இரண்டாம் நாள் வாசிப்னுபவம் (03.09.2019)

அழகியசிங்கர்

என் பெண்  வீட்டிற்குப் போயிருந்தேன்.  காலையிலிருந்து அங்குதான் இருந்தேன்.  படிக்க வேண்டுமென்ற ஒரு தமிழ் புத்தகத்தை எடுத்துக்கொண்டு போக மறந்து விட்டேன்.  
பெண் வீட்டில் எதாவது புத்தகம் இருக்கிறதா படிக்க என்று தேட வேண்டும் போலிருந்தது.  அமேசான் பையர் வைத்திருந்தேன்.  அதில் சில ஆங்கிலப் புத்தகங்களை கின்டலில் படிக்க வைத்திருந்தேன்.  
ஆங்கிலப் புத்தகத்தை எடுத்துப் படிக்கலாமென்று தோன்றியது.  அந்தப் புத்தகம் பெயர் The Perfect Murder

ரஸ்கின் பான்ட் தொகுத்தது. 7 கதைகள் அடங்கிய தொகுப்பு. கின்டலில் இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்க 6 மணிநேரத்திற்கு மேல் ஆகுமென்று கின்டலில் குறிப்பிடப்பட்டிருந்தது. என் ஸ்பீடுக்கு எட்டு மணி நேரம் மேலே ஆகும். முதல் கதை 22 பக்கம். படித்து முடிக்க 90 நிமிடங்கள் ஆகிவிட்டன.
நீங்கள் ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டுமென்று முடிவு எடுத்துவிட்டால் நேரமெல்லாம் பார்க்கக் கூடாது. ஆனால் ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவதைப் படிக்க வேண்டுமென்று ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வரவேண்டும்.
என்னைச் சுற்றி பலர் புத்தகமே படிப்பதில்லை. அவர்கள் சொல்கிற காரணம் நேரம் கிடைப்பதில்லை. ஆனால் நேரம் இருக்கிறது. அவர்களுக்கு மனமில்லை என்பதுதான் காரணம்.
ஒரு ஐந்து நிமிடத்தில் ஒரு புத்தகத்தைத் திறந்து வைத்துப் படிக்கத் தொடங்கினால் சில பக்கங்கள் படித்துவிடலாம். மனசு வேண்டும். சில நிமிடத்துளிகளில் நமக்குப் பிடித்தப் பாடலை கேட்டு விடலாம். எல்லாவற்றுக்கும் மனசு வேண்டும். இப்படி திட்டம் தீட்டிக்கொண்டு படிக்க ஆரம்பித்தால் நாம் அதிகமான புத்தகங்களைப் படித்துவிடலாம். ஏன் இதுவரை எனக்குத் தோன்றவில்லை என்பது தெரியவில்லை.
தி பர்வக்ட் மர்டர் என்ற கதையை ஸ்டேசி அமோனிர் என்பவர் எழுதியிருக்கிறார். இது குறுநாவல். இதுமாதிரி 7 பேர்கள் எழுதிய குறுநாவல்களை ரஸ்கின் பான்ட் தொகுத்திருக்கிறார். மர்ம குறுநாவல்களைப் படிப்பதில் ரஸ்கின் பான்ட்டிற்கு அலாதியான ஈடுபாடு என்று குறிப்பிடுகிறார். அவரே அது மாதிரி கதைகள் எழுதி உள்ளார்.
ரஸ்கின் பான்ட் இதுவரை 120 புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், தொகுப்பு நூல்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்று எழுதித் தள்ளியிருக்கிறார். தற்போது முசோரியில் வசித்து வருகிறார்.
பர்வக்ட் மர்டர் சாத்தியமா என்று இரண்டு சகோதரர்கள் பேசிக்கொள்கிறார்கள். அதாவது கொலை என்று தெரியாமல் மரணம் நிகழ்ந்ததுபோல் எல்லோருக்கும் தோன்ற வேண்டுமாம். பால் என்கிற இளைய சகோதரரும். ஹென்றி என்ற மூத்த சகோதரரும் ஒரு ஹோட்டல் அறையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு முடிவுக்கு வருகிறார்கள். நெருக்கமாக ஒருவருடன் வசித்து வந்தால்தான் இந்தக் கொலை சாத்தியம் என்ற முடிவுக்கு வருகிறார்கள். கணவன் என்றால் மனைவியை யாரும் சந்தேகப்படாதவாறு கொல்வது எளிது. அதேபோல் மனைவியும் கணவனைக் கொள்வது.
இந்த இரு சகோதரர்களுக்கும் வருமானம் எதுவும் பெரிதாக இல்லை. ஹென்றி என்ற மூத்த சகோதரர் திருமணம் ஆனவர். 4 குழந்தைகள். பால் என்பவருக்குத் திருமணம் செய்துகொள்ளாதவர்.
சொற்ப வருமானம் அவர்களுக்குப் போதவில்லை.
தூரத்து சொந்தமாக அவருக்கு ஒரு மாமா இருக்கிறார். ஏகப்பட்ட பணம். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. மாமாவின் மனைவி கிறுக்குத்தனமாக நடந்துகொள்பவள். சகோதரர்கள் இருவரும். பணத்துக்காக மாமாவை அணுகுவதை விட மாமியை அணுகுவார்கள். கிறுக்குத்தனம் இருந்தாலும் மாமாவிற்குத் தெரியாமல் இருவருக்கும் பணம் கொடுத்து உதவுவார். வயது காரணமாக மாமா இறந்து விடுகிறார் அவருடைய சொத்து முழுவதும் பொதுவாக ஒரு அறக்கட்டளை மூலம் எழுதி வைத்துவிடுவார். ஆனால் இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண்டில் 8000லிருந்து 10000யிரம் பிராங்க் பணம் கிடைக்குமென்றும் அதுவும் மாமி ரோஸலி இறந்தபிறகுதான் கிடைக்குமென்று எழுதி வைத்துவிடுகிறார். ரோஸலிக்கு 82 வயது. ரொம்பவும் பலவீனமாக இருப்பவர்.
