மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 -120



எல்லா சுவர்களும்

ஆர் புருஷோத்தமன்

கேட்பதை எல்லாம்
வாங்கிக் கொடுங்கள் குழந்தைகளுக்கு

வண்ணம் வழியும்
பட்டாம் பூச்சிகளையும்
பறந்து திரியும் தும்பிகளையும்
பிய்த்து மகிழட்டும்

குச்சு மிட்டாயோ
குடை ராட்டினமோ
உங்கள் சில்லரைகளை
அள்ளிக் கொடுங்கள்

மணியலிக்கும் யானையின் பின்னே
சாலையின் இறுதிவரைக்கும்
சென்று மீளட்டும்.

சந்தோஷம் பூத்திடும்
தளிர் முகங்களில்
படரவேண்டாம் ஒருபோதும் சோகம்.

களங்கமற்ற குழந்தைகள் விழிகளில்
மறைந்து கிடக்கிறது சொர்க்கம்.
மரணத்தின் இறுதிவிநாடிகளில்
தரிசியுங்கள் குழந்தைகளை
வெளிச்சத்தின் வாசல்திறந்திருக்கும்
உங்களுக்காக,

மெல்லிய முத்தங்களில்
இடிந்து வீழ்கின்றன
அத்தனைச் சுவர்களும்

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 119

அழகியசிங்கர்

காந்தி ஆசிர்வசிக்காத குழந்தைகள்

சபரிநாதன்

அட்டனக்கால் போட்டபடி இது என் தாத்தா சொல்லியது:
எனையள்ளி எடுத்துக்கொண்டு ஓடினார் என் தாத்தா
ரயிலடியில் இன்னும் அதிர்ந்துகொண்டிருந்தது தண்டவாளம்
ரயிலோ காந்தியை ரொம்ப தூரம் கட்த்திப் போய்விட்டது
என் தாத்தாவோ ஒரு சர்பத் குடித்துவிட்டு
வந்து கொத்தத்தொடங்கினார் மீதி அம்மிக்கல்லை.

அவர் மட்டும் கொஞ்சம் விரசாய் ஓடியிருந்தால்
அவர் மட்டும் கொஞ்சம் தாமசித்திருந்தால்..
இப்படித்தான் எல்லோருமாய் சேர்ந்து
நாட்டை குட்டிச்சுவராக்கிவிட்டார்கள்.

நன்றி : வால் – சபரிநாதன் – மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல். மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் – தொலைபேசி : 0989460571 பக்கங்கள் : 168 – விலை : ரூ.150

அதனால் என்ன..



அழகியசிங்கர் 


ஞானக்கூத்தன் மறைந்து 3 ஆண்டுகள் ஓடிவிட்டன.  அவர் நினைவாக அவர் கவிதையை இங்கு வெளிப்படுத்துகிறேன.  

அதனால் என்ன

ஞானக்கூத்தன்

பாடச் சொன்னால் வெட்கப்படுகிறார்கள்
பேசச் சொன்னால் கூச்சப்படுகிறார்கள்
ஆடச் சொன்னால் கோணுகிறார்கள்
நடிக்கச் சொன்னால் தயங்குகிறார்கள்
வரையச் சொன்னால் வராதென்கிறார்கள்
கவிதை வருமா என்றால் உடனே
எண்பது பக்க நோட்டுப் புத்தகம்
இரண்டை எடுத்து நீட்டுகிறார்கள்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 118

அழகியசிங்கர் 

 புராதனக்குடுவை

பா ராஜா

மிக அழகான வேலைப்பாட்டுடன் கூடிய

புராதனக்குடுவையன்று எனக்குக்கிடைத்திருக்கிறது 

அதனைக்கொண்டு

பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றலாம் 

நிதி திரட்ட உண்டியல் குலுக்கலாம் 

கள்ளருந்தப் பயன்படுத்தலாம் 

கழிப்பறையின் குவளையாக்கலாம் 

திரியன்றுப் போட்டு விளக்காக்கலாம் 

காகங்களுக்கு நீர் வைக்கலாம் 

அரிசியளக்கும் படியாக்கலாம் 

படுக்கையில் கிடக்கும் தகப்பனின் மூத்திர டப்பாவாக்கலாம் 

பூஜையறையில் வைத்துப் பூஜிக்கலாம் 

உள்ளே பூதமிருப்பதாய் கோகுலிடம் பயம் காட்டலாம் 

மண்ணை நிரப்பி டேபிள் ரோஜா செடி வளர்க்கலாம் 

அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கலாம் 

இனப்பெருக்கஞ்செய்யத் தோதாய் பறவைக்கூட்டின் மூலையில் 

பொருத்தலாம் 

நாட்டாமைகள் எச்சியுமிழ் சினிமாவில் நடிக்க வைக்கலாம் 

அல்லது 

இறுதிச்சடங்கில் அஸ்தியெடுப்பதற்கென பத்திரப்படுத்தலாம் 

எவ்விதமதனைப் பயன் படுத்துவதென்ற பெருங்குழப்பத்தால் 

சிரம் வெடித்துச்சிதற 

கழுத்தின் மேல் அமர்ந்திருக்கிறது அப்புராதனக்குடுவை 

சற்றே சிதிலமடைந்து.

நன்றி : மாயப்பட்சி – பா ராஜா  – மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல். மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் – தொலைபேசி : 0989460571 பக்கங்கள் : 64 – விலை : ரூ.60

துளி : 57 – கவிதைக்குக் கொண்டாட்டம்

துளி : 57 – கவிதைக்குக் கொண்டாட்டம்

அழகியசிங்கர்

இந்த முறை இரண்டு கவிதை நூல்களுக்குப் பரிசு கிடைத்துள்ளது.  ‘ஸ்பாரோ’ இலக்கிய விருது 2019,  யுவன் சந்திரசேகருக்குக் கிடைத்துள்ளது. கவிதை வகைமைக்காக.  சாகித்திய யுவபுரஸ்கார் விருது சபரிநாதனுக்கு வால் என்ற கவிதைத் தொகுதிக்குக்  கிடைத்திருக்கிறது.  வாழ்த்துகள்.

இதைத் தவிர ஆத்மாநாம் பெயரில் ஆண்டுக்கு ஒரு கவிதைத்தொகுதிக்குப் பரிசு வழங்குகிறார் சீனிவாசன். தனியாக ஆத்மாநாம் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி உள்ளார்.  கவிதை நூலிற்குப் பரிசு கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  

இந்த வீருதெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் கவிதை நூலிற்கும் மட்டும் கிடைத்தால் நன்றாக இருக்கும்.   ஏனென்றால் அந்த அளவிற்கு கவிதை நூல்கள் கொட்டிக் கிடக்கின்றன.   ஓராண்டில் அதிகமாக பிரசுரமாவதில் கவிதை நூல்கள் முதலிடம் பெறும் என்று நினைக்கிறேன்.

ஆனால் ஒரு கவிதை நூலை விற்பது என்பது பூஜ்யம்தான். தெரிந்தவர்களிடம், உறவினர்களிடம்தான் கவிதை நூல்களை விற்க வேண்டும்.  அல்லது தள்ள வேண்டும்.  அதனால் சில பதிப்பாளர்கள் கவிதை நூல்களை வெளியிடுவதில்லை.  

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2

அழகியசிங்கர்  

சிறுத்தையாகவும் மான் குட்டியாகவும்மாறுபவன்

ஜெம்சித் ஸமான்

இன்று ஒரு 

ஓவியனை சந்தித்தேன் 

முதலில் 

காட்டை வரைந்தான் 

பின் ஒவ்வொரு மிருகங்களாக 

வரைய ஆரம்பித்தான் 

மான் ஒன்றின் பக்கத்தில் 

சிறுத்தையை வரைந்த போது 

இரண்டும் 

உயிர்பெற்றுக் கொண்டது 

உயிருக்குப் பயந்த மான் குட்டி 

காடு மேடெல்லாம் ஓடியது 

கோரப்பசியோடிருந்த 

சிறுத்தை வேட்டையாடத் துரத்திச் சென்றது.

ஓவியன் அதனை 

விளையாட்டைப்போல ரசித்து ரசித்து 

சிரித்துக் கொண்டிருந்தான் 

தீராப் பசியோடு

மான் குட்டியை நெருங்கிய 

சிறுத்தையை நொடிப் பொழுதில் 

மான் குட்டியாக மாற்றிவிட்டான் 

சிறிது சிறிது நேரத்திற்குள் 

அவன் சிறுத்தையாகவும் 

மான் குட்டியாகவும் 

மாறிக்கொண்டிருந்தான்..

நன்றி : நகுலனின் வளர்ப்புப் பூனை – ஜெம்சித் ஸமான் – மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல். மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் – பக்கங்கள் : 88 – விலை : ரூ.70

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 115

அழகியசிங்கர்

கதவு

கல்பனா ரத்தன்

எங்கள் மூதாதையர் காலத்தில்
கதவுகள் வைக்கவில்லை.
எங்கள் பாட்டி காலத்தில்
கதவு இருந்தது மூடியே...
என் அம்மா காலத்தில்
நிழலான வெளியுலகம்
என் காலத்தில் அவ்வப்போது
வேடிக்கை பார்க்க அனுமதி
என் மகள் காலத்தில்
விரும்பிய இடத்தில்
கதவு வைக்க உரிமை.
ஆனாலும் எங்களிடம்
ஒருபோதும் இல்லை
கதவின் சாவி.    

நன்றி : மனம் உதிரும் காலம் – கல்பனா ரத்தன் – கல்பதரு பதிப்பகம், 7 சேர்மன் சண்முகம் சாலை, சிவகாசி – 626 123 – தொலைபேசி : 9791065284 – பக்கங்கள் : 96 – விலை : ரூ.100

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 114

அழகியசிங்கர்  

 டீ குடிக்கி

செல்வசங்கரன்

நல்லவேளை டீ குவளையை அடைந்துவிட்டார் 

ஒரு டீயைக் குடித்து முடிப்பதற்கு இவ்வளவு நேரமென 

ஒரு நேரம் கிடையாது 

அதன் சூடு போவதற்குள் குடித்து முடிப்பதே 

நல்ல டீ குடிக்கிக்கான சவால் 

சூடு போய்க்கொண்டிருக்கிறது பாதி முடித்துவிட்டார் 

முழுவதும் அதன் கதையை முடித்து அங்கிருந்து கிளம்ப, 

இன்னொரு மலையையும் கடக்கவேண்டும் 

ரம்மியமான மலை 

இருபத்தைந்து ஆண்டுகளாக கடந்துகொண்டுதானே 

இருக்கிறார் 

அவரது நாற்காலிக்குக் கீழிருந்து விரியும் 

பழைய பூ போட்ட கல் படியிறங்கி 

வரும் வளைவில் திரும்பி சிறிது தூரம் நடந்தால் 

அந்த டீயை அடைந்துவிடலாம் 

இங்கிருந்தென அங்கிருந்தென 

அதற்காக அவர் நடந்து போய் வருவதைப் பார்த்தால் 

போங்கடா மயிருங்களாயென்று ஒரு நாள் 

எல்லாவற்றையும் உதறி அப்படியே கிளம்பிடுவாரோ 

என யாருக்கும் வரலாம் 

அப்படியரு கூத்து அப்படியரு லயிப்பு 

இருக்கையிலிருந்து எழுந்து செருமியபடி

சமஸ்தானம் கீழிறங்க ஆரம்பித்துவிட்டால் 

அங்கு எதுவும் நடக்கலாம்.

நன்றி : கனிவின் சைஸ் – மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல். மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் – 636453 தொலைபேசி : 9894605371. பக்கங்கள் : 80 – விலை : 90

பிரெஞ்சு இலக்கியமும் நானும் – 2

செவாலியர் விருதுபெற்ற வெ. ஸ்ரீராம் அவர்கள் 15.06.2019 அன்று பிரெஞ்சு இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் சனிக்கிழமை ஆற்றிய உரையின் இரண்டாம் பகுதி ஒளிப்பதிவை வெளியிடுகிறேன். கண்டிப்பாக கண்டு மகிழவும்.

அழகியசிங்கர்

பிரெஞ்சு இலக்கியமும் நானும் – 1


பிரெஞ்சு இலக்கியமும் நானும்

செவாலியர் விருதுபெற்ற வெ. ஸ்ரீராம் அவர்கள் 15.06.2019 அன்று பிரெஞ்சு இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் சனிக்கிழமை ஆற்றிய உரையின் முதல் பகுதியை வெளியிடுகிறேன். 

அழகியசிங்கர்