மூன்று வித எழுத்தாளர்கள்…..

எழுத்தாளர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம். முதல் வகை எழுத்தாளர்கள் அவர்களுக்குள்ளே எழுதுபவர்கள். எதைப் பார்த்தாலும் படித்தாலும் கதைகள், கவிதைகள் என்று எழுதித் தள்ளிவிடுவார்கள். இவர்களுடைய படைப்புகளும் பெரும் பத்திரிகைகளில் எளிதாக நுழைந்து விடும். குறிப்பாக பாக்கெட் நாவல்கள் எல்லாம் இப்படிப்பட்ட எழுத்தாளர்களால் எழுதப்படுகின்றன. கை வலிக்க வலிக்க எழுதிக்கொண்டே போவார்கள் அல்லது டைப் அடித்துக்கொண்டே போவார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள் பத்திரிகைக்கு பக்கங்களுக்கு ஏற்ப கதைகள் எழுதித் தருவார்கள். அரைப்பக்கம் வேண்டுமென்றால், அரைப்பக்கம், ஒரு பக்கம் வேண்டுமென்றால் ஒரு பக்கம் என்றெல்லாம்
 
அந்தக் காலத்தில் குமுதத்தில் வாராவாரம் சரஸ்வதி பஞ்சு என்கிற பெயரில் ஒரு பெண்மணி கதைகள் எழுதிக்கொண்டிருப்பார். ஒவ்வொரு வாரமும் வராமல் இருக்காது. இந்த முதல் வகை எழுத்தாளர்களின் வழக்கம் என்னவென்றால் கதை வேண்டுமென்றால் கதை, கட்டுரை வேண்டுமென்றால் கட்டுரை, கவிதை வேண்டுமென்றால் கவிதை என்று இயந்திரத்தனமாக எழுதிக்கொண்டே போவார்கள். இவர்கள் மேலும் எழுத்தைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி ஏகப்பட்ட பாக்கெட் நாவல்கள் எழுதியிருக்கிறார். அவரிடம் உள்ள திறமையால் அதெல்லாம் எழுதியிருக்கிறார். அவ்வளவுதான். இவர்களைப் படிக்க வாசகர் கூட்டம். அதிகமாகவே இருக்கும். எப்படி இவர்கள் சிந்திக்காமல் எழுதியிருக்.கிறார்களோ அதேபோல் வாசகர்களும் அவற்றைப் படித்துவிட்டு தூக்கிப் போட்டுவிடுவார்கள். இதுதான் முதல் வகை எழுத்து. இவர்கள் எழுதினாலும் தங்கள் முகங்களை வாசகர்களிடம் காட்ட மாட்டார்கள். அல்லது வாசகர்களை சந்திக்கப் பயப்படுவார்கள். நன்றாகப் பொழுது போகிற மாதிரி எழுதித் தள்ளிவிடுவார்கள்.
 
இப்போது இரண்டாவது வகை எழுத்தாளர்களைப் பார்ப்போம். இவர்களும் எழுதுவதற்கு சளைத்தவர்கள் அல்லர். இவர்கள் முதல்வகையைச் சார்ந்தவர்கள் போல் அவர்களுக்குள்ளேயும், மற்றவர்களுக்காகவும் எழுதுவார்கள். இவர்களுக்கு கûதாகள் குறித்து தெளிவான பார்வை உண்டு. புதுமைப்பித்தன், மௌனி என்று பலருடைய கதைகளைப் படிப்பதோடல்லாமல், அவர்கள் எழுதிகிற கதைகள் எப்படி எழுதப் படுகின்றன என்ற சிந்தனையும் கொண்டவர்கள். ஒரு கதை எப்படி இருக்க வேண்டுமென்று இலக்கியக் கூட்டங்களில் இவர்களால் பேச முடியும். ஆனால் முதல் வகை எழுத்தாளர்கள் மாதிரி அதிகமாக கதைகளை எழுதித் தள்ள மாட்டார்கள். இவர்களில் ஒருசில எழுத்தாளர்களே எல்லோருடைய கவனத்திற்கு வருவார்கள். இந்த இரண்டாம் வகை எழுத்தாளர்களுடன்தான் வாசகர் வட்டம் சுற்றி சுற்றி வரும். நான் பெரியவனா நீ பெரியவனா என்று போட்டியெல்லாம் வரும். இவர்களில் ஒரு சில எழுத்தாளர்கள் பெரும் பத்திரிகைகளிலும் தொடர்ந்து கவனத்தைப் பெறுவார்கள்.
 
மூன்றாவது வகை எழுத்தாளர்கள் உலகத் தரத்தில் எழுதக் கூடிய எழுத்தாளர்கள். இவர்களை படிப்பவர்கள் தானே போய் கண்டுபிடித்து படித்துக்கொண்டிருப்பார்கள். எந்த மொழியில் இவர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்பதை உலகம் முழுவதும் அறியும். ஆளால் ஒரு சிலர்தான் இவர்களை முழுவதும் புரிந்துகொள்ள முடியும். இவர்களை உலகம் முழுவதும் கொண்டாடுவார்கள். ரொம்ப அரிதாகவே இதுமாதிரியான எழுத்தாளர்களை நாம் காணமுடியும்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *