சில கேள்விகள் சில பதில்கள் – ஷாஅ

அழகியசிங்கர்

இதுவரை பத்து கேள்வி பத்து பதில்கள் என்ற பெயரில் 23 படைப்பாளிகளைப் பேட்டி எடுத்துள்ளேன்.  சமீபத்தில் மணல் வீடு விருதுக்காக ஈரோடு சென்றபோது இன்னும் சில படைப்பாளிகளைப் பார்க்க நேர்ந்தது.  அவர்களையும் பேட்டி எடுத்தேன். மூன்றாவதாக ஷாஅ அவர்களைப் பேட்டி எடுத்தேன்.  என் நெடுநாளைய நண்பர் இவர்.  தான் உண்டு கவிதை உண்டு என்று இருப்பவர்.  இவர் இயல்புபடி ரொம்ப வருடங்கள் கவிதைகளைப் புத்தகமாகக் கொண்டு வரவேண்டுமென்று எண்ணம் இல்லாமல் இருந்தவர்.   இயற்பெயர் அப்துல் அஜிம். சேலத்தில் வசிக்கிறார் 


சில கேள்விகள் சில பதில்கள் – அழகிய பெரியவன்

அழகியசிங்கர்

இதுவரை பத்து கேள்வி பத்து பதில்கள் என்ற பெயரில் 21 படைப்பாளிகளைப் பேட்டி எடுத்துள்ளேன்.  சமீபத்தில் மணல் வீடு விருதுக்காக ஈரோடு சென்றபோது இன்னும் சில படைப்பாளிகளைப் பார்க்க நேர்ந்தது.  அவர்களையும் பேட்டி எடுத்தேன். இதை பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்பதற்குப் பதில் சில கேள்விகள் சில பதில்கள் என்று மாற்றலாம் என்று நினைக்கிறேன். இரண்டாவதாக நான் எடுத்தப் பேட்டி அழகிய பெரியவனுடையது.

மணல் வீடு வழங்கிய பரிசு..

05.08.2019

நேற்று சென்னை வந்து சேர்ந்தபோது இரவு மணி 11 ஆகி விட்டது.  எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் மணல்வீடு அமைப்பினர் சிறப்பாகக் கூட்டத்தை நடத்தி முடித்தனர். 
நவீன விருட்சம் என்ற சிற்றேடு 31 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.  இது ஒரு காலாண்டு இதழ்.  இதுவரை 109 இதழ்கள் வந்துள்ளது.  இப்போது வரப்போகிற இதழ் 110வது இதழ். 
நவீன விருட்சம் என்ற இதழிற்குத்தான் இந்த ஆண்டு மணல் வீடு அஃக் பரந்தாமன் நினைவுப் பரிசு வழங்கி கௌரவம் செய்துள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் மணல் வீடு ஒரு சிற்றேட்டின் பங்களிப்பைக் கௌரவம் செய்கிறது.  இந்த ஆண்டு விருட்சத்திற்குக் கௌரவம் அளித்துள்ளது.
நானும் மனைவியும் 2ஆம் தேதியே ஈரோடு சென்றடைந் தோம்.  40 ஆண்டுகளுக்கு முன்னால் ஈரோடு அருகில் உள்ள பவானி ஊரில் அரசாங்க உத்தியோகத்தில் 4 மாதங்கள் பணிபுரிந்த அனுபவம். ஊழலின் கேந்திரம் அந்த அரசாங்க உத்தியோகம்.  எப்போது மாற்றல் கிடைத்து சென்னைக்கு வரமுடியும் என்று ஏங்கிக் கொண்டிருந்தேன்.  அப்பாவிற்கு வாரத்திற்கு ஒருமுறை புலம்பல் கடிதம் எழுதுவேன்.  அப்போது தினமும் பவானி அம்மன் கோயிலுக்குச் செல்வேன்.  மூன்று ஆறுகள் (காவேரி, பவானி, கோயிலிருந்து ஊற்றெடுக்கும் இன்னொரு ஆறு) சங்கமிக்கும் இடத்தை சுதந்திரமாகப் பார்த்து ரசிப்பேன்.  
40 ஆண்டுகளுக்கு மேல் இப்போது அங்குப் போகும்போது அந்த இடமே மாறி எனக்கு அந்நியமாய் தோன்றியது.  திருடர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று காவல் துறையிடமிருந்து எச்சரிக்கை.  தலையும் புரியவில்லை.  காலும் புரியவில்லை.  அப்போதெல்லாம் ஆற்றைக் கடந்து ஒரு பாலத்தின் வழியே குமாரபாளையம் என்ற ஊருக்குச் செல்வேன்..  அந்த ஊர் என்னை வசீகரித்த ஊர்.  ஆனால் இப்போதோ புரியாத ஊரைச் சுற்றிப் பார்த்ததுபோல் தோன்றியது.  ஈúôடிலுள்ள ராணா விடுதிக்குத் திரும்பி வந்து விட்டோம்.  
அடுத்தநாள் பரிசளிப்பு விழா.  நாங்கள் தங்கியிருந்த ராணா விடுதி நிகழ்வரங்கில்.  மருத்துவர் ஜீவானந்தம் உரை நிகழ்த்த, விழா இனிதே துவங்கியது.  நா விச்வநாதன். கமலாலயன், அழகியபெரியவன், பிர்வீன் பஃறுளி, ஷாஅ, தேவி பாரதி, மோகனரங்கன், என் அழைப்பின் பேரில் சென்னையிலிருந்து வந்திருந்த மருத்துவர் பாஸ்கரன் என்று பலர் நவீன விருட்சம் இதழையும் என்னையும் புகழ்ந்து தள்ளி விட்டார்கள். என்னால் என்னையே நம்ப முடியவில்லை.  முத்தாய்ப்பாக நாஞ்சில் நாடன் பேசினார்.  அவர் கையால் பரிசை வழங்க பெற்றுக்கொண்டேன்.    இதற்கெல்லாம் மூலகாரணமாக இருந்த ஹரி கிருஷ்ணன் பம்பரமாய் சுழன்று இந்த விழாவை சிறப்பாக நடத்தி முடித்தார்.  காலை பத்து மணிக்கு ஆரம்பித்த விழா இரண்டு மணிக்கு முடிந்தது.  எல்லோருடைய பேச்சுக்களையும் ஆடியோவில் பதிவு செய்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது பின்னால் கேட்பேன். 

