திருக்குறள் சிந்தனை 10

இன்று நான் படித்தது பத்தாவது குறள். கடவுள் வாழ்த்து என்ற தலைப்பில் திருவள்ளுவர் பத்து குறள்களை அருளி உள்ளார். இந்தப் பத்து குறள்களிலும் ஒரு பொதுத் தன்மை உள்ளது. அறத்துப் பால் என்ற தலைப்பின் கீழ் இதெல்லாம் வருகிறது. அதாவது கடவுளை அடைவதுதான் அந்தப் பொதுத் தன்மை. அப்படி கடவுளை அடைவதற்கு என்னன்ன வழி முறைகள் என்பதையும் சொல்லியிருக்கிறார். அவர் கடவுள் என்பதை பொதுவாக சொல்லுகிறார். முதல் குறளில் அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் தோன்றும்போது தோன்றியது என்கிறார். இன்னொரு குறளில் விருப்பு வெறுப்பு இல்லாதவன் கடவுள் என்கிறார். ஒருவர் அப்படி விருப்பு வெறுப்பு இல்லாத நிலையில் இருக்க வேண்டும் என்கிறார். கடவுள் என்பதை விட ஒருவர் கடவுள் தன்மையை அடைய உள்ள வழி முறைகள் என்று இக்குறள்களைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.
உலகத்தில் உள்ள எல்லா மொழிகளிலும் திருக்குறள் மாதிரி ஒரு படைப்பு வந்திருக்கிறதா என்ற கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். அப்படி ஒன்று உருவாகவில்லை என்றுதான் எனக்குப் படுகிறது. எதாவது இருந்தால் அதை அறிந்துகொள்ளவும் ஆவலாக உள்ளேன்.

இதோ பத்தாவது குறள் :

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

பிறவியாகிய கடலை ஒருவர் நீந்த வேண்டுமென்றால் இறைவனின் பாதங்களைச் சேர வேண்டுமென்கிறார். நாவலர் இதற்கு உரை எழுதும்போது அறிவாற்றலில் சிறந்த சான்றோர் ஆகிய ஒரு பெருந்தலைவரைப் பின்பற்ற வேண்டுமென்கிறார். யார் அப்படிப்பட்ட பெருந்தலைவர் இந்தக் காலத்தில் இருக்கிறார்கள். நம் கண்ணுக்குப் புலப்படாத ஒருவரே ஒருவர் இருக்கிறார். அவர் கடவுள். அந்தக் கடவுள் வேறு எங்குமில்லை நம் மனதிலேயே வீற்றிருக்கிறார். நாம் அதை உணர வேண்டும். நீந்துவர் நீந்தார் என்ற வரி பிடித்திருக்கிறது.

திருக்குறள் சிந்தனை 9

நான் சிலருடைய புத்தகங்களை வாங்கி வைத்துக்கொள்வேன். படிக்கிறேனோ இல்லையோ புத்தகங்களை வைத்துக்கொண்டிருப்பேன். யார்யார் புத்தகங்களை அப்படி வாங்கி வைத்துக்கொள்வேன் என்பதை பட்டியிலிட விரும்புகிறேன். 1. காந்தியைப் பற்றிய புத்தகங்கள் 2. பாரதியார் குறித்து எழுதப்படுகிற புத்தகங்கள் அல்லது பாரதியார் புத்தகங்கள் 3. ஜே கிருஷ்ணமூர்த்தி புத்தகங்கள் 4. பெரியார் புத்தகங்கள் 5. ரமணர் புத்தகங்கள் 6. திருக்குறள் புத்தகங்கள். திருக்குறள் புத்தகங்களைக் கண்ணால் கண்டால் வாங்கி வைத்துக்கொள்வேன். ஆனால் புரட்டிக்கூடப் பார்க்க மாட்டேன். ஆனால் இன்று வரை என் வாழ்க்கையில் ஒரு குறளை நான் விடாமல் பின்பற்றிக்கொண்டு வருகிறேன். சமீபத்தில் திருக்குறளைப் பற்றி ஒரு கூட்டம் நடத்தினேன். என் மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு விட்டது. தினமும் ஒரு குறளை எப்படியாவது படித்துப் பார்ப்பது என்று.

இதோ இன்றைய குறள்.

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

எல்லா நல்ல குணங்களும் வல்லமைகளும் உள்ளவனாகிய இறைவனை உணர்ந்து அவனை வணங்காத மனிதனுடைய மூளை எந்த சிந்தனைச் சக்தியும் இல்லாமல் போய்விடும்.
திருக்குறளில் கடைசி வரியை எப்போதும் மறக்க முடியாது. தாளை வணங்காத் தலையையும் மறக்க முடியாது.+

வரப்பெற்றோம் பகுதியில்

விருட்சம் வெளியீடாக பத்மஜா நாராயணன் எழுதிய கவிதைத் தொகுதி யான üபிணா பற்றி சனிக்கிழமை தமிழ் இந்துவில் வரப்பெற்றோம் பகுதியில் செய்தி வந்துள்ளது.

திருக்குறள் சிந்தனை 8

நேற்று அந்திப் பொழுதில் கலைந்த புத்தகங்களை என் போஸ்டல் காலனி நூலகத்தில் அடுக்கி வைத்துக்கொண்டிருந்த போது என் கண்ணில் பட்டது இன்னொரு திருக்குறள் புத்தகம். கோ பெரியண்ணனின் உரையில் இப்புத்தகம் வெளிவந்துள்ளது. 1,33,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையில் சாதனை புரிந்ததாகப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. டாக்டர் சதாசிவன் திருமதி புஷ்பா சதாசிவம் அவர்களின் எண்பதாம் ஆண்டு விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கு இந்தத் திருக்குறள் புத்தகத்தை இலவசமாகப் பரிசளித்துள்ளார்கள். இந்த நிகழ்ச்சி 10.10.2011ல் நடந்துள்ளது. இப்படி ஒளிந்துகொண்டிருக்கும் திருக்குறள் புத்தகங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
இன்றைய திருக்குறள் :

அறவாழி அந்தணன் தான்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

அறக்கடவுளாக விளங்கும் கடவுளின் திருவடிகளை நினைப்பவர்களைத் தவிர மற்றவர்கள் பொருள், இன்பம் ஆகிய வேறு கடல்களைக் கடக்க மாட்டார்கள் என்கிறார் பெரியண்ணன். இந்தக் குறளில் அந்தணன் என்று ஏன் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அந்தணன் என்றால் கடவுளா?
பிறவாழி நீந்தல் அரிது பிடித்த வரி.

திருக்குறள் சிந்தனை 7

காலையில் எழுந்தவுடன் ஒரு குறளைப் படிக்கலாம் என்று எண்ணிப் படித்துக்கொண்டு வருகிறேன். இப்படிப் படிப்பது நல்ல அனுபவமாக இருக்கிறது. சில குறள்கள் படிக்கும்போதே நேரிடையாகவே நமக்குப் புரியும். சில குறள்களைப் படிக்கும்போது உரையின் தயவு நமக்குத் தேவைப்படும். பரிமேலழகர் உரையைப் படித்துப் புரிந்துகொள்வதுதான் சிரமம் என்று என் நண்பர்கள் பலர் கூறி உள்ளார்கள். என்னிடம் பரிமேலழகர் உரை இல்லாததால் நான் முயற்சி செய்யவில்லை. இப்போது இந்தக் குறளைப் பார்க்கலாம்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

தனக்குவமை இல்லாதான் யார்? கடவுள் என்கிறார் நாமக்கல் கவிஞர். அந்தப் பகவானைப் பணிந்தால்தான் நாம் ஓரளவு ஆசைகள் குறைந்து மனக்கவலை இல்லாமல் வாழலாம் என்கிறார் . நாவலரோ அறிவாற்றலில் சிறந்த சான்றோர் என்கிறார். அந்தச் சிறந்த சான்றோர் யார் என்று கண்டுபிடித்து ஆசைகளைக் குறைத்துக்கொண்டு அவர்கள் வழியில் சென்று மனக்கவலையைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். இதில் கடவுளையோ சான்றோரையோ நான் சொல்ல விரும்பவில்லை. மனக்கவலை இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் ஆசைகளைக் குறைத்துக்ùôள் என்று பூடகமாக திருவள்ளுவர் சொல்கிறார் என்று நினைத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. அதனால் திருவள்ளுவர்தான் சான்றோர். திருவள்ளுவர்தான் கடவுள். இக்குறளில் எனக்குப் பிடித்த வரி : மனக்கவலை மாற்றல் அரிது.

பத்து கேள்விகள் பத்து பதில்கள் …..17

இந்துமதி பேட்டியின் இரண்டாவது பகுதி

நேற்று இந்துமதி பேட்டியின் முதல் பகுதியை வெளியிட்டிருந்தேன். அதன் இரண்டாவது பகுதியை இப்போது வெளியிடுகிறேன்.

.youtube.com/watch?v=ZQgS2VkoEP8&feature=youtu.be

திருக்குறள் சிந்தனை 6

கடவுள் வாழ்த்து என்ற பெயரில் 10 குறள்கள் எழுதி உள்ளார். ஒவ்வொரு குறளையும் ஒவ்வொரு விதமாக கட்டமைத்துள்ளார். இதோ இந்தக் குறளைப் பார்ப்போம்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

ஐம்பொறிகள் வாயிலாகச் செயல்படும் ஐம்புலன்களையும் நம் கட்டுக்குள் கொண்டு வந்தால் மெய்யான ஒழுக்க நெறியில் நாம் வாழலாம் என்கிறார் திருவள்ளுவர். இந்த ஐம்பொறிகளையும் கட்டுக்குள் கொண்டு வருபவர் கடவுள்தான். நாம் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த நெறி அவசியம் என்கிறார்.

நெறிநின்றார் நீடுவாழ் வார் என்ற வரி பிடித்திருக்கிறது. ஐம்புவன்களான மெய், வாய், கண், மூக்கு, செவியைக் கட்டுக்குள் கொண்டு வருதல் என்றால் என்ன? நம் கட்டுக்குள் இவை அடங்கி வருமா என்பது புரியவில்லை. இந்தக் குறள் நம்மை யோசிக்க வைக்கிறது. ஒருவிதத்தில் இக்குறள் மருத்துவக் கருத்தாகவும் இருக்கும்போல் தோன்றுகிறது.

பத்து கேள்விகள் பத்து பதில்கள் …..17

இந்துமதி பேட்டி அளிக்கிறார்.

இந்தத் தலைப்பில் இதுவரை எழுத்தாளர் இந்துமதியையும் சேர்த்து 17 படைப்பாளிகளைப் பேட்டி எடுத்துள்ளேன். எல்லாம் எளிமையான கேள்விகள் எளிமையான பதில்கள்.
üதரையில் இறங்கும் விமானங்கள்ý என்ற நாவல் மூலம் புகழ்பெற்றவர் இந்துமதி அவர்கள். இன்றும் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருகிறார். அவருடைய பேட்டியை இப்போது வெளியிடுகிறேன்.

திருக்குறள் சிந்தனை 5

நான் சீர்காழி என்ற இடத்தில் பொது வங்கியில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதுதான், திருக்குறள் வெறியர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் நூற்றுக்கணக்கில் திருக்குறள் புத்தகங்கள் வாங்கி எல்லோருக்கும் இலவசமாக வழங்கிக் கொண்டிருப்பார். அவரும் என்னைப் போல என் அலுவலகத்தில் ஒரு அலுவலர். அவர் ஏற்பாடில் எங்கள் வங்கியில் ஒரு போர்டு வாங்கி ஒவ்வொருநாளும் திருக்குறளும் அதன் கருத்துரையும் எழுதி வாடிக்கையாளர் பார்வையில் படும்படி வைப்பேன். ஏதோ ஒரு திருக்குறள் புத்தகத்தில் உள்ள ஏதோ ஒரு குறளை எடுத்து மூலத்தையும் கருத்தையும் எழுதி வைப்பேன். உண்மையில் யாரும் படிக்க மாட்டார்கள். ஏன் என்பதற்கு ஒரு காரணம் கண்டுபிடித்தேன். உண்மையில் போர்டில் திருக்குறள் எழுதினாலும் எந்த உணர்வுநிலையும் இல்லாமல் மரக்கட்டைபோல் ஏதோ இதெல்லாம் செய்ய வேண்டுமென்று செய்து வந்தேன். இதைத்தான் வாடிக்காளர்களும் பிரதிபலித்ததாக நினைக்கிறேன்.
இதோ இப்போது ஒவ்வொரு நாளும் ஒரு குறள் விதம் எடுத்து எழுதிக்கொண்டிருக்கிறேன். உலகத்தில் உள்ள எல்லா தத்துவங்களும் திருக்குறளின் ஒன்றரை அடியில் வந்து விடும்போல் தோன்றுகிறது.
இன்றைய திருக்குறளை இங்கே குறிப்பிடுகிறேன்.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இந்தக் குறளுக்கு இரா கோ அண்ணாமலை இப்படி அர்த்தம் சொல்கிறார். நல்வினை தீவினை, பாவம் புண்ணியம், புகழ்ச்சி, இகழ்ச்சி என்ற இவ்வுலகின் செயல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் இறைவன் என்கிறார் அவனை நாடிச் செல்லும்போது எல்லாம் ஒன்றே என்று தோன்றும் என்கிறார். இதை இளங்குமரனார் வேறு விதமாகக் கூறுகிறார். நன்மைக்கு உறைவிடமானவனின் மெய்வழியில் நடப்பவர்க்கு மயக்கும் இன்ப துன்பமில்லை என்கிறார்.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் என்ற வரி மனதை விட்டு அகலவில்லை.

சுனில் கிலநானியும் நானும் என்ற தலைப்பில் போனமாதம் நடந்த கூட்டத்தின் ஒளிபரப்பு -3

மே மாதம் 3வது சனிக்கிழமை எழுத்தாளர் சா கந்தசாமி தலைமையில் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடந்தது. இந்தியா என்கிற கருத்தாக்கம் என்ற தலைப்பில் சுனில் கில்நானி எழுதிய புத்தகத்தை ஒட்டி இந்தக் கூட்டம் நடந்தது.
அந்தக் கூட்டத்தைப் பற்றிய 3 பகுதிகளாக உள்ள அந்த ஒளிப்பரப்பின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் சில தினங்களுக்கு முன் வெளியிட்டேன். இதோ இப்போது மொழிபெயர்ப்பாளர் அக்களூர் ரவி அவர்கள் பேசுகிறார்கள்.