20 ஆண்டுகளுக்கு முன்னால்…..

20 ஆண்டுகளுக்கு முன்னால் என்னை ஜெயா டிவி பேட்டி எடுத்தது. இன்று பொதிகை டிவி. காலை 6.30 மணிக்குப் போய்விட்டேன். ஜெய டிவியில் பேட்டி எடுக்கும்போது மேக்கப் போடவில்லை. வேர்த்து விறுவிறுக்க உட்கார்ந்திருந்தேன். கொஞ்சம் படப்படப்பாக இருந்தேன். நான் பேசிவிட்டு வந்தாலும் நிறையா வந்துக்களைப் பயன்படுத்தினேன்.

இன்று பொதிகை டிவியில் ஒளிபரப்பு ஆவதற்கு முன் லைட் மேக்கப் போட்டார்கள். நேரிடையாகப் பேசினேன். எந்தப் படப்படப்பும் இல்லை. பேசும்போது கவனமாக வந்துக்களைக் கூறவில்லை. நான் எழுதிய கவிதைகள், கதைகள், கட்டுரைகள் நவீன விருட்சம் பத்திரிகை என்று எல்லாவற்றையும் பேசினேன். அடுத்த வாரம் விங்க் கிடைக்கும். முகநூலில் வெளியிடலாமென்று நினைக்கிறேன்.

நீங்களும் படிக்கலாம் தொகுதி 2

இந்தப் பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீங்களும் படிக்கலாம் 1 என்ற தொகுதியை திருவாளர் அழகியசிங்கர் அவர்கள் கொண்டு வந்தார். அத் தொகுதியில் 20 புத்தகங்களைப் பற்றி எழுதியிருப்பதாகக் கூறினார். கிட்டத்தட்ட 3000 பக்கங்கள் வரை படித்து எழுதியதாகவும் கூறினார். 3000 பக்கங்கள் படித்தாலும் ஒவ்வொரு புத்தகத்தைப் பற்றி எழுதும்போதும் இன்னொரு முறை என்று திரும்பவும் படிக்கும்படி இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு புத்தகத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவது என்பது சிரமமானது என்று அசோகமித்திரன் அவர்கள் இவரிடம் குறிப்பிட்டதைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.
இந்தப் புத்தகம் எதற்குப் பிரயோசனம் என்று அழகியசிங்கரிடம் கேட்டபோது அவருக்குக் கோபம் வந்துவிட்டது. üüயாராவது என் புத்தகத்தைப் படித்துவிட்டு அதில் குறிப்பிட்டுள்ள புத்தகங்களில் ஒன்றாவது வாங்கினால் எனக்கு அது பெருமை இல்லையா?ýý என்று என் கேள்விக்கு பதில் அளித்தார்.
அவர் சொல்வது உண்மைதான். இன்னும் பத்து அல்லது பதினைந்து வருடங்கள் கழித்து அழகியசிங்கரின் நீங்களும் படிக்கலாம் புத்தகத்தைப் படிக்க நேர்ந்தால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்கள் பழைய புத்தகங்களாக மாறி இருக்கும். பலருக்கு இப்படியெல்லாம் புத்தகங்கள் வந்திருக்கின்றனவா என்ற ஆச்சரியமும் ஏற்பட்டிருக்கும்.
அந்த முதல் தொகுதியைக் தொடர்ந்து நீங்களும் படிக்கலாம் இரண்டாம் தொகுதியைக் கொண்டு வந்துள்ளார். இதிலும் 21 புத்தகங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்தப் புத்தகம் முதல் தொகுதி வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து வந்திருப்பதாகக் கூறி உள்ளார். ஒவ்வொரு மாதமும் ஒரு புத்தகத்தைத்தான் படித்துவிட்டு எழுதுவதாகக் கூறி உள்ளார். அதனால் நீங்களும் படிக்கலாம் தொகுதி 2 இரண்டு ஆண்டுகள் கழித்து வந்திருப்பதாகக் கூறுகிறார். இத் தொகுதியில் கீழே குறிப்பிட்டவர்களின் புத்தகங்களைப் பற்றி எழுதி இருப்பதாகச் சொல்கிறார்.

1. தமிழவன் 2. பேயோன் 3. எம் டி முத்துகுமாரசாமி 4. சாரு நிவேதிதா 5. தினமணி மருத்துவ மலர் 6. எம் ஜி சுரேஷ் 7. லா ச ரா 8. உஷாதீபன் 9. எஸ் எம் ஏ ராம் 10. நாகார்ஜ÷னன் 11. அசோகமித்திரன் 12. எம் ஜி சுரேஷின் இன்னொரு புத்தகம் பற்றி 13. சாரு நிவேதிதாவின் மார்ஜினல் மேன் என்ற புத்தகம் பற்றி 14. மா அரங்கநாதன் 15. எஸ் சண்முகம் 16. முபீன் சாதிகா 17. எஸ் ராமகிருஷ்ணன் 18. கடற்கரை 19. பிரமிள் 20. பாவண்ணன் 21. வைதீஸ்வரன்
எல்லக் கட்டுரைகளும் இரண்டு அல்லது மூன்று பக்கங்களுக்குள் அடங்கி விடும். அதற்குள் ஒவ்வொருவரின் புத்தகங்களைப் பற்றி சொல்லி விட முடியும்.
96 பக்கங்கள் உடைய இந்தப் புத்தகத்தை வெங்கட் சாமிநாதனுக்கு அர்ப்பணித்துள்ளார். இந்தப் புத்தகத்தின் விலை ரூ.70.
எல்லோரும் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்று சொல்வதில் அழகியசிங்கர் சங்கடப் படுகிறார். அவருக்குப் பதில் நான் சொல்கிறúன். வாங்கிப் படியுங்கள். இப் புத்தகம் வேண்டுமென்றால் 9444113205 என்ற செல் போனில் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் விமர்சன விருது வழங்கும் நிகழ்வு

நேற்று மேலும் விமர்சன விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.
ஒவ்வொரு ஆண்டும் விமர்சனத்திற்காக மேலும் சிவசு விருது வழங்கி வருகிறார். தமிழ்த் திறனாய்வில் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் புதிய போக்குகள் பற்றிய கருத்தரங்கம் நடந்தது.
சிறப்பாகவே இக் கருத்தரங்கம் நடந்தது. 50 பேர்களுக்கு மேல் வந்திருந்தார்கள்.
பிரதியியல் திறனாய்வில் தொல்காப்பிய பாதிப்புகள் என்ற தலைப்பில் முதல் அமர்வும், தமிழவன் நாவல்கள் தேவைப்படுத்தும் புதிய விமர்சனங்கள் என்ற தலைப்பில் இரண்டாவது அமர்வும், அமைப்பியல் தாக்கத்தோடு வரும் பிற விமர்சனப் போக்குகள் என்ற மூன்றாவது அமர்வும் வெற்றிகரமாக நடந்து முடிந்தன.
பூக்கோவும் தொல்காப்பியரும் என்ற தலைப்பில் ராஜா அவர்களும், குறியியலும் தொல்காப்பிய கவிதையியலும் என்ற தலைப்பில் பெ மாதையன் அவர்களும் பேசியதை கூர்ந்து கவனித்தேன்.
தொல்காப்பியத்தைப் பற்றி நான் பெரிதும் அறிந்திருக்கவில்லை. ஆனால் அமைப்பியலை முன்னிறுத்தி விமர்சனம் செய்திருப்பதை நான் அறிந்திருக்கிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன்பே நான் அமைப்பியல் கோட்பாடு குறித்து தமிழவன், நாகார்ஜ÷னன் எழுதியவற்றைப் படித்துப் படித்து அது குறித்து இனி நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று விட்டுவிட்டேன்.
திறனாய்வு ஒரு பொதுப்பார்வை என்ற தலைப்பில் எனக்கும் பேச வாய்ப்பு கிடைத்ததால், தூசிப்படிந்திருந்த அமைப்பியல் வாதப் புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். குறிப்பாக தமிழவன் புத்தகங்களையும் நாகார்ஜ÷னன் புத்தகங்களையும் எடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன். நாகார்ஜ÷னன் புத்தகங்களான காலச்சாரம், அ-கலாச்சாரம், எதிர் கலாச்சாரம் , நளிர், மறைதுறை மூட்டம் என்ற மூன்று புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். அதோடு அல்லாமல் படைப்பும் படைப்பாளியும், தமிழ்க்கவிதையும் மொழிதல் கோட்பாடும், அமைப்பியல் வாதமும் தமிழ் இலக்கியமும், என்ற தமிழவன் புத்தகங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு வாசித்தேன். இதைத் தவிர அமைப்புமையவாதம் பின் அமைப்பியல் மற்றும் கீழைக் காவிய இயல் என்று கோபி சந்த் நாரங்க் என்ற புத்தகத்தையும் வைத்துக்கொண்டேன். எனக்கு தமிழவன் மீதும் நாகார்ஜ÷னன் மீதும் மிகுந்த மரியாதை உண்டு.
ஆனால் தேர்வு எழுதுகிறபோது அவசரம் அவசரமாகப் படிக்கிற மனநிலையில்தான் சிலநாட்களாலய் இந்தப் புத்தகங்கள் படிக்கும்போது இருந்தேன். நாகார்ஜ÷னன் புத்தகத்தைப் படிக்கும் போது அங்கங்கே பளீர் பளீர் என்று வார்த்தைகளால் ஒரு சுளீர் அடி கொடுக்கிறார்.
மறுதுறை மூட்டம் என்ற புத்தகத்தில் 156 பக்கத்தில் இப்படி எழுதியிருக்கிறார்.
‘நமக்கான கேள்வியென ஒன்று உருவாகாத வரை, எத்தனை நூல்கள் வாசித்தாலும் அதில் பொருளிருக்காது, உள்ளே செரிக்காது, தவிர, நீங்கள் கேட்கும் கேள்வி எப்படியிருக்க வேண்டும்? சம கால்தின் அதிதீவிரச் சிக்கல்கள் உங்களைக் கடத்திச் செல்வதன் வழி அது உருவாக வேண்டும்.’
இன்னொரு இடத்தில், ‘அதே இணையம் இன்று தனிமனித ஒலிஒளிபரப்பாக மாறி, பங்கேற்கும் ஒருவர் தாமே வலிந்து அந்தரங்கத்தைப் பொதுவெளியில் பிரகடனம் செய்து எல்லோருக்கும் விட்டுவதாக்கும் ஆபாஸ சாத்தியமாயிருக்கிறது. இதுதான் என்ன ஒரு அபத்தம்,’ என்கிறார். இவருடைய புத்தகத்தில் 153 பக்கத்திலிருந்து 240ஆம் பக்கம் வரை ஒருவர் பலமுறை படித்துப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.
இப்போது நான் கோபிசந்ரத் நாரங்க் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

திருக்குறள் சிந்தனை 21

நேற்று படிக்க முடியவில்லை திருக்குறளை. ஒரு கூட்டத்தில் பேசுவதற்காக சில புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். அதைப் பற்றியும் எழுதுவதாக உள்ளேன். ஏன் திருக்குறளைப் படிக்கிறேன் என்றால், குறள் எதாவது சொல்கிறது. அதைப் படித்து படித்து நானும் எதாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன். நீத்தார் பெருமை என்ற இந்த அத்தியாயத்தில் பத்து குறள்கள் இருக்கின்றன. நாவலர் உரையில் துறந்தார் சிறப்பு என்று எழுதியிருக்கிறது.
குறளை இங்கு பார்ப்போம்.

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

நல் ஒழுக்கத்தையே தழுவி வாழும் உலகப் பற்றை நீக்கிய சான்றோர்களின் பெருமையை நூல்களும் போற்றி புகழும். கவனிக்க வேண்டிய வரி ‘வேண்டும் பனுவல் துணிவு.’
உலகப் பற்றை நீக்கிய சான்றோர்கள் நம்மிடையே இருக்கிறார்களா என்ற கேள்வி ஏற்படாமல் இல்லை. அப்படிப்பட்ட ஒருவர் இருந்தால் நூல்கள் வழியாக அவர்களைப் போற்றிப் பாராட்டாமல் இருக்க முடியாது.
எப்போதாவது… என்ற வைதீஸ்வரன் கவிதைதான் இந்தக் குறளைப் பிரதிபலிப்பதாகத் தோன்றுகிறது. இதோ கவிதை.

சிலகணங்கள்
இவ் வுலகத்திற்கு
உபயோக மற்றுப் போவதில்
எனக்கு வருத்தமில்லை

முதுகேறி என்னை
ஓயாமல் சவாரி செய்யும்
வாழ்க்கையை
ஒரு கணம் உதறி
சாவுக்கும் வாழ்வுக்கும்
இடையில்
சரித்திரமற்ற ஒளியில்
விழித்துக் கிடக்கும் ஆசையில்
உள்ளம் தவம் இருக்கிறது.
(மனக்குருவி – வைதீஸ்வரன் கவிதைகள்)

திருக்குறள் சிந்தனை 20

இரண்டு நாட்களாரய் நான் ஜானகி எம்ஜிஆர் கல்லூரி புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டேன். பலரும் கலந்து கொண்டார்கள். கல்லூரி மாணவிகள் தமிழ் புத்தகங்களை வாங்கவில்லை. நான் பலரிடம் விருட்சம் பத்திரிகையைக் கொடுத்து கவிதைகளை வாசிக்கச் சொன்னேன். யாருமே சரியாக உச்சரித்து கவிதை வாசிக்கவில்லை. மேலும் என் பத்திரிகை புது அனுபவமாக அவர்களுக்கு இருந்தது. உண்மையில் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. எதிர்காலத்தில் யார் இனி தமிழ்ப் புத்தகங்கள் படிப்பார்கள் என்ற கிலி உணர்வு ஏற்பட்டது. புத்தகங்கள் விற்காவிட்டாலும் எனக்கு புத்தகங்களை எடுத்துக்கொண்டு காரில் சென்ற அனுபவம் கிடைத்தது.
நான் கல்லூரியில் படிக்கும்போதுதான் பாரதியார் கட்டுரைகளைப் படித்தேன். தாம்பரத்திலிருந்து மாம்பலம் வரும்ரை மின்சார வண்டியில் தூரன் கொண்டு வந்த பாரதியார் கட்டுரைகளை வாசிப்பேன். அதே நினைவோடு வந்ததால் நான் எப்போதும் வாசிக்க விரும்பும் திருக்குறளை இப்போதுதான் வாசிக்கிறேன்.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுங்கு

உலகமே நீரை நம்பித்தான் இருக்கிறது. அந்த நீரும் மழைபெய்யாவிட்டால் கிடைக்காது. மழை இல்லாவிட்டால் மனிதரிடத்தே ஒழுக்கம் என்பது இல்லை.
நான் முன்பு இருந்த இடத்தில் தண்ணீருக்காக ஒருவருடன் ஒருவர் சண்டைப் போட்டுக்கொள்வோம். இத்தனைக்கும் தண்ணீருக்காகச் செலவிடும் தொகையைப் பகிர்ந்துகொள்வதில்தான் பெரிய சண்டையே இருக்கும். ஒரு குடியிருப்பில் ஒருவர் மட்டும் இருப்பார். இன்னொரு குடியிருப்பில் ஐநூறு பேர்கள் குடியிருப்பார்கள். அந்த ஒருத்தர் நான் ஏன் அவ்வளவு பணம் தண்ணீருக்காகக் கொடுக்க வேண்டும் என்று சண்டைக்கு வருவார். இங்குதான் திருக்குறள் ஞாபகம் வருகிறது. üவான்இன்று அமையாது ஒழுங்குý என்கிறார் வள்ளுவர். மாம்பலத்தில் ஒரு காலத்தில் நான் பட்ட அனுபவத்தைப் பார்த்ததுபோல் சொல்கிறார் வள்ளுவர்.
நவீன கவிஞரின் ஒரு கவிதையை இங்குத் தர வேண்டுமென்று நினைக்கிறேன். ப மதியழகன் என்பவர் எழுதி உள்ள கவிதை. கவிதையின் தலைப்பு üமழை மோகினி.ý

கருமேகங்கள் கருவை சுமக்கும்
தாய் போல
தண்ணீரை சுமந்து வந்தன
அருகாமையில் பெய்யும்
மழைக்கு அறிகுறியாய்
காற்றில் மண்வாசம் அடித்தது
வானொலியின் ராகங்கள்
மழைமோகினியை
வரவேற்குமாறு இருந்தன
கதிரவன் மேற்கில் மறையாமல்
மேகத்திற்குள் மறைந்து கொண்டான்
முனிவர்கள் தவம் செய்து
சிவனை எதிர்பார்ப்பது போல
மரங்கள் மழையை எதிர்பார்த்து நின்றன
சில மழைத்துளிகள் மண்ணில்பட்டவுடன்
பூமித்தாய்
சாபவிமோசனம் அடைந்தாள்
மேகங்களுக்குள் சிறைப்பட்ட தண்ணீர்
பூமியை அடைந்ததும்
அதன் சுதந்திர தாகம் தணிந்தது.

‘மேலும்’ விமர்சன விருது

பொதுவாக விமர்சர்களை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் üமேலும்ý ஆசிரியர் சிவசு ஒவ்வொரு ஆண்டும் விமர்சகர்களுக்குக் கௌரவம் அளிக்கிறார்.
இந்த ஆண்டு விமர்சன விருது பெறுபவர்கள்: க வை பழனிச்சாமி, வாசுதேவன், சண்முக விமல்குமார். மூவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வரும் 08.07.2018 ஞாயிறு காலை 10 மணியிலிருந்து மாலை வரை தமிழ்த் திறனாய்வில் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் புதிய போக்குகள் பற்றிய கருத்தரங்கமும் நடத்துகிறார். இக்ஷா மையம், எழும்பூரில் நடக்கும் இக் கூட்டத்திற்கு அனைவரும் வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ýகூட்டத்தின் முதல் அமர்வில் üபூக்கோவும் தொல்காப்பியரும்ý என்ற தலைப்பில் ராஜா அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார். பூக்கோவையும் தொல்காப்பியத்தையும் எப்படி தொடர்பு படுத்திப் பேசப் போகிறார் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.
கூட்டத்திற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.

திருக்குறள் சிந்தனை 19

கேள்வி கேட்பாளர் : ஏன் திருக்குறளை இப்போது படிக்கிறீர்கள்?
அழகியசிங்கர் : திருக்குறளைப் பற்றி ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தேன். அதுவரை திருக்குறளைப் பற்றி ஞாபகம் இல்லாமல் இருந்தேன். அக் கூட்டத்திற்குப் பிறகு திருக்குறளைப் படிக்க வேண்டுமென்று படிக்கிறேன்.
கே.கே : திருக்குறள் என்ன சொல்கிறது?
அழகியசிங்கர் : திருக்குறளில் காணப்படும் சொல் நயமும், வார்த்தை ஜாலமும் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. அந்தக் காலத்தில் அவர் எழுதியதை இப்போது பொருத்திப் பார்க்க விரும்புகிறேன்.
கே.கே : தினமும் படிப்பீர்களா?
அழகியசிங்கர் : படிக்க முடியுமென்று நினைக்கிறேன்.
கே.கே : மேலோட்டமாகவா ஆழ்ந்தா
அழகியசிங்கர் : ஆழ்ந்துதான் படிக்க எண்ணி உள்ளேன். ஆழ்ந்துதான் திருக்குறளைப் படிக்க முடியுமென்று நினைக்கிறேன்.
கே.கே : உங்களை குறள் மாற்றியிருக்கிறதா?
அழகியசிங்கர் : ஒரு குறள் மாத்திரிம் என் ஞாபகத்தில் இருந்துகொண்டே இருக்கும். அது எந்த அதிகாரத்தில் வந்திருக்கிறது என்று தெரியாது.
கே.கே : குறளை சொல்ல முடியுமா?
அழகியசிங்கர் : முடியும். நான் ஞாபகத்திலிருந்து எழுதினால் தப்பாகக் கூட இருக்கும். அந்தக் குறளின் சாரம்சத்தைக் குறிப்பிடுகிறேன்.
கே.கே : கூறுங்கள்
அழகியசிங்கர் : உன் வரவை விடச் செலவு அதிகமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று குறள் சொல்கிறது.
கே.கே : இப்போது எந்தக் குறளைக் குறிப்பிடப் போகிறீர்கள்?
அழகியசிங்கர் : 19வது குறள்

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.

மழை பெய்யாவிட்டால் இந்த உலகத்தில் செய்யப்படும் தானமும் தவமும் மனிதர்களால் செய்ய முடியாமல் போய்விடும். அடிப்படையில் மழைதான் எல்லாவற்றுக்கும் காரணகர்த்தாவாக இருக்கிறது. வியன்உலகம் என்ற வார்த்தை பிடித்திருக்கிறது.
க நா சுவின் ஒரு கவிதையை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

மின்னல் கீற்று

புழுக்கம் தாங்காமல் அன்றையத் தினசரியை விசிறிக்
கொண்டு நடந்தேன்; இந்தப் புழுக்கத்திலே மழை
பெய்தால் நன்றாக இருக்குமே என்று நான் நினைத்தேன்
தலையுச்சியிலலே ஒரு குளிர் தூற்றல் – ஆஹா இன்பம்
சட்டச்சட பத்துத் தூற்றல்கள். ஆஹா ஆஹா
பத்தே பத்துத் தூற்றல்தான – பின்னர் புழுதிய கிளறிய
காற்று விசிற மழை ஓடி நகர்ந்துவிட்டது கரியவானம்
பிளந்து கொண்டு கோடை மின்னல் கீற்று என்னைத் தேடிற்று
கையை நான் நீட்டியிருந்தால் அக்கோடையின் கீற்று
என்னைத் தொட்டியிருக்கும்; உலகை அழித்திருக்கும்;
தினசரிச் செய்திகள் சுற்றிருக்கும்; தூற்றல் இன்பம்
மரத்திருக்கும்; புழுக்கம் வெளி நிறைந்திருக்கும், புழுதி
எழுந்து படர்ந்திருக்கும்; உலகம் ஒழிந்திருக்கும். நான்
தனியிருந்து என்ன செய்வதென்று கை நீட்டாதிருந்தேன்.
(க நா சு கவிதைகள்)

திருக்குறள் சிந்தனை 18

காலையில் எழுந்தவுடன் மடிப்பாக்கம் சென்று விட்டேன். பெண் வீட்டிற்கு. திருக்குறள் இன்று காலையில் படிக்கவில்லை. இதோ இப்போதுதான் திருக்குறளை வைத்துக்கொண்டு படிக்கிறேன். மணி மாலை 7.30 ஆகிவிட்டது. -ஒரு கேள்வி என்னுள் எழுந்தது. திருக்குறள் என்னைப் படிக்கிறதா? நான் திருக்குறளைப் படிக்கிறேனா என்று. 18வது குறள் இப்படிப் போகிறது.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

வானம் வறண்டு மழை பெய்யாவிட்டால் சிறப்பாக வானோர்க்குச் செய்யும் பூசைகளும் நின்றுவிடும் என்கிறார் வள்ளுவர்.

நானும் மழையைப் பற்றி அதிகமாகக் கவிதைகள் எழுதியிருக்கிறேன். மழை 1, மழை 2, மழை 3 என்றெல்லாம் எழுதியிருக்கிறேன். இதில் மழை 1 என்ற கவிதையை மட்டும் இங்கு கொடுக்க விரும்புகிறேன்.

மழை பெய்தது
தெரு நனைந்து மிதக்க
இரண்டு பூனைக்குட்டிகள்
இடுக்கில்
குளிருக்குப் பயந்து
தாய் மடியில் பதுங்க
தாய்ப்பூனை
குட்டிகளைப் பற்றி யோசனையில்
கீழே
அப்பா
பாட்டி
தம்பி மூவரும் டிவியில்
துருப்பிடித்த சைக்கிளை
எடுத்தேன்
மழை விட்டிருந்தது
என் குழந்தைகளைப் பார்க்க….
(அழகியசிங்கர் கவிதைகள்)

திருக்குறள் சிந்தனை 17

மழை பெய்யாவிட்டால் என்னன்ன ஆபத்துக்கள் காத்திருக்கும் என்று பத்து குறள்களில் திருவள்ளுவர் சொல்லிக்கொண்டே போகிறார். எப்படி மழையைப் பற்றி திருவள்ளுவர் அந்தக் காலத்தில் யோசித்தார் என்பது எனக்கு ஆச்சரியம். மழை இல்லாமல் வாரம் ஒருமுறை தண்ணீர் விலைக்கு வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் எங்கள் வீடுகளில். இன்றைய காலத்தில் திருவள்ளுவர் அவதரித்தால் இதையும் தன் குறளில் பாடிவிடுவார். நான் குறளில் வான்சிறப்பு படித்துவிட்டு எழுதிக்கொண்டிருப்பதால், திருவள்ளுவர் கருணையால் நேற்று இரவு நல்ல மழை.
இன்றைய குறளைப் பார்ப்போம்.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்காது ஆகி விடின்.

மழைபெய்யாவிட்டால் கடல்நீரின் அளவுகூட குன்றிவிடும் என்கிறார். உண்மையில் கடல்நீரிலிருந்து உருவாகும் மேகம்தான் மழையாக உருமாறுகிறது. மழையாக வராவிட்டால் கடல் கூட தன் வளத்தில் குறையும்.
இந்தக் குறளில் தடிந்துஎழிலி என்ற வார்த்தைப் பிரயோகம் பிடித்திருக்கிறது.
நவீன கவிஞர்கள் யாரும் மழையைப் பற்றி எழுதுவதில் சளைத்தவர்கள் இல்லை. நான் 400 கவிதைப் புத்தகங்கள் வைத்திருக்கிறேன். எந்தக் கவிதைத் தொகுதியை எடுத்தாலும் அதில் மழையைப் பற்றி எழுதாமல் ஒரு கவிதை கூட தப்பாது. மழையோடு நெருக்கமானவர்கள் நவீன கவிஞர்கள் என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது. இதோ தேவதச்சன் அவர்களின் கவிதையான üமழையைப் பற்றியý என்ற கவிதையை இங்குக் கொடுக்க விரும்புகிறேன்.

மழையைப் பற்றிய எல்லாக் கவிதைகளையும் நீங்கள்
படித்திருக்க மாட்டீர்கள்
மழைக்கவிதைகளைப் படிக்கையில் நீங்கள் எழுதியவனைப்
பற்றியும்
உங்களைப் பற்றியும் தெரிந்துகொள்வதோடு
மழையைப் பற்றியும்
ஒன்றும் தெரிந்துகொள்ளாமல் போகிறீர்கள்.
தாள்களை நனைக்காமல் பெய்கிறது மழை.
எனினும் தாள்களில் தேங்கி நிற்கும் மழை நீரில்
உங்கள் கணுக்கால்வரை மறைந்திருக்கிறீர்கள்.
கவிதைக்கு வெளியேயும்,
மழையைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள்
மழை எப்படியெல்லாம் பெய்யாமல் போகிறது என்று.
மழையை வழியனுப்பிய அந்தக்கால சடங்குகள் பற்றி
அதற்குரிய தெய்வங்கள் பற்றி
மழை மட்டுமா போச்சு என்று
சிறகி நாரை கொக்கு முக்குளிப்பான்
உள்ளான் நீர்க்கோழி பனங்காடை எல்லாம்
எங்கே போச்சு.
அவை மீனைத் தின்கின்றன.
மீன்கள் இல்லை
“காடுகளில்
மரபுத் தான்யங்கள் போய்
ஒட்டுத் தான்யங்கள் வந்துவிட்டன
பறவைகள் எல்லாம் எங்கே போச்சு
வடக்கேயா மேற்கேயா”
அவர்களுக்குத் தெரியவில்லை
கவிதைக்கு வெளியே
மாடுகளை விற்க
ஓட்டிக்கொண்டு போகிறார்கள்
கவிதைக்கு உள்ளே,
காலித் தொழுவங்கள்.
இன்னும் கொஞ்ச நாளில்
அவர்களும் காணாமல் போய்விடுவார்கள்
வடக்கேயோ மேற்கேயோ சூன்யத்திலோ
பெய்யாத மழைக்கவிதையின் நிர்வாணத்தில் நீங்கள்
கணுக்கால்வரை கூட மறையாமல்
தெரிகிறீர்கள்

(மர்ம நபர் – தேவதச்சன் கவிதைகள்)

திருக்குறள் சிந்தனை 16

வள்ளுவர் சிலை அருகில்தான் சந்திப்போம் ஞானக்கூத்தன் முன்னால் வந்து உட்கார்ந்து விடுவார். பின் நான், காளி-தாஸ், ஆனந்த், ராஜகோபாலன், ஸ்ரீனிவாஸன், வைத்தியநாதன் போன்ற நண்பர்கள். எல்லோரும் தமிழில் அப்போது எழுதுகிறவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம். அதெல்லாம் இனிமையான பொழுதுகளாக இப்போது நினைத்துப் பார்க்கிறேன். ஆத்மாநாமும் அடிக்கடி அங்கு வந்து சந்திப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நான் இவர்களைச் சந்தித்தபோது ஆத்மாநாம் இல்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் வள்ளுவர் சிலை அருகில் நாங்கள் சந்தித்தாலும் வள்ளுவர் குறித்துப் பேசியதில்லை. ஒருமுறை கூட திருக்குறளைப் பற்றிப் பேசியதில்லை. ஏன்? இப்போது யோசித்துப் பார்க்கிறேன். காரணம் புரியவில்லை.

இன்றைய திருக்குறளைப் பார்ப்போம்

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

வானிலிருந்து மழையின் துளிகள் விழாவிட்டால் பூமியில் முளைக்கும் புல் பூண்டு கூட காண்பது அரிது என்கிறார் திருவள்ளுவர். இக்குறள் கிட்டத்தட்ட ஏரின் உழாஅர் உழவர் குறளில் சொல்வதையே சொல்வதுபோல் தோன்றுகிறது. திருவள்ளுவரிடம் காண்பது எதுகையைக் குறளில் பொருத்தமாகப் பயன்படுத்துவது. உதாரணமாக விசும்பின் என்றும் பசும்புல் என்றும் குறிப்பிடுகிறார்.

இதோ இதற்கு ஏற்றாற் போல் பிரதீபன் என்ற நவீன கவிஞரின் கவிதையைப் குறிப்பிட விரும்புகிறேன்.

தீப்பெட்டியில் அடைத்துச்
சிறைசெய்த
சின்னஞ்சிறு இந்திரகோபப் பூச்சிகள்

அடாது சேட்டைகள்கண்டு
அகங்குன்றிய ஆசிரியர்

ஆரவாரமான
அறிவுஜீவித்தனப் பேச்சுக்களைக் கேட்டு
நசுங்கி உணர்ந்த நண்பன்

அதிகம சீண்டியதால்
அழுதுவிட்ட புதுமனைவி

மறந்தனம் அவையெலாம்
வருந்தற்க என்பதுபோல்
சிரித்துத் தோன்றித் தெரிந்தனர்
மழைபெய்து
மண்நெகிழ்ந்திருக்கும்
இந்த
மாலைப் பொழுதில்

நான் வைத்திருக்கும் எல்லாக் கவிதைத் தொüகுதிகளிலும் மழையைப் பற்றி கவிதைகள் இல்லாமல் இல்லை. நான் வைத்திருக்கும் ஆர் பாலகிருஷ்ணனின் கவிதைத் தொகுதியின் பெயர் மழை.