இந்த விழா முடிந்தவுடன் ஈரோடில் நடக்கும் புத்தகக் காட்சிக்குச் சென்றோம். நீதியரசர் மகாதேவன் உரை. அந்த உரை நிகழும் இடமெல்லாம் கூட்டம். என்னமோ தெரியவில்லை அன்று உடல் அசதியாக இருந்தது. அதனால் புத்தகக் காட்சியை வேகமாகசு; சுற்றி பொது மேடை நடக்கும் இடத்தில் வந்து உட்கார்ந்து விட்டேன்.
ஈரோடு புத்தகக் காட்சியில் 4 புத்தகங்கள் வாங்கினேன். அவை பின்வருமாறு. 1500 பக்கங்கள் கொண்ட தகழி சிவசங்கர பிள்ளையின் கயிறு, வா மு கோமு சிறுகதைகள், தொ மு சி ரகுநாதன் எழுதிய பாரதி காலமும் கருத்தும், சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும் (புதுமைப்பித்தன் சிறுகதைகள் பற்றி) என்னுடன் திருவள்ளுவர் என்கிற புத்தக ஆர்வலர் வந்திருந்தார்.
அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை. புத்தக ஆர்வலர் திருவள்ளுவர் எங்களை அங்குள்ள கோயில்களைச் சுற்றிப்பார்க்க அழைத்துப்போனார். 3 கோயில்களைப் பார்த்தோம். அவர் வரவில்லை என்றால் 3 கோயில்களைப் பார்த்திருக்க முடியாது. முதலில் நாமக்கல் ஹனுமார் கோயிலுக்குப் போனோம். திறந்த வெளியில் அனுமாரைப் பார்த்தபோது அசந்து விட்டேன்.. ஒரே கூட்டம். இன்னும் கண்முன்னே ஹனுமார் நடனமாடிக்கொண்டிருக்கிறார். இரண்டாவதாக திருச்செங்கோடிற்குச் சென்றோம். காலை 8.30 மணிக்குக் கிளம்பினோம். இரண்டு கோயில்களைச் சுற்றி பார்த்துவிட்டு வரும்போது மணி 1க்கு மேல் ஆகிவிட்டது. திருச்செங்கோடில் திருவள்ளுவர் வீடு. அங்குச் சென்றோம்.
திருவள்ளுவர் அவர் வீட்டில் ஒரு லைப்ரரியே வைத்திருக்கிறார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள். அதைப் பார்க்கும்போது எனக்குப் பொறாமையே ஏற்பட்டது. அவர் தாத்தா காலத்திலிருந்து புத்தகங்கள் சேகரித்து வருகிறார். திருவள்ளுவர் சொன்னார் எனக்குப் பிறகு என் குடும்பத்தில் யாருக்கும் படிப்பதற்கு ஆர்வமிருக்காது என்று.
அங்கிருந்து கொடுமுடி என்ற இடத்திற்குச் சென்றோம். கிளம்புவதற்கு முன் நல்ல விருந்தளித்தார். 60 அல்லது 70 கிலோ மீட்டர்கள் உள்ள கொடுமுடி என்ற இடத்திற்கு வந்தோம். கோயிலை தரிசித்தப் பிறகு ராணா விடுதிக்குத் திரும்பினோம். அன்று முழுவதும் சுற்றி சுற்றி ஒரே களைப்பாகிவிட்டது. உடம்பு சூடாகி விட்டது. குரோசின் வாங்கி வைத்துக்கொண்டேன். நான் மாத்திரைகளை விழுங்குவதை விரும்ப மாட்டேன். மாத்திரை வாங்கியும் நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அன்று சரியான தூக்கம் இல்லை.
அடுத்த நாள் மாலை நாலரை மணிக்குத்தான் சதாப்தி. எங்கும் சுற்றவில்லை. ரெஸ்ட். சாப்பாடு கூட இட்லி, தயிர்சாதம்தான். ஒரு சின்ன ஓட்டலில். நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் சின்ன ஓட்டல்கள்தான் தென்பட்டன. சில ஓட்டல்களில் சைவம் அசைவம் இரண்டும் சேர்ந்திருந்தன. நாங்கள் எடுத்துக்கொண்டு வந்த பைகளில் புத்தகப்பைதான் ஒரே கனம். சதாப்தியைப் பிடித்து நாங்கள் வீடு வந்துசேர்ந்தபோது இரவு 11.30. சதாப்தியில் தொ.மு.சி ரகுநாதன் எழுதிய பாரதி காலமும் கருத்தும் என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டு வந்தேன். ஒரே தூக்கம்.
நான் இதில் தெரிந்துகொண்டது என்னவென்றால், போகிற இடமெல்லாம் தூக்கமுடியாமல் புத்தகங்கள் வாங்கக் கூடாது. கோயில் போவதென்றால் ஒருநாளைக்கு ஒரு கோயில்தான் போக வேண்டும். சாப்பிடுவது ஜாக்கிரதையாகச் சாப்பிடவேண்டும். தேவையான அளவிற்கு ரெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.
விழாவிற்கு வந்திருந்த மற்ற எழுத்தாள நண்பர்களை பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பின் கீழ் பேட்டி எடுத்தேன். நா விச்வநாதன், அழகிய பெரியவன், ஷாஅ, தேவி பாரதி என்று மொத்தத்தில் நல்ல அனுபவம். பரிசு கொடுத்து சிறப்பித்த மணல்வீடு இலக்கிய அமைப்புக்கு நன்றி பல.

துளி – 62 – அட்டைப்பெட்டிகள் ஆயிரம் கதைகள் சொல்லும்

01.08.2019

அழகியசிங்கர்

போன மாதம் விருட்சம் 110வது இதழ் கொண்டு வந்துவிடலாமென்று நினைத்தேன்.  பின் அவசரப்பட வேண்டாம் என்று தோன்றியது.  சந்தாதாரர்களுக்கு கடிதம் தயார் பண்ணி அனுப்பி உள்ளேன்.  பலர் சந்தாவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்.  109வது இதழ் விருட்சம் ஒருபிரதிதான் உள்ளது.  ஆச்சரியம்.  மிகக் குறைவாக பிரதிகள் அச்சடித்ததால் இந்த நிலை.  இதற்கு முன்னால் எண்ணிக்கையில் அதிகமான பிரதிகள் அச்சடித்து விடுவேன்.  அவை என்னைவிட்டு அகலாமல் இருக்கும்.  
எப்போதும் பேப்பர் கடைகளில் அவற்றைப் போட மாட்டேன்.  அட்டைப் பெட்டியில் கட்டி கட்டி வைத்துவிடுவேன்.  அட்டைப் பெட்டியில் ஒரு மாஜிக் இருக்கிறது.  அட்டைப் பெட்டியைத் திறந்து விருட்சம் இதழைப் பிரித்தால் போதும் ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு கதை சொல்லும். 
சி சு செல்லப்பாவின் புதல்வரை சந்தித்தபோது, எழுத்து இதழ் பிரதிகள் கிடைக்குமா என்று கேட்டேன்.  üநானும் அப்பாவும் ரேர்ந்து எல்லாவற்றையும் பேப்பர் கடையில் போட்டுவிட்டோம்,ý என்றார்.  அன்றிலிருந்து ஒவ்வொரு பேப்பர் கடையாக ஏறி இறங்குகிறேன்.  எழுத்து பிரதி  கண்ணில் தட்டுப்படுகிறதா  என்று பார்க்க.  ஒரு முறை குமரி மலர் ஒரு இதழ் கிடைத்தது திருவல்லிக்கேணி பிளாட்பாரக் கடையில். தேடிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் எழுத்து கிடைக்கவில்லை.
அட்டைப்பெட்டியில் உள்ள விருட்சம் இதழ்கள் பத்திரமாக இருக்கின்றன. எல்லா இதழ்களும் இல்லை.  அதிகமாக அச்சடித்த இதழ்கள் மாத்திரம் பத்திரமாக இருக்கின்றன.  நீங்கள் திறந்து அதைத் தொட்டால் போதும். உங்களைப் பிடித்துக்கொண்டு விடும்.  எதாவது கதை சொல்ல ஆரம்பித்து விடும்.  கவிதையை முணுமுணுக்கும்.  ஆனால் பேப்பர் கடைக்கும் மட்டும் போகாது.  சோர்வடைந்து மக்கிப் போனாலும் சரி.  அதன் குரல் உற்சாகமாக ஒலிக்கும்.  நான் எப்பவாவது அட்டைப் பெட்டியைத் திறந்து ஒரு இதழைப் பிரித்துப் படித்தால் கதை சொல்ல ஆரம்பித்துவிடும்.  ஓ. இப்படியெல்லாம் விருட்சம் வந்திருக்கிறதா என்ற ஆச்சரியம் என்னுள் தென்படும்.
நவீன விருட்சம் சந்தா கட்டியவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு கடிதம் அனுப்பினாலும், அந்த வேண்டுகோளை முகநூலிலும் தெரிவிக்க விரும்புகிறேன். இதோ. 

அன்புடையீர்,

வணக்கம்.

நவீன விருட்சம் 109வது இதழ் கிடைத்திருக்கும்.  நவீன விருட்சம் 31 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் ஒரு சிறுபத்திரிகை.  
தற்போது 110வது இதழ் தயாரித்துக்கொண்டிருக்கிறேன்.  நீங்கள் ஆண்டுச் சந்தாவைப் புதுப்பித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியன் வங்கிக் கணக்கில் ஆண்டுச் சந்தாவாக ரூ.80ஐ சேர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

NAVINA VIRUTCHAM ACCOUNT  
	INDIAN BANK, 
	ASHOKNAGAR BRANCH   
	ACCOUNT No. 462584636
	 IDIB Number. IDIB000A031

நவீன விருட்சம் மாதிரி ஒரு பத்திரிகைக்கு உதவி செய்ய நினைத்தால் இன்னும் சிலரை சந்தாதாரர்களாக மாற்ற முயற்சி செய்யலாம். பணம் கட்டியபிறகு இத்துடன் இணைத்துள்ள கார்டில் உங்கள் முகவரியைத் தெரிவிக்கவும். 

அன்புடன்
அழகியசிங்கர், சீத்தாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ், 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 600 033 செல் எண் : 9444113205
3ஆம் தேதி மணல் வீடு அளிக்கும் அஃக் பரந்தாமன் சிற்றிதழ் பரிசு வாங்குவதற்கு இங்கிருந்து நாளை கிளம்புகிறேன் மனைவியுடன். டாக்டர் பாஸ்கரனும் விருட்சம் குறித்துப் பேச வருகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 119

அழகியசிங்கர்

காந்தி ஆசிர்வசிக்காத குழந்தைகள்

சபரிநாதன்

அட்டனக்கால் போட்டபடி இது என் தாத்தா சொல்லியது:
எனையள்ளி எடுத்துக்கொண்டு ஓடினார் என் தாத்தா
ரயிலடியில் இன்னும் அதிர்ந்துகொண்டிருந்தது தண்டவாளம்
ரயிலோ காந்தியை ரொம்ப தூரம் கட்த்திப் போய்விட்டது
என் தாத்தாவோ ஒரு சர்பத் குடித்துவிட்டு
வந்து கொத்தத்தொடங்கினார் மீதி அம்மிக்கல்லை.

அவர் மட்டும் கொஞ்சம் விரசாய் ஓடியிருந்தால்
அவர் மட்டும் கொஞ்சம் தாமசித்திருந்தால்..
இப்படித்தான் எல்லோருமாய் சேர்ந்து
நாட்டை குட்டிச்சுவராக்கிவிட்டார்கள்.

நன்றி : வால் – சபரிநாதன் – மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல். மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் – தொலைபேசி : 0989460571 பக்கங்கள் : 168 – விலை : ரூ.150

துளி – 61 அந்தக் கல்கண்டும் இந்தக் கல்கண்டும்…

அழகியசிங்கர்

தமிழ் வளர்த்த சான்றோர் என்ற தலைப்பின் கீழ் 24.07.2019 வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் தமிழ்வாணனைப் பற்றி கூட்டம். வவேசுவும், லேனா தமிழ்வாணனும். 

நான் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது (அறுபதுகளில்) எனக்கு கல்கண்டு என்ற பத்திரிகை அறிமுகமாயிற்று.  அதன் ஆசிரியர் தமிழ்வாணன். கறுப்பு கண்ணாடி, தொப்பி அணிந்துகொண்டு பத்திரிகையில் போஸ் கொடுப்பவர்.  துணிவே துணை என்ற தாரக மந்திரத்தை பத்திரிகை மூலம் உச்சரித்துக் கொண்டிருப்பார்.

ஒருமுறை அவர் கிருஷ்ணா குளம் கிரவுண்டில்(சென்னை 1 ல் உள்ளது) பேச வருகிறார் என்று விளம்பரப்படுத்தினார்கள்.  நான் சிறுவன்.  எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன்.  தமிழ்வாணன் கூட்டத்திற்குப் போனேன்.  இப்போது அவர் என்ன பேசினார் என்று ஞாபகமில்லை, எப்படி இருந்தார் என்று ஞாபகமில்லை.  ஆனால் அவர் பேசி முடித்தவுடன், அவர் இறங்கி வரும்போது, என் கையில் உள்ள காகிதத்தில் அவருடைய கையெழுத்தை வாங்கியது ஞாபகத்திலிருக்கிறது.  இப்போது அந்தத் தாள் இல்லை.  

என் மாமாதான் கல்கண்டு பத்திரிகையை அறிமுகப்படுத்தினார்.  ஆனால் குமுதம் வாங்காதே, அது ஆபாசமாக இருக்கும் என்று கூறினார்.  தமிழ்வாணன் பத்திரிகையான கல்கண்டை நான் முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை படிப்பேன். 

எனக்கு துப்பறியும் கதைகள் மீது ஆர்வமிருந்தது.   உயிரே உயிலா என்ற தொடர்கதை அப்போது கல்கண்டு இதழில் வந்திருந்தது.  நான் ஆர்வமாக எடுத்துப் படிப்பேன்.  தமிழ்வாணன் எழுதியது.  

அன்றைய கூட்டத்தில் தமிழ்வாணன் 500 புத்தகங்கள் எழுதியிருக்கிறாரென்ற தகவல் கூறினார்.  அவர் கல்கண்டு பத்திரிகையில் அவர்தான் எல்லாம் எழுதுவார்.  கேள்வி பதில் பகுதி இருக்கும்.  சின்ன சின்ன தகவல்கள் இருக்கும்.  அரோக்கியமாக இருப்பது எப்படி? என்று கட்டுரை எழுதியிருப்பார்.  நூறு வயதுவரை வாழ்வது எப்படி? என்றெல்லாம் எழுதியிருப்பார். ஆனால் அவர் இதயநோயால் இறந்து விட்டார்.  51வயதிலேயே.  நான் அவரைப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் நானும் துப்பறியும் நாடகம் எழுதினேன்.  

அதை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நடித்தோம்.  எல்லோரும் ஆண் பாத்திரங்கள்.  ஒரு பெண் பாத்திரம் கூட கிடையாது.  வில்லியே கிடையாது.  இப்போது நடக்கும் சீரியல்களில் வில்லிகள்தான் அதிகம்.  வில்லன் கிடையாது.  என் நாடகம் அரங்கேறியபோது நிறையா தமாஷ் நடந்தது.  நாடகம் பாதியிலேயே நின்று விட்டது. இந்த நாடகம் எழுதியதுகூட தமிழ்வாணனின் கல்கண்டு படித்ததால்தான்.  

நன்றாக கையெழுத்து வரவேண்டும் என்பதற்காக கோடுபோட்ட நோட்டில் ஒரு பக்கம் எழுதிவந்து பள்ளிக்கூடத்தில் காட்டவேண்டும்.  அப்போது எனக்குத் தோன்றிய துப்பறியும் கதையை (கற்பனையில்) எழுதிக்கொண்டு காட்டுவேன்.  தமிழ்ஆசிரியர் பார்க்காமல் ரைட் போடுவார்.  நான் மர்ம நாவல்கள் எழுதி ராஜேஸ்குமாருடன் போட்டி போட்டிருக்க வேண்டும்.  தவறிப்போய்விட்டது. 

அந்தத் தமிழ்வாணனையும் கல்கண்டையும் என்னால் மறக்க முடியாது.  ஆரம்பத்தில் படிக்கும் பழக்கத்தைத் தூண்டியவர் தமிழ்வாணன்தான்.  ஆனால் அதன் பின் படிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது.  தொடர்கதைகள் பத்திரிகைகளில் படிக்கும் பழக்கமிருந்தது. பட்டம் பூச்சி என்று ஹென்ரி ஷாரியர் தொடர்கதையை விடாமல் குமுதத்தில் படிப்பேன். சாண்டில்யனைப் படிப்பேன்.  கல்கியில் பொன்னியின் செல்வன் படித்து சோர்ந்து விட்டேன்.  ஆனால் ஜெகசிற்பியன, ரெங்கநாயகி தொடர்கதைகளைப் படிப்பேன்.  அப்படி படிப்பதும் மாறி கணையாழி, தீபம் என்று போய்விட்டது.  

