மறந்து போன பக்கங்கள்….

அழகியசிங்கர்

கோடை வயல் என்ற தொகுப்பிலுள்ள தி சோ வேணுகோபாலனின் 7வது கவிதை கவலை.  இயல்பாய் இருக்க முடியாத வாழ்க்கையைக் குறித்த கவலைதான் இக் கவிதை.  ஒரு முறைக்கு இருமுறையாக படித்துப் பாருங்கள் இந்தக் கவிதையை.  
   கவலை
விண்ணை அண்ணாந்து பார்க்கின்றோமி:
ஆனால்?
விதிதேய்து விட்டெறிந்த
கிழிந்த பழஞ்செருப்பில்,
காலுதறி விட்ட
புழுதித் தடத்தில்
நெஞ்சைப் புரட்டுகிறோம்
அல்லது
அறிவால், இதயத்தால்
உருவமைக்க முடியாத ஊர்ப்புறத்தை நாடி
அடியளந்து அடியெல்லாம்
அஞ்சும் அடிச்சுவடாய்
அடைத்த கதவுக்குள்
அகப்பட்ட பழங்காற்றாய்
புழுங்கும் புதிராய்,
கற்பித்த கற்பனையும்
கண்ணாடிச் சில்லுகளாய்க் கண்டு
குமைகின்றோம்
இன்றிங்கிருக்கும் இயல்பை, சத்தியத்தை
இன்பத்தை, துன்பத்தை, வினாடித்துடிப்புகளை
தொட்டும் பார்த்தறியோம்
ஆனால்?
விண்ணை அண்ணாந்து பார்க்கின்றோம்
பார்த்து 
விடுவானேன் பெருமூச்சு?

கழுதைகளின் உலகம்…….

சா இளையராஜா 

 

பூமி
முழுவதும்
பல பூக்கள்
பூத்துக்
குலுங்கினாலும்
அவற்றில்
ஒரு பூக்கூட
அழகான
கழுதைகளாகிய
எங்கள் நிறத்தில்
இல்லை………….

பின் குறிப்பு :

கழுதைகளின் உலகம் என்ற தலைப்பில்  சா இளையராஜா என்பவரின் கவிதையை விருட்சம் 99வது இதழில் வெளியிட்டுள்ளேன்.  ஞானக்கூத்தன் இவருடைய கவிதைகளைக் கொடுத்து உதவி உள்ளார்.  கழுதைகளை அடிப்படையாகக் கொண்டு பல கவிதைகள் எழுதி உள்ளார் இளையராஜா.  நான் யோசிப்பதுண்டு ஒரு புத்தகத்தில் கழுதையைப் பற்றியே எல்லாக் கவிதைகளும் படிப்பது எப்படி இருக்கும் என்று.  ஒன்றிரண்டு கவிதைகள் என்றால் சரி?  ஆனால் எல்லாமே அப்படியே இருந்தால்……

அசோகமித்திரன் கதை….

அழகியசிங்கர்
99வது இதழில் வெளிவந்த அசோகமித்திரன் கதை இது.ஏற்கனவே ரேடியோவில் இக் கதை ஒலிபரப்பாகி உள்ளது.  தினமும் ஒரு கதை ஒரு கவிதை வாசிக்கலாம் என்று நினைக்கிறேன். அப்படி வாசித்தால் 30 நாட்களில் 30 கதைகள் வாசிக்கலாம்.  அதேபோல் 30 கவிதைகள் வாசிக்கலாம.  ஓராண்டில் 365 கதைகளையும், கவிதைகளையும் வாசிக்கலாம்.  அசோகமித்திரன் கதையைப் படித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்.
பிரிவுபசாரம்
                                                                                                      அசோகமித்திரன்