சகோதரர்கள் இருவரும் எப்போது ரோஸலி மண்டையைப் போடுவாள் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் இருவரும் மாமியைப் பார்த்து அவ்வப்போது பணம் கேட்பார்கள். ரோஸலியும் அவர்கள் தேவையை அறிந்து அவர் கேட்ட தொகையைவிட மிகக் குறைவாக வேண்டா வெறுப்பாகப் பணம் கொடுத்து உதவுவாள்.
பால் என்ற இளைய சகோதரர் ரோஸலியுடம் வசிக்கத் தொடங்கினார். இது ஹென்றி என்ற மூத்த சகோதரருக்குப் பிடிக்கவில்லை. இப்போது அவருக்கும் பால் மீது, ரோஸலிமீது என்று அவருக்குப் பொறாமை ஏற்படுகிறது.
வெகுநாட்கள் கழித்துத் திரும்பவும் இரண்டு சகோதரர்களும் முன்பு சந்தித்த அதே ஓட்டலில் சந்திக்கிறார்கள். மாமி பக்கத்தில் வசித்து வந்தாலும் அதனால் பெரிதும் பயனில்லை என்கிறார் பால். மாமியும் வயது அதிகமாக இருந்தாலும், அவ்வளவு எளிதாக மரணம் அவளுக்கு நிகழவில்லை இது குறித்து சகோதரர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது மாமியை கொலை செய்துவிடலாம் என்று அவர்களுக்குத் தோன்றுகிறது. நெருக்கமாக இருக்கிற பால்தான் இதைச் செய்ய முடியும் என்று ஹென்றி குறிப்பிடுகிறார்.
இருவரும் உணவில் விஷம் வைத்துக் கொல்வது என்ற முடிவுக்கு வருகிறார்கள். மாமியின் சமையல்காரி ஒருநாள் மீன் உணவும் இன்னொருநாள். இரண்டு முட்டைகளை வைத்து உணவை சமைத்துக் கொடுக்கிறாள். முட்டைகளை வைத்து சொய்யும் உணவில்தான் விஷத்தைக் கலக்க வேண்டுமென்று பால் முடிவு செய்கிறான். அதேபோல் ஒரு நாள் கலந்து விடுகிறான்.
எதிர்பாராத செய்தி தினசரியில் வெளியாகிறருது. பால் இறந்து விட்டதாக. செய்தியைப் படித்த ஹென்றிக்கு அதிர்ச்சி. ஆம்லெட்டை சாப்பிட்டதால் வயிற்றில் கடுமையான வலி. இதனால் பால் தவிர வேற யாருக்கும் எந்தப் பாதிப்புமில்லை. அன்று முட்டையில் கலந்த உணவை உண்ண வேண்டிய வழக்கம். திடீரென்று வழக்கத்தை மீறி மாமி ரோஸ்லி மீன் உணவை உட்கொள்கிறாள். பால் பசியால் அந்த முட்டையில் விஷம் வைத்திருப்பது தெரியாமல் சாப்பிட்டு விடுகிறான்.
ஹென்றிக்கு பெரிய வருத்தம். ஆனால் இந்த மரணத்தினால் ஹென்றிக்குத்தான் பலன் அதிகம். அவன் இளைய சகோதரன் பால் இறந்துவிட்டதால் அவனுக்குத்தான ரோஸ்லி இறந்தபிறகு கிடைக்கப்போகிறது. ரோஸ்லி எப்போது மரணம் அடையப்போகிறாள் என்று காத்திருக்க வேண்டும். ஹென்றி திட்டமிட்டு அவனுடைய சகோதரன் பாலை விஷம் வைத்துக் கொன்று விட்டதாக எல்லோரும் முணுமுணுத்துக்கொண்டிருந்தார்கள்.
கச்சிதமாக 23 பக்கங்களில் எழுதி முடிக்கப்பட்ட இந்த மர்ம குறுநாவலை விறுவிறுவென்று படிக்க முடிந்தது.

இதுவரை இந்தக் குழுவில் சேராதவர் இப்போது கூட இந்த வாசிக்க வாசிக்க குழுவில் சேர்த்து ஒவ்வொரு நாளும் படிக்கும் புத்தகத்தைப் பற்றி குறிப்பிடலாம். vasipomvasipom.blogspot.com 

போய் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

ஆத்மாநாமை பார்க்கும்போது பாவமாகத் தோன்றியது…

அழகியசிங்கர்

சமீபத்தில் தடம் என்ற இதழ் இனி வரப்போவதில்லை என்று அறிவிப்பை வெளியிட்டிருந்தது.  அந்தப் பத்திரிகையைப் பார்த்தபோது சான்úஸ இல்லை என்று தோன்றியது. 130 பக்கங்கள் கொண்ட பத்திரிகை.  ஆர்ட் தாளில் அட்டகாசமான படங்களுடன் தயாரிக்கப்பட்டிருந்தது.  விளம்பரம் எதுவுமில்லை. விருட்சத்தை எடுத்துக் கொள்ளுங்கள் மலர் என்ற சாதாரண தாளில்தான் தயாரிக்கப்படுகிறது.  அதற்கே விருட்சம் ஒரு இதழ் விலையைவிட அதிகமாகத் தர வேண்டி உள்ளது. 

தடம் பத்திரிகை விலை ரூ.50 என்பது மிக மிகக் குறைவு. குறைந்தபட்சம் ரூ.300வது ஆகும் அந்தப் பத்திரிகையைத் தயாரிக்க.  எத்தனைப் பேர்களின் உழைப்பு அந்தப் பத்திரிகை தயாரிக்க வேண்டி உள்ளது என்று நினைக்கும்போது, அது நின்று போவது தவிர்க்க முடியாதது. மேலும் கட்டுரை கதை எழுதுபவர்களுக்குச் சன்மானம் வேறு கொடுத்திருக்கிறார்கள்.  

ஒரு சிலர்தான் தொடர்ந்து எழுதுகிறார்கள்.  ஒரு சிலருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளை அதன் மீது வைக்கலாம்.  எல்லாப் பத்திரிகைகளிலும் ஒரு சில எழுத்தாளர்கள்தான் தொடர்ந்து எழுதுவார்கள்.  சிலபேர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது.  அதனால் ஒரு பத்திரிகையை நிந்திப்பது சரியில்லை என்று எனக்குப் படுகிறது. 

ஒருமுறை காலச்சுவடு இலக்கிய மலர் சுந்தர ராமசாமியால் கொண்டு வரப்பட்டபோது, ஐராவதம், நாகர்கோவில் நவாப் என்று சுந்தரராமசாமியைக் கிண்டல் செய்தார்.  ஆனால் உண்மையில் ஐராவதம் அந்த மலரில் எழுதியிருந்தால் அதுமாதிரி சொல்லியிருக்க மாட்டார்.  

சில எழுத்தாளர்களுக்கு ஒரு ராசி இருக்கும் எந்தப் புதுப் பத்திரிகைûயாக இருந்தாலும் அவர்கள் பெயர் வந்துவிடும்.  சில எழுத்தாளர்களுக்கு என்ன முயற்சி செய்தாலும் ஒரு பிட் எழுத்துகூட பிரசுரமாகாது.  இது உலக நியதி.  ஏன் இப்படி நடக்கிறது என்று யாராலும் கேள்வி கேட்கமுடியாது.

3ஆண்டுகளில் வெளிவந்த தடம் பத்திரிகையில் பல எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமலில்லை. சிலருக்கோ கிடைக்கவே இல்லை.  

**********

இந்த முறை நவீன விருட்சத்தை விலை கொடுத்து வாங்குபவர்களுக்குத்தான் கொடுப்பது என்று முடிவு செய்தேன்.  விலை ரூ.20 தான்.  மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு சரவணபவன் ஹோட்டலில் ஒரு காப்பி விலை ரூ.30.  ஏன் மங்களாம்பிகா என்ற ஹோட்டலில் ஒரு காப்பி விலை ரூ.27.  ஒரு நவீன விருட்சம் இதழை விட ரூ10 அல்லது ரூ.7 அதிகம்.   இலவசமாகத் தரக்கூடாது என்ற என் எண்ணம் ஆச்சரியத்தைக் கொடுத்தது. இந்தப் பத்திரிகையை வாங்குவார் என்று நம்பிய ஒரு இலக்கிய நண்பர் வாங்கவே இல்லை.  சிறிது நகைக்கவும் செய்தார்.  நேற்று ஒருவர் வீட்டிற்குச் சென்று சில புத்தகங்களைக் கொடுத்தேன்.  (விற்பனைக்குத்தான்).  நவீன விருட்சத்தை வாங்கிக்கொள்ள முடியுமா என்று கேட்டேன்.  அவர் மறுத்து விட்டார்.  இப்போது படிக்க முடியாது என்று சொல்லி விட்டார்.  என்னடா இது இருபது ரூபாய்தானே என்று தோன்றியது.   அடுத்த இதழ் எப்போது வருமென்று தெரியாது.   நித்திய கண்டம் பூர்ண ஆயுசுதான் இதுமாதிரி பத்திரிகைகள் எல்லாம்.   இதைப் படிக்க முடியாது என்கிறாரே?  ஆனால் முகம் தெரியாதவர்கள் அறிமுகம் ஆகாதவர்கள் பத்திரிகையை வாங்குகிறார்கள்.  இதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை.  அடுத்த முறை அவரைப் பார்க்கும்போது, இவர் என்னுடைய நண்பர், என் பத்திரிகையை வாங்க விரும்பவில்லை என்றுதான் பார்ப்பேன்.  வேற வழி இல்லை.  

சனிக்கிழமை நடந்த ஒரு இலக்கிய அரங்கில் வாசிப்பை முன்நிறுத்தி நடந்தது.   அங்கு சிறுபத்திரிகை நடத்தும் நண்பரொருவர் இலவசமாக அவருடைய இதழை (ஜøன் 2019ல் வெளிவந்த இதழ்) கொடுத்துக்கொண்டிருந்தார்.   என்னடா இது என்று தோன்றியது.  நான் மேடையில் என்னுடைய சிறுபத்திரிகையை இலவசமாகக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னது அபஸ்வரமாகப் பட்டது. யாரும் ரசித்திருக்க மாட்டார்கள்.

நான் ஒரு பழைய கதையைச் சொல்ல விரும்புகிறேன்.  ஆத்மாநாம் இலக்கு என்ற இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.  கையில் அப்போது அச்சாகியிருந்த ழ என்ற இதழ்.  எல்லோருக்கும் இலவசமாகக் கொடுத்துக்கொண்டிருந்தார்.  அவரிடமிருந்து பத்திரிகை வாங்கியவர்கள் யாரும் பைசா எதுவும் கொடுக்கவில்லை. என்னமோ தெரியவில்லை அப்போது அவரைப் பார்க்கும்போது எனக்குப் பாவமாகத் தோன்றியது.   நானும் இப்படி விருட்சத்தை இலவசமாகக் கொடுத்தபோது சிலருக்குப் பாவமாகத்தான் தோன்றியிருப்பேன். 

தயவுசெய்து புத்தகத்தை மட்டும் இரவல் கேட்காதீர்கள்….

அழகியசிங்கர்

நான் ஒரு புத்தக விரும்பி.  எங்குப் பார்த்தாலும் புத்தகம் வாங்கி விடுவேன்.  பெரும்பாலும் பிளாட்பாரத்தில் கிடைக்கும் புத்தகங்களை வாங்கிக் குவித்துவிடுவேன்.  அதே சமயத்தில் பதிப்பகத்திற்கும் சென்று புது புத்தகங்களை வாங்குவேன்.

இப்படி நான் புத்தகங்களை வாங்கி சேர்ப்பதில்தான் எனக்கு ஆபத்தாக இருக்கிறது.  சிலர் என்னிடம் புத்தகம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள்.  எனக்குப் பெரிய மனது கிடையாது.  அவர்களுக்குப் புத்தகங்களைக் கொடுத்துவிட்டு சும்மா இருக்க. 

நான் எத்தனையோ சிரமப்பட்டு புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.  திருவல்லிக்கேணி பிளாட்பாரத்திலிருந்து அசோக் நகர் பேப்பர் கடை வரைக்கும். பங்களூர் சென்றால் ப்ளாசம்ஸ் போய்ப் புத்தகங்கள் வாங்கி வருகிறேன்.  என் மனைவி என்னுடன் வரும்போது புத்தகம் எதுவும் வாங்கக் கூடாது என்று கட்டளை இடுவாள்.  புத்தகக் காட்சி வந்தால் இன்னும் குதூகலமாகி விடுவேன்.  தேடித்தேடிப் போய் புத்தகங்கள் வாங்குவேன்.

நான் புத்தகமும் அச்சிடுகிறேன்.  என் புத்தகங்களையும் விற்கிறேன்.  நான் விற்பதை விட வாங்கி சேகரிக்கும் புத்தகங்கள் அதிகம். நான் புத்தகம் வாங்குவதைக் கண்டு ஒரு குற்ற உணர்ச்சி.  ஒரு நண்பரிடம் இதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.  üநீங்கள் புத்தகம்தான் வாங்கி சேகரிக்கிறீங்க..பணம் சேர்க்கவில்லையே?ý என்று என் புத்தகம் சேகரிப்பதற்கு ஆதரவு அளித்தார்.

நான் புத்தகம் வாங்குவதோடல்லாமல் படிக்கவும் செய்கிறேன். மிக மிகக் குறைவான பக்கங்கள் மட்டும்.  நான் படிக்கிற புத்தகங்கள் சில நாட்களில் மறந்தும் விடுகிறது.   இப்படி எத்தனையோ புத்தகங்கள் படித்தும் மறந்து விடுகிறது.  அதனால்தான் அதைப் பற்றி எதாவது எழுதிப் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறேன்   எழுதவும் செய்கிறேன்.  

நான் இங்குச் சொல்ல வருகிற விஷயம் வேறு.  என்னிடம் புத்தகம் கேட்டு வருபவர்களிடம்தான் எனக்குக் கவலை.   ஏன் இரவல் கேட்கிறார்கள்?  அவர்களும் புத்தகம் வாங்கலாமே என்று எனக்குப் படுகிறது.  

நான் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது தி ஜானகிராமனின் மரப்பசு என்ற புத்தகத்தை வாங்கிப் படித்து முடித்துவிட்டேன்.  உண்மையில் திருவல்லிக்கேணியில் உள்ள மீனாட்சி புத்தக நிலையத்தில் அந்தப் புத்தகத்தை வாங்கினேன்.  நான் வாங்கிய ஆண்டு 1978 ஆம் ஆண்டாக இருக்குமென்று நினைக்கிறேன். எப்போது படித்து முடித்தேன் என்பது தெரியாது.  ஆனால் இதைப் பற்றி வங்கியில் பணிபுரிகிற இலக்கிய நண்பரிடம் பகிர்ந்து கொண்டேன்.  வந்தது வினை.  அவர் தானும் படிக்கப் புத்தகத்தைக் கேட்டார். வந்தது வினை.  உடனே நான் அவரும் படிக்கட்டும் என்று கொடுத்து விட்டேன்.  

        நான் இப்படி ஒரு புத்தகத்தை ஒருவருக்குக் கொடுத்துவிட்டால், என் மனம் பரபரக்கும்.  எப்போது அவரிடம் கேட்பது என் புத்தகத்தை என்று யோஜனை போய்க் கொண்டிருக்கும்.

வாங்கியவரும் எப்போது படித்துவிட்டுக் கொடுப்பார் என்று சொல்ல மாட்டார்.  நானும் அவரிடம் அந்தப் புத்தகத்தைப் பற்றி கேட்பதற்கு சங்கோஜப்படுவேன்.  ஒருவழியாகத் தயங்கித் தயங்கி அவரிடம் என் புத்தகத்தைக் கேட்டேன்.  அவரும் அந்தப் புத்தகத்தை இன்னொருவரிடம் படிப்பதற்குக் கொடுத்துவிட்டார்.   

நான் பலமுறை கேட்டு அலுத்து விட்டேன்.  ஒரு வழியாக மறந்தும் விட்டேன்.  இதுமாதிரி இன்னும் பலரிடம் நான் கொடுத்தப் புத்தகங்கள் திரும்பியே வந்ததில்லை.  படிக்கிறேன் என்று வாங்கிக் கொள்பவர்கள் தங்களுடைய புத்தகமாக அதை மாற்றிக்கொண்டு விடுகிறார்கள்.  கேட்டால் துச்சமாகப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.  கேட்டதே தப்பான விஷயமாக எடுத்துக்கொண்டு விடுகிறார்கள்.

அந்த நண்பரிடம் கொடுத்தப்புத்தகம் ஒரு வழியாக என்னிடம் வந்து சேர்ந்தது.  திரும்பி வருவதற்கு ஒரு வருடம் மேல் ஆகிவிட்டது.புத்தகம் கிடைத்துவிட்டதே என்ற மகிழ்ச்சியில் புத்தகத்தைப் பார்த்தேன்.  நான் கொடுத்த புது புத்தகம் அட்டை நாசமாகி இருந்தது.  உள்ளே பக்கங்கள் எல்லாம் தாறுமாறாக இருந்தன.   இரவல் வாங்கிப் படித்தவர்கள் புத்தகத்தைத் திருப்பிக்கொடுத்து எனக்குத் தண்டனையே கொடுத்து விட்டார்கள்.

நான் புத்தகங்களை இரவல் வாங்குவதையே விரும்ப மாட்டேன்.  கிடைக்காத புத்தகம் என்றால் ஜெராக்ஸ் எடுத்துக்கொள்வேன்.  நான் ரொம்பவும் பயப்படுவது என்னிடம் புத்தகம் இரவல் வாங்குபவரிடம்தான்.  இரவல் வாங்குபவர்கள் எல்லோரும் சேர்ந்து புத்தகத்தை விலை கொடுத்து வாங்கினால் புத்தகம் பதிப்பித்தவர்கள் மகிழ்வார்கள்.  

ஏன் இதை எழுதுகிறேன் என்றால் என் லைப்பரரியிலிருந்து மரப்பசு புத்தகத்தைத் திரும்பவும் பார்த்தபோது இந்த எண்ணம் ஏற்பட்டதால்தான்.   இந்தப் புத்தகம் வாங்கி 41 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்தப் புத்தகமாவது மீண்டு வந்தது.  இன்னும் எத்தனையோ புத்தகங்கள் மீண்டே வரவில்லை. 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 121



அழகியசிங்கர்  

மாலை – காலியிடம்


அபி

உண்மை

தன் பழைய இடத்துக்குத்

திரும்பி வந்து விட்டது

எப்போதும் காலியாயிருக்கும் இடம்

அது இல்லாத இடம் எது

என்பது பெரியோர் வாதம்.

வாதம் தெரியாமல்

எவர் பேச்சையும் கவனிக்காமல்

இதையே கவனித்திருக்க நேர்கிறது,

திரும்புவதை, திரும்புவதை மட்டும்.

புழுதிப் படலத்தோடு மிதந்துபோகும்

இடைச்சிறுவர்கள்

பசியின் பார்வையில் எரியும் விறகு

கடைசி மஞ்சள் கிரணத்தின்

தயங்கிய மூச்சு

–எதுவாயினும்

என்மீது பட்டவுடன்

விலகிப் போகின்றன, கவனம் கவராமல்.

இடம் இல்லாதிருந்ததில்

இடம் பரவிக்கொண்டது,

காலியிடம்

வாசலில் தொடங்கி

வானம் அடங்கி

தான் இன்றி இருண்டு கிடக்கும்

மனசின் வெளிவரை

எங்கும்

காலியிடம் காலியிடம்

நன்றி : அபி கவிதைகள் – கலைஞன் பதிப்பகம், 19 கண்ணதாசன் சாலை. தி நகர், சென்னை 17 – பக்கங்கள் : 242 – விலை : ரூ.100 – இரண்டாம் பதிப்பு : 2009

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 -120



எல்லா சுவர்களும்

ஆர் புருஷோத்தமன்

கேட்பதை எல்லாம்
வாங்கிக் கொடுங்கள் குழந்தைகளுக்கு

வண்ணம் வழியும்
பட்டாம் பூச்சிகளையும்
பறந்து திரியும் தும்பிகளையும்
பிய்த்து மகிழட்டும்

குச்சு மிட்டாயோ
குடை ராட்டினமோ
உங்கள் சில்லரைகளை
அள்ளிக் கொடுங்கள்

மணியலிக்கும் யானையின் பின்னே
சாலையின் இறுதிவரைக்கும்
சென்று மீளட்டும்.

சந்தோஷம் பூத்திடும்
தளிர் முகங்களில்
படரவேண்டாம் ஒருபோதும் சோகம்.

களங்கமற்ற குழந்தைகள் விழிகளில்
மறைந்து கிடக்கிறது சொர்க்கம்.
மரணத்தின் இறுதிவிநாடிகளில்
தரிசியுங்கள் குழந்தைகளை
வெளிச்சத்தின் வாசல்திறந்திருக்கும்
உங்களுக்காக,

மெல்லிய முத்தங்களில்
இடிந்து வீழ்கின்றன
அத்தனைச் சுவர்களும்

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 9

அழகியசிங்கர்

1. எது சிறந்த கேள்வி சிறந்த பதில்

நீங்கள் கேட்பது சிறந்த கேள்வி. நான் சொல்வது சிறந்த பதில்

2. தமிழில் இப்போது படிப்பவர்கள் குறைந்துகொண்டு போகிறார்களா?

உண்மைதான்.  ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற மூன்று பிரிவினரில் பெண்கள்தான் படிக்கிறார்கள். 

3. நீங்கள் பணத்தை ஏமாந்து விட்டீர்களே? கிடைத்ததா?

கிடைக்கவில்லை.  முன்பே எதிர்பார்த்ததுதான்.  போலீஸ் கமிஷனரிடம் போய் புகார் கொடுத்தேன்.  ஒரு மாதம் ஓடிவிட்டது. போலீசிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.  போன் செய்தாலும் எடுப்பதில்லை.  இதை எதிர்பார்த்ததுதான்.  போலீசு முயற்சி செய்தால் எந்தக் கணக்கிற்குப் போனதோ அதைக் கண்டுபிடிக்கலாம்.  தினமும் பலர் ஏமாந்து போகிறார்கள்.

4. சமீபத்தில் சில ஏற்பட்ட மரணங்களைப் பற்றி

மரணம் தினம் தினம் யாருக்காவது நடந்து கொண்டுதான் இருக்கிறது.  ஆனால் சமீபத்தில் நடந்த இரண்டு மரணங்கள் மட்டும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.  ஒரு மரணம் ஒரு விபத்து.  விருட்சம் லைப்பரரி அடுக்கத்தில் பக்கத்தில் குடியிருந்தவர்.  எழுபது வயதிற்கு மேல் இருக்கும்.  யாருக்கும் உதவி செய்ய வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருப்பார்.  அவருடைய மரணம் ஆழ்வார்பேட்டையில் ஒரு விபத்தில் நடந்தது.  அவர் 75 வயதுக்குமேல் ஆனவர்.  சுறுசுறுப்பு மிக்கவர்.  அவரே டூ வீலரில் போய்க்கொண்டிருக்கும்போது பின் பக்கம் கார் மோதி மரணம் அடைந்து விட்டார்.   இன்னொரு நண்பர் ஆந்திரா வங்கியில் பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்று வந்தவர். ஆகஸ்ட் 3அம் தேதி விருட்சம் சந்தாவை குரியர் தபாலில் பணத்தை வைத்து அனுப்பியவர்.  13ஆம் தேதி பாத்ரூமில் வைத்திருந்த ஆசிடை எடுத்துக் குடித்துவிட்டார்.  

5.  எழுத்தாளர்கள் அதிகமாகி விட்டார்கள் போலிருக்கிறதே..

எழுத்தாளர்கள் அதிகமாகி விட்டார்கள்.  ஆனால் வாசக எண்ணிக்கை அதிகமாகவில்லை.   ஒரு எழுத்தாளரின் எழுத்துக்களைத்தான் இன்னொரு எழுத்தாளன் படிக்க வேண்டுமென்ற சூழல் வந்துவிட்டது.

6.  இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?

முகநூல்தான்.  முகநூலில் எழுதத் துவங்குபவனுக்கு  எதையும் எழுத முடியும் என்ற துணிச்சலான எண்ணம் ஏற்பட்டு விடுகிறது.  அவன் ஒரு அதிகாரம் படைத்தவனாக மாறி எழுதத் துவங்குகிறான். வாசிப்பவனைத்தான் காணும். 

7. உங்கள் புத்தகம் படிக்கும் வேகம் குறைந்து விட்டதா அதிகமாகி விட்டதா?

குறைந்துகொண்டே போகிறது.  என் நண்பர் கூறியபடி வாசக மராத்தான் என்று ஆரம்பிக்கலாமென்று நினைக்கிறேன்.  தினமும் குறைந்தது ஒரு மணி நேரமும். மூன்று அல்லது நான்கு மணி நேரங்கள் படிக்கலாமென்று நினைக்கிறேன்.

8. படிப்பைத் தவிர வேற சிந்தனை இல்லையா?

வேற சிந்தனை இல்லை.   தலையைக் கொண்டு போகிறமாதிரி வேலை எதுவும் கிடையாது.  எதுவும் செய்து முடிக்க வேண்டுமென்ற கவலையும் இல்லை.  படிக்கிறதைத் தவிர வேற வேலை இல்லை.

9. சமீபத்தில் என்ன சினிமா படம் பார்த்தீர்கள்?

அமேசன் ப்ரைமில் என் நண்பர் உதவியால் உறுப்பினன் ஆகிவிட்டேன்.  அதில் பல படங்களைப் பார்க்கிறேன்  அது குறித்து எழுத வேண்டுமென்று நினைக்கிறேன்.  சமீபத்தில் பார்த்த படம் ஆடை.  இந்தப் படத்தை ஆடையில்லாமல் ஒரு நடிகை (அமலா பால்) நடிக்கிறார்.   துணிச்சலான முயற்சி.  வேடிக்கை என்னவென்றால் கொஞ்சங்கூட ஆபாசமாகத் தெரியவில்லை.  இது இந்தப் படத்தின் வெற்றியாகக் கருதுகிறேன்.

10.  திரைப்படத்தை விட சிறுகதை மேல் என்று நீங்கள் சொல்லி உள்ளீர்கள்.

உண்மையில் திரைப்படத்தையும் சிறுகதையும் தொடர்புப் படுத்திச் சொல்லக்கூடாது.  ஒரு சிறுகதையைப் படிக்கும்போது ஒரு சித்திரம் தோன்றுகிறது.  இது மாதிரி ஏகப்பட்ட சிறுகதைகளில் ஏகப்பட்ட சித்திரங்கள்.  சில நிமிடங்களிலேயே கதை முடிந்து விடும். ஒரு சிறுகதையைப் படிக்கும்போது உடனே ஒரு மனப் பிம்பம் ஏற்பட்டு நமக்குள்ளே கதை நிகழ்கிறது.  சினிமாப் படம் நாம் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.  

11. இதோடு முடித்துக்கொள்ளலாமா?

முடித்துக்கொள்ளலாம்.  இன்னும் தொடரலாம் பின்னால். 

நவீன விருட்சம் 110வது இதழ் வந்து விட்டது…


எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற நவீன விருட்சம் 110வது இதழ் வந்தே விட்டது!  

109வது இதழ் முழுவதும் தீர்ந்து விட்டதால் இந்த இதழ் பிரதி எண்ணிக்கையைக் கொஞ்சம் கூட்டிவிட்டேன்.  (எத்தனைப் பிரதிகள் அச்சடித்தேன் என்பதை மட்டும் கேட்காதீர்கள்).  எனக்குள் ஒரு விசித்திரமான உணர்வு உண்டாகிறது.  இதழை ஆரம்பிக்கும்போது அது முடியவே முடியாது என்பதுபோல் தோன்றுகிறது.  முடித்தபிறகு இதை எளிதாக முடித்துவிடலாம் போலிருக்கிறது என்றும் படுகிறது.

அதேபோல் எல்லாரிடமும் கொண்டு சேர்ப்பதுதான் பெரிய கவலையை உண்டாக்கக் கூடியது.  பலரையும் சந்தா அனுப்பும்படி கேட்டுக் கடிதம் எழுதியிருந்தேன்.  உற்சாகமான வரவேற்பு . என்னால் நம்ப முடியவில்லை.  பலர் சந்தாத் தொகையை விட பல மடங்கு அதிகமாக அனுப்பியிருந்தார்கள்.  

34 வயதில் இந்தப் பத்திரிகையை ஆரம்பித்தேன்.  இப்போது வயது 65 ஆகிவிட்டது.  ஆனால் உற்சாகம் மட்டும் குறையவே இல்லை. சி சு செல்லப்பா கொண்டு வந்த எழுத்து 120 இதழ்களுக்கு மேல் போகவில்லை என்று நினைக்கிறேன்.  நான் அந்த எண்ணிக்கையைத் தாண்டி விட வேண்டுமென்று நினைக்கிறேன்.   இன்னும் 3 ஆண்டுகளாவது ஆகிவிடும்.    ஆனால் எழுத்து வேறு விருட்சம் வேறு.  

நீங்கள் விருட்சம் இதழை சென்னை பீச் ரயில்வே ஸ்டேஷனில் படிக்க ஆரம்பித்தால் தாம்பரம் போவதற்குள் முடித்துவிடலாம்.  அவ்வளவு சுலபமான இதழ். இந்த இதழில் 4 சிறுகதைகளை வெளியிட்டிருக்கிறேன்.  ஒரு மொழி பெயர்ப்பு கதையும்  மொழி பெயர்ப்பு கவிதையும் சேர்த்திருக்கிறேன்.  

மாயவரத்தில் நடக்கும் அரசியல் கூட்டங்களைப் பற்றி சந்தியா நடராஜன் எழுதியிருக்கிறார்.  அதேபோல் நக்கீரன் எழுதிய கட்டுரையில் தமிழில் சொற்கள் காணாமல் போய்விடுமா என்ற பயம் ஏற்பட்டு விடும்போல் தோன்றுகிறது.  விமானப் பயணத்தைப்பற்றி கணேஷ் ராம் நகைச்சுவை உணர்வுடன் எழுதி உள்ளார்.

நான்கு கதைகளில் ‘அப்பா வேலை’ என்ற பா ராகவன் எழுதிய கதையில் கதையை எப்படி முடிக்கப் போகிறாரென்று படித்துக்கொண்டிருக்கும்போது கவலையாக இருந்தது.   நல்லகாலமாக நல்லவிதமாகக் கதையை முடித்துவிட்டார்.   

ஜெ பாஸ்கரன் கதையான ஓ வைப் படிக்கும்போது எனக்கு ஆத்மாநாமின் முத்தம் என்ற கவிதைதான் ஞாபகத்திற்கு வந்தது.   இப்போது அதிகமாக பத்திரிகைகளில் கதைகள் எழுதுபவர்களில் ஸிந்துஜா ஒருவர்.   சுலபமாகவும் படிப்பதற்கு எளிமையாகவும் ஒரு கதையைச் சொல்லும் திறன் அவருக்கு இயல்பாகவே ஒட்டிக்கொண்டிருக்கிறது. 

தீர்ப்பு என்ற என் கதை வழக்கம்போல் விருட்சம் பத்திரிகைக்கான கதை.  நான் மொழி பெயர்த்த அந்நியர்கள் என்ற ஐ பி ஸிங்கரின் கதையில் வயதான கணவன் வேற ஊரில் போய் வசிக்க விரும்புகிறான்.  மனைவி வர மறுக்கிறாள்.  உடனே மனைவியை விவாகரத்து செய்து விடுகிறேன்.  இந்த வயதிலா என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  புதிய ஊருக்குப் போய் 16 வயது பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு விடுகிறான்.  அவன் மனைவியும் இன்னொருவரைத் திருமணம் செய்து கொண்டு விடுகிறாள்.  கணவன் மனைவியுமாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அந்நியர்கள்தான என்கிறது கதை. நந்தாகுமாரன், வசந்த தீபன், பானுமதி தங்கள் திறமைகளைக் கவிதைகள் மூலம் காட்டி உள்ளார்கள். 

ஆக மொத்தம் படிக்கும் வாசகர்களுக்கு ஒரு திருப்திகரமான இதழை வாசித்தோம் என்று தோன்றும்.   இரு வேறு நிலைகள் என்ற தலைப்பில் பாவண்ணன், வண்ணதாசனின் மதுரம் புத்தகத்தை விமர்சனம் செய்துள்ளார். ஒவ்வொரு கதையாக எடுத்து.  அட்டைப்படம் உமா பாலு என்பவர் வரைந்தது.  நான் என்னவோ நினைத்தேன்.  அது வேறு விதமாக வந்துவிட்டது.  இதோ இந்த இதழில் பங்கு கொண்ட படைப்பாளிகளின் விபரம் தருகிறேன்.

1. அந்நியர்கள் – ஐ பி ஸிங்கர் – சிறுகதை                 

2. மீதிக் கவிதை – நந்தாகுமாரன்           

3. வசந்த தீபன் கவிதை-                         

4. தீர்ப்பு  –  சிறுகதை –  அழகியசிங்கர்                   

5. ந பானுமதி கவிதைகள்       

6. பிரயாணம் – கட்டுரை – கணேஷ்ராம்              

7. காவேரியோடு கரையும் சொற்கள் – கட்டுரை – நக்கீரன்  

8.முட்களைச்சிதைத்த மலர்-சிறுகதை-ஸிந்துஜா             

9. அன்றைய அரசியல் காட்சிகள் – கட்டுரை – நடராஜன்

10. இருவேறு நிலைகள் – பாவண்ணன் – பு விமர்சனம்      

11. üüஓýý – சிறுகதை – ஜெ பாஸ்கரன் 

12. அப்பா வேலை – சிறுகதை – பா ராகவன்     

14. புதிய  படையெடுப்பு – கவிதை – மொழிபெயர்ப்பு க்ருஷாங்கினி

நவீன தமிழ் விமர்சன இயக்கங்களும் கருத்தியல் போக்குகளும் (1950-2000) – பிரவீன் பஃறுளி ஒளிப்பதிவு 1

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 49வது கூட்டம் பிரவீன் பஃறுளி  தலைமையில் 17.08.2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது.  ஒன்றரை மணிநேரம் அவர் பேச்சு நீடித்தது.  நவீன தமிழ் விமர்சன இயக்கங்களும் கருத்தியல் போக்குகளும் (1950-2000) என்ற தலைப்பின் கீழ் அவர் பேசினார். கொஞ்சங்கூட விடுபடல் இல்லாமல் எல்லாவற்றையும் பேசினார்.  அவர் பேச்சை மூன்று ஒளிப்பதிவுகளில் இங்கு அளித்துள்ளேன்.

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 49

    தலைப்பு  :   நவீன தமிழ் விமர்சன இயக்கங்களும் கருத்தியல்                     போக்குகளும் (1950-2000)

சிறப்புரை :   பிரவீண் பஃறுளி, உதவிப் பேராசிரியர், குருநானக்                         கல்லூரி

இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
         மூகாம்பிகை வளாகம்
         சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
         ஆறாவது தளம்
          மயிலாப்பூர்
         சென்னை 600 004

தேதி        17.08.2019  (சனிக்கிழமை)    

நேரம்       மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு  : (புறநடை, இடைவெளி ஆகிய சிற்றிதழ்களில் ஆசிரியர்)  கல்குதிரை, மணல்வீடு, புது எழுத்து  உள்ளிட்ட சிற்றிதழ்களில் கட்டுரைகள் வந்துள்ளன.  போர்ஹே கவிதைகள் சிலவற்றை மொழி பெயர்த்துள்ளார்.

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

சில கேள்விகள் சில பதில்கள் – தேவிபாரதி 1, 2…

தொடர்ந்து 4 படைப்பாளிகளைப்  பேட்டி எடுத்தேன்.  ஈரோடில்.  நாலாவதாக நான் சந்தித்த எழுத்தாளர் தேவிபாரதி.  அவர் பேசியதைக் கேட்கும்போது உண்மையிலேயே மெய் மறந்து கேட்டோம்.  பேட்டி முடியும் தறுவாயில் காமெரா பேட்டரி முடிந்து விட்டது.