கிராமீயப் பாடல்கள்

தொகுப்பாசிரியர் : வானமாமலை

தெய்வ கணங்கள்
கிராம மக்கள் நூற்றுக்கணக்கான தெய்வங்களை பெயர் கொடுத்து அழைக்கிறார்கள்.  ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி உண்டென்று நம்புகிறார்கள்.  கோயில்பட்டி அருகிலுள்ள சிறறூர்களில் மக்களால் வணங்கப்படும் தேவதைகளின் பெயர்பளை இப்பாட்டில் நாம் காண்கிறோம்.  முனியசாமி, ஐயனார், கண்ணாத்தா, பாப்பாத்தி, உலகம்மன், பெத்தனாட்சி ஆகிய பெயர்களை இப்பாட்டிலிருந்து நாம் அறிகிறோம்.
கிராம மக்கள், மேலே குறிப்பிட்ட தேவதைகளை மட்டுமின்றி முஸ்லிம் தர்க்காக்களுக்கும் நேர்ந்து கொள்வதுமுண்டு.  விசேஷக் காலங்களில் முஸ்லிம்களது யாத்திரை ஸ்தலங்களுக்கும் போவதுண்டு.
முத்து முனிய சாமி
மூர்க்கமுள்ள தேவதையே
சத்தத்தை நீ கொடய்யா
சரளி விட்டு நான்பாட
ஊருக்கு நேர் கிழக்கே
உறுதியுள்ள ஐயனாரே
சத்தத்தை நீ கொடய்யா
சரளி விட்டு நான் படிக்க.
நாட்டரசன் கோட்டையிலே
நல்ல தொரு பாப்பாத்தி
வயித்தவலி தீர்த்தயானால்
வந்திருவேன் சன்னதிக்கு
ஒட்டப் பிடாரத்திலே
உலகம்மன் கோயிலிலே
பூக்கட்டிப் பார்த்தேன்
பொருந்தலையே என் மனசு
கண்ணுலே அடிச்சுத்தாரேன்
கண்ட சத்தியம் பண்ணித் தாரேன்.
சிக்கந்தர் மலைக்கு வாங்க
சேலை போட்டுத் தாண்டித் தாரேன்.
பூப்பூக்கும் புளியமரம்
பொன்னிலங்கும் ஐயனாரு
நாட்டி லங்கும் பெத்தனாச்சி
நல்லவரம் தருவா.
ஏழுமலை கடந்து
எடுத்து வந்தேன் சண்பகப்பூ
வாடாமல் சாத்தி வாரும்
வட மதுரைக் கந்தனுக்கு.
வட்டார வழக்கு:
பாப்பாத்தி – பிரம்ம ராக்கி சக்தி
ஐயனாரு – சாஸ்தா
சேகரித்தவர் : எஸ் எஸ் போத்தையா   இடம் : கோவில்பட்டி வட்டாரம்
நாட்டு அரசன் கோட்டையிலே
நல்லதொரு கண் ஆத்தா
வயித்தவலி தீர்த்தியானா

வந்திருவேன் சன்னதிக்கே
வட்டார வழக்கு: 
கண் ஆத்தா – கண்ணகியைக் குறிக்கும்
சேகரித்தவர் : எஸ் பி எம் ராஜவேலு          இடம் : மீளகாட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *