திருக்குறள் சிந்தனை 4

ஒரு குறளை எடுத்துப் படிப்பதற்கு முன், என்னிடம் உள்ள பல உரைகளை எடுத்துப் படித்துப் பார்க்கிறேன். பிறகுதான் புரிந்தது பலரும் பலவிதமாக குறள்களை எடுத்து அதன் கருத்துக்களைப் பலவிதமாக சொல்கிறார்கள் என்று. கருத்தைப் படிப்பவர்க்கு தெளிவாகக் கூறிவிடுதற்கு குறளே உதாரணமாகத் திகழ்கிறது. அது மட்டுமே படித்தால் போதும் என்றும் எனக்குப் படுகிறது.
உதாரணமாக இந்தக் குறள் :

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

இந்தக் குறளே நமக்கு எல்லா அர்த்தங்களையும் வெளிப்படுத்தி விடுகிறது.
இதோ திருக்குறளுகஙகு நாவலர் உரை தந்திருக்கிறார். அதைத் தருகிறேன்.
விருப்பும் வெறுப்பும் அற்ற நடுநிலையில் நின்று, அறிவாற்றலில் சிறந்து வாழும் சான்றோர் காட்டிய வழியில், அவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எந்த ஒரு காலத்திலும் துன்பம் ஏற்படுவது இல்லை.
இந்த இடத்தில் சான்றோர் என்பவர்கள் எங்கே இருக்கிறார்கள். யாரைச் சான்றோர் என்று குறிப்பிட முடியும்?
நாமக்கல் கவிஞர் இப்படிக் கூறுகிறார். இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன் என்பதை உணர்ந்து நாமும் விருப்பு வெறுப்பின்றி அவனை வணங்க வேண்டும். அப்படிச் செய்தால் எப்போதும் துன்பப்படாது இருக்கலாம்
இந்த உலகத்தைப் புரிந்துகொள்ள விருப்பு வெறுப்பில்லாத நிலையில் இருக்க வேண்டும் என்று கூறலாமா? இந்தக் குறளில் யாண்டும் இடும்பை இல என்ற வரி பிடித்திருக்கிறது.

திருக்குறள் சிந்தனை 3

ஒவ்வொரு குறளையும் திருவள்ளுவர் எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும்படி எழுதி உள்ளார். கடவுள் வாழ்த்து என்று துவங்கும் இந்த அதிகாரத்தில் கடவுளைப் பற்றியே எழுதி உள்ளார். திருவள்ளுவர் கூறும் கடவுள் யார்?

இந்த மூன்றாவது குறள்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

இதற்கு கருத்துரை வழங்கிய நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்கள், அறிவுக்கெல்லாம் எட்டாப் பொருளான இறைவன் எங்கே இருக்கிறான் என்றால், நம்முடைய மனத்தாமரையில். அதை உணர்ந்து வணங்கினால் உலகில் கவலையின்றி வாழலாம் என்கிறார்.

இந்தக் குறளில் மலர்மிசை நிலமிசை வார்த்தைப் பிரயோகங்கள் என்னை வசப்படுத்துகின்றன. எட்டாப் பொருளான இறைவன் என்பதை கடவுள் தன்மையை என்று கூறலாமா? கடவுள் தன்மை என்றால் என்ன? இன்று யாரிடமும் அது இருப்பதாக தெரியவில்லை.

நேஷனல் புக் டிரஸ்ட்டும், சாகத்திய அகாதெமியும்…..

இந்த இரண்டு அமைப்புகளும் இந்தியாவில் உள்ள பல மொழிகளிலிருந்தும் தமிழில் புத்தகங்களைக் கொண்டு வருகின்றன. பல தமிழ் அறிஞர்கள் தங்களுடைய உழைப்பால் இவற்றைச் சாத்தியமாக்கி உள்ளார்கள். இவர்கள் கொண்டு வருகிற புத்தகங்களும் மிகக் குறைவான விலையில் உள்ளன.
நான் ஒரு புத்தகம் வைத்திருக்கிறேன். முதல் பதிப்பு 1975ஆம் ஆண்டு. புத்தகம் பெயர்.கறையான். வங்காளத்தில் குண்பேகா. எழுதியபர் சீர்ஷேந்து முகோபாத்யாய. இது இவருடைய முதல் நாவல். 1971ஆம் ஆண்டு எழுதிய இவருடைய இன்னொரு நாவலான பாரா பாரும் என்ற வங்காளி நாவலையும் படிக்க விரும்புகிறேன். ஆனால் மொழி பெயர்க்கப்பட்டதா என்பத தெரியவில்லை. கறையான் என்ற நாவலை வங்காளி மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் சு கிருஷ்ணமூர்த்தி. இந்தப் புத்தகத்தை இரண்டாவது முறையாகப் படிக்கிறேன். நேரிடையான மொழிபெயர்ப்பு.
பல ஆண்டுகளுக்கு முன்னால் இப்புத்தகத்தை ரசித்துப் படித்தவன். திரும்பவும் எடுத்துப் படிக்கும்போது நான் ரசித்த நாவல்களில் இது ஒன்று என்ற எண்ணம் இருந்தது தவிர என்ன மாதிரியான நாவல் என்பது ஞாபகத்தில் இல்லை.
திரும்பவும் இந்த நாவலை எப்படியாவது படித்து முடிக்க வேண்டுமென்று எடுத்துப் படிக்கும்போது ஒவ்வொரு பகுதியாக இப் புத்தகம் பொடிப் பொடியாக கிழிந்து விடுகிறது. இப்போது எடுத்துப் படிக்கும்போது இப் புத்தகத்தின் அட்டைப் படம் போய்விட்டது. உடைந்து உடைந்து போயிற்று, இப்போதோ பக்கங்கள் போய்க்கொண்டிருக்கின்றன. ஆனால் எப்படியாவது படித்துத் தீர வேண்டுமென்று தீர்மானித்துள்ளேன். ஜாக்கிரதையாக வைத்துக்கொண்டு ஒவ்வொரு பக்கமாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். மடிக்கக் கூட இல்லை. படிக்கப் படிக்க சீக்கிரம் முடிந்து விடக்கூடாது என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. ஆனால் 100 பக்கங்கள் வரை முடித்துவிட்டேன். இன்னும் 46 பக்கங்கள்தான் படிக்க வேண்டும். படித்துவிட்டு ஜாகக்ரதையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இன்று சென்னையில் உள்ள நேஷனல் புக் டிரஸ்ட் அலுவலகம் சென்று இந்தப் புத்தகம் கிடைக்குமா என்று கேட்டேன். திரும்பவும் அச்சிடப் போவதாக சொன்னார்களே தவிர எப்போது என்று சொல்லவில்லை.
இந்த நாவலில் வரும் ஷ்யாம் வித்தியாசமானவன். அவன் அலுவலகத்தில் நல்ல வசதியாக வாழ்ந்து வந்தவன். அவன் அப்படியே தொடர்ந்து பணியில் இருந்தால், ஒரு வீடு வாங்கிவிடுவான். இன்னும் வசதிகளைப் பெருக்கிக் கொள்வான். அப்படித்தான் இருந்தாக வேண்டும். ஆனால் அவனைவிட அதிகாரி ஒருவன், ஒருநாள் கோபத்தில் ஷ்யாமை வேசி மகனே என்று திட்டி விடுகிறான்.
இதை ஏதோ ஆத்திரத்தில் சொல்லிவிட்டான் என்று விட்டுவிடலாம். ஆனால் ஷ்யாமால் அதைத் தாங்க முடியவில்லை. அவன் யோசித்து வேலையை ராஜிநாமா செய்து விடுகிறான். இப்படிப் போகிறது இந்தக் கதை.
வேற்று மொழியிலிருந்து குறிப்பாக இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளிலிருந்து நமக்கு இதுமாதிரியான மொழிபெயர்ப்பு நூல்கள் படிக்கக் கிடைக்க வேண்டும். அப்போதுதான் நம் அறிவு விலாசமடையும். ஆனால் நம் படைப்புகள் மற்ற மொழிகளுக்கு மாற்றப்படுகிறதா என்பது நமக்குத் தெரியாது.
பரிசுப் பெற்றவர்களின் படைப்புகளைத்தான் இந்த நிறுவனங்கள் மொழிபெயர்க்கும். ஆனால் பரிசு எதுவும் கிடைக்காத எத்தனையோ திறமையான படைப்பாளிகளின் படைப்புகள் நமக்குத் தெரியாமல் போகத்தான் போகும். இது ஒரு குறைதான் என்றாலும், இந்த அளவிற்காகவாவது இந்தத் தேசிய நிறுவனங்கள் பெரிய முயற்சியைச் செய்கின்றன என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டும்.
அதேபோல் üமன்னும் மனிதரும்ý என்ற சிவராம காரந்த நாவலை வைத்திருக்கிறேன். சாகித்திய அகாதெமி கொண்டு வந்துள்ள புத்தகம். முதல் பதிப்பு 1967ல் வந்துள்ளது. இப்போது இரண்டாவது பதிப்பு வந்துள்ளது. படிக்க ஆரம்பிக்க வேண்டும்.

திருக்குறள் சிந்தனை 2

நான் இருக்கும் வீட்டில் 3 திருக்குறள் புத்தகங்களைக் கண்டுபிடித்தேன். நான் ஏகப்பட்ட திருக்குறள் புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். ஆனால் ஒன்றும் கண்ணில் படவில்லை. யாரிடம் கொடுத்தேன்? யார் எடுத்துக்கொண்டு போனார்கள் என்பது தெரியவில்லை. நாமக்கல் கவிஞர் கருத்துரை எழுதிய திருக்குறள் புத்தகம் என்னிடமிருந்தது. அதேபோல் மு வ.
என் அலுவலக நண்பர் ஒருவர் பாக்கெட் சைஸில் திருக்குறள் புத்தகம் 50 அல்லது 100 என்று வாங்கி வங்கியில் வரும் வாடிக்கையாளருக்கு இலவசமாகக் கொடுப்பார். அவரை அடுத்த முறை பார்க்கும்போது ஒரு கேள்விக் கேட்க வேண்டும். திருக்குறளை நீங்கள் படித்தீர்களா என்று.
இன்று நான் படித்த இரண்டாவது குறள்.

கற்றதனால் ஆய பயன்என்கொல் வால்அறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

இந்தக் குறளில் வால்அறிவன் என்ற வார்த்தைப் பிரயோகம் என்னை யோசிக்க வைத்தது. இதற்கான அர்த்தத்தை கீழ்க்கண்டவாறு உரையாசிரியர் இரா கோ அண்ணாமலை அவர்கள் கூறி உள்ளார்கள்.
கல்விதான் ஒருவருக்கு அறிவு, அன்பு, இன்பம் இவற்றை எல்லாம் தருவரு. அறிவும், அன்பும் இல்லையெனில் பொருளில்லை, இன்பமும் இல்லையாகும். இவற்றையெல்லாம் தரக்கூடிய உண்மை அதாவது மூல பரம்பொருளை உணராதவன் பல நூல்களைக் கற்றும் பயனில்லை.
பரம்பொருள் என்பதை வால்அறிவன் என்கிறார் என்று நினைக்கிறேன்.

திருக்குறள் சிந்தனை 1

நேற்று (16.06.2018) – சனிக்கிழமை – திருக்குறளும் நானும் என்ற தலைப்பில் சி ராஜேந்திரன் ஐஆர்எஸ் அவர்கள் பேசினார்கள். கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் பேசினார். இன்னும் சில தினங்களில் அவர் பேசியதை ஒளிப்பதிவில் அளிக்க உள்ளேன். இதில் முக்கியமான விஷயம் கலந்துகொண்ட அனைவரும் ஒவ்வொரு திருக்குறளைக் கூறி ஏன் அந்தக் குறள் பிடிக்கிறது என்பதைக் குறிப்பிட்டார்கள்.
நான் ஒரு முடிவுக்கு வந்தேன். தினமும் ஒரு குறளைப் படிப்பது என்று. பின் அது குறித்து கருத்து எதாவது தோன்றினால் எழுதலாம் என்று நினைக்கிறேன்.
இதோ நான் இன்றிலிருந்து ஆரம்பிக்கிறேன்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவான் முதற்றே உலகு.

இதற்கு கருத்துரை வழங்கியவர் இரா இளங்குமரனார். அவர் என்ன கூறியிருக்கிறார் என்றால் எழுத்துக்களுக்கு எல்லாம் அகரமே முதல். அதுபோல் பகுத்து வழங்கிய ஆற்றலே உலகுக்கு முதல் என்கிறார். இந்தக் கருத்துரை சரியா என்பது சந்தேகமாக உள்ளது. வள்ளுவர் ஆதி பகவான் என்று கூறி உள்ளார். இந்தக் கருத்துரையில் அது வரவில்லை என்று படுகிறது. ஆதிபகவான் முதன் முதலாக உலகத்தில் தோன்றியதுபோல் எழுத்துக்களுக்கெல்லாம் அகரமே முதல் என்று இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

சுனில் கிலநானியும் நானும் என்ற தலைப்பில் போனமாதம் நடந்த கூட்டத்தின் ஒளிபரப்பு -2

மே மாதம் 3வது சனிக்கிழமை எழுத்தாளர் சா கந்தசாமி தலைமையில் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடந்தது. இந்தியா என்கிற கருத்தாக்கம் என்ற தலைப்பில் சுனில் கில்நானி எழுதிய புத்தகத்தை ஒட்டி இந்தக் கூட்டம் நடந்தது.
அந்தக் கூட்டத்தைப் பற்றிய 3 பகுதிகளாக உள்ள அந்த ஒளிப்பரப்பின் முதல் பகுதியை சில தினங்களுக்கு முன் வெளியிட்டு உள்ளேன். இதோ இப்போது எழுத்தாள சா கந்தசாமி அவர்களின் பேச்சை வெளியிடுகிறேன்.

சுனில் கில்நானியும் நானும் என்ற தலைப்பில் போனமாதம் நடந்த கூட்டத்தின் ஒளிபரப்பு -1

போன மாதம் சா கந்தசாமி தலைமையில் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடந்தது. இந்தியா என்கிற கருத்தாக்கம் என்ற தலைப்பில் சுனில் கில்நானி எழுதிய புத்தகத்தை ஒட்டி அந்தக் கூட்டம் நடந்தது.
அந்தக் கூட்டத்தைப் பற்றிய 3 பகுதிகளாக உள்ள அந்த ஒளிப்பரப்பின் முதல் பகுதியை இன்று அளிக்க விரும்புகிறேன்.

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 37

திருக்குறளும் – நானும்

சிறப்புரை : சி ராஜேந்திரன், ஐஆர்எஸ்

இடம் : ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
மூகாம்பிகை வளாகம்
சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
ஆறாவது தளம்
மயிலாப்பூர்
சென்னை 600 004

தேதி 16.06.2018 (சனிக்கிழமை)

நேரம் மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு : C RAJENDIRAN, IRS, Vice Chairman, Settlement Commission, Customs, Central Excise and Service Tax, Additional Bench, South Zone, Chennaim. voiceof valluvar1330@gmail.com

அனைவரும் வருக,

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

ரொம்ப துணிச்சல் வேண்டும்..

துணிச்சல் வேண்டும் கால சுப்பிரமணியத்திற்கு. பிரமிளின் படைப்புகள் அனைத்தையும் ஆறு தொகுதிகளாக ரூ.3000 க்குக் கொண்டு வந்துள்ளார். 3400 பக்கங்கள்.
சமீபத்தில் அவரைச் சந்தித்தப்போது அவர் இதைத் தெரிவித்தார். இந்த முழுத் தொகுதியை தயாரிப்பதற்கு அவர் செலவு செய்யும் தொகையைக் கேட்டவுடனே எனக்கு சங்கடமாக இருந்தது. அன்று முழுவதம் அது குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். ஏன் எனில் அதிகப் பிரதிகள் புத்தகங்கள் அச்சடித்துத் திண்டாடுபவனின் நானும் ஒருவன். இன்றைய தமிழ்ச் சூழலில் விற்பது என்பது அவ்வளவு சுலபமில்லை. ரூ.3000 கொடுத்து யார் வாங்க முன் வருவார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.
ஆனாலும் அவர் முயற்சிக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். ஒரு தொகுதி வாங்கிக்கொள்கிறேன் என்று அவரிடம் அப்போதே சொல்லிவிட்டேன்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 87

தோன்றி மறையும்

கடற்கரய்

குட்டிக் கைப்பையோடு
உத்யோகத்திற்கு விரையும்
சீனத்துக்காரி வெளியேறுவதற்கு
முன்னதாக ஆடியில் காண்கிறாள் முகத்தை.
குட்டைப் பாவாடை குறுஞ்சிரிப்பு
தோன்றி மறைகிறது அதில்.
அலுவல் அழைக்கும் நேரம்
முகத்திற்குப் பொலிவு கூடுகிறது.
மாலை காய்ந்த குப்பையாகிவிடும் என்பதை அறிவாள். ஆடியில் விழும் முகம் மெல்ல அலையுறத் தொடங்குகிறது. தலைக்கு அவள் சூடியிருந்த வாசனை மலர்கள் தழைத்து அரும்புகின்றன
ஒரு வைகறைத் தோட்டத்தின் வைராக்கியத்தோடு.