எதையாவது சொல்லட்டுமா / 28

எதையுமே எப்படி வெற்றி கொள்ள முடியும் என்பதை சிலர் அறிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்திரன் படத்தின் விளம்பரத்தை நான் டிவியில் பார்த்தவுடன், உடனே அந்தப் படத்தைப் போய்ப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே என்னிடம் எழவில்லை. இப்போதெல்லாம் சினிமாவை விழுந்து விழுந்து முன்பு மாதிரி பார்ப்பதில்லை. பார்க்காமலே கூட இருந்து விடுவேன். பின் படத்தைப் பார்த்துவிட்டு எந்தக் கருத்தையும் குறிப்பிடுவதில்லை. பொதுவாக சினிமாப் படங்களெல்லாம் அபத்தமாகத்தான் எனக்குத் தோன்றும். அதில் எந்த லாஜிக்கையும் கொண்டு வர முடியாது. நம்முடைய பொழுதுபோக்கிற்காகத்தான் அதைப் பார்க்கிறோம். சினிமாவில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், அதில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளிகள் என்றெல்லாம் பார்க்கும் போது, சினிமா என்பது ஒரு அசுரரின் உலகத்தைச் சார்ந்ததாகத் தோன்றும். இந்த அசுரர் உலகத்தில் நடப்பதை வெறும் பார்வையாளனாகத்தான் பார்க்கிறோம். இந்த சலன உலகத்தை நாமும் பார்த்து சலனமடைகிறோம். குருதத் படம் ஒன்றை என் நண்பர் பார்த்துவிட்டு கண் கலங்கியதை நினைத்து வியந்திருக்கிறேன். வேறு நண்பர் ஒருவர் சிவந்த மண் என்ற ஒரு படத்தை 8 தடவைகளுக்கு மேல் பார்த்துவிட்டு, எஸ் எஸ் எல் சி யில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்துத் தப்பினார்.
நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே சினிமா உலகம் மாறி விட்டது. பத்திரிகைகள், டிவிக்கள் என்று சினிமாவிற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் வேறு எதற்கும் கிடையாது. தினமும் ஒரு சினிமா பார்க்கும் நண்பர்களை நான் அறிவேன். டிவி மூலம் தினம் தினம் எத்தனையோ சினிமாக்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நடிகர்கள் நடிகைகள் நமக்கு வேண்டியவர்களாகப் போய்விடுகிறார்கள். அவர்களைப் பற்றிய செய்திகள் நமக்கு முக்கியமாகப் போய்விடுகிறது. அவர்களுடைய பிரச்சினைகள் நம்முடைய பிரச்சினைகளாகத் தோன்றுகிறது. அவர்களைப் பற்றிய செய்திகள் நமக்கு முக்கியமாகப் படுகிறது.
அதைப்போல் ஒரு சினிமா தயாரிப்பது என்பது கோடிக்கணக்கில் பேரம் செய்யும் வியாபாரம். இந்த வியாபாரத்தில் வெற்றிப் பெறுபவர்களை விரல் விட்டு எண்ணிவிடாலாம். அவர்கள் என்னதான் கோடிக்கணக்கில் செலவு செய்தாலும், மக்கள் முன்னால்தான் போய் நிற்க வேண்டும். இந்த வியாபாரத்தில் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிப்பவர்கள் சினிமாவையே பார்த்துக் கொண்டிருக்கும் சினிமா வெறியர்கள்.
அதிக அளவு முதலீடு செய்வதால், ஒரு சினிமாவைப் பார்க்க சாமான்யர்கள் அதிக விலை உள்ள டிக்கட்டுக்களை வாங்க வேண்டி உள்ளது. ஒரு விதத்தில் இந்த சினிமா ஒவ்வொரு மனிதரின் அன்றாடப் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க வைக்கிறது என்றும் தோன்றுகிறது. அவன் கவலைகளை மறக்க வைக்க உதவுகிறது. என்னுடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் எம்.ஜி.ஆர் ரசிகர். அவர் எப்படி எம்.ஜி ஆரின் படத்தை ரிலீஸான உடனே முதல் காட்சியில் பார்த்த அனுபவத்தை விவரித்துக் கொண்டிருந்தார்.
ரஜினியின் படத்தைப் பார்க்க கட்அவுட்டில் பால் அபிஷேகம் போன்ற ரசிகர்களின் ஆர்ப்பாட்டத்தைப் பார்க்கும் போது இன்னும் வேடிக்கையாக இருக்கிறது. அவர்களுடைய மகிழ்ச்சி முக்கியமாகப் படுகிறது. இந்த ரசிகர்களெல்லாம் சலனமானவர்கள். ரஜினிக்காக எதையும் செய்வார்கள். சினிமாவின் பின்னணியில்தான் இன்று அரசியலுக்குள் நுழைய முடிகிறது. அதுவும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரிய உண்மை. சினிமாவில் நடிப்பவர்கள், வங்கியில் பணிபுரிபவர்கள், பள்ளியில் ஆசிரியராக இருப்பவர்களைப் போலத்தான் என்று நினைப்பதில்லை. அதேபோல் நடிகைகள் நாம் அன்றாடம் காணும் பெண்களைப்போல்தான். ஆனால் அபிமான நடிகைகளை நினைத்து நினைத்து பித்துப் பிடித்தவர்களை நான் பார்த்திருக்கிறேன். சினிமாவில் நடிப்பவர்கள் இருக்கட்டும். சினிமாவையே பார்த்து பார்த்து பொழுதைக் கழிப்பவர்களை என்ன செய்வது?
சங்கரின் எந்திரன் படம் தயாரிக்க 200 கோடி செலவாயிருக்குமாம். அதில் ரஜினியில் சம்பளம் 45 கோடியாம். ஐஸ்வர்யாவின் சம்பளம் 6 கோடியாம். அவ்வளவு கோடி ரூபாயை எப்படியெல்லாம் செலவு செய்வார்கள்.
ரூ100 கொடுத்து என் உறவினர்களுடன் இந்தப் படத்தை காசி தியேட்டரில் பார்த்தேன். பிரமிக்க வைக்கும் காட்சிகள். பல ஆங்கிலப் படங்களின் பாதிப்பு இப் படம் என்று சொன்னாலும் தமிழில் இது புது முயற்சி. 60வது வயதில் ரஜினியின் இந்த முயற்சி ஆச்சரியமாகவே இருக்கிறது. எல்லாம் டீம் ஒர்க். கிராபிக்ஸ் அசத்தல். எனக்கு டிக்கட் புக் செய்தவர் இன்னும் 6 தடவைகளாவது பார்ப்பேன் என்று கூறினார். இந்தப் படத்தை சிறுவர்கள், பெண்கள் முதியவர்கள் என்று எல்லோரும் போய்ப் பார்க்கிறார்கள். அதற்கு சன் நெட் வொர்க்கின் விளம்பரமும் ஒரு காரணம்.

விலகிப் போனவன்

பூக்களை ஏந்திக் கொண்டவன்
வாழ்வின் இனிய நாதத்தைக் கற்றுத்தந்தவன்
தனித்த பசிக்குச் சுய சமையலையும்
விரக்தி நிரம்பிய ஏகாந்தப் பொழுதுகளில்
மனதோடு இசைக்கப் பாடல்களையும்
அருகிலிருந்து சொல்லித் தந்தவன்
சொல்லியோ சொல்லாமலோ
அன்பின் பிடியிலிருந்து
யாரோவாகி அவன் நகர்ந்தவேளை
தெரியாமலே போயிற்று
இறுதியில் தெரிந்தது
ஆழ்கிணறுகளின் பழுப்பு தோய்ந்த
சிதிலங்களுக்கிடையில் துளிர்க்கும்
பசுந்தளிர், சிறு மலர்களைப் போன்று
பார்த்துப் பார்த்து மகிழும்படியான
வாழ்வினை அவன் விட்டுச் செல்லாதது
சிலவேளை வெயிலும்
சிலவேளை மழை இருட்டுமாக
இப்பொழுதெல்லாம் காலம்
வாழ்வியலைக் கற்றுத்தருகிறது
சிலவேளை பனியைத் தூவியும்
சிலவேளை
பழைய நினைவுகளைச் சுட்டி இம்சித்தும்

பால்ய வன பட்டாம்பூச்சிகள்

பொக்கிஷமாய் சேர்த்து வைத்தோம்நாம் சிற்றிலாடிய பருவங்களைகற்பனைகளில் நிலவைதொட்டுவிட்டு வந்த பருவமதுகனவுலகில் மோட்ச தேவதைகளாகஉலாவினோம்சமுத்திர நீரலைகள் வற்றிப்போனாலும்முகத்தில் புன்னகை வற்றா பருவமதுஎந்நேரமும் விளையாட்டு எப்பொழுதும்குதூகலம்பூமியே எங்களது விளையாட்டு மைதானம்கேளிக்கைக்காக பூமிப்பந்தையேஎறிந்து விளையாடும்வேடிக்கையான பருவமதுதுயர மூட்டைகளை தோளில் சுமக்காமல்சுற்றுலா பயண மூட்டைகளை சுமந்துதிரியும் உல்லாச வாழ்க்கையதுகாண்பனவெல்லாம் வேண்டும்கட்டிப்பிடித்து தூங்க பொம்மைகள்ரக ரகமாய் வேண்டும்என அப்பாவிடம் அடம்பிடிக்கும்நினைவைவிட்டு அகல மறுக்கும்காலமதுபால்ய வனத்தை தாண்டி வந்தோம்சிறகற்ற பட்டாம்பூச்சிகளாய்தவிக்கும் வாழ்க்கையில்வழுக்கி விழுந்தோம்.

இம்மாலை ததும்பி வழிந்திருந்தது பொழுது –

யாருமற்ற ஆல மரத்தடியில்இலைகளும் பறவையொலிகளும் உதிரஅறிவு உலகில் வாழ்ந்த நாட்கள்…மேய்ச்சல் போகும் மந்தை மாடுகளின்மணியொலிச் சத்தமும்அவ்வப்போது வியந்துநின்று அகலும்செருப்போசைகளும்ஆலம்பழத்தின் ஊடே ஆசுவாசித்திருந்த பறவையும்வழி தவறிநம்மிடையே வந்த சிறு வெள்ளாடும்காற்றில் படபடத்தபுத்தகப் பக்கங்களும்வியந்து ரசித்தவண்ணச் சிறு பூக்களும்நினைவுகளில்நுண்ணெழிற் சித்திரங்கள் ஆக…பார்க்கவோ பேசவோஎண்ணவோ எழுதவோகூடாத இந்நாளில்கடந்த பாதைகளின்புத்தகங்களும் பேச்சுக்களும் வழித்தடங்களும் மரங்களும்ஒலிகளும் இலைகளும்மாடுகளும் மந்தைகளும்பேரோசையோடுகடந்து விரையஉறைகிறது இம்மாலை பிரிவின் துரு பூசிய அந்த ஆலம் விழுதுகளில்.

எதையாவது சொல்லட்டுமா / 27

ஒரு வழியாக நவீன விருட்சம் 87/88வது இதழை அனுப்பி வைத்தேன். கடந்த 15 நாட்களாக அவஸ்தை. ஆனாலும் முழுத் திருப்தியாக இதைச் செய்தேன் என்று சொல்ல முடியாது. இன்னும் சிலபேருக்கு அனுப்புவது நின்று போயிருக்கும். எப்போதோ சந்தா கட்டியவர்க்கு அனுப்பியிருப்பேன். சமீபத்தில் சந்தாவைப் புதுப்பித்தவர்களுக்கு அனுப்பியிருக்க மாட்டேன். இனிமேல்தான் எல்லாவற்றையும் கண்டுபிடிக்க வேண்டும். அது போகட்டும். நவீன விருட்சம் ஆரம்பிக்கும்போது கவிதை இதழாகவே ஆரம்பம் ஆனது. 16பக்கங்கள்தான் முதல் இதழ். எல்லாப் பக்கங்களும் கவிதைகள். கவிதையைக் குறித்து சில சந்தேகங்களை போன எ.சொ.21ல் எழுப்பியிருந்தேன். பலருக்கு நான் அதிருப்தியுடன் எழுதியிருப்பதாகத் தோன்றியது. உண்மை அப்படி அல்ல. கவிதை ஒரு அற்புதமான விஷயம். மிக எளிதில் கவிதை படிப்பவர் மனதைப் பிடித்துவிடும். ஆனால் கவிதையை ரசிக்க தனிப்பட்ட மனோ நிலை தேவை. எதைக் கவிதை என்று தேர்ந்தெடுப்பது என்பதில் சிக்கல் இல்லாமல் இல்லை. கவிதை என்று எதாவது எழுதிவிட வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு கவிதை எளிதில் வசமாகாது. கவிதை பலரை ஏமாற்றி விடும். 70களில் வானம்பாடி என்ற கூட்டம் கவிதைகளைக் குறித்து உரக்கச் சிந்தித்து எழுதினார்கள். ஆனால் அவர்களுடைய கவிதைகள் பலவும் வெறும் சத்தம்தான். அவர்கள் எழுதும் பாணியிலே அவர்களுக்குத் திருப்தி இல்லை. அப்படியே ஓய்ந்து போய்விட்டார்கள். இனிமேல் அந்த முயற்சி தொடர்ந்தால் கேலிக்கு இடமாகிவிடும். அதேபோல் இடதுசாரிகள். அவர்களுடைய கவிதைகள் எல்லாம் நாட்டில் உள்ள எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதுபோல் இருக்கும். உண்மையில் அவர்கள் என்றுமே பிரச்சினையைத் தீர்க்க விட மாட்டார்கள். ஏனென்றால் பிரச்சினை தீர்ந்துவிட்டால் அவர்கள் கட்சி இருக்க முடியாது. இடது சாரிகளுக்குக் கூட்டம் அதிகம். மாதம் ஒருமுறை சந்திப்பார்கள். அவர்களுடைய பத்திரிகைகள், புத்தகங்களை வாங்குவார்கள். தப்பான கருத்துகளை பேசிக்கொண்டிருப்பார்கள். இதை எதையும் எதிர்பார்க்காத கூட்டம் ஒன்று உள்ளது. அவர்களுடைய கவிதைப் புத்தகங்கள் அவ்வளவு எளிதாக அச்சுக்கு வராது. வந்தாலும் யார் கவனத்திற்கும் போகாது. ஆனால் அவர்கள்தான் உண்மையான கவிதைகளை மெளனமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்று கவிதை பலரால் எழுதப்படுகிறது. கவிதை எழுதுபவர்கள் முதல்வராகவோ பிரதமராகவோ கூட இருக்கலாம். கும்பகோணத்தில் ஒரு பள்ளி தீ பற்றி எரிந்த சம்பவத்தின்போது அதை எப்படி கவிதையாகக் கொண்டு வருவது என்ற யோசனை பலமாக எனக்கு இருந்தது. அந்தத் தருணத்தில் நாட்டின் குடியரசு தலைவராக இருந்த அப்துல் கலாம் ஒரு கவிதை எழுதியிருந்தார். அற்புதமாக அந்தக் கவிதை இருந்தது. தினமணியில் வெளிவந்த அந்தக் கவிதையை திரும்பவும் நவீன விருட்சத்தில் நான் வெளியிட்டிருந்தேன். துயரத்தை அந்த அளவிற்கு யாராலும் வரிகள் மூலம் வெளியிட்டிருக்க முடியாது. ஆனால் அதன் பின் அவர் எழுதிய எந்தக் கவிதையும் என் மனதை கவரவில்லை. அதேபோல் ஆன்மிக குருமார்கள் கவிதைகள் எழுதி உள்ளார்கள். ஜே கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தை வேண்டுமானால் ரசிக்கலாம். ஆனால் அவருடைய கவிதை முயற்சியை ரசிக்க முடியாது. ஆனால் நாரானோ ஜெயராமன் என்ற கவிஞர். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தில் ஈடுபாடு கொண்டு எழுதுவதையே நிறுத்திவிட்டார். அதேபோல் ஜக்கி வாசுதேவ் காட்டுப்பூ என்ற அவருடைய பத்திரிகையில் எழுதும் கவிதைகளை நம்மால் பெரிதும் ரசிக்க முடியாது. கவிதைகளை புரியாதபடி எழுதுவார்கள். நம்மால் கிட்ட நெருங்க முடியாது. தேவை இல்லை என்றும் தோன்றும். பெரும்பாலான மொழிபெயர்ப்பு கவிதைகளை ரசிக்க முடியாது. சிலர் ரொம்பவும் புரியும்படியும் கவிதை எழுதிவிடுவார்கள். சிலசமயம் ரசிக்க முடியும் சிலசமயம் முடியாது. இதன் மூலம் கவிதை என்றால் என்ன என்பதை நிச்சயம் சொல்ல முடியாது. பெரும்பாலான கவிதைத் தொகுதிகளை ரசிக்க முடியாது. எழுதுபவர்கள் அவர்கள் அறியாமலே திரும்ப திரும்ப சலிக்கும்படி எழுதியதையே எழுதிக் கொண்டிருப்பார்கள். சில தினங்களுக்கு முன் என் அலுவலகத்தில் இரவு எட்டுமணிக்கு லோன் கட்டாத மகளிர் குழுவுடன் கடுமையாக அதிகாரி போனில் பேசினார். வந்தது வம்பு. அந்த மகளிர் குழுவைச் சேர்ந்த ஆண்கள் கடுமையாக போனில் வங்கியில் உள்ள அனைவரையும் திட்ட ஆரம்பித்தார்கள். வழக்கமாக நான், வங்கி மேலாளர், இன்னொரு அதிகாரி மூவரும் சீர்காழியிலிருந்து மயிலாடுதுறைக்குக் கிளம்பினோம். பஸ்ஸில் ஏறி அமர்ந்தவுடன், வங்கி மேலாளரும், இன்னொரு அதிகாரியும் தூங்கி விடுவார்கள். போனின் எதிரொலியால் வங்கி மேலாளர் வழக்கம்போல் தூங்காமல் விழித்துக்கொண்டே வந்தார். அடுத்தநாள் காலையில் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, டிரைவர் சீட் பின்பக்கத்தில் ஒரு திருக்குறள் தென்பட்டது. மேலாளர் என்னிடம் அதைச் சுட்டிக் காட்டினார். கவிதைக்கும் அவருக்கும் ரொம்ப தூரம். ஆனால் அந்தக் குறள் படிக்க நன்றாகவே இருந்தது. ஏன் இதைச் சொல்ல வருகிறேனென்றால் எளிதாக மனதைப் பிடித்துக்கொள்ளும்படி கவிதை இருக்கிறது என்பதற்காக. இந்த இடத்தில் நகுலனின் ஒரு கவிதை ஞாபகத்திற்கு வருகிறது.
இருப்பதற்காகத்தான் வருகிறோம்இல்லாமல் போகிறோம்.

ADVERTISEMENT FOR SELVARAJ JAGADHEESAN POETRY BOOK

ருசியுடன் கனிந்திருக்கும் கவிதைகள் – கல்யாண்ஜி (அறிமுக உரையின் ஒரு பகுதி) செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள், பக்கத்திலிருக்கிற ஒருவரிடம், உடனுக்குடன் பேசுகிற அன்றாடத்தின் தொனியுடன் அமைந்து விடுகின்றன. நாம் அன்றாடங்களின் தொனியை வாழ்விலிருந்து உதறிவிட முடியாது.
ஆனால் கவிதையில், அந்த உதறுதலுக்கான, ஈரம் காய்தலுக்கான, வெயிலுக்கும் வெதுவெதுப்புக்குமான அவசியம் இருக்கிறது. கிளையிலைத் தடுப்புக்களைத் தாண்டித் துளைத்து மீறும் வெளிச்ச ரகசியம், எங்கிருந்தோ கேட்கும் பரிச்சயமற்ற குரலில் முடிச்சவிழும் சொல்லின் புதிர், நாம் தாண்டிப் போகிற பேருந்து நிறுத்தத்தில் தலை கவிழ்ந்து உட்கார்ந்து அழும் நடுத்தர வயதுப் பெண், உடன் வாழ்ந்து மறைந்த ஒருவனின் உடலை ஆவேசமான தழலுடன் உள்ளிழுக்கும் மின் தகன மேடையின் கடைசி இரும்புத் தடதடப்பு என்று இப்படி சொல்லிக் கொண்டே போக முடிகிறதான அவசியங்களின் வெளிப்படையான மற்றும் மறைத்து வைக்கப்படும் அடுக்குகள் தேவைப் படுகின்றன.
நாம் புழங்குகிற மொழியை அனுபவங்களின் தலைகீழ் விதையாக அவை ஊன்றுகின்றன. நாமறியாச் சொல்லின் இலைகளுடன் அவை முளைத்து, நாமறியாப் பொருளின் வாசனையுடன் அவை பூத்து, நாமறியா எழுத்தின் ருசியுடன் அவை கனிகின்றன.
செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகளையும்,கவிதை சார் கட்டுரைகளையும் பின் தொடர்ந்து வருகிறார் என்பதை, அவர் விட்டுச் செல்லும் சுவடுகள் தடயப்படுத்துகின்றன.
– கல்யாண்ஜி
ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் – செல்வராஜ் ஜெகதீசன்(கவிதைகள்)பக்.64 விலை ரூ.50
வெளியீடு:
அகநாழிகை பதிப்பகம்33 மண்டபம் தெருமதுராந்தகம் – 603306.
பேச : 999 454 1010
கிடைக்கும் புத்தக கடைகள்:
1) நியூ புக்லேண்ட்ஸ், தி.நகர், சென்னை. 2) டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர்,சென்னை. 3) மதுரை : பாரதி புக் ஹவுஸ் (பெரியார் பேருந்து நிலைய உட்புறம்) posted by செல்வராஜ் ஜெகதீசன்

குடையும் நானும்




அலுவலக பயணமாக நான் சென்ற அந்த ஊர் எனக்குப் புதிது. வேலைகளில் ஒடுங்கிப் போன என் கண்களுக்கு அந்த ஊரில் எதுவுமே தெரியவில்லை.
ஊருக்கு திரும்பும் நேரம் பெய்த மழையில் குடையினை விரித்தேன். சிதறிய மணலில் நீரின் சிருங்கார ஆட்டம் என் கால்களை கிளுகிளுக்க வைத்தது. சுற்றிலும் பன்னீரைச் சொரிந்தது போல் குடையருவியின் குதூகலம். கார் மேக குடையில் கண்ணாடி மாளிகைக்குள் கனிந்த மழை ரசத்தில் களித்த நான் ரயில் நிலையத்தை நெருங்கிய போது கையில் குடை இல்லை. மழை விட்ட போது தேநீருக்காக ஒதுங்கிய கடையில் குடையையும் விட்டிருக்கிறேன்.
அவசர அவசரமாக குடைக்காக அந்த வழியில் திரும்பிய என் நடையின் வேகத்தை கண்கள் கால்களில் கயிறுகளைக் கட்டி இழுத்தன.
நான் வந்த பாதையில் உண்மையில் களைந்தது விரிந்த குடைக்கு அப்பால் மிதந்த மஞ்சள் மலர் கூட்டங்கள். சில்லென்ற மழையில் சிலிர்த்துப் பறந்த சிட்டுக் குருவிகள்.. பதமான மழையில் மிதமாகப் பறந்த பட்டாம் பூச்சிகள். முரட்டு மீசையுடன் மயிர்கள் நிறைந்த உடம்போடு அரக்கன் போல் காட்சி அளித்த தொலைவில் இருக்கும் அந்த அசுர மலையும்தான். களைந்த குடைக்குள் விரிந்த உலகத்தில் விளைந்தன கோடானு கோடி குதூகலங்கள்.

d/bகாற்றில் தத்தி பறக்கும்வெள்ளை காகிதம்சேர்வது எவ்விடம்…வானில் இருந்துயார் வரையும்கோடுகள்இம்மழை…கோலிப் பளிங்கின்கண்ணாடி உலகுள்வடிவங்கள் எப்படி…d – ஐ b – போலவும்b – ஐ d – போலவும்எழுதினால் என்ன..வேகமாக ஓடாமல்எதற்காக சாலைகளில்மெதுவான இந்த நடை…கடலின் அலைகள்எதையோ சொல்ல வந்துஏதும் சொல்லாததேன்… வண்ணங்களால்வசீகரிக்கப்பட்டுபந்தை சுழற்றும்சிறுமிவண்ணங்களைஎண்ண எண்ண வளர்கின்றன நிறங்கள்.

பங்குனிப் பெருவிழா

ராட்சஸ ராட்டினம்
ஐஸ்கிரீம்,வளையல்
கடைகள் எல்லாம் உண்டு
திருவிழா நடைபெறுகின்ற
பதினைந்து நாட்களுக்கு
நடக்கும் அன்னதானத்துக்கு
கூடும் கூட்டத்தால்
கோயிலே அல்லோலஹல்லோலப்படும்
ராஜகோபாலசுவாமிக்கு
ஏற்றவளாகத்தான் வாய்த்திருக்கிறாள்
செங்கமலத்தாயார்
பங்குனிப் பெருவிழாவில்
கண்ணனுக்கு வெண்ணெய்யை
தின்னக் கொடுக்காமல்
முகத்தில் அடித்து சந்தோஷப்படும்
கோபிகைகள் கூட்டம்
விழா முடிந்து
பெருமானும், பிராட்டியும்
ஊஞ்சல் ஆடுவதைப்பார்த்து
ஆதிசேஷன் பொறாமைபடக்கூடும்
ஏகாந்தமாய் இருக்கும்
பெருமாளின் மனசு
அன்னையாய் அணைவரிக்கும்
தாயாரின் மனசு
நெறைஞ்சி போய் கிடக்கும்
மக்களின் மனசு.

அப்பாவி

காய்கறிகாரனிடம் பேரம் பேசுவதில்லை
எதிர் வீட்டுக்காரனிடம் முறைத்துக் கொள்வதில்லை
உறவுகளிடம் உரசிக் கொள்வதில்லை
மளிகைக் கடை அண்ணாச்சியிடம் கடன் வைப்பதில்லை
நடத்துனரிடம் மீதிச்
சில்லரைக்காக சண்டையிடுதில்லை
மாமனாரிடம் பணம் கேட்டு நச்சரிப்பதில்லை
யாராவது கிண்டல் செய்தாலும்
பதிலுக்கு அவர்களை நையாண்டி செய்வதில்லை
இப்படி இருப்பதினாலேயே
ஊரில் அவனுக்கு பெயர்
அப்பாவியென்று.