இந்தக் கால கட்டத்தில் கல்கண்டு படிப்பதில் ஆர்வம் குறைந்து போய்விட்டது.  அன்றைய கூட்டத்தில் எனக்குத் திரும்பவும் தமிழ்வாணன், கல்கண்டு என்று ஞாபகம் வந்தது.  ஒரு இதழாவது பழைய தமிழ்வாணன் கல்கண்டு இதழை சேகரித்து வைத்துக்கொள்ளாமல் போய்விட்டேன்.  சேகரிக்கும் பழக்கம் இப்போதுதான் வந்துள்ளது.  ஏகப்பட்ட புத்தகங்கள், சிறு பத்திரிகைகள் சேகரிக்கத் தொடங்கி உள்ளேன்.  சமீபத்தில் வந்துள்ள கல்கண்டு இதழை வாங்கிப் பார்த்தேன்.  கல்கண்டு முழுவதும் மாறி விட்டது.  தமிழ்வாணன் இல்லை.  

அதனால் என்ன..



அழகியசிங்கர் 


ஞானக்கூத்தன் மறைந்து 3 ஆண்டுகள் ஓடிவிட்டன.  அவர் நினைவாக அவர் கவிதையை இங்கு வெளிப்படுத்துகிறேன.  

அதனால் என்ன

ஞானக்கூத்தன்

பாடச் சொன்னால் வெட்கப்படுகிறார்கள்
பேசச் சொன்னால் கூச்சப்படுகிறார்கள்
ஆடச் சொன்னால் கோணுகிறார்கள்
நடிக்கச் சொன்னால் தயங்குகிறார்கள்
வரையச் சொன்னால் வராதென்கிறார்கள்
கவிதை வருமா என்றால் உடனே
எண்பது பக்க நோட்டுப் புத்தகம்
இரண்டை எடுத்து நீட்டுகிறார்கள்.

காந்தியைப் பற்றிப் பேச வாய்ப்பு கொடுத்தார்கள்


அழகியசிங்கர்


நான் காந்தியை என்னுடைய கல்லூரி நாட்களிலேயே விட்டுவிட்டேன். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும். அவருடைய சுயசரிதம்தான் படித்த புத்தகம். ஆனால் காந்தியைப் பற்றி எல்லாப் புத்தகங்களையும் வாங்கி வைத்துக்கொள்வேன். அதேபோல் பாரதியார். காணும் புத்தகங்களை வாங்கி வாங்கி வைத்துவிடுவேன். இப்படி வாங்கும் புத்தகங்களைத் தொட்டுப் படிக்க மாட்டேன். அப்படியொரு நல்ல பழக்கம் எனக்கு.


கடந்த 17ஆம் தேதி காந்தி நிலையத்திலிருந்து காந்தியைப் பற்றிப் பேச ஒரு அழைப்பு. 1 மணி நேரம் பேச வேண்டுமென்று சொல்லிவிட்டார்கள்.. என்னால் ஒரு மணி நேரம் பேச முடியுமா? காந்தி புத்தகத்தைப் படித்துவிட்டு. இது பெரிய சவால். நான் பெரும்பாலான புத்தகங்களைப் பற்றிப் பேச வேண்டுமானால் 5 நிமிடம் பேச எடுத்துக்கொள்ள முடியும். உண்மையில் 5 நிமிடம் போதும் ஒரு புத்தகம் பற்றிப் பேச.


அதனால் காந்தியைப் பற்றிப் பேச ஒப்புக்கொண்ட பிறகு, புத்தகத்தை அப்படியே ஞாபகத்தில் வைத்துக்கொண்டு சொல்ல முடியாது என்று தோன்றியது. குறிப்புகளை எழுதி வைத்துக்கொண்டு சிலர் பேசுவார். அதுமாதிரியும் எனக்குத் திறமை இல்லை. வேற வழியில்லை கட்டுரை தயாரித்துப் பேசி விடலாமென்று நினைத்தேன். ஆனால் கட்டுரை தயாரிக்கவும் நேரமில்லை. 5 அல்லது 6 பக்கங்கள் டைப் அடித்து விட்டேன். அது போதாது ஒரு மணி நேரம் பேச. வேற வழியில்லை புத்தகத்தைப் பார்த்துதான் படிக்க வேண்டும். பார்த்துப் படிக்கும்போது பார்வையாளர்களைப் பார்த்துப் பார்த்துப் படிக்க வேண்டும். அப்படிப் படித்தால்தான் சரியாக வரும். இல்லாவிட்டால் மெஷின் மாதிரி ஒப்பிக்கிற மாதிரி ஆகிவிடும். நான் பார்த்துப் பார்த்துப் பேசினேன். ஒரு மணி நேரத்திற்கு.


நான் எடுத்துக்கொண்ட புத்தகம் 21ஆம் நூற்றாண்டில் காந்தி என்ற புத்தகம். எழுதிய ஆசிரியர் காந்தியவாதி லா சு ரங்கராஜன். இவர் காந்தியின் ஆதாரபூர்வமான எழுத்துக்கள், பேச்சுக்கள் யாவற்றையும் திரட்டித் தக்க அடிக்குறிப்புகளுடன் காலவாரியாகத் தொகுத்து நூறு தொகுதிகள் கொண்ட நூல் வரிசையைப் பதிப்பிக்கும் தேசிய முக்கயத்துவம் வாய்ந்த மகத்தான திட்டத்தை மேற்கொள்ளும் அதிகாரியாக பணிபுரிந்தார். அதைப் படித்தபோது காந்தி ரொம்பவும் பிடிவாதக்காரராக இருந்திருப்பார் என்று தோன்றியது. முதல் சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ளாமல் கல்கத்தா போய்விட்டார் காந்தி. அங்கேயும் கலந்துகொள்ள வில்லை.


அங்கேயும் அவர் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளவில்லை. உபவாசம் இருந்தார். ஏன்? அதேமாதிரி தேசிய கொடியில் ராட்டை சின்னம் வரவேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார். மற்ற தலைவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் தேசிய கொடிக்கு மரியாதை தர விரும்பவில்லை காந்தி.


அதேபோல் தேசிய சீதம். வந்தே மாதரம்தான் தேசிய கீதமாக ஒலிக்கப் படவேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார். தாகூரின் ஜனகனமன ஒப்புக்கொள்ளவில்லை. கடைசி வரை தேசியகீதத்திற்கும் மரியாதைத் தரவில்லை. இதெல்லாம் லா சு ரவின் புத்தகத்தில் படித்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உடனே எனக்குத் தோன்றியது காந்தியின் இன்னும் சில புத்தகங்களைப் படிக்கவேண்டுமென்று.

வண்ணதாசனும் நானும் ஒளிப்பதிவு 1,2,3…

அழகியசிங்கர்

வண்ணதாசனும் நானும் என்ற தலைப்பில் எழுத்தாளர் தேவகோட்டை வ மூர்த்தி 20.07.2019 ஆம் தேதி விருட்சம் இலக்கியச் சந்திப்பில் உரை நிகழ்த்தினார். அப்போது நடந்த ஒளிப்பதிவை இங்கே அளிக்கிறேன்.


www.youtube.com/watch?v=VhrAI1Fx1rk – 1

www.youtube.com/watch?v=Q0gszMkNqBA – 2

www.youtube.com/watch?v=g061d3lYsNA -3

துளி : 60 – சிற்றிதழுக்கான அஃக் பரந்தாமன் நினைவு இலக்கிய விருது….

அழகியசிங்கர்

இந்த முறை சிற்றிதழுக்கான அஃக் பரந்தாமன் விருது நவீன விருட்சத்திற்குக் கிடைத்துள்ளது.  மணல் வீடு ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் இதைச் சொன்னபோது என்னால் நம்ப முடியாமலிருந்தது.

1988ஆம் ஆண்டு ஜøலைமாதம்தான் நவீன விருட்சம் முதல் இதழ் வெளிவந்தது.  கிட்டத்தட்ட 31ஆண்டுகள்.  ஆரம்பத்தில் விருட்சமாகவும் அதன் பின் நவீன விருட்சமாகவும் மாறிவிட்டது.  தற்போது 109வது இதழ் வெளிவந்துள்ளது.  

நவீன விருட்சம் பத்திரிகையில் எழுதாத எழுத்தாளர்களே இல்லை.  முன்பின் பார்த்திராத எத்தனையோ படைப்பாளிகளின் படைப்புகள் நவீன விருட்சம் இதழில் பிரசுரமாகி உள்ளன.

ஞானக்கூத்தனின் பெரும்பாலான கவிதைகள் நவீன விருட்சத்தில்தான் வந்துள்ளன.  ஞானக்கூத்தன் மட்டுமல்ல.  அசோகமித்திரன், பிரமிள், வெங்கட்சாமிநாதன், ஆனந்த், காளி-தாஸ், ரா ஸ்ரீனிவாஸன், வைத்தியநாதன், ஆர் ராஜகோபாலன் என்று பலர் படைப்புகள் வெளிவந்துள்ளன. 