“துரை கூப்பிட்றாரு,” என்று பங்கா ஆட்டும் ஹமால் காந்திமதி சொன்னான். சங்கரலிங்கம் அவன் மேஜையிலிருந்து எழுந்து ஜில்லா கலெக்டர் மால்கம் ஸ்காட் அறைக்குச் சென்றான்.
“சங்கர்லிங்கம், எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. தி டைம் ஹாஸ் கம் டு பார்ட்,” என்றான்.
“என்ன மாஸ்டர்?”
“என்னை மாஸ்டர்னு கூப்பிடாதேன்னு எவ்வளவு தரம் சொல்லிவிட்டேன்? இனிமேல் நான் சொல்லத் தேவை இருக்காது.”
“ஏன்?”
“என்னை ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜுக்கு மாற்றி விட்டார்கள்.”
“ரொம்ப சந்தோஷம், மா…சார்.”
“உனக்கு இதில் சந்தோஷத்திற்கு என்ன இருக்கிறது?”
“உங்களுக்கு நல்ல வீடு கிடைக்கும். நிறைய உங்கள் நாட்டு நண்பர்கள் கிடைப்பார்கள். நல்ல உதவியாளர்கள் கிடைப்பார்கள்.”
“அப்பாடா, என்னை இன்றைக்கே அனுப்பிவிடுவாய் போலிருக்கிறதே?”
“அப்படி இல்லை, சார்.. இது என்னதான் ஜில்லா தலைநகரம் என்றாலும் பட்டிக்காடுதானே?”
“நான் வந்த போது அப்படித்தான் நினைத்தேன். இங்கிலாந்திலிருந்து என் கப்பல் மூன்று வாரங்கள் தாமதமாக வந்தது. என்னை இப்படி டின்னவேலிக்கு அனுப்பியதை நான் முதலில்  தண்டிக்கப்படுவதாக நினைத்தேன். இல்லை. எங்கும் கிடைக்க முடியாதஅறிவாளி எனக்கு உதவியாளனாகக் கிடைத்தான். நான்உன்னை எப்படியெல்லாம் விரட்டினேன்…”
“அதெல்லாம் இப்போது எதற்கு,சார்?”
இதெல்லாம் எனக்கு முதலில் தெரியவில்லை. எதைப்பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் எரிச்சல் வந்தது. உண்மையில் நாங்கள் காட்டுமிராண்டிகளாக அலைந்து திரிந்த காலத்திலேயே இந்த நாடும் ஊரும் சட்ட திட்டங்கள் கொண்ட முறையான சமூகமாக இருந்தது. இதெல்லாம் எங்கள் பாட புத்தகங்களிலேயே இருந்தது நான் மனதில் ஏற்றுக் கொள்ளவே இல்லை. சங்கரலிங்கம், நான் உனக்கு எவ்வளவோ கடமைப் பட்டிருக்கிறேன்.
“நான்தான் கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு சாதாரண ஹமாலாக இருந்த என்னை குமஸ்தா ஆக்கினிர்கள்.”
“சங்கரலிங்கம், நீ எப்படியும் முன்னுக்கு வந்து விடுவாய். சர்க்கார் வேலை இல்லாது போனால்கூட நீ எப்போதும் ஓர் அறிவாளியாக, ஒரு தலைவனாக இருப்பாய். எனக்கு அதில் சந்தேகம் இல்லை. நான் வெறும் பரிட்சை எழுதி இங்கு வந்து உட்கார்ந்திருக்கிறேன்.”
“எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.”
“ஏதாவது சொல்லவேண்டும் என்றால் இப்போதே சொல்லிவிடு. நாளைக்கே எனக்குப் பதில் வேறு ஒருவன் வரப் போகிறான். அவனுக்கு இருபத்துமூன்று வயதுதானாம்.”
“அவரும் ஐ.சி.எஸ்.தானே?”
“சங்கரலிங்கம், பிரிட்டிஷ்காரன் இந்தப் பரிட்சையில் தேற நிறையச் சலுகைகள் உண்டு. ஓர் இந்தியன் அவ்வளவு எளிதில் தேற முடியாது.”
“ஏன், சார்?”
“பிரிட்டிஷ்காரனுக்குத் தேர்வு நடப்பது அவன் சொந்த நாடு.. இந்தியனுக்கு இங்கிலாந்து வேறிடம். அதைத் தவிர மதிப்பெண் தருவதிலும் வேறுபாடு இருக்கிறது. வெள்ளைக்காரன் ஐம்பது சத வீதம் பெற்றால் போதும். இந்தியன் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும்.”
“அப்போது சுபாஷ் போஸ், ஆர்.சி.தத், அரவிந்த கோஷ் போன்றவர்கள் இவ்வளவு கடுமையான விதிகளையும் தாண்டியா தேர்வு பெற்றார்கள்?”
“எனக்கே இதெல்லாம் தெரியாது. நான் ஒரு முறை கல்கத்தா சென்றிருந்தேன். அப்போது நீ சொன்ன ரொமேஷ் தத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவர் சொன்னார். எனக்கு ஐ.சி.எஸ். என்று சொல்லிக் கொள்ளவே வெட்கமாயிருந்தது.”
“சார், நீங்கள் இப்படி கூறுகிறீர்கள். ஆனால் இது அவர்களுடைய உரிமை என்றபடி இருந்த பலரை நான்  பார்த்திருக்கிறேன். உங்களுக்கு முன்பு இருந்த சலெக்டர்தான் நாங்கள் எல்லோரும் குதிரை பின்னால் ஓடி வர வேண்டும் என்று உத்தரவு போட்டார்.”
“என்ன அநியாயம்! நானும் அப்படித்தான் ஆரம்ப நாட்களில் இருந்தேன். என்னைப் போன்று இரு மடங்கு வயதானவர்களை ஓடி வர வைத்திருக்கிறேன். சங்கரலிங்கம். உன்னைக் கூட நான் அப்படி ஓட வைத்திருக்கிறேன்..”
“மாடமுக்கு விவரம் தெரியுமா?
“எது?”
“உங்களை மெட்ராஸ§க்கு மாற்றியிருப்பது.”
“நான் இன்னும் அவளிடம் சொல்லவில்லை. இந்த ஊரை விட்டுப் போக என்னை விட அவள்தான் வருத்தப்படுவாள்.”
“இல்லை, சார். அவளுக்குப் புது இடம் போவது மகிழ்ச்சியாக இருக்கும்.”
“தெரியாது. உண்மையில் இந்த ஊரில் என்னை விட அவளுக்குத்தான் நிறைய நண்பர்கள்.  நான் முதலில் ஒரு வருடத்திற்காகத்தான் டின்னவேலிக்கு வந்தேன். ஆனால் இரண்டு ஆண்டுகள் இருந்து விட்டேன். முதல் வருடம் நான் யாரிடமும் பேசாமல், யாரிடமும் எந்த உறவும் வைத்துக் கொள்ளாமல் இருந்து விட்டேன். ஆனால் உலகம் என்பது இங்கிலாந்து மட்டும் அல்ல என்று தெரிவதற்கு அந்த ஓராண்டு தேவைப்பட்டது.”
