புகைப்படம் எடுப்பது என் வழக்கம்

              
அழகியசிங்கர்




ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின்போது புகைப்படம் எடுப்பது என் வழக்கம்.  என்னுடைய புத்தக ஸ்டாலுக்கு வரும் நண்பர்களை நான் புகைப்படம் எடுத்து அதை ஆல்பமாக தயாரிப்பேன்.  சிலசமயம் அபூர்வமாக சில படைப்பாளிகள் கலந்து கொள்வார்கள். 2008ஆம் ஆண்டு நடந்த புத்தகக் காட்சியின்போது இன்குலாப், ஈரோடு தமிழன்பன் என் ஸ்டாலுக்கு வந்திருந்தார்கள்.  என்னால் நம்ப முடியவில்லை.  பொதுவாக புத்தகக் கண்காட்சிதான் பலரை சந்திக்க வழி வகுக்கும்.  
அப்போது நான் புதியதாகக் கொண்டு வந்த மழைக் குடை நாட்கள் என்ற கோ கண்ணன் கவிதைப் புத்தகத்தை காட்டியபடி இன்குலாப் புகைப்படத்திற்குக் காட்சி தருகிறார்.  பக்கத்தில் ஈரோடு தமிழன்பன், பார்வையற்ற கோ கண்ணன் என்கிற படைப்பாளி.  இதை அபூர்வமான நிகழ்ச்சியாகக் கருதுகிறேன்.  

இலக்கியக் கூட்டங்களை சீக்கிரமாக முடியுங்கள்

அழகியசிங்கர்

பொதுவாக இலக்கியக் கூட்டங்கள் சீக்கிரமாக ஆரம்பிப்பதில்லை.  சரியாக மாலை  5 மணிக்கு ஆரம்பிப்பதாக சிற்பி அவர்கள் படைத்த கருணைக்கடல் இராமாநுசர் காவிய நூல் அறிமுக விழா  இருந்தது.  ஆனால்  மாலை  6 மணிக்குத்தான் ஆரம்பித்தது.  நல்லகாலம் நான் 6மணிக்குத்தான் சென்றேன்.  கொஞ்சம் தூங்கி விட்டேன்.

அங்கு பேசியவர்கள் எல்லோருக்கும் மரியாதை செலுத்தினார்கள்.  இதுவே அரைமணிநேரம் மேல் ஓடியிருக்கும்.  அதற்கு முன்னால் பேசுபவர்கள் பற்றிய அறிமுகமே 20 நிமிடங்களுக்கு மேல் போயிருக்கும். அப்புறம் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்தார்கள்.

முதலில் முனைவர் சிலம்பொலி செல்லப்பன் பேச ஆரம்பித்தார்.  கேட்டுக்கொண்டே இருக்கும்போது எப்போது பேச்சை நிறுத்துவார் என்று தோன்றியது. üமருத்துவர் சொல்லியிருக்கிறார்.  கூட்டத்தில் அதிக நேரம் பேசக்கூடாது,ý என்றே அரைமணி நேரம் மேல் பேசி விட்டார்.  அதேபோல் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களும் அரைமணிநேரத்திற்கு மேல் எடுத்துக்கொண்டு விட்டார்.

அவர் பேசியவுடன் கூட்டத்திலிருந்து பலர் வெளிநடப்பு செய்து விட்டார்கள்.  மருத்துவர் சுதா சேஷய்யன் அவர்கள் பேச ஆரம்பித்தார்.  மணி 8.30 ஐத் தொட்டுவிட்டது.  இனிமேல் அங்கு இருக்க முடியாது என்று தோன்றியது.  உடனே எழுந்து கிளம்பி விட்டேன்.

இதுமாதிரியான இலக்கியக் கூட்டங்களில் ஒரே ஒருவரை மட்டும்பேசக் கூப்பிட்டு, கூட்டத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்திருக்க வேண்டும்.  5 மணிக்கு ஆரம்பித்து 7 அல்லது 7.30 மணிக்குள் கூட்டம் முடித்திருக்க வேண்டும்.

நான் எழுந்து வந்தபிறகு அக் கூட்டம் எப்போது மாலை முடிந்திருக்கும் என்பதை யோசித்துப் பார்த்தேன்.  நிச்சயமாக இரவு 10 மணிக்கு முடிந்திருக்கும்.

மொட்டைக் கடிதாசும் பின் விளைவும்

 

நான் பந்தநல்லூர் தேசிய வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, என்னையும் சேர்த்து அஙகு பணிபுரிந்த நான்கு ஊழியர்களுக்கு மொட்டைக் கடிதாசு எழுதப்பட்டு வட்டார அலுவலகத்திற்கும், தலைமை அலுவலகத்திறகும் அனுப்பி இருந்தார்கள்.  மொட்டையின் விளைவு என்னைத் தூக்கி கள்ளிமேடு என்ற கிளைக்கு மாற்றினார்கள். அதேபோல் இன்னொரு அலுவலரை கள்ளிமேடு பக்கத்தில் உள்ள கிராமக் கிளைக்கு மாற்றினார்கள்.   உண்மையில்  குமாஸ்தாக்களை ஒன்றும் செயயவில்லை. ஏன்?
அந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் இதுமாதிரியான மொட்டைகடிதாசைத் தயாரித்திருக்க மாட்டார்கள்.  காரணம்.  அந்த மொட்டைக் கடிதம் டைப் அடித்திருநதது. இறுதியில் பந்தநல்லூர் வாசிகள் என்று கையெழுத்து எதுவும் போடாமல் அனுப்பியிருந்தார்கள்.  கிராமத்தில் யார் இதுமாதிரி  செய்வார்கள் என்று யோசிப்பேன். அலுவலகத்திலேயே பிடிக்காதவர்கள் செய்திருக்க  வேண்டுமென்று தோன்றியது.  கள்ளிமேட்டிற்குப் போகும்படி வற்புறுத்தினால் வேலையை விட வேண்டியதுதான் என்று நினைத்தேன்.  ஆனால் அதுமாதிரி ஒன்றும் ஆகவில்லை. என்னையும் இன்னொருவரையும் மிரட்டி ஆர்டரை ரத்து செய்தார்கள்.
அந்தத் தருணத்தில் நான் எழுதிய ஒரு கவிதையை இங்கு அளிக்க விரும்புகிறேன்.  ஜனவரி 2008ல் வெளிவந்த விருட்சத்தில் இந்தக் கவதையைப் பிரசுரம் செய்தேன்.
இதை அலுவலத்தில் உள்ள மேலதிகாரிகள் படித்துவிட்டு என் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று துளிக்கூட பயமில்லை எனக்கு. காரணம்.  விருட்சம் என்ற பத்திரிகையை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.  மேலதிகாரியைத் திட்டி பத்திரிகையை அனுப்பினாலும் அவர் படிக்கக் கூட மாட்டார்.  தொடக்கூட மாட்டார்.  என் கிளை அலுவலகத்திலேயே தமிழில்தான் பேசுவார்கள்.  தமிழ் புத்தகம், தமிழ் பத்திரிகை படிக்கக்கூட மாட்டார்கள். என் தொகுப்பில் சேர்க்க மறந்த அந்தக் கவிதையை இங்கு தர விரும்புகிறேன்.

மொட்டை லிகிதங்கள்

பத்மநாபன் கையில்
மொட்டைக் கடுதாசின் நகல்
அலுவலகத்தில்
கஸ்டமர் முன்னால் தூங்கிக்கொண்டிருக்கிறாரென்று
பத்மநாபன் திகைத்து விட்டார்
அவருக்குத் தூக்கம் சரியாக வந்து
ஆயிற்று பல மாதங்கள்
ஏன் இப்படி ஒரு மொட்டை..?

ஆடிமுன் நின்று தன்  முகத்தைப் பார்த்தார்
முகம் களையிழந்து போயிற்றா?
ஒரு சமயம் தூங்கிக்கொண்டிருக்கும்
முகமாய் மாறிவிட்டதா?
.

கேசவனுக்கு வேறுவிதமாய் மொட்டை
பெண் கஸ்டமரை மட்டும் தனியாகக்
கவனிக்கிறானென்று –
இம்சிக்கிறானா கவனிக்கிறானா
புடவைக் கட்டிக்கொண்டிருந்தால் போதும்
சேகரனுக்கு என்று இளித்தக்கொண்டே
சொன்னான் தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி மீதும் சந்தேகம் பத்மநாபனுக்கு
மொட்டை உருவாகுமிடம்
அவனிடம்தான் என்று. அலுவலகத்தைப் பற்றி
அவதூறாக மேலிடத்திற்குத் தவறாமல்
தகவல் தருவதைக் முக்கிய கொள்கையாகக் கொண்டவன்

இன்னொரு மொட்டையும் துளிர்த்தது
கோவிந்தன் மீது
லோன் பார்ட்டியை லோ லோவென்று
அலைய விடுவானென்று
மொட்டையைப் படித்துத் திருதிருவென்று விழித்தான்.
..

சந்தேகம் வராத மாதிரி தட்சிணாமூர்த்தியின் மீதும்
ஒரு மொட்டை. அவனே எழுதிக்கொண்டதா?
கஸ்டமர் வந்தால் லொள்லொள் என்று எரிந்து விழுவானென்று
üநான் அப்படியில்லை..அப்படியில்லைý என்று புலம்ப
ஆரம்பித்தான் மொட்டையைப் பார்த்து

பத்மநாபன் பின்னால் அமர்ந்திருக்கும்
குண்டு மகாலிங்கம் மீதுதான் எல்லோருக்கும்
எரிச்சல்.  அலுவலகம் வந்தால் விவஸ்தை இல்லாமல்
ஆர்ப்பரிப்பான். சிலசமயம் அசிங்கமாய்
உடலசைத்துப் பாட்டு பாடுவான்
கஸ்டமர் முன்னால் குஸ்திக்கு நிற்பான் என்றெல்லாம்
மொட்டையின் விபரீத வரி வடிவங்கள்
‘ப’  கிராமத்து வாசிகள் என்று
கையெழுத்து இல்லாமல், தேதி இல்லாமல்,
டைப் அடித்த மொட்டை லிகிதங்கள் துளிர்க்கும்.
யாரோ வேண்டாதவர்கள் செய்த சதி
என்று கத்தினான் மகாலிங்கம்

மாற்றினார்கள் குண்டு மகாலிங்கத்தையும், பத்மநாபனையும்
தூர இடங்களுக்கு
ஆபிஸர்கள் என்பதால் –
நினைத்துப் பார்க்க முடியாத தூரக் கிளைகள் –
இருவரும் ஓடினார்கள் சரணம் சரணமென்று மேலிடத்திற்கு

மேலிடம் முறுக்கிக்கொண்டது.

நேற்று கலந்துகொண்ட இரண்டு நிறைவான கூட்டங்கள்…

பொதுவாக நான் இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்பவன்.   பேசுபவனாக இல்லாமல் பார்வையாளனாக இருப்பதைப் பெரிதும் விரும்புவேன்.  பார்வையாளனாக இருக்கும்போது கூட்டம் நடத்துபவர்களை நான் கவனித்துக்கொண்டிருப்பேன்.  ஒரு கூட்டம் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதையும், யார்யார் வருகிறார்கள் என்றெல்லாம் பார்ப்பேன்.   மனம் நிறைவு செய்வதுபோல் ஒரு கூட்டம் இருந்தால் அதைப் பற்றி எழுத முயற்சி  செய்வேன்.  அப்படி உடனே எழுதாவிட்டால் கூட்டம் என் நினைவை விட்டுப் போய்விடும்.  பொதுவாக நான் ஒரு காமெரா வைத்துக்கொண்டு அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை புகைப்படம் எடுப்பேன்.  ஆனால் இன்று அதுமாதிரி எதுவும் செய்யவில்லை.  கூட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளை ஆடியோவில் பதிவு செய்தேன்.
ஓய்புப்பெற்ற நீதியரசர் சந்துரு குடும்பத்தினர் ஏற்பாடு செய்த கே எஸ் சுப்பிரமணியன் அவர்களின் எண்பதாவது பிறந்த தின விழா நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தது.  எனக்கு எப்போதும் கே எஸ் அவர்களைப் பார்க்கும்போது உற்சாகமான இளைஞர் ஒருவரைப் பார்ப்பதுபோல் உணர்வு ஏற்படும்.  இன்றும் அப்படிப்பட்ட உணர்வு ஏற்பட்டது.  பெரும்பாலும் கே.எஸ் எல்லா  இலக்கியக் கூட்டங்களிலும் கலந்து கொள்பவர்.  நேற்று – 12.11.2016 – காலை 9.30 மணிக்கே ராக சுதா ஹாலில் அவரைப் பார்த்து வாழ்த்துத் தெரிவித்தேன்.
கே எஸ் அவர்களின் நண்பர்களின் வட்டம் பெரிது.  ஹால் முழுவதும் நண்பர்கள் வட்டம் நிறைந்து விட்டது.  கே எஸ் அவர்களுடன் படித்தவர்கள், அவருடன் பணிபுரிந்தவர்கள், இலக்கிய நண்பர்கள் என்று பலர் கலந்து கொண்டார்கள்.  கே எஸ் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்வார்.  இக் கூட்டத்தைப் பர்த்து பதட்டப்படாமல் இருந்தார்.  மூத்த எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், வைதீஸ்வரனுடன் இன்னும் பல எழுத்தாளர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்தக் கூட்டத்தின் சிறப்பம்சம் ஓதுவார் கரூர் சுவாமிநாதன் அவர்கள் தேவாரத்தையும் திருவாசகத்தையும் ஓதியது.  முதலில் குத்துவிளக்கு ஏற்றி கூட்டம் ஆரம்பமானது.  பின் கே எஸ் அவர்கள் கேக் வெட்ட கூட்டம் சிறப்பாக தொடங்கியது.
கே எஸ் அவர்களை அவருடைய நண்பர்கள் வாழ்த்திக்கொண்டிருந்தார்கள்.  கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தேவாரத்தையும் திருவாசகத்தையும் சிறப்பாக  ஓதுவார் கரூர் சுவாமிநாதன் அவர்கள் ஓதினார்.  நான் அமர்ந்த இடத்திலேயே என்னுடைய சோனி பதிவு செய்யும் இயந்திரத்தின் மூலம் பதிவு செய்தேன்.  இதோ என் வீட்டில் கணினியில் நான் திரும்பவும் கேட்கும்போது பிரமாதமான முறையில் பதிவாகியிருந்தது.  கே எஸ் பிறந்த தினக் கூட்டத்தில் இதை மறக்க முடியாத நிகழ்ச்சியாக நான் கருதுகிறேன்.
கே எஸ் அவர்கள் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் மொழிகள் நன்றாகத் தெரிந்தவர்.  ஜெயகாந்தனின் நாவல்களை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்துள்ளார்.  அதேபோல் ஆங்கிலத்திலிருந்தும் தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளார்.  இந்த 80வயதிலும் சுறுசுறுப்பான ஒருவரைப் பார்க்க முடியாது.  “இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று அவரைப் பார்த்துக் கேட்டேன்.  சங்கக் காலத்தில் எழுதப்பட்ட பெண்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதாகக் கூறினார். சமஸ்கிருதம், தமிழ்கவிதைகளைத் தொடர்புப் படுத்தி ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.
எப்போதும் அவர் கொண்டு வரும் புத்தகங்களின் ஒரு பிரதியை அவர் நண்பர்களுக்கு அனுப்பாமல் இருக்க மாட்டார்.  சமீபத்தில் எனக்கு அவர் அனுப்பிய ஒரு புத்தகத்தின் பெயர் கடவுளின் கையெழுத்து . மணி பௌமிக் எழுதிய புத்தகம்.  ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் கே எஸ்.  கூட்டம் முடிந்து வீடு வரும்போது ஒரு மனநிறைவைத் தந்த கூட்டமாக இது இருந்தது.  இன்னும் பல்லாண்டு கே எஸ் வாழ வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
                                                                                       *************
வாசக சாலை என்ற அமைப்பு ஒவ்வொரு மாதமும் கதையாடல் என்ற ஒன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.  இந்த மாதம் ஆறாவது கூட்டம் ஒன்றை பரிசல் புத்தக நிலையத்தில் நேற்று (12.11.2016) நடத்தி உள்ளார்கள்.
5.30 மணிக்கு ஆரம்பமாகும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.  உயிர்மை, ஓலச்சுவடி, காலச்சுவடு, நவீன விருட்சம், காக்கைச் சிறகினிலே, தடம் முதலிய பத்திரிகைகளில் வெளிவந்த கதைகளை எடுத்துக்கொண்டு அலசினார்கள்.
இக் கூட்டத்திற்கு பெரும்பாலும் இளைஞர்கள் பங்கேற்கிறார்கள்.  நானும் கிருபானந்தனமும்தான் முதியவர்கள் என்று நினைக்கிறேன்.  பேசியவர்கள் அனைவரும் மனந்திறந்து கதைகளைப் பற்றி விவாதம் செய்கிறார்கள்.  பேசுபவர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் கதைகளை வாசித்து விட்டு வருகிறார்கள்.
நவீன விருட்சம் 100வது இதழில் வெளிவந்த கதைகளை லதா அருணாச்சலம் என்பவர் விமர்சனம் செய்தார்.  அகலிகைப் படலம் என்ற பேயோன் கதையைக் குறித்து நீண்ட விவாதம் நடந்தது.  அக் கதைக்கு மாத்திரம் தனியாக ஒரு கதையாடல் கூட்டம் நடத்த வேண்டும் என்று லதா குறிப்பிட்டார்.  விருட்சம் இதழில் 13 கதைகள் வெளிவந்ததாகக் குறிப்பிட்டார்.  கதைகளை மட்டும்தான் பேச முடிகிறது.  இன்னும் இதில் வெளிவந்த கவிதைகளைக் குறித்தும் பேச வேண்டும் என்று குறிப்பிட்டார்.  அதேபோல் காலச்சுவடு, உயிர்மை, ஓலச்சுவடு, தடம், காக்கைச் சிறகினிலே பத்திரிகைகளில் வெளிவந்த கதைகயைப் பற்றியும் பேசினார்கள்.
பொதுவாக அங்கு குறிப்பிட்ட கதைகளைக் கேட்கும்போது நமக்கும் வாசிக்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்டுகிறது.  இது வாசகசாலையின் வெற்றி என்றே கருதுகிறேன்.  இக் கூட்ட்த்தில் நடக்கும் நிகழ்ச்சியை ஆடியோவில் பதிவு செய்து எல்லோரும் கேட்கும்படி செய்ய வேண்டும்.

மாம்பலம் டாக் என்ற பத்திரிகை

அழகியசிங்கர்


ஒவ்வொரு சனிக்கிழமையும் போஸ்டல் காலனி வீட்டில் மாம்பலம் டாக், மாம்பலம் டைம்ஸ், தி நகர் டாக் இருக்கும்.  இரும்பு கேட் பின்னால் விழுந்து கிடக்கும்.  அலட்சியமாக உள்ளே கொண்டு போய் வைத்துவிடுவேன்.  இது மாதிரியான பத்திரிகைகள் அவசியம் தேவை.  இதில் உள்ள விளம்பரங்கள் அந்த ஏரியாவில் உள்ளவர்களுக்குப் பயன் உள்ளவை.  
வீடு வாடகைக்கு வேண்டுமா?  அல்லது விற்பனைக்கு வேண்டுமா?  எல்லாவற்றுக்கும் விளம்பரம்.  மின்சாரம் சம்பந்தமான பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை என்று எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைத்துவிடும்.  சமையல் செய்ய ஆட்களா?  நர்ஸ் வேண்டுமா? கரையானை அகற்ற வேண்டுமா? எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு..
பின் சில தகவல்களும் இதன் மூலம் கிடைக்கும்.  அதாவது மாம்பலத்தில் எதாவது முக்கிய நிகழ்ச்சி நடந்தால் அதைப் பற்றி எழுதியிருப்பார்கள்.  விருட்சம் 100வது இதழ் விழா மாம்மலத்தில் உள்ள மகாதேவன் தெருவில் வீற்றிருக்கும் காமாட்சி மினி ஹாலில்தான் நடந்தது.  அது குறித்து மாம்பலம் டாக்கில் என் நண்பர் ஜி சீனிவாசன் அக்கறை எடுத்துக்கொண்டு எழுதி உள்ளார்.  
ஆனால் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்த சனிக்கிழமை மட்டும் போஸ்டல் காலனியில் இந்த மாம்பலம் டாக் கிடைக்கவில்லை.  நான் வசிக்கும் ராகவன் காலனிக்கு இதுமாதிரியான பேப்பர்கள் வருவதில்லை.  அதனால் பெரிய முயற்சி செய்து மாம்பலம் டாக்கை தருவித்துக்கொண்டேன்.  அது இன்றுதான் கிடைத்தது.  சீனிவாசன் என்னைப் பற்றி உயர்வாக எழுதி உள்ளார்.  அவருக்கு என் நன்றி. 

அம்ஷன்குமார் கூட்டமும் பத்மநாப ஐயரும்..

அழகியசிங்கர்
ஐந்தாம் தேதி அம்ஷன் குமார் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தார் பத்மநாப ஐயருக்கு. அக் கூட்டத்திற்கு 80 பேர்கள் வந்திருந்தார்கள். சென்னையில் 80 பேர்கள் ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு வருகிறார்கள் என்றால் அது சிறப்பான கூட்டம். கூட்டம் நன்றாக ஆரம்பம் ஆனது. பன்னீர்செல்வம் பேசும்போதும், யாழ்பாணம் தெட்சணாமூர்த்தி குறித்து ஆவணப்படம் போதும், கூட்டம் அசையாமல் இருந்தது.
திடிரென்று ஒரு தொற்று நோய் பரவிவிட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டத்தை விட்டுப் போக ஆரம்பித்தார்கள்.
கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பலர் பத்மநாப ஐயருக்குத் தெரிந்தவர்கள். அவரை நேரில் பார்த்தவர்கள். அவருடன் பேசியிருப்பவர்கள். உண்மையில் அவர்கள் முன்வந்து பத்மநாப ஐயரைப் பற்றிப் பேச வந்திருக்க வேண்டும். அம்ஷன்குமாருக்கு உறுதுணையாய் இருந்து நடத்தியிருக்க வேண்டும்.
அம்ஷன்குமார் கூட்டம் ஆரம்பிக்கும்போதே, ‘ஐயருக்குத் தெரிந்தவர்களும் அவரைப் பற்றி இக் கூட்டத்தில் பேச அழைக்கிறேன்’ என்று தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தெரிவித்திருந்தால், கூட்டத்தில் இன்னும் பத்மநாப ஐயரைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு அதிகமாகக் கிடைத்திருக்கும்.
உண்மையில் எனக்கு பத்மநாப ஐயரைப் பற்றி தெரியாது. அம்ஷன்குமார் மூலமாகத்தான் அவரை எனக்குத் தெரியும். நூலை ஆராதித்தல் பத்மநாப ஐயர் – 75 என்ற புத்தகத்தைப் பார்த்தபோது அசந்து விட்டேன். இது ஒரு பவள விழா மலர். அற்புதமான புகைப்படங்கள் கொண்ட புத்தகம் இது. கண்ணில் ஒற்றிக்கொள்வதுபோல் அச்சு நேர்த்தி. நான் பாதுகாக்க வேண்டிய புத்தகங்களில் இதையும் ஒன்றாகக் கருதுகிறேன். மேலும் இதை நான் ஒரு ஆவணப் புத்தகமாகக் கருதுகிறேன். ஆவணப் படம் போல் ஆவணப் புத்தகம். பத்மநாப ஐயரை வைத்து ஆவணப்படம் எடுத்தாலும், இப் புத்தகம் போல் பலர் பேசி சிறப்பாக இருந்திருக்கும். அம்ஷன்குமார் இதை செய்ய வேண்டுமென்று சொல்ல விரும்புகிறேன்.
இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன் பத்மநாப ஐயரைப் பற்றி அதிகமாக தெரிந்து கொண்டேன். அவர் ஈழ தமிழ் எழுத்தாளர்களுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் பாலமாக இருந்து செயல் பட்டு வந்திருக்கிறார். இன்னும் செயல்படுகிறார் என்று.
ஒருவர் எப்படி எழுத்தாளராக இல்லாமல் தமிழ் மீதும் எழுத்தாளர்கள் மீதும் ஆர்வம் உள்ளவராக செயல் பட்டிருக்கிறார் என்பதை நினைத்துதான் ஆச்சரியப்படுகிறேன்.
வெளி ரங்கராஜன், ரவிசுப்பிரமணியன், பாரவி, மூவரும் அவருடைய புத்தகத்தைப் படித்துவிட்டு கட்டுரை வாசித்தார்கள். பொதுவாக இதுமாதிரியான கூட்டத்தில் கட்டுரை வாசிப்பதைக் கேட்பதற்கு தனிப்பட்ட மனநிலை வேண்டும். கூட்டத்தில் இருப்பவர்களுக்கு கேட்கும் மனநிலை இல்லை.
நானும் இதில் கலந்துகொண்டேன். கையில் குறிப்புகளை வைத்துக்கொண்டு பேச நினைத்தேன். பேசவும் செய்தேன். நாலைந்து குறிப்புகளை வைத்துக்கொண்டு அசோகமித்திரன் சிறப்பாக கூட்டத்தில் பேசி விடுவார். அதேபோல் நினைத்துதான் பேசினேன்.
எனக்குப் பின்னால் இரா முருகன், பா ஜெயபிராகாசம், தமிழ்நதி, தாரா போன்றவர்கள் சிறப்பாகவே பேசினார்கள். பத்மநாபனுக்குத் தெரிந்த பலர் இருந்தார்கள். அவர்கள் பேசினால் இன்னும் சிறப்பாகவே இந்தக் கூட்டம் இருந்திருக்கும்.

ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு அதிகம் பேர் கலந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்…

 
 
பொதுவாக ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்ள அதிகப் பேர்கள் வர மாட்டார்கள்.  அதுவும் சென்னையில் ஒரு கூட்டம் நடந்தால் நிச்சயம் கூட்டத்திற்கு அழைத்துக்கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும்.  எந்த இடத்திலும் நெரிசல்.  போக்குவரத்தைத் தாண்டி வரவேண்டும்.  அதையும் மீறி வருபவர்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டுமென்றால் உங்கள் கூட்டம் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.  ஆனால் பொதுவாக கோயம்புத்தூர் போன்ற இடத்தில் எளிதில் ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு 50 பேர்கள் கூடி விடுவார்கள் என்று என் நண்பர் ஒருவர் கூறுவார். அது உண்மையா என்பது தெரியாது.
ஆனால் சென்னையில் 50 பேர்களைக் கண்டுபிடிப்பது ரொம்ப சிரமம்.  அப்படியே 50 பேர்கள் வந்தால் அவர்கள் கூட்டம் முடியும்வரை தங்க வைப்பது இன்னும் சிரமம்.  நான் கிட்டத்தட்ட 200 கூட்டங்கள் நடத்தி அனுபவப்பட்டவன்.  இலக்கியக் கூட்டங்கள் நடத்துபவர்களுக்கு நான் சில அறிவுரைகளைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.
1. ஒரு கூட்டத்தை நடத்த உங்கள் இலக்கு 50 பேர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  50 பேர்கள் வருவதற்கு நீங்கள் பேசுபவர்களை 45 பேர்களாகவும், பார்வையாளர்களை 5 பேர்களாகவும் மாற்ற வேண்டும்.  வேற வழி இல்லாமல் 45 பேர்கள் பேச வந்து விடுவார்கள்.  அவர்கள் ஒவ்வொரும் பேசி முடிக்கும் வரை எல்லோரும் இருப்பார்கள்.  உங்களுக்கு வெற்றி.
2. நல்ல உணவகத்தில் இருந்து டிபன் அல்லது சாப்பாடு  தருவிப்பதாக இருந்தால், அதற்காகவாவது போனல்போகிறதென்று கூட்டத்திற்கு வந்து விடுவார்கள்.  அப்படி 50 பேர்கள் வருகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் டிபன் அல்லது சாப்பாடு சாப்பிட்டு விட்டுப் போய்விடுவார்கள். ஜாக்கிரதை.  நீங்கள் அந்த டிபனை கூட்டம் முடிந்தபிறகு தருவதற்கு வைத்துக்கொள்ள வேண்டும்.
3.  ஆனால் பெரும்பாலோர் கூட்டத்திற்கு வருபவர்கள் கூட்டத்தில் பாதியிலேயே எழுந்து போய்விடுவார்கள்.  அவர்களை எழுந்து போகாமல் இருப்பதற்கு ஒரு வழி இருக்கிறது.  கூட்டம் நடக்கும் ஹால் கதவை சாரத்தி தாப்பாள் போட்டு விடுவது.  அப்படிச் செய்தால் கூட்டம் முடியும்வரை எல்லோரும் தப்பிக்க முடியாது.
4. பொதுவாக நீங்கள் புத்தக வெளியீட்டு விழாவிற்காக கூட்டம் நடத்துவதாக வைத்துக்கொள்ளுங்கள்.  ஒரே சமயத்தில் 10 பேர்களுக்கு மேல் படைப்பாளிகளின் புத்தகங்களைப் பற்றி பேசுவதாக வைத்துக் கொள்ளுங்கள்.  அந்தப் புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களைக் கூப்பிட்டு, ஒவ்வொரும் 5 பேர்களாவது கூப்பிட வேண்டும் என்று கட்டாயம் சொல்லி விடுங்கள்.  கூட்டம் ஹால் முழுவதும் நிரம்பி வழியும்.
5. கூட்டம் நடத்துபவர்கள் ஒருவரே இருந்தால் ஆபத்து.  ஒரு ஐந்தாறு பேர்கள் இருந்தால் நல்லது.  இந்த ஐந்தாறு பேர்களுக்கு நண்பர்கள், உறவினர்கள் என்று பலர் இருப்பார்கள்.  அவர்களை கட்டாயம் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுங்கள். அவர்கள் உங்கள் நட்பு வட்டத்தில் இருக்க வேண்டுமென்றால் கட்டாயம் வந்து விடுவார்கள். ஆனால் வேற வழி இல்லாமல் அவர்கள் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதையும் பார்க்கலாம்.
6. கூட்டத்தில் அமைதியாய் பேசுபவர்களைக் கவனிக்க, பேசுபவர்களும் கொஞ்சம் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.  பேசுபவர்கள் ஒரு கட்டுரை மாதிரி எழுதி வாசிக்கக் கூடாது.  அப்படியே வாசிப்பதாக இருந்தால், பார்வையாளர்களைப் பார்த்து பார்த்து மெதுவாக வாசிக்க வேண்டும்.  குறிப்பு எடுத்துக்கொண்டு பேசுவது அவசியம்.  பார்வையாளர்கள் நம்மை விட் அறிவாளிகள் என்று பேசுபவர்கள் நினைத்துக்கொள்ள வேண்டும்.  நாம் பேசுகிறோம் என்று மமதாய் இருக்கக் கூடாது.  பேசுவதில் கொஞ்சமாவது நகைச்சுவை உணர்வு வேண்டும்.  இலக்கியக் கூட்டம் என்பதால் தீவிரமாய் முகத்தை வைத்துக்கொள்ளக் கூடாது.
7.  கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதற்கு எல்லோரும் பேசுகிற எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றி பேச வேண்டும்.
இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.  உங்களுக்கு எதாவது ஐடியா இருந்தால் இத்துடன் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன்.

சில துளிகள்…….4

– முந்தாநாள் காலை 3 மணி இருக்கும்.  ஒரே சத்தம்.  கீழே இரும்பு கேட்டை யாரோ வேகமாக டமால் டமால் என்று அடித்தார்கள்.  பின் ஓடற சத்தம்.  வீட்டிற்குள் நுழைந்து மாடிப்படிக்கட்டுகளில் தடதடவென்று ஓடி வந்தார்கள்.  எனக்கு திகைப்பு.  கதவைத் திறக்க பயம்.  பின் கொஞ்ச நேரம் கழித்துக் கதவைத் திறந்தேன்.  மேல் வீட்டிலிருந்த குடி இருப்பவரும் திறந்துகொண்டு நின்றிருந்தார்.  “என்ன?” என்று கேட்டேன்.  üüதிருடன் ஒருவன் நம்ம வீட்டு வழியா தப்பிச்சுட்டுப் போறான்.  அவனைப் பிடிக்க போலீஸ்காரர்கள்தான் இப்படி சத்தம் போட்டு ஓடி வந்தார்கள்,ýý என்றார்.
திருடனா?  நம்ம தெருவிலா?  எங்கள் தெருவில் நுழை வாயிலில் மாடுகள் சுதந்திரமாய் நின்று கொண்டிருக்கும்.  பின் சைக்கிள்கள், டூவிலர்கள் என்று நிரம்பி வழிந்திருக்கும்.  பின் தெரு முழுவதும் நிறையா பேர்கள் இருப்பார்கள்.  சென்னை ஜனத்தொகையில் பாதிபேர்கள் இங்கேதான் இருப்பார்கள் என்று சொல்லிவிடலாம்.  ஆனால் எப்படி திருடன் வர முடியும்?  அதுவும் துணிச்சலாக.  நேற்று காலையில் என் வீட்டிற்கு எதிரில் உள்ள இரண்டு இளைஞர்களைப் பார்த்து சொன்னேன் :   “தெரியுமா?  திருடன் வந்திருந்தான்..3 மணிக்கு ஒரே ரகளை.”
“முன்பு போல் இல்லை.  கோடி வீட்டில கூட கேஸ் சிலிண்டர் திருட்டுப் போயிடுத்து,” என்றார்கள்.
“நம்பத் தெருவிலா? நம்ப முடியவில்லை.  சைக்கிள் எடுக்கலையா?” என்று கேட்டேன்.
“சைக்கிள் யாரும் எடுக்க மாட்டார்கள்.  சைக்கிளும் குறைச்சல்..ஆனா டூ வீலரை எடுப்பாங்க..அதுவும் ரெட் கலர் வண்டியை எடுப்பாங்க..” என்று சிரித்தபடியே சொன்னான் ஒருவன்.
நான் அவர்களைப் பார்த்தபடி என் வண்டியைப் பார்த்தேன்.  அது ரெட் கலர். அதனால்தான் அப்படி சொல்றான் என்று நினைத்து அவனைப் பார்த்துச்  சிரித்தேன்.
– 100வது இதழ் விருட்சத்தை எல்லோருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.  ஒரு பெரிய கவரில் விருட்சம் இதழை நுழைத்து பின் கயிறால் கட்டி ஸ்டாம்பு ஒட்டிப் போட வேண்டும்.  ஆறு ருபாய் ஸ்டாம்பு.  சரியா 3 மணிக்குத்தான் ஆரம்பிக்க வேண்டி உள்ளது.  நான் முடித்து தபால் ஆபீஸிற்குப் போவதற்குள் மணி 5 ஆகிவிடும்.  அந்தச் சமயத்தில் யாராவது போனில் வந்தால் என்னால் எடுத்துப் பேச முடியாது.  நேற்று ஒரு நண்பர் போன் செய்தார்.  நான் எடுக்கவில்லை.  என் நிலைமையை எப்படி அவருக்கு விவரிக்கிறது. அவர் கோபப்பட்டால் ஒன்றும் செய்வதற்கு இல்லை.
– கவுதமி கமல்ஹாசனை விட்டு பிரிந்து போனதைப் பற்றி சமீபத்தில் செய்தி வந்தது.  ரொம்ப வருடங்களுக்கு முன் என் உறவினர் பெண் விவாகரத்து செய்து கொண்டார்.  அப்படி விவாகரத்துச் செய்வதற்கு நான் உதவி செய்தேன்.  விவாகரத்துப் பெற்ற அன்று அந்தப் பெண் ஒரே ஒரு வார்த்தைச் சொன்னார் : “வருத்தமாக இருக்கிறது,” என்று.  இங்கு நான் சொல்ல வருவது பிரிவு என்பதைப் பற்றி.  கணவனோ மனைவியோ பிரிந்து செல்வதை எப்படி எடுத்துக்கொள்ள முடியும்.  தெரு முனையில் உள்ள 18 கே பஸ் பிடித்துப் போகிற மாதிரி சுலபமான விஷயமாக நான் கருதவில்லை.  என் நண்பர் ஸ்டெல்லா புரூஸ் மனைவி இறந்த துக்கத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை  செய்து கொண்டு விட்டார்.  அதற்குக் காரணம் அவர் வாழ்க்கையில் எந்தப் பிடிமானமும் இல்லாமல் போய்விட்டது என்ற தோன்றுகிறது.
– தடம் இதழில் வெளிவந்த எஸ் ராமகிருஷ்ணன் பேட்டி எனக்குப் பிடித்திருந்தது.  அவர் பதில் சொன்ன விதமும் படிப்பவரை யோசிக்க வைக்கும்.  ஒரு கேள்வி : ஒரு கலைஞன் அவனது சொந்த வாழ்பனுபவத்தை எழுதவதில் உங்களுக்கு உடன்பாடு இல்லையா? என்ற கேள்விக்கு ராமகிருஷ்ணன் சொன்ன பதில் யோசிக்க வைத்தது. அவர் இப்படி சொல்கிறார் : üüஎனது வாழ்க்கையை நான் ஏன் ஒரு கதைக்கான பொருளாக எடுத்துக்கொள்ள வேண்டும்?  எனது வாழ்க்கை எனக்குக் கிடைத்திருக்கும் ஒரு பரிசு, சுதந்திரம்.  அதைப் பிய்த்து பிய்த்து நான் ஏன் ஒரு கதையிடம் கொடுக்க வேண்டும்?ýý இந்தக் கருத்து எனக்கு சற்று நெருடலாகத் தோன்றியது.  அனுபவம் என்பது பொதுவான விஷயம்  அதில் என் அனுபவம் உங்கள் அனுபவம் என்பதெல்லாம் ஒன்றுதான்.  கதையாக எதை வேண்டுமானாலும் எழுதலாம்.  எழுதுகிற திறமையும், நம்பத்தன்மையும் வேண்டும்.எனக்குத் தெரிந்து ஒரு பிரபல எழுத்தாளர் கவிதை எழுதிக்கொண்டிருந்தார்.  திடீரென்று எழுதுவதை நிறுத்தி விட்டார்.  ஏன் என்று கேட்டதற்கு, ‘என்னைப் பற்றி நான் எழுதுகிறேன்.  எல்லோருக்கும் தெரிய வேண்டாமென்று பார்க்கிறேன்,’ என்றார்.  அவர் சொன்ன பதிலை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.  100 வருடங்கள் கழித்து ஒரு படைப்பைப் படிக்கும் வாசகனுக்கு, யாருடைய அனுபவம் அதில் வந்திருக்கிறது என்பது எப்படித் தெரியும்.
                                                                                                                  (இன்னும் வரும்)

தீபாவளியும் எங்கள் தெருவும்…

எங்கள் தெரு ஒரு சாதாரண தெரு.  முன்பு ரொம்பவும் மோசமாக இருந்தது.  இரண்டு பக்கமும் சாக்கடைகள் ஓடிக்கொண்டிருந்தன.  சாரி..தேங்கிக்கொண்டிருந்தன.  ஆனால் இப்போது இல்லை.
தெருவில் ஏகப்பட்ட குடியிருப்புகள்.  நிறையா சின்ன சின்ன பசங்கள். வாலிபர்களும் உண்டு.  தீபாவளி அன்று எங்கள் தெருவிற்கு தயவுசெய்து வந்து விடாதீர்கள்.  நாங்கள் வேறு வழி இல்லாமல் இருக்கிறோம்.  காலையில் ஆரம்பிக்கும் பட்டாசு சத்தம் காதைப் பிய்த்துவிடும்.  எல்லோரும் சாதாரண வெடிகளை வெடிப்பதில்லை.  அணுகுண்டைதான் ஒவ்வொருவரும் வெடிக்கிறார்கள்.  அல்லது சரம் வெடிகளை சரம் சரமாக வெடிக்கிறார்கள்.  எங்கள் தெருவில் என்ன விசேஷம் என்றால் தீபாவளி இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னே ஆரம்பித்துவிடும்.  பின் தீபாவளி முடிந்தபின்ன்னும் இன்னும் சில நாட்கள் ஓடும்.
சுற்றிச் சுற்றி இந்த பொடியன்கள் பாடாய் படுத்துவார்கள்.  நான் தீபாவளி அன்று காலையில் எழுந்து விட்டேன்.  என் வீட்டில் போன ஆண்டு நான் வாங்கிய கம்பி மத்தாப்பைத் தவிர  வேற எதுவும் இல்லை.  போன ஆண்டே நான் வாஙகியிருந்த கம்பி மத்தப்பை கொளுத்தவில்லை.  நேற்றோ தொடக் கூட இல்லை.  அதில் ஒரு பாக்கெட்டை தானம் செய்து விட்டேன்.
குளித்துவிட்டு சீக்கிரமாக ஒரு புத்தாடையைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தேன்.  என் மனைவி டிவி முன் அமர்ந்து விட்டாள்.  ம்ம்ம்  எப்படிப் பொழுதைப் போக்குவது.  யார் வீட்டிற்கும் போகப்பிடிக்கவில்லை.  எல்லோரும் போனில் விஜாரித்துக் கொண்டிருந்தோம். என் மனவி டிவியில் ஆழ்ந்து விட்டாள்.  பட்டிமன்றத்தை ரசித்துப் பார்க்கிறாள்.  நானும் பட்டிமன்றத்தைப் பார்த்தேன்.  எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.  அதில் தோன்றும் சில முகங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதை ரசிக்க என்று வருகிற கூட்டத்தைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. நானும் ஒரு பட்டிமன்றம் ஏற்பாடு செய்யலாமென்று நினைக்கிறேன்.  தலைப்பு : பட்டி மன்றம் அவசியமா அவசியமில்லையா?  அவசியமில்லை என்ற தலைப்பில் நான் பேச விரும்புகிறேன்.
ம்ம்ம்.. என்ன செய்யலாம். நான் தீபாவளி நாட்களை நினைத்து என் மனதில் ஓட்டிக்கொண்டிருந்தேன்.  கல்லுரி படிக்கும் காலங்களில் தீபாவளி அன்று முதல் காட்சி சினிமா பார்க்காமல் இருக்க மாட்டேன்.  பெரும்பாலும் சிவாஜி படம்தான் பார்ப்பேன்.  சொர்க்கம் என்ற படம்.  தீபாவளி அன்று வந்த அந்தச் சினிமாவை க்ரோம்பேட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் போய்ப் பார்த்தேன். அதே போல் இரு மலர்கள் என்ற படத்தை பிராட்வேயில் க்யூவில் நின்று மாலை காட்சியைப் பார்த்தேன்.
சின்ன வயதில் என்னடா இப்படி முட்டாள்தனமாய் இருந்துவிட்டோமென்று நினைத்துப் பார்க்கிறேன்.
ஆனால் இப்போது தமிழ் சினிமாவைக் கண்டாலே எனக்குப் பிடிக்கவில்லை.  எந்தப் படமும் பார்க்கும்படி இல்லை. ம்ம்..எப்படிப் பொழுதைக் கழிப்பது..
வெளியில் வெடி சப்தம் தாங்க முடியவில்லை.  பழைய நானோ கார் இருந்தால், வெடிசத்த அலறலில், கார் கத்தியிருக்கும்.  இது புது நானோ கத்தவில்லை.  ஆனால் மாடியில் உள்ள வராந்தாவில் வெடி சப்த அதிர்வில் மேலே உள்ள விளக்கை மூடியிருக்கும் மூடி கழன்று விழுந்து விட்டது.
காலையில் தமிழ் ஹிந்து வந்திருந்தது.  அதைப் படித்தவுடன், எழுத்தாளர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழ் ஹிந்துவே வாழ்க என்று சொல்ல வேண்டும் போலிருந்தது.  முகநூலில் கொஞ்சம் மேய்ந்தேன். ம்ம்ம்….என்ன செய்யலாம்.. அப்போதுதான் தோன்றியது புத்தகத்தைப் படிக்கலாமென்று.  என்னிடம் ஏராளமாய் புத்தகங்கள் இருக்கின்றன.  எல்லாப் புத்தகங்களையும் நான் மதிக்கிறேன்.  எந்தப் புத்தகத்தை எடுத்துப் படித்தாலும் அதன் மூலம் நான் ஏதோ கற்றுக் கொள்கிறேன் என்று நினைக்கிறேன்.  அல்லது என் தோழன் மாதிரி புத்தகம் என்னுடன் இருப்பதாக நினைத்துக் கொள்கிறேன்.
யாருடனும் நாம் பேச வேண்டாம்.  புத்தகத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருக்கலாம்.  அப்போதுதான் என் பக்கத்தில் உள்ள ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிக்கொண்டிருக்கிறேன்.  புத்தகத்தின் பெயர் : நூலை ஆராதித்தல் – பத்மநாப ஐயர் – 75.  அந்தப் புத்தகத்தைப் பார்த்து பிரமித்து விட்டேன்.  பத்மநாப ஐயர் நண்பர்கள் பலரும் அவரைப் பற்றி கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.  452 பக்கங்கள் கொண்ட இந்த நீண்ட புத்தகம் என் கண் முன்னால்.
179ஆம் பக்கத்தில் யமுனா ராஜேந்திரன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  புத்தகங்களின் புழுதி வாசம் என்ற தலைப்பில்.  அதில் இப்படி எழுதுகிறார் .
‘புத்தகங்களை விலக்கிவிட்டுச் சென்று ஐயரைப் பார்ப்பது என்பது கடினம். அவரது அறையில் புத்தகங்களினிடையில் அவரது சயனத்தை நாம் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.  படுக்கையறைக் கட்டில், சாப்பாட்டு மேசை, விரிந்த தரை, கூரையை முட்டும் அலமாரிகள், சமயலறைக்குப் போகும் இருபக்கமுமான வெளி என அறையின் ஓரத்தில், புத்தகங்கள் விரிந்திருக்கும் கட்டிலில் அமர்ந்துகொண்டு நம்முடன் பேசுவார்.  புத்தகங்களின் புழுதிதான் உலகிலேயே ஐயருக்குப் பிடித்தமான வாசமாக இருக்க வேண்டும்.’
இந்தப் புத்தகத்தை எடுத்துப் படிக்கும்போது எனக்கு தீபாவளி சத்தம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.  பத்மநாப ஐயரை நான் பார்த்ததில்லை.  இப் புத்தகத்தைப் படிக்கும்போது தெரிந்த நண்பரைப் போல் எனக்கு அறிமுகம் ஆகிறார் பத்மநாப ஐயர்.
இன்னொரு புத்தகம் ‘இது போதும்.’  பாலகுமாரன் என்ற எழுத்தாளர் எழுதியது.  அவருடைய ஆன்மிக அனுபவத்தை எழுதி உள்ளார்.
‘இந்த உணவு எதற்கு உண்கிறோம் என்று யோசிக்கத் துவங்கிவிட்டால் உண்பதின் மீது மிகத் தெளிவான கவனம் வந்து விடும்.  ஆஹா, உணவு எவ்வளவு நன்றாக இரக்கிறது என்று நொட்டை விட்டு சாப்பிட்டோம் என்றால் உணவினுடைய பலன் என்ன என்பது மறந்து போய் உண்பதே முக்கியமாகி விடும்.  ருசியே பிரதானமாகி விடும்.  ருசி அறுத்தல் என்பது ஆன்மீகத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.’
தெருவில் பட்டாசு சத்தம் காதைப் பிளக்கிறது.  என் கவனம் புத்தகங்கள் பக்கம் போய்க்கொண்டிருக்கிறது.

சில துளிகள்…….3

 
– இன்றைய தமிழ் ஹிந்துவில் நவீன விருட்சம் 100வது இதழ் குறித்து குறிப்பு வந்துள்ளது.   தமிழ் ஹிந்துவிற்கு நன்றி.
– நவீன விருட்சம் பத்திரிகையோடு  நான் இலக்கியக் கூட்டமும் நடத்தியிருக்கிறேன்.  ஆனால் எவ்வளவு கூட்டம் என்று எண்ணவில்லை. 200 இருக்கும்.  100 கார்டு வாங்கி எல்லோருக்கும் கூட்டம் பற்றி விபரம் சொல்வேன்.  திருவல்லிக்கேணி லேடீஸ் ஹாஸ்டல் மாடியில்தான் கூட்டம் நடக்கும்.  பார்த்தசாரதி கோயில் பக்கத்தில். வழக்கம்போல் கொஞ்சம் பேர்கள்தான் வருவார்கள்.  பெண்கள் வர மாட்டார்கள்.  வருபவர்கள் தலை வழுக்கையாக இருப்பார்கள்.
– கடந்த நாலைந்து மாதங்களாக அப்பா படுத்துப்படுக்கையாக இருக்கிறார்.  சில நாட்கள் நல்ல நினைவோடு இருக்கிறார்.  நான் அவரைப் பார்த்துக் கேட்டேன் : “நான் யார்?” என்று.  அவருக்கு இந்த 94 வயதிலும் கிண்டல் உண்டு.  “நீ என் அப்பா” என்றார் கையைக் காட்டியபடி.  அவர் சொன்னதைக் கேட்டு சிரிப்பாக இருந்தது.  என் மனûவிதான் குறிப்பிட்ட வேளைக்கு சாப்பாடு தருகிறார்.   நான்தான் ஊட்டி விடுவேன்.  ஆனால் அப்பா என்னைப் பார்த்துக்  கேட்பார்: க்ரோம்பேட்டையிலிருந்து உன் மனைவி எப்போது வருவாள் என்று.
– அப்பா கொஞ்சம் தெம்பாக இருந்தபோது வாசலைப் பார்த்தபடி இருந்த அறையிலிருந்து இன்னொரு அறைக்குப் போய் படுத்துக்கொள்ளப் போவார். நான் வாசலில் இருந்த அறையை இந்தியா என்பேன்.  தூங்கப் போகும் அறையை பாக்கிஸ்தான் என்பேன்.  அப்பாவைப் பார்த்து, “இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தான் போயிட்டியா,” என்று கிண்டல் அடிப்பேன்.
– நான் விருட்சம் நூறாவது இதழ் கொண்டு வந்து விட்டேன் என்றேன் அப்பாவிடம்.  அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
– நான் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும்போது விருட்சம் பத்திரிகையை ஒரு சில நண்பர்கள்தான் பார்ப்பார்கள்.  ஒன்றிரண்டு பேர்கள்தான் படிப்பார்கள்.. போனபோகிறது என்று ஒருவராவது அது குறித்துப் பேசுவார்.  2000 பேர்கள் உள்ள அலுவலகத்தில் இந்தக் கதி.
– மேற்கு மாம்பலத்தில் உள்ள ஆர்யாகவுடர் ரோடில் உள்ள  பிள்ளையார் கோயில் பக்கத்தில் உள்ள பத்திரிகைக் கடையில் விருட்சம் பத்திரிகையை விற்கக் கொடுத்தேன்.  5 பிரதிகள். அங்கே ஏகப்பட்ட சிறுபத்திரிகைகள் தொங்கிக் கொண்டிருக்கும்.  விருட்சம் பத்திரிகை விலை ரூ15.  அவருக்கு ரூ5 கொடுத்துவிடுவேன். பத்திரிகையும் புத்தகங்களையும் கொடுத்தேன்.  ஆனால் அவர் பத்திரிகை/புத்தகம் விற்றாலும் பணமே தர மாட்டார்.  பலமுறை அவரைப் பார்க்கப் போக வேண்டும்.  ஒருமுறை அவரைக் காணவே காணும்.  யாரோ இருந்தார்கள்.  போன் பண்ணினாலும் அவர் எடுக்க மாட்டார். அவரைப் பார்க்க முடியவில்லை.  எனக்கு கோபமாக இருந்தது.  அந்தக் கடை முன் சிறிது நேரம் நின்றேன்.  கண்ணை மூடிக்கொண்டேன்.  இனிமேல் இந்தக் கடைப்பக்கம் வரக்கூடாது என்று திரும்பி விட்டேன்.
– ஒரு சிறு பத்திரிகை வர வேண்டுமென்றால் அதற்கு முன்மாதிரியாக வேற ஒரு சிறு பத்திரிகை இருக்க வேண்டும்.  ஆரம்பத்தில் மலர்த்தும்பி என்ற பத்திரிகைதான் என்னைத் எழுதத் தூண்டியது.  அதை நடத்தியவர் என் பெரியப்பா பையன். அதன் பின் விருட்சம் என்ற பத்திரிகையை நடத்தத் தூண்டியது, ழ, கவனம் பத்திரிகைகளை நடத்திய நண்பர்களைப் பார்த்துதான்.
– விருட்சம் பத்திரிகையை வாங்கிப் படிக்கும் நண்பர்களிடம் சொல்வேன். இந்தப் பத்திரிகையில் எதாவது ஒரு கவிதை, ஒரு கதை, அல்லது கட்டுரை படிக்க சிறப்பாக இருக்கலாம்.  அதற்காக நீங்கள் பைசா கொடுத்து வாங்கியதாக நினைத்துக் கொள்ளுங்கள் என்று.
– ஒருமுறை என் நண்பர் ஒருவர் எனக்கு உதவி செய்வதாக சொன்னார்.  வேண்டாம் என்றேன்.  அவர் கேட்கவில்லை.  அவரிடம் ஒரு நோட்டைக் கொடுத்து விருட்சம் அனுப்ப வேண்டிய கவர்களைக் கொடுத்து முகவரிகளை எழுதச் சொன்னேன்.  ஒருவாரம் கழித்து நண்பரைப் பார்த்துக் கேட்டேன் : “என்ன ஆயிற்று?” அவர் சிரித்தபடியே  “இன்னும் பசங்க யாரும் கண்ணில் படவில்லை,” என்றார்.
– விருட்சம் 17வது இதழில் பாதகமான சில கடிதங்களைப் பிரசுரம் செய்து விட்டேன்.  அச்சடித்து வந்தும் விட்டது.  அதைத் தபாலிலும் அனுப்பி விட்டேன்.  ஆனால் நான் நிம்மதி இல்லாமல் இருந்தேன்.  அந்தக் கடிதங்கள் மூலம் சிலர் மனதைப் புண்படுத்தி விட்டதாகத்  தோன்றியது.  அந்தச் சமயத்தில் பிரமிள் நட்பினால் நான் ஷ்ரிடி சாய்பாபா பக்தனாக இருந்தேன். சாய்பாபாவை வேண்டிக்கொண்டேன்.  இந்த இக் கட்டிலிருந்து என்னைக் காப்பாற்று என்று.  இரண்டு நாட்கள் கழித்து ஒரு தபால்காரர் என் வீட்டிற்கு வந்தார். நான் அனுப்பிய எல்லா தபால்களும் எக்மோரில் உள்ள சார்டிங் அலுவலகத்தில் இருப்பதாகவும், உரிய தபால்தலைகள் இணைக்கவில்லை என்றும் கூறினார். எடுத்துப் போகச் சொன்னார்.  என்னால் நம்பவே முடியவில்லை. நான் சரியாகத்தான் ஸ்டாம்பு இணைத்திருந்தேன்.  ஆனால் அங்குப்போய் எல்லாவற்றையும் எடுத்து வந்து விட்டேன்.   பத்திரிகையில் இருந்த கடிதம் வந்தப் பக்கங்களைக் கிழித்து விட்டேன்.  திரும்பவும் எல்லோருக்கும் அனுப்பி விட்டேன்.   நான் அடைந்த நிம்மதிக்கு அளவே இல்லை.  சாய் மிராக்கல்.
– எனக்கு கவிதை ரொம்பவும் பிடிக்கும்.  ஆனால் அது ஆபத்தானது. எழுதுபவர்களுக்குத் தெரியாமல் கவிதை எழுதுபவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும். உங்கள் தலைவிதியைச் சொல்லி விடும்.   ‘நானை’ பிரதானப்படுத்தி  கவிதை எழுதினால் ஆபத்துதான்.  ஆனால் ஒருவர் அக் கவிதையைப் படிக்கிறார் என்றால் அது படிப்பவரையும் பிடித்துக்கொள்ளும். கவிதையைப் படியுங்கள்.  எழுதுங்கள். ஆனால் உணர்ச்சி வசப்பட்டு அதனுடன் ஐக்கியமாகி விடாதீர்கள்.
– நவீன விருட்சம் ஒன்றாவது இதழ் 16 பக்கங்கள்தான்.  எல்லாப் பிரதிகளும் தீர்ந்து விட்டன.  என் நண்பர் ஸ்ரீகுமார் திரும்பவும் ஒரு 100 பிரதிகள் அதேபோல் அச்சடித்துக் கொண்டு வந்து விட்டார்.  என்னால் நம்பவே முடியவில்லை.  ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மேற்குமாம்பலத்தில் மகாதேவன் தெருவில் உள்ள  காமாட்சி ஹாலில் நடைபெறும் கூட்டத்தில் இலவசமாகக் கொடுக்க உள்ளேன்.
                                                                                (இன்னும் வரும்)