மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2
– 112
அழகியசிங்கர்
பட்டினி போட்ட அலாவுதீன் விளக்கு
செந்தூரம் ஜெகதீஷ்
எதற்குமே பயனற்றவன்தான்
ஒரு படைப்பாளி
காய்கறி கூட
பேரம் பேசி வாங்க
அவனுக்குத் தெரியாது
ரிக்ஷாக்காரனிடம்
மாரடிக்க அவனால் முடியாது
பணங்காசுக்கு
ஆலாய்ப் பறக்க அவனால் இயலாது
இல்லறத் தேவைகளின்
பூதாகரமான பசியை
அவன் புரிந்து கொள்ளவே மாட்டான்
லௌகீக வலையில்
சிக்காமல் நழுவும் மீன் அவன்
ஆனாலும்
யதார்த்தம் என்னும் நெருப்பில்
அவனும்
வெந்து குழம்பாகிப் போகிறான்
ருசியின் மயக்கத்தோடு
நன்றி : இன்னும் மிச்சமிருப்பவை – நவம்பர் 1999 – சிந்து பதிப்பகம்,
112 ஜானிஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை 14 வெளியான ஆண்டு : 1999 – விலை : ரூ.30