நீங்களும் படிக்கலாம் – புத்தக எண் : 42

அன்புள்ள மோஹினிக்கு,

வணக்கம்.

கடந்த சில மாதங்களாக நான், நீங்கள், ஜெகன் மூவரும் சந்தித்துக்கொள்ள முடியவில்லை. உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்று அறிந்தேன். வயிற்றில்தான் ஏதோ பிரச்சினை என்று ஜெகன் குறிப்பிட்டார். உண்மையில் நாம் வயிற்றைத்தான் சரியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்னொன்றும் ஜெகன் சொன்னார். இப்போது நீங்கள் பரவாயில்லை என்று.
நாம் மூவரும் ஒவ்வொரு முறையும் சந்தித்துக் கொள்கிறோம். அதோடு அல்லாமல் புத்தகங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். யாராவது புத்தகங்கள் படிப்பதில் விருப்பமில்லாதவர்கள் நாம் பேசுவதைக் கேட்டால் பைத்தியம் பிடித்து ஓடிப்போய்விடுவார்கள்.
ஜெகன் சொன்னார் நீங்கள் முடிச்சூர் ரோடிலிருந்து வருவதாகவும் அவர் மடிப்பாக்கத்திலிருந்து வருவதாகவும். நீங்கள் இருவரும் அவ்வளவு தூரத்திலிருந்து என்னைப் பார்க்க வருவது மகிழ்ச்சிதான். நான் இதைக் கூட தெரிந்து கொள்ளாமல் இருந்தது தப்புதான். ஒரு முறை நானும் நீங்கள் இருக்குமிடத்திற்கு வருகிறேன். புத்தகங்களைப் பற்றி அங்குப் பேசலாம். உங்கள் பெண்ணிற்கு கல்லூரியில் இடம் கிடைத்து விட்டதா?
இந்தக் கடிதத்தை ஏன் எழுதுகிறேன் என்றால் üகறையான்ý என்ற வங்க நாவலைப் படித்த மகிழ்ச்சியை தங்களிடம் தெரிவிக்கத்தான். இந்த நாவலை சு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வங்க மொழியிலிருந்து மொழி பெயர்த்திருக்கிறார்.
நேஷனல் புக் டிரஸ்ட் இந்த நாவலைக் கொண்டு வந்துள்ளது. 1976ல் இந்த நாவலை விலைக்கு வாங்கினேன். அப்போதே பழைய புத்தகம் மாதிரி இருந்தது. வாங்கியவுடன் படித்தும் விட்டேன். 146 பக்கங்கள் என்பதால் படித்து விட்டேன். உண்மையில் ஒரு புத்தகத்தை ஒரே மூச்சில் படிக்கிறேன் என்றால் அந்தப் புத்தகத்தில் எதாவது இருக்க வேண்டும். முதலில் ஒரு வங்க மொழியிலிருந்து எழுதிய நாவல் மாதிரி தெரியவில்லை. இதுவே முக்கிய காரணமாக நான் நினைக்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு முழுவதும் மறந்தும் விட்டேன். பொதுவாக நான் புத்தகம் படிக்கிறேன் என்றால் அந்தப் புத்தகத்தில் எதாவது குறிப்புகள் எழுதியிருப்பேன். இந்த மாதத்தில் இந்த ஆண்டில் படித்திருக்கிறேன் என்று எழுதியிருப்பேன். அல்லது புத்தகத்தில் எதாவது கோடுபோட்டு குறித்து வைத்திருப்பேன். ஆனால் இந்தப் புத்தகத்தில் எதுவும் செய்யவில்லை. திரும்பவும் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டுமென்று தோன்றியது. எடுத்துப் படிக்க படிக்கப் புத்தகத்தின் பக்கங்கள் ஒவ்வொன்றும் உடைந்து உடைந்து தூள் தூளாக மாறியது. இரண்டு நாட்கள் முன் எக்மோரில் இருக்கும் நேஷனல் புக் டிரஸ்ட் புத்தகக் கடைக்குச் சென்றேன். இந்தப் புத்தகம் அங்கு விற்பனைக்கு இல்லை. திரும்பவும் அச்சடித்துக் கொண்டிருப்பதாக கடையில் பணிபுரிபவர் கூறினார். எனக்கு நம்பிக்கை இல்லை. பொய்.
நேற்றுதான் (22.06.2018) இந்தப் புத்தகத்தை திரும்பவும் படித்து முடித்தேன். எப்போதும் ஒரு புத்தகத்தைப் படித்து விட்டால் அது குறித்து எதாவது எழுதுவது என் வழக்கம். அல்லது நாம் சந்திக்கும்போது அதுகுறித்துப் பேசுவோம். கொஞ்சம் யோசித்துப் பார்க்கும்போது இந்தப் புத்தகத்தைப் படித்தபோது எனக்கு ஆல்பெர் காம்யுவின் அந்நியன் என்ற நாவல் ஞாபகத்திற்கு வந்தது. இருத்தலியலை அடிப்படையாகக் கொண்டு நாவல் எழுதியிருப்பார். ஒரு விதத்தில் கறையான் நாவலும் அப்படித்தான்.
சீர்ஷேந்து முகோபாத்யாதான் இந்த நாவலை எழுதி உள்ளார். வங்காள மொழியில் இந்த நாவல் பெயர் குண்போகா. 1967ஆம் ஆண்டு இந்த நாவலை எழுதி உள்ளார். 1942ல் அந்நியன் என்ற நாவலை ஆல்பெர் காம்யு எழுதி உள்ளார். இந்த நாவலின் முன்னுரை எழுதியவர் இப்படி எழுதுகிறார் : சமூகமும் அரசியலும் மனிதனின் நோக்கில் செல்லாக் காசாகிவிட்ட ஒரு காலத்தில் அவன் தன்னிடம் திரும்பி வரும் கதையை எழுதுகிறார்கள் நாவலாசிரியர்கள் என்று குறிப்பிடுகிறார்.
செயின்ட் அன்ட் மில்லர் கம்பெனி வேலையை ஜøன் மாதத்தில் விட்டுவிட்டான் சியாம் என்று ஆரம்பிக்கிறது கதை. பொன் முட்டை இடக்கூடிய வேலை. வேலையை விடுவதற்குரிய
முக்கிய காரணம் எதுவுமில்லை ஷ்யாமின் மேலதிகாரி ஹரி மஜ÷ம்தார் எல்லோருடைய காதுகளில் விழும் மாதிரி ஷ்யாமை வேசி மகன் என்று திட்டிவிட்டான். இது பெரிய யோசனையில் கொண்டு விட்டது ஷ்யாமிற்கு. உடனே வேலையை விட்டுவிட்டான். இந்த நாவல் இப்படிப் போகிறது. அதன் பின் ஷ்யாம் எந்த வேலைக்கும் செல்லவில்லை. ஒரு நாடோடி மாதிரி கல்கத்தாவிலேயே சுற்றி சுற்றி வருகிறான். அலுவலகம் போகவில்லை என்பதால் தாடி வளர்த்துக் கொள்கிறான். உடை மோசமாக இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்கார நிலையில் இருக்கிறான்.
ஷ்யாம் சந்திக்கும் நபர்களும் வித்தியாசமானவர்கள். மித்ரா என்ற ஒருவனை சந்திக்கிறான். உண்மையில் இந்த நாவல் எல்லோரையும் சந்திப்பதுதான். மித்ரா 40 வயதுக்காரன். அவன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறான். அவனுக்குப் பெண்ணே கிடைக்கவில்லை. அந்த விரக்தியில் ஷ்யாமுடன் பேசுகிறான். கையில் தூக்க மாத்திரிகளை வைத்திருப்பதாக. ஒரு நாள் எல்லாவற்றையும் சாப்பிட்டு விடுவேன் என்கிறான். ஷ்யாம் அவனிடம், எனக்கும் பாதி மாத்திரிகளைப் பத்திரப்படுத்து என்கிறான்.
தற்செயலாக லீலா என்ற பெண்ணைப் பார்க்கிறான் ஷ்யாம். ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கிறாள். அவள் அலுவலகம் உள்ள தெருவில் ஒரு கம்பத்தில் சாய்ந்துகொண்டு அலுவலகக் கண்ணாடி கதவு வழியாக அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறான் ஒருநாள் முழுவதும். அவள் அவனைப் பார்க்கவே பயப்படுகிறாள். அவள் வேலை முடிந்து வெளியே வரும்வரை ஷ்யாம் அங்கிருந்து நகராமல் அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறான். அவளைப் பார்த்துப் பேசக்கூட ஷ்யாம் சங்கடப் படுகிறான். அவளும் ஆரம்பத்தில் அவனைப் பார்த்துப் பயந்தாள் என்றாலும் பின்னால் பயப்படவில்லை. ஒவ்வொரு முறை அவனைப் பார்க்காமலே போய்விடுவாள். இந்த நாவலில் பல தகவல்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே போகலாம். விசித்திரமான சில விபரங்களும் உண்டு; ஷ்யாம் சாப்பிடும் ஓட்டல் வாசலில் நாய்கள் காத்துக்கொண்டிருக்கும். ஒவ்வொரு நாளும் அவற்றின் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே போகும். இப்போது படித்தாலும் இந்த நாவல் புத்துணர்ச்சியைத் தரும்படி இருக்கிறது.
ஷ்யாமின் பித்து நிலைதான் இந்த நாவல். இதை எடுத்துக்கொண்டு போகிற விதம் சிறப்பாக உள்ளது. இந்தப் புத்தக நிலை மோசமாக இருப்பதால் இந் நாவலை இன்னொரு முறை படிக்க முடியாது. ஆனால் மறக்க முடியாத புத்தகம். நான் இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன் அந்நியன் நாவலை எடுத்து வைத்துக்கொண்டேன் படிப்பதற்கு.
மோஹினி உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் கடிதத்தின் நகலை ஜெகனுக்கும் அனுப்புகிறேன். திரும்பவும் சந்திப்போம்.

அன்புள்ள

அழகியசிங்கர்

திருக்குறள் சிந்தனை 15

காலையில் எழுந்தவுடன் திருக்குறள் படிக்காமல் இருக்க முடியாது என்ற நிலை எனக்கு வந்து விட்டதுபோல் தோன்றுகிறது. ஒரு நாளைக்கு ஒரு குறள் விதம்தான் படிக்கிறேன். அப்படிப் படிக்கும்போது நேற்று அதன் முதல் தினம் படித்தக் குறள்களையும் திரும்பவும் எடுத்துப் படிக்கிறேன்.
திருக்குறள் மூலம் நமக்கு என்ன கிடைக்கிறது. வான்சிறப்பு என்ற பெயரில் ஒவ்வொரு குறளாக எடுத்துப் படித்துக்கொண்டிருக்கிறேன். மழை என்ற ஒன்று இல்லாவிட்டால், நம்மால் வாழவே முடியாது என்பதைக் குறள் அழுத்தமாக வலியுறுத்துகிறது.
என் பள்ளி பருவத்தில் திருக்குறளைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது. ஏன்னென்றால் நான் மனப்பாடம் செய்து தேர்வில் கேள்வி கேட்டால் எழுத வேண்டும். இப்படி மனப்பாடம் செய்து ஒப்பிப்பதை நான் விரும்பி ஏற்றுக்கொண்டதில்லை.
ஒன்றரை அடியில் அழுத்தம் திருத்தமாக தன் கருத்துக்களைச் சொல்வதோடல்லாமல் போதிக்கும் தன்மையாகவும் திருக்குறள் தென்படுகிறது. ஒருவர் ஒரு திருக்குறளைப் படித்துவிட்டு அதை விட்டு வெளியே வரும்போது எந்த மன நிலையில் இருப்போம் என்பதையும் யோசிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.
இதோ 15வது குறளை உங்கள் முன் அளிக்கிறேன்.

கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

இன்று நடைப்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது தாங்க முடியாத வெயில். அப்போதுதான் மேலே குறிப்பிட்ட குறள் ஞாபகத்திற்கு வந்தது. உலக மக்களை தவிக்கச் செய்வதும் அப்படித் தவிக்கின்றவர்களின் துன்பங்களை நீக்குவதும் மழை ஒன்றுதான். இந்த மழை இல்லாவிட்டால் தவித்தபடியே இருக்க வேண்டியதுதான். மழையே கடவுள் என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது. கெடுப்பதையும் எடுப்பதையும் மழைதான் செய்து கொண்டிருக்கிறது. இந்தக் குறளில் கெடுப்பதூஉங் எடுப்பதூஉம் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் அற்புதமாக அமைந்துள்ளன.
வனம் என்ற பெயரில் ஒரு பத்திரிகை வந்தது யாருக்காவது தெரியுமா? ஸ்ரீ நேகனும், ஜீ முருகனும்தான் அதன் ஆசிரியர்கள். அக்டோபர் – நவம்பர் 2005 இதழ் என்னிடம் உள்ளது. வனம் ஐந்தாவது இதழ். அந்த இதழைப் புரட்டிக்கொண்டு வந்தபோது என் கண்ணில் பழனிவேள் கவிதை ஒன்று பட்டது. திடீர் மழை என்ற தலைப்பு அக் கவிதையை இங்கு தருகிறேன்.

திகைத்த நடவுப்பெண்கள் கரையேறாமல்
வயலில் விளையாட்டாக பெய்யும்
மழையை முக்காடிட்டு நின்றனர்
கூடுதலானதோடு மழை
உருமாறத்துவங்கியது
அப்பெண்களின் மேல் அலங்காரமாக

விலகியமுடிகளில் திரளும் முத்துகள்
நெற்றியில் மூக்கின்நுனியில்
உதட்டு விளிம்புவரை அரும்பி
தோடுடைய செவிகள் உருகுகின்றன
கழுத்தில் புதிய மணிச்சரம்
விரல்களி கைகளில் தின்மையாக
கலகலக்கிறது
காலில் நிலையற்று நழுவும் கொலுசுகள்

மழை தீவிர மடைந்துவிட்டது
அவர்கள் முன்னிலும் தெப்பலாகி
பார்க்க மழை நடுங்குகிறது

ஒருத்தில அண்ணாந்து மழையை
விலக்கமுயல
ஒரு துளி நழுவி
நழுவி
அல்குலில்பட்டது
இன்னதென புரியாமல் பரவசப்படுகிறாள்
பிறகு அவள் புதைந்து நிற்கும் சேற்றில்
விசையற்று துளிர்விடத்துவங்கினாள்.

திருவள்ளுவரோ மழை இல்லாவிட்டால் அவ்வளவுதான் ஜாக்கிரதை என்று மிரட்டுகிறார். பழனிவேளோ அவருகடைய கவிதையில் மழையை வைத்து விளையாடுகிறார்

திருக்குறள் சிந்தனை 14

ஒரு குறளை எடுத்து வாசிக்கும்போது அதற்கிணையாக நவீன கவிதை என்ன சொல்ல வருகிறது என்பதையும் சேர்த்து வாசிக்க ஆரம்பித்துள்ளேன். ஒன்றரை அடியில் திருவள்ளுவர் சில உண்மைகளைக் கூறுகிறார். சில குறள்கள் மூலம் போதிக்கவும் செய்கிறார்.
வான் சிறப்பு என்ற இரண்டாவது அதிகாரத்தின் மூலம், வானின் சிறப்பாக மழையைப் பற்றியும் அந்த மழை மாத்திரம் இல்லாவிட்டால் நாமெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல் பத்து குறள்கள் மூலம் சொல்லிக்கொண்டு போகிறார்.
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளம்குன்றிக் கால்.

இது மிக எளிமையான குறள் இது. புயல்என்னும் என்கிறார். ஏன் இப்படிச் சொல்கிறார் என்று யோசித்தேன். வானத்திலிருந்து பெய்யும் மழை புயல்போல் வரவேண்டும் என்கிறார். அப்படி வராவிட்டால் உழவர்கள் ஏர் ஓட்டி நிலத்தை உழமாட்டார்கள் என்கிறார்.
இதில் அதிகாரத்தில் கூறப்பட்ட கவிதைகள் எல்லாம் மழையின் பெருமையைக் கூறும் குறள்கள். மழையின் பெருமையைப் பற்றி திருவள்ளுவர் தவிர வேற யாராவது கூறியிருப்பார்களா என்பது சந்தேகம். மேலே குறிப்பிட்ட குறளில் எனக்குப் பிடித்த வார்த்தை புயல்என்னும்.
வைதீஸ்வரன் என்ற தற்கால கவிஞர் மழையைப் பற்றி இரண்டு கவிதைகள் எழுதி உள்ளார். இன்னும் யார் யாரோ எழுதியிருப்பார்கள். ஒரு கவிதையின் பெயர் மழை என்ற கனவு.
திருவள்ளுவர் சொல்கிறார் மழை இல்லாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது என்று. மழை கனவில் வருவதாக வைதீஸ்வரன் கூறுகிறார். அவர் கடைசி வரை மழை பெய்ததை நம்ப மறுக்கிறார். இந்தக் கவிதையையும் பார்ப்போம்.
விடிய விடியப் பெய்ததாம்.
எல்லோரும் சொன்னார்கள்.
எனக்கு
நம்பிக்கை வரவில்லை.

மழை ஊரறிந்த ரகஸியம்
இது
யார் சொல்லித் தெரிய
வேண்டும்.
விடிந்தவுடன்
மண்ணே காட்டிக் கொடுத்துவிடும்

மழை வெறும்
கனவில்தான் பெய்திருக்கிறது
அத்தனை பேர் கனவிலும்.
தவறி மண்ணில் விழுந்திருந்தால்,
கருமி கண்ட காசு போல்
பூமி பதுங்கியிருக்கும்
அதன் மனம்
நெருப்பென்று எனக்குத் தெரியும்.

மழை
பேப்பரிலும்
விடிய விடியப் பெய்ததாம்.
வந்தது செய்தியாக.
மழைக்கு நல்ல
மார்க்கட்டு இருப்பதால்
மிகைப்படுத்துவது வழக்கமான
மனித பலவீனம்தான்.

ஜன்னலிடம் என்
சின்னக் குழந்தை
கைநீட்டிச் சிரிக்கிறது, இரண்டு இலைகளைப்
பார்த்து
இலைகளின் மேல் இன்னும்
திருட்டுப் போகாமல் இருக்கும்
இரண்டொரு முத்துக்களைப் பார்த்து.

இவைகள் முடிந்தவரை
தலையாட்டியது
மழையை எனக்கு நம்பவைப்பதற்காக.
(மனக்குருவி என்ற புத்தகம்)

திருக்குறளும் நானும்

திருக்குறளும் நானும் என்ற தலைப்பில் சி ராஜேந்திரன், ஐஆர்எஸ் அவர்கள் பேசிய கடைசி ஒளிப்பதிவை இப்போது வெளியிடுகிறோம். 16.6.2016ஆம் அன்று இக் கூட்டம் நடந்தது.

திருக்குறள் சிந்தனை 13

திருவள்ளுவர் வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் மழையைப் பற்றி பலவிதமாக பாடல்களைப் புனைந்துள்ளார். உயிர் வாழ்வதற்கு முக்கியமான காரணியாக இருப்பது மழை. மழை அதிகமாகப் பெய்தாலும், மழையே பெய்யாமல் இருந்தாலும் அதிக ஆபத்தில் மக்கள் அவதிப்படுவார்கள்.

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

கடல்சூழ்ந்துள்ள இவ்வுலகத்தில் மழை உரிய காலத்தில் பெய்யாமல் போய்விட்டால், உயிரினங்கள் எல்லாம் பசியால் வாடுவார்கள் என்கிறார் திருவள்ளுவர்.

இதற்கு ஒப்பாக மழையைப் பற்றி நவீன கவிஞர்களும் கவிதைகள் எழுதி உள்ளார்கள்.

üமழைத்துளிகள்ý என்ற தலைப்பில் ஞானக்கூத்தன் ஒரு கவதை எழுதி உள்ளார்.

எல்லாப் பொருள்களைப் போலவே
இரவும் நேராகவும் வளைந்தும்
முறுக்கிக் கொண்டு இருந்தது
வளைந்த இரவுகள் பலவற்றை
என் புழைக்கடையில் நான் வைத்திருக்கிறேன்
கரும்பு போல நேரான
இரவுகள் சிலவற்றை வாசலில் வைத்திருக்கிறேன்
ஓய்வு கிடைக்கும் போதெல்லாம்
அதுவும் பௌர்ணமி நாளென்றால்
ஒரு வளைந்த இரவை
நேராக்க முடியுமா என்று முயல்கிறேன்
நேற்றைக் கொரு மேகம் நான்
இரவை ஆராய்ந்தபோது
என்னைத் துளிகளால் சுட்டுவிட்டுப் போயிற்று
(இம்பர் உலகம் கவிதைத் தொகுதி)

மழையின் பெருமையை திருவள்ளுவர் தன் குறள் மூலம் நேரிடையாகக் குறிப்பிடுகிறார். நவீன கவிஞர்களோ மறைமுகமாக மழையின் பெருமையைக் குறிப்பிடுகின்றனர்.

திருக்குறளும் நானும் – 2

திருக்குறளும் நானும் என்ற தலைப்பில் சி ராஜேந்திரன், ஐஆர்எஸ் அவர்கள் பேசிய இரண்டாவது ஒளிப்பதிவை இப்போது வெளியிடுகிறோம். 16.6.2016ஆம் அன்று இக் கூட்டம் நடந்தது. நேற்று (27.06.2018) முதல் பகுதியைக் கேட்டு ரசித்திருப்பீர்கள்.
www.youtube.com/watch?v=l4UirK-gg3Q

திருக்குறள் சிந்தனை 12

கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நான் திருக்குறளை இவ்வளவு தீவிரமாகப் படித்துக்கொண்டு வருகிறேன். இப்படியெல்லாம் நான் படித்ததில்லை. மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி வரை பஸ்ஸில் அலுவல் விஷயமாகத் தினமும் போயக் கொண்டிருப்பேன். பஸ்ஸில் பதிந்திருக்கும் திருக்குறளைப் படிப்பேன். ஒரு குறளை அப்படிப் படிக்கும்போது வள்ளுவர் தவறாகச் சொல்கிறார் என்று கூடத் தோன்றியது. அது புகழ் பற்றிய குறள். அது குறித்து கூட விருட்சம் பத்திரிகையில் எழுதினேன். ஆனால் வள்ளுவர் சரியாக சொல்லியிருக்க மாட்டார் என்பதை இப்போது நம்பவில்லை. அக் குறளை நான் திரும்பவும் படிக்க நினைக்கிறேன். அப்படிப் படிக்கும்போது முன்பு என் மனதில் தோன்றிய எண்ணம் மாறிவிடும்.
இப்போது இன்னொரு குறள்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

இந்தக் குறளில் மழை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். 11வது குறளில் மழை என்ற வார்த்தையைச் சொல்லாமல் மழையைப் பற்றி சொல்கிறார்.
தாகம் தீர்ப்பதற்கு மட்டுமல்லாமல் உணவு உற்பத்தி செய்வதற்கும் மழை தேவை. எப்படியென்றால் உணவு இல்லையென்றால் உயிர் வாழ முடியாது. உணவு உற்பத்தி செய்ய மழை கட்டாயம் வேண்டும். உணவை உண்ணும்போது தாகம் தீர்க்கவும் மழை வேண்டும். மழையே இல்லாவிட்டால் என்ன ஆகும். உலகமே அழிந்து விடும்.
இந்தக் குறளைப் படிக்கும்போது எனக்கு வேடிக்கையாக இருக்கும். என்னதான் முயன்றாலும் என்னால் இக் குறளை ஞாபகப்படுத்தி சரியாகச் சொல்ல முடியாது. இக்குறளில் துப்பார்க்கு என்ற வார்த்தை இரண்டு இடங்களிலும் அதேபோல் துப்பாய என்ற வார்த்தையும் இரண்டு இடங்களில் வருகிறது. இந்தக் குறளை எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது என்று இப்போதுதான் கவனித்து வருகிறேன். எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்ளலாம் போல் தோன்றுகிறது. துப்பார்க்கு, துப்பாய என்ற இரண்டு வார்த்தைகளை ஞாபகப்படுத்திக்கொண்டால் இந்தக் குறள் இனிமேல் எளிதாக ஞாபகத்திற்கு வந்து விடும். அந்தக் காலத்தில் வள்ளுவர் துப்பாக்கியைப் பற்றி எழுதியிருக்கிறாரே என்று கிண்டலாக அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன்.

திருக்குறளும் நானும்

திருக்குறளும் நானும் என்ற தலைப்பில் சி ராஜேந்திரன், ஐஆர்எஸ் அவர்கள் பேசிய முதல் பகுதி ஒளிப்பதிவை இப்போது வெளியிடுகிறோம். 16.6.2016ஆம் அன்று இக் கூட்டம் நடந்தது.

அன்புடன்
அழகியசிங்கர்

திருக்குறள் சிந்தனை 11

திருக்குறள் பற்றி ஏகப்பட்ட உரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. கையடக்க அளவில் எல்லோரிடமும் திருக்குறள் எளிதாகக் கிடைத்துவிடுகிறது. எல்லார் வீட்டிலும் திருக்குறள் புத்தகம் இல்லாமல் இருக்காது. பலரும் அவரவர்களுக்குப் பிடித்த மாதிரியான குறள்கள் அவரவர் வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்ள பயன்படுத்துகிறார்கள். திருக்குறளை உதாரணம் காட்டிப் பேசும் அரசியல்வாதிகளும் உண்டு. நான் எங்காவது பேசினால் திருக்குறளை உதாரணம் காட்டிப் பேச மாட்டேன். ஆனால் ஒரு குறளை மாத்திரம் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன். உண்மையில் நான் இங்கு தினமும் ஒரு குரலை எடுத்துப் படிப்பதென்பது, திருக்குறள் மூலம் பயணம் செய்ய விரும்புகிறேன். அதை முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்.

வான் சிறப்பு என்ற பெயரில் பத்து குறள்களை எழுதியிருக்கிறார். 10 குறள்கள் மூலம் திருவள்ளுவர் எப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

‘வான்நின்று உலகம் வழங்கி வருதலால்’ என்கிறார் திருவள்ளுவர். எது வான்நின்று உலகம் வழங்கி வருகிறது? மழை. அமிழ்தம்போல் இந்த உலகத்தில் உள்ளவர்கள் உயிர்வாழ மழை அவசியம். மழை என்ற வார்த்தையை நேரிடையாகப் பயன்படுத்தாமல் வள்ளுவர் சிறப்பாக இதைச் சொல்கிறார்.

விருட்சம் என்ற பெயர் இருந்தாலும்…….

ஜாபர்கான்பேட்டை, 7, 3வது தெரு, ராகவன் காலனியில் அமைந்துள்ள கிளை நூலகத்தில் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. விருட்சம் என்ற பெயர் இருந்தாலும் நண்பர்கள் சிலர் சேர்ந்து நடத்தும் கூட்டம் இது. ஏற்கனவே வாசகசாலை என்ற அமைப்பு அசோக்நகர் வட்டார நூலகத்தில் வாரம் செவ்வாய்க் கிழமை கூடி கூட்டம் நடத்துகிறார்கள்.

எங்களுக்கும் இலக்கியக் கூட்டம் நடத்த அனுமதி அளித்த மாவட்ட நூலக அலுவலருக்கு நன்றிகள் பல. இதேபோல் பல நூலகக் கட்டடங்களில் கூட்டங்கள் நடத்த இலக்கிய ஆர்வலர் பலர் முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் இலக்கியம் செழித்து ஓங்கும்.
நாங்கள் நடத்தும் கூட்டம் மாதம் ஒரு முறை. கடைசி வியாழக்கிழமை மட்டும். அதற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன்.

எல்லோரும் வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.