இந்தப் பத்திரிகையின் மூலம் நான் பல படைப்பாள நண்பர்களை சம்பாதித்துக் கொண்டேன்.  ஏன் எழுதக் கற்றுக்கொண்டேன். படிக்கக் கற்றுக்கொண்டேன்.  படைப்புகளை சரியாகக் கணிக்கக் கற்றுக்கொண்டேன். 

என்னுடைய திட்டம்.  ஒரு இதழுக்கு ஒரு கவிதை அல்லது ஒரு கதை அல்லது ஒரு கட்டுரை சிறப்பாக வந்திருந்தால் போதும். பத்திரிகைக் கொண்டு வருகிற நோக்கம் முடிந்து விட்டது என்று நினைத்தேன்.

அதிகப் பக்கங்களுடன் இதழைக் கொண்டு வரக்கூடாது என்பது என் நோக்கம். உண்மையில் விலை குறைவாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தால் அதிகப் பக்கங்கள் போகாமல் பார்த்துக்கொண்டேன்.  

1988ஆம் ஆண்டு வெளிவந்த விருட்சம் இதழ் 16 பக்கங்கள்தான்.  ஒன்றிலிருந்து 16 பக்கங்கள் வரை கவிதைகள்.  இரண்டாவது மூன்றாவது இதழிலிருந்து பக்கங்கள் கூடிக்கொண்டே போயிற்று.  108வது இதழ் 108 பக்கங்கள்.  109வது இதழ் 100 பக்கங்கள்.

100 பக்கங்கள் ஆனாலும் விலை ரூ.20தான். மாதம் ஒரு முறை வரும் இலக்கிய வேல் என்ற பத்திரிகை தவிர்க்க இயலாத காரணங்களால் தற்காலிகமாக நின்று விட்டது என்ற அறிவிப்பை இந்த மாதம் வெளியிட்டுள்ளது. இப்படித்தான் நவீன விருட்சம் வரும் காலத்திலிருந்து பல சிறுபத்திரிகைகள் நின்று விட்டன. அந்த இடத்தை வேறுசில பத்திரிகைகள் தொடரத் தவரவில்லை.

ஒருமுறை விருட்சத்தை நிறுத்தி விடலாமென்று நினைத்தேன். அப்போது பிரமிள்,  ‘நிறுத்தாதீர்கள்.  அதுதான் உங்களுக்குப் பெயர் கொடுக்கும்,’ என்று சொன்னார்.  விருட்சம் ஆரம்பத்தில், ஞானக்கூத்தன், ‘உங்கள் கைக்கு தங்கக்காப்பு போடவேண்டும்,’ என்று ஒரு மாலை வேளையில் கடற்கரையில் கூடியிருந்தபோது குறிப்பிட்டார். உயிர்மை புக் ஸ்டாலில்  சுஜாதா கையில் விருட்சம் பத்திரிகையைப் பார்ப்பதுபோல் ஒரு புகைப்படம் உண்டு.  இது உயிரிமை பத்திரிகையில் பிரசுரமாகியிருக்கிறது.   ஒரு கல்கி தொடர்கதையில் சுஜாதா விருட்சத்தைப் பற்றி கணேஷ், வசந்த் பேசிக்கொள்வதுபோல் ஒரு உரையாடல் வரும்.  சிறந்த சிறுபத்திரிகை என்று சுஜாதாவும் அசோகமித்திரனும் சொல்லியிருக்கிறார்கள்.  ம ந ராமசாமி என்ற எழுத்தாளர் விருட்சம் எழுத்து பத்திரிகையை ஞாபகப்படுத்துகிறது என்று கடிதம் எழுதி உள்ளார்.  

அஃக் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த பரந்தாமன் பேரில் இந்த விருது விருட்சத்திற்கு அளிக்கப்படுகிறது.  சிறுபத்திரிகையின் முன்னோடி அஃக் பத்திரிகை.  கலை நுணுக்கத்துடன் தயாரிக்கப்பட்ட அஃக் பத்திரிகை அந்தக் காலத்தில் சிறுபத்திரிகை உலகில் பெரிய பரபரப்பை உண்டாக்கியது.  அந்த அஃக் பத்திரிகையின் பேரில் இந்தப் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.  இதை அளிக்கும்  
மணல் வீடு தேர்வுக்குழுவினருக்கு நன்றி.  
மணல் வீடு மாதிரி ஒரு இதழ் என்னால் கொண்டு வர  முடியாது. ஏன் கற்பனை கூட செய்ய முடியாது?    அன்றைய நிகழ்வில் கலந்து கொள்கிற எழுத்தாள நண்பர்களுக்கு என் நன்றி.  அஃக் விருது வழங்குதல் தவிர மூன்று புத்தகங்களின் வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது.