ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில்

1. இந்த ஆண்டு கோடை கடுமையாக உள்ளதா?
 
ஆமாம். எங்கள் தெருவில் உள்ளவர்கள் 24 மணி நேரமும் தண்ணீருக்காக அலை அலை என்று அலைகிறார்கள். எங்கள் வீட்டிலும் அந்தப் பிரச்சினை வெடிக்கும்.
 
2. இப்போது என்ன புத்தகம் ஆங்கிலத்தில் படிக்க எடுத்து வைத்திருக்கிறீர்கள்?
 
THE CRAFT OF FICTION BY PERCY LUBBOCK என்ற புத்தகத்தைப் படிக்கப் போகிறேன்.
 
3. விருட்சம் சார்பாக கவிதைக்காக பரிசு கொடுக்க விரும்பினால், யாருக்கு பரிசு வழங்குவீர்கள்?
 
என்னை வம்பில் மாட்டாதீர்கள். நான் யாருக்கும் பரிசு வழங்க விரும்பவில்லை.
 
4. இலக்கியக் கூட்டங்களுக்கு இப்போதெல்லாம் செல்வதில்லையா?
 
ஒரு இலக்கியக் கூட்டம் மயிலாப்பூரில் நடந்தது. அங்கு போவதற்கு கிளம்பினேன். 5 மணிக்கு மாம்பலத்திலிருந்து கிளம்பினேன். மயிலாப்பூர் போய்ச் சேரும்போது மணி 6 மணி மேல் ஆகிவிட்டது. பின் கூட்டத்தில் கலந்து கொண்டு வீடு வரும்போது மணி 9 ஆகிவிடுகிறது. இலக்கிய கூட்டம் போகலாமா வேண்டாமா என்ற யோசனை வருகிறது.
 
5. அப்படியென்றால் கூட்டம் எங்கே நடைபெற வேண்டும்?
 
அவரவர் பகுதிகளில்தான் கூட்டம் நடைபெற வேண்டும். மாம்பலத்தில் கூட்டம் நடந்தால், மாம்பலத்தில் உள்ளவர்கள் கூட வேண்டும். மயிலாப்பூர் என்றால் மயிலாப்பூர். திருவல்லிக்கேணி என்றால் திருவல்லிக்கேணி.
 
6. அப்படியாவது கூட்டம் நடத்த வேண்டுமா?
 
ஆமாம். இன்று தமிழில் யாரும் புத்தகமே படிக்க மாட்டார்கள். கூட்டம் மூலம் புத்தகங்கள் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளட்டும்.
 
7. வாழ்க்கை என்றால் என்ன?
 
வாழ்க்கை என்றால் திங்கள், செவ்வாய், புதன், வியாழன்….
 
8. ரோடில் செல்லும்போது, டூவீலரில் போவீரா, காரில் போவீரா, பஸ்ஸில் போவீரா, நடந்து போவீரா..
 
டூ வீலரில்தான் போவேன். காரில் கூட்டம் இல்லாத இடத்திற்குப் போவேன். பார்க்கில் மட்டும் நடப்பேன். பஸ்ஸில் நஹி.
 
9. உங்களைப் பார்க்க நண்பர்கள் வருவார்களா? நண்பர்களைப் பார்க்க நீங்கள் போவீர்கள்.
 
இரண்டுமே நடப்பதில்லை. அவசியம் இருந்தால்தான் சந்திப்பு நிகழும்.
 
10. உங்கள் வீட்டில் எந்த அறைக்குச் செல்ல விரும்பவில்லை?
 
அப்பா படுத்திருந்த அறைக்கு..
 
11. புத்தகம் பதிப்பது மூலம் நீங்கள் லாபம் சம்பாதிக்க விரும்புகிறீரா பொழுதுபோக்கா?
 
பொழுதுபோக்கு..
 
12. பொழுதுபோக வேண்டுமென்றால் என்ன வழி இருக்கிறது
 
எத்தனையோ வழி உண்டு. டிவி சீரியல் பார்த்துக்கொண்டே பொழுதைப் போக்கிக் கொள்ளலாம்.
 
13. கவிதை எப்படி இருக்க வேண்டும்?
 
படித்தவுடன் மனதில் பிடித்துக்கொள்ள வேண்டும். இன்னும் படிக்க வேண்டும் என்று ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்.
 
14. சமீபத்தில் நீங்கள் மகிழ்ந்த தருணம் எது?
 
முதன் முதலாக என் கவிதைகளைப் பிரசுரம் செய்த மலர்த்தும்பி என்ற பத்திரிகையைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.
 
15. தூக்கத்தைப் பற்றி உங்கள் கருத்தென்ன?
 
தூக்கம் வந்தால் தூங்கி விடுங்கள். பகலாக இருந்தாலும் இரவாக இருந்தாலும்.
 
16. நீங்கள் ஒரு நண்பரோடு படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் எது
 
சிலப்பதிகாரம். கோவலன் பற்றி ஒரு வரி வருகிறது :
 
நகரப் பரத்தரொடு
திரிதரு மரபிற் கோவலன் போல
 
17. இத்துடன் போதுமா?
 
போதும். பின்னால் தொடர்வோம்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *