கவிதை தலைப்பிடப் படாதது
ஆத்மாநாம்
இந்தக் கவிதை
எப்படி முடியும்
எங்கு முடியும்
என்று தெரியாது.
திட்டமிட்டு முடியாது
என்றெனக்கத் தெரியும்
இது முடியும்போது
இருக்கும் (இருந்தால்) நான்
ஆரம்பத்தில் இருந்தவன் தானா
ஏன் இந்தக் கேள்வி
யாரை நோக்கி
இன்றிரவு உணவருந்தும்
நம்பிக்கையில் இங்கிருப்பேன்
இப்படியும் ஓர் நம்பிக்கை
இருந்த நேற்று
எனக்கிருண்ட கணங்கள்
அவற்றின் தவளைக் குரல்கள்
கேட்கும் அடிக்கடி
அதனை ஒதுக்கத் தெரியாமல்
தவிக்கையில்
நிகழ்ச்சியின் சப்தங்கள்
செவிப்பறை கிழிக்கும்
நாளை ஓர் ஒளிக்கடலாய்
கண்ணைப் பறிக்கும்
இருதயம்
இதோ இதோ என்று துடிக்கும்.
நன்றி : காகிதத்தில் கோடு – ஆத்மாநாம் – வெளியீடு : ழ, 39 ஈஸ்வரதாஸ் லாலா தெரு, திருவல்லிக்கேணி சென்னை 5 – வெளியீடு : மே 1981 – விலை : ரூ.4 – பக்கங்கள் : 40
குறிப்பு :
மனதுக்குப் பிடித்தக் கவிதை பகுதியில் ஆத்மாநாமின் கவிதை ஒன்றை சேர்த்துள்ளேன். ஆறாம்தேதி ஆத்மாநாமின் நினைவு நாள். கிட்டத்தட்ட 34 ஆண்டுக்கு மேல் ஓடிவிட்டது ஆத்மாநாம் மறைந்து. 03.12.1981 அன்று ஆத்மாநாம் கையெழுத்திட்ட அவர் புத்தகத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன். அது ஒரு இனிமையான மாலை பொழுது. அவருடைய இந்தக் கவிதையை பலமுறை படித்திருக்கிறேன். ஏதோ விதமான சோகம் இந்தக் கவிதையில் ஒட்டிக்கொண்டிருப்பதாக தோன்றுகிறது.