நானோ காரும், நானும், நவீன விருட்சம் 99வது இதழும்….

அழகியசிங்கர்
இது மாதிரி தலைப்பில் எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றியது.  நவீன விருட்சம் 99வது இதழ் வந்து விட்டது.  கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு மேல் நவீன விருட்சம் இதழுடன் பயணம்.  
திங்கட்கிழமை காலையில் அச்சகத்தாருடன் போனில் பேசினேன். “இதழ் ரெடியாய் இருக்கு.  வந்து எடுத்துக்கொள்ளுங்கள்,” என்றார் அச்சகத்தார்.
“எப்படி வருது?  ஆட்டோவில் போட்டு எடுத்துக்கொண்டு வந்துடலாமா?” என்று கேட்டேன்.
“ஏன் சார், உங்க கிட்டேதான் நானோ கார் இருக்கே..அதில கொண்டு போங்களேன்,”என்றார்.
நானோ காரை எடுத்துக்கொண்டு திருவல்லிக்கேணியில் உள்ள பிரஸ்ஸிலிருந்து விருட்சம் இதழ் பிரதிகளை அள்ளிக்கொண்டு வருவதை நினைத்து யோசனையாக இருந்தது. ஏனென்றால் நான் நானோ கார் ஓட்டும் ஜாம்பவானாக இருந்தாலும், திருவல்லிக்கேணி சந்துகளில் ஓட்டும திறமைசாலியா என்பது தெரியவில்லை.
என்னை தைரியப் படுத்தவே என் மனைவி பக்கத்தில் இருந்து கொண்டிருப்பாள்.
“ஏன் நானோவில் போகிறீர்கள்?  ஆட்டோவை எடுத்துக்கொண்டு போங்கள்…பீக் ஹவர்ஸில் உங்களுக்கு கார் ஓட்ட வராது,” என்று பிரேக் போட்டாள்.
எனக்கோ கோபமான கோபம்.  தினமும் நான் நானோ காரை அசோக்நகரில் உள்ள பெண்கள் படிக்கும் கார்ப்பரேஷன் பள்ளியில் நிறுத்திவிட்டு பின் ஒரு வாக் பண்ணிவிட்டு நானோ காரை ஓட்டி  வீட்டுக்கு வந்து விடுவேன்.  இப்படி இருக்கும் நான் ஒரு நல்ல சந்தர்பபம் விருட்சம் எடுத்துவர கிடைத்தால் சும்மாவா விடுவது.
ஆனாலும் மனைவி பிரேக் போட்டதில் கொஞ்சம் உதறல்.  பின் மனைவியைத் திட்ட ஆரம்பித்தேன்.  “எப்போதும் காரில் எங்காவது போகிறேன் என்றால், போய் வாருங்கள், என்று சொல்ல பழகிக்கொள்,”என்றேன்.
திரும்பவும் அச்சகத்தாரிடம் போன் செய்தேன்.  “ஏம்பா அந்தப் பெரிய தெருவில் நுழைய முடியாது காரை வைத்துக்கொணடு, இல்லையா?” என்றேன்.
“சார், நீங்கள் பெல்ஸ் ரோடு வழியாக என் கடைக்கு வந்து விடுங்கள். எதாவது பிரச்சினையாக இருந்தால் எனக்குப் போன் செய்யுங்கள், என் டிரைவரை அனுப்புகிறேன்,”என்றார்.
சாமியைக் கும்பிட்டு விட்டு காரை எடுத்து ஓட்ட ஆரம்பித்தேன்.  உள்ளுக்குள் உதறல் இருந்தாலும் என் மனைவி என்னிடம் காட்டிக்கொள்ள வில்லை.
வண்டியை மெதுவாக ஓட்டிக்கொண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையை எட்டினேன்.  பின் மெதுவாக பீச் பக்கமாக திருப்பினேன்.  பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த அரசாங்க பஸ்ஸின் உருமல் காதில் விழுந்தது. நான் நிதானமாக ஓட்டிக்கொண்டு கண்ணகி சிலைக்கு எதிரில் உள்ள தெருவில் திரும்பி, பெல்ஸ் தெருவில் காரைத் திருப்பினேன்.  என்னைத் தாண்டிக்கொண்டு பல டூ வீலர்கள் பறந்து கொண்டிருந்தன.  பெரிய மனது பண்ணி அவற்றையெல்லாம் போக விட்டேன்.  ஆட்டோக்களை நினைத்தால் கொஞ்சம் பயமாகவே இருந்தன.  வேறொரு கிரகத்திலிருந்து வந்த  மனிதர்கள் மாதிரி அவர்கள் ஆட்டோக்களை ஓட்டிக்கொண்டு வந்தார்கள்.   
தெரியாமல் பெரிய தெருவில் போவதற்கு இந்து பள்ளிக்கூடம் பக்கம் திரும்பி விட்டேன்.  பெரிய ஆபத்தை சந்தித்தேன்.  நானோ கார் எதிரில் குப்பை வாரும் வண்டியைப் போல பெரிய வண்டி.  ஒரு பக்கம் டூ வீலர்களை சார்த்தி வைத்திருந்தார்கள்.  எப்படியும் இடிக்காமல் போக முடியாது.  வண்டியை நகர்த்தத் தெரியாமல் வண்டியை நிறுத்தி விட்டேன்.  மனைவி கிளம்பும்போது தடுத்தது சரியாகிப் போய்விடும் என்று தோன்றியது.  
யாரோ ஒருவர் ஒரு டூ வீலரை நகர்த்தி என்னைப் போக அனுமதித்தார்.  எப்படியோ தப்பித்துக்கொண்டு அச்சகத்திற்கு வந்து விட்டேன்.  உலக பெரிய சாதனை மாதிரி நான் வண்டி ஓட்டிய மகாத்மத்தை அச்சகத்தாரிடம் சொன்னேன்.  அவர் சிரித்தபடியே, ‘உங்களை விட பெரிய காரை வைத்திருக்கிறேன்,’ என்றார்.  ஒரு வழியாக நவீன விருட்சம் 99வது இதழ் என் வீட்டிற்கு இப்படித்தான் வந்து சேர்ந்தது.
இதழ் திருப்தியாக வெளிவந்திருந்தது.  வழக்கம்போல் பலருடைய படைப்புகள் கொண்ட இதழ்தான் இது.
இதழுக்கு பங்களிப்பு அளித்தவர்களின் படைப்புகள் பற்றிய குறிப்பை இங்கு அறிவிக்கிறேன் :
இதழின் அட்டை ஓவியம் : கவிஞர் வைதீஸ்வரன்.
1. கோயிலுக்குள் ஒரு யானை – ஞானக்கூத்தன்        4
2. என் பூனைகள் – சாரலஸ் புக்கோவ்ஸ்கி – 15
தமிழில் : ராமலக்ஷ்மி 
3. தனித்துவங்கள் – கவிதை – ராமலக்ஷ்மி            17
4. தப்பித்தல் – கவிதை – ராமலக்ஷ்மி          18
        5. சின்ன சின்ன லயங்கள் – வைதீஸ்வரன்          18
9. பிரேதத்துடன் ஒரு பயணம் – சிறுகதை – 
ராஜகோபாலன்                          19
10. கோப்பைகள் – கவிதை – பானுமதி ந.          23
11. தீப்பெட்டி – கவிதை – உமாபாலு            24
12. சார்வாகன் (1929-2015) – அசோகமித்திரன் 25
13. வெள்ளம் பற்றிய கவிதை – அழகியசிங்கர் 27
14. பிரிவுபசாரம் – சிறுகதை -அசோகமித்திரன்    28
15. ஒரு திரைப்படம் ஒரு நினைவு – பிரபு         32
16. சங்கதிகள் – கவிதை – ஜெ பாஸ்கரன்         36
17. யாழ்பாணம் தெட்சணாமூர்த்தி – அழகியசிங்கர் 37
18. புத்தக விமர்சனம் – அழகியசிங்கர்         40
19. புரியவில்லை – சிறுகதை – ஸிந்துஜா         43
20. நடப்பியல் – கவிதை – நீல பத்மநாபன்         50
21. கழுதைகளின் உலகம் – சா இளையராஜா 50
22. இந்திய அரசியல் சாஸனம் – அசோகமித்திரன் 51
23. காத்தவராயன் – கவிதை – வளவ துரையன்         53
24. கவிஞர் சிறகா கவிதைகள் இரண்டு 54
25. டீ – சிறுகதை – அழகியசிங்கர்                 56
26. நினைவுகளின் நிழல்கள்-சிறுகதை-
ஜெ பாஸ்கரன்                                 65
27. 13வது சென்னை சர்வேத திரைப்படவிழா 70
28. ஞானக்கூத்தன் கவிதை                         74
29. மரணத்தின் கண்ணாடி – காவேல்கர்         75
30. விஷ்ணுபுர விருதும் தேவதச்சனும் 79
இந்த இதழ் சென்னையில் மூன்று இடஙகளில் இப்போதைக்குக் கிடைக்கும்.  1. நியூ புக்லேண்ட்ஸ், தி நகர், சென்னை 17 2. டிஸ்கவரி புத்தக பேலஸ், கே கே நகர், சென்னை 3. காந்தி புத்தக நிலையம், கிரோம்பேட்டை ரயில்வே நிலையம். 
யாருக்காவது பத்திரிகை வேண்டுமென்றால் என்னை இ மெயில் மூலம் தொடர்பு கொள்ளவும். navina.virutcham@gmail.com
தனி இதழ் நவீன விருட்சம் விலை ரூ.15.  ஆண்டுச் சந்தா ரூ.60.  தப்பித்தவறி சந்தா அனுப்பவேண்டுமென்று உங்கள் மனசில் பட்டால்
Name of the Account : NAVINA VIRUTCHAM, 
BANK :   INDIAN BANK, ASHOKNAGAR BRANCH.
IFSC CODE : IDIB 000A031 என்ற கணக்கில் அனுப்பவும்.  
நவீன விருட்சம் அடுத்த இதழ் 100வது இதழ்.  இன்னும் அதிகப் பக்கங்களுடன் கொண்டு வர உள்ளேன்.  தயவுசெய்து படைப்புகளை யுனிகோட்டில் அடித்து    navina.virutcham@gmail.com அனுப்பவும்.  

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 20


நானும் என் நாடகங்களும்



பேசுவோர் : எஸ் எம் ஏ ராம்


இடம் : அலமேலு கல்யாண மண்டபம
அகஸ்தியர் கோயில் பின்புறம்
19 ராதாகிருஷ்ணன் தெரு
தி நகர், சென்னை 600 017

தேதி 20.02.2016 (சனிக்கிழமை)
நேரம் மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு : எஸ் எம் ஏ ராம் என்கிற பெயரில் எழுபதுகளின் ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய இவரது முழுப் பெயர் எஸ் மோகன் அனந்தராமன்.1979 ஆம் ஆண்டு வெளி வட்டங்கள் என்ற பெயரில் நாவல் எழுதி உள்ளார்.70 களின் இறுதியில் நவீன நாடகங்கள் என்ற அடையாளத்தோடு, வடிவம், உள்ளடக்கம், இவை இரண்டிலும் மரபு நாடகங்களிலிருந்து மாறுபட்டனவாய்த் தமிழில் புதிதாய்க் கிளர்ந்தெழுந்த நாடக மறுமலர்ச்சி இயக்கத்தில் இவர் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. சமீபத்தில் எஸ் எம் ஏ ராம் நாடகங்கள் என்ற புத்தகம் கொண்டு வந்துள்ளார். விற்பனைக்கு அப் புத்தகம் கூட்டத்தில் கிடைக்கும்.

அனைவரும் வருக,

அன்புடன்
அழகியசிங்கர் – ஆடிட்டர் கோவிந்தராஜன்

கூட்டம் பற்றிய அறிவிப்பை எல்லோரும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.


புத்தக விமர்சனம் 17

புத்தக விமர்சனம் 17
அழகியசிங்கர்
சோ சுப்புராஜ் எழுதிய துரத்தும் நிழல்கள் என்ற சிறுகதைத் தொகுதியை எடுத்து வைத்துக்கொண்டேன்.  20 சிறுகதைகள் கொண்ட 196 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது.  சுப்புராஜின் இந்தத் தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளும் பல பத்திரிகைகளில் பிரசுரமான கதைகள்.  இதிலிருந்து ஒன்று தெரிகிறது.  சுப்புராஜ் அவர்களுக்கு அவருடைய கதைகள் எல்லாம் பத்திரிகைகளில் பிரசுரமாகும் சூட்சுமம் தெரிந்திருக்கிறது.  அவர் எது எழுதினாலும் எதாவது ஒரு பத்திரிகைக்கு அனுப்பினால் போதும் பிரசுரமாகி விடுகிறது.  அவரும் விடாமல் பல கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார். உன்னதம் பத்திரிகையில் ஒரு கதையும், நவீன விருட்சம் பத்திரிகையில் ஒரு கதையும் பிரசுரமாகி உள்ளன.  அக் கதைகளை வேறு எங்காவது அனுப்பி இருந்தாலும் பிரசுரமாகி இருக்கும்.
சரி, அப்படியென்றால் தரம் இல்லாத கதைகளையா அவர் எழுதுகிறார் என்றால் அப்படி சொல்லவில்லை.  பலவிதமான கதைகளை அவர் எழுதிக்கொண்டு போகிறார்.  பலவிதமாக கற்பனை செய்கிறார்.  அவர் எழுத்து சமுதாயத்தின் மீது அவருக்கு ஏற்பட்டுள்ள கோபத்தை வெளிப்படுத்துகிறது.  பெண்களுக்கு ஏற்படும் தீங்கு, ஜாதி கண்ணோட்டத்தில் ஒரு ஜாதியை கீழ்த்தரமாகப் பார்ப்பது என்று வலுவான தீம்களை எடுத்து எழுதுகிறார்.  
ஒரு பெண் தனியாக வெளிநாடு போய்ப் படுகிற அவதிகளை ஒரு கதையில் சொல்கிறார்.  அப்படிப் போகிற பெண்  படிப்பறிவு இல்லாதவளாக இருக்கிறாள்.  இழிந்த ஜாதியில் பிறந்ததால், அதிகமாகப் படித்திருந்தாலும் பரம்பரையாகப் பார்த்து வந்த கக்கூஸ் கழுவற வேலையைப் பார்க்க நேருகிற கொடுமையை விவரிக்கிறார். இது மாதிரி தலித் கதைகள் அதிகமாக இந்தத் தொகுதியில் உள்ளன.  இன்னொரு கதையில் ஒரு பள்ளி மாணவி போலீஸ் ஸ்டேஷனலில் கற்பழிக்கப் படுவதைக் குறிப்பிடுகிறார்.  ஊர் அந்தக் கொடுமையான சம்பவத்தைக் கேள்விப்பட்டு போலீஸ் ஸ்டேஷனையே கொளுத்தி விடுகிறார்கள்.  ஆனால் அதன் பின் கொடுக்கும் ட்விஸ்ட்தான் கதையை நம்ப முடியாமல் செய்கிறது. கற்பழிக்கப்பட்ட பெண் என்றால், மன ரீதியில், உடல் ரீதியில் அந்தப் பெண்ணுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்பதை அரசாங்கம் உறுதி படுத்திவிடும்.  அவள் கர்ப்பமாக இருப்பதற்கு வாய்ப்பு குறைவு.  ரொம்ப வருடங்களுக்கு முன் எஸ் எஸ் ஆர் விஜயகுமாரி நடித்தப் படம் பூமாலை என்ற படம்.  அதில் எஸ்எஸ்ஆர் குடி வெறியில் விஜயகுமாரியைக் கற்பழித்து விடுவார்.  அதனால் கல்யாணம் ஆகாத விஜயகுமாரி கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொள்வதாக கதை.  இது மாதிரியான பேத்தல் படத்தை இப்போது நம்மால ஏற்றுக்கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை. 
தாமரை என்ற பத்திரிகையில் வெளிவந்த ஒரு கதை.  கற்பு என்னும் குறும்படத்தின் கதைச் சுருக்கம் (பக்கம் 155).  எடுக்கப்படும் படத்திற்கும் நிஜ வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை என்பதை இக் கதை எடுத்துக் காட்டுகிறது.  நாடக பாணியில் வேடிக்கையாக எழுதப்பட்ட கதை இது.  
ஒரு தற்கொலை; சில குறிப்புகள் (பக்கம் 1) என்ற கதையில் வெறும் மிரட்டலுக்குப் பயந்து ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொள்கிறது. மனது உருகும்படி இந்தக் கதையை எழுதி உள்ளார். ஆனால்  நம்ப முடியவில்லை. 
கண்கள் இரண்டினில் ஒன்று (பக்கம் 16) என்ற கதை தினமணி கதிரில் வெளிவந்த இலக்கியச் சிந்தனை பரிசுப் பெற்ற கதை.  ஒரு பெண்பிளளையைத் தொடர்ந்து படிக்க அனுப்பாத ஒரு குடும்பத்தின் கதை.  பாண்டியம்மாள் என்ற அந்தப் பெண் படிப்பில் கெட்டிக்காரியாக இருக்கிறாள்.  ஆனால் என்ன பிரயோஜனம்.  அவள் பெரியவள் ஆனவுடன் அவள் படிப்பை குடும்பத்தினர்கள் நிறுத்தி விடுகிறார்கள்.  பெண் பிள்ளைகள் படிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ள குடும்பம்.  மேலே படிக்க முடியவில்லை என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தும் கதை இது.  வழக்கம்போல் சரளமாக எழுதப்பட்ட கதை.  
விஷம் (பக்கம் 20) என்ற கதையைப் படிக்கும்போது எனக்கு தி ஜானகிராமன் எழுதிய கதையும் ஞாபகத்திற்கு வருகிறது.  சாதத்தில் பல்லி விழுந்து செத்துக் கிடக்கிறது.  அந்தச் சாதத்தைப் பிசைந்து தயிர்சாதமாக தன் கணவன் சுந்தரம் எடுத்துக்கொண்டு போய் விடுகிறான்.  பல்லியின் விஷம் தன் கணவனைப் பாதிக்கும் என்ற பதைப்பை கடைசிவரை எடுத்துக்கொண்டு போயிருக்கிறார் கதையில்.  எப்படியோ அவன் ஆபிஸில் சுந்தரத்தைப் பார்த்து விடுகிறாள்.  கோலாலம்பூரை பின்புலமாகக் கொண்டு இக் கதை எழுதப்பட்டுள்ளது.  மொழி தெரியாத ஒரு இடத்தில் கணவன் பணிபுரியும் இடத்தை அடைவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடுகிறது.  இத்தனை பரபரப்பையும் காடடிவிட்டு இறுதியில் யாரோ அந்த டிபன் பாக்ஸ் சாதத்தை சாப்பிட்டு விடுகிறார்கள் என்று முடிக்கிறார். கடைசி வரை பரபரப்பை கூட்டிக்கொண்டு போகிறார்.  இது கணையாழியில் வெளிவந்த கதை. 
கடைசிவரை பெயரை ஞாபகப்படுத்திக்கொள்ள முடியாத ஒரு அலுவலக நண்பரைப் பற்றிய கதைதான் ஒரு பெயர் சில ஞாபகங்கள்  (பக்கம் 29) என்ற கதை.  எதிர்பாராதவிதமாய் பஸ்ஸில் சந்திக்கும்போது அவனைப் பற்றிய எல்லா சம்பவங்களும் ஞாபகத்திற்கு வருகிறது.  அவன் பெயர் மட்டும் பிடிபட மாட்டேங்கறது.  விபத்தில்தான் அந்த நண்பனின் பெயர் ஞாபகததிற்கு வருகிறது.  தினமணிகதிரில் வெளிவந்த கதை.  
கொஞ்ச நீளமான கதைதான் துரத்தும் நிழல்கள் (பக்கம் 39) என்ற கதை.  2007ஆம் ஆண்டு கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசுபெற்ற கதை.  கழிவறையைச் சுத்தம் செய்யும் நரசய்யா என்பவனைப் பற்றிய கதை. இழிந்த சாதியில் பிறந்தால் காலமெல்லாம்  மலம் அள்ளிக்கொண்டுதான் இருக்க வேண்டுமா என்ற கேள்வியை கதை மூலம் சுப்புராஜ் எழுப்புகிறார்.  ஒரு தலித் பார்வையில் எழுதப்படட கதை.
நிலமென்னும் நல்லாள் (பக்கம் 51) என்ற கதையில் கதையின் முடிவு எப்படி இருக்குமோ என்ற பயம் வந்து கவ்விக்கொண்டது.  ஆனால் காளியப்பனுக்கு சாதகமாக முடிந்தது.  
பொதுவாக சுப்புராஜ் கதைகளில் வெளிநாடுகளில் தங்கி பணிபுரியும் தமிழர்களின் நிலையைப் பற்றி அக்கறையுடன் எழுதப்படுகிற கதைகள் அதிகம்.  வெளிநாட்டில், வெளி மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களின் உலகம் பற்றி நமக்கு பெரிதாக தெரிவதில்லை.  அந்தப் பதிவை ஓரளவு சுப்புராஜ் நிறைவேற்றி வைப்பதாக தோன்றுகிறது.  
ஜாதி கொடுமை இவர் கதைகளில் சற்று தூக்குதலாக தெரிகிறது.  பல கதைகளில் இந்த ஜாதி பிரச்சினையை மையமாக வைத்து எழுதியிருக்கிறார். பல கதைகளில் இந்தப் பாட்டைப் பாடும்போது மொத்தமாக இந்தத் தொகுப்பைப் படிக்கும்போது சற்று நெருடலாகத் தெரிகிறது.
இவர் கதைகளில் உருக்கத்தை நெகிழும்படி செய்து விடுகிறார். தினமணி கதிரில் வெளிவந்த கருணையின் நிழல்கள் (பக்கம் 140) என்ற கதை ஓர் உதாரணம். 
துரத்தும் நிழல்கள் – சிறுகதைகள் – சோ.சுப்புராஜ் – வெளியீடு : காவ்யா – 16 இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 600 024 – தொலைபேசி : 044 – 23726992,9840480232 – புத்தக விலை :  ரூ.150 – வெளியான ஆண்டு : 2012

மறந்து போன பக்கங்கள்….

அழகியசிங்கர்

தி சோ வேணுகோபாலனின் கோடை வயல் தொகுப்பில் உள்ள ஆறாவது கவிதை பழம்பெருமை.  நெளிந்தது புழு என்று ஏன சொல்கிறார்? குலப்பெருமை பேசி என்ன பயன் என்கிறாரா?  ஒரு புதுக்கவிதையைப் படிக்க படிக்க பலவிதமாக யோசனை செய்துகொண்டே இருக்கலாம்.  ஆனால் இப்படி நினைப்பதுதான் இறுதி என்று சொல்ல முடியுமா என்பது தெரியவில்லை. 
 
     பழம்பெருமை
குழம்பு மாங்கொட்டை
குலப் பெருமை பேசிற்று;
நட்டுவைத்துக்
காத்திருந்தேன்;
நெடுமரமும் மரக்கனியும்
நிழலாச்சு !
நெளிந்தது
புழு!

கிராமீயப் பாடல்கள்

தொகுப்பாசிரியர் : வானமாமலை

தெய்வ கணங்கள்
கிராம மக்கள் நூற்றுக்கணக்கான தெய்வங்களை பெயர் கொடுத்து அழைக்கிறார்கள்.  ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி உண்டென்று நம்புகிறார்கள்.  கோயில்பட்டி அருகிலுள்ள சிறறூர்களில் மக்களால் வணங்கப்படும் தேவதைகளின் பெயர்பளை இப்பாட்டில் நாம் காண்கிறோம்.  முனியசாமி, ஐயனார், கண்ணாத்தா, பாப்பாத்தி, உலகம்மன், பெத்தனாட்சி ஆகிய பெயர்களை இப்பாட்டிலிருந்து நாம் அறிகிறோம்.
கிராம மக்கள், மேலே குறிப்பிட்ட தேவதைகளை மட்டுமின்றி முஸ்லிம் தர்க்காக்களுக்கும் நேர்ந்து கொள்வதுமுண்டு.  விசேஷக் காலங்களில் முஸ்லிம்களது யாத்திரை ஸ்தலங்களுக்கும் போவதுண்டு.
முத்து முனிய சாமி
மூர்க்கமுள்ள தேவதையே
சத்தத்தை நீ கொடய்யா
சரளி விட்டு நான்பாட
ஊருக்கு நேர் கிழக்கே
உறுதியுள்ள ஐயனாரே
சத்தத்தை நீ கொடய்யா
சரளி விட்டு நான் படிக்க.
நாட்டரசன் கோட்டையிலே
நல்ல தொரு பாப்பாத்தி
வயித்தவலி தீர்த்தயானால்
வந்திருவேன் சன்னதிக்கு
ஒட்டப் பிடாரத்திலே
உலகம்மன் கோயிலிலே
பூக்கட்டிப் பார்த்தேன்
பொருந்தலையே என் மனசு
கண்ணுலே அடிச்சுத்தாரேன்
கண்ட சத்தியம் பண்ணித் தாரேன்.
சிக்கந்தர் மலைக்கு வாங்க
சேலை போட்டுத் தாண்டித் தாரேன்.
பூப்பூக்கும் புளியமரம்
பொன்னிலங்கும் ஐயனாரு
நாட்டி லங்கும் பெத்தனாச்சி
நல்லவரம் தருவா.
ஏழுமலை கடந்து
எடுத்து வந்தேன் சண்பகப்பூ
வாடாமல் சாத்தி வாரும்
வட மதுரைக் கந்தனுக்கு.
வட்டார வழக்கு:
பாப்பாத்தி – பிரம்ம ராக்கி சக்தி
ஐயனாரு – சாஸ்தா
சேகரித்தவர் : எஸ் எஸ் போத்தையா   இடம் : கோவில்பட்டி வட்டாரம்
நாட்டு அரசன் கோட்டையிலே
நல்லதொரு கண் ஆத்தா
வயித்தவலி தீர்த்தியானா

வந்திருவேன் சன்னதிக்கே
வட்டார வழக்கு: 
கண் ஆத்தா – கண்ணகியைக் குறிக்கும்
சேகரித்தவர் : எஸ் பி எம் ராஜவேலு          இடம் : மீளகாட்டான்.

கசடதபற ஜøலை 1971 – 10வது இதழ்


தெலியலேது ராமா

 ஜாதுஷ்டிரன்
                                                                                               

‘ப்ராங்க்ளின் கொட்டைப்ராந்து
முத்துச்சாமி செத்த எலி’
செல்லப்பா சொல்லி விட்டார்
நாப்பா போட்டு விட்டார்

IDENTITY CRISIS
ALIENATION FEELING
‘இழப்பில்’ இதுவெல்லாம்
எங்கேயும் இல்லையாம்
செல்லப்பா சொல்லிவிட்டார்
நாப்பா போட்டுட்டார்.

தமிழ்நாட்டில் தமிழ்க் குலத்தில்
தமிழ்ச் சரித்திர வரலாற்றில்
சோகத்துக்கிடமில்லை – இதயச்
சோரத்துக் கிடமில்லை

ஸந்தோஷம் ஸல்லாபம்
ஸம்போகம் தார் மீகம்
சத்தான சொல்லடுக்கு
தமிழ்க் கதைக்கு மிக மிடுக்கு

செல்லப்பா சொல்லிட்டார்
நாப்பா போட்டுட்டார்

இனி –
ஆறடி உயரம் அழகான பெண்மைமுகம்
(மேற்கொண்டு வர்ணனைக்கு
நாப்பாவைக் கேளுங்கள்)
சத்தான கருத்துக்கள்
நாயகன் அவிழ்த்துவிட
ஐந்தடி உயரம் ஐந்தடி கூந்தல்
திரண்ட தமிழறிவும் தியாகேசர் கீர்த்தனையும்
தெரிந்த நல்நாயகி திடீரென வந்து
நிம்போமேனியாவில் நாயகனைக் காதலுற்று
லக்ஷணமாய் குண்டு குண்டாய்ச் சித்திரங்கள் போட்டு
ட்ராஜடியாய் காமடியாய் ட்ராஜிக் காமெடியாய்
(தெலியலேது ராமா தமிழ் நாவல் மார்க்கமு)

நாப்பா எழுதிடுவார்
செல்லப்பா வாழ்த்திடுவார்

செத்த எலிகளுக்கு இடமில்லை தமிழினிலே
ஜோடித்த பிணங்களுக்கே சொகுசுண்டு இனிமேலே

மறந்து போன பக்கங்கள்….

அழகியசிங்கர்


தி சோ வேணுகோபாலனின் கோடை வயல் தொகுப்பில் உள்ள ஐந்தாவது கவிதை ஞானம்.   காலக் கழுதை கட்டெறும்பான இன்றும் சாளரத்தின் கதவுகள், சட்டம் காற்றுடைக்கும்.  அறப்பணி ஓய்வதில்லை.  தொடர்கிறது. எந்த மாற்றமும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை என்கிறாரா? 
                                               ஞானம்
சாளரத்தின் கதவுகள், சட்டம்;
காற்றுடைக்கும்.
தெருப்புழுதி வந்தொட்டும்.
கரையான் மண் வீடு கட்டும.
அன்று துடைத்தேன்,
சாயம் அடித்தேன்,
புதுக்கொக்கி பொருத்தினேன்.
காலக் கழுதை
கட்டெறும்பான
இன்றும் 
கையிலே
வாளித்தண்ணீர், சாயக்குவளை,
கந்தைத்துணி, கட்டைத் தூரிகை;
அறப்பணி ஓய்வதில்லை
ஓய்ந்திடில் உலகமிலலை!
 

13வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசித்தப் படங்கள்…3

டாக்ஸி என்ற ஈரானியப் படம்….

அழகியசிங்கர்

விக்டோரியா என்ற படமும் டாக்ஸி என்ற படமும்தான் பார்க்க வேண்டிய படங்கள் என்று சொன்னார்கள். டாக்ஸி படம் காட்டிய அன்று அந்தப் படம் மட்டும்தான் என்னால் பார்க்க முடிந்தது.  
டாக்ஸி என்ற இந்தப் படத்தைப் பற்றி பல சுவாரசியமான தகவல்கள் உண்டு.  இரானியன் இயக்குநர் ஜாவர் பன்னஹி அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக 2010லிருந்து படம் எடுக்கத் தடை செய்யப்பட்டவர்  மேலும் வீட்டுக் காவலில் உள்ளவர்.   அவர் தடைகளை மீறி எடுத்தப் படம்தான் டாக்ஸி. இந்தப் படம் டாக்ஸிக்குள்ளிருந்து எடுக்கப்பட்ட படம்.  டெஹ்ரான் தெருக்களை இந்தப் படம் டாக்ஸியின் வழியாகப் பார்த்தபடி காணப்படும் காட்சிகளை சொல்வதாக எடுக்கப்பட்டுள்ளது.  
டாக்ஸியில் வெவ்வேறு தருணங்களில் ஏறி அமரும் வாடிக்கையாளர்களை வைத்தும் படம் எடுக்கப்பட்டுள்ளது.  படத்தைத் தயாரித்து இயக்கியவரே டாக்ஸி ஓட்டுபவராக நடித்துள்ளார்.  வெவ்வேறு தரப்பட்ட மனிதர்கள் டாக்ஸியில் ஏறி இறங்குகிறார்கள்.  அவர்கள் நடத்தும் உரையாடல்கள் இயற்கையாக போரடிக்காமல் அமைகிறது. அரசாங்கத்திற்குத் தெரியாமல் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   65வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தங்கக் கரடி விருது பெற்றுள்ளது.
டாக்ஸியில் ஒரு காமெரா பொருத்தப்பட்டுள்ளது.  அந்தக் காமெராதான் எல்லா இடங்களிலும் சுழன்று சுழன்று படம் பிடிக்கிறது.  வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இருந்தாலொழிய இதுமாதிரியான படத்தை எடுக்க முடியாது.  
முதலில் இந்த டாக்ஸியில் ஒரு ஆணும் பெண்ணும் ஏறுகிறார்கள். தெருவில் கார் ஓடுவதைக் காட்டிக்கொண்டிருந்த காமெரா, மெதுவாக திரும்பி அவர்கள் பக்கம் நகருகிறது.  அந்த ஆண் இந்தக் காமெராவைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.  காமெரா நன்றாகப் பொருத்தப்பட்டுள்ளது என்று வாழ்த்துகிறான்.  அவனுக்கு இந்தக் காமெரா திருடனைக் கண்டுபிடிக்க உதவுவதாக நினைக்கிறான்.  அவனுக்குப் பின்னால் உள்ள சீட்டில் ஏறி அமர்ந்த பெண்ணிற்கும் அவனுக்கும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அவன் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறான்.  அவனுடைய நண்பனுடைய காரிலுள்ள டயர்களை ஒரு திருடன் திருடிவிட்டு, அந்த டயர்களுக்குப் பதில் செங்கல்களை வைத்துவிட்டதாக சொல்லுகிறான்.  அதுமாதிரியான திருடர்களை கொன்று விட சட்டம் போட வேண்டுமென்கிறான்.  பின்னால் அமர்ந்திருந்த பெண் அவன் சொன்ன கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.  ஒருத்தர் இரண்டுபேர்களுக்கு அதுமாதிரியான தண்டனை கொடுத்தால்தான் திருடாமல் இருப்பார்கள் என்கிறான்அந்த இளைஞன்.  அந்தப் பெண் தன்னை டீச்சர் என்று சொல்கிறாள். டாக்ஸியிலிருந்து இறங்கும்போது அவன் ஒரு பிக்பாக்கெட்காரன் என்று தன்னைப் பற்றி சிரித்தபடியே அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.   அந்தப் பெண்ணும் இறங்கிப் போய்விடுகிறாள். 
ஒமிட் என்ற இன்னொரு பயணி ஜாவர் பன்னஹியைப் பார்த்து, ‘உங்களை எனக்குத் தெரியும்.  உங்கள் மகன் என்னிடம் முக்கியமான சீடிகள் வாங்கியிருக்கிறார்..நீங்கள் படம் எடுப்பவர்.  ஏன் டாக்ஸி ஓட்டுகிறீர்.  அதுவும் படத்தில் வரும் காட்சியா,’ என்கிறார்.  டாக்ஸி ஓட்டடுவதும் ஒரு தொழில் என்கிறார் ஜாவர்.  ஓமிட்டை எங்கேயும் பார்த்தமதிரி ஞாபகத்திற்கு வரவில்லை ஜாவருக்கு.  அதன்பின்தான் தெரிகிறது அவர் சினிமா சிடிகளை விற்பவர் என்று.   ஒமிட் உடனே புதியதாக வரப்போகும் படத்திற்கான சீடியைக் கொடுக்கிறார்.  ‘இந்தப் படம் இன்னும் வரவில்லையே?’ என்கிறார் பன்னஹி.  ‘படம் வெளியே வருவதற்கு முன் எனக்கு வந்துவிடும்,’ என்கிறார் ஒமிட்.  இந்தச் சமயத்தில் காரை ஒரு கும்பல் தடுத்து நிறுத்துகிறது.  டூ வீலரில் அடிப்பட்ட ஒருவரை அவசரம்ம் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு காரில் அடிப்பட்டவருடன் அவருடைய மனைவியும் சேர்ந்து ஏறுகிறார்கள்.  அடிப்பட்டவர் முகத்தில் ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது.  அவசரம் அவசரமாக உயில் எழுத விரும்புகிறார் அடிப்பட்டவர் தன் உயிர் போய்விடும் என்று பயந்து.  ஆனால் டாக்ஸியில் பேனாவும் பேப்பரும் இல்லை.  செல்போனில் அவன் சொல்வதைப் படம் பிடிக்கச் சொல்கிறான். அவனுக்குப் பிறகு அவன் மனைவிக்குத்தான் அவனுடைய வீடு தரவேண்டும்  இல்லாவிட்டால் தன் சகோதரர்கள் ஏமாற்றி விடுவார்கள் என்று சொல்கிறான். மருத்துவமனையில் அடிப்பட்டவனை சேர்த்தபிறகு அவன் மனைவி ஜாவர் பன்னஹிக்குப்போன் செய்கிறாள்.  தனக்கு படம் எடுத்த விடியோ படம் வேண்டுமென்கிறாள்.  ஜாவர் அதைத் தனியாக எடுத்துத் தருகிறேன் என்கிறார்.  பின் உன் கணவர் எப்படி இருக்கிறார் என்று கேட்கிறார்.  அவர் நலமாக இருக்கிறார் என்கிறாள். அப்படியென்றால் இந்த விடியோ எதற்கு என்று கேட்க, நான் அவர் சொன்னதை வைத்துக்கொள்ள வேண்டும்.  பின்னால் உதவும் என்கிறாள். இதுமாதிரி நகைச்சுவையுடன் காட்சி அமைப்பு இயல்பாக இப்படத்தில் மிளிர்கிறது.  
ஒமிட் திருட்டு சீடி விற்பவர்.  அதை அவர் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விற்கிறார்.  ஒரு வீட்டிற்குச் சென்று அந்த சீடிகளை விற்க வரும்போது காரிலேயே இந்த வியாபாரம் நடக்கிறது.  ஒமிட் ஜாவர் பன்னஹியைத் தன் பார்டனர் என்கிறார் சீடி விற்பவனிடம்.  அவன் கேட்கிறான்.  “உங்களை அவர் பார்டனர் என்று சொல்கிறாரே, உண்மையா?” என்று கேட்கிறான்.  “அப்படியா சொன்னார்,” என்கிறார் ஜாவர் பன்னஹி.  
பன்னஹி சினிமாப் படம் எடுப்பவர் என்று அவனுக்கும் அவரைப் பற்றி தெரிகிறது. சினிமா படம் எடுப்பதைப் பற்றிய சந்தேகத்தை அவரிடம் கேட்கிறான் அநத இளைஞன்.  ‘நல்ல நாவல்கள் படித்தாகி விட்டது..நல்ல படங்கள் எடுத்தாகி விட்டது,’ என்கிறார் ஜாவர் பன்னஹி.
அந்த இளைஞன் சீடிக்களை வாங்கிக் கொண்டு போனபிறகு, ஜாவர் பன்னஹி பெயரைக் குறிப்பிட்டால், அதிகமாக சீடி விற்க முடியும் என்கிறார் ஒமிட்.  ஈரானில் நல்ல சினிமாக்களை தியேட்டர்களில் பார்க்க முடியாது.  அதனால்தான் சீடிக்கள் மூலம் விற்க முடிகிறது என்கிறார் ஒமிட். இது ஒரு கலாச்சார சேவை என்கிறார் ஓமிட்.  கண்ணாடி ஜாடியில் மீன்களுடன் இரண்டு பெண்கள் அவசரமாக புனித ஸ்தலத்திற்குப்  போக வேண்டுமென்று மன்றாடி டாக்ஸியில் ஏறிக்கொள்கிறார்கள்.
ஒமிட்டை ஒரு இடத்தில் இறக்கி விடுகிறார்.  கீழே இறங்கும்போது சீடி விற்பதற்காக அவர் பெயரைப் பயன்படுத்தியதற்காக மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறார் ஒமிட்.  ஜாவர் பன்னஹியும் காரில் வந்ததற்காக அவரிடமிருந்து பணம் வாங்கவில்லை.  கலாச்சார சேவையாக இருக்கட்டும் என்கிறார் சிரித்துக்கொண்டு.   
காட்சி மாறுகிறது.  பின்னால் கண்ணாடி ஜாடியுடன் அமர்ந்த இரண்டு வயதான பெண்கள் அவசரமாக புனித ஸதலத்திற்குச்  செல்ல வேண்டுமென்று  நெருக்கடியைக் கொடுக்கிறார்கள்.  12 மணிக்குள் போக வேண்டுமென்றும் ஜாடியில் உள்ள மீன்களை சேர்பிக்க வேண்டுமென்றும் குறிப்பிடுகிறார்கள்.  ஜன நெருக்கடி இருந்தால் அங்கே 12 மணிக்குள் போக முடியாது என்கிறார் பன்னஹி.  அவர்கள் படுத்திற பாட்டில் பன்னஹி வேகமாக டாக்ஸி ஓட்ட ஒரு இடத்தில் பிரேக் போட அவர்கள் வைத்திருந்த கண்ணாடி ஜாடி கீழே விழுந்து ஒடைந்து விடுகிறது.  மீன்களும் கீழே விழுந்து விடுகின்றன.  பதட்டத்துடன் அந்தப் பெண்கள் கத்துகிறார்கள்.  மீன்கள் செத்து விடும் என்று கத்துகிறார்கள்.  அவசரம் அவசரமாக காரின் பின்பக்கத்தில்  உள்ள  ஒரு பிளாஸ்டிக் பையில் தண்ணீரை நிரப்பி மீன்களை அதில் இட்டு காப்பாற்றுகிறார் பன்னஹி.  அவர்கள் அவசரப்படுத்த, பன்னாஹி அவர்களை வேறு டாக்ஸியில் போகும்படி சொல்கிறார்.  பள்ளி வாசலில் இவருக்காக காத்துக்கொண்டிருக்கும் 11 வயது  சகோதரி மகள் அன்னாவை அழைத்துக் கொண்டு போக வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு.  அவர்கள் இருவரும் இவரை திட்டியபடியே வேறு டாக்ஸிக்குப் போகிறார்கள். டாக்ஸியில் வந்ததற்கு இவருக்கு அவர்கள் பணமே கொடுக்கவில்லை.  இதே நம்ம ஊராக இருந்தால் அங்கு நடக்கிற விதமே வேறாக இருக்கும்.  
அன்னா அவர் காரில் ஏறிக்கொண்டே இவரைக் கிண்டல் செய்கிறாள்.  “இவ்வளவு அழகான பெண்ணை யாராவது கடத்திக் கொண்டு போனால் என்ன ஆகிறது?” என்று கேட்கிறாள்.  “அப்படியெல்லாம் நடக்காது என்கிறார்,” இவர்.  ஆனால் 11 வயதான பெண் இப்படியெல்லாம் பேசுவாளா என்று தோன்றுகிறது எனக்கு.  அன்னா ஒரு சின்ன காமெரா வைத்துக்கொண்டு இவரைப் படம் எடுக்கிறாள்.  காரிலேயே இதெல்லாம் நடக்கிறது.  அந்தப் பெண் படிக்கும் பள்ளிக்கூடத்தில் படம் எடுக்கும்படி சொல்கிறார்கள்.   அப்படி படம் எடுக்கும்போது  சில கட்டளைகளை நிறைவேற்ற  வேண்டும் என்று வகுப்பில் உள்ள ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.  ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தொடக் கூடாது.  ஆண் பாத்திரத்தில் நடிப்பவர்கள் டை கட்டக் கூடாது.  பர்சியன் பெயர் வைத்திருக்கக் கூடாது.  கொடூரமான உண்மையைக் காட்டக் கூடாது.  அன்னாவால் எப்படிப் படம் எடுத்க முடியும் என்று தெரியவில்லை.
டாகஸியை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு அராஷ் என்ற நண்பரைப் பார்க்கப் போகிறார் பன்னஹி. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் அந்த நண்பரைப் பார்த்தது.  சிறிது நேரம் பார்த்து விட்டு பன்னஹி திரும்பி வருகிறார்.  அந்த நண்பரும் அவர் கார் அருகில் வந்து அவளுடைய சகோதரி பெண் அன்னாவை ஐஸ் காப்பி வாங்கித் தர அழைத்துப் போகிறார்.  
இந்தப் படத்தில் பல இடங்களில் திருட்டுத்தனமாக சினிமா சீடிக்கள் விற்கிறார்கள்.  அதற்கு அடிப்படையான காரணம் ஈரானில் சினிமாப் படங்களை தியேட்டரில் திரையிட பயங்கரமான கட்டுப்பாடுகள் இருக்குமென்று தோன்றுகிறது.  தனியாக காரில் அமர்ந்திருககும்போது ஒருவநன் இவரிடம் சீடி விற்கிறான்.   மலர்களுடன் ஒரு பெண் வக்கீல் இந்தக் காரில் ஏறுகிறார்.  அவருக்கு ஜாவர் பன்னஹியைத் தெரிந்திருக்கிறது.  அரசாங்கம் கொடுக்கும் கெடுபிடிகளைப் பற்றி சொல்லிவிட்டுச் செல்கிறாள்.  அவள் போனபின் டாக்ஸியின் பின்னால் அமர்ந்த அன்னா ஒரு பர்ûஸக் கண்டுபிடிக்கிறாள்.  பன்னஹியிடம் அதைக் காட்டுகிறாள்.  அந்தப் பர்ஸ் வயதான இரண்டு பெண்மணிகள் காரில் தவற விட்டது என்று பன்னஹிக்குத் தெரிகிறது.  அதைக் கொண்டுபோய் கொடுக்க அந்தப் புனித இடத்திற்கு இருவரும் செல்கிறார்கள்.  காரை ஓரிடத்தில் வைத்துவிட்டு அவர்கள் இருவரும் அந்த வயதான பெண்களைப் பார்க்கச் செல்கிறார்கள். 
அவர்கள் போனவுடன், டூ வீலரில் வந்த இரண்டு இளைஞர்களில் ஒருவன் காரை நோக்கிச் சென்று டாக்ஸியின் கதவை உடைத்து உள்ளே எதாவது கிடைக்கிறதா என்று பார்க்கிறான்.   எல்லோரும் இருக்கும் பகல் நேரத்திலேயே இந்தக் கொள்ளை நடக்கிறது.  அதில் காமெராவும் சேதம் அடைந்து விடுகிறது.  காமெராவிலிருந்து படம் எதுவும் பிடிக்கவில்லை. ஆனால் அவர்கள் பேசுவது காதில் விழுகிறது.  படம் இத்துடன் முடிந்து விடுகிறது.  டாக்ஸியையும் காமெராவையும் வைத்து அருமையாக எடுக்கப்பட்ட படம் இது.  

வழித்துணை?

ஞானக்கூத்தன் 



வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்குக் கண் பார்வை போய்விட்டது. எதற்கெடுத்தாலும் மற்றவர்களுடைய உதவியை அவர் கேட்கத் தொடங்கினார். இதனால் வீட்டில் இருந்தவர்களுக்குக் கஷ்டம். அவரவர்களுக்கு வேலை இருக்கும்போது இவர் அடிக்கடி தனக்கு உதவி செய்யக் கூப்பிட்டால் எப்படி? நாயனாருக்கும் வருத்தம். திருவொற்றியூர் உறை சிவபெருமானிடம் தனக்கு நேர்ந்த குறையைச் சொல்லி முறையிட்டார். பத்துச் செய்யுளில் ஐந்தாவது செய்யுளில் சொல்கிறார்:
கழித்தலைப்பட்ட நாயது போல
ஒருவன் கோல் பற்றிக் கறகற இழுக்கை
ஒழித்து நீ அருளாயின செய்யாய்
ஒற்றியூர் எனும் ஊர் உறைவனே.

தெருவில் அவருக்கு உதவி செய்ய வந்தவன் அவர் பிடித்துக்கொண்டிருந்த ஊன்றுகோலின் மறுமுனையைப் பிடித்துக் கறகற என்று இழுத்துச் சென்றானாம். நாயனார் அப்படி ஒன்றும் ஊர் அறியாத அநாமி அல்லர். இருந்தும் அவருக்குக் கிடைத்த மரியாதை இவ்வளவுதான் – கறகற இழுக்கை – வீட்டுக்கு வெளியில் இந்த நிலைமை என்றால் வீட்டிலும் அப்படித்தான்.
அகத்திற் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால்
அழையேல்! போகுருடா! எனத் தரியேன்
முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன்
முக்கணா, முறையோ?

என்கிறார் நாயன்மார். எதற்காகவாவது கூப்பிட்டால் அழைக்காதே போ குருடா என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லிவிடுகிறார்களாம். ‘குருடா’ என்று திட்டவே செய்துவிடுகிறார்கள். உலகுக்கு நாயன்மாராக இருந்தாலும் வீட்டில் அதற்கென்று ஒன்றும் தனி மதிப்பில்லை; இந்த ஒரு விஷயத்தை நாயன்மாரின் வாழ்க்கைப் பின்னணியில் வைத்துப் பார்த்தால் பல கேள்விகளைக் கேட்கத் தோன்றுகிறது. ஆனால் இக்கட்டுரையில் வேறொன்றைப் பார்க்க வேண்டியிருப்பதால் அந்தக் கேள்விகளை எடுத்துக்கொள்ளவில்லை. மேலே கொடுக்கப்பட்ட அடிகளுக்கு முந்திய அடிகள் –
மகத்திற் புக்கதோர் சனியெனக் கானாய்
மைந்தனே மணியே மணவாளா

இந்த அடியில் மகத்தில் சனி இடம்பெயர்வது போல் இருக்கிறது நீ என்னிடம் இருப்பது என்று சிவபெருமானைக் குறிப்பிடுகிறார்.
ஒரு சமய சொற்பொழிவாளர் இந்த அடியை எடுத்துத் தனக்குள்ள – அல்லது ஒரு மட்டில் உள்ள – ஜோதிட அறிவைக் காட்டிக்கொண்டு உரையாற்றிக்கொண்டிருந்தார். அவரது சொற்பொழிவைக் கேட்கப் பொறுக்காத ஒருவர் கூட்டத்தை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு மகத்தில் சனியாம். அந்த ஆன்மீகச் (?) சொற்பொழிவாளர் நாகரிகம் பற்றாத வெற்றுப் பேர்வழி என்று வருந்திவிட்டுப் போனார்.
சுந்தரர் தனது நிலைமையைக் கூறும்போது வான சாத்திரம், சோதிடம் பற்றிக் கூறினார். தமிழுலகத்தில் அந்த வான சாத்திர அறிவு பற்றி அறிஞர்களிடத்தில் சர்ச்சை உண்டு. ‘ஹோரா’ என்ற கிரேக்கச் சொல் தமிழின் ‘ஓரை’ என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது என்று சொல்லப்படுவதுண்டு. சங்க இலக்கியத்தைச் சார்ந்த கலித்தொகையை ஒப்பச் சிறந்த நூலான பரிபாடலிலும் வான இயல் அல்லது கோள்களின் இருப்பு பற்றிப் பேசப்படுகிறது. வையை நதியைப் பற்றி ஆசிரியர் நல்லந்துவனார் இயற்றிய பரிபாடலில் வான சாத்திரக் குறிப்புகள் இடம்பெறுகின்றன. இந்தப் பாட்டுக்கு நாகனார் பாலைப் பண்ணில் இசையமைத்திருந்தாராம். பரிபாடல் தொடக்கத்திலேயே வான சாத்திரக் குறிப்புகள் தரப்படுகின்றன.
விரிகதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப
எரிசடை எழில்வேழம் தலையெனக் கீழிருந்து
தெருவிடைப் படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளிவந்து ஏற்றியல் சேர
வருடையைப் படிமகன் வாய்ப்பப் பொருள்தெரி
புந்தி மிதுனம் பொருந்தப் புலர்விடியல்
அங்கி உயர்நிற்ப அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்குப் பால்எய்த இறையமன்
வில்லிற் கடைமகரம் ஏவப் பாம்பொல்லை
மதிய மறைய வருநாளில் வாய்ந்த
பொதியின் முனிவன் புரைவரைக் கீறி
மிதுனம் அடைய விரிகதிர் வேனில்
எதிர்வரவு மாரி இயைக என இவ்வாற்றால்
புரைகெழு சையம் பொழிமழை தாழ
நெரிதரூஉம் வையைப் புனல்…

பரிபாடலின் இந்தப் பகுதிக்குப் பரிமேலழகர் உரைத் தமிழைப் படிப்பது நன்றாக இருக்குமல்லவா.
‘1. – 3. விசும்பு மதியத்தோடு புணர்ப்பனவாகிய எரியும் சடையும் வேழமும் முதலாக அவற்றின் கீழிருந்து வீதியால் வேறு படுக்கப்பட்ட ஓரொன்று ஒன்பது நாளாகிய மூவகை இராசிகளுள். மேலவாய    நாண்மீன்களைக் கீழதாகிய மதி புணர்தலாவது அவ்வ நேர் நிற்றன் மாத்திரமாகலின் அவற்றை விசும்பு புணர்ப்ப என்றார்.
2. – எரி. அங்கியைத் தெய்வமாக உடைய கார்த்திகை; அதனால் அதன் முக்காலை உடைய இடபம் உணர்த்தப்பட்டது. சடை – சடையையுடைய ஈசனைத் தெய்வமாகவுடைய திருவாதிரை: அதனால் அதனையுடைய மிதுனம் உணர்த்தப்பட்டது. வேழம் – வேழத்திற்கு யோனியாகிய பரணி: அதனால் அதனை உடைய மேடம் உணர்த்தப்பட்டது.
இவை முதலாக இவற்றின் கீழிருந்தலாவது இவற்றது பெயரான் இடபவீதி, மிதுனவீதி, மேடவீதியென வகுக்கப்பட்டு அம்மூவகை வீதியுள்ளும் அடங்குதல். அவற்றுள் இடபவீதி: கன்னி துலாம் மீனம் மேடமென்பன; மிதுன வீதி: தேள் வில்லு மகரம், கும்பமென்பன. மேட வீதி, இடபம், மிதுனம், கற் கடகம், சிங்கம் என்பன. ஓரிராசியாவது இரண்டே கால் நாளாகலின், நந்நான்கிராசியாகிய இவை ஓரொன்று ஒன்பது நாளாயின. கோட்களுக்கு இடனாகலான் இவை பன்னிரண்டும் இருக்கை எனப்பட்டன.
4 – 10 நிறத்தையுடைய வெள்ளி இடபத்தைச் சேரச் செவ்வாய் மேடத்தைச்சேரப் புதன் மிதுனத்தைச்சேரக் கார்த்திகை உச்சமாக விடிதலுண்டாக வியாழம் சனியின் இல்லமிரண்டாகிய மகர, கும்பங்கட்கு உப்பாலை மீனத்தைச்சேர யமனைத் தமையனாக உடைய சனி வில்லுக்குப் பின்னாகிய மகரத்தைச் சேர, இராகு மதியமறையும்படி வருநாளின் கண்…
இதனாற்சொல்லியது ஆவணித் திங்கள் அவிட்ட நாளின் இக்கோட்கள் தமக்குரிய நிலமாகிய இவ்விராசிகளில் நிற்பச் சோமனை அரவு திண்ட என்பதாயிற்று.’
வைகையில் புதுவெள்ள வருகைக்கு ஜாதகம் கணித்திருக்கிறார் ஆசிரியர் நல்லந்துவனார். ஆற்று வெள்ளம் பயனுடையதாக இருக்குமா வேறு விதமாக இருக்குமா என்று தெரிந்துகொள்வது அவசியமல்லவா? பரிபாடலில் அறம், பொருள் நீங்க இன்பமே பொருளாக அமைந்து கடவுள் வாழ்த்தையும் சேர்த்துக்கொள்கிறது. கடவுள், காமம் இரண்டுமான இந்தக் கலவைக்குக் கொஞ்சம் சோதிடம் பார்ப்பது நல்லது என்று அந்துவனார் கருதினார் போலும்.
சுந்தரமூர்த்தி நாயனாரும் அந்துவனாரும் சோதிடத்தை, வானிலை சாத்திரத்தை ஆதங்கமான விஷயங்களோடு தொடர்புபடுத்தியுள்ளனர். ஆனால் சுப்பிரமணிய பாரதியார் வான சாஸ்திரம் சொன்ன விஷயங்களைக் கண்டு வியந்தவர். அவர் ‘சோதிடம்தனை இகழ்’ என்றவர். பிரபஞ்சத்தைப் பற்றிய அவர் விருத்தத்தில் அவரைத் திகைக்கவைத்தது திசைய ஆனால் அச்செய்யுளில் சூரியனிடத்திலிருந்தும் நட்சத்திரத்திடமிருந்தும் நம்மை அடைய ஒளி எடுத்துக்கொள்ளும் காலத்தையும் ஒளியின் வேகத்தையும் குறித்தே பேசுகிறார். இக்கவிதை அவரது இந்தியா இதழில் (3.4.1909) வெளியானது.
ஒரு நொடிப் பொழுதில் ஓர்பத்
தொன்பதா யிரமாம் காதம்
வருதிறல் உடைத்தாம் சோதிக்
கதிரென வகுப்பர் ஆன்றோர்
கருதவும் அரிய தம்ம.
கதிருடை விரைவும் அஃது
பருதியின் நின்றோர் எட்டு
விநாடியிற் பரவும் ஈங்கே.

உண்டொரு வான்மீன் அஃதை
யூணர்கள் ஸிரியஸ் என்ப.
கண்ட அம் மீனின் முன்னை
விரைவொடு கதிர்தான் இந்த
மண்டலத்து எய்த மூவாண்டு
ஆமென மதிப்பராயின்
எண் தரற்கு எளிதோ அம்மீன்
எத்தனை தொலையதென்றோ!

கேட்டிரோ நரர்காள் வானிற்
கிடக்கம் எண்ணரிய மீனிற்
காட்டிய அதுதான் பூமிக்
கடுகினுக்கு அணித்தாம் என்பர்.
மீட்டுமோர் ஆண்டு மூவா
யிரத்தினில் விரைந்தோர் மினின்
ஓட்டிய கதிர்தான் இங்ஙன்
உற்றிடும் தகைத்து முண்டே.

பாரதியார் தரும் செய்திகளைக் கேட்டு நாமும் ‘கருதவும் அரிய தம்ம’ என்று சொல்ல விரும்பினாலும் நம்மை அவர் ‘நரர்காள்’ என்று அழைக்கும்போது ‘ஓய், ஓய்’ என்று சொல்லத் தோன்றுகிறது.
பிச்சமூர்த்தியின் ‘வழித்துணை’ என்ற நெடுங்கவிதை வான நூல் அறிவை வெளிப்படுத்துகிறது. என்றோ நமது புராணங்களில் படித்த ஒரு கதை இதற்கு ஆதாரம். கருவை மட்டும் எடுத்துக்கொண்டேன் என்ற பீடிகையோடு தொடங்குகிறது இந்நெடுங்கவிதை.
பண்டைப் பழங் குயவன்
….. ….. …..
….. ….. …..
ஏமாற்றும் காற்றை
உட் கொண்ட பாண்டங்கள்
ஒலிக்காத பேச்சில்
வினவுவதை உணர்ந்தான்
….. ….. …..
….. ….. …..
சட்டிப் பானைக்
கடைக் காரனாநீ
மரமும் அறியாத
மலட்டுக் கலைஞனா?
வனப்புக் கடலறியா
வாவித் தவளையா?

பழங்குயவன் வேலை செய்துகொண்டிருந்தபோது அவனிடத்திலிருந்த இடே நேரத்திரையில் பல வினோதமான காட்சிகளைப் பார்க்கிறான். அவரிடத்தில் பானைகள் பேச் தொடங்கிவிட்டன. இதற்கு ஏமாற்றும் காற்று, தூண்டுதலாய் உள்ளது. குயவன் மூர்ச்சித்துவிட்டான். குமர புரத்திலிருந்து வீசிய மூலிகைக் காற்று முகத்தில் பட்டதும் விழியைத் திறக்கிறான். இந்தக் குமர புரத்தில் வாழ்ந்த தச்சனை வருணிக்கிறார் ந.பி.மூ. சுவடில்லாத பாதையில் வழிகாட்ட ஒரு (மந்திர) கைக்கோலைச் செய்யக் காட்டிற்குப் போகிறான். காட்டில் அதற்கேற்ற மரத்தைத் தேடுகிறான். அவன் இருப்பிடத்துக்கு அருகில் இந்த மரம் முளைத்திருக்கவில்லை. காட்டில் பல மரங்கள் அவனைத் தன்னைப் பயன்படுத்திக்கொள்ளும்படி அழைக்கின்றன. தச்சன் எதையும் எடுக்காமல் ஒவ்வொன்றின் இயல்பை ஆராய்கிறான். தச்சன் நல்லதைப் பொறுக்கப் பிடித்த நாளைக் கணக்கிட்டால் பழங்குயவனுக்கு வியப்பாக இருக்கிறது. இங்கே ந.பி.மூ. கோள்களின் சலனப் படத்தை அறிமுகப்படுத்துகிறார்.
நண்டு நடமாடும் கடகத்தில் இருந்த ரவி
இன்றோ
முதலைக் கரவிருக்கும்
மகரத்தில் தென்பட்டான்

கடகத்தில் இருந்த சூரியன் (ரவி – ந.பி.மூ. சூரியனை ‘ரவி’ என்றே பிற இடங்களிலும் குறிப்பிடுகிறார்) மகரத்துக்கு வந்துவிட்டான் என்கிறார். இது காலக் கழிவை மட்டும் காட்டாமல் அந்தத் தச்சனின் அகவாழ்வின் சலனங்களையும் காட்டப் பயன்படுவது போல் தெரிகிறது. வானத்தில் ஒரு ஜன்னலை வசதியாக அமைத்துக்கொண்டு தச்சனைக் கவனித்துவந்த குயவன்
கண்டறியும் கிண்டலுடன்
காட்டுக்கு வந்தான்

இங்கே ந.பி.மூ. கோள்களின் நிலை பற்றிக் குறிப்பிடுகிறார்.
காட்டுக்கு வந்த அன்று
சிம்மத்தில் இருந்த குரு
இன்றும் இருக்கின்றான்
ஈராறு வருடம்
இன்றோடு ஓடியும்…

கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்துக்கொண்டும் வேறு சில செய்திகளைக் (உ.ம்) (மெய்ப்பொருளின் கதவிடுக்கா…) கொண்டு வந்தும் ந.பி.மூ. வாசகனுக்குப் பேருணர்வு ஒன்றைத் தர முயன்றுள்ளார்.
காண்டஹார் மன்னர் பரம்பரை
இலை உதிர் காலத்து
வாதா மரம் போல
இலை இலையாய் உதிர்ந்து
மொட்டைப்பேய் மரமாகி
காலக் கொடூரத்தின்
கண்ணாடி ஆயிற்று.

பழங்குயவனுக்கு வியப்பாக இருக்கிறது.
அவன்
தச்சனா தச்சனா
தச்சன் தானா?

இக்கவிதை 1963ல் வெளியாயிற்று. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைகளில் தலைசிறந்தனவற்றில் இதுவும் ஒன்று. இதில் ந.பி.மூ. தந்திருக்கும் கிரக சஞ்சார பலனை அத்துறை அறிந்தவர்கள் யாரேனும் விளக்கினால் நன்றாக இருக்கும். யாராவது செய்வார்களா?

பிப்ரவரி 4ஆம் தேதியை மறக்க முடியுமா?,,

அழகியசிங்கர்
இரண்டு ஆண்டுகளுக்கு  முன் பிப்ரவரி நாலாம் தேதி, ஒரு மதிய வேளையில் டிபன் பாக்ஸிலிருந்து மதிய உணவை எடுத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.  கண்புரை காரணமாக அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன்.  அந்த மாதத்துடன் நான் பதிவு மூப்பு அடைகிறேன்.  ஆனால் அந்த மாதம் என்னவோ அலுவலகம் வருவதே பெரிய அவஸ்தையாக இருந்தது.  கம்ப்யூட்டரில் உள்ள எழுத்துக்கள் தெரியவில்லை.  பஸ் எண் தெரியவில்லை.  ஒன்றும் புரிபடாமல் இருந்தேன்.  சும்மா ஆபிஸ் வந்திருந்து, மதியம் வரை சும்மாவே ஆபிஸில் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.  மதியம் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதுதான் போன் வந்தது.
அந்தப் போன் நாயக்கன்மார் தெருவிலிருந்து மிஸஸ் ஐராவதம் போன் செய்தார்.  “என்ன?” என்று கேட்டேன்.  “என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்.. திடீரென்று கீழே சாய்ந்து விட்டார்…ஆஸ்பத்ரிக்குப் போக வேண்டும்….வர முடியுமா?”
அதைக் கேட்டவுடன் பதட்டமாகி விட்டேன்.  என் வீட்டிலிருந்து ஐராவதம் வசித்த நாயக்கன்மார் வீடு பக்கம். வண்டியை இப்படித் திருப்பினால் நாயக்கன்மார் தெரு வந்து விடும்.  பொழுது போகவில்லை என்றால் பலமுறை அவர் வீட்டுக்குப் போய் வம்பளப்பேன்.  அவருக்குப் பல உதவிகளையும் செய்திருக்கிறேன்.  ஏடிஎம்மில் போய் பணம் எடுக்கக் கூட அவரால் முடியாது.  நான் துணைக்குப் போவேன். அவரை அழைத்துக் கொண்டு போய் பணம் எடுத்துக் கொடுப்பேன்.  கட்டாயம் வாரம் ஒரு முறையாவது பார்த்து விடுவேன். 
ஐராவதம் சாதாரண குடும்பத்திலிருந்து முன்னுக்கு வந்தவர்.  அவருடைய தந்தையார் ராணுவத்தில் தன் கால்களை இழந்தவர்.  ஜாப் டைப்பிங் மூலம் குடும்பத்தை நடத்தியவர்.  ஐராவதம் தன் திறமையால் ரிசர்வ் வங்கியில் பணியில் இருந்தவர்.  அவருடைய சகோதரர் வைத்தியநாதன் அவரை விட திறமையானவர்.  ஐராவதத்திற்கு கொஞ்சம் காது கேட்காது..அவர் சிரிக்கும்போது சத்தம் போடாமல் சிரிப்பார். சில சமயம் அவருக்குக் கோபம் வந்தால் கண்டபடி திட்டிவிடுவார். அவருக்கென்று வாரிசு கிடையாது.  
ஒரு முறை அவரைப் பார்த்துக் கேட்டேன் : “யாரையாவது சுவிகாரம் எடுத்துக்கொண்டு வளர்க்கக் கூடாதா?” என்று.  ஏனென்றால் அவருக்குக் குழந்தைகள் என்றால் பிடிக்கும்.  ஆனால் அவர் சொன்ன பதிலைக் கேட்டு எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.
“என்ன நாயா பூனையா வளர்க்க?” என்றார்.
இந்தக் குத்தல் நகைச்சுவை அவருக்கு இயல்பாக இருப்பது. நகைச்சுவையுடன் எழுதக் கூடியவர்.  பேசக்கூடியவர்.  அவர் உலக அளவில் பல புத்தகங்களைப் படித்திருக்கிறார்.  சரளமாக மொழிபெயர்ப்பார். பல உலக சினிமாக்களைப் பற்றிய அறிவு அவருக்கு உண்டு.  காது சரியாகக் கேட்காவிட்டாலும் இசைக் கச்சேரிகளுக்குப் போவார்.  பல பத்திரிகைகளில் அவர் கதைகள் வெளிவந்திருக்கின்றன.  ஒரு காலத்தில் வெளி வந்த பல சிறுபத்திரிகைகளுக்கு அவர்தான் விஷயதானம் செய்தவர். “கணையாழி நடத்திய கஸ்தூரி ரங்கனை விட தீபம் நா பார்த்தசாரதி நல்லவர். எழுத்தாளர்களை மதித்து படைப்புகளைப் பிரசுரம் செய்வார்.  எதாவது எழுதிக் கொண்டு போனால் ஏன் என்று கேட்காமல் பிரசுரம் செய்து விடுவார்,ýý என்பார்.
நான் விருட்சம் கொண்டு வரும்போது அவரிடம் அடிக்கடி போய் நிற்பேன்.  எதாவது எழுதித் தரச் சொல்வேன்.  தர்ம கீர்த்தி, ஆர் சுவாமிநாதன், வாமனன் என்று பல பெயர்களில் விருட்சத்திற்கு எதாவது எழுதித்தருவார்.  விருட்சத்திற்கு புத்தக மதிப்புரைக்காக அதிகமாக புத்தகங்கள் வரும்.  உடனே ஐராவதத்திடம் மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனில் பார்த்துக் கொடுப்பேன்.  ஒரு வாரத்தில் எல்லாவற்றையும் படித்துவிட்டு கடகடவென்று எழுதித் தந்துவிடுவார்.  
இப்படித்தான் ஒரு முறை அவர் எழுதித் தந்த காலச்சுவடு ஆண்டுமலர் விமர்சனத்தையும் பிரசுரம் செய்து விட்டேன்.  அது பெரிய வம்பாகப் போய்விட்டது.  üதன்னை நவீன தமிழ் இலக்கிய உலகின் ஞானத்  தந்தையாக அறிவிக்க மேற்கொண்டிருக்கும் முயற்சிý என்று சுந்தர ராமசாமியைப் பற்றி எழுதி விட்டார்.  அந்த விமர்சனத்தைத் தாக்கி அந்த மலரில் எழுதிய எல்லா எழுத்தாகளர்களும் சுந்தர ராமசாமி உள்பட எனக்குப் பதில் எழுதினார்கள்.  சிலர் கடுமையாக எழுதினார்கள்.  
எம் வேதசகாயகுமார், üவாலிகளும் எழுத்துலகக் கூலிகளும்ý என்ற தலைப்பில், ஆனந்தவிகடனில் மூன்றாம்தர தமிழ்த் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதிக் கொண்டிருந்த நபர்களை, அதே பேனாவுடன் விருட்சம் இதழில் மதிப்புரை எழுத அழைத்து வந்தது யார்? என்று ஐராவதத்தைக் கேள்வி கேட்டு எழுதி இருக்கிறார்.  பின் முகமற்ற அசடு என்கிறார் ஐராவதத்தை.  ராஜ மார்த்தாண்டன் விமர்சன வக்கிரங்கள் என்ற தலைப்பில் ஐராவதத்தைச் சாடி உள்ளார்.  இப்படி ஒரு ஒன்றரை பக்க விமர்சனத்தால் ஐராவதம் என்னை வம்பில் மாட்டி விட்டார் என்று நினைத்தேன்.
அந்த விமர்சனம் வந்த சமயத்தில் நான் பத்திரிகையை நிறுத்தி விடலாம் என்று கூட நினைத்தேன்.  இந்த நிகழ்ச்சிக்குப் பின் நான் ஐராவதத்திடம் புத்தகவிமர்சனத்திற்காக புத்தகம் கொடுப்பதை கொஞ்சம்  குறைத்து விட்டேன்.     
ஒரு முறை ஐராவதம் அவர்களை இலக்கியச் சிந்தனை ஆண்டு விழாவிற்கு அழைத்துப் போனேன்.  அங்கு அவரைப் பார்த்த ந. முத்தசாமி அவர்கள் ஐராவதத்தைப் பார்த்து,”என்னைய்யா இந்தப் பக்கமெல்லாம் வந்திருக்கே?” என்று கேட்க, ஐராவதம் உடனே, “இதோ இவர்தான் என்னை (என்னைக் காட்டி) தூசித் தட்டி கொண்டு வந்திருக்கிறார்,” என்றார்.  அவரின் நகைச்சுவை உணர்வு என்னைச் சிரிக்க வைத்தது.  எதுவாக இருந்தாலும் மனதில் படுவதை டக்கென்று சொல்லிவிடுவார்.

இன்னொரு முறை லைப்ரரி போய்விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தோம்.  கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடம்பு சரியில்லாமல் பிரமிள் படுத்துக் கிடந்தார்.  ஐராவதத்தைப் பார்த்து,  “நீங்கள் பிரமிளைப் பார்க்க வருகிறீர்களா?” என்று கேட்டேன்.

உடனே ஐராவதம், “நான் இங்கயே இருக்கிறேன்.. நீங்கள் போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்…நான் அவருக்கு காட்சிப் பொருளாக இருக்க விரும்பவில்லை,” என்றார்.

இதுதான் ஐராவதம்.  எப்போதும் அவர் தனக்கென்று சிறப்பான உடை கூட வாங்கிப் போட்டுக்கொள்ள மாட்டார்.  ஒரு சுமாரான சட்டை அல்லது வேஷ்டியைத்தான் கட்டிக்கொண்டு இருப்பார்.   அவர் இருந்தத் தெருவில் ஆர்வி என்ற எழுத்தாளர் இருந்தார்.   ஐராவதத்தை ரொம்பவும் மதிப்பார்.   ஐராவாதமும்  ஆர்வி நாவல் ஒன்றின் பெயரைக்  குறிப்பிட்டு  அவர் எழுதியதில் அது சிறந்த நாவல் என்று கூறியிருக்கிறார்.   üஎப்போதும் மடிப்புக் கலையாத அயன் பண்ணியத் துணியைத்தான் ஆர்வி அணிந்து கொள்வார். தெருமுனை தூரம் நடப்பதற்குக் கூட இதுமாதிரி அணிவார்,ýஎன்று ஐராவதம் கிண்டல் செய்து கேட்டிருக்கிறேன்.

ஐராவதத்திற்கு செலவு செய்ய மனதே வராது.  ஒரு நல்ல ஓட்டலில் நிறையா செலவு செய்து டிபன் கூட வாங்கிச் சாப்பிட மாட்டார்.  சிக்கனமாக இருப்பார். அப்படிப் பார்த்த எனக்கு ஒரு ஆச்சரியம்.  ஐராவதத்திற்கு ஸ்கூட்டர், மிதிவண்டி, கார் எல்லாம் ஓட்ட வராது.  ஆனால் அவர் விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டார்.  கார் உள்ளே போய் கார் சாவியை எப்படி திருப்புவது என்பது கூட அவருக்குத் தெரியாது.  டிரைவர்களை வைத்துக்கொண்டு பல கோயில்களுக்கு அவரும் அவர் மனைவியும் சென்றிருக்கிறார்கள்.  பல நண்பர்களை காரில் அழைத்துப் போயிருக்கிறார்கள்.   அந்தக் காரையும் வைத்துக்கொண்டு, டிரைவர்களுடன் அவர் நடத்தும் பேரம் கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கும்.  நானே சில டிரைவர்களை அவருக்குப் பிடித்துக் கொடுத்திருக்கிறேன்.  “நீர் வண்டி ஓட்டக் கத்துக்கொள்ளய்யா..வண்டியை நீயே வைத்துக்கொள்..எப்பவாவது என்னை அழைத்துக்கொண்டு போகும்போது மட்டும் நீ வந்தால் போதும்,”என்று கூட கூறியிருக்கிறார்.

ஐராவதம் ரொம்ப நாட்களுக்கு முன்பே கதைகள் எழுதுவதை நிறுத்தி விட்டார். புத்தகங்களைப் படித்து அதைப் பற்றி எழுதுவதுதான் அவர் வாடிக்கையாக இருந்தது.   திறமை இருந்தாலும், அவரால் கதை எழுத முடியவில்லை.   அவருடைய மாறுதல், கெட்டவன் கேட்டது என்ற இரண்டு சிறுகதைத் தொகுதிகளை விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்தேன்.

பல புத்தகங்களைப் படித்து தொடர்ந்து விமர்சனம் செய்தவரின் புத்தகங்களின் மதிப்புரையை எந்தப் பத்திரிகையும் பிரசுரம் செய்யவில்லை. அவர் எழுத்தை கண்டுகொள்ளவும் இல்லை.  இதுதான் ஐரனி.   இன்னும் கூட அவர் கதைகள் பல பத்திரிகைகளில் புதைந்து உள்ளன.   அவற்றையெல்லாம் கண்டுபிடித்துத் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வர உள்ளேன்.  மேலும் கவிதைகள். மொழிபெயர்ப்பு கட்டுரைகள், கதைகள் என்று ஏராளமாக அவர் எழுதியிருக்கிறார்.  மெல்லிய நகைச்சுவை உணர்வோடு ஐராவதம் மாதிரி யாராலும் எழுத முடியாது.     கடைசிக் காலத்தில் தெரு முனை கூட தனியாக அவர் நடக்கப் பயப்பட்டார்.  ஒரு முறை அப்படி நடந்து போகும்போது மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். அதிலிருந்து அவர் மனைவி அவரை தனியாகவே அனுப்பப் பயப்படுவார்.

“ஏன் வீட்டில் இருக்கிறீர்கள்?  வெளியே வாருங்கள்,” என்பேன்.

“எங்கும் வெளியே வரத் தயாராய் இல்லை,” என்பார்.  வீட்டிலேயே நான் என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று சொன்னவர் அதன்படி மனைவியின் மடியிலேயே இறந்து விட்டார்.  அப்படித்தான் அவர் முடிவும் நடந்தது.  அவரைப் பார்க்க நான் ஆட்டோவில்  வந்தபோது, பிணமாகத்தான் அவரைப் பார்க்க நேர்ந்தது.  அன்று நெற்றியில் விபூதி இட்டுக்கொண்டு பளிச்சென்று இருந்தார் ஐராவதம்.