சமீபத்தில் நான் பார்த்த படம் ‘நான் கடவுள்’. முதலில் நான் சாதாரணமாக எல்லோரையும் போல் சினிமா பார்க்கிறவன். சினிமாவைப் பற்றிய நுணுக்கங்கள் தெரிந்தவன் இல்லை. ஆனால் நான் பார்த்த சில படங்களில் கூட கிணறு செட் போட்டிருந்தால், கதாநாயகனோ யாராவது வசனம் பேசிக்கொண்டிருந்தால் கிணறு செட் ஆடும். கோபாலகிருஷ்ணன் டைரக்ட் செய்த ஒரு படம் என்று நினைக்கிறேன். அதேபோல் ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற படம் நினைக்கிறேன். அதில் வரும் கதாபாத்திரங்கள் வசனம் பேசிக்கொண்டே இருப்பார்கள். அந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவன் பாதியில் எழுந்து வந்துவிட்டேன். தமிழ் படங்கள் பார்ப்பதுபோல், சினிமா சங்கம் மூலம் பல நாட்டு படங்களையும் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால் எனக்கு எந்தப் படம் சிறந்த படம், எந்தப் படத்தின் டைரக்டர் சிறந்த டைரக்டர் என்ற அறிவு இல்லை. அந்த அறிவு மட்டும் இருந்திருந்தால் நானும் சினிமாவைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருப்பேன்.
இப்போது வரும் தமிழ் சினிமாவில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி புரிந்துகொள்வது அவசியம். ஒரே மாதிரியாக தயாரிக்கப்பட்ட பார்மூலா கதைகளை ஒழித்துவிட்டு வேறுவிதமான படங்கள் இப்போது வரத் துவங்கி உள்ளன. இது நல்ல மாற்றம் என்று தோன்றுகிறது. பார்வையாளர்களை புத்திசாலிகளாக மாற்றும் முயற்சியை பாலா போன்ற சில இயக்குனர்கள் உருவாக்குகிறார்கள். தமிழில்தான் இதுமாதிரியான படங்கள் வருகின்றனவா என்ற ஆச்சரியம் எழாமல் இல்லை. ஆனால் இப்படிப்பட்ட படங்களைத் தயாரிக்கும் இயக்குனர்கள் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டியுள்ளது. ஒரு படம் தயாரிப்பது என்பது கோடிக்கான பணம் முதலீடு செய்யப்படும் தொழில். அத் தொழிலில் பார்வையாளர்களைத் திருப்தி பண்ணுவதுடன் அல்லாமல், முதலீடு செய்த பணத்தையும் எடுக்க வேண்டும். பாலா போன்ற இயக்குனர்கள் இந்த டெக்னிக்கை தெரிந்தவர்களாக தோன்றுகிறார்கள்.
இந்தப் படத்தில் அகோரி உலகத்தையும், பிச்சைக்காரர்களின் உலகத்தையும் கொண்டு வருகிறார். அது வெற்றிகரமாக கைவந்த மாதிரிதான் தெரிகிறது. மேலும் பலவித உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களைப் பார்க்கும்போது மனதுக்கு பெரிதும் சங்கடமாகத் தெரிகிறது. உண்மையான பிச்சைக்காரர்களா? அல்லது அப்படி நடிக்கிறார்களா என்று தெரியவில்லை. என் நண்பரும் கவிஞருமான விக்கிரமாதித்யன் இதில் நடித்திருக்கிறார். தாடியுடன் எப்போதும் காட்சி அளிக்கும் விக்கிரமாதித்யன் ஆசான் பாத்திரத்தில் இயல்பாக பொருந்திவிடுகிறார். வசனம் சில இடங்களில் ரசிக்கும்படி இருக்கிறது. சில இடங்களில் ரசிக்க முடியவில்லை. ஜட்ஜ் போலீஸ்காரரிடம் பேசும் வசனம்.
எனக்குத் தெரிந்து குருதத்தின் ஒரு படத்தை இலக்கிய நண்பர் ஒருவருடன் பார்க்கும்போது, ஒரு கட்டத்தில் அவர் அழ ஆரம்பித்துவிட்டார். படத்தைப் பார்க்கும்போது படத்துடன் ஒன்றிப்போகாமல் பார்க்கிற தன்மை வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. அதேபோல் பாலாவின் இந்தப் படம் எல்லோருடைய மனதையும் கலக்கும். என் பெண் இந்தப் படத்தைப் பார்க்கச் சென்றபோது, பெண்ணின் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி, ‘பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன், ஐயனே, என் ஐயனே’ என்ற பாடலைக் கேட்டவுடன் அழ ஆரம்பித்துவிட்டாராம். பூஜாவும், ஆர்யாவும் படத்தில் நடிப்பின் எல்லைக்கே சென்றுவிட்டதாக தோன்றுகிறது. 3 ஆண்டுகளாக ஆர்யா இப் படத்திற்காக நடித்திருக்கிறார் என்று தோன்றுகிறது.ஆனால் நிச்சயமாக எல்லோருடைய மனதிலும் நிற்கும் படமாக இது இருக்குமென்று தோன்றுகிறது.
பாலா அடுத்தப்படம் எடுக்கும்போது, பிச்சைக்காரர்கள், மன நிலை சரியில்லாதவர்கள், பார்வையற்றவர்கள் பற்றியெல்லாம் இனிமேல் எடுக்கக் கூடாது. வேறு விதமான முயற்சியை அவர் மேற்கொள்ள வேண்டும்.