எறும்பும் புறாவும்…



.

அழகியசிங்கர்

என் வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு பழைய பேப்பர் கடை இருக்கிறது. அங்கு சில வினோதமான புத்தகங்கள் கிடைக்கும்.  அப்படி ஒரு புத்தகம்தான் லேவ் தல்ஸ்தோய்யின் எறும்பும் புறாவும் என்ற புத்தகம்.  இது ஒரு சிறார் புத்தகம். 

இக் கதைகளில் நீதி நேரிடையாக போதிக்கப்படவில்லை.   நீதி மறைமுகமாகப் புகட்டப் படுகிறது.  ஒவ்வொருவரும் இக் கதையை வாசிக்கும்போது அது தெரியப்படுத்தும் வாழ்க்கை உண்மையை உணர்ந்து கொள்ள இயலும்.  இதில் இருந்து ஒரு கதையை இங்கு அளிக்க விரும்புகிறேன்.

ஆண் குதிரையும் பெண் குதிரையும்

பகலும் இரவும் புல்வெளியில் மேய்ந்த பெண் குதி ரை உழவில்லை. ஆனால் ஆண் குதிரை இரவில் மட்டும் மேய்ந்து பகலில் உழுதது. ஆகவே பெண் குதிரை அதனிடம் சொன்னது:

”என் நீ உழுகிறாய்? உன்னிடத்தில் நானாக (இருந்தால் போகவே மாட்டேன். அவன் என்னைச் சாட்டையால் அடிப்பான் என்றால் நானோ அவனைத் திரும்ப உதைப்பேன்.”

மறுநாள் ஆண் குதிரை பெண் குதிரை சொன்னது போலச் செய்தது. அது கீழ்ப்படியாமல் போய்விட்டதைக் கண்ட அதனது எசமானன் அதற்குப் பதிலாக உழுவ அதற்குப் பெண் குதிரைக்குக் கடிவாளம் மாட்டினான்.

இந்த மாத தீராநதியில் என் கதை…

..

அழகியசிங்கர்

கடந்த ஒரு வருடமாக தீராநதியில் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். வழக்கத்துக்கு மாறாக கட்டுரைக்குப் பதில் ‘திரும்பவும்’ என்ற சிறுகதை அனுப்பியிருந்தேன். இந்த மாத தீராநதி இதழில் வெளிவந்திருக்கிறது. அவசியம் வாசிக்கவும். சிறுகதைகள் சிறப்பிதழ் மாதிரி அதிக எண்ணிக்கையில் சிறுகதைகள் தீராநதியில் வெளிவந்துள்ளன. நன்றி தீராநதிக்கு.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …37



அழகியசிங்கர்  

இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் வாங்கிக் குவித்தப் புத்தகங்கள் போன ஆண்டை விட அதிகம் என்றுதான் தோன்றுகிறது.  எத்தனைப் புத்தகங்கள் என்று எண்ணவில்லை.  ஒவ்வொரு நாளும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.  நினைப்பதோடு சரி.  எண்ணியதில்லை.

இந்த முறை தேசாந்திரி பதிப்பகத்திலிருந்து எஸ் ராமகிருஷ்ணனின் ஐந்து புத்தகங்கள் வாங்கினேன்.  1. சிவப்பு மச்சம் 2. பெயரற்ற நட்சத்திரங்கள் 3. கதைகள் சொல்லும் பாதை 4. ரயில் நிலையங்களின் தோழமை 5. பறந்து திரியும் ஆடு.

பறந்து திரியும் ஆடு என்ற தலைப்பில் சிறார்களுக்கு ஒரு நாவல் எழுதி உள்ளார்.  உள்ளே ஓவியங்களுடன் சிறப்பாக எழுதப் பட்டிருக்கும் நூலாக எனக்குத் தோன்றுகிறது.  இந்தப் புத்தகத்தை எடுத்தால் படிக்காமல் இருக்க முடியாது.  மேலும் இது சிறார்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களும் வாசிக்க வேண்டிய புத்தகமாக நான் கருதுகிறேன்.

சிறார்களுக்கு ஒரு புத்தகம் எழுதுவது அவ்வளவு சுலபமாக இருக்குமா என்பது தெரியவில்லை.  ரொம்ப ரொம்ப புரியும்படி கதைகள் எழுத வேண்டும்.

பள்ளிக்கூடம் படித்தக் காலத்தில் நான் ரசித்தப் புத்தகம். தென்னாட்டுப் பழங்கதைகள்.  சைவ சித்தாந்தப் பதிப்பகம் கொண்டு வந்தப் புத்தகம்.  7 புத்தகங்கள்.  ஒவ்வொரு புத்தகமும் 300 பக்கங்கள் இருக்கும்.  ராமசாமி புலவரால் தொகுக்கப்பட்ட புத்தகம்.  ஒவ்வொரு முறையும் சைவசிந்ததாந்தப் பதிப்பகத்திற்குச் சென்று இந்தப் புத்தகம் திரும்பவும் அச்சிடப்பட்டுள்ளதா என்று கேட்பேன்.  ஏமாற்றத்துடன் திரும்பி வருவான்.  அதற்குக் காரணம் இருக்கிறது. இன்றைய சிறார்கள் ஆங்கிலத்தில் வாசிப்பதில் அக்கறை காட்டுகிறார்கள் தவிர தமிழில் இல்லை.  அந்தக் காலத்தில் அம்புலிமாமா என்ற பத்திரிகை வந்தது.  இப்போது இல்லை.  தமிழில் சிறார்கள் புத்தகங்கள் வரவேண்டும்.  தமிழில் எல்லோரும் வாசிக்க வேண்டும்.  80 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.100தான்.  ராமகிருஷ்ணன் அதிகமாகச் சிறார்களுக்கான புத்தகங்கள் எழுதி உள்ளார்.  

கதைகள் சொல்லும் பாதை என்ற இன்னொரு புத்தகம்.  நான் வளசரவாக்கம் வங்கிக் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அலுவலகத் தோழி ஒருவர், இராமகிருஷ்ணனை புகழ்ந்து பாராட்டாமல் இருக்க மாட்டார். அவரும், அவர் பையனும் காலையில் எழுந்தவுடன் ராமகிருஷ்ணன் என்ன எழுதியிருக்கிறார் என்று படித்துவிடுவார்கள்.  முதலில் அந்தப் பெண்மணி சொன்னது என்னால் நம்ப முடியாமல் இருந்தது.   இப்படி ஒரு எழுத்தாளருக்கு தீவிர வாசகராக ஒருவர் இருப்பதை அப்போதுதான் நான் உணர்ந்தேன். 

சாகித்திய அக்காதெமி பரிசு ராமகிருஷ்ணனுக்குக் கிடைத்திருக்கிறது என்பதை அறிந்திருப்பார்.   அந்த வாசகப் பெண்மணி மகிழ்ச்சியின் எல்லைக்கே போயிருப்பார்.  23 எழுத்தாளர்களைப் பற்றி பல தகவல்களுடன் இக் கட்டுரைத் தொகுப்பு உள்ளது.  கேள்விப்பட்ட கேள்விப்படாத பல எழுத்தாளர்கள் இதில் இருக்கிறார்கள். 

தமிழ் எழுத்தாளர்களான வைதீஸ்வரன் பற்றியும், அனார் பற்றியும் இத் தொகுப்பில் கட்டுரைகள் எழுதி உள்ளார்.  அவசியம் வாசிக்க வேண்டிய இன்னொரு புத்தகம்.  136 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.150 தான்.  

பெயரற்ற நட்சத்திரங்கள் என்ற பெயரில் ஒரு புத்தகம்.  பல சினிமாப் படங்களைக் குறித்து சுவாரசியமான தகவல்கள் பல கொண்ட புத்தகம் இது.  200 ரூபாய் விலையுள்ள புத்தகம் இது.

சிவப்பு மச்சம் என்ற பெயரில் ஒரு சிறுகதை வெளிவந்துள்ளது. 20 கதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு.  எனக்குத் தெரிந்து இப்போது எழுத ஆரம்பித்திருக்கும் எழுத்தாளர்கள்.  ராமகிருஷ்ணன் புத்தகங்களைப் படித்துவிட்டுத்தான் கதைகள் எழுத ஆரம்பிக்க வேண்டும்.  அவருடைய கதைகள் எல்லாம் வினோதமான கலவைக் கொண்ட எழுத்து நடையைக் கொண்டது.  ஒவ்வொரு சமயத்திலும் சோதனை முயற்சிகளை அவருடைய கதைகளில் உருவாக்காமல் இருக்க மாட்டார்.  புறாப் பித்து என்ற கதையை நான் ஆனந்தவிகடனில் வாசித்திருக்கிறேன்.  இது குறித்து ஒரு கட்டுரையும் எழுதியிருக்கிறேன்.

நம்ப முடிகிற தகவல்களைக் கொண்டு நம்ப முடியாத சம்பவங்களை உருவாக்குவது ராமகிருஷ்ணனின் பாணி என்று எனக்குத் தோன்றுகிறது.  இப் புத்தகம் விலை ரூ.250.  

ராமகிருஷ்ணன் பயணங்களைப் பற்றி அதிகமாக புத்தகங்கள் கொண்டு வந்திருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது.  பயணங்களுடன் தகவல்களையும் சேகரித்துக் கூறுவதில் வல்லமைப் பெற்றவர்.  நயாகராவின் சாரல் என்ற கட்டுரை ஒன்று இப் புத்தகத்தில் உள்ளது.  ஒரு இடத்திற்குப் போய் அந்த இடத்தின் தன்மைகளை நம் கண் முன்னால் கொண்டு வந்து விடுகிறார்.   இப் புத்தகத்தைப் படிக்கும் வாசகர்களும் தாங்களும் அவருடன் பயணம் செய்யும் அனுபவத்தை உணருவதாக தோன்றும். ரயில் நிலையங்களின் தோழமை என்ற புத்தகம் விலை 125.  

இன்னும் சில புத்தகங்களைப் பற்றியும் எழுத உள்ளேன்.

துளி : 26 – அஜித்தின் விசுவாசம்

அழகியசிங்கர்

ரஜினியின் பேட்டையைப் பார்த்தபிறகு, அஜித்தின்     விசுவாசம் படத்தையும் பார்க்க வேண்டுமென்று நினைத்தோம்.  என் வீட்டிலிருந்து பக்கத்திலிருந்தது உதயம் தியேட்டர் காம்பளெக்ஸ்.  6 மணிக்குக் கிளம்பிப் போனோம்.  பேட்டைக்கும் விசுவாசத்திற்குத்தான் கூட்டம்.  இன்னும் இரண்டு படங்களுக்குக் கூட்டம் வரவில்லை.  ஒரு படம் பிரபுதேவா நடித்த சார்லி சாப்பிளின் 2.  இன்னொரு படம் டப்பிங் படம்.  இந்த இரண்டு படங்களுக்கும் யாரும் பார்க்க வரவல்லை என்பதால் படக் காட்சி ரத்து.   டூ வீலரை ஸ்டாண்டில் வைக்கும்போது, üஎன்னப்பா இப்படி காலி அடிக்குது,ý என்று வினவினேன்.  அவன் சொன்னான் : ýýஞாயிற்றுக்கிழமை வரை கூட்டம் சார், 20 நாள் ஓடி விட்டது,ýý என்றான்.  படம் பார்த்து திரும்பி வரும்போது இன்னும் காலியாக இருந்தது தியேட்டர்.

துளி : 25 – கோமலின் தண்ணீர் தண்ணீர…..

நேற்று ஆர் ஆர்  சபாவில் மாலை 7 மணி அளவில் கோமலின்  தண்ணீர், தண்ணீர் நாடகத்தை மனைவியுடன் பார்த்தேன்.   அழுத்தமான கருத்துக்கள் நிறைந்த நாடகம்.  முதலில் இதில் நடித்தவர்கள் மனம் ஒன்றிச் சிறப்பாக நடித்தார்கள்.  தாரணி கோமல் இயக்கத்தில் இந்த நாடகம் தயாரித்துள்ளார்கள். ஏற்கனவே புகழ்பெற்ற நாடகம்.  சினிமாப்படமாகக் கூட வந்துள்ளது. திரும்பவும் இந்த நாடகத்தைப் பார்ப்பதற்கு அரங்கம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

அழகியசிங்கர்

கொஞ்சம் அதிகப்படியான வசனங்கள் இந்த நாடகத்தில் இருப்பதாக தோன்றியது.  நம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் கத்தி சொன்னால்தான் நமக்குப் புரியும்போல் தோன்றுகிறது.  இது ஒரு கிராமத்தில் மக்கள் அவதிப்படும் பகுதியை மட்டும் காட்சிப் படுத்தப்படுகிறது.   ஏன் அங்குத் தண்ணீர் கொண்டு வர முடியவில்லை என்ற இன்னொரு பகுதியையும் காட்டினால் இந்த நாடகத்தின் இன்னொரு தன்மை வெளிப்படும்.   அரசாகத்தையும் அதிகாரிகளையும் வில்லனாகக் காட்டுவதை ஓரளவுதான் ஏற்றுக்கொள்ள முடியும்.

கோமலின் üபறந்து போன பக்கங்கள்ý புத்தகம் விற்பனைக்கு ஆர் ஆர் சபா வாசலில் வைக்கப்பட்டிருந்தது.  அந்தப் புத்தகம் குறித்து மேடையில் தாரணி சொல்லியிருந்தால் இன்னும் அதிகப் பிரதிகள் அந்தப் புத்தகம் விற்பதற்கு வாய்ப்பு இருந்திருக்கும்.  ஏனோ தாரணி தவற விட்டுவிட்டார்.  

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 101

அழகியசிங்கர்  

பசுவும் கன்றும்

கவிமணி சி தேசிக விநாயகம் பிள்ளை

தோட்டத்தில் மேயுது
வெள்ளைப் பசு – அங்கே
துள்ளிக் குதிக்குது
கன்றுக் குட்டி

அம்மா என்குது
வெள்ளைப் பசு -உடன்
அண்டையினல் ஓடுது
கன்றுக் குட்டி
ü
நாவால் நக்குது
வெள்ளைப் பசு – பாலை
நன்றாய்க் குடிக்குது
கன்றுக் குட்டி

முத்தம் கொடுக்குது
வெள்ளைப் பசு – மடி
முட்டிக் குடிக்குது
கன்றுக் குட்டி

நன்றி : மலரும் மாலையும் – கவிமணி சி தேசிக விநாயகம் பிள்ளை – பூம்புகார் பதிப்பகம், 127 பிரகாசம் சாலை, சென்னை 600 108 – தொலை பேசி : 044-25267543 – பக்கம் : 286- விலை : 120

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …36

அழகியசிங்கர் 

புத்தகக் காட்சியில் நான் இருந்த பகுதியிலேயே எதிர் வெளியீடும் இருந்தது.  எதிர் வெளியீடு கொண்டு வரப் போகும் ஒரு புத்தகத்தைப் பற்றி அறிவிப்பு முன்னதாகவே வந்திருந்தது.   அந்தப் புத்தகத்தின் பெயர் கசார்களின் அகராதி. மிலோராத் பாவிச் எழுதிய புத்தகம்.  ஆண் பிரதி, பெண் பிரதி என்று இரண்டு பாகங்கள் கொண்ட புத்தகம்.  

இந்தப் புத்தகம் வந்துவிட்டதா வந்துவிட்டதா என்று பலமுறை போய் கேட்பேன்.   எதிர் வெளியீட்டில் பெரும்பாலான புத்தகங்கள் மொழிபெயர்ப்புப் புத்தகங்கள்.  பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது.  இன்னும் சில புத்தகங்களை வாங்கலாம் என்று நினைத்தாலும் மொழிபெயர்ப்பாளரின் பெயரைப் பார்த்து வாங்க வேண்டாமென்று தோன்றியது.

மொழி பெயர்ப்பைப் பொறுத்தவரை க நா சு கொள்கையை நான் முழுவதும் விரும்புகிறேன்.  க நா சு ஒரு புத்தகத்தை மொழி பெயர்க்கும் முன் ஒரு முறை படிப்பார் பின் அப்படியே மொழி பெயர்த்து விடுவார்.  மொழிபெயர்க்கப்படும் புத்தகத்தின் ஆன்மாவைக் கொண்டு வருவதுதான் அவருடைய நோக்கமாக இருக்கும்,

கசார்களின் அகராதி என்ற இரு பகுதிகள் கொண்ட புத்தகத்தை மொழி பெயர்த்தவர் ஸ்ரீதர் ரங்கராஜ்.   

செர்பிய க்ரவோஷிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் வெளிவந்துள்ளது.  இந்தப் புத்தகங்களை வாங்கிக்கொண்ட பிறகு ஆண் பிரதியை முதலில் படிப்பதா பெண் பிரதியைப் படிப்பதா என்ற குழப்பம் இப்போது இருக்கிறது.  அதே எதிர் வெளியீடில் இன்னும் சில புத்தகங்களையும் வாங்கினேன்.

உலகச் சிறுகதைகள் 3 பாகங்களை வாங்கினேன். மொழி பெயர்த்தவர் கார்த்திகைப் பாண்டியன்.  எருது, சுல்தானின் பீரங்கி, துண்டிக்கப்பட்ட தலையின் கதை என்ற தலைப்புகளில்.   நான் எதாவது ஒரு புத்தகக் கடையில் ஒரு புத்தகம் வாங்கிவிட்டால் திரும்பத் திரும்ப அதே கடைக்குச் சென்று இன்னும் எதாவது புத்தகம் வாங்கச் சுற்றிக்கொண்டிருப்பேன்.  இந்த முறை எதிர் வெளியீட்டைச் சுற்றி சுற்றி வந்தேன்.  இன்னும் ஒரு புத்தகம் சூன்யப் புள்ளியில் பெண்  நவல் எல் சாதவி எழுதியது.  தமிழில் சசிகலா பாபு.  இது ஒரு நாவல். கொய்ரா அருகில் உள்ள சிறு கிராமத்தில் 1931ல் பிறந்தவர் நவல் எல் சாதவி.  அரேபியா பெண்களின் நலத்திற்காகப் போராடியவர்.

எதிர் வெளியீட்டில் எனக்குப் பிடித்த அம்சம்.  புத்தகங்களில் அமைப்பு.  பார்த்தவுடன் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான அட்டை அமைப்பு.  ஆலிஸ் வாக்கர் எழுதிய அன்புள்ள ஏவாளுக்கு என்ற புத்தகத்தையும் வாங்கி உள்ளேன். தமிழில் மொழி பெயர்த்தவர் ஷஹிதா அவர்கள்.  எதிர் வெளியீட்டிலிருந்து 7 புத்தகங்களை வாங்கிவிட்டேன்.  

நான் இப்படி அந்நியாயமாக புத்தகங்கள் வாங்கிக் குவிப்பதைப் பார்த்து நீங்கள் மரத்திடம் போய் புகார் கொடுப்பது எனக்குத் தெரியும்.  ஆனால் நீங்கள் கேட்க விரும்பும் ஒரு கேள்விக்கு மாத்திரம் நான் பதில் சொல்ல மாட்டேன்.  இன்னும் சில புத்தகங்களைப் பற்றி தொடர்வோம்.   

சரி மேலே குறிப்பிட்ட நூல்களில் முதலில் நான்  எதை எடுத்துப் படிக்க வேண்டும்? 

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …35



அழகியசிங்கர் 

நான் வாங்கிக்கொண்டு வந்த புத்தகங்களை ஒரு மர ஷெல்பில் அடுக்கி வைத்துவிட்டேன்.  அது போதவில்லை.  இன்னும் சில புத்தகங்களையும் அடுக்கி வைக்கவேண்டும்.  புத்தகங்களை முறைத்துப் பார்த்தேன்.  பதிலுக்குப் புத்தகங்கள் என்னை முறைந்தன. யோசித்துப் பார்த்தேன்.  ஏன் இவ்வளவு புத்தகங்கள் வாங்கினோம் என்று.  இது ஒரு விதத்தில் சரி, ஆனால் இன்னொரு விதத்தில் சரி இல்லை என்று தோன்றியது.

காலச்சுவடு பதிப்பகம் கொண்டு வந்த ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற புத்தகத்தை வாங்கினேன்.  போன ஆண்டு புத்தகக் காட்சியின் போது கல்யாண்ஜியின் முழுத் தொகுதி வாங்கினேன்.   அதே போல் உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட தேவதச்சனின் ஒரு மர்ம நபர், வைதீஸ்வரின் மனக்குருவி, பிரமிள் கவிதைகள், சுகந்தி சுப்ரமணியனின் படைப்புகள் என்று முழுத் தொகுதிகளாக சேகரித்து வைத்துள்ளேன்.  படிக்கும்போது கவிதைகள் அலாதியாகத் தென்படுகின்றன.  அதனால்தான் 300 கவிதைகள் கொண்ட என் கவிதைகளையும் அழகியசிங்கர் கவிதைகள்  என்ற பெயரில் புத்தகமாகக் கொண்டு வந்து விட்டேன். நிம்மதி.

ஞானக்கூத்தன் கவிதைகள் தொகுப்பில், கவிதை எழுத என்ற பெயரில் ஒரு கவிதை எழுதி உள்ளார்.  அதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

கவிதை எழுத

மேஜைமேல் தாள்களை வைத்து

பேனாவை ஓட்டினேன்

ஒரு கல் விழுந்தது

எழுதத் தொடர்ந்தேன்

ஒரு கல் விழுந்தது

விடாமல் எழுதினேன்

விடாமல் கற்கள் விழுந்தன. பின்பு

கற்களை எண்ணினேன்.  எல்லாம்

வாசம் குறையா மல்லிகை ஆயின. தோழா.

வழவழப்பான தாளில் உயர்ந்த அட்டையில் ஞானக்கூத்தன் கவிதைகள் தொகுதி மின்னுகின்றன.

இங்கே குறிப்பிடும் புத்தகங்களை முழுவதும் படித்துவிட்டுத்தான் சொல்கிறேன் என்று யாரும் தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.  இப்போது புத்தகங்களைப் பற்றி கூறுகிறேன்.  பின்னால் புத்தகங்களைப் படித்து முடித்தவுடன் இன்னும் கூறுவேன். 824 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை : ரூ.895.

உ வே சாமிநாதையர் கடிதக் கருவூலம் என்ற புத்தகம்.  தொகுத்தவர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள்.  ஒரு கூட்டத்தில் சலபதி இந்தத் தொகுதியைப் பற்றி குறிப்பிட்டபோது உடனே வாங்க வேண்டுமென்று நினைத்தேன்.  இந்தப் புத்தகக் காட்சியின் போது அதை வாங்க முடிந்தது.  தொகுதி 1 என்ற பெயரில் இந்தப் புத்தகம் வெளி வந்துள்ளது.  1877ஆம் ஆண்டிலிருந்து 1900 வரை உள்ள கடிதங்களின் தொகுதி இது.  இந்தப் புத்தகத்தின் பின் பகுதியில் கடிதம் எழுதியவர்களில் கையெழுத்துப் பிரதிகளையும் காணலாம்.   உ வே சாவிற்கு மற்றவர்கள் எழுதிய கடிதங்கள்தான் தொகுக்கப்பட்டுள்ளனவே தவிர உ வே சா என்ன எழுதியிருப்பார் என்பது தெரியவில்லை.  இந்தப் புத்தகம் ஒரு முக்கியமான புத்தகமாக எனக்குத் தோன்றுகிறது. கெட்டி அட்டைப் போட்ட 600 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை  ரூ.600தான்.  

இன்னும் கொஞ்சப் புத்தகங்களைப் பற்றியும் சொல்ல விரும்புகிறேன்.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …34

ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியின் போது ராமகிருஷ்ணனைச் சந்திக்காமல் இருக்க மாட்டேன்.  உண்மையில் அங்குதான் அவரைச் சந்திக்கும் வழக்கம் உள்ளவன்.   அப்படிச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் என்னன்ன புத்தகங்கள் வாங்கலாம் என்று சொல்லிக்கொண்டிருப்பார்.
ஒருமுறை பெரிய விக்கிரமாதித்தியன் கதையை வாங்கும்படி சொன்னார்.  இன்னொரு முறை பம்மல் சம்பந்த முதலியாரின் படைப்புகளின் முழு செட்டு கிடைக்கிறது வாங்குங்கள் என்றார்.  இப்படி எத்தனையோ புத்தகங்களை வாங்கும்படி கூறிக்கொண்டிருப்பார்.  
எனக்குத் தெரிந்து வேறு சில எழுத்தாளர்கள் என்ன புத்தகங்கள் படிக்கிறார்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள்.
அமெரிக்கன் லைப்ரரிக்கு பிரமிளுடன் போகும்போது அவர் என்னன்ன புத்தகங்கள் படிக்க வேண்டுமென்று எடுத்துக்கொடுப்பார்.  ஒரு முறை ஒரு புத்தகத்தை எடுத்து, üஇது நம்ம ஊர் ஜெயகாந்தன் மாதிரி எழுதுவார்.  படிக்க வேண்டாம்,ý என்று சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.
இன்னொரு இலக்கிய நண்பர், üஎம் வி வெங்கட்ராமின்  காதுகள் என்ற நாவலையும், கோபிகிருஷ்ணனின் உள்ளேயிருந்து ஒரு குரல் என்ற நாவலையும் படிக்காதீர்கள்ý என்று அறிவுரை கூறினார்.  ஏன் என்று கேட்டேன்.  üஅது தீவிரவாதப் புத்தகம், தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்,ý என்றார். 
அதை எடுத்துப் படிக்கும்போது அவர் சொன்னது உண்மையாக இருக்குமென்று தோன்றியது.  ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால், புத்தகம் படிப்பது எந்தவிதத்திலும் யார் மனதையும் கெடுக்காது.  ஆனால் வாசிப்பவனுக்கு நம்ப முடியாத பலத்தைக் கொடுக்கும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.  
நான் ஒவ்வொரு முறையும் புத்தகக் காட்சியில் புத்தகங்கள் வாங்காமல் இருக்க மாட்டேன்.   சிலசமயம் புத்தகங்களை வாங்கியபின் அதிகமாக வாங்கிவிட்டோமோ என்று கலக்கத்துடன் இருப்பேன். 
இந்த முறை ஆசையுடன் முதலில் நான் வாங்கிய புத்தகம் üகறையான்ý என்ற நாவல்.  சீர்ஷேந்து முகோபாத்யாய எழுதியது  நேஷனல் புக் டிரஸ்ட் கொண்டு வந்த புத்தகம்.  1978ல் இப் புத்தகம் வந்தபோது நான் வாஙகியிருக்கிறேன். நான் வாங்கியப் புத்தகம் ரொம்பவும் மோசமாகி வீணாகிப் போய்விட்டது.   ஒவ்வொரு முறையும் நேஷனல் புக் டிரஸ்ட் அலுவலகத்திற்குப் போகும்போது இந்தப் புத்தகம் இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டிருப்பேன்.  இதோ இந்த முறை நேஷனல் புக் டிரஸ்ட் என் ஆசையை நிறைவேற்றி விட்டது.  இந்த முறை புத்தகக் காட்சியில் நான் வாங்கிய முதல் புத்தகம் இது.  

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …33

இன்னும் புத்தகக் காட்சி முடிந்துவிட வில்லை.  புத்தகக் காட்சி 4ஆம் தேதியிலிருந்து ஆரம்பித்து 20ஆம் தேதி முடிந்து விட்டது.  ஆனால் நான் இன்னும் முடிக்கவில்லை.  புத்தகக் காட்சி ஆரம்பிக்கும்போது இரும்பு அலமாரிகளில் உள்ள எல்லாப் புத்தகங்களையும் சாக்கில் கட்டி வைத்து விடுவேன்.  பின் இரும்பு அலமாரிகளை புத்தகக் காட்சி எடுத்துக்கொண்டு போவது வழக்கம்.  புத்தகக் காட்சி முடிந்தவுடன் திரும்பவும் இரும்பு அலமாரிகளை எடுத்துக்கொண்டு வந்து விடுவேன். இரும்பு அலமாரியில் உள்ள ஒரு தட்டில் உள்ள புத்தகங்கள் ஒரு சாக்குப் பை நிரம்பும் அளவிற்கு இருக்கும்.  இது மாதிரி 30அல்லது 40 சாக்கு மூட்டைகளில் புத்தகங்களை வைத்திருப்பேன்.  ஒவ்வொரு தட்டிலும் புத்தகங்களை வைப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. 
இரண்டு நாட்களாக இதுதான் என் வேலை.  ஒவ்வொரு இரும்பு அலமாரியையும் நகர்த்தி வைத்து புத்தகங்களை அடுக்குவது. கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் புத்தகங்கள் என்னைக் கைவிடவில்லை.  
இந்தப் புத்தகக் காட்சியில் இரண்டு படைப்பாளிகள் என்னைக் கௌரவம் செய்தார்கள்.  கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் புத்தகக் காட்சியில் பங்குக் கொண்டிருக்கிறேன்.  இதுவரை யாரும் என்னை மேடைக்கு அழைத்துப் போய் அவர்கள் எழுதிய புத்தகங்களை வழங்கியதில்லை. எந்தப் புத்தகக் காட்சியிலும் யாரும் கௌரவம் செய்ததில்லை.   இந்த முறை மட்டும் அப்படி நடந்தது.  ஒவ்வொரு புத்தகக் காட்சியின்போதும் பல எழுத்தாளர்கள் எனக்குப் புத்தகங்களை நன்கொடையாகக் கொடுப்பார்கள்.   நானும் சிலருக்கு என் புத்தகங்களை நன்கொடையாகக் கொடுப்பேன்.  நான் நன்கொடையாக வாங்க நினைக்கும் புத்தகங்களûப் படித்து எழுத நினைப்பேன்.  சில புத்தகங்களைப் படித்தும் எழுதியிருக்கிறேன்.  இந்த முறை என்னை கௌரவம் செய்த இரண்டு படைப்பாளிகளின் பெயர்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.  ஒருவர் பெயர் üமுகங்கள்ý என்ற பெயரில் எழுதிய சத்யா ஜி பியின் புத்தகம்.  இன்னொரு புத்தகம் உஷாதீபனின் சிறுகதைத் தொகுப்பு.  நிலைத்தல் என்ற சிறுகதைத் தொகுப்பு.  காவ்யா ஏற்பாடு செய்த கூட்டத்தில் அதைப் பெற்றுக்கொண்டேன்.  
எப்போதுமே அரங்கை விட்டு வெளியே வந்தால், அதுவும் அதிக நேரம் ஆகிவிட்டால், எனக்கு அரங்கு ஞாபகம் வந்து திரும்பி விடுவேன்.   எனக்கு உதவி செய்யும் நண்பரின் மனம் நோகக் கூடாது என்று நினைப்பவன்.  அதனால் உஷாதீபன் கூட்டத்தில் பேச முடியாமல் போய்விட்டது.   இது சற்று வருத்தம்தான்.
கிட்டத்தட்ட 10 புத்தகங்கள் நன்கொடையாகக் கிடைத்தன.  அப் புத்தகங்களைப் பட்டியலிட விரும்புகிறேன்.
1. சத்யா ஜி பி எழுதிய முகங்கள்
2. உஷாதீபனின் நிலைத்தல் சிறுகதைத் தொகுப்பு
3. படித்தேன்......எழுதுகிறேன்  - உஷாதீபன் கட்டுரைத் தொகுப்பு
4. முபீன் சாதிகா கட்டுரைகள்
5. இருளும் ஒளியும் - கவிதைகள் - பிருந்தா சாரதி
6. மேசை மேல் செத்த பூனை - கவிதைகள் - இந்திரன்
7. 84 கவிதைகள் - இரா. மதிபாலா
8. வருகைக்கான ஆயத்தங்கள் - சிறுகதைகள் - இதயா ஏசுராஜ்
9. சாமானிய மனிதனின் எதிர்க்குரல் - கட்டுரைகள் - விஜய் மகேந்திரன்
10. ஆவணப்பட இயக்கம் - கட்டுரைகள் - அம்ஷன் குமார்

இந்த முறை என் புத்தகங்களை வாங்கியவர்கள் புத்தகத்தில் கையெழுத்துப் போடும்படி கேட்டுக்கொண்டார்கள்.  இதுவும் முன்பு நடந்ததில்லை.  இனி வாங்கிய புத்தகங்களைப் பற்றி நாளை எழுதுகிறேன்.