நீங்களும் படிக்கலாம்…29          

 

அழகியசிங்கர்

எஸ் எம் ஏ ராம் நாடகங்கள்……

ஐந்து நாடகங்களின் தொகுப்புதான் எஸ் எம் ஏ ராம் நாடகங்கள் என்ற தொகுப்பு.  அவரிடம் முதலில் ஒரு கேள்வி கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது?  ஏன் இவர் தொடர்ந்து நாடகங்கள் எழுதாமல் விட்டுவிட்டார்.  அதற்கு பல காரணங்களை அவர் சொல்லலாம்.  நாடகம் எழுதத் தயார்.  ஆனால் பத்திரிகை இல்லை பிரசுரம் செய்வதற்கு என்றும் சொல்லலாம்.

நகுலன் சென்னை வரும்போது கையில் ஒரு நோட்டு வைத்திருப்பார்.  அந்த நோட்டில் அவர் என்ன தோன்றுகிறதோ அதை எழுதிக்கொண்டிருப்பார்.  அவர் எழுத்து பிரசுரமாவதைப் பற்றி கவலைப் பட மாட்டார்.  எந்தப் பத்திரிகைக்காவது அவர் படைப்புகளை அனுப்பினால் கூடவே தபால்தலைகளையும் இணைத்து அனுப்புவார்.

ராமிற்கு நாடகம் எழுதும் திறமை இருந்தும் ஏன் தொடர்ந்து செயல்படவில்லை.  இன்னொரு கேள்வி: நாடகம் எழுதுவது என்பது நிகழ்த்திக் காட்டுவதற்காகத்தானா? அப்படியென்றால், அதற்கான வாய்ப்பு என்பது இல்லை என்றே தோன்றுகிறது.  ஒரு நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட வேண்டுமென்று நினைத்தால், இன்றைய சூழ்நிலையில் அதன் சாத்தியம் குறைவாகவே இருப்பதாக இருக்கிறது. பிரபலமான சபா நாடகங்கள் தடுமாறிக்கொண்டிருக்கிற காலம் இது.  மேலும் ஒரு நாடகத்தை நடத்த வேண்டுமென்றால் குறைந்த பட்சம் 10000 ரூபாய்க்களாவது தேவை என்று நாடகத்தில் அனுபவமிக்க என் நண்பர் ராஜாமணி குறிப்பிட்டுள்ளார். செலவு செய்வதோடல்லாமல், நடிப்பதற்கு சரியான நடிகர்கள் கிடைக்கவேண்டும்.  பின் பார்வையாளர்கள் வேண்டும். இந்தக் காலத்தில் யார் நாடகத்தைப் பார்க்க வருகிறார்கள்.  இலவசமாக நாடகத்தைப் போடுவதாக இருந்தாலும், யாரும் பார்க்க வருவார்களா என்பது சந்தேகம். காரணம் நாடகம் நடக்கும் இடம், வருகிற தூரம் இதெல்லாம் முக்கியமான காரணங்களாக மாறி விடுகின்றன.

ராமின் இந்த ஐந்து நாடகங்களையும் பலர் மேடை ஏற்று நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.  அந்த அளவிற்கு அவர் எழுதிய நாடகங்களுக்கு ஒருவித கௌரவம் கிடைத்திருக்கிறது. இனி இதுமாதிரியான நாடகம் நடத்தப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று நினைத்து, நாடகத்தை எழுதத் தொடங்க வேண்டும் ராம். மேலும் நாடகத்தைப் பிரசுரம் செய்யப் பத்திரிகைகள் இல்லை என்பதையும் நினைத்து, தொடர்ந்து நாடகங்கள் எழுதிப் பார்க்க வேண்டும்.

இன்று பல்கலைக்கழகங்களில் நாடகத் துறை என்று ஒன்று இருந்தால், ராம் நாடகங்களை கொண்ட புத்தகத்தை உதாரணமாக வைத்துக்கொண்டு நாடகங்களை நடத்திப் பார்க்கலாம்.  அதற்கெல்லாம் பல்கலைக்கழகங்கள்தான் முயற்சி செய்ய வேண்டும்.

நாடகப் புத்தகங்களை நாம் அதிகமாக உருவாக்க வேண்டும்.  நாடகம் நடத்தப் படுகிறதோ இல்லையோ நாடகப் புத்தகத்தை ஒரு நாவல் படிப்பதுபோல ஒரு சிறுகதைத் தொகுதி படிப்பதுபோல படிக்க வேண்டும்.  1957ஆம் ஆண்டு க நா சுவின் நல்லவர் என்ற புத்தகம் வந்துள்ளது.  அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் க நா சு இப்படி எழுதி உள்ளார் :

‘நாடகங்கள் பார்ப்பதில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் கிடையாது.  ஆனால் நாடகங்கள் படிப்பதில் நான் யாருக்கும் சளைத்தவன் அல்ல.  நாடகங்கள் நடிக்கப்படுவதற்காக எழுதப்பட வேண்டிய அவசியமே இல்லை.  இலக்கியமாகப் படிப்பதற்காக மட்டும் எழுதப்பட்டால் போதும் என்பது என் அபிப்பிராயம்.’இப்படி தெளிவாக தன் கருத்துக்களை முன் வைக்கிறார்

க நா சு.  அந்த விதத்தில் ராம் நாடகங்கள் படிப்பதற்கும் இலக்கிய அனுபவத்தைத் தர தவறவில்லை.

ந சிதம்பரசுப்பிரமணியன் என்ற மணிக்கொடி எழுத்தாளர், அவருடைய ஊர்வசி நாடகப் புத்தகத்தில் ஒன்றை குறிப்பிடுகிறார்.  ‘நாம் படித்து அனுபவிக்கும்படியாக நாடகம் ஒன்றுமில்லை,’ என்று தன் கருத்தைத் தெரிவிக்கிறார்.

இதெல்லாம் பார்க்கும்போது ராம் நாடகங்கள் படித்து ரசிக்கும்படியாக இருக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

அவருடைய ஐந்து நாடகங்களை ஐந்து விதமாக எழுதி உள்ளார்.  üசுயதரமம்ý என்ற நாடகத்தில் மகாபாரத்தில் வரும் திரௌபதி, பஞ்ச பாண்டவர்களை திருமணம் செய்துகொள்வதற்கு முன் தன் எதிர்ப்பை பதிவு செய்கிறார்.  மகாபாரதத்தில் இந்தப் பகுதி மௌனமாக்கப்பட்டிருக்கிறது.  ஆனால் ராம் நாடகத்தில் திரௌபதி இப்படி கூறுகிறாள் : தர்மங்களில் சந்தர்ப்பங்களே முக்கியமானவை; சங்கல்பங்கள் அல்ல,ý என்று கூறியபடி யுதிஷ்டிரனின் கழுத்தில் மாலை அணிவிக்கிறாள்.

மூடிய அறை என்ற 2வது நாடகத்தைப் படிக்கும்போதே, மூடிய அறையில் நிச்சயம் ஒன்றும் இருக்கப் போவதில்லை என்று வாசகருக்குத் தெரிந்துவிடுகிறது. 25 வருடமாக திறக்கப் படாத மச்சு ரூமை திறக்க எல்லோரும் முயற்சி செய்கிறார்கள்.  அதை மையமாக வைத்து இந்த நாடகத்தை எழுதிக்கொண்டு போகிறார் ராம்.  வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை நயம்பட வெளிப்படுத்துகிறார் ராம். அந்தக் குடும்பத்தின் மூத்தப் பையன் அறையைத் திறந்து பார்த்து, அதில் ஒன்றுமில்லை என்று சொல்கிறான்.  ஆனால் மற்றக் குடும்பத்தினர்கள் அவன் சொல்வதை நம்பவில்லை.  அவனை பைத்தியக்காரன் என்று குறிப்பிடுகிறார்கள். இன்றைய உலகத்தை நையாண்டி செய்வதுபோல் இருக்கிறது.

 

மூன்றாவது நாடகமான மணிமேகலையின் கண்ணீர் என்ற நாடகம். இந் நாடகத்தைப் படிக்கும்போது ராமின் கற்பனை அசாதரணமாக உள்ளது.  திரௌபதியும் சீதையும் மணிமேகலையைச் சந்தித்துப் பேசுவதுபோல் வருகிறது.  நாடகமே காவிய நடையில் எழுதி உள்ளார்.  இந்த நாடகத்தை என்னால் ரசிக்க முடியவில்லை.  காரணம்: திரௌபதியும், கண்ணகியும் மணிமேகலையை எப்படி சந்திக்க முடியும்.  இந்தக் கற்பனை கொஞ்சம் பேராசையான கற்பனையாக இருக்கும்போல் படுகிறது.

இத் தொகுப்பில் இரண்டு பெரிய நாடகங்களில் ஒன்று எப்ப வருவாரோ இன்னொன்று ஆபுத்திரனின் கதை.  சாமுவேல் பெக்கெட் எழுதிய நாடகத்தின் மையக் கருவை வைத்துக்கொண்டு இந்திய சூழ்நிலைக்கு ஏற்ப எழுதியிருப்பதாக குறிப்பிடுகிறார். ஒருவர் வந்திருந்து சுபிட்சத்தைக் கொண்டு வரப்போகிறார் என்று அவருக்காகக் காத்திருப்பதுபோல் இந் நாடகம் போய்க்கொண்டிருக்கிறது.  ஆனால் அவர் வரவே இல்லை.  வரப்போகிறார் வரப்போகிறார் என்று காத்திருக்கிறார்.  இதுதான் இந் நாடகம்.  இதைப் படிக்கும்போது கொஞ்சங்கூட அலுப்பில்லாம் எழுதிக்கொண்டே போகிறார் ராம்.

பெரிய நாடகமான ஆபுத்திரனின் கதையில் அண்ணன் தம்பி இருவர் மூலம் நாடகத்தைத் துவக்குகிறார்.  ஆள் அரவமற்ற இடத்தில் அபுத்திரின் கோமுகி  ஆற்றில் அட்சயப் பாத்திரத்தை எறிகிறான்.  அதை இரண்டு அழகிய கரங்கள் வெளியே தோன்றி ஏற்றுக்கொள்கிறது.  அவன் சொல்கிறான் : ‘ஆபுத்திரனின் அடையாளம் அழிந்து விடவில்லை.  அது அட்சயப்பாத்திரமாக இன்னும் கோமுகியின் வயிற்றில் உயிர்த்திருக்கிறது.’ என்று.

இந் நாடகங்கள் எல்லாம் நிதானமாக வாசித்து ரசிக்க வேண்டிய இலக்கியத் தரமான நாடகங்கள்.  இந் நாடகங்கள் நடத்திக் காட்டப் பட வேண்டியவை.  ராம் மேலும் நாடகங்கள் எழுத வேண்டும்.  வேறு விதமாக யோசிக்க வேண்டும்.

எஸ் எம் ஏ ராம் நாடகங்கள் – எஸ் எம். ஏ.ராம் – தொடர்புக்கு: எஸ் மோகன் அனந்தராமன், 7 எ மாருதி பிளாட்ஸ்இ சரோஜினி முதல் குறுக்குத் தெரு, ராஜாஜி நகர். பல்லாவரம், சென்னை 43 – விலை ரூ.150 – முதல் பதிப்பு : டிசம்பர் 2015

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன