ஏன்………ஏன்………….ஏன்…….

 

 3.30 மணிக்கு ஞானக்கூத்தன் ஞாபகமாக அவருடைய ஒவ்வொரு கவிதையாக எடுத்து வாசித்தோம்.  வந்தவர்கள் ஒவ்வொருவராக கவிதை வாசிக்கச் சொன்னேன்.   யாரும் மறுக்கவில்லை.  வாசித்த அனைவருக்கும் என் நன்றி.  எல்லாவற்றையும் சோனி வாய்ஸ் ரிக்கார்டில் பதிவு செய்தேன்.  மாலன், இந்துமதி என்று பலரும் ஞானக்கூத்தன் கவிதைகளை வாசித்தார்கள்.  

இன்னொன்றும் சொல்ல விரும்புகிறேன். நான் முகநூலில் தெரியப்படுத்தி இருந்தேன்.  என் கைவசம் உள்ள ஞானக்கூத்தன் கவிதைகள், கட்டுரைத் தொகுதி வாங்குபவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடியில் தருவதாக.

ஸ்டாலில் மிகக் குறைவான எண்ணிக்கையில் ஞானக்கூத்தன் புத்தகங்களை வைத்திருந்தேன்.  ஆனால் ஏன் ஒருவர் கூட முகநூலைப் பார்த்து வரவில்லை. வாங்கவில்லை. சலுகையைப் பயன்படுத்தி ஞானக்கூத்தன் புத்தகங்களை வாங்கிக் கொள்ள யாரும் முன் வரவில்லை.

எனக்கு இது ரொம்ப ஆச்சரியமாகப் போய்விட்டது.  ஏன் என்ற என் கேள்விக்கு பதில் தெரியவில்லை..

ஞானக்கூத்தன் கவிதையான பயிற்சியில் குறிப்பிட்டபடி,

பயிற்சி

மனிதன் எங்கும் போக விரும்பவில்லை

ஆனால் போய்க்கொண்டுதான் இருக்கிறான்

மனிதன் யாருடனும் போக விரும்பவில்லை

ஆனால் யாருடனாவது போய்க் கொண்டிருக்கிறான்

மனிதன் எதையும் தூக்கிக் கொண்டு போக விரும்பவில்லை

ஆனால் எதையாவது தூக்கிக் கொண்டுதான் போகிறான்

குன்றுகளைக் காட்டிலும் கனமுள்ள சோகங்களைத்

தூக்கிக் கொண்டு நடக்க மனதில் பயிற்சி வேண்டாமா!

எல்லோரும் குன்றுகளைக் காட்டிலும் சோகங்களைத் தூக்கிக் கொண்டு செல்கிறார்களா? ஏன்..ஏன்….வரவில்லை…வாங்கவில்லை..

இன்று ஞானக்கூத்தன் நினைவு நாள்…….

 

27ஆம்  தேதி போன ஆண்டு (2016) ஞானக்கூத்தன் இறந்து விட்டார்.  ஒருவர் அதிக நாட்கள் மருத்துவமனையில் இருந்தால் அவர் பிழைத்து வருவாரா என்பது சந்தேகம்தான்.  ஞானக்கூத்தன் விஷயத்தில் அப்படி ஆகிவிட்டது.   ஆனால் திருவல்லிக்கேணி போனால் எனக்கு அவருடன் ஞாபகம் இல்லாமல் இருக்காது.  தெற்கு மாட தெருவாகட்டும், பாரதியார் இல்லம் ஆகட்டும், பாரத்தசாரதி கோயில் குளம் ஆகட்டும், வெங்கடாசலம் தெரு முனை ஆகட்டும், அங்கே உள்ள குட்டி குட்டி ஹோட்டல்கள் ஆகட்டும், திருவள்ளூர் சிலை அருகில் உள்ள கடற்கரை ஆகட்டும் எல்லா இடங்களிலும் ஞானக்கூத்தன் இருந்துகொண்டிருக்கிறார் என்னைப் பொருத்தவரை.

ஓராண்டுக்குள் ஞானக்கூத்தன் நினைவு மலர் கொண்டு வர நினைத்துக்கொண்டிருந்தேன்.  ஆனால் என்னால் முடியாமல் போய்விட்டது.  பொதுவாக அவருக்கு நினைவுநாளை விட பிறந்தநாளைக் கொண்டாடுவதுதான் பிடிக்கும்.  பாரதியாரின் நினைவுநாளை விட பிறந்தநாளைத்தான் அவர் விரும்பி வரவேற்பார்.  அதேபோல் ஞானக்கூத்தன் பிறந்த நாளன்று (அக்டோபர் 7) நினைவு மலரை கொண்டு வர முயற்சி செய்கிறேன்.   ஆனால் என்னை அறியாமலேயே ஞானக்கூத்தன் ஆசிரியர் பொறுப்பில் இருந்த கவனம் இதழைக் கொண்டு வந்துவிட்டேன்.  இதை அவருக்கு செய்த மரியாதையாகக் கருதுகிறேன்.

ஒரு சாகித்திய அக்காதெமி விருதோ ஞானப்பீட பரிசோ கிடைத்திருக்க வேண்டியவர் ஞானக்கூத்தன். ஏனோ அவருக்குக் கிடைக்கவில்லை.  அந்தக் குறையை விஷ்ணுபுர விருது கொடுத்துப் போக்கியவர் ஜெயமோகனும் விஷ்ணுபுர நண்பர்களும்.  ஞானக்கூத்தன் குறித்து ஒரு ஆவணப்படமும் எடுத்துள்ளார்கள்.

வாழ்நாள் முழுவதும் கவிதை ஞாபகமாகவே வாழ்ந்தவர் அவர்.  கவிதை எழுதுவதோடல்லாமல், கவிதை எழுதுபவரையும் ஊக்கப்படுத்துவர்.  இன்று இல்லை என்றாலும், அவருடைய கவிதைகள் நம்மிடம் இருக்கின்றன.  எப்போது வேண்டுமானாலும் அவர் கவிதைகளைப் படித்து மகிழலாம்.  இதோ இம்பர் உலகம் என்ற புத்தகத்திலிருந்து ஒரு கவிதையை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.

எனது கனவுகள்

குழந்தைப் பருவத்தில் எப்படிப்பட்ட

கனாக்களை நான் கண்டேன் என்பது

முற்றிலும் மறந்துவிட்டது.

எனது குழந்தை நண்பர்கள் என்னிடம்

எந்தக் கனவையும் சொன்னதில்லை

ஏதோ ஒரு முறை ஒரு கனவை

விளக்கு வைக்கும் நேரம்

அம்மாவிடம் சொன்னேன். என் வாயை

ஒற்றை விரலால் அம்மா மூடினாள்

பல கனவுகள் நைந்து கிழிசலாகி

மறதிக் காற்றில் பறந்து விட்டன.

அப்புறம் நான் எனது கனவுகளில்

ரெயில் நிலையங்களில் நின்று கொண்டிருந்தேன்

சில சமயம் பேருந்து நிலையங்களில் இருப்பேன்

ஒரு கனவில் கையில் ஒரு தாளுடன்

யாரிடமோ விபரம் கேட்பேன். எனது

தாளைப் பறிக்க முயல்வார். நான் பயந்து

வீதியில் ஓட்டம் பிடிப்பேன். அவர் துரத்துவார்

விழித்துக் கொள்வேன்

எனது கனவுகள் அப்படி ஆகிவிட்டன

கனவை விட்டு வெளியே வருகிறேன்

நிம்மதி கொள்கிறேன். அவரால்

விழித்தபின் துரத்த முடியாதல்லவா?

இன்று ஞானக்கூத்தன் நினைவாக கவிதைகள், கட்டுரைகள், ஒரே ஒரு கதை என்று நண்பர்களுடன் சென்னை புல்த்தகக் காட்சியில் சேர்ந்து படிக்கலாம் என்று நினைக்கிறேன்.  மதியம் 2 மணிக்கே ஆரம்பித்து விடலாமென்று நினைக்கிறேன்.

இன்று ஒருநாள் மட்டும் ஞானக்கூத்தனின் எந்தப் புத்தகம் வாங்கினாலும் பாதி விலைதான்.

(புகைப்படம் – க்ளிக் ரவி)

“பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள்”

 
விருட்சம் வெளியீடாக நாலாவது புத்தகமாக பெருந்தேவியின்
கவிதைத் தொகுதியான “பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள்” என்ற புத்தகம் தயாராகும் என்று சற்றும் நான் நம்பவில்லை. ஆனால் புத்தகம் தயாராகி வந்து விட்டது.
கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன் பெருந்தேவியின் அழுக்கு சாக்ஸ் என்ற கவிதைத் தொகுதி வெளிவந்தது. இன்னும் கூட பலர் அந்தப் புத்தகத்தைக் கேட்ட வண்ணம் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும் கவிதை எழுதும்போது பெருந்தேவி ஆழமாக கவிதையைக் குறித்து சிந்தித்தவண்ணம் இருக்கிறார். அழுத்தமான பார்வையை கவிதை மூலம் கொண்டு வருகிறார். அதனால்தான் அவருடைய ஒவ்வொரு கவிதைத் தொகுதியும் வித்தியாசமாக இருக்கிறது.
பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள் என்ற கவிதைத் தலைப்பே படிக்கும் ஒவ்வொருவருக்கும் நகைப்பை ஏற்படுத்த வல்லது.
இத் தொகுதியின் வெளியீட்டு விழா வியாழன் அன்று அதாவது 27.07.2017 அன்று விருட்சம் ஸ்டால் 12ல் மாலை ஆறு மணிக்கு நடைபெற உள்ளது.
முதல் பிரதியை வெளியீட்டு சிற்றுரை ஆற்றுபவர் அம்ஷன் குமார். நூலைப் பெறுபவர் கவிஞர் பரமேசுவரி. அவசியம் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும்.
இத் தொகுதியில் நான் ரசித்த பல கவிதைகளில் ‘வேஷக் கரப்பான்’ என்ற கவிதையை இங்கே அளிக்க விரும்புகிறேன்:
 
 
பஜ்ஜிக்குச் சலித்து வைத்த மாவில்
சின்னக் கரப்பான் ஒன்று குதித்து
மாவைப் பூசிக்கொண்டு
தாவியோடுகிறது
பகல் கூத்துக்கு நீ மட்டும்
வேஷம் கட்டினால் போதுமா
 
விருட்சம் வெளியீடாக வெளிவந்துள்ள இப் புத்தகத்தின் விலை ரூ.90 மட்டும்தான்

நான் யார்?…நான் யார்?…

 

 

மிகக் குறைவான இடத்தில் புத்தகம் எழுதியவரின் புத்தகத்தை அறிமுகப்படுத்துவதே என் நோக்கம்.  ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தி ஒரு சிறிய கூட்டம் ஏற்பாடு செய்தேன்.  பொதுவாக இக் கூட்டத்திற்கு வருபவர்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள்தான்.  அல்லது கூட்டத்திற்கென்று நமக்குத் தெரிந்தவர்களைக் கூப்பிட்டு கூட்டம் நடத்துவது.

அந்த முறைபடி 24.072017 (அதாவது திங்கள் கிழமை) மாலை 6 மணிக்கு  ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் புத்தகத்திற்கு ஏற்பாடு செய்தோம்.அப் புத்தகத்தை உருவாக்கிய ஸ்ரீதர்-சாமா கலந்து கொண்டார்.

அதேபோல் ரமணர் சமாஜிலீந்து வைத்தியநாதன், ஸ்ரீராம் அவர்கள் கலந்து கொண்டார்கள்.  வைத்தியநாதன் சின்ன வயதில் ரமணரைப் பார்த்திருக்கிறார்.  ரமண சமாஜ்ஜை மேற்கு மாம்பலத்தில் திறமையாக நடத்திக்கொண்டு வருகிறார்.

வாழ்க்கையில் எதிர்பாராத சோகம் ஏற்பட்டுவிட அதைச் சரி செய்ய திருவண்ணாமலை ரமண ஆச்சிரமத்திற்கு பலமுறை சென்று வந்ததாக ஸ்ரீதர் சாமா குறிப்பிட்டார்.

அவர் ஒருவிதத்தில் என் ஒன்றுவிட்ட சகோதரர்.  அவரைத் திரும்பவும் எழுதுவதற்குத் தூண்டுதலாக இருக்க வேண்டுமென்று ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் புத்தகம் கொண்டு வந்துள்úள்ன்.  இனிமேல் அவர் எழுத ஆரம்பிப்பார் என்று நினைக்கிறேன்.

ஸ்ரீராம் அவர்கள் புத்தகப் பிரதியைக் கொடுக்க அதை வைத்தியநாதன் வாங்கி உள்ளார்.  கூட்டம் இனிதாக நடந்து முடிந்தது. ரமணரின் முக்கியமான அறிவுரை என்ன என்றால் நான் யார் என்று யோசிப்பது? ஸ்ரீதர்-சாமா ரமணர் ஏதோ மிர்ராக்கிள் பண்ணுவதாக புத்தகத்தில் எழுதவில்லை.  ரமணர் மூலம் வாழ்க்கையை இன்னும் புரிந்துகொள்ளும் வழி முறைகளை வெளிப்படுத்தி உள்ளார். படிக்க சுவாரசியமான இப் புத்தகம் விலை ரூ.70 தான்.  ஸ்டால் எண் 12ல் கிடைக்கும்.

நேற்று நடந்த கூட்டம்

நேற்று நடந்த கூட்டத்தைப் பற்றி இன்றும் இன்றைய கூட்டத்தைப் பற்றி நாளையும் சொல்வதாக உள்ளேன்.  எதிர்பாராதவிதமாக குவிகம் வெளியீடாக கிருபானந்தன் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளார்.  அந்தப் புத்தகம் பெயர் சில படைப்பாளிகள். 112 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை : ரூ.75. அப் புத்தகத்தின் ஆசிரியர் பெயர் எஸ். கே. என்.  அவர் யாருமில்லை கிருபாகரன்தான்.  ஏன் இப்படியொரு பெயரில் அவர் ஒரு புத்தகம் கொண்டு வந்தார் என்பது தெரியவில்லை.

இந்தப் புத்தகத்தை முழுவதும் தயாரித்தவர் கிருபாகரன்.  முதலில் ஒரு பெரிய பிரசுராலயத்திற்குப் பணத்தைக் கொடுத்து இவருடைய நண்பர்கள் சிலர் புத்தகம் அடிப்பது வழக்கம்.  அந்த அபத்தத்திலிருந்து மாறி தானே அவருடைய புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளார் கிருபாகரன்.

ஒரு சினிமா படத்தைத் தயாரிப்பவர்கள், நடிப்பதிலிருந்து டைரக்ட் செய்வது வரை தானே ஈடுபடுவதுபோல், கிருபாகரன் அவரே ஒரு புத்தகத்தைத் தயாரித்துள்ளார்.  அவருடைய துணிச்சலுக்கு வாழ்த்துகள்.

112 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் 24 எழுத்தாளர்களின் சிறுகதைகளை எடுத்துக் கொண்டு ஒரு ரசிகரின் பார்வையில் எழுதியிருக்கிறார்.  அப்படி எழுதிக்கொண்டு போகும்போது அந்த எழுத்தாளரின் பின்னணியைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.  இது அபாரமான முயற்சியாக எனக்குப் படுகிறது.  அவர் ரசித்த சிறுகதையைப் படித்து எழுதினாலும் அதிகப் பக்கங்களுக்கு மேல் போகாதவாறு எழுதிக்கொண்டு போகிறார்.  இவர் இன்னும் இதுமாதிரி கதைகளைப் படித்துப் படித்து எழுதும்போது கதையைக் குறித்து இவர் அறிவு விசாலமாகிப் போகுமென்று தோன்றுகிறது.

இவருடைய புத்தகத்தை நேற்று (23.07.2017) நான் வெளியிட பரிசல் செந்தில் பெற்றுக்கொண்டார்.  சுரேஷ் அவர்கள் இப்புத்தகத்தைப் படித்து விமர்சனம் செய்தார்.

கிருபானந்தன் கூட்டத்திற்கு மூத்தக் கவிஞர் வைதீஸ்வரன், சச்சிதானந்தம், எஸ் ராமகிருஷ்ணன் என்று பலர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

இப் புத்தகம் தற்போது விருட்சம் ஸ்டால் 12ல் கிடைக்கும். விருட்சம் மூலம் இப் புத்தகம் விற்பனைக்கும் கிடைக்கும்.

தொலைந்து போனால் கவலை இல்லை. ..

1981ஆம் ஆண்டு கவனம் இதழ் வெளிவந்தபோது அதைப் பெறுவதற்காக மேற்கு மாம்பலத்திலிருந்து திருவல்லிக்கேணிக்கு ஆர் ராஜகோபாலன் விட்டிற்குச் சென்று வாங்கினேன்.  கவனம் இதழ் குறித்து கணையாழியில் விளம்பரம் வந்தது. வாங்கியதோடு இல்லாமல் சந்தாவும் கட்டினேன்.

எந்தச் சிறுபத்திரிகைக்கும் உள்ள பிரச்சினை.  விநியோகப் பிரச்சினை. சரியான இலக்கிய ஆர்வலர்களுக்குப் போய்ச் சேர என்ன வழி என்பது தெரியாது.  உண்மையில் கவனம் இதழ்கள் ஏழு வரை கொண்டு வந்ததே பெரிய விஷயமாக எனக்குத் தோன்றுகிறது.

கவனம் இதழ்களின் தொகுப்பாக ஆறு இதழ்களை நான் பைன்ட் செய்து வைத்திருந்தேன்.  காலப்போக்கில் ஏழாவது இதழ் இருந்ததே எனக்கு மறந்து போய்விட்டது.  ஆத்மாநாம் கவிதைக்காக கவனம் இதழைப் பார்க்க கல்யாணராமன் வந்திருந்தார்.  அப்போதுதான் தெரிந்தது ஏழாவது இதழ் இருப்பதாக.  பின் இந்த ஏழாவது இதழ் கிடைப்பதற்காக காத்திருந்தேன்.  நான் சேகரித்து வைத்திருந்த பத்திரிகைகளில் தேடிப் பார்த்தேன்.  கவனம் ஏழாவது இதழ் கிடைத்து விட்டது.  ஏதோ புதையலை கண்டு பிடித்த நிலையில் நான் இருந்தேன்.  இந்த ஏழு இதழ்களை மட்டும் வைத்திருந்தால், அது தொலைந்து போய்விடும் என்று எனக்குத் தெரிந்தது.  அதற்கான காரணத்தை நான் சொல்ல விரும்புகிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன் கசடதபற, பிரஞ்ஞை இதழ்கள் வெளிவந்ததை பலரும் அறிந்திருப்பார்கள்.  அதில் பிரஞ்ஞை இதழ் மொத்தத் தொகுதியையும் அந்த இதழை நடத்திய ஆசிரியர் குழுவில் உள்ள ஒருவர் பத்திரமாக வைத்திருந்தார்.  அதை என் நண்பர் ஒருவர் கேட்க, அந்த ஆசிரியர் குழுவில் உள்ள ஒருவர் படிப்பதற்கு அவற்றைக் கொடுத்தார்.  இதழ்களை வாங்கிய என் நண்பர், வேற ஒரு எழுத்தாளர் கேட்கிறார் என்று கொடுத்துவிட்டார்.  படிப்பதற்குத்தான்.  ஆனால் அந்த எழுத்தாளரிடமிருந்து பிரக்ஞை இதழ் மீள வில்லை. ஆசிரியர் குழுவில் இருந்தவருக்கு இருக்கிற ஒரே பிரதியான பிரக்ஞை முழுவதும் போய் விட்டது.  எனக்கு இதுதான் ஞாபகம் வந்தது.  இருக்கிற கவனம் இதழ்கள் இப்படியே போய் விட்டால் என்ன பண்ணுவது என்றுதான். அப்படிப் போனால் அதைத் திரும்பவும் கொண்டு வருவது சிரமம்.  மேலும் சிறுபத்திரிகையில் ஆர்வம் உள்ளவர்கள் கவனம் இதழ் வேண்டுமென்று நினைப்பார்கள்.  எனக்கு ஒரே வழி கவனம் இதழ்களைப் புத்தகமாக தொகுப்பது என்று.

புத்தகமாகத் தொகுக்க வேண்டுமென்றால் அந்த இதழில் வெளிவந்த தலையங்கம், கட்டுரை, கவிதைகள் என்று தனித்தனியாக அடித்துப் புத்தகமாக தயாரித்திருக்கலாம்.  ஆனால் அதை அடித்து ப்ரூப் பார்த்து பின் அச்சடிப்பது என்றால் காலம் அதிகம் பிடிக்கும், மேலும் தப்புகளும் அதிகமாக சேர்வதற்கு வாய்ப்பும் ஏற்பட்டுவிடும். கவனம் இதழ்களைப் பார்த்த திருப்தியைக் கொண்டு வர முடியாது.  அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.  அப்படியே ஸ்கேன் செய்து அடிப்பது.  இந்த முறையில் கவனம் இதழ்களைப் புத்தகமாகக் கொண்டு வந்துவிட்டேன்.  இனி யார் எப்போது கேட்டாலும் கவனம் இதழ்த் தொகுதி கிடைத்துவிடும்.  உண்மையான கவனம் இதழ்கள் பல ஆண்டுகளுக்கு முன்னால் அச்சிடப்பட்டவை.  தாள் மங்கிப் போய்விட்டது.  ஆனால் இப்போது பார்க்கும்போது உயர்ந்தத் தாளில் கவனம் இதழ் முழுவதும் வந்து விட்டது.  புத்தக அளவில் பார்க்க கவர்ச்சியாக இருக்கிறது.

சரி கவனம் இதழ் யார் யாருக்குப் பயன்படும்.  முதலில் சிறுபத்திரிகைகளை ஆராய்ச்சிச் செய்யும் தமிழ் மாணவர்களுக்குப் பயன்படும்.  இரண்டாவதாக சிறுபத்திரிகை ஆரம்பிக்க நினைப்பவருக்கு கவனம் இதழ் ஒரு எடுத்துக்காட்டு.  உதாரணமாக கவனம் இதழில் வெளிவந்தத் தலையங்கத்தைப் படித்தால், ஒரு தலையங்கத்தை எப்படி எழுத வேண்டுமென்று தெரிந்து கொள்ளலாம். மேலும் இலக்கிய வாசகர்களுக்கு கவனம் இதழ் உண்மையில் ஒரு விருந்து.  இந்த இதழ்களில் காணப்படும் கவிதைகள், கட்டுரைகள், மொழிப்பெயர்ப்பு கவிதைகள், கதைகள் என்று படிப்பவரை எப்போதும் தூண்டும்.

 கவனம் புத்தகத்தை எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம்.  ஒருவர் ஏழு இதழ்களில் வெளிவந்த தலையங்கங்களையே படிக்கலாம்.  அல்லது இதில் வெளிவந்த கவிதைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் படிக்கலாம், அதேபோல் மொழிபெயர்ப்பு கவிதைகள் எடுத்துப் படிக்கலாம்.  இதில் வெளிவந்துள்ள சிறுகதைகள் தரமாக எழுதப்பட்டவை.  அதேபோல் புத்தக விமர்சனங்கள்.

இங்கே சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்றுதான் கவனம் இதழ்களின் தொகுப்பை யாரிடம் வேண்டுமானாலும் கொடுக்கலாம், தொலைந்து போனால் கவலை இல்லை என்பதுதான்.

வந்து விட்டது கவனம் இதழ்களின் தொகுப்பு

 
 
நான் குறிப்பிட்டபடி 3 புத்தகங்ள் வெளிவந்து விட்டன. இன்னும் ஒரு புத்தகம் அடுத்த வாரம் வர உள்ளது. மூன்று புத்தகங்களில் ஒரு புத்தகம் என்னவென்று சொல்லப் போவதில்லை. சொல்லாத புத்தகம் வேள்டுமி என்பவர் ஸ்டால் எண் 12ல் வந்து வாங்கிக் கொள்ளவும். ஒரு புத்தகத்தின் பெயர் கவனம் இதழ்களின் தொகுப்பு.
ஞானக்கூத்தன் ஆசிரியராக இருந்த கவனம் இதழ் 1981 மார்ச்சு மாதம் வெளிவந்தது. கிட்டத்தட்ட ஏழு இதழ்களின் தொகுப்பை ஒரே புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன்.
 
நகுலன் குருúக்ஷத்ரம் மாதிரி கவனம் இதழ்களின் ஏழையும் தெபகுத்து புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன்.
 
19.07.2017அன்று நான் எழுதிய தொகுப்பாளர் உரையை அப்படியே தருகிறேன் :
 
ஞானக்கூத்தன் ஆசிரியர் பொறுப்பில் üகவனம்ý என்ற பத்திரிகை மார்ச் மாதம் 1981 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு மாதமும் வந்து கொண்டிருந்தது. ஜøன் 1981வரை மாதம் ஒருமுறை என்று தொடரந்து 4 இதழ்களாக வந்து கொண்டிருந்த பத்திரிகை 5வது இதழ் ஜøலை மாதத்திற்குப் பதிலாக ஆகஸ்ட் 1981ல் வந்தது. 6வது இதழ் ஒரே தாவலாக ஜனவரி 1982ல் தாவிவிட்டது. அதேபோல் மார்ச் மாதம் 7வது இதழூடன் அதாவது 1982 ஆம் ஆண்டு கவனம் பத்திரிகை நின்றும் விட்டது. அந்தப் பத்திரிகை ஏன் நின்றுவிட்டது என்ற காரணத்தை ஞானக்கூத்தன் குறிப்பிடவில்லை. மேலும் அப் பத்திரிகை 1982ல் மார்ச்சிலிருந்து தொடர்ந்து வரும் என்ற நம்பிக்கையை பத்திரிகை அளித்துக்கொண்டிருந்தாலும், தொடர்ந்து அப் பத்திரிகையை ஞானக்கூத்தனால் கொண்டு வர முடியவில்லை.
 
‘ழ’ பத்திரிகை மாதிரி இல்லாமல் கவனம் பத்திரிகை கதை, கட்டுரை, கவிதைகளுடன், வித்தியாசமான தோற்றத்தில் வெளிவந்து கொண்டிருந்தது. 6வது இதழ் ஜோசப் ப்ராட்ஸ்கியின் ஸ்பெஷல் இதழாக வெளிவந்துள்ளது. பல சிறப்பம்சங்கள் கொண்ட கவனம் இதழ்களின் தொகுதி எல்லோர் கைகளிலும் போய்ச் சேர வேண்டுமென்ற நல்ல நோக்கத்துடன் இத் தொகுப்பை கொண்டு வந்துள்ளேன்.
ஜனவரி 2016ஆம் ஆண்டு நான் ஞானக்கூத்தனைச் சந்தித்தபோது கவனம் இதழை தொகுக்க விரும்புவதாகக் குறிப்பிட்டேன். எனக்கு முழு அனுமதி அளித்த அவர், கவனம் பத்திரிகையில் வெளிவந்த எதுவும் விடுபடக் கூடாது என்றும் கூறினார்.
 
எப்படி கவனம் இதழைக் கொண்டு வருவது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, நகுலன் தொகுத்த குருúக்ஷத்ரம் இதழ் மாதிரி கொண்டு வர தீர்மானித்து தொகுத்துள்ளேன்.
 
கவனம் இதழ் மாதிரி ராயல் சைஸில் உள்ள இப் புத்தகத்தின் விலை ரூ.120தான். மொத்தம் 132பக்கங்கள் கொண்ட புத்தகம்.
 
 

அற்றம் காக்கும் கருவி

மயிலாடுதுறையில் இருக்கும் நண்பர் பிரபு இலக்கியத்தில் ரொம்ப ஆர்வம் உள்ளவர்.  புத்தகங்களைப் படிப்பது அவற்றைப் பற்றி பேசுவது அவர் பொழுதுபோக்கு.  டூவீலரில் இந்தியா முழுவதும் பல இடங்களுக்குச் சுற்றிப் பார்க்கும் துணிச்சல் மிக்கவர்.  அப்படி சுற்றிப் பார்க்கும் அனுபவத்தை கட்டுரைகளாக எழுதி உள்ளார்.  சுற்றிப் பார்க்கும் இடங்களுக்கு அவர் செல்லும்போது, காமெரா, வாய்ஸ் ரெக்கார்டர் எடுத்துக்கொண்டு போக மாட்டார்.  பின் ஒரு இடத்துக்குப் போய்விட்டு வந்து பல நாட்கள் கழித்து ஞாபகத்திலிருந்து ஊரைப் பற்றிய அனுபவங்களை எழுதுவார்.  அசாத்தியமான ஞாபகசக்தி உள்ளவர்.

சமீபத்தில் கட்டுரைகள் எழுதி வந்தவர், கவிதைகளையும் எழுதுகிறார்.  அவர் முயற்சியை நான் எப்போதும் ஊக்கப்படுத்துவேன். பலருடைய எழுத்துக்களை வியந்து பாராட்டுவார் (இன்றெல்லாம் ஒரு எழுத்தாளரை யாராவது பாராட்டுகிறார் என்றால், அப்படிப்பட்ட நபர் எங்கே எங்கே என்று தேட வேண்டி உள்ளது.) கவிதைகளை எழுதிக்கொண்டு வருபவர், நாவல்கள், சிறுகதைகளை எழுதவும் தயாராகி விடுவார் என்று நினைக்கிறேன்.

அவர் ‘நான் மலாலா’ என்ற புத்தகத்தைப் படித்துவிட்டு எழுதிய கட்டுரையை இங்கு தருகிறேன்.

– அழகியசிங்கர்

 

 

பாகிஸ்தானில் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்து தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் பிழைத்த மலாலா யூசுஃப்ஸை-யின் சுயசரிதையான ‘’நான் மலாலா’’ நூலை சமீபத்தில் வாசித்தேன். அந்நூல் பல கேள்விகளை எழுப்பியது. பலவிதமான உணர்வுகளால் அலைக்கழிக்க வைத்தது. சாரமற்று நிகழும் பல சம்பவங்களுக்கு இடையேயும் வாழ்க்கையின் உயிர்மை மேல் தீரா ஆர்வம் கொண்டு முளைத்து வரும் அபூர்வமான மனிதர்களைப் பற்றி யோசிக்க வைத்தது. இனிமையின் அமிர்தத்தை புறந்தள்ளி வன்முறையின் கசடுகளைப் பூசித் திரியும் அறியாமையின் வெவ்வேறு வகை மாதிரிகள் பற்றி திகைக்க வைத்தது. கனவுகள் நிறையும் குழந்தைப் பருவத்தின் தீரா அழகு குறித்து வியக்க வைத்தது.

பள்ளிப் பேருந்தில் தாலிபான் தீவிரவாதியால் கல்விக்காகக் குரல் கொடுத்ததற்காக சுடப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதக்கும் மலாலா அன்றைய தினத்திலிருந்து தன் வாழ்க்கைக் கதையை கூறுவது போல் நூல் அமைந்துள்ளது. மலாலா தன்னுடைய கதையைக் கூறும் போது அவருடைய பார்வைக் கோணத்தில் ஸ்வாட் பிராந்தியத்தின் வரலாறு, பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானின் வரலாறு, தெற்காசிய அரசியல் நிகழ்வுகள் மற்றும் பல முக்கியமான உலக அரசியல் நிகழ்வுகள் ஆகியவை அதில் இடம்பெறுகின்றன. சிக்கலான ஒரு அரசியல் சூழலே இளம் வயதில் அப்பெண்ணும் அப்பெண்ணின் குடும்பமும் எதிர்கொண்ட எல்லா துயர்களுக்குமான காரணமாக அமைந்துள்ளது.

தீவிரமான சித்தரிப்பு முறையினால் வேகமான வாசிப்புக்கான சாத்தியத்துடன் இந்நூல் விளங்குகிறது. அரசியல் நிகழ்வுகள் தொடர்பான மலாலாவின் பார்வைகளைத் தாண்டி ஒரு சிறு குழந்தையின் மனதில் விரியும் ஓர் அழகான சின்னஞ்சிறு குழந்தை உலகம் தீட்டும் வண்ணங்கள் மறக்க இயலாததாக இருக்கிறது. மலாலாவின் தந்தைக்கும் மலாலாவுக்குமான தந்தை-மகள் உறவு கவித்துவமாக இருக்கிறது. உறங்கிக் கொண்டிருக்கும் மலாலாவை காலையில் எழுப்பும் போது அவரது அப்பா ‘’ஜானி மன்’’ என எழுப்புகிறார். அதன் அர்த்தம் ‘’ஆத்ம தோழமையே’’ என்பது. கதைகள்,கவிதைகள்,வரலாறு மற்றும் சமகால அரசியல் நிகழ்வுகளை தனது தந்தையிடமிருந்து கேட்டறிந்து தந்தையிடம் விவாதித்து தனது சொந்த அபிப்ராயங்களை உருவாக்கிக் கொள்கிறார் மலாலா. சிறு குழந்தையிலிருந்து இந்நிகழ்வு தொடர்ந்து நடப்பதால் மலாலாவிற்கு எல்லாவற்றைப் பற்றியுமான சுயசிந்தனையும் கற்பனைத் திறனும் இயல்பாக அமையப் பெறுகிறது. கல்வி குடும்ப உறுப்பினர்களிடமிருந்து துவங்குவது எவ்வளவு திறனுடன் வேலை செய்யக் கூடியது என்பதற்கு மலாலா கல்வி பயிலும் முறை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் எத்தகைய எதிர்மறைச் சூழல் இருப்பினும் ஒரு பள்ளி நடத்தியே தீருவது என்ற முடிவுடன் பள்ளிக்கூடத்தை நடத்தும் மலாலாவின் தந்தை ஒரு வியப்பூட்டும் ஆளுமையாக விளங்குகிறார்.

பதினைந்து வயதுக்குள் மலாலாவின் வாழ்வில் என்னென்னவோ நடக்கிறது. தாலிபான்கள் அவர்கள் மாநிலத்தைக் கைப்பற்றுகின்றனர். ஒரு லைசன்ஸ் இல்லாத பண்பலை வானொலி அம்மாநில மக்களுக்கு கட்டளைகள் இடுகிறது. அவர்கள் தேசத்தின் அரசாங்கம் வெறுமனே வேடிக்கை பார்க்கிறது. சொந்த நாட்டில் அகதிகளாக்கப்பட்டு அவர்கள் வேறு மாநிலத்துக்கு கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். நாடு ராணுவ ஆட்சிக்கு கீழே வருகிறது. பர்தா கட்டாயமாக்கப்படுகிறது. அந்நாட்டின் ஒரு பெண் ஆட்சியாளர் அரசியல் காரணங்களால் கொல்லப்படுகிறார். அந்நாட்டின் தலைநகருக்கு மிக அருகாமையில் உலகின் மிகப் பெரிய தீவிரவாத அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஒசாமா பின் லாடன் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அமெரிக்க ராணுவத்தால் அழிக்கப்படுகிறார். உள்ளூர் தீவிரவாதிகள், வெளிநாட்டுத் தீவிரவாதிகள்,உள்ளூர் ராணுவம் மற்றும் அமெரிக்க ராணுவம் ஆகியவை புழங்கும் தளமாகவும் மோதிக் கொள்ளும் இடமாகவும் பாகிஸ்தான் இருப்பதன் சித்திரத்தை நூல் முழுதும் காண முடிகிறது. நூலில் ஒரு இடத்தில் இந்தியப் பிரிவினை நிகழாமல் இருந்திருக்கலாமோ என மலாலா யோசிக்கும் இடம் ஒன்று வருகிறது.

ஒரு இந்திய வாசகனுக்கு ‘’நான் மலாலா’’ நூலை வாசிக்கும் போது இந்தியச் சூழலுடனான ஒப்பீடு இயல்பாகவே நிகழும். மக்களாட்சிக்கும் ராணுவ ஆட்சிக்குமான வேறுபாட்டை மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். தெற்காசியாவில் அன்னிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டதிலிருந்து தொடர்ந்து மக்களாட்சியாகவே நீடிக்கக் கூடியதாய் இந்தியா இருந்திருக்கிறது. மக்களாட்சி அதிகாரப் பரவலாக்கலில் குறியீட்டு ரீதியில் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் இந்தியாவில் செய்யப்பட்டிருக்கிறது. ஊழல் ஒரு பெரிய தடையாக இருந்தாலும் குடிகளுக்கு கல்வியையும் மருத்துவத்தையும்  வழங்குவதற்கான முயற்சியை அரசாங்கம் விடாமல் மேற்கொள்கிறது. மக்கள் நல அரசாக விளங்கவே இந்திய அரசாங்கம் விரும்புகிறது.

இஸ்லாம் கல்வியின் மேன்மையைப் போற்றும் ஒரு சமயம் என்பதை நூல் நெடுக மலாலா பதிவு செய்கிறார். மனிதர்களின் அறியாமையும் அதிகார வெறியுமே மதத்தின் பெயரால் கல்வியைத் தடை செய்ய முயற்சி செய்கிறது. அத்தகைய சக்திகள் அடையாளம் காணப்பட்டு நாகரிக சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படுவதே மானுடத்துக்கான நன்மையாக இருக்கும்.

அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்

என்கிறார் திருவள்ளுவர்.

நூலின் உள்ளடக்கத்தில் கூறுமுறையில் நூலின் இணை ஆசிரியரான கிறிஸ்டினா லாம்ப்-பின் வழிகாட்டுதல் வெளிப்படுகிறது. பலவிதமாக விரிவுபடுத்தி யோசிக்க சாத்தியம் உள்ள நுணுக்கமான பல விபரங்கள் நூல் முழுதும் விரவியுள்ளன. கல்வி, பெண் கல்வி, மனித உரிமைகள் மற்றும் மக்களாட்சி குறித்து ஆர்வம் மிக்க எவரும் வாசிக்க வேண்டிய நூல் ‘’நான் மலாலா’’. மொழிபெயர்ப்பாளர் பத்மஜா நாராயணன் அவர்கள் மிகச் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.

(நான் மலாலா- மலாலா யூசுஃப்ஸை & கிறிஸ்டினா லாம்ப். மொழிபெயர்ப்பு: பத்மஜா நாராயணன். வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில், 629001. விலை: ரூ.350)

ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் என்ற புத்தகம்

                                                                                                         

இந்த முறை முதன் முதலாக சென்னை புத்தகத் திருவிழாவில் விருட்சமும் கலந்து கொள்கிறது.  ஸ்டால் எண் 12.  ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாகக் கலந்து கொள்கிறேன்.  ஒரு முறை கலந்து கொண்டு வந்தாலே போதும் போதுமென்று ஆகிவிடும்.  11 நாட்கள்தான் என்ன ஆகிவிடப் போகிறது என்று கலந்து கொள்கிறேன்.  புத்தகக் காட்சிக்காக 4 புத்தகங்கள் தயாரித்து விட்டேன்.  அதில் 1 புத்தகம் அச்சாகி வந்து விட்டது.  மற்ற 3 புத்தகங்கள் கட்டாயம் அச்சாகி வருமென்று நம்பிக்கை இருக்கிறது.   

ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் என்ற புத்தகம் தயாரிக்கப்பட்டு விட்டது.  இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஸ்ரீதர்-சாமா.  அவர் என் ஒன்றுவிட்ட சகோதரர்.  கதை கவிதை கட்டுரை என்று எழுதிக்கொண்டு வந்தவருக்கு ஆர்வமில்லாமல் போய்விட்டது.  அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சோகமான நிகழ்ச்சி அவரைப் பின் தள்ளி விட்டது.  அவர் வாசிப்பதெல்லாம் ஆன்மிகப் புத்தகங்களாகப் போய்விட்டது.  

ஆன்மிக விஷயங்களில் ரொம்பவும் ஈடுபட்டால் அதுவும் குறிப்பாக எழுதுபவர்கள் ஈடுபட்டால் எழுத வேண்டுமென்ற எண்ணத்தை ஸ்வாஹா செய்துவிடும்.  எனக்குத் தெரிந்து ஒரு கவிஞர் இதிலிருந்து ரொம்பவும் விலகிப் போய்விட்டார்.  அதனால்தான் எழுதுபவர்கள் தொடரந்து கவிதைகள், கதைகள், நாவல்கள் வாசித்துக்கொண்டே இருக்க வேண்டும்.  அவற்றைக் குறித்து தம் கருத்துக்களை பதிவு செய்துகொண்டே இருக்க வேண்டும்.   

அதேபோல் வாசிப்பவர்கள் ஆன்மிக விஷயங்களில் ஈடுபட்டால் இப்ப வருகிற ஒரு நாவலை ரசிக்க மாட்டார், ஒரு கவிதையை ரசிக்க மாட்டார், ஒரு சிறுகதையை ரசிக்க மாட்டார். 

என் சகோதரரை சற்று திசைத் திருப்பி ரமணரைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதத் தூண்டினேன்.  உண்மையில் ரமணரைப் பற்றி அவர் காலத்தில் வாழ்ந்தவர்கள் சொன்னதைத்தான் திரும்பவும் சொல்ல முடியும்.  ஆனால் அதை ஒருவிதமாக தொகுப்பது என்பது, சுலபமாய் நடக்கக் கூடிய காரியமல்ல.  ஏனென்றால் பெரும்பாலோர் ஆன்மிகம் என்றால் ஏதோ அதிசயம் என்று எழுதி விடுவார்கள்.  அது மாதிரி இல்லாமல்  ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் என்ற தலைப்பில் வித்தியாசமாக தொகுத்துள்ளார் ஸ்ரீதர்-சாமா. 100 பக்கங்கள் கொண்ட இப்புத்தம் விலை ரூ.70தான்.  விருட்சம் வெளியீடாக  முதல் புத்தகமாக இது வந்துள்ளது. இன்னும் 3 புத்தகங்கள் வர உள்ளன.  

அதேபோல் ஸ்ரீதர்-சாமாவின் ஏற்கனவே எழுதிய சிறுகதைகளையும், நீண்ட குறுநாவலையும் தொகுக்க உள்ளேன். அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதற்காக இதைக் கொண்டு வர உத்தேசித்துள்ளேன். இப்போது எழுதுபுவர்களை திரும்பவும் படித்து  அவர் எழுதுவதற்குள் நுழைய வேண்டுமென்பது என் விருப்பம்.

ஞானக்கூத்தனின் படைப்புலகம் – 5

பொதுவாக ஞானக்கூத்தன் கவிதைகளில் சமூக அக்கறை, தத்துவார்த்த சிந்தனை என்றெல்லாம் உண்டு.  எல்லாக் கவிதைகளிலும் அவர் எள்ளல் உணர்வோடு கிண்டலடித்து எழுதி உள்ளார்.  விடுமுறை தரும் பூதம் என்ற கவிதையை எடுத்துக்கொண்டால், அதன் எள்ளல் தன்மை நம்மை ஆச்சரியப்படுத்தும்.  ஞாயிறு தோறும் தலைமறை வாகும் வேலை என்னும் ஒரு பூதம் என்கிறார். எள்ளல் தன்மையுடன் ஆரம்பிக்கும் இக் கவிதை சற்று கடுமையாகப் போய் முடிகிறது.  அவருக்கு பணிபுரிவது ஒரு கசப்பான அனுபவமாக இருந்திருக்கிறது.

ஞானக்கூத்தன் எப்படியெல்லாம் கற்பனை செய்து கவிதை எழுதுவார் என்பதை யாராலும் ஊகிக்க முடியாது.  உதாரணமாக சில கோரிக்கைகள் என்ற கவிதையைப் படித்தால்  முதலில் இப்படி ஆரம்பிக்கிறார் கட்டப் போகும் மாளிகை எனக்குத்தான் என்கிறாய் என்று.  பின் முடிக்கும்போது இப்படி சொல்கிறார். இப்போதைக் கொன்று சொல்கிறேன்.  பொத்துப் பொத்தென்று நம்பிக்கை மூட்டைகளை இப்படித் தட்டாதே மாவு பறக்கிறது பார்வைப் பிரதேசத்தில் என்கிறார். அவருடைய வாழ்க்கை மிகச் சாதாரண வாழ்க்கை. இருப்பதற்கு சொந்த இடம் கூட இல்லாமல் வாழ்ந்த வாழ்க்கை.  ஆனால் கட்டப் போகும் மாளிகையைப் பற்றி வேண்டுமென்றே கவிதை எழுதுகிறார்.  அதில் தென்படுகிற அங்கத சுவையைப் பற்றி கவிதை விவரிக்கிறது.   நீங்கள் படித்தால்தான் இந்த அங்கத உணர்வை உணரமுடியும். அவர் கவிதைகளைப் பற்றி சொல்கிறவர்கள், அவருடைய ஆரம்பக் காலக் கவிதைகளைப் பற்றியே குறிப்பிடுகிறார்கள்.   ஏனென்றால் யாரும் முழுவதுமாக யாருடைய கவிதைகளையும் படிப்பதில்லை.  ஒரு கவிஞன் இன்னொரு கவிஞனை மனதாரப் பாராட்டுவதில்லை.    ஆரம்ப காலத்தில் இருந்து கவிதைகளைப் பற்றியே சிந்தித்து கவிதைகளையே எழுதிக்கொண்டு வந்தவர் ஞானக்கூத்தன்.  சமீபத்தில் வந்த இம்பர் உலகம் என்ற அவர் கவிதைத் தொகுதியைப் படிக்கும்போது கவிதைத்தன்மையை  எந்த அளவிற்கு சுலபமாக அவர் மாற்றி உள்ளார் என்பதைக் கண்டு கொள்ளலாம்.

சமீபத்தில் வந்த அவருடைய கவிதைத் தொகுதியான இம்பர் உலகம் படிக்கும்போது கநாசு பாணியில் இன்னும் கவிதையை எளிதாக மாற்றி விட்டார். உதாரணமாக ஒரு கவிதையை இங்கு கூற விரும்புகிறேன்.

இக் கவிதையின் தலைப்பு : கணுக்ககாலில் கொஞ்சம் வீக்கம்.

எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர்

நாற்பது வயதக்காரர்

ஊழல் ராமசாமித் தெருவில் சற்று

பெரியதான க்ளினிக் வைத்திருந்தார்

ஒரு மின்விசிறி

இரண்டு பெஞ்ச்சுகள்

இரண்டு வரிசைகள்

டோக்கன் கொடுக்க ஒரு மடந்தை

அவர் சொன்னார்

நோயாளிகள் சிலபேர் அவரைத்

தொலைபேசியில் கூப்பிட்டுத் திட்டுவார்களாம்

படிச்சுதான் கிடைத்ததா டாக்டர் பட்டம் என்பார்களாம்

நீ சொன்ன மாத்திரையைத் தின்றதும்

வலது கணுக்காலில் வீக்கம் வந்ததென்பார்களாம்

ஆபிரேஷனுக்குக் குறித்த நாளை

மாற்றச் சொல்லிக் கேட்டுக்கொள்வார்களாம்

ஏனென்று கேட்டால்

நாலு சாமியைக் கும்பிட்டால்தானே

உங்கள் கையில் ஆபரேஷன் செய்யலாம்

என்று திருப்பதி பயணத்தைக் கூறுவார்களாம்

டாக்டர் முன்பு உட்கார்ந்திருந்தேன்

வலது கணுக்காலில் வீக்கம் என்றேன்

என்றிலிருந்து வீக்கம் என்றார் டாக்டர்

நீங்கள் எடுத்துக்கொடுத்த மாத்திரையைத்

தொடங்கிய பிறகுதான் டாக்டர் என்றேன்.

ஒரு விதத்தில் இந்தக் கவிதையைப் படிக்கும்போது அங்கத உணர்வை நாம் உணர்ந்தாலும்,  உண்மையில் டாக்டர்களைப் பற்றிய நம் பயத்தை கவிதை முலம் ஆழமாக சித்திரமாக தீட்டியிருப்பதாகத் தோன்றுகிறது.  இதில் சில வரிகளைப் படிக்க படிக்க சிரிப்பு தானகவே நம்மிடம் தொற்றிக் கொள்கிறது.  அதாவது üடோக்கன் கொடுக்க ஒரு மடந்தை,ý என்கிறார். மடந்தை என்ற சொல்லின் எள்ளளைக் கவனிக்க வேண்டும்.  பெரியதாய் க்ளினிக் வைத்திருந்தார் என்று சொல்லிவிட்டு ஒரு மின்விசிறி, இரண்டு பெஞ்ச்சுகள், இரண்டு வரிசைகள் என்கிறார்.  இத் தொகுதியில் சமகால படைப்பாளிகளை அவர் கிண்டலடித்தது எழுதியதைப்போல் யாரும் அடித்திருக்க முடியாது.

 

பொய்த் தேவு என்ற கவிதையைப் பார்க்கலாம் :

சைக்கிள் ரிக்ஷாவில் தன்னுடைய

கனமான உடம்புடன் ஏறி

அமர்ந்து கொண்டார் க.நா.சு

திருவல்லிக்கேணி பெரிய தெருவில்

நல்லியக் கோடன் பதிப்பாலயம் இருந்தது

தேவாலயத்தைக் காட்டிலும்

புத்தகாலயத்தைப் போற்றிய க நா சு

பதிப்பாலயம் நோக்கிப் புறப்பட்டார்

நாவலுக்கான ராயல்டி

கிடைக்கு மானால் என்னென்ன

செய்யலாம் என்று கணக்கிட்டார்

எதுவும் உருப்படியாய்த் தோன்றவில்லை

கோயம்புத்தூர் கிருஷ்ணயர் கடையில்

கோதுமை அல்வா கொஞ்சமும்

பின்னி மில்ஸ் போர்வை ஒன்றும்

வாங்க முடிந்தால் நன்றாயிருக்கும்

பணத்தை அவளிடம் கொடுத்தால் போதும்

அதற்கே அவள் கண்ணீர் விடுவாள்

சிலப்பதிகாரத்தைப் புரட்டினால்

நல்லதென்று மனம் சொல்லிற்று

என்ன விலையோ இப்போது?

ரிக்ஷாவை விட்டிறங்கினார் க நா சு

ஜிப்பா பையைத் துழாவி

காசுகள் சிலவற்றைக் கண்டெடுத்து

டீ குடித்துவிட்டு வா என்றார்

ரிக்ஷா காரனை அனுப்பிவிட்டுப்

பதிப்பாலயம் போக

உடம்மைத் திருப்பினார். அங்கே

புரட்சிக் கவிஞர் நிற்கிறார்

என்னுடன் போஸ்ட் ஆபிஸ் வாரும்

மணியார்டர் வாங்கணும்

ஆள் அடையாளம் காட்டணும்.

நிறைய கடிதங்கள்

ரைட்டர், பொயட் & க்ரிடிக் என்று

திருப்பப் பட்ட கடிதங்கள் வந்ததால்

க நா சுவுக்கு போஸ்ட்மேன் நண்பரானார்

நல்லியக் கோடனை மறந்து

புரட்சிக் கவிஞருடன் போனார்

கவிஞர் பணத்தைப் பெற்றுக் கொண்டார்

பக்கத்துத் தேநீர்க் கடையில்

தேநீர் வாங்கித் தந்தார்

இருவரும் தெருவில் நின்று பருகினர்

புரட்சியும் அமைதியும் அப்புறம்

தங்கள் தங்கள் வழியே போயினர்

எழுத்தாளர்களை வைத்து அவர் எழுதிய கவிதைகள் வித்தியாசமாக யோசிக்க வைக்கின்றன. நம் வாழ்க்கையில் தென்படும் எளிதான அவலத்தை அங்கத உணர்வோடு ரசித்தபடியே எடுத்துச் சொல்கிறார். எந்தக் கவிதையிலும் அவர் கிண்டலை சேர்க்காமலிருப்பதில்லை.  மேலே குறிப்பிட்ட கவிதையில் ‘புரட்சியும் அமைதியும் அப்புறம் தங்கள் தங்கள் வழியே போயினர்,’ என்று கிண்டலடிக்கிறார்.

ஆரம்பத்திலிருந்து தற்போது வந்துள்ள அவர் கவிதைகளை வாசிக்கும்போது கவிதை எழுதும் முறையை அவர் எப்படியெல்லாம் மாற்றிக்கொண்டு வந்திருக்கிறார் என்பதை அறிய முடியும். அவருடைய எல்லா கவிதைகளிலும் அடிநாதமாக ஒளிந்து கொண்டு இருப்பது அவருடைய அங்கத உணர்வு, மனித நேயம்.  அதனால்தானோ என்னமோ அவர் கவிதைகளை எப்போதும் படித்துக் கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

(அகில இந்தியா ஆகாசவாணியில் வாசித்தக் கட்டுரையை சிறு சிறு பகுதிகளாக வெளியிடுகிறேன்)

(இத்துடன் முடிந்தது)