சனிக்கிழமை (16.02.2019) அன்று எழுத்தாளர் ஆதவன் குறித்து ஆர்.வெங்கடேஷ் உரை ஆற்றியது – கடைசிப் பகுதி அழகியசிங்கர் விருட்சம் இலக்கியச் சந்திப்பு சார்பில் ஒவ்வொரு மூன்றாவது சனிக்கிழமையும் ஒரு எழுத்தாளரைப் பற்றி உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த மாதம் ஆதவன் குறித்து.


அழகியசிங்கர்

விருட்சம் இலக்கியச் சந்திப்பு சார்பில் ஒவ்வொரு மூன்றாவது சனிக்கிழமையும் ஒரு எழுத்தாளரைப் பற்றி உரை நிகழ்த்துவது வழக்கம்.  இந்த மாதம் ஆதவன் குறித்து.


சனிக்கிழமை (16.02.2019) அன்று எழுத்தாளர் ஆதவன் குறித்து ஆர்.வெங்கடேஷ் உரை ஆற்றியது – முதல் பகுதி

அழகியசிங்கர்

விருட்சம் இலக்கியச் சந்திப்பு சார்பில் ஒவ்வொரு மூன்றாவது சனிக்கிழமையும் ஒரு எழுத்தாளரைப் பற்றி உரை நிகழ்த்துவது வழக்கம்.  இந்த மாதம் ஆதவன் குறித்து.

காதலர் தினம் என்றால் என்ன…….

அழகியசிங்கர்

நான் இதுவரை

காதலர் தினத்தன்று

எந்தப் பெண்ணையும் காதலிக்க

வேண்டுமென்று நினைத்ததில்லை

காதல் என்பதே ஒரு அபத்தமென்றும்

அந்த அபத்தத்திலும் அபத்தம் 

காதலர் தினம் என்று நினைப்பதுண்டு

நான் நடமாடும்

பூங்காவில்

தினமும் காலையில்

ஒரு ஜோடி கைக்கோர்த்து 

தங்களை மறந்து நடந்தபடியே செல்வார்கள்

அவர்கள் இருவரும் காதலர்கள் என்றாலும்

அந்தப் பெண் முகம் மட்டும் தினம் தினம்

பார்க்கும்போது பூரணமாக ஒளிர்வதைக் காண்கிறேன்.

பின் 

நான் அவர்களைப் பார்க்காத மாதிரி

நடந்து சென்று விடுவேன்.

நீங்களும் படிக்கலாம் – 46


சாமானிய மனிதனின் எதிர்க்குரல்

அழகியசிங்கர்

வழக்கமாக நான் புத்தகங்கள் அதிகமாகப் படிக்கத் தேர்ந்தெடுக்கும் இடம். ரயிலில் பயணம் செய்யும்போதுதான்.  அதனாலேயே பகலில் ஒரு இடத்திற்குப் பயணம் செய்வதையே விரும்புவேன்.  அப்படிப் பயணிக்கும்போது கையில் புத்தகங்களை எடுத்துக்கொண்டு போவேன்.  

இந்த முறை மயிலாடுதுறைக்குப் போனபோது விஜய் மகேந்திரனின் üசாமானிய மனிதரின் எதிர்க்குரல்,ý என்ற புத்தகத்தை எடுத்துக்கொண்டு போனேன்.  முகநூலில் எழுதிய விபரங்களின் ஒரு பகுதி, பத்தரிகையில் எழுதிய புத்தக மதிப்புரை என்று எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாகக் கொண்டு வருவது அவ்வளவு எளிதானதல்ல.  உண்மையில் ஒவ்வொரு முகநூலிலிருந்து புத்தகமாக வரும்போது அந்தப் பகுதியை எழுதிய படைப்பாளியைத் தவிர்த்து தொகுப்பதற்கு யாரையாவது ஏற்பாடு செய்திருக்க வேண்டும். 

விஜய் மகேந்திரனே இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார். எல்லாவற்றையும் சொலல வேண்டுமென்ற எண்ணம் இயல்பாகவே ஏற்பட்டிருக்கும்.  இதைத் தவறு என்று சொல்ல வரவில்லை.

முதலில் இந்தப் புத்தகத்தின் தலைப்பு சாமானிய மனிதனின் எதிர்க்குரல்.  உண்மையில் இந்தப் புத்தகத்தை ஒருவர் படித்தால் இது எதிர்க்குரல் என்று யாரும் சொல்லமாட்டார்கள்.  ஆதரவு குரல் என்றுதான் சொல்லியிருப்பார்.

பெரும்பாலும் நண்பர்களைப் பற்றியும் நண்பர்களின் படைப்புகளைப் பற்றியும் மனம் உருகி எழுதியிருக்கிறார்.  நான் இந்தப் புத்தகத்தை இரண்டு விதமாகப் பார்க்கிறேன்.  

ஒன்று சினிமாகலைஞர்களுடன் அவருக்கு ஏற்பட்ட ஈடுபாடு.  இரண்டாவது எழுத்தாளர்களுடன் அவருக்கு உண்டான நட்பு. 

இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது பல புதிய தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது.  எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்துகொள்ள முடிவதில்லை என்ற எண்ணமும் எனக்கு ஏற்பட்டது.  உதாரணமாக ‘விழித்திரு’ என்ற படத்தை இயக்கித் தயாரித்த மீரா கதிரவனைப் பற்றி. அதேபோல் களஞ்சியம் என்ற இயக்கினரைப் பற்றி.  ஆனால் விஜய் மகேந்திரன் புத்தகத்தைப் படிக்கும்போது அவர்கள் எல்லோரும் எனக்கும் அறிமுகமாகிறார்கள். 

எனக்கும் அவர்கள் இயக்கியப் படங்களைப் பார்க்க ஆர்வம் ஏற்படுகிறது. உதாரணமாக மீரா கதிரவன் படமான விழித்திருவை யூ ட்யூப்பில் தேடிக் கண்டுபிடித்து பார்க்கத் துவங்கியிருக்கிறேன். 

இந்தத் தொகுதியில் முகநூல் குறிப்புகளில் விரியும் பன்முகப் பார்வை என்ற கட்டுரையைப் படித்தேன். ப்ரியாதம்பி என்ற பெயரில் முகநூலில் எழுதி வருபவரைப் பற்றி தெரிய வந்தது. புதிய செய்தியாக இருந்தது.  இந்த ப்ரியாதம்பி அவர்கள்தான் இப்போது ஆனந்தவிகடனில் எழுதி வருபவர் என்று நினைக்கிறேன்.   ஆனால் விஜய் மகேந்திரன் குறிப்பிடும் மற்றவர்களைப் பற்றி எனக்கும் ஒருவித அறிமுகம் உண்டு.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது விஜய் மஹேந்திரனின் பரவசப்படும் தன்மை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  விஜய் மஹேந்திரன் ஒரு படைப்பாளி.  அப்படி ஒரு படைப்பாளியாக இருப்பவர் சகப் படைப்பாளியின் படைப்புகளைக் குறித்துப் பரவசமாக எழுத மாட்டார்கள்.  ஆனால் விஜய் மஹேந்திரன் வித்தியாசமானவர். அவர் எல்லோரைப்பற்றியும் பரவசத்தன்மையில் எழுதுகிறார்.

உதாரணமாக ஷோபாசக்தி என்ற எழுத்தாளரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  இது கட்டுரை என்பதை விட கதைபோல் எழுதியிருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது.  இந்தப் பரவசப்படும் தன்மைதான் விஜய் மஹேந்திரனின் பலம்.

இன்னொரு விஷயத்தையும் இந்தப் புத்தகத்தில் கண்டேன்.  புத்தக விமர்சனம்.  பெரும்பாலும் கவிதைகள் பற்றிய புத்தக விமர்சனம் எழுதி உள்ளார். துணிச்சலாக மனதில் படுகிற பல கருத்துக்களைத் தெரிவிக்கிறார்.

சென்னைக்குப் புதியதாக வரும்போது படுகிற அவஸ்தையைத் தெரிவிக்கிறார். சில கட்டுரைகளைப் படிக்கும்போது ஒரு சிறுகதையைப் படிக்கிற எண்ணம் எழாமல் இல்லை.  இதற்குக் காரணம் விஜய் மஹேந்திரன் ஆரம்பத்தில் ஒரு சிறுகதை எழுத்தாளர்.

ரஜினிகாந்த், ஏ ஆர் ரஹ்மான், ஸ்ரீதேவி போன்ற திரை உலகப் பிரமுகர்களை  அறிமுகப்படுத்துகிறார். 

பிட்டாக இருக்க செய்ய வேண்டியவை, முருங்கைக் கீரை படிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்.  குமரகுருபரன் என்னும் ஆளுமை என்ற கட்டுரை உருக்கமாக உள்ளது. நண்பர் நரனும் நானும்தான் தேநீர் சந்திப்புகளை அவர் நினைவுகளைப் பேசி வருகிறோம் என்று முடிக்கிறார்.

இத் தொகுதியில் கடைசியாக உள்ள கட்டுரையின் தலைப்பு நாய்கள் ஜாக்கிரதை.  தெரு நாயை எப்படி நடத்தவேண்டும் என்று எழுதியிருக்கிறார். ஆனால் நாய் குரைக்கும் போது தேவையில்லாத பயம் ஏற்படாமல் இல்லை. என் நண்பர் ஒருவர் வீட்டில் நாய் வைத்திருக்கிறார் என்பதால் அவர் வீட்டிற்கே போகவில்லை.

இத் தொகுப்பைக் குறித்து சில கருத்துக்களையும் சொல்ல விரும்புகிறேன்.  

இத் தொகுப்பில் என்னன்ன கட்டுரைகள் எந்தந்தப் பக்கங்களில் வெளிவந்திருக்கினறன என்ற அட்டவணை வேண்டும். 

விஜய் மகேந்திரனின் சுயவிபரக் குறிப்புகள் வேண்டும். மற்றபடி இது வாசிக்கப்பட வேண்டிய புத்தகம். 

நன்றி : சாமானிய மனிதனின் எதிர்க்குரல் – விஜய் மகேந்திரன் – வெளியீடு : புலம், 332/216 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை – 600 005 – தொலைபேசி : 9840603499

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 46

        தலைப்பு  :   எழுத்தாளர் ஆதவனும் நானும்

சிறப்புரை :    ஆர் வெங்கடேஷ்

இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்

     மூகாம்பிகை வளாகம்

     சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே

     ஆறாவது தளம்

      மயிலாப்பூர்

     சென்னை 600 004

தேதி 16.02.2019 (சனிக்கிழமை)

நேரம்  மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு  : பத்திரிகையாளர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர். கட்டுரையாளர்

அன்புடன்

அழகியசிங்கர் 

9444113205

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 104

அழகியசிங்கர்  



வாழ்க்கை



சுகந்தி சுப்ரமணியன்

வாழ்க்கை பூராவும் தியாகம் செய்வதா?

நான் கேட்டேன் அந்தப் பெண்களை.

இதுதான் வாழ்க்கை என்றாள் ஒருத்தி.

எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும்

வாழ்கிறேன் என்றாள் மற்றவள்.

ஜடமாய் உணர்கிறேன் என்றாள் இன்னொருத்தி.

வெள்ளிக்கிழமையும், வியாழனும்

விரதமிருக்கிறேன் அம்மனுக்கு,

தீரும் என் கவலைகள் என்றாள்

மற்றுமொருத்தி.

இவர்களின் அனுபவங்கள் என்னுள் அடங்க மறுத்து அதிர

மௌனமானேன்.

வாழ்வின் தாக்குதல்கள் புரியாமலும்

வலுவுடன் எதிர்க்க முடியாமலும் ஓய்ந்துபோன

கால்கள் நடக்கின்றன மெதுவாய்

தலைகள் நிலத்தைப் பார்த்தபடி

நிமிர முடியாமல்.

நன்றி : சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள் – டிஸ்கவரி புக் பேலஸ்,

கே கே நகர் மேற்கு, சென்னை 600 078 – தொலை பேசி : 044-65157525 – பக்கங்கள் : 350 – விலை : 330 

துளி : 28 – குவிகம் இல்லத்தில் கூட்டம்

அழகியசிங்கர்

ஒவ்வொரு வாரமும் குவிகம் இல்லத்தில் அளவளாவல் என்ற பெயரில் கூட்டங்கள் நடத்தி வருபவர்கள் கிருபானந்தனும், சுந்தர்ராஜன் என்ற நண்பர்கள்.  இந்த மாதம் 3 ஆம் தேதி கிருபானந்தன் அமெரிக்கா சென்று விட்டார்.  போகும்போது வரும் பத்தாம் தேதி ஒரு கூட்டம் நடத்த என்னிடம் கேட்டுக்கொண்டார்.  ஏற்கனவே அமெரிக்கா சென்று திரும்பிய சுந்தர்ராஜன் சென்னையில் இந்த வாரம் இல்லை என்பதால் நான் பொறுப்பேற்றுக்கொண்டு கவிஞர்கள் கவிதைகள் வாசிக்கும் கூட்டமொன்றை நடத்திúன்ன. 

இக் கூட்டத்தில் எல்லாவித கவிஞர்களையும் கூப்பிட்டுப் பேச முயற்சி செய்தேன்.  அதில் ýஓரளவுதான் வெற்றி பெற முடிந்தது.  நான் மரபுக் கவிதைகளிலிருந்தும் ஹைக்கூ கவிதைகளிலிருந்தும் வெளியே வந்துவிட்டாலும், அப் பிரிவுகளில் என்ன மாதிரியான கவிதைகள் வாசிக்கப் படுகின்றன என்ற எண்ணமும் என்னிடம் தோன்றாமல் இல்லை.

நான் எதிர்பார்த்தபடியே நான்கந்து போர்கள்தான் கவிதைகள் வாசித்தார்கள்.  முதலில் ஒவ்வொருவரும் ஒரு கவிதை வாசித்தோம்.  முக்கியமாக ஒரு விஷயத்தைக் கவனித்தேன்.  கவிதை வாசிக்க வந்த பானுமதி அவரகள் கவிதையைப் பாடினார்கள்.  பொதுவாக தமிழ் கவிதையில் பாடும் வழக்கம் கிடையாது.  இது வித்தியாசமாக இருந்தது.  புதுக்கவிதை என்பது மதம் சார்பற்ற கவிதை. புராணம் எல்லாம் கவிதையாகக் கொண்டு வர மாட்டார்கள்.  ஆனால் ஒருவர் புராணக் கதையை எடுத்து கவிதையாக வாசித்தார்கள்.  எல்லாம் புது அனுபவமாகவும் சிறப்பாகவும் இருந்தது.  4 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் ஆறு மணிக்கு முடிந்தது.  ஆடியோவில் பதிவு செய்த நான் ஒரு புகைப்படம் எடுக்கும் எண்ணம் இல்லாமல் இருந்து விட்டேன். 

துளி : 27 – இன்றைய இந்து தமிழ் திசையில்

அழகியசிங்கர்

44 ஆண்டுகள் 306 கவிதைகள் என்ற தலைப்பில் இன்றைய இந்து தமிழ் கிசையில் என் கவிதைத் தொகுதியைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது.  இந்தக் குறிப்பை வெளியிட்ட இந்துவிற்கு என் நன்றி உரித்தாகும். 

இந்துவில் பிரசுரிக்கப்பட்ட குறிப்புகளை இங்கு தருகிறேன். 

‘தமிழின் மூத்த எழுத்தாளர்கள், நம்பிக்கைக்குரிய இளம் எழுத்தாளர்கள் என இரண்டு தலைமுறைகளுக்கும் இலக்கியப் பாலமாக ‘நவீன விருட்சம்’ ‘இதழை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவருகிறார் அழகியசிங்கர். 

 சமீபத்தில், தனது சிறுகதைகளின் முழுத் தொகுப்பை வெளியிட்ட அழகியசிங்கர், அடுத்து தனது கவிதைகளின் முழுத்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.  எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரை 306 கவிதைகளை எழுதியிருக்கிறார்.  எடுத்துக்கொண்ட ஆண்டுகள் 44. சொந்தமாக இலக்கிய இதழ் நடத்தியும் இவ்வளவு கவிதைகள்தான் எழுதியிருக்கிறார் என்பதே இந்தக் காலத்தில் ஆச்சர்ய்மான செய்திதான்.’ – தொகுப்பு : மானா பாஸ்கரன், மு.முருகேஷ். 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 103

அழகியசிங்கர் 

அணு முட்டை

மாலதி மைத்ரி

ஒரு குடம் நீரை

ஒரு கூடை மீனை 

ஒரு மூட்டை தானியத்தை 

ஒரு கட்டு புல்லை

ஒரு சுமை விறகை

சுமப்பது போல் 

அவள் கர்வத்துடன் 

உலகைச் சுமந்தலைந்தாள் 

பெரிய தலையுடன் 

ஒளிரும் வால் நட்சத்திரமாய்

வசீகரமாய் இருந்தாள் 

தன் குஞ்சுக்கு

இரையூட்டும் பறவையென

உலகை ஊட்டிக் காத்தாள்

ராட்சஸப் பறவையாய் வளர்ந்த அது 

அவள் தலைமேல் 

அணுவுலையை 

முட்டையிட்டு அடைக்காக்கிறது.

நன்றி :  முள் கம்பிகளால் கூடு பின்னும் பறவை – மாலதி மைத்ரி – பக்கங்கள் : 92 – விலை : ரூ.90 – அணங்கு பெண்ணியப் பதிப்பகம், 3 முருகன் கோவில் தெரு, கணுவாப்பேட்டை, வில்லியனூர், புதுச்சேரி 605110 – பேசி : 998454175, 9599329181

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …38


அழகியசிங்கர்  

காலச்சுவடிலிருந்து ஞானக்கூத்தன் கவிதைகள் முழுத் தொகுதி வாங்கியபின் இன்னும் சில புத்தகங்களையும் காலச்சுவடில் வாங்கினேன்.  சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை என்ற அம்பையின் சிறுகதைத் தொகுப்பு.  இன்னொரு புத்தகம் செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள் 1993.  மூன்றாவதாக நான் வாங்கியப் புத்தகம் பா வெங்கடேசனின் வாராணசி (மயக்க நிலைத் தோற்றங்கள்) என்ற புத்தகம்.

இங்கு ஒரு புத்தகத்தைப் பற்றி குறிப்பிடுவது மேம்போக்கான நிலையில்தான்.  ஒரு புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துவிட்டு தோன்றுவதை எழுதுகிறேன். ஆனால் ஒரு புத்தகத்தை முழுவதும் படித்துவிட்டு என்ன தோன்றுகிறதோ அதை எழுத வேண்டும்.  புத்தகம் போதனையைப் புகட்டுகிறதா? இல்லை எழுதுபவரின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது.  

கதைகளும் நானும் என்ற தலைப்பில் அம்பை இப்படி எழுதி உள்ளார்: üமேகங்கள் பொங்கி எழுந்து எழுதச் சொன்னதாயும் காலையில் சன்னலைத் திறந்ததும் பறவைகளாய்க் கதைகள் வந்ததாயும் சில எழுத்தாளர்கள் கூறியிருக்கிறார்கள்.  அவர்கள் ஆண் எழுத்தாளர்கள் என்பது வேறு விஷயம். இப்படிப்பட்ட அற்புதங்கள் எதுவும் எனக்கு நேராவிட்டாலும் உள்ளிருந்து புற உலகைப் பார்ப்பதற்கான சன்னல் எனும் திறப்பு தொடர்ந்து என் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது,ý  என்று கூறுகிறார்.  இத் தொகுப்பில் தொண்டை புடைத்த காகம் ஒன்று என்ற முதல் கதையைப் படித்து முடித்துவிட்டேன்.  எந்தவித சலனத்தையும் பிரதிபலிக்காமல் எழுதுகிற நடை அம்பைக்கு.  முழுத் தொகுப்பு படிக்க வேண்டும்.  168 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.195.

இன்னொரு புத்தகம் பா வெங்கடேசனின் வாராணசி.  இதற்கு மயக்க நிலைத் தோற்றங்கள் என்றும் எழுதியிருக்கிறார்.  192 பக்கங்கள் கொண்ட இப் புதினத்தையும் வாங்கினேன்.  பொதுவாக பா வெங்கடேசன் நூல்களை வாங்கி வைத்துவிடுவேன்.  ஆனால் போருக்குத் தயாராவதுபோல் தயாராக வேண்டும், அவர் புத்தகங்களைப் படிக்க.  இந்த அனுபவத்தை கோணங்கியும் ஏற்படுத்துகிறார்.  

இந்த நாவலில் எந்த இடத்திலும் பாராவாகப் பிரிக்கப்படவில்லை.  அப்படியே ஓட்டமாக ஓடுகிறது நாவல்.  எங்காவது முற்றுப்புள்ளி இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் தெரியவில்லை. கமா மட்டும் அங்கங்கே தென்படுகிறது.   

பக்கம் 21ல் இப்படி எழுதியிருக்கிறார் :

‘…அவள் இல்லாத வாராணசி அல்லது வாராணசி இல்லாத அவள் அல்லது ஒரு புள்ளியில் அவளும் வாராணசியுமேயில்லாத ஒரு வெற்றுத்தாளாக லோத்தர் உத்தேசிக்கும் பயிற்சியின் கீழ் அவரால் அந்தப் புகைப்படத்தை ஒரு போதும் பார்க்கவே முடியாது,..’ இப்படியே போய்க்கொண்டிருக்கிறது.  192 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.195.

மூன்றாவது புத்தகம் செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள் 1993.  இது ஒரு வாழ்க்கை வரலாறு புத்தகம்.  செல்லம்மாள் என்பவர் எழுதியிருக்கிறார்.  இதற்கு முன்னுரை அம்பை எழுதியிருக்கிறார்.  

இந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது. ‘செல்லம்மாவின் வாழ்க்கைக் குறிப்புகள் ஒரு பண்ணின் குடும்பம் குறித்த தொடர்ந்த மனத்தாங்கலனின் ஆவணம் மட்டுமல்லாமல் சிறு பெண்களாகவும் மனைவிகளாகவும் விதவைகளாகவுமுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள், அவமதிப்புகள், பேசமுடியாமல் ஊமையாக்கப்படும் அவலங்கள் இவற்றின் ஒலியில்லாக் கூக்குரலாகவும் இருக்கின்றன.’ என்று எழுதப்பட்டிருக்கிறது.  ஒரு சாதாரண பெண்மணியின் வாழ்க்கை வரலாறைப் படிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.  160 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.180.