“நீங்கள் தேவை இல்லாமல் நிந்தித்துக் கொள்கிறீர்கள்.”
“இதெல்லாம் நான் சொல்ல இன்று விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது. வருகிறவன் சரியான வெள்ளைக்காரன். எங்கள் ஊரில் ஸ்காட்லண்டுக்காரர்கள் என்றால் கொஞ்சம் இளப்பம்.”
“பாஸ்வெல்லே சொல்லியிருக்கிறார்.”
’அப்படியா? எங்கே?”
“ஜான்ஸன் வாழ்க்கை வரலாற்றில்.”
ஸ்காட் சங்கரலிங்கம் கையைப் பிடித்துக் கொண்டான். “நீ படித்திருக்கிறாயா? சங்கர்லிங்கம், நீயும் என்னோடு மெட்ராஸ் வந்து விடு.”
சங்கரலிங்கம் பதில் பேசாமல் இருந்தான்.
“இல்லை, சங்கரலிங்கம். எங்கள் கவர்னர் முன் நாங்கள் அடிமைகள் போலத்தான் இருக்க வேண்டும். உண்மையில் இதை ஒரு வெள்ளைக்காரன் எதிர்க்கவில்லை. ஆனால் நிறைய இந்தியர்கள் எதிர்த்திருக்கிறார்கள். நீயும் வேண்டாம், உன் வேலையும் வேண்டாம் என்று உதறி எறிந்திருக்கிறார்கள். எனக்குப் பாண்டிச்சேரி சென்று அரவிந்த கோஷைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. ஆனால் முடியாது.”
“சார், உங்களைத் தனியே விட்டுச் செல்கிறேன். நீங்கள் இவ்வாறெல்லாம் ஒரு குமஸ்தாவிடம் பேசக் கூடாது.”
“நான் உன்னை என் நண்பனாக, ஒரு வழிகாட்டியாக நினைத்துப் பேசுகிறேன். இன்று விட்டால் அப்புறம் சந்தர்ப்பமே கிடைக்காது.”
”நீங்கள் சென்னை சென்றால் அரவிந்தரை விட ரமணரைப் பார்ப்பது நல்லது. அரவிந்த கோஷ் ஐ.சி.எஸ். ஞாபகத்தில் உங்களோடு பழைய ஐ.சி.எஸ்.காரர்கள் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கும் அபாயம் இருக்கிறது. ரமணர் பழைய ஞாபகமே இல்லாமல் உங்களோடு பேசக் கூடும். இல்லை, உங்களுடன் அவர் பேசாமலேயே  போனாலும் போய் விடலாம். மலையைச் சுற்றிக் கொண்டிருப்பார்.”
“எங்கே அது?”
“திருவண்ணாமலை. ஒன்றுமே வேண்டாம். நீங்கள் உங்கள் பொறுப்புகளைப் பார்த்துக் கொள்ளுங்கள்.”  
”சங்கரலிங்கம், நான் உன் வீட்டுக்கு வர ஆசைப்படுகிறேன். அழைத்துப்போக முடியுமா?”
“சார், கலெக்டர் குமஸ்தா வீட்டுக்கெல்லாம் போகக் கூடாது. மேலும் என் வீடு இருபது மைல் தள்ளி இருக்கிறது.”
“ஊர் பெயர் என்ன?”
     சங்கரலிங்கம் சொன்னான்.
     ஸ்காட் முகம் கறுத்தது “அங்குதான் நானும் என் மனைவியும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டோம்.”
”நீங்கள் எங்கள் கிராமத்துப் பெண்ணிடம் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது. மாட்டுக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் தெரியாதா? என்ன செய்வது? கிராமத்தார்கள் கொதித்துப் போய் விட்டர்கள்.”
“தவறுதான். பெரிய தவறுதான்.”
”அன்று அவர்கள் உங்களையும் மாடமையும் உயிரோடு கொளுத்த இருந்தார்கள்.”
“அந்த நாளை நினைத்து நான் பல இரவுகள் தூங்காமல் இருந்திருக்கிறேன். நீ அன்று அவர்களுடன் பேசி சமாதானப்படுத்தாமல் இருந்தால் நாங்கள் இன்று உயிரோடு இருந்திருக்க மாட்டோம்.”
“நானும் பயந்து விட்டேன்.  விஷயம் இவ்வளவு தீவிரமாகப் போய் விடும் என்று நான் நினைக்கவில்லை.”
“அந்த நாளில்தான் சுயகௌரவம் என்பது வெள்ளைக்காரனின் ஏகபோகம் அல்ல என்று நான் தெரிந்து கொண்டேன்.”
”சார், இப்போது நான் உங்களிடம் ஒரு விஷயம் சொல்லவேண்டும்.”
“என்ன?”
“நானும் பயந்து விட்டேன். இருநூறு பேர் கூடி விட்டார்கள். கொளுத்த வருவார்கள் என்று தெரியாது. நானும் அந்த நாளை நினைத்துப் பல இரவுகள் தூங்காமல் விழித்திருந்து அவதிப் பட்டிருக்கிறேன்.”
“வட இந்தியாவில் வெள்ளைக்காரர்களைத் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். குண்டு எறிந்திருக்கிறார்கள். ஆனால் உயிரோடு கொளுத்தியதில்லை.”
“இங்கேயும் ஒரு துரையை ஒருவர் சுட்டுக் கொன்றிருக்கிறார்.”
“இங்கேதான்–மணியாச்சியில்.”
”உங்கள் விஷயத்தில் இவ்வளவு தீவிரமாக இருப்பார்கள் என்று நான் நினக்கவில்லை. நான் தவித்துப் போய்விட்டேன். தெய்வத்தை வேண்டினேன்”
“நீ எதற்கு அவ்வளவு தவிக்க வேண்டும்?”
     “ அன்று அந்தக் கிராமத்தாரைக் கூட்டியது யார் தெரியுமா?”
“தெரியாது,”
சங்கரலிங்கம் ஒரு கணம் ஸ்காட் முகத்தையே உற்றுப் பார்த்தான். பிறகு சொன்னான்..”நானும் விஷயம் இவ்வளவு மோசமாகப் போகும் என்று நினைக்கவில்லை. குளத்தில் துணி தோய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம்  ஆறுதல் கூறினேன். அவள் சமாதானமாகி விட்டாள். நீங்கள் உங்களை தொடர்ந்து வரச் சொல்லிவிட்டுக் குதிரையில் போய் விட்டீர்கள்.”
இருவரும் மௌனமாக இருந்தார்கள்.
சங்காலிங்கம் சொன்னான். “ நான் உங்களைப் பின்தொடரவில்லை.”
ஸ்காட் கண்களை விரித்துப் பார்த்தான்.
“கிராமம் சென்று விஷயத்தைச் சொன்னது நான்தான்.”     
  

ஒரு உரையாடல் தொடருகிறது……

.நவீன விருட்சம் 99வது இதழில் வெளிவந்தது…..
அழகியசிங்கர்
நவீன விருட்சம் ஒவ்வொரு இதழிலும் உரையாடல் பாணியில் புத்தகங்கள் பற்றி, இலக்கியக் கூட்டங்கள் பற்றி, எழுத்தாளர்களைப் பற்றி செய்திகளை அலசுவேன்.  நவீன விருட்சத்தில் இரண்டு பக்கங்கள் வரும்வரை இதை எழுதி முடிப்பேன்.  
இதுமாதிரி எழுத என்னைத் தூண்டியவர் ஒரு விதத்தில் க நா சுதான்.  அவருடைய புத்தகமான ‘படித்து விட்டீர்களா?’ என்ற புத்தகத்தைப் படித்துதான் உரையாடல் பாணியில் எழுத வேண்டுமென்று தோன்றியது.
என்னுடன் உரையாடலைத் தொடங்க ஜெகனும், மோஹனியும் சம்மதம் தெரிவித்தார்கள்.  அவர்களுக்கு என் நன்றி.
        அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன், மோஹினி ஒரே குரலில் வணக்கம்.
அழகியசிங்கர் :  என்ன உங்கள் இருவரையும் ஆறாம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை பார்க்க முடியவில்லை.
ஜெகன் : உண்மையில் உங்களைத்தான் பார்க்க முடியவில்லை.
மோஹினி : நான் போன் செய்தால், நீங்கள் போனையே எடுக்கவில்லை. 
 மேலும் நான் சினிமாவில் இருக்கிறேன் என்று தகவல் வேறு    கொடுத்துக்கொண்டே இருந்தீர்கள்.
அழகியசிங்கர் : ஆமாம் 13ம் சென்னை சர்வதேச சினிமா விழாவில் கலந்து கொண்டிருந்தேன். 
ஜெகன் :  எல்லாப் படங்களையும் பார்க்க முடிந்ததா?
அழகியசிங்கர் : பார்க்க முடியவில்லை.  100 படங்களுக்கு மேல் காட்டினார்கள்.  நான் 12 படங்களுக்கு மேல் பார்க்கவில்லை.
மோஹினி : முடியாது.  வயது ஒரு காரணம்.
ஜெகன் :  மேலும் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தால் என்னமோ மாதிரி இருக்கும்.
அழகியசிங்கர் :  ஆமாம்.  என்னால் இரண்டு  படங்களை சேர்ந்தாற்போல் பார்க்கமுடியவில்லை.   ஒரு படம் பார்த்துவிட்டு எழுந்தால்  தலை ஒரு சுற்று சுற்றும்.
மோஹினி : தியேட்டரிலேயே நாம் தொடர்ந்து ஒரு படத்தைப் பார்க்க முடியவில்லை.
அழகியசிங்கர் :  ஐநாக்ஸ் என்ற தியேட்டரில் உட்கார்ந்து ஒரு படத்தைப் பார்ப்பதுபோல் ஒரு தண்டனை யாருக்கும் கிடைக்க வேண்டாம.
ஜெகன் : நீங்கள் பார்த்ததில் எந்தப் படம் சிறப்பானது.
அழகியசிங்கர் :  ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்திலும் சிறப்பாக இருநதது.  ஏன் நம் ஊரிலே இதுமாதிரி படங்களை எடுக்க முடியவில்லை என்று தோன்றியது.
மோஹினி : சினிமா என்பதே ஒரு வியாபாரம்.  கோடிக்கணக்கில் முதல் போடவேண்டும்.  பலருடைய முயற்சி வேண்டும்.  
ஜெகன் :  தமிழிலேயே ஒரு ஆண்டிற்கு 300 படங்களுக்கு மேல் கொண்டு வருவதாக கேள்விப்பட்டேன்.
மோஹினி :  பல படங்கள் தயாரிக்கப்பட்டு தியேட்டர் கிடைக்காமல் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.
அழகியசிங்கர் :  எத்தனையோ படங்களை நாம் பார்க்கவே முடிவதில்லை.  இந்த உலகப் பட விழாவில் நான் தெரிந்து கொண்டது இதுதான்.  இதில் பார்க்காமல் போய்விட்ட படங்களைப் பற்றி நம்மால் என்ன செய்ய முடியும் என்பதுதான்.
மோஹினி :  இது புத்தகங்களுக்கும் பொருந்தும்.
ஜெகன் :  உண்மைதான் எத்தனைப் புத்தகங்களைத்தான் நாம் படிக்க முடியும்.
அழகியசிங்கர் : இந்தத் தருணத்தில் க.நா.சு போன்ற விமர்சகர் முக்கியமான பணியைச் செய்ததாக நினைக்கிறேன்.  அவர் என்னன்ன புத்தகங்களைப் படிக்கலாம் என்று சொல்லி சென்றதாக நினைக்கிறேன்.
ஜெகன் :  புத்தகம் என்றவுடன் வெள்ளத்தால் உங்கள் புத்தகம் போனதைப் பற்றி எழுதியிருந்தீர்கள்..
அழகியசிங்கர் : ஆமாம். ஒரு 20000 செலவு செய்து 4 புத்தகங்கள் அச்சடித்தேன்.  வெள்ள நீரால் நனைந்து விட்டன.  அதைவிட முக்கியம் நான் அவ்வப்போது புத்தகம் வாங்கும் பைத்தியம்.  அவையெல்லாம் நனைந்து என்னைப் பார்த்து எள்ளி நகையாடின.  என் கார் மாத்திரம் தப்பித்து விட்டது.   ஆனால் இரண்டு டூ வீலர்கள் நாசம்.  படிக்கட்டு வழயாக ஆறாவது படிக்கட்டு வரை தண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. எனக்கு ரொம்ப வருத்தம் விக்கிரமன் என்ற எழுத்தாளருக்கு ஏற்பட்ட மரணம்.  மேற்கு மாம்பலத்தில் ஜெயசங்கர் தெருவில் வசித்து வருபவர்.  டிசம்பர் ஒன்றாம் தேதி எதிர்பாராதவிதமாய் மரணம் அடைந்து விட்டார்.  அவர் பூத உடலை உடனடியாக தகனம் செய்ய முடியாமல் பீரிஸர் இல்லாமல், இறந்த உடலுடன் அவர் குடும்பத்தினர் பட்ட அவதியை யாரும் படக் கூடாது.
ஜெகன் :  இதன் மூலம் என்ன தெரிகிறது
அழகியசிங்கர் : வாழ்க்கை நிச்சயமில்லாதது என்பதைத்தான் இது காட்டுகிறது.  நாம் எவ்வளவு பொருள் சேர்த்தால் என்ன?  நம் கண் முன்னே எல்லாம் போனால் நாம் என்ன செய்ய முடியும்?  
மோஹினி :  வழக்கம் போல இந்த முறை பல எழுத்தாளர்கள் இறந்து விட்டார்கள் அவர்கள் லிஸ்டைப் படிக்கிறேன். 1. விக்கிரமன 
2. சார்வாகன் 3. மா வெ சிவக்குமார் 3. பேராசிரியர் கே ஏ குணசேகரன்    4. காந்திய எழுத்தாளர் லா சு ரங்கராஜன் 5. பதிப்புச் செம்மல் வானதி திருநாவுக்கரசு
(மறைந்த எழுத்தாளர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துகிறார்கள்.)

சந்தியாவல்லியைத் தேடி போகும் போது

சே சேவற்கொடியோன்

நீலக்குயில் இதழில் வெளிவந்த கவிதை சந்தியாவல்லியைத் தேடி போகும் போது என்ற ஒன்று.  சே சேவற்கொடியோன் என்பவர் எழுதி உள்ளார்.  யார் இந்த சேவற்கொடியோன் என்பது தெரியவில்லை.  ஆனந்த விகடனில் இருந்த தாமரை மணவாளன் என்ற எழுத்தாளரா என்பது சந்தேகமாக உள்ளது.  
ஆனால் இந்தக் கவிதை படிக்க சுவாரசியமாக உள்ளது.  அதனால் இதை இங்கு தருகிறேன்.  நண்பர்களே, படித்து விட்டு உங்கள் கருத்துகளை எழுதி அனுப்புங்கள்.  இந்தக் கவிதைக்கு பத்துக்கு எத்தனை மதிப்பெண் கொடுக்கலாம்?  கவிதை வெளியான ஆண்டு மார்ச்சு 1975.

சந்தியாவல்லியைத் தேடி போகும் போது




பஞ்சாயத்து ரேடியோ
பாடி முடிக்கையில்
சின்னக் கண்ணய்யா தோப்பில்
சாமியாடடம் தொடங்கும்
குருட்டு ஆறுமுகம்
மணிக்குறவன் பாட்டை
தெப்படமண்டபத்திலிருந்து
திசையெல்லாம் பரப்புவான்
கிறுக்கு அழகம்மாள்
உடலைத் தொட்டிழுத்த
பெரிய தனக்காரருக்கு
பிலாக்கணம் பாடுவாள்
ஆண்டி வயல்கிடைகாக்கும்
ஐயாவுக்கோனார்
மாயவதாரன் கதையை
மனமுருகிப்பாடுவார்.
தேங்காய் திருடிப்பங்குவைக்கும்
நடமாடும் பேயரவம்
சுடுகாட்டில் கேட்கும்
சூரியன் பீடி
கொள்ளிவாய் பிசாசாய்
அச்சுறுத்தும்
கடைசாத்தி ஊர் போகும்
சங்கரன் செட்டி
சைக்கிளை மிதித்தபடியே
நமக்கினி பயமேது பாடலை
பயத்தோடு பாடுவார்.
சேவுகப்பெருமாள் கோயில்
பட்டத்துக்காளை
செறியடித்துக் கதறி
கொண்டிப் பசுக்களை கூப்பிடும்
முறைபோட்டு மடை திறக்கும்
காவல்காரன் முனகலுடன்
நீர்குறையும் கோபத்தில்
தவளை கத்தும்
களத்து வீட்டை நெருங்கையில்;
காவலுக்குப் படுத்திருக்கும்
தேவரின் குறட்டைச் சத்தம்
பாராக கொடுக்கும்
வல்லியோ 
தலையணையில் காலும்
அடுப்படியில் தலையுமாக
அவிழ்ந்து கிடப்பாள்.
 

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 21

      நவீன எழுத்தாளன் இறந்து விட்டானா?

பேசுவோர் :    கௌதம சித்தார்த்தன்

இடம் :    அலமேலு கல்யாண மண்டபம
  அகஸ்தியர் கோயில் பின்புறம்
19 ராதாகிருஷ்ணன் தெரு
தி நகர், சென்னை 600 017

தேதி 19.03.2016  (சனிக்கிழமை)

நேரம் மாலை 5.30 மணிக்கு

பேசுவோர் குறிப்பு : 1992லிருந்து  ‘உன்னதம்’ என்ற சிற்றேடை பல ஆண்டுகளாக நடத்தியவர்.  இதுவரை 5 சிறுகதைத் தொகுதிகளும்,    7 கட்டுரைத் தொகுதிகளும் கொண்டு வந்துள்ளார். 8 விருதுகள்  இலக்கியத்திற்காகப் பெற்றவர்.  சமீபத்தில் மலேசியாவிற்குப் போய்விட்டு வந்துள்ளார்.   கவுந்தன்பாடி என்ற ஊரைச் சார்ந்தவர்.

அனைவரும் வருக,

அன்புடன்
அழகியசிங்கர் – ஆடிட்டர் கோவிந்தராஜன்

அந்தி நேரத்தில் (நகுலனுக்கு)

ஷண்முக சுப்பையா




காற்றைப் பிடித்து கல்லாக்க
வீட்டு முற்றத்தில் வீற்றிருந்தேன்
பால் புகைப்படலத்தின்
வெளிப்படை மறைப்பில்
புஷ்ப விமானங்கள்
பூப்பந்தெறிந்தன

தாமரை ஒன்று ஆம்பலாய் குவிந்து
வழிமறந்து அறை புகுந்த வெளவாலாய்
சிறகடித்துச் சிறை உடைக்க
நாற்புறச் சுவர்க்கட்டில் முட்டி மோதி
முடங்கிக் கிடக்கவே
தாரைகள் இரண்டு
பார்வை இருண்டு
பாரை நோக்கிப் பனிமுத்துதிர்த்தன

கிளி மரக் கொம்பில்
சுற்றிப் பற்றிய
முற்றத்து முல்லையின் நாற்றம்
மூளையத் துழைத்தது.

புழக்கடைப் பக்கத்து
சீமைப் பப்பாளி
ஊமைக்கொப்பாகி

நீண்டு உருண்டு திரண்ட தன் காய்களை
தலைவிரிகோல்த்திரைக்குள் மறைத்து
அலைவிரித்தலறும் குகைக்குள் எழுந்து
அம்மண ஆட்டம் ஆடிற்று
பக்கவாட்டுப் புற்றிலிருந்து
எரிமலைக் குழம்பாய்
கரிநிறச் சாரை
வழிந்து ஒழுகி
பள்ளத்தாக்கில் சென்று மறைந்தது.

குட்டிச் சுவரைத் தொட்டு மேலே
மீகான் மேனோனின்
நங்கூரம் பாய்ச்சிய
சிங்கார விடு
நந்தியாய் மறைத்தது சங்கரன் கோயிலை

விண்வெளியில் ஒரு கொள்ளி மீன்
எள்ளி நகையாடி எரிந்து விழ
எழுந்தகம் புகுந்தேன்.

எதிரும் புதிருமாய்
சபரிமலையில்
தர்மசாஸ்தாஅமர்ந்திருந்தார்.
குமரி முனையில்
விவேகானந்தா நின்றிருந்தார்.

ஆச்சரியமாய் இருக்கிறது ஷண்முக சுப்பையாவா இப்படி கவிதை எழுதி உள்ளார் என்று.  மிக எளிமையாக கவிதை எழுதுபவர் ஷண்முக சுப்பையா.  மார்ச்சு 1975ஆம் ஆண்டு நீலக்குயில் என்ற பத்திரிகையில் நகுலனுக்கு என்று இக் கவிதை பிரசுரமாகி உள்ளது.

99வது இதழில் வெளிவந்த ஞானக்கூத்தன் கவிதை

அழகியசிங்கர்
நவீன விருட்சம் இதழ் வந்தவுடன் அதை எப்படி தீர்த்துக் கட்டுவது என்று உடனே பரபரப்பாக செயல்பட்டேன்.  முதலில் நான் நடை பயிற்சி செய்யும் இடத்திற்கு சில இதழ் பிரதிகளை எடுத்துக் கொண்டு போனேன். அங்கு எனக்கு அறிமுகமானவர்களைப் பார்த்து ஒவ்வொன்றாய் கொடுத்தேன்.  அதில் ஒருவர் சீனாவிலிருந்து பொருள்களை வாங்கி விற்பவர். நவீன விருட்சத்தை நீட்டியவுடன், 
“சார்…எனக்கு வேண்டாம்…நான் தமிழ் பத்திரிகை புத்தகம் படிப்பதில்லை,” என்றார்.  
எனக்கு அதிர்ச்சி.  முதன் முதலாக ஒருவரிடம் கொடுக்கச் சென்றபோது, அவர் இப்படி சொலகிறாரே என்று தோன்றியது. நான் கேட்டேன். 
“தமிழ்ல பேப்பர் புத்தகம் படிப்பதில்லையா?”. 
“இப்போ இல்லை…முன்பு படித்ததுதான், எனக்கு நேரமில்லை,”
“என்ன நேரம்…நீங்க மனசு வைச்சா நேரம் இருக்கும் சார்,” என்றேன். 
“என்னால முடியாது, சார்.”என்றார்.
“இதன் விலை ரூ 15 அதற்கா யோஜனை செய்யிறீங்க…அதைத் தர வேண்டாம்…ஆனா பத்திரிகை வாங்கிப் படிங்க…எனக்கு அது முக்கியம்..”
“இல்ல சார்…அதுக்காக இல்லை..என் கவனமெல்லாம் பிஸினஸில் இருக்கு…படிக்கவே முடியாது,” என்றார்.
அவரிடமிருந்து நகர்ந்து விட்டேன்.  என்னிடமிருந்து பத்திரிகையை வாங்கிக் கொண்டவர்கள் எல்லாம் ஒரு மூச்சு விடுவதில்லை.  படித்தேன்..புரட்டிப் பார்த்தேன் என்று கூட சொல்வதில்லை.  உண்மையில் நான் பொறுமைசாலி.  இதுமாதிரி நிகழ்ச்சியை நான் 28 ஆண்டுகளாக சந்தித்து வருகிறேன்.  இதோ இது 99வது இதழ்…அடுத்தது 100வது இதழ்.
என் வீட்டில் பக்கத்தில் குடியிருக்கும் ராமன் என்பவரிடம் கொண்டு போய் கொடுக்க வேண்டும்.  ஆனால் ராமனைப் பார்த்தாலும் இதழைக் கொண்டுபோய் கொடுக்க கொஞ்சம் அலுப்பு. ஏன்எனில் பத்திரிகையைக் கொடுத்தாலும், பத்திரிகை நன்றாக இருக்கிறது, அல்லது நன்றாக இல்லை என்று எந்த விமர்சனமும் இருக்காது.  அவரைப் பார்க்கும்போது என்னிடம் விருட்சம் மாதிரி இதழை வாங்கியதற்கான அறிகுறியே தெரியாது. அப்படித்தான் சில தினங்களுக்கு முன் ஒரு போன் வந்தது.  போன் ஜே கிருஷ்ணமூர்த்தி நூல் நிலையத்திலிருந்து வந்தது.  நான் ரொம்பவும் மதிக்கக் கூடிய இடம்.  அங்கு பல பத்திரிகைகள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
முன்பு நூலகராக இருந்தவர் என் நண்பர்.  இப்போது யார் என்று தெரியவில்லை.  போனில், “ஏன் இந்தப் பத்திரிகையை அனுப்புகிறீர்கள்?” என்று கேட்டார்.  
“ஏன்?”  என்று கேட்டேன். 
“அனுப்பாதீர்கள்…நாங்கள் பேப்பர் கடையில்தான் போடுவோம்…வேண்டாம்..” “எனக்கு ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பிடிக்கும்.  அவருடைய பேச்சைதான் நாங்கள் மொழி பெயர்த்து எங்கள் பத்திரிகையில் கொண்டு வர முயற்சி செய்வோம்.  லைப்ரரிக்குத்தானே அனுப்புகிறேன்,” என்றேன்.
“இங்கு இதுமாதிரியான பத்திரிகையெல்லாம் யாரும் படிப்பதில்லை,”என்றார்.
உண்மையில் ஜே கிருஷ்ணமூர்த்திக்கு தமிழ் தெரிந்தால், விருட்சம் அவர் விரும்புகிற பத்திரிகையாக தோன்றியிருக்கும்.
அவரிடம் சொன்னேன் : “இனிமேல் அனுப்ப மாட்டேன்.”.
அவர் போனை வைத்துவிட்டார்.  எனக்கு ஒன்று தோன்றியது.  அவரிடம், அனுப்பிய 99வது இதழை திருப்பி அனுப்பி விடுங்கள் என்று சொல்லலாமா என்று.  எனக்கு அப்படியெல்லாம் டக்கென்று பேச வரவில்லை.  
இந்தத் தருணத்தில்தான் தினமணி ஆசிரியர் நவீன விருட்சம் இதழைப் புகழ்ந்து எழுதியதைப் படித்து மகிழ்ந்தேன்.  
இதோ இப்போது 99வது இதழின் பிரதி கைவசம் இல்லை.  அதில் வெளியிட்ட ஞானக்கூத்தன் கவிதையை இங்கு தருகிறேன்.
ஞானக்கூத்தன் கவிதை
பசு மாட்டின் 
தலை
கால்
மடி
வால்
ஆசனம்
முதலான இடங்களைத்
தேவதைகள் தங்கள்
இருப்பிடங்களாகக் கொண்டுள்ளார்களாம்
இன்று நானொரு
யானையைப் பார்த்தேன்
தென்கலை நாமம் திகழ
பெரிய புல்லுக்கட்டு
தென்னை மட்டை
தேங்காய்களை நிதானமாகத்
தின்று கொண்டிருந்தது
யானையைக் கேட்டேன்
பசுவைப் போல் உன் உடம்பில்
தேவதைகள் இடம் பிடித்திருக்கிறார்களா என்று
எனக்கே போதாத என் உடம்பின் 
எல்லா இடங்களிலும்
நானே வாழ்கிறேன்
என்றது யானை.

புத்தக விமர்சனம் 18

அழகியசிங்கர்

சமீபத்தில் சாருநிவேதிதாவின் புத்தக வெளியீட்டுக் கூடட்டத்திற்கு நான், அசோகமித்திரன், வைதீஸ்வரன் மூவரும் சென்றோம்.  7 புத்தகங்களின் வெளியீட்டுக் கூட்டம்.  ராஜா அண்ணாமலை மன்றம் என்ற இடத்தில்.  அவ்வளவு பெரிய இடத்தில் கூட்டம் எவ்வளவு வரும் என்ற சந்தேகம் கூட்டம் நடக்கப் போகும்வரை என்னால் கற்பனை செய்ய முடியாமல் இருந்தது.  ஆனால் 500 அல்லது 600 பேர்கள் கூடி இருந்தார்கள்.  கூட்டத்தில் பெரும்பாலோர் இளைஞர்களாக இருந்தார்கள்.  சாருநிவேதிதாவின் சாதனையாகத்தான் இதை நினைக்கிறேன்.  அவருடைய வாசகர்கள் எல்லா இடங்களிலும் சுழன்று சுழன்று கூட்டத்தினரை வரவேற்றனர்.  
அந்த விழாவில் வெளிவந்த புத்தகங்களில் மூன்று புத்தகங்கள் எனக்குப் படிக்கக் கிடைத்தன.  1. கடைசிப் பக்கங்கள் 2. எங்கே உன் கடவுள் 3. பழுப்பு நிறப் பக்கங்கள்.  இதை என் பாக்கியமாகக் கருதுகிறேன்.  முதலில் நான் கடைசிப் பக்கங்கள் என்ற புத்தகத்தை எடுத்துப் படித்தேன்.  120 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை 2 நாட்களில் முடித்து விட்டேன்.  உண்மையில் இன்னும் சீக்கிரம் கூட முடித்திருக்க முடியும்.  ஆனால் விட்டுவிட்டுத்தான் புத்தகத்தைப் படித்தேன்.  என் கவனம் எல்லாம் இதைப் படித்து முடிப்பதிலேயே இருந்தது.  
இத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் üநியூஸ் சைரன்ý என்ற பத்திரிகையில் வாரா வாரம் எழுதப்பட்ட கட்டுரைகள் என்று சாருநிவேதிதா குறிப்பிட்டுள்ளார்.  மொத்தம் 26 தலைப்புகளில் சாருவின் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.  ஒவ்வொரு கட்டுரையையும மணி மணியாய் எழுதியிருக்கிறார்.  திரும்ப திரும்ப  படிக்கத் தூண்டுகிற மாதிரியான எழுத்து.  
ஒவ்வொரு கட்டுரையும் 2 1/2 அல்லது 3 பங்கங்களில் முடிந்து விடுகிறது.  பல விஷயங்களைக் குறித்து மனம் திறந்து அலசல்.  நமக்கு தெரிந்து கொள்ள வேண்டிய எத்தனையோ விஷயங்களை இக் கட்டுரைகள் மூலம் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.  உதாரணமாக முதல் கட்டுரையில் சச்சின் பற்றி கூறி அவருடைய கடினமான உழைப்பைப் பற்றி குறிப்பிடுகிறார்.  உண்மையில் சாருவும் கடுமையான உழைப்பாளியாக இருக்கிறார்.  
மருத்துவக் குறிப்புகள், அவர் பயணம் செய்த இடங்கள், அவர் படித்த புத்தகங்கள், சினிமாவைப் பற்றிய அவருடைய பார்வைகள், செக்ஸ் சம்பந்தமாக அவர் சொல்கிற விஷயங்கள் என்று பலவற்றை இந்தப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
மருத்துவக் குறிப்பைப் படிக்கும்போது எங்கே சாரு ஒரு மருத்துவராகவே மாறி விட்டாரோ என்று தோன்றுகிறது.  
நூறு வயதிலும் இளமையாக இருக்கிற ரகசியம் என்று தேரையர் கூறுவதை இப்படி குறிப்பிடுகிறார் :
இஞ்சியைத் தோல் சீவி மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.  இரண்டு துண்டு இஞ்சிக்கு ஒரு தம்ளர் தண்ணீர்.  பத்து நிமிடம் கழிந்தும் தம்ளரின் அடியில் சுண்ணாம்பு போன்று படிந்திருக்கும்.  அதை விட்டுவிட்டு சாறை மட்டும் குடியுங்கள்.  மதியம் ஒரு ஸ்பூன் சுக்குப் பொடியை நீரில் காய்ச்சிக் குடியுங்கள். இரவில் கடுக்காய். கடுக்காயின் உள்ளே இருக்கும் விதை நஞ்சு.  எனவே கடுக்காயின் தோலை மட்டும் கழுவி எடுத்துப் பொடியாக்கி ஒரு தம்ளர் நீரில் கலந்து அருந்துங்கள் அல்லது நாட்டு மருந்துக் கடையிலேயே கடுக்காய் பொடி கிடைக்கும்.  இப்படி தினமும் சாப்பிடச் சொல்கிறார்.  இப்படி சாப்பிட்டதால் ஏற்பட்ட பலன்களைப் பற்றியும் சொல்கிறார்.  ஹிமாச்சலப் பிரதேசத்தின் லடாக் பிராந்தியத்தில் உள்ள லே என்ற ஊர் வரை மோட்டார் பைக்கில் பயணம் செய்ததைப் பற்றி குறிப்பிடுகிறார்.  
இவருடன் பத்துப் பேர்கள் 30 வயதுக்குட்பட்டவர்கள் செல்கிறார்கள்.  சாருக்கு மட்டும்தான் 60 வயது.  சார்ச்சு என்ற ஒரு மோசமான இடத்திற்குச் செல்கிறார்கள்.  பிராண வாயு குறைவான அந்த இடத்தில் எல்லோரும் பாதிக்கப்படுகிறார்கள்.  ஆனால் சாரு மாத்திரம் பிரச்சினையே இல்லாமல் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.  இதற்குக் காரணம் தேரையர்.  பையில் இஞ்சியையும், கத்தியையும் வைத்திருந்து தோலை சீவி சீவி மென்று கொண்டிருந்தாராம்.  இதைப் படிக்கும்போது எனக்கு சற்று நம்ப முடியாமல் இருந்தாலும், நாமும் முயற்சி செய்து பார்க்கலாமே என்று தோன்றியது.  இதோடு மட்டுமல்லாமல், எப்போது நேரம் கிடைத்தாலும் ஒரு மணி நேரத்திற்கு எட்டு போட்டு நடக்கச் சொல்கிறார்.  அப்போது வயிறு காலியாக இருக்க வேண்டும் என்கிறார்.  இதனால் ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை எல்லாம் சீராக இருக்கும் என்கிறார். இப்படி பல உபயோகமான டிப்ஸ் கொடுக்கும் சாருநிவேதிதா மருத்துவராகவே மாறி விட்டதாக தோன்றுகிறது.  அவர் சொல்வதை சோதித்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால் அவர் தனக்கு சோதித்துப் பார்த்ததைத்தான் இங்கே குறிப்பிடுகிறார். ஏன் இதைக் குறிப்பிடுகிறேன்.  பக்கம் 46ல் இப்படிக் குறிப்பிடுகிறார் : முதலில் உடûப் பேண வேண்டும்.  பிறகே இலக்கியம், சினிமா எல்லாம் என்று.
எழுத்தாளர்களுக்கு உரிய கவனம் கிடைப்பதில்லை என்பதில் சாருவை விட வேற யாரும் இந்த அளவிற்குக் கோபப்பட்டு நான் பார்த்ததில்லை.  தமிழ் நண்டுகள் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில் ஜெயிப்பூர் விழாவில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் எழுத்தாளர்கள் மட்டும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்கிறார்.  2014ஆம் ஆண்டில் 6 மலையாள எழுத்தாளர்கள் கலந்து கொண்ட விபரத்தைக் கூறி, தமிழில் சல்மாவைத் தவிர யாரும் போகவில்லை என்கிறார்.  இதற்குக் காரணமும் சொல்கிறார்.  நம் எழுத்தாளர்களை யாரும்வட இந்தியாவுக்கு அறிமுகப்படுத்துவதில்லை. யாராவது அறிமுகப் படுத்த முயன்றாலும் இன்னொரு தமிழரே, üüஅவன் எழுத்தாளனே அல்ல.  அவனுக்குத் தமிழில் மரியாதையே இல்லை,ýý என்று போட்டுக் கொடுத்து விடுகிறார்கள் என்கிறார் சாரு.  இதற்கு உதாரணமாக புட்டியில் பல மாநில நண்டுகள் பற்றிய கதையைக் குறிப்பிடுகிறார்.  அதில் இரண்டே இரண்டு தமிழ் நண்டுகள் மட்டும் வெளியே போகாமல் புட்டியில் அப்படியே இருக்கிறதாம். ஒன்று மேலே ஏறினால், இன்னான்று கீழே தள்ளி விடுமாம்.  அதே போல் இன்னொன்று ஏறினால் இது கீழே தள்ளி விடுமாம். தமிழில் இப்படி ஒரு எழுத்தாளரை இன்னொரு எழுத்தாளர் மட்டம் தட்டிப் பேசுவது உண்மை என்றாலும், இதைச் சரிபடுத்த எதாவது வழி உண்டா என்பது தெரியவில்லை.  
நான் இதுவரை படித்த எந்தப் புத்தகத்திலும் எழுத்தாளர் ஒரு சுயபிரகடனமாகச் சொல்வதை நான் படித்ததில்லை.  சாரு அவர் புத்தகத்தில் பல இடங்களில் தன்னைப் பற்றி வெளிப்படுத்துகிறார்.  
பக்கம் 77ல் இப்படி குறிப்பிடுகிறார் :
1. என்னிடம் தொலைக்காட்சிப் பெட்டி கிடையாது. தொலைக் காட்சி பார்த்து பத்து ஆண்டுகள் ஆகிறது.
2. தினசரிகள் படிப்பதில்லை.  ஒரு நண்பர் எல்லா செய்திகளையும் படித்து என்னிடம் தொலைபேசியில் சொல்லி விடுவார். (எனக்கு அதுமாதிரி நண்பரே கிடையாது).
3. தொலைபேசியில் அதிகம் பேசுவதில்லை.  முக்கியமான நண்பராக இருந்தால் அரை நிமிடம் பேசுவேன்.
4. குடும்ப விசேஷம், பிறந்த நாள், நண்பர்களின் அழைப்பு, பார்ட்டி, பப் எதுவும் கிடையாது.  போன ஆண்டு நான் கலந்து கொண்டது ஒரே ஒரு திருமண வைபவம்தான்.  இப்படி நேரத்தைக் கடுமையாக இழுத்துப் பிடிப்பதால் உங்களின் மூன்று நாட்கள் என்னுடைய ஒரு நாள் என்கிறார் சாரு.
இதையெல்ல்லாம் சொல்பவர் இன்னொன்றும் சொல்கிறார்.  வாசிப்பு என்பது கடல் நீரை கையில் அள்ளுவதுபோல்தான்.  என்றாலும் என் வாசிப்பு பற்றி எனக்குள் சிறிதாக ஒரு கர்வம் உண்டு என்கிறார்.
அடுத்ததாக சினிமாவைப் பற்றி அதிகமாக இப்புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.  பாலுவும் மெளினகாவும் என்ற கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.  இப் புத்தகத்தைப் படிக்கும்போது ஒவ்வொரு தலைப்பைப் படித்தே நாம் பலவற்றை எழுதலாம். 
இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது சாருவின் உணர்ச்சி வேகத்தைப் படித்து ஆச்சரியமாக இருக்கிறது.  தலைமுறைகள் என்ற படத்தைப் பார்த்துவிட்டு பாலுவைப் பார்க்க சாரு அவர் வீட்டிற்குச் செல்கிறார்.  ரூபாய் 1000 கொடுத்து ஒரு அழகான மலர்க்கூடையை வாங்கிக்கொண்டு போகிறார்.  “எதற்கு இந்த பார்மால்டி,” என்கிறார் பாலு.  “உங்கள் மீது உள்ள அன்பை வேறு எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை,” என்று சொல்லிக்கொண்டே கண்கள் கலங்க மௌனமாய் அமர்ந்திருக்கிறார் சாரு.
சாரு சொல்லும் ஒரு கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  ‘பெண்களின் மீதான பாலியல் அத்து மீறல்களைக் குறைப்பதற்கு ஒரு வழி பாலியல் தொழிலை சட்ட ரீதியாக அங்கீகரிப்பது’ என்கிறார் சாரு.  இந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ள வில்லை.  ஏன்எனில் அப்படி அங்கீகரித்தால் டாஸ்மாக் கடையில் எல்லோரும் போய் நிற்பதுபோல் செக்ஸ் ஒர்க்கர் வீட்டின் முன் வயது வித்தியாமில்லாமல் எல்லோரும் போய் நிற்பார்கள்.
எல்லோரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
கடைசிப் பக்கங்கள் – சாரு நிவேதிதா – கட்டுரைகள் – மொத்தப் பக்கங்கள் : 120 – வெளிவந்த ஆண்டு : டிசம்பர் 2015 – வெளியீடு : Kizhakku Pathippgam, 177/103, First Floor Ambal’s Building/ Lloyds Road, Royapettah, Chennai 600 014        Phone : 
044-42009603
  

என்றோ நடந்த சுந்தரராமசாமியின் விருட்சம் கூட்டம்

அழகியசிங்கர்  
08.12.2002 அன்று விருட்சம் சார்பில் சுந்தர ராமசாமியின் கூட்டம் நடந்தது.   அக் கூட்டத்தில்   ஆடியோவில் பேசியதை  இங்கு எல்லோரும் கேட்பதற்கு யு ட்யூப்பில் பதிவு செய்துள்ளேன்.