குவிகம் இருப்பிடத்தில் நேற்று நண்பர்களைச் சந்தித்தேன். இதுமாதிரியான கூட்டத்திற்கு எத்தனைப் பேர்கள் வருவார்கள் என்பது தெரியும். அதுமாதிரியே வந்திருந்தார்கள்.
கலந்து கொண்டவர்களில் ஒருவர், ‘உங்களுக்கு கவிதையா கதையா எதில் விருப்பம்?’ என்ற கேள்வி கேட்டார். ‘முதலில் எல்லோரும் கவிதைதான் எழுதுவார்கள். அதன்பின்தான் கதை எழுத ஆரம்பிப்பார்கள். பின் கட்டுரைகள் எழுதுவார்கள்..நாவலும் எழுதுவார்கள்,’ என்றேன். ‘ஆனால் சில எழுத்தாளர்கள்தான் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவார்கள்?’ என்றேன்.
இது எல்லோரும் சேர்ந்து பேசுகிற கூட்டம். ‘ஒரு புத்தகத்தைப் பற்றி விமர்சனம் செய்யும்போது, எல்லோர் முன்னும் அதை மோசமாக விமர்சனம் செய்யாதீர்கள். உங்கள் கருத்து உங்களுக்கு மட்டும்தான் உண்மை. அதைத் தெரிவிக்கும்போது மற்றவர்களிடம் வைரஸ் மாதிரி பரவி புத்தகம் வாங்குபவர்கள் வாங்காமல் இருந்து விடுவார்கள்,’ என்றேன். நான் சொன்னதை அங்குக் கூடியிருந்த நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
Author: virutcham
பத்து கேள்விகள் பத்து பதில்கள் …..14 – பகுதி 2
நேற்று பா ராகவன் பேட்டியில் முதல் பகுதி வெளியிட்டேன். இப்போது இரண்டாவது பகுதி. கேள்வி கேட்பவரை விட பதில் சொல்பவர்தான் முக்கியமானவர். அந்த விதத்தில் ராகவன் சிறப்பாக பதில் அளித்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்.
பத்து கேள்விகள் பத்து பதில்கள் …..14 – பகுதி 1
இந்தத் தலைப்பில் இதுவரை பா ராகவனையும் சேர்த்து 14 பேர்களைப் பேட்டி எடுத்துள்ளேன். எல்லாம் எளிமையான கேள்விகள் எளிமையான பதில்கள். சமீபத்தில் நான் ராகவன் வீட்டிற்குச் சென்றேன். உண்மையில் அமேசான் கின்டலில் என் புத்தகத்தை மின்னூலாக மாற்றுவதற்கான வழிமுறைகளை அறிந்துகொள்ளச் சென்றேன். அப்போது பத்து கேள்விகள் பத்து பதில்களுக்கான பேட்டியும் எடுத்தேன்.
தயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்
தயாரிப்புக் கவிஞர் ஒருவர் தயாரிப்பு இல்லாத கவிஞரை அசோக்நகரில் உள்ள சரவணா ஹோட்டலில் சந்தித்துவிட்டார். தயாரிப்பு இல்லாத கவிஞர் எப்படி இவரிடமிருந்து தப்பிப்பது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார். ஏனென்றால் அவரைக் கண்டாலே த இ கவிஞருக்குப் பிடிக்கவில்லை. கவிதையே எழுதத் தெரியாது ஆனால் கவிதை எழுதுவதாக பாவலா பண்ணுகிறார் என்ற நினைப்பு த. இ. கவிஞருக்கு. தயாரிப்புக் கவிஞருக்கோ யார்யாரெல்லாசூமோ கவிதைப் புத்தகம் கொண்டு வருகிறார்கள். இவர் அப்பாவியாக இருக்கிறாரே என்ற நினைப்பு.
“வணக்கம். என் புதிய கவிதைப் புத்தகத்திற்கு உங்களிடம்தான் முன்னுரை வாங்க நினைத்தேன்..”
“ஐய்யய்யோ..எனக்கு அந்தத் தகுதியே கிடையாது,” என்றார் த. இ. கவிஞர்.
“ஏன் தகுதி இல்லை. நானும் நீங்களும்தான் முதன் முதலாக எழுத ஆரம்பித்தோம். இதோ நான் பத்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளைக் கொண்டு வந்துள்ளேன். ஆனால் நீங்கள் ஒன்றுகூட கொண்டு வரவில்லை..”
“நான் வேலையில் மூழ்கிவிட்டேன். வீட்டுப் பிரச்சினை வேறு.. எங்கே கவிதை எழுதுவது..”
“நீங்கள் ஒன்றிரண்டு எழுதினாலும் நன்றாக எழுதுவீர்கள்….உங்கள் திறமையை வீணடித்து விட்டீர்கள்..”
“நான் அப்படி நினைக்கவில்லை. யார் கவிதைப் புத்தகங்கள் வாங்குவார்கள்…நாலு பேர்கள் படிப்பார்களா?”
“இதோ இந்தப் புத்தகக் காட்சிக்கு என் பத்தாவது கவிதைத் தொகுதியைக் கொண்டு வருகிறேன்…”
“அப்படியா?”
“ஆமாம். இரண்டே நாளில் தயாரித்துவிட்டேன்.. மடமடவென்று எழுதி..”
“உங்கள் திறமை யாருக்கு வரும்?”
“உங்களுக்கு முன் நான் தூசுதான்..”
“கவிதைகள் எப்போது எழுதினீர்கள்?”
“இப்போதுதான். இரண்டு நாட்களில்..மடமடவென்று..”
“ஆச்சரியமாக இருக்கிறது..இரண்டு நாட்களில் தயாரிக்க முடிகிறது உங்களால்…மடமடவென்று எழுதி..”
“இதுவரை எத்தனைக் கவிதைகள் எழுதியிருப்பீர்கள்..”
“எண்ணவே முடியாது.. கிட்டத்தட்ட ஆயிரம் இருக்கும்..”
“உங்கக் கிட்டயே நான் வர முடியாது…உங்களுடன் பேசுவதற்கே நான் பாக்கியம் செய்திருக்கணும்.”
“உங்கள் தொகுப்புகூட ஒன்று வருவதாக சொன்னார்களே?”
“ஆமாம். இந்த விருட்சம் ஆசிரியர்தான் அதைக் கொண்டு வருவதாகக் கூறி உள்ளார்..50 கவிதைகளை தேர்ந்தெடுத்து வைத்துள்ளார்.. இன்னும் எதாவது கவிதை எழுதியது கிடைக்குமா என்று கேட்டுள்ளார்..நான்தான் கொடுக்கவில்லை. என்ன அவசரம். பிறகு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன்.”
“பொதுவா கவிதைத் தொகுதி விற்காவிட்டாலும் அவர் கவிதைப் புத்தகம் கொண்டு வருகிறாரே அவர் கிரேட்தான்..”
“உங்க கவிதைத் தொகுதி விற்றுவிடுமா?”
“எனக்கு 100 வாசகர்கள் இருக்கிறார்கள்…நான் ம் என்றால் எல்லாவற்றையும் வாங்கி விடுவார்கள்..”
“இப்போது கொண்டு வரும் கவிதைத் தொகுதி பெயர் என்ன?”
“தூறல் நின்னுப் போச்சு..”
“தூறலே இல்லை எப்படி நிற்கிறது. பாக்கியராஜ் பட டைட்டில் மாதிரி இருக்கிறது..”
“சினிமாக்காரங்கதான் அவங்கப் படத்துக்கு நம்ம டைட்டில காப்பி அடிக்கணுமா…ஒரு மாற்றத்திற்கு நாம் ஏன் அவங்கப் பட டைட்டிலைக் காப்பி அடிக்கக் கூடாது..”
“ஓ… கேட்பதற்கே ஆனந்தமாக இருக்கிறது. நான் அவசரமாக வீட்டிற்குப் போக வேண்டும். பிறகு வருகிறேன்..” என்று அவர் பதிலுக்குக் காத்திராமல் ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து கிளம்பி விட்டார் தயாரிப்பு இல்லாத கவிஞர்.
(இந்த உரையாடல் முழுவதும் கற்பனை. யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லை)
எதிர்பாராத சந்திப்பு
என்னுடைய முழு சிறுகதைத் தொகுதி வாங்குபவர்களுக்கு சென்னையில் இருந்தால் அவர்கள் வீட்டிற்குச் சென்று புத்தகம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அப்படி சிலருக்குக் கொடுத்துக்கொண்டும் இருக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை அன்று மடிப்பாக்கத்தில் உள்ள பெண் வீட்டிற்குச் சென்றுவிட்டு வரும் வழியில் என் அலுவலக நண்பர் சுரேஷ் அவர்களிடம் என் புத்தகம் ஒன்றை கொடுக்கச் சென்றேன். அவர்கள் வீட்டு மாடிப்படிக்கட்டிற்குப் போகும்போது ஜாக்கிரதையாகப் போக வேண்டும். தடுமாறி விழ தரை ஒரு விதமாக ஏமாற்றும். அவரிடமும் புத்தகம் கொடுத்துவிட்டு ஷண்முக சுந்தரம் என்ற நண்பரை ஆதம்பாக்கத்தில் சந்தித்து கதைப் புத்தகம் கொடுக்கச் சென்றேன்.
புக்கிஸ் என்ற பெயரில் ஒரு புத்தகக் கடை வைத்திருக்கிறார் ஷண்முக சுந்தரம். ஒரே ஆச்சரியம். ஏகப்பட்டப் புத்தகங்கள் அடுக்கி வைத்திருக்கிறார். பளீரென்ற விளக்குகள் வெளிச்சத்தில். இரும்பு அலமாரிகளில் பெரும்பாலும் தமிழ் புத்தகங்கள்.. வாடகை நூல் நிலையம் வைத்து நடத்துகிறார். அலுவலகம் போய்விட்டு வந்து மீதி நேரத்தில் நடத்துகிறார். எல்லோரும் வந்திருந்து புத்தகங்களை எடுக்கிறார்களா என்று கேட்டேன். இல்லை என்கிறார். யாராவது வந்தால் இப்போது பாக்கெட் நாவல்கள் எழுதும் பெண் எழுத்தாளர்கள் புத்தகம்தான் வாங்குகிறார்கள் இல்லாவிட்டால் பாலகுமாரன் புத்தகங்கள் எடுக்கிறார்கள் என்றார். நான் நடத்திய விருட்சம் இலக்கியக் கூட்டத்திற்கெல்லாம் வந்திருப்பதாக சொன்னார். என்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி என்றார். மேற்கு மாம்பலத்தில் வைத்திருக்கும் என் நூல் நிலையத்திற்கு வந்திருந்து அதைச் சரி செய்ய உதவும்படி அவரிடம் கேட்டுக்கொண்டேன். வருகிறேன் என்றார். ஆனால் ஒன்று மட்டும் சொல்லவில்லை. அந்த நூல்நிலையத்தில் ஒருவர் மட்டும்தான் மெம்பர் என்றும், அது நான் மட்டும்தான் என்றும் அவரிடம் சொல்லவில்லை.
ரோஜா நிறச் சட்டை
என்னுடைய சிறுகதைத் தொகுதியான ரோஜா நிறச் சட்டை மின்னூலாக வந்துள்ளது. ஒரு விதத்தில் பா ராகவன் தூண்டுதல் இப் புத்தகம் வர உதவியது. மேலும் என் நண்பர் கிருபானந்தன் இப் புத்தகத்தை மின்னூலாக மாற்ற உதவி செய்தார். ஏற்கனவே நேர் பக்கம் என்ற கட்டுரைத் தொகுதி மின்னூலாக உள்ளது. AMAZONKINDLE ல் KDPAMAZON. COM போய்ப் பார்க்கவும்.
விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்
சுக்வீர் கவிதைகள்
2. வண்ணங்கள்
வண்ணங்கள் சாவதில்லை
அவை கரைந்து விடுகின்றன
அல்லது அடித்துக் கொண்டு போகப்படுகின்றன
அல்லது பூமியின் அந்தகாரத்தில்
விதைக்கப்படுகின்றன.
வண்ணங்கள் மலர்களாக மாறுகின்றன,
மேகங்களின் ஒளிர்ந்து
உதடுகளில் புன்னகை பூக்கின்றன,
கண்ணீரைப் பெருக்கி
ஒளியை ஈன்றெடுக்கின்றன.
வண்ணங்களாகிய நாம்;
வண்ணங்கள் உருவாக்கும் நாம்
வாழ்க்கையை
நம் முதுகுகளில் சுமந்து கொண்டோ
நம் பின்னால் இழுத்துக் கொண்டோ
நம் சிறகுகளில் அலைத்துக்கொண்டோ
இங்கு வந்து சேர
நூற்றாண்டுகளைத் தாண்டியிருக்கிறோம்,
இருள் முதல் ஒளிவரை உள்ள
எல்லா வண்ணங்களுமான நாம்
பல தடவைகளில்
அடித்துக்கொண்டுபோகப்பட்டு
மறுபடியும் பிறந்திருக்கிறோம்.
இன்றும்
காலத்திரையை வண்ணங்கொண்டு தீட்டுகிறோம்
அனாதிகாலத்தொட்டுப் பிறந்து வரும் நாம்
வாழ்க்கையின் அமுதைக் குடித்ததால்
இன்றும்
நஞ்சுடன் கலந்த வாழ்க்கையமுதைச்
சுவைக்கிறோம்
கனவுகளை உருவாக்குகிறோம்
மூலம் : பஞ்சாபி தமிழில் : மேலூர்
சுக்வீர் (1925) நாவல், சிறுகதை, கவிதை இத்துறைகளில் பஞ்சாபி மொழியில் சிறந்து விளங்குகிறார். நான்கு கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. நாற்பத்தைந்து நூல் களுக்கு மேலாக பஞ்சாபியில் மொழி பெயர்த்திருக்கிறார். அவரது கவிதைகளும் கதைகளும் ஆங்கிலத்திலும் வேறுபல இந்திய, அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
(நவீன விருட்சம் ஜøலை – செப்டம்பர் 1989)
‘
மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 83
தேவராஜ் விட்டலன் கவிதை
வளைந்த
மரக்கிளையில்
அமர்ந்து கொண்டு
சப்தமிடுகிறது
ஒரு சிட்டுக் குருவி…
.விடுபட்ட
சொந்தங்களை
சப்தமிட்டு
அழைக்கிறது…
யாரும் வராத
கணத்தில்
ஏக்கத்தோடு
பறந்து செல்கிறது
மரக்கிளையை
விட்டு.
நன்றி : ஜான்சிராணியின் குதிரை – கவிதைகள் – தேவராஜ் விட்டலன்- வாசகன் பதிப்பகம், 167 ஏவிஆர் காம்ப்ளக்ஸ், அரýசுக் கலைக்கல்லூரி எதிரில், சேலம் – 636 007, கைபேசி : 9842974697 – பக்கங்கள் : 64 – விலை : ரூ.50
என்னுடைய ‘திறந்த புத்தகத்திற்கான’ அறிமுக உரை பகுதி 5
சமீபத்தில் நடந்த புத்தகக் காட்சிக்காக வந்திருந்த பா ராகவனிடம் என் ‘திறந்த புத்தகம்’ பிரதியைக் கொடுத்தேன். உடனே படித்துவிட்டு ராகவன் எனக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரை இப் புத்தகம் பற்றி சில நிமிடங்கள் பேச இயலுமா என்று கேட்டுக்கொண்டேன். அவர் அதற்கு சம்மதித்தார். இதோ அவர் பேசியதை இங்கு ஒளிபரப்புகிறேன். ஏற்கனவே 4 பேர்கள் இப் புத்தகத்தைப் பற்றி பேசி உள்ளார்கள். ஐந்தாவதாக ராகவன்.
புத்தகம் வேண்டுபவர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண். 9444113205.
சுக்வீர் கவிதைகள்
1. நடத்தல்
நான் நடக்கிறேன்
என் கால்களால் அல்ல
கண்களால் –
சாலைகளையும் தெருக்களையும்
இதயத் தொகுதிகளையும்
இரவின் இருளையும்
கடந்து செல்கிறேன்
சுற்றிலும்
மக்களின் காடு.
என் கண்களின் துணையோடு
அதைக் கடந்து செல்கிறேன்
கண்களுக்கே
அதனூடு செல்லும் திறன் உண்டு.
என் கால்கள் களைத்துவிட்டன
மிகவும் களைத்துவிட்டன.
ஆனால்
நான் நடந்துகொண்டேயிருக்கிறேன்
மக்கள் கூட்டங்களில் சிக்குண்டு
நான் முன்னேறிப் போகிறேன்.
என்றாலும்
இதயங்களின் வலி என்னும்
எல்லையைக் கடக்க
என்னால் இயலவில்லை.
நான் நடக்கிறேன்
என் கால்களால் அல்ல
கண்களால் –
ஒரு நீண்ட பயணம்
(நவீன விருட்சம் ஜøலை – செப்டம்பர் 1989)