூர்ல அவன் மச்சினன் புது மெஸ் திறந்திருக்கானாம் அதுக்கு வரசொல்லி இருக்கான் நான் சின்னவன் துருவனையும் குட்டி கோதையையும் சைக்கிள்ல வச்சி அழைச்சிண்டு போறேன்.. மூணுபேரை சைக்கிள்ல கூட்டிண்டு போறது கஷ்டம்..அதனால பெரியவனை நீ உன்கூட இன்னிக்குக் கூட்டிண்டு போ… அவனும் நரசிம்ம ஜயந்தி வைபவத்துல கலந்துக்கட்டுமே”
” வக்கீல் மாமி என்ன சொல்வாளோ தெரியல ஆனா யார் யாரோ வருவா வருஷா வருஷம் பாத்துருக்கேனே…. சரிடா ப்ரஹா வரியா என்கூட?”
”வரேனே…பெரிய பங்களான்னு நீ சொல்வியேம்மா ! தோட்டம்லாம் இருக்குமா? மரம் செடில்லாம் இருக்குமா? ஊஞ்சல் போட்ருப்பாளா நான் அதுல ஆடலாமா?”
“சமத்தா இருக்கணும்.. ஏதும் விஷமம் பண்ணினா அந்த வக்கீல்மாமிவேதவல்லி உன்னை மிரட்டுவா..,,,பொல்லாதமாமி அவாத்துல மாமாவே மாமிகிட்ட பயப்படுவார். என்னவோ போ அப்பப்போ கொஞ்சம் அரிசியும் பருப்பும் தூக்கித்தரா …மிச்சம் மீதி சாப்பாடு தரா…மாமியோட பொண்ணு அமெரிக்காலேந்து வந்தா இரக்கப்பட்டு நமக்கு துணி மணில்லாம் வாங்கித்தரா.அதான் நானும் பல்லைக் கடிச்சிண்டு அங்கபோய்ட்டுவரேன் உங்கப்பா மட்டும் பொறுப்பா இருந்தா எனக்கு இந்த நிலைவருமா ப்ரஹா?”
தன்னைச் சுட்டிக்காட்டிப்பேசுவதைக் கேட்ட பத்ரி பாயைவிட்டு துள்ளி எழுந்தான்.”என்னடி குழந்தைகிடட் வாய் நீள்றது ?நாந்தான் உன் இடத்துல இங்க தினமும் பசங்களைப் பாத்துக்கறேனே? குளிப்பாட்டி யுனிஃபார்ம் உடுத்தி பழையதைப்போட்டு பள்ளிக்கூடம் அனுப்பறேன். சின்னது கோதை நடுக்கூடத்துல ஆய் போனா அள்ளிக்கூட போட்றேன்.பகல் ஒருமணீக்கு நீ திரும்பிவரவரைக்கும் எல்லாத்தியும் பாத்துண்டு வீட்ல சீட்டு ஆடி சம்பாதிக்கவும் செய்றேன் இன்னும் என்னடி பொறுப்பு வேணும் உனக்கு?”.
பத்ரி கூச்சல் போட ஆரம்பித்துவிட்டால் ஓயமாட்டான் தன்மேல்தவறு இருப்பவர்களுக்கே உரிய அதிகப்படி பேச்சு பத்ரியிடம் உண்டு.
பதில் பேசாமல் மௌனமாய் ஜனகா வெளியேறினாள். கூடவே அரைட்ராயரை இழுத்துப்பிடித்துக்கொண்டு நடந்து வந்த ப்ரஹ்லாதன்,” அம்மா! எனக்கு சரியான பேர்தான் வச்சிருக்கே!அதான் அப்பா இரண்யனாட்டம் அரக்கனா இருக்காரோ?’என்றான்.
” உஷ் அப்பாவை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது…. உனக்கு நான் பேரு வைக்கலடா.. வக்கீல் மாமியாத்துல நீ என் வயத்துல இருக்கறப்போ வேலைல சேர்ந்தேன். மாமி நரசிம்மபெருமாள்பக்தை. பையன் பொறந்தா பிரஹலாதன்னு வைடீ ஜனகா ன்னு சொல்லிட்டா!”
“அப்போ மாமிதான் ஹிரண்யா!” கைகொட்டி சிரித்தான் பிரஹலாதன்.
”உஷ் அங்கவந்து இப்டில்லாம் சிரிக்கப்டாது …மாமி கோச்சிபபா…சமத்தா இரு என்ன?’
”சரிம்மா. ”
பழைய மாம்பலம் ஸ்ரீனிவாசா தியேட்டர் வாசல் பஸ் ஸ்டாப்பில் இருவரும் சில நிமிஷங்கள் காத்திருக்கும்போதே பஸ் வந்துவிட்டது.
பஸ்ஸில் ஏறியதும் கண்டக்டரிடம்,” பெஸன்ட்நகர் கலாஷேத்ரா காலனி” என்று சொல்லி பத்துரூபாயைக்கொடுத்தாள்.
பஸ்ஸில் நிற்கக்கூட இடமில்லை..
”ஏன்மா தினம் இப்டித்தான் நெருசல்ல போய்ட்டு வரியா பாவம்மா நீ”
“தினம் இவ்ளொ கூட்டம் இருக்காது,இன்னிக்கு தான் இப்படி .சரி நீ என் பக்கமாவே இரு….காணாமபோய்டாதே”
கலாஷேத்ரா காலனி வந்ததும் ஜனகா மகனுடன் கீழே இறங்கினாள். இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.
“பக்கத்துலதான் வீடு ப்ரஹா…அஞ்சு நிமிஷத்துல போய்டலாம்”
“வக்கீல் வீட்ல நாய் இருக்காம்மா?’
’மாமிதான் ’ என்று சொல்லவந்த ஜனகா லேசான சிரிப்புடன் ” இப்போ இல்லை…நீ குழந்தையா இருக்கறப்போ ஒண்ணு இருந்தது அது பேரு நரசிமமா” என்றாள்.
”என்னது நாய்பேரு நரசிம்மனா?”
” ஆமாம் வக்கீல் மாமி பயங்கரமான நரசிம்ம சுவாமிபக்தை! வீட்டுக்கு பேரு ஜெய்நரசிம்மா!
மாமியோட பையன் பேரு லஷ்மிநரசிம்மன். மாமியாத்ல குலதெய்வம் நரசிம்மராம் அதனால் நாய்க்கும் அதே பேரை வச்சாளாம் அந்தநாய் ஒருநாள் செத்துபோனதும் மாமிக்கு ஒருமாசம் சாப்பாடு இறங்கல…பாவம்..அந்த சோகத்துல இதுவரைக்கும் வேற நாயே வாங்கல..”
” ஏன்மா நம்மவீடல் நாய் வாங்கிவளக்கலாமா? கிரிக்கட் தோனி பேரை வைக்லாம் எனக்கு அவரை ரொம்பபிடிக்கும்.”
”ஆமாண்டா ந்ம்ம பொழைப்பெ நாய் பொழப்பா இருக்கு இதுல நாய் ஒண்ணுதான் குறைச்சல்..சரிசரி…வக்கீல் வீடு வந்துடுத்து நான் சொன்னது நினைவிருக்கோல்லியோ?’
”அம்மா! நீ எழுந்ததும் நீராகாரம் தருவே இன்னிக்கு தரவே இல்ல.பசிக்கறதும்மா இப்போவே…”
”அவசரத்துல மறந்துட்டேன் ப்ரஹா… மாமியாத்துல பாலோ மோரோ போனதும் தரேன்ப்பா”
”சரிம்மா”
வீட்டு வெளிவாசலில் செம்மண் நிரப்பி பெரிய படிக்கோலம்போடப்பட்டிருந்தது,
காம்பவுண்ட் சுவரில் க்ரானைட்டில் பதித்திருந்த சிறிய நரசிம்மர் சிலைக்கு சாமந்திமாலை அணிவித்திருக்க போர்ட்டிகோ தாண்டி நிலைப்படிக்கு வரும்போது மேலே மாவிலைக்கொத்து தொங்கியது. திறந்த கதவிற்கு அருகே நின்று ‘மாமி…”என்று குரல்கொடுத்தபடியே உள்ளே நுழைந்தாள் ஜனகா.
“மணி எட்டாறது இவ்ளோ லேட்டா வரயே? ஏழரைக்கே வரசொன்னேனே, இன்னிக்கு ந்ருசிம்ம ஜயந்தி நினைவிருக்காடி ஜனகா? ” உரத்த குரலில் அதட்டலாய்க் கேட்டபடியே வந்த உருவத்தைப் பார்த்தான் ப்ரஹலாதன்.
பழுத்த மாம்பழ நிறத்தில் பெரியவிழிகளும் அதை இன்னும் பெரிதாக்கிய காட்டிய மூக்குக்கண்ணாடியும் விடைத்தநாசியும் தடித்த உதடுமாக வேதவல்லியைப் பார்க்கும்போது அம்புலிமாமா புத்தகத்தில் அசோகவன சீதை அருகே அமர்ந்திருந்த ஒருராட்சசியின் படம் ப்ரஹலாதனுக்கு நினைவுக்கு வந்தது..மாமியும் அவனை ஏறெடுத்துப்பார்த்தாள்.
”யாருடி இந்த வாண்டு ? பெரியவனா சின்னவனா?”
”பெ.. பெரியவன் ப்ரஹா..”
”என்னடி ப்ரஹா? ப்ரஹலாதன்னு வாய் நெறயக் கூப்டாம? நான் வச்ச பேராச்சே ஏண்டா அம்பி என்ன படிக்கறே?’
”ரண்டாம் க்ளாஸ், மாம்பலம் அரசுப்பள்ளில”
”ஒழுங்காப்படிக்கப்போறியா இல்ல உங்கப்பனாட்டம் சீட்டு ஊருசுத்தறதுன்னு திரியப்போறியா? இன்னிக்கு எதுக்குடி இவனை இங்க அழைச்சிண்டு வந்தே ஜனகா?’
”அவர் எங்கயோ போகணூமாம்… சைக்கிள்ள இவனையும் கூட்டிண்டு போகமுடியாது ஆத்துல தனியா விடவும் முடியாது ரெண்டுங்கெட்டான் ..ஸ்கூல் வேற லீவ் விட்டாச்சு. அழைச்சிண்டுபோன்னு அவர் ஆர்டர் போட்டுட்டார்”
”நீயும் அழைச்சிண்டு வந்துட்டியாக்கும்? இந்தகாலத்துலயும் இப்படி ஒரு பதி பக்தியான பொண்ணை நான் இப்பத்தான் பாக்கறேன் “என்றாள் மாமி கிண்டலாக..
ஜனகா தலை குனிந்தாள்
..
”சீக்கிரமா தளிகை முடிச்சிட்டு ஜோடுதவலை நிறைய பானகம் பண்ணிடு. பதினஞ்சிகிலோ வெல்லம் உடைச்சி சுக்கு ஏலம் தட்டிப்போட்டு பண்ணு.. அம்பதுபேராவதுவருவா ஆமா, எங்க இந்த மனுஷன் போய்த்தொலைஞ்சார்? காலங்கார்த்தால பேப்பர்ல தலைசாய்ச்சா எழுந்து வர்ரதே கெடயாது….. ஏன்னா…. ஏன்னா எங்கபோய்த்தொலைஞ்சேள்?”
மாமி கணவரைத் திட்டிகொண்டே தேடும்போது வக்கீல் திருமலை தனது மெலிந்த உடலைக்குறுக்கிக்கொண்டு பயந்தபடி எதிரே ஓடி வந்தார்.
“எங்க ஒழிஞ்சங்கோ இவ்ளோ நாழி? கொல்லைலபோயி பவழமல்லி பொறுக்க சொன்னேனே? வெய்யில் வந்தா எல்லாம் வாடிப்போயிடும்.தோட்டக்கார கடங்காரன் இன்னிக்குப்பாத்து லீவ் போட்டுட்டான்.”
”ஹிஹி …..போன் வந்தது நம்ம லஷ்மிநரசிம்மன் அமெரிக்காலேந்துபேசினான். பொழுதுபோனதே தெரில்லடி வேதம்”என்று அசடு வழிந்தார்.
” அவன் நறுக்குனு நாலு வார்த்தைதான் பேசுவான் நீங்கதான் வளவளனு கோர்ட்கேஸ் கதைலாம் அவன்கிட்ட அளப்பங்கோ…சரி, இன்னும் காபி குடிக்கலதானே?”
”இல்லையே ஜனகா வந்து வழக்கம்போல கலந்துதருவான்னு காத்துண்ட்ருக்கேன்”
”இன்னிக்கு காபி சாப்பிடக்கூடாது”
“இதென்ன புதுசா இருக்கு?”
”ஆமாம் புதுசா கேள்விப்பட்டேன் அன்னிக்கு டிவில உபந்நியாசகர் சொனனர் ந்ருசிம்ம ஜெயந்தி அன்னிக்கு சாயந்திரம் அவர் பிரத்யட்சமான அந்திpபொழுதுவரை வாய்ல பச்சத்தண்ணி குத்திக்கக் கூடாதாம் அப்றோமா அவருக்கு அம்சை பண்ணின பானகத்தை முதல்ல சாப்பிடணுமாம் நாம பாட்டுக்கு இத்தனை வருஷமா காலமெருந்து நாலு காபி ஒரு பாக்கெட் பிஸ்கட்டுன்னு தள்ளிண்டு இருந்திருக்கோம். அறுவயசு பக்கம் நெருங்கிண்ட்ருக்கோம் இனிமேலாவது இந்த அல்ப ஆசைலாம் விடணும் அதுவும் நாள் கிழமைல புரிஞ்சுதா?”
அதட்டிவிட்டு மாடிக்குஏறினாள் மாமி.அவள் போனதும்,ஜனகாவிடம் தயங்கித்தயங்கி நெருங்கி வந்த வக்கீல்திருமலை,”அம்மாடி ஜனகா! ஒருவாய் காபி சக்கரை போடாம வழக்கம்போலக் கொடுத்துடுடிம்மா. எனக்கு டயபடீஸ்னு தெரிஞ்சும் மாமி இப்படி கண்டிஷன் போடறா பாரு?”என்றார் கெஞ்சுதலான குரலில்
”மாமா! மாமிக்குத்தெரிஞ்சா…..?”
”தெரிஞ்சாதானே? ஆமா இதுயார் உன் பிள்ளையா ஜனகா?”
“ஆமாம் மாமா பேருபிரஹலாதன்”
“இவன் கைல ஒரு லோட்டா காபி கொடுத்து தோட்டம் பக்கம் அனுப்பிடு அங்க பவழமல்லி மரத்துகிட்ட நான் இருக்கேன்…”
“சரி மாமா”
திருமலை நகர்ந்ததும் பிரஹலாதன் சிணுங்கினான்.
”அம்மா பசிக்கறது எனக்கும் ஏதாவது கொடு”
”முதல்ல மாமாக்கு காபி கொண்டு கொடுத்துட்டுவாடா..”
ப்ரஹலாதன் கொண்டுவந்து கொடுத்த காபியை சாப்பிட்டதும் திருமலை” தாங்க்ஸ்டா குழந்தை! ஆமா நீ காபி சாப்ட்டியோ?”என்று அன்பாகக்கேட்டார்.
”இல்ல மாமா காபில்லாம் ஆத்லபோடறதில்ல … ஆனா கார்த்தால் நீராகாரம் சாப்டுவேன் இன்னிக்கு கிளம்பற அவசரத்துல அம்மாவும் தரல நானும் அப்படியே வந்துட்டேன்… பானகம் பண்னப்போறாளாமே மாமா? எனக்கு.பானகம் ரொம்பப் பிடிக்கும் ”
”அது பூஜைமுடிஞ்சி சாய்ந்திரமாத்தான் உன் வாய்க்குக்கிடைக்கும்டா..அதுவரை பட்டினி கிடக்கமுடியுமா உன்னால? அம்மாகிட்ட கேட்டு ஃப்ரிட்ஜ்ல ஜூஸோ பழமோ எடுத்து சாப்பிடுப்பா”
பிரஹலாதன் காபிலோட்டாவுடன் சிட்டாய்ப்பறந்தான்.
ஜனகா வெல்லத்தை கொல்லைப்புறம் கொண்டுவந்து அங்கிருந்த பாறாங்கல் திண்ணைமீது வைத்து சிறு கல் உலக்கையால் நங்நங்கென்று தட்டினாள்.
கூடவே வந்த பிரஹ்லாதன்,”அம்மா! எனக்கு துளி வெல்லம் தரியா?” என்று கேட்டான் ,கேட்கும்போதே நாவில் நீர் சுரந்துவிட்டது.
“இல்லடா உம்மாச்சிக்கு பண்றது இதை முதல்ல நாம சாப்டக்கூடாது”
இதைக்கேட்டுக்கொண்டே அங்கே வந்த திருமலை” குழந்தைக்கு சின்ன வில்லை கொடு ஜனகா ஆசைப்படறான் பாவம்”
என்றார்.
ஜனகா யோசித்தபடி ஒரு வில்லையை எடுத்து மாமாவிடம் கொடுத்து,:நீங்களே கொடுங்கோ மாமா..எனக்கென்னவோ பயமா இருக்கு” என்றாள்.
எதேச்சையாய் அங்கே வந்த வேதவல்லி திருமலையின் கையில் வெல்ல வில்லையைப்பார்த்து ருத்ரதாண்டவம் ஆடினாள்.
” என்ன நினைச்சிண்டு இருக்கேள் மனசுல? பெருமாளுக்கு அதுவும் உக்ரநரசிம்மருக்குபண்ற பிரசாதத்தை மனுஷா முதல்ல சாப்பிடறதா? எனன் அக்கிரமம் இது? வயசுக்கு ஏத்த விவேகமே இல்லை உங்ககிட்ட.. இந்தப்பொடியனுக்காகவோ இல்ல நீங்க முழுங்கவோ எப்ப்டி எடுத்தாலும் அது மகா தப்புதான்.. டேய் பொடியா போடா அந்தப்பக்கம்…..கூடத்துமூலைல உக்காந்துக்கோ அம்மாபுடவைத் தலைப்பைப் பிடிச்சிண்டு வந்தே கொன்னுடுவேன் உன்னை.பூஜைமுடிஞ்சதும் எல்லாம் நீயும் கொட்டிக்கோ யார் வேண்டாஙக்றா? முன்னாடி சாப்ட்டா நரசிம்மர் யார்மேலயாவது ஆவேசம் வந்து அவாமூலம் தன் கோபதைக்காட்டமாட்டாரோ? சுவாமி உக்ரம் தெரியாதா என்ன? அதைத் தணிக்கத்தானே பானகம் பண்றோம்? என்னிக்கோ ஒருநாளாவது சாயந்திரம் வரைக்கும் உபவாசம் இருக்க துப்பு இல்லாத ஜன்மம் எடுத்து என்ன பிரயோஜனமோ நரசிம்மா இவாளுக்கு நீதான் புத்தி புகட்டணும்”முணுமுணுத்தபடி மாமி அகன்றாள்.
பிரஹலாதன் பயந்துபோய் கூடத்துமூலையில் போய் உட்கார்ந்துகொண்டான்.டிவியில் நரசிம்மர்கோயில் ஒன்றின் அபிஷேக ஆராதனைக்காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது.
மணி பகல் 12 ஆனது.
திருமலை திருதிருவென விழித்தபடி பிரஹலாதன் அருகில் வந்தவர்,”குழந்தே பசிக்கறதாடா?” என்று கேட்டார்.
“ஆமாம் மாமா அம்மாவும் பயப்படறா ஒண்ணும் தரமாட்டேங்கிறா..”
“நான் கொஞ்சம் பழம் கொண்டுவந்து தரட்டுமா வேஷ்டில மறைச்சி எடுத்துண்டு வரேனே?”
“வேண்டாம் மாமா ..மாமி உங்கள ரொம்ப திட்றா பாவம் நீங்க..”
”அவ அப்படித்தான்..ஆனா மாமி ஃப்ரண்ட்ஸெல்லாம் வந்தா அவாளே உரிமையா ஃபிரிட்ஜைத் திறந்து ஜூசும் கூல்ட்ரிங்கும் குடிச்சிட்டுத்தான் பூஜைக்கு உக்காருவா பாரேன்.மாமியும் அவாளை ஒண்ணும் சொல்லமாட்டா…எல்லாம் பணம் பண்றவேலைடா”
எரிச்சலுடன் முணுமுணுத்தபடி மாடிக்குப்போனவர் மறுபடி மூன்றுமணிக்குக் கீழே வந்தபோது கூடத்தில் அப்படியே கைகட்டிக்கொண்டு முகம் வாடிய நிலையில் அமர்ந்திருந்த பிரஹலாதனைப்பார்த்து வேதனையுடன் ‘ச்சூள்’ கொட்டினார்.
வேதவல்லி ஹாலில் கீழே ரத்னகம்பளத்தை விரிக்கச்சொல்லி பணியாட்களுக்கு உத்தரவு போட்டுக்கொண்டிருந்தாள்.
இதுதான் நலல் சமயம் உள்ளபோய் ஒரு லோட்டா பானகத்தை கொண்டுவந்துடலாம்..குழந்தையும் தெய்வமும் ஒண்ணூதான்..இந்தக்குழந்தை சாப்பிட்டால் பகவான் ஒண்ணும் கோவிச்சிக்கமாட்டார்.அதுவும் நரசிம்மனின் அபிமான பக்தனின் பேரை வச்சிண்டு இருக்கான் குழந்தை. வாய் மூடி தேமேன்னு உக்காந்திருக்கு…இன்னும் மூணுமணிநேரத்துக்கு மேல ஆகும் பிரசாதம் கிடைக்கறதுக்கு . அதுவரை பையன் தாங்குவானா? எங்காவது மயக்கம் போட்டு விழுந்துட்டா…? இந்த ஜனகாவும் எனக்கு மேல பயந்துசாகறா..
இப்படி நினைத்தபடிதிருமலை மெல்ல சமையலறைக்குப்புகுந்தார்.
ஜனகா அப்பளம் பொறித்துக்கொண்டிருந்தாள்.
அவளுக்குத்தெரியாமல் ஓரமாய் தாம்பாளம் போட்டு மூடிவைத்திருந்த ஜோடுதவலையை நெருங்கினார். மெல்ல அந்த தாம்பாளத்தை கையில் எடுக்கும்போது அது கைதவறி ஜிலீங் என்று சப்தப்படுத்திக்கொண்டு கீழே விழுந்தது.தூக்கிவாரிப்போட ஜனகா திரும்பினாள்.
“என்னாச்சு என்ன சத்தம் அங்க?வாசல்ல எல்லாரும் கார்ல வந்துட்டா…நீங்க கிச்சன்ல என்ன பண்றங்கோ? வாசல்லப்போய் எல்லாரையும் வரவேற்கிற வழியைப்பாருங்கோ..ம்ம்?”
வேதவல்லி போட்ட கூச்சலில் சப்தநாடியும் ஒடுங்க திருமலை வாசலுக்குப்போய்விட்டார்.
வந்தவர்கள் “ஸ் அப்பா என்ன வெய்யில்…. ஜூஸ் கொண்டாங்க சமையக்கார மாமி “ என்று நுழைந்ததும் உத்தரவிட்டனர்.
ஜனகா கொண்டுபோய்கொடுக்கும்போது ஓரமாய் உட்கார்ந்திருந்த மகனையும் ஒரு கண் பார்த்துவந்தாள்.
திருமலைக்கு கோபமாய்வந்தது கூடத்தில் மூலையில் உட்கார்ந்திருக்கிற குழந்தைக்கு ஒருவாய் நீராவது யாராவது கொடுத்துத் தொலைத்தால் என்ன? பெத்தவளுக்கே விசாரமில்லை..
அவன் அருகில்போய்,”சர்பத் கொண்டுவரட்டுமாப்பா?” என்றுகேட்டார்.
”வேண்டாம் மாமா அதெல்லாம் பழக்கமில்ல.. எனக்கு பானகம்பிடிக்கும் பூஜை ஆனதும்அதே சாப்பிட்றேனே?” என்றான் பிரஹலாதன் .
“அதுக்கு இப்போதான் மணி அஞ்சாறது அஞ்சரைக்கு ஆரம்பிச்சி ஆறரைக்குதான் பூஜை முடிப்பா அப்புறம்தான்ப்பா பானக விநியோகம் நடக்கும்”
”பரவால்ல மாமா..தோட்டத்துப்பைப்ல தண்ணி குடிச்சிட்டேன் ..”
திருமலை வேதனையுடன் வந்தபோது கையில் ஜூஸ் டம்ளருடன் வந்த லேடீஸ்க்ளப் தலைவி மாலதி ஜகன்னாதன்,” வேதா ஈஸ் ஆல்வேஸ் க்ரேட்! நரசிம்ம ஜயந்தி வைபவத்தை அவள் வீட்டில் கொண்டாடறவிதமே தனி” என்று யாரிடமோ புகழ்ந்து கொண்டிருந்தாள்.
“எல்லாம் சிரத்தையாய் செய்யணும் மாலதி, இல்லேன்னா நரசிம்மர் யார்மேலாவது ஆவேசமாய் வந்துடுவார்.” என்றாள் வேதவல்லி பெருமையும் பயத்துடனுடனும்.
பூஜை ஆரம்பித்தது. திருமலை முன்வரிசையில் உட்கார்ந்து கொண்டிருந்தவர் சட்டென பின்வரிசையைப்பார்த்தார் அங்கே பிரஹலாதன் சுவரோடு சுவராய் சாய்ந்து கண்ணைமூடிக்கொண்டிருந்தான்.
‘ஐயோ அவனுக்கு மயக்கம் கியக்கம் வந்துருக்குமோ?’
விளக்கேற்றி விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லத்தொடங்கினர். பஜனைபாடல்கள் என்று தொடர்ந்தது. இரண்டுமணிநேரமானதும்,
’எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்* திருவோணத்திரு விழவில்
அந்தியம் போதில் அரியுருவாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப் பல்லாணடு பல்லாயிரத்தாண் டென்று பாடுதுமே’
பல்லாண்டு கூறிவிட்டு ஒருவழியாய்கற்பூர ஹாரத்தி காண்பித்து மங்கள சுலோகம் சொல்லிமுடித்தனர்.. பானக நைவேத்யமும் முடிந்தது
வேதவல்லி மடிசார் புடவை தடுக்கத்தடுக்க வேகமாய் பானக ஜோடுதவலைப்பாத்திரத்தை திறந்தாள்..டம்ளரில் பானகத்தை ஊற்றி அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்தாள்.
திருமலை ஓடிப்போய்,”ஒரு டம்ளர் இங்க..” என்றார்.
“அடடா உங்களுக்கு என்ன அவசரம்? வெளிமனுஷாளை கவனிங்கோ முதல்ல போங்கோ அந்தப்பக்கம்” விரட்டிய மனைவியை விரக்தியாய் பார்த்தபடி ஒரு மூலையில்போய் நின்றுகொண்டார் திருமலை.
ஓரிரு நிமிடங்கள்தான்…..
திடீரென ஹ்ஹ்ஹ்ஹூஉம்ம் என்று தலைமயிரை சிலுப்பிக்கொண்டு உடம்பை முறுக்கிக்கொண்டு நடுக்கூடத்தில் தொம் என கைகாலை அகட்டியபடி குதித்தார் திருமலை.
”வக்கீல் சாருக்கு எனனச்சு? முழியை உருட்றாரே? ஐய்யோ பயமா இருக்கே?”
“மாமா மாமா!”
“நான் நரசிம்மம் வந்துருக்கேன்..” திருமலை உக்ரமாய் வார்த்தைகளை உமிழ்ந்தார்.
”ஆ பெருமாளே! நரசிம்மா ! நான் சொன்னெனே சிரத்தையா பூஜை பண்ணினா பெருமாள் யார்மேலாவது வந்துடுவார்னு. என் பாக்கியம் பெருமாள் இங்க .ஹோ பெருமாளே ஏஏஏ..” வேதம் பெருமையாய் சொன்னபடி நாலுதடவை கீழேவிழுந்து சேவித்தாள்.
”உன் பூஜைல குத்தம் இருக்கு் வேதா”
“கு..குத்தமா? இல்லையே நேமமா செய்தேனே சுவாமீ?” கைநடுங்க குரல் நடுங்க சொன்னாள் வேதவல்லி/
“ஹ.. அநியாயமா செய்துட்டு என்ன பேச்சு பேசறே நீ?”
“அநியாயாமா? அபசாரம் மன்னிச்சிடுங்கோ பெருமாளே என்ன குத்தமாச்சு?”
”என் பக்தனை பட்டினி போட்டுட்டு நீங்கள்ளாம் பானகம் சாப்பிடறங்கோ…இது மகா அநியாயம்”
“பக்தனா? எல்லாரும் உங்க பக்தா பெருமாளே.. யாரைசொல்றேள்?யாரு?”
“பிரஹலாதன் என் அபிமான பக்தன் தெரியாதா? ஹூஹூ,ம்ம்ம்ம்”
“ப்ரஹலாதன் உங்க அருமைபக்தன் அறிவேனே ஹரி ஹரி”
“அந்தபிரஹலாதன் இல்லை…இங்க இருக்கும் பிரஹலாதன்”
“பிரஹ்…ஓ சமையக்காரி பையனா?…” புரிந்தவளாய் வேதம் “அபச்சாரம் பண்ணிட்டேன் “ என்று மறுபடி விழுந்து சேவித்தாள் பருத்த உடல் மூச்சிறைக்க கூடத்துமூலையில் மயக்கமாகிக் கிடந்த பிரஹலாதனை நெருங்கினாள்..
“சீக்கிரமா பெருமாள் மலையேறதுக்குள்ள பெருமாள் உத்தரவை செய்துமுடி வேதா” யாரோ வயதான பெண்மணி உரத்தகுரலில் சொன்னாள்.
பிரஹலாதனின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவனை மடியில் அமரவைத்து பானகத்தை சொம்பில் கொண்டுவரச்சொல்லி அதனை மெல்ல அவன் வாயில் ஊற்ற ஆரம்பித்தாள்.’நரசிம்மப்பெருமாளே என்னை மன்னிச்சிடு உன் பக்தனை நான் கவனிக்காதது தப்புதான்’ வாய்விட்டு அரற்றினாள்.
மடக் மடக் என பானகத்தை முழுங்கிய பிரஹலாதனுக்கு உயிரே திரும்பிவந்தமாதிரி இருந்தது. மெல்ல ஆசுவாசமாய் கண்ணைத்திறந்தான்.. அனைவரும் தன்னை கீழே விழுந்து நமஸ்கரித்துக்கொண்டிருக்க, அங்கே நின்றுகொண்டிருந்த திருமலை மட்டும் பிரஹலாதனைப்பார்த்துக் குறும்பாய் கண் சிமிட்டினார்.
கிளிஞ்சல்கள்
மின்விசிறி
புத்தகத்தின் பக்கங்களைப்
புரட்டுகிறது
கோடுகள் தான்
ஓவியமாகிறது
நதியின் போக்கிலே
சடலம் மிதக்கிறது
சுவரொட்டி
மனிதர்களுக்கா
மாடுகளுக்கா
தண்ணீர்க் குழாயிலிருந்து
தவளை வெளிவந்தது
வானம் கறுத்தது
காற்று கலைத்தது
ரசமிழந்த கண்ணாடி
குப்பைத் தொட்டியில்
சாக்கடையில் மிதக்கிறது
ரப்பர் பந்து
காகம் கரைந்தது
வாழை இலை நறுக்கினேன்
விருந்தினர்களை எதிர்பார்த்து
கடலைப் பார்த்ததற்கு
சாட்சியாக
இந்தக் கிளிஞ்சல்கள்.
புதிய அத்தியாயம்
சொல்லச் சொல்லிக் கேட்கிறது குழந்தை.
அதன் போக்கில் விட்டுப் பார்க்க
அஞ்சுகிற நமக்கும்
குழந்தைக்குமான வித்தியாசத்தைத்
தேடித் திகைத்து நின்ற புள்ளியில்
ஆரம்பம் ஆனது…
ஒளிர்ந்த சன்னல்வழி நட்சத்திரமாய்
எதையாவது சொல்லட்டுமா – 46
பலருக்கு நான் கை பார்த்துப் பலன் சொல்வது வழக்கம். அவர்கள் பெரும்பாலும் என்னைக் கேட்பது, ‘நான் மேலை நாடுகளுக்குப் போவது உண்டா?’ என்பது. எனக்கும் புரியாத விஷயம் மேலை நாடுகளுக்குப் போவது பற்றி. கையில் எந்த ரேகை அப்படிச் சொல்கிறது என்று யோசிப்பேன். நான் ஒரு அரைகுறை கை பார்ப்பவன். ஒருமுறை நகுலனுக்குக் கை பார்த்தேன். அவர் தொந்தரவு செய்ததால். அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி : ”நான் இன்னும் எத்தனை நாட்கள் உயிரோடு இருப்பேன்,” என்று. நான் முழித்தேன். கையைப் பார்த்து ஒருவர் எத்தனை நாட்கள் உயிரோடு இருப்பார் என்று துல்லியமாகக் கூற முடியாது. நான்,”ஒரு 75வயதுவரை இருப்பீர்கள்,” என்று சொன்னேன். சும்மாத்தான் சொன்னேன். அவர் அதை ஒரு பேட்டியில் வேறு கூறிவிட்டார். ஆனால் அவர் 75 வயதுக்குமேலும் இருந்தார். என் உறவுக்காரப் பெண்மணி அடிக்கடி என்னிடம் கையை நீட்டி, ‘எப்போது மேலை நாட்டிற்குச் செல்வேன்?’ என்று கேட்டுக்கொண்டே இருப்பார்.
இதெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பு. நானும் போவதற்கு எல்லா வாய்ப்பும் உண்டு என்று சொல்வேன். அதன்படியே அவர் அமெரிக்கா சென்றார். முதல் தடவை இல்லை. பல முறை. அவருடைய பையனும், பெண்ணும் அமெரிக்காவில் குடியேறிகளாக மாறிவிட்டார்கள். உறவினர் ஆண்டுக்கு ஒருமுறை அங்கு போய் 6 மாதம் வரை இருப்பார். இப்போதெல்லாம் அவர் அந்தக் கேள்வியைக் கேட்பதில்லை.
இப்போதெல்லாம் என் இலக்கிய நண்பர்கள் பலர் அமெரிக்கா டொராண்டா என்றெல்லாம் சுற்ற ஆரம்பித்து விட்டார்கள். வெகு சுலபமாக அவர்கள் குடும்பத்தில் உள்ள புத்திரர்கள் அல்லது புத்திரிகள் அமெரிக்காவில் லண்டனில் படிக்கப் போய்விடுகிறார்கள். அல்லது இலக்கிய நண்பர்கள் மூலம் அவர்களுக்கு வாய்ப்பு கிட்டும். என் அலுவலகத்தில் உள்ள பலர் அவர்கள் மகன்களை மகள்களை படிக்க அனுப்புகிறார்கள். இதெல்லாம் 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்னால் சாத்தியமா என்று தெரியவில்லை. என் நண்பர் ஒருவர் அலுவல் பொருட்டு அமெரிக்கா சென்றதை நடக்க முடியாத விஷயம் நடப்பதாக நினைப்பேன். எனக்கும் அந்த நண்பரைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கும். ·பாங்கில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு மேலை நாடுகளுக்குப் போவது சாத்தியமே இல்லை என்று நினைப்பேன். அமெரிக்கா எப்படி இருக்கும். அது புரிபடாத நாடாக இருக்கும் என்றெல்லாம் யோசிப்பேன். எனக்கு பிரமிப்பு கூடிக்கொண்டே போகும். என் சகோதரர் அலுவல் பொருட்டு ஜப்பான் சென்று ஒரு மாதம் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனந்தவிகடனில் பணிபுரிந்த மணியன் என்ற எழுத்தாளர் உலக நாடுகள் முழுவதும் சுற்றியவர். அதேபோல் ஜெயகாந்தன், அசோகமித்திரன் வெளி நாடுகளுக்கு முன்பு சென்றவர்கள்.
இப்போது பலர் போய் வந்தவண்ணம் இருக்கிறார்கள். கவிஞர் வைதீஸ்வரன் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகக் குடியிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடாவில் என் புதல்வன் பணிபுரிவதால், நானும் அமெரிக்கா செல்ல ஆவல் கொண்டேன். முதலில் பாஸ்போர்ட்டை தடுமாறி வாங்கி வைத்துக்கொண்டேன். பின் விசாவிற்கு விண்ணப்பித்தேன்.
என் அலுவலகத்தில் அ¦மெரிக்கா செல்ல அனுமதி கேட்டேன். கொடுத்தார்கள். ஜூலை மாதம் செல்வதற்கு மே மாதமே அனுமதி பெற்றுக்கொண்டேன்.
பொதுவாக சீர்காழியிலிருந்து சென்னைக்கு ஒவ்வொரு சனிக்கிழமை வரும்போது என் கால்கள் வீங்கிவிடும். அந்த அளவிற்கு பஸ்பயணம் நரகமாக இருக்கும். நெருக்கடியான கூட்டத்தில் அமர்ந்துகொண்டு சித்திரவதைப்பட்டு வரவேண்டும். பின் உடனே ஞாயிறு ரயிலில் திரும்பவும் சீர்காழி வர வேண்டும். திங்கள் கிழமை அலுவலகம் செல்வது வேண்டா வெறுப்பாக இருக்கும். ஆனால் 12ஆம் தேதி ஜூலை மாதம் நான் அமெரிக்கா செல்வதற்கு இரவு 1.30 மணிக்கு தயாராகிவிட்டேன். ஊருக்குச் செல்லும் நினைப்பில் 11ஆம்தேதி முழுவதும் அலைச்சல். பயணம் கடுமையாக இருக்கும் என்று பையன் எச்சரித்திருந்தான். 2 மணிக்கு ஏர்போர்ட் வந்துவிட்டோம் மனைவியும், நானும். பின் விமானத்தில் 6 மணிக்கு ஏறினோம். அது விமானம் மாதிரி இல்லை. ஏதோ பெரிய இடமாக இருந்தது. 300க்கு மேற்பட்டவர்கள் நெருக்கமாக உட்கார்ந்திருந்தார்கள். விமானம் பெரிய ராட்சதப் பறவைபோல் இருந்தது. நானும், மனைவியும் ஜன்னல் பக்கத்தில் உள்ள இடத்தில் அமர்ந்துகொண்டோம். விமானம் மெல்ல மெல்ல நகர்ந்து மேலே மேலே சென்றது. கிட்டத்தட்ட 16 மணிநேரம் வானத்தில் பறந்து லண்டன் வந்து இறங்கியது. என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. லண்டனில் வந்து இறங்கியவுடன் திரும்பவும் அமெரிக்காவில் உள்ள மியாமி என்ற இடத்திற்குச் செல்ல அவசரம் அவசரமாக இன்னொரு விமானத்தில் ஏறினோம். நாங்கள் காலையில்தாம் ஏறினோம். ஆனால் லண்டனில் வந்து இறங்கியபோது திரும்பவும் பகல் 12 மணிதான். ஆனால் நாங்கள் பயணம் செய்தது 16 மணி நேரங்களுக்குமேல். நான் விமானப் பயணம் முடித்துக்கொண்டு பையன் வீட்டிற்கு வந்தபோது, என் கால்கள் வீங்கவில்லை.
பூனைக்குட்டியும் நிலாவும்
நிலாவை இதுவரைப்
பார்த்திராத பூனைக்குட்டி
திடீரென நிலாவைப்
பார்த்து பயந்தோடியது..
நிலா துரத்த துரத்த
பூனைக்குட்டி
இன்னும் வேகமாய்
ஓடிப் பின்னால்
மேலேப் பார்த்தது,.
நிலா ஒரு மேகத்துள்
மறைந்திருந்து நோட்டம்
விடுவது போல்
பூனைக்குத் தோன்றிற்று.
பூனை வேகமாய்
ஒரு புதரில் மறைந்து
நிலாவைப் பார்க்க
நிலா மீண்டும்
மேகக் குகையிலிருந்து
வெளியே வந்து துரத்த
பூனைக்குட்டி ஓடிஓடி
ஒரு வீட்டிற்குள்
நுழைந்தது.
சீறும் பூனைக்குட்டியைக்
கண்டு பயந்த
மூன்று வயது குழந்தை
ஓடிப்போய்
அம்மாவின் மடியில்
விழுந்து அழ
அம்மா நிலாவைக்
காட்டி குழந்தையை
சமாதானப் படுத்தினாள்…
நிலாதான் குழந்தையின்
அழுகையின் ஆரம்பமென
அறியாது…
விட்டு விடுதலையாகி….
பரசுவிற்கு இன்று விடுதலை.சட்டம் வழங்கிய மூன்றுமாத தண்டனை இன்று பூர்த்தியாகிறது.
“நாளையிலிருந்து நீ சுதந்திரமனிதன்!” என்று நேற்று படுக்கப்போகும்போது ஆறுமுகம் பரசுவைப் பார்த்து சொன்னான்.
“ஜெயிலு விட்டு போனதும் எங்களை எல்லாம் மறந்துடுவே, இல்லியா பரசு?’ வரதன் வேதனையுடன் அவன் விரலைப்பற்றியபடி கேட்டான்.
மூன்றே மாதத்தில் எல்லாருடைய மனத்திலும் இடம் பிடித்து விட்ட பரசு, சிறைக்குள் நுழைந்த முதல்நாள் நடுங்கித்தான் போனான். இருபத்துமூன்றுவயதில் சிறைவாசம்! படிப்பைமுடித்து வேலை பார்க்க வேண்டிய வயதில் சிறையில் கல்லுடைத்து, களிதின்று என்று நாட்களைக் கழிக்கும்படி விதியாகிவிட்டது. முதல்வாரம் முழுவதும்தூக்கமே வரவில்லை. ஆனால் நாளாவட்டத்தில் பக்கத்தில் இருந்த இதரகைதிகளின் அன்பான பார்வையில், பரிவான பேச்சில் சிறை வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கிகொண்டான். அவன் நினைத்தமாதிரி சிறையில் உள்ளவர்கள் எல்லாருமே கெட்டவர்களாய்த் தெரியவில்லை. அவர்களில் பலர் தனது பிரியமுள்ளவர்களுக்காக ஏங்கி சோகக் கதைகளைச் சொல்லி அழும்போது பரசு நெகிழ்ந்துதான் போனான் .
“பரசு !வெளியே போனதும் உன்கிட்ட எல்லாரும் நல்லா பழகி நெருங்குவாங்களா?”
“நெருங்கணும் வரதா! நாம கவசம் போட்டுக்காம உலகத்தோடப் பழகினா உலகமும் நம்ம கிட்ட உண்மையாப் பழகும் இல்லியா?”:
“பரசு! உன் லட்சியம் கிராம முன்னேற்றம், அதற்குப் பாடுபடுவது இல்லையா? நல்லது,.அது வெற்றி பெறட்டும்! சீக்கிரமாய் ஒரு வேலைகிடைத்து நீ சந்தோஷமாய் வாழ என்மனமார்ந்த வாழ்த்துகள்!”
என்று தங்கராசு வாயார வாழ்த்தினார்
தங்கராசு, ரௌடிகள் ,தாதாக்கள் தொடங்கி சிறை அதிகாரிகள் அனைவருக்கும்யோகா கற்றுத்தரும் யோகா மாஸ்டர். அத்தனைபேருக்கும் அவரிடம் தனிமதிப்பும் மரியாதையும் உண்டு.அவர்தான் அடிக்கடி சொல்வார் ….
‘சிறை வாழ்க்கைதான் ஒருமனிதனை எப்படியெல்லாம் மாற்றிவிடுகிறது? சந்தர்ப்ப சூழ்நிலையில் குற்றவாளியாகி இளம்வயதில் இங்கே நான் ஆயுள்கைதியாகவந்தேன் .வாழ்க்கையே அஸ்தமிச்சிப் போயிட்டதாய் முதலில் நினைச்சேன். இது நல்லது, இது கெட்டது, இவர் நல்லவர் அவர் கெட்டவர் என்று மனுஷன் போட்டுவரும்கணக்கெல்லாம் மாறிப்போகும். அனுபவம் மனுஷனை மாத்திடும்.ஜெயில்ல நல்லவனா வாழ்ந்துக் காட்டணும்னு எனக்குள்ள வைராக்கியம் வந்தது. ஆனா வாழவிடாமல் மனசுக்குள்ளிருந்து சாத்தான் தடுப்பான் .ஒருமனுஷனுக்கு எதிரி, வெளில யாருமில்ல. அவன் மனசுதான் பரம எதிரி . ஜல்லிக்கட்டு காளையாய் கைக்கு அடங்காமல் அங்குமிங்கும் தறி கெட்டு அலை பாயற மனசை அடக்கப் போனால் அதுவே ஆவேசமும் அகங்காரமுமாய் நம்மைப் புரட்டிஎடுக்கும். அதை அடக்கஆத்மபலம் வேணும்; மிருகமனத்தை அடக்க நாம் மனிதனாய் இருக்கணும்; அதுக்கு மனுஷத்தன்மை பெறணும்,
தங்கராசு நல்ல சிந்தைனையாளர் .அவரது அருகாமையில் பரசுவிற்கு சிறையே போதிமரமாயிற்று.
“ஒவ்வொருமனிதனும் மனதால் செயலால் சிறைப்பட்டிருக்கிறான். பாரதி சொல்வதுபோல,
‘விடுதலையைப் பெறடா-நீ
விண்ணவர் நிலை பெறடா
கெடுதலை ஒன்றுமில்லை-உன்
கீழ்மைகள் உதறிடடா’
என்று வாழப் பழகிக் கொள்ள வேண்டும்” என்று தங்கராசு யோகக்கலைக்கு நடுவே வாழ்வியல் கலையையும் போதிப்பார்.
சிறையில் இருப்பவர்கள் ஏதோ சூழலில் குற்றம்புரிந்து உள்ளே இருக்கிறார்கள்; ஆனால் பலபேர் நிரபராதி எனும் போர்வையில் வெளியே திரிகிறார்கள் என்பது பரசுவின் சொந்த அனுபவத்திலேயே
அவனுக்குப் புரிந்து போயிற்று.
மூன்றுமாதம் முன்பு கிராமத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியை அவனால் மறக்கமுடியுமா என்ன?
அன்று ஊர்தோப்பில் ஆலமரத்தின்கீழே உட்கார்ந்து ஆசிரியர் வேலைக்கு மனுப்படிவத்தை பூர்த்தி செய்துகொண்டிருந்தான்பரசு. அங்கு மரத்தின் மேல் கீச்கீச் என்று நிறைய குருவிகள் கத்திக்கொண்டிருந்தன. ஏதோஒருகுருவிமட்டும் சோகமாய் தன்துணைதேடி கத்துவதுபோல பரசுவிற்குப்பட்டது.
அப்போதுதான் அருகாமையிலிருந்த வயல்பக்கம் உரத்தகுரலில் சிலர்விவாதம் செய்வது காதில் விழுந்தது. இடையிடையே தாழ்ந்தகுரல் ஒன்று கெஞ்சுவதுபோலக்கேட்கவும்’சித்தப்பா?’ என்று அலறிக்கொண்டு ஓடினான்.
பரசுவின் சித்தப்பா குமரவேல் கிராமத்துப் பள்ளிக்கூட டீச்சர் .பொதுப்பணி, சமூகசேவைதான் அவருக்கு உயிர்மூச்சு. குடித்துக்குடித்து கடைசியில் வயிறுவெந்து இறந்துபோன தன் அப்பாவைவிடவும் அவரது தம்பியான குமரவேலின் மீது பரசுவிற்கு மதிப்புஅதிகம். ஐந்துவருடம் முன்பு விஷ சாராயம் குடித்து ஊரெல்லாம் கடனை வைத்துவிட்டு அவன் அப்பா போனதும் தன் குடும்பப் பொறுப்பை குமரவேல் ஏற்றார் என்பதால்மட்டுமல்ல ஒரேகுழந்தை ஆதிக்காக அவர் மறுமணமே செய்துகொள்ளாமல் கிராமத்தில் ஜாதி வித்தியாசம் பாராது அனனவருக்கும் எழுத்தறிவிப்பவர். மென்மையான இதயம் , தெளிவான பேச்சு , எல்லார்க்கும் உதவும் நல்லமனம் …இவைகளின் மொத்தக்கலவைதான் தனது சித்தப்பா என்பது பரசுவின் எண்ணம்.
அவரைப்போய் ஒருவன் சீண்டிக்கொண்டிருந்தான். வயலுக்கு யார் முதலில் நீர்விடுவது என்று இரு தரப்பிலும் ஆரம்பித்த பேச்சு பிறகு வாக்குவாதமாகியது .குமரவேல் நியாயத்தின்பக்கம் நின்றார். தர்மமாய்ப் போக வேண்டும் என்றார்.அவ்வளவுதான் அதர்ம அணித்தலைவனுக்கு ஆவேசம் வந்துவிட்டது.
” மாரி!எடுடா அரிவாள?” என்று ஆணையிட்டான். காத்திருந்த அவன் ஆள் ஒருவன், அரிவாளால் குமரவேலை சகட்டுமேனிக்குத் தாக்கினான்.தலைமுகட்டில் ரத்தத்துளி முதலில் தயங்கிப் பிறகு’குபுக்’ என பொங்கிக் கொண்டு வரவும் குமரவேல் தலையைத் தாங்கியபடியே நிலத்தில் சரிந்தார்.
“டேய் மாரீ! என்னடா நீ? இவனப்போயி வெட்டிப் போட்டியா அறிவுகெட்டவனே ?என் பங்காளி தலைய சீவுன்னு சொன்னேன்… அவன் தான் தண்ணீ தன் வயலுக்கு முதல்ல விடச் சொல்லி மல்லு கட்டினான்…அவன் இப்போ கலவரம் பாத்து பயந்து ஓடிட்டான்போல.?. எப்டியோ சரிதான்… தர்மம் நியாயம் பேசினவனுக்கே இப்டீன்னா நம்ம கதி என்னான்னு பங்காளிய யோசிக்கவைக்க நீ சேஞ்சதும் சர்தான்” என்று ஆணையிட்டவன் கெக்கலிக்கவும் பரசு எரிச்சலுடன்,”அடப்பாவி?” என்று வீறிட்டான்
ரத்தவெள்ளத்தில்குற்றுயிராய் கிடக்கும் தன் சித்தப்பாவை கண் கலங்கப் பார்த்தபடியே அரிவாளை வீசினவனின் சட்டையைப்பிடித்தான்.ஆத்திரமாய் குரல்கொடுத்தான். “ட்ட்ட்டேய்..கொலைகாரப்பாவி ஒருநல்ல மனுஷனை தீர்த்துக் கட்டிட்டியேடா? இனி வயலில் தண்ணிபாயுமாடா? அவர் ரத்தம்தான் இப்போவே ஓடுதுடா” என்று உரக்கக் கத்தினான். உடனே மாரி மன்னிப்பு கேட்பதுபோல் தன் இரு கரத்தை கூப்பியபடியே பின்னோக்கி நடக்க, அங்கிருந்த ஒருவன் அவனுக்கு ஏதோ சைகை காட்ட உடனே அவன் அங்கிருந்த பெரிய கல்தடுக்கி அருகிலிருந்த பாறையில் தலையை மோதிக் கொண்டதை பரசு கவனித்தான். இதுதான் நடந்தது
ஆனால்அந்த சதிக்கூட்டம்செய்தசூழ்ச்சியில் ,சட்டம் பரசுவை பிடித்துக்கொண்டது.பங்காளிச்சண்டையை பார்வையிட வந்த குமரவேலை யாரோ அவரிடம் தமக்கு இருந்த வேறு பகை காரணமாய் கொலை செய்துவிட்டதாயும் பரசு அதை நம்பாமல் மாரிதான்கொலை செய்தான் என்றுஅவனை பாறை மீது தள்ளி கொலை செய்ய முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டியது.
போலீஸ், கோர்ட், விசாரணை நடந்து, “குற்றம் ருசுவானதால் மூன்றுமாதம் சிறை தண்டனைவழங்குகிறேன்” என்று நீதிபதியை சொல்ல வைத்தது.
சித்தப்பாவின் பத்துவயதுமகன் ஆதி ஜெயிலுக்கு பரசுவைப் பார்க்க வரும்போதெல்லாம் சொல்வான். “பரசுண்னே அந்தாள் மாரிக்கு பெரிய அடி ஒண்ணுமில்ல. ஆஸ்பித்திரிலிருந்து வந்திட்டான்.நல்லாத்தான் இருக்கான் …சூழ்ச்சி செஞ்சி உங்கள மாட்டிவிட்டுட்டாங்க… இதுல பெரியம்மா -அதான் உங்கம்மா- படுத்தபடுக்கைஆயிட்டாங்க ….மீனாக்கா அழுதுட்டே இருக்குது…எங்கப்பாவும் இல்ல..வழக்கம்போல குடும்பத்துக்கு ஆறுதல்சொல்லிக் காப்பாத்த..”
“வருத்தப்படாதே ஆதி! உப்புதின்னவன் தண்ணிகுடிச்சிதான் தீரணும்..நான் வரவரைக்கும் வீட்டை நீ கவனிச்சிக்கோ..நான் வந்ததும் சித்தப்பா இடத்துல இருந்து உன்னையும் என் அம்மா தங்கச்சியையும் கவனிச்சிக்கறேன் என்ன? “
என்னவோ பதினைந்துநாளாய் ஆதியும் ஜெயில்பக்கம்வரவேஇல்லை .
சிறை சம்பிரதாயங்களைமுடித்துக்கொண்டு ஜெயிலரின் அறையை விட்டு நகர்ந்தான். வாசலில் பெரிய இரும்புக்கேட்டின் வயிற்றுப்பகுதியில் சின்னதாயிருந்த கதவின் வழியே குனிந்து வெளியேவந்தான் கதவின் அருகே துப்பாக்கியை நிமிர்த்திவைத்துக்கொண்டு வீச்சரிவாள் மீசையுடன் நின்ற காவலாளியிடம் “போய்வரேன்” என்றுசொல்லி கைகுவித்தான்
“வராதே, திரும்பி இங்க வரவேவராதே. ஜெயில்லயும்,சாவுவீட்லயும்’போயிட்டுவரேன்’என்கிறவார்த்தை வரவேகூடாது’என்று அதட்டலாய் சொல்லி சிரித்தான் அவன் .தொடர்ந்து “வெளிலபோயி ஒழுங்கா இரு” என்றான் .
‘நான் ஒழுங்காய்தான் இருந்தேன் ஆனால் யாரும் என்னை நம்பவில்லையே?நீதிபதியே நம்பாததால்தான் சிறைதண்டனை கிடைத்தது ‘.பரசு மனசுக்குள் புலம்பிக் கொண்டான்.
இந்தமூன்றுமாதத்தில் அம்மா எப்படி இருக்கிறாளோ? படுத்தபடுக்கைன்னு ஆதி சொல்லிட்டே இருத்தான். தங்கச்சிமீனா டவுன்போயி நாலு பசங்களுக்கு ட்யூஷன் எடுக்குதாம் பாவம்.
வேராய்குடும்பத்தைத் தாங்கிட்டு இருந்த சித்தப்பா திடீர்னு மறைந்ததுல விழுதுகள் எல்லாம் ஆட்டம் கண்டிடிச்சி. ஊருக்குப்போனதும் அம்மா, மீனா ,,ஆதி சுப்ரமணிவாத்தியார். எல்லாரையும்பார்க்கணும் .
.
மனசுக்குள் ஏதேதோ நினைத்தபடி பரசு பஸ்ஸைவிட்டு கீழே இறங்கினான்.
பட்டியலில் கடைசியாய் நின்றவர் பஸ்ஸை விட்டு இறங்கியதுமே முதலில் எதிரில் வந்து நின்றார்
“பரசு? “
குரல் கேட்டு விழி உயர்த்தி அவரைப்பார்த்தான்பரசு. ஆறடி உயரத்தில் நல்ல பருமனும் தக்காளீ நிறமுமாய் இருந்தவர் கருத்து உடல் இளைத்துக்குறுகிப்போயிருந்தார்.
திடுக்கிட்ட பரசு,
“வாத்தியாரய்யா! உங்க நண்பர்- என் சித்தப்பா- போனதுல நீங்க இப்படி உருக்குலைஞ்சி போயிட்டீங்களே ஐயா? ” எண்று நா தழுதழுத்தான் .
“ஆமாப்பா..நல்லவங்களுக்கு இதுகாலமில்ல.. நல்லதுக்கும் காலமில்ல. குமரவேல் போன நேரம் நான் ஊரில் இல்லாமல் என் மகளோட வடக்கே கோயில் யாத்திரை போயிருப்பேனா? அவன் முகத்தைக்கூட கடசில பார்க்காத பாவி நான். எளியாரை வலியார் அடிச்சா, வலியாரை தெய்வம் அடிக்கும் தம்பி! ஆமா நீங்க இன்னிக்குத்தான் விடுதலை ஆகிவரிங்களா என்ன?”
“ஊருக்குள் வரவே வெக்கமா இருக்குது வாத்தியரய்யா …தப்பு செய்யாமல் சந்தர்ப்ப சூழ்நிலைல ஜெயிலுக்கு போன என்னை ஊர்ல எல்லாரும் ஏத்துக்குவாங்களா? இவந்தான் அன்னிக்கு போலீஸ்காரங்க பக்கத்துல வர, தலையக்குனிஞ்சிட்டு வேனில் ஏறின பரசு?”ன்னு தான் என்னை நினனவுபடுத்திப்பாங்க இல்லீங்களா?”
“அதைவிடுங்க தம்பி…’உலகின் வாயைத் தைப்பது கடினம்; உந்தன்செவிகளை மூடுதல் சுலபம்.’.வைரமுத்து வரிகளை ஞாபகம் வச்சிக்குங்க… அதுசரி..பரசு! உங்க அம்மாவும் தங்கச்சியும் டவுனுக்கு வீடுகுடி போயிட்டாங்க தெரியுமா?”
“அப்படியா? ஆதி வாரம் ஒருவாட்டி என்னைப் பார்க்க வருவான் எல்லாம் சொல்லுவான் என்னவோ ரண்டு வாரமா அவன் வரல ..அதான் விஷயம் தெரியல. .ஐயா! டவுன்ல அம்மாவீட்டு அட்ரஸ் சொல்றீங்களா?”
அவரிடம் முகவரி வாங்கிக்கொண்டு டவுனுக்கு பஸ் ஏறினான்.
வீட்டிற்குள் நுழைந்ததும் ஆர்வமாய்.” அம்மா!” என்றவனை,”எங்கவந்தே?” என்பதுபோல அவன் அம்மாபார்வதி பார்த்தாள்.
பிறகு, “ஏண்டா பெரியதலைங்க சண்டை போடற இடத்துல உனக்கென்ன வேலல? உங்கசித்தப்பனுக்கும் அறிவுஇல்லை, நியாயம் ,நேர்மை தர்மம்னு கடைசில உயிரை பலி கொடுத்துப் போய்ச் சேர்ந்தாரு…நீ செஞ்ச காரியத்துல எங்களுக்கு எத்தினி அவமானம்? உன் தங்கச்சிக்குக் கல்யாணம் ஆகவேணாமா? நாங்க டவுனு வந்ததே அவளுக்கு வரன் திகயணும்னுதான் இங்கயும் வந்து அதைக் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிடாதே..கண் காணாம எங்கனாச்சும் போயிடு ஆமா?”
“அம்மா! நான் தப்புசெய்யல…ஆனா சித்தப்பாவையே புரிஞ்சிக்காம அவரை விமர்சனம் செய்யும் உங்ககிட்ட நான் எப்படி என்னை நிரூபிச்சி காட்டுறது?”
“அண்ணே!”
குரல் கொடுத்தபடி உள்ளீருந்து வந்த மீனாவிடம், “மீனா1 நீ பத்து க்ளாஸ் படிச்சவ நீ சொல்லும்மா நம்ம அம்மாவுக்கு ?”என்றான் தவிப்பான குரலில்.
“அம்மா சொல்றதுல தப்பு இல்ல..ஆளு படை வச்சிருக்கிறவங்ககிட்ட நீ ஏன் மோதணும் அண்ணே?”
‘அப்போ அநியாயம் நடந்தா பாத்துகிட்டு சும்மா நிக்கணுமா?” சிவ்வென்று கோபம் தலைக்கேற வெடித்தான் பரசு.
‘அதெல்லாம் எனக்கு தெரியாது .நான் இப்போ நாலு பசங்களுக்கு ட்யூஷன் எடுக்கணூம்..அதுல
வர்ர காசுலதான் குடித்தனம் செய்யறோம்…அந்த ஆதிப்பய வேற ஆஸ்பித்திரிசெலவு அம்பது ரூபா வச்சிட்டான்..”
“ஐயோ என்னாச்சு ஆதிக்கு?”
‘ஆமாடா…அந்த தண்டச்சோறுக்கு காலராவாம்..நீ கிளம்புடி மீனா. வெட்டிக்கு இங்க பேசி நிக்கவேணாம் ” என்றாள் பார்வதி கடுப்புடன்.
குடையைவிரித்தபடி சாலையிலிறங்கிய தங்கையை ஆற்றாமையாய்பார்த்தான் பரசு .
குடையைவிரிக்குமுன் உன் மனசைவிரிக்கப் பழக்கிக்கொள் பெண்ணே…
“அம்மா, ஆதி எந்த ஆஸ்பித்த்ரில இருக்கான் ?”
“தர்மாஸ்பித்ரிதான்னு நினைக்கறேன் யாருகண்டா?”.
.
“என்னம்மா இப்படி அலட்சியமா சொல்றீங்க? பத்துவயசுப்பையன்மாஆதி… பாவம் ‘
“உன்னைப்பாக்க ஜெயிலுக்கு போவாதடான்னா என்னைமீறிப்போன நாயி “
“அம்மா…?”
வார்த்தைகளை தடித்து வீச இருந்த பரசு, சட்டென தங்கராசுவின் முகம் நினைவிற்குவரவும் அடக்கிக் கொண்டான்.
பரசு வேதனையுடன் வீட்டைவிட்டு வெளியேறி ஆஸ்பித்திரிக்கு வந்து ஆதியை பார்த்தான்.
.இளைத்துத் துரும்பாய் கிடந்தவன் இவனைக்கண்டதும்,” பரசண்ணே1 வந்துட்டிங்களா? சந்தோஷமா இருக்குது. உங்க நினவுல பெரியம்மாவும் மீனாக்காவும் வாடிப் போயிடாங்க…எப்பவும் உங்களையே நினைச்சிட்டே இருக்காங்க” என்றான் ஜெயிலுக்குப் பார்க்க வரும் போது சொல்வதுபோல.
“போதும்ப்பா… பொய் சொன்னதெல்லாம் போதும்…இப்போநான் எல்லாரையும் புரிஞ்சிட்டேன் உடம்பு மோசமாயிருக்கிறேயேப்பா ஆதி…பட்டினி கிடந்தியாப்பா பலநாளூ?”
‘இல்லியே பெரியம்மா வடை பாயாசத்தோட சாப்பாடு போடுவாங்களே?” என்று அப்பாவுக்குப்பிள்ளை தப்பாமல் வெகுளியாய் புன்னகைத்தபடி சொன்னான்.
பரசு கலங்கிய கண்களுடன் அந்த ஆஸ்பித்திரியின் டாக்டரிடம் போய் விவரம் கேட்டான். அவர் நோய் மிகவும் முற்றிப்போனபிறகு வந்து சேர்ந்ததால் ஆதிக்கு உயிர் பிழைக்கும் சாத்தியக்கூறுகள் குறைவென தெரிவித்தார் .பரசு தான் நிலை குலைந்து கீழே விழாமலிருக்கவேண்டுமே என நினைத்தபடி மறுபடி பஸ் ஏறி கிராமத்து தோப்பிற்குள் சென்று ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டான். மனசில் பாறாங்கல்லை கட்டிவைத்தமாதிரி நெஞ்சு கனத்தது.
‘ஆதி உடம்பு தேறிபிழைச்சி வரணும்’ என்று வாய் முணுமுணுத்தது.
வழக்கம் போல மரத்தின் மேலே குருவிகள் ‘கீச்கிச்ச் என்று கத்தின
நீண்ட நேரம் அப்படியே அமர்ந்தவனை”பரசு!” என்ற இனியமென்மையான குரல் நிமிர வைத்தது .
பத்மா!
சுப்ரமணிசாரின் மகள்! கிராமத்துப்பள்ளியில் பத்தாவது வரை ஒன்றாய் படித்தவள்.
“நலமா பத்மா?”
“பரசு, அப்பா சொன்னாரு நீ ஜெயிலிருந்து விடுதலை ஆகி இன்னிக்கு வந்திட்டேன்னு…. எப்படியும் இங்கே ஆலமரத்தடிக்கு நீ வருவேன்னு எனக்குத் தெரியும்..நானும் இங்க தினமும் வந்து ஆலமரத்துக் குருவிகள்கிட்ட உன்னைப் பத்தி விசாரிச்சிட்டுதான் இருப்பேன் .”‘பத்மா நிறுத்திவிட்டு அவனையே ஆழமாய்ப் பார்த்தாள் .
பரசு விழித்தான்.
பத்மா தொடர்ந்தாள். “நினைவிருக்கா பரசு? ஊர்க்குழாயில தண்ணீர் எடுக்க சண்டைவந்தபோது பல எதிர்ப்புகளுக்கு இடையில நீதானே டோக்கன் முறை வச்சி வரிசைல நின்னு எடுத்திட்டுப் போகணும்னு கட்டுப்பாடு கொண்டுவந்தே? உன் சித்தப்பாவுடன் சேர்ந்து கிராம முன்னேற்றத்துக்கு ஏதும் செய்யணும்னு நீ சொல்லிட்டே இருப்பேன்னு அப்பா அடிக்கடி பெருமையா சொல்வார்..அதனாலேயே உன்னை என்மனசில ஏத்துகிட்டேன். ”
“பத்மா! என்ன சொல்றே/ உன் மனசில நான் இருக்கேனா, நிஜமாவா?”
“ஆமாம் பரசு! பொண்ணுங்க சட்டுனு மனசில இருக்கிறதை வெளியே சொல்லமாட்டோம் ஆனா, கண்ணு காமிச்சிக் கொடுத்திடும்….’ விழிகளின் ஒளியில் கண்டு கொள் காதலை , வார்த்தைகள் அர்த்தமற்றவை…’ நான் எழுதின கவிதைதான், நல்லாருக்கா ?”
“அழகு, கவிதையும், அதை எழுதுன நீயும்தான்! சந்தோஷமாயிருக்கு பத்மா! இந்த ஆலமரத்துல அம்பது நூறு குருவிகள் கீச் கீச் னு கத்தறப்போ ஒரு குருவி மட்டும் எனக்காக கத்துதுன்னு நினைச்சிக்குவேன். இப்போ அது நிஜமாயிடிச்சி. ! ஆனா ,பத்மா, உலகத்தின் பார்வையில் நான் சிறுத்துப் போயிருக்கேனே?”
“ஆலம்விதை சின்னதுதான் அதுதான் பெரியவிருட்சத்துக்கே ஆதாரம் பரசு? “
” இனி என்னால் என்ன சாதிக்கமுடியும் பத்மா? “
‘வாழ்க்கையே ஒரு சாதனைதான்.. மெல்லமெல்ல ஆமை முன்னேறுகிற சாதனை ! உனக்கு நான் துணையா வரேன் பரசு”
” என் எதிர்காலத்துக்காக இப்போ நான் உன்கூட சேர்ந்துகொள்வது சுயநலமில்லையா? “
‘சுயநலமாவது தியாகமாவது ? அப்படி எதுவுமே இல்லை.நிறைந்தமனதுடன் செய்யப்படும் காரியம் எதுவும் நம்மீது ஒட்டிகொள்வதில்லைன்னு உன் சித்தப்பா தான் அடிக்கடி சொல்வார். ‘
“ஆனாலும் எனக்கு பயமாயிருக்கு பத்மா. என்லட்சியப்பயணம் வெற்றியடையும் என்கிற நம்பிக்கையே போய்விட்டது. பெத்த தாயே என்னை இன்னமும் கெட்டவனாய்ப் பாக்கறாங்க..இங்கே யாரையும் திருத்தவே முடியாதுபோலிருக்கு?”
“பரசு! கடவுளின் படைப்பில் கோளாறே கிடையாது .பிழை இருப்பதாகத்தோன்றுவதெல்லாம் நமது எண்ணங்களின் நிழலாட்டமே இல்லாது வேறில்லை . நமது எண்ணப்படி இந்த உலகத்தை திருத்தி மாற்றியமைக்க முயல்வது பேதமை. உலகம் எப்படி இருக்கிறதோ அப்படி ஏற்று, நமது இயக்கம் அதில் பொருந்துகிறமாதிரி செய்துகொள்வது அறிவு. ‘மனம் வேண்டியபடி செல்லும் உடலும் நசையறுமனமும் வேண்டு’மென பாரதி வரமாய்கேட்டது கவலை அச்சம் இவற்றை அடிமை கொள்ளும் பொருட்டாகத்தானே? காயிலே புளிப்பதெல்லாம் கனியிலே இனிக்காமல் போகாது..எல்லாத்துக்கும் காத்திருக்கணும்..சரி,நேரமாகிறது, எழுந்திரு பரசு!”
பத்மா நின்றபடிக்குனிந்து அவனை நோக்கி தனது வலது கரத்தை நீட்டினாள்.
பேச்சைவிட மௌனம் வலியது; ஒருநூறுவார்த்தைகளை பார்வை சொல்லிவிடும், ஓராயிரம் விஷயங்களை சின்ன ஸ்பரிசம் தெரிவித்துவிடும்.
பரசு மௌனமாய் பத்மாவின் கரத்தை தன்கரத்தினால் அழுந்தப் பற்றியபடி எழுந்துகொண்டான்.
அடைபட்டிருந்த காற்று மனக்கூண்டிலிருந்து விடுதலையாகி சுவாசமாய் வெளியே வர ஆரம்பித்தது.
காணவில்லை!
தேடி மிகச் சோர்ந்துவிட்டேன்
இனி தெய்வம்தான் எனக்குத்துணை.
நாடி எனை எதுவென்று கேட்போர்க்கு
நான் சொல்வேன் தொலைத்தகதை.
ஐந்து விரல் பதிந்த
அடையாளச்சின்னமாய்
அதற்குக்கன்னம்.
முகமும்அதுவே.
அதைத்தாங்கும்
கைபோல சின்னப்பிடி.
அதன் பெயரின் முதல்பாதியில்
அமைதிக்குப்பெயர்போன
அன்னம் இருக்கிறது.
என் புகுந்தவீட்டு சொத்து.
தொலைத்துவிட்டதால்
என் மாமியாரிடமிருந்து
கிடைக்கலாம் மொத்து!
கல்வைத்த தங்க அட்டிகையாயிருந்தால்
கள்வர் கொண்டுபோயிருக்கமுடியும்
அள்ளி அமுது படைக்கும்
ஆகிவந்த அன்னக்கரண்டியை
தள்ளிக் கொண்டு
போனது யாராயிருக்கும்?
தோழியைப்பிரிந்த ஏக்கத்தில்
குழைந்து கூழாகிவிட்டது சாதம்.
கடத்திச் சென்றவர்களைக்
கண்டுபிடித்து அன்னக்
கரண்டியை மீட்டுத்தருபவர்கள்,
கைத்தொலைபேசியில் எனக்கு
தகவல் தருக!
தக்க பரிசு உண்டு!
நாய் ஜாக்கிரதை!
கடைக்குள் நுழையும்போதே ,”நான் சொன்ன வாசகத்தை எழுதிமுடிச்ச அந்தப்பலகை ரெடியாகலியா இன்னும்?” என்று வள் என்று சீறி விழுந்தபடியே வந்தாள் அந்தப்பெண்மணி.
‘நல்வரவு ‘என்று கொட்டையாய் பெயர்ப்பலகையில் எழுதிமுடித்த சிகாமணி அந்தப்பெண்மணியைக்கண்டதும் பெயிண்டையும் ப்ரஷையும் அப்படியே கீழே வைத்துவிட்டு கடையின் உள்பக்கமாய் ஓடினான்.
“முதலாளீ” என்றான் மூச்சிறைக்க
“என்னடா சிகா?”
மரப்பலகை ஒன்றினைத்தரம் பார்த்துக்கொண்டிருந்த குமரவேல் இப்படிக்கேட்டதும் சிகாமணி,”முதலாளி! அந்தம்மா கடைசில நம்ம கடைக்கே வந்திட்டாங்க இப்ப” என்றான் பதட்டமான குரலில்.
முதலாளி இல்லாத நேரங்களில் எல்லாம் கடையின் டெலிபோன் ரிசிவரை சிகாமணிதான் எடுப்பது வழக்கம், அப்படி இரண்டுமூன்றுதடவைகளில் எடுக்க நேர்ந்தபோது இந்தப்பெண்மணி போனில்
” இன்னுமா நான் சொன்ன போர்டை எழுதி முடிக்கல வாட் நான்சென்ஸ் ஈஸ் திஸ்?” என்றும்,” ரோஸ்வுட்பலகையின் நாலுமூலையிலும் பித்தளைல விளிம்புகட்டி நடுல அழகா எடுப்பா எழுதச்சொல்லி ஒருவாரமாச்சு இன்னும் போர்டை ரெடி பண்ணாம இருக்கீங்கஒரு வேலைகொடுத்தா பொறுப்பா செய்யறதில்லையா? இதே அமெரிக்காவா இருந்தா இதுக்கெல்லாம் நாங்க கோர்ட்ல கேஸ்போடலாம் தெரியுமா? இந்தியா உருப்படாம போகக் காரணமே உங்களமாதிரி சிலபேராலதான்”என்றும் கூச்சல்போட்டிருக்கிறாள்.
அதனால் அவளை நேரில்கண்டதும் சிகாமணி திகைத்துப்போனான். ஐம்பதுவயதிருக்கும் வசதியான வீட்டுப்பெண்மணி என்பதை தோற்றமே காட்டியது. பாப்கட் செய்த தலை. பாண்ட் ஷர்ட் அணிந்து வந்தவள் கூலிங்க்ளாசைக் கழட்டிவிட்டு உஷ்ணப்பார்வையில் கடையை அளந்தாள்.
“வாங்கம்மா வாங்க” முதலாளி பொறுமையாய் வரவேற்கவும் சிகா அதை வியப்பாய் பார்த்தான்.
“பத்துநாளாச்சு நான் ஒரு போர்டு எழுதச்சொல்லி, இன்னும் முடிக்கல நீங்க? கடைக்குபோன்செய்தா நீஙக் மரப்பலகை வாஙக் வெளில்போயிருக்கிறதா இந்தப்பையன் சொல்றான்…ஏய் நீதானேப்பா அது? அதான் நேர்ல நறுக்குனு நாலுவார்த்தை கேக்க வந்தேன் நாளைக்கே ரெடியாகி வீட்டுக்குக்கொண்டுவரணும் சொல்லிட்டேன் ஆமா..”
“சரிங்கமா அந்த குறிப்பிட்ட பலகை கிடைக்க தாமதமாச்சு நாலுமூலையிலும் பளபளன்னு பித்தளைவிளிம்பு பொருத்திட்டோம் கடைசி இழைப்புநடக்குது முடிச்சிட்டா தம்பி வாசகத்தை அரைமணில எழுதிடுவான் சாய்ந்திரமே அவன் கைல வீட்டுக்கொடுத்தனுப்பறேன்,மா..”
”என்னத்த கொடுத்தனுப்பப்போறீங்களோ உங்களையெல்லாம் நம்பிப் பிரயோசனமே இல்லை ….எல்லாம் என் தலையெழுத்து”
சீறிக்கொண்டே போனாள்.
மாலை சொன்னபடிபலகையை இழைத்து முடித்து சிகாமணியிடம் பலகையில் எழுத வேண்டிய வாசகங்களை ஒருதாளில் எழுதிக்கொடுத்தார் குமரவேல்.
சிரத்தையாய் வெள்ளை பெயிண்டில் ப்ரஷைதோய்த்து எழுதிமுடித்தவன் காய்ந்ததும் கையோடு முதலாளி கொடுத்த விலாசத்திற்கு எடுத்துக்கொண்டுபோனான்.
வாசலில் அல்சேஷன் நாய் ஒன்று கன்றுகுட்டி சைசில் இவனைப்பார்த்து வாலைஆட்டிக்கொண்டுவந்தது.சிகா சற்றுமிரண்டு நிற்கையில் ஒருசுற்றிசுற்றி வந்து மோப்பமிட்டுவிட்டு ஒதுங்கிப்போய்விட்டது. சின்ன லொள் கூட இல்லை!
உள்ளே போனில் மும்முரமாய் பேசிக்கொண்ட்ருந்த அந்தபெண்மணி சிகாவைகக்ண்டதும்,
” வந்து தொலைஞ்சியா?ரெடியாச்சா ஒருவழியா? இந்த சின்ன வேலைக்கு ஒருவாரத்துக்கு மேல கேட்குதாக்கும்?யூஸ்லெஸ்பீபிள்! சரிசரி அதை காம்பவுண்ட்கேட்ல கம்பிபோட்டு இறுக்கமாய்க் கட்டி்ட்டுப்போய்ச்சேரு… என்ன தயங்கி நிக்கற?ம்? கம்பி கதவுலயே இருக்குதுபொ,,போ..” என்று சீறி விழுந்தாள்.
சிகா அந்தப்பலகையை கவனமாய் நுழைவுவாசலில் இருந்த க்ரில் கேட்டில் இரும்புக்கம்பியை வளைத்து முறுக்கி இறுக்கக் கட்டினான்.
கதவை மூடிவிட்டு ’தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று பெருமூச்சுவிட்டபடிவெளியே போனவன் சட்டென திரும்பிப்பார்த்தான்.
”நாய் ஜாக்கிரதை” என்ற வாசகம் எழுதிய பலகை வீட்டின் உட்புறம் திரும்பி இருந்தது.