கசடதபற ஜனவரி 1971 – 4வது இதழ்

மூன்று ஜப்பானியக் கவிதைகள்

நடவு நடும் பெண்கள்
பாடும் பாட்டுகளிலே மட்டும்தான்
சேறு பட்டிருக்கவில்லை

                           – கொனிஷ் ரெய்லான்

முடியாது –
மனித உள்ளத்தை
யாரும் சரிவரப்
புரிந்து கொள்ள முடியாது.
ஆனால்
நான் பிறந்த ஊரில்
மலர்கள்
முன் போலவே
மலர்ந்து
மணம் வீசுகின்றன.

                          – ஸராயுகி

யாரோ கிழவன்
     – நான் அறியாத அந்நியன் –
என்னைத் தடுக்கிறான்
நான் கண்ணாடியில்
       பார்த்துக் கொள்ளும்போது

                          – ஹீடோமாரோ

                            தமிழில் :  க.நா.சு

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் ஆறாவது கூட்டம்


                                                              
அழகியசிங்கர்


 25.10.2014 சனிக்கிழமை அன்று நடந்தது.   தமிழில் கவனிக்கப்பட வேண்டிய எழுத்தாளர் இரா முருகன் அவர்கள் தலைமையில் இக் கூட்டம் இனிதாக துவங்கியது. 
கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக விருட்சம் ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கும் சிறுகதையைப் பற்றிய பின்னணியுடன் ஆரம்பமானது. 
உயிர்எழுத்து செப்டம்பர் மாதம் வெளிவந்த புதுச் சட்டை என்கிற ப முகமது ஜமிலுதீனின் கதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.  அதைப் பற்றிய குறிப்பை அடியேன் வாசித்தேன்.
பின், தேனுகா, ராஜம் கிருஷ்ணன் மறைவை ஒட்டி ஒரு நிமிடம்  மௌன அஞ்சலி நடத்தினோம். 
ஒரே மழை பயமாக இருந்ததால் கூட்டம் எங்கே நடக்காமல் போய்விடுமோ என்ற அசசம் எங்களை விட இரா முருகனுக்கு அதிகமாக இருந்தது.  நல்லகாலம்.  கூட்டம் இனிதே நடந்து முடிந்தது.
இரா முருகனின் விஸ்வரூபம் என்ற மெகா நாவலை  தினமும் சில பக்கங்கள் என்று படித்துக் கொண்டு வருகிறேன்.  எப்போது முடிக்கப் போகிறேன் என்பதை அம்பலப் புழை ஸ்ரீகிருஷ்ணன்தான் அறிவார்.
எனக்கு இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்.  காஞ்சிபுரத்தில் வே நாராயணன் என்ற ஒருவர் இருந்தார்.  அவர் ஒவ்வொரு மாதமும் இலக்கியக் கூட்டம் நடத்துவார்.  கூட்டம் முடிந்தவுடன் யார் யார் என்னன்ன பேசினார்கள், என்னன்ன கேள்விகள் கேட்டார்கள் என்பதை கொஞ்சங் கூட பிசகாமல் கூட்டம் முடிந்தவுடன் ஒப்பிப்பார்.  
நானோ அதுமாதிரி செய்ய இயலாதவன்.  மேலும் கூட்டத்தில் பேசாத விபரத்தையும் கூட்டத்தில் பேசியதுபோல் சொல்லக் கூடியவன்.  அந்தக் காலத்தில் கணையாழி குறுநாவல் போட்டியில் ஜெயமோகன், பாவண்ணன், இரா முருகன், சுப்ரபாரதி மணியன், அழகிய சிங்கராகிய நான் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் குறுநாவல்கள் கணையாழியில் படைத்துக் கொண்டு வருவோம்.  அதில் ஜெய மோகனும், இரா முருகனும் பிடிக்க முடியாத இடத்திற்குப் போய்விட்டார்கள். அப்படியென்றால் என்ன?  அதிகப் பக்கங்கள் கூடிய குண்டு குண்டு நாவல்களை எழுதி தள்ளுகிறார்கள்.  ஜெயமோகன் பிடிக்க முடியாத வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார்.  இரா முருகனின் விஸ்வரூபம் நாவலை எப்போது படித்து முடிப்பேன் என்று தெரியவில்லை.  இந்தக் கூட்ட முடிவில் நான் அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டேன்.  ‘இத்தனைப் பக்ககங்கள் உடைய நாவலை எப்போது படித்து முடிப்பது’ என்று.  அது ஒரு பிரச்சினை இல்லை என்பதுபோல்தான் இரா முருகன் குறிப்பிட்டார்.  
இரா முருகன் நாவல் மட்டுமல்லாமல், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று பல தளங்களில் இயங்கிக் கொண்டிருப்பவர்.  முதலில் பேச ஆரம்பித்தபோது எப்படி எழுதவே தெரியாத அவர் எழுத்துத் துறைக்கு வந்தார் என்பதைக் குறிப்பிட்டார்.  கிட்டத்தட்ட 2 மணிநேரம் இரா முருகன் தம் கட்டி பேசியது ஆச்சரியமாக இருந்தது.  ஆனால் கேட்பவர்களுக்கு கொஞ்சங்கூட அவர் பேசியது அலுக்கவில்லை என்பது நிஜம்.  வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாகவே வந்தது.  எத்தனை எண்ணிக்கை என்பதை உங்களுக்குச் சொல்லப் போவதில்லை.  
நடிகர் கமல்ஹாசனுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு, எழுத்தாளர் சுஜாதாவை சந்தித்த நிகழ்ச்சி என்றெல்லாம் குறிப்பிட்டார்.  அவர் சில படங்களுக்கு திரைக்கதை வசனமும் எழுதி உள்ளார்.  கிரேஸி மோகன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நாடகம் ஒன்றும் எழுதி உள்ளார்.  டிவியில் சீரியல் எழுதுவதையும் இப்போது ஆரம்பித்திருப்பதாகக் கூறி உள்ளார்.  அவர் முதலில் கதை எழுதத் தொடங்குவதற்கு காரணமாக இருந்தவர்களில் அவர் கல்லூரியில் வகுப்பெடுத்து இளம்பாரதி என்ற ஆசிரியர் என்று குறிப்பிட்டுள்ளார்.பின் மீரா.  இரா முருகன் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, இரவு பத்து மணிக்கு மேல் மேலை வீதியிலிருந்து கீழ வீதிக்கு நடை பயிலும் கறுப்பான உருவம் என்றெல்லாம் குறிப்பிட்டுப் போகிறார்.  
அவர் பேசியதை SONY RECORDER மூலம் பதிவு செய்துள்ளேன்.  இதை எப்படி இத்துடன் இணைப்பது என்பது மட்டும் எனக்கு இன்னும் தெரியவில்லை.  யாராவது ஒரே ஒரு முறை உதவி செய்தால் நன்றி உடையவனாக இருப்பேன்.  

இக் கவிதையை எறிகிறேன் ஆகாயத்தின் மீது

ஷஸிகா அமாலி முணசிங்க

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்
கன்னத்துக்கு நீயளித்த அறையின் வீச்சில்
உடைந்து தெறித்தது மலையின் சிரசு
இடையறாது குருதியோடும் சதுப்பு நிலமாய் இதயம்
புதைந்தது குளிர்ந்த பள்ளத்தாக்கினிடையே
அருளும் பாதுகாப்பும் தரும்படி நாம்
உருவச் சிலைகளுக்கு மலர் வைக்கும்போதும்
நேசித்த மலை பற்றியே முணுமுணுத்தோம்
தென்னோலைக் கூரையினூடே தென்படும் வானத்தை நோக்கி
வசந்தங்களைக் கேட்டபோதும்
உழைத்துத் தேயும் கரங்களுக்குக் கிடைக்காது ஒருபோதும்
எனவே இக் கவிதையை எறிகிறேன் ஆகாயத்தின் மீது
உறங்குகிறேன் மண்ணின் கீழே வழமைபோலவே

குறிப்பு – அண்மையில் இலங்கையிலுள்ள மலையகப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் போது
உயிரிழந்த மற்றும் அநாதரவான அனைத்து தமிழ் உள்ளங்களுக்காகவும் !

அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை

எம்.ரிஷான் ஷெரீப்

கழுத்து நீண்ட வாத்துக்கள் பற்றிய உன் கதையாடலில்
சாவல் குருவிக்கு என்ன திரை
அதுவும் இருந்துவிட்டுப் போகட்டும்
அடித்த சாரலில்
வண்ணத்துப் பூச்சியின் நிறம் மட்டும் கரைந்தே போயிற்று
நல்லவேளை சருகுப் பூக்கள் அப்படியேதானே

பிறகென்ன
வற்றிய ஆழக் கடல்களின் நிலக் கரையில்
துருப்பிடித்துப் பாதி மணலில் மூழ்குண்ட
நங்கூரங்களின் கயிற்றோடு
உப்புக் கரித்துத் தனித்திருக்கின்றன சிதிலப் படகுகள்

அந்தி மாலையில் தூண்டிலிட்டமர்ந்து
வெகுநேரம் காத்திருக்கும் சிறுவன்
பாரம்பரிய விழுமியங்களைப் போர்த்தி
உணவு தயாரிக்கும் இளம்பெண்
நிலவொளியில் புயல் சரிக்க
போராடி அலையும் பாய்மரக் கப்பல்
அழிந்த மாளிகை
அசையாப் பிரேதம்

அது என் நிலம்தான்
உன் மொழி வரையும் ஓவியங்களில்
எல்லாமும் என்னவோர் அழகு

உண்மைதான்
மந்தையொன்றை அந்தியில்
நெடுந் தொலைவுக்கு ஓட்டிச் செல்லும்
இடையனொருவனை நான் கண்டிருக்கிறேன்
நீ சொல்வதைப் போல
காலத்தை மிதித்தபடிதான் அவன் நடந்துகொண்டிருந்தான்
நெடிதுயர்ந்த மலைகள்
உறைந்துபோன விலங்குகளைத்தான் தின்று வளர்கின்றன
ஆகவே மலைக் குகை வாசல்களில் அவன் அவைகளோடு
அச்சமின்றி ஓய்வெடுத்தான்

சொல்
மெய்யாகவே நீ கனவுதான் கண்டாயா

என்னைக் கேட்டால்
வாசப் பூஞ்சோலை
சுவனத்துப் பேரொளி
தழையத் தழையப் பட்டாடை
தாங்கப் பஞ்சுப் பாதணி
கால் நனைக்கக் கடல்
எல்லாவற்றிலும் நேர்த்தியும் மினுமினுப்பும்
தேவையெனில் அமைதியும்
தேர்ந்தெடுத்த மெல்லிசையும் என
எல்லாமும் இன்பமயம் என்பேன்

அத்தோடு
இன்னும் கூட இரவு
தினந்தோறும் கொஞ்சம் இருட்டை
எனக்காக விட்டுச் செல்கிறது கிணற்றுக்குள்
என்பதைச் சொல்வேன்
வேறென்ன கேட்கிறாய்

இலையுதிர் காலத்து மரத்தின் வலி
அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை

கசடதபற டிசம்பர் 1970 – 3வது இதழ்

காந்தி



ட்டி ஆர் நடராஜன்

இந்நாளில்
இந்தியர்க்குச்
சிக்கியதோர்
சீதக்காதி.

தொழுமரங்கள்

ந. மகாகணபதி

வேற்றூர்ப் புழுதியை
வீசிப் போகும்
வண்டிகளுக்குப் பூவிட்டு
வணங்கும் மரங்கள்

விருட்சம் தேர்ந்தெடுத்த மனதுக்குப் பிடித்த கதைகள்


                                              


அழகியசிங்கர்
செப்டம்பர் மாதம் சிறுகதை ஒன்றைத் தேர்ந்தெடுக்க பத்திரிகைகளை பலவற்றைப் புரட்டினேன்.  ஜøலை, ஆகஸ்ட் மாதங்களில் வெளிவந்த கதைகளை விட செப்டம்பர் மாதம் வெளிவந்த கதைகளின் எண்ணிக்கைக் குறைவாக இருக்கும்போல் தோன்றியது.  காலச்சுவடு ஒரே ஒரு கதையைத்தான் பிரசுரம் செய்திருந்தது.  அமிருதா ஒரு கதையும் பிரசுரம் செய்யவில்லை.  கதைகளின் தன்மையும் முதல் இரண்டு மாதங்களில் தென்பட்ட அவதியை உருவாக்கவில்லை.  பல கதைகளைப் படிக்கும்போது வேண்டாம் வேண்டாம் என்று ஒதுக்கவே தோன்றியது.  
குறிப்பாக ஆகஸ்ட் மாதம் பல கதைகள் சிறப்பாகவே எழுதப்  பட்டிருந்தன.  அந்தத் தன்மை செப்டம்பர் மாதக் கதைகளில் தென்படவில்லை.  ஆனாலும் சில பத்திரிகைகள் நம்பிக்கைத் தராமலில்லை.  
இ வில்சன் என்பவர் கல்கி 14.09.2014 இதழில் பாக்கியம் என்ற கதையை எழுதி உள்ளார்.  அதேபோல் கணையாழி செப்டம்பர் மாத இதழில் கிருஷ்ண வதம் என்ற கதையை எழுதி உள்ளார்.  கிருஷ்ண வதம் சிறப்பாக எழுதப்பட்ட கதை.  யோகேஸ்வரன் இரண்டு குழந்தைகளை அவர் வீட்டுக்கு லீவுக்காக அழைத்துக்கொண்டு போகிறார்.  இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை அழைத்துப் போக அவர்கள் வீட்டில் சம்மதிக்கவில்லை.  கீதா என்கிற அக் குழந்தைக்கு தண்ணியிலே கண்டம் பயம்தான் அதற்குக் காரணம்.  ஏற்கனவே ஒரு முறை அக்குழந்தைக்குதண்ணீரில் பிரச்சினை ஆகிவிட்டது.  யோகேஸ்வரன் சமாதானம் செய்து அண்ணன் தங்கை இரண்டு பேர்களையும் அவர் வீட்டுக்கு அழைத்துப் போகிறார்.  
யோகேஸ்வரன் வீட்டில் பல குழந்தைகளும் சேர்ந்து கொட்டம் அடிக்கும் இடம்.  ஆசையுடன் அவர்களை வரவழைத்து அன்பு பாராட்டுவரர்கள்.  இந்தக் கதையில் தண்ணியால கண்டம் உள்ள கீதாவிற்கு குளத்தில் குளிக்கும்போது பாம்பு கடித்து விடுகிறது.  அது ஒரு தண்ணீப் பாம்பு.  என்றாலும் அது ரொம்பும் அக் குழந்தையின் அம்மாவைப் பாதிக்கிறது.  திரும்பவும் விடுமுறை முடிவதற்குள் தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வருவதோடு அல்லாமல்  அவர்களைத் திட்டியும் தீர்த்து விடுகிறாள்.  குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்தவர்களுக்கு வருத்தமாகப் போய் விடுகிறது.  இ வில்சன் இக் கதையைச் சிறப்பாக எழுதி உள்ளார்.  அதே போல் கல்கியில் அவர் எழுதிய பாக்கியம் என்ற கதையில் பாக்கியம் ஒரு விசேஷவேலையின் போது எல்லா வேலைகளையும் அவளே எடுத்துச் செய்கிறாள்.  அங்கு மிச்சமான சாப்பாடுகளை அங்கிருந்து வீட்டுக்கு எடுத்துக்கொண்டு வருகிறாள்.  காலையில் செய்த பொங்கலை அவள் வீட்டு மாடிற்கு கொடுத்து, மாடு எழுந்திருக்க முடியாமல் படுத்து விடுகிறது.  அந்தப் பதைப்பை கதையில் நன்றாகக் கொண்டு வந்திருக்கிறார்.
அதேபோல் தீராநதியில் எஸ் ராமகிருஷ்ணன் கதையான வானோர் என்ற கதையும், அதேபோல் உயிர்மையில் எழுதிய தனலட்சுமியின் துப்பாக்கி என்ற கதையும் சிறப்பாக எழுதப்பட்டட கதைகள்.  
உயிர்மையில் வெளிவந்த சாங்கியம் என்ற கதை.  இதை சிவபிரசாத் என்பவர் எழுதி உள்ளார்.  இறந்த உடல்களின் முடிகளை அப்புறப் படுத்தும் கதை.  இதை சாங்கியம் என்று குறிப்பிடுகிறார்கள்.  இறந்தவர் ஒருவர் முடியை எடுக்கும்போது இறந்தவர் மனைவி பக்கத்தில் இருந்து அதை கவனித்து வருகிறார்என்பதை உணர்கிறார் தண்டபாணி.  அவர் பின்னால் அவள் நின்றிருந்தாள்.  இறந்தவரின் துணியை இடுப்புக்குக் கீழே நீக்கும்போது அந்தப் பகுதி வாழைப்பழத்தை துண்டாக வெட்டியதைப் போலிருந்தது.  அதையாரிடமாவது சொல்ல வேண்டும் என்று நினைக்கும்போது, இறந்தவர் மனைவி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.  இதை சிறப்பாகவே எழுதி உள்ளார் சிவபிரசாத்.  
அசோகமித்திரன் எழுதிய கதை உறுப்பு அறுவடை என்ற கதை.  இதுவும் சிறப்பாக எழுதப்பட்ட கதை.  அசோகமித்திரன் அவருடையநடையில் சிறப்பாக எழுதப்பட்ட கதை. 
நான் தேர்ந்தெடுத்த பத்திரிகைகளில் இந்த முறை தளம் பத்திரிகையும் சேர்த்துக் கொண்டேன்.  தளம் இதழ் எனக்கு செப்டம்பர் மாதம் கிடைத்தது.  அதை செப்டம்பர் மாத இதழாக எடுத்துக் கொண்டேன். 
அதில் வெளிவந்த எஸ் எம் ஏ ராம் எழுதிய தாத்தா காலத்து பீரோ என்ற கதை.   தாத்தா காலத்தில் தாத்தாவால் ஆசையாக தயாரித்த மரப்பீரோவை பாதுகாப்பது எத்தனைப் பிரச்சினையை உண்டாக்குகிறது என்பதே இக் கதை.  கடைசியல் பாட்டி தாத்தாவின் பீரோவைப் பார்க்காமலே இறந்து விடுகிறாள்.   அவளுடைய பேரன் தான் அந்தப் பீரோவைப் பார்க்கப் போகிறான்.
இந்த மாத சிறப்புக் கதையாக நான் தேர்ந்ததெடுத்த கதை ப.முகமது ஜமிலுதீன் எழுதிய புதுச் சட்டை என்ற கதை.  இக் கதை உயர் எழுத்து செப்டம்பர் மாத இதழில் வெளிவந்த கதை.  கதை சரளமான நடையில் எழுதப்பட்ட கதை.  கதையைப் படிக்க படிக்க சுவாரசியம் கூடிக்கொண்டே போகிறது.  ரஹ்மான் என்கிற பையன் பக்ரீத் வருவதை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான்.  ஏனெனில் பக்ரீத் அன்றுதான் அவனுக்கு புதிய துணி கட்டிக்க கிடைக்கும்.  உண்மையில் இதுமாதிரி பண்டிகைத் தினங்கள் ஏழைகள் பாடு திண்டாட்டமாக இருக்கும்.  அவர்களால் புதுத் துணிகள் கூட வாங்க வழி இல்லாமல் இருக்கும்.  எப்படி ரஹ்மான் புதிய துணி வாங்க துடியாய் துடிக்கிறான் என்பதுதான் கதை.  அதற்கான முயற்சியில் ஈடுபடும்போது ரயில் விபத்து ஏற்படுவதைத் தடுக்கிறான்.  
அதன் மூலம் கிடைக்கும் புகழைக் கூட அவன் அறியாமல் இருக்கிறான். அவனுக்கு ரெடிமேட் கடையில் ஒரு சட்டைக்கு இரண்டு சட்டையாக பக்ரீத் அன்று கிடைக்கிறது.  

கசடதபற 3 வது இதழ் – டிசம்பர் 1970

என்னுடைய மேட்டு நிலம்

கலாப்ரியா

என்னுடைய மேட்டு நிலம்
நேற்றுப் பெய்த மழையில்
குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது

என்னுடைய மேட்டு நிலத்தை,
இன்றைய வெயில்
நெருப்பால் வருத்திக் கொண்டிருக்கிறது

(என்னுடைய மேட்டு நிலம்
நாளைய ‘வெறுமையில்’
தவம் புரிந்து கொண்டிருக்கும்)

என்னால் – அதன்
எல்லா அனுபவங்களையும்
உணர முடிகிறது

ஏனென்றால்,
இறந்துவிட்ட – என்னை
அதில்தான் புதைத்திருக்கிறார்கள்

நானும் பார்க்கிறேன் சினிமாக்களை……

2

                                                                                                 

அழகியசிங்கர்

லைஃப் ஈஸ் ப்யூட்டிஃபுல் என்கிற ராபர்ட்டோ பெனினி இயக்கிய இத்தாலி படம் ஒன்றை பார்த்தேன்.  1997ல் வெளியான இந்த இத்தாலி படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த அயல் நாட்டுப் படம் என்று பல விருதுகள் கிடைத்துள்ளன.  இதை இயக்கிய ராபர்ட்டோ பெனினி அவர்களே இப்படத்தில் கிய்டோவாக முக்கிய வேடத்தில் சிறப்பாக நடிக்கிறார்.  படத்தின் முதல் பாதி கிய்டோ அவளது காதலியான தோராவுடன் ஏற்படுகிற உணர்ச்சிகரமான தன்மையை வெளிப்படுத்துகிறது.  கிய்டோ ஒரு புத்தகக் கடையை நிறுவ முயற்சி செய்கிறான். தோராவை திருமணம் செய்து கொண்டு அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.  அவர்களுக்கு ஜோஸ்வான் என்ற பையன்.  கிய்டோ  யூத இனத்தைச் சேர்ந்தவன்.  ஹிட்டலரின் படைகள் அவர்கள் இருக்கும் நகரத்தில் ரோந்து வருகிறார்கள்.  கிய்டோ ஒரு யூத இனத்தைச் சேர்ந்தவன் என்று அவனை சந்தேகம் கொண்டு அழைத்துப் போகிறார்கள்.  இந்த இடத்தில் தன்னுடைய உணர்ச்சிகளை வெகுவாக மறைத்துக் கொண்டு அது ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியாக மாற்றுகிறாரன் கிய்டோ.  ஐந்து வயது தன் பையனான ஜோஸ்வான் இதன் தீவிரத் தன்மையை உணரக்கூடாது என்று அவ்வாறு செய்கிறான்.
ஜோஸ்வானுடன் கிய்டோ கைது செய்யப்படுகிறான்.  அவர்களை ஹிட்டலரின் வதைக் கூடத்தில் அழைத்துக்கொண்டு போகிறார்கள்.  கிய்டோவின் மனைவி தோரா யூத வகுப்பை சாராதவள் என்றாலும், கணவனும் மகனும் செல்லுமிடத்திற்கு அவர்களுடன் ரயிலில் செல்கிறாள்.  ஜோஸ்வான் தன் அம்மாவும் தங்களுடன் பிரயாணம் செய்வதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறான்.  ஹிட்டலரின் வதைக் கூடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கிறார்கள்.  இவர்களைப் போல் பலரும் பயணம் செய்கிறார்கள்.  எந்த வசதியும் இல்லாத ரயிலில் மிருகங்களைப் போல் அவர்களை அடைத்தப்படி அழைத்துச் செல்கிறார்கள்.  
கிய்டோ இது மாதிரியான இக்கட்டில் பயணம் செய்தாலும் தன் மகன் ஜோஸ்வான் இது குறித்து எதுவும் அறிந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறான்.  ஒரு பெரிய ஆபத்தை, சோகத்தின் உச்சத்தை கிய்டோ உணர்ந்து தன் பையனுக்கு தெரியக் கூடாது என்று நினைக்கிறான்.  லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவிக்கும் சித்ரவதை முகாமிற்கு செல்கிறார்கள்.  முகாமில் தனியாக பெண்கள் இருக்கிறார்கள்.  கிய்டோவும், ஜோஸ்வாவும் ஆண்கள் முகாமில் இருக்கிறார்கள்.  ஒரு பெரிய அறையில் எல்லோரையும் போட்டு அடைத்து வைத்திருக்கிறார்கள்.  இந்தக் கொடூரமான தன்மை ஒரே அறையில் எல்லோரையும் அடைத்து வைத்திருக்கிற அறைகளில் தெரிகின்றன. எல்லோரும் மூளை குழம்பிப் போனவர்களாக, உடல் வலு இல்லாதவர்களாக, போராட்டத்தை வாய்விட்டுக் கூட தெரிவிக்க விரும்பாதவர்களாகத் தென் படுகிறார்கள்.  அந்த அறையில் அடைக்கப்பட்டவர்கள் ஒருவருக்கு ஒருவர்  பேசுவது கிடையாது.  ஹிட்டலரின் சிப்பாய்கள் முகத்தில் கருணையே இல்லாமல் கொடூரமாக நடந்து கொள்கிறார்கள்.    அவர்களுடைய நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருப்பவர்களை கொல்வதுதான்.  அதனால் யாவரும் மன வருத்தத்துடன் இருக்கிறார்கள்.  அங்கிருப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கை குறைகிறார்கள். எதுவும் பேசமுடியாமல் எல்லோரும் பைத்திய நிலையில் இருப்பதுபோல காணப்படுகிறார்கள்.  அவர்களுடைய பாத்திர அமைப்பு வித்தியாசமாக இருக்கிறது.  அவர்களை ஒவ்வொரையும் அழிப்பதுகூட அவர்கள் முன் நடக்கவில்லை.  அவர்களை தனியாக அழைத்துப்போய்த்தான் அழிக்கிறார்கள்.
கிய்டோ தன் மகனிடன் எல்லாம் விளையாட்டு என்கிறான்.  இந்த விளையாட்டில் ஜோஸ்வா 1000 புள்ளிகள் எடுத்தால் அவனுக்கு பீரங்கி வண்டி கிடைக்கும் என்று கிய்டோ கூறி அவனை கற்பனையான விளையாட்டில் ஈடுபடுத்துகிறான்.  சோகத்தை மறைத்து எல்லாவற்றையும் பையனுக்காக நகைச்சுவை உணர்வாக மாற்றுகிறான்.  
இந்தப் படத்தின் மூலம் தெரியவருவது.
துக்கத்தை அதன் போக்கிலேயே விட்டு விடுவது என்பது.  அதை நகைச்சுவை உணர்வுடன் எற்றுக்கொள்ளும் தன்மையை கிய்டோ தனக்குள் ஏற்படுத்திக்கொள்கிறான்.  மகன் அதன் கொடூரத்தை புரிந்துகொள்ளாமல் இருக்கப் பார்த்துக்கொள்கிறான்.  
படம் முடிவில் ஜோஸ்வா அவன் அம்மாவிடம் போய் சேர்ந்து விடுகிறான்.  கிய்டோ தன் மனைவியைத் தேடப் போகும்போது தன்னை இழந்து விடுகிறான்.  எந்தக் காட்சியையும் மிகைப் படுத்தாமல் பிரமாதமான முறையில் படம் எடுத்துள்ளார்கள்.  
 

உஷா ஐயர்

கசடதபற டிசம்பர் 1970 – 3வது இதழ்

ஐராவதம்

கரகரத்த உன் குரல்
      கதிரியக்கத் தாது எனக்
      காதில் பாயும்;
ஊர்ந்து உதறும் உன் உடல்
உயிரியக்க வேகமென
மனசில் படும்.

ஆத்மாவின் அழுகுரலாய்
அனாசாரத் தீங் கொலியாய்
வறண்ட சில வயோதிகர்
வர்ணிப்பர் உன் பாட்டை.

சாத்திரம் கெட்ட நாம்
உன் நாதக் குலைவினை
சாதனையாய் ஏற்றிடுவோம்.

நாதம் பிரம்மம் எனில்
நாதக்குலைவுதான் என்ன?

வலை

கசடதபற டிசம்பர் 1970 – 3வது இதழ்

எஸ் வைதீஸ்வரன்

ஓட்டில்,
ஒரு மாத ஒட்டடை,
அரசியல் வேடிக்கையாய்,
ஆயிரம் சிக்கல் இடைஇடையில்
அதில்,
என்றோ, அரசமிடுக்குடன்
வலைகட்டி நடந்த சிலந்தி – பின்
பிணமாகத் தொங்கிய முடிவை
நான் பார்த்ததுண்டு
இன்று,
üüசிலந்திப் பிணமும்ýý மாறி
ஒட்டடையாய்,
சிறுபூச்சி வலைகளுக் கொரு
கைப்பிடிப்பாய்,
பிணசாட்சியாய் நிற்கிறது.
வலைபின்னும் வாழ்வு மட்டும்
நின்ற பாடில